பூனை வளர்க்கலாமா?

கேள்வி :

பூனை வளர்ப்பது குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது?

அபூ அஸ்லம்

பதில் :

இஸ்லாத்தில் பூனை வளர்ப்பதற்கு அனுமதியுள்ளது. மனிதர்களைச் சார்ந்து வாழும் செல்லப் பிராணியாக இதை வளர்க்கலாம். அப்படி வளர்த்தால் அவற்றைக் கொடுமைப்படுத்தாமல் இருக்க வேண்டும். பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

2365حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتْ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا فَدَخَلَتْ فِيهَا النَّارَ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ لَا أَنْتِ أَطْعَمْتِهَا وَلَا سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا وَلَا أَنْتِ أَرْسَلْتِهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الْأَرْضِ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(முன் சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனையின் காரணமாக வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்  : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 2365

பூனையை வளர்த்தற்காக இந்தப் பெண் தண்டிக்கப்படவில்லை. பூனையைக் கட்டிப்போட்டு பராமரிக்காமல் விட்டதற்காகவே தண்டிக்கப்பட்டதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

பூனையைக் கட்டிப் போட்டால் கட்டிப்போட்டவர் தான் அதற்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து பூனையை முறையாக வளர்ப்பது தவறல்ல என்பதை அறியலாம்.

மேலும் தண்ணீர்ப் பாத்திரத்தில் பூனை வாய் வைத்துவிட்டால் அந்த தண்ணீர் அசுத்தமாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது அசுத்தமான பிராணியோ, ஆபத்தான பிராணியோ இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

سنن الترمذي

92 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَتْ عِنْدَ ابْنِ أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا، قَالَتْ: فَسَكَبْتُ لَهُ وَضُوءًا، قَالَتْ: فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ، فَأَصْغَى لَهَا الإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا بِنْتَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ، أَوِ الطَّوَّافَاتِ»

அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு அவர் பாத்திரத்தைச் சாய்த்தார். என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா? என்று கேட்டார். நான் ஆம் என்றேன். இவை அசுத்தமானவை அல்ல. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர் : கப்ஷா

நூல்கள் : திர்மிதி, நஸயீ, அபூதாவூத்