ஏகத்துவம் – மே 2018

கொள்கைக்காக வாழ்வோம்

சத்தியத்தைச் சொல்லி சமுதாய மக்களை நரகில் இருந்து காப்பதற்காகவும் அவர்களை அசத்தியத்திலிருந்து மீட்பதற்காகவும் உருவாக்கப் பட்டது தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு  மத்தியில் ஒரு கோடும் அதன் வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளையும் போட்டுக் காட்டி, ‘‘இது அல்லாஹ்வின் பாதை! மற்றவை பல தரப்பட்ட பாதைகள்! அவற்றின் ஒவ்வொரு பாதையிலும் ஷைத்தான் நின்று தன் பக்கம் அழைக்கின்றான்’’ என்று கூறி, பின்னர் 6:153 வசனத்தை ஓதினார்கள்

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

நூல்கள்: சுனன் தாரமீ 204, அஹ்மத் 3928

இந்த ஹதீஸுக்குத் தக்க, பின்வரும் உதாரணத்தைக் கூறலாம்.

இந்த ஜமாஅத் என்பது ஒரு வாகனம்!  குர்ஆன், ஹதீஸ் தான் நாம் செல்கின்ற சாலை அல்லது வழித்தடம். சுவனம் என்பது நாம் போய்ச் சேரவிருக்கின்ற சொந்த ஊர் அல்லது இலக்கு.

அந்த இலக்கை நோக்கித் தான் இந்த ஜமாஅத் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்தப் பாதையில் பயணம் செய்வது சாதாரண காரியமல்ல. அதில் பல எதிர்ப்புகளையும் இன்னல்களையும் சந்திக்க நேரிடும். அப்போது அது இடையில் பாதியாக நின்று விடக்கூடாது,

‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குப் பின்னர் நான் யாரிடத்திலும் கேட்காத அளவுக்கு ஓர் அறிவுரையை எனக்கு இஸ்லாத்தில் கூறுங்கள்’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நம்பிக்கை கொண்டேன் என்று கூறி உறுதியாக நில்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி)

நூல்: முஸ்லிம் 55

இந்த ஹதீஸுக்கு ஏற்ப இந்த ஜமாஅத் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது பாதையில் உறுதியாகப் பயணம் செய்து கொண்டிருக்கின்றது.  இந்த உறுதிமிக்க பயணத்தில் தன்னை எந்தெந்த விஷயங்கள் தடமாற்றம் செய்து விடுமோ அவற்றையெல்லாம் அடையாளம் கண்டு, அவற்றை இந்த ஜமாஅத் அவ்வப்போது களைந்தெடுத்து வருகின்றது.  அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.

தேர்தல் ஆதரவுப் பிரச்சாரம்

இட ஓதுக்கீடு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பதினைந்து ஆண்டுகள் அதிமுக, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு நமது ஜமாஅத் தேர்தலில் ஆதரவு அளித்ததுடன் மட்டுமல்லாது தேர்தல் பிரச்சாரமும் செய்து களப்பணி ஆற்றியது. தேர்தல் பிரச்சாரம் துவங்கியது முதல் வாக்கு எண்ணி முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்கின்ற வரை அரசியல் கட்சிக்காரர்களை மிஞ்சிய உழைப்பை நமது கொள்கைச் சகோதரர்கள் செய்தனர்.

ஆனால் அது நெருப்பு மேல் நடப்பதாகவே இருந்தது. அதன் அபாயத்தையும், ஆபத்தையும் உணர்ந்து, இட ஓதுக்கீடு என்ற லட்சியப் பயணத்திற்காக இறுதி இலக்கான ஏகத்துவத்தைப் பணயம் வைத்து விடக் கூடாது என்ற தூய எண்ணத்தில் அதிலிருந்து விலகி விட்டோம்.

திருமண நிலைபாடு

திருமணத்தின் போது வரதட்சணை இல்லாமல் திருமணம் முடித்துக் கொண்டிருந்தோம். பெண் வீட்டில் எந்தக் கோரிக்கையையும் வைப்பதில்லை. இவ்வளவு நகை என்று நிர்பந்திப்பதில்லை. அதே சமயம், பெண் வீட்டு விருந்தைக் கண்டு கொள்ளாமல் இருந்தோம். எதையும் மார்க்க அடிப்படையில் நூல் பிடித்த மாதிரி பார்த்துச் செய்யும் நாம், மார்க்கத்தில் அனுமதியில்லாததால் அந்த வாசலையும் அடைத்தோம்.

அடுத்தக் கட்டமாக, மாப்பிள்ளை வீட்டில் வைக்கும் விருந்தையும் ஹதீஸ் அடிப்படையில்  எளிமையாக நடத்திக் கொண்டிருக்கின்றோம். இவை சில எடுத்துக்காட்டுகள். இவை எதைக் காட்டுகின்றன?

நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்குகிறான். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் சிறந்த கூலிக்கும், சிறந்த தங்குமிடத்திற்கும் உரியது.

அல்குர்ஆன் 19:76

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் என்ற வியாபாரம் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட வியாபாரம் கிடையாது. அது அனுமதிக்கப்பட்ட ஹலாலான வியாபாரம் தான். ஆனால் ஒரு மாநில நிர்வாகி அதைச் செய்யும் போது ஜமாஅத்தின் நம்பகத்தன்மை அதற்கு ஆதாரமாகும். அது அவருக்கு ஆதாயம் அளிக்கும் என்பதை விட அவரிடம் நிலம் வாங்கியவர் வில்லங்கத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளானால் அந்தப் பாதிப்பு அவருடன் நிற்கப் போவதில்லை. அது கண்டிப்பாக ஜமாஅத்தின் மீது பிரதிபலிக்கும். இப்படி ஓர் ஏமாற்றுப்  பேர்வழி எப்படி ஏகத்துவவாதியாக இருக்க முடியும்? என்று அவரிடம் நில வாங்கி ஏமாந்தவர் தவ்ஹீதுக் கொள்கைக்கு வருவதற்கு அது ஒரு தடைக்கல்லாகி விடும்.

அதனால், மாநிலப் பொறுப்புக்கு வருபவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் பண்ணக் கூடியவர்களாக இருக்கக் கூடாது என்று இந்த ஜமாஅத் தனது விதியாக ஆக்கிக் கொண்டது.

ஹஜ், உம்ரா சர்வீஸ்

இந்த ஜமாஅத்தின் பொறுப்புக்கு வரக்கூடியவர் ஹஜ் சர்வீஸ் நடத்தக் கூடாது. இவ்வாறு இந்த ஜமாஅத் ஒரு விதியை வகுத்திருக்கின்றது.

இது ஏன்? இங்கும் இந்த ஜமாஅத்தின் நம்பகத்தன்மை ஹஜ், உம்ரா சர்வீஸை நடத்தக்கூடியவருக்கு ஓர் ஆதாரமாக அமையும். எந்த ஒரு சர்வீஸும் சொன்னபடி நடக்காது. உதாரணத்திற்கு ஹரமுக்குப் பக்கத்தில் தங்குமிடம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் அங்கு சென்றதும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட  தங்குமிடம் ஹரமுக்குப் பல கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும். காரணம் இது இவர்களின் கட்டுப்பாட்டில்  கிடையாது.

இப்போது அவர்கள் நொந்து கொள்வது சம்பந்தப்பட்ட நிர்வாகியைத் தாண்டி தவ்ஹீது ஜமாஅத்தைத் தான். இது அவர்கள் தவ்ஹீது கொள்கைக்கு  வருவதற்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடும். இதைக் கவனத்தில் கொண்டு தான் தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகிகள் ஹஜ், உம்ரா சர்வீஸ் நடத்தக் கூடாது என்று ஒரு விதியாகக் கொண்டிருக்கின்றது.

பாலியல் குற்றச்சாட்டு

‘‘விபச்சாரம் செய்ததாகவோ, அல்லது அதற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு எப்பொறுப்பிற்கும் தேர்வு செய்யப்பட மாட்டார். தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமையும் இல்லை’’

என்று ஏற்கனவே பைலாவில் திருத்தம் செய்யப்பட்ட இவ்விதியை, அதன் பிறகு நடைபெற்ற பொதுக்குழுவில் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரின் ஏகமனதான ஒப்புதலுடன் அது நிறைவேற்றப்பட்டது. அதாவது ஐந்து ஆண்டுகள் என்ற வாசகத்துக்குப் பதிலாக எக்காலமும் என்ற சொல்லாக மாற்றம் செய்யப்பட்டது.

இந்தக் கட்டுப்பாடுகளையும், கடிவாளங் களையும் இந்த ஜமாஅத் தனக்குத் தானே போட்டதற்குக் காரணம் என்ன? இந்த அமைப்பு தடம் புரண்டு விடக் கூடாது: இந்த ஜமாஅத் உறுப்பினர்களிடத்தில் ஏற்படுகின்ற தவறான செயல்பாடுகள் அடுத்தவர் தவ்ஹீதுக்கு வருவதற்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடக்கூடாது  என்பதற்காகத் தான்!

இதைத் தவிர்த்து வேறு காரணம் எதுவுமில்லை.

இதுபோன்று குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு பயணம் செய்கின்ற ஏனைய அமைப்பை இதுவரை நாம் காண முடியவில்லை. அப்படியிருந்தால் இந்த பஸ் வேண்டாம் அடுத்த பஸ்ஸில் போகலாம் என்று மாறிக் கொள்ளலாம். அப்படி எந்த அமைப்பும் இல்லை.

அதே சமயம், இந்த அமைப்பில் இருந்தால் தான் சுவனம் போய்ச் சேரலாம், இந்த அமைப்பில் இருப்பவருக்குத் தான் சுவனம் பட்டா போட்டுக் கொடுக்கப்படும், இந்த அமைப்பில் இருப்பவருக்குத் தான் சுவனம் பக்காவாக வழங்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் வாதிடவில்லை. அது தவ்ஹீது ஜமாஅத்தின் நிலைபாடுமில்லை.

அண்மையில் இந்த ஜமாஅத்திலிருந்து விலகிய சகோதரர்கள், நாங்கள் இந்த ஜமாஅத்திலிருந்து தான் விலகுகின்றோம்; இந்தக் கொள்கையிலிருந்து அல்ல என்று சொல்கின்ற குரலைக் கேட்க முடிகின்றது. ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்கு நன்மையை நாடுதல் என்ற அடிப்படையில் இந்தக் கொள்கையிலேயே இறுதி  வரை பயணிப்பதையே இந்த ஜமாஅத் நாடுகின்றது.

தமீமுத் தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவதுதான் என்று கூறினார்கள். நாங்கள், யாருக்கு (நலம் நாடுவது)?’’ என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 95

அதிலும் குறிப்பாக, இந்த இயக்கத்தில் தோளோடு தோளாகப் பயணம் செய்த சகவாசத்திலும் சகோதர பாசத்திலும் அவர்களுக்கு அந்த  நன்மையைத் தான் நாடுகின்றது. இதைத் தூய்மையான நோக்கத்திலேயே தெரிவித்துக் கொள்கின்றது.

இப்படிச் சொல்லக் கூடியவர்களின் நிலைபாடு சரி என்றால் கீழ்க்காணும் முரண்பாடுகள் உள்ளே தலை காட்டாமல் இருக்க வேண்டும். அவை இதோ:

  1. நமக்கு நாமே முரண்படுதல்

எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை.

அல்குர்ஆன் 11:88

என்ற வசனத்தின் அடிப்படையில், நாம் சொன்னது நமக்கு எதிராகவே திரும்பி விடக் கூடாது. அதாவது நாம் செய்த பிரச்சாரத்திற்கு எதிராக நாம் நடக்கக் கூடாது.

உதாரணத்திற்கு, ஒரு பெண்ணுடன் தனிமையில் இருப்பது மார்க்கப்படி குற்றம் என்று பேசி விட்டு, நானே அந்தத் தப்பைச் செய்து விட்டால் அல்லது அதைச் சரி கண்டால், அது நான் செய்த பிரச்சாரத்திற்கு மாறான செயலாகும். இது போன்ற செயல் என்னிடம் ஏற்பட்டால் நான் அந்தக் கொள்கைக்கு நேர் எதிரான திசையில் பயணிக்கின்றேன் என்றே அர்த்தம்.

அதுபோன்று, இங்கே இருக்கும் போது ஒரு விஷயத்தைச் சரி என்று  அறிவித்து விட்டு, வெளியே போனதும் அதைத் தப்பு என்று வாதிடுவதும், இங்கே இருக்கும் போது ஒரு விஷயத்தைத் தப்பு என்று சொல்லி விட்டு வெளியே போனதும் அதைச் சரி என்று வாதிடுவதும் இந்த வகையைச் சார்ந்தது தான்.

‘கருப்பை வெள்ளை என்று சொன்னார்கள்; நானும் வெள்ளை என்று சொன்னேன். வெள்ளையைக் கருப்பு என்றார்கள்; நானும் கருப்பு என்று சொன்னேன்’ என்று ஹாமித் பக்ரீ சொன்ன வார்த்தைகளை இங்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

இங்கு பொறுப்பில் இருக்கும் போதே எது நியாயமோ அதைச் சொல்லி விட்டு வெளியேறியிருந்தால் அது நேர்மையான நடைமுறை. நமக்குப் பாதகம் என்று வந்ததும் இவ்வாறு பேசினோம் என்றால் அது மேற்கண்ட வசனத்திற்கு நேர் மாற்றமான நடைமுறையில் தான் வரும்.

  1. அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தல்

திருக்குர்ஆனில் அல்லாஹ் திரும்பத் திரும்பச் சொல்கின்ற ஒரு பாவம் அவன் பாதையை விட்டுத் தடுத்தல் என்ற பாவமாகும். இது தொடர்பாக திருக்குர்ஆனில்  பல வசனங்கள் இடம் பெறுகின்றான. இருப்பினும் இந்த ஒரு வசனம் இங்கு எடுத்துக் காட்டப் போதுமானது.

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:217

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் எனும் போது பள்ளிவாசலுக்குத் தொழ வருவதைத் தடை செய்வது அல்லது பொதுக்கூட்டம் போடுவதைத் தடை செய்வது என்பதை மட்டும் இது குறிக்கும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

இனிய மார்க்கம், எளிய மார்க்கம், விவாதம் என்று ஆயிரக்கணக்கான அழைப்புப் பணிகளை இந்த ஜமாஅத் செய்து கொண்டிருக்கின்றது. இந்த ஜமாஅத்தை எதிர்க்கக் கூடிய சகோதரர்கள் செய்வதை விட அது பல ஆயிரம் மடங்கு அதிகம் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் அது அந்தப் பணியை தொடர முடியாத  வகையில் குழப்பம் ஏற்படுத்துவது அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்தல் என்ற பாவத்தில் தான்  வரும்.

இது போன்ற காரியங்களில் இந்த ஜமாஅத்தின் கவனத்தை இந்த குற்றச்சாட்டுகளின் பக்கமே திருப்பிக் கொண்டிருந்தால் அது கொள்கைக்கு எதிரான பயணமாகவே அமையும்.

  1. எதிரிக்கு எதிரி நண்பன்

இந்த ஜமாஅத்தை ஏற்கனவே ஒரு பெருங்கூட்டம் எதிர்த்து வருகின்றது அவர்களின் ஒற்றை இலக்கு இந்த ஜமாஅத்தை  என்ன விலை கொடுத்தேனும் அழித்து விடவேண்டும் என்பது மட்டும் தான். அந்த அணியில் பரேலவிகள், சலஃபுகள், தமுமுக, ஜாக் என்று பல்வேறு இயக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றார்கள்.

ஜமாஅத்திலிருந்து வெளியேறிய சகோதரர்களின் வாதம் நாங்கள் கொள்கை பிடிக்காமல் வெளியேறவில்லை. நிர்வாகம் பிடிக்காமல் வெளியேறுகின்றோம் என்பது தான்.

நாங்கள் இதே கொள்கையில் தான் இருக்கின்றோம் என்று சொல்கின்ற சகோதரர்கள், எதிரிகள் நிற்கும் அதே கோட்டில் நின்று அவர்கள் ஏற்கனவே எறிந்த ஆயுதங்களை வாங்கிக் கூர் தீட்டி இந்த ஜமாஅத்தை நோக்கி எறிகின்றர்.  இதன் அர்த்தம் என்ன? இந்தக் கொள்கையை எதிர்த்து  நிற்பதற்கு ஏகத்துவ எதிரிகளுடன் கூட்டணி வைக்கவும் தயங்க மாட்டோம் என்பது தானே!

கடந்த காலத்தில் இந்த ஜமாஅத்தில் சில பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு  சில பொறுப்பாளர்கள் காரணமாக இருந்திருப்பார்கள். பின்னர், நீக்கியவரும் சில காரணங்களுக்காக பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார். வெளியேற்றப்பட்ட இருவருமே ஒரு கோட்டில் சந்திக்கின்றார்கள் என்றால் இது எதைக் காட்டுகின்றது?

  1. பாவத்தைப் பற்றிய பார்வையில் மாற்றம்

இந்தக் கொள்கையில் இருக்கும் போது அந்நியப் பெண்ணுடன் ஃபோனில் சில நிமிடங்கள் பேசுவது பெரிய பாவமாகத் தெரிந்தது. ஆனால்  இந்த ஜமாஅத்தை விட்டு விலகியவுடன் அந்நியப் பெண்ணுடன்  சில மணி நேரங்கள் தனித்திருப்பது கூடச் சிறிதாகத் தெரிகின்றது. பாவத்தின் தன்மை மாறப் போவதில்லை. ஆனால் பார்வை மாறுகின்றது என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

அந்நியப் பெண், அதிலும் அடுத்தவர் மனைவியிடம் தனித்திருக்கும் பாவத்தை அல்லாஹ்வின் தூதர் எப்படிப் பார்க்கின்றார்கள் என்பதை கீழ்க்காணும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும் வரை நான் அவனைத் தொடக் கூடாதா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்’’ என்றார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “இல்லை; தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால், அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்’’ என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்! அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்’’ என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 3000

இரத்தம் கொதிக்க வேண்டிய ஒரு பாவத்தில், அந்த இரத்தம் உறை நிலைக்குச் செல்கின்றது என்றால் எதைக் காட்டுகின்றது? கொள்கைக்கு எதிரான பயணத்தையே காட்டுகின்றது.

  1. ஜமாஅத் சந்திக்கும் துன்பத்தை ரசிப்பது

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

அல்குர்ஆன் 3:120

முஸ்லிம்களுக்கு ஓர் இழிவு ஏற்பட்டவுடன் எதிரிகள் மகிழ்ச்சியடையந்தனர் என்று இந்தப் பண்பை ஏகத்துவ எதிரிகளின் குணமாக அல்லாஹ் சித்தரித்துக் காட்டுகின்றான். இன்று தவ்ஹீது ஜமாஅத்துக்கு ஒரு சோதனை வரும் போது, நல்ல அனுபவிக்கட்டும் என்று மகிழ்ச்சி அடைவது எதைக் காட்டுன்றது?

இதுபோன்ற முரண்பாடுகள் இல்லாமல் இருந்தால் விலகிய சகோதரர்களின் பயணம் வெற்றிப் பயணமாக அமையும்.

இல்லையென்றால் வெறும் நிர்வாகப் பிரச்சனை என்று சொன்னது தவ்ஹீது எதிர்ப்பாக மாறி, தடம் புரளச் செய்து விடும். இந்த ஜமாஅத்திலிருந்து வெளியே சென்றவர்கள் எப்படித் தடம் புரண்டார்கள் என்பது பற்றி இவர்களே பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

இறுதியாக இப்ராஹீம் நபியின் கொள்கைப் பிரகடனத்தை இங்கு பதிய வைத்துக் கொள்வோமாக!

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது’’ என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை’’ என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது’’  

அல்குர்ஆன் 60:4

நாம் அனைவரும் சேர்ந்து ஒத்துக் கொள்கின்ற விஷயம், நாம் தூய்மையான இப்ராஹீம் நபி அவர்களின் மார்க்கத்தில் இருக்கின்றோம் என்ற விஷயம் தான். அந்த இப்ராஹீம் நபி அவர்கள் ஒரு சமுதாயத்தை விட்டு விலகுவதற்கும் பகைமை, வெறுப்புக் காட்டுவதற்கும் அளவுகோலாக வைப்பது ஷிர்க் எனும் இணைவைப்பைத் தான்.  ஒன்றிணைந்து பயணிப்பதற்கு அளவுகோலாக வைப்பது  ஏகத்துவக் கொள்கையைத் தான்

இவர்கள் முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிமுறைகள் தான். ஒன்று, இந்த ஜமாஅத்தில் இணைந்து பணியாற்றுவது. அதன் நிர்வாகம், பைலா விதிமுறைகள் இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மேற்கண்ட முரண்பாடுகள் தங்களிடம் வராத வகையில் தனித்துச் செயல்படுவது.

இதை விட்டு விட்டு, தனி நபர்கள் மீது கொண்ட வெறுப்பை தவ்ஹீதின் மீது கொள்கின்ற வெறுப்பாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.

இந்த இயக்கம் மனிதர்களைக் கொண்டு, ஏகத்துவத்தை இலட்சியமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிர்வாகிகள் மலக்குகள் அல்ல; மனிதர்கள் தான். வெளிப்படையைப் பார்த்துத் தீர்மானிப்பவர்கள் தான். எனவே நிர்வாகிகள் மீது வெறுப்பு கொள்கிறோம் என்ற பெயரில் கொள்கையை வெறுத்து, ஜமாஅத்தை அழிக்கும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது.

காவிகளும், கிறித்தவர்களும், நாத்திகர்களும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைக்கும் போது முன்னணியில் நின்று பதில் கொடுத்து, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்த ஜமாஅத் அழிய வேண்டும் நினைப்பவர்கள் எப்படி ஏகத்துவக் கொள்கைவாதிகளாக இருப்பார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

———————————————————————————————–

காலில் விழலாமா?

சூபிகளின் தவறான ஆதாரங்களும் அதற்கான விளக்கங்களும்

சபீர் அலீ

இஸ்லாம் ஏகத்துவம் எனும் ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட மார்க்கமாகும்.

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனன்றி வணங்குவதற்குத் தகுதியானவன் எவனும் இல்லை என்று நம்புவதே ஏகத்துவமாகும். இந்த நம்பிக்கைக்கு எள்ளளவும் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது.

இதற்கு எதிரானது ஷிர்க் எனும் இணைவைப்பு. இந்த இணைவைப்புக் காரியங்கள், பல பரிமாணங்களில் மக்களிடத்தில் காணப்படுகிறது.

அதில் ஒன்று, அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய ஸஜ்தா எனும் வணக்கத்தை மனிதர்களுக்குச் செய்வது.

தொழுகை, நோன்பு, பிரார்த்தனை, பாவமன்னிப்பு என்று எந்த வணக்க வழிபாடாயினும் அதை அல்லாஹ்விற்காக மட்டுமே செய்ய வேண்டும். அதை அல்லாஹ் அல்லாதோருக்காகச் செய்தால் அது ஏகத்துவத்திற்கு எதிரான இணைவைப்பாகும்.

ஸஜ்தாச் செய்தல், அல்லாஹ்விற்குச் சிரம் தாழ்த்துகிற ஒரு வணக்கமாகும். அதை அல்லாஹ் அல்லாத யாருக்கும் செய்யக் கூடாது.

முரீதுமார்கள், ஷேகுமார்கள் என்று சொல்லப்படும் ஏமாற்றுப் பேர்வழிகளுடைய காலில் விழுந்தும், வயதில் மூத்தவர்கள், பெற்றோர்கள் என்ற பெரியோருடைய காலில் விழுந்தும் ஸஜ்தா எனும் வணக்கத்தைச் சிலர் செய்கின்றனர். இது அப்பட்டமான இணைவைப்பாகும்.

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! அவர்கள் பெருமையடித்தால், உமது இறைவனிடம் இருப்போர் இரவிலும், பகலிலும் அவனைத் துதிக்கின்றனர். அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 41:37, 38

அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்’’ (என்றும் கூறியது.)

வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 27:24, 25

இந்த வசனங்கள் யாவும் ஸஜ்தா என்பது அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கம் என்று தெளிவுபடுத்துகின்றன.

மார்க்கம் இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்க, மக்கள் தங்கள் காலடியில் விழ வேண்டும் என்று விரும்புகிற சூஃபிஸ சிந்தனை கொண்டவர்கள் தங்களின் மார்க்கத்திற்கு முரணான இந்தக் காரியத்திற்கு ஆதாரங்கள் என்று சில செய்திகளை எடுத்துக் காட்டுகின்றனர்.

அதில பல செய்திகள் பலவீனமான செய்திகளாக உள்ளன. சில செய்திகளின் கருத்தை அவர்கள் திரித்தும் கூறுகிறார்கள்.

அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களின் தரத்தை ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் பார்ப்போம்.

முதல் ஆதாரம்

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை விட வயதில் முதிர்ந்தவர் என்ற ஒரு நோக்கத்துக்காக அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கையையும், இரு காலையும் முத்தமிட்டார்கள்.

காலில் விழுந்து முத்தமிடலாம் என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம் இது தான்.

இந்தச் செய்தி இமாம் புகாரி அவர்களுடைய அதபுல் முஃப்ரத் எனும் நூலில் உள்ளது.

الأدب المفرد بأحكام الألباني (ص: 339)

 976 – حدثنا عبد الرحمن بن المبارك قال حدثنا سفيان بن حبيب قال حدثنا شعبة قال حدثنا عمرو عن ذكوان عن صهيب قال : رأيت عليا يقبل يد العباس ورجليه

இந்தச் செய்தியில் இடம்பெறும் சுஹைப் என்பவருடைய நம்பகத்தன்மை பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

இவரைப் பற்றி இப்னு ஹிப்பான் மாத்திரம் நம்பகமானவர் என்று சான்றளிக்கிறார். (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 4, பக்கம் 385).

இமாம் இப்னு ஹிப்பானைப் பொறுத்தவரையில் யாரென்று தெரியாதவர்களைக் கூட நம்பகமானவர் என்று சான்றளிக்கும் அலட்சியப் போக்குள்ளவர்.

இப்னு ஹிப்பானுடைய சான்றைத் தவிர வேறு எந்த நற்சான்றோ, துற்சான்றோ இவர் மீது சொல்லப்படாத காரணத்தினால் இவர் மஜ்ஹூலுல் ஹால் எனும் நம்பகத்தன்மை அறியப்படாத அறிவிப்பாளராக உள்ளார்.

இதனால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

ஒரு பேச்சுக்கு இந்தச் செய்தி சரியென்றாலும் கூட இது நபிகள் நாயகத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத அலீ (ரலி) அவர்களுடைய சொந்தச் செயல் தானே தவிர இதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இரண்டாவது ஆதாரம்

இரு யஹூதிகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுப் பதில் கிடைத்தவுடன் திடுக்கிட்டு, நாயகத்தை நபியாக ஏற்று நபிகளாரின் கையையும் கால்களையும் முத்தமிட்டனர்.

அவர்கள் எடுத்து வைக்கும் இந்த இரண்டாவது ஆதாரம் சுனன் திர்மதியில் பதிவாகியுள்ள நீண்ட செய்தியின் கருத்தாகும்.

سنن الترمذي – شاكر + ألباني (5/ 305)

 3144 – حدثنا محمود بن غيلان حدثنا أبو داود و يزيد بن هارون و أبو الوليد واللفظ لفظ يزيد والمعنى واحد عن شعبة عن عمرو بن مرة عن عبد الله بن سلمة عن صفوان بن عسال : أن يهوديين قال أحدهما لصاحبه أذهب بنا إلى هذا النبي نسأله فقال لا تقل نبي فإنه إن سمعها تقول نبي كانت له أربعة أعين فأتينا النبي صلى الله عليه و سلم فسألاه عن قول الله عز و جل { ولقد آتينا موسى تسع آيات بينات } فقال رسول الله صلى الله عليه و سلم لا تشركوا بالله شيئا ولا تزنوا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تسرقوا ولا تسحروا ولا تمشوا ببريء إلى سلطان فيقتله ولا تأكلوا الربا ولا تقذفوا محصنة ولا تفروا من الزحرف شك شعبة وعليكم يا معشر اليهود خاصة لا تعدو في السبت فقبلا يديه ورجليه وقالا نشهد أنك نبي قال فما يمنعكما أن تسلما ؟ قالا إن داود دعا الله أن لايزال في ذريته نبي وإنا نخاف إن أسلمنا أن تقتلنا اليهود

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட யூதர்கள் தங்களுக்குப் பதில் கிடைத்ததும், நபி (ஸல்) அவர்களை இறைத்தூதர்தான் என்று ஒத்துக் கொண்டு அவர்களின் கைகளிலும் கால்களிலும் முத்தமிட்டதாக வருகிறது. நபி (ஸல்) அவர்களும் இதை அனுமதித்ததாக இடம்பெறுகிறது.

இந்தச் செய்தி பலவீனமானதாகும். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஸலமா பலவீனமானவர் ஆவார்.

الثقات لابن حبان (5/ 12)

 3587 – عبد الله بن سلمة يروي عن علي بن أبي طالب روى عنه عمرو بن مرة يخطأ

الجرح والتعديل (5/ 73)

كان يجلس إلى عبد الله بن سلمة وقد كبر فيحدثنا فنعرف وننكر. ناعبد الرحمن (1) [ سئل ابي عن عبد الله بن سلمة فقال: تعرف وتنكر.

الضعفاء للعقيلي (2/ 260)

حَدَّثَنِي آدم بن موسى ، قال : سَمِعْتُ البُخاريَّ ، قال : عَبد الله بن سلمة أبو العالية الكوفى لاَ يُتَابَعُ في حديثه.

யாரென்று தெரியாத ஒரு அறிவிப்பாளரைக் கூட நம்பகமானவர் என்று சொல்லும் வழக்கமுடையவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தோம்.

அத்தகைய அலட்சியபோக்குள்ளவரே இவரை தவறிழைப்பவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இமாம் இப்னு அபூ ஹாதம் அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் போது, இவருடைய செய்திகள் சில வேளை ஏற்றுக் கொள்ளப்படும். சில வேளை மறுக்கப்படும். என்று கூறுகிறார்.

இவர் துணைச் சான்றாகக் கூட எடுக்கப்பட மாட்டார் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(இந்த விமர்சனங்களைப் பார்க்க: அஸ்ஸிகாத் லிப்னி ஹிப்பான், பாகம் 5, பக்கம் 12, அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 73, அல்லுஅஃப் லில் உகைலீ, பாகம் 2, பக்கம் 260)

மூன்றாவது ஆதாரம்

முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகளாகிய அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்கள் தன் தந்தை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிடுபவர்களாக இருந்தார்கள்.

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (4/ 523)

5219 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ أَخْبَرَنَا إِسْرَائِيلُ عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ رضى الله عنها أَنَّهَا قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلاًّ – وَقَالَ الْحَسَنُ حَدِيثًا وَكَلاَمًا وَلَمْ يَذْكُرِ الْحَسَنُ السَّمْتَ وَالْهَدْىَ وَالدَّلَّ – بِرَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- مِنْ فَاطِمَةَ كَرَّمَ اللَّهُ وَجْهَهَا كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا فَأَخَذَ بِيَدِهَا وَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِى مَجْلِسِهِ وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ إِلَيْهِ فَأَخَذَتْ بِيَدِهِ فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِى مَجْلِسِهَا.

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களின் கைகளை அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள் என்று உள்ளது.

இந்தச் செய்தி அபூதாவூத், திர்மிதி நஸாயீ உள்ளிட்ட நுற்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகத் தான் உள்ளது.

ஆனால், இவர்கள் இந்தச் செய்தியை எதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதற்கும் இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இந்தச் செய்தியில் காலில் விழுந்து முத்தமிடுதல் என்ற அம்சமே இல்லை.

மேலும், இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்களின் கையில் அவர்களின் மகளார் முத்தமிட்டார்கள் என்று தான் உள்ளது. தந்தை மகளுக்கு மத்தியில் உள்ள பாசத்தை வெளிப்படுத்துவதற்காக தந்தை தன் வீட்டுக்கு வருகை தரும் போது அவர்களின் கையில் முத்தமிடுவார்கள் என்று தான் இதிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இதே செய்தியில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தன் தந்தையார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வரும் போது நபி (ஸல்) அவர்கள் தன் மகளாரின் கையில் முத்திமிடுவார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது. இதுவும் தந்தை மகள் மத்தியில் உள்ள பாசத்தின் வெளிப்பாடு தான் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்தச் செய்தியை ஆதாரமாக வைத்து, தந்தை மகள் கையிலும், மகள் தந்தை கையிலும் முத்தமிடலாம் என்று சொன்னால் பிரச்சனையில்லை.

யாரென்று தெரியாத நம்மைப் போன்ற மனிதர்களிடம் அவர்களை ஷேக்மார்கள், முரீதுமார்கள் என்று அறிமுகப்படுத்தி அவர்களின் கை கால்களில் முத்தமிட்டு மரியாதை செய்ய வேண்டும் என்பதற்கு இதை ஆதாரம் காட்டுவது எவ்வளவு அறிவீனமான செயல்.

இதை வைத்து அந்நியப் பெண்கள் கூட ஷேக்மார்களின் கையில் முத்தமிடலாம் என்று ஆதாரம் காட்டுவார்கள் போலும்! என்னே ஒரு பக்தி!

எனவே, இந்தச் செய்திக்கும், இவர்கள் வைக்கும் வாதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நான்காவது ஆதாரம்

கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி அல்லாஹ் மன்னித்து விட்டதாக நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த போது அந்த ஸஹாபியவர்கள் உடனே வந்து நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கையை முத்தமிட்டார்கள்.

இந்தச் செய்தியையும் பெரியார்களின் கை கால்களில் முத்தமிட்டு மரியாதை செய்வதற்கு ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

இந்தச் செய்தியிலும் கஅப் பின் மாலிக் (ரலி) நபி (ஸல்) அவர்களின் கையை முத்தமிட்டார்கள் என்று தான் உள்ளது.

காலில் விழுவதற்கோ, காலில் முத்தமிடுவதற்கோ இதில் எந்த ஆதாரமும் இல்லை.

இந்தச் செய்தி துர்ருல் மன்சூர், பாகம் 7, பக்கம் 578 எனும் நூலில் பதியப்பட்டுள்ளது.

الدر المنثور في التفسير بالمأثور للسيوطي (7/ 578)

وأخرج أبو الشيخ ، وَابن مردويه عن كعب بن مالك رضي الله عنه قال : لما نزلت توبتي أتيت النَّبِيّ صلى الله عليه وسلم فقبلت يده وركبتيه وكسوت المبشر ثوبين.

அவர்கள் எடுத்து வைக்கும் மேற்கண்ட  துர்ருல் மன்சூர் எனும் நூலில் இடம்பெற்ற அறிவிப்புக்கு எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் தொடர் இல்லாத செய்தியை அறவே ஏற்றுக் கொள்ள இயலாது.

இந்தச் செய்திக்கு அர்ருக்ஸத் ஃபீ தக்பீலில் யதி, பக்கம் 56 எனும் நூலில் அறிவிப்பாளர் தொடர் இடம் பெற்றுள்ளது.

الرخصة في تقبيل اليد 381 (ص: 56)

$ باب الرخصة في تقبيل اليد $ # ( 1 نا أبو محمد عبدان بن أحمد ) قال نا مسروق بن المرزبان نا عبد السلام بن حرب عن إسحاق بن عبد الله بن أبي فروة عن عبد الرحمن بن كعب بن مالك عن أبيه قال لما نزلت توبتي أتيت النبي صلى الله عليه وسلم فقبلت يده وركبتيه

அறிவிப்பாளர் தொடருடன் இடம்பெற்ற இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் ஆவார்.

تهذيب الكمال 742 (2/ 450)

وقَال البُخارِيُّ (2) : تركوه.

ونهى أحمد بن حنبل عن حديثه (3).

وَقَال إبراهيم بن يعقوب الجوزجاني (4) : سمعت أحمد بن حنبل يقول : لا تحل عندي الرواية عن إسحاق بن أَبي فروة ، وَقَال (5) : ما هو بأهل أن يحمل عنه ولا يروى عنه.

وَقَال أحمد بن الحسن التِّرْمِذِيّ (6) : سمعت أحمد بن حنبل يقول : لا أكتب حديث أربعة : موسى بن عُبَيدة ، وعبد الرحمن ابن زياد بن أنعم ، وجويبر بن سَعِيد ، وإسحاق بن عَبد الله بن أَبي فروة.

وَقَال معاوية بن صالح ، عن يحيى بن مَعِين (7) : حديثه ليس بذاك.

وَقَال في موضع آخر (8) : لا يكتب حديثه ، ليس بشيءٍ.

وكذلك قال أحمد بن سَعِيد بن أَبي ريم ، عن يحيى (1)

وَقَال عَبد الله بن شعيب الصابوني ، عن يحيى (2) ضعيف.

وَقَال إبراهيم بن عَبد الله بن الجنيد ، عن يحيى (3) : ليس بشيءٍ.

وَقَال إسحاق بن منصور ، عن يحيى : لا شيء (4).

وَقَال أبو داود عن يحيى (5) ليس بثقة.

وكذلك قال الغلابي ، عن يحيى (6)

وَقَال عَباس الدُّورِيُّ ، عن يحيى (7) : عبد الحكيم بن أَبي فروة ، وإسحاق بن أَبي فروة ، وآخر من بني أبي فروة : هم ثقات إلا إسحاق.

وَقَال علي بن الحسن الهسنجاني ، عن يحيى (8) : كذاب.

تهذيب الكمال 742 (2/ 452)

وَقَال إسماعيل بن إسحاق القاضي ، عن علي ابن المديني (1) : منكر الحديث.

ஹதீஸ் கலை அறிஞர்கள் இவரை விட்டுவிட்டனர் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.

இவர் வழியாக ஹதீஸ் அறிவிப்பதை இமாம் அஹ்மத் அவர்கள் தடுப்பவராக இருந்தார்.

இவர் அறிவிக்கும் செய்திக்கு எந்த மதிப்பும் இல்லை என்றும் இவர் பலவீனமானவர் என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார்.

இவர் ஹதீஸில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இப்னு மதீனி அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர்  பெரும் பொய்யர் என்று இமாம் யஹ்யா கூறியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 2, பக்கம் 446

இன்னும் இதுவல்லாத ஏராளமான குறைகளும் இவர் மீது சொல்லப்பட்டுள்ளதால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் போரிலிருந்து பின் தங்கியது தொடர்பாகவும், அவர்களுக்கு இறைவன் மன்னிப்பு வழங்கியது தொடர்பாகவும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் இருந்தாலும் நபி (ஸல்) அவர்களை முத்தமிட்டார்கள் என்ற இந்தக் குறிப்பிட்ட அறிவிப்பு பலவீனமானதாகும்.

இது தொடர்பாக பரேலவிகள் முன்வைக்கும் மேலும் சில ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

———————————————————————————————–

பாஜக நடத்துவது ராம ராஜ்யமா? காம ராஜ்யமா?

எம்.ஷம்சுல்லுஹா

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம், ரசானா கிராமத்தில் வசிக்கின்ற முஸ்லிம் சமுதாயம் ஆடு, மாடு, குதிரை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர்.  நாடோடிகளான இவர்கள்  கோடை காலத்தில் தங்கள் கால்நடைகளை காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிக்கு ஓட்டிச் செல்வார்கள். குளிர் காலத்தில் ஜம்முவின்  காடுகளுக்குத் திரும்ப ஓட்டி வருவார்கள். குஜ்ஜார், பக்கர்வால் என்றும் இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் தங்கள் வாழ்வுரிமையைக் காப்பதற்காக வேண்டி ஜம்மு காஷ்மீர் வன உரிமைச் சட்டத்தை   (Forest Rights Act in Jammu and Kashmir) அமல்படுத்தக் கோரி குரல் எழுப்பி வருகின்றனர். பாஜக தொடர்ந்து அதற்கு முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றது.   மொத்தம் ஜம்மு கஷ்மீரில் இவர்கள் எட்டு சதவிகிதம் வசிக்கின்றனர். சங்கப் பரிவாரங்கள்,  அஸ்ஸாமில் வாழும்  முஸ்லிம்களுக்கு எதிராக வந்தேறிகள் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்களை வெளியேற்றத் துடிப்பது போன்று அதே ஆயுதத்தை,  பூர்வீகக் குடிமக்களான இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி இவர்களை ஜம்மு, கஷ்மீர் மாநிலத்தை விட்டு விரட்டியடிக்கத் துடிக்கின்றனர்.

அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என்ற வெறுப்பேற்றுகின்ற, நெருப்பு மூட்டுகின்ற பட்டங்களை சங்கப்பரிவாரங்கள் இவர்கள் மீது அள்ளி வீசுகின்றனர்.   அதிலும் குறிப்பாக, நாடோடி முஸ்லிம்கள் வசிக்கின்ற கதுவா மாவட்டம், ரசானா கிராமம்  இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும்.

முஸ்லிம்களை   அந்தப் பகுதியில்  வாழவிடக் கூடாது என்பதை அவர்கள் குறியாகக் கொண்டுள்ளனர். அதற்காக ஒரு சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

பெரும்பான்மையான சமுதாயம், இதற்கு முன்பு முஸ்லிம்களிடம் ஒரு ஏக்கர் நிலத்தை விற்றுள்ளனர். பின்னர் அந்த நிலத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். இவர்கள் திரும்பக் கொடுக்க மறுத்து விட்டனர். இது சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் மீது ஏற்கனவே அவர்கள் கொண்டுள்ள வெறுப்புத் தீயை மேலும் விசிறி விட்டுள்ளது. அது தான் கொழுந்து விட்டெரியும்  காமத் தீயாக வடிவம் எடுத்து, எட்டு வயதுச் சிறுமியான ஆசிஃபாவை கருகச் செய்து விட்டது. அதை இப்போது பார்ப்போம்:

ஜனவரி 10, 2018 அன்று குதிரை மேய்க்கச் சென்ற ஆசிஃபா கடத்திச் செல்லப்படுகின்றாள். இதற்கு மூளையாகச் செயல்பட்டவன் சஞ்சிராம். இவன் ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி. இவன் சம்பவம் நடந்த கோயிலின்  நிர்வாகியும் ஆவான். இவனுக்கும் முஸ்லிம்களுக்கும் முன்னர் பிரச்சனை இருந்துள்ளது.

இவனுடைய வீட்டுக்கருகில் தான் ஆசிஃபா குதிரை மேய்க்க வருவாள்.  அதனால் அங்கிருந்து அவளைக் கடத்த வேண்டும் என்று இவன் திட்டம்  போட்டிருந்தான்.

திட்டமிட்டபடி தனது உறவினரான மைனர் ஒருவனும், தனது நண்பன் மன்னு என்ற பர்வேஷ்குமார் துணையுடன் இருவரும் இணைந்து  8 வயதுச் சிறுமி ஆசிஃபாவைக் கடத்துகின்றனர். முன்னரே ஹிரா நகரில் போதை மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.  கடத்திய ஆசிஃபாவுக்கு போதை மாத்திரைகளைக் கொடுத்து, காட்டில் வைத்து முதலில் சஞ்சிராமின் மைனர் உறவினனும் பின்னர் மன்னுவும் கற்பழிக்கின்றனர். பின்னர் கோயிலில் வைத்துப் பூட்டுகின்றனர்.

இதற்கிடையே, சம்பந்தபட்ட கோயிலுக்கு அருகே வந்து விசாரித்த ஆசிஃபாவின் பெற்றோர்களை சஞ்சிராம் திசை திருப்பி விடுகின்றான். நான்கு நாட்களாக எந்த உணவும் கொடுக்காமல் போதை மருந்து கொடுத்தே கோயிலில் வைத்து  கற்பழிக்கின்றனர். இதற்கிடையே மீரட்டில்  இருக்கும் சஞ்சிராமின் மகன் விஷாலை அழைக்கின்றான். அவனும் வந்து தன் பங்கிற்குக் கற்பழிக்கின்றான். 12ஆம் தேதி பெற்றோர்கள் ஆசிஃபாவைக் காணவில்லை என்று ஹிராநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.  புகாரின் பேரில் காவல் துறை தேடல் குழு (ஷிமீணீக்ஷீநீலீ றிணீக்ஷீtஹ்) தேட ஆரம்பிக்கின்றது.

தேடல் குழுவில் இடம்பெற்ற காவலன் தீபக் கஜூரியாவிற்கு எல்லாத் தகவலையும் இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரி சஞ்சிராம் தெரிவித்திருந்தான். வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆசிஃபாவின் கொலையில் தீபக் கஜூரியாவும் பங்கெடுக்கின்றான்.  கொல்வதற்கு முன்னால் தானும் ஒரு முறை வன்புணர்வு செய்து கொள்கின்றேன் என்று அவனும் வன்புணர்வு செய்து முடிக்கின்றான்.

இறுதியில் எட்டு வயது சிறுமியான  ஆசிஃபாவை வெறுங்கைகளால்   கழுத்தை  நெறித்துக் கொல்ல முயல்கின்றான். அது சரிப்பட்டு வரவில்லை என்றானதும் துப்பட்டாவை வைத்துக் கொல்கின்றான். அப்போதும் அவள் இறப்பை உறுதி செய்ய முடியாத அவர்கள் தலையில் கல்லைப் போட்டுக் கொல்கின்றார்கள்.

எட்டு வயது சிறுமியான ஆசிஃபாவுக்குக் காமம் என்ற கருமம் எதுவும் தெரியாது. அவள் ஒரு சின்னஞ்சிறு சிட்டு. காட்டில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த அந்த மொட்டு இயற்கையாகப் பருவமடைந்து மலர்வதற்குள்ளாக இந்துத்துவா காம வெறியர்களால் கசக்கி எறியப்பட்டிருக்கின்றாள்.

‘என் மகள் கொஞ்சம் கூடப் பசி தாங்க மாட்டாள்’ என்ற அவளது  தாயின் புலம்பலும், ‘என் மகளுக்கு இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு வித்தியாசம் எதுவும் தெரியாதவள்’ என்ற தந்தையின் புலம்பலும் கேட்பவர்களின் இதயங்களை சுக்கு நூறாக உடைந்தெறிந்து விடுகின்றது.

இது எல்லாவற்றையும் விட, சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறை சஞ்சி ராமின் ஏவல்துறையாக மாறியது மிகப் பெரிய கொடுமையாகும். கற்பழித்து, கழுத்தை நெறித்துக் கொலை செய்த கொடியவன் காவலன் தீபக் கஜூரியா முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரை இந்த வழக்கு கடந்து வந்த சோதனைகளை இப்போது பார்ப்போம்:

  1. சஞ்சி ராம் இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக தலைமை காவலன் திலக் ராஜ், உதவி ஆய்வாளர் ஆனந்த தத்தா ஆகியோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கையூட்டுக் கொடுத்திருக்கின்றான்.
  2. ஆசிஃபாவின் தடயங்களை காவல் துறையே அழித்திருக்கின்றது. ரத்தக் கறை படிந்த ஆடைகளைத் தடவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்புவதற்கு முன்னரே வாங்கிய காசுக்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக, கேடு கெட்ட காவல்துறை தண்ணீர் விட்டுக் கழுவியிருக்கின்றது.
  3. ஆசிஃபாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தருவதற்கு மருத்துவமனை இரண்டு மாதமாக இழுத்தடித்தது. கற்பழிப்பு தான் என்று உறுதி செய்து முதற்கட்ட ரிப்போர்ட்டை அளித்த மருத்துவக் கண்காணிப்பாளர் உடனே இடம் மாற்றம் செய்யப்படுகின்றார்.
  4. ஆசிஃபாவின் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வந்தவர்களை அடித்து, சித்திரவதை செய்து விரட்டும் வேலையை தீபக் கஜூரியா செய்திருக்கின்றான்.
  5. கற்பழித்து, படுகொலை செய்யப்பட்ட ஆசிஃபாவுக்காகக் குரல் கொடுக்க முன்வந்தவர்கள் பாகிஸ்தான் ஏஜண்ட் என்று முத்திரை குத்தப்படுகின்றார்கள்.
  6. கதுவா காவல் துறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஜம்முவின் உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்யப்படுகின்றது. நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தது. காரணம் அரசியல் கட்சிகளும், வழக்கறிஞர்களும் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, போராட்டம் நடத்தினர். மாஜிஸ்ட்ரேட் முன்பு காவல்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வந்த போது அவர் உடனே ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றார். இறுதியில் 6 மணி தாமதத்திற்கு பிறகு குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்தார்.
  7. முதலில் கதுவா மாவட்டம் நீதிமன்ற பார்கவுன்சில் வழக்கறிஞர்கள், மாநில காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்வதை விட்டும் தடுத்தனர். அது போல் இந்த வழக்கு உயர்நீதி மன்றத்திற்கு வந்த போது உயர்நீதிமன்ற பார் கவுன்சிலும் இதே வேலையைச் செய்தது.
  8. சங்பரிவாரத்தின் மொத்த வழக்கறிஞர் கூட்டமும் இந்த வழக்கில் ஆஜராக முன் வர மறுத்த வேளையில் தீபக் சிங் ரஜாவத் என்ற பெண் வழக்கறிஞர் துணிந்து முன் வருகின்றார்.

என் மகளாக இருந்தால் எப்படி நான் வாதிட முன் வருவேனோ அது போன்று இவ்வழக்கில் நான் வாதிடுவேன் என்று வாதிட வந்த அவரது துணிச்சல் பாராட்டத்தக்கதாகும்.  எதிர்பார்த்தது போலவே அவர் சங்கப் பரிவாரங்களின் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கின்றார்.

  1. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஹிந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு போராடி வருகின்றது. இந்தப் போராட்டத்தின் போது மாநில பிஜேபி கட்சியின் 2 அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்த்தின் போது தேசியக் கொடியையும் கையில் ஏந்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் பிஜேபியுடன் காங்கிரஸ் கட்சியும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
  2. இந்த வழக்கை மூடி மறைப்பதற்காகவும் அதை நீர்த்துப் போகச் செய்வதற்காகவும் காஷ்மீர் காவல் துறையிடமிருந்து மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகின்ற சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை குற்றவாளி சஞ்சி ராம் வைத்துக் கொண்டிருந்தான். இதற்காக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் சஞ்சிராமே முன்னணியில் நின்று முடுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.
  3. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஆசிஃபாவின் உடலை ஊரில் உள்ள மையவாடியில் அடக்குவதற்கு ஊர்வாசிகள் மறுத்து விட்டனர். ஆசிஃபாவின் தந்தை யூசுஃப் தனக்குச் சொந்தமான ஒரு சிறிய  நிலத்தில் அடக்கிக் கொள்கின்றேன் என்று கெஞ்சிக் கேட்டும் அடக்க மறுத்து விட்டார்கள். இறுதியில் காட்டில் தூரமான பகுதியில்  ஆசிஃபாவின் உடல் அடக்கப்பட்டது.

ஆசிஃபாவின் ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது, உடலில் காவி வெறியர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் ஏற்படுத்திய காயங்களையும் சின்னாபின்னமாகச் சிதைக்கப்பட்ட ஆசிஃபாவின் தோற்றத்தையும் பார்க்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி மனிதாபிமானமிக்க எந்த மனிதரின் உள்ளத்திலிருந்தும் எப்போதும் அகலாது.

  1. இறுதியில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரணை செய்ய உத்தரவிடுகின்றது. இதன் பிறகு இரண்டு காவலர்கள் உட்பட 8 குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.
  2. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் அந்த ஊரில் வாழ்கின்ற முஸ்லிம்களை காவி வெறியர்கள் அழித்து விடுவார்கள் என்று பயந்து, தன்னால் சக முஸ்லிம்களுக்குப் பாதிப்பு ஏற்படவேண்டாம் என்று அவ்வூரைத் துறந்து ஆடுகள், குதிரைகளை ஓட்டிக் கொண்டு 9 நாட்கள் 110 கிலோ மீட்டர் கடந்து உதம்பூருக்கு ஆசிஃபாவின் குடும்பம் இடம் பெயர்ந்தது. ஆசிஃபாவின் அக்கா ஒருத்தி இருக்கின்றாள். தங்கள் மூத்த மகளான அவளையும் சங்கப் பரிவாரங்கள் சீரழித்து விடுவார்கள் என்பது  அவர்களின் இடபெயர்ச்சிக்கு மற்றொரு கவலையும் நியாயமான பயமும் ஆகும்.

பொதுவாக, இதுபோன்ற கற்பழிப்புகளில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அதை மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கு  எதிராகவும் திருப்பி விட்டு, அதன் மூலம் கலவரத்தீயை மூட்டி விட்டு, பகைமையை வளர்ப்பதும் ஊரை விட்டுத் துரத்தி விடுவதும் ஆர்.எஸ்.எஸ்.  வேலையாகும்.

அப்படியில்லை என்றால் முஸ்லிம்களுக்கு எதிராக அதுபோன்ற வதந்தியைக் கிளப்பி விட்டு, கலவரத்தீயை மூட்டி விடுவது என்ற நரித்தனத்தையும் நாதாரித்தனத்தையும் ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடித்து வருகின்றது.

உ.பி.யில் இந்த யுக்தியை பயன்படுத்தியே வெற்றி கண்டது. இந்த இரண்டு வழிமுறைகளையும் தாண்டி இப்போது முஸ்லிம்கள் மிகவும் சிறுபான்மையாக இருக்கும் ஊர்களில் பெண்களைக் கற்பழித்து அதன் மூலம் கலவரத்தீயை மூட்டி  அவர்களை ஊரை விட்டும் துரத்தி அடிக்கின்ற மூன்றாவது யுக்தியை ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார்கள் கையாண்டு வருகின்றனர்.

ஆனால் அவர்களின் அந்த யுக்தி ஆசிஃபாவின் விவகாரத்தில் தோற்றுப் போய்விட்டது. இது அவர்களுக்கு  எதிராக மாபெரும் எதிர் வினையாற்றி விட்டது.

தாங்கள் மூட்டிய அந்தத் தீ கண்ணுக்கெட்டாத ஒரு காட்டில் பற்றிய தீ! அது எட்டு வயது  ஆசிஃபாவோடு அணைந்து போன தீ! அது அந்த ஊரைத் தாண்டிப் பரவாது! காற்றில் பறக்காது  என்று பாஜக பகல் கனவு கண்டு கொண்டிருந்தது.

ஆனால்  அது அணையா ஜோதியாக எரிந்து, கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று எட்டுத் திக்கிலும் பரவி, பாஜகவை கரித்துப் பொசுக்கி, சாம்பலாக ஆக்கிக் கொண்டிருக்கின்றது. சாதி, மத பாகுபாடின்றி அத்தனை சமுதாயங்களையும் பொங்கி எழவைத்து விட்டது. அத்தனை பேர்களையும் ஒரு கயிற்றில் இணைத்து விட்டது.  தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு இது எடுத்துக் காட்டாகி விட்டது.

வரும் தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியாவில் அது படுதோல்வியைச் சந்திக்கும் என்பதற்கு ஆசிஃபாவின் நிகழ்வு அக்னி சாட்சியாகி விட்டது.

அரியணை ஏறிய ஆரியத்தை அது அழிக்காமல் விடாது என்பதை உ.பி. மாநிலம். உனாவ் என்ற இடத்தில் நடந்த கற்பழிப்பு மேலும் ஊர்ஜிதம் செய்கின்றது.

கேரளாவில் நடந்த இடைத்தேர்தலின் போது, ‘‘எங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே பாஜகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’’ என்று அறிவுப்புப் பலகைகள், பதாகைகள் வைக்கும் அளவுக்கு அது பூதாகரமாக உருவெடுத்து விட்டது. இது அல்லாஹ்வின் சூழ்ச்சியாகும்.

அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.

அல்குர் ஆன் 3:54

மொத்தத்தில் ராமராஜ்யம் அமைக்கப் போகிறோம் என்று வந்தவர்கள் காம ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அது பாரதிய ஜனதா பார்ட்டி அல்ல; பலாத்கார ஜல்சா பார்டி என்பது அம்பலமாகிக் கொண்டிருக்கின்றது.

ராம ராஜ்யம் என்பது இவர்கள் தங்கள் ஆரிய சாதிய சாம்ராஜ்யத்தைத் தக்க வைப்பதற்காகக் கையில் எடுத்த ஒரு கற்பனை வாதம் என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டனர்.

———————————————————————————————–

கேள்வி பதில்

விபச்சாரக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால்…

கேள்வி:

சாட்சிகள் இல்லாத நிலையில் விபச்சாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு கூறப்பட்ட இருவரில் ஒருவர் ஆமோதித்து ஒருவர் மறுத்தால் என்ன செய்வது?

பைசல், நெல்லை

பதில் :

ஆண், பெண் ஆகிய இருவரில் விபச்சாரம் செய்ததாக ஒருவர் மட்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொண்டு, ஷரீஅத் சட்டம் வழங்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

விபச்சாரக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்றொருவர் விபச்சாரம் செய்யவில்லை என்று மறுத்துவிட்டால் சாட்சிகள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்கப்படாது.

இதனைக் கீழ்க்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:

கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். அல்லாஹ்வின் சட்டப்படியே எனக்குத் தீர்ப்பளிக்க வேண்டும்’’ என்று சொன்னார்.  அப்போது அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி, “ஆம்! எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்என்று கூறினார். பின்னர் அந்தக் கிராமவாசி என்னைப் பேச அனுமதியுங்கள்என்று கூற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசுஎன்றார்கள்.

அவர், “என் மகன் இவரிடம் பணியாளனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபச்சாரம் செய்து விட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் கல்வியாளர்களிடம் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்என்று கூறினார்.

இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் நூறு ஆடுகளும் (உம்மிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி), “உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபச்சாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்என்று சொன்னார்கள்.

அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாள். ஆகவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 3502

அந்தப் பெண் ஒப்புக் கொண்டால் தண்டனை வழங்குங்கள் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாசகம், ஒருவேளை அந்தப் பெண்  ஒப்புக்கொள்ள மறுத்தால் தண்டனை இல்லை என்பதைக் காட்டுகிறது. அதே சமயம், மறுத்து விட்ட அந்தப் பெண்ணுக்கு மட்டுமே தண்டனை இல்லையே தவிர, ஒப்புக் கொண்ட ஆணுக்கு வழங்கப்பட்ட தண்டனையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த ஹதீஸ் மட்டுமல்ல! விபச்சாரக் குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட எல்லா ஹதீஸ்களிலும் இதேபோன்ற ஒரு நடைமுறையையே அல்லாஹ்வின்  தூதர் கையாண்டுள்ளார்கள்.

புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (விபச்சாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாகஎன்று கூறினார்கள்.

அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராகஎன்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள்.

நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார்கள். அவர், “விபச்சாரக் குற்றத்திலிருந்துஎன்று விடையளித்தார். அப்போது அவர்கள், “இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?” என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “இவர் மது அருந்தியுள்ளாரா?” என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.  அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் விபச்சாரம் செய்தீரா?” என்று கேட்டார்கள். அவர் ஆம்என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், “அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டதுஎன்று கூறினர். வேறு சிலர், “மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, “என்னைக் கல்லால் அடித்துக்கொல்லுங்கள்என்று கூறினார்என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!என்று வேண்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்’’ என்று கூறினார்கள்.

பிறகு அஸ்த்குலத்தின் ஒரு கிளையான ஃகாமித்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாகஎன்று கூறினார்கள். அதற்கு அப்பெண், “மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் என்ன அது?” என்று கேட்டார்கள். அப்பெண், “நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீயா?” என்று கேட்டார்கள். அப்பெண் ஆம்’’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டதுஎன்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப் போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டுவிடவும் நாம் விரும்பவில்லைஎன்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, “அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3499

அதாவது, ஆணும் பெண்ணும் தொடர்புடைய விபச்சாரக் குற்றத்தில், ஒரு பெண் மட்டும் வந்து குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போது நபி (ஸல்) அவர்கள் நான்கு சாட்சியத்தைக் கொண்டு வருமாறு கோரவில்லை. அவர்கள் ஒப்புக் கொள்வதையே தண்டனை நிறைவேற்றுவதற்குப் போதுமான சாட்சியாக எடுத்துக் கொள்கிறார்கள்.

அதேபோன்று மாஇஸ் (ரலி) அவர்கள் வந்து விபச்சாரம் செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த போது, யாருடன் விபச்சாரம் செய்தாய்? அந்தப் பெண்ணை அழைத்து வா! அவளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் ஆராயவில்லை.

எனவே விபச்சாரக் குற்றத்தைப் பொறுத்தவரை ஒருவர் ஒப்புக் கொள்வதே அவரைத் தண்டிப்பதற்குப் போதுமான சாட்சியாகும்.

———————————————————————————————–

மார்க்கம் அறிவோம்! மறுமை வெல்வோம்!

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி. மங்கலம்

எந்தவொரு கொள்கையும் கோட்பாடும் கூறாத அளவுக்கு இஸ்லாம் கல்வியைக் குறித்து அதிகம் போதித்துள்ளது. கல்வி என்று நாம் பொதுவாகச் சொன்னாலும், அதிலுள்ள அடிப்படைத் தன்மைகள், அம்சங்களைக் கவனித்து, அதைப் பல வகைகளாகப் பிரிக்க இயலும். அவற்றுள் முக்கிய ஒன்றான, மார்க்கக் கல்வி பற்றிய சில தகவல்களை இப்போது பார்ப்போம்.

ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு ஏக இறைவனால் தரப்பட்ட வாழ்க்கை முறையே இஸ்லாம். அதன் முக்கிய அடிப்படைகளை அனைத்து முஸ்லிம்களும் அறிந்திருப்பது கட்டாயம். ஆகவேதான், எதிலும் பிறரைப் பார்த்து பேராசையோ பொறாமையோ கொள்ளக் கூடாதெனக் கூறும் மார்க்கம், இந்த விஷயத்திற்கு விதிவிலக்கு வழங்கி இருக்கிறது. இதன் மூலம் மார்க்கம் அறிவதின் அவசியத்தை அறியலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கு வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!என்று (ஆதங்கத்துடன்) கூறினார். 2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்என்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (7528)

கற்றது கையளவு; கல்லாதது உலகளவு என்பார்கள். எல்லோருக்கும் எல்லாமும் தெரியாது. மார்க்கத்தை முழுவதும் அறிந்தவர் எவருமில்லை. எனவே, நமக்குத் தேவையான, தெரியாத மார்க்க செய்திகளைப் பிறரிடம் கேட்டுத் தெளிவு பெறும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொன்னான போதனை பின்வரும் செய்திகளில் பொதிந்துள்ளது.

(அங்கே மூஸா நபியும் அவருடன் இருந்தவரும்) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம். உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?’’ என்று அவரிடம் மூஸா கேட்டார்.

(திருக்குர்ஆன் 18:65,66)

ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (3219)

தம்மை விட அதிகம் அறிந்துள்ள நல்லடியார் ஹிழ்ரு (அலை) அவர்களைச் சந்தித்து அவரிடம் ஞானத்தைப் பெறுவதற்கு மூஸா நபி பெரிதும் முயற்சித்தார்கள்; நெடும் பயணம் மேற்கொண்டார்கள். அதுபோன்று, தமக்கு அருளப்படும் திருக்குர்ஆனைப் பல வட்டார வழக்குகளில் ஓதுவதற்கு நபிகளார் பேராவல் கொண்டார்கள்; ஜிப்ரீலிடம் வலியுறுத்திக் கேட்டார்கள்.

அவர்களிடம் இருந்த ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட இன்று பல மக்களுக்கு இல்லை. இவர்கள் அருள்மறையை எவரிடமும் ஓதக் கற்றுக் கொள்ளாமல் காலத்தைக் கழிப்பதே இதற்குப் போதுமான சான்று.

மார்க்கம் அறியும் எண்ணம் இருக்கிறது; ஆனால் அடுத்தவர்களிடம் கேட்கக் கூச்சமாகவுள்ளது என்று சொல்கிறார்களா? அப்படியாயின், அவர்கள் உடனடியாகத் தங்களது மனநிலையை மாற்றிக் கொள்ளட்டும். ஏனெனில், இதுபோன்று முட்டுக்கட்டை போடும் சிந்தனைகளைத் தூக்கி எறியும் போதுதான் கற்றல் சிறக்கும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரிலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்என்று சொன்னார்கள்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், “அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்து கொள்ளட்டும்என்று (மீண்டும்) சொன்னார்கள்.

உடனே நான், “இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்என்று  பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச் சொன்னேன். மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!என்றார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (552)

இவ்வுலகில் எந்தவொன்றையும் சிரமப்படாமல் பெற்றுக் கொள்ளவே இயலாது. இந்த விதி கல்விக்கும் பொருந்தும். இதைப் புரிந்து மார்க்கத்தை அறிய முடிந்தளவு முனைய வேண்டும். அவ்வாறு நமக்கு முன்னால் வாழ்ந்த பல நன்மக்கள் உழைத்தார்கள்; தியாகம் செய்தார்கள். அதன் பலனாய் சத்தியக் கருத்துகள் நம் கரத்திற்கு எட்டியுள்ளது என்பதை நினைவில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

அபூஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்என்று அபூஹுரைரா(ரலி) கூறிவிட்டு, ‘வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ (திருக்குர்ஆன் 2:159, -160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.

மேலும் தொடர்ந்து மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவில் இருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் மனப்படாம் செய்து கொண்டிருந்தேன்என்று கூறினார்கள். இதை அஃரஜ் (ரஹ்) என்பவர் அறிவித்தார்.

நூல்: புகாரி 118

திண்ணைத் தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது வறுமை நிலையிலும் எண்ணற்ற நபிமொழிகளை அறிந்து கொண்டார்கள்; அடுத்தவர்களுக்கு அறிவித்தார்கள். ஆனால் நாம் எப்படி இருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பாருங்கள்.

திருக்குர்ஆன் உட்பட நபிமொழி நூல்கள் பல மொழிகளிலும் வந்துவிட்டன. எல்லா விதமான வசதி வாய்ப்புகள் இருந்தும் தொழுகை, நோன்பு போன்றவற்றின் அடிப்படை சட்டங்களை அறியாமல் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்வதாயின், இறைநம்பிக்கை கொள்வதிலேயே கோட்டை விட்டுக் கிடக்கிறார்கள்.

இப்படி எதையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு வேலைப் பளுவைக் காரணம் காட்டுகிறார்கள். நேரமே இல்லையென குமுறுகிறார்கள். இத்தகைய நபர்கள் கீழுள்ள செய்திகளை ஒன்றுக்குப் பலமுறை படித்து ஒரு கனம் யோசிக்கட்டும்.

நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (89)

‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி)

நூல்: புகாரி (101)

அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத் – ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் அபூஅப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்என்றார். இதை அபூ வாயில் (ரஹ்) அறிவித்தார்.

நூல்: புகாரி (70)

தினமும் உலகியல் ரீதியாகப் பல்வேறு அலுவல்கள் நமக்கு இருக்கவே செய்யும். அதற்கு வேண்டி அதிலேயே ஒட்டுமொத்தமாக மூழ்கி விடக் கூடாது. இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது குர்ஆன், ஹதீஸைத் தெரிந்து கொள்ள ஒதுக்க வேண்டும்.

நாமிருக்கும் பகுதிகளில், பக்கத்து ஊர்களில் நடக்கும் மார்க்க நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பண்பு நம்மிடம் இருப்பது நல்லது. பயணங்கள் எளிதாகிவிட்ட இக்காலத்தில் இவ்வாறு சென்று வரத் தயங்கும் மக்களுக்குப் பின்வரும் செய்திகளில் தக்க பாடம் இருக்கிறது.

அப்துல்கைஸ் கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இஸ்லாத்தை ஏற்காத முளர் கூட்டத்தினர் வசிக்கிறார்கள். எனவே, யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியாது. எனவே, எங்களுக்குச் சில கட்டளைகளைக் கூறுங்கள். நாங்களும் அதைப் பின்பற்றி எங்களுக்குப் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கும் அறிவிப்போம்என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு நான் நான்கு காரியங்களை ஏவுகிறேன்; நான்கு காரியங்களைத் தடை செய்கிறேன். அவை: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லையென்று உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல்என்று விரலால் எண்ணிச் சொன்னார்கள். மேலும், ‘மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது).

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1398)

நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, ‘நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்என்றார். அதற்கு நான் நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையேஎன்று கூறினேன்.

உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சனை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?’ என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்.

அறிவிப்பவர்: உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி)

நூல்: புகாரி (88)

முந்தைய காலங்களில் தீன் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ளப் பல தூரம் சென்றார்கள். ஆனால் இன்றோ அருகில் இருக்கும் இடங்களுக்குச் செல்வதற்கே சோம்பல் மிகைத்து விடுகிறது; அலட்சியம் ஆட்டிப் படைக்கிறது.

இப்படியிருக்க, வெளியூர் சென்று தங்கியிருந்து மார்க்கம் பயில்வதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மதரஸாக்களுக்குச் செல்வோர் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் இருக்கிறார்கள். இனியாவது இந்நிலை மாற வேண்டும். நபிகளார் காலத்தைப் போன்ற நிலை மீண்டும் மலர வேண்டும்.

சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவில் இல்லை.

அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி)

நூல்: புகாரி (631)

நாம் மார்க்கத்தை அறிய செலவளிக்கும் ஒவ்வொரு நொடிக்கும் மறுமையில் நன்மை கிடைக்கும். ஆகையால் அதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்; ஒதுக்கித் தள்ளாதீர்கள்.

இங்கு, ஒரு முக்கிய வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இம்மையில் இன்பமாக வாழ்வதற்கு உலகக் கல்வியை கற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை. அவற்றை நல்வழியில் பயன்படுத்துவதற்கும் மறுமையில் நன்மை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே சமயம், இக்கல்வியை கற்றுக் கொள்ளாதவர் மறுமையில் குற்றவாளியாக நிற்க மாட்டார். இவற்றை ஏன் படிக்கவில்லை, தெரிந்து கொள்ளவில்லை என்று தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால், மார்க்கம் தொடர்பான கல்வி அப்படியல்ல. மார்க்கத்தை சரிவர அறியாமல் அலட்சியமாக வாழ்பவர் மறுமையில் மாட்டிக் கொள்வார்கள். தப்பும் தவறுமாக வாழ்ந்ததற்கு எந்தவொரு காரணத்தையும் கூற முடியாது.

எனவே, உலக விஷயங்களை அறிந்து கொள்வதோடு ஒதுங்கிக் கொள்ளும் குணத்தை இப்போதே கைவிடுங்கள். அது மட்டும் போதுமென்று முடங்கிக் கொள்ளாமல் சத்தியத்தை அறிய அதிக ஈடுபாடு காட்டுவோமாக! அதன்படி வாழ்ந்து ஈருலகிலும் வெல்வோமாக!

———————————————————————————————–

பதவி இழப்பும் பரிதவிப்பும்

அபூராஜியா

மார்க்கப் பணி செய்வதற்காக அல்லாஹ் சிலருக்குப் பொறுப்பை வழங்குகிறான். இவர்களில் சிலர் தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்தாலோ, பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்படாமல் இருந்தாலோ அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் பெருந்தன்மையுடன்  நடந்து கொள்கிறார்கள்.

அதே வேளையில் வேறு சிலரோ சகிக்க முடியாத அளவிற்குச் சென்று விடுகின்றனர். பொறுப்பிலிருந்து விலகி விட்டாலோ அல்லது தேர்வு செய்யப்படாவிட்டாலோ சிலரின் நோக்கங்களும் செயல்களும் தடுமாற்றமும் தடமாற்றமும் அடைந்துவிடுகிறது.

பொறுப்பில் இல்லை என ஆகிவிட்ட பின் கீழ்க்கண்ட பண்புகள் அவர்களிடம் தாமாகவே புகுந்து விடுகின்றன.

  • புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளையும் நிர்வாகத்தையும் இழிவாகக் கருதுதல்

‘‘பெருமை என்றால் என்னவென்று தெரியுமாசத்தியத்தை மறுப்பதும் -மற்றவர்களை இழிவாக எண்ணுவதுமே (பெருமை ஆகும்)’’ என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 131)

இந்த நபிமொழிக்கு நேர்முரணாக, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை இழிவாகக் கருதி, அவர்களின் அறிவுறுத்தல்களை அவமதிக்கவும் செய்கின்றனர்.

  • தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என கவலைப்படுகின்றனர்.

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

அல்குர்ஆன் 28:83

தன்னை யாரும் கண்டு கொள்வதில்லை, தன்னிடம் ஆலோசனை கேட்பதில்லை, தன்னை முன்னிலைப்படுத்தவில்லை, தன்னைக் கட்டம் கட்டுகிறார்கள் எனக் கற்பனை செய்து கொண்டு மறுமையில் கிடைக்கவிருக்கும் நன்மையை இழக்கிறார்கள்.

  • புதிய நிர்வாகத்தைத் திணறடிக்க, பழைய நிர்வாகம் கூண்டோடு ராஜினாமா செய்வது,

சிலர் தனது சொந்த அலுவல், உடல் நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ராஜினாமா செய்வர். வேறு சிலரோ கூண்டோடு ராஜினாமா செய்தால் புதிய நிர்வாகத்தைத் திணறடிக்கச் செய்திடலாம் எனவும், மீண்டும் தம் கையிலேயே பொறுப்புகள் கிடைத்துவிடும் என்றும் எண்ணி அணி சேர்க்கிறார்கள்.

ஏகத்துவத்தின் எழுச்சிக்கு ஏக இறைவனே மூல காரணம் என்பதை இந்த முன்னாள் பொறுப்பாளர்கள் மறந்து விடுகிறார்கள்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

அல்குர்ஆன் 3:144

உலகமே ஒதுங்கினாலும் உன்னத மார்க்கத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்ற இறை வசனத்தை ஏனோ இவர்கள் மறந்து விடுகின்றனர்.

  • நிர்வாகத்திற்கு எதிராகச் சதி செய்வது.

நிர்வாகத்தைச் சிதைக்க வேண்டும், நிர்வாகம் முடங்க வேண்டும், நிர்வாகிகள் பல மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக சொந்தப் பெயரிலும் சில கள்ளப் பெயர்களிலும் ரகசிய செயல்கள் பல செய்து, சதிவேலையை சாதுரியமாகச் செய்கின்றனர்.

இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலையடையச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கிழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்குர்ஆன் 58:10

ஏதோ நிர்வாகத்திற்கெதிராக ரகசியம் பேசிவிட்டோம், சதிகள் பல செய்துவிட்டோம் என அற்ப மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் நஷ்டப்படுவது இவர்கள் தான் என்பதை உணராமல் இருக்கிறார்கள்.

  • நிர்வாகிகளைப் பற்றி புறமும் அவதூறும் பேசுவது.

செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

(அல்குர்ஆன் 17:36)

நிர்வாகத்திற்கெதிராக ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் அதை நிர்வாகிகளிடம் தான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் பொதுத் தளங்களில் ஊரறியப் புறமும் அவதூறும் பேசுபவர்கள் இந்த வசனத்தைப் பொருட்படுத்துவதில்லை.

  • நிர்வாகிகளைப் பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொள்வது,

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன் 31:18)

மக்களை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் இறைவனின் வெறுப்பிற்கு ஆளாவதை உணர்வதில்லை.

  • தன்னுடைய ஸ்டேட்டஸைத் தக்க வைக்க தினமும் முகநூலில் ஏதாவது ஸ்டேட்டஸ் போடுவது.அதற்கு ஏதாவது லைக் வராதா? கமெண்ட் வராதா? என காத்துக்கிடப்பது.
  • மாநிலத்தின் வழியாக வரும் தகவலை மாவட்ட நிர்வாகம் அறிவதற்கு முன்னால் முகநூலில் முந்திக்கொண்டு அறிவிப்புச் செய்து எனக்கு எல்லாம் தெரியும் என காட்டிக் கொள்வது.
  • நிர்வாகத்தை மதிக்காமல், நான் தலைமையிடம் பேசிவிட்டேன் என பந்தா செய்வது.
  • பிரச்சாரகர்கள் போகிற ஊரெல்லாம் தானும் சென்று, தன்னை ஒரு மாநிலப் பிரதிநிதி போல் படம் காட்டிக் கொள்வது. அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது,
  • பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததும் போய் பிழைப்பைப் பாராமல் பள்ளியில் அமர்ந்து பித்னா பேசுவது. அதிலும் இஷா தொழுகை முடிந்ததும் விடிய விடிய விமர்சனங்களை அள்ளிவிடுவது.

ஆணவம் கொண்டு இரவு நேரங்களில் அதைக் குறை கூறிக் கொண்டு இருந்தீர்கள்.

அல்குர்ஆன் 23:67

  • கிளையில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருப்பது. ஒருபடி மேலே போய் கிளை மர்கஸ்க்கு வராமலேயே இருப்பது.
  • யாரெல்லாம் அசத்தியத்திற்கு ஆள் பிடிக்கிறார்களோ அவர்களின் கருத்துக்களுக்கு ஆதரவளிப்பது.
  • குர்ஆன் கூறும் ஒப்பந்த முறைகளை பைலா என்கிறோம். அந்தக் கூட்டு ஒப்பந்தத்தின் படி பொறுப்பேற்றுச் செயல்பட்டவர் நிர்வாகத்தில் இல்லை என வருகிறபொழுது பைலா விதியை எள்ளி நகையாடுவது.

அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நிறைவேற்றுவார்கள். உடன்படிக்கையை முறிக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 23:20

என்ற இறைவசனத்தை இவர்கள் முரட்டுத் தனமாக மறுக்கிறார்கள்.

அப்பப்பா……!

பதவிக்காக ஒரு நல்ல முஃமின், முனாஃபிக்காக (நயவஞ்சகனாக) ஆகி விடுகிறான்.

பதவி என்பது இரவல் ஆடை போன்றது. அதைக் குறிப்பிட்ட காலம் நாம் போட்டுவிட்டு அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டிய பக்குவம் வேண்டும்.

ஆனால் பதவியை மீன்கள் வாழும் நீர்நிலையாக ஆக்கி விட்டார்கள். மீன் எப்படி நீர் இல்லாவிட்டால் துடிதுடித்து செத்துவிடுமோ அதுபோல பதவி இல்லாவிட்டால் செத்தே போய்விடுவார்கள் போல் தெரிகிறது.

இது ஒருபுறமிருக்க, பொறுப்பிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் சிலரின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.

வெகுசில மக்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் தன்னடக்கமாக, தன் தருணங்களை மிகச் சரியாகக் கடக்கின்றனர். இவர்கள் தப்பே செய்திருந்தாலும் இவர்களின் கட்டுப்பாடு, தன்னடக்கம் ஆகியவற்றால் அல்லாஹ்வே கண்ணியத்தை வழங்கி விடுகிறான்.

வேறு சிலரோ ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானால் ஒட்டுமொத்த ஜமாஅத்தையே அழித்திட வேண்டுமென கச்சை கட்டிக் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

என் மீது நடவடிக்கை எடுத்த ஜமாஅத்தை நாசமாக்காமல் விட மாட்டேன் என முடிவு செய்து, மூர்க்கத்தனமான செயல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.

தன் மீதுள்ள பாரதூரமான தவறுகளையெல்லாம் கொசுவை விட அற்பமாகக் காட்டி, தன் மீதான ஜமாஅத்தின் ஒழுங்கு நடவடிக்கையை சர்வாதிகாரமாகச் சித்தரிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய மதிப்பு மரியாதையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பலர் மீது அபாண்டங்களை அள்ளித் தெளித்து விடுகின்றனர்.

இறுதியில் நிர்வாகத்தை எதிர்த்து, ஜமாஅத்தைப் புறக்கணித்து அசத்தியக் கொள்கையில் போய் அஸ்தமனம் ஆகிவிடுகின்றனர்.

இது இப்படியிருக்க, பல நாட்கள் பொறுப்புக்கு வராதவர்கள் பொறுப்பேற்றவுடன் முன்னாள் நிர்வாகிகளை ஏதோ அசத்தியவாதிகள் போலவும் கிள்ளுக்கீரைகள் போலவும் பார்த்து, குரூப்பிஸம் செய்யத் துவங்கி விடுகின்றனர்.

பொறுப்பு, நிர்வாகம் இதுவெல்லாம் எதற்காக?

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அனைத்து மக்களும் சுவாசிக்க வேண்டும். அதற்காக அனைவரும் அரும்பாடுபட வேண்டும். அதனை வழிநடத்தவே நிர்வாகம்.

இதை உணராத, பக்குவமற்ற நிலையில் இருக்கும் சிலரால் ஜமாஅத்தின் செயல்கள் முடங்கி, ஜமாஅத்தின் பிரச்சாரப் பயணமே திசை மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.

உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டுதுண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக (அவர்களுக்குச் சாதகமாக) உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான்.  நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

அல்குர்ஆன் 16:92

இந்நாள், முன்னாள் நிர்வாகிகளே! முக்கியஸ்தர்களே! அற்பப் பதவிக்காக அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க நினைக்காதீர்கள்! அழிந்து போகாதீர்கள்!!

———————————————————————————————–

சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்!

ஷம்சுல்லுஹா

சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் இஸ்லாம் ஓர் எளிய  மார்க்கமாகும். ஆனால் அது நடைமுறையில் கடினமான மார்க்கமாக ஆக்கப்பட்டு விட்டது. மார்க்கம் மக்களுக்கு இரண்டு துறைகளில் சட்ட திட்டங்களையும் வழிகாட்டல்களையும் அளித்திருக்கின்றது.

  1. வணக்கவியல்,
  2. வாழ்வியல்.

வணக்கவியல் என்றால் உலூ, தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் குறிக்கும். வாழ்வியல் என்றால் திருமணம், விவாகரத்து, மரணம், பாகப்பிரிவினை, வணிகம், விவசாயம் போன்றவற்றைக் குறிக்கும். வணக்கவியல், வாழ்வியலுக்கு  இது ஒரு சுருக்கமான விளக்கமாகும்.

இவ்விரண்டு துறைகளிலும் மார்க்கம் எளிமையையும் இலகுவையும் மையமாகக் கொண்டு தான் மக்களுக்கு சட்ட திட்டங்களை, வழிகாட்டல்களை அளித்திருக்கின்றது.   அவற்றை தவ்ஹீது ஜமாஅத் மக்களிடத்தில் அல்லாஹ்வின் அருளால் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. விரும்புவோர் இதை ஆன்லைன் பிஜே இணயதளத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற தலைப்பின் கீழ் வெளியான கட்டுரையில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் அந்தக் கட்டுரையில் ஜகாத், நோன்பு, ஹஜ் ஆகிய வணக்கங்களில் அல்லாஹ் வழங்கியிருக்கின்ற எளிமையும், இலகுவும் இடம் பெறவில்லை. எனவே, இந்த வணக்கங்களில் இடம்பெற்றிருக்கின்ற எளிமையையும், இலகுவையும் எடுத்துக் கூறும் விதமாக, அதிலும் குறிப்பாக ரமளான் மாதம் வருவதால் நோன்பில் மார்க்கம் காட்டிய இலகுவையும் மக்களால் புகுத்தப்பட்டிருக்கும் சிரமத்தையும் அடையாளம்  காட்டும்  விதமாக இந்தக் கட்டுரை இங்கு தரப்படுகின்றது.

சில நாட்களில் ரமளான் மாதம் துவங்க உள்ளது. அந்த ரமளான் மாதம் துவக்கமே  கடுமையாகவும், கொடுமையாகவும் ஆக்கப்பட்டு விட்டது. அது தான் பிறை பார்க்கும் விஷயமாகும்.

பிறையில் மயிர் பிளக்கும் சர்ச்சை!

ரமளானை முடிவு செய்வதற்கு ஓர் எளிய வழி முறையை முஸ்லிம்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 1909, 1907

இதற்காக மார்க்கம், மயிர் பிளக்கும் சர்ச்சையில் மக்களை இறக்கி விடவில்லை. புகாரியில் கண்ட ஹதீஸின் அடிப்படையில் புறக்கண்களால் பிறையைப் பார்க்கச் சொல்கின்றது. மேகமூட்டமாக இருந்தால் அடுத்த நாளை ரமளான் மாதமாக  இறுதி செய்யச் சொல்கின்றது. இது போன்று  நோன்பை விடுவதற்கும் மார்க்கம் இதே அளவுகோலைத் தான்  கொடுத்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிறைச் சட்டம்  கிராமத்தில் வாழ்கின்ற படிக்காத ஒரு பட்டிக்காட்டுப் பாட்டிக்கும், பாமர சாதிக்கும் புரியுமளவுக்குப் பரம எளிமையான முறையில் அமைந்திருக்கின்றது. அமாவாசை நாளில் போய் ஒரு பாட்டியிடம் இன்று பிறை தெரிந்தது என்று சொன்னால் இன்று எப்படிப் பிறை தெரியும் என்று மறுத்து விடுவார்.

ஆனால் அமாவாசை அன்றே தலைப்பிறை என்று  கூறிக்கொண்டு மெத்தப் படித்த மேதாவிகள், மேற்பல் முளைத்த நாசா அறிவியல் விஞ்ஞானிகள் கிளம்பி விட்டார்கள். அதனால் பிறைச் சட்டத்தை படித்த, பண்டித  வர்க்கம் தான்  விளங்க முடியும் என்ற அளவுக்கு ஒரு கூட்டம் கடுமையாக ஆக்கிவிட்டது. அதன் மூலம் மார்க்கத்தை மிகவும் கடுமையாக மக்களுக்குக் காட்டுகின்றது.

இதன் எதிர்விளைவுகள் என்ன?

இதுவரை  இரண்டு பெருநாட்களாக இருந்ததை  மூன்று பெருநாட்களாக ஆக்கி, சமுதாயத்தைப் பிறை அடிப்படையில் பிரித்து சாதனை (?) படைத்தது தான்!

இரவுத் தொழுகை எட்டா ? இருபதா?

ரமளான் மாதம் ஆரம்பித்ததும் இரவுத் தொழுகை துவங்கி விடும். அந்த ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டியும் கற்றும் தராத  முதுகந்தண்டை முறிக்கச் செய்கின்ற பாரமும் பளுவும் இரவுத் தொழுகையைத்  தொழுபவர்  மீது ஏற்றப்பட்டுள்ளது. அதை இப்போது முதலில் பார்ப்போம்:

அபூ ஸலமா அறிவித்தார்.

ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்என்று விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 1147

இந்த ஹதீஸ் எதை உணர்த்துகின்றது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாழ்நாள் முழுவதும் 8+3=11 தான் தொழுதிருக்கின்றார்கள் என்பதைத் தான் உணர்த்துகின்றது.  ஆனால் 20+3=23 என்ற எண்ணிக்கையில் ஜமாஅத்தாகத் தொழுவது மக்கள் மீது ஏற்றப்படுகின்ற, மார்க்கத்தில் இல்லாத பாரமும்  பளுவுமாகும். அதைத் தவிர்த்து தவ்ஹீது ஜமாஅத்  இந்த ஹதீஸ் அடிப்படையில் 8+3=11 அறிமுகப்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், அமலும் படுத்திக் காட்டிவிட்டது.

ரமளானின் பிந்திய 10 இரவுகளில் பிந்திய நேரத்தில் நின்று தொழக் கூடிய மக்களின் தேட்டத்தை நிறைவேற்றும் வகையில் தவ்ஹீது ஜமாஅத் தனது மர்கஸ்களில்  பிந்திய இரவுகளில் இந்தத் தொழுகைக்கு ஏற்பாடு செய்தது. இதில் மக்களுக்கு நாட்டம் ஏற்பட்டு பிந்திய இரவுகள் தவ்ஹீது ஜமாஅத்தின் மர்கஸ்கள் நிரம்பி வழிய ஆரம்பித்ததும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தங்கள் பள்ளிகளிலும் இந்த ஏற்பாட்டைச் செய்கின்றார்கள்!

என்ன பெயரில்? தஹஜ்ஜுத் என்ற பெயரில் 8+3=11 தொழுகை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.  ஏற்கனவே முந்திய இரவுகளில் 20+3=23 தொழுது முடித்து விடுகின்றார்கள். அதுவே ஒரு சிரமம். இதில் இவர்கள் 23+11=34, அல்லது 23+8=31 தொழுதால் இன்னமும் மிகப் பெரிய சிரமம்!

எல்லாம் வல்ல  அல்லாஹ் திருக்குர்ஆனில்

‘‘உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்  (அல்குர்ஆன்   22:78) என்று சொல்கின்றான்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்  (அல்குர்ஆன் 5:6)  என்று கூறுகின்றான்.

ஆனால் இவர்களோ மார்க்கத்தில் சிரமத்திற்கு மேல் சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு எந்தச் சிரமமும் கொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இதை இரவுத் தொழுகை விஷயத்திலேயே வெளிப்படுத்திக் காட்டுகின்றார்கள்.

ஒரு ரமளான் மாதத்தில், நபி (ஸல்)  போல் இரவுத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுகின்றார்கள். அவ்வளவு தான். பள்ளிவாசல் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டது. அதன் விளைவைத் தான் கீழ்க்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, ‘நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!எனக் கூறினார்கள்.

நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி  2012

பொதுவாக அன்றிலிருந்து இன்று வரை ரமளான் மாதத்தில் அதிகமான நன்மைகளைச் செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நபித் தோழர்களைச் சொல்லவே வேண்டியதில்லை. நபி (ஸல்) அவர்களுடன்  இரவுத் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழ வந்தது அந்த அடிப்படையில் தான். அவர்களின் ஆர்வ மேலீடு நபி (ஸல்) அவர்களை அச்சத்தில் ஆழ்த்தி விட்டது. அதனால் அவர்கள் தொடர்ந்து தொழுவதை விட்டும் பின்வாங்கி விட்டார்கள்.  இது நபி (ஸல்) அவர்கள் இந்தச் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள இரக்கத்தையும் அன்பையும் தான் காட்டுகின்றது. இது தொழுகை தொடர்பாக  மார்க்கம் வழங்கிய சலுகையும் சவுகரியமும் ஆகும்; எளிமையும் இலகுவுமாகும்.

தொடர் நோன்பு  – தூதரின் கண்டனம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர் நோன்பு நோற்பார்கள். அதாவது சூரியன் மறைந்ததும் நோன்பு துறக்கமாட்டார்கள். சஹ்ர் உணவும் சாப்பிடமாட்டார்கள். இப்படித் தொடர் நோன்பு நோற்பார்கள். இதைப் பார்த்து நபித் தோழர்களும் நோற்கலானார்கள். உடனே தோழர்கள் மீது இரக்கம் கொண்டு  நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தார்கள்.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மக்களின் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1964

அவர்கள் மீறியும் தொடர் நோன்பு வைப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்  இன்னும் கடுமையாக கண்டித்தார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?’ என்றார்கள்.

தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள்.

நூல்: புகாரி 1965

இந்த நிகழ்வும் நபித்தோழர்கள் மனிதர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, எல்லை தாண்டும் போது அவர்கள் மீது அதாவது ஒட்டுமொத்த தனது சமுதாயத்தின் மீது எல்லை கடந்த இரக்கம் கொண்டதால் அவர்களை இந்தத் தொடர் நோன்பு நோற்பதை விட்டும் தடுத்து விட்டார்கள்.

நோன்புக்கும் ஒரு வரம்பு!

பொதுவாக வணக்கத்தில் வரம்பு தாண்டுவது என்பது மனித இயல்பு. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓரு போதும் அனுமதிக்கவில்லை. அப்துல்லாஹ்  பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

அவர்கள் பகலெல்லாம் நோன்பு நோற்பவர்களாகவும் இரவெல்லாம் நின்று தொழுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மனைவியின் அதிருப்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வரவே, உடனே கூப்பிட்டு அனுப்புகின்றார்கள். அவர்களிடம் விசாரிக்கும் போது ஒப்புக் கொள்கின்றார்கள்.

அதனால் அவர்களின் வேகத்தைக் கவனத்தில் கொண்டு  கீழே இருந்து மேலே வருகின்றார்கள்.  மாதம் 3 நாட்கள் நோன்பு நோற்றுக் கொள் என்று சொன்னதும் அவர் அதுவும் பற்றாது என்று மறுக்கிறார். அப்படியானால் வாரம் 3 என்று நபி (ஸல்) அவர்கள் கொஞ்சம் மேலே வருகின்றார்கள். அதை விடவும் கூடுதலாகச் செய்ய முடியும் என்று சொன்னதும் ஒரு நாள் நோன்பு, ஒரு நாள் துறப்பு என்று வரம்பு நிர்ணயித்து விடுகின்றார்கள். அதற்கு மேல் நோன்பு நோற்றால் அது நோன்பல்ல, அதாவது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்படாது என்று  கூறிவிடுகின்றார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?’ என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் ஆம்!என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்!என்றார்கள். அதற்கு நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்!என்று கூறினார்கள்

நூல்: புகாரி 1979

ஓதும் குர்ஆனுக்கும் விதித்த வரம்பு

இதே அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் ஒரு குர்ஆனை முடிப்பவர்களாக இருந்தார்கள். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரம்பு நிர்ணயிக்கின்றார்கள். நோன்பைப் போன்று கீழே இருந்து மேலே வருகின்றார்கள். மாதத்திற்கு ஒரு முறை குர்ஆனை முடி என்று சொல்கின்றார்கள். அதற்கு மேலும் முடியும் என்று அவர் சொன்னதும்  வாரம் ஒன்று என்று சொல்கின்றார்கள். அதற்கும் கூடுதலாக முடியும் என்று சொன்னதும் 3 நாட்களுக்கு ஒரு குர்ஆன் என்று எல்லை நிர்ணயித்து விடுகின்றார்கள்.

(‘குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்என்று கேட்டார்கள். நான், ‘ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)என்று சொன்னேன். அவர்கள், ‘மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை முழுமையாக) ஓதிக்கொள்என்று கூறினார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்என்று கூறினேன். இரண்டு நாள்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!என்று கூறினார்கள். நான் இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக் கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க் கொள்என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.

நூல்: புகாரி 5052

ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!’’ என்றார்கள். இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது!’’ என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில், “மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1978

இவ்வளவு அறிவுரையையும் சொல்லி விட்டு நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய விளைவையும் சொல்லிக் காட்டுகின்றார்கள்.

அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அது காலமெல்லாம் நோன்பு நோற்றதாகும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3419

அத்துடன் உனக்கும் உன்னைச் சார்ந்தவர் களுக்கும் நீ செய்ய வேண்டிய கடமை உள்ளது என்று அறிவுறுத்துகின்றார்கள்.

உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1975

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்ளாத அவர்கள், பிந்திய காலத்தில் அவர்கள் அளித்த சலுகையை நான் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாதா? என்று வருத்தப்பட்டதை நாம் பார்க்க முடிகின்றது.

வாழ்நாள் உனக்கு நீடிக்கும் என்று உனக்கு தெரியாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறிய அந்த நிலைக்கு நான் வந்து விட்டேன்.  நான் முதுமை அடைந்த போது நபியின் சலுகையை நான் ஏற்றிருக்கக் கூடாதா? என்று நான் சொல்லிக்கொண்டேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ்

நூல்: முஸ்லிம் எண்: 1963

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களின் இயல்பை நன்கு புரிந்தவர்கள். அதனால் அந்த இயல்பைத் தாண்டி ஒரு மனிதன் வணக்கத்தில் ஈடுபட்டால் அதன் எதிர்விளைவு எங்கு போய் முடியும் என்பதை நன்கு அவர்கள் கவனித்து தான் வரம்பு கடப்பதை அனுமதிக்கவில்லை.

உணவும் இல்லை! உறவும் இல்லை!

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் நோன்பு துறந்ததும் உணவு உண்ணாமல் தூங்கி விட்டால் அவ்வளவு தான்! அடுத்த நாள் நோன்பு துறக்கும் வரை எதுவும் சாப்பிட முடியாது. அது மட்டுமல்லாமல் நோன்பு துறந்தாலும் இரவில் உடலுறவுக்கும் அனுமதியில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா (ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?’ என்று கேட்டார்; அவரின் மனைவி, ‘இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதுஎன்றார். நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார்.

இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்ட போது, ‘நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

நூல்: புகாரி 1915

இது தொடர்பாக அல்லாஹ் இறக்கி அருளிய அந்த வசனத்தை இப்போது பார்ப்போம்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!

அல்குர்ஆன் 2:187

இப்படி ஒரு சலுகை இல்லையென்றால் நமது நிலை என்னவாக இருக்கும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். இங்கு நாம் பயணிக்கின்ற, சிரமம் இல்லாத  அந்த தூய மார்க்கத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நோயாளியும் நோன்பாளியும்

உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.

அல்குர்ஆன் 2:184, 185

இந்த வசனங்கள் மனிதனுக்கு நோன்பை கடமையாக்கியிருக்கின்றன. அதே சமயம் அவ்வசனங்கள்  நோயாளி, பயணிக்கு சலுகை அளிக்கின்றன. நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இந்த சலுகையின் கீழ் மாதவிலக்குப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் பெண்கள் ஆகியோரும் அடங்குவர்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 508

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: நஸயீ 2276

களாச் செய்வதற்குரிய அவகாசம் அடுத்த  ஆண்டு வரை அளிக்கப்பட்டிருப்பதும் மார்க்கம் அளித்திருக்கும் மாபெரும் சலுகையாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது

ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம்’’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1950

பாரத்தை சுமக்கும் தீராத நோயாளிகள்

மேலே  உள்ள சாரார் ரமளான் முடிந்ததும் களாச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்.  இன்னொரு சாரார் இருக்கின்றனர், அவர்கள் தள்ளாத முதியவர்கள் மற்றும்  தீராத நோயாளிகள் ஆவர். அவர்கள் நிரந்தரமாக நோன்பு நோற்பதிலிருந்து  விதிவிலக்கு பெற்றவர்கள்.

முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர்காலத்தில் நோன்பைக் களாச் செய்ய இவர்களால் இயலாது. ஏனெனில் எதிர்காலத்தில் மேலும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள். இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.

முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சிலர், எண்பது வயதிலும் திடகாத்திரமாக இருப்பார்கள். வேறு சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து விடுவார்கள். முதுமையுடன் நோன்பு நோற்க இயலாத நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் விதிவிலக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

நோன்பு வைப்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களின் செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும். இது தான் உயர்ந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லியிருப்பார்கள்.

பயணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோற்கலாம் என்று கூறியது போல் இந்த நோயாளிகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.

தீராத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும்.  எனவே இவர்கள் நோன்பை விட்டு விடலாம்.

நோன்பிலிருந்து விதிவிலக்குப் பெற்ற அவர்கள் நோன்பை விட்டதற்குப் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சுமையும் பாரமும் அவர்கள் மீது தவறாகச் சுமத்தப்பட்டுள்ளது.  அது சரியா? என்பதை இப்போது பார்ப்போம்.

நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒரு நோன்பை விடுவதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற கருத்தில் அதிகமான மக்கள் உள்ளனர். நாமும் இக்கருத்தில் தான் இருந்தோம். ஆனால் ஆய்வு செய்யும் போது நோன்பு நோற்க இயலாதவர்களுக்கு நோன்பு நோற்கும் கடமையும் இல்லை. அவர்கள் இதற்காகப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை என்பது தான் சரியான கருத்தாகத் தெரிகிறது.

ஹஜ் செய்ய வசதியில்லாதவர் ஹஜ் செய்யாவிட்டால் அல்லாஹ் அவரை விசாரிக்க மாட்டான். ஏனெனில் அவருக்கு ஹஜ் கடமையாக ஆகவில்லை.

அது போல் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் நோன்பு தான் நோற்க வேண்டும். இயலாதவர் நோன்பும் நோற்க வேண்டியதில்லை. அவருக்கு நோன்பு கடமையாக ஆகாததால் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

இது பற்றிய முழுவிபரத்தைப் பின்வரும் இணைப்பில் பார்வையிடவும்.

https://onlinepj.com/47-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf/721

இது போன்று நோன்பின் போது அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாத எத்தனையோ பாரங்களையும் பளுக்களையும் சமுதாயத்தின் மீது மார்க்கம் என்ற பெயரால் சுமத்தியிருக்கின்றார்கள். அதை நோன்பு என்ற புத்தகத்தில் விரிவாகப் பார்த்துக் கொள்ளலாம்.

———————————————————————————————–

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

இப்னு தைமிய்யாவின் தவறான கருத்துக்கள்

அபூ அதீபா

நவீன ஸலபிக் கொள்கையினரின் முன்னோடிகளில் ஒருவர் இமாம் இப்னு தைமிய்யா ஆவார்கள். இப்னு தைமிய்யா அவர்கள் ஏராளமான ஷிர்க்கான காரியங்களையும், பித்அத்துக்களையும் ஒழிப்பதில் முன்னோடியாகவும், தியாகியாகவும் இருந்துள்ளார்.

மார்க்கத்திற்காக இப்னு தைமிய்யா செய்த தியாகங்களையும் ஆய்வுகளையும் மதித்துப் போற்றுகின்ற அதேவேளையில் அவருடைய அனைத்துக் கருத்துக்களுமே சரியானவை தான் என்று நம்பிக்கை கொள்ளும் வழிகேட்டிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நவீன ஸலபிக் கொள்கையினர், சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது போன்ற பல்வேறு வழிகேடுகளுக்குக் காரணமே இப்னு தைமிய்யா அவர்களின் கருத்துக்கள் தான்.

இன்றைய நவீன ஸலபிகள் இப்னு தைமிய்யா அவர்களின் தவறான கருத்துக்களை அது சரிதான் என முட்டுக் கொடுப்பதற்கு முன்வருவார்களே தவிர அது தவறு என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அல்லது சிறு சிறு விஷயங்களுக்குக் கூட தவ்ஹீத் ஜமாஅத்தை மிகக் கடுமையாக விமர்சிப்பதைப் போன்று இப்னு தைமிய்யாவை விமர்சிக்க மாட்டார்கள். இப்னு தைமிய்யாவை விமர்சித்தால் அவர்களுக்கு கிடைக்கும் சவூதி சல்லிக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற ஒரே காரணம் தான்.

இப்னு தைமிய்யா அவர்கள் மிகச் சிறந்த அறிஞர் என்றாலும் அவரிடமும் பாரதூரமான பல மூட நம்பிக்கைகள் நிறைந்து காணப்பட்டுள்ளன. இன்றைய நவீன ஸலபிகள் சூனியம் விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியக் கருத்துக்களை எதிர்ப்பதற்கு அடித்தளமே இப்னு தைமிய்யா அவர்களின் தவறான கருத்துக்கள் தான் என்றால் அது மிகையாகாது.

வழிகெட்ட தரீக்காவினரும், கப்ரு வணங்கிகளும் அவர்கள் நல்லோர்கள் எனக் கருதும் இறந்தவர்களுக்கு இறையாற்றலைக் கொடுப்பதைப் போன்றே இப்னுதைமிய்யா அவர்களும் அவர் நல்லடியாராகக் கருதுபவர்களுக்கும், அல்லாஹ்வினாலும், அவனுடைய தூதரினாலும் நல்லடியார் என்று  நற்சான்று வழங்கப்பட்டவர்களுக்கும் இறைவனுடைய ஆற்றலை வழங்கி அவர்களை இறைவனுக்கு இணையானவர்களாக ஆக்கியுள்ளார்.

இப்னுதைமிய்யாவின் இதுபோன்ற தவறான கருத்துக்களில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.

இறைத்தூதர்களை விட உயர்ந்த இறையடியார்கள்?

அல்லாஹ் பல்வேறு நபிமார்களின் மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்.

இப்றாஹிம் (அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்ட போது நெருப்பு அவருக்குக் குளிராகவும், சாந்தி மிக்கதாகவும் ஆகியது. இது இப்றாஹிம் (அலை) அவர்களின் மூலம் இறைவன் நிகழ்த்திய மிகப்பெரும் அற்புதம் ஆகும்.

அது போன்று மூஸா (அலை) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தையும் அல்லாஹ் கடலைப் பிளந்து காப்பாற்றினான்.

ஈஸா (அலை) அவர்களின் மூலம் இறந்தவர்களை அல்லாஹ் உயிர்பித்தான், குருடர்களைப் பார்க்க வைத்தான், செவிடர்களைக் கேட்க வைத்தான்.

இவ்வாறு பல நபிமார்களுக்குப் பல்வேறு அற்புதங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். இந்த நபிமார்களைப் போன்று கியாமத் நாள் வரை வரும் நல்லடியார்களும் அற்புதங்களைச் செய்ய முடியும் என்று இப்னு தைமிய்யா வாதிக்கின்றார்.

இப்னு தைமிய்யா அவர்கள் தம்முடைய ‘‘அல்ஃபுர்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான்” என்ற நூலில் இதற்குச் சான்றாக எடுத்து வைக்கும் சான்றுகளைப் பாருங்கள்.

قال بعض العلماء: ما من آية لنبي من الأنبياء السابقين، إلا ولرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مثلها. فأورد عليهم أن الرسول صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لم يلق في النار فيخرج حيا، كما حصل ذلك لإبراهيم .فأجيب بأنه جرى ذلك لأتباع الرسول عليه الصلاة والسلام، كما ذكره المؤرخون عن أبي مسلم الخولاني، وإذا أكرم أتباع الرسول عليه الصلاة والسلام بجنس هذا لأمر الخارق للعادة، دل ذلك على أن دين النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حق، لأنه مؤيد بجنس هذه الآية التي حصلت لإبراهيم . (الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(

முந்தைய நபிமார்களுக்கு நடந்த எந்த ஒரு அற்புதமாக இருந்தாலும் அது போன்று நபி (ஸல்) அவர்களுக்கும் நடந்துள்ளது என சில உலமாக்கள் கூறுகின்றனர்.

இதற்கு எதிராக, ‘இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு நடந்ததைப் போன்று நபி (ஸல்) அவர்கள் நெருப்பில் போடப்படவுமில்லை. அவர்கள் அதிலிருந்து உயிரோடு வெளியேறவுமில்லை’ என்று சிலர் கேட்கின்றனர்.

அதற்குப் பின்வருமாறு பதிலளிக்கப்படுகிறது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு நடந்துள்ளது. அபூ முஸ்லிம் ஹவ்லானி என்பாருக்கு இவ்வாறு நடந்துள்ளதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67)

‘‘அபூ முஸ்லிம் அல்ஹவ்லானி” என்பார் இறை நேசர் என்றும், அவர் இப்றாஹிம் நபியைப் போன்று நெருப்பில் போடப்பட்டும் நெருப்பில் எரியாமல் உயிரோடு மீண்டு வந்தார் என்றும் இப்னு தைமிய்யா குறிப்பிடுகிறார்.

இந்த ‘‘அபூ முஸ்லிம் அல்ஹவ்லானி” சம்பவம் சற்று விரிவாகவும் இப்னு தைமிய்யாவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 293(

وَطَلَبَهُ الْأَسْوَدُ العنسي لَمَّا ادَّعَى النُّبُوَّةَ فَقَالَ لَهُ : أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ . قَالَ مَا أَسْمَعُ قَالَ أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ؟ قَالَ نَعَمْ فَأَمَرَ بِنَارِ فَأُلْقِيَ فِيهَا فَوَجَدُوهُ قَائِمًا يُصَلِّي فِيهَا وَقَدْ صَارَتْ عَلَيْهِ بَرْدًا وَسَلَامًا (2)؛ وَقَدِمَ الْمَدِينَةَ بَعْدَ مَوْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَجْلَسَهُ عُمَرُ بَيْنَهُ وَبَيْن أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَقَالَ : الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يُمِتْنِي حَتَّى أَرَى مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ فُعِلَ بِهِ كَمَا فُعِلَ بِإِبْرَاهِيمَ خَلِيلِ اللَّهِ (3). وَوَضَعَتْ لَهُ جَارِيَةٌ السُّمَّ فِي طَعَامِهِ فَلَمْ يَضُرَّهُ . وَخَبَّبَتِ امْرَأَةٌ عَلَيْهِ زَوْجَتَهُ فَدَعَا عَلَيْهَا فَعَمِيَتْ وَجَاءَتْ وَتَابَتْ فَدَعَا لَهَا فَرَدَّ اللَّهُ عَلَيْهَا بَصَرَهَا .

அஸ்வதுல் அனஸி என்பவன் தன்னை நபி என்று வாதிட்டபோது அவன் அபூ முஸ்லிம் அல்ஹவ்லானியிடம் ‘‘நான் இறைத்தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” எனக் கேட்டான். அதற்கவர் ‘‘நான் எதையும் செவியேற்கவில்லை” எனப் பதிலளித்தார். ‘‘முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா?” என அஸ்வத் அனஸி கேட்டான். அதற்கு ஹவ்லானி ‘‘ஆம்” என்று கூறினார். உடனே நெருப்பை மூட்டுமாறுமாறு கட்டளையிட்டான். அவர் அதில் போடப்பட்டார். அவரை அந்த நெருப்பிலே நின்று தொழுபவராக கண்டார்கள். அது அவருக்கு குளிர்ச்சியாகவும் சாந்திமிக்கதாகவும் மாறியது.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு ‘‘அபூ முஸ்லிம் ஹவ்லானி” மதீனா வந்தார். உமர் (ரலி) அவர்கள் அவரை தனக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு முன்பாகவும் அமரவைத்து ‘‘அல்லாஹ்வினுடைய உற்ற தோழர் இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு நிகழ்த்தப்பட்டதைப் போன்று நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் நிகழ்த்தப்பட்ட ஒருவரைப் பார்க்கும் வரை என்னை மரணிக்க வைக்காத அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார்.

ஒரு அடிமைப் பெண் அவருடைய உணவிலே விஷத்தைக் கலந்தாள். ஆனால் அந்த விஷம் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மற்றொரு பெண் அவருக்கு எதிராக அவருடைய மனைவிக்கு சூழ்ச்சி செய்தாள். அவளுக்கு எதிராக இவர் பிரார்த்தனை செய்ததும் அவள் கண்பார்வை இழந்து குருடாகி விட்டாள். அவர் தவ்பா செய்ததும் அவளுக்காகப் பிரார்த்தித்தார். அல்லாஹ் அவளுக்கு பார்வையை மீண்டும் வழங்கினான்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 293)

அபூ முஸ்லிம் அல்ஹவ்லானி என்பார் நல்லடியார் என்று இப்னு தைமிய்யா முடிவு செய்ததுடன் படைப்பினங்களிலேயே மிகச் சிறந்தவரும், அல்லாஹ்வின் உற்ற தோழருமாகிய இப்றாஹிம் நபிக்கு நிகழ்ந்ததைப் போன்று அவருக்கு நடந்தது என்றும், விஷம் அவரைப் பாதிக்கவில்லை என்றும், அவர் பிரார்த்தித்தால் உடனே அல்லாஹ் அவருக்கு செய்து கொடுப்பான் என்றும் குறிப்பிடுகிறார்.

இப்னு தைமிய்யா குறிப்பிடும் இந்த அபத்தம் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானது. இணை வைப்பில் தள்ளும் நம்பிக்கை என்பதை இப்னு தைமிய்யா எடுத்துரைக்கும் மற்ற சில அபத்தங்களைப் பார்த்துவிட்டு விரிவாகக் காண்போம்.

தண்ணீரில் நடந்த ‘‘அலா இப்னு ஹள்ரமீ”

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(

وأورد عليهم أن البحر لم يفلق للنبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وقد فلق لموسى !فأجيب بأنه حصل لهذه الأمة فيما يتعلق في البحر شيء أعظم مما حصل لموسى، وهو المشي على الماء، كما في قصة العلاء بن الحضرمي، حيث مشوا على ظهر الماء، وهذا أعظم مما حصل لموسى، مشى على أرض يابسة.

மூஸா (அலை) அவர்களுக்கு கடல் பிளந்ததைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்குக் கடல் பிளக்கவில்லை என்று கேட்பவர்களுக்குப் பின்வருமாறு பதிலளிக்கப்படுகிறது.

கடல் தொடர்பாக  மூஸா (அலை) அவர்களுக்கு நடந்ததை விட மிகப் பெரும் அற்புதம் இந்த உம்மத்திற்கு நடந்துள்ளது. அதுதான் தண்ணீரின் மீது நடந்தது. ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரின் சம்பவத்திலே இவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் தண்ணீரின் மீது நடந்துள்ளார்கள். இது மூஸாவிற்கு நிகழ்ந்ததை விட மிகப் பெரும் அற்புதமாகும். மூஸா (அலை) அவர்களோ காய்ந்த தரையில்தான் நடந்தார்கள்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67)

‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பார் மூஸா (அலை) அவர்களை விட மிக மேலானவர் என்ற வழிகெட்டக் கருத்தையும் இப்னுதைமிய்யா விதைக்க நாடுகிறார்.

நவீன ஸலபிகள் தங்களை இறையச்சமுடைய வர்களாகவும், பிற மக்களை விட மேலானவர்கள் என்று தனித்துக் காட்டுவதற்காக, தொப்பிக்கு மேல் முக்காடு போடுவது, ஜுப்பா அணிவது போன்ற காரியங்களைச் செய்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படை இப்னு தைமிய்யாவின் இது போன்ற கருத்துக்கள்தான்.

‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரைப் பற்றி இப்னு தைமிய்யா மற்றொரு இடத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 292)

وَالْعَلَاءُ بْنُ الْحَضْرَمِيِّ “ كَانَ عَامِلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْبَحْرَيْنِ وَكَانَ يَقُولُ فِي دُعَائِهِ : يَا عَلِيمُ يَا حَلِيمُ يَا عَلِيُّ يَا عَظِيمُ فَيُسْتَجَابُ لَهُ وَدَعَا اللَّهَ بِأَنْ يُسْقُوا وَيَتَوَضَّئُوا لَمَّا عَدِمُوا الْمَاءَ وَالْإِسْقَاءَ لِمَا بَعْدَهُمْ فَأُجِيبَ وَدَعَا اللَّهَ لَمَّا اعْتَرَضَهُمْ الْبَحْرُ وَلَمْ يَقْدِرُوا عَلَى الْمُرُورِ بِخُيُولِهِمْ فَمَرُّوا كُلُّهُمْ عَلَى الْمَاءِ مَا ابْتَلَّتْ سُرُوجُ خُيُولِهِمْ ؛ وَدَعَا اللَّهَ أَنْ لَا يَرَوْا جَسَدَهُ إذَا مَاتَ فَلَمْ يَجِدُوهُ فِي اللَّحْدِ

‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பார் ‘‘பஹ்ரைன்” பகுதிக்கு நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்தார். அவர் பிரார்த்தனை செய்யும் போது ‘‘யாவற்றையும் அறிந்தவனே, சகிப்புத்தன்மை மிக்கவனே, உயர்ந்தவனே, மகத்துமிக்கவனே” என்று கூறினார். எனவே அவருக்கு பதிலளிக்கப்பட்டது. (தாகத்திற்கு) புகட்டுவதற்கும், உலூச் செய்வதற்கும் தண்ணீர் இல்லாமல் போன போது குடிப்பதற்காகவும், உலூச் செய்வதற்காகவும் (தண்ணீர் கேட்டு) பிரார்த்தித்தார். உடனே அதற்கு பதிலளிக்கப்பட்டது.

தங்களுடைய குதிரைப் படையுடன் கடந்து செல்ல முடியாமல் கடல் அவர்களைக் குறுக்கிட்ட போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அவர்கள் அனைவரும் கடலின் மீது கடந்து சென்றனர்.  அவர்களுடைய குதிரைகளின் கடிவாளங்கள் ஈரமாகவில்லை.

அவர் மரணித்தால் தன்னுடைய உடலை யாரும் பார்க்கக் கூடாது எனப் பிரார்த்தித்தார். இதனால் கப்ரிலே அவருடைய உடலை அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 292)

கப்ரு வணங்கிகளான பரேலவிகளைப் போன்று ஸலபிகளுக்கு மகத்துவம் உருவாக்க இப்னுதைமிய்யா அரும்பாடு பட்டுள்ளார் என்பதை அவர் குறிப்பிடும் கப்சாக்களும் அபத்தங்களும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மூஸா (அலை) தண்ணீர் கேட்ட போது அல்லாஹ் தண்ணீர் கொடுத்தான். மூஸா (அலை) அவர்களுக்காக அல்லாஹ் கடலைப் பிளந்து காப்பாற்றினான். அதை விட மேலாக ‘‘அல் அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாருக்கு நடந்துள்ளது என்றும் அவர் செய்த பிரார்த்தனையை உடனடியாக அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்றும் மக்களை நம்ப வைக்க முயல்வதின் மூலம் பரேலவிகளின் மறுவடிமாக நவீன ஸலஃபியிசத்தை உருவாக்க இப்னு தைமிய்யா முயன்றுள்ளார். அது போன்று தான் இன்றைய நவீன ஸலபிகளும் உள்ளனர்.

இதே போன்று ஸலபிகள் நல்லவர்களாக நம்புபவர்களை, நபிமார்களை விட மேலானவர் களாகக் காட்டுதவற்கு இப்னு தைமிய்யா எடுத்து வைத்தும் மற்றொரு கப்சாவைக் காண்போம்.

செத்த கழுதையை உயிர்பித்த இறை நேசர்

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 67(

وأورد عليهم أن من آيات عيسى إحياء الموتى، ولم يقع ذلك لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.

فأجيب بأنه حصل وقع لأتباع الرسول عليه الصلاة والسلام، كما في قصة الرجل الذي مات حماره في أثناء الطريق، فدعا الله تعالى أن يحييه، فأحياه الله تعالى.

ஈஸா (அலை) அவர்களின் அற்புதங்களில் ஒன்றான ‘‘இறந்தவர்களை உயிர்ப்பித்தல்” நபி (ஸல்) அவர்களுக்கு நடக்கவில்லை என்று கேட்பவர்களுக்குப் பின்வருமாறு பதிலளிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்களுக்கு இவ்வாறு நடந்துள்ளது. பின்வரும் சம்பவத்தைப் போன்று. ஒருவருடைய கழுதை வரும் வழியிலே மரணித்துவிட்டது. அதனை உயிர்பிப்பதற்கு அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார். அலலாஹ் அதனை உயிர்ப்பித்தான்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 67)

இந்தக் கழுதை உயிர் பெற்ற சம்பவத்தை மற்றொரு இடத்திலும் இப்னு தைமிய்யா எடுத்துரைக்கிறார்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 295(

وَرَجُلٌ مِنْ “ النَّخْعِ “ كَانَ لَهُ حِمَارٌ فَمَاتَ فِي الطَّرِيقِ ،فَقَالَ لَهُ أَصْحَابُهُ هَلُمَّ نَتَوَزَّعُ مَتَاعَك عَلَى رِحَالِنَا فَقَالَ لَهُمْ : أَمْهِلُونِي هُنَيْهَةً ثُمَّ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ وَصَلَّى رَكْعَتَيْنِ، وَدَعَا اللَّهَ تَعَالَى فَأَحْيَا لَهُ حِمَارَه،ُ فَحَمَلَ عَلَيْهِ مَتَاعَهُ.

‘‘அந்நகயீ” கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு ஒரு கழுதை இருந்தது. அது வழியில் இறந்துவிட்டது. அவருடைய தோழர்கள் ‘‘வாருங்கள், உங்களுடைய பொருட்களை எங்களுடைய வாகனங்களில் பிரித்துக் கொள்கிறோம்” என்று கூறினர். அதற்கவர் ‘‘சிறிது நேரம் எனக்கு அவகாசம் கொடுங்கள்’’ என்று கூறிவிட்டு அவர் உளூச் செய்தார். அந்த உளூவை அழகிய முறையில் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுதார். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். அவருடைய கழுதையை அல்லாஹ் உயிர்ப்பித்தான். அதன் மீது தன்னுடைய பொருட்களை சுமந்து சென்றார்.

(அல்ஃபுர்க்கான் பைன அவ்லியாயிர் ரஹ்மான் வஅவ்லியாயிஷ் ஷைத்தான், பக்கம் 295)

ஒரு மனிதர், அவருடைய பெயர் கூடத் தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்ததா? என உறுதிப்படுத்தும் உறுதியான சான்றுகள் இல்லை. அப்படி இருந்தும் ஈஸா (அலை) அவர்கள் மூலம் இறந்தவை உயிர் பெற்றது போன்று அவருக்கு நடந்தது என இப்னு தைமிய்யா அவர்கள் கொண்டு வருவதன் நோக்கம் என்ன?

சாதாரண மனிதர்களை நபிக்கு நிகராக ஆக்கி, அவர்களுக்குப் புனிதத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தவிர வேறில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

நல்லடியார்களுக்கு நிகழும் அற்புதங்கள் என்ற பெயரில் இது போன்ற எண்ணற்ற கப்சாக்களை இப்னு தைமிய்யா எடுத்துரைக்கிறார். நபிமார்களுக்கு நிகழும் அற்புதங்கள் மற்றும் நபி அல்லாத மற்றவர்களுக்கு நிகழும் அற்புதங்கள் இரண்டுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசங்களை குர்ஆன், சுன்னா அடிப்படையில் சரியான முறையில் அறிந்து கொண்டால் இது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

நபிமார்களுக்கு நிகழும் அற்புதங்களும் மற்றவர்களுக்கு நிகழும் அற்புதங்களும்

நபிமார்களுக்கு வழங்கப்படும் அற்புதங்கள் அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் வஹீச் செய்தியின் மூலம் நடைபெறுபவை ஆகும்.

முஹம்மது (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபி அல்லாதவர்களுக்கு நிகழும் அற்புதங்களில் இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு எந்த ஒரு வஹியும் அறிவிக்கப்படாது. மேலும் எவ்வித முன் திட்டமிடலும் இருக்காது.

இந்த தெளிவான வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இப்னு தைமிய்யா அவர்கள் எடுத்துரைக்கும் அனைத்தும் கப்சாக்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

{ وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ} [الرعد: 38]

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 13:38

{قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ إِنْ نَحْنُ إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ وَلَكِنَّ اللَّهَ يَمُنُّ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَمَا كَانَ لَنَا أَنْ نَأْتِيَكُمْ بِسُلْطَانٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ} [إبراهيم: 11]

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்‘’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 14:11)

மேற்கண்ட வசனங்கள் ‘‘அல்லாஹ்வின் விருப்பமின்றி” எந்த அற்புதத்தையும் இறைத்தூதர்கள் கூட செய்ய முடியாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

‘‘அல்லாஹ்வின் விருப்பம்” என்பது அல்லாஹ் விடமிருந்து இறைத்தூதர்களுக்கு அறிவிக்கப்படும் இறைச் செய்தி ஆகும். இறைத்தூதர்கள் செய்யும் ஒவ்வொரு அற்புதத்திற்கும் அல்லாஹ்விடம் இருந்து கட்டளை வந்தால்தால்தான் அவர்களால் அற்புதங்கள் செய்ய இயலும்.

இதனைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

  1. மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?’’ என்று இறைவன் கேட்டான்.
  2. இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன’’ என்று அவர் கூறினார்.
  3. மூஸாவே! அதைப் போடுவீராக!’’ என்று அவன் கூறினான்.
  4. அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது.
  5. அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்’’ என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 20:17-21)

மேற்கண்ட வசனத்தில் ‘‘மூஸாவே அதைப் போடுவீராக” என்ற அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகுதான் மூஸா நபி கைத்தடியைப் போடுகிறார். உடனே அது சீறும் பாம்பாக மாறியது. பிறகு  ‘‘அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக” என்று மறுகட்டளையை அல்லாஹ் கூறுகிறான். அவர் அவ்வாறு செய்தவுடன் அதன் முந்தைய நிலைக்கு இறைவன் அதனை மாற்றினான் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

  1. உமது கைத்தடியைப் போடுவீராக!’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.
  2. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

அல்குர்ஆன் 7:117-118

‘‘உமது கைத்தடியைப் போடுவீராகஎன்ற இறைவன் கட்டளையிட்ட பிறகுதான் மூஸா நபி கைத்தடியைப் போடுகிறார். உடனே அது மிகப் பெரும் பாம்பாக மாறி சூனியக்காரர்களின் வித்தையை விழுங்கியது என்று அல்லாஹ் கூறுகிறான்.

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக’’ என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

(அல்குர்ஆன் 26:63)

உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராகஎன்ற இறைக்கட்டளை வந்த பிறகு மூஸா நபி கடலில் அடித்த காரணத்தினால் தான் கடல் பிளந்தது என்பதை மேற்கண்ட வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!’’ என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!’’ (என்று கூறினோம்)

(அல்குர்ஆன் 2:60)

‘‘கைத்தடியால் பாறையில் அடிப்பீராகஎன்று இறைவனிடம் இருந்து இறைக்கட்டளை வந்த பிறகு மூஸா (அலை) அவர்கள் அடித்த காரணத்தில்தான் பாறையில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகளை அல்லாஹ் பீறிடச் செய்தான். அல்லாஹ்விடமிருந்து கட்டளை வருவதற்கு முன்னால் அவர் பாறையில் அடித்திருந்தால் இது போன்ற அற்புதம் நிகழ்ந்திருக்காது.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது’’ (என்றார்)

அல்குர்ஆன் 3:49

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும்,   இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி பிறவிக் குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை’’ என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறிய போது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!’’ என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன் 5:110)

மேற்கண்ட வசனங்கள் ஈஸா (அலை) அவர்கள் செய்த ஒவ்வொரு அற்புதங்களும் இறைவனுடைய கட்டளைப் பிரகாரம்தான் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன.

என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!’’ என்று இப்ராஹீம் வேண்டிய போது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே’’ என்றார். நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக’’ என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் 2:260

நான்கு பறவைகளைப் பிடிப்பீராக!

அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக!

பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக!

பின்னர் அவற்றை அழைப்பீராக!

அவை உம்மிடம் விரைந்து வரும்.

என்று ஒவ்வொரு கட்டளையாக இறைவனிட மிருந்து வந்தது. இதன் அடிப்படையில் தான் இறந்த பறவைகள் உயிர் பெறும் அற்புதம் நடைபெற்றது.

நபிமார்களுக்கு நிகழும் அற்புதங்கள் அனைத்தும் இறைவனுடைய கட்டளைகள் பிரகாரம் தான் நடைபெறும். நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகு வஹீச் செய்தி முற்றுப் பெற்றுவிட்டது. இனி யாருக்கும் இறைச் செய்தி வராது.

எனவே நபிமார்கள் இறைவனின் கட்டளை களைப் பெற்று அற்புதங்கள் செய்ததைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு யாருமே செய்ய இயலாது.

அதே நேரத்தில் நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் நிகழலாம். ஆனால் அதில் முன்கூட்டிய திட்டமிடல் இருக்காது. அற்புதம் நடந்த பிறகுதான் அவர்களே அதனை உணர்ந்து கொள்ள முடியும்.

இதற்கு சில சம்பவங்களை சான்றாகக் கூறலாம்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர்-  ரலி-) தமது வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) அல் கஹ்ஃப்’ (18வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடிக் கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறுநாள்) சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும். நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்கள் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (3614)

உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதிய காரணத்தினால் மேகத் திரள் அவரை மூடிக் கொண்டது. அவ்வாறு மேகத் திரள் மூடிக் கொள்ளும் என்பது அதற்கு முந்திய விநாடி வரை அவருக்குத்  தெரியாது. அது ஏற்பட்ட பிறகும் எதனால் ஏற்பட்டது என்பதை அவர் அறிந்து கொள்ள இயலவில்லை. நபி (ஸல்) அவர்கள் விளக்கிய பிறகுதான் உசைத் (ரலி) அவர்களே சரியான காரணத்தை அறிந்து கொள்கிறார்கள்.

நல்லடியார்களுக்கு நிகழும் அற்புதங்கள் இவ்வாறு தான் இருக்கும். அதில் முன்கூட்டிய திட்டமிடலோ, அந்த அற்புதம் நடப்பதற்கு முன் இவ்வாறு நடக்கும் என்பதோ அவர்களுக்குத் தெரியாது.

பின்வரும் சான்றும் இதனைத் தெளிவு படுத்துகிறது.

அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திண்ணைத் தோழர்கள் வறிய மக்களாக இருந்தார்கள். (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை(த் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு (யாராவது ஒருவரிடம்) இருந்தால் (அவர் தம்முடன்) ஐந்தாமவரையும் (ஐந்து பேருக்குரிய உணவு இருந்தால்) ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும் என்று கூறினார்கள்.

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (திண்ணைத் தோழர்கள்) மூவருடன் (இல்லத்திற்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப்பேருடன் (தம் இல்லம் நோக்கி) நடந்தார்கள்.

(என் தந்தை வீட்டிற்கு வந்த போது வீட்டில்) நானும் (அப்துர்ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் கூட்டாகப் பணிபுரிந்து வந்த பணியாளரும்தாம் இருந்தோம்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷாத் தொழுகை நடைபெறும் வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும் வரை காத்திருந்துவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டுக்கு) வந்தார்கள். அவர்களுடைய துணைவியார் (என் தாயார்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘உங்கள் விருந்தாளிகளைஅல்லது உங்கள் விருந்தாளியை’ (உபசரிக்க வராமல்) தாமதமானதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், விருந்தினருக்கு உணவளித்தாயா? என்று கேட்டார்கள்.

அதற்கு என் தாயார், நீங்கள் வரும்வரை உண்ணமாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் (உண்ண மறுத்து)விட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

(என் தந்தை அபூபக்ர் அவர்கள் நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘விவரங்கெட்டவனே!- (என்றழைத்து என்னை) உன் காதறுந்து போக!என்று கூறி ஏசினார்கள்.

(அவர்கள் உணவருந்த தாமதமானதற்கு அவர்களே காரணம் என்று அறிந்து கொண்ட போது) நீங்கள் தாராளமாக உண்ணுங்கள் என்று (தம் விருந்தினரிடம்) கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, என்னை எதிர் பார்த்துத்தானே இவ்வளவு நேரம் தாமதம் செய்தீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு போதும் இதை உண்ணப் போவதில்லை என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (பாத்திரத்திலிருந்து) ஒரு கவளத்தை எடுக்கும் போதெல்லாம் அதன் கீழ்ப்பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகிக் கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் அனைவரும் பசியாறினர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததைவிட கூடி இருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அ(ந்த பாத்திரத்)தைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகக் காணப்பட்டது.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! என்ன இது? என்று வினவ, அதற்கு என் தாயார், எனது கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இது இப்போது முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், (நான் ஒரு போதும் இதை உண்ண மாட்டேன் என்று என்னை சத்தியம் செய்யவைத்தது) ஷைத்தான்தான் என்று கூறிவிட்டு அதிலிருந்து இன்னும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அ(ந்தப் பாத்திரத்)தை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். பிறகு அது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று.

எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த ஒப்பந்த தவணை முடிவுற்றது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பனினிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள். ஒவ்வொருவருடனும் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். (அவ்வளவு பெரிய படையினருடன் அந்த உணவுப் பாத்திரத்தையும் கொடுத்தனுப்பினார்கள்) அப்போது அவர்கள் அனைவரும் அதில் உண்டனர். (இவ்வாறோ அல்லது) வேறொரு முறையிலோ இதை அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்

நூல்: புகாரி (602)

அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டில் பாத்திரத்தில் உணவு அதிகரித்த போது அவர்களே ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களது மனைவியும் ஆச்சரியப்பட்டார்கள். இவ்வாறுதான் நல்லடியார்களுக்கு நிகழும் அற்புதங்கள் முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமலும், எப்படி நடந்து என்று அவர்களே ஆச்சரியப்படும் வகையில்தான் நிகழும்.

ஆனால் நல்லடியார்களுக்கு நடந்ததாக இப்னு தைமிய்யா எடுத்துரைக்கும் சான்றுகளைப் பாருங்கள் முதலில் அவை நம்பும் படியான உறுதியான சம்பவங்களாக இல்லை. கப்ரு வணங்கிகள் தங்களுடைய அவ்லியாக்களுக்கு இட்டுக் கட்டும் கதைகளுக்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

‘‘அபூ முஸ்லிம் ஹவ்லானி” நெருப்பில் போடப்பட்டு நெருப்பு அவரை எரிக்கவில்லை என்றால் அதனை நேரில் கண்ட உறுதியான சாட்சிகள் யார்? யார்? இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால் அது ஏன் அன்றைய மக்களிடம் பிரபல்யமாகப் பேசப்படவில்லை? இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு நிகராக நடைபெற்ற அற்புதம் என்றால் ஏன் இது பிரபலமான நூல்களில் பதிவு செய்யப்படவில்லை? இவர் விஷத்தைச் சாப்பிட்டும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்.? அதனை உறுதிப்படுத்தியவர் யார்? கண்பார்வை இழந்த பெண்ணிற்கு இவர் துஆ செய்ததும் கண்பார்வை வந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? இவரது துஆ தான் அதற்குக் காரணம் என்பதை யார் உறுதிப்படுத்தியது? இவர் துஆ செய்தவுடன் அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுத்தான் என்றால் அதற்குரிய தனிச் சிறப்பு என்ன? இப்படிப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

உண்மையில் கப்ரு வணங்கிகள் எவ்வாறு ஆதாரம் காட்டாமல் இப்றாஹிம் நபிக்கு நடந்ததைக் கூறி அவர்களின் கப்சாக்களை உறுதிப்படுத்துவார்களோ அது போன்ற ஒரு பதிலைத்தான் ஸலபிகள் இதற்குக் கூற முடியும். அல்லது கப்ரு வணங்கிகள் எவ்வாறு ஏதாவது ஒரு ஆதாரமற்ற நூலைக் காட்டுவார்களோ அது போன்றுதான் ஸலபிகளால் காட்ட இயலும்.

அது போன்று ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரும் அவருடைய குதிரைப் படைகளும் தண்ணீரின் மீது மூழ்காமல் சென்றார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரம் என்ன? இது மூஸா (அலை) அவர்களுக்கு நடந்ததை விட மிகப் பெரும் அற்புதம் எனக் கூறி ‘‘அல்அலாவு இப்னு ஹள்ரமீ” என்பாரை நபியை விட உயர்த்துவதற்குரிய காரணம் என்ன? அவர் துஆச் செய்தவுடன் அல்லாஹ் கடல் நீரின் மீது நடக்க வைத்தான்? அவர்கள் குடிப்பதற்கும், உளூச் செய்வதற்கும் தண்ணீர் கொடுத்தான், அவருடைய துஆவின் காரணத்தினால் அவர் இறந்த பிறகு கப்ரிலே அவருடைய உடலை யாருமே பார்க்காமல் ஆக்கிவிட்டான் என்றெல்லாம் இப்னு தைமிய்யா விட்டடிப்பதற்கு ஆதாரம் என்ன? ஒருவர் துஆச் செய்யும் போதெல்லாம் அல்லாஹ் அற்புதத்தை நிகழ்த்துவான் என்றால் அற்புதங்கள் இறைவனின் நாட்டப்படி நடப்பவையா? அல்லது ‘‘அல் அலாவு இப்னு ஹள்ரமீ” என்பவரின் நாட்டப்படி நடப்பவையா?

முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானி ‘‘குன் பி இத்னில்லாஹ்” அல்லாஹ்வின் நாட்டப்படி ஆகி விடு என்று சொன்னதும் ஆனது எனக்கூறி இட்டுக் கட்டும் கப்ருவணங்கிகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

அற்புதமாக நடக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு, துஆச் செய்தவுடன் அற்புதங்கள் நடந்து விடும் என்பதற்கு என்ன ஆதாரம்?

அவ்வாறு நடப்பது சாத்தியம் என்றால் இன்று நாம் வாழும் உலகில் ஏதாவது ஒரு ஸலபி துஆச் செய்து இது போன்ற அற்புதத்தை நடத்திக் காட்ட வேண்டியதுதானே? அல்லது தற்போது உலகத்தில் நல்லடியார்கள் யாருமே இல்லை என்று கூறப் போகிறார்களா?

இப்னு தைமிய்யா சொன்னவுடன் ஏற்றுக் கொள்ளும் ஸலபிகள், கப்ருவணங்கிகள் கூறும் முஹைதீன் ஆண்டவர் கதையை ஏன் மறுக்கின்றனர்?

கப்ரு வணங்கிகள், முஹைதீன் என்பார் ‘‘குன் பிஇத்னில்லாஹ்” எனக்கூறி செத்த குருவியை உயிர்ப்பித்ததை நம்புவதும், ஷாகுல் ஹமீது என்பார் ‘‘குன் பிஇத்னில்லாஹ்” எனக்கூறி செத்த மாட்டை உயிர்ப்பித்ததை நம்புவதும் இணைவைப்பு என்றால்…

அல்அலாவு இப்னு ஹள்ரமீ என்பார் கடலின் மீது நடந்தார் என்பதையும், அவர் துஆ செய்ததும் அல்லாஹ் நீர் புகட்டினான் என்பதும், ஹவ்லானி தீயில் போடப்பட்டும் தீ அவரை எரிக்கவில்லை என்பதும், அவருக்கு விஷம் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதும், அவர் துஆச் செய்தவுடன் கண்பார்வையற்ற பெண்ணிற்கு கண்பார்வை வந்தது என்பதும், யாரென்றெ அறியாத ஒருவர் துஆச் செய்ததும் செத்த கழுதை உயிர் பெற்றது என்பதும் உண்மை என நம்புவது இணைவைப்பில்லை என எப்படிக் கருதமுடியும்?

கப்ரு வணங்கிகள் நம்பினால் இணைவைப்பு! ஸலபிகள் நம்பினால் தவ்ஹீதா?

இப்னுதைமிய்யா எப்பெரும் வழிகேட்டை நோக்கி அழைக்கின்றார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸலபிக் கொள்கைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவராகத்  திகழும் இப்னு தைமிய்யா அவர்கள் இன்னும் பல வழிகெட்ட கருத்துளைக் கூறியுள்ளார்கள். அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

———————————————————————————————–

ரமளானே வருக! வருக!

M.A. அப்துர்ரஹ்மான், இஸ்லாமியக் கல்லூரி

இந்த உலகத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் ஏராளமான நல்லமல்களைச் செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான். அவ்வாறு நல்லமல்களை நம்முடைய வாழ்க்கையில் செய்து வந்தால் நாளை மறுமையில் மகத்தான கூலி கிடைக்கும் என்றும் இறைவன் உத்தரவாதம் அளிக்கின்றான்.

மனிதர்களுக்கு, தங்களுடைய வாழ்க்கையில் காலத்தைக் கணக்கிடுவதற்காக சில மாதங்களை இறைவன் வழங்கியிருக்கின்றான். இறைவன் நமக்கு வழங்கியிருக்கின்ற மாதங்களில் சில மாதங்களை புனித மாதமாகவும், சில மாதங்களில் நாம் செய்கின்ற நல்லமல்களுக்கு மேலதிகமான நன்மைகளை வாரி வழங்கக் கூடியதாகவும் அமைத்திருக்கின்றான்.

அப்படிப்பட்ட மாதங்களில் நன்மைகளை வாரி வழங்கக்கூடிய அற்புதமான ஒருமாதம் தான் ரமலான் மாதம். ரமலான் மாதத்திற்கு என்று ஏராளமான தனிச்சிறப்புகளும், மகத்துவமும், சங்கையும் இருப்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கின்றோம். பொதுவாகவே ரமலான் மாதம் வந்து விட்டால் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒருவிதமான பரபரப்பும், ஆரவாரமும், மகிழ்ச்சியும் தானாகவே வந்து தொற்றிக்கொள்ளும். எந்தளவிற்கென்றால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள்கூட ரமலான் மாதத்தில் வாரி வழங்குவதையும், செலவு செய்வதையும், சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்று விடுவதையும் பார்க்கின்றோம்.

இப்படிப்பட்ட நன்மைகளை வாரி வழங்கக்கூடிய, நன்மைகளை கொள்ளையடிக்கக் கூடிய ரமலான் இந்த வருடமும் நம்மை ஆரத்தழுவ காத்துக் கொண்டிருக்கின்றது. நம்மை அடையக் காத்துக் கொண்டிருக்கின்ற ரமலானை முஸ்லிம்களாகிய நாம் எவ்வாறு வரவேற்க வேண்டுமோ அவ்வாறு வரவேற்பதற்குத் தவறிக் கொண்டிருக்கின்றோம்.

எத்தனையோ வருட ரமலான் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கின்றது. ஆனால் ரமலான் மாதம் நம்மிடத்தில் எப்படிப்பட்ட  மாற்றத்தை எதிர்பார்க்கின்றதோ அப்படிப்பட்ட மாற்றங்கள் நம்மில் பெரும்பான்மையோரின் வாழ்க்கையில் இல்லாமலேயே ரமலான் நம்மைவிட்டுக் கடந்து சென்றிருப்பதைப் பார்க்கின்றோம்.

ரமலான் மாதத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது? ரமலான் மாதத்தில் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும்? ரமலானில் நம்மை எவ்வாறு பண்படுத்திக் கொள்ள வேண்டும்? இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? குர்ஆனோடு தொடர்பை அதிகரித்துக் கொள்வது எப்படி? ரமலான் மாதம் முழுக்க முழுக்க நன்மையின்பால் நம்மைத் திருப்பிக் கொள்வது எப்படி? என்பது போன்ற பல்வேறு நன்மையான காரியங்களைச் சிந்திக்காமலும், அந்த நன்மையில் ஈடுபடாமலுமே நம்மை ஆரத்தழுவிய ரமலான் மாதம், நம்மை விட்டுப் பிரிந்து சென்று விடுகின்றது.

ரமலானை அடைகின்ற ஒவ்வொருவரும் நம்மிடத்தில் வந்திருக்கின்ற ரமலான் மாதத்தை நம்மால் இயன்ற அளவுக்கு நன்மையான காரியங்களில் ஈடுபட முயற்ச்சிக்க வேண்டுமே ஒழிய வீணான காரியங்களிலும், தேவையில்லாத செயல்களிலும் ஈடுபட்டு நம்முடைய நன்மைகளைப் பாழாக்கி விடக்கூடாது. மேலும் ரமலான் மாதத்தை ஒருவர் அடைந்து நன்மையான காரியங்கள் செய்ய முயற்சிக்கவில்லை என்றால் அவனுக்கு நிகழும் கைசேதத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கையாகப் பதிய வைக்கின்றார்கள்.

இதோ! அந்த எச்சரிக்கை…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 3468 (ஹதீஸ் சுருக்கம்)

இந்தச் செய்தியை ஆழமாகப் படித்துப் பாருங்கள்! ஒருவர் ரமலான் மாதத்தை அடைந்து நன்மையான காரியங்கள் அதிகமதிகம் செய்வதின் மூலம் பாவம் மன்னிக்கப்படாமல் சொர்க்கத்தில் நுழையவில்லையென்றால், நன்மையான காரியங்கள் செய்யாமலேயே ரமலான் மாதத்தைக் கழித்து விட்டால் அப்படிப்பட்டவரை நோக்கி, சபிக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை  நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.

இதிலிருந்து நாம் அறிவது, ரமலான் மாதம் நம்மை நோக்கி வருவதற்கான பிரதான நோக்கமே, நன்மைகளை நாம் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்தினால் தான். எனவே ரமலானை நன்மைகள் செய்வதற்காக வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இறையச்சமே பிரதானம்

ரமலான் மாதம் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருகின்றது என்று சொன்னால், மிக முக்கியமான காரணம் நாம் அனைவரும் இறையச்சத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான். பொதுவாகவே இறையச்சம் ஒரு மனிதரிடத்தில் வந்துவிட்டால் எல்லாவிதமான தவறுகளிலிருந்தும் விடுபட்டு நல்லவர்களாக வாழ முடியும்.

ரமளானில் இறையச்சத்தோடு நாம் வாழ்ந்திருக்கின்றோம் என்ற திருப்தி கிடைக்க வேண்டுமானால், ரமளானில் பயணித்த அதே வேகத்தோடு, சிறிதளவு கூடத் தொய்வில்லாமல் மற்ற மாதங்களிலும் நம்முடைய வாழ்க்கையில் நன்மையான காரியங்கள் தொடருமானால் உண்மையாகவே நாம் ரமலானை நல்ல முறையில் வரவேற்றிருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ரமலானில் மட்டும் நல்லறங்களைச் செய்வதற்குப் போட்டி போடுகின்றோம். ரமலான் முடிந்து விட்டால் சோம்பேறிகளாகவும், வணக்க வழிபாடுகளில் அலட்சியப் போக்கையும் கடைப்பிடித்து, ரமலானில் இருந்த வேகம் அப்படியே தளர்ந்து விடுவதைப் பார்க்கின்றோம்.

அப்படியென்றால் இங்கே ஒருகேள்வி எழுகின்றது? ரமலானில் மாத்திரம் நன்மைகளை அதிகம் செய்ய முடிகின்ற நம்மால், ஏனைய மாதங்களில் நன்மைகளின்பால் ஆர்வம் இல்லையென்றால், நன்மைகளைச் செய்ய முடியவில்லையென்றால், ரமலான் மாதத்தில் மட்டும் இறைவனுக்குப் பயந்தது போல் நடித்தோமா? வேடம் போட்டோமா? ஒருமாதம் மட்டும் தான் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ண ஓட்டத்தில் வாழ்ந்தோமா? இதுபோன்ற ஏராளமான கேள்விக்கணைகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இறைநேசர்களைப் பற்றி இறைவன் அருமையான வார்த்தைகளில் குறிப்பிடும் போது,

அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.

அல்குர்ஆன் 3:76

மேலும், இறைவன் குறிப்பிடும்போது;

அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:194

இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தால் இறைவன் நம்மை நேசிக்கின்றான் என்றும், இறைவனை அஞ்சுவோருடனே அவன் இருக்கின்றான் என்றும் நமக்கு அறிவுரை கூறுகின்றான்.

இறைவனின் நேசத்தைப்பெற வேண்டுமானால் நாம் செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் இறைவனை அஞ்ச வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் அனைத்துக் காரியங்களிலும் இறைவனை அஞ்சினால் இறைவனின் உதவியும், அருளும் எப்போதுமே நமக்கு உதவிக்கரத்தை நீட்டிக் கொண்டே இருக்கும்.

இறைவன் எதிர்பார்க்கின்ற இறையச்சம் என்ற குணத்தைப் பற்றி நாம் பாடம்படிக்க வேண்டும் என்பதற்காகவும், வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவுமே ரமலான் நம்மிடத்தில் வருகின்றது. அந்த எதிர்பார்ப்போடு ரமலானை வரவேற்போம்.

நன்மைகளின் கேந்திரம் ரமலான்

ஒரு மாத காலம், கிட்டத்தட்ட 720 மணி நேரங்கள் முழுவதும் நன்மைகளை அருவியாகக் கொட்டித் தீர்க்கின்ற மாதமாகவும், மற்ற மாதங்களில் நன்மைகள் செய்வதை விட, இந்த மாதத்தில் செய்யக்கூடிய நன்மைகளுக்குப் பன்மடங்கு பரிசுகளை அள்ளித் தெளிக்கின்ற மாதமாகவும் இந்த ரமலான் இருக்கின்றது.

இந்த ஒரு மாதத்தில் ஒருவர் ஒரு நொடியைக் கூட வீணாக்காமல் வெறிகொண்டு களத்திலே இறங்கினால் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த எல்லாப் பாவங்களையும் கழுவி, பரிசுத்தமான மனிதர்களாக மாறி விடலாம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

ஆதாரம்: புகாரி 38

நாம் அனைவரும் ஈமான் கொண்டிருக்கின்றோம். ஆனால் நன்மையை எதிர்பார்த்தவர்களாக நோன்பு நோற்பதில் தவறிக் கொண்டிருக்கின்றோம்.

உண்மையிலேயே நாம் அனைவரும் நன்மையை எதிர்பார்த்தவர்களாக 30 நாட்கள் நோன்பு நோற்றால், அந்த ஒரு மாதத்தில் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும், சிரமங்களையும் தணிக்கும் முகமாக முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பாவம் கலவாத மனிதர்களாக மாறி விடலாம்.

சொர்க்கம் உறுதி

ரமலான் மாதத்தில் இறைவனுக்காக உண்மையிலேயே நோன்பு நோற்பவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்றும், மேலும் தொடர்ந்து ஐவேளைத் தொழுது, ரமளானில் நோன்பு நோற்பவர் அறப்போரில் கலந்து கொள்ளவில்லையென்றாலும் சொர்க்கம் உறுதியாகக் கிடைக்கும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்துகொண்டாலும் சரி’’ என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 2790

இறைநம்பிக்கை கொண்டு ஐவேளைத் தொழுகையைப் பரிபூரணமாக நிறைவேற்றினாலும், ரமளானில் நோன்பு நோற்றாலும் சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறுகின்றார்கள். ஒரு மாதம் இறைவனுக்காக நோன்பு நோற்று, சொர்க்கத்தை நம்மீது கடமையாக்கும் முகமாக ரமலானை வரவேற்போம்!

கஸ்தூரியும், இறைநேசமும்

நோன்பு காலங்களில் உண்ணாமலும், பருகாமலும் இருந்து வயிறும், குடலும் ஒட்டிப்போய் காலியாக இருக்கின்ற காரணத்தினால் ஒருவிதமான துர்வாடை வீசும். அருகிலிருப்பவர்களிடம் முகம்கொடுத்துப் பேச முடியாத அளவுக்கு வாடை வீசும். நோன்பாளிகளின் வாயிலிருந்து வருகின்ற துர்வாடையைக்கூட கஸ்தூரி வாடையாக மாற்றி இறைவன் சிறப்பிக்கின்றான். இதன் காரணத்தினால் ரமலானின் நோன்பு மூலமாக இறைநேசத்தை முழுமையாகப் பெற்ற மனிதர்களாக நாம் மாறிவிடலாம்.

முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.

ஆதாரம்: புகாரி 1904

நோன்பு திறக்கின்ற நேரத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம். கடுமையான வெயிலின் உஷ்ணத்தினால் கிட்டத்தட்ட 13-14 மணி நேரங்கள் இறைவனுக்காக பசித்திருக்கின்றோம்; தாகித்திருக்கின்றோம். நோன்பு திறக்கின்ற நேரத்தில் முன்னால் வைக்கப்பட்டிருக்கின்ற உணவைப் பார்த்த மாத்திரத்திலே நாம் சந்தோசத்தின் உச்சத்திற்கே சென்று விடுகின்றோம். நோன்பு திறக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும், இறைவனைச் சந்திக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. இந்தக் கஸ்தூரி வாடையை எதிர்பார்த்து, ரமலானை நாம் முகமலர்ச்சியோடு வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

பாவங்களிலிருந்து காக்கும் கேடயம்

ரமலான் மாதம் ஒரு மனிதரைப் பாவங்கள் என்ற அசுத்தத்திலிருந்து பாதுகாக்கின்ற கேடயம் என்றும், ரமலானில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு பிரத்தியேகமாக இறைவன் கூலி வழங்குகின்றான் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

‘‘நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்!’’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி!’’ என்று அவர் சொல்லட்டும்!

ஆதாரம்: புகாரி 1904

மேலும் சர்வ சாதாரணமான முறையில் இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கெட்ட வார்த்தைகளையும், அருவருக்கத்தக்க வார்த்தைகளையும், காதுகளால் கேட்கவே முடியாத நாராசமான வார்த்தைகளையும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்றோம். அப்படிப்பட்ட கேடுகெட்ட வார்த்தைகளிலிருந்து விடுபட்டு, அந்த வார்த்தைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான பாசறையாக இந்த ரமலான் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போர்க்களத்திலிருந்து ஒருவனை கவசம் எவ்வாறு பாதுகாக்குமோ அதுபோன்று நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயமாகும்.

ஆதாரம்: இப்னுமாஜா 1629

போர்க்களத்தில் போரிடுகின்ற ஒருவனுக்கு நாலாப்புறங்களிலிருந்தும் தன்னை நோக்கித் தாக்குகின்ற ஆயுதங்களைத் துவம்சம் செய்கின்ற கருவியாகவும், உயிரையும், உடல் உறுப்புகளையும் பேணிப் பாதுகாக்கின்ற வேலையையும் போர்க்களத்தில் நாம் பயன்படுத்துகின்ற கேடயம் கன கச்சிதமாக செய்கிறது.

அதுபோல, அனைத்துப் புறங்களிலிருந்தும் நம்மை நோக்கிப் பாய்ந்து வருகின்ற பாவச் செயல்களை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளக்கூடிய கேடயமாக நோன்பு இருக்கின்றது. மேலும், நம்மை நரகநெருப்பிலே விழுந்து விடாமல் தடுத்து வேலி போடவும் இந்தக் கேடயம் துணை புரிகின்றது.

நன்மை செய்வதற்குச் சிறப்பு அழைப்பு

ரமலான் மாதத்தில் பிரத்தியேகமாக சிறப்பு அழைப்பாளர்கள் வந்து நாம் அனைவரும் நன்மைகளைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவும், தீமைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதற்காகவும் அன்பான அழைப்பு விடுக்கின்றார்கள். அந்தச் சிறப்பு அழைப்பைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ரமலான் மாதத்தின் முதலாவது இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும், முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் திறக்கப்படுவதில்லை. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் ஒருவாசலும் அடைக்கப்படுவதில்லை.

அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவர் நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துக்கொள்என்று அறிவிக்கின்றார். அப்போது அல்லாஹ்வால் பலர் நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு ரமலான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகின்றது.

ஆதாரம்: ஜாமிவுத் திர்மிதீ 618

ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ‘நன்மையைத் தேடுபவர்களே! இன்னும் அதிக மதிகம் நன்மையைச் செய்வதற்கு விரையுங்கள்! தீமைகளைச் செய்பவர்களே! தீமைகளைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்றும் அழைப்பு விடுக்கின்றார்கள். இன்னும் ஒருபடி மேலாக, ரமளானில் ஒவ்வொரு நாள் இரவிலும் அல்லாஹ் நரகத்திலிருந்து பல பேரை விடுவித்துக் கொண்டிருக்கின்றான். இப்படிப்பட்ட அற்புதமான ஒரு அழைப்பை நம்மில் எத்தனை பேர் செவிமடுத்து, அந்த அழைப்புக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கின்றோம் என சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எழுபது ஆண்டுகள் தூரமாக்கப்படுதல்

ரமளானில் இறைவனுக்காக நோன்பு நோற்கும் போது இறைவன் நமக்கு வழங்குகின்ற அளப்பரிய பொக்கிஷத்தை வார்த்தைகளாக வர்ணிக்கவே முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பை விட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.

ஆதாரம்: புகாரி 2840

அல்லாஹ்வின் பாதை என்பது போர்க் களத்தையும், மற்ற மற்ற காரியங்களையும் குறிக்கின்ற பொதுவான சொற்பிரயோகம். பொதுவாகவே இறைவனின் பாதையில் நாம் செய்கின்ற எல்லா நன்மைகளுக்கும் இறைவன் கூலி வழங்குகின்றான்.

குறிப்பாக ரமலான் மாதத்திலோ, போர்க்களத்திலோ இறைவனுக்காக நாம் ஒருநாள் நோன்பை நோற்றால் 70 ஆண்டுகள் நரகநெருப்பை விட்டு இறைவன் அப்புறப்படுத்தி விடுகின்றான். இப்படிப்பட்ட அற்புதமான ரமலானை எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நோன்பாளிகளே வருக! வருக!

நோன்பாளிகள் ரமலான் மாதத்தில் பட்ட சிரமத்தினாலும், கஷ்டத்தினாலும் நாளை மறுமையில் இறைவன் மகத்தான பரிசாக, நோன்பாளிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக ரய்யான் எனும் சொர்க்கத்தின் வாசல் வழியாக அழைக்கின்றான். ரமலான் எப்படி நம்மை ஒவ்வொரு வருடமும் ஆரத்தழுவி வரவேற்கின்றதோ, அதுபோன்று ரமலானில் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்ற நோன்பாளிகளை இறைவன் ரய்யான் என்ற சொர்க்கவாசல் வழியாக வரவேற்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ரய்யான்என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.

ஆதாரம்: புகாரி 3257

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்;

சொர்க்கத்தில் ரய்யான்என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும்; உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்!

ஆதாரம்: புகாரி 1896

சொர்க்கத்தில் ஏராளமான படித்தரங்கள் இருந்தாலும், நோன்பாளிகளுக்கென்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற ரய்யான் என்ற சொர்க்கவாசலுக்கு நோன்பாளிகளை இறைவன் அழைக்கின்றான். இன்னும் குறிப்பாக, நோன்பாளிகள் ரய்யானில் நுழைந்தவுடன் ரய்யானின் வாசல் அடைக்கப்பட்டு விடும்.

இப்படிப்பட்ட நன்மைகளைக் கொட்டித் தீர்க்கின்ற ரமலானை முறையான அடிப்படையில் நாம் வரவேற்றால், ரய்யான் என்ற சொர்க்கமும் நம்மை கட்டித் தழுவும்.

ரமளானை அலட்சியப்படுத்தாதீர்கள்

இஸ்லாமிய சொந்தங்களே! எத்தனையோ வருட ரமலான் நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கின்றது. சென்ற ரமலானில் நம்மோடு பயணித்தவர்கள் இந்த ரமலானில் இந்த உலகத்தை விட்டே பிரிந்தும் கூட இருக்கின்றார்கள்.

இந்த ரமலானில் இருக்கின்ற நாம் அடுத்த ரமலானில் இருப்போமா? என்பது தெரியாது. ஆகவே இந்த ரமலானை அடைய காத்துக் கொண்டிருக்கின்ற நாம் மிகுந்த ஆர்வத்துடன், ரமலானில் முறையான நேரப்பட்டியலை அமைத்துக் கொண்டு, ரமலானைக் கழிக்க சபதம் ஏற்போம்!

  • உளமாற இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி சரணடையுங்கள்!
  • இரவுத்தொழுகையில் மிகவும் பேணுதலாக இருங்கள்!
  • குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள்!
  • இறை தியானம், பிரார்த்தனை, துதித்தலில் அதிகமாக ஈடுபட வேண்டும்.
  • கடைசிப் பத்தில் பம்பரமாகச் சுழன்று, ஓய்வெடுக்காமல் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவைத் தேடப் பாடுபட வேண்டும்.
  • அதிகமதிகம் தர்மம் செய்ய வேண்டும்.
  • பொய்யான, கேவலமான, அருவருக்கத்தக்க காரியங்களிலிருந்து விலகி விட வேண்டும்.

இறுதியாக,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

ஆதாரம்: புகாரி 1903

இந்தச் செய்தியை உள்ளத்தில் ஆழப்பதிய வைத்தவர்களாக, தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு, அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்து ரமலான் மாதத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்தி விடாமல், ஒவ்வொரு முஸ்லிமும் இந்த வருட ரமலான் மாதத்தை,  நல்ல ஒரு மனமாற்றத்தோடு, ரமலானே வருக! வருக! என்று ஆரத்தழுவி வரவேற்போம். இன்ஷா அல்லாஹ்!