இறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்?

கேள்வி:

கீழ்க்காணும் துஆவில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வாக்களித்ததை நபிகள் நாயகத்துக்கு வழங்குமாறு துஆ செய்கிறோம்.

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

இது போன்று இன்னும் பல துஆக்களில் நபிகள் நாயகம் (ஸல்) )அவர்களுக்கு வாகளித்ததை தருவாயாக என்று இறைவனிடம் கேட்கின்றோம். என் கேள்வி என்னவென்றால் இறைவன் வாக்கு தவறுபவன் இல்லை. அப்படி இருக்க இறைவன் வாகளித்ததை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய அவசியம் என்ன? குரான் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.

முஹம்மத் யூனுஸ்

பதில்:

மேற்கண்ட துஆக்களை நாமாக உருவாக்கி பிரார்த்தனை செய்தால் தான் இப்படி கேள்வி கேட்கமுடியும். மேற்கண்ட துஆக்களை தனக்காக கேட்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் நமக்கு வழிகாட்டினார்கள். அவர்களின் வழிகாட்டுதல் அனைத்தும் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் அமைந்தவையாகும்.

அதாவது அல்லாஹ்வே இப்படி கேட்பதை ஊக்குவிக்கிறான் என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்குவதாக வாக்களித்த பின் அவனிடம் அதையே வேண்டுவது தேவையற்றது என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றலாம். ஆனால் பிரார்த்தனை செய்வதில் தேவைகளைக் கோருவது மட்டுமே நோக்கம் இல்லை. வேறு பல நோக்கங்களும் அதனுள் அடங்கியுள்ளன.

இறைவன் வாக்களித்ததையே நாம் கேட்டாலும் இறைவன் வாக்கு மாற மாட்டான் என்று புகழ்பாடுதல் அதனுள் அடங்கியுள்ளது.

அவன் வாக்களித்ததை நிறைவேற்ற மறுத்து விட்டாலும் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவனாக அதை நிறைவேற்றினால் தவிர யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

நீ வாக்களித்து விட்டாய். அதைத் தருவதைத் தவிர வேறு வழி உனக்கு இல்லை என்று நினைக்காமல் அவனாக பெருந்தன்மையுடன் நிறைவேற்றினால் தவிர அவனை யாரும் வற்புறுத்த முடியாது என்ற நம்பிக்கை இவ்வாறு பிரார்த்திப்பதில் அடங்கியுள்ளது.

அத்துடன் நமக்கு மார்க்கத்தைப் போதித்த நபியவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அந்த நன்றிக்கடனை நாம் தீர்க்க எந்த வாய்ப்பும் இல்லை. நபியவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யும் போது நமக்கு நேர்வழி காட்ட பாடுபட்ட நபியவர்களுக்கு நாம் நன்றி செலுத்திய கடமையும் நிறைவேறி விடுகிறது.

இறைவனை எஜமானனாக ஒப்புக் கொண்டு அவனிடம் இறைஞ்சுவதால் நமக்கு நண்மை கிடைக்கிறது. இப்படி இது போல் நமக்குத் தெரியாத இன்னும் பல நன்மைகள் இதனால் நமக்குக் கிடைக்கும்.