நோன்பும் துறவறமும் ஒன்றா?

கேள்வி :

துறவறம் இயற்கைக்கு மாறானது என்று முஸ்லிம்கள் கூறுகிறீர்கள். நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது?

சம்சுல் ஆரிஃப்

பதில்:

இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைப்பிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். துறவறத்தால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகள் தான் ஏற்படும். நன்மைகள் ஏற்படுவதில்லை.

ஒரு மனிதன் வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. திருமணம் செய்யாமல் வாழ்பவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான வழியில் தன் ஆசையை தீர்த்துக் கொள்ளக்கூடியவனாக இருப்பான்.

திருமணம் முடிக்காமல் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக யார் கூறினாலும் அது பொய்யே. ஏனென்றால் இல்லறம் என்பது தவிர்க்கவே முடியாத மனித உடலுக்கு அவசியமான ஒன்றாகும். இந்தத் தேவை ஒரு மனிதனுக்கு சரியாகக் கிடைத்தால் தான் அவனால் மன நிம்மதியாக வாழ முடியும்.

இல்லையென்றால் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவான். இந்தப் பேருண்மையை செய்தித் தாள்களின் வாயிலாக தொடர்ச்சியாக நாம் அறிந்து வருகின்றோம்.

துறவறம் மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் சாமியார்களும், பாதரிமார்களும் தான் அதிகமாக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றனர். சாதாரண மனிதர்களை விட இவர்கள் இவ்விஷயத்தில் அதிகமாக வரம்பு மீறி நடக்கின்றனர்.

தங்களால் கடைப்பிடிக்க இயலாத கொள்கையைக் கையில் எடுத்த காரணத்தால் தீமையின் உச்ச நிலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் உலகத்தில் எல்லோரும் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தால் அதனால் உலகில் தீமைகள் தான் ஏற்படும்.

வாழ்க்கைத் துணை தேவைப்படுபவர்கள் வழிகெடுவதற்கும், மனித வர்க்கம் பெருகாமல் குறிப்பிட்ட காலத்தில் அழிந்து போவதற்குமே இது வழிவகுக்கும்.

ஆனால் நோன்பு என்பது துறவத்தைப் போன்று கடைப்பிடிக்க இயலாத மனித சக்திக்கு அப்பாற்பட்டதல்ல.

பகல் நேரத்தில் மட்டுமே உடலுறவு கொள்ளக் கூடாது; உண்ணக் கூடாது; பருகக் கூடாது என்பது இஸ்லாம் கூறும் நோன்பின் சட்டமாகும். இது இயற்கைக்கு மாற்றமானதல்ல.

நோன்பு வைத்திருக்கும் போதும், நோன்பு வைக்காத போதும் முஸ்லிம்கள் தேவையான உணவை உட்கொள்கின்றனர்.

நோன்பு இல்லாத போது காலை உணவு பகல் உணவு, இரவு உணவு என மூன்று வேளை முஸ்லிம்கள் சாப்பிடுகிறார்கள்.

நோன்பு காலத்தில் நோன்பு துறக்கும் போதும், இரவில் படுக்கைக்குச் செல்லும் போதும் வைகறைக்கு முன்னரும் ஆக மூன்று வேளை முஸ்லிம்கள் சாப்பிடுகின்றனர். தேவையான உணவை நோன்பு காலத்திலும் உண்ணத்தான் செய்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் நோன்பு காலத்தில் தான் முஸ்லிம்கள் அதிக சுவையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். ரமலான் மாதத்தில் தான் முஸ்லிம்களுக்கு உணவுச் செலவு மற்ற மாதங்களை விட அதிகமாகிறது.

வழக்கமாக மனிதர்கள் இரவில் எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு உறங்கி காலையில் எட்டு மணிக்கு சாப்பிடுகிறார்கள். அதாவது 12 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் இருப்பது தான் மனிதனது இயற்கை வழக்கமாக உள்ளது. நோன்பு காலத்திலும் சுமார் 12 மணி நேரம் தான் முஸ்லிம்கள் நாம் சாப்பிடாமல் உள்ளனர்.

வித்தியாசம என்னவென்றால் மற்ற நாட்களில் 12 மணி நேரம் உறக்கத்தில் செல்வதால் பசியை உணர முடிவதில்லை. நோன்பு நேரத்தில் பகலில் விழித்துக் கொண்டு பசியுடன் இருப்பதால் அதை உணர முடிகின்றது. அவ்வளவு தான் வித்தியாசம். இதில் மனக்கட்டுப்பாடு என்ற நன்மை கிடைக்கிறது. உடலுக்கு இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லை.