ஏகத்துவம் – நவம்பர் 2009

தலையங்கம்

நாத்திகம் தோற்றது ஏகத்துவம் வென்றது

தனது அறிவுப்பூர்வமான வாதத்தின் மூலம் அசத்தியக் கோட்டைகளை ஆட்டுவித்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னந்தனி மனிதராக நின்று அசத்தியபுரியை வென்று காட்டியவர். பதில் இல்லையெனில் அந்தக் கொள்கை அசத்தியம்! பொய்! போலி என்று உலகுக்கு உணர்த்திய பகுத்தறிவுப் பகலவன்! சிலை வணக்கத்தின் சிம்ம சொப்பனம்!

அவர் வைத்த வாதத்திற்கு அரசனால் பதில் சொல்ல முடியவில்லை.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

அந்தப் பகுத்தறிவுப் பகலவன் வைத்த வாதத்திற்கு அவரது சமுதாயத்தினராலும் பதில் சொல்ல முடியவில்லை.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்என்று அவர்கள் கூறினர். “நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்என்று அவர் கூறினார்.

நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர். “அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்என்று அவர் கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்.) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்என்று அவர்கள் கூறினர். “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்எனக் கூறினர். “அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்என்றனர்.

இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர். அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்என்று தமக்குள் பேசிக்கொண்டனர். பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!என்றனர்.

அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா? அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.

அல்குர்ஆன் 21:52 – 67

அறிவுரீதியான வாதத்திற்குப் பதில் இல்லை என்றால், அவர் பேரரசராக இருந்தாலும், பெரும் சமுதாயமாக இருந்தாலும் அந்தப் பேரரசு, பெரும் சமுதாயம் என்பது பெயரளவில் தான். உண்மையில் அவர்கள் சாவிகள்; சருகுகள்; பதர்கள்.

சத்தியத்தில் இருந்து கொண்டு இது போன்று பதில் சொல்பவர், தனி மனிதராக இருந்தாலும் அவர் தான் ஒரு சமுதாயம் என்று ஓர் உயரிய அளவுகோலை அல்லாஹ் நமக்குத் தெரிவிக்கின்றான்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

அந்தப் பகுத்தறிவுத் தந்தையின் பாட்டையில், பாதையில் தான் தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சமிகு பயணம் செய்கின்றது.

கப்ரு வணங்கிகளிடம், காதியானிகளிடம், கிறித்தவர்களிடம், குர்ஆன் மட்டும் போதும் என்ற குருட்டு சிந்தனை உடையவர்களிடம், குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களையும் ஏற்க வேண்டும் என்று பிதற்றும் பிதற்றல்காரர்களிடம், ஜகாத், பிறை போன்ற மார்க்கச் சட்டங்களில் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களிடம் என பல்வேறு விவாதக் களங்களைச் சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத், அண்மையில் தன் பாதையில், தன் அனுபவத்தில், தன் பயணத்தில் இது வரை சந்தித்திராத, கண்டிராத நாத்திகவாதிகளிடம் ஒரு வாதக் களத்தைச் சந்தித்தது.

பகுத்தறிவுவாதிகள் (?) இவர்கள்! இவர்களிடம் மோத முடியுமா? முட்ட முடியுமா? இவர்களை எதிர்த்து வாதம் செய்ய முடியுமா? என்று இந்த நூற்றாண்டில் நினைப்பதற்கே பயந்து கொண்டிருந்தது இஸ்லாமியச் சமுதாயம்!

இப்ராஹீம் நபியின் பாதையில் இவர்களையும் இந்த ஜமாஅத் சந்திக்கும் வகையில் அவர்களைச் சந்திக்கு அழைத்தது; சந்தித்தது. அவர்கள் செய்வது பகுத்தறிவு வாதம் அல்ல! பைத்தியக்கார வாதம் என்று நிறுவி, நிரூபித்து அவர்களை சந்தி சிரிக்க வைத்தது. அவர்கள் கொண்ட கொள்கையில் அவர்களையே சந்தேகிக்க வைத்தது.

இந்த நாத்திகம் தமிழகத்திற்குப் புதிது! ஆனால் அல்குர்ஆனுக்குப் புதிதல்ல!

நமது இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்; வாழ்கிறோம்; காலத்தைத் தவிர வேறு எதுவும் எங்களை அழிப்பதில்லைஎனக் கூறுகின்றனர். அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. அவர்கள் ஊகம் செய்வோர் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 45:24

கேடு கெட்ட இந்தச் சிந்தனை ஓட்டத்திற்கும் தன்னிடம் தக்க பதிலைச் சேமித்தே வைத்துள்ளது. அந்த அற்புத வேதம் தான் இந்த விவாதக் களத்தில் நின்றது! வென்றது! அல்ஹம்துலில்லாஹ்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வோர் இறைத் தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித் தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப் பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (திருக்குர்ஆன்) தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4981

தவ்ஹீத் ஜமாஅத் கண்ட இந்த வெற்றி முதல் கட்ட வெற்றி தான். இந்த ஜமாஅத்தின் தொண்டர்கள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் லி முஸ்லிம், கிறித்தவர்கள், இந்துக்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவரிடமும் லி இதைக் கொண்டு செல்வதில் தான் இறுதிக் கட்ட வெற்றி அமைந்துள்ளது.

————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு             தொடர் லி 14

மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அலீக்கு வந்த வஹீ?

அபூஉஸாமா

மலக்குகள் மற்றும் இறைத் தூதர்களை அவமதிப்பது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய ஒரு கொடிய உணர்வு. அந்த உணர்வைத் தங்கள் இரத்தமாகக் கொண்டவர்கள் தாம் ஷியாக்கள். அதனால் தான் அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிக்கிறார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம்.

அது போல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கிறார்கள்; மட்டம் தட்டுகிறார்கள். அலீயை உயர்த்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாழ்த்துகிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெறும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

கைபர் வெற்றியை அறிவிக்கையில் அபூராஃபி கூறியதாவது: (கைபரை நோக்கி) அலீ சென்றார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். காலையில் அவர் வெற்றியடைந்து மக்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நின்றார். தன்னுடைய இறைவனுடன் அலீ ரகசியமாக உரையாடுகின்றார் என மக்கள் பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் அவ்வாறு நின்றதும் வெற்றி கொண்ட நகரத்தின் பொருட்களை எடுக்கும்படி உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் உத்தரவிட்டபடியே அலீ மக்களிடம் நின்றார். அல்லாஹ், அலீயிடத்தில் ரகசியமாக உரையாடுகின்றான் என்று மக்களில் ஒரு சிலர் பேசிக் கொண்டனர்” என்று சொன்னேன். “ஆம்! அபூராஃபியே! தாயிப் நாளின் போதும், தபூக்கின் கணவாய் நாளின் போதும் ஹுனைன் நாளின் போதும் அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடினான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஷியா இமாம்களால் அறிவிக்கப்படும் செய்தி இது!

இத்துடன் மற்றொரு செய்தியையும் இங்கு பார்ப்போம்.

“என்னைப் போன்ற ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவரை வைத்து அல்லாஹ், கைபரை வெற்றி கொள்ளச் செய்வான். சாட்டை தான் அவருடைய வாள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் மக்களிடம் தெரிவித்ததும் மக்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது. மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயை அழைத்து, “நீ தாயிஃபுக்குச் செல்” என்று கட்டளையிட்டார்கள். அலீ புறப்பட்டுச் சென்ற பின்னர், “நீங்களும் தாயிஃபுக்குச் செல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். நபி (ஸல்) அவர்கள் தாயிஃபுக்குச் சென்ற போது அலீ (ரலி) மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், “நில்லுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒரு பேரிறைச்சல் சப்தத்தைச் செவியுற்றோம். “அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?” என்று வினவப்பட்டது. “அல்லாஹ் அலீயுடன் ரகசியமாக உரையாடுகின்றான்” என்று பதிலளித்தார்கள்.

இவ்வாறு அபூஅப்தில்லாஹ் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.

நூல்: பஸாயிருத் தரஜாத்

இவ்விரு செய்திகளில் இருபெரும் அற்புதங்களை (?) இந்த யூத வாரிசுகள் அவிழ்த்து விடுகின்றனர்.

  1. நபி (ஸல்) அவர்கள் அலீயை தாயிஃபுக்கு அனுப்பி வைத்ததால், அவரைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.
  2. அல்லாஹ்வின் தூதரைப் போலவே அலீக்கு வஹீ வருகின்றது. அதிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வரும் போது எழாத பேரிறைச்சல், வெடிச் சப்தங்கள், இடி முழக்கங்கள் எல்லாம் அலீக்கு வஹீ வரும் போது ஏற்படுகின்றன என்ற பிரம்மாண்டத்தைக் காட்டுகிறார்கள்.

அதையும் நபி (ஸல்) அவர்களே சொன்னார்கள் என்பது போல் சித்தரித்து, நபி (ஸல்) அவர்களை இரண்டாம் தரத்தில் நிறுத்துகின்றார்கள் இந்த ஷியா பாவிகள்.

முஹம்மத் (ஸல்) அவர்களே முதன்மையானவர்

எள்ளளவு, எள் முனையளவு ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட (இப்ராஹீம் நபி தவிர) மனித ஜின் இனத்தில் மேலானவர், அல்லது அவர்களுக்கு நிகரானவர் இருக்கின்றார் என்று ஒரு போதும் நம்ப மாட்டார். இந்த ஷியாக்களோ அலீயை நபிக்கு இணையானவர் என்ற வட்டத்தைத் தாண்டி மேலானவர் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது திருக்குர்ஆனுக்கு நேர் எதிரான கருத்தாகும்.

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

அல்குர்ஆன் 33:6

இப்படியோர் உயர் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இரண்டாம் தகுதியைக் கொடுப்பவர்கள் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

அகிலத் தூதர்

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 34:28

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

அல்குர்ஆன் 25:1

அகிலத்தின் அருட்கொடை

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 21:107

இவையெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த மனித குலத்திலேயே சிறந்தவர்கள் என்பதற்குரிய அல்குர்ஆனின் அழகிய சான்றுகளாகும்.

மனித குலத் தலைவர்

நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3340)

முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத் தலைவர் என்பதை விளக்குவதுடன், அவர்கள் ஏனைய நபிமார்களை விடவும் சிறந்தவர் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இம்மாபெரும் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களைத் தான் இந்த ஷியாக்கள் அலீயை விடத் தாழ்த்தி மட்டம் தட்டுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் உயர்த்துபவன் ஒரு முஃமினாக இருக்க முடியாது. ஷியாக்கள் இன்னோர் அக்கிரமத்தையும் இங்கு நிலைநாட்டுகின்றனர். அது, அலீக்கும் வஹீ வருகின்றது என்று அவர்கள் குறிப்பிடுவதாகும்.

இந்த நம்பிக்கை கொண்டவன் ஒருபோதும் முஃமினாக, இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது. ஏனெனில் இது குர்ஆன், ஹதீசுக்கு நேர் எதிரான சிந்தனையும் கருத்துமாகும்.

4:163, 12:3, 13:30, 16:123, 17:73, 17:86, 35:31, 42:7, 42:13, 42:53 இன்னும் இது போன்ற வசனங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பற்றிக் கூறுகின்றன.

வஹீயில் பங்காளி இல்லை

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.

அல்குர்ஆன் 2:97

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இந்தத் திருக்குர்ஆனை இறக்கியதாக இந்த வசனம் கூறுகின்றது.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:40

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் இறுதி நபி என்று திருக்குர்ஆன் அறுதியிட்டுக் கூறுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களின் வஹீயில் எந்தப் பங்காளியும் இல்லை என்று அடித்துச் சொல்கின்றது.

இறுதித் தூதர்

தாம் இறைத் தூதர், தம்மைத் தவிர வேறு யாருக்கும் தூதுச் செய்தியில் பங்கும் இல்லை, பாகமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகின்றார்கள்.

பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத் தூதர்கள் இருந்தனர். இறைத் தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத் தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத் தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3455

கடைசிக் கல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, “இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3535

தம்மைக் கடைசியாக வைக்கப்பட்ட செங்கலுக்கு உவமையாக்கி, தமக்குப் பிறகு நபி வரப் போவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ்கள் அனைத்துமே அலீ (ரலி) அவர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ வஹீ வருகின்றது என்று நம்புபவன் இறை மறுப்பாளன் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

அலீயிடம் ஜிப்ரீல் வருவாரா?

அலீக்கு வஹீ வர வேண்டுமாயின் அது ஜிப்ரீல் வழியாகத் தான் வர வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வருகையளித்து வஹீ அறிவிக்கும் ஜிப்ரீல் அலீக்கு வருவாரா? ஒரு போதும் வர மாட்டார்.

திருக்குர்ஆன் 53வது அத்தியாயத்தில் நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீலைச் சந்தித்த அந்தச் சந்திப்பை மாபெரும் ஓர் அற்புதம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த ஜிப்ரயீல், அலீயிடம் வருகின்றார்; வஹீ அறிவிக்கின்றார் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்த நாசகர்கள் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமில்லை. இவர்களது இமாம்களுக்கே ஜிப்ரயீல், மீகாயீல் போன்ற மலக்குகள் வருகையளிக்கின்றார்கள் என்று இவர்கள் சொல்வதைக் கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். எனவே அலீயிடம் ஜிப்ரயீல் வருகின்றார் என்று இவர்கள் சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அதிலும் அல்லாஹ் அலீயிடம் உரையாடுகின்றான் என்று சொல்வது இறை மறுப்பின் உச்சக்கட்டமாகும்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 42:51

அல்லாஹ் கூறுகின்ற இந்த மூன்று வரையறைகளைத் தாண்டி அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடுகின்றான் என்று சொல்கின்றனர். இதற்கு அரபியில், “யுனாஜீ’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர் இந்தக் குறுமதியாளர்கள். ஒருவர் மற்றொருவருடன் ரகசியம் பேசும் போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.

அலீயுடன் அல்லாஹ் ரகசியம் பேசுகின்றான் என்று இவர்கள் கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறும் வரையறையை அவனே மீறி விட்டான் என்று அல்லாஹ்வின் மீதே ஓர் அபாண்டத்தைச் சொல்கின்றனர். அத்துடன், இந்த உயர் தகுதியை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்காமல் அலீக்கு மட்டும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்றும் சொல்ல வருகின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் மேற்கண்ட மூன்று வரையறையுடன் தான் பேசியிருக்கின்றான். இது தான் உண்மை! இந்த வரையறைக்கு அப்பாற்பட்டு அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர்.

இந்த அடிப்படையில் ஷியாக்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? சில சுன்னத் ஜமாஅத் நூற்களில் ஏதேனும் ஒரு ஹதீசுக்கு ஆதாரமாக புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ போன்ற நூற்களை மேற்கோள் காட்டுவதுடன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், ரூஹுல் பயான், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பைஹகீ போன்ற நூற்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இவற்றில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதியப்பட்டுள்ளனவா? விளக்கவும்.

சி. அஹ்மது நெய்னா, நாகூர்

ரூஹுல் பயான், தப்ஸீர் ஜலாலைன், நுஜ்ஹதுல் மஜாலிஸ், இஹ்யா, ரியாளுஸ்ஸாலிஹீன், மிஷ்காத், பைஹகீ என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நூற்களில் பைஹகீ தவிர மற்றவை நேரடி ஹதீஸ் நூற்கள் அல்ல!

நேரடி ஹதீஸ் நூல் என்றால், நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் கேட்டதை சங்கிலித் தொடராக அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டு, நூலாசிரியர் தமது நூலில் பதிவு செய்வார். இது தான் ஹதீஸ் நூல் எனப்படுகின்றது.

ரூஹுல் பயான், தப்ஸீர் ஜலாலைன் போன்றவை தப்ஸீர் நூற்களாகும். இந்த நூற்களில் ஹதீஸ்கள் மட்டுமின்றி திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் பல்வேறு கதைகளும் எழுதப்பட்டுள்ளன.

ரியாளுஸ்ஸாலிஹீன், மிஷ்காத் போன்ற நூற்கள், புகாரி, முஸ்லிம் திர்மிதி, நஸயீ போன்ற நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து முழு அறிவிப்பாளர்கள் வரிசையை நீக்கி விட்டு, தலைப்பு வாரியாக ஹதீஸ்களைத் தொகுத்து எழுதப்பட்டவையாகும்.

நுஜ்ஹதுல் மஜாலிஸ் என்பது கட்டுக் கதைகளின் தொகுப்பு.

தப்ஸீர்களாக இருந்தாலும், ஹதீஸ் விரிவுரை நூற்களாக இருந்தாலும் அல்லது ஹதீஸ் தொகுப்பு நூற்களாக இருந்தாலும் அவை நேரடி ஹதீஸ் நூற்களைப் போன்று ஆதாரம் காட்டுவதற்கு ஏற்றதல்ல.

காரணம், ஹதீஸ் நூற்களை ஆதாரமாகக் காட்டும் போது அந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து அது சரியான ஹதீஸா? அல்லது பலவீனமான ஹதீஸா என்பதை முடிவு செய்ய முடியும்.

ஆனால் மேற்கண்ட நூற்களில் எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ்களை அவ்வாறு தீர்மானிக்க இயலாது. ஏனெனில் அந்நூற்களில் இடம் பெறும் ஹதீஸ்கள், நூலாசிரியர் நேரடியாகக் கேட்டுப் பதிவு செய்தவை அல்ல. மாறாக நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டவை தான்.

நாம் நம்முடைய நூற்களில் ஹதீஸ்களை எழுதி விட்டு புகாரி, முஸ்லிம் என்று மேற்கோள் காட்டுவது போன்று இந்த நூற்களிலும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். எனவே இந்த நூற்கள் ஒரு போதும் ஆதார நூற்கள் ஆகாது. நேரடி ஹதீஸ் நூற்கள் மட்டுமே ஆதார நூற்களாகும்.

? உருவப் படங்கள் உள்ள வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள் என்பது சரியான ஹதீஸாகும். இந்நிலையில் மார்க்க அறிஞர்கள் தொலைக் காட்சிகளில் உரை நிகழ்த்தும் போது மலக்குமார்களின் நிலை என்ன? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? விளக்கவும்.

எம். சமீயுர்ரஹ்மான், திருமுல்லைவாசல்

எந்த வீட்டில் உருவச் சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி)

நூல்: புகாரி 3224, 5957

உருவப் படங்கள் என்பதில் தொலைக்காட்சி, வீடியோவில் தோன்றும் உருவங்கள் சேராது. உருவப் படங்களுக்கும், தொலைக்காட்சி, வீடியோவுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

காணப்படுவது, பிரதிபலிப்பது எல்லாம் படங்கள் அல்ல. பதிவதும், நிலைத்திருப்பதுமே படங்கள்.

நமது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறோம். நமது உருவம் கண்ணாடியில் தெரிவதால் காண்ணாடியை யாரும் உருவப் படம் என்று சொல்வதில்லை. கண்ணாடி பார்த்தால் மலக்குகள் வருவதில்லை என்றும் கூறுவதில்லை.

கண்ணாடியில் தெரிவதைப் படம் என்று சொல்லாமலிருக்க என்ன காரணம் கூறுவோம்?

நம் உருவம் கண்ணாடியில் பதியவும் இல்லை. நிலைத்திருக்கவும் இல்லை. நாம் முன்னால் நின்றால் அது நம்மைக் காட்டும். வேறு யாராவது நின்றால் அவர்களைக் காட்டும். யாருமே நிற்காவிட்டால் எதையும் காட்டாது.

தொலைக்காட்சியும் இது போன்றது தான். நாம் எதை ஒளி பரப்புகிறோமோ அது தெரியும். என்னை ஒளி பரப்பினால் நான் தெரிவேன். உங்களை ஒளி பரப்பினால் நீங்கள் தெரிவீர்கள். எதையும் ஒளி பரப்பாவிட்டால் எதுவுமே தெரியாது. தொலைக்காட்சியில் எதுவுமே பதியவுமில்லை. நிலைக்கவுமில்லை. உருவப் படம் என்று காரணம் காட்டி இதைத் தடுக்க முடியாது.

மேலும் உருவப் படம் என்பதில் இயக்கமோ, அசைவோ, ஓசையோ இருக்காது. தொலைக்காட்சி, வீடியோக்களில் இவையெல்லாம் இருக்கின்றன. உருவப் படங்களிலிருந்து இந்த வகையிலும் தொலைக்காட்சி என்பது வித்தியாசப்படுகின்றது. சுருங்கச் சொல்வதென்றால் நேரடியாகக் காண்பது போன்ற தன்மையே தொலைக்காட்சி, வீடியோக்களில் காணப்படுகிறது. எனவே இவற்றை உருவப்படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது.

மேலும் உருவப் படங்களைப் பொறுத்த வரை அவற்றை ஒட்டுமொத்தமாக இஸ்லாம் தடை செய்து விடவில்லை. அவற்றில் சில விதிவிலக்குகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச் சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2479

நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். உருவப் படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் 24908

தலையணைகளாக ஆக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கட்டளையிட்டதாக மற்றொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல்: அஹ்மத் 23668

ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து “சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச் சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான்என்று என்னிடம் கூறினார்கள். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள் என்றும் என்னிடம் கூறினார்கள்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 7701, திர்மிதீ 2730, அபூதாவூத் 3627

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச் சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 3935

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது “மதிப்பு மிக்கவையாகக் கருதப்படும் உருவப் படங்களே தடுக்கப்படுகின்றன; மதிப்பில்லாமல் மிதிபடும் உருவப் படங்கள் தடுக்கப்படவில்லை” என்பதை எவரும் அறிய முடியும்.

உருவப் படங்கள் உள்ள திரைச் சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறு ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும்.

எந்த உருவம் திரைச் சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

“அந்தத் திரைச் சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும், பாதி, பாதியாகச் சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்” என்று சிலருக்குத் தோன்றக் கூடும்.

அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள் “உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் நபிகள் நாயகம் (ஸல்) சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்கிறார்கள்.

சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை ஆயிஷா அவர்கள், உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் ஜிப்ரீல் (அலை) சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப் படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் “மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில்’ என்று கூறியிருக்கத் தேவையில்லை.

இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச் சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாம்.

ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும்.

தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்துப் பாதுகாக்கும் உருவப் படங்கள் இவையெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

செய்தித் தாள்களில் காணப்படும் உருவப் படங்களுக்கும், பொட்டலம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் காகிதங்களில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும், பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கும் (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 6130

இந்த ஹதீஸிலிருந்து பொம்மைகள் வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று அறியலாம்.

“உருவச் சிலைகளுக்கு பொதுவான தடை வந்துள்ளதால், இங்கே குறிப்பிடப்படும் பொம்மைகள் உயிரற்ற மரம், செடி, கப்பல் போன்ற பொம்மைகளாகத் தான் இருக்க முடியும்” என்று கூற இடமுண்டு. இதை மற்றொரு ஹதீஸ், மறுத்து “உயிருள்ளவைகளின் பொம்மைகளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள்” என்பதைத் தெளிவாக அறிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க் களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரையை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆயிஷாவே என்ன இது?” என்றார்கள். “என் பொம்மைகள்என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, “அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “குதிரைஎன்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். “குதிரையின் மேல் என்ன?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “இறக்கைகள்என்று ஆயிஷா (ரலி) பதில்  கூறினார்கள். “குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, “ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், கடவாய்ப் பற்களை நான் காணும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: அபூதாவூத் 4284

உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் இதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள்.

உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம்; அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது இதிலிருந்து  தெளிவாகின்றது.

உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச் சிலைகளுக்கே என்று உணரலாம்.

மதிக்கப்படாத வகையிலும், சிறுவர் சிறுமியர்களின் விளையாட்டுப் பொருளாகவும் உருவப் படங்களுக்கும் பொம்மைகளுக்கும் அனுமதி இருப்பது போல் சிறிய அளவிலான உருவப் படங்களுக்கும் அனுமதி உண்டு.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் கூறிய செய்தியை அபூ தல்ஹா (ரலி) தன்னிடம் கூறியதாக ஸைத் பின் காலித் என்பவர் எங்களிடம் அறிவித்தார். ஒரு நாள் ஸைத் பின் காலித் நோயுற்றார். அவரை நோய் விசாரிக்க நாங்கள் சென்ற போது அவரது வீட்டில் உருவப் படங்களுடன் திரைச் சீலை தொங்க விடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நான் “இவர் உருவப் படங்கள் பற்றிய ஹதீஸை நமக்கு அறிவிக்கவில்லையா?” என்று உபைதுல்லாஹ் அல் கவ்லானி என்பவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “ஆடையில் சிறிய அளவிலான உருவத்தைத் தவிரஎன்று அவர் கூறியதை நீ கேட்கவில்லையா? என்றார். நான் இல்லை என்றேன். அதற்கு அவர் “இல்லை. நிச்சயமாக அவ்வாறு அவர் கூறினார்என்றார்.

அறிவிப்பவர்: புஸ்ரு பின் ஸயித், நுôல்: புகாரி 3226

சிறிய அளவிலான உருவப்படம் தவிர மற்ற உருவப்படம் உள்ள வீடுகளுக்குத் தான் வானவர்கள் வர மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

சிறிய அளவு, பெரிய அளவு என்பதை எவ்வாறு தீர்மானிப்பது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறவில்லை.

இது போன்ற விஷயங்களில் நடை முறையைக் கவனத்தில் கொண்டு நேர்மையான சிந்தனையுடன் நாம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சிறிய அளவிலான உருவப்படம் என்று நமக்குப் படுகின்ற உருவப் படங்களை வைத்துக் கொள்வதில் குற்றம் இல்லை.

சுவரில் பிரேம் போட்டு மாட்டி வைக்கும் படம் தான் சாதாரணமான அளவாகும். அதனுடன் ஒப்பிடும் போது ரூபாய் நோட்டுக்கள், உறுப்பினர் அட்டைகள், பாடப் புத்தகங்களில் அச்சிடப்படும் படங்கள் போன்றவை பன்மடங்கு சிறியவையாகும். அளவில் சிறியதாக இருக்கும் காரணத்திற்காகவே இவை அனுமதிக்கப்பட்டதாக ஆகி விடும்.

மேலே குறிப்பிட்டவை அவசியத் தேவை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்பது மட்டுமன்றி இவை அளவில் சிறியதாகத் தான் இருக்கும்.

அளவில் சிறியதாக இருந்தால் அவசியத் தேவை இல்லாத போதும் உருவப் படங்களைப் பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தல் போன்ற காரணத்துக்காக உருவங்கள் வரைந்து கற்றுக் கொடுப்பதையும் தடை செய்ய முடியாது. சிங்கம், புலி போன்ற விலங்குகளைப் படம் வரைந்து தான் கற்றுக் கொடுக்க முடியும்.

அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.

————————————————————————————————————————————————

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

அல்குர்ஆன் 47:19

ஒவ்வொருவரும் முதன் முதலில் ஓரிறைக் கொள்கையைத் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் வலியுறுத்துகிறது. ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் கவனமற்றவர்களாகவே உள்ளனர்.

இவ்வாறு நாம் கூறும் போது, நாங்கள் ஓரிறைவனைத் தானே வணங்குகிறோம் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கூறுகின்றனர். அல்லாஹ் மட்டுமே இறைவன் என்று கூறுவதால் ஒருவன் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவனாக கருதப்பட மாட்டான். மாறாக இறைவனுக்குரிய ஒரு பண்பை அவனல்லாதவர்களுக்கு இருப்பதாகக் கருதினாலோ அல்லது அல்லாஹ் அல்லாத ஒரு பொருளுக்கு இறைத் தன்மை இருப்பதாக நம்பினாலோ அவன்  இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவான். மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் சொந்தக்காரனாகி விடுவான். இதன் காரணமாகத் தான் இறைவன் இதனைக் கற்றுக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் நம்மை படைத்ததன் நோக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.

அறிவிப்பவர்:  முஆத் (ரலி)

நூல்: புகாரீ 2856

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.

நூல்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரீ 1238

இஸ்லாத்தின் முதல் தூண் ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்து (தூண்கள்) மீது நிறுவப்பட்டுள்ளது. (அவை:) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழி அளிப்பது; தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 20

இறை நம்பிக்கையின் முதல் நிலை

ஏகத்துவக் கொள்கை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமானஅல்லது “அறுபதுக்கும் அதிகமானகிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளை தான்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 58

ஓரிறைக் கொள்கைக்கு நேர் எதிரானது இணை வைப்புக் காரியங்களாகும். இந்த இணை வைப்புக் காரியங்களின் பேராபத்தை ஒருவன் உணர்ந்து கொண்டால் எல்லாவற்றிற்கும் மேலாக இதைக் கற்றுக் கொள்வதற்குத் தான் முக்கியத்துவம் தருவான். இதை அறியாதவர்களாக இருப்பதால் தான் இதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இவை ஒரு மனிதனுக்கு எவ்வளவு பேராபத்தானவை என்பதைப் பின்வரும் சான்றுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

ஓரிறைக் கொள்கையின் மகிமை

இறைவனுக்கு இணை கற்பிக்காதவர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் சுவர்க்கம் சென்று விடுவார்கள். இதிலிருந்தே நாம் ஓரிறைக் கொள்கையின் மகிமையை விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் திருப்தியை நாடி “லாயிலாஹ இல்லல்லாஹ்என்று எவரேனும் சொன்னால் அல்லாஹ் நரகத்தை அவர் மீது தடை செய்துவிடுகிறான்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இத்பான் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4250

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக் கொண்ட போது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்து விடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நான், “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5827

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லைஎன்றும் “முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்என்றும் “ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்என்றும், “அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன (“ஆகுக!என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)என்றும், “அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்என்றும், “சொர்க்கம் உண்மை தான்என்றும், “நரகம் உண்மை தான்என்றும், எவர் (உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்.

அறிவிப்பவர்: உபாதா (ரலி)

நூல்: புகாரி 3435

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,  “நான் சொர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்!என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமளானில் நோன்பு நோற்க வேண்டும்என்றார்கள். அதற்கவர், “என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதை விட அதிகமாக வேறெதைதையும் செய்ய மாட்டேன்என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்!என்றார்கள்.

நூல்: புகாரி 1396

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் “லாயிலாஹ இல்லல்லாஹ்‘ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் “லாயிலாஹ இல்லல்லாஹ்சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில் “லாயிலாஹ இல்லல்லாஹ்சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

அறிவிப்பவர்:  அனஸ் (ரலி)

நூல்: புகாரி 44

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு பயணத்தில் வாகனமொன்றில்) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் “முஆத் பின் ஜபலே!என்று அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். “முஆதே!என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதி கூறும்  எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்து விட்டான்என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதை கேட்டு) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே!என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள் (இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்து விடுவார்கள்என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.

நூல்: புகாரி 99

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடு நேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன்.

பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அப்போது அவர்கள், “அபூஹுரைராவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!என்றேன். “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். “நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடு நேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான் தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவே தான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக் கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள்என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா!‘ (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, “இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!என்று கூறினார்கள்.

நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவை என்ன காலணிகள், அபூஹுரைரா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். “திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள்.

நான், “உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்து விட்டேன். பிறகு, “திரும்பிச் செல்லுங்கள்என்று கூறினார்என்றேன்.

அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?” என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பி வைத்தீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 52

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய  என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். “என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் “என் இரடசகனே ஏதுமில்லைஎன்று கூறுவான்.

அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். “என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)” என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் “நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்என்று கூறுவான். அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும்.  அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும்.  அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2563

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) “ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன்என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி)

நூல்: அஹ்மத் 20349

நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்குச் செய்கின்ற சேவைகளிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.

இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.

ஏனென்றால் இதனை எடுத்துரைக்கும் போது பல விதமான சோதனைகள் பல விதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனைகள் வரவில்லையென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள்.

சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங்கினாலும், எவ்வளவு பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத்வாதிகள் உறுதியாக இருக்க வேண்டும்.

ஓரிறைக் கொள்கையில் அவசியத்தை இது வரை கண்டோம். இணை வைத்தலின் தீமைகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

————————————————————————————————————————————————

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது. பெண்கள் அணிந்து கொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக நாமும் இதே கருத்தையே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இந்த நமது நிலைப்பாட்டிற்கு எதிராகச் சில அறிஞர்கள், பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்து வேறுபாடு, நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்களிடமும் இருந்துள்ளது.

தற்காலத்தில் இமாம் அல்பானீ அவர்கள் இந்தக் கருத்தை வாதப் பிரதிவாதங்களோடு அழுத்தமாகக் கூறியுள்ளார். இவரது கருத்தை ஆமோதித்து, பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் சில அறிஞர்களால் இப்பிரச்சனை கிளப்பப்பட்டு இது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் விவாதம் நடைபெறுகின்ற அளவிற்கு பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. முரண்பட்ட இரு வேறு கருத்துக்கள் வந்துள்ளதால் மக்களுக்கு இது தொடர்பான தெளிவு கட்டாயம் தேவைப்படுகிறது.

இது ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சட்டப் பிரச்சனை என்பதால் இதில் சரியான நிலைபாடு எது என்பதை எல்லோரும் ஆதாரங்களோடு அறிந்து கொள்வது அவசியம்.

இந்த ஆய்வில் இறங்கி அனைத்து ஆதாரங்களையும் அலசிப் பார்க்கும் போது தங்கம் அணிவது ஆண்களுக்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது; பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

இமாம் அல்பானீ அவர்களைப் பொறுத்த வரை அவர் சிறந்த அறிஞர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மார்க்க  விஷயங்களில் சிறப்பான முறையில் ஆய்வு செய்யக் கூடியவர். என்றாலும் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் அவர் தவறான முடிவை எடுத்துள்ளார்.

தங்க ஆபரணங்களை பெண்களும் அணியக் கூடாது என்று கூறுபவர்கள் தங்கள் கூற்றுக்கு மூன்று ஹதீஸ்களை ஆதாரங்களாக குறிப்பிடுகிறார்கள்.

பெண்கள் தங்கம் அணியக் கூடாது என்ற கருத்தில் பலவீனமான பல ஹதீஸ்கள் வருகின்றன. ஆனால் இவற்றில் மூன்று ஹதீஸ்களைத் தவிர்த்து மற்றவை அனைத்தும் பலவீனமானவை என்று இக்கருத்துடையவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். மூன்று ஹதீஸ்கள் சரியானவை என்று இவர்கள் நம்புவதால் தங்கள் கூற்றிற்குரிய ஆதாரங்களாக இவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.

இவர்கள் எடுத்துக் காட்டும் மூன்று ஹதீஸ்களும் இவர்களின் வாதத்தை நிறுவும் வகையில் அமைந்திருக்கவில்லை. மேலும் அவற்றில் இரண்டு ஹதீஸ்கள் பலவீனமானவை.

எதிர் கருத்தில் உள்ளவர்கள் வைக்கும் முதல் ஆதாரம்

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: எனது கழுத்தில் தங்கத்தால் ஆன கழுத்து மாலைகளை நான் அணிந்திருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் அறைக்குள்) வந்தார்கள். என்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். நான் (அவர்களிடம்) “என் அலங்காரத்தை நீங்கள் பார்க்க மாட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், “உனது அலங்காரத்தை நான் புறக்கணிக்கிறேன்என்று கூறினார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருத்தி வெள்ளியால் ஆபரணத்தைச் செய்து, பிறகு அதனுடன் குங்குமச் சாயத்தை சேர்த்துக் கொள்வதில் என்ன சிரமம் இருக்கிறது?” என்று கூறியதாக இதன் அறிவிப்பாளர்கள் கருதினார்கள்.

நூல்: அஹ்மத் 25460

தங்கத்தை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்து விட்டு, வெள்ளியால் செய்து கொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்புவதால் பெண்களும் தங்கம் அணியக் கூடாது என்று இதிலிருந்து வாதிடுகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று வாதிடுவோர் முதலில் இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும். இரண்டாவதாக இந்த ஹதீஸுடன் தொடர்புடைய அனைத்து ஹதீஸ்களையும் திரட்டி இந்த ஹதீஸின் கருத்து என்ன என்பதையும் ஆய்வு செய்திருக்க வேண்டும். இவ்வாறு வாதிடுவோர் இரணடையும் கவனிக்கவில்லை.

முதலாவதாக, இந்த ஹதீஸ் பலவீமானதாகும்.

அஹ்மதில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை உம்மு சலமாவிடமிருந்து அதாஉ என்பவர் அறிவிக்கின்றார். இவர் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியைக் கூட செவியுறவில்லை என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.

நூற்கள்: இலலுல் மதீனீ, பாகம்: 1, பக்கம்: 66,

அல்மராசீலு லிஇப்னி அபீ ஹாத்தம், பாகம்: 1, பக்கம்: 155

எனவே உம்மு சலமா (ரலி) அவர்களுக்கும் அதாவிற்கும் இடையே அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். அவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் நமக்குத் தெரியாவிட்டாலும் அறிவிப்பாளர் விடுபட்டிருப்பது உறுதியாகத் தெரிவதால் இது தொடர்பு முறிந்த பலவீனமான செய்தியாகும். இதை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் தங்கம் அணிவது ஹராம் என்ற கருத்தை நிறுவ முடியாது.

இதை ஆதாரமாகக் காட்டக்கூடிய இமாம் அல்பானீ அவர்களும் இந்த ஹதீஸ் தொடர்பு முறிந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனால் பல பலவீனமான ஹதீஸ்கள் ஒன்று சேர்ந்தால் அவை சரியானதாகி விடும் என்ற தவறான நிலைப்பாட்டின் காரணமாக இந்தப் பலவீனமான ஹதீஸை அவர் சரிகண்டுள்ளார்.

இந்தத் தடை நபியவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரியது

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தியைச் சரியானது என்று ஏற்றுக் கொண்டாலும் இதை வைத்து எல்லாப் பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூற முடியாது. ஏனென்றால் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்ற சட்டம் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரிய பிரத்யேகமான சட்டமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தாருக்கு ஆபரணங்களையும் பட்டையும் தடை செய்தார்கள். மேலும், “சொர்க்கத்தின் ஆபரணங்களையும் பட்டையும் நீங்கள் விரும்பினால் இவ்வுலகில் இவற்றை அணியாதீர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: நஸாயீ 5046

நஸாயீயில் இடம்பெற்றுள்ள மேலுள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். இந்த ஹதீஸில் பொதுவாக ஆபரணங்களைத் தடுத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பின்னால் வரும் ஹதீஸைப் பார்க்கும் போது தங்க ஆபரணம் மட்டுமே அவர்களுக்குத் தடை செய்யப்பட்டது; வெள்ளி ஆபரணங்கள் அனுமதிக்கப்பட்டது என்பதை அறியலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தங்க முலாம் பூசப்பபட்ட இரண்டு வளையல்கள் எனது கையில் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள், “இவ்விரண்டையும் கழற்றிவிடு. வெள்ளியால் இரு வளையங்களைச் செய்து அதில் குங்குமச் சாயத்தைச் சேர்த்து மஞ்சள் நிறமாக மாற்றிக் கொள்” என்று கூறினார்கள்.

இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தங்க ஆபரணத்தை மட்டுமே தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்குத் தடை செய்கிறார்கள். வெள்ளி நகைகளை அவர்களுக்கு அனுமதிக்கிறார்கள்.

மேலுள்ள இவ்விரண்டு ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்ற சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் உரியதல்ல. நபியவர்களின் மனைவிமார்களுக்கு மட்டும் உரிய பிரத்யேகமான சட்டம் என்பதை அறியலாம்.

தமது மனைவிமார் அல்லாத மற்ற பெண்களுக்கு தங்கம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். இதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

மற்ற பெண்களுக்கு நபியவர்கள் வழங்கிய அனுமதி

ஆதாரம்: 1

அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பட்டைத் தமது வலக்கரத்திலும், தங்கத்தைத் தமது இடக்கரத்திலும் பிடித்து, “இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்குத்  தடை செய்யப்பட்டதாகும்என்று கூறினார்கள்.  (நூல்: நஸாயீ 5055)

இந்தச் செய்தி, தங்கமும் பட்டும் ஆண்களுக்கு மட்டுமே ஹராம்; பெண்களுக்கு ஹலால் என்ற கருத்தைத் தருகின்றது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்.

இமாம் அல்பானீ அவர்கள் உட்பட, “பெண்கள் தங்கம் அணிவது கூடாது’ என்று கூறுபவர்கள் யாரும் இந்த ஹதீஸை மறுக்கவில்லை. மாறாக இதை ஏற்றுக் கொண்டு இதற்குத் தவறான விளக்கத்தைத் தருகிறார்கள். அந்தத் தவறான விளக்கம் என்ன என்பது பின்னர் விளக்கப்படும்.

ஆதாரம்: 2

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். “இவ்விரண்டு காப்புகளுக்குப் பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அப்பெண் அவ்விரண்டு காப்புகளையும் கழற்றி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு “இவ்விரண்டும் சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விற்கு உரியதாகும். மேலும் அவனது தூதருக்கும் உரியதாகும்என்று கூறினார்.  (நூல்: நஸயீ 2434)

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். இமாம் அல்பானீ அவர்களும் தங்கம் விஷயத்தில் இவரது கருத்தை ஏற்றவர்களும் இந்த ஹதீஸைக் குறை காணவில்லை. மாறாக ஏற்றுக் கொள்கின்றனர்.

பெண்கள் தங்கம் அணிவது கூடாதென்றால் அச்செயலை நபி (ஸல்) அவர்கள் தம் கண் முன்னே காணும் வேளையில் அதைக் கண்டிக்காமல் விட்டுவிட்டு “ஸகாத் கொடுத்து விட்டாயா?’ என்று கேட்க மாட்டார்கள்.

பெண்கள் தங்கம் அணிவதில் அவர்களுக்கு ஆட்சேபணை இல்லாத காரணத்தால் அதைப் பற்றிக் கண்டிக்காமல் அதை ஆமோதித்து விட்டு, ஸகாத் கொடுத்து விட்டாயா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.

பெண்கள் தங்கத்தை அணியக் கூடாதென்றால் அதையே நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். எனவே பெண்கள் தங்களது ஆபரணங்களுக்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டால் அவற்றை அணிவதில் தவறில்லை என்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாகத் திகழ்கிறது.

ஆதாரம்: 3

நஜ்ஜாஷி அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்குச் சில ஆபரணங்கள் வந்தன. அவற்றை நஜ்ஜாஷி நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவற்றில் அபிசீனிய நாட்டுக் கல் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று இருந்தது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெறுத்து) புறக்கணித்த நிலையில் ஒரு குச்சியால் அல்லது தமது விரலால் அதை எடுத்தார்கள். பிறகு தமது பேத்தியும் அபுல் ஆஸ் அவர்களின் மகளுமான உமாமா (ரலி) அவர்களை அழைத்து, “என்னருமை மகளே, இதை நீ அணிந்து கொள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத் 3697

தங்க மோதிரத்தை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள். அதே நேரத்தில் தமது பேத்தி உமாமாவுக்கு அவர்களே அதை எடுத்துக் கொடுத்து அதை அணிந்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

தங்க ஆபரணங்களைப் பெண்கள் அணிவது கூடாதென்றால் தமது பேத்திக்கு இதை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.  அதே நேரத்தில் அந்த மோதிரத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வெறுத்து) புறக்கணித்தார்கள் என்று ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் ஆண்கள் தங்க மோதிரம் அணிவது புறக்கணிக்கப்பட வேண்டியது என்பதை அறியலாம்.

இன்ஷா அல்லாஹ், அடுத்த இதழில்…

————————————————————————————————————————————————

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை.  நோன்புப் பெருநாள் தினத்தில் ஸதகத்துல் ஃபித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹியா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது.  இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு அதை நிறைவேற்ற முயலும் போது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாறு திருக்குர்ஆனில் 37வது அத்தியாயம் 102 முதல் 108 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் “பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டு வைத்தோம்” எனக் கூறப்படுகின்றது.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது “அன்ஆம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளையும் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்

குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகு தான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலே, “யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆக மாட்டார்என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: பரா (ரலி), நூல்: புகாரி 955, 5556

இந்த ஹதீஸில் இருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டும் இன்றி ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய 11, 12, 13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். பெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத்  தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

“குர்பானி கொடுப்பதற்கான பிராணிகளை வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களில் இறைவனைத் துதிப்பார்கள்’ என்ற வாசகத்தைச் சிந்திக்கும் போது அறியப்பட்ட நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்பது தெரிகிறது. இன்னின்ன நாட்கள் என்று விளக்கத் தேவையில்லாத அளவுக்கு அனைவருக்கும் தெரிந்த நாட்களையே அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

ஹஜ்ஜின் கிரியைகள் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய மூன்று நாட்கள் வரை நீடிக்கும். பிறை 13 வரை ஹஜ்ஜின் கிரியைகள் உள்ளன. இது அனைத்து ஹாஜிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். எனவே அறியப்பட்ட நாட்கள் என்பது 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் தான். சாதாரண மக்களுக்கே தெரிந்த விஷயமாக உள்ளதால் தான் அல்லாஹ் அறியப்பட்ட நாட்கள் எனக் கூறுகிறான்.

எனவே இந்த வசனத்திலிருந்து பிறை 13 மக்ப் வரை குர்பானி கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அறுக்கும் முன்

குர்பானிப் பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள்.

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன், “ஆயிஷாவே! கத்தியை எடுத்து வாஎன்றார்கள். பின்னர் “அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்குஎன்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு, “இறைவா இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் ஏற்றுக் கொள்வாயாகஎனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: முஸ்லிம் 3637

முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்  என்று நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.

எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுக்க வேண்டும்.  அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

எத்தனை ஆடுகள்?

நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள இரண்டு கருப்பு, வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களின் பக்கம் சென்று தமது கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),  நூல்: புகாரி 5554

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆடுகள் குர்பானி கொடுத்து இருப்பதால் நாமும் இரண்டு ஆடுகள் கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இரண்டு ஆடுகள் கொடுத்த நபி (ஸல்) ஒன்று தமக்காகவும் மற்றொன்று தமது சமுதாயத்திற்காகவும் கொடுத்ததாக அவர்களே குறிப்பிட்டதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமுதாயத்திற்காக கொடுக்கின்ற பொறுப்பு நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இல்லாததால் நாம் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பது போதுமானதாகும்.

ஆபிது பின் ஹிப்ஸ் என்ற நபித் தோழர் தமது குடும்பத்தார் அனைவரின் சார்பாகவும் ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து இருக்கிறார் என்று புகாரியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் எத்தகைய நடை முறை இருந்தது என்பதைப் பின்வரும் செய்தியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது?” என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் “ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதா பின் யஸார்

நூற்கள்: திர்மிதீ 1425, இப்னு மாஜா 3137, முஅத்தா921

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்குத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி 1718

மாட்டையோ, ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டை அல்லது ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு, அல்லது ஓர் ஒட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 2323

எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல், விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் கொஞ்சமும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்

குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமான அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் 1719வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்று உள்ளது.

எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து, அறுத்து, பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி 1717

இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவருக்கு, உரிப்பவருக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின்  கட்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் “அவற்றை நீங்களும் உண்ணுங்கள்! வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்” என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். எவ்வளவு உண்ணலாம்; எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் நமக்கு நியாயம் என்று தோன்றுகின்ற அளவுக்கு நாம் எடுத்துக் கொண்டு, எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

சில இடங்களில் குர்பானி இறைச்சியை மூன்று பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானிப் பிராணிகள்

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுக்க வேண்டும். என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் ஏனோ தானோ என்று இருக்கக் கூடாது. மாறாக தரமுள்ளவையாக அவை இருக்க வேண்டும்.

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல. வெளிப்படையாகத் தெரியக் கூடிய குருட்டுத் தன்மை, வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாதுஎன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! கொம்பில் ஒரு குறை, பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லைஎன்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதேஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா (ரலி), நூல்: நஸயீ 4293

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

குர்பானிப் பிராணியின் வயது

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

இது பற்றி நமக்குக் கிடைத்துள்ள முக்கியமான ஹதீஸ்களைப் பார்ப்போம்.

நீங்கள் “முஸின்னத்தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள்! உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் “ஜத்அத்தை அறுங்கள்! என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 3631

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “யார் நமது தொழுகையைத் தொழுது விட்டுப் பலியிடுகிறாரோ அவர் தான் (குர்பானி எனும்) கடமையை நிறைவு செய்தவராவார். யார் தொழுகைக்கு முன் அறுக்கிறாரோ அவர் கிரியையைச் செய்தவராக மாட்டார்என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அபூ புர்தா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டேன். இது உண்ணுகின்ற பருகுகின்ற நாள் என்று விளங்கிக் கொண்டேன். எனது குடும்பத்தில் நான் அறுக்கும் ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் என்று விரும்பி தொழுகைக்கு வருவதற்கு முன்பே அறுத்து விட்டேன்எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமது ஆடு இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாகும் என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் “ஜத்அத்பருவத்தில் ஆட்டுக்குட்டி உள்ளது. இரண்டு ஆடுகளை விட அது எனக்கு விருப்பமானது. அதை அறுத்தால் போதுமா?” என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போதும். ஆனால் உம்மைத் தவிர வேறு யாருக்கும் இது போதுமாகாதுஎன்றார்கள்.

அறிவிப்பவர்: பரா (ரலி), நூல்: புகாரி 955

நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில் எனக்கு “ஜத்வுகிடைத்தது. “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஜத்வு தான் கிடைத்ததுஎன்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதைக் குர்பானி கொடுப்பீராக!என்றனர்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634

எந்த வயதுடைய பிராணியைக் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு இம் மூன்று ஹதீஸ்களில் போதுமான விளக்கம் கிடைக்கின்றது.

“முஸின்னத்’ எனும் பருவம் உடையதைக் குர்பானி கொடுக்குமாறு முதல் ஹதீஸ் கட்டளையிடுகிறது.

முஸின்னத் என்பது எத்தனை வயதுடைய பிராணி என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்தக் கருத்து வேறுபாடுகள் யாவும் அர்த்தமற்றதாகவே உள்ளன.

“முஸின்னத்’ என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை என்பது பொருள். அதாவது மனிதர்கள் வயதுக்கு வருவது போல், பருவமடைவது போல் கால்நடைகளும் குறிப்பிட்ட வயதில் பருவமடைகின்றன. இங்கே வயதை விட பருவமடைவது தான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மனிதர்களில் பெண்கள் பருவமடைவது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் 15 வயதில் பருவமடைவார்கள். சிலர் ஒன்பது வயதிலும் பருவமடைவதுண்டு. அவர்களது நாட்டில் நிலவும் தட்பவெப்பம், குடும்பப் பாரம்பரியம், உணவுப் பழக்கம், வசதி வறுமை போன்று எத்தனையோ காரணங்களால் இந்த வித்தியாசம் ஏற்படுகின்றன.

இது போன்ற வித்தியாசம் மனிதர்களைப் போலவே கால்நடைகளுக்கும் உள்ளது. காஷ்மீர் ஆடுகளும் தமிழகத்து ஆடுகளும் ஒரே வயதில் பருவமடையும் என்று கூறமுடியாது.

பெரும்பாலும் ஒட்டகம் ஆறு வயதில் பருவமடையும். மாடுகள் மூன்று வயதில் பருவமடையும். ஆடுகள் இரண்டு வயதில் பருவமடையும். இந்தப் பருவத்தில் உள்ள பிராணிகள் முஸின்னத் எனப்படும். இந்தக் கணக்கு உத்தேசமானது தான். இதில் பல காரணங்களால் வித்தியாசம் ஏற்படும்.

துணை தேடுவது, பற்கள் விழுதல் போன்றவற்றை வைத்து அதற்கான அறிவு உள்ளவர்கள் பருவமடைந்ததைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

முஸின்னத்தை குர்பானி கொடுங்கள் என்றால் பருவமடைந்ததைக் குர்பானி கொடுங்கள் என்பது பொருள். நமது நாட்டில் இத்துறையில் அனுபவமுள்ளவர்களிடம் கேட்டு வெள்ளாடு, செம்மறி ஆடு, மாடு ஆகியவை எத்தனை வருடம் எத்தனை மாதத்தில் பருவம் அடையும் என்று அறிந்து கொள்ளலாம்.

பவருமடைவதற்கு முந்தைய நிலையில் உள்ளது “ஜத்வு’ எனப்படும். அதாவது பல் விழும் பருவத்தில் உள்ளது என்பது பொருள். உறுதியான பற்கள் முளைப்பதற்காகப் பிறக்கும் போது  இருந்த பற்கள் விழுந்து விடும். அவ்வாறு பல் விழ ஆரம்பித்து விட்டால் அது ஜத்வு எனப்படும். இதுவும் ஆடு, மாடு, ஒட்டகங்களுக்கு வித்தியாசப்படும். நாட்டுக்கு நாடு மாறுபடும்.

பல் விழுந்து விட்டதா என்று பார்த்து அறிந்து கொள்ளலாம். அல்லது விசாரித்து அறிந்து கொள்ளலாம். ஏறத்தாழ ஒரு வயதில் பல் விழக்கூடும்.

முதல் ஹதீஸில் பருவம் அடைந்ததைக் குர்பானி கொடுக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சிரமமாக இருந்தால் அதற்கு அடுத்த நிலையில் உள்ளதைக் கொடுக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

இரண்டாவது ஹதீஸில் பல்விழும் பருவத்தில் உள்ளது உனக்கு மட்டும் தான். மற்றவருக்குப் போதாது என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். இது முந்திய ஹதீஸின் கருத்துக்கு எதிரானது போல தோன்றுகிறது.

சக்தி இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் “ஜத்வு’ கொடுக்கலாம் என்று முதல் ஹதீஸும், அந்த நபித் தோழரைத் தவிர வேறு எவரும் கொடுக்கக் கூடாது என்று இரண்டாவது ஹதீஸும் கூறுகிறது.

மூன்றாவது ஹதீஸில் உக்பா என்ற மற்றொரு நபித்தோழருக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உம்மைத் தவிர வேறு யாருக்கும் இந்த அனுமதி கிடையாது என்ற ஹதீஸுடன் இதுவும் முரண்படுகிறது.

இரண்டாவது ஹதீஸை சிறந்தது என்ற அடிப்படையில் கூறியதாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். சட்டம் தெரியாத நிலையில் நீர் முன்பே அறுத்து விட்டதால் இப்போது “ஜத்வு’ கொடுத்தாலும் முஸின்னத்தின் நன்மை கிடைக்கும். மற்றவர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது. ஜத்வு கொடுத்தால் ஜத்வு கொடுத்த நன்மை தான் கிடைக்கும் என்று புரிந்து கொண்டால் ஹதீஸ்களுக்கிடையே முரண்பாடு ஏதுமில்லை.

இயன்ற வரை பருவமடைந்ததைக் கொடுக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால் அல்லது சக்தி இல்லாவிட்டால் குறைந்த பட்சம் பல் விழுந்த ஆட்டையேனும் கொடுக்க வேண்டும். இவ்வாறு புரிந்து கொண்டால் முரண்பாடு இல்லை.

கிடாயும் பெட்டையும்

பெட்டை ஆடுகளையும், கிடாய்களையும் முஸ்லிம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சில பகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போலவும் கருதுகின்றனர்.

சாதாரணமான நேரத்திலேயே பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள், குர்பானி கொடுப்பதற்குப் பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர். பெட்டை ஆடுகளைக் குர்பானி கொடுக்கக் கூடிய ஒருவரைக் கூட தமிழகத்தில் காண முடியாது.

இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதில் கிடாயும் ஆடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவை தான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும். பறவையினங்களில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர்.

குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும் தான் தகுதியானது என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை. நபிகள்  நாயகத்தின் பொன் மொழிகளிலும் கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் குர்பானி பற்றிக் கூறும் போது ஜத்வு என்று ஆண்பாலில் கூறப்பட்டுள்ளது போலவே ஜத்அத் என்று பெண்பாலிலும் கூறப்பட்டுள்ளது. முஸின் என்று ஆண் பாலாகவும் முஸின்னத் என்று பெண் பாலாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே ஆண் கால்நடைகளைத் தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை

ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக்கூடாது, முடிகளை நீக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். 

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: நஸயீ 4285

தாமே அறுக்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது தமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

பொது நிதியிலிருந்து குர்பானி கொடுத்தல்

வசதியுள்ளவர்கள் மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாட்டை நபி (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்தியிருந்தார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக் கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடக் கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார முன்னேற்றத்தை எட்டியது.

இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி கொடுக்க விரும்புகிறவர்களுக்கு குர்பானி பிராணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி தான் கிடைத்தது. “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆறு மாதக் குட்டி தானே  கிடைத்துள்ளதுஎனக் கூறினேன். “அதையே நீர் குர்பானி கொடுப்பீராக!என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்கள்: புகாரி 5547, முஸ்லிம் 3634

பொது நிதியிலிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

————————————————————————————————————————————————

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று இமயமாய், விண்ணைத் தொடும் சிகரமாய் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இயக்கத்தில் கோபுரம்; கொள்கையில் குப்பை மேடு என்ற நிலையில் இந்த இயக்கத்திலுள்ள உறுப்பினர்கள் ஆகி விடக் கூடாது. கொள்கையிலும் கோபுரமாக இருக்க வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கிறேன் என்று சொல்கின்ற ஒருவர் தனது கையில் தாயத்து கட்டியிருந்தால் (அப்படி யாரும் கட்டுவதில்லை) அவர் ஏதோ அரசியல் கட்சியில் இருப்பது போன்று நினைத்துக் கொண்டு இந்த இயக்கத்தில் இருக்கிறார்; கொள்கையளவில் இல்லை என்று தான் அர்த்தம்.

ஒரு காலத்தில் குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கும், செயல்படுவதற்கும் பிறந்த இயக்கம் தான் அஹ்லே ஹதீஸ் என்ற இயக்கம். இன்று அந்த இயக்கத்தவர் தங்கள் கைகளிலும் கழுத்துக்களிலும் தாயத்தைக் கட்டிக் கொண்டு திரிகின்றனர். கேட்டால் பெரியவர்கள் செய்தார்கள் என்ற மவ்ட்டீக வாதத்தைப் பதிலாகத் தருகின்றனர். அவர்கள் இந்த நிலையை அடையக் காரணம், தங்கள் கொள்கையைப் பின்பற்றாதது தான்.

எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கத்தில் இருப்பவர்கள் அது போன்ற ஒரு நிலையை அடைந்து விடாதிருக்க ஒவ்வொரு விஷயத்திலும் இவ்வியக்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றைத் தங்களின் முழு வாழ்க்கையிலும் கடைப் பிடிக்க வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சாராதவர்கள், தங்களுக்கென்று எந்தவொரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர், திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டால், அதில் கலந்து கொள்ளலாமா? அது வரதட்சணை வாங்கி நடத்தப்பட்ட திருமணம் ஆயிற்றே! அத்திருமணத்தில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்கள் நடந்தனவே! என்றெல்லாம் கேள்விகளுக்கு அவர் இடம் கொடுக்க மாட்டார். எந்தவிதத் தடங்கலோ, தயக்கமோ இன்றி அந்த விருந்தில் போய் கலந்து கொள்வார்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் அப்படிப் போய் கலந்து கொள்ள முடியாது; கலந்து கொள்ள மாட்டார். காரணம், தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற விஷயங்களில் தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை வகுத்துக் கொண்டது தான்.

மார்க்க நிலைப்பாடே இயக்க நிலைப்பாடு

வரதட்சணை வாங்கும் திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறி தனது உறுப்பினருக்கு இந்த ஜமாஅத் வழிகாட்டுவது போன்று, ஒருவர் தனது திருமணத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் ஒரு நிலைப்பாட்டைக் கூறி வழிகாட்டுகின்றது.

நிலைப்பாடு என்று குறிப்பிடும் போது தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்கள் மனோ இச்சைப்படி உருவாக்கிக் கொண்ட, சொந்தமாகத் தயாரித்துக் கொண்ட ஒரு நிலைப்பாடு என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. மார்க்கம் என்ன சொல்கின்றதோ அந்தச் சட்டங்களைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடாகக் கொண்டுள்ளது.

  1. மணப் பெண் தேர்வு

இணை கற்பிக்கும் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் தடை செய்துள்ளான்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

ஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட இளைஞர்களில் சிலர் பக்கா தர்ஹா வழிபாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த மணமகளைத் திருமணம் முடிக்கின்றனர். அதிலும் குராபி மதரஸாக்களில் படித்து ஆலிமா பட்டம் பெற்ற பெண்ணைத் திருமணம் முடிக்கின்றனர். இதற்கு இவர்கள் குறிப்பிடுகின்ற ஒரே காரணம், அந்தப் பெண் தனது மாமன் மகள், மாமி மகள் என்ற உறவு முறையைத் தான். திருமணத்திற்குப் பிறகு அவளைத் தவ்ஹீதுக்குக் கொண்டு வந்து விடுவேன் என்றும் கூறுகின்றனர்.

இந்த நொண்டிச் சாக்கிற்கும் நோஞ்சான் சமாதானத்திற்கும் அல்லாஹ்வே விளக்கம் தருகிறான்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

நீண்ட காலமாகப் பழகி, நெருக்கமாக வாழ்ந்த இவ்விரு இறைத் தூதர்களே தங்கள் மனைவிமார்களை ஏகத்துவத்திற்குக் கொண்டு வர முடியவில்லை எனும் போது, நேற்று தவ்ஹீதுக்கு வந்த நாம், இன்று ஒரு முஷ்ரிக்கான பெண்ணை மணமுடித்து, நாளை தவ்ஹீதுக்குக் கொண்டு வந்து விடுவேன் என்று சொல்வது எவ்வாறு பொருத்தமான பதிலாக அமையும்?

இணை வைப்பில் உள்ள அந்தப் பெண் நாளை தவ்ஹீதுக்கு வந்து விடுவாள் என்பது என்ன நிச்சயம்? அவள் தவ்ஹீதுக்கு வந்து விடுவாள் என்ற ஞானம் நம்மில் யாருக்கு இருக்கிறது? இது அடுத்து எழக்கூடிய கேள்வியாகும்.

திருமணம் முடித்துக் கொஞ்ச நாட்களில் இந்தப் பெண் கருவுற்ற நிலையில் அவளை மணமுடித்த ஏகத்துவவாதி இறந்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். பிறக்கும் அந்தக் குழந்தை தர்ஹா வழிபாட்டிலேயே வளர்க்கப்படும். காரணம், பெண்ணுடைய குடும்பமே தர்ஹா வழித்தோன்றல்கள், தர்ஹா வழிபாட்டு மையம்!

நாமும் நமது சந்ததியினரும் நரகத்தில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் தவ்ஹீது ஜமாஅத்தில் இணைந்தோம். இந்த அடிப்படை நோக்கமே இப்போது அடிபட்டு, நம்முடைய சந்ததியை நாமே நரகத்தில் கொண்டு போய் தள்ளும் நிலைக்கு ஆக்கி விடுகின்றோம். எனவே ஓர் ஏகத்துவக் கொள்கைவாதி ஒருபோதும் இணை வைக்கும் பெண்ணைத் திருமணம் முடிக்கக் கூடாது.

  1. திருமண உரை

ஒரு காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் பலரும் நீண்ட நெடிய தூரம் பயணம் மேற்கொண்டு, கொள்கைச் சகோதரர்களின் திருமணங்களில் போய் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்கள். இதற்குக் காரணம் அந்தக் காலத்தில் ஏகத்துவத்தைச் சொல்வதற்கு திருமணத்தின் மூலமாகவாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ஆர்வம் தான். ஆனால் இப்போது அவர்கள் யாரும் இது போன்று கலந்து கொள்வதில்லை. மாநில தாயீக்களும் கலந்து கொள்வதில்லை. இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமண சபை என்று ஒன்று கூடி, அந்தச் சபையில் நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்டதாகப் பார்க்க முடியவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், மதீனாவுக்கு வந்த போது, அவர்களையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி) அவர்கள் வசதி படைத்தவராக இருந்தார்கள். அவர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களிடம், “எனது செல்வத்தைச் சரிபாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன்; (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், “உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் வளம் (பரக்கத்) புரிவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்!எனக் கூறினார்கள். அவர்கள் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, தாம் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார்கள். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் “என்ன விசேஷம்?” எனக் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ன்ணை மணமுடித்துக்கொண்டேன்!என்றார்கள். நபி (ஸல்) “அவருக்கு என்ன மணக்கொடை (மஹ்ர்) கொடுத்தீர்?” எனக் கேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!என அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு, “ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2048, 2049

திருமணத்திற்கென்று ஒரு தாயீ வர வேண்டும் என்பது அவசியமில்லை. அப்படியானால் திருமண உரை?

திருமணத்தின் போது உரை நிகழ்த்தியாக வேண்டும் என்பது கட்டாயமல்ல! ஜும்ஆ, பெருநாள் போன்ற வணக்கங்களுடன் சேர்ந்து அமைந்துள்ள உரைகளைத் தவிர மற்ற இடங்களில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் உரைகள் எங்கும் அமையலாம். தேவை அதைத் தீர்மானிக்கும்.

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடைஅல்லது “நீளங்கிஅணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம்.

அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிமாறி விட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒரு உயிரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்எனும் (4:1) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்!எனும் (59:18) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு “ஸாஉகோதுமை, ஒரு “ஸாஉபேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்என்று வலியுறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1848

வறுமையில் வாடும் ஒரு கூட்டத்தினரைப் பார்த்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் தர்மத்தை வலியுறுத்தி உரை நிகழ்த்துகின்றார்கள். இது போன்று தான் திருமண உரையும்! திருமண ஒப்பந்தத்தின் போது வந்திருக்கும் மணமக்கள், அவர்களது பொறுப்பாளர்கள், சாட்சிகள் முன்னிலையில் இறையச்சத்தை ஊட்டுகின்ற ஓர் உரை! அதுவும் கட்டாயமில்லை என்ற அளவுக்குத் தான் திருமண உரை என்பது அமைந்துள்ளது.

திருமண உரை இந்த அளவுக்குத் தான் எனும் போது நாம் ஏன் திருமணத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரள்கிறோம் என்ற கேள்வி எழலாம்.

திருமண அவையில் இவ்வளவு பேர்கள் கூடுவதற்கு ஓர் அடிப்படைக் காரணம் இருக்கின்றது. நம்முடைய தவ்ஹீது சகோதரர்களின் திருமணத்தின் போது தான் சுன்னத் ஜமாஅத்தினர் எனப்படும் ஊர் ஜமாஅத்தினர் தங்கள் கெடுபிடிகளை, காட்டு தர்பார்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

திருமணப் பதிவேடு தர மாட்டோம்; திருமணத்தில் கலந்து கொள்ளும் மக்களை ஊர் நீக்கம் செய்வோம் என்று ஜமாஅத்தினர் மிரட்டல் விட்டனர். இந்த எதிர்ப்பலைகளால் நாம் ஒரு பெருங்கூட்டத்துடன் அவையில் கலந்து கொள்வது கட்டாயமாகி விடுகின்றது.

ஏகத்துவம் எங்கெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கின்றதோ அங்கெல்லாம் இத்தகைய பிரச்சனைகள் இன்னும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படி மக்கள் குழுமுகின்ற இடங்களில் இவ்வாறு ஒரு சொற்பொழிவு நடைபெறுகின்றது. இத்தகைய திருமணங்களில் நம்முடைய தாயீக்கள் கலந்து கொள்கின்றனர்.

இது போன்ற கட்டங்களில் நம்முடைய தாயீக்கள், “திருமணத்திற்காக ஒரு மார்க்க அறிஞர் அல்லது பேச்சாளர் வந்து கலந்து கொண்டு உரை நிகழத்தினால் தான் திருமணம் என்பது கிடையாது” என்று பகிரங்கமாக உணர்த்துவதற்குத் தவறுவதில்லை.

இந்த வழக்கத்தை நியாயப்படுத்துவதில்லை. ஏகத்துவம் வளர்ந்த ஊர்களில் இப்போது இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதும் மாறி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள், உரை நிகழ்த்தினால் தான் திருணமம் நிறைவேறும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இறைவன் நாடினால் அடுத்த இதழில்…

————————————————————————————————————————————————

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை?

ஹஜ் விளக்க வகுப்பு நடத்துகிறோம் என்ற பெயரில் குறைக்குட ஆலிம்கள் குப்பைகளையும், கூளங்களையும் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் சென்னையில் ஒரு மவ்லவி வெளிப்படுத்திய அறியாமையைப் பாருங்கள்! ஹஜ்ஜிற்கு வந்திருக்கும் ஒரு பெண், பயண தவாஃப் செய்யத் தவறி விட்டால் அவருடன் அவளது கணவன் ஓராண்டு காலம் உடலுறவு கொள்ளக் கூடாது என்று வி”ல’க்கம் சொல்லியிருக்கிறார்.

எப்படியெல்லாம் மார்க்கச் சட்டம் சொல்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! இப்படித் தப்பும் தவறுமாக ஹஜ் விளக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் செலவளித்து ஹஜ் செய்யும் மக்களின் ஹஜ்ஜைக் கெடுப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு படையே கிளம்பியிருக்கிறது.

இன்னொருவர் ஹஜ் வகுப்பு நடத்தும் போது, “ஹஜ்ஜுக்குச் செல்லாத மக்கள் தங்கள் துஆக்களை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி என்னிடத்தில் தந்து விடுங்கள். நான் ஹரமில் அவற்றைக் கொண்டு போய் போட்ட பிறகு நீங்கள் அந்த துஆவை இங்கிருந்து கொண்டே கேளுங்கள்” என்று கூறியுள்ளார். அதாவது துஆவை கார்கோவில் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இவர்கள் மார்க்கத்தை எந்த அளவுக்குக் கேலிக் கூத்தாக்கியுள்ளனர் என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு.

இன்னொரு மவ்லவி அடித்த கூத்தைக் கேளுங்கள்.

“மாநபி (ஸல்) மற்றும் அவர்களது தோழர்களின் மலர்ப் பாதங்கள் பட்ட இடம் தான் மதீனா! அந்த மதீனாவின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் அங்கு செல்கின்ற மகான்கள் தங்கள் கால்களுக்குச் செருப்பு போடுவது கிடையாது”

இதுவும் மூளையை அடகு வைத்த ஒரு மவ்லவி, ஹஜ் வகுப்பில் தெரிவித்த கருத்துத் தான்.

அரபகத்தின் வெயிலும் கடுமை! பனியும் கடுமை! அங்கெல்லாம் செருப்புப் போடாமல் கொஞ்சம் கூட நடக்க முடியாது. கோடைக் காலமாக இருந்தால் கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டு வெடித்து விடும். அந்த அளவுக்கு அரபகத்தின் வெயில் அகோரமானது. வெப்ப மழை பொழியும் அந்த மதீனாவில் தான் மக்களை செருப்பில்லாமல் நடக்கச் சொல்கிறார்கள் இந்த மவ்ட்டீக மவ்லவிகள்.

மதீனாவில் மலஜலம் கழிக்கலாமா?

மதீனாவில் செருப்புப் போடாமல் நடந்து விடலாம் என்று வைத்துக் கொள்வோம். அங்கு மலஜலம் கழிக்கலாமா? செருப்பை விட மிகவும் அசிங்கமும், அசுத்தமும் மதீனாவில் மலஜலம் கழிப்பது தான். இதற்கு மவ்ட்டீக மவ்லவிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மதீனாவிலிருந்து திரும்பும் வரை அந்தப் புனித ஹஜ் பயணிகளுக்கு பைகள் எதுவும் இவர்கள் சப்ளை செய்வார்களா? அல்லது நாப்கின் வாங்கிக் கொடுக்கப் போகிறார்களா?

இவர்களிடம் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கலாம். மதீனாவில் இல்லறத்தில் ஈடுபடலாமா? என்பது தான் அந்தக் கேள்வி. ஏனெனில், செருப்பு அணிவதை விட, மலஜலம் கழிப்பதை விட இது சற்றுக் கூடுதலான புனிதக் கேடாயிற்றே!

நபித்தோழர்கள் ஹஜ் மட்டும் செய்வதற்காக இஹ்ராம் கட்டி வருகிறார்கள். மக்கா வந்ததும், “உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமைக் களைந்து விடுங்கள்; பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். இதற்கிடைய தாம்பத்தியம் உள்ளிட்ட அத்தனையும் அனுமதி’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இது நபித்தோழர்களுக்குச் சங்கடத்தை அளிக்கின்றது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே கூறியதாவது:

(விடைபெறும் ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்து சேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து விடும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி (ஸல்) அவர்கள், “இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்என்று சொன்னார்கள். ஆனால், அதைக் கட்டாயமாக் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். “நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவுகொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?” என்று நாங்கள் பேசிக்கொள்வதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனது குர்பானிப் பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். ஆகவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்க மாட்டேன்என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி (ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.

நூல்: புகாரி 7367

புனித நகரில் தாம்பத்தியமே அனுமதிக்கப்படும் போது செருப்பு அணிவதால் என்ன குடிமுழுகிப் போய் விடும்?

இந்த அறியாமைச் சின்னங்கள் இதற்கெல்லாம் ஒரு பதிலும் தர மாட்டார்கள். இந்தக் கேள்விகளை எழுப்புவதற்குக் காரணம், இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று அடையாளம் காட்டுவதற்காகத் தான்.

இவர்களுடைய இந்தச் சிந்தனை காவிச் சிந்தனையாகும். இந்து மதத்தில் தான் செருப்பு போடுவது புனிதத்திற்கு எதிரானது. அதனால் தான் அவர்கள் சபரி மலைக்கு மாலை கட்டிச் செல்லும் போது காலுக்குச் செருப்பு அணிய மாட்டார்கள். பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று பாட்டும் பாடிக் கொள்வார்கள். புனிதத் தலங்களிலும், புனிதத் தலங்களுக்கு மேற்கொள்ளும் பயணங்களிலும் அவர்கள் கால்களுக்கு செருப்பணிவது கிடையாது. யூத மதத்திலும் இந்த நிலை தான்.

செருப்பு அணியும் விஷயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாட்டைத் தெரியாததால் இந்த மவ்லவிகள் இவ்வாறு உளறிக் கொட்டுகின்றனர்.

வணக்க வழிபாடுகளிலும் செருப்பு, ஷூ அணிவதை இஸ்லாமிய மார்க்கம் தடை செய்யவில்லை.

ஹஜ் பயணத்தில் செருப்பு

ஹஜ் பயணத்தின் போது ஆண்கள் தையல் ஆடைகளை அணியக் கூடாது என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. ஆனால் செருப்பு அணிவதை இஸ்லாம் தடை செய்யவில்லை; வரவேற்கின்றது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்), (சாயம் எடுக்கப் பயன்படும்) வர்ஸ் எனும் செடியினால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. காலணிகள் கிடைக்காவிட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி (செய்ய அதற்கு மேலிருப்பவற்றை) வெட்டி விட வேண்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 134

மக்கா என்பது ஒரு புனித நகரம்! ஹஜ் என்பது ஒரு புனித வணக்கம்! அந்தப் புனித பூமியில் புனித மிகு வணக்கத்தில் செருப்பு போடுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏழு வருடம் படித்தோம் என்று ஜம்பம் பேசுகின்ற ஆலிம்களுக்கு இந்த விபரம் தெரியவில்லை.

தொழுகையில் செருப்பு

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கால்களில் செருப்பணிந்து கொண்டே தொழுதிருக்கின்றார்கள்.

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர் களிடம் “நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ

நூல்: புகாரி 386

காலணி அணியுமாறு கட்டளை

யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் செருப்புகள் மற்றும் ஷுக்கள் அணிந்து தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்என தன் தந்தை வழியாக யஃலா பின் ஷத்தாத் பின் அவ்ஸ் அறிவிக்கின்றார்.

நூல்: அபூதாவூத் 651

செருப்பில் அசிங்கமிருந்தாலும் இப்படித் தொழ வேண்டும் என்று யாரும் விளங்க மாட்டார்கள். வெறுங்காலுடன் தொழும் போது அசுத்தத்துடன் தொழ மாட்டோமோ அதுபோல் தான் செருப்புடன் தொழும் போது அசுத்தமில்லாமல் தொழ வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு தொழுவித்துக் கொண்டிருக்கும் போது திடீரெனத் தமது இரு செருப்புகளையும் கழற்றி தமது இடப்புறம் வைத்தார்கள். இதைப் பார்த்த மக்களும் தங்களுடைய செருப்புகளை கழற்றி விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களது செருப்புகளை கழற்றியதற்கு என்ன காரணம்?” என்று கேட்டபோது, “நீங்கள் உங்கள் செருப்புகளை கழற்றக் கண்டோம். அதனால் நாங்களும் எங்கள் செருப்புகளை கழற்றி விட்டோம்என்று பதில் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னிடம் ஜிப்ரயீல் (அலை) வந்து அந்த இரு செருப்புகளிலும் அசுத்தம் இருப்பதாக எனக்கு அறிவித்தார்கள்.  (அதனால் நான் கழற்றினேன்)என்று விளக்கமளித்தார்கள்.  “உங்களில் ஒருவர் பள்ளிக்கு வரும்போது தன்னுடைய இரு செருப்புகளிலும் நரகலோ அல்லது அசுத்தமோ இருப்பதை கண்டால் அதை (தரையில்) தேய்த்து விட்டு அவ்விரு செருப்புகளை அணிந்து கொண்டு தொழுவாராக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி (ரலி)

நூல்: அபூதாவூத் 650

இன்றைய பள்ளிவாசல்கள் சலவைக் கற்கள், கம்பளம் மற்றும் பாய் விரிப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக செருப்புக்களை பள்ளிக்கு வெளியே விட்டுச் செல்கிறோம். இப்படியே பழகி விட்டோம். அதனால் செருப்புப் போட்டுத் தொழலாம் என்றதும் நமக்கு அது புதுமையாகத் தெரிகின்றது.

வெறுங்கால்களுடன் மக்கள் இப்படித் தொழுது கொண்டிருப்பதால் மார்க்கத்தில் செருப்பணிதல் கூடாது என்று இந்த மவ்லவிகள் விளங்கி வைத்திருக்கின்றனர். பிற மதத்துச் சிந்தனையை அப்படியே இவர்கள் பிரதிபலிக்கின்றனர்.

காலுறையில் மஸஹ்

இஸ்லாமிய மார்க்கம் மிக எளிமையானது. அதனால் அதன் சட்டங்கள் ஊரில் இருப்பவருக்கு எளிதாக அமைந்திருப்பது போல் பயணிகளுக்கும் அது மிக எளிதாக அமைந்திருக்கின்றது. ஊரில் இருப்பவரும் பயணியும் காலில் ஷூ அணிவர். இவ்வாறு ஷூ அணிபவருக்கு இஸ்லாம் சில சலுகைகளை வழங்குகின்றது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக்கையால் தடவி) தமது காலுறைகள் மீது மஸ்ஹுச் செய்தார்கள். பிறகு (காலுறைகளுடனேயே) எழுந்து தொழுவதை நான் கண்டேன். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் அல்ஹாரிஸ்

நூல்: புகாரி 387

உளூச் செய்யும் போது ஷூவைக் கழற்றி மாட்டுவது மிகச் சிரமம். அதனால் மார்க்கம் இப்படி ஒரு சலுகையை வழங்குகின்றது. இந்தச் சலுகை ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளைக்கு என்றால் பயணிகளுக்கு மூன்று நாட்கள் என்று நீட்டித்து வழங்குகின்றது.

காலுறைகளை மஸஹ் செய்யும் காலம் பயணிக்கும் மூன்று நாட்களாகும்.  உள்ளூர் வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: குஸைமா பின் ஸாபித் (ரலி)

நூல்: அபூதாவூத் 157

கடுமையான குளிரின் போது தான் ஷூ அணிவதன் அவசியத்தை மனிதன் உணர முடியும். எனவே அதற்கேற்றவாறு சலுகை அளித்து, ஆர்வமூட்டுவதிலிருந்து ஷூ அணிவதற்கு மார்க்கம் வழங்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

செருப்பு வார் உதாரணம்

நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக் கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

உடலுக்கு எப்படி உடை அவசியமோ அதுபோன்று காலுக்குச் செருப்பு அமைந்திருக்கின்றது. நபித்தோழர்கள், நபியவர்களிடம் கேட்கும் வினாவிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, “மரணம் தனது செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப்பொழுதை அடைகிறான்!என்ற கவிதையைக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1889

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் உங்களின் செருப்பு வாரை விட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப் போன்றே (மிக அருகில் உள்ளது).

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 6488

இந்த உவமைகளின் மூலம் செருப்புக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.

செருப்பணியும் முன்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனைத்திற்கும் ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அதனால் உணவு உண்ணும் முறை, நீர் பருகும் முறை என அனைத்திற்கும் ஒரு வழிகாட்டலை வழங்கியிருக்கிறார்கள். அதுபோன்று செருப்பு அணிவதற்கும் வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும், அவர்கள் தலை வாரிக் கொள்ளும் போதும், காலணி அணியும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 395

செருப்பு வார் அறுந்து விட்டால்…

செருப்பு வார் அறுந்து விட்டால் ஒரு செருப்பில் நடக்கக் கூடாது என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதைச் சீராக்காத வரை மற்றொரு செருப்பில் நடந்து செல்ல வேண்டாம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3917

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேர கழற்றி விடட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3915

இவ்வாறு செருப்பணியும் விஷயத்தில் பேண வேண்டிய ஒழுங்குகளை, நடைமுறைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள். செருப்பணிவதற்கு மார்க்கம் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதற்கு இது சிறந்த ஆதாரமாகும்.

சுவனத்தில் செருப்பு

செருப்பின் சிறப்பு இந்த உலக மட்டில் நிற்கவில்லை. நாளை சுவனத்திலும் கூடவே வருகின்றது. அந்த அளவுக்கு மனித வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது.

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் அங்கசுத்தி (உளூ) செய்தாலும் அந்த அங்க சுத்திக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத் தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1149

நரகத்திலும் செருப்பு

சுவனத்தில் உள்ளவர்களுக்கு ஆடைகள் வழங்கப்படுவது போல் நரகத்தில் உள்ளவர்களுக்கும் ஆடைகள் வழங்கப்படுகின்றன. அங்கும் செருப்பு வழங்கப்படுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 311

மனிதனுக்கும் செருப்புக்கும் உள்ள உறவு மறுமை வரை தொடர்கின்றது என்பதற்கு இந்த ஹதீஸ்கள் எடுத்துக்காட்டு.

செவியில் விழும் செருப்போசை

மனிதன் இறந்ததும் கப்ரில் வைக்கப்படுகின்றான். அவன் அடக்கம் செய்யப்பட்டதும் அவனுக்கு உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் லிபற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்என்பார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1338

ஒரு மனிதனை இறுதிப் பயணம் அனுப்புகின்ற போது மக்கள் செருப்பணிந்து வருகின்றார்கள். இப்படி மனிதனுடைய காலை ஆக்கிரமித்து, அவனை அரவணைத்து, அவனிடம் தேய்ந்து கொண்டிருக்கின்றது.

இப்படிக் காலடியில் கிடந்து தேய்ந்து, காலுக்குக் காவலனாய், காலந்தோறும் நம்முடைய நண்பனாய் உதவுகின்ற இந்த செருப்பைத் தான் இந்த உலமாக்கள் உதறி வீசச் சொல்கின்றார்கள். நாம் பிறந்து நடை பயில ஆரம்பித்த நாளிலிருந்து கூடவே வரும் கூட்டணியாக செருப்பு இருப்பதால் தான் மறுமையிலும் செருப்புடன் எழுப்பப்படுவோம் என்று எண்ணி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாண மானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்” (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3349

செருப்பு இப்படி ஒரு இடத்தை மனிதனிடம், குறிப்பாக முஸ்லிம்களிடம் பெற்றிருக்கின்றது.

செருப்பு ஓர் அவமரியாதைச் சின்னம் என்பது மாற்றுமதக் கலாச்சாரமாகும். அந்தக் கலாச்சாரத்தைத் தான் இந்த முல்லாக்கள் மார்க்கத்தில் திணிக்க நினைக்கின்றனர். அதன்படித் தான் மதீனாவில் ம(ô)கான்கள் செருப்பில்லாமல் நடந்தார்கள்; நீங்களும் அதுபோன்று செருப்பணியாமல் நடங்கள் என்று தப்புப் பிரச்சாரத்தைச் செய்கின்றார்கள்.

இவ்வாறு இவர்களை நாம் விமர்சனம் செய்யும் போது தங்களுக்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தைக் காண்பிப்பார்கள்.

நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் “துவாஎனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

அல்குர்ஆன் 20:12

இதற்கு நாம் ஏற்கனவே பார்த்த அபூதாவூத் ஹதீஸ் சரியான பதிலாக அமைகின்றது.

யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் செருப்புகள் மற்றும் ஷுக்கள் அணிந்து தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்என தன் தந்தை வழியாக யஃலா பின் ஷத்தாத் பின் அவ்ஸ் அறிவிக்கின்றார்.

நூல்: அபூதாவூத் 651

இந்த அடிப்படையில் தான் யூதர்கள் தங்கள் வணக்க வழிபாடுகளில் செருப்புகளைத் தவிர்க்கிறார்கள் போலும். இந்த வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மாற்றி விடுகின்றார்கள்.

மற்ற நபிமார்களின் வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் மாற்றாத வரை நாம் பின்பற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம். நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டால் அந்த வழிமுறையை நாம் பின்பற்ற முடியாது. இது ஒரு பொதுவான அடிப்படை. எனவே மூஸா நபியின் இந்த வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத, ஏவாத காரியங்களை இவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஹஜ் என்ற பெயரில், ஹஜ் செய்யச் செல்வோரிடம் எடுத்துச் சொல்லி அவர்களது ஹஜ் வணக்கத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத காரியங்களைச் செய்து, ஹஜ் எனும் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள் என்று ஹாஜிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.