ஏகத்துவம் – மார்ச் 2008

தலையங்கம்

இணையற்ற இறைவனுக்காக ஓர் ஏகத்துவ எழுச்சி மாநாடு

தலைவர் அழைக்கிறார்

தளபதி அழைக்கிறார்

தலைவி அழைக்கிறார்

அம்மா அழைக்கிறார்

அன்னை அழைக்கிறார்

அண்ணன் அழைக்கிறார்

இப்படி அழைப்புப் படலங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. உறவுகளைக் குறிப்பிட்டு மக்களை மாநாட்டிற்காக, கட்சி, கழகம், இயக்கத் தலைவர்கள் நீட்டி முழக்கி விடுக்கின்ற அழைப்புகள் தாம் இவை!

இவை முஸ்லிம் அல்லாதோர் நடத்துகின்ற மாநாடுகளாகும். முஸ்லிம்களும் தங்கள் பங்குக்கு அன்றும் இன்றும் மாநாடுகள் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.

வலிமார்கள் மாநாடு

தரீக்காக்கள் மாநாடு

மத்ஹபுகள் மாநாடு

இவை முஸ்லிம்கள் நடத்தும் மாநாடுகள்!

இவை அனைத்துமே தனி நபர்கள் மீது போதையூட்டும் தனி மனித வழிபாட்டு மாநாடுகள்!

இன்றைய இந்திய முஸ்லிம்கள், குறிப்பாகத் தமிழக முஸ்லிம்கள் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முயீனுத்தீன், ஏர்வாடி இப்ராஹீம், நாகூர் ஷாகுல் ஹமீது, ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா, கேரள பீமா ஆகியோரை அல்லாஹ்வுடன் இணைத்து இணையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று இம்மக்களிடையே நாம் சொல்கிறோம்; பிரச்சாரம் செய்கிறோம். இதைத் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்தார்கள்.

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

அல்குர்ஆன் 60:4

இதைத் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா இறைத் தூதர்களும் போதித்தார்கள்.

“எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 7:70

அதே பிரச்சாரத்தை நாம் இன்று செய்கின்ற போது நபி (ஸல்) அவர்கள் சந்தித்த அந்த இழப்புக்களை நாமும் சந்திக்கின்றோம்.

மக்கா முஷ்ரிக்குகள் என்ன வெறுப்பை வெளிப்படுத்தினார்களோ அதே வெறுப்பைத் தான் இந்த மக்களும் வெளிப்படுத்துகின்றனர்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று நாம் கூட்டம் போட்டால் இவர்கள் அந்த வெறுப்பின் காரணமாக அதைத் தடை செய்கிறார்கள். அதே சமயம் தரீக்கா, அவ்லியாக்கள், மல்லிதுகள் என்று இணை வைப்புக் கூட்டங்களை நடத்தினால் இவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப் பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்.

அல்குர்ஆன் 40:12

இவர்களிடம் உள்ள இணை வைப்பை ஏகத்துவவாதிகள் எதிர்த்த போது,

ஊர் நீக்கம் செய்கின்றனர்.

பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை விதிக்கின்றனர்.

இவை மக்காவின் இணை வைப்பாளர்கள் வெளிப்படுத்திய அதே விளைவுகள் தான். இந்த விளைவுகளை எல்லாம் தாண்டித் தான் ஏகத்துவக் கொள்கை எழுச்சி கண்டு கொண்டிருக்கின்றது.

அவ்லியாக்களை எதிர்ப்பவர்கள்  அழிந்து போவார்கள் என்று கனவு கண்டார்கள். (நாம் அவ்லியாக்களை எதிர்க்கவில்லை. அவர்களிடம் பிரார்த்திப்பதைத் தான் எதிர்க்கிறோம்) ஆனால் அவர்களது கனவு பொய்யாகும் விதத்தில் இந்த ஏகத்துவம் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கின்றது. ஏகத்துவ இயக்கத்திற்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதற்காகத் தான் இம்மாநாடு!

கோடான கோடி செலவில் மாநாடுகள் ஏன் நடத்தப்படுகின்றன? கோடிக்கணக்கில் செலவு செய்து இப்படிக் கூடி கலையும் மாநாடுகள் தேவையா? என்று ஓர் எண்ணம் தோன்றலாம். தமிழகத்தின் கட்சிகள், கழகங்களின் வரலாற்றை உற்று நோக்கினால் இதற்கு விடை கிடைத்து விடும். தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக மக்களிடம் களம் புகுந்தது மாநாடுகள் மூலம் தான் என்ற கடந்த கால வரலாற்றுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

அண்மைக் காலத்தில் ஓர் இயக்கத்தை நாம் உருவாக்கி, அதை அடையாளப்படுத்த அடித்தளமாக அமைந்தது கடற்கரையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு தான். விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் அமைத்தது மதுரை மாநாடு தான்.

மாநாடுகள் ஓர் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் படிக்கட்டு! ஓர் இயக்கத்தின் திருப்புமுனை! இலக்கு நோக்கிச் செல்கின்ற இயக்கத்தின் இலட்சியப் பயணத்திற்கு இந்த மாநாடுகள் எரிபொருளாக அமைகின்றன.

அதனால் தான் எல்லா இயக்கங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்து மாநாடுகள் நடத்துகின்றன. அவற்றின் பயன்களையும் கைக்கு மெய்யாகக் காண்கின்றன. இம்மாநாடுகள் அனைத்தும் தனி மனித வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஆனால் நாம் நடத்தவுள்ள இந்த மாநாடு இணையில்லாத அந்த இறைவனுக்காக நடத்தப்படும் மாநாடாகும்.

மாநாடு என்பது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற ஓர் அழைப்பு வியூகம்!

பொதுவாக மக்கள் ஒரு கொள்கையை ஏற்கும் போது அக்கொள்கையில் பெருங்கூட்டம் உள்ளதா? அல்லது இணைகின்றதா? என்று பார்ப்பார்கள்.

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கு என்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள, மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தாருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத் தூதர் தாம் (என்பது நிரூபணமாகி விடும்)” என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றிச் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் குலத்தாருடன் என் தந்தை விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.

அறிவிப்பவர்: அம்ர் பின் சலமா (ரலி)

நூல்: புகாரி 4302

மாநாட்டில் சங்கமிக்கின்ற மக்களைப் பார்க்கும் போது மாநாட்டுக்கு வரும் மக்களிடம் கண்டிப்பாக ஒரு மாற்றம் ஏற்படும். அவர்களும் ஏகத்துவத்தை ஏற்பதற்கு அது வழி வகுக்கும் இன்ஷா அல்லாஹ்!

“அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின்  உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத்  (ரலி)

நூல்: புகாரி 2942

நம்முடைய ஏக்கம், இலட்சியம், எதிர்பார்ப்பு எல்லாமே, இம்மாநாட்டின் மூலமாக யாரேனும் ஒருவர் ஏகத்துவத்தில் இணைய மாட்டார்களா? என்பது தான். கோடி செலவழித்துக் கூடிய மக்கள் கூட்டத்தில் ஒருவர் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் போதும். இது போன்ற பாக்கியம் வேறு எதுவுமில்லை. யாரும் இணையவில்லை என்றாலும் அப்போதும் நாம் செய்த முயற்சிக்கு அல்லாஹ் கூலி தராமல் இருக்கப் போவதில்லை.

அல்லாஹ்வின் மீது அன்பு இருந்தால்…

எனவே நடைபெற இருக்கும் இந்த ஏகத்துவ அழைப்பு மாநாட்டிற்காக அள்ளி வழங்குங்கள். இம்மாநாடு அல்லாஹ்விற்காக மட்டும் நடைபெறுகின்ற ஏகத்துவ மாநாடு! எனவே இதற்காக அள்ளி வழங்குங்கள்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர்.

அல்குர்ஆன் 2:165

இதன்படி அவ்லியாக்களுக்காக அந்த மக்கள் அள்ளி வீசுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வோ, “நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்” (அல்குர்ஆன் 2:165) என்று குறிப்பிடுகிறான்.

இதன்படி நீங்கள் அல்லாஹ்விடம் அதிமதிகம் அன்பு, விருப்பம் கொள்பவர்களாக இருந்தால் அவனுக்காக – அவன் மட்டுமே வணங்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டிற்காக அள்ளி வழங்குங்கள்.

அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதை எப்படிக் கடவுள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோமோ அது போன்று தான் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதையும் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். இதற்காகத் தான் நான்கு மத்ஹபுகளை விட்டும் விலகியிருக்கின்றோம். இதுவும் எதற்காக?

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

மத்ஹபு இமாம்களைப் பின்பற்றுபவர்கள் அதற்காக அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்.

நாம் நபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவது உண்மையெனில் நபியவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையைச் சொல்வதற்காக நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு அள்ளி வழங்க வேண்டும்.

இந்த மாநாடு வெற்று பெறுவதற்கு உதவியாக நின்று அல்லாஹ்வின் அருளைப் பெறுங்கள்!

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 64:16

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:272

——————————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? என்னுடைய நண்பர் அவசரத் தேவைக்காக 4000 சவூதி ரியால் கடன் வாங்கினார். அன்றைய தினம் வங்கியில் மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 91 ரியால்களாகும். நான்கு மாதம் கழித்துத் திருப்பித் தரும் போது வங்கி மதிப்பு இந்திய ரூபாய் 1000க்கு 96 ரியால் என உயர்ந்து விட்டது. இரண்டுக்கும் வித்தியாசம் இந்திய ரூபாய் 2000. அதனால் என்னிடம் 4000 ரியால் கடன் வாங்கிய எனது நண்பர் கூடுதலாக 200 ரியால் தந்தார். இது வட்டியா? விளக்கம் தரவும்.

அதிரை தீன் முஹம்மது, புரைதா

எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் கடன் கொடுத்தீர்களோ அதே கரன்ஸியின் அடிப்படையில் தான் திருப்பி வாங்க வேண்டும். அதிகப்படுத்தி வாங்கக் கூடாது.

“நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ, வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 2176

இந்த ஹதீஸின் அடிப்படையில் 4000 ரியால் கடன் கொடுத்திருந்தால் அதே 4000 ரியால் மட்டுமே வாங்க வேண்டும். அதிகமாகக் கேட்டு வாங்கினால் அது வட்டி என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம், கடன் கொடுத்தவர் எதையும் கூடுதலாகக் கேட்காமல், கடன் பெற்றவர் தாமாக விரும்பி எதையேனும் அதிகப்படுத்திக் கொடுத்தால் அதில் தவறில்லை.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

நபித் தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2390

கடன் வாங்கியவர் தாமாக விரும்பி, வாங்கிய கடனை விட அதிகமாகத் தந்தால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம். இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து விட்டதால், இன்ன தொகை அதிகமாகத் தர வேண்டும் என்று கடன் கொடுத்தவர் நிபந்தனை விதித்தால் அது வட்டியாகி விடும்.

ஆனால் அதே சமயம், கடன் கொடுக்கும் போதே, இன்ன கரன்ஸியின் அடிப்படையில் கடன் தருகிறேன்; அதே கரன்ஸி மதிப்பின் அடிப்படையில் தான் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கடன் கொடுக்கலாம்.

உதாரணமாக 4000 ரியால்கள் கடன் கொடுக்கும் போது, அப்போதைய இந்திய ரூபாயின் மதிப்பில் கணக்குப் போட்டு 44,000 ரூபாய் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கடன் கொடுக்கிறீர்கள்; கடன் வாங்கியவர் திருப்பித் தரும் போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து விட்டது. அதாவது 44,000 ரூபாய்க்கு 4200 ரியால்கள் வருகின்றது என்றால், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 200 ரியால்கள் அதிகமாக வாங்கிக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்!

அல்குர்ஆன் 5:1

ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான வசனங்கள், ஹதீஸ்கள் உள்ளன. எனவே கடன் கொடுக்கும் போது எந்தக் கரன்ஸியின் அடிப்படையில் திருப்பித் தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொடுக்கிறோமோ அதே கரன்ஸியின் மதிப்பின் அடிப்படையில் வாங்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தும் போகலாம். 4000 ரியால்கள் கொடுத்ததற்கு, 3800 ரியால் மட்டுமே திருப்பிக் கிடைக்கும் நிலை ஏற்படலாம்.

வெளிநாட்டு கரன்ஸிகளின் மதிப்பு மட்டுமல்ல! இந்தியாவிலேயே பண மதிப்பு நாளுக்கு நாள் மாறிக் கொண்டு தான் வருகின்றது. ஒரு நாட்டின் பண மதிப்பு குறைவதற்கும், உயர்வதற்கும் அந்த நாட்டை ஆள்பவர்களின் நிர்வாகத் திறனே காரணம். தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பண மதிப்பு குறைந்து போகின்றது.

ஆட்சியாளர்களின் நிர்வாகக் குளறுபடிகளால் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கு, கடன் கொடுத்தவர்கள் பலியாவது எந்த விதத்திலும் நியாயமில்லை. எனவே தங்கத்தின் மதிப்பின் அடிப்படையில் ஒருவர் கடன் கொடுத்து, வாங்கிக் கொள்ளலாம். உதாரணமாக, 10,000 ரூபாய் கடன் கொடுக்கும் போது அதற்கான தங்கம் 10 கிராம் என்று கணக்கிட்டுக் கொடுத்தால், திருப்பி வாங்கும் போது 10 கிராம் தங்கத்தின் மதிப்பு 11,000 ரூபாயாக இருந்தால் 1,000 ரூபாய் அதிகமாக வாங்கிக் கொள்வதில் தவறில்லை.

தங்க மதிப்பின் அடிப்படையில் கொடுக்கல், வாங்கல் என்று ஒப்பந்தம் செய்து கொண்டால் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும். தங்கத்தின் மதிப்பு 1000 ரூபாய் குறைந்து விட்டாலும் 9,000 மட்டுமே திருப்பி வாங்க வேண்டும்.

? திருக்குர்ஆன் 2:62 வசனத்தில் நல்லறம் செய்யும் யூத, கிறித்தவர்களுக்குக் கவலை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா?

பி. ஃபாத்திமா அஷ்ரப், திருவிதாங்கோடு

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 9:60)

இந்த வசனத்தில், நல்லறம் செய்யும் எல்லா யூத, கிறித்தவர்களுக்கும் கவலை இல்லை என்று கூறப்படவில்லை. யூத, கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பி, அதாவது ஈமான் கொண்டு நல்லறம் செய்பவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தான் இந்த வசனம் கூறுகின்றது.

யூதர்களும் கிறித்தவர்களும் தமக்கு அருளப்பட்ட வேதத்தை நம்பினால் மறுமையில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உண்மை தான்.

அவர்களின் வேதங்களில் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும், அவர் வரும் போது அவரைப் பின்பற்றுவது பற்றியும் கட்டளையிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டளையை அவர்கள் மீறினால் அவர்கள் தமது வேதத்தையே நம்பவில்லை என்பது தான் பொருள்.

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:146

இதே கருத்து 3:71, 6:20, 7:157, 23:69 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் வருவதற்கு முன் யூதர்களும் கிறித்தவர்களும் தமது வேதங்களின் அடிப்படையில் நடந்து மரணித்திருந்தால் அவர்கள் அஞ்சத் தேவையில்லை. நபிகள் நாயகம் வந்த பின் அவர்களை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் தமது வேதங்களை நம்பினார்கள் என்று சொல்ல முடியும். மேற்கண்ட வசனத்தை இப்படிப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது

ஈமான் கொள்ளாத யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று அழைப்பதில் தவறில்லை. இதைக் கீழ்க்கண்ட வசனத்திலிருந்தும் அறியலாம்.

இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 29:47

முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பாத, அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்பாத அனைவருமே இஸ்லாத்தின் பார்வையில் காஃபிர்கள் – இறை மறுப்பாளர்கள் தான். காஃபிர்களைத் தவிர வேறு யாரும் நமது வசனங்களை மறுப்பதில்லை என்று இறைவன் கூறுவதிலிருந்து இதை அறிய முடியும்.

? என் பெயர் ஆறுமுகம். நான் ஒரு முஸ்லிம் கடையில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய முதலாளி, எல்லோரும் ஒன்று என்று தான் கூறுவார். ஆனால் ரமளான் மாதத்தில் ஜகாத் பணம் கொடுத்தால் அதை முஸ்லிம்களுக்கு மட்டுமே கொடுக்கிறார். முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்கிறார். அப்படிப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் ஆட்சிக் காலத்தில் ஜகாத் பணம் வசூலித்து, கஷ்டப்பட்ட மக்களுக்குத் தான் வழங்கினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் எப்படி வாழ்ந்திருக்க முடியும்?

ஆறுமும், புனல் குளம்

பொதுவாக தர்மங்களை எந்த ஏழைக்கும் வழங்கலாம். முஸ்லிம், முஸ்லிமல்லாதவர்கள் என்று பிரிக்கத் தேவையில்லை.

யாசிப்போருக்கும், ஏழை களுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன் பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 9:60

மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் எட்டு பிரிவினருக்கு மட்டுமே ஜகாத் எனும் கடமையான தர்மத்தை வழங்க வேண்டும். மற்றவர்களுக்கு வழங்கக் கூடாது. இந்த எட்டு பிரிவினரில் முஸ்-மல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்-மல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உளமாற அன்பு செலுத்துகிறார் களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம். உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது.

இவ்வாறு ஜகாத் நிதியைக் கொடுப்பதன் மூலம் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கம் என்பதை அந்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் இதை வலியுறுத்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இந்த அடிப்படையில் ஜகாத் நிதியை வழங்கியுள்ளார்கள்.

எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜகாத் நிதியைத் தர முடியாது என்று ஒரேயடியாக மறுக்கும் உங்களது முதலாளியின் கருத்து தவறானதாகும். இஸ்லாம் குறித்து நல்லெண்ணம் கொண்ட தங்களைப் போன்றவர்களுக்கு ஜகாத்தை வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

? பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா?

என். ஜாஹிர் ஹுசைன், புரைதா

பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை.

இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. அந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்லர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ் பெருநாளிலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: இப்னு மாஜா

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா என்ற அபூபஹ்ர் என்பவரும் இஸ்மாயீல் பின் அல் கவ்லானி என்பவரும் பலவீன மானவராவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது. மேலும் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவைப் போன்று பெருநாளிலும் இரண்டு உரைகள் ஆற்றினார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)

நூல்: இப்னு குஸைமா.

மிம்பர் இல்லாமல் தரையில் நின்று நபியவர்கள் உரையாற்றியதால் இதில் உட்காருவதற்குரிய சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பெருநாளன்று ஒரு உரை நிகழ்த்துவது தான் நபிவழியாகும்.

? வருமான வரியைக் கழிப்பதற்காக லோன் வாங்கலமா? வங்கியில் பணம் டெப்பாசிட் செய்து அதிலிருந்து வரும் வட்டியில் வருமான வரி கட்டலாமா?

ஹெச். அப்துல் ஜப்பார், கோயம்புத்தூர்

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:275

வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எனவே, ஒரு முஸ்லிம் எந்தக் காரணத்தைக் கூறியும் வட்டியை நியாயப்படுத்தக் கூடாது.

பணத்தை டெப்பாசிட் செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டியில் வருமான வரி செலுத்துவதை விட, அந்தப் பணத்தை ஏதேனும் தொழிலில் முதலீடு செய்து வட்டியை விட அதிகமாகச் சம்பாதிக்க முடியும். அந்த வருமானத்திலிருந்து வரி செலுத்தலாம். அதை விட்டு விட்டு இது போன்ற தடை செய்யப்பட்ட, அதிலும் நிரந்தர நரகம் என்று எச்சரிக்கப்பட்ட வட்டியை ஒரு இறை நம்பிக்கையாளர் ஒரு போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது.

? எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21 வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப் படுவதை ஆதாரமாகக் காட்டுகிறார். இமாமுக்குச் சம்பளம் கொடுப்பது சரியா? தவறா? விளக்கவும்.

ஜாஹிர் ஹுசைன், நாச்சியார் கோவில்

வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் எண்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.

ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். அதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யும் வணக்கத்துக்குக் கூலியாகாது.

மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:273

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிலிருந்து தெரிகிறது.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வது குறை கூறப்படக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிலிருந்து அறியலாம்.

அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுய மரியாதையை இழப்பதோ கூடாது.

எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மவ்லிது, ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

——————————————————————————————————————————————————–

மாநாடு நமக்கு விடுக்கப் போகும் செய்தி:

கொள்கை உறவே வேராகட்டும்!

குருதி உறவு வேறாகட்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவத்தை எடுத்துச் சொன்ன போது அது மதீனா மக்களையும் ஈர்த்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்த (மதீனாவின்) தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.

நாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்க மாட்டோம் என்றும், திருட  மாட்டோம் என்றும், விபச்சாரம் புரிய மாட்டோம் என்றும், அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள (மனித) உயிரை நியாயமின்றிக் கொல்ல மாட்டோம் என்றும், நாங்கள் (பிறர் பொருளை) அபகரிக்க மாட்டோம் என்றும், இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றினால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு என நாங்களாகத் தீர்ப்பளித்துக் கொள்ள மாட்டோம்;  (இறைவனிடமே ஒப்படைத்து விடுவோம்) என்றும், இக்குற்றங்களில் எதையேனும் நாங்கள் செய்து விட்டால் அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உண்டு என்றும் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 3893

ரசூல் (ஸல்) அவர்களையும், ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மற்ற மக்களையும் மக்கா துரத்தியடித்த போது அவர்களை மதீனாவின் அன்சாரித் தோழர்கள் அப்படியே அரவணைத்துக் கொண்டார்கள்.

இவ்வாறு அவர்கள் ஆதரவுக் கரம் நீட்டியது உலக ஆதாயத்திற்காக அல்ல!

எந்த மறுமை ஆதாயத்திற்காக, எந்தச் சுவனம் என்ற ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றார்களோ, அதே ஆதாயத்திற்காகத் தான், மக்காவிலிருந்து வந்த அகதிகளுக்கு ஆதரவளித்தார்கள்.

இது அவர்களிடம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று பார்ப்போம்.

அன்சாரிகளின் தாராள மனம்

முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் “எங்களுக்குப் பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்‘ என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

எனது தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தமது அடிமைப் பெண்ணான, உஸாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

கைபர்வாசிகள் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பிய போது முஹாஜிர்கள், இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்சாரிகள் அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்து விட்டார்கள்.  அவற்றுக்குப் பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க்  (ரலி)

நூல்: புகாரி 2630

இவ்வாறு மதீனாவாசிகள் அள்ளிக் கொடுத்த போதும், மக்கத்து முஹாஜிர்கள் அதைத் தானமாக ஏற்க மறுத்து தங்கள் கண்ணியத்தை நிலைநிறுத்தினார்கள்.

(மதீனா வாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள்” என்றனர். அதற்கு அண்ணலார், “வேண்டாம்” என்று கூறி விட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, “அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்குப் பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கின்றோம்” என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், “செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2325

உடுத்திய ஆடையுடன் வெறும் கையோடு வந்த மக்களுக்கு, தங்களிடம் உள்ள சொத்துக்களைப் பங்கு வைத்துக் கொடுக்கின்றனர். கொள்கை உறவு அவர்களிடத்தில் குருதி உறவை விட மிஞ்சி நிற்கின்றது.

இப்படியொரு சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்ட அம்மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைவரும் மிகக் கண்ணியத்துடன் நடந்து கொண்டதைப் பார்க்கிறோம். அன்சாரிகளிடம் பெற்ற உதவிகளை, தங்களுக்கு வசதி கிடைத்ததும் திரும்ப அளித்ததை மேற்கண்ட ஹதீஸில் பார்க்கிறோம்.

மனைவியரை மணக்கச் சொல்லும் மனப்பாங்கு

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), “நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!” எனக் கூறினார். அப்போது நான், “இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடை வீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், “கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது!” என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறு நாளும் தொடர்ந்து சென்றேன்.

சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “நீ மணமுடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்!” என்றேன். “யாரை?” என்றார்கள். “ஓர் அன்ஸாரிப் பெண்ணை!” என்றேன். “எவ்வளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுத்தாய்?” என்று கேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)

நூல்: புகாரி 2048

இப்படி ஓர் இறுக்கமான இணைப்பை அவர்களுக்குக் கொடுத்தது எது? இந்த ஏகத்துவம் தான். இது நாளடைவில் வலுத்து வலுத்து, தங்களது சொத்துக்களைத் தங்களின் உறவினர்களுக்குக் கொடுக்காமல் அகதிகளாக வந்த மக்கத்துச் சகோதரர்களுக்குக் கொடுக்க முன் வந்தனர். அப்போது தான் அல்லாஹ் குறுக்கிட்டு, இரத்த பந்தங்களுக்குச் சொத்தைக் கொடுக்க வேண்டும் என்று கட்டளை இடுகின்றான்.

பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் (திருமண) உடன்படிக்கை எடுத்தோருக்கும் அவர்களது பங்கைக் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:33

மனித குல வரலாற்றில் இப்படி ஓர் இணக்கம், பாசம், இரத்த பந்தத்தை மிஞ்சிய இலட்சிய பந்தம் எப்படி உருவெடுத்தது? ஏகத்துவம் என்ற கொள்கையினால் தான்.

தனிப் பங்கீட்டை மறுத்த அன்சாரிகள்

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந்தால் எங்களுடைய குறைஷிச் சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார்கள். ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகின்ற அளவுக்கு) மானிய நிலங்கள் (அல்லது நிலவரி மூலமாகக் கிடைக்கும் நிதிகள்) நபி (ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் சுயநலப் போக்கை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2377

உண்மையில் இந்தப் பந்தம் ஈமானிய பந்தம்! இந்தச் சொந்தம் ஒரு கொள்கைச் சொந்தம்! இதை ஏற்படுத்துவது சத்திய ஏகத்துவம்!

தங்களுக்கின்றி உதவும் தயாள குணம்

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து “எனக்கு (பசியினால்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச் சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ்  அருள் புரிவான்” என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்- (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, “(இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ சேமித்து வைத்துக் கொள்ளாதே!” என்று சொன்னார்.

அதற்கு அவர் மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை” என்று பதிலளித்தார். அவர், “குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டில் இருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றி விடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்து விடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்” என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார்.

பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நபி (ஸல்) அவர்கள், “இன்னார் இன்னாரை (உங்கள் இருவரையும்) கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் “வியப்படைந்தான்’ அல்லது (மகிழ்ச்சியால்) “சிரித்துக் கொண்டான்’ என்று சொன்னார்கள்.

அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், “தமக்கே தேவை இருந்தும் கூட தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்…” எனும் (59:9வது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4889

இந்த மனப் பக்குவத்தைத் தந்தது எது? ஏகத்துவக் கொள்கை தான். அதைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

அல்குர்ஆன் 3:103

இப்படி ஓர் ஒற்றுமையா? என்று உலகமே உற்று நோக்கும் வண்ணம் வாழ்ந்த அந்த நபித்தோழர்கள் வாழ்விலும் ஒரு சில நெருடல்கள், உரசல்கள் நிகழாமல் இல்லை. ஆனால் அதையும் அன்சாரிகள் சரி செய்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

தங்களை விட மக்கத்து அகதிகளை அரவணைத்து நின்ற அன்சாரிகள், ஒரு கட்டத்தில் அகதிகளான நபி (ஸல்) அவர்கள் மீதும், மக்கத்து நபித்தோழர்கள் மீதும் வருத்தம் அடைகிறார்கள்.

இதையறிந்த நபி (ஸல்) அவர்கள் அனைத்து அன்சாரிகளையும் ஓரிடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்த போது நபி (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களை கொடுக்கலானார்கள். உடனே, (அன்சாரிகளில்) சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே! ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டு விடுகின்றார்களே!” என்று (கவலையுடன்) சொன்னார்கள்.

அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை.

அவர்கள் ஒன்று கூடியதும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மை தானா?)” என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகளிலிருந்த விவரமானவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இள வயதுடைய மக்கள் சிலர் தான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, நம்மை விட்டு விட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!’ என்று பேசிக் கொண்டனர்” என்று கூறினார்கள்.

அப்போது, நபி (ஸல்) அவர்கள், “இறை மறுப்பை விட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்திக் கொள்கிறேன். மக்கள் (பிற உலக) செல்வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அன்சாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டு செல்வதையே) விரும்புகிறோம்” என்று கூறினார்கள்.

அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “விரைவில் சுயநலப் போக்கைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான “அல் கவ்ஸர்’ எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்” என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்கவில்லை.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4331

அன்சாரிகள் எந்தச் சுவனத்தைக் கொண்டு ஈமான் கொண்டார்களோ அந்தச் சுவனத்தையே நபி (ஸல்) அவர்கள் இங்கு நினைவூட்டுகிறார்கள்.

“வீட்டுக்கு நபியைக் கொண்டு செல்கிறீர்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதன் கருத்து, அன்சாரிகள் தம்முடன் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்பது தான்.

“நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அன்சாரிகள் தங்கள் தாடி நனைகின்ற அளவுக்கு அழுதார்கள்” என்று அஹ்மத் 11305வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

மறுமை மீது கொண்டிருந்த நம்பிக்கை, ஏகத்துவக் கொள்கை முஹாஜிர்கள் – அன்சாரிகள் உறவில் கடுகளவு கூடப் பிரிவினை ஏற்படாமல் தடுத்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகும் பிரியாமல் தடுத்துக் காத்தது.

நபி (ஸல்) அவர்கள் இறந்ததும், யார் ஆட்சி செலுத்துவது? என்ற பிரச்சனை எழுகின்றது.

மண்ணின் மைந்தர்கள் நாங்கள் தான்; எனவே நாங்கள் தான் ஆட்சி செய்வோம் என்று அன்சாரிகள் ஆட்சிக்கு உரிமை கொண்டாடி இருக்கலாம். அவ்வாறு அவர்கள் உரிமை கொண்டாடியிருந்தால் அது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தைச் சிதைத்திருக்கும். இங்கு நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகும் பிரியாமல், உடையாமல் காத்து நின்றது இந்த ஏகத்துவம் தான்.

உறவை வளர்க்க உதவிய திருமணங்கள்

மக்காவில் உள்ள மக்களுக்கும், மதீனாவில் உள்ள மக்களுக்கும் இப்படி ஒரு பிரிக்க முடியாத உறவை ஏற்படுத்தியது ஈமான் என்ற கொள்கை உறவு என்பதைக் கண்டோம்.  கொள்கை உறவே அவர்களிடம் குருதி உறவை விட மேலாக நின்றது என்று பார்த்தோம். இந்தக் கொள்கை உறவை மென்மேலும் வலுப்படுத்துவதற்கு நபி (ஸல்) அவர்கள் சில வழிமுறைகளைச் செயல்படுத்தினார்கள். அது தான் திருமண உறவுகள்!

நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமாவை அலீ (ரலி)க்கும், ருகைய்யா மற்றும் உம்மு குல்சூமை உஸ்மான் (ரலி)க்கும் கொடுக்கிறார்கள்.

அபூபக்ர் (ரலி) மகள் ஆயிஷா, உமர் (ரலி) மகள் ஹப்ஸா ஆகியோரை நபி (ஸல்) அவர்கள் மணம் முடிக்கிறார்கள்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் சம்பவத்தை (புகாரி 2048) மேலே கண்டோம். அதில் அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணைத் திருமணம் முடித்தார்கள் என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது.

இப்படிச் சம்பந்தங்கள் செய்து உறவை வலுப்படுத்துகிறார்கள்.

இது போன்ற திருமண உறவுகளில் ஒரு சில கட்டங்களில் விரிசல்கள் ஏற்படலாம். மண விலக்குகளும் ஏற்படலாம்.

நபி (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்தைச் சார்ந்த தமது அத்தை மகள் ஸைனபை, தமது வளர்ப்பு மகன் என்று கருதப்பட்ட ஸைதுக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். ஆனால் அவ்விருவருக்கும் மத்தியில் மன ஒற்றுமை இல்லாததால் மண விலக்கு ஏற்படுகின்றது. இப்படி ஒன்றிரண்டு திருமணங்களில் மண விலக்குகள் ஏற்பட்டதால் அது கொள்கை உறவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அடிமை என்று கருதப்பட்ட ஒருவரிடம் ஒரு திருமண சம்பந்தத்தை நபி (ஸல்) அவர்கள் செய்கின்றார்கள். உயர் குலத்தவர்கள், உயர் குலத்தாரிடம் தான் திருமண சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலையைத் தகர்த்தெறிந்தார்கள். கொள்கை உடையவர்கள் செல்வம், குடும்பம், கோத்திரம் என்று எதையும் பார்க்காமல் யாரையும் திருமணம் முடிக்கலாம் என்ற வரலாற்றை இதன் மூலம் தோற்றுவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இது போன்று முன்மாதிரியைத் தோற்றுவித்து, திருமண உறவின் மூலம் கொள்கை உறவு பலப்படுவதற்கு வழிவகை செய்கிறார்கள். அதனால் தான் அவர்களது சகோதரத்துவ வாஞ்சை சரித்திரம் படைத்தது. சாவிலும் அவர்களது சகோதரத்துவம் சாகாது நின்றது.

யர்மூக் போர்க்களத்தில் இக்ரிமா (ரலி) வெட்டப்பட்டு, வீர மரணம் அடையும் தருவாயில் தண்ணீர் கேட்கிறார்கள். அவரிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்ட போது, இதே நிலையில் உள்ள அடுத்த தோழர் தண்ணீர் என்று கேட்கிறார். அவரிடம் தண்ணீரைக் கொடுத்து விடுமாறு இக்ரிமா (ரலி) கூறி விடுகின்றார். இரண்டாமவரிடம் தண்ணீர் கொடுக்கப்படும் போது மூன்றாமவர் தண்ணீர் என்று கேட்கிறார். உடனே இரண்டாமவர் மூன்றாவது நபரிடம் கொடுக்கச் சொல்கிறார். மூன்றாமவரிடம் தண்ணீர் குவளை வருவதற்குள்ளாக மூன்று பேருமே மரணத்தைத் தழுவி விடுகின்றார்கள்.

நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்

இவ்வாறு முஹாஜிர்கள், அன்சாரிகள் என்றில்லாமல் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் உள்ளத்தால் ஒன்றுபடக் காரணமாக அமைந்தது ஏகத்துவக் கொள்கை தான்.

இந்த ஏகத்துவக் கொள்கை தான் தமிழகம் மற்றும் அயலகத்தில் உள்ள நம் அனைவரையும் ஒன்று சேர்க்கவிருக்கின்றது.

இன்று ஷாபி, ஹனபி என்று சமுதாயம் பிரிந்து கிடந்து, இவ்விரு சாராரும் தங்களுக்குள் திருமண சம்பந்தம் செய்து கொள்வது கிடையாது.

ஒரு சில செல்வம் படைத்த ஊரார்கள், தங்களுக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, அவர்களுக்குள் மட்டுமே திருமண சம்பந்தம் செய்யும் நிலை இன்றும் தொடர்கின்றது.

உருது – தமிழ்

ஷாபி – ஹனபி

பணக்காரன் – ஏழை

உள்ளூர் – வெளியூர்

என்ற பாகுபாடுகள் நமக்கு மத்தியில் இனி கிடையாது. நாம் தவ்ஹீத் ஜமாஅத்! சத்தியத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சமுதாயம்! கொள்கை உறுதி மிக்க ஒரு சமுதாயம்!

நம்மில் யார் எங்கு தாக்கப்பட்டாலும், ஊர் நீக்கப்பட்டாலும் அவர் எந்த ஊர்க்காரர், உள்ளூரா? வெளியூரா? என்று பார்க்க மாட்டோம். அவருக்காகக் குரல் கொடுக்க, உரிமை காக்க, தோளோடு தோள் கொடுக்க எங்கிருந்தாலும் அவரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வோம்.

ஊரால் அவர் தூரத்தில் வாழ்ந்தாலும் கொள்கையில் அவர் அருகில் இருக்கிறார்.

இது போல் மொழியும் குறுக்கே வந்து நிற்காது. அவர் உருதுக்காரர், நான் தமிழன்; அதனால் அவரை நான் கண்டு கொள்ள மாட்டேன் என்ற நிலைமை இருக்காது.

எங்கள் உறவினர் என்ன தான் உறவால் நெருங்கியிருந்தாலும், அவர்களிடத்தில் கொள்கை இல்லையேல் திருமண சம்பந்தம் இல்லை. கொள்கைவாதிகள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் அவர்களுடன் மட்டுமே திருமண சம்பந்தம்!

தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ள எவரும் எந்த ஊரில் வறுமையில் வாடினாலும், கடனில் சிக்கித் தவித்தாலும் எங்களுக்குச் சக்தி இருக்குமானால் அவரைப் பொருளாதார ரிதீயில் காப்போம்.

இப்படிக் கொள்கை உறவுகளை வலுக்கச் செய்யவே இந்த ஏகத்துவ எழுச்சி மாநாடு!

இம்மாநாடு நமக்குத் தரவிருக்கின்ற செய்திகளில் சொல்லப்பட்டவை கொஞ்சம் தான். சொல்லப்படாத பயன்கள் இன்னும் ஏராளம் உள்ளன. கொள்கை உறவுகளை வலுப்படுத்தி, ஒன்றுபட்ட சமுதாயத்தைக் காண இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் ஒன்று கூடுவோம்.

—————————————————————————————————————————————————

இசை ஓர் ஆய்வு

நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.

மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள்.

இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்.

எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்ய வேண்டிய ஒரு நிலை அண்மைக் காலத்தில் ஏற்பட்டது. இசை தொடர்பாக மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும் என்பதற்காக டிசம்பர் 29ம் தேதி சென்னையில் ஆய்வுக் கூட்டம் இருப்பதாகவும், எனவே விரிவாக ஆய்வு செய்து விட்டு குறிப்பிட்ட தேதியில் வருமாறு தவ்ஹீத் ஜமாஅத்தின் சில மாநிலப் பேச்சாளர்களுக்கு, தலைமையிலிருந்து அறிவிப்புச் செய்யப்பட்டது.

திட்டமிட்டவாறு டிசம்பர் 29ம் தேதி அன்று ஆய்வுக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. அங்கு வந்த ஒவ்வொருவரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியாக ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது என்ற கருத்துத் தான் சரியானது என்ற முடிவுக்கு எல்லோரும் வந்தோம்.

இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே  பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

ஆதாரம்: 1

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது,  இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் “நாளை எங்களிடம் வா” என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

நூல்: புகாரி 5590

“விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப் பட்டிருப்பதாலும் “இவற்றை ஆகுமாக்குவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என விளங்கிக் கொள்ளலாம்” என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத் தன்மை மட்டும் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.

ஒருவர் நல்ல மனனத் தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பி விட்டால், அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டு விட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது. மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா? அல்லது பின்பு அறிவித்ததா? என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலுள்ள ஹதீஸில் இடம்பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்கு சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாத்தம் கூறியுள்ளார்.

அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால்

பாகம்: 30, பக்கம்: 242

இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா? அல்லது பின்பு அறிவித்தாரா? என்ற தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை, இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.

இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸ‚னனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: அஸ்ஸ‚னனுல் குப்ரா

பாகம்: 3, பக்கம்: 272

இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்கு இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் போதிய ஆதாரமாக உள்ளது.

பைஹகீயில் உள்ள இந்தச் சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.

ஆதாரம்: 2

நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.

அவர்கள் “(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு, “எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 4307

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஆதாரம்: 3

ஆயிஷா  (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 1619

“ஷைத்தானின் இசைக் கருவிகளா?’ என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அக்கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டு விடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக் கருவிகள் ஷைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால், நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப் பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள்.

இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸ‚ம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

ஆதாரம்: 4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக் கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2494

மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடைசெய்யப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

திருமண நாள், பெருநாள் போன்ற நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் கஞ்சிராக்களை அடித்துக் கொள்வதற்கு அனுமதியளித்ததாக சில ஹதீஸ்கள் கூறுகின்றன. விதி விலக்கான அந்த நேரங்கள் என்ன? அந்த நேரங்களில் எல்லா இசைக் கருவிகளையும் பயன்படுத்துவது கூடுமா? அல்லது குறிப்பிட்ட கருவிகளை மாத்திரம் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுளதா? என்று மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு நம்மீது உள்ளது.

தற்காலத்தில் எச்சரிப்பதற்காகவும், உணர்த்துவதற்காகவும் வீட்டில் அழைப்பு மணி (காலிங் பெல்) பயன்படுத்தப்படுகிறது. நம்மிடம் ஒருவர் தொடர்பு கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்த்துவதற்காக தொலை பேசிகளிலும் ஒலிகள் பயன்படுத்தப் படுகின்றன. இன்னும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மணியோசை ஒரு நோக்கத்திற்காக எழுப்பப்படுகிறது. ஆபத்தை உணர்த்துவதற்கென தனி சப்தங்கள் ஒலிக்கப்படுகின்றன.

எனவே உணர்த்துவதற்காக அல்லது எச்சரிப்பதற்காக ஒரு சப்தத்தை நாம் பயன்படுத்தினால் அது இசையாகுமா? என்ற கேள்வி எழுகிறது. எனவே விதிவிலக்கான விஷயங்களைப் பற்றியும் இசை சம்பந்தமாக அன்றாட வாழ்வில் நாம் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு வழி என்ன? என்பதைப் பற்றியும் அல்லாஹ் நாடினால்  விரைவில் அறிஞர்களிடையே கலந்தாலோசித்து  விளக்கம் கூறப்படும். ஆனால் இசை தடை செய்யப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.

————————————————————————————————————————————————

மாற்று மதத்தவர்களுக்கு மாநாடு விடுக்கப் போகும் செய்தி

பாதுகாப்பான ஆட்சியை

யாரால் தர முடியும்?

ஊழல் இல்லாத ஆட்சி!

லஞ்ச லாவண்யம் இல்லாத நேர்மை மிக்க நிர்வாகம்!

சட்ட ஒழுங்கைப் பாதுகாத்தல்!

இவை தான் அரசியல் கட்சிகளின் நோக்கங்களும் குறிக்கோள்களுமாகும்.

இந்தக் கொள்கைகளையும், குறிக்கோள்களையும் மக்களுக்கு மத்தியில் அறிவிப்பதற்காகத் தான் மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

ஒரு வாகனத் தயாரிப்பு நிறுவனம் தங்களது தயாரிப்புகளை வணிகச் சந்தையில் பார்வைக்கு வைப்பது போல் இக்கட்சிகள் தங்கள் கொள்கைகளை இது போன்ற மாநாட்டுச் சந்தைகளில் முன்வைத்து அதன் பால் மக்களை அழைக்கின்றன.

மாநாடு என்பது புதுமுகங்களை தங்கள் இயக்கத்திற்குள் ஈர்க்கும் ஒரு ஈர்ப்பு சக்தி! இதனால் தான் இந்த மாநாடுகள் மூலம் கட்சிகள், கழகங்கள், இயக்கங்கள் போன்றவை தங்கள் கொள்கைகளை நிறுவ முயல்கின்றன.

இந்தக் கட்சிகள் உலக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை அழைக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட தாங்கள் கூறும் கொள்கைகளை நிலைநிறுத்த முடியவில்லை.

லஞ்சம், லாவண்யம் தலை விரித்தாடுகின்றது. விண்ணைத் தொடும் விலைவாசி! வேலை வாய்ப்பின்மை! விவசாயிகள் தற்கொலை! பாராளுமன்றத்தையே தகர்க்கும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்! நக்சலைட்டுகளின் நாச வேலைகள்!

இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தத் தீமைகளை அழிக்க முடியாது.

காரணம் அவர்களிடம் தூய ஏகத்துவக் கொள்கை இல்லை. இந்த ஏகத்துவக் கொள்கையுடையவர்களால் மட்டுமே ஊழல், லஞ்சம் மட்டுமல்ல, அனைத்துத் தீமைகளையும் இந்த மண்ணிலிருந்து அழித்து ஒழிக்க முடியும்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப் பட்டுள்ளது; அது நிற்காது. நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

அல்குர்ஆன் 14:24-27

முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட காலத்தில் ஊழல், கொலை, கொள்ளை போன்ற பெரும் பெரும் தீமைகள் மலிந்து கிடந்தன. அந்தத் தீமைகளை ஒழிப்பதற்கு அல்லாஹ் அவர்களுக்குக் காட்டிய வழிமுறை இந்த ஏகத்துவக் கொள்கை தான்.

அதன்படி நபி (ஸல்) அவர்கள் அந்த ஏகத்துவ மரத்தை நடுகின்றார்கள். தீமைகளின் ஆணிவேர் இணை வைப்புக் கொள்கை தான். அதாவது மனிதர்களையும் மனிதனல்லாத மற்ற படைப்புகளையும் கடவுளாக்கும் இணை வைப்புக் கொள்கை தான் தீமைகளின் ஆணி வேராகும். அந்தக் வேர்களைக் களைந்து, ஏகத்துவ மரத்தை நிலை நாட்ட முயல்கின்ற போது அரபுலகம் அதிர்ந்தது; ஆச்சரியப்பட்டது.

கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.

அல்குர்ஆன் 38:5

இந்தக் கொள்கையைப் பரப்பிய இறைத்தூதர்களும், அதை ஏற்றுக் கொண்ட மக்களும் பெரும் இன்னல்களுக்கு உள்ளானார்கள். அப்போது அதை அந்த இறைத்தூதரிடமே முறையீடு செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழ-ல் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று, இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலை மீது வைக்கப்பட்டு, அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமை யான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ’விலிருந்து “ஹளர மவ்த்’ வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: கப்பாப் பின்      அல்அரத் (ரலி)

நூல்: புகாரி 3612

இது தான் நபி (ஸல்) அவர்களின் பதிலானது. அதாவது ஏகத்துவ மரம் கனிகளைத் தரப் போகின்றது; அதற்குள் அவசரப்படாதீர்கள் என்று ஆறுதல் வழங்குகின்றார்கள்.

இந்தச் சம்பவம் நடைபெற்றது மக்காவில்!

மதீனாவிலும் இதே போன்று மற்றொரு முறையீடு!

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீரா’வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது” என்று  பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். – நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன். – நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்” என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக் காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)” என்று பதிலளித்தார்கள்.

(மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அதை ஏற்கும் எவரையும் அவர் காண மாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழி பெயர்த்துச் சொல்லும் மொழி பெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே! அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)” என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப் படுத்தவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மை தான்)” என்பார். பிறகு அவர் தன் வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காணமாட்டார். தன் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)” என்று சொல்லக் கேட்டேன்.

மேலும், “ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கை நிறைய அள்ளிக் கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்” என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம்  காண்பீர்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

இங்கும் நபி (ஸல்) அவர்கள், ஏகத்துவ மரம் தரவிருக்கின்ற அந்தக் கனிகளை, அதாவது விளைவுகளைப் பற்றித் தான் சொல்கிறார்கள்.

இந்த முன்னறிவிப்புகளில் ஒன்றைத் தவிர மற்ற இரண்டு நடந்தேறிய அந்த வரலாற்று உண்மையை அதீஃ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் இதே ஹதீஸில் தெளிவுபடுத்தியும் விட்டார்கள்.

ஓர் ஆட்சி என்றால் அதற்கு இரண்டு இலக்கணங்களை இங்கு நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு பெண்ணின் கற்புக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு!

மற்றொன்று, மக்கள் அனைவருக்கும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறியிலிருந்து பாதுகாப்பு!

இந்த இரண்டையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தத்துவார்த்தமாகச் சொல்லி நடைமுறைப்படுத்தியும் காட்டி விட்டார்கள்.

இப்படியொரு மாற்றத்தை மனித வரலாற்றில் எப்படி நிறுவ முடிந்தது?

“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது! அதைச் சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது! திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு கவிஞன் பாடுகின்ற பாட்டில் கூறுகின்றான்.

சட்டத்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. மனிதன் திருந்தினால் தான், அதாவது அவன் மனம் மாறினால் தான் திருட்டை ஒழிக்க முடியும் என்று கூறுகிறான்.

தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் திருட்டை ஒழிக்கும் சட்டத்தை மட்டும் தந்து விட்டு இருந்து விடவில்லை. உள்ளத்தை மாற்றும் வழியைத் தான் மேற்கொண்டார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர்,  வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேய விட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது. அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிந்து கொள்க! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

மனிதனின் உள்ளத்தில் ஏகத்துவம் என்ற மரத்தைப் பதிய வைக்கின்றார்கள். “மனிதனின் வாழ்வு இவ்வுலகுடன் முடிந்து விடுவதில்லை. அது மறுமை வரை தொடர்கின்றது. அங்கு அவன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவான். நன்மை செய்தால் சுவனம்! தீமை செய்தால் நரகம்!’ என்ற உண்மையைப் புரிய வைத்தார்கள். அதனால் தான் இம்மாபெரும் மாற்றம் ஏற்பட்டது.

உலகத்தில் இப்படி ஒரு மாபெரும் புரட்சிக் கொள்கையைக் கையில் வைத்துக் கொண்டு நாம் உறங்கிக் கொண்டிருக்கலாமா? உலகம் காக்கும் இந்த உன்னதக் கொள்கையின் பக்கம் மக்களைப் பல்வேறு வழிகளில் உரத்து அழைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த வழிமுறைகளில் ஒன்று தான் மாநாடு!

அதன் அடிப்படையில் தான் இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் மே 10, 11 ஆகிய தேதிகளில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கின்றது.

ஆட்சி இலக்கணத்திற்கு அடிப்படைகளான பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இந்த நாட்டில் இல்லை. இதை அன்றாடம் பத்திரிகைச் செய்திகளின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு அம்சங்களையும் இஸ்லாமிய மார்க்கத்தினால் மட்டும் தான் நிலைநாட்ட முடியும் என்பதைப் பிற மதத்தினருக்கு இம்மாநாடு உணர்த்தவுள்ளது.

இன்று இந்தியாவில் பெண்களின் கற்புக்கும், உயிருக்கும், உடமைக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. ஒட்டு மொத்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

வெறும் பொருளாதாரம் மட்டும் பறி போனால் கூடப் பரவாயில்லை. கிட்னி போன்ற விலை மதிக்க முடியாத உறுப்புகளும் இன்று பறிக்கப் படுகின்றன. எனவே இந்தக் கொடுமைகளிலிருந்து நாடு விடுதலை பெற வேண்டுமானால் அதற்கு இஸ்லாம் தான் தீர்வு என்பதை முஸ்லிமல்லாத மக்களுக்கு இம்மாநாடு எடுத்துக் காட்டவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ்!

————————————————————————————————————————————————

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி!

தவ்ஹீது ஜமாஅத் தனது நெடிய வரலாற்றுப் பயணத்தின் இடையே,    மே 10, 11 ஆகிய தேதிகளில் ஒரு மாநாட்டைக் காணவுள்ளது.

இது தவ்ஹீது ஜமாஅத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்ற பெயரில் அமைப்பு கண்ட பிறகு நாம் காணும் முதல் மாநாடாகும்.

இதற்கு முன்பாக நாம் இறையருளால் பல மாநாடுகளைக் கண்டிருக்கிறோம். அவற்றில் திருச்சி, நாகர்கோவில், மேலப்பாளையம், மதுரை மாநாடுகள் திருப்புமுனையாக அமைந்தவை.

இம்மாநாடுகளில் மதுரை மாநாட்டைத் தவிர மற்றவை, நாம் வளர்த்த ஒரு இயக்கத்தின் பெயரில் நடத்தப்பட்டவை. அந்த இயக்கம் சமுதாய, அரசியல் ரீதியான பிரச்சனைகளில் தலையிடாமல் தூரப் போனது.

சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பற்பல ஊர்களில் பற்பல அமர்வுகள்! சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம், ஒட்டுமொத்த தமிழகத்தில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் உள்ளது; அதை நம்மைத் தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது என்று விளக்கி, அதற்குக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இன்னின்ன ஆதாரங்கள் என்று சமர்ப்பணம் செய்தோம்.

ஒவ்வொரு அமர்விலும் ஆமாம், ஆமாம் என்று தலையாட்டி விட்டு, அமர்விலிருந்து அப்பால் சென்றதும் சறுகி விடுவதே அந்த இயக்கத் தலைவரின் வாடிக்கையாக இருந்தது.

இவர்கள் அழைப்புப் பணி செய்வது அரபு நாட்டுச் சம்பளத்திற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்குத் தான்!

“சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டால் உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு ஆளாக நேரிட்டு அபாயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும்! அது நம்முடைய அரபக வருவாய்க்கு ஆப்பு வைத்து விடும். அதனால் நமக்கு ஏன் இந்த வம்பு?”

இது தான் இவர்களின் செயல்பாடுகளிலிருந்து முடிவாக நாம் கண்டதும், கவனித்ததும் ஆகும்.

அதனால் ஆன்மீகத்தை மட்டும் வைத்துக் காலத்தைத் தள்ளுவோம் என்பது தான் அவரது கணக்கு!

சத்தியப் பணிக்கு ஓரமைப்பு

சமுதாயப் பணிக்கு ஓரமைப்பு

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதை தான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப் போக்கில் தவ்ஹீதுப் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுபவித்து விட்டு, சாறை உறிஞ்சி விட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை நிறுவினர்.

இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்பு தான்!

இது தான் நம்மைச் சிந்திக்க வைத்தது. சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத்தில் கொண்டு சமுதாயப் பிரச்சனைகளை மறுத்தார்கள். சமுதாயத்துக்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைச் சாத்துகிறார்கள். இனி மேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமுதாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதி விட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியத தான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அது தான் இன்று நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம். அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக்கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண்டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

அத்தனையையும் தாண்டித் தான் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் சத்தியப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஒருங்கே செய்து தவ்ஹீது ஜமாஅத் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது

சத்திய, சமுதாயப் பாதைகளில் நாம் கண்ட சாதனைகளை இங்கே நாம் காணவிருக்கின்றோம்.

முதலில் சத்தியப் பாதையில் நாம் கண்ட சாதனைகளைப் பார்ப்போம்.

சாதனைகள் என்று நாம் குறிப்பிடும் போது இந்தச் சாதனைகள் 1980களுக்குப் பிந்தைய காலத்திலிருந்தே துவங்குகின்றன. இயக்கங்கள் பலவாக இருந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை எடுத்து வைக்கும் கொள்கை ஒன்று தான். அந்தக் கொள்கையைத் தடம் புரளாமல் எடுத்துச் சொல்லும் ஆட்களும் அதே ஆட்கள் தான். அதனால் 80களிலிருந்தே இந்தச் சாதனைப் பட்டியலைத் தொடங்குவதற்கு நமக்கு எல்லா வகையான தார்மீக உரிமையும் உள்ளது என்ற விளக்கத்தைத் தெரிந்து கொண்டு இந்த சாதனைப் பட்டியலைப் பார்வையிடச் செல்வோம்.

தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடம்

1980க்கு முன்பு தமிழகத்தில் தவ்ஹீது என்ற வார்த்தை கூட அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் ஆலிம்களிடம் அறிமுகமாகி இருந்தது. இன்றைக்கு நாம் விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அல்ல! “இறந்து விட்ட எந்தப் பெரியாரிடமும் உதவி தேடக் கூடாது; அவர்கள் ஒரு போதும் செவியேற்க மாட்டார்கள்; அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்’ என்று நாம் இன்று விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அன்று இந்த வார்த்தை அறிமுகமாகவில்லை. இறந்து விட்ட பெரியார்களிடமும் பிரார்த்திக்கலாம், அதுவும் தவ்ஹீதில் உள்ளது தான் என்று விளங்கி வைத்திருந்தோம்.

84, 85 கால கட்டத்தில் சங்கரன்பந்தலில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்த மதரஸாவுக்கு அரபகத்திலிருந்து ஒரு நூல் தொகுப்பு வந்து இறங்கியது. ஒன்பது அல்லது பத்து பாகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களுக்குரிய அட்டவணையாகும்.

இந்நூற்களில் இடம் பெற்றுள்ள ஓர் அரபி வார்த்தை தெரிந்திருந்தால் போதும்! அந்த வார்த்தை இந்த  நூற்களில் எந்தப் பாடத்தில், எந்தப் பாகத்தில், எந்தப் பக்கத்தில், எத்தனை இடங்களில் பதிவாகியுள்ளது என்று அந்த அட்டவணை துல்லியமாகச் சொல்லி விடும்.

கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் அந்த அட்டவணை நூல் ஒரு புதிய புரட்சிப் படைப்பு தான். இத்தனைக்கும் அந்த நூலின் ஆசிரியர் ஒரு யூதர்.

கற்ற இஸ்லாம் ஒன்று!

கண்ட இஸ்லாம் வேறு!

அந்த அட்டவணையில் ஒரு சோதனை முயற்சியாக கப்ர் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு அட்டவணை காட்டும் பாகம், பக்கத்தில் தேடினோம்.

பாகம், பக்கமெல்லாம் சரியாக இருந்தது.

ஆனால் எங்கள் பார்வைக்குக் கிடைத்த கப்ர் தொடர்பான ஹதீஸ்கள் எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

படிக்கும் காலத்தில் பார்வைக்குத் தட்டுப்படாத ஹதீஸ்கள்… பல ஆயிரம் வோல்ட்டேஜ் மின்சாரம் தாக்கிய உணர்வை அடைந்தோம்.

அதுவும் அந்த ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில்!

இவை நமக்குத் தெரியாமல் ஆகி விட்டனவே என்று அதிர்ந்தோம். புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களிலும் யூதர்களின் கைவரிசை நுழைந்து விட்டதா? என்றெல்லாம் ஐயப்பாடு எழுந்தது.

ஒருவாறாக உறைவிலிருந்து ஒரு சுய உணர்விக்கு வந்தோம். அப்போது எங்களுக்குத் தெரிந்த உண்மை, மார்க்கம் தூய்மையான வடிவில் தரப்படவில்லை என்பது தான்.

கலப்பற்ற மார்க்கம் கலப்படமாகி உள்ளது. ஷரீஅத்தின் வரைபடம் தலைகீழாக மாறிக் கிடக்கின்றது. இந்த நிலையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது.

அப்போதிருந்து சத்தியப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தலை கீழாகக் கிடக்கும் ஷரீஅத் வரைபடத்தை, தலை மேலாக மாட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினோம். இன்றும் அந்தப் பயணத்தில் தொடர்ந்து செல்கிறோம்.

மார்க்கத்தை அதன் தூய வடிவத்தில் எப்படியெல்லாம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தர்ஹாக்கள் – சாபத்திற்குரிய தலங்கள்

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427

கப்ருகள் அருகில் தொழத் தடை

நீங்கள் கப்ருகள் மீது அமராதீர்கள். கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ

நூல்: முஸ்லிம் 1613

கப்ருகளைக் கட்டாதீர்

கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 972

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

நூல்: முஸ்லிம் 1609

எங்களை அன்று அதிர்ச்சியில் உறைய வைத்த ஹதீஸ்கள் இவை தான்! இவை அன்றைய தினம் எங்களுக்குத் தெரியாதவை. அந்த அளவுக்கு ஹதீஸ்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த ஹதீஸ்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இதன் படி மக்களை இன்று செயல்பட வைத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!

கப்ருகள், விண்ணைத் தொடும் மினாராக்களுடன் கட்டப்பட்ட தர்ஹாக்கள் தகர்க்கப்படவும், தரை மட்டமாக்கப்படவும் வேண்டிய பணியை மட்டும் நம்மால் செய்ய முடியவில்லை. காரணம், இது ஆட்சியாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும். எல்லோரும் மொத்தமாக ஏகத்துவத்தில் இணைந்த சகோதரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கப்ருகளைத் தரை மட்டமாக்கிய வரலாறும் உண்டு.

ஆனால் அதே சமயம் தர்ஹாக்களே கதி என்று குடியிருந்தவர்கள் எல்லாம் தவ்ஹீதே கதி என்றாகி விட்டனர். குறிப்பாகப் பெண்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ்வின் மகத்தான கருணையாகும்.

பெண்கள் தான் அதிகமாக தர்ஹா வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தவர்கள். அவர்கள் இன்று தவ்ஹீதைத் தங்கள் உள்ளங்களில் ஏந்திக் கொண்டு தவ்ஹீதுக் கூட்டங்களில் தேனீக்கள் போன்று மொய்க்கும் காட்சி தமிழகம் காணாத வரலாற்றுப் புரட்சியாகும்.

தலாக் – நடைமுறைக்கு வந்த நபிவழிச் சட்டம்

மனைவி மீது ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு ஒருவர் ஒரே மூச்சில் முத்தலாக் சொல்லி விட்டால், அவள் ஒரேயடியாக விவாகரத்தாகி விடுவாள். இனி அவளை இன்னொருவர் மணமுடித்து, விவாகரத்துச் செய்த பின்னர் தான் முதல் கணவர் திருமணம் முடிக்க வேண்டும்.

இது மத்ஹபுகள் கூறும் முத்தலாக் முறையாகும்.

காலங்காலமாக பல நூற்றாண்டு காலமாக மக்களிடமிருந்த இந்த மத்ஹப் தலாக் முறையை மயானத்திற்கு அனுப்பி விட்டு, குர்ஆன் கூறும் தலாக்கை மக்களிடம் நிலை நாட்டினோம்.

இதனால் கசங்கிப் போகவிருந்த மங்கையர் மறுவாழ்வு பெற்றனர். கருகிப் போகவிருந்த அவர்களது வாழ்வு மறுமலர்ச்சி பெற்றது. இங்கே மார்க்க அடிப்படையிலான தலாக்கை சுருக்கமாக உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.

விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.

அல்குர்ஆன் 2:229

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான், அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது.

ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.

தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.

ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.

இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.

ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.

இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன் பொருள்.

இதை வெறும் அறிவுப்பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2689

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ்

நூல்: முஸ்லிம் 2690, 2691

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டிய ஷரீஅத் வரைபடத்தில், முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்துள்ளது.

இதற்கு மாற்றமாக மத்ஹபுகள் கொண்டு வந்த முத்தலாக் முறையை மாற்றி, ஷரீஅத் சட்டத்தை அல்லாஹ்வின் தூதர் காட்டிய முறையில் நடைமுறைப்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் சாதனையாகும்.

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 868, 707

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள், “என்னருமை மகனே! இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்” என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 763, திர்மிதி 283

“(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1203, திர்மிதி 337

நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி 837, 866, 875

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 867, 372, 578, 872

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். “இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்கவில்லை” என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 864, 866, 569, 862

“உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது” என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)

நூல்: முஸ்லிம் 674

“உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு “நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்” என்று கூறினார்கள்’

அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 666

இப்னு உமர் (ரலி) அவர்கள், “இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னதும் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார், “பெண்களை வர விட மாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள்” என்று பதில் சொன;னார். உடனே அவரைக் கடுமையாக வெறுத்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்கிறேன்.  நீ வர விட மாட்டேன் என்கிறாயா?” என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஜாஹித்

நூல்: முஸ்லிம் 670

அடுக்கடுக்காகத் தொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஹதீஸ்களெல்லாம் மகளிருக்கும் மஸ்ஜிதுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

ஷரீஅத் வரைபடத்தில் உள்ள இந்தச் சட்டப் பகுதி சமுதாயத்தில் நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண்கள் அறவே அனுமதிக்கப் படுவதில்லை. விதிவிலக்காக எங்காவது ஒரு சில பள்ளிகளில் ரமளானில், அதுவும் தனியாக ஜமாஅத் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இது தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குக் கதவு சாத்தப்பட்டுத் தான் உள்ளன.

“பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 480

இந்த ஹதீஸைத் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாகக் காட்டி பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றனர். சிறந்தது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வந்தால் தடை செய்யக் கூடாது என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

பெண்களுக்கான இந்த வாசல் அடைக்கப்பட்டதால் தான் அவர்கள் தர்ஹாக்களின் பக்கம் சென்றனர். இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் அருளால் இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது. தலைகீழாகிக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கியுள்ளது.

திடலுக்கு வந்த பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெரு நாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 956

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

“மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளை பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை திட-ல் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானது ஆகும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் திடலில் தொழும் நடைமுறை இல்லை. பள்ளிவாச-லேயே பெருநாள் தொழுகையைத் தொழுது வருகிறார்கள். இவ்வாறு பள்ளிவாசலில் தொழும்போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும் புனிதமும் மிக்க அந்த நாளில் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பெருநாள் தொழுகையே கிடையாது.

ஷாபி மத்ஹப் பகுதிகளில் பெண்கள் தனி ஜமாஅத்தாகத் தொழும் வழக்கம் உள்ளது. ஹனபி மத்ஹப் பகுதிகளில் இந்த வாய்ப்பு பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்து ஹனபி, ஷாபி மத்ஹப் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம் இதுவரை காணாத மற்றொரு வரலாற்றுப் புரட்சியாகும்.

ஏழு தக்பீர்கள் அறிமுகமும், அமலாக்கமும்

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்றால், அதற்கு நேர் மாற்றமாக நின்று செயல்படும் மத்ஹப் ஹனபி மத்ஹபாகும். அந்த மத்ஹபுக்காரர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் மூன்று தக்பீர்களும், அடுத்த ரக்அத்தில் மூன்று தக்பீர்களும் ஆக 3+3 ஆறு தக்பீர்கள் மட்டுமே அதிகமாகச் சொல்லும் முறையை இதுவரை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த 7+5 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்லும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அமலாக்கம் செய்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 492, அபூதாவூத்

ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, “நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)” என்றார்.

அறிவிப்பவர்: தல்ஹா

நூல்: புகாரீ 1335

இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வரைகோடாகும். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு நேர்முரணாக ஹனபி மத்ஹபில் ஜனாஸா தொழுகையில் “ஸனா’வை மட்டும் ஓதும் வழக்கம் உள்ளது.

இதை மாற்றி ஷரீஅத் வரைபடத்தில் உள்ளபடி ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதும் நபிவழியை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப்படுத்தியது.

ஒரு பாங்கு தான்! இரண்டு பாங்கில்லை!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 916

ஜுமுஆ அன்று ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழியில் உள்ளது. இதற்கு மாற்றமாக தமிழகத்தில் இரண்டு பாங்கு சொல்லும் நடைமுறை உள்ளது.

ஷரீஅத் வரைபடத்திலுள்ளது ஒரு பாங்கு தான் என்பதைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது தவ்ஹீது ஜமாஅத்.

சப்தமின்றி திக்ரு செய்தல்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 7:205

திக்ரு செய்வதில் திருக்குர்ஆன் கூறும் வழிமுறை இது தான். அது போன்று நபவழியில் காணும் நடைமுறையும் இது தான்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, “லா இலாஹ இல்லல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும், “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகில் இருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 2992

குர்ஆன், ஹதீஸின் இந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் சப்தமிட்டு திக்ரு செய்வது இதுவரை நடந்தேறும் வரம்பு மீறல்களாகும்.

இந்த வரம்பு மீறலை மாற்றி, வரைபடத்தில் உள்ளதைப் போல் மனதிற்குள் திக்ர் செய்யும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்தது.

சத்தியப் பாதையில் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்த்திய சாதனைகள் இவை மட்டுமல்ல! இன்னும் ஏராளம் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

————————————————————————————————————————————————

விதி ஒரு வரையாவிலக்கணம்

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது; அதில் ஆழமான நம்பிக்கையையும் வைக்க வேண்டும்.

அல்லாஹ்

மலக்குமார்கள்

நபிமார்கள்

வேதங்கள்

இறுதி நாள்

விதி

ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவது தான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றை நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும்.

எந்த 6 அம்சம் நம்மை முஸ்லிம் என்று பறைசாற்றுகிறதோ, எந்த 6 அம்சத்தை ஆழமாக நாம் நம்ப வேண்டுமோ அதில் ஓரம்சம், மீதமுள்ள 5 அம்சங்களையும் பொய் என்று பறை சாற்றுவது போன்று மேலோட்டமாகப் பார்த்தால் விளங்கும். அது தான் விதி பற்றிய நம்பிக்கை.

எல்லாம் விதிப்படியே நடக்கிறது, அல்லாஹ் எழுதி வைத்த பிரகாரம் தான் இறுதித் தீர்ப்பு உள்ளது நன்மை தீமை எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று  நம்பினால்…

அல்லாஹ் ஏன் எம்மைப் படைக்க வேண்டும்? நாம் ஏன் அவனை வணங்க வேண்டும்? பிரார்த்தனை என்பதற்குக் கூட வேலையே இருக்காது. என்ன தான் செய்தாலும் சுவர்க்கம், நரகம் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றால் அல்லாஹ் நீதியாளன் கிடையாது என்ற நிலை ஏற்படும். (நஊதுபில்லாஹ்). நீதியில் எள்ளளவு கூட தவறுபவன் கடவுளாக இருக்க முடியாது. எனவே விதி பற்றிய நம்பிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை ஆட்டம் காணும்.

மனிதன் செய்யும் நன்மை தீமைகளைப் பதிவு செய்ய, நன்மையின் பக்கம் தூண்ட என பல்வேறு வேலைகளின் நிமித்தம் மலக்குகள் இருப்பதும் கேள்விக்குரியதாகி விடும்.

எல்லாம் விதிப்படி என்றால் அத்தனை நபிமார்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களும் அதன் போதனைகளும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை.

தீர்ப்பு நாள் விசாரணை என்பதெல்லாம் ஒரு நாடகம் என்றாகி தீர்ப்பு நாளும் பொய்யாகி விடும்.

எனவே விதியை எவ்வாறு நம்புவது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக விளங்கி வைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்களுக்கும், கேள்வி கேட்டு பதிலளிப்பவரை மடக்கி, தான் ஓர் அறிவாளி என காட்டிக் கொள்பவர்களுக்கும் வணக்கம் புரிய முடியாத சோம்பேறிகளுக்கும் விதி என்பது பெரிய பாக்கியம் தான்.

இதன் காரணமாகவும் விதி பற்றிய தெளிவான அறிவை நாம் பெற்றிருப்பது அவசியம்.

விதியை அல்குர்ஆன் இரண்டு விதமாகப் பிரித்து அணுகுகின்றது.

  1. இவ்வுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது
  2. மறுவுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது

இவ்வுலக பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுதல்

இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைக்கும் அனைத்துப் பாக்கியங்களும் அல்லாஹ் ஏற்கெனவே தீர்மானித்ததன் அடிப்படையிலேயே ஆகும் என குர்ஆனை ஆராயும் போது தெரிகின்றது.

அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (2:212)

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். (13:26)

(மேலும் பார்க்க: 3:27, 3:37, 9:28, 17:30, 24:38, 28:82, 29:62, 34:36, 39:52, 42:12, 42:19)

இவ்வசனங்கள் இவ்வுலகில் நாம் பெற்றுள்ள அனைத்துச் செல்வங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று கூறுகின்றன.

தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். (2:247)

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (7:128)

இங்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவது அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று விளங்குகிறது. மேலும் நமக்கு மத்தியில் நிலவும் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள், மனிதனுக்குக் கிடைக்கும். கண்ணியம், இழிவு உட்பட அனைத்து இன்ப துன்பங்களும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கும். இதில் மனித முயற்சியால் எதையும் அடைந்து விட முடியாது. (பார்க்க: அல்குர்ஆன் 2:253, 4:90, 3:26, 5:48, 11:118, 16:93, 42:8)

இது போன்ற  உலகின் அனைத்துக் காரியங்களும் விதிப்படியே நடக்கும் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக உள்ளன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கட-லும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (6:59)

வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை (10:61)

மேலே நாம் எடுத்துக் காட்டிய அனைத்து வசனங்களிலும் இவ்வுலகத்தில் கிடைக்கும் பாக்கியங்கள் அனைத்தும் விதியின் அடிப்படையில் வந்து சேருபவையே என்று கூறப்படுகின்றது. மனிதன் முயற்சி செய்தால் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அல்லாஹ் எங்குமே குறிப்பிடவில்லை.

மேலும் இது ஈமானுக்குப் பங்கம் விளைவிக்குமளவு சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றும் அல்ல! இவ்வுலக சுக போகங்கள் என்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை அற்பமானதே!

மறுவுலக பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுதல்

மறுமை பாக்கியங்கள் பற்றி அல்லாஹ் குர்ஆனில்  குறிப்பிடும் போது இரண்டு வேறுபட்ட விதமாகக் குறிப்பிடுகிறான்.

அதில் முதல் வகை, சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ மனிதன் அடைவதென்பது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது. தானாக ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைய முடியாது. மனிதனுக்கு நல்வழி காட்டுவதும் வழிகெடுப்பதும் அல்லாஹ்வின் பாற்பட்டது என்று ஏராளமான குர்ஆன் வசனங்கள்  கூறுகின்றது.

உதாரணமாக

அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். (2:272)

(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு (3:176)

எனவே அல்லாஹ் நாடுவதால் தான் ஒருவன் நரகத்தை அடைகிறான் என்பதை இவ்வசனங்களும் கீழே குறிப்பிடும் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.

நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது (சாதகமானது) கொடுக்கப் படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!” என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (5:41)

“நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழி கேட்டில் விட்டு விட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. (11:34)

மேலும் பார்க்க: அல்குர்ஆன் 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 4:94, 4:88, 4:143, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57,  22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31

இங்கு நேர்வழியும், வழிகேடும் விதிப்படியே என்பதை அல்லாஹ்  ஆணித்தரமாகக் கூறுகிறான்

விதி சம்பந்தமாக ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களுக்கும் மூஸா (அலை)  அவர்களுக்கும் நடைபெற்ற ஓர் உரையாடலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லிக் காட்டுகிறார்கள்

(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள் “ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்)

எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்” என்று சொன்னார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் “மூசாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள்,  அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். “(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள்” என மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6614

ஆனால் இதைவிட அதிகமான வசனங்களில் இதற்கு மாற்றமாக மனிதன் மறுமையில் சந்திக்கப் போகும் விளைவுகளுக்கு அல்லாஹ் பொறுப்பாளியல்ல. மனிதனே அதைத் தீர்மானிக்கிறான் என்று அல்லாஹ் குறிப்பிடுபிறான்.

உதாரணமாக

“மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (10:108)

நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை. (17:15)

மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர் வழி பெற்றவர் தமக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி கெடுபவர் தமக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல. (39:41)

மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி என்பதை இவ்வசனங்கள் ஐயத்திற்கிடமின்றி சொல்கின்றன.

இது அறிவுரை. விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வார். (73:19)

எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (3:25)

மேலும் பார்க்க: அல்குர்ஆன் 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129,  7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101,  13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24

மனிதனே தனது செயலுக்குப் பொறுப்பாளி என்பதை இவ்வசனங்கள் பறைசாற்றுகின்றன.

அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். (7:20)

உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (17:64)

அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான். (25:29)

மேலும் பார்க்க: அல் குர்ஆன் 2:36, 2:268, 3:155, 3:175, 4:60, 4:119, 4:120, 5:91, 6:43, 6:68, 16:63, 17:27, 19:58, 20:120, 27:24

மேலே உள்ள வசனங்கள், வழிகெடுப்பது ஷைத்தானின் வேலை என்று கூறுகின்றன.

ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று நரகத்தை அடைவதும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று ஒரு வகையான வசனங்கள் கூறுகின்றன.

ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று நரகத்தை அடைவதும் தானாக தேடிக் கொள்வது அல்லது ஷைத்தான் வழிகெடுப்பது தான் காரணமே தவிர அதற்கு இறைவன் பொறுப்பாளியல்ல என்று வேறு சில வகையான வசனங்கள் சொல்கின்றன.

இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இரண்டு வகையான வசனங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருப்பது உண்மை தான்.

இப்போது நாம் என்ன செய்வது? முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதம் தான் என்பதற்கு பெரிய சான்று அது முரண்பாடுகள் அற்றதாக இருப்பது தான் என அல்லாஹ்வே கூறுகிறான்

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)

குர்ஆனைப் பற்றி குர்ஆனே இவ்வாறு சான்று பகரும் போது, மேலே எடுத்துக் காட்டிய விதியைப் பற்றிக் கூறக் கூடிய அத்தனை வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பது ஏன்?

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

ஹதீஸ் கலை ஆய்வு  – தொடர் 8

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களையும், அவை எவ்வாறு குர்ஆனுடன் மோதுகின்றன என்பதைப் பற்றியும், மாற்றுக் கருத்தில் உள்ளவர்கள் இச்செய்திகளுக்குக் கொடுக்கும் விளக்கத்தைப் பற்றியும், எது சரியான விளக்கம் என்பதைப் பற்றியும் இத்தொடரில் பார்த்து வருகிறோம்.

இதில் முதலாவதாக, “பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டுதல்’ தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸின் தரத்தைப் பார்த்தோம்.

அடுத்ததாக, மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற கருத்தில் கூறப்படும் ஒரு ஹதீஸை ஆய்வு செய்வோம்.

இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

“எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3017

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த ஹதீஸை நாம் மறுக்கவுமில்லை. எதிர் தரப்பினர் ஆதாரமாகக் காட்டும் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனைக் கொல்ல வேண்டும் என்ற ஒரு கருத்தை மட்டும் தராமல் பல கருத்துக்களைத் தரக் கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

இவற்றில் எது குர்ஆனுக்கு முரணாக உள்ளதோ அந்த அர்த்தத்தைக் கொடுக்காமல் குர்ஆனுடன் ஒத்துப் போகின்ற பொருளைக் கொடுக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

எதிர் தரப்பினர் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிய தவறான கருத்தை நாம் மறுப்பதால் இந்த ஹதீஸையே நாம் மறுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த ஹதீஸை நாம் மறுக்கவில்லை. முரண்படாத விதத்தில் விளக்கம் தான் தருகிறோம். இந்த ஹதீஸ் பின்வரும் பொருள்களைத் தருகின்றது.

  1. இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டே இஸ்லாமிய கோட்பாடுகளை மாற்ற நினைப்பவனைக் கொல்ல வேண்டும்.
  2. முஸ்லிமாக இருந்தவன் வேறொரு மதத்தைத் தழுவியதோடு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அவனைக் கொல்ல வேண்டும்.
  3. முஸ்லிமாக இருந்தவன் வேறொரு மதத்தைத் தழுவினால் அவன் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படாவிட்டாலும் அவனைக் கொல்ல வேண்டும்.
  4. ஒரு மதத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவன் அவன் ஏற்றுக் கொண்ட மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதத்தில் இருந்து கொண்டே அதன் கொள்கையை மாற்றம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினால் அவன் கொல்லப்பட வேண்டும்.
  5. ஒருவனுடைய மார்க்கம் எதுவாக இருந்தாலும் அவன் எதை மார்க்கம் என்று கடைப்பிடிக்கிறானோ அதை விட்டும் விலகி இன்னொரு மார்க்கத்திற்குச் சென்று விட்டால் அவனைக் கொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவன் இஸ்லாத்திற்கு வந்தாலோ அல்லது இந்து மதம் அல்லாத வேறு மதங்களுக்குச் சென்றாலோ அவனைக் கொல்ல வேண்டும்.

மேற்கண்ட ஐந்து கருத்துக்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது கருத்தை இந்த ஹதீஸ் தரவில்லை என்பதில் நாமும் எதிர் தரப்பினரும் ஒன்றுபட்டுள்ளோம். முதல் இரண்டு கருத்தையும் இந்த ஹதீஸ் கொடுக்கும் என்பதில் நாமும் எதிர் தரப்பினரும் ஒத்துப் போகிறோம். ஏனென்றால் முதலாவது மற்றும் இரண்டாவது வகையினர் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுவதால் தான் கொல்லப் படுகிறார்கள். மதம் மாறியதற்காக அல்ல!

மூன்றாவது கருத்தான, “மதம் மாறியவன் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாவிட்டாலும் அவனைக் கொல்ல வேண்டும்’ என்பதில் தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

எதிர் தரப்பினர் கூறும் மூன்றாவது கருத்தை ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தில் நிர்பந்தம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் திருக்குர்ஆன், இஸ்லாத்தை ஏற்கும் விஷயத்தில் மக்களுக்குச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:256

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு, அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம்.

சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது.

“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 18:29

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?

அல்குர்ஆன் 10:99

இஸ்லாத்தை ஏற்கும் படி யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. அப்படியிருக்க நாம் ஒருவரை நிர்பந்தித்தால் அவர் நேர்வழி பெற்றுவிட முடியாது. எனவே இஸ்லாத்தைக் கட்டாயமாக ஒருவன் மீது திணிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் இஸ்லாம் அனுமதி தரவில்லை.

அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

அல்குர்ஆன் 88:21

நபி (ஸல்) அவர்களுக்கும். மக்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாம் உண்மைக் கொள்கை என்பதை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் நபி (ஸல்) அவர்களின் மீது கடமை. அவர்களை அடக்கி இஸ்லாத்தைப் பின்பற்றச் செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.

நபியவர்களின் உபதேசத்தை ஏற்காமல் ஒருவன் புறக்கணித்தால் அவனை இந்த உலகத்தில் எதுவும் செய்ய இயலாது. மாறாக அவனை விசாரித்து அவனுக்குத் தண்டனை தருகின்ற அதிகாரம் தனக்கு மட்டும் இருப்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

“(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 108வது அத்தியாயம்

நபி (ஸல்) அவர்கள் கூறும் கொள்கையும் இணை வைப்பாளர்களின் கொள்கையும் ஒன்றல்ல. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எனவே நான் உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் படி என்னை நீங்கள் நிர்பந்திக்காதீர்கள். என் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி நான் உங்களை நிர்பந்திக்க மாட்டேன் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 9:6

இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் அடைக்கலத்தை எதிர்பார்த்து வரும் நேரத்தில் அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தால் தான் அடைக்கலம் கிடைக்கும் என்று நிர்பந்திக்குமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடவில்லை.

இணை வைப்பாளர்களை நிர்பந்திப்பதற்குரிய சூழ்நிலைகள் அமைந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கேட்கச் செய்ய வேண்டுமே தவிர இஸ்லாத்தில் இணையும் படி வற்புறுத்தக் கூடாது என்பதே அல்லாஹ்வின் கட்டளை.

வளரும் இன்ஷா அல்லாஹ்