வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா?

 

வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா?

கேள்வி :

நான் வங்கியில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தேன். அதில் கிடைக்கும் வட்டி ஹராம் என்று தெரிய வந்ததும் தனியாக ஒரு அக்கவுண்ட் திறந்து அந்த வட்டியைப் போட்டு வருகின்றோம். உதவி கேட்பவர்களுக்கு அதிலிருந்து உதவி வருகின்றோம். இதனால் நன்மை கிடைக்காது என்பது தெரியும். ஆனால் இப்படிச் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

ஏ. ஆயிஷா, பொதக்குடி

பதில் :

பேங்க் வட்டியாக இருந்தாலும் இதர வட்டியாக இருந்தாலும் மார்க்க அடிப்படையில் வட்டி வாங்குவது மிகப் பெரும் பாவமாகும். வட்டியை வாங்கி அதைத் தர்மம் செய்து விடுவதால் வட்டி வாங்கிய குற்றத்திலிருந்து நாம் தப்பிக்க முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

அல்குர்ஆன் 2:278,279

இந்த வசனத்தின் அடிப்படையில் வட்டியை விட்டு விட்டு அசலை மட்டும் வாங்கிக் கொள்வது தான் சிறந்ததாகும்.

கேள்வி-பதில்- ஏகத்துவம்,ஜனவரி 2005