ஏகத்துவம் – மார்ச் 2013

தொடர்: 3

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

அப்துந் நாசிர், கடையநல்லூர்

முந்தைய  இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள் ஆகிய காரியங்களில் எவ்வளவு நன்மைகள் புதைந்திருந்தன என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக தொழுகை என்ற வணக்கத்தை அடிப்படையாக வைத்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அல்லாஹ் எப்படிப்பட்ட பாக்கியங்களை நமக்குத் தருகின்றான் என்பதை நாம் தொடர்ந்து காண்போம்.

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதன் சிறப்புகள்

ஐவேளைத் தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய பல சகோதரர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் தாமதமாக வருவதை வழமையாகக் கொண்டுள்ளனர். பாங்கு சொல்லப்பட்ட பிறகும் இகாமத் சொல்லும் வரை வீணான காரியங்களிலும், தேவையற்ற பேச்சுக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இகாமத் சொன்னவுடன் வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க தொழுகைக்கு ஓடிவருவார்கள்.

அதுமட்டுமில்லாமல் சில சகோதரர்கள் இகாமத் சொல்லப்பட்ட பிறகு தான் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றச் செல்வார்கள். அவர்கள் தங்களது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி, பிறகு உளூச் செய்து விட்டு வருவதற்குள் தொழுகை முடிந்துவிடும். அல்லது இமாம் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது தொழுகையில் வந்து இணைவார்கள்.

இது போன்ற வீணாண காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தொழுகைக்கு முன்கூட்டியே நாம் தயாராவதால் ஏராளமான நன்மைகளை நாம் அடைகின்றோம். இது அல்லாஹ் நமக்குச் செய்த பாக்கியமாகும்.

தொழுகைக்கு நாம் முன்கூட்டியே வருவதால் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறோம் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

நபியவர்களின் முன்மாதிரி

நபி (ஸல்) அவர்கள் பாங்கு சப்தத்தைக் கேட்டவுடன் தங்களுடைய வேலைகளை யெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, தொழுகைக்காக பள்ளியை நோக்கி விரைந்து விடுவார்கள்.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்என்று பதிலளித்தார்கள்.  (நூல்: புகாரி 5363)

முந்தி வருவதே மிகச் சிறந்தது

தொழுகைக்கு நாம் முன்கூட்டியே தயாராவதால் கிடைக்கும் நன்மைகளை அல்லாஹ் நம்முடைய கண்களுக்குக் காட்டவில்லை. அவ்வாறு காட்டினால் அதனை அடைவதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடக்கூடிய நிலை உருவாகிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:  புகாரி (615)

இப்படிப்பட்ட மாபெரும் பாக்கியத்தை தொழுகையாளிகள் தான் பெறமுடியும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தொழுகையைப் பேணாதவர்கள் ஒருபோதும் இது போன்ற நற்பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியாது.

பள்ளியை நோக்கும் உள்ளமும் – அர்ஷின் நிழலும்

மறுமை நாளின் வெப்பத்தின் கொடுமை மிகக் கடுமையானதாகும். அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் அந்நாளில் இருக்காது. அப்போது பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தை உடையவர்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அர்ஷின் கீழ் நிழல் கொடுக்கின்றான்.

ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்கும் முன்கூட்டியே பள்ளிவாசலுக்கு வருவது அவரை இத்தகைய பாக்கியத்தைப் பெறக்கூடியவராக ஆக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.  6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்:  புகாரி (660)

முஸ்லிமுடைய அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்

நூல்: முஸ்லிம் (1869)

முன்கூட்டி வருவது நிதானத்தைப் பெற்றுத் தரும்

தொழுகைக்கு மிக மிக முக்கியமானது நிதானமாகும். இதனை நபியவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச் செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் (1053)

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் நாம் அமைதியாகவும், நிதானமாகவும் தொழுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம். சில சகோதரர்கள் தாமதமாக வருவதால் இமாம் ஜமாஅத்தை அடைவதற்காக வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க ஓடிவந்து தொழுகையில் இணைகின்றனர். இது தொழுகைக்கு இருக்க வேண்டிய அமைதியையும், நிதானத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகின்றது. தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இதுபோன்ற நிலைகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ளலாம்.

முன்கூட்டி வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு

  • நபியவர்கள் பாங்கு சொன்னவுடன் வீட்டிலிருந்து தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற ஹதீஸின் மூலம் இது மிகச் சிறந்த நற்செயல் என்பதை நாம் அறிகிறோம்.
  • தொழுகைக்கு ஆரம்ப வேளையில் வருவதன் நன்மைகளை மக்கள் அறிந்தால் அந்த நன்மைகளை அடைவதற்குப் போட்டியிடுவார்கள்.
  • தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தைப் பெற்றவராகிவிடுகிறார். இதன் காரணமாக மறுமையில் அர்ஷின் நிழலைப் பெறும் பாக்கியம் கிடைக்கிறது.
  • தொழுகையில் நிதானம், அமைதி மிகவும் அவசியமாகும். முன்கூட்டியே வருவதன் மூலம் இதனை நாம் அடைந்து கொள்ளலாம்.

தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இன்னும் ஏராளமான பாக்கியங்களை  பெறமுடியும். அவற்றை இன்ஷா அல்லாஹ் பின்னர் விரிவாகக் காண்போம்.

தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்புகள்

தொழுகையாளிகள் தொழுகைக்காகக் காத்திருக்கும் போது அதற்காக அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறான். அல்லாஹ் எப்படிப்பட்ட கருணையாளன் என்பதற்கும், தொழுகை எவ்வளவு பெரிய நல்லமல் என்பதற்கும் இது மாபெரும் சான்றாகும்.

பள்ளிவாசலுக்கு முன்கூட்டியே சென்று தொழுகைக்காகக் காத்திருப்பதற்கும், அதுபோன்று ஒரு தொழுகையை முடித்து விட்டு மற்றொரு தொழுகைக்காகக் காத்திருப்பதற்கும் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் வாரி வழங்குகிறான். அது பற்றிய நபிமொழிகளைக் காண்போம்.

தொழுகையை எதிர்பார்த்து தூங்கினாலும் நன்மையே!

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுவித்தார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். அவர்களுடைய மோதிரம் மின்னுவதை இப்போதும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (5869)

ஒரு தொழுகையை எதிர்பார்த்து நாம் தூங்கிவிட்டாலும் கூட இறைவன் தூங்கிய நேரம் முழுவதையும் தொழுகையாகவே பதிவு செய்கிறான் என்றால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் பாக்கியம் எப்படிப்பட்டது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இவற்றையெல்லாம் தெரிந்த பிறகும் அறவே தொழுகையைப் புறக்கணிக்கிறார்களே! அந்த மக்களின் துர்பாக்கியத்தை நாம் என்னவென்பது?

மலக்குமார்களின் பிரார்த்தனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர்பார்த்து) இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு சிறுதுடக்கு ஏற்படாதவரை (பிராத்திக்கிறார்கள்). இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணைபுரிவாயாக! என்று கூறுகின்றனர்.

தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி (659)

மலக்குமார்கள் பாவமே அறியாதவர்கள். அவர்களின் பிரார்த்தனை கண்டிப்பாக அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். தொழுகையாளிகள் தான் இத்தகைய பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியும்.

பாவங்கள் அழிக்கப்பட்டு, அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்என்று கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம் 421)

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தொழுகைக்காக நாம் காத்திருப்பதால் கிடைக்கும் பயன்களை வரிசையாகக் காண்போம்.

  • ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருந்தால் அவர் தூங்கிவிட்டாலும் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.
  • ஒருவர் தொழுது விட்டு அதே இடத்தில் மற்றொரு தொழுகையை எதிர்பார்த்து காத்திருந்தால் அவரது உளூ நீங்காத வரை அல்லது அவர் அந்த இடத்தை விட்டு நகரும் வரை மலக்குமார்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்; பாவமன்னிப்புக் கோருகிறார்கள்.
  • தொழுகைக்காகக் காத்திருப்பது நம்முடைய பாவங்களை அழித்து நன்மைகளை உயர்த்தும் நல்லறமாகும்.

தொழுகைக்காக நடந்து செல்வதன் சிறப்புகள்

தொழுகையை முறையாக பேணித் தொழுபவர்கள் அதன் மூலம் ஏராளமான நற்பாக்கியங்களை அடைந்து கொள்கின்றனர். அந்த நற்பாக்கியங்களில் ஒன்று தான் தொழுகையை நிறைவேற்றுவதற்காக நடந்து வருபவர்கள் பெறும் நன்மைகள். இதற்கு எத்தகைய பாக்கியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

தொலைவிலிருந்து நடந்து வருபவருக்கு அதிக நன்மை

பள்ளிவாசல் தூரமாக இருந்தால் தொழுகைக்குச் செல்வதற்கு சோம்பல் கொண்டு பல சகோதரர்கள் வீட்டிலேயே தொழுது விடுகின்றனர். இதனை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வீட்டிலிருந்து பள்ளிவாசல் வெகு தொலைவில் இருந்தாலும் நாம் பள்ளியை நாடிச் சென்று தொழுகையை நிறைவேற்றினால் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு வாரி வழங்குகிறான்.

அதிலும் குறிப்பாக இன்று பல பள்ளிவாசல்களில் இணை கற்பிக்கின்ற காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய பள்ளிவாசல்கள் தொழுவதற்கே தகுதியற்ற பள்ளிவாசல்களாகும்.

இணை வைப்புக் காரியங்கள் அரங்கேறாத தவ்ஹீத் பள்ளிவாசல்கள் வெகு தொலைவில் இருந்தாலும் நாம் நாடிச் சென்று அங்கு நம்முடைய தொழுகைகளை நிறைவேற்றும் போது நாம் இந்த நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: முஸ்லிம் (1179)

தொழுகையாளிகள் தான் இத்தகைய பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியும்.

சொர்க்கத்தில் மாளிகை கட்டப்படும்

தொழுகைக்காக ஒவ்வொரு முறை நாம் பள்ளியை நோக்கிச் செல்லும் போதும் அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைத் தயார் செய்கின்றான்.

சுப்ஹானல்லாஹ்! தொழுகை நமக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களையெல்லாம் பெற்றுத் தருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),  நூல்: முஸ்லிம் (1187)

அறவே தொழுகையை நிறைவேற்றாமல் இருப்பவர்களும், தொழுகை விஷயத்தில் பொடும்போக்காக இருப்பவர்களும் இத்தகைய பாக்கியங்களை எப்படி அடைந்து கொள்ள முடியும்?

தொழுகைக்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்கும் எத்தகைய பாக்கியங்களை அல்லாஹ் வழங்குகிறான் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஒவ்வொரு எட்டிற்கும் பத்து நன்மைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அங்கத் தூய்மை செய்து விட்டு பிறகு தொழுகை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்தால் அவன் பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிற்காகவும் பத்து நன்மைகளை அவனுடைய இரண்டு எழுத்தர்களும் பதிவு செய்கிறார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: இப்னு ஹிப்பான் (2045)

எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமாகும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பதும் தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி (2891)

பாவங்கள் அழிக்கப்பட்டு, தகுதிகள் உயர்த்தப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1184)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்என்று கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம் 421)

வாகனத்தில் வருவதை விட நடந்து வருவது சிறப்பு

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லைஎன்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே  கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டுஎன்று கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம் 1180)

“நான் பள்ளிவாசலுக்கு நடந்துவருவதும் (பள்ளிவாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று அந்த மனிதர் கூறியதாகவும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்” என்று கூறியதாகவும் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு காலடிக்கும் ஒரு அந்தஸ்து

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், “உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு தகுதி உண்டுஎன்று கூறினார்கள்.  (நூல்: முஸ்லிம் 1181)

காலடிகள் பதிவு செய்யப்படும்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?” என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார் “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்என்று (இரு முறை) கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1182)

தொழுகைக்காக நடந்து வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு

  • தொழுகைக்காக வெகுதொலைவிலிருந்து நடந்து வருபவர் தான் அதிக நன்மைகளைப் பெறுபவராவார்.
  • காலையிலோ, அல்லது மாலையிலோ பள்ளிவாசலுக்குச் சென்றால் ஒவ்வொரு தடவை செல்லும் போதும் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை அல்லாஹ் தயார் செய்கின்றான்.
  • வீட்டில் உளூச் செய்து பள்ளிவாசலை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு எட்டிற்கும் பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்.
  • தொழுகைக்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமாகும்.
  • வீட்டில் உளூச் செய்து தொழுகைக்காக நடந்து சென்றால் ஒரு எட்டு பாவங்களை அழிக்கிறது. மற்றொரு எட்டு அந்தஸ்துகளை உயர்த்துகிறது.
  • பள்ளிவாசலை நோக்கி அதிகமான காலடிகள் எடுத்து வைத்துச் செல்வது நமது பாவங்களை அழித்து நன்மைகளை உயர்த்துகிறது.
  • நம்முடைய கால் சுவடுகள் பதிவு செய்யப்படுவதுடன் ஒவ்வொரு எட்டிற்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது.

தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

அப்சல்குரு தூக்கு அப்பட்டமான சட்டமீறல்

(இந்தக் கட்டுரை, அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை விமர்சித்து டி.ஆர். அந்தியார்ஜுனா அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமாகும். கட்டுரையாளர் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசாங்கத்தின் முன்னாள் சொலிஸிட்டர் ஜெனரலும் ஆவார். இவரின் கட்டுரை பிப்ரவரி 19, 2013 இந்து நாளேட்டில் வெளியானது.)

பிப்ரவரி 9, 2013 அன்று மத்திய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமான செயல் ஆகும். ஆகஸ்ட் 4, 2005ம் ஆண்டு அப்சல் குருவுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  இதன் பின்னர் அவர் நவம்பர் 8, 2006ல் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். ஏழு வருடங்கள் அவருடைய கருணை மனு கண்டு கொள்ளப்படாமல் கிடப்பில் கிடந்தது. இப்போது அது மறுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தனக்கு வாழ்வா? சாவா என்று எந்த ஒரு முடிவும் தெரியாமல் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் கடுந்துயருக்கும் கவலைக்கும் ஆளாயினர். தூக்குத் தண்டனை கைதிகளும், அவர்களது குடும்பத்தாரும் படுகின்ற அவஸ்தை, அல்லல் காரணமாக நாகரிகமான நாடுகளும் நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றன.

ஏழாண்டுகள் கழித்து பிப்ரவரி 3 அன்று குடியரசுத் தலைவர் கருணை மனுவை மறுத்த இந்த விபரம் இரகசியமாகவே வைக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமல் மறைக்கப்பட்டது. இது போன்ற கால தாமதமான வழக்குகள் நீதிமன்றத்தின் கவனத்தில் கொள்ளப்பட்டு மரண தண்டனையிலிருந்து காக்கப்பட்ட வழக்குகள் உள்ளன.

அப்படி அப்சல் குருவின் வழக்கு நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்து அவர் தப்பி விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இது மறைக்கப்பட்டது. அப்சல் குருவின் குடும்பத்திற்குக் கூடத் தெரிவிக்காமல் கருணை மனு மறைக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்குள்ளாக பிப்ரவரி 9ம் தேதி அன்று அவருக்குத் தூக்குத் தண்டனை இரகசியமாக நிறைவேற்றப்பட்டது. அது இரகசியமாக திஹார் சிறையிலேயே உடல் அடக்கமும் செய்யப்பட்டது.

மறுக்கப்பட்ட உரிமை

தண்டனையைக் குறைக்க வேண்டும் அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு செய்வது அரசியல் சட்டம் பிரிவு 72ன் படி ஒரு தண்டனைக் கைதியின் உரிமையாகும். அந்த மனு மறுக்கப்படுகின்ற வரை அரசாங்கம் தண்டனையை நிறைவேற்றக்கூடாது.

மனுவை முடிவு செய்வதில், பிரிவு 72ன் படி குடியரசுத் தலைவர் தனது தனி அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் அரசாங்கத்தின் அறிவுரைப்படியே நடக்க வேண்டும். 1989ஆம் ஆண்டு கெஹார் சிங்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு தான் தீர்ப்பு அளித்தது.

அப்சல் குரு வழக்கில் எழக்கூடிய முக்கியமான கேள்வி, அவர் கருணை மனுவைச் சமர்ப்பித்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு அவருக்கு எப்படி தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடியும் என்பது தான். அப்சல் குருவின் கருணை மனு அரசியலாக்கப்பட்டு விட்டது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதை ஒரு பிரச்சனையாக ஆக்கி பிஜேபி அரசியல் ஆதாயம் தேட முனைந்து விட்டது. அதனால் அது மிக அற்பத்தனமாக வலுக்கட்டாயமாக அப்சல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தது.

அப்சல் குரு மரணத்தில் பிஜேபி அரசியல் ஆதாயம் பார்த்து விடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு இதில் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

உண்மையில் 2006 முதல் 2008 வரையிலான கால கட்டத்தில் அப்போதைய உள்துறை அமைச்சர் வேண்டுமென்றே அப்சல் குருவின் கருணை மனு மீது உடனே பதில் அளிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தார்.

இந்தக் கால தாமதத்தைத் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளான அப்சல் குரு, “உண்மையில் நான் பாரதீய ஜனதா தலைவர் எல். கே. அத்வானி நாட்டின் அடுத்த பிரதம அமைச்சராக வர விரும்புகின்றேன். காரணம். அவர் ஒருவர் தான் என் விவகாரமாக ஒரு நல்ல முடிவு எடுத்து எனக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு மிகப் பொருத்தமானவர்” என்று குறிப்பிட்டிருந்தார். “அப்போதாவது நான் படுகின்ற அவஸ்தையும், வேதனையும் ஒரு முடிவுக்கு வந்து விடுமல்லவா?” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நவம்பர் 21, 2012 அன்று அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை நிறைவேற்றிய மாத்திரத்தில் எதிர்க்கட்சிகள் புது வேகத்துடன், புத்துணர்ச்சியுடன் அப்சல் குருவின் மரண தண்டனையை நிறைவேற்றும்படி கூக்குரலிட்டனர்.

எதிர்க்கட்சிகள் இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாக ஆக்கி விடக்கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளும் கவனமாக மேற்கொள்ளப்பட்டன.

கஸாபின் தூக்கு தண்டனையை மிக இரகசியமாகவும், மறைமுகமாகவும் நிறைவேற்றியது அப்சல் குரு மரணத்திற்கு ஒரு முன்னுதாரணமாக ஆனது.

நவம்பர் 15ம் தேதி அன்று குடியரசு தலைவர் அப்சல் குருவின் கருணை மனுவை மீண்டும் புதிதாக மறு பரிசீலனை செய்யும்படி கேட்டு உள்துறை அமைச்சகத்திற்கே திரும்ப அனுப்புகின்றார்.

ஜனவரி 23, 2013 அன்று உள்துறை அமைச்சகம் கருணை மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்கிறது. குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பு உடனே பிப்ரவரி 4, 2013 அன்று செயல்பாட்டுக்கு வருகின்றது. ஐந்து நாட்கள் கழித்து அதாவது பிப்ரவரி 9ம் தேதியன்று அதிகாலை அப்சல் குரு தூக்கிலிடப்படுகிறார்.

அரசாங்கம் இழுத்தடித்த இந்த நீண்ட காலகட்டத்தில் அப்சல் குருவும், அவரது குடும்பமும் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கும், மன சங்கடத்திற்கும் ஆளாயினர்.

இப்படி ஓர் அநியாயமான இழுத்தடிப்பிற்குப் பிறகு அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதன் மூலம் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வகுத்த சட்ட நெறிகளை மத்திய அரசாங்கம் காற்றில் பறக்க விட்டிருக்கின்றது.

1974ம் ஆண்டு ஆந்திர பிரதேச அரசுக்கு எதிரான எடிக்மா அநாமா வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர், “பல ஆண்டுகளாகப் பழிக்கப்பட்ட சிறை அறையில் அலைக்கழிக்கின்ற, அச்சத்திற்கு ஆட்பட்டு வெந்து நீறுகின்ற அப்பாவி கைதி தான் தூக்குத் தண்டனை கைதி” என்று வர்ணிக்கின்றார்.

1983ம் ஆண்டுகளில் தமிழக அரசுக்கு எதிரான டி.வி. வத்தீஸ்வரன் வழக்கில் நீதிபதி சின்னப்பா ரெட்டி, “மரண தண்டனை நிறைவேற்றுவதில் எடுக்கும் கால தாமதம் மனிதத் தன்மையை இழக்க வைக்கும் அக்கிரமும் அநியாயமுமாகும். ஒரு மனிதனுக்கு அரசியல் சட்டம் 21ஆம் பிரிவு அளித்திருக்கின்ற அடிப்படை வாழ்வுரிமையைப் பாதிக்கின்ற வகையில் அநியாயமான, அக்கிரமமான அநீதியான வழியில் தட்டிப் பறிக்கும் செயல் ஆகும்” என்று தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்ட ஒரு தூக்குத் தண்டனை கைதி, மாற்றுத் தீர்வுக்காகக் காத்திருக்கும் மனநோவு, ஏக்கம், ஏமாற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையில் உருவாகும் கொடூரமான மன வேதனை. அது அவரது உடலின் மீதும், உள்ளத்தின் மீதும் தொடுக்கின்ற கோரத் தாக்குதல்கள், கொடுமையான விளைவுகள், ஒட்டுமொத்தமாக ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் என அவர் அன்றாடம் அனுபவிக்கின்ற அவதிகள், அல்லல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

அடுக்கடுக்கான இந்த வேதனைகள் அனைத்தையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரைவி கவுன்சில் (பிரிட்டனின் ஆராய்வாளர்களின் ஆலோசனைக் குழு) குறிப்பிட்டதை அந்த நீதிபதி அவர்கள் மேற்கோள் காட்டினார்.

குடும்பத்தார் படும் அல்லல்கள்

1983ம் ஆண்டு பஞ்சாப் அரசுக்கு எதிரான ஹேர் சிங் வழக்கில் நீதிமன்றம் அதே கருத்தைத் தெரிவித்திருந்தது.

1989ம் ஆண்டு குஜராத் அரசுக்கு எதிரான திரிவேனி பெண் வழக்கில், “காலங்கடந்து நிறைவேற்றப்படுகின்ற தூக்குத் தண்டனை அநீதி, அநியாயம், ஏற்க முடியாத காரியம்’ என்று உச்ச நீதி மன்றம் தெளிவாகக் குறிப்பிட்டது.

கருணை மனுவைத் தாமதமாக முடிவு செய்யும் போது தண்டனைக்குள்ளானவர் உடல் ரீதியான சித்ரவதைக்கு உள்ளாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மன வேதனைக்கும், உளைச்சலுக்கும் உள்ளாகின்றார். என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்ட – மறுக்க முடியாத உண்மையாகும்.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் அர்த்தமற்ற தாமதம் ஏற்படுமானால் தண்டனைக்குரியவர், “இந்தக் கால தாமதம் நியாயம் தானா? தனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா?’ என்று கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கு முழு உரிமை உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டால் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விபரத்தை குடும்பத்தார்களுக்குத் தெரிவிப்பது சட்டப்பூர்வமான கடமையாகும் என்றும் அது தெரிவித்தது.

தூக்கு தண்டனை கைதி மட்டுமல்ல; அவருடைய குடும்பமும் சேர்ந்து அநாவசியமான தாமதத்தால் நெருங்கிய உறவினர்களும் மன உளைச்சல் வேதனைக்கு ஆளாகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் 2012ல் மத்திய பிரதேசத்திற்கு எதிரான ஜகதீஷ் வழக்கில் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் ஒரு தூக்குத் தண்டனை கைதி நீண்ட நாட்கள் சிறையில் வாடி வதங்கிய பிறகும் நொந்து நூலான பிறகு இவருக்கு இப்படி ஒரு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா என்ற ஓர் உறுத்தலும், மனக் கலக்கமும் ஏற்படுகின்றது.

இந்த மன உளைச்சல். மனக்கலக்கம் ஏன் ஏற்படுகின்றது? நம்மிடம் உள்ள மனிதம் என்பது தான் அதற்குரிய பதில்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை நீண்ட காலம் தண்டனை நிறைவேற்றாமல் காக்க வைப்பது மனிதாபிமானம் அற்ற செயல் என்று அதைக் கருதுகின்றோம். இவ்வளவு காலம் நீண்ட சிறை வாசத்தை அனுபவிக்கச் செய்துவிட்டு அவரை தூக்கில் போடுவது என்பது ஈவு இரக்கமற்ற மிருகத் தனமான தண்டனை என்றும் நாம் கருதுகின்றோம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறிய கண்ணோட்டத்தை 1994ல் பிரைவி கவுன்சில் அப்படியே தன்னுடைய கருத்தாக ஏற்றுக் கொண்டது.

1989ல் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய கோர்ட்டும், கனடா நாட்டு உச்ச நீதிமன்றமும் ஒரே விதமான கருத்தை ஏற்றுக் கொண்டன. அப்சல் குரு தூக்குத் தண்டனை விவகாரத்தில் நம்முடைய நாட்டின் உச்ச நீதிமன்றம், இன்ன பிற நீதிமன்றங்களின் கருத்தை உதறித் தள்ளிவிட்டது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக மரண தண்டனை கைதிகள் மன வேதனைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாவது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தார்கள், அவரது சொந்த பந்தங்களும் அதே மனவேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகின்றார்கள் என்பது உலகம் ஒருமித்து ஏற்றுக் கொள்கின்ற உண்மையாகும்.

தூக்கு தண்டனை நிறைவேற்றுகின்ற நாள், நேரம் நெருங்கும் போது குடும்பத்தார்கள் மனநிலை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றது. இதற்கு ஒரு மரியாதை கொடுக்கும் விதத்தில் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று சொல்கின்ற நாடுகளில், தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னால் அந்தக் கைதி, தனது சொந்த பந்தங்களைச் சந்திக்குமாறு ஏற்பாடு செய்கின்றனர்.

அவர்களிடம் தண்டனை நிறைவேற்றப்படுகின்ற நாள் நேரத்தைத் தெரிவிக்கின்றனர். தண்டனை நிறைவேற்றிய பின் அடக்குவதற்காக உடலையும் அவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். ஆனால் அப்சல் குரு விஷயத்தில் அது போன்று தகவல் தெரிவிக்கவில்லை. தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் அவரது குடும்பத்தார்கள் அவரை இறுதியில் சந்திக்க முடியாமல் ஆயினர்.

பிப்ரவரி 8ம் தேதி துரித தபாலில் தகவலை அனுப்பி விட்டோம் என்று மத்திய அரசு சொல்வது அர்த்தமற்றது; பொறுப்பற்றது.

இந்தக் கடிதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு காஷ்மீரில் இவருடைய வீட்டில் கொடுக்கப்பட்டது.

2012 மார்ச் – ஏப்ரல் மாதங்களில் உச்ச நீதிமன்றம் இரண்டு தூக்குத் தண்டனை கைதிகளின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தேவேந்திர பால், நரேந்திர நாத் தாஸ் ஆகியோர் தான் அவ்விருவரும்.

அவ்விருவரும் கருணை மனு அளித்த பின்பு 8லிருந்து 11 மாதங்கள் தண்டனை நிறைவேற்றாமல் கால தாமதம் செய்யப்பட்டனர். தண்டனை நிறைவேற்றப்படாமல் இது போல் கால தாமதம் செய்யப்பட்டு, காத்துக் கிடக்கின்ற கைதிகளின் ஆவணங்களையும் அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்சநீதி மன்றம்.

நீண்ட நாள் தாமதமாகும் வழக்குகளின் நிலை

கருணை மனு நிலுவையில் வைக்கப்பட்டவர்களின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளில் உள்ள ஒன்று தான் அப்சல் குரு வழக்கு!

அர்த்தமற்ற, அநியாயமான, கால தாமதத்திற்குப் பிறகு சிறையில் வாடுகின்ற தண்டனை கைதிகளின் மிகப் பெரிய கேள்விக்கு விடை காணவும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் என்னை (அந்தியார்ஜுனா அவர்களை) பொறுப்பாளராக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இது தொடர்பாக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விஷயத்தைக் குறிப்புப் படுத்தி தகவல் தெரிவித்தேன்.

இவ்வழக்கு மீதான விசாரனை ஏப்ரல் 19, 2012 அன்று முடிந்தது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. கருணை மனுவுக்குப் பிறகு கால தாமதமாகும் தூக்குத் தண்டனை கைதிகள் தொடர்பான வழக்குகளின் சட்ட நிலை குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்பது மத்திய அரசுக்கு நன்கு தெரியும்.

நிலுவையில் இருக்கின்ற இந்த மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான தீர்ப்புக்காகக் கண்டிப்பாகக் காத்திருக்க வேண்டிய மத்திய அரசு, அவசர கதியில் அப்சல் குருவின் தண்டணையை பிப்ரவரி 9, 2013ல் நிறைவேற்றி முடித்தது.

மத்திய அரசு நிறைவேற்றிய அப்சல் குருவின் இந்த மரண தண்டனை வரலாற்றில் மட்ட ரகமாகவும் கேவலமாகவும் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையாக வரலாற்றில் பதிவாகி விட்டது.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 10

அடி வாங்கிய அவ்லியாக்கள்

நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது சொர்க்கத்திற்குரியவர் என்று நற்சான்று அளித்திருக்கிறார்களா? என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் உவைஸ் அல்கர்னி என்பவர். இவர் தாபியீன்களில் ஒருவராவார்.

அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் தாபியீன்களில் ஒருவர் வருவார். அவருடைய பெயர் உவைஸ் அல்கர்னி. அவரை நீங்கள் பார்த்தீர்களேயானால் உங்களுக்காக வேண்டி அவரை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

ஆக தன்னுடைய உற்ற தோழர்களையே உவைஸ் அல்கர்னியிடம் பாவமன்னிப்பு தேடச் சொல்கிறார்கள் என்றால் இவரை நாம் நல்லடியார் என்று சந்தேகமே இல்லாமல் உறுதியாக இவர் சொர்க்கவாசி, நல்லடியார், மகான் என்று சொல்லலாம்.

அதேபோல மஹ்தீ என்பரைப் பற்றியும் நபிகளார் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். இவ்வுலகில் அவர் நல்லடியாராக இருப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே இதை வைத்து இவர் நல்லவர் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம்.

அல்லாஹ் இவர்களைப் பற்றி நல்லடியார் என்று அறிவித்துக் கொடுத்ததனால் தான் இவர் நல்லடியார் என்பது நபிகளாருக்கு தெரியும். எனவே இதை ஆதாரமாகக் கொண்டு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று தவறாக விளங்கி விடக்கூடாது.

ஆக, இதுவரை நாம் பார்த்தவர்களைத் தவிர வேறு யாரையும், (நாம் தேடிப்பார்த்த வரை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொர்க்கவாசி என்றோ நற்சான்று அளித்ததே இல்லை.

அபூஹனிபா, ஷாஃபி, அல்லது அப்துல் காதிர் ஜீலானி இவர்களைக் கூட நபிகளார் நல்லவர்கள் என்றோ மகான்கள் என்றோ சொன்னதே இல்லை. அவ்வாறு இருக்கும் போது இவர்களையெல்லாம் நல்லவர் மகான் என்று நாம் எப்படி சொல்ல முடியும்? இவர்கள் நல்லடியார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரத்தையும் உலகம் அழியும் வரைக்கும் இவர்களால் காட்டவே முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் இதுவரை பார்த்த அத்தனை செய்திகளும், எந்த ஒருவரையும் நாமாக  நல்லடியார் என்றோ மகான்கள் என்றோ சொல்லக்கூடாது. நல்லடியார்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை நல்லடியார்கள் என்று கூறினார்களோ அவர்களை மாத்திரமே நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, வேறு யாரையாவது நல்லடியார்கள், மகான்கள் எனக் கூறிக்கொண்டு அவர்களுக்காக விழா எடுப்பதும் அவர்களிடம் உதவி தேடுவதும், அவர்களின் காலில் விழுவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும். அது நம்மை நிரந்தர நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதையும் விளங்கி இந்தப் பாவத்திலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும்.

நல்லடியார்களுக்கு மறுமையில் கிடைக்கக்கூடிய பரிசுகளை, அந்தஸ்துகளை, கூலியைப் பற்றி இஸ்லாம் சொல்கிறது. ஆனால் அவர்களைக் கொண்டாடுவதற்குச் சொல்லவில்லை. நல்லடியார்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் தான் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தலாமா என்ற கேள்வியே வரும். அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் அந்த நல்லடியார்களுக்கு உருஸ் எடுக்கவோ, சந்தனக்கூடு எடுக்கவோ, பாராட்டு விழா நடத்தவோ அல்லாஹ் சொல்லவில்லை. அவர்களைப் போன்று நீயும் நல்லடியானாக ஆக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறான். அவர்களுக்கு உரூஸ் எடுக்க வேண்டும், பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய வழிமுறையையும் சேர்த்தே சொல்லியிருப்பான்.

ஆனால் அவர்களைப் பற்றி எந்த அடையாளத்தையும் அவன் சொல்லவில்லை. நீங்கள் நல்லடியார்களாக இருந்தால் இந்த அந்தஸ்தை அடைந்து கொள்வீர்கள். நீங்கள் இறைநேசர்களாக இருந்தீர்களென்றால் இந்த பரிசுகளைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்மையும் இறைநேசர்களாக ஆக்குவதற்காக சொன்ன வாக்குறுதியே தவிர யாரையும் இறைநேசர் என்று முடிவு செய்து கொண்டாடுவதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து அல்லாஹ்வின் அறிவிப்பின் படியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவிப்பின் படியும் நல்லடியார்கள் யார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆனால் அவர்களுக்குரிய எல்லை என்ன? நல்லடியாராக, அவ்லியாவாக ஆனவுடன் எல்லாவிதமான ஆற்றல்களும், சக்தியும் அவர்களுக்கு வந்துவிடுமா? அல்லது அல்லாஹ்விடம் நாம் கேட்பதை அவர்களிடமும் கேட்கலாமா? அல்லாஹ் செய்வதையெல்லாம் அவர் வந்து செய்து முடித்திடுவாரா? அல்லது அவர் மனிதத் தன்மையிலிருந்து அப்பாற்பட்டவராக ஆகிவிடுவாரா? என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எந்த நல்லடியாராக இருந்தாலும் அவருக்கு மறுமையில் நல்ல அந்தஸ்து கிடைக்குமே தவிர இந்த உலகத்தில் அவர் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவராக ஆகமாட்டார். மனிதனுக்கு முடியாத விஷயங்களைச் செய்பவராக ஆகமாட்டார். எல்லா நிலையிலும் அவர் மனிதராகத் தான் இருந்திருப்பார். இருந்திருக்க முடியும்.

முதலில் அவ்லியாக்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்லியாக்கள் என்று கண்டுபிடித்தால் கூட அவ்லியாக்கள் அதைச் செய்திருக்கிறார்கள், இதைச் செய்திருக்கிறார்கள் என்று அவிழ்த்து விட்டிருக்கிறார்களே அந்தக் கதைகள் பொய் என்பதற்கு நிறைய சான்றுகள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் குர்ஆனுடைய போதனைகளிலிருந்தும் நமக்குத் தெரிய வருகின்றது.

அல்லாஹ்வுடைய நேசர்களில் நபிமார்கள் சிறந்தவர்கள். அதில் நம்மில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. அவ்லியாக்களெல்லாம் நபிமார்களுடைய அந்தஸ்துக்குக் கீழ் தான் வருவார்கள். நபிமார்கள் ஒவ்வொரு காலத்திலேயும் அந்தந்த மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, இன்றைக்கு நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து வைத்துள்ள மாதிரி அன்றைக்கு நபிகளாரை அம்மக்கள் நினைத்திருந்தால், அந்த நபிமார்கள் அடி வாங்கியிருப்பார்களா? கேலி, கிண்டல் செய்யயப்பட்டிருப்பார்களா? நாட்டை விட்டு துரத்தப்பட்டிருப்பார்களா? என்பதை சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் நாம் இன்றைக்கு அவ்லியாக்கள் என்றால், அவர் கடவுள் மாதிரியும் நாம் அவர் முன்னால் பணிந்து நிற்க வேண்டும் எனவும், அவர் நடந்து வந்தால் எல்லோரும் அவருக்கு எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் எண்ணி வைத்திருக்கிறார்கள்.

எந்த மனிதனும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவனாக ஆக முடியாது. உதாரணத்திற்கு, எனக்குக் கடவுள் தன்மை இருக்கிறது, மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது என்று ஒருவன்  சொல்லி, வாயில் இருந்து லிங்கத்தை எடுக்கிறேன், இரும்பைத் தங்கமாக மாற்றுகிறேன் என்றால் யாராவது அவன் மேல் கை வைப்பார்களா? அவனை அடிப்பார்களா? அவனைத் திட்டுவார்களா? எதுவும் செய்யமாட்டார்கள்.

இந்த மாதிரி நபிமார்களைப் பற்றிய பயம் அந்த மக்களுக்கு உண்டாகியிருக்குமானால் யாராவது அவர்களை விரட்டியிருப்பார்களா? கொலை செய்திருப்பார்களா?

ஆக நபிமார்கள் என்ற மிகச் சிறந்த நல்லடியார்கள் வாழ்ந்த போது அச்சமுதாய மக்களால் கிள்ளுக் கீரையாகக் கருதப்பட்டார்கள்; எள்ளி நகையாடப்பட்டார்கள்; கேலி கிண்டல் செய்யப்பட்டார்கள். பைத்தியக்காரன் என்று சொன்னார்கள். கிறுக்கன் என்று சொன்னார்கள். பலவிதமான துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கினார்கள். இந்தச் சோதனைகளின் போது அவர்கள் எப்படி இருந்தார்கள்? நம்மைப் போல சாதாரண மனிதராகத் தான் இருந்தார்கள். மந்திரவாதியாக இருக்கவில்லை. ஜோசியக்காரனாகவும் இருக்கவில்லை.

ஆனால் அவர்கள் மந்திரம் தந்திரம் தெரிந்தவராக இருந்திருந்தால் யாரும் அவர்களை நெருங்கியிருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக கல்லுக்குக் கூட சக்தி இருக்கின்றது என்று நினைக்கக்கூடியவர்கள், அந்தக் கல்லைத் திட்டினால் அது நம்மை குற்றம் பிடித்துவிடும் என்று நினைத்தவர்கள், நபிமார்களுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்தால் அவர்களிடம் நெருங்கியிருப்பார்களா?

அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத அனைத்து சமுதாய மக்களுமே கல்லுக்கு சக்தி இருக்கிறது என்று நினைத்துத் தான் அதனை வழிபட்டார்கள். ஆனால் அந்த சக்தி மூஸா நபிக்கு, ஈஸா நபிக்கு, இப்ராஹீம் நபிக்கு இருக்கிறது என்று நினைத்திருந்தால் அனைவரும் அந்தந்த நபிமார்களிடம் கையைக் கட்டிக் கொண்டு சரணடைந்திருப்பார்கள். அனைவரும் அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் அந்த மாதிரி யாரும் இருந்ததாக வரலாறு இல்லை. நபிமார்கள் வாழ்ந்த ஒவ்வொரு சமுதாயத்திலும் எந்த மாதிரி மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதைப் பற்றி இறைவன் கூறுகிறான்.

அதாவது மூஸா, மற்றும் ஹாரூண் நபி இருவரும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும் போது பத்து அற்புதங்களை அல்லாஹ் கொடுத்து அனுப்புகிறான். மற்ற நேரத்தில் சாதாரண மனிதராகத் தான் இருப்பார்கள். கைத்தடியை போட்டால் பாம்பாக மாறுவது, சட்டைப்பைக்குள் கையை நுழைத்து வெளியே எடுத்தால் வெண்மையாக, பிரகாசமாக இருப்பது உட்பட 10 அத்தாட்சிகளை அவர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான். அந்த 10 அற்புதங்களையும் ஃபிர்அவ்னிடமும் அந்த சமுதாய மக்களிடமும் காட்டியபோது, அதைக் கண்ணால் பார்த்துக் கொண்டே…

இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?” என்றனர்.

அல்குர்ஆன். 23:47

மேலும் அவ்விருவரைப் பற்றியும் அந்த மக்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!என்று அவர்கள் கேட்டனர்.

அல்குர்ஆன். 14:10

அதேபோன்று நூஹ் நபியைப் பார்த்து,

எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:27

மேலும், 23:24-33, 7:131 ஆகிய வசனங்களிலும் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆக அத்தனை நபிமார்களும் அம்மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் சொல்லக்கூடிய செய்தி சரியா? தவறா? என்பதை பார்க்காமால், இவர் யார்? இவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்பதைத் தான் பார்த்தார்கள். நாம் அடித்தால் அவர் கீழே விழுந்து விடுகிறார். நாம் கவலைப்படுவதைப் போன்று அவரும் கவலைப்படுகிறார். நம்மைப் போன்று அவரும் முதுமையை அடைகின்றார். இவரை நாம் எவ்வாறு தூதராக ஏற்றுக் கொள்வது என்று எண்ணினார்கள். அதனால் அவர்கள் தூதர்களை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த இருவரும் 10 அற்புதங்களைக் காட்டியும் கூட அவர்களுடைய கண்களுக்கு சாதாரண மனிதர்களாகத் தான் தென்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவரும் மந்திரவாதியாகத் தென்பட்டு இருப்பார்களேயானால் அந்த மக்கள் அனைவரும் அவ்விருவரிடம் சரணாகதி அடைந்திருப்பார்கள்.

அதேபோன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்புப் பணி செய்யும் போது அவர்களுடைய ஒழுக்கம், பண்பாடு, நேர்மை, வாய்மை இதை வைத்து அவர்களை மறுக்கவில்லை. இதை அவர்கள் கண்கூடாக பார்த்தார்கள். மக்களிடத்தில் நபியவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தது. அதனால் தான் அவர்களை அம்மக்கள் சாதிக் (உண்மையாளர்), அமீன்  (நம்பிக்கைக்குரியவர்) என்றும் அழைத்து வந்தனர்.

இவ்வாறு இருக்க அந்த மக்கள் எதை வைத்து நபி (ஸல்) அவர்களை மறுத்தார்கள்? இவர் அல்லாஹ்வின் தூதர் என்று சொல்கிறார். ஆனால் நம்மைப் போலத்தானே இருக்கிறார். வேறு எந்த வித்தியாசமும் இல்லையே! என்று கூறியே மறுத்தார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெரிவிக்கிறான்.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:7

ஆக, நபிமார்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம், நாம் யாரை அவ்லியாக்கள் என்று நினைத்து, அவர்களுக்கு ஏராளமான ஆற்றல்கள் இருக்கின்றன என்று நம்புகிறோமோ அவர்களைப் போன்று அந்த நபிமார்கள் இல்லை என்பது தான்.

அதேபோன்று ஸாலிஹ் நபியவர்களும் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய அம்மக்களின் எண்ணம் எவ்வாறு இருந்தது என்பதை இறைவன் சொல்கிறான்.

நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!” (என்றும் கூறினர்)

அல்குர்ஆன் 26:154

இந்த வசனத்தில் அந்த மக்கள் சாலிஹ் நபியிடத்தில் நீயும் எங்களைப் போல் ஒரு மனிதர் தானே! எங்களைப் போன்று சாப்பிடுகிறாய்; தூங்குகிறாய்; மலம், ஜலம் கழிக்கின்றாய். இவ்வாறு இருக்கும்போது எதை வைத்துக் கொண்டு நீ நபியென வாதிடுகிறாய் என கேட்டார்கள்.

மேலும் அம்மக்கள் சாலிஹ் நபியைப் பார்த்து,

நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும் சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்

அல்குர்ஆன் 54:24

என்றும் கூறியதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அதே போன்று ஷூஐப் நபியிடத்தில் அந்தச் சமுதாய மக்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் இறைவன் கூறுகிறான்.

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

அல்குர்ஆன் 26:186

அதே போல யாசீன் என்கிற சூராவில், ஒரே சமுதாயத்திற்குப் பல தூதர்களை அல்லாஹ் அனுப்பியதாகச் சொல்கிறான். முதலில் ஒரு தூதரை அனுப்புகிறான். அவரை நம்ப மறுக்கிறார்கள். இரண்டாவதாக ஒரு தூதரை அனுப்புகிறான். அவரையும் நம்ப மறுக்கிறார்கள். அவ்விருவருடன் மூன்றாவது நபரைக் கொண்டு பலப்படுத்துகிறான். இவ்வாறு மூன்று தூதர்களும் சேர்ந்து வருகிறார்கள். அந்த மூவரையும் பார்த்து,

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்என்று கூறினர்.

அல்குர்ஆன் 36:15

நீங்கள் மூன்று பேர் வந்தாலும் சரி, முப்பது பேர் வந்தாலும் சரி நீங்கள் எங்களைப் போல மனிதர்கள் தான், உங்களிடம் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றுமே இல்லையே! நாங்கள் செய்வதைத் தானே நீங்களும் செய்கிறீர்கள். பிறகு எப்படி நீங்கள் இறைத்தூதர்களாக ஆக முடியும். எங்களுடைய கண்களுக்கு நீங்கள் மந்திரவாதிகளாகவோ, தந்திரவாதிகளாகவோ தென்பட்டதே இல்லையே! பிறகு எப்படி நாங்கள் உங்களை இறைத்தூதர்கள் என நம்புவது? என்று கேட்டனர்.

அதேபோல பிரச்சாரம் செய்ய வந்த அத்தனை நபிமார்களையும் பைத்தியக்காரன், கிறுக்கன் என்றுறெல்லாம் அம்மக்கள் எள்ளி நகையாடினார்கள்.

நீயும் எங்களைப் போல ஒரு மனிதன் தான் என்பது கூட அந்த நபிமார்களுக்குக் கவலையை ஏற்படுத்தவில்லை. இது பரவாயில்லை. நாகரீகமான வார்த்தை என்று சொல்லலாம். ஆனால் அதையும் மீறி பைத்தியக்காரன், கிறுக்கன் போன்ற அநாகரீகமான வார்த்தைகளையும் பயன்படுத்தி இந்தப் பிரச்சாரத்திற்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினர். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் என்று நபிமார்கள் சொல்லும்போது, அந்த நபிமார்களைப் பார்த்து, “இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது’ என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 15:6

மேலும் 23:25, 26:27, 37:36, 44:14, 51:52, 54:9 ஆகிய வசனங்களில் நபிகளார் உட்பட எல்லா நபிமார்களையும் எவ்வாறு கேலி கிண்டலாகப் பேசினர் என்பதைத் தெளிவுபடுத்துகிறான்.

ஆக, அம்மக்கள் நபிமார்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் தைரியமாக இருந்தார்களென்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு நபிமார்கள் சாதாரண மனிதர்களாக அவர்களுக்குக் காட்சியளித்தனர்.

அவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவோ, தங்களால் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட முடியும் என்றோ, எங்களைத் திட்டினால் அழிந்துவிடுவீர்கள் என்றோ, எங்களைத் தொட்டாலே நாசமாகி விடுவீர்கள் என்றோ அவர்கள் கூறவில்லை. எல்லோரையும் போல் சாதாரணமான மனிதராக இருந்ததால் தான் அவர்களை அம்மக்கள் திட்ட முடிந்தது; அடிக்க முடிந்தது; கேலி செய்ய முடிந்தது.

இன்று, இறந்து போன ஒரு மனிதரைக் கூட திட்டுவதற்கு மனிதன் பயப்படுவதைப் பார்க்கிறோம். 10 வருடமாக தர்காவிற்குச் சென்று நேர்ச்சை செய்தும் குழந்தை பிறக்கவில்லை. ஆனாலும் அந்த அவ்லியாவைத் திட்டுவதில்லை. திட்டினால் அவரால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறான். இப்படித் தான் மனிதனுடைய சுபாவம் இருக்கிறது.

இந்த மாதிரியான செயல்களை நபிமார்கள் தங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருந்தால் கிறுக்கன் என்று அவர்களைச் சொல்ல முடியுமா? பைத்தியக்காரன் என்று சொல்ல முடியுமா? நீயும் எங்களைப் போல மனிதர் தான் என்று சொல்ல முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது.

இதிலிருந்து என்ன விளங்குகிறது? இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பது போல் எந்த நபியும் இருந்தது கிடையாது. நபிமார்களுக்கே கிடையாது என்றால் மற்ற மனிதர்களுக்கு எவ்வாறு அதுபோன்ற சக்திகள் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் நபிமார்களைப் பற்றி மேலும் சில  விஷயங்கள் இருக்கின்றன. அவர்கள் எப்படியெல்லாம் மனிதர்களாக இருந்தார்கள். அவர்களுடைய சக்தி (ஆற்றல்) எந்த அளவுக்கு இருந்தது? அவர்களால் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியுமா? இது போன்ற விஷயங்களையெல்லாம் நாம் அலசிப் பார்த்தோமென்றால் இறைநேசரை நாம் தீர்மானிக்க முடியும் என்ற கருத்து மொத்தமாக அடிபட்டுப் போய்விடும்.

இறைநேசரைக் கண்டுபிடிக்க முடியாது என்பதிலேயே எல்லாம் அடிபட்டுப் போய்விடுகின்றது. அப்படியே கண்டுபிடித்தாலும் அந்த இறைநேசருக்காவது நாம் நினைத்த மாதிரி சக்தி இருக்குமா? கிடையவே கிடையாது என்பதை அல்லாஹ் தெள்ளத் தெளிவாகச் சொல்லிக் காட்டுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிக் காட்டுகிறார்கள். அந்தச் சான்றுகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? சூழல் காரணமாக ஓர் இறைமறுப்பாளரை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ ஆதரிப்பது தவறில்லை என்கிறீர்கள். சரி, அதே போல உலகில் எங்காவது ஒரு பகுதியில் கிலாஃபத் இறையாட்சி ஆட்சி ஏற்பட்டால் அதை ஆதரிப்பீர்களா?

அனீஸ் அஹமது

ஒரு ஆட்சியை கிலாபத் என்றும் இறையாட்சி என்றும் அவர்களே சொல்லிக் கொண்டால் அது சரியான ஆட்சியாகிவிட முடியாது. அது இஸ்லாமிய ஆட்சியாகவும் முடியாது.

இஸ்லாமிய ஆட்சி என்றால் இஸ்லாமிய சட்டதிட்டங்களை வளைந்து கொடுக்காமல் அப்படியே பின்பற்றுவதாகும். இப்படிப்பட்ட ஆட்சி இன்று உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. இஸ்லாமிய நாடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் நாடுகளிலும் இல்லை.

இஸ்லாத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்ற அடிப்படையில் இஸ்லாமிய ஒழுங்கு முறைகளையும் நெறிமுறைகளையும் மீறி நடப்பவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு அழைப்பு விட்டால் அந்த அழைப்பு பொய்யானது, போலியானது. இவர்களை நம்பி இவர்களுக்குப் பின்னால் செல்லக் கூடாது. இந்த அழைப்பை விடுவதற்கு இவர்களுக்கு எள்ளளவு கூட தகுதி இல்லை.

முறையான இஸ்லாமிய ஆட்சி இறுதி காலத்தில் தான் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். யார் தலைமையில் அமையும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மஹ்தீ என்ற மன்னர் தோன்றுவார். அவர் தலைமையில் நல்லாட்சி அமையும். இதே போன்று இறுதிக் காலத்தில் நபி ஈசா (அலை) அவர்கள் வருகை தந்து நல்லாட்சி செய்வார்கள்.

இந்த இருவரின் தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் போது அதை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் இவர்களை ஒருவர் தலைவராக ஏற்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவர்களின் ஆட்சி கட்டாயம் ஏற்படும்.

அந்தக் காலத்தை நாம் அடைந்தால் நிச்சயமாக அவர்களின் ஆட்சியை ஆதரிப்போம். ஆனால் இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கும் வழிகேடர்களை ஒருக்காலும் ஆதரிக்க முடியாது.

? பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா? ஜியாரத் செய்யும் பெண்களை சபிதுள்ளது பற்றி வந்துள்ள ஹதீஸ் விளக்கம் என்ன?

அய்யம்பேட்டை அலீம்

மண்ணறைகளுக்குச் சென்று வரும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு மாத்திரம் சரியானதாக உள்ளது.

மண்ணறைகளைச் சந்தித்து வரும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் பள்ளி எழுப்புபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ (294)

இது பலவீனமான அறிவிப்பாகும். இதில் அபூசாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர், இமாம் அபூஹாதிம், இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன் மற்றும் பலர் கூறியுள்ளனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பும் பலவீனமாக உள்ளது.

மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ (976)

இந்த அறிவிப்பில் உமர் பின் அபீ சலமா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், ஷுஃபா, முஹம்மது பின் சஅத், இப்னு ஹுஸைமா, இமாம் நஸாயீ ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்கள் வழியாக வரும் பின்வரும் அறிவிப்பு மட்டுமே சரியாக உள்ளது.

மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)

நூல்: இப்னு மாஜா (1563)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்று நாம் முன்னர் கூறி வந்தோம். இது தொடர்பாக வரும் மற்ற பல ஹதீஸ்களைப் பார்க்கும் போது பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள். பிறகு இதற்கு அனுமதியளித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது. இதைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

ஆண்களும் பெண்களும் கப்று ஸியாரத் செய்யக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் முன்னர் தடைசெய்திருந்தார்கள். குறிப்பாக இந்த விசயத்தில் பெண்களுக்குக் கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும் அனுமதியளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (3995)

அப்துல்லாஹ் பின் அபீ மலீகா கூறுகிறார்:

ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளை சந்தித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “இறை நம்பிக்கையாளர்களின் தாயாரே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன்என்று பதிலளித்தார்கள். “மண்ணறைகளுக்கு சென்றுவரக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றைச் சந்தித்து வருமாறு ஏவினார்கள்எனக் கூறினார்கள்.

நூல்: ஹாகிம் (1327)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜிப்ரீல் “உம் இறைவன் உம்மை “பகீஉவாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்என்று (என்னிடம்) கூறினார்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்என்று சொல்என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

நூல்: முஸ்லிம் (1774)

மண்ணறைகளுக்குச் செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபியவர்கள் கற்றுக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்குச் சென்று, மண்ணறைகளைப் பார்த்து, மறுமை சிந்தனையை வரவழைத்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த அனுமதி பொது மையவாடிகளுக்குத் தானே தவிர, இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரிய இடங்களான தர்ஹாக்களுக்குச் சென்றுவர ஆண்களுக்கோ, பெண்களுக்கோ அனுமதியில்லை.

? ஆஷுரா பற்றிய ஹதீஸில், ஒரு ஹதீஸ் ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நோன்பை நோற்று வந்ததாகவும், மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றும் கூறியுள்ளார்கள். அப்படியென்றால் நபி (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதலே ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டதே? விளக்கம் தரவும்.

ஹஜ் முஹம்மத்

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் மக்காவில் இருந்த போது அன்றைய மக்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு வைத்ததன் அடிப்படையில் தாமும் நோன்பு நோற்றனர். இதற்குக் காரணம் மூஸா நபி காப்பாற்றப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக அன்றைய தினம் கஅபாவிற்குப் புது திரை மாற்றப்படும் நாள் என்ற அடிப்படையில் அந்த நோன்பு வைக்கப்பட்டது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அது தான்  கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, “யார் (ஆஷுராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1592

இதன் பின்னர் மதீனா வந்த பின்னரும் அந்த நோன்பைத் தொடர்ந்தனர். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷுரா நோன்பு மக்கள் விருப்பத்தில் விடப்பட்டது. விரும்பினால் வைக்கலாம். விரும்பினால் விட்டு விடலாம் என்பது இரண்டாவது நிலை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி (ஸல்) அவர்களும் ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் (ஆஷுரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும் எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1892, 1893, 2000, 2001, 2002, 2003,

இதன் பின்னர் அதே நாளில் யூதர்களும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிகிறார்கள். அவர்களிடம் இதற்கான காரணத்தை வினவுகிறார்கள்.  மூஸா நபி காப்பாற்றப்பட்ட நாள் என்று அவர்கள் சொன்ன போது மூஸா நபியை மதிப்பதில் நாங்கள் உங்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று கூறி அன்றைய தினம் நோன்பு வைப்பதை ஆர்வமூட்டினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர்கள், “இது நல்ல நாள். இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களை விட மூசாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

நூல்: புகாரி 2004, 3397, 3943, 4680, 4737,

ஆரம்பத்தில் பல விஷயங்களில் யூதர்களுடன் ஒத்துப் போவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பியிருந்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியை, (தமது நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும் தொங்க விட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களை (நெற்றியின் மீது) தொங்க விட்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள்.

நூல்: புகாரி 3558

பின்னர் யூதர்களுக்கு அனைத்து விஷயத்திலும் மாறுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 3456, 7320

இந்த அடிப்படையில் தம்முடைய கடைசி வருடத்தில், “அடுத்த ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள் ஆனால் அடுத்த ஆண்டு அவர்கள் உயிருடன் இருக்கவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். (நூல்: புகாரி 2089)

மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று இடம் பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அதாவது ஆஷுரா நாளில்’ எனும் குறிப்புடன் இடம் பெற்றுள்ளது.

பார்க்க: முஸ்லிம் 1916, 1917

ஆஷுரா குறித்த மேற்கண்ட நிலைபாடுகள் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தவையாகும். எனவே இதில் முரண்பாடு ஏதும் இல்லை.