உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

கேள்வி :

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

கிதுர் ஒலி

பதில் :

இந்தக் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் அதன் மூலம் இறைவன் இல்லை என்று வாதிடுவதற்காக இக்கேள்வியை அவர் கேட்டிருந்தால் அது பொருத்தமற்றதாகும்.

முதலில் இறைவன் இருக்கிறானா? இல்லையா என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வந்துவிட்டால் மாபெரும் சூப்பர் பவராக இருப்பவனிடம் அவனது நடவடிக்கை பற்றிக் கேட்க முடியாது.

நமக்குச் சமமானவர்களின் நடவடிக்கைளையும், நமக்குக் கீழே உள்ளவர்களின்ன் நடவடிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்த முடியும். நம்மைப் படைத்த சர்வ ஆற்றலும் உடையவனைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

தான் என்ன செய்கிறான் என்பதை மனிதனுக்குச் சொல்லக் கடமைப்பட்டவன் அல்லன் இறைவன். கடமைப்பட்டவனாக இருந்தால் அவன் இறைவன் அல்ல.

இறைவன் இருப்பதையே அவர் நம்பவில்லை என்றால் இறைவன் இருக்கிறானா என்பதைப் பற்றித் தான் கேள்வி கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அதற்கான விடை நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அளிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியாவிட்டால், அல்லது அவர் தனது வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாவிட்டால் மன்மோகன் சிங் என்று ஒருவர் இல்லை என்று ஆகாது.

அது போல் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான் என்ற கேள்விக்கு நமக்கு விடை தெரியாததால், அல்லது இனி என்ன செய்வான் என்பதற்கு விடை தெரியாது என்பதால் இறைவன் இல்லை என்று ஆகாது.

அது பற்றி நமக்குத் தெரியவில்லை என்று தான் ஆகும்.

நம்மோடு வாழும் மனிதர்களின் நடவடிக்கையையே நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடிவதில்லை எனும்போது இறைவனின் செயல்பாடுகள் பற்றி கேட்பது அறிவுடமை அல்ல என்று அவருக்குப் பதில் கூறுங்கள்!