ஏகத்துவம் – நவம்பர் 2017

தூய்மையை நோக்கி ஒரு தூய பயணம்

கடந்த செப்டம்பர்  24ஆம் தேதி ஈரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 19வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் நடந்த தேர்தலில் மாநிலத் தலைமைக்கு சகோதரர் பிஜேவை மேலாண்மைக்குழு பரிந்துரை செய்தது. பிஜே அந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்தாலும் பொதுக்குழு அவரையே ஏகமனதாகத் தேர்வு செய்தது.

அதன் தொடர்ச்சியாக, பொதுச்செயலாளராக செய்யது இப்ராஹீம், பொருளாளராக சாதிக், துணைத் தலைவராக அப்துல் கரீம், துணைப் பொதுச்செயலாளராக  தவ்ஃபீக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  இதன் பின்னர் மற்ற செயலாளர்களை பொதுக்குழு தேர்வு செய்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாகக் குழு சீரும் சிறப்பாகச் செயல்படவும் புது வரலாறு படைக்கவும் எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் ஏகத்துவம் தனது வாசகர்கள் சார்பில் பிரார்த்தனை செய்து கொள்கின்றது.

உண்மையில் இந்தப் பொதுக்குழு, நிர்வாகத் தேர்தலுக்கான பொதுக்குழுவல்ல. காரணம் ஏற்கனவே பழைய நிர்வாகத்திற்கு இன்னும் ஏறத்தாழ 9 மாதங்கள் இருக்கின்றன. இருப்பினும் புது நிர்வாகத்தைத் தேர்வு செய்வதற்கான ஒரு நிர்ப்பந்தமும் நெருக்கடியும் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாகவே புது நிர்வாகத்துக்காகத் தேர்தல் நடத்தும் அவசியம் ஏற்பட்டது.

இந்த ஜமாஅத் தூய்மையான வழியில் நேர்வழியின் பால் மக்களை அழைக்கின்றது. நேர்வழி பெற்றோருக்கு அல்லாஹ் நேர்வழியை அதிகமாக்கி வழங்குகின்றான்.

எல்லாம் வல்ல திருக்குர்ஆனில் சொல்கிறான்.

நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்குகிறான். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் சிறந்த கூலிக்கும், சிறந்த தங்குமிடத்திற்கும் உரியது.

அல்குர்ஆன் 19:76

நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான்.

அல்குர்ஆன்  47:17

புதிய நிர்வாகம் ஏகத்துவ அழைப்புப் பணியை வீரியப்படுத்தி, முன்பை விட வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக!

—————————————————————————————————————————————————————————————

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா?

ஆர். அப்துல் கரீம்

அறியாமைக் காலம் தொடங்கி திருக்குர்ஆன் அருளப்படும் காலகட்டம் வரை பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் வழக்கம் இஸ்லாத்தை ஏற்காத அரபிய மக்களிடையே இருந்து வந்தது.

வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தையை இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துத் திருத்தியது.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:31

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது’’ என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் 6:151

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை.

அல்குர்ஆன் 6:140

குழந்தைகளைக் கொன்று புதைப்பது கொடிய குற்றம் எனவும், அக்குழந்தை எந்தப் பாவமும் அற்றவள் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

அல்குர்ஆன் 81:8,9

என்று அல்லாஹ் கூறுகிறான். உயிருடன் புதைக்கப்படும் குழந்தைகள் எந்தப் பாவமும் அற்றவர்கள் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

இவ்வசனங்களுக்கு மாற்றமாக அஹ்மதில் பின்வருமாறு ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

مسند أحمد بن حنبل

 15965 – حدثنا عبد الله حدثني أبي ثنا بن أبي عدي عن داود بن أبي هند عن الشعبي عن علقمة عن سلمة بن يزيد الجعفي قال انطلقت أنا وأخي إلى رسول الله صلى الله عليه و سلم قال قلنا : يا رسول الله إن أمنا مليكة كانت تصل الرحم وتقرى الضيف وتفعل وتفعل هلكت في الجاهلية فهل ذلك نافعها شيئا قال لا قال قلنا فإنها كانت وأدت أختا لنا في الجاهلية فهل ذلك نافعها شيئا قال الوائدة والموؤدة في النار إلا أن تدرك الوائدة الإسلام فيعفو الله عنها

ஸலமா பின் யஸீத் அல்ஜூஅஃபி (ரலி) கூறியதாவது:

நானும், என் சகோதரரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தாயார் முலைக்கா (அறியாமைக் காலத்தில்) உறவைப் பேணியும், விருந்தாளியை உபசரித்தும் வந்தார்கள். மேலும் இன்னின்ன நன்மைகளை எல்லாம் செய்து வந்தார்கள். அவை என் தாயாருக்கு  நன்மை தருமா?’’ என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நன்மை தராது என்று கூறினார்கள். அறியாமைக் காலத்தில் எங்கள் சகோதரி ஒருவரை உயிருடன் புதைத்திருந்தார். இது அவர்களுக்கு ஏதும் தீங்கு தருமா? என்று கேட்ட போது  ‘‘(குழந்தையை உயிருடன்) புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகத்தில் தான் இருப்பார்கள். புதைத்தவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: அஹ்மத் 15923

குழந்தையைக் கொன்று புதைப்பவள் பற்றி நபிகளாரிடம் கேட்கப்பட்ட போது புதைப்பவளுக்கும் நரகம், புதைக்கப்பட்ட குழந்தைக்கும் நரகம் என நபிகளார் பதிலளித்ததாக இச்செய்தி சொல்கின்றது.

இதன் அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கருதியுள்ளனர். ஆனாலும் இதன் கருத்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஏற்புடையதாக இல்லை.

குழந்தைகளைக் கொன்று புதைப்பவள் பெரும் கொடிய பாவத்தைச் செய்கிற காரணத்தால் அவள் நரகத்திற்குச் செல்வாள் என்பது இஸ்லாத்தின் எந்த அடிப்படைக்கும் எதிராக இல்லை.

புதைக்கப்பட்ட குழந்தை ஏன் நரகிற்குச் செல்ல வேண்டும்?

அக்குழந்தை நரகம் செல்லுமளவுக்கு என்ன பாவம் செய்தது?

அவள் தான் எந்தப் பாவமும் அற்றவள் என்று குர்ஆன் கூறிவிட்டதே?

குர்ஆனும், ஹதீஸும் தெளிவாக இவ்வாறு கூறிய பிறகு புதைக்கப்பட்ட குழந்தையும் நரகிற்குச் செல்லும் என்று கூறுவது குர்ஆனுடன் நேரிடையாக முரண்படக் கூடிய கருத்தாகும்.

ஹதீஸுக்கும் முரண்

குர்ஆனின் கருத்திற்கு மட்டுமின்றி ஆதாரப் பூர்வமான பல நபிமொழிகளுக்கும், இஸ்லாம் உரைத்த அடிப்படைகளுக்கும் இச்செய்தியின் கருத்து முரண்படுகிறது.

எல்லாக் குழந்தைகளும் இஸ்லாத்தில் தான் பிறக்கின்றன என்பது இஸ்லாம் கூறும் பொதுவிதியாகும்.

صحيح البخاري

1385 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، أَوْ يُنَصِّرَانِهِ، أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ البَهِيمَةِ تُنْتَجُ البَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَயு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1385

நபிகளார் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட சமயத்தில், தாம் பார்த்த ஒரு காட்சியை விளக்கும் போது, இணை வைப்பாளர்களுடைய பிள்ளைகளையும் சொர்க்கத்தில் கண்டதாகத் தெரிவிக்கின்றார்கள்.

صحيح البخاري

7047 – حَدَّثَنِي مُؤَمَّلُ بْنُ هِشَامٍ أَبُو هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَوْفٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ لِأَصْحَابِهِ: «هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَاயு قَالَ: فَيَقُصُّ عَلَيْهِ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يَقُصَّ، وَإِنَّهُ قَالَ ذَاتَ غَدَاةٍ: «إِنَّهُ أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ، وَإِنَّهُمَا ابْتَعَثَانِي، وَإِنَّهُمَا قَالاَ لِي انْطَلِقْ، وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا، وَإِنَّا أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ، وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَثْلَغُ رَأْسَهُ، فَيَتَدَهْدَهُ الحَجَرُ هَا هُنَا، فَيَتْبَعُ الحَجَرَ فَيَأْخُذُهُ، فَلاَ يَرْجِعُ إِلَيْهِ حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ المَرَّةَ الأُولَىயு قَالَ: “ قُلْتُ لَهُمَا: سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ؟ “ قَالَ: “ قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ “ قَالَ: “ فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ، وَعَيْنَهُ إِلَى قَفَاهُ، – قَالَ: وَرُبَّمَا قَالَ أَبُو رَجَاءٍ: فَيَشُقُّ – “ قَالَ: «ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الجَانِبِ الآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوَّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الجَانِبُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ المَرَّةَ الأُولَىயு قَالَ: “ قُلْتُ: سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ؟ “ قَالَ: “ قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ، فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى مِثْلِ التَّنُّورِ – قَالَ: فَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُولُ – فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ “ قَالَ: «فَاطَّلَعْنَا فِيهِ، فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ، وَإِذَا هُمْ يَأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلَ مِنْهُمْ، فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ ضَوْضَوْاயு قَالَ: “ قُلْتُ لَهُمَا: مَا هَؤُلاَءِ؟ “ قَالَ: “ قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ “ قَالَ:­ «فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى نَهَرٍ – حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ – أَحْمَرَ مِثْلِ الدَّمِ، وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ، وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً، وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ، ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الحِجَارَةَ، فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ، ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًاயு قَالَ: “ قُلْتُ لَهُمَا: مَا هَذَانِ؟ “ قَالَ: “ قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ “ قَالَ: «فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ المَرْآةِ، كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلًا مَرْآةً، وَإِذَا عِنْدَهُ نَارٌ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَاயு قَالَ: “ قُلْتُ لَهُمَا: مَا هَذَا؟ “ قَالَ: “ قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ، فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَوْضَةٍ مُعْتَمَّةٍ، فِيهَا مِنْ كُلِّ لَوْنِ الرَّبِيعِ، وَإِذَا بَيْنَ ظَهْرَيِ الرَّوْضَةِ رَجُلٌ طَوِيلٌ، لاَ أَكَادُ أَرَى رَأْسَهُ طُولًا فِي السَّمَاءِ، وَإِذَا حَوْلَ الرَّجُلِ مِنْ أَكْثَرِ وِلْدَانٍ رَأَيْتُهُمْ قَطُّ “ قَالَ: “ قُلْتُ لَهُمَا: مَا هَذَا مَا هَؤُلاَءِ؟ “ قَالَ: “ قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ “ قَالَ: «فَانْطَلَقْنَا فَانْتَهَيْنَا إِلَى رَوْضَةٍ عَظِيمَةٍ، لَمْ أَرَ رَوْضَةً قَطُّ أَعْظَمَ مِنْهَا وَلاَ أَحْسَنَயு قَالَ: “ قَالاَ لِي: ارْقَ فِيهَا “ قَالَ: «فَارْتَقَيْنَا فِيهَا، فَانْتَهَيْنَا إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ، فَأَتَيْنَا بَابَ المَدِينَةِ فَاسْتَفْتَحْنَا فَفُتِحَ لَنَا فَدَخَلْنَاهَا، فَتَلَقَّانَا فِيهَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ، وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍயு قَالَ: “ قَالاَ لَهُمْ: اذْهَبُوا فَقَعُوا فِي ذَلِكَ النَّهَرِ “ قَالَ: «وَإِذَا نَهَرٌ مُعْتَرِضٌ يَجْرِي كَأَنَّ مَاءَهُ المَحْضُ فِي البَيَاضِ، فَذَهَبُوا فَوَقَعُوا فِيهِ، ثُمَّ رَجَعُوا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ، فَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍயு قَالَ: “ قَالاَ لِي: هَذِهِ جَنَّةُ عَدْنٍ وَهَذَاكَ مَنْزِلُكَ “ قَالَ: «فَسَمَا بَصَرِي صُعُدًا فَإِذَا قَصْرٌ مِثْلُ الرَّبَابَةِ البَيْضَاءِயு قَالَ: “ قَالاَ لِي: هَذَاكَ مَنْزِلُكَ “ قَالَ: “ قُلْتُ لَهُمَا: بَارَكَ اللَّهُ فِيكُمَا ذَرَانِي فَأَدْخُلَهُ، قَالاَ: أَمَّا الآنَ فَلاَ، وَأَنْتَ دَاخِلَهُ “ قَالَ: “ قُلْتُ لَهُمَا: فَإِنِّي قَدْ رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَبًا، فَمَا هَذَا الَّذِي رَأَيْتُ؟ “ قَالَ: “ قَالاَ لِي: أَمَا إِنَّا سَنُخْبِرُكَ، أَمَّا الرَّجُلُ الأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالحَجَرِ، فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ القُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنِ الصَّلاَةِ المَكْتُوبَةِ، وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ، يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ، وَعَيْنُهُ إِلَى قَفَاهُ، فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ، فَيَكْذِبُ الكَذْبَةَ تَبْلُغُ الآفَاقَ، وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ العُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ، فَإِنَّهُمُ الزُّنَاةُ وَالزَّوَانِي، وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهَرِ وَيُلْقَمُ الحَجَرَ، فَإِنَّهُ آكِلُ الرِّبَا، وَأَمَّا الرَّجُلُ الكَرِيهُ المَرْآةِ، الَّذِي عِنْدَ النَّارِ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا، فَإِنَّهُ مَالِكٌ خَازِنُ جَهَنَّمَ، وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ  الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَّا الوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى الفِطْرَةِ “ قَالَ: فَقَالَ بَعْضُ المُسْلِمِينَ: يَا رَسُولَ اللَّهِ، وَأَوْلاَدُ المُشْرِكِينَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَوْلاَدُ المُشْرِكِينَ، وَأَمَّا القَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرٌ مِنْهُمْ حَسَنًا وَشَطْرٌ قَبِيحًا، فَإِنَّهُمْ قَوْمٌ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا، تَجَاوَزَ اللَّهُ عَنْهُمْயு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்ததால் அவரது தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், “இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?’’ என்று கேட்டேன்.

அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபோது, முஸ்லிம்களில் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)’’ என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆம்) இணை வைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்‘’ என்று பதிலளித்தார்கள். (ஹதீசின் ஒரு பகுதி)

நூல்: புகாரி 7047

இணைவைப்பாளர்களின் பிள்ளைகள் முதற் கொண்டு எல்லா பிள்ளைகளும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலேயே பிறப்பதாக நபிகளார் கூறிவிட்டார்கள்.  நல்லது கெட்டதைக் கண்டறியும் பருவத்தை அடையும் முன்னே அக்குழந்தைகள் இறந்து விட்டால் அவர்களின் இறப்பும் இஸ்லாத்திலேயே அமைந்து விடுவதை நபிகளாரின் இக்கூற்று உறுதிப்படுத்தி விடுகிறது.

விபரமறியும் பருவத்தை அடையும் முன் மரணித்த சிறுவர்கள் முஸ்லிம்களாகவே மரணிக்கின்றார்கள் என்ற கருத்து தெளிவாகவே இதில் உள்ளது.

இக்கருத்தை வலுப்படுத்தும் விதமாகவே மிஃராஜ் தொடர்பிலான செய்தி அமைந்திருக்கின்றது.

சொர்க்கத்தில் சில சிறுவர்களைப் பார்த்ததாக நபிகளார் குறிப்பிடும் போது இணை வைப்பாளர்களின் பிள்ளைகளும் இதில் அடங்குவார்களா? என்று நபித்தோழர்கள் கேட்க ஆம் என நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.

எனவே, குழந்தைப் பருவத்தில் மரணிக்கின்ற பிள்ளைகள் யாவரும் இஸ்லாத்திலேயே மரணிக்கின்றார்கள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்பதை இதிலிருந்து உறுதியாக விளங்கலாம்.

இஸ்லாத்தின் நிலைப்பாடு இப்படி இருக்க உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை நரகிற்குச் செல்லும் என்பது இஸ்லாத்தின் இந்நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது.

இதன்படி மேற்கண்ட ஹதீஸின் பொருள் குர்ஆனுக்கு மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளுக்கும் மாற்றமாக உள்ளதை அறியலாம்.

தற்கால அறிஞரான இமாம் ஷூஐப் அல்அர்னாஊத் என்பவரும் அஹ்மத் செய்தியின் அடிக்குறிப்பில் இக்கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

مسند أحمد بن حنبل (3/ 478)

 رجاله ثقات رجال الشيخين غير داود بن أبي هند فمن رجال مسلم وصحابيه روى له النسائي وله ذكر في صحيح مسلم ஞ் . لكن في متنه نكارة ஞ் فيه أن الموؤدة – وهي البنت التي تدفن حيه – تكون غير بالغة ونصوص الشريعة متضافرة على أنه لا تكليف قبل البلوغ والمذهب الصحيح المختار عند المحققين من أهل العلم أن أطفال المشركين الذين يموتون قبل الحنث هم من أهل الجنة

இதில் தாவூத் பின் அபீஹின்த் என்பாரைத் தவிர இதர அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பாளர்களாவர். தாவூத் பின் அபீஹின்த் முஸ்லிமின் அறிவிப்பாளர் ஆவார்.

இச்செய்தியை அறிவிக்கும் நபித்தோழரின் (ஸலமா) அறிவிப்பு நஸாயியிலும், முஸ்லிமிலும் உள்ளது.

எனினும் இச்செய்தியின் கருத்திலே மறுக்கத்தக்க அம்சம் உள்ளது. அது என்னவென்றால் உயிருடன் புதைக்கப்பட்ட. பருவத்தை அடையாத குழந்தைக்கு நரகம் என்று இதில் கூறப்படுகிறது. பருவமடையாத குழந்தைகளைப் பொறுத்த வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் அவர்களுக்கு இல்லை என மார்க்கச் சான்றுகள் அதிகம் சான்று பகர்கின்றன.

எனவே பருவத்தை அடையும் முன் மரணிக்கின்ற இணை வைப்பாளர்களின் குழந்தைகள் சொர்க்கவாசிகள் என்பதே ஆய்வாளர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான கருத்தாகும்.

அஹ்மத், பாகம் 3, பக்கம் 478, அடிக்குறிப்பு

வியாக்கியானங்களும் விளக்கங்களும்

அஹ்மதில் இடம்பெறும் மேற்கண்ட செய்தியை ஏற்கும் அறிஞர்களில் சிலர் இச்செய்திக்கு சில வியாக்கியானங்களை அளிக்கின்றனர். ஆனால் அவர்களின் வியாக்கியானங்கள் எதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதுடன் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களுடன் பொருந்திப் போகவுமில்லை.

அவர்கள் என்ன வியாக்கியானத்தை அளிக்கின்றார்கள்? அது எவ்வாறு ஏற்புடையதாக இல்லை என்பதைச் சற்று விரிவாகக் காண்போம்.

வியாக்கியானம்: 1

புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகத்தில் இருப்பார்கள் என்றால் இது பொதுவில் சொல்லப்பட்ட செய்தியல்ல. மாறாக ஸலமா (ரலி) அவர்கள் தன் தாயைப் பற்றியும், சகோதரியை பற்றியும் நபியிடம் கேள்வி எழுப்பிய போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதால் இங்கே இந்த இருவர் பற்றித்தான் பேசப்படுகின்றது.

அதாவது உயிருடன் புதைக்கப்பட்ட எல்லாக் குழந்தையும் நரகிற்குச் செல்வார்கள் என்பது இந்தச் செய்தியின் பொருளல்ல. இங்கே கேள்வி எழுப்பப்பட்ட  (ஸலமாவின் சகோதரி) குழந்தை மட்டுமே நரகிற்குச் செல்லும் என்பது இவர்களின் வியாக்கியானம்.

விளக்கம் 1

முதலில் இவர்கள் சொல்வது போல அந்தச் செய்தி குறிப்பிட்ட ஒரு குழந்தையைப் பற்றிப் பேசுகிறது என்று வைத்துக் கொண்டாலும் அதுவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். ஆனால் மேற்கண்ட ஹதீஸ் குறிப்பிட்ட ஒரு குழந்தையைப் பற்றி மட்டும் பேசவில்லை. உயிருடன் புதைக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் நிலை குறித்துப் பேசுவதைப் போன்று தான் அச்செய்தியின் வாசகம் உள்ளது.

இதை அந்தச் செய்தியின் இறுதி வாசகத்திலிருந்து விளங்கலாம்.

புதைத்தவள் இஸ்லாத்தை அடைந்து, அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர என்று நபியவர்கள் கூறியதாக அந்தச் செய்தியின் இறுதியில் வந்துள்ளது.

(குழந்தையை உயிருடன்) புதைப்பவளும், புதைக்கப்பட்ட குழந்தையும் நரகத்திலே இருப்பார்கள் என்பது குறிப்பிட்ட இருவரைப்பற்றி மட்டும் கூறப்பட்டதாக இருப்பின், புதைத்தவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர என்ற வாசகம் தேவையில்லை என்றாகி விடும்.

ஏனெனில் அச்சம்பவத்தில் மரணித்துப் போன ஸலமாவின் தாய் குறித்துத் தான் கேள்வி எழுப்பப்படுகிறது. அவர்கள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் மன்னிப்பான் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் தான் இஸ்லாத்தை அடையும் முன்னரே மரணித்து விட்டார்களே! அதனால் தானே அவர்கள் செய்த நன்மையும் அவர்களுக்குப் பலனளிக்காது என்று அச்செய்தியில் கூறப்படுகிறது.

அப்படியெனில் புதைப்பவளும், புதைக்கப் பட்டவளும் நரகம் செல்வார்கள் எனும் சொல்லமைப்பு குறிப்பிட்ட இருவர் தொடர்பானது மட்டுமல்ல. இது பொதுவிதியாக அதாவது உயிருடன் குழந்தைகளைப் புதைப்போர் – புதைக்கப்படும் குழந்தைகள் அனைவரது நிலை இது தான் என்பது போன்று தான் இந்தச் செய்தியின் வாசக அமைப்பு இருக்கிறது.

குழந்தையை உயிருடன் புதைப்பவள் அதன் பின் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு அந்த வாய்ப்பு இல்லை.

அதனால் தான் ‘புதைப்பவள் இஸ்லாத்தை அடைந்தாலே தவிர’ என்று சொல்லப்படுவதாக அந்தச் செய்தியின் தொனி அமைந்துள்ளது.

உயிருடன் புதைக்கப்படும் அனைத்து குழந்தைகள் குறித்தும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி. அப்படி ஒரு குழந்தையைக் குறித்து மட்டுமே பேசுகிறது என்று வைத்துக் கொண்டாலும் அப்போதும் இதன் கருத்து சரியில்லை என்பது தான் நமது வாதம்.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது…

 அல்குர்ஆன் 81:8,9

இந்த வசனத்தின் படி உயிருடன் புதைக்கப் படுவது ஒரு குழந்தையாக இருந்தாலும் அவள் பாவமற்றவள் என்பது தான் குர்ஆனின் நிலைப்பாடு.

எனவே இவர்கள் அளிக்கும் வியாக்கியானத்திலும் அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது? ஏன்? அது நரகிற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி அப்போதும் எழவே செய்யும்.

மேலும் எல்லாக் குழந்தைகளும் இஸ்லாத்திலேயே பிறக்கின்றார்கள். அவர்களின் மரணமும் இஸ்லாத்தில் தான் நிகழ்கின்றன எனும் முன்னர் கூறிய நபிமொழிக்கு எதிராகவும் இவர்களின் வியாக்கியானம் அமைந்திருக்கின்றது.

அந்த ஒரு குழந்தை மட்டும் தான் என்று சொல்வதால் நாம் முன்னர் குறிப்பிட்ட இந்த முரண்பாடுகள் ஒரு போதும் நீங்குவதில்லை.

வியாக்கியானம்: 2

புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகத்திலே இருப்பார்கள் எனும் நபியின் கூற்று, குறிப்பிட்ட இருவர் பற்றித்தான் பேசுகிறது என்று சொல்லிவிட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை அதாவது ஸலமாவின் சகோதரி நரகிற்குச் செல்கிறாள் என்று நபி சொல்வதிலிருந்து அவள் குழந்தை அல்ல, நன்மை தீமை எதுவென அறியும் பருவத்தை அடைந்தவள் என்றும், அவள் செய்த பாவத்தின் காரணத்தாலே அவள் நரகம் செல்கிறாள் என்றும் விளங்குகிறது.  இப்படித்தான் இந்தச் செய்தியைப் புரிய வேண்டும்.

இதன்படி பாவமற்ற குழந்தையை இறைவன் தண்டித்ததாக ஆகாது என்பது இவர்களின் இன்னொரு வியாக்கியானம்.

விளக்கம்: 2

குறிப்பிட்ட இருவர் பற்றித்தான் இந்தச் செய்தி பேசுகிறது எனும் இவர்களது முதல் வியாக்கியானத்தை அந்தச் செய்தியே நிராகரித்து விட்டது என்பதை முன்னர் விளக்கி விட்டோம்.

புதைப்பவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ்வின் மன்னிப்பை அடைந்தால்… எனும் சொல் அனைவரையும் தான் குறிக்கின்றது. குறித்த இருவரை மட்டும் குறிக்கும் சொல்லாக இல்லை என்பதை விளக்கினோம்.

ஒரு வாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட குழந்தையைப் பற்றி மட்டுமே பேசுகிறது என்றாலும் அப்போதும் குர்ஆனுக்கும், இதர ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் முரண்படவே செய்கிறது. அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தாள்? எல்லாக் குழந்தைகளும் இஸ்லாத்தில் தானே பிறக்கின்றன எனும் பொது விதிக்கு மாற்றமாக உள்ளதே என்று நாம் விளக்கியிருந்தோம்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த வியாக்கியானம் அமைந்துள்ளது.

புதைக்கப்பட்ட அவள் நரகம் செல்கிறாள் என நபி சொல்வதிலிருந்து அவள் எதுவுமறியா குழந்தை அல்ல, எல்லாமறிந்த பெண் என்று விளங்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

இந்த வியாக்கியானமும் தவறானதாகும்.

ஏனெனில் இதே செய்தி நஸாயி அவர்களின் ஸுனனுல் குப்ராவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், உயிருடன் புதைக்கப்பட்ட தன் சகோதரி பற்றி ஸலமா (ரலி) கூறும் போது, ‘பருவமடையாத என் சகோதரியை என் தாயார் புதைத்து விட்டார்கள்’ என்று கூறியதாக தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.

11585- أَخْبَرَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ الْمِنْهَالِ ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، حَدَّثَنَا دَاوُدُ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ ، عَنْ سَلَمَةَ بْنِ يَزِيدَ الْجُعْفِيِّ ، قَالَ : ذَهَبْتُ أَنَا وَأَخِي ، إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، إِنَّ أُمَّنَا كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ تُقْرِي الضَّيْفَ ، وَتَصِلُ الرَّحِمَ ، هَلْ يَنْفَعُهَا عَمَلُهَا ذَلِكَ شَيْئًا ؟ قَالَ : لاَ ، قَالَ : فَإِنَّهَا وَأَدَتْ أُخْتًا لَهَا فِي الْجَاهِلِيَّةِ لَمْ تَبْلُغِ الْحِنْثَ ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْمَوْءُودَةُ وَالْوَائِدَةُ فِي النَّارِ ، إِلاَّ أَنْ تُدْرِكَ الْوَائِدَةُ الإِسْلاَمَ.

பார்க்க: ஸுனனுல் குப்ரா 11585, தப்ரானி 6195

பருவமடையாத என் சகோதரி எனும் ஸலமா (ரலி)யின் கூற்று, அந்தக் குழந்தை பருவமடைந்திருக்கலாம், பாவம் செய்திருக்கலாம் எனும் இவர்களது சொந்த வியாக்கியானத்தைத் தகர்த்து விடுகிறது.

எனவே பாவமறியா குழந்தையை இறைவன் தண்டிப்பது எப்படி சரியாகும்? அது இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானதாயிற்றே எனும் நம் கேள்விக்குப் பதில் இல்லாமல் அப்படியே நிற்கின்றது.

இது குர்ஆனுக்கும் மற்ற நபிமொழிகளுக்கும் முரண்பாடாக உள்ளது எனும் கருத்தை இந்த வாசகம் மேலும் உறுதி செய்து விடுகிறது.

வியாக்கியானம்: 3

புதிய கோணத்தில் இந்தச் செய்திக்கு மற்றுமொரு வியாக்கியானமும் அளிக்கப்படுகிறது.

புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகம் செல்வார்கள் என்பதில் புதைத்தவள் என்பது குழந்தையை உயிருடன் புதைக்கும் பெண்களைக் குறிக்கும் சொல்லாகும்.

புதைக்கப்பட்டவர்கள் என்றால் யாருக்காக புதைக்கப்படுகிறதோ அவர்கள் என்பது இதன் பொருள்.

அதாவது மவ்ஊதா – புதைக்கப்பட்டவள் என்றால் உயிருடன் புதைக்கப்படும் குழந்தைகள் இல்லை. மாறாக யாருக்காக குழந்தை புதைக்கப்பட்டதோ அவர்கள்.

குழந்தையைப் புதைக்கும்படி தாய், தந்தை இருவரில் ஒருவர் தான் சொல்வார்கள். இவர்களுக்காகத் தான் குழந்தை புதைக்கப்படுகிறது. எனவே மவ்ஊதா என்றால் பெற்றோரில் ஒருவர் என ஒரு சிலரின் வியாக்கியானம் செல்கிறது.

விளக்கம்: 3

இந்த வியாக்கியானம் மொழிக்கு சற்றும் பொருத்தமில்லாததாகும்.

மவ்ஊதா – புதைக்கப்பட்டவள் என்றிருக்கும் இடத்தில், மவ்ஊததுன் லஹூ – யாருக்காக புதைக்கப்பட்டதோ அவர்கள் என்று கற்பனையின் பேரில், செய்தியில் இல்லாத கருத்து திணிக்கப்படுகிறது.

யாருக்காக எனும் அர்த்தம் தரும் லஹூ எனும் சொல் இல்லாமலே யாருக்காகப் புதைக்கப்பட்டதோ அவர்கள் என்று ஒரு மொழிபெயர்ப்பை எப்படி இந்தச் செய்திக்கு வழங்க முடியும்? அது எப்படிச் சரியாகும்?

அந்தச் செய்தியில் இருப்பது மவ்ஊதா – புதைக்கப்பட்டவள் நரகம் செல்வாள் என்பது தான். புதைக்கப்பட்டவள் என்பது குழந்தையைத் தான் குறிக்கும்.

குர்ஆனிலும் மேற்கண்ட 81:8,9 வசனத்தில் மவ்ஊதா என்ற சொல் தான் வந்துள்ளது. இதே அர்த்தம் தான் அந்தச் செய்திக்கும் வரும்.

அப்படியிருக்கும் போது அந்தச் செய்தி குழந்தையைப் பற்றி பேசவில்லை; பெற்றோரைப் பற்றி பேசுகிறது என்று செய்தியின் அர்த்தத்தை எப்படி அனர்த்தமாக்க முடியும்?

குர்ஆனில் வரும் மவ்ஊதா எனும் சொல்லுக்கு குழந்தை என்று அர்த்தம், ஹதீஸில் வரும் மவ்ஊதா எனும் சொல்லுக்குப் பெற்றோர் என அர்த்தம் என்பது ஆய்வு செய்யும் சரியான போக்கல்ல. மாறாக ஆய்வுப் பிறழ்வின் அடையாளமாகவே கருதப்படும்.

மேலும் இந்த வியாக்கியானத்தையும் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு நிராகரித்து விடுகின்றது என்பதை இந்த வியாக்கியானம் செய்வோர் கவனத்தில் கொள்ளவில்லை.

புதைக்கப்பட்டவள் என்பது குழந்தையைக் குறிக்காது; அது பெற்றோர் இருவரில் ஒருவரைத்தான் குறிக்கும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக உள்ள அந்தச் செய்தியில் புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகம் செல்வார்கள் என்று கூறிவிட்டு புதைப்பவள் இஸ்லாத்தை அடைந்து கொண்டாலே தவிர என்று சொன்னதாக வருகிறது.

இதன்படி புதைக்கப்பட்டவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி பேசப்படவில்லை.

இவர்களது கூற்றுப்படி புதைக்கப்பட்டவள் என்பது தாய், தந்தை இருவரில் ஒருவரைக் குறிக்கிறது என்றால் அவர்களும் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற வாய்ப்புள்ளதே?

இவர்களது கூற்றின் பிரகாரம் புதைப்பவள் (புதைக்கும் பெண்) புதைக்கப்பட்டவள் (குழந்தையின் தாய் – தந்தை) இருவரும் இஸ்லாத்தை அடைய வாய்ப்பிருந்தும் அந்த செய்தியில் புதைப்பவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி மட்டுமே நபியால் பேசப்படுவதாக உள்ளது.

புதைக்கப்பட்டவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி நபி பேசவில்லை.

இவர்கள் செய்யும் அர்த்தப்படி புதைக்கப் பட்டவளும் (அதாவது பெற்றோர்) இஸ்லாத்தை அடைந்து திருந்தி அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற வாய்ப்பிருக்கும் போது, புதைப்பவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்றால் அந்தச் சொல்லுக்கு இவர்கள் சொல்லும் அர்த்தமில்லை.

புதைக்கப்பட்டவள் என்பது உயிருடன் புதைக்கப்படும் குழந்தையைத் தான் குறிக்கிறது என்று உறுதியாகி விடுகிறது. அதனால் தான் அவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி பேசப்படவில்லை. அவள் மரணித்து விடுவதால் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பு இல்லாமல் போவதால் அவள் இஸ்லாத்தை ஏற்பது குறித்து பேசப்படவில்லை.

இதிலிருந்து நபியின் கூற்றாகப் பதிவாகியிருக்கும் செய்தியில் புதைக்கப்பட்டவள் என்பது குழந்தையைத் தான் குறிக்கிறது. தாய் தந்தையைக் குறிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

எனவே இந்தச் செய்தி குர்ஆனுடன் முரண்படுவதை நீக்கும் நோக்கில் பல வியாக்கியானங்களை இவர்கள் அளித்துப் பார்த்தாலும் எந்த விளக்கமும் அந்தச் செய்தியுடனோ, பிற அடிப்படைகளுடனோ சற்றும் பொருந்தவில்லை.

இதனடிப்படையில் அஹ்மதில் இடம்பெறும் செய்தி குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் முரண்படுவது உறுதியாவதால் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதன் கருத்து சரியல்ல என்பதால் இது ஆதாரப்பூர்வமானதல்ல!

—————————————————————————————————————————————————————————————

குடும்பவியல்     தொடர்  – 42

மாமியார் மருமகள் உறவு

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம்.

நபியவர்கள் தங்களது மனைவிமார்களை சந்தோஷப்படுத்தி, அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதற்கு இன்னுமொரு சான்றைக் காணமுடிகிறது.

அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?’’ என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 676, 5363

அதேபோன்று  இப்னு ஹிப்பான் என்ற நூலில் வேறொரு வகையிலும் இதுபோன்ற செய்தி அறிவிக்கப்படுகிறது.

உர்வா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான், ‘‘முஃமின்களின் தாயாரே! நபியவர்கள் தங்களது வீட்டில் இருக்கும் போது என்னென்ன செய்வார்கள்?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘‘தம் வீட்டாருக்குத் தேவையான வேலைகளைச் செய்து வந்தார்கள். மேலும் தமது செருப்பைத் தாமே தைத்துக் கொள்வார்கள். தமது ஆடை (கிழிந்திருந்தால்) தாமே தைத்துக் கொள்வார்கள். மேலும் தமது (தண்ணீர் இரைக்கும்) வாளியைச் சரிசெய்வார்கள்’’ என்று சொன்னார்கள்.

நூல்: இப்னு ஹிப்பான்  5676

எனவே, ஆண்கள் பொருள் திரட்ட வேண்டும், பெண்கள் வீட்டு வேலையைச் செய்ய வேண்டும் என்று பொறுப்புக்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டிருந்தாலும், நாமும் வீட்டில் இருக்கும் போது அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து அக்காரியத்திற்கு ஒத்துழைப்புச் செய்ய வேண்டும். அவர்கள் சமைத்தால், காய்கறி நறுக்கிக் கொடுக்கும் வேலையை நாம் செய்யலாம். மீன், கறி போன்றவற்றைக் கழுவிக் கொடுக்கலாம். பெண்களுக்கு உடல் நலமில்லாத போது வீட்டைப் பெருக்கலாம். இவற்றில் தவறு ஒன்றுமில்லை. வரவேற்கத்தக்க செயல்கள்தாம் இவை.

இப்படியெல்லாம் வேலை பார்ப்பது பெண்களைப் போன்றுள்ளது, ஆண்மைக்கு எதிரானது போன்று பலர் தவறாகக் கருதுகின்றனர்.

பெண்களுக்கென இஸ்லாமியக் குடும்பவியலில் பொறுப்புக்களும், கடமைகளும் இருந்தாலும் அப்பொறுப்பில் மிகவும் சிரமப்படாமல் இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்து, அதற்குத் தகுந்த ஒத்துழைப்பையும் உதவியையும் செய்து கொடுக்க வேண்டியது கணவரின் பொறுப்பாக இருக்கிறது என்று விளங்க வேண்டும்.

இங்கு இன்னொரு சமூகத் தீமையையும் நாம் இடித்துரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். சில ஹதீஸ்கள், பெண்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்ற சொன்ன செய்திகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, மருமகளை நியாயமின்றி கடுமையான வேலைப் பளுவைச் சுமக்க வைப்பது பாவச் சுமையை அதிகப்படுத்திவிடும்.

ஏனெனில் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட கணவனின் வீட்டில் மருமகளான பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்று சொன்ன நபியவர்கள்தான் தன் மனைவிமார்கள் சிரமப்படுகின்ற போது ஒத்துழைப்பாகவும் உதவிகள் செய்தும் சிரமத்தைக் குறைத்துள்ளார்கள்.

அப்படியெனில் மாமியார்கள் மருமகள்களை வேலை ஏவுவதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். அநியாயமான முறையில் மருமகளைக் கசக்கிப் பிழிய வேண்டும் என்ற நினைப்பில் செயல்படவே கூடாது.

ஒரு சில மாமியார்களினால் செயல்பட முடியாத நிலையில் தள்ளாடும் சூழ்நிலையில் இருப்பார்கள். இவர்கள் தன்னளவில் எந்தப் பணியையும் செய்வதற்குச் சக்தியற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மருமகள் முழு விதத்தில் பணிவிடை செய்வது கடமை.

அதே நேரத்தில் பல இடங்களில், வேலை செய்வதற்குண்டான சக்தியும் ஆற்றலும் நுணுக்கமான அறிவும் மாமியார்களுக்கு இருந்தும் கூட, மருமகள் வந்த உடன் எந்த வேலையும் செய்யாமல் படுத்துறங்கிக் கொண்டு, மருமகளை மட்டும் சிரமப்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல்பாடுகளாகும். மாமியாரும் மருமகளுடன் சேர்ந்து கூடமாட நின்று ஒத்துழைக்க வேண்டும்.

மகனுக்குத் திருமணம் முடிக்கும் முதல் நாள் வரைக்கும் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்த மாமியார், மருமகள் வந்ததும் ஒரேயடியாக வேலையை நிறுத்திக் கொண்டால், மருமகளை வேலைக்காரியாகப் பார்க்கும் நிலையேற்படும். இது சிறப்பான குடும்பத்திற்கு உகந்ததில்லை.

இன்னும் சொல்லப் போனால் சில வீடுகளில் மருமகள் வயதில் அவளது கணவனுடன் பிறந்த பெண் பிள்ளைகள் இருக்கத்தான் செய்வார்கள். விடுமுறை நாட்களில் வந்திருப்பார்கள். திருமணம் செய்து கொள்ளாதவர்கள் கூட வீட்டில் இருக்கலாம். அவர்களும் எல்லா வேலைகளையும் செய்வதற்குத் திடாகாத்திரமாக இருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால் மருமகள் வந்துவிட்டால் மாமியார் தனது பெண் பிள்ளைகளை வேலை வாங்குவதே கிடையாது. அவர்களாக முன்வந்து பார்த்தால் கூட பார்க்கக் கூடாது என்று தடுக்கின்ற மாமியார்களைத் தான் வீடுகளில் பார்க்கிறோம். இந்தத் தவறான அணுகுமுறையை, தாயே தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அவல நிலையாகவே இதைப் பார்க்க முடிகிறது.

இப்படியெல்லாம் தவறான நடைமுறைகளைக் கற்றுக் கொடுத்தால், நமது மகள் மணமுடித்துச் செல்லும் இடத்தில் தவறாக நடந்துவிடுவாளே என்ற எந்த அக்கறையும் தாய்க்கு இல்லாமல் இருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அஸ்மா (ரலி) அவர்களை அபூபக்கர் (ரலி) வளர்த்துப் பயிற்சியளித்த செய்தியை முன்னர் குறிப்பிட்டிருந்தோம். மேற்கண்ட நிலையில் இருப்பவர்கள் இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு திருத்திக் கொள்வது கடமை.

மருமகளிடம் எதிர்பார்க்கின்ற வேலையைப் போன்று தனது மகளிடமும் எதிர்பார்த்தால் தான் அது சிறந்த நிர்வாகமாக அமையும். அதேபோன்று தான் நபியவர்கள் தனது மகள் பாத்திமாவின் கைகள் காய்த்துப் போகும் அளவுக்குப் பயிற்சியளித்த செய்தியையும் நினைத்துப் பார்த்து தங்களை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய காலச் சூழ்நிலையில் திருமணம் முடித்த ஒரு மாதத்திற்கு வேண்டுமானால் புதுப்பெண் என்ற கணக்கில் மாப்பிள்ளை வீட்டார் சொகுசாக நடத்திவிட்டு, அதன் பிறகு குடும்பத்தில் இருக்கிற ஒட்டுமொத்த வேலைகளையும் ஒரு பெண் தலையில் கட்டிவிடுவது என்பது வேலைக்காரியை விடவும் கீழ் நிலையில் செய்யப்படுகிற கொடுமையாகும்.

மருமகளுக்கு ஏதேனும் தலைவலி, வயிற்றுவலி என்று கொஞ்சம் படுத்து ஓய்வெடுத்தால், “உனக்கு எப்போது பார்த்தாலும் இதே வேலையாகப் போய்விட்டது’’ என்று திட்டி இடித்துரைக்கிற நிலைகளையெல்லாம் குடும்பங்களில் பார்க்கிறோம். இவையெல்லாம் பெண்ணுக்கு இழைக்கப்படுகிற அநியாயங்கள். இதனை இறைவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.

எனவே திருமணமாகி மருமகளாக வருகிற பெண்களுக்கு எப்படிப் புகுந்த வீட்டில் செய்வதற்குக் கடமைகள் இருக்கின்றதோ அதுபோன்று மாமியார்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன.

இவர்கள் நம்மை நம்பி அடைக்கலமாக வந்திருக்கும் பெண்கள், நமது மகனுக்கு வாழ்க்கைப்பட்ட காரணத்தினால் இந்தப் பெண் அனைத்தையும் சகித்துக் கொண்டிருக்கிறாள், இந்தப் பெண் தனது தாய் தந்தையரையெல்லாம் விட்டுவிட்டு நம்மிடம் வந்திருக்கிறாள், நம் மாமியார் நம்மைக் கொடுமைப்படுத்தும்போது எப்படியெல்லாம் நம் மனம் நொந்து போனதோ அது போன்று நம் மருமகளுக்கும் இருக்குமே என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து மருமகளிடம் நெருக்கத்தையும், பாசத்தையும், அன்பையும் மாமியார்கள் செலுத்திட வேண்டும்.

எல்லா மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகளாகத்தான் இருந்திருப்பார்கள். நம் மாமியார் நம்மைக் கொடுமைப்படுத்தியதை நினைத்துப் பார்த்து நாம் நமது மருமகளைக் கொடுமைப் படுத்தாமல் இருப்பதுதான் இறையச்சத்திற்கு உகந்த செயல்.

எனவே, மாமியார்களாக இருப்பவர்களுக்குப் பொறுப்பு அதிகம் இருக்கிறது. பொறுப்பற்ற நிலையில் மாமியார்கள் நடந்துவிடக் கூடாது.

வேலைக்காரரைக் கூட அவரது சக்திக்கு மீறி வேலைப் பளுவைக் கொடுப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும்.

மஉரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதாஎனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரேபோல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள்  அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர்  தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை  அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி பணியில் அவர்களை நீங்கள்  ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 30, 2545, 6050

வேலைக்காரருக்கே இப்படி வழிகாட்டும் மார்க்கத்தில், குடும்பத்தில் அத்தனை தியாகத்தைச் செய்யும் மருமகளை, எந்தவொரு காசு பணத்தையும் சம்பளமாக எதிர்பார்க்காமல், அர்ப்பணிக்க வந்த மருமகளை, நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதை உணர்ந்து சமூகம் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மருமகள் விஷயத்தில் சமூக மக்கள் தவறு செய்பவர்களாக இருக்கிறார்கள். நபியவர்களின் மனைவிமார்களுக்கு நபியவர்கள் வீட்டில் இருக்கும் போது ஒத்தாசை, உதவி செய்கிறார்கள் என்றால், இந்த நிலை மாமியாருக்கும் பொருந்தும்.

நபியவர்களின் மனைவிமார்களுக்கு இதுபோன்ற மாமியார் இல்லை. ஏனெனில் நபியின் தாயார் நபியின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள்.  அதனால் நபியவர்கள் தமது மனைவியருக்கு உதவி செய்துள்ளார்கள்.

மாமியார்கள் தான் மருமகளுடன் அதிகமான நேரங்களில் வீட்டில் இருப்பார்கள். தனது மகள் சிரமப்படுவதைப் பார்த்து எப்படி தானாக முன்வந்து உதவி செய்வார்களோ, அதுபோன்று மருமகள் சிரமப்படுவதைப் பார்த்தும் தானாகவே மாமியார் முன்வந்து அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மாமியார், மருமகளுக்கு அளவுக்கு அதிகமான சிரமத்தை ஏற்படுத்தினால் அது மறுமையில் பிறருக்கு அநீதி இழைத்த மனித உரிமை மீறல்களாக வந்து தங்களது நன்மைகளை இழக்க நேரிடும். ஏனெனில் பாதிக்கப்பட்ட அத்தனை மருமகளும் மறுமையில் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் தனக்கு ஏற்பட்ட அநீதியை முறையிடுவாள். எனவே நாம் செய்கிற சொற்ப அமல்களையும் நாளை மறுமையில் இழந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் மாமியார்களும் மருமகள்களும் செயல்பட வேண்டும்.

பிள்ளைகள் இல்லாமல் கணவர் இறந்துவிட்டால் நான்கில் ஒரு பங்கு மனைவிக்கு சொத்தில் பாகப் பிரிவினை இருக்கிறது. பிள்ளைகள் இருந்து கணவன் இறந்தால் எட்டில் ஒரு பாகம் இருக்கிறது என்று மனைவி என்ற மருமகளுக்கு இஸ்லாம் சொத்துரிமையை வழங்கியிருக்கிறது. அப்படி உரிமையுடன் வருபவர்களை அடிமையைப் போன்று நடத்தக் கூடாது.

வேலை செய்வதுகூட ஒருபுறம் இருக்கட்டும். மாமியார்களில் பெரும் பகுதியினர் இல்லற வாழ்க்கைக்குத் தடையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. மருமகள் தனது மகனுடன் சந்தோஷமாக இருப்பதை தாய்மார்கள் வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். தனியாக கணவனுடன் பேசிக் கொண்டிருந்தால், அங்கே என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்று மருமகளைப் பார்த்து கேள்வி கேட்கிற அவல நிலையைப் பார்க்கிறோம்.

இது தவறான அணுகுமுறை. ஒரு மனைவி தன் கணவனுடன் பேசாமல் வேறு யாரோடு பேசுவாள்? இப்படியெல்லாம் பேசும் போது மருமகளின் ரோசத்தைத் தூண்டி அசிங்கமான அர்த்தம் வருகிற மாதிரி குத்திக் காட்டிவிடுவார்கள். இப்படியெல்லாம் மாமியார்கள் பேசுவதைக் கண்டு, கணவனுடன் அமர்ந்திருக்க மருமகள் பயப்படுவாள், அல்லது பகலில் பேசுவதற்கே அஞ்சுவாள்.

சந்தோஷமாகக் கணவனுக்கு முன்னால் பூ வைத்துக் கொள்ள முடியாது. நல்ல ஆடையை உடுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில், எப்போது பார்த்தாலும் மினுக்கிக் கொண்டிருக்கிறாள் எனக் கேட்கும் கேடுகெட்ட மாமியார்கள் இச்சமூகத்திலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதுவெல்லாம் கொடூரம், அநியாயம், பிறர் மானத்தோடு விளையாடுகிற பாவம். இது பற்றி மறுமையில் கேள்வி கணக்கு, விசாரணை உண்டு என்று நினைத்து மாமியார்கள் திருந்திக் கொள்ள வேண்டும்.

மறுமையைக் கண்டு பயப்படாதவர்கள், உலகத்தைக் கண்டாவது மனம் திருந்த வேண்டும். ஏனெனில் எத்தனை நாளுக்கு மாமியார் ராஜ்ஜியம் செல்லுபடியாகும்? மருமகளுக்குப் பிள்ளை பிறந்து, நடைமுறைகளைக் கற்றுக் கொண்டு, வருடங்கள் ஓடிவிட்டால் மாமியாரின் வயதும் உடல் தகுதியும் தளர்ந்து குடும்பத்தின் ராஜ்ஜியம் மருமகளிடம் வந்துவிடும். அந்த நேரத்தில் அதிகாரம் மருமகள் கையில் கிடைத்துவிட்டால், பழைய கணக்கை மனதில் வைத்து பழி தீர்க்கும் வகையில் பல இடங்களில் மருமகள் கொடுமைகளும் நடந்தேறுகிறது. அப்படியெனில் அதையெல்லாம் கவனத்தில் வைத்துதான் மாமியார்கள் மருமகளை நடத்த வேண்டும்.

நம் பெண் மக்கள் அவர்களது கணவர் வீட்டிலுள்ள வேலைகளையும் அவர்களது மாமியாருக்குப் பணிவிடை செய்வதிலும் கவனம் செலுத்துகிற போது, அவர்களால் நம்மைக் கவனிக்க முடியாது. நம் மருமகள்தான் நமக்கு எல்லா வகையிலும் உதவியாக இருப்பாள் என்று நினைத்து மாமியார்கள் நடந்துகொள்ள வேண்டும்.

பெண் மக்கள் மீது அக்கறையும் பாசமும் வைப்பதில் தவறு இல்லை. அதே நேரத்தில் மாமியாருக்கு வயதாகி படுத்த படுக்கையில் கிடந்து விட்டால், நமது மகள் நம்மைக் கவனிக்கிற வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஏனெனில் நமது மருமகன் அவரையும் அவரது தாய்தந்தையர்களையும் கவனிப்பதற்குத்தான் நமது மகளை வைத்திருப்பார். அப்படிப்பட்ட நிர்கதியான நிலையில் நமது மருமகள்தான் நம்முடன் நம்வீட்டில் இருப்பாள். அவள் நம்மை மனப்பூர்வமாகக் கவனிப்பதாக இருந்தால், மாமியார்கள் மருமகளுக்கு வந்த நாள் முதல் அந்த எண்ணத்தை ஊட்ட வேண்டும். நமது பிள்ளையின் இடத்தில் மருமகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்திருந்தால் அந்த மருமகள் இயற்கையாகவே மாமியாருக்கு ஏதேனும் ஒன்று என்றால் துடித்துப் போய்விடுவாள். எனவே நமது மருமகள்தான் இனி நமது மகள் என்று மாமியார்கள் நடத்திக் காட்டிட வேண்டும்.

திருமணம் முடித்துக் கொடுத்த சில ஆண்டுகள் வேண்டுமானால், தாய்தந்தையுடன் பிள்ளைக்கு உறவு இருக்கலாம். வாழ்நாள் முழுக்க அது நீடிக்க வாய்ப்பே இல்லை. நடைமுறையில் பல பெண்கள் பல ஆண்டுகளாக தாய் தந்தையரைப் பார்க்காமல் வாழ்வதை நாம் வாழ்கிற சமூகத்தில் காண்கிறோம். கணவன் வீடே கதியென்று இருக்கிறார்கள். எனவே நமது பெண்பிள்ளைகள் நம்மைக் கவனிப்பார்கள் என்று நினைப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எனவே மாமியாராகிய நம்மை நமது மருமகள் தான் கவனிப்பாள் என்று மாமியார்கள் எதிர்கால பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டால் ஒழுங்காக நடந்து கொள்வார்கள். இல்லையெனில் உலகத்திலும் தோல்வியைத்தான் தழுவார்கள். யாரெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்களோ அவர்கள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பதே எதார்த்தம். அதுவும் தனது மகனாலேயே அம்மாக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இவளுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தன் கணவனிடம் சொல்லி, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கடைசியில் முதியோர் இல்லத்தில் சேர்க்கின்ற கொடுமைகளையும் இவ்வுலகத்தில்தான் பார்க்கிறோம்.

எனவே ஒரு பெண்ணை நமது வீட்டிற்கு மருமகளாக எடுத்துக் கொண்டால், அவள்தான் நமக்கு உறுதுணையானவள், மருமகள்தான் நமக்கு எதிர்காலம் என்று நினைத்து அவள்மீது பாசம் செலுத்தி நடந்துகொண்டால், குடும்பமும் நன்றாக இருக்கும்; அநீதி இழைத்தவராகவும் ஆகமாட்டோம்; நமது எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும். இப்படி பலவகையில் இது நன்மையைப் பெற்றுத் தரும். உலகத்திலும் நன்மை, மறுமையிலும் அளவிலா நன்மையைப் பெற்றுத் தருகிறது. நமது ஆண் பிள்ளைகளும் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி மகிழ்ச்சியான குடும்பாக வாழ்வார்கள்.

அப்படி இல்லாமல் மருமகள் மாமியார் சண்டை நடக்கிற குடும்பங்களில் இவர்களது பஞ்சாயத்தைத் தீர்ப்பதிலேயே ஆண்கள் நிம்மதி இழந்து விடுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதாவது திருமணம் முடித்து பத்து ஆண்டு இடைவெளியில் இருக்கிற பெரும்பாலான ஆண்கள் நிம்மதியாக இருக்க முடியாததற்குக் காரணம், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் சண்டைதான். வெளிநாட்டில் அல்லது வெளியூர்களில் சம்பாதிப்பதற்குச் சென்றவர்கள்  இரண்டு ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் கழித்தாலும் சொந்த ஊருக்குச் செல்வதை வெறுப்பதற்குக் காரணமே இந்த மாமியார் மருமகள் சண்டைதான்.

—————————————————————————————————————————————————————————————

பெண்கள் பகுதி

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!

ஆப்ரின் சிதிரா

நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினரோ மிகவும் மோசமான பாதையில் பயணிக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை? எனக் கேள்வி எழுப்பினால் அடுத்த நொடிப் பொழுதில், இன்றைய நாகரீக வளர்ச்சியும், சமூகச் சீர்கேடுகளும் தான் என்று நாம் மறுமொழி பகர்கிறோம்.

சில தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் ஹைதர் என்பவரது மகள் ருக்ஸானா (வயது 21) பி.எஸ்.சி. பட்டதாரி. பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப் பட்டதால் ஆண்ட்ராய்ட் மொபைல் போன், பாய் ஃப்ரண்ட் என்று சுதந்திரப் பறவையாக சுற்றித் திரிந்தாள்.

கடந்த அக்டோபர் 16ம் தேதி ருக்ஸானா காணாமல் போனாள். பல இடங்களில் தேடிய பெற்றோர் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே பவானி கல்லாறு அணை அருகே பாறை பொதும்பில் பிணமாக, நிர்வாண நிலையில் ருக்ஸானா கண்டெடுக்கப்பட்டாள். போலீசாரின் தீவிர விசாரணையில் ருக்ஸானாவின் பாய் ஃபிரண்ட் பிரசாந்த் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் அழைப்பின் பேரில் கல்லாறு சென்றவள் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளாள். கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாளா? அல்லது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாளா? என்பதைப் போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் உணர்த்துவது என்ன?

தவறு என்பது சமூகச் சீர்கேட்டில் மட்டுமல்ல! குழந்தைகள் வளரும் விதத்திலும் உள்ளது. எந்தவொரு பெற்றோரும் தம் குழந்தைகள் தடம்புரள வேண்டும் என்று எண்ணுவதில்லை. எனினும் அவர்களது வளர்ப்பு முறையில் செய்யும் சிறு சிறு தவறுகளே பெரும் தவறாக உருவெடுக்கின்றது.

குழந்தைகள் வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றோரிடமே கற்றுக் கொள்கிறார்கள். நல்லவராவதும் தீயவராவதும் கற்பிக்கப்படும் கல்வியைப் பொறுத்தும் கற்பிக்கும் ஆசிரியரை (பெற்றாரை)ப் பொறுத்துமே அமைகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 1359

முதன்மைப் பொறுப்பாளி

குழந்தையை வளர்த்தெடுப்பதில் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் பங்கு இருந்தாலும், தந்தையைக் காட்டிலும் தாயே முழுப் பொறுப்பாளியாக இருக்கிறார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் (ரலி)

நூல்: புகாரி 2554

குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள்!

குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். அவர்கள் முன்னிலையில் எது செய்து காட்டப்படுகின்றதோ அதையே அவர்கள் பிரதிபலிக்கின்றனர். நமது சொல்லையும், செயலையும் மிக நுணுக்கமாகக் கவனித்து அதைப் போன்றே தாமும் நடந்து கொள்கின்றனர். அதனால் தான் சில நேரங்களில் அவர்களின் வயதுக்கு மிஞ்சிய பேச்சையும், செயல்பாடுகளையும் குழந்தைகளிடம் நம்மால் காண முடிகின்றது.

குழந்தைகளிடம் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நம்மிடமிருந்து உருவானவை தான் என்பதைப் புரிந்து கொள்ளாத பெற்றோர், உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமே, தங்களுக்கு அல்ல என்பது போன்று நடந்து கொள்கின்றனர். பொய் பேசக் கூடாது என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்து விட்டு அக்குழந்தையின் முன்னிலையில் தாங்களே பொய் பேசுகின்றனர். டிவி பார்க்கக் கூடாது என்று தடை விதித்து விட்டு, குழந்தையின் முன்னிலையிலேயே அதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இப்படி சொல்லும், செயலும் வேறுபட்டதாக இருப்பின் அதைக் கவனிக்கும் குழந்தைகள் என்ன செய்வார்கள்? நேர் முரணான இரு காரியங்களில் அவர்கள் எதைத் தேர்வு செய்வார்கள்? சொல்லையா? அல்லது செயலையா? பெற்றோரே சிந்தியுங்கள்.

வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கும் தலைசிறந்த ஆசான்களான பெற்றோரே தவறுக்குக் காரணமாக இருக்கும் போது குழந்தைகளைக் குறை கூறுவதில் என்ன பலன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு எதைப் போதித்தார்களோ அதை முதலில் தம் வாழ்வில் செயல்படுத்தினார்கள். அதனால் தான் அவர்களது உபதேசம் உயிரோட்டம் பெற்றது. இத்தகைய ஒரு நிலை இன்றைய பெற்றோரிடம் இல்லாமல் போனதால் தான் அறிவுரை அர்த்தமற்றதாக, சலிப்பானதாக மாறி விட்டது.

மனிதர்களின் மனதை அறிந்த இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.

அல்குர்ஆன் 61:2,3

கண்மூடித்தனமான அன்பு

வீட்டிற்கு ஒரே ஒரு பிள்ளை என்பதால் அளவுக்கு அதிகமாக சில பெற்றோர் அன்பு காட்டி வளர்க்கின்றனர். அன்பின் பெயரால் நல்லது கெட்டது என எதையும் யோசிக்காமல் வயது வரம்பின்றி, பைக், ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கித் தந்து அழகு பார்க்கின்றனர்.

பருவ வயதை அடையாத குழந்தைகள் கூட பேஸ்புக், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஒழுக்கச் சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம்.

சைக்கிள் ஓட்டிப் பழக வேண்டிய சிறுவனுக்கு இரு சக்கர மோட்டார் வாகனம், கரும்பலகையில் எழுதிப் பழக வேண்டிய குழந்தைக்கு டேப்லெட் என்று அன்பின் பெயரால் அராஜகம் நீள்கின்றது.

இது ஒருபுறமிருக்க, கண்மூடித்தனமான அன்பினால் குழந்தைகள் தவறு செய்தாலும் அதைக் கண்டிக்காமல் – கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். தந்தை கண்டித்தாலும் கூட, தாய்மார்கள் இடையில் புகுந்து, தவறு செய்யும் குழந்தைக்குப் பரிந்து பேசிக் காப்பாற்றி விடுகின்றனர். குடும்பத்தார் யாராவது கண்டித்தாலோ, தவறைச் சுட்டிக் காட்டினாலோ அதையும் தாய்மார்கள் பொறுத்துக் கொள்வதில்லை. வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் செல்கின்றனர். தாய்மார்களின் இந்தப் பாச உணர்வைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அடம் பிடித்து, மிரட்டி, தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றர்.

மேலும் சிறு தவறுகளைக் கண்டிக்காமல் விடுவதும், பரிந்து பேச ஆள் இருக்கிறது என்ற நம்பிக்கையும் பெரும் தவறுகள் செய்வதற்கு ஒரு காரணியாக அமைந்து விடுகின்றது.

தம் மகள் மீது கொண்ட பாசத்தை, என்னில் ஒரு பாதி என்று வர்ணித்த ஏந்தல் நபி (ஸல்) அவர்கள், அந்த நேசம் ஒருபோதும் தவறுக்குத் துணை போகாது என்பதையும் பிரகடனப்படுத்தினார்கள்.

இறைவன் மீது ஆணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3475

அளவு கடந்த அன்பு வைத்திருந்த தமது பேரக்குழந்தைகள் அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யமின்றி கண்டித்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சீ…சீ… கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 1939

தாய்மார்களே! அன்பு என்ற பெயரால் அளவு கடந்து போய்விடாமல், குழந்தைகள் சிறு சிறு தவறு செய்யும் போது, அதை அவர்களிடம் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி, கண்டித்து வளர்த்தால், அவர்கள் வளர்ந்தாலும் தவறின் பக்கம் செல்லாமல் இருப்பார்கள்.

கருணையில்லா கண்டிப்பு

அன்பினால் பிள்ளைகளைத் தடுமாறச் செய்யும் பெற்றோர் ஒரு வகையினர் என்றால், கண்டிப்பு என்ற பெயரால் குழந்தைகளைத் தவறிழைக்கச் செய்யும் பெற்றோர் மற்றொரு வகையினர் ஆவர். இந்த சாராரின் கொள்கையே, “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான், அடியாத மாடு பணியாது” என்ற பழமொழிக் குப்பைகளாகும்.

இதை ஏன் செய்தாய்? ஏன் செய்யவில்லை? என்று எப்போதும் விசாரணை! நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்; உட்கார்ந்தால் குற்றம் என குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கின்றனர். கண்டிப்பு எனக் கூறி எதற்கெடுத்தாலும் அடி, உதை! வெளியிடம் என்று பாராமல் அடித்துத் துவைத்து, குழந்தைகளின் தன்மான உணர்வோடு விளையாடுகின்றனர்.

சிலர் எல்லை தாண்டிப் போய், குழந்தைகளைக் கட்டி வைத்து அடிப்பது, சூடு போடுவது, கூரிய ஆயுதங்களைத் தூக்கி எறிவது, உடல் முழுவதும் காயம் ஏற்படும் வகையில் அடிப்பது என கருணையில்லாமல் கரடு முரடாய் நடந்து கொள்கின்றனர். இத்தகைய செயல்கள் ஒருபோதும் உங்கள் குழந்தைகளை நேர் செய்யாது என்பதைத் தாய்மார்களே புரிந்து கொள்ளுங்கள்.

இந்த வன்முறை செயல்களினால் உங்கள் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு தான் வருமே தவிர அக்கறையால் தான் இவ்வாறு செய்கிறீர்கள் என்பதை அவர்களால் உணர முடியாது. எல்லா நேரமும் அடி, உதை, திட்டுக்கள் என வளரும் குழந்தைகள் வருங்காலத்தில் முரடர்களாக, சைக்கோவாக ஆகின்றனர். தம்மிடம் காட்டப்பட்ட அடக்குமுறைகளை அவர்கள் மற்றவர்களிடம் வெளிப்படுத்துகின்றனர்.

குழந்தைகள் தான் செய்ய விரும்பும் பல நல்ல காரியங்களைக் கூட பெற்றோர் மீதுள்ள பயத்தாலும், வெறுப்பாலும் செய்யாமலேயே விட்டு விடுகின்றனர்.

அதிகாரத்தால், அடக்குமுறையால் செய்ய முடியாத எத்தனையோ பல காரியங்களை அன்பினால் செய்து முடிக்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆட்சி, அதிகார பலம் இருந்த போதும் அவர்கள் தமது எதிரிகள் மீது கூட அடக்குமுறையைப் பிரயோகித்ததில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்ததில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).

நூல்: முஸ்லிம் 4651

அனஸ்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ச்சீஎன்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை.

நூல்: புகாரி 6038

விரட்டியடிக்கும் வார்த்தைகள்

அடி, உதை மட்டுமல்லாமல் தாய்மார்கள், குழந்தைகளைத் திட்டுவதற்கென்றே அதிர வைக்கும் வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் மீதுள்ள கோபத்தால், “நாசமாய் போ, விளங்காமல் போ, நல்லாவே இருக்க மாட்டாய்…” என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி சாபமிடுகின்றனர். அத்துடன் காலை முதல் இரவு வரையிலும் அசிங்கமான வார்த்தைகளையெல்லாம் நாக்கூசாமல் சங்கோஜப்படாமல் சகட்டு மேனிக்குப் பேசுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை எச்சரிக்கின்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

நூல்: புகாரி 6138

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ஆமீன்கூறுகின்றனர்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1678

தவறை உணர்த்த சிறந்த வழி

கண்டிப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்வதற்குப் பதிலாக மாற்று வழியைக் கையாளலாம். குழந்தைகள் மீதுள்ள கோபத்தை அனல் கக்கும் வார்த்தைகளிலும் உடல் பலத்தின் மூலமும் காட்டுவதற்குப் பதிலாக கோபத்தை முக அறிகுறிகள் மூலம் காட்டலாம். உங்கள் முக மாற்றத்தின் மூலமே, நாம் தவறு செய்துள்ளோம், அதனால் தான் தாயின் முகம் மாறியுள்ளது என்பதைக் குழந்தைக்குப் புரிய வையுங்கள். குழந்தைகள் தவறிலிருந்து விடுபட இது ஓர் அழகிய வழியே!

நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். யார் என்னுடைய தந்தை?’ என்று கேட்டதற்குவர்கள் ஹுதாபா தான் உம்முடைய தந்தைஎன்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!என்று கேட்க உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்என்றார்கள்

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி 92

அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக் குறியைக் கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.

நூல்: புகாரி 5840

தவறை உணர்த்த மற்றொரு வழி, வாய் ஓயாமல் பேசுவதற்குப் பதிலாக வாயே திறக்காமல் இருப்பதன் மூலமும் பாடம் நடத்தலாம். என்னதான் அடித்துக் கொண்டாலும், முறைத்துக் கொண்டாலும் அன்பு காட்டி அரவணைக்கும் ஒரு தாய் பேசாமல் மவுனம் காத்தால் அந்த மவுனமே குழந்தைகளுக்கு ஒரு வெறுமையை ஏற்படுத்தும். மீண்டும் தவறு செய்தால் நம்மிடம் தாய் பேச மாட்டார் என்ற அச்சம், அவர்களை விரும்பத்தகாத காரியங்கள் செய்வதை விட்டும் தடுத்து விடும். தாய்மார்களே! இந்த வழிமுறையை நீங்களும் கையாளுங்கள்.

உணர்வுக்கு மதிப்பளியுங்கள்

என் பிள்ளை என் சொல்லைக் கேட்பதில்லை, எனக்கு மரியாதை தருவதில்லை, அன்பாக நடந்து கொள்வதில்லை, நான் அன்பு காட்டினால் அதைப் புரிந்து கொள்வதில்லை என்றெல்லாம் புகார் கொடுக்கும் தாய்மார்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் அவர்களும் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

நீங்கள் நினைத்தவாறு வடிவம் செய்வதற்குக் குழந்தைகள் ஒன்றும் களிமண் அல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; உணர்வுள்ளவர்கள். சில நேரங்களில் அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நீங்களும் உங்களை மாற்றிக் கொள்வது அவசியமானதாகும். பச்சிளங்குழந்தையாக இருந்த போது அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்களே முன்னின்று செய்தீர்கள். அதைப் போன்று அவர்கள் வளர்ந்த பின்பும் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமாகும்.

அனுபவமிக்க நீங்கள் அறியாப் பருவத்திலுள்ள பிள்ளைகளின் மனநிலையைக் கேட்டு நடந்து கொள்வதை விட்டு விட்டு, நான் தான் அவனைப் பெற்றேன், அவன் ஒன்றும் என்னைப் பெறவில்லை, என் சொல்லைக் கேட்டுத் தான் அவன் நடக்க வேண்டும் என்று உங்கள் உரிமையை உறுதி செய்து கொள்வதும், அதிகாரத் தோரணையில் அடம் பிடிப்பதும் ஒருபோதும் பயன் தராது.

பிள்ளைகளின் மனதைப் புரிந்து கொள்வதற்குச் சில விஷயங்களில் விட்டுக் கொடுப்பதும், விட்டுப் பிடிப்பதும் சகித்துக் கொண்டு பொறுமை காப்பதும் மிகவும் அவசியம்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியவையும்  செய்யக் கூடாதவையும்

  1. தான் படிக்காத படிப்பை எல்லாம் தமது குழந்தைகள் படித்துப் பெரிய பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆவலில் கோடிப் பணத்தைக் கொட்டி, உயர்ந்த கல்வியகத்தில் சேர்த்து விடுகின்றனர். மேலும் எல்லா நேரமும் படி, படி என்று படிப்பைத் திணிக்கின்றர். விளையாடக் கூட அவர்களை அனுமதிப்பதில்லை. இதனால் படிப்பின் மீது வெறுப்பு தான் ஏற்படும்.

பள்ளியிலிருந்து வந்தவுடன் குழந்தைகளின் அலுப்பைப் போக்குங்கள். விளையாட அனுமதியுங்கள். இதனால் அவர்களது உடலும் உள்ளமும் உற்சாகமடையும். முடிந்தால் அந்த விளையாட்டில் நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள். ஆசை தீர விளையாடி ஓய்ந்தவுடன் அவர்களுக்குப் படிப்பை நினைவூட்டுங்கள். இயன்ற வரை படிக்க வையுங்கள். வெறுப்புடன் அமர்ந்து மணிக்கணக்கில் படிப்பதை விட குதூகலத்துடன் கால் மணி நேரம் படித்தாலும் கூட அதுவே நிறைவானது என்று திருப்தி கொள்ளுங்கள்.

குழந்தைகளின் முன்னிலையில் தீய சொற்கள், தீய செயல்களை முற்றிலும் தவிர்த்திருங்கள். அவர்களின் கண் முன்னே நற்செயல்களை அதிகம் செய்யுங்கள். அதில் குழந்தைகளையும் கூட்டாக்குங்கள். நல்லுபதேசங்களை அதிகமாகச் செய்யுங்கள். நபிமார்கள் பற்றியும் நபித்தோழர்கள் பற்றியும் வரலாறுகளை, கதைகளைப் போன்று மனதில் பதியுமாறு எடுத்துரையுங்கள்.

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்’’ (என்று லுக்மான் அறிவுரை கூறினார்).

அல்குர்ஆன் 31:16-19

ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

நூல்: புகாரி 1960

  1. தாயின் உறவினர்கள் குறித்துத் தந்தையும், தந்தையின் உறவினர்கள் குறித்துத் தாயும் மாறி மாறி தமது பிள்ளைகளிடம் குறை கூறுகின்றனர். மேலும் தமது குழந்தைகள் முன்னிலையிலேயே நெருங்கிய உறவினர்களைப் பற்றி விமர்சிக்கின்றனர். இன்னும் சிலர், தமது உறவினர்களைக் குறிப்பிட்டு, அவர் எது தந்தாலும் வாங்கக் கூடாது என்று உறவை முறித்து விடப் பாடம் புகட்டுகின்றனர்.

இன்று பல குழந்தைகள் உறவினர்களை மதிக்காமல் நடந்து கொள்வதற்கு இதுவே முக்கியக் காரணம். இத்தகைய செயலைக் கைவிட்டு, உறவினர்கள் குறித்து நபிகளார் செய்த உபதேசத்தையும், உறவைப் பேணி வாழ்வதால் ஏற்படும் நன்மைகளையும், உறவைப் பேணாவிட்டால் ஏற்படும் விபரீதங்களையும் எடுத்துரைத்து, பகைமை தலைதூக்காத வகையில் உறவுகளைப் பசுமையாக்குங்கள். பெரியவர்களுக்கு மத்தியில் ஆயிரம் விவகாரம் இருந்தாலும் அதைக் குழந்தைகளிடம் காட்டாதீர்கள்.

  1. குழந்தைகளைப் பகட்டான வாழ்க்கையின் பக்கம் வழிநடத்தாமல் எளிமையான வாழ்க்கையை வாழ வையுங்கள்.

அலீ (ரலி) அறிவித்தார்.

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், ‘நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், ‘நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5361

பகட்டு வாழ்க்கை நிலையானது அல்ல என்ற பாடத்தையும் கற்றுத் தாருங்கள். நாம் படும் கஷ்டம் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என்று மறைப்பதற்குப் பதிலாக, வாழ்க்கை என்றால் இத்தனை கஷ்டங்களும், தாங்க முடியாத சோதனைகளும் வரும் என்ற வாழ்க்கைப் பாடத்தைப் போதியுங்கள். நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்களையும் தியாகங்களையும் கூற மறந்து விடாதீர்கள்.

  1. குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கின்றன. எனவே நாம் பெற்ற பிள்ளைகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகளின் தகுதிக்கு மீறி எதிர்பார்க்காதீர்கள். பிள்ளைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். உள்ளதை உள்ள வகையில் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருபோதும் பிறருடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஒவ்வொருவரிடமும் உள்ள தனித்தன்மையை மனதாரப் பாராட்டுங்கள்.
  2. வெற்றியை மட்டும் நோக்கமாக வைத்துக் குழந்தைகளை வளர்க்காதீர்கள். வாழ்வில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதே! அதுவே இறைவனின் நியதி என்பதைக் குழந்தைகளின் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அள்பாஎன்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதுஎன்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6501

தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு, ஆசிரியர் திட்டுதல் போன்ற அற்பக் காரணங்களுக்கெல்லாம் தற்கொலைகள் அதிகமாக நடப்பதற்கு இந்த எண்ணம் இல்லாததே காரணம்.

  1. குழந்தைகள் எதைச் சொன்னாலும், எதைக் கேட்டாலும் வேண்டாம், முடியாது, இல்லை, தர மாட்டேன் என்று எதிர்மறையாகவே பதில் சொல்லாமல், அவர்கள் கேட்பது, கூறுவது நியாயமானதாக, நன்மை பயக்கக் கூடியதாக இருந்தால் அதை ஆதரியுங்கள்; நீங்களே அதிகம் ஆர்வமூட்டுங்கள்; அதை வாங்கிக் கொடுங்கள். குழந்தைகள் கேட்கும் விஷயத்தில் நன்மை இல்லாதபட்சத்தில் தயவு காட்டாமல் மறுத்து விடுங்கள். நாம் விரும்புவது நியாயமானதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும்.
  2. உன்னால் எதையுமே செய்ய முடியாது; மாடு மேய்க்கத் தான் லாயக்கு; வருங்காலத்தில் நீ எதற்கும் உருப்பட மாட்டாய் என்று அவர்களின் தன்மானத்திற்குச் சவால் விடும் வகையில் பேசி, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாமல் இந்த வீட்டிற்கு நாளைய நட்சத்திரமே நீதான் எனக் கூறி ஆர்வமூட்டுங்கள்.

உன்னால் இதைச் செய்ய முடியுமா? இதற்கு நீ சரிப்பட்டு வருவாயா? வேண்டாம் விஷப்பரிட்சை என்றெல்லாம் ஐயப்பட பேசி, பிள்ளைகளைத் தளர்வடையச் செய்யாமல், உன்னால் முடியும், செய்து பார் என்று ஆர்வமூட்டி அருகிலிருந்து உதவுங்கள். சிறு சிறு பொறுப்புக்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். இதில் கவனிக்க வேண்டிய அம்சம், இந்தப் பயிற்சியில் சாதகம், பாதகம் இரண்டுமே இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி (ஷாம் நாட்டுக்கு) ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் (இளம் வயதைக் காரணம் காட்டி) உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறை கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) நின்று, “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தை (ஸைத்)யின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். அவருக்குப் பின் மக்களிலேயே இவர் (உசாமா) என் அன்புக்குரியவர் ஆவார்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4809

தாயே சிறந்த தோழி

நம்மைச் சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்புறவைப் போன்று விருப்பமான உறவு வேறெதுவும் இருக்க முடியாது. அதே போன்று நண்பர்களைத் தவிர வேறு யாராலும் நமது மனதை நெருங்க முடியாது. அதனால் தான் நபிகளார், நட்புக்கு மிகவும் தகுதியானவராக தாயைக் கூறுகிறார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். உன் தாய்என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தைஎன்றார்கள்.

நூல்: புகாரி 5971

தாய்மார்களே! உங்கள் தாய்மையில் ஒரு தோழமை இருக்கிறது. அதனால் தான் தாய்க்குத் தோழி என்ற தகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள். அதை உணர்ந்து உங்கள் குழந்தைகளிடம் கலந்துறவாடுங்கள். ஒளிவு, மறைவு இல்லாமல் மனம் திறந்து பழகுங்கள். நான் தாய் மட்டுமல் அல்ல; உனது நெருங்கிய தோழி என்பதை உங்கள் செயலால் புரிய வையுங்கள். அவ்வாறு பழகும் போது தான் உங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சரிவர பூர்த்தி செய்ய முடியும்.

தாய் என்ற அந்தஸ்தில் இருந்து அவர்களை வழிநடத்தும் போது, பிள்ளைகள் தங்கள் நியாயத்தை எடுத்துரைப்பது கூட எதிர்த்துப் பேசுவதாகவே தோன்றும். ஆனால் தோழியாகத் தோள் கொடுக்கும் போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அன்றைய நாள் பற்றிப் பேசுங்கள். நண்பர் வட்டாரம் பற்றிக் கேட்டறியுங்கள். சமூக சூழ்நிலைகள் பற்றி, தடுமாறும் இளைய தலைமுறை பற்றிக் கலந்துரையாடுங்கள். நகைச்சுவைக்கும் இடமளியுங்கள். அறிவுப்பூர்வமான. சிந்தனையைத் தூண்டும் வகையில் பல வினாக்களைத் தொடுத்து, விடை கூறுங்கள்.

பாலியல் ரீதியான மாற்றங்களையும், மார்க்கம் கூறும் தீர்வுகளையும் குறிப்பிடுங்கள். முடிந்தால் வயது வரம்பை மறந்து உங்கள் பிள்ளைகளுடன் விளையாடுங்கள். இத்தகைய தோழமை உணர்வு தான் ஆரோக்கியமான உறவு!

ஒருபோதும் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் பிளவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இளம் பருவத்தினர் தனிமையை எதிர்கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்தாலும் சாத்தியமான ஒன்று தான். நேரம் இல்லை, வேறு பொறுப்புகள் இருக்கின்றன என்று சமரசம் செய்யாமல் இதுவும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை தான், இது குறித்தும் அல்லாஹ்விடம் விசாரணை உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அங்கம் வகித்த ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கினார்கள். மக்களோடு மக்களாய் இருந்து தவறுகள் அரங்கேறாமல், தீமைகள் தலைவிரித்தாடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்தார்கள். மாமேதையான மாநபியிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது.

பெற்றோர்களே! தளர்ந்து வாடும் நேரத்தில் நீங்கள் அழைக்காமலேயே உங்கள் குழந்தைகள் உங்களுக்குக் கரம் தர வேண்டும் என்றால் நீங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

—————————————————————————————————————————————————————————————

இரைக்குப் பொறுப்பு இறைவனே!

அமீன் ஃபைஜி  இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர்

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அன்றாடம் தமது தேவைகளை அடைவதற்காக காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கச் செல்கின்ற வரை தமது வியர்வைத் துளிகளை இரத்தத் துளிகளாக்கி அயராது உழைத்துப் பாடுபடுகின்றனர்.

எந்த அளவிற்கென்றால் சில நேரங்களில் மனிதன் தன்னுடைய அன்றாடத் தேவையை நிறைவேற்றுவதற்காகச் சில தவறான வழிகளையும் கையாண்டு பிற மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றான். இதை மனிதன் செய்வதற்குண்டான காரணமே நமக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம்  நமக்கு கிடைக்காதோ என்ற ஏக்கத்திலும், அச்சத்திலும் தான்.

இவை அத்துணைக்கும் இஸ்லாம் அற்புதமான முறையில் நமக்குப் பாடம் நடத்துகின்றது.

மனிதர்களாகிய நமக்கும், இறைவனால் படைக்கப்பட்ட மற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு வழங்கும் கடமையும், பொறுப்பும், அதிகாரமும் நம்மைப் படைத்தவனான இறைவனைச் சார்ந்ததே என்று இஸ்லாம் கூறுகிறது.

இதை இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது,

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும் அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

அல்குர்ஆன் 11:6

இதற்கு மாற்றமாக உணவுக்குரிய கடமையும், பொறுப்பும் நம்மைச் சார்ந்ததே, இறைவன் பொறுப்பல்ல என்பது போன்று நம்முடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதனால் மனிதர்கள் செய்யும் தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் மோசடி, ஏமாற்று, பொய், பித்தலாட்டம் நிறைந்திருப்பதைப் பார்க்கின்றோம்.

அறிவியலிலும், புதிய புதிய கண்டுபிடிப்பு களிலும் மனிதன் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே செல்கின்றான். பொருளாதாரத்திலும், வியாபாரத்திலும் எவ்வளவோ நவீன வசதிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ப மனிதன் வளர்ச்சி கண்டிருக்கின்றான். என்னதான் இப்படி அறிவியலில் மனிதன் வளர்ந்திருந்தாலும் இஸ்லாம் காட்டித் தந்ததன் அடிப்படையில் நீதியாக, நியாயமாக தங்களுடைய வியாபாரங்களை அமைத்துக் கொள்ளாமல் மனிதனை மனிதன் ஏமாற்றுவதும், மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைப்பு நடத்துவதும் அதற்கு ஏற்ப குறைந்தபாடில்லை.

இதற்கு மிக முக்கியக் காரணம் நமக்கு கிடைக்க வேண்டிய உணவு நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் தான். மனிதர்களுடைய இந்த அற்ப எண்ணங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இறைவன் அற்புதமான முறையில் சொல்லிக் காட்டுகின்றான்.

வறுமைக்கு அஞ்சாதீர்கள்!!

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது’’ என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் 6:151

இந்த வசனத்தில் அறியாமைக்கால மக்களிடத்தில் இருந்த ஒரு கெட்டப் பழக்கத்தை இறைவன் சுட்டிக் காட்டி கடுமையான முறையில் எச்சரிக்கின்றான்.

அதாவது, அறியாமைக்கால மக்கள் வறுமை எனும் உணவு சார்ந்த பொருளாதார நெருக்கடிக்குப் பயந்து குழந்தைகளைக் கொலை செய்து, அந்தக் கொலையை நியாயப்படுத்தினர். ஆனால் இறைவன் குழந்தைகளாகிய (அவர்களுக்கும்), பெற்றோர்களாகிய (உங்களுக்கும்) நாமே உணவளிக்கின்றோம். பிறகு ஏன் குழந்தைகளைக் கொலை செய்கிறீர்கள்? என்று உணவு வழங்கும் பொறுப்பு தன்னைச் சார்ந்தது என்று சுட்டிக் காட்டுகின்றான்.

நம்முடைய குழந்தைகளின் உணவுக்குப் பொறுப்பு இறைவன் அல்ல என்று பயந்து, வறுமைக்கு அஞ்சி தங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்வதை நபி (ஸல்) அவர்கள் மிகப் பெரும் பாவமாகக் கருதி வன்மையாகக் கண்டித்திருக்கின்றார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதுஎன்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வதுஎன்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வதுஎன்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 4477

எனவே, இறைவன் தான் நம்முடைய உணவுக்குப் பொறுப்பு என்று ஒவ்வொருவரும் ஆழமாக நம்ப வேண்டும். அப்படி நம்பினால் இறைவன் கட்டாயமாக நமக்கு உணவளிக்கப் போதுமானவன். எந்த அளவிற்கென்றால் பறவைகளுக்கு உணவளிப்பது போல் நாமும் உணவளிக்கப்படுவோம். அதிகாலை நேரத்தில் வயிறு காலியாகச் செல்கின்ற பறவைகள் கூடு திரும்பும் போது வயிறு நிரம்பியதாகத் திரும்புவதைப் பார்க்கின்றோம்.

இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான்..

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 29:60

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அல்லாஹ்வின் மீது (நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று) நம்பிக்கை வைக்க வேண்டிய விதத்தில் (பரிபூரணமாக) நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு இறைவன் உணவளிப்பது போன்று நீங்கள் உணவளிக்கப்படுவீர்கள்! பறவைகள் காலையில் வயிறு காலியாக (கூட்டை விட்டு) இரையை தேடி வெளியே செல்கிறது. மாலையில் வயிறு நிரம்ப (கூட்டை) வந்தடைகிறது.

ஆதாரம்: திர்மிதீ 2266

இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சொல்லித் தருகின்ற இஸ்லாம் அதே நேரத்தில், வெறுமனே நம்பிக்கை மட்டும் வைத்து விட்டு சோம்பேறிகளாகவும், உழைக்காமலும், வியாபாரத்தில், தொழில் துறையில் ஈடுபடாமலும் இருந்து, இறைவன் தருவான் என்று முயற்சி செய்யாமல் சும்மா இருந்து விடக் கூடாது. ஏனென்றால் நம்மால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்வதையும், சம்பாதிப்பதையும், பொருளாதாரத்தை திரட்டுவதையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 62:9,10

வெள்ளிக்கிழமையன்று சிறிதுநேரம் வியாபாரம் செய்யக் கூடாது என்றும், தொழுகைக்காக விரைந்து வந்து விட வேண்டும் என்றும் சொல்லும் இறைவன், தொழுகை முடிந்ததும் பூமியில் அலைந்து, திரிந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் என்று ஊக்குவிக்கின்றான்.

இதைப் போன்று குர்ஆனில் பல்வேறு இடங்களில் தொழுகையைப் பேணுமாறு கட்டளையிடும் இறைவன் ஜகாத் எனும் பொருளாதார தர்மத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும்,  ஏழைகளுக்கு தர்மம் செய்து நரக நெருப்பிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களும்  கட்டளையிடுகின்றார்கள்.

இதன் மூலம் ஜகாத் கொடுக்கவோ, தர்மத்தை நிறைவேற்றவோ உழைப்பது மூலம் பொருளாதாரம் அவசியம் என்பதும், உழைத்தால் தான் இறைவனிடத்தில் நன்மைகளை அதிகமாகப் பெற முடியும் என்று கூறி உழைப்பின் அவசியத்தை இறைவன் வலியுறுத்துகிறார்கள்.

கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்

மனிதன் எவ்வளவு தூரம் தேடி அலைந்தாலும், அதற்காக எவ்வளவு நாட்களைச் செலவழித்தாலும், எத்தனை முயற்சி எடுத்தாலும் ஒரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். இதை ஒரு மனிதன் விளங்கி வைத்துக் கொண்டால் அடுத்தவர்களின் பொருளாதாரத்திற்கோ, பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்கோ மனிதன் ஆசைப்படவே மாட்டான்.

இதை நபி (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் நமக்கு விளக்கித் தருகிறார்கள்.

ஒரு யாசகர் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கே சிதறிக் கிடந்த ஒரு சில பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொள்! என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், பேரிச்சம் பழம் (என்ற இந்த உணவைத் தேடி) நீ வந்திரா விட்டாலும் உன்னைத் தேடி அது வந்திருக்கும் என்று கூறினார்கள்.

ஆதாரம்: இப்னுஹிப்பான் 3240

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றொரு செய்தியிலே தெளிவுபடுத்தும் போது,

(மனிதனுக்கு என்று இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட) உணவென்பது, அவனது மரணம் அவனைத் தேடுவது போன்று தேடுகிறது. இறுதியாக அவனுக்கென்று (கடைசி) கடைசியாக எந்த உணவு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அது அவனை அடையும் வரை மனிதன் மரணிக்கமாட்டான்.

ஆதாரம்: இப்னு ஹிப்பான் 3238

விதியை வெல்ல முடியாது

மனிதர்கள் தங்களுடைய உணவைத் தேடி கடுமையான சிரமத்திற்கு மத்தியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் தமக்குக் கிடைக்க வேண்டிய உணவு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சமும், பயமும் கலந்த உணர்வுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உலகத்தைப் படைப்பதற்கு முன்பே இறைவன் உலக மக்கள் அனைவரின் விதியையும் எழுதி விட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேனாக்கள் (எழுதுவதை விட்டும்) உயர்த்தப்பட்டு விட்டன. (எழுதப்பட்ட) ஏடுகளும் காய்ந்து விட்டன.

ஆதாரம்: திர்மிதீ 2440

நம்முடைய உணவுக்கான பொறுப்பும், அதிகாரமும் நம்மைப் படைத்த இறைவனிடத்தில் தான் உள்ளது என்பதையும் அதில் இறைவனால் உறுதி செய்யப்பட்டதை யாராலும் தடுக்க முடியாது என்றும் இறைவனால் தடுக்கப்பட்டதை யாராலும் கொடுக்க முடியாது என்பதையும் உணர்த்தும் வகையில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பிறகு பின்வரும் துஆவை ஓதுமாறு கூறியுள்ளார்கள்.

முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு என்னை எழுதச் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பின்வருமாறு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்கலஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம! லாமானிஅ லிமா அஃதைத்த, வலாமுஃத்திய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன். அவனுக்கு நிகர் எவருமில்லை (எதுவுல்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. எச்செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனுமளிக்க முடியாது.

ஆதாரம்: புகாரி 844

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்னும் நம்முடைய அனைத்துக் காரியங்களும் வாழ்வு முதல் மரணம் வரை கருவைறையில் இருக்கும் போதே எழுதப்பட்டு விட்டது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக)சேமிக்கப்படுகிறீர்கள் பிறகு அவ்வாறே (40 நாள்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாள்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)    அறிவித்தார்.

ஆதாரம்: புகாரி 3332

எனவே நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று ஆழமாக நம்பி, மார்க்கம் காட்டித் தந்ததன் அடிப்படையில் நியாயமாகத் தொழில் செய்து நம்முடைய உணவு போன்ற அனைத்து செயல்பாடுகளும் இறைவனால் ஏற்கனவே எழுதி தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையிலேயே எல்லாம் நடைபெறுகிறது என்ற யதார்த்தத்தை நாம் விளங்கி நல்ல மனிதர்களாக வாழ்ந்து மரணிப்போமாக!

—————————————————————————————————————————————————————————————

நாஸிஹ், மன்ஸூஹ் ஓர் ஆய்வு

அப்துந் நாஸிர், கடையநல்லூர்

ஹதீஸ் கலை துறையிலும், உசூலுல் ஃபிக்ஹ் எனும் சட்டக் கலைத் துறையிலும் நாஸிக், மன்ஸூக் என்பது பற்றிய அறிவு மிக முக்கியமான ஒன்றாகும்.

‘‘நாஸிக்” ‘‘மன்ஸுக்” என்ற சொற்கள் ‘‘நஸக” என்ற மூலச் சொல்லிருந்து தோன்றியவையாகும்.

‘‘நஸக” என்ற அரபி வார்த்தைக்கு ‘‘நீக்குதல்” ‘‘பிரதியெடுத்தல்” என்று பொருளாகும்.

‘‘இறைவனால் முதலில் விதியாக்கப்பட்ட ஒரு மார்க்கச் சட்டம் இறுதியாக விதியாக்கப்பட்ட மற்றொரு சட்டத்தின் மூலம் மாற்றப்படுவதை” இஸ்லாமிய சட்டக் கலைத் துறையில் ‘‘நஸ்க்” என்று கூறப்படும்.

மாற்றப்பட்ட முந்தைய சட்டத்திற்கு ‘‘மன்ஸுக்” என்றும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு ‘‘நாஸிஹ்” என்றும் குறிப்பிடப்படும்.

இந்த மாற்றம் என்பது பல வகைகளில் இருக்கும்.

கட்டாயக் கடமையாக இருந்த ஒரு சட்டம் விரும்பியவர் செய்யலாம் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றிருக்கலாம்.

அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்று, தடை செய்யப்பட்டது என்ற நிலைக்கு மாற்றப் பட்டிருக்கலாம்.

அதுபோன்று முதலில் தடுக்கப்பட்ட ஒரு விஷயம் பின்னர் அனுமதிக்கப்பட்டதாக மாற்றப்பட்டிருக்கலாம்.

இப்படிப் பல வகைகளில் இறைவன், தான் முதலில் விதித்த சட்டத்தைப் பின்னர் மாற்றியுள்ளான்.

இறைவன் அல்லது இறைவனுடைய அனுமதியின் பிரகாரம் இறைத்தூதரால் விதிக்கப்பட்ட சட்டங்களை மாற்றும் அதிகாரம் இறைவனுக்கும், இறைவனுடைய அனுமதிப் பிரகாரம் அவனுடைய தூதருக்கும் மட்டுமே உள்ளது. வேறு எந்த அடிப்படைகளும் இறைவனாலும் அவனுடைய தூதராலும் விதிக்கப்பட்ட சட்டங்களை மாற்றாது.

சட்டங்கள் மாற்றப்படுவது ஏன்?

இறைவன், தான் முதலில் விதித்த சட்டங்களை பின்னர் மாற்றுவான் என்பதைப் பல்வேறு வசனங்களில் குறிப்பிட்டுள்ளான்.

ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

(அல்குர்ஆன் 2:106)

அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.

(அல்குர்ஆன் 13:39)

ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் நீர் இட்டுக்கட்டுபவர்’’ எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:101)

மேற்கண்ட வசனங்களில் இறைவன் தனது வசனங்களை மாற்றுவான் என்று சொல்லப்படுகிறது.

இறைவன் அருளிய வசனத்தை அவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத்தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் முதலிலேயே சரியாகக் கூறிடலாமே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம்.

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வரலாறுகளிலும், வாக்குக் கொடுப்பதிலும் முன்னர் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது.

சட்டங்களைப் போடும்போது இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பத்தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால் அதுதான் அறியாமையாகும்.

நெருக்கடியான நேரத்தில் அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கின்றன. நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விலக்கிக் கொள்கின்றன. ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடைமையாகாது. அல்லது நெருக்கடியான நேரம் வரும்போது ஊரடங்கு உத்தரவு போடாமல் இருப்பதும் விவேகமாகாது.

ஒரு தாய், இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள்; சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும்போது, முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலைதான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரத்தைத் துவக்கியபோது மக்காவில் முஸ்லிம்கள் உயிர் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு இருக்கும்போது “திருடினால் கையை வெட்டுங்கள்’’ எனக் கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தம் இருக்காது. ஆட்சி, அதிகாரம் முஸ்லிம்கள் கைக்கு வந்த பிறகுதான் இந்தச் சட்டத்தைப் போட முடியும். எனவே மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சட்டங்களை வழங்குவதுதான் அறிவுடமை.

வரலாறு போன்ற நடந்த நிகழ்வுகளை மாற்ற முடியாது. இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை. சில சட்டங்களில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது.

எனவே சட்டங்கள் மாற்றப்படுதல் என்பது இறைவனின் கருணைக்கும் அவனுடைய எல்லையற்ற அறிவிற்கும் மிகச் சிறந்த சான்றாகும்.

மாற்றம் அடையாத அடிப்படைகள்

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எடுத்துரைத்த சில அடிப்படையான அம்சங்களில் மாற்றம் என்பது ஒரு போதும் வராது. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

  1. வரலாற்றுத் தகவல்கள். வஹியின் மூலம் உறுதி செய்யப்பட்ட வரலாற்றுத் தகவல்கள் மற்றும் செய்திகளில் மாற்றம் என்பது ஏற்படாது. ஒரு நிகழ்ச்சி 2002ல் நடந்தது எனக் கூறி விட்டு, 1967ல் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது. அப்படிக் கூறினால் இரண்டில் ஒன்று பொய்யாகும்.  இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை.
  2. எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் நன்மை பயக்கும் என்ற அடிப்படையில் இறைவன் கட்டளையிட்ட அடிப்படைகள் ஒரு போதும் மாற்றப்படாது.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை, இறைநம்பிக்கையின் அடிப்படைகள், வணக்கங்களின் அடிப்படைகள், உண்மை பேசுதல், சுயமரியாதை, வீரம், வாரிவழங்குதல் போன்ற நற்குணங்கள் இது போன்றவை ஒரு போதும் மாற்றப்படாது.

இறைவனால் கட்டளையிடப்பட்ட இந்த அடிப்படைகள் ஒரு போதும் தீய விளைவை ஏற்படுத்தாது.

எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் கெட்டவையாகக் கருதப்பட்டும் இறைவனால் தடைசெய்யப்பட்ட விஷயங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட்ட சட்டமாகாது.

இறைவனுக்கு இணைகற்பித்தல், இறைவனை மறுத்தல், தீய குணங்களான பொய் கூறுதல், அநியாயம் செய்தல், கோழைத்தனம், கஞ்சத்தனம், ஆபாசம், மானக்கேடான காரியங்கள் இன்னும் இது போன்ற தடுக்கப்பட்ட விஷயங்களை இறைவன் ஒருபோதும் பொதுவான சட்டமாகவோ, அனுமதிக்கப்பட்டதாகவோ ஆக்கமாட்டான்.

இறைவனால் தடுக்கப்பட்ட இந்த அடிப்படைகள் ஒரு போதும் நல்ல விளைவை ஏற்படுத்தாது.

நிர்ப்பந்த நிலையில் கொடுக்கப்படும் அனுமதிகளையும், நன்மைக்காக விதிவிலக்கு அளிக்கப்பட்ட சில காரியங்களையும் மேற்கண்ட பொதுவான அடிப்படைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கூடாது.

நிர்ப்பந்த நிலையில் வெறும் வாயளவில் குஃப்ரான வார்த்தையைக் கூறுவதற்கு உள்ள அனுமதியையும், நன்மையை நாடிப் பொய் சொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களையும் மேற்கண்ட பொதுவான அடிப்படைகளுக்கு முரணாகக் கருதக்கூடாது.

சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை எவ்வாறு முடிவு செய்வது?

ஒரு சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதைப் பின்வரும் அடிப்படைகளின் அடிப்படையில் நாம் முடிவு செய்யலாம்.

  1. அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர்களின் நேரடி வாசகத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்

முத்ஆ திருமணம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய வாசகத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “மக்களே! நான் “அல்முத்ஆ” (தவணை முறைத்) திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு அனுமதியளித்திருந்தேன். (இப்போது) அல்லாஹ் அத்திருமணத்திற்கு மறுமை நாள்வரைத் தடை விதித்துவிட்டான். (முஸ்லிம் 2730)

மேற்கண்ட செய்தியில் முத்ஆ திருமணம் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது தடைசெய்யப்பட்டுவிட்டது என்பதை  நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளிலிருந்தே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

பின்வரும் செய்தியையும் இதற்கு நாம் உதாரணமாகக் கூறலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள். (முஸ்லிம் 1778)

மேற்கண்ட செய்தியில் முதலில் சில சட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தன என்பதையும், பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டு அவை அனுமதிக்கப்பட்டன என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறிய நேரடி வாசகத்திலிருந்தே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு ஒரு சட்டம் மாற்றப்பட்டது என்பதை அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் நேரடி வாசகத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

  1. நபித்தோழர் தரும் தகவலில் இருந்து அறிந்து கொள்வது

ஒரு சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்கள் தரும் தகவலிலிருந்தும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

இதற்குப் பின்வரும் செய்தியை நாம் உதாரணமாகக் கூறலாம்.

முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ்  அவர்கள் கூறியதாவது:

நான் (தொழுகையில்) இவ்வாறு (கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு) ருகூஉச் செய்தபோது என் தந்தை, “நாங்கள் இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள் மீது வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்’’ என்று சொன்னார்கள்.  (முஸ்லிம்  932)

தொழுகையில் ருகூவின் போது கைகளைத் தொடைகளுக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்ற சட்டம் முதலில் இருந்தது. பின்னர்  அது மாற்றப்பட்டு முழங்கால்கள் மீது வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது என்பதை சஅத் (ரலி) அவர்கள் தரும் தகவலிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள முடிகிறது.

இவ்வாறு ஒரு சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நபி (ஸல்) அவர்களோடு வாழ்ந்த நபித்தோழர்கள் தரும் தகவலில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

  1. காலத்தை வைத்து அறிந்து கொள்ளுதல்

இதற்கு ஜிஹாதின் அடிப்படைகள் தொடர்பாக திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் பின்வரும் வசனத்தை உதாரணமாகக் கூறலாம்.

நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்

(அல்குர்ஆன் 8:65, 66)

போர் செய்யும் அவசியம் ஏற்பட்டு எதிரிகளின் படைபலத்தில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் செய்ய வேண்டும் என முதலில் சட்டம் இருந்ததாக 8:65 வசனம் சொல்கிறது.

பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படைபலத்தில் பாதி படைபலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச் செல்ல வேண்டும் என்று 8:66 வசனம் மூலம் அறிவிக்கப்பட்டது.

“இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான்” என்ற வாசகத்திலிருந்து எதிரியின் பலத்தில் பத்தில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்பது காலத்தால் முந்திய சட்டம் என்பதையும்,  எதிரியின் படைபலத்தில் பாதி படைபலம் இருந்தால் போதும் என்பது பிந்திய சட்டம் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

2வது அத்தியாயம் 187வது வசனத்தையும் இதற்கு நாம் உதாரணமாகக் கூறலாம். ரமாலானில் இரவு நேரங்களில் மனைவிமார்களுடன் கூடுவது முதலில் தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் அது அனுமதிக்கப்பட்டது.

”இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்!” (2:187) என்ற வார்த்தைகளிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

நாம் 8:65 வது வசனத்தில் கூறப்பட்ட சட்டம் 8:66 வது வசனம் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்பதைக் கண்டோம்.

8:65 வசனத்தின் சட்டம் மாற்றப்பட்டு விட்டாலும் அந்த வசனங்கள் தற்போதும் திருமறைக் குர்ஆனில் உள்ளன. அந்த வசனங்களை நாம் ஓதுவது வணக்கமாகும். இறைவனுடைய கருணையைப் புரிந்து கொள்வதற்காகவும், சட்டம் எளிதாக மாற்றப்பட்டுவிட்டது என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவும் இறைவன் சட்டத்தை மாற்றினாலும் அந்த வார்த்தைகளை நாம் ஓதும் வகையில் நிலைத்து நிற்கும் வார்த்தைகளாக ஆக்கியுள்ளான்.

நாஸிக் எத்தனை வகைகளில் இருக்கும்?

மாற்றப்பட்ட முந்தைய சட்டத்திற்கு ‘‘மன்ஸூக்” என்றும் முந்தைய சட்டத்திற்கு மாற்றாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் ‘‘நாஸிக்” என்றும் குறிப்பிடப்படும் என்பதை முன்னர் கண்டோம்.

இந்த ‘‘நாஸிக்” பின்வரும் வகைகளில் இருக்கும்.

குர்ஆனின் வசனத்தை குர்ஆன் வசனமே மாற்றுதல்

திருமறைக்குர்ஆனில் ஒரு வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மற்றொரு திருக்குர்ஆன் வசனம் மாற்றிவிடும்.

இதற்கு உதாரணமாக 8:65 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை 8:66 வது வசனம் மாற்றிவிட்டதைக் கூறலாம். இது பற்றி நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஹதீஸின் சட்டத்தை குர்ஆன் வசனம் மூலம் மாற்றுதல்

ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்தார்கள் என்பது ஹதீஸ்களில் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்ததை அல்பகரா 2:144 முதல் 150 வரையிலான வசனங்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என மாற்றிவிட்டன.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:144

மேற்கண்ட வசனத்தில் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்கித் தொழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இவ்வாறு ஹதீஸில் கூறப்பட்ட சட்டத்தை குர்ஆன் வசனம் மாற்றும்.

ஹதீஸின் சட்டத்தை ஹதீஸ் மாற்றுதல்

நபி (ஸல்) அவர்கள் அவர்கள் தாம் விதித்த சட்டத்தை தாமே மாற்றியிருப்பார்கள். இதற்கு நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எடுத்துரைத்த உதாரணங்களே போதுமானதாகும்.

கப்ரு ஜியாரத்தை நபியவர்கள் முதலில் தடுத்தார்கள். பின்னர் அது நபியவர்கள் மூலமே அனுமதிக்கப்பட்டது.

முத்ஆ திருமணத்தை முதலில் நபியவர்கள் அனுமதித்தார்கள். பின்னர் அதனை நபியவர்களே கியாமத் நாள் வரை தடைசெய்யப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள்.

இது போன்று ஹதீஸில் கூறப்பட்ட சட்டத்தை ஹதீஸே மாற்றியிருக்கும்.

இது வரை நாம் நாஸிக் என்பதின் மூன்று வகைகளைக் கண்டோம்.

  1. குர்ஆன் வசனத்தை குர்ஆன் வசனமே மாற்றுவது.
  2. ஹதீஸின் சட்டத்தை குர்ஆன் வசனத்தின் மூலம் மாற்றுவது.
  3. ஹதீஸின் சட்டத்தை ஹதீஸின் மூலம் மாற்றுவது.

ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட சட்டத்தை ஹதீஸ் மாற்றாது.

ஹதீஸ் என்பது குர்ஆனுக்கு முரணாக இருக்காது. ஏனெனில் அல்லாஹ் நபிகள் நாயகம் குர்ஆனுக்கு விளக்கமாகப் பேசுவார்கள் என்றுதான் குறிப்பிட்டுள்ளான்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன் 16:44)

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம்.

(அல்குர்ஆன் 16:64)

மேற்கண்ட வசனங்களில் இருந்து நபியவர்களின் பேச்சு குர்ஆனுக்கு விளக்கமாக மட்டும்தான் இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே குர்ஆனில் கூறப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் ஹதீஸ் மாற்றாது என்பது சரியான அடிப்படையாகும்.

பின்வரும் வகைகளில் ஹதீஸ் குர்ஆனுக்கு விளக்கமாக அமையும்.

  1. குர்ஆன் கூறும் கருத்தை ஹதீஸும் உறுதிப்படுத்தும்.
  2. குர்ஆனில் சுருக்கமாகக் கூறப்பட்டதை ஹதீஸ் விரிவாக எடுத்துரைக்கும். தொழ வேண்டும் என்ற கட்டளை குர்ஆனில் உள்ளது. எப்படித் தொழவேண்டும்? எந்த நேரங்களில் தொழ வேண்டும்? கடமை எவை? சுன்னத் எவை? என்பது போன்ற விளக்கங்கள் ஹதீஸில்தான் உள்ளன.
  3. குர்ஆன் ஒட்டுமொத்தமாகக் கூறும் விஷயங்களில் எது விதிவிலக்கு என்பதை ஹதீஸ் தெளிவுபடுத்தும்.

உதாரணமாக, குர்ஆன் தாமாகச் செத்தவை ஹராம் என ஒட்டு மொத்தமாகக் கூறும் போது அதில் மீன் அடங்காது. அது விதிவிலக்கு என்பதை ஹதீஸ் தெளிவுபடுத்தும்.

  1. குர்ஆனில் கூறப்படாத அதிகப்படியான சட்டங்களை ஹதீஸ் எடுத்துரைக்கும்.

இவ்வாறு எல்லா வகையிலும் குர்ஆனுக்கு விளக்கமாகத்தான் ஹதீஸ் இருக்கும். குர்ஆனுக்கு முரணாகவோ, குர்ஆனில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றும் வகையிலோ ஹதீஸ் இருக்காது. குர்ஆனுக்கு முரணாக வரும் செய்தி நபியவர்கள் கூறியது கிடையாது என்பதே உண்மையாகும்.

—————————————————————————————————————————————————————————————

பாவமும் பழியும்

பாத்திமா ஹாரிஸ், அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக ஆசிரியை

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஒருவர் பாவம் செய்தால் அவர் செய்த பாவம் அவரையே சாரும். ஒருவர் நன்மை செய்தால் அந்த நன்மையும் அவரைத்தான் சாரும். இதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

நேர்வழி பெற்றவர் தனக்காவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

திருக்குர்ஆன் 17:15

மேலும், மறுமை நாளில் ஒரு மனிதன் தன் பாவச்சுமையைச் சுமக்க முடியாமல் தன் நெருங்கிய உறவினரான தாய், தந்தை, மனைவி ஆகியோரை அழைத்தாலும் அந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்கமாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்படமாட்டாது.

திருக்குர்ஆன் 35:18

பிறரை வழிகெடுப்பவனின் பாவச்சுமை

ஒருவன் பிறரை வழிகெடுத்தால் வழிகெடுக்கப் பட்டவனின் பாவச்சுமையையும் சேர்த்து அவன் சுமக்க வேண்டும். அது பிறருடைய பாவத்தைச் சுமப்பதாக ஆகாது. மாறாக வழிகெடுத்த பாவத்தைச் சுமப்பதாகவே ஆகும். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறிக் காட்டுகிறான்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும் அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்.) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 16:25

இதற்கு விளக்கமாக நபியவர்களின் அறிவிப்பும் வருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.

யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

 நூல்: முஸ்லிம் 5193

திவாலாகிப் போனவன்

உலகில் இறைவனுக்குச் செய்யும் கடமைகளைச் சரியாகச் செய்துவிட்டு சக மனிதனிடம் மோசமாக நடந்து கொண்டவனின் மறுமை நிலையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5037

பணமோ, நகையோ ஈடாகக் கொடுக்க முடியாத மறுமை நாளில் நீதமாகத் தீர்ப்பளிப்பதற்காக,  பாதிக்கப்பட்டவனின் பாவச் சுமையை அல்லாஹ் அவன் மீது சுமத்துவான்.

ஆதம் நபியின் பாவமும், தவறான நம்பிக்கையும்

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்ற அடிப்படையில் இஸ்லாம் மார்க்கம் கிறிஸ்தவ மதத்திலிருந்து பல வகைகளில் மாறுபடுகிறது.

முதலாவதாக, ஆதம் நபி பாவம் செய்ததால் ஆதமின் பிள்ளைகள் அனைவருமே பாவிகளாகவே பிறக்கின்றார்கள் என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இதை இஸ்லாம் மறுக்கிறது. ஆதம் பாவம் செய்தது உண்மை. அவர்கள் பாவமன்னிப்பு கேட்டுத் திருந்திவிட்டார்கள். அல்லாஹ் அவரை மன்னித்து விட்டான்.

அவர்கள் இறைக் கட்டளையை மீறியதால் அவரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி பூமியில் குடியமர்த்தினான். இவை அனைத்துமே இறைவனின் விதிப்படியே நடக்கிறது என்று இஸ்லாம் கூறுகின்றது.

(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்என்றார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள் மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் (வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்; தோற்கடித்துவிட்டார்கள் என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6614

இரண்டாவதாக, ஆதம் நபியால் எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் என்றும், அந்த பாவங்களைச் சுமப்பதற்காகவே இயேசு தன்னைத் தானே கடவுளுக்குப்  பலி கொடுத்தார் என்றும் நம்புகின்றனர். இதையும் இஸ்லாம் மறுக்கிறது.

ஏனெனில் பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள் என்பதும், மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பதும் இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.

மேலும் மனிதர்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தானே முன்வந்து பலியாகவில்லை. சீடர் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் என்று தான் பைபிள் கூறுகின்றது.

இந்த நம்பிக்கையால் ஏற்படும் விளைவும் விபரீதமானது. பாவம் செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற அச்ச உணர்வு இருந்தால் மட்டுமே மனிதன் திருந்துவான்.

ஆனால் நமது பாவத்தை இயேசு சுமப்பார் என்ற இந்த நம்பிக்கை பாவம் செய்பவனுக்கு துணிச்சலைத் தருமே தவிர பயத்தை அல்ல. இதனால் கொலை, கொள்ளை போன்ற பாவங்கள் அதிகரிக்குமே தவிர குறையாது.

ஒருவேளை இயேசு தானாக முன்வந்து பலியானார் என்று வைத்துக் கொண்டாலும், ஒருவர் பாவத்தை மற்றொருவர் சுமப்பார் என்ற கருத்தை பைபிளே மறுக்கின்றது.

‘‘பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக் காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்பட வேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்”

உபாகமம் : 24:16

‘‘பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை. நீதிமானுடைய நீதி அவன் மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன் மேல் தான் இருக்கும்”

எசேக்கியேல் 18:20

‘‘பிதாக்கள் திராட்சக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப் போயின என்று அந்நாட்களில் சொல்ல மாட்டார்கள், அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான். எந்த மனுஷன் திராட்சக் காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப் போகும்”

எரேமியா 31:29,30

ஒவ்வொருவரும் தத்தமது பாவங்களைத் தாமே சுமக்க வேண்டும் என்று பைபிள் கூறுகின்றது என்பதை மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

வாதமும் எதிர்வாதமும்

ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்ற கருத்தை குர்ஆன் ஆணித்தரமாகக் கூறுகின்றது எனக் கூறும்போது கிறிஸ்தவ சகோதரர்கள் முஸ்லிமில் இடம்பெறும் ஒரு ஹதீஸை வைத்து எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.

அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5343

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),

நூல்: முஸ்லிம் 5344

இந்த ஹதீஸை எடுத்துக்காட்டி முஸ்லிம்களாகிய நீங்கள் விபச்சாரமோ, கொலையோ செய்துவிட்டு அந்தப் பாவத்தை எங்கள் மீது சுமத்துவது எந்த அடிப்படையில் நியாயம் என்று கேட்கின்றனர். அவர்களின் கேள்வி நியாயமானது தான். இதற்கு நம்முடைய பதில் யாதெனில், இந்த ஹதீஸைப் பொறுத்த வரை இது முஸ்லிம் என்ற ஆதாரப்பூர்வமான நூலில் இடம்பெற்றிருந்தாலும் இதன் கருத்துக்கள் குர்ஆன் வசனங்களுக்கு எதிராக இருப்பதால் அதை ஏற்கக்கூடாது என்ற பொதுவான விதியின்படி இதை மறுக்கிறோம் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே, ஒவ்வொருவனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டுள்ளான். (74:38) என்ற இறைவசனத்தின் படி பழி, பாவத்திற்கு அஞ்சி நம் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————————————

 

ஸஃபர் மாதம் பீடையா?

இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர்  மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.

இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக பிற மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால்தான் நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

முஸ்லிம்கள் எந்த அளவுக்கு பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான்,  முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.

(புகாரி 3456)

இவ்வாறு புதிதாக ஒரு பித்அத்தைச் செய்தால் அதைச் செய்தவருக்கு அதன் தீமை கிடைக்கும். இத்துடன் அல்லாமல் இவரைப் பார்த்து யார் யாரெல்லாம் செய்வாரோ அவரின் தீமையும் கிடைக்கும் என்றும்  நபி (ஸல்) அவர்கள் பித்அத்தைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள். இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது,  இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையைத் தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

பிறமதத்தினர் தேரிழுப்பதையும் விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர். இது போன்று இன்றைக்குப் பிறமதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.

இதைப் பார்த்து முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக  எண்ணி பல கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.

இன்னும் சிலர் மாவிலைகளில் சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம் என்ற  திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்து குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை பிறமதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.

ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.

தொற்று நோயும் பறவைச் சகுனமும் பீடை மாதமும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி 5717)

ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும் குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.

இம்மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று ஸபர் மாதம் பீடை மாதமாகக் கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் ஸபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.

பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்)

காலத்தை நல்ல காலம் என்றும் கெட்ட காலம் என்றும் பிரிப்பது தவறாகும்.

தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (54:19)

பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.

இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)

ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.

மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொறுத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.

எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.

உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவருமே தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்லநாள் கெட்டநாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.

ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (10:107 )

—————————————————————————————————————————————————————————————

பெற்றோர்கள் இருந்தும் அநாதையாகும் பிள்ளை

துறவு என்ற பெயரில் பெற்றோர்களின் துரோகம்

எம். ஷம்சுல்லுஹா

இந்தியாவில் ஜைன மதத்தினர் 50 லட்சம் பேர் அளவில் வாழும் சமுதாயம்.  இவர்கள் மதத்தில் துறவு நிலை கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்தத் துறவின் முற்றிய நிலையின் விளைவு தான் பின் வருகின்ற பத்திரிக்கைச் செய்தி. அதை இப்போது பார்ப்போம்.

ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளைக் கைவிட்டு ம.பி.யில் துறவறம் மேற்கொள்ளும் ஜெயின் தம்பதி

மத்தியப் பிரதேசத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியர், ரூ.100 கோடி சொத்து, 3 வயது மகளைக் கைவிட்டு துறவறம் செல்கின்றனர். தாயும், தந்தையும் துறவறம் மேற்கொள்வதால் 3 வயது குழந்தை ரூ. 100 கோடி சொத்துக்கு அதிபதியாகிறது.

மத்தியப் பிரதேசம் நீமுச் நகரைச் சேர்ந்தவர் சுமித் ரத்தோர் (35). இவரது மனைவி அனாமிகா (34). இவர்களுக்கு 3 வயதில் அபயா என்ற பெண் குழந்தை உள்ளது.

சுமித் ரத்தோரின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர் பெரும் தொழிலதிபர். சிமென்ட் ஆலைகளுக்காக சாக்குகள் தயார் செய்யும் ஆலையை நடத்தி வருகிறார். அவரின் ஒரே மகன் சுமித் ரத்தோர். இந்தியாவில் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த அவர் லண்டனில் வணிகம் தொடர்பாக டிப்ளமோ படித்துள்ளார். அங்கேயே 2 ஆண்டு பணியாற்றி தொழில் அனுபவங்களைக் கற்றுக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார்.

சுமித் ரத்தோரின் மனைவி அனாமிகா அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தந்தை அசோக் சாண்டில்யா, நிமூச் மாவட்ட பாஜகவின் முன்னாள் தலைவர் ஆவார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுமித்தும், அனாமிகாவும் திருமணம் செய்து கொண்டனர். குழந்தை அபயா பிறந்து 8 மாதங்களான போதே இருவரும் துறவறம் மேற்கொள்ள தீர்மானித்தனர். அப்போது முதல் கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இருதரப்பு வீட்டாரும் துறவறத்தை விட்டு வெளியேற வற்புறுத்திய போதும் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டனர்.

அனாமிகாவின் தந்தை அசோக் சாண்டில்யா கூறியபோது, எனது பேத்தியை நானே வளர்க்க முடிவு செய்துள்ளேன். மகளையும், மருமகனையும் ஆன்மிகம் அழைக்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களின் முடிவை என்னால் மாற்ற முடியவில்லை என்றார்.

சுமித்தின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர் கூறியபோது, எனது மகனின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இவ்வளவு இளவயதில் துறவறம் செல்வார் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றார்.

சுமித் ரத்தோரின் நெருங்கிய உறவினர் சந்தீப் கூறியபோது, சுமித்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. அழகான மனைவி, அன்பான குழந்தை என எல்லாமே இருக்கிறது. அதையெல்லாம் துறந்து அவர் துறவியாகிறார் என்றார்.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சுமித்தும் அனாமிகாவும் தங்களின் துறவற முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். வரும் 23ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆச்சார்யா ராம்லால் ஆசிரமத்தில் தீட்சை பெற்று, துறவறத்தைத் தொடர உள்ளனர். அதற்காகத் தற்போது மவுன விரதம் இருந்து வருகின்றனர். தாயும், தந்தையும் துறவறம் பூண்டபிறகு 3 வயதுக் குழந்தை அபயா ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியாகிறது.

இது பத்திரிக்கைச் செய்தி. பத்திரிக்கைகளில் பல பரபரப்பான செய்திகள் வரும். பரபரப்பாக வரும் செய்திகள் அத்தனையும் மக்களுடைய உள்ளங்களை பாதிக்கச் செய்வதில்லை. அவற்றில் சில செய்திகள் உள்ளங்களை பாதிக்கச் செய்து விடுகின்றன. ஆனால் இந்தச் செய்தி மக்களின் உள்ளங்களைத் தொட்டு ஒரு கணம் உறையச் செய்கின்ற செய்தியாகும்.

மூன்று வயதுப் பெண் குழந்தையை பாட்டி, பாட்டனாரின் பராமரிப்பில் விட்டு விட்டுத் துறவு என்ற பெயரில் பெற்றோர்கள் இருந்தும் பச்சிளங்குழந்தையை அநாதையாக ஆக்கி விட்டுச் செல்வது மக்களுடைய உள்ளங்களை வெகுவாகவே பாதிக்கின்றது.

அதன் எதிரொலியாகத் தான் தங்களது 3 வயது மகளைத் தவிக்க விட்டுத் துறவு போவதைத்  தடுத்து நிறுத்தக் கோரி  நீமூச்சை சார்ந்த சமூக நல ஆர்வலர் கபில் சுக்லா என்பவர்  தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்தியப் பிரதேச மனித உரிமைகள் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.

இது அல்லாமல், மத்தியப் பிரதேச முதல்வர், நீமுச் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர்  ஆகியோருக்கும் அவர் மனு அனுப்பியுள்ளார். வெளியிலிருந்து இந்த அநியாயத்தைப் பார்க்க பொறுக்காமல் தான் கபில் சுக்ளா மேற்கண்ட முயற்சிகளை எடுத்துள்ளார்.

இந்தத் தம்பதியர் துறவின் போது…

1) மவுன விரதத் பூண்டிருக்க வேண்டும்

2) இருவரது தலைமுடிகளும் மழிக்கப்பட வேண்டும்

3) வெள்ளை ஆடைகளேயே அணிய வேண்டும்

4) தங்களையும் அறியாமல் கூட உயிரினங் களுக்குக் கெடுதல் செய்து விடக் கூடாது என்பதற்காக வாய்களில் சிறிய வகை பூச்சிகள் நுழைந்து விடாத வகையில் வாய்களைச் சுற்றிலும் வெள்ளைத் துணிகளால்  கட்டிக் கொள்ள வேண்டும்.

இது போன்ற நடைமுறையை ரத்தோரும், அனாமிகாவும் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.

இறை அன்புக்கு உகந்தது உறவா? துறவா?

பொதுவாக உலகத்தில் எல்லா மதங்களிலும் துறவு உயர்தரமான, உன்னதமான வணக்கமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இஸ்லாம் இதற்கு நேர் எதிரானது.

அவர்கள், தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.

திருக்குர்ஆன் 57:27

இந்த வசனத்தில் துறவை நாம் விதியாக்கவில்லை என்று கூறி இஸ்லாம் துறவை ஆதரிக்கவில்லை என்பதை இறைவன் உணர்த்துகிறான்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?’ நாம் எங்கே என்று சொல்லிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணந்து கொள்ளமாட்டேன்என்று கூறினார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையைக் கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5063

இந்த ஹதீஸ் துறவைத் தடை செய்கின்றது. மனைவியுடன் வாழாதவருக்கு இறை திருப்தியில்லை என்று  இஸ்லாம் அடித்துச் சொல்லி விடுகின்றது.

ஊட்டும் உணவில் ஊறும் இறை அன்பு

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்படஎன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 56

மனைவிக்குச் செலவு செய்வது இன்னும் ஒரு படி மேலே சென்று அவள் வாயில் ஒரு கவள உணவு ஊட்டுவதில் இறை அன்பும், இறை திருப்தியும் ஊற்றெடுப்பதை இந்த நபிமொழி உலகுக்கு அறிவித்து, துறவுப் பாதைக்குக் கதவு சாத்துகின்றது. துறவு வாழ்க்கையை துறக்கச் செய்கின்றது

கனிவான முத்தத்தில் கனிகின்ற இறை அன்பு

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி), ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லைஎன்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5997

மழலைகளிடம் பொழிகின்ற முத்த மழைக்கு இறை அன்பு பெருக்கெடுக்கின்றது என்று அகில உலகத்தின் இறைத்தூதர் பிரகடனப் படுத்துகின்றார்கள். ஆனால் இவர்கள் ஒரு மூன்று வயது மழலை மலரை முத்தமிட்டு இறை அன்பைப் பெறுவதை விட்டு, அந்தப் பிஞ்சு மலரை உதறியும் உதிர்த்தும் விட்டும் போய் விட்டனர். இவர்கள் தங்கள் உதடுகளுக்கும் மட்டும் பூட்டுப் போடவில்லை. தங்களது உள்ளங்களுக்கும் அவை சுரக்கின்ற ஈவு, இரக்கத்திற்கும் பூட்டுப் போட்டுவிட்டனர். அப்படி அவர்களது மதம் தவறான பாதையை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டி விட்டது.

மவுனமா? மரணமா?

வாய்ப் பூட்டு போட்டு, பேசுகின்ற வாசல்களை, வாய்ப்புகளை அடைத்து விட்டு வாழுகின்ற மவன வாழ்க்கை ஒரு மரண வாழ்க்கையாகும். அதனால் தான் இஸ்லாம் அந்த மவன விரதத்திற்கும் மரண அடி கொடுக்கின்றது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்என்றார்கள்.

நூல்: புகாரி 6704

வாய்க்குள் எந்தப் பூச்சியும் நுழையக் கூடாது என்று மெல்லிய துணிகளைக் கட்டிக் கொள்வது ஒரு பைத்தியக்கார  வாதமாகும்.  காரணம் வாயில் அன்றாடம் கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான  கிருமிகள் புகுந்து வாழ்ந்தும் அழிந்தும் கொண்டிருக்கின்றன.  அதையெல்லாம் மனிதனால் தடுத்து விடமுடியாது. எனவே, ஜைன மதத்தின் இந்த நடைமுறை மனித சக்திக்கு அப்பாற்பட்ட நடைமுறையாகும்.

துறவு நிலை அறமா? மறமா?

துறவு என்பதை அறத்துடன் சேர்த்து துறவறம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில் அது அறமல்ல! அது ஒரு மறம். அதாவது பாவம், கேடு,கெடுதியாகும். அதை அறத்துடன் சேர்ப்பது அநியாயமாகும்.

அதனால் இந்த கட்டுரையில் துறவறம் என்ற சொல்லாடல் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. மனிதன் என்பவன் சமூகப் பிராணி. அவன் தனி மனிதன் அல்லன்.  அவன் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோர்களைக் கவனிக்க வேண்டிய கடமையில் இருக்கின்றான். காரணம் பெற்றோர்கள் முதுமை நிலையை அடைகின்ற போது பிள்ளைகள் போன்று வேறு யாரும் அவர்களைக் கவனிக்கவும், கண்காணிக்கவும் அரவணைக்கவும் ஆதரவு காட்டவும் முடியாது. இஸ்லாம் பெற்றோர்களுக்குச் செய்கின்ற சேவையை அறப் போராகப் பார்க்கின்றது

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா-? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ஆம் (உயிருடனிருக்கின்றனர்) என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3004

துறவுக்கோலம் பூணுகின்றவன் தனது பெற்றோருக்குச் செய்கின்ற இந்தப் பணிவிடையை விட்டும் தன்னைத் தடுத்துக் கொள்கின்றான் என்று சொல்வதை விட தன்னைத் தப்புவித்துக் கொள்கின்றான். இது இவன் செய்கின்ற மிகப் பெரிய அநியாயமாகும். இந்த வகையில் இது தனது குடும்பத்திற்குச் செய்கின்ற முதல் துரோகம் ஆகும்.

அடுத்து இவன் தன் மனைவி மக்களுக்குச் செய்கின்ற கடமைகளை விட்டும் தன்னைக் கழற்றிக் கொள்கின்றான். மேற்கண்ட நிகழ்வில் கணவனும், மனைவியும் கழன்று கொள்கின்றார்கள். இவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகிக் கொள்கின்றார்கள்.

பாட்டனும், பாட்டியும் படுக்கையில் கிடந்து கிடக்கும் நிலை வெகுதூரத்தில் இல்லை. இந்தக் காலக் கட்டத்தில் இவர்கள் பெற்ற பிள்ளை பெற்றோர்கள் இருந்தும் அநாதைத் தனத்தின் அத்தனை  அவஸ்தையையும் ஆறாத வேதனையையும் முழுமையாக அனுபவித்து பரிதவிக்கும். பெற்றோர்களை முழுமையாக சபிக்கும். இந்த அடிப்படையில் இது, இத்தகையவர்கள் தங்கள் குடும்பத்திற்கு செய்கின்ற இரண்டாவது   துரோகம் ஆகும்.

புறக்கணிக்கப்படும் பொது நல சேவை

மனித சமுதாயம் அவ்வப்போது போர் மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்கு இலக்காகும். அப்படி இலக்காகும் போது தன் சமுதாயத்தைக் களத்தில் காப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும். அந்தச் சமயத்தில் இவன் தவம் என்ற பெயரில் தனித்து இருந்து விடுவான். சமுதாயத்திற்கு ஏற்படும் அந்தப் பாதிப்பில் எந்தப் பங்களிப்பும் செய்ய மாட்டான். இந்த அடிப்படையில் ஒரு பக்கா சுயநலமியாக ஆகிவிடுகின்றான். இது, இவன் சமுதாயத்திற்குச் செய்கின்ற துரோகமாகும்.

இதற்கெல்லாம் காரணம் இறைதிருப்தி என்பது  துறவில் கிடைக்கும் என்று ஜைன மதம் ஊட்டிய தவறான நம்பிக்கையாகும்.

இஸ்லாம் இதற்கு நேர்மாற்றமாக மனிதர்களுக்குச் செய்கின்ற சேவையில் இறை திருப்தி இருக்கின்றது என்று கூறுகின்றது. இதைத் திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்ஆன் 2:177

இது போன்ற  மனித நேய சிந்தனையை இயற்கை மார்க்கம் இஸ்லாத்தால் மட்டுமே ஊட்ட முடியும். அப்போது தான் இதுமாதிரியான சமூக அநீதியைத் தடுக்க முடியும்.

—————————————————————————————————————————————————————————————

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்

எம்.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்

இஸ்லாம் என்பது பிறர் நலம் நாடும் மார்க்கம். இதில், ஏக இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றி மட்டுமின்றி, சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அவற்றை அறிந்து முஸ்லிம்கள் சுயநலமாக இல்லாமல், பொதுநல சிந்தனையுடன் நடந்து கொள்ள வேண்டும். தம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் துன்பத்திலும், சிரமத்திலும் தவிக்கும் போது கண்டும் காணாமல் இருந்துவிடக் கூடாது.

குறிப்பாக, சமூகத்தில் எவரேனும் அநீதிக்கு ஆளாகும் போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவும், வரம்பு மீறுபவருக்கு எதிராகக் குரல் எழுப்பவும் துணிவுடன் முன்வர வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் பல மக்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள். ஆகையால், இது தொடர்பாக மார்க்கம் கூறும் சில போதனைகளைத் தெரிந்து கொள்வோம்.

மூஸா நபியின் சமூகப் பணி

இவ்வுலகில் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதற்கு எண்ணற்ற நபிமார்கள் வந்து சென்றுள்ளார்கள். அவர்களுக்கு அப்பணியுடன் சேர்த்து பல்வேறு விதமான சமூகப் பணிகளையும் அல்லாஹ் வழங்கி இருந்தான். அவ்வகையில் மூஸா நபிக்குத் தரப்பட்டிருந்த சமூகப் பொறுப்பினை குர்ஆன் குறிப்பிடுகிறது.

இருவரும் அவனிடம் சென்று ‘‘நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறுங்கள்!

(திருக்குர்ஆன் 20:47,48)

கொடுங்கோல் மன்னன் பிர்அவ்ன், பனூ இஸ்ராயீல் மக்களுக்குப் பெரும் கொடுமைகளைக் கொடுத்து வந்தான். அந்த மக்கள் சொல்லெனாத் துன்பங்களைச் சந்தித்து வந்தார்கள். அவர்களை மீட்டெடுக்கும் பணி மூஸா நபிக்கும், ஹாரூண் நபிக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அடக்குமுறையைச் சந்திக்கும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாகக் களம் காண்பதின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

துன்பத்தைத் துடைத்த துல்கர்னைன்

துல்கர்னைன் எனும் நல்லடியாரின் வரலாறு வழியாகவும் அல்லாஹ் நமக்குப் பாடம் கற்பிக்கிறான். அவருக்கு அல்லாஹ் அளப்பரிய ஆற்றலை, பெரும் வலிமையைக் கொடுத்திருந்தான். அவர் பூமியில் பல்வேறு பகுதிகளுக்கு மிகவும் எளிதாகப் பயணம் சென்றார். அப்போது ஓரிடத்தில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தால் பாதிக்கப்படும் சமூகத்தைச் சந்தித்தார். அல்லாஹ்வின் அருளால் அந்த மக்களைப் பாதுகாக்கும் வகையில் மகத்தான உதவி செய்து கொடுத்தார்.

பின்னர் (துல்கர்னைன்) ஒரு வழியில் தொடர்ந்து சென்றார். முடிவில் இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியை அவர் அடைந்த போது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?’’ என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே தடுப்பை அமைக்கிறேன்’’ என்றார்.

(தனது பணியாளர்களிடம்) என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!’’ என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது ஊதுங்கள்!’’ என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்’’ என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார்.

(திருக்குர்ஆன் 18:92-98)

நல்லடியார் துல்கர்னைன் அவர்கள் இரு மலைகளுக்கு இடையே மிகப்பெரும் தடுப்பை ஏற்படுத்தி மக்களைக் காப்பாற்றினார். இவ்வாறு நாமும் முடிந்தளவு துன்புறும் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரின் அழகிய கட்டளை

முன்சென்ற வசனங்களில் கண்டதைப் போன்று, பிறரால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுமாறு நபிகளாரும் நமக்குக் கட்டளை இட்டுள்ளார்கள். எனவே, முஸ்லிம்கள் காஃபிர்கள் என்று எவ்வித பேதமும் பாராமல் பாதிக்கப்படும் மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம்மல் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள். ஜனாசாவை (இறந்தவரின் உடலைப்) பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும்படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும் படியும், சலாமுக்குப் பதில் கூறும்படியும், தும்மியவ(ர்  அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ்-இறைவன் உங்களுக்கு கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 1239, 5175

சகோதரனை கைவிடாதவனே முஸ்லிம்!

முஸ்லிம்கள் அநியாயமான காரியங்களை ஒருபோதும் செய்யக் கூடாது. அதுபோல, அடுத்தவர் நசுக்கப்படும் போது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவும் கூடாது. மாறாக, துன்பத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற முனைய வேண்டும். இப்பணிக்குச் சிறந்த பரிசுகளை அல்லாஹ் மறுமையில் தருவான்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான்.  எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2442, 6951

அநீதியைத் துடைத்தெறிய போர்

குடும்பம், வியாபாரம், சொத்துக்கள் என்று அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அல்லாஹ்வின் பாதையில் போருக்குச் செல்வது சாதாரணமான ஒன்றல்ல. மிகச் சிறந்த அறச்செயல். இது தொடர்பாக நிறைய நெறிமுறைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒன்று, இஸ்லாமிய அரசு பலவீனமான மக்களைக் காப்பதற்காகப் போர் தொடுக்கலாம் என்பதாகும்.

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.

(திருக்குர்ஆன் 4:75, 76)

இந்த வசனத்தை மெய்ப்பிக்க வேண்டிய இஸ்லாமிய அரசுகள் வாய் மூடி மௌனம் காக்கின்றன. பக்கத்து நாடுகளில் இருந்து அல்லல்பட்டு வரும் அகதிகளை அரவணைக்கக் கூட மறுத்து விடுகின்றன.

அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுங்கள்!

நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகியோர் அட்டூழியம் செய்யும் போது அவர்களைக் கண்டித்துக் களம் காணவும் தயாராக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’’ என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?’’ என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (2444)

(ஒரு போரின்போது) முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்சாரிகளில் ஓர் இளைஞரும் சண்டை யிட்டுக்கொண்டனர். அப்போது அந்த முஹாஜிர், “முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)’’ என்று அழைத்தார். அந்த அன்சாரி, “அன்சாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!’’ என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, “என்ன இது, அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?’’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்’’ என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிரச்சினை இல்லை. ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவராக இருக்கும் நிலையிலும் அவருக்கு உதவட்டும். (அது எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி செய்யட்டும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 5040

அநீதியை எதிர்ப்பதும் ஜிஹாத்

தீமைகளைக் காணும் போது எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமெனும் வழிமுறையை நபிகளார் நமக்குப் போதித்து இருக்கிறார்கள். தீமையைக் கரத்தால் தடுக்க இயலாத சமயங்களில் நாவால் தடுக்க முயற்சிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்துவதன் சிறப்பைப் பாருங்கள்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (78)

‘‘எந்த ஜிஹாத் சிறந்தது?’’ என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அநியாயம் செய்யும் மன்னர் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதுதான்’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப்(ரலி),

நூல்கள்: நஸயீ (4138), அஹ்மத் (18076)

அநீதிக்கு எதிராக கையேந்துவோம்

அநீதியைத் தட்டிக் கேட்கும் வாய்ப்பு இல்லை; அதனால் சிரமப்படும் சகோதரர்களுக்கு உதவுவதற்கும் வழியில்லை எனும் போது கவலைப் படாதீர்கள். நம் கண்முன் இல்லாத அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் அழுது மன்றாடுங்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கிட்டும்.

ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், “ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’’ என்று கூறுகிறார். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு தர்தா (ரலி)

நூல்: முஸ்லிம் (5280)

ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஸஃப்வான் கூறுகிறார்: நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், “இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?’’ என்று கேட்டார்.

நான் ஆம்’’ என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், “இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்’’ என்று கூறினார்கள்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.

(நூல்: முஸ்லிம் 5281)

அநீதிக்கு எதிராக குனூத் ஓதுதல்

அநீதிக்கு இலக்காகும் மக்களைக் காக்குமாறும், அக்கிரமக்காரர்களைத் தண்டிக்குமாறும் அல்லாஹ் விடம் கூட்டாகக் கோரிக்கை வைப்பதற்குத் தொழுகையில் பிரத்தியேகமான முறையை நபியவர்கள் கற்று தந்திருக்கிறார்கள். (இது குறித்து கடந்த ஏகத்துவ இதழில் சிறப்புக் கட்டுரை வெளியானது).

அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன்’’ என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு  ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் (மக்காவில் சிறைப்பிடிக்கப் பட்டிருந்த) இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

நூல்: புகாரி (797)

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு குனூத்’ (சிறப்பு துஆ) ஓதினார்கள். அதில்,  “இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6393)

இதுபோன்ற மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் தான் தவ்ஹீதைத் தூய முறையில் எடுத்துரைக்கும் பணியுடன் சேர்த்து சமூகப் பணியையும் செய்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் யாராயினும் அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதற்கு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

காஷ்மீர், குஜராத், பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், பர்மா போன்ற நாடுகளில் அப்பாவி மக்கள் தாக்குதலுக்கு ஆளான போது போராட்டங்கள் வழியாகக் கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.

இப்பணிகளில் ஈடுபடுவது உலக ஆதாயங்களை அடைவதற்காக அல்ல. அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெறுவதற்காகச் செய்யும் இப்பணியில் உங்களையும் தொடர்ந்து இணைத்துக் கொள்ளுங்கள். அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————————————

மார்க்கச் சட்டங்களில் தவறிழைத்த நபித்தோழர்கள்

எம்.எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்

நபித்தோழர்களில் பலருக்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ் விஷயங்களில் பல செய்திகள் தெரியாமல் இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. ஏனெனில் வியாபார ரீதியில் பொருளாதாரத்தைக் கவனிப்பதில் ஈடுபட்டதும், பலர் ஆரம்ப காலத்திலேயே இறந்ததும், பலர் பிற்காலத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றதும், மக்காவில் வைத்து நடந்த சம்பவங்கள் மதீனாவில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் போனதும், சம்பவ இடத்தில் நபித்தோழர்கள் இல்லாமல் போவதும், செய்தியின் சாராம்சத்தை விளங்காமல் வேறொரு அர்த்தத்தில் புரிவதும், அவர்களின் வீடு மஸ்ஜிதுன் நபவியை விட்டும் தூரமாக இருந்ததும் இதுபோன்ற பல காரணங்களால் பல செய்திகள் நபித்தோழர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) தவறிழைத்த மார்க்கச் சட்டங்கள்:

கல்விக்கடல் என்று மக்களால் பாராட்டப்பட்ட, குர்ஆன் ஞானத்தில் மேதையாக இருந்ததால் உமர் (ரலி) அவர்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே மார்க்கச் சட்டங்கள் சிலவற்றில் தடுமாறத்தான் செய்துள்ளார்கள் என்பதற்குக் கீழ்க்கண்ட செய்திகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி ஹிஜ்ரி 7-ல் உம்ரா செய்வதற்காக) நபி (ஸல்) அவர்கள்  இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் அவர்களுடன் வீடு கூடினார்கள். பிறகு மைமூனா (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள) சரிஃப்என்னுமிடத்தில் இறந்தார்கள்.

நூல்: புகாரி 4258

மேற்கண்ட ஹதீஸ் நபிகளார் இஹ்ராமில் இருக்கும் நிலையில் திருமணம் செய்துள்ளார்கள் என்று கூறுகிறது.

இது விஷயத்தில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) கூறிய செய்தியைப் பாருங்கள்.

மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் இல்லாத (ஹலால்) நிலையிலேயே என்னைத் திருமணம் செய்தார்கள்.

நூல்: முஸ்லிம் 2757

இஹ்ராமின் போது நபியவர்கள் தன்னைத் திருமணம் செய்யவில்லை என்று மைமூனா (ரலி) கூறுவதால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியது தவறான செய்தி என்பது உறுதியாகின்றது.

இப்னு அப்பாஸ் தவறிழைத்த மற்றொரு சட்டம்

அம்ர் இப்னு தீனார் (ரஹ்) கூறினார். நான் ஜாபிர் இப்னு ஸைத் (ரஹ்) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஹகம் இப்னு அம்ர் அல்கிஃபாரி (ரலி) பஸராவில் வைத்து எம்மிடம் இதைச் சொல்லி வந்தார்கள். ஆனால் (கல்விக்) கடலான இப்னு அப்பாஸ் (ரலி) அதை மறுத்து, ‘‘தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லைஎன்று கூறுவீராக!’’ எனும் 6:145வது வசனத்தை ஒதிக்காட்டினார்கள்.

நூல்: புகாரி 5529

 நாட்டுக்கழுதை சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு 6:145வது வசனத்தில் குறிப்பிடப்பட்டதைத் தவிர வேறெதுவும் தடையில்லை என்று குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டி இப்னு அப்பாஸ் (ரலி) கூறினாலும் இது தவறான கருத்தாகும். குர்ஆனில் கூறப்பட்டதற்கு ஏற்ப அவர்கள் விளக்கம் கொடுக்க நினைத்தது வரவேற்கத்தக்கது என்றாலும் மேற்கண்ட வசனம் அருளப்பட்ட நேரத்தில் அவ்வசனத்தில், கூறப்படுபவை மட்டும் தான் ஹராமாக்கப்பட்டு இருந்தன.

திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் அருளப்படவில்லை. மாறாகச் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப அருளப்பட்டதாகும். ஒரு காலத்தில் மதுபானம் தடை செய்யப்படாமல் இருந்தது. பின்னர் அது தடை செய்யப்பட்டது. அது போல் ஒரு கால கட்டத்தில் இந்த நான்கு உணவுகள் மட்டும் தடை செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் இந்தப் பட்டியல் அதிகரிப்பது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

இதைப் பின்வரும் வசனம் தெள்ளத் தெளிவாக்குகிறது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

ஏற்கனவே கூறப்பட்ட நான்குடன் கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, மேட்டிலிருந்து உருண்டு விழுந்தவை, தமக்கிடையே மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றை இவ்வசனத்தில் அல்லாஹ் மேலதிகமாகக் கூறுகிறான்.

ஆரம்ப காலத்தில் நான்கு மட்டுமே ஹராமாக இருந்தன என்பதும், பின்னர் 5:3 வசனத்தில் கூறப்பட்டவைகளும் ஹராமாக்கப்பட்டன என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலை என இதிலிருந்து விளங்கலாம்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (கைபரின் போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, கழுதைகள் உண்ணப்பட்டன என்று கூறினார். பிறகு ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன என்று கூறினார். மீண்டும் ஒருவர் வந்து, கழுதை இறைச்சி (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டது என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்பு செய்பவர் ஒருவருக்கு (மக்களிடையே அறிவிப்புச் செய்யும் படி) கட்டளையிட அவரும் மக்களிடையே ‘‘அல்லாஹ்வும் அவனது தூதரும் உங்களை நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில் அவை அசுத்தமானவையாகும்’’ என்று பொது அறிவிப்புச் செய்தார். உடனே இறைச்சி வெந்து கொதித்துக் கொண்டிருந்த பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டு (அதிலிருந்த இறைச்சி கொட்டப்பட்டு)விட்டது.

 நூல்: புகாரி 5528

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஏற்பட்ட தவறுகள்

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: யார் ஜனாஸாவைப் பின் தொடர்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் இப்னு உமர் (ரலி), “அபூஹுரைரா (ரலி) அவர்கள் மிகைப்படுத்துகிறார்கள்’’ என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தியதுடன், “நானும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்என்றும் கூறினார்கள். இதைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’’ என்றார்கள்.

நூல்: புகாரி 1324

வணக்க வழிபாடுகளில் தவறிழைத்த அபூதல்ஹா (ரலி)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் கலந்து கொண்ட காரணத்தால் நோன்பு  நோற்காதவராக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் (இஸ்லாம் பலம் பெற்று விட்ட நிலையில்), நான் அபூதல்ஹா (ரலி) அவர்களை ஈதுல் ஃபித்ருடைய நாளிலும் மற்றும் ஈதுல் அள்ஹாவுடைய நாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காதவராகக் கண்டதில்லை.

 நூல்: புகாரி 2828

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்கக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய அபூதல்ஹா (ரலி) அவர்கள் ‘காலமெல்லாம் நோன்பு நோற்பது கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த தடையில் கவனம் செலுத்தத் தவறிவிட்டார்கள்.

இதிலிருந்து நமக்கு ஒரு சில கேள்விகள் எழுகின்றன.

ஸஹாபாக்கள் வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறியுள்ளனரா?

அல்லது அவர்கள் இதுபோன்ற சில ஹதீஸ்களை அறியவில்லையா?

அறிந்தே செய்தனர் என்றால் அவர்களிடத்திலும் தவறுகள் நிகழ்ந்துள்ளது தானே?

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.

அப்படியானால் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தாலும் அது தவறு தான் என்பதை நபித்தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறுபவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

காலமெல்லாம் நோன்பு நோற்கத் தடை விதிக்கும் இறைத்தூதரின் கூற்றைக் கவனியுங்கள்:

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’’ என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே!’’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’’ என்று கூறினார்கள்.

‘‘நான் சிரமத்தை வலிரிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’’ என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!’’ என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். வருடத்தில் பாதி நாட்கள்!’’ என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!’’ என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 1975

கவ்ஸர் தடாகத்தில் விரட்டப்படும் நபித்தோழர்கள்:

கவ்ஸர் என்ற சிறப்பு வழங்கப்பட்ட சமுதாயம் இறுதித்தூதரைப் பின்பற்றிய நமது சமுதாயம் தான். அதன் சிறப்புகளைக் கேள்விப்பட்டால் அதனை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்கவ்ஸர்’) எனும் எனது தடாகம் (பரப்பளவில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவு கொண்டதாகும். அதன் அனைத்து மூலைகளும் சம அளவு கொண்டவையாகும். அதன் நீர் வெள்ளியை விட வெண்மையானதாகும். அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்ததாகும். அதன் (விளிம்பிலிருக்கும்) கூஜாக்கள், (எண்ணிக்கையில்) விண்மீன்கள் போன்றவையாகும். யார் அதன் நீரை அருந்து கிறாரோ அவர் அதன்பின் ஒருபோதும் தாகமடையமாட்டார்.

நூல்: முஸ்லிம் 4599

ஆனால் அப்பாக்கியம் நபிகளார் வாழ்ந்த காலகட்டத்தில் உள்ள சிலருக்கே கிடைக்காது என்றால் அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்கான காரணத்தையும் நபிகளார் தெளிவுபடுத்தத் தவறவில்லை.

சஹல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன். யார் (என்னிடம்) வருகிறாரோ அவர் (அத்தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (அத்தடாகத்தினருகில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்படும்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் (என் தோழர்கள்)’’ என்று சொல்வார்கள். அப்போது உங்களுக்குப் பின்னால் அவர்கள் செய்ததை நீங்கள் அறியமாட்டீர்கள்’’ என்று கூறப்படும். அப்போது நான், எனக்குப் பின்னர் (தமது மார்க்கத்தை) மாற்றிக்கொண்டவர்கள் தொலைந்து போகட்டும்; தொலைந்து போகட்டும்’’ என்று கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல்: முஸ்லிம் 4598

அவர்களில் நபித்தோழர்களில் சிலரும் அடங்குவார்கள் என்று நபிகளார் தமது நாவினாலே பிரகடனப்படுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடனிருந்த என் தோழர்களில் சிலர் (மறுமையில் அல்கவ்ஸர்’) தடாகத்துக்கு என்னிடம் வருவார்கள். நான் அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் (நானிருக்கும் பகுதிக்கு) ஏறி வருவர். அப்போது என்னைவிட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். அப்போது நான், “இறைவா! (இவர்கள்) என் அருமைத் தோழர்கள்; என் அருமைத் தோழர்கள்’’ என்பேன். அதற்கு, “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்’’ என்று என்னிடம் கூறப்படும்.

 நூல்: முஸ்லிம் 4612

தூதர் காட்டிய தூய வழியைப் பின்பற்றுமாறு கட்டளை

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ் விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர். 

அல்குர்ஆன் 24:51, 52

இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

அல்குர்ஆன் 24:54

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 3:132

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

அல்குர்ஆன்: 47:33

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

அல்குர்ஆன் 4:80

எனவே தூதர் காட்டிய தூய வழியையே நாம் பின்பற்ற வேண்டும். மார்க்கம் என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்தது தானே தவிர மூன்றாவது பாதையான ஸஹாபாக்களையும் பின்பற்றலாம் என்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை; புதுமைகளுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்பதை விளங்கிச் செயல்படுவோம்.