ஏகத்துவம் – ஜூன் 2016

உறவைக் காக்கும் உன்னத குர்ஆன்

வெளியூரில் இருக்கும் பிள்ளைகளை ஆண்டுக்கு ஒரு  முறை ஊர் வரச் சொல்லி, அவர்களை அருகில் கொண்டு வந்து ஒன்றாகக் கூடி, ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்  பேசுகிறோம். உணவு பரிமாறி, உறங்கிக் கிடந்த பாச உணர்வை உசுப்பி விட்டு, அடுத்த ஓராண்டு வரை தாக்குப் பிடிக்கின்ற வகையில் பாச உணர்வை, பாச உறவை உயிர்ப்பித்து திரும்ப ஊருக்கு அனுப்புகின்றோம்.

இத்தகைய கருணையும் கரிசனமும் கொண்ட நமது பெற்றோர்கள் செய்வது போல், மறுமைச் சிந்தனையை விட்டும் தூரமாக இருக்கும் நம்மை அருகில் அழைத்து, அரவணைத்து மறுமைச் சிந்தனையைக் கூர்மைப்படுத்துகின்ற வேலையை நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் ஆண்டுக்கு ஒரு முறை புனித ரமளான் மாதத்தின் மூலம் செய்கின்றான். அருள்மிகு குர்ஆன் அருளப்பட்ட அந்தப் புனித ரமளான் இதோ வந்து விட்டது.

ரமளான் மாதம் வந்ததும் நோன்பை முன்னிட்டு ஜமாஅத்துடன் கூடிய கடமையான  தொழுகைகள், இரவுத் தொழுகை உள்ளிட்ட உபரியான தொழுகைகள், குறிப்பாக பிந்திய 10 இரவுகளில் தொழுகின்ற  இரவுத் தொழுகைகள், கடமையான ஜகாத்தைத் தாண்டி, உபரியான தான தர்மங்கள், இஃப்தார் தொடர்பான தர்மங்கள், குர்ஆன் ஓதுதல், கிராஅத்துகளைச் செவியுறுதல், தொடர் சொற்பொழிவுகள், உம்ரா செய்தல், பள்ளியில் இஃதிகாஃப் இருத்தல் எனப் பல்வேறு விதமான   நன்மைகள் முஸ்லிம்களுக்கிடையே பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் ஓடுகின்றன. இதற்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருப்பது, உந்து சக்தியாக இருப்பது உன்னதமிகு குர்ஆன் தான்! உண்மையில், இந்த நல்லறங்கள் பீறிட்டு ஓடுவதைப் பார்க்கும் போது…

ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:  புகாரி  எண்:1899

 நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தைகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடுகின்றன. சொர்க்க வாசல்கள் திறக்கப்படுவதையும், நரக வாசல்கள் மூடப்படுவதையும், மனிதனை ஆட்டிப் படைக்கின்ற அடங்காப் பிடாரியான நமது பிறவி எதிரியின் ஆதிக்கம் அடக்கப்படுவதையும் நாம் நிதர்சனமாகக் காண முடிகின்றது.

பள்ளிவாசல் பக்கமே திரும்பிப் பார்க்காதவர்கள் கூட பள்ளியில் தவமாகக் கிடப்பது, இறுகிய மனமுடையவர்கள் கூட இளகிய மனமுடையவர்களாக மாறுவது போன்ற மகத்தான மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் மக்களிடம் பொங்கி வழியச் செய்கிறது திருக்குர்ஆன்.

புனிதக் குர்ஆன் எழுத்தளவில் ஏட்டளவில் முடங்கி இறந்து கிடக்கும் வேதமல்ல; அது இதயத்திலும், இரத்த நாளங்களிலும் ஓடுகின்ற இரத்த ஓட்டத்திற்கு ஈடாக வேகமாக ஓடி இயங்குகின்ற ஈடு இணையற்ற வேதம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது, இதை மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அந்த அளவுக்கு அழைப்பாளர்கள், குர்ஆனை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், இந்தக் குர்ஆனின் ஒரு போதனை மட்டும் இன்னும் மக்களிடம் போய் சேரவில்லை. அதாவது அழைப்பாளர்கள் அதை இன்னும் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை. அந்த வகையில் வேதனையே மிஞ்சுகிறது.

ரமளான் மாதத்தில் தொழுகை, ஜகாத், உம்ரா, குர்ஆன் ஓதுதுல், குர்ஆன் கிராஅத் கேட்டல் போன்ற வணக்கங்கள் பொங்கி வழிந்து மக்களை ஈர்த்த அளவிற்கு மக்களை இன்னும் ஈர்க்காத, மக்கள் இன்னும் திரும்பிப் பார்க்காத ஓரிடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. அது தான் உறவினர்ளை ஆதரித்தல், சொந்த பந்தங்களை அரவணைத்தல் என்ற உன்னத வணக்கமாகும்.

உறவுகளைப் பேணுகின்ற விவகாரத்தை குர்ஆன் சொல்லும் போதே அதிக வேகத்திலும், உயர் அழுத்தத்திலும் சொல்கின்றது.

அதை நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித் தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான்.

அல்குர்ஆன் 47:22,23

ஆம்! இந்தக் குர்ஆனைப் புறக்கணித்தாலே பூமியில் குழப்பமும், உறவைப் பகைப்பதும் தான் ஏற்படும் என்று திருக்குர்ஆன் அடித்துச் சொல்கின்றது.

இதன் மாற்றுக் கருத்து என்ன? திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டால் பூமியில் அமைதியும், உறவுகளை ஆதரிப்பதும், அரவணைப்பதும் ஏற்படும் என்பது தான்.

குர்ஆனின் மறுபெயர் அமைதியும் அரவணைப்பும் தான் என்று குர்ஆன் தனக்கே உரிய அழகிய பாணியில் அருமையாக எடுத்துரைக்கின்றது. அத்துடன், உறவைப் பகைப்பவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள், கண்ணிழந்த கபோதிகள், காதிழந்த செவிடர்கள் என்று கடுமையாகக் கண்டிக்கின்றது.

அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்த பின் அதை முறிப்போருக்கும், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போருக்கும், பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கும் சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு.

அல்குர்ஆன் 13:25

உறவை முறிப்பவருக்கு இவ்வுலகில் அல்லாஹ்வின் சாபமும் மறுஉலகில் கேவலமும், கேடும் உண்டு என்று உறுதி செய்கின்றது.

அவர்கள் அல்லாஹ் வின் உடன் படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டு மென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே நட்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் 2: 27

இந்த வசனமும் உறவை முறிப்பதை வெளுத்து வாங்குகின்றது. சொந்தங்களைப் பகைப்பதை பூமியில் மக்கள் செய்கின்ற பெரிய குழப்பம் என்று மறுபதிவு செய்கின்றது. உறவை முறிப்பதை மாபெரும் பாவம் என்று திருக்குர்ஆன் கடிந்துரைத்து, உறவுடன் இணங்கி வாழ்தல் என்று நேரிய நெறியைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:1

இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு அஞ்சச் சொல்லி விட்டு உறவினர்கள் விஷயத்திலும் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று சொல்வதன் மூலம் உறவைப் பேணுவதின் பரிமாணத்தை பெரிய அளவில் எடுத்துக் காட்டுகின்றான்.

உறவைப் பேணுதல் என்றால், நமது சமுதாயம் கல்யாண வீட்டில் உறவுகளை அழைத்து விருந்து போடுதல் என்று தான் விளங்கி வைத்துள்ளது. கோடான கோடி பணத்தை கல்யாணப் பந்தலில் காலி செய்வதைத் தான் உறவை அரவணைத்தல் என்று விளங்கி வைத்திருக்கின்றது. வருகின்ற உறவினர்கள் வீசிய கையும் வெறுங்கையுமாக வந்து சாப்பிடுவதில்லை. அன்பளிப்பு என்ற பெயரில் மனம் நொந்து, மொய் எழுதி விட்டுப் போகின்றனர் என்பது தான் உண்மை.

இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், கல்யாண வீட்டில் விருந்து போடுவதை மட்டுமே உறவைப் பேணுதல் என்று விளங்கி வைத்திருக்கின்ற இந்தச் சமுதாயம் அதையும் வெறுமனே போடவில்லை. அதற்குரிய அன்பளிப்பு என்ற பெயரில் மொய்யாக ஒரு பகரத்தையும் பதிலையும் வாங்கிக் கொண்டு தான் விருந்து போடுகின்றது.

பின்னர் அவர் வீட்டில் விருந்து நடக்கும் போது இவரும் நொந்து கொண்டு அன்பளிப்பு என்ற பெயரில் இதே மொய்யை திருப்பிச் செலுத்தி விட்டு வருகின்றார். அளிக்கப்படும் பொருள் பணமாகவும் இருக்கலாம், பண்டமாகவும் இருக்கலாம். இதற்குப் பெயர் தான் உறவை அரவணைத்தல் என்பதா?

பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி எண்: 5991

 நபி (ஸல்) அவர்கள் இதற்குப் பெயர் உறவை ஆதரிப்பது, அரவணைப்பது கிடையாது என்று சொல்லி விட்டார்கள்.

அதாவது எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சொந்தங்களுக்கு உதவி புரிவது தான் உறவைப் பேணுதல் என்பதை நபி (ஸல்) அவர்கள் இங்கு உணர்த்தி விடுகின்றார்கள்.

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதை களுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடி களுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்’’ எனக் கூறுவீராக.              அல்குர்ஆன் 2:215

அல்லாஹ்வின் இந்த வசனத்தில் குடும்பத் தலைவன் யாருக்காகச் செலவு செய்ய வேண்டுமோ அந்தப் பட்டியலில் பெற்றோருக்கு அடுத்து இடம் பெறுபவர்கள் உறவினர்கள் தாம்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனா நகர அன்சாரிகளிலேயே நிறைய பேரீச்சந் தோட்டங்களை சொத்துகளாகப் பெற்றிருந்தார். மஸ்ஜிதுந் நபவிக்கு எதிரே அமைந்திருந்த பைருஹாதோட்டம் தான் அவரது சொத்துக்களில் அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அ(ந்தத் தோட்டத்)தில் நுழைந்து அதிலிருந்த நல்ல (சுவையான) தண்ணீரைப் பருகுவார்கள். நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு  செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாதுஎன்னும் (3:92) இறைவசனம் அருளப்பட்ட போது அபூதல்ஹா (ரலி) எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து (இறை வழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாதுஎன்று அல்லாஹ் கூறுகிறான். என் சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹாதான். அதை அல்லாஹ்வுக்காக நான் தருமம் செய்து விடுகிறேன். அல்லாஹ்விடம் அதன் நன்மையையும், (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக அது இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஆகவே, அல்லாஹ் தங்களுக்குக் கட்டளையிடுகின்ற விஷயத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “ஆஹா! அது  லாபம் தரும் செல்வமாயிற்றே! நீ கூறியதை நான் கேட்டேன். அதை (உன்) நெருங்கிய உறவினர்களுக்கிடையே நீ பங்கிட்டு விடுவதையே நான் உசிதமானதாகக் கருதுகிறேன்’’ என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அவ்வாறே நான் செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறி விட்டு, தம் நெருங்கிய உறவினர்களுக்கும் தம் தந்தையின் உடன்பிறந்தார் மக்களுக்குமிடையே அதைப் பங்கிட்டு விட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி எண்:2769

அல்லாஹ்வும், அவனது தூதரும் குறிப்பிடுகின்ற அடிப்படையில் இன்று இஸ்லாமிய சமுதாயம் செலவு செய்கின்றதா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும்.

கல்யாணப் பந்தலிலும், பந்தியிலும் கொட்டித் தீர்க்கும் காசு பணத்தை சொந்த பந்தங்களுக்குக் கொட்டிக் கொடுக்காவிட்டாலும், அதில் சிறிதளவு கொடுப்பதற்குக் கூட மனமில்லாமல் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக நெருங்கிய உறவினர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுக்கு சல்லிக் காசு கூட இல்லாமல் கையறு நிலையில் யாரிடமும் கேயேந்தாமல் கண்ணீர் வடிக்கும் போது கூட உறவினர்கள் கண்டு கொள்வதில்லை. கல்யாணத்தில் செய்கின்ற நூறு சதவிகித ஆடம்பரச் செலவுகளில் ஒரு சதவிகிதம் கூட உறவினருக்குச் செய்வது கிடையாது. அந்த உறவினர் மரணத்தைத் தழுவினாலும் சரி தான். அவரை அறவே ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் (நூல்: புகாரி 2067) என்று சொன்ன பிறகும் கூட இந்தச் சமுதாயம் இதற்கு மதிப்பளிக்கவில்லை.

பொதுவாக, உலகப் பயனைச் சொல்லி எந்த ஒரு வணக்கத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்ட மாட்டார்கள். ஆனால் உறவினர்களை ஆதரிக்கக் கூடிய இந்த வணக்கத்தில் உலகப் பயனைச் சேர்த்துக். குறிப்பிட்டு ஆர்வமூட்டுகின்றார்கள். இந்த அரும் பயனைத் தான் இந்தச் சமுதாயம் அறவே கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.

இப்போது பள்ளிக்கூடங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்படும் காலமாகும். பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம், சீருடைகள், பள்ளிப் பாடப் புத்தகங்கள் என்று செலவு அள்ளிக் கொண்டு போகும் காலம் இது!

பள்ளிப்படிப்பு முடித்த மாணவர்கள் தகுதியிருந்தும் வசதியில்லாத காரணத்தால் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர வழியின்றி தவிக்கின்றார்கள். இதைக் கருத்தில் கொண்டே எல்லா அரசியல் கட்சிகளும் மாணவர்களின் கல்விக் கடனை ரத்துச் செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளன. எனவே, ஓரளவு வசதியான உறவினர்கள் தங்கள் குடும்பத்திலுள்ள வசதியற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உதவ முன்வர வேண்டும்.

கூடவே இப்போது ரமளானும் சேர்ந்தே வருகின்றது. ரமளான் செலவு, பெருநாள் உடைகள் என்று ஒரு பெரிய செலவு வேறு காத்திருக்கின்றது. இதையெல்லாம் கவனித்து சமுதாயம் தங்கள் உறவினருக்காக உதவ முன் வர வேண்டும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:273

என்று அல்லாஹ் சொல்வது போன்று மக்களில் தன்மானத்துடன் கூடிய உறவினர்கள் இருப்பார்கள். உறவினர்களுக்கு உதவ மிகவும் உற்ற நேரம், பிள்ளைகளை கல்விக்கூடத்தில் சேர்க்கின்ற கால கட்டமாகும். அப்படிப்பட்ட உதவிக்கு உரியவர்களை, தேவையுடையவர்களை மற்றவர்கள் அடையாளம் காண்பதற்கு முன்பாக சக உறவினர்கள் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். சுயமரியாதையுடன் உள்ள அத்தகைய சொந்தங்களுக்கு உதவ வேண்டும். இது திருக்குர்ஆன் மக்களிடம் எதிர்பார்க்கின்ற உறவு இணைப்பு, ஆதரவு மற்றும் அரவணைப்பாகும்.

இந்தப் பண்பு மக்களிடம் வராத வரை, என்னதான் ரமளானில் மலையளவு வணக்கங்களை அள்ளிக் குவித்தாலும் குர்ஆன் அவர்களிடமிருந்து வெகுதூரத்தில் விலகி நிற்கின்றது என்பது தான் அதன் பொருளாகும்.

அல்குர்ஆனின் உறவினர் ஆதரிப்பு, அரவணைப்பு போதனையை அழைப்பாளர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதில் ஒரு மாற்றத்தை மக்கள் காண வேண்டும். இதற்கு ஏகத்துவவாதிகள் முழு முன் மாதிரிகளாகத் திகழ வேண்டும்.

அந்த மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் இந்த ரமளான் நமக்கு அளிக்கட்டுமாக! குர்ஆன் கூறுகின்ற உறவு அரவணைப்பு சம்பந்தமான வசனங்கள் வார்த்தையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் ஆக்கம் பெறட்டுமாக!

—————————————————————————————————————————————————————-

கப்ர் வணங்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஸலபுக் கும்பல்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி

கடந்த ஜனவரி 2015 தீன்குலப்பெண்மணியில் முஃதஸிலாக்கள் யார் என்ற கட்டுரை வெளியாகியிருந்தது.

ஹதீஸ் காப்பாளர்களாக வெளி வேஷமிடும் போலி ஸலபுக் கும்பல் தவ்ஹீத் ஜமாஅத்தை நேர்மையாக எதிர்கொள்ளத் துணிவற்று முஃதஸிலாக்களின் பாதையில் தவ்ஹீத் ஜமாஅத் பயணிக்கின்றது, என்ற பசப்பு வாதத்தில் ஈடுபடலானார்கள்.

அவர்களின் வாதங்களுக்கு பதிலளிக்கும் விதமாக முஃதஸிலாக்கள் என்றால் யார்? அவர்களது கொள்கை என்ன? தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை என்ன?

அவர்களுக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடு என்ன?

முஃதஸிலாக்களின் அடிப்படை கொள்கைகள் எப்படி தவறாக உள்ளன என்பதை ஆதாரத்துடன் விளக்கி அக்கட்டுரை எழுதப்பட்டு இருந்தது.

முஃதஸிலாக்களிடம் பல வழிகெட்ட கொள்கைகள் இருந்ததைப் போலவே நல்ல கொள்கைகளும் அவர்களிடம் இடம் பெற்றிருந்தன. குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி சூனியம் என்பது பித்தலாட்டமே என்று அவர்கள் கூறியது அதில் ஒன்று தான்.

வழிகெட்ட கொள்கையினர் முன்வைக்கும் அனைத்தும் வழிகேடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் சொன்னவற்றில் ஒன்றிரண்டு நல்லவைகளும் உள்ளடங்கியிருக்கலாம்.

அந்த அடிப்படையில் முஃதஸிலாக்கள் வழிகேடர்களாக இருந்தாலும் அவர்கள் சூனியத்தை மறுத்தது சரியான செயலே!

அவர்கள் சூனியத்தை மறுத்தார்கள் என்பதினால் சூனியத்தை மறுக்கும் அனைவர்களும் முஃதஸிலாக்களாகி விட மாட்டார்கள். அவ்வாறு சொல்வது அறிவீனம் என்ற கருத்தையும் அக்கட்டுரையில் எழுதியிருந்தோம்.

இதற்குப் புதிதாக ஸலபுக் கும்பலை தஞ்சமடைந்திருக்கும் ஒருவர் எழுதிய மறுப்புக் கட்டுரையை இணையத்தில் பார்க்க நேர்ந்தது.

அதில் தர்க்கப் பூர்வமான விஷயங்களை விட நம்மை குறிவைத்துத் தாக்கும் போக்கே மிகைத் திருந்ததை உணர முடிகிறது.

எப்படியாவது நம்மை முஃதஸிலாவாகச் சித்தரித்து முஸ்லிம்களை விட்டும்  அப்புறப் படுத்தி விட வேண்டும் என்கிற வெறியும் அதில் வெளிப் படையாகவே தென்படுகிறது.

நாம் முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவதாகக் கூறிக்கொண்டே இவர் கப்ர் வணங்கிகளுக்கு வக்காலத்து வாங்கும் கேடு கெட்ட செயலையும் அந்தக் கட்டுரையில் அரங்கேற்றுகிறார். அதைப் பின்னர் விளக்குகிறோம்.

ஒற்றுமை

நமக்கும் முஃதஸிலாக்களுக்குமான ஒற்றுமை என்று சில விஷயங்களை அந்த சலபி பட்டியலிடுகிறார்.

அதில் ஒன்றாக முஃதஸிலாக்களின் தலைவன் வாஸில் பின் அதாஃ சிறந்த பேச்சாற்றலும் நாவன்மையும் உள்ளவனாம்.

வாஸில் பின் அதா நல்ல அரபு மொழிப் புலமை படைத்தவராக இருந்தார். மதீனாவில் படித்து அரபு சல்லிக்கு குப்பை கொட்டும் மதனிகளும் நல்ல அரபி புலமை பெற்றுள்ளதால் எல்லா மதனிகளும் முஃதஸிலாக்கள் தான் என்று இந்த அறிவிலியின் வழியில் நாமும் வாதிடலாம்.

நம்மை முஃதஸிலாவாக சித்தரிக்க இவர்கள் எப்படி எல்லாம் இறங்கி வருகிறார்கள்? பாடுபடுகிறார்கள்? மேலும் சலபிக் கும்பலில் உள்ளவர்கள் பேச்சாற்றல் இல்லாத பேயன்களா? அவர்களும் தான் தொண்டை கிழியப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் முஃதஸிலாக்கள் என்று இந்த அறிவிலி சொல்வாரா?

தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் சத்தியத்தைப் பேசுவதால் மக்கள் ஆர்வமுடன் அவர்களின் உரையைக் கேட்கிறார்கள். சலபிக்கும்பல் பேசுவதெல்லாம் மடமையாக உள்ளதால் மக்கள் செவி கொடுப்பதில்லை என்பதுதான் வித்தியாசம்.

இவர்களின் முஃதஸிலா மாயை நாளடைவில்  முற்றிப்போய், “முஃதஸிலாக்களின் தலைவன் சிகப்பு, நீலம், என அடர்நிற சட்டைகளை அதிகம் அணிந்து வந்தான். நாமும் இந்நிற சட்டைகளை அதிகம் அணிவதால் முஃதஸிலா என்பதில் எங்களுக்குச் சந்தேகமேயில்லை” என்று இவர்கள் பிதற்றினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

அந்தளவு இவர்களது முஃதஸிலா நோய் முற்றிப் போய் உள்ளது என்பதை இது காட்டுகிறது.

நபிமொழிகளை மறுத்து சுய சிந்தனையைப் புகுத்தியதே முஃதஸிலாக்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் என்று அடுத்து கூறுகிறார்.

தவ்ஹீத் ஜமாஅத் முஃதஸிலாக்களின் பாதையில் பயணிக்கிறதா? என்பதற்கு நம்மை விட தெளிவாக அவரே விளக்கமளித்து, பதிலளித்து, மறுத்து அவர் கூறும் இலங்கையை சார்ந்த அறிஞர்களுக்கு நன்கு உணர்த்தும் படி பேசியுள்ளார்.

அவரின் வாதங்களுக்கு அவராலேயே திருப்தியாகப் பதில் சொல்ல முடியவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அதாவது கள்ள ஸலபுக் கும்பலில் சேர்வதற்கு முன்பு அவர் வைத்த வாதங்களுக்கு அவராலேயே தெளிவாக பதிலளிக்க இயலவில்லை. சத்தியம் இருந்தால் தானே தெளிவான பதில் வரும்.

சரி இவரின் இக்குற்றச் சாட்டிற்கு வருவோம்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி சில செய்திகளை இது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று நாம் கூறியதையே இவ்வாறு விமர்சிக்கின்றார்.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை முரண்படுகிறது என்று சொல்லாமல் வேறு எப்படிக் குறிப்பிட இயலும்? அப்படி முரண்படுகிறது என்று ஆதாரத்துடன் சொன்னால் அது ஹதீஸில் அறிவைப் புகுத்தும் செயலாகி விடுமா?

இத்தனைக்கும் ஒரு செய்தியை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று விமர்சிக்கும் போது அதற்குரிய ஆதாரங்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம்.

கள்ள சலபுகளைப் போன்று மனோஇச்சைக் கருத்துக்களையும், இமாம்களின் தலைப்புகளையும் குறிப்பிட்டு மார்க்கம் பேசுவதில்லை.

இறை வார்த்தைகளுக்கு நிகரான மதிப்பை இமாம்களின் தலைப்புகளுக்கும், கருத்துக்களுக்கும் கொடுக்கும் கேடுகெட்ட செயலை தவ்ஹீத் ஜமாஅத் செய்தது கிடையாது.

இமாம்கள் எப்படி புரிந்தார்களோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூப்பாடு போட்டு இமாம்களின் புரிதலில் எந்தத் தவறும் ஏற்படாது என அவர்களை இறைவனுக்குச் சமமாக்கும் இழிவேலையை  தவ்ஹீத் ஜமாஅத் செய்வது கிடையாது.

இவ்வாறிருக்க, தகுந்த ஆதாரங்களைக் குறிப்பிட்டு இந்தச் செய்தி குர்ஆனுடன் மோதுகிறது; எனவே இதை நபி சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறினால் அதற்கு முறையாகப் பதில் கூற வக்கற்றவர்கள் நம்மை முஃதஸிலாக்களின் பாதையில் செல்கிறவர்கள் என்று கூப்பாடு போடுகின்றார்கள்.

இங்கே தான் கள்ள சலபுகளின் கள்ளத்தனத்தை, சத்தியத்தை  மறைக்கும் கயமைத்தனத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட செய்திகளை நபி சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியது வரலாற்றில் முஃதஸிலாக்கள் மட்டும் தானா?

முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் இவ்வாறு கூறவில்லையா? இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவில்லையா? முதன் முதலில் முஃதஸிலாக்கள் தான் இப்படி செய்தார்களா?

இதற்கெல்லாம் ஆம் என்று இவர்கள் சொல்வார்களேயானால் நாம் முஃதஸிலாக்களின் பாதையில் பயணிக்கிறோம் என்ற இவர்களின் வாதத்தில் ஓரளவாவது நியாயம் உள்ளது எனலாம்.

ஆனால் உண்மை என்ன?

குர்ஆனுக்கு முரணாக நபி பேசமாட்டார்கள் என்ற காரணத்தைக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட செய்தியை வரலாற்றில் முஃதஸிலாக்கள் அல்லாத பலரும் மறுத்துள்ளார்கள்.

மிக குறிப்பாக குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட செய்தியை மறுத்தது வரலாற்றில் முதன் முதலாக முஃதஸிலாக்கள் அல்ல. நபித்தோழர்கள் காலத்திலேயே இந்த அணுகுமுறை ஆரம்பித்து விட்டது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த அணுகுமுறையைக் கடைபிடித்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று.

இங்கே நாம் கேட்க விரும்புவது என்ன?

குர்ஆனுக்கு முரண்படுவதாக சில செய்திகளை மறுக்கும் ஆயிஷா மற்றும் நபித்தோழர்களின் அணுகுமுறையை தவ்ஹீத் ஜமாஅத் செய்வதால் இது முஃதஸிலாக்களின் பாதையாக எப்படி ஆகிறது? இதுதான் நமது கேள்வி.

அப்படி என்றால் முஃதஸிலாக்கள் இப்படி செயல்பட்டதை ஆயிஷாவின் பாதை என்பார்களா இந்த குருட்டுக் கூட்டம்?

முஃதஸிலாக்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பாதையில் பயணித்தார்கள் என்று இவர்கள் குறிப்பிட வேண்டும்.

குர்ஆனுக்கு முரண் எனக்கூறி மறுக்கும் அணுகுமுறையைக் கடைபிடித்ததில் முஃதஸிலாக்கள் முந்தியவர்களா? அன்னை ஆயிஷா போன்ற நபித்தோழர்கள் முந்தியவர்களா என்றால் சந்தேகமற ஆயிஷா போன்ற நபித்தோழர்களே முந்தியவர்கள் ஆவார்கள்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நபியின் பெயரால் சொல்லப்பட்ட ஓரிரு செய்திகளை ஆயிஷா உள்ளிட்டோர் மறுத்து அந்த வழிமுறையை ஆரம்பித்து அதன் பின்னர் தானே முஃதஸிலாக்களும் இதைக் கடைபிடித்து சூனியத்தை மறுத்தார்கள்?

இவர்கள் இதற்காக முஃதஸிலாக்களின் பாதையில் செல்கின்றனர் என விமர்சிப்பதில் நியாயவான்களாக இருந்தால் ஆயிஷாவின் பாதையில் முஃதஸிலாக்கள் பயணித்தார்கள் என்று இவர்கள் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

ஒரு வழிமுறையை முதலாவதாகக் கடைபிடித்த நபர்களை விட்டு விட்டு இரண்டாவதாகப் பின்பற்றிய நபர்களோடு அதை இணைக்கும் கள்ளத்தனத்தை கள்ள சலபுகளை விட வேறு யாராலும் அவ்வளவு நேர்த்தியாக செய்து விட முடியாது.

இப்படியெல்லாம் நியாயமற்று நம்மை விமர்சித்து விட்டு இது காழ்ப்புணர்வில் எழுதப்படவில்லை, குரோதத்தில் எழுதப்படவில்லை என்று டயலாக் விட்டால் அது உண்மை என்றாகி விடாது.

எழுத்தில் அல்ல; சொல்வதை செயலில் காட்ட வேண்டும். அப்போதுதான் மக்கள்  அதை நம்புவார்கள்.

அவர் வைக்கும் மற்ற வாதங்களுக்கான பதில்களை இன்ஷா அடுத்த இதழில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்

இறந்தவர்கள் செவியேற்பார்களா? -தொடர் 39

எழுத்தாக்கம் : ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

ஒரு மனிதர் உயிரோடு வாழ்கின்ற நேரத்தில் கூட அவருடைய விருப்பத்தின் படி அவரால் எந்த ஒரு அற்புதத்தையும் செய்ய முடியாது என்பதையும், நபிமார்கள் உட்பட யாராக இருந்தாலும் மரணத்திற்குப் பிறகு இந்த உலகத்தில் எந்தவிதமான செயல்பாடும் அவர்களுக்கு கிடையாது என்பதையும் நாம் இதுவரை பார்த்து வந்தோம்.

ஒருவர் மரணித்து விட்டார் என்று சொன்னால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் கண்ணுக்குத் தெரியாத பர்ஸக் எனும் ஒரு திரையைப் போட்டு விடுகிறான். அவர்களால் இந்தப் பூமிக்கு வர முடியாது. இங்குள்ள விஷயங்கள் அங்கு செல்லாது என்பதையும் நாம் பார்த்தோம்.

அதற்குச் சான்றாக நபிகளாரின் செய்தி ஆதாரமாக இருப்பதை நாம் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், “கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 1316

நாம் நம்முடைய தோளில் வைத்து சுமந்து செல்லக்கூடிய இறந்து போன ஜனாஸா மேற்கண்டாவாறு சொல்வதை நம்மால் செவியுற முடிகிறதா? அந்த ஜனாஸா பேசுவதாக அல்லாஹ்வின் தூதர்  வஹீ மூலமாக அறிந்து நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அந்த ஜனாஸா நம்முடைய தோளில் இருந்தாலும் அது பேசுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை என்றால் அந்த ஜனாஸாவிற்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் அல்லாஹ் ஒரு தடுப்பை ஏற்படுத்தி விட்டான். அது பேசுவதை நம்மால் அறிய முடியாது. அவர்களின் பேச்சு உயிரோடு இருக்கின்ற நமக்கு வந்து சேராது. இது நமக்குத் தேவையுள்ள விஷயமாக இருப்பதின் காரணத்தினால் அல்லாஹ்வின் தூதர் நமக்கு இதனைச் சொல்லிக் காட்டுகிறார்கள்.

மேலும் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு மனிதன் இறந்த பிறகு மூன்று விஷயங்களைத் தவிர மற்ற அனைத்தும் துண்டிக்கப்படும். 1) பயனளிக்கும் கல்வி 2) நிரந்தர தர்மம் 3) அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை.

அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)

நூல் : முஸ்லிம் 3083

இந்தச் செய்தி, மனிதன் இறந்து விட்டான் என்றால் அவனுக்கும் அவனுடைய செயலுக்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதையும், அவனுடைய செயலை அவனால் தொடர்ந்து செய்யவும் முடியாது என்பதையும் தெரிவிக்கிறது. மேற்கண்ட 3 காரியங்களைத் தவிர மனிதனுக்கு இந்த உலகத்தோடு இருக்கின்ற உறவு முறிந்து விடுகிறது.

ஆனால் இதற்கு மாற்றமாக நம் சமுதாய மக்கள்,  உயிரோடு இருந்ததை விட இறந்த பிறகுதான் அவரிடமிருந்து பல செயல்கள் வெளிப்படுவதாக நம்புகிறார்கள். உயிரோடு உள்ளவர்களை வைத்து பல தெய்வ வணக்கம் எங்காவது நடக்கிறதா? கிடையாது. இறந்து போனவர்களைத்தான் சிலையாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறந்து போனவர்களைத்தான் கப்ருகளாக வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரோடு உள்ளவர்களைக் கடவுள்களாக வைத்து வணங்கினால் யாரும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவரும் நம்மைப் போன்று மலம் ஜலம் கழிக்கிறார், சாப்பிடுகிறார் என்பதை அவன் நேரில் பார்க்கும் போது அவனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஆனால் அதே மனிதன் இறந்த பிறகு, உயிரோடு இருக்கும் போது ஒரு மனிதனுக்கு என்ன ஆற்றல் இருக்குமோ அதை விட சக்தி வாய்ந்த ஆற்றல் இருப்பதாக நம்புகிறான்.

அதற்குத் தான் மேற்கண்ட ஹதீஸ், ஒருவன் இறந்துவிட்டால் அவனால் எந்தச் செயலும் செய்ய முடியாது என்பதற்குத் தெளிவான ஆதாரமாக இருக்கிறது.

மேற்கண்ட இந்த ஹதீஸைச் சுட்டிக்காட்டி நாம் இவ்வாறு தெளிவுபடுத்தும் போது, ஒரு சிலர் இதற்கு எதிர்வாதத்தை வைப்பார்கள்.

அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்ட தியாகிளை அல்லாஹ் அதிகமாகவே புகழ்ந்து சொல்கிறான். வேறு யாருக்கும் கொடுக்காத சிறப்பை அல்லாஹ் இந்த ஷஹீத்களுக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறான்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:154

இதே கருத்தில் அமைந்த இன்னொரு வசனத்தையும் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

அல்குர்ஆன் 3:169,170

மேற்கண்ட இரண்டு வசனங்களையும் சுட்டிக்காட்டி, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று சொல்லக்கூடாது. மாறாக அவர்கள் உயிருடன் தான் இருக்கின்றார்கள். உயிருடன் இருக்கும் போது மனிதன் செவியேற்பதைப் போன்று அடக்கம் செய்யப்பட்டவர்களும் செவியேற்பார்கள். உயிருடன் உள்ளவர்கள் பார்ப்பதைப் போன்று இறந்தவர்களும் பார்ப்பார்கள். எனவே அவ்லியாக்கள் என்பவர்கள் அல்லாஹ்வின் இறைநேசர்களாவர். அதனால் அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்யலாம்: உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

இதில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மேற்கண்ட இரு வசனங்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்ளுக்குத்தான் குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு முகவரி இல்லாதவர்களையெல்லாம், யாரென்று தெரியாதவர்களை யெல்லாம் இறைநேசர்கள் என்று சொல்லி அவர்களை வணங்குவது அறிவற்ற வாதம்.

அப்படியே நாம் அவ்வாறு சொல்வதாக இருந்தால் நபிகளார் காலத்தில் பத்ரு மற்றும் உஹதுப் போன்ற போர்க்களங்களில் எதிரிகளுடன் போர் செய்து அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களைத்தான் நாம் சொல்ல வேண்டுமே தவிர இப்போது யாராவது இறந்தார்கள் என்றால் அவர்களை நாம் அப்படி சொல்லக்கூடாது.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் இன்று தமிழகம் முழுவதும் அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர் அனைவரும் ஏதாவது போர்க்களத்தில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களா? ஷஹீதானவர்களா? அவர்களில் யாராவது ஒருவரை அவ்வாறு சொல்ல முடியுமா? அவர் சாதாரணமான முறையில் இறந்தவராகத்தான் இருப்பார்.

மேலும்,  அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் நாம் முகம் சுளிக்கக்கூடிய அளவிற்குத்தான் அவர்களுடைய வரலாறுகள் இருக்கின்றன. பீடி குடித்து இறந்து போனவர்கள் அல்லாஹ்வின் இறைநேசராம்! கஞ்சா குடித்து இறந்து போனவர்கள் இறைநேசராம்! இவ்வாறு யாரென்று தெரியாதவர்களைத்தான் இவர்கள் இறைநேசர்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும், முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்” (3:169) எனும் இந்த வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

 நூல் : முஸ்லிம் 3834

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் ‘புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!’ எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? உயிருடன் இருப்பதற்காக ஒருவரை அழைத்துப் பிரார்த்திக்க முடியுமா என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

நரகத்திற்கு  அழைக்கும்  இஸ்லாமிய பாடல்கள்?

நாகூர் இப்னு அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி.

“அடியார்க்கு அருள் செய்யும் அம்மா” என்ற நாகூர் ஹனிபாவின் பாடல் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிரானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம்.

இந்த இதழில் “நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே” என்ற பாடலின் அபத்தமான கருத்துக்களைப்  பார்ப்போம்.

“நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே!

உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே!”

என்றோ இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாகூர் மீரானைத் தான் தேடி வந்ததாக இந்த வரியின் மூலம் தெரிவிக்கின்றார்.

இறந்தவர்களுக்கு இவ்வுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லை, யார் அவரை தேடிச் சென்றாலும் அதை அவரால் அறியவும் முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அவரால் அறிய முடியும் என்று நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதாகும்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

அவரை எதற்காகத் தேடிச் சென்றார் என்ற காரணத்தை அடுத்தடுத்த வரிகளில் கூறுகின்றார்.

“தயை நாடி உருகும் நெஞ்சோடு உம்மை தேடி சிவந்த கண்ணோடு”

தயை என்றால் அருள் என்று பொருளாகும். அருளை நாகூர் மீரானிடம் தேடிச் சென்றதாகவும், கண்கள் சிவக்கும் அளவுக்கு இடைவிடாமல் அவரது தேடல் அமைந்திருந்ததாகவும் இந்த வரி கூறுகிறது.

அருள் அல்லாஹ்விடமே இருக்கிறது

அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 3: 73

மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை”.

அல்குர்ஆன் 2: 243

மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களுக்கும் அருள் புரிபவன் அல்லாஹ் ஒருவன்தான். அது அவனுடைய அதிகாரத்திற்குட்பட்ட விஷயமாகும். அந்த அதிகாரம் மற்றவர்களுக்கு அணுவளவு இருக்கிறது என்று நம்பினாலும் அது அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கின்ற பெரும்பாவமாகும்.

இந்தப் பாடல் வரிகளோ, நாகூர் மீரானும் அல்லாஹ்வைப் போன்று மனிதர்களுக்கு அருள் புரிகிறார் என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதே தவிர வேறு இல்லை.

மேலும், கண்கள் சிவக்கின்ற அளவுக்கு சிரமப்பட்டு நிரந்தர நரகத்திற்கான பாவத்தைச் செய்வது நகைப்பிற்குரியதாகவே இருக்கிறது.

அருள் புரிவது அல்லாஹ் மட்டுமே என்பதையும், இறந்தவர்களால் எதையும் அறிய முடியாது என்பதையும் விரிவாகச் சென்ற இதழில் குறிப்பிட்டு இருக்கின்றோம்.

அவரைத் தேடிச் சென்றதற்கான முதல் காரணம் அருளைத் தேடுவது என்று குறிப்பிட்டார். அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று பார்த்து விட்டோம். மற்றொரு காரணத்தை அடுத்த வரியில் சொல்கின்றார்.

“தினம் ஏந்தும் இரண்டு கையோடு மனம் சாந்தி பெற வந்தோம் அன்போடு”

நாகூர் மீரானை நோக்கி இரண்டு கைகளையும் உயர்த்திப் பிரார்த்தனை செய்வதுடன் அவரிடம் வருகை தருவது மன அமைதியைத் தருகிறது என்று இந்த வரியின் கருத்து தெரிவிக்கின்றது.

பிராரத்தனை அல்லாஹ்விடமே

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்”.

அல்குர்ஆன் 7: 197, 198

பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டும்தான் செய்ய வேண்டும். அல்லாஹ் மட்டுமே நமது கோரிக்கைகளை செவியேற்பவன், அதற்குப் பதிலளிப்பவன் என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்பதை திருக்குர்ஆனுடைய பல வசனங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதற்கு மாற்றமாக இந்தப் பாடலில், தினம் தினம் நாகூர் மீரானிடம் கையேந்துவதாகச் சொல்கின்றார். இது இஸ்லாமியப் பாடலா (?) என்று சிந்திக்க வேண்டும்.

மன அமைதி அல்லாஹ்வின் நினைவாலே

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.

அல்குர்ஆன் – 13: 28

அல்லாஹ்வின் நினைவால்தான் மனம் அமைதி பெறுகின்றது என்று இந்த வசனம் திட்டவட்டமாகக் கூறுகின்றது.

பள்ளிவாசல்களில் நாம் இருக்கும் போதும், திருக்குர்ஆனை வாசிக்கும் போதும், இன்னும் இறைவனுடைய நினைவோடு இருக்கின்ற ஒவ்வொரு தருணத்திலும் நம்முடைய மனதிற்கு ஒரு நிம்மதியைத் தருகிறது. இதை நாம் உணர்கிறோம்.

ஆனால் நாகூர் மீரானைத் தரிசிப்பது மன அமைதியைத் தருகிறது என்று இவர் குறிப்பிடுகின்றார்

உண்மையில் அவ்வாறு ஏற்படுகிறதா? என்றால் நிச்சயமாக ஏற்படாது.

தர்காக்களில் எழும் கூச்சல்கள், பாடல்களின் ஒலிபரப்பு, இசைக் கருவிகளின் அணிவகுப்பு, ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கலந்து நிற்கக்கூடிய மார்க்கத்திற்கு முரணான செயல்கள், அவர்கள் ஏற்றியிருக்கும் விளக்குகளின் எண்ணெய் வாடை, இன்னும் ஏராளமான விஷயங்கள் அமைதியாக இருக்கும் மனதைக்கூட கெடுக்கும் விதமாகத்தான் இருக்கிறது.

மாற்று மதத்தவர்களின் கோயிலுக்குச் சென்ற அனுபவம்தான் தர்காக்களுக்கு சென்றால் கிடைக்குமே தவிர மன அமைதி கிடைக்காது.

“அந்த இறைவன் வழியில் சென்றவரே! மக்கள் இருளை அகற்றி வென்றவரே!

அருள் வடிவில் விளங்கும் நல்லவரே! வல்ல அல்லாஹ்வின் தியானத்தில் உள்ளவரே!

அருள் மழையை பொழிய வேண்டுமையா எங்கள் அல்லல் நீங்கிட வேண்டுமையா

உங்கள் கருணை எமக்கு வேண்டுமையா நாங்கள் கண்ட துயரங்கள் போதுமையா”

இந்த வரிகளில் நாகூர் மீரானை அழைத்து அருள் பொழிய வேண்டும் என்றும் அதன் மூலம் எங்களின் துன்பங்கள் நீங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றார்.

அருள் புரிபவன் அல்லாஹ் ஒருவனே. அவன்தான் நமக்கு ஏற்படும் துன்பங்களையும் நீக்குகிறான். அவனை விடுத்து வேறு யாரும் துன்பங்களை நீக்க சக்தி பெற மாட்டார்கள்.

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்”.“பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவ னுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்”.

அல்குர்ஆன் 13: 53,54,55

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாதுஎன்று கூறுவீராக!

அல்குர்ஆன் 17: 56

துன்பங்களை நீக்க அல்லாஹ் ஒருவன் மட்டுமே அற்றல் படைத்தவன் என்பதை இவ்வசனங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

இன்னும், மக்கத்து காஃபிர்கள் கூட தங்களுக்குப் பெரும் துன்பங்கள் ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடம் முறையிடுவார்கள் என்றும், அந்தத் துன்பத்தை இறைவன் நீக்கிவிட்டவுடன் நன்றி  மறந்து இணைகற்பிப்பார்கள் என்றும் இறைவன் கூறுகின்றான்.

கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக் கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் புறக்கணிக்கிறீர்கள்! மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்”.

அல்குர்ஆன் 17: 67

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்ற வனாகவோ நம்மிடம் பிரார்த் திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன”.

அல்குர்ஆன் 10: 12

ஆனால், இந்தப் பாடலின் வரிகளோ துன்பத்தின் போது கூட அல்லாஹ்விடம் கையேந்துவது பற்றிக் கூறாமல் நாகூர் மீரானிடம் தான் கையேந்திப் பிராரத்திக்க வேண்டும் என்று சொல்கிறது.

இந்த அடிப்படையில் மக்கத்து முஷ்ரிக்கீன்களுடைய கருத்தை விட மிகவும் மோசமான கருத்துக்களைத்தான் இந்தப் பாடல்வரிகள் எடுத்துரைத்து இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கின்றது.

ஒரு உண்மையான மூஃமின் தனக்கு துன்பம் ஏற்படும் போது அல்லாஹ்வின் உதவியும், அருள் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்ப்பார்களே தவிர இறந்து மண்ணோடு மக்கிப் போனவர்களை அழைக்க மாட்டார்கள்.

“உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது”

அல்குர்ஆன் 2: 214

—————————————————————————————————————————————————————-

காதியானிகள் யார்?

– எம்.ஐ.சுலைமான்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு ஏராளமான பொய்யர்கள் உருவானார்கள். அவர்கள் இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வந்தவர்கள் தான் காதியானிகள்.

நபிகளாருக்குப் பிறகு நானும் நபியே என்று வாதிட்ட பொய்யன் மிர்சா குலாம் அஹ்மத் என்பவனை நபியாக ஏற்றவர்கள் காதியானிகள்.

காதியானி என்பது பஞ்சாபில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். மிர்சா என்ற இவன் இந்த ஊரைச் சார்ந்தவன் என்பதால் இவனுடைய கொள்கை காதியானி (காதியான் என்ற ஊரைச் சார்ந்தவனுடைய) கொள்கை என்ற பெயர் வந்தது.

இவனுடைய இயற்பெயர் மிர்சா குலாம் அஹ்மது. இவன் கி பி 1835 ஆம் ஆண்டு பிறந்தான். 1908 ஆம் ஆண்டு இறந்தான். இவனைப் பின்பற்றுபவர்கள் தம்மை அஹ்மதிய்யாக்கள் என்று கூறிக் கொள்வார்கள். இவனுடைய கொள்கை இஸ்லாத்துக்கு எப்படி விரோதமானது என்பதைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இறைத்தூதர்கள் வருவார்களா?

உலக மக்கள் அனைவருக்கும்

நபிகள் நாயகமே இறைத்தூதர்

உலகம் அழியும் வரை உள்ள எல்லா மக்களுக்கும் இறைத்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்பதை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக விவரிக்கிறது.

يَاأَيُّهَاالنَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا [الأعراف/158]

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன்.

அல்குர்ஆன் 7:158

உலக மக்கள் அனைவருக்கும் உரிய திருக்குர்ஆனில் முழு மனித குலத்தையும் அழைத்து, பின்வருமாறு கூறுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ [الأنبياء/107]

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 21 : 107

وَمَا أَرْسَلْنَاكَإ ِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًاوَنَذِيرًاوَلَكِنَّ أَكْثَرَالنَّاسِ لَا يَعْلَمُونَ [سبأ/28]

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 34:28

{تَبَارَكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا} [الفرقان:1]

தனது அடியார் மீது (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையை அவர் அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியவராக ஆவதற்காக அருளியவன் பாக்கியமானவன்.

அல்குர்ஆன் 25:1

அகிலாத்தார் அனைவருக்கும் நபிகளார்தான் எச்சரிக்கை செய்ய முடியும். வேறு யாரும் இறைத் தூதராக வந்து எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதையும் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

335 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ هُوَ الْعَوَقِيُّ قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ حوحَدَّثَنِي سَعِيدُ بْنُ النَّضْرِ قَالَ أَخْبَرَنَاهُشَيْمٌ قَالَ أَخْبَرَنَا سَيَّارٌ قَالَ حَدَّثَنَا يَزِيدُ هُوَ ابْنُ صُهَيْبٍ الْفَقِيرُ قَالَ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِاللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ وَجُعِلَتْ لِي الْأَرْضُمَسْجِدًا وَطَهُورًا فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَلْيُصَلِّ وَأُحِلَّتْ لِي الْمَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَأُعْطِيتُ الشَّفَاعَةَ وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத் தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்ட்டுள்ளன.

  1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
  2. தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும், தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்துவிட்டால் (அவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் தயம்மும் செய்துகொள்ளட்டும்.) தொழுதுகொள்ளட்டும்.
  3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
  4. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளேன்.
  5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

அறிவிப்பவர் ; ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 335

ஒவ்வொரு இறைத்தூதர்களும் அந்தச் சமுதாய மக்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட நிலையில் நபிகளார் மட்டும்தான் உலகம் முழுமைக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை நபிகளாரின் இந்தப் பொன்மொழி ஐயத்திற்கிடமின்றி விளக்கிறது.

கியாமத் நாள் வரை வருகின்ற மக்களுக்கும் நபிகள் நாயகம் தான் நபி

حَدَّثَنِي يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ وَأَخْبَرَنِي عَمْرٌو أَنَّ أَبَا يُونُسَ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ  رواهم مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! இந்தச் சமுதாயத்திலுள்ள யூதரோ, கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும் கூட நான் கொண்டு வந்ததை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 240

கியாமத் நாள் வரை எச்சரிக்கை செய்பவர்

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآَنُ لِأُنْذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آَلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ [الأنعام/19]

மிகப் பெரும் சாட்சியம் எது?’’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுஎனக் கூறுவீராக! அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்’’ என்று நீர் கூறுவீராக! வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 6 : 19

இந்த குர்ஆன் யாரை எல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் அனைவருக்கும் நபிகளார் தான் இறைத்தூதராக இருந்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதுதான் இறைவனின் கட்டளை.

முஹம்மது நபிக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது

و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْحَكَمِ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ خَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فِي غَزْوَةِ تَبُوكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُخَلِّفُنِي فِي النِّسَاءِ وَالصِّبْيَانِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى غَيْرَ أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ فِي هَذَا الْإِسْنَادِ  رواه مسلم

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை’’ என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம் 4777

3455    حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ فُرَاتٍ الْقَزَّازِ قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ فَالْأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ  رواه البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3455

நபிகளாரே இறைத் தூதர்களில் இறுதியானவர்

இறைத்தூதர்களில் நபிகளார் தான் கடைசித் தூதர் என்பதால் அவர்களுக்கு ஆகிப் (இறுதியானவர்) என்ற பெயரும் இருக்கிறது.

4342 حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَابْنُ أَبِي عُمَرَ وَاللَّفْظُ لِزُهَيْرٍ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ سَمِعَ مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يُمْحَى بِيَ الْكُفْرُ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى عَقِبِي وَأَنَا الْعَاقِبُ وَالْعَاقِبُ الَّذِي لَيْسَ بَعْدَهُ نَبِيٌّ  رواه مسلم

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் முஹம்மத்’ (புகழப்பட்டவர்) ஆவேன். நான் அஹ்மத்’ (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ’ (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்’ (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப்’ (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை’’ என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 4697

நபிமார்களில் முத்திரையானவர்

مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا [الأحزاب/40]

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33 : 40

2145حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ  رواه الترمدي

போலி இறைத்தூதர்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளையும், பொய் நபியான மிர்சா என்பவன் நபி என்பதற்கு காதியானிகள் வைக்கும் ஆதாரங்களையும், அதற்குரிய பதில்களையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதில் பார்க்கலாம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன்  எரிக்க வேண்டும்?  தொடர் 26

இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

قال الغزالي: وفي خبر آخر: “من غش أمتي فعليه لعنة الله والملائكة والناس أجمعين، قيل يا رسول الله، وما غش أمتك، قال: أن يبتدع بدعة يحمل الناس عليها“.

قال العراقي: أخرجه الدارقطني في الأفراد من حديث أنس بسند ضعيف جدا

“எனது சமுதாயத்தில் யார் ஏமாற்றுகின்றாரோ அவர் மீது அல்லாஹ், மலக்குகள், மக்கள் அனைவரின் சாபம் உண்டாகட்டுமாக!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமுதாயத்தின் ஏமாற்றுதல் என்ன?” கேட்கப்பட்டது. “மார்க்கத்தில் ஒரு பித்அத்தை உருவாக்கி அதை நோக்கி மக்களைத் தூண்டுவது” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸை, கல்வியின் ஆபத்துகள் என்ற ஆறாவது பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வருகின்றார்.

ஹாபிழ் இராக்கி அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

அல்அஃப்ராத் என்ற நூலில் மிகவும் பலவீனமான அறிவிப்புத் தொடருடன் அனஸ் (ரலி) வழியாக இமாம் தாரகுத்னீ பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அதில் ”கெட்ட பித்அத்தை உருவாக்கி அதன்படி செயல்படுகின்றாரோ”என்று இடம் பெறுகின்றது.

இப்னு ஸுப்கி, இதற்கு நான் எந்த அறிவிப்புத் தொடரையும் காணவில்லை என்று தெரிவிக்கின்றார்கள்

நூல்: தக்ரீஜுஅஹாதீஸுல்இஹ்யா

விமர்சனம்:

கஸ்ஸாலி கொண்டு வந்திருக்கின்ற மிகவும் பலவீனமான இந்த ஹதீஸ் பித்அத்தை ஒழிப்பதற்குப் பெரிதும் உதவுகின்ற ஓர் அருமையான ஹதீஸாகும். ஆனால் அது மிகவும் பலவீனமான ஹதீஸ் என்பதால் அதைப் பயன்படுத்தும்போது இதை ஆதாரமாகக் காட்டுபவர் புகாரி 1291ன் படி நரகத்தை முன்பதிவு செய்தவராவார்.

قال الغزالي: وقال رسول الله صلى الله عليه وسلم: “إن لله عز وجل ملكا ينادي كل يوم من خالف سنة رسول الله صلى الله عليه وسلم لم تنله شفاعته“.

قال العراقي: لم أجد له أصلا

ரசூல் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு யார் மாறு செய்கின்றாரோ அவர் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையைப் பெற மாட்டார் என்று அல்லாஹ் நியமித்திருக்கும் மலக்கு தினந்தோறும் சொல்லிக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு ரசூல் (ஸல்) கூறினார்கள்.

இவ்வாறு ஒரு ஹதீஸை கஸ்ஸாலி மேற்கண்ட (கல்வியின் ஆபத்துகள்) பாடத்தில் கொண்டு வருகின்றார். இந்த ஹதீஸிற்கு எந்த ஒரு அடிப்படையையும் நான் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்.

இப்னுஸ்ஸுபுக்கி அவர்கள் இதற்கு நான் எந்த அடிப்படையும் காணவில்லை என்று தெரிவிக்கின்றார்கள்.

நூல்: தக்ரீஜ்அஹாதீஸ்இஹ்யா

விமர்சனம்:

இந்த ஹதீஸ் ஒரு வாதத்திற்குச் சரியான ஹதீஸ் என்றாலும் இதைக் கஸ்ஸாலி போன்றவர்கள் குறிப்பிடுவதற்குத் தகுதி கிடையாது. காரணம் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ பித்அத்துகளை நுழைப்பதற்குக் காரணமானவர்களில் அவரும் ஒருவர்.

சூஃபிய்யத் என்ற பெயரில் சுன்னத் என்ற நபிவழிக்கு மாற்றமான பல வழிமுறைகள மார்க்கத்தில் கண்மூடித்தனமாகப் புகுத்தியவர்களில் முன்னோடி யானவர் அவர். பித்அத்திற்கு வக்காலத்து வாங்குகின்ற வக்கீலாகவும் செயல்பட்டவர்.

قال الغزالي: وقال صلى الله عليه وسلم: “عليكم بالنمط الأوسط الذي يرجع إليه العالي، ويرتفع إليه التالي“.

قال العراقي: أخرجه أبو عبيد في غريب الحديث موقوفا على علي بن أبي طالب، ولم أجده مرفوعا

நடுநிலையான பாதையைக் கடைப்பிடியுங்கள். அது, வரம்பு கடந்து மேலே சென்றவர் திரும்புகின்ற பாதையும், கீழே உள்ளவர் மேல் நோக்கி உயர்கின்ற பாதையுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி ஒரு ஹதீஸை மேற்கண்ட (கல்வியின்ஆபத்துகள்) பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வருகின்றார்.

இதை அபூ உபைத் அவர்கள் கரீபுல் ஹதீஸ் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் இதை, நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இல்லாமல், அலீ (ரலி) கூறுவதாகப் பதிவு செய்துள்ளார் என்று ஹாபிழ் இராக்கி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இப்னுஸ்ஸுபுக்கி அவர்களும் ஹாபிழ் இராக்கியைப் போன்றே குறிப்பிடுகின்றார்கள்.

விமர்சனம்:

கல்விக் கடல் என்று சூஃபிஸ சிந்தனைவாதிகள் கஸ்ஸாலியைத் தாங்கிப் பிடிக்கின்றார்கள்.

கடுகளவு அறிவு உள்ளவர்கள் கூட அலீ (ரலி) அவர்களின் கூற்றை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்ல மாட்டார். ஆனால் கடலளவு அறிவுள்ள கஸ்ஸாலி, அலீ (ரலி) சொன்னதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறுகின்றார்.

அதாவது ஒரு வீட்டு மாட்டைப் பிடித்து இன்னொருவர் வீட்டில் கட்டி வைத்திருக்கின்றார். இவர் எப்படி அறிஞராக இருக்க முடியும்? என்று இந்த சூஃபிஸ பேர்வழிகள் சிந்திக்க மறுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஹதீஸ்களை இஹ்யாவில் தாறுமாறாக எழுதித் தள்ளிய கஸ்ஸாலியை கல்விக் கடல், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுகின்றார்கள்.

قال الغزالي: قال صلى الله عليه وسلم: “الشيخ في قومه كالنبي في أمته“.

قال العراقي: أخرجه ابن حبان في الضعفاء من حديث ابن عمر، وأبو منصور الديلمي من حديث أبي رافع بسند ضعيف

கூட்டத்தின் தலைவர் சமுதாயத்தின் நபியைப் போன்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என்று கஸ்ஸாலி ஒரு ஹதீஸை அறிவு, அதன் சிறப்பு, அதன் தன்மை என்ற ஏழாவது பாடத்தில் கொண்டு வருகின்றார்.

இந்த ஹதீஸை இப்னு உமர் (ரலி) வழியாக இப்னு ஹிப்பான் அவர்கள் ”லுஆஃபா”விலும் பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அபூராஃபிஃ வழியாக அபூமன்சூர் தைலமீ அவர்களும் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்

இப்னு ஹஜரும் மற்ற அறிஞர்களும் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதில் உறுதிகொண்டார்கள். இது கண்டிப்பாக முன்னாள் உள்ள அறிஞர்களுடைய சொல்லாகத்தான் இருக்க வேண்டும்.

மக்கள் ஒரு நபியிடத்தில் கல்வி கற்பது போன்றும் ஒழுக்கம் படிப்பது போன்றும் ஜமாஅத் தலைவர் மக்களிடம் நபியைப் போன்றிருக்கின்றார் என்று வாசகம் அமைந்திருக்கக் கூடும். அது தான் இப்படி மாறிப் போயிருக்கலாம். எப்படி இருந்தாலும் இது பொய்யான செய்தியாகும் என இமாம் சகாவி, தனது மகாஸித் என்ற நூலில் தெரிவிக்கின்றார்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிடம் இந்த ஹதீஸ் பற்றி கேட்கப்பட்டபோது இதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்.

قال الغزالي: وقال صلى الله عليه وسلم: “يا أيها الناس اعقلوا عن ربكم وتواصوا بالعقل تعرفوا ما أمرتم به، وما نهيتم عنه، إلى أن قال: وأن الجاهل من عصى الله تعالى وإن كان جميل المنظر، عظيم الخطر، شريف المنزلة، حسن الهيئة“.

قال العراقي: أخرجه داود بن المجبر أحد الضعفاء في كتاب العقل من حديث أبي هريرة وهو في مسند الحارث بن أبي أسامة عن داود

மக்களே! உங்களுடைய இறைவனை அறிவால் அறிந்து கொள்ளுங்கள். அறிவு மூலம் ஒருவொருக்கொருவர் அறிவுரை வழங்குங்கள். நீங்கள் எதை ஏவப்பட்டிருக்கின்றீர்கள், எதை விட்டும் தடுக்கப் பட்டிருக்கின்றீர்கள் என்று விளங்கிக் கொள்வீர்கள். கவர்ச்சிமிகு தோற்றமானவனாகவும், பிரமாதமான சிந்தனை உள்ளவனாகவும் சிறந்த அந்தஸ்து உள்ளவானாகவும் உடல்வாகு அழகானவனாகவும் இருந்தாலும் அறிவிலி அல்லாஹ்வுக்கு மாறுசெய்து விட்டான். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இவ்வாறு கஸ்ஸாலி இதே பாடத்தின் கீழ்கொண்டு வருகின்றார்.

தாவூத் பின் முஜ்பிர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர். அவரே இந்த ஹதீஸை அறிவு என்ற பாடத்தில் அபூஹுரைரா (ரலி) வழியாக பதிவு செய்துள்ளார். இந்தப் பாடம் தாவூத் வழியாக முஸ்னத் அல்ஹாரிஸ் பின் உஸாமா என்ற நூலில் வந்துள்ளது என ஹாபிழ் இராக்கி கூறுகின்றார்.

قال الغزالي: ومنه قوله صلى الله عليه وسلم: “إن المسجد لينزوي من النخامة كما تنزوي الجلدة على النار“.

قال العراقي: لم أجد له أصلا.

நெருப்பினால் தோல் சுருண்டு விடுவது போன்று சளியினால் பள்ளிவாசல் சுருண்டு விடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

கஸ்ஸாலி இந்த ஹதீஸை நேர்வழியின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்தல் என்ற பாடத்தில் கொண்டு வருகின்றார்.

ஹாபிழ் இராக்கி அவர்கள் இதற்கு நான் எந்த அடிப்படையையும் காணவில்லை என்று குறிப்பிடுகின்றார்.

قال الغزالي: وقال صلى الله عليه وسلم فيما يروي في بعض الأخبار: “الإيمان يزيد وينقص“.

قال العراقي: أخرجه ابن عدي في الكامل، وأبو الشيخ في كتاب الثواب من حديث أبي هريرة، وقال ابن عدي باطل فيه محمد بن أحمد بن حرب الملحي يتعمد الكذب

ஈமான் கூடுகின்றது குறைகின்றது என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி ஒரு ஹதீஸை கஸ்ஸாலி கொள்கையின் சட்டங்கள் என்ற நான்காவது பிரிவில் கொண்டு வருகின்றார்.

அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படுகின்ற இந்த ஹதீஸை இப்னு அதீ அவர்கள் காமில் என்ற நூலிலும் அபுஷ்ஷைக் கிதாபுஸ்ஸவாப் என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸின் தொடரில் முஹம்மத் பின் அஹ்மத் பின் ஹர்ப் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் திட்டமிட்டு பொய் சொல்பவர்.

அதனால் இது பொய்யான ஹதீஸ் ஆகும் என்று இப்னு அதீ கூறுவதாக ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்.

ஈமான் கூடும் குறையும் என்ற வார்த்தையை நபிகள் நாயகம் நேரடியாகச் சொன்னதாகத் தான் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை.

ஆனால் ஒருவருக்கு ஈமான் கூடும், குறையும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பல இருக்கின்றன. கஸ்ஸாலி குறிப்பிடுகிற இந்த வாசகத்தில் எந்த ஹதீசும் இல்லை.

இந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகப்பெரும் கவனத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

قال الغزالي: قال صلى الله عليه وسلم: “إن القرآن نزل بحزن، فإذا قرأتموه فتحازنوا“.

قال العراقي: أخرجه أبو يعلى وأبو نعيم في الحلية من حديث ابن عمر بسند ضعيف

குர்ஆன் கவலையை அடிப்படையாகக் கொண்டு இறங்கியது. எனவே, ஓதும் போது கவலை கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படியொரு ஹதீஸை கஸ்ஸாலி குர்ஆன் ஓதுவதின் ஒழுங்குகள் என்ற தலைப்பின் கீழ் இரண்டாவது பாடத்தில் கொண்டு வருகின்றார்.

இப்னு உமர் (ரலி) வழியாக பலவீனமான தொடரைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற இந்த ஹதீஸை அபூயஃலாவும் (முஸ்னத்அபீயஃலா ஹதீஸ் எண்; 689) அபூநயீம், ஹில்யாவிலும் பதிவு செய்துள்ளார்கள். இவ்வாறு ஹாபிழ் இராக்கி கூறுகின்றார்கள்.

இந்தச் செய்தியில் இஸ்மாயீல் பின் ராஃபிஃ இடம்பெறுகின்றார். இவரைப் பல அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் அஹ்மத், நஸாயீ, தாரகுத்னீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்கள்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:1 பக்கம்: 258

—————————————————————————————————————————————————————-

பாசமிகு தூதர் முஹம்மது(ஸல்)

முஹம்மது அப்துல்லாஹ், இஸ்லாமியக் கல்லூரி மாணவர்

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

அல்குர்ஆன் 9:128

திருக்குர்ஆனையே தமது வாழ்க்கையாகக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக சமுதாயத்தின் மீது பேரன்பு கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பை வெளிப்படுத்திய பாசமிகு நிகழ்வுகள் சிலவற்றை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

பாசத்திற்குப் பதவி முக்கியமில்லை

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆவதற்கு முன்பே மக்களின் மீது அன்பு கொண்டவர்களாக இருந்துள்ளார்கள் என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆயிஷா (ரலி) கூறினார்கள்:

…..நபி (ஸல்) அவர்கள் இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி)யிடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்என்றார்கள்.

நூல்:  புகாரி 3

பாசத்திற்கு பதவி தடையில்லை

மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை அறுவடை செய்யும் (நாள்) வரை எனக்குக் கடன் கொடுத்திருந்தார். ரூமா கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. ஆகவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப் போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. ஆகவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டு வரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்கடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம் என்று சென்னார்கள். நான் எனது பேரீச்சந் தோப்பில் இருந்த போது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர் அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன் என்று கூறலானார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சம் மரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அந்த யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்து விட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு (நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே ஜாபிர்? என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கு அங்கே படுக்கை தயார் செய் என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு, எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்து விட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு, ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உனது கடனை) அடைப்பாயாக! என்று சொன்னார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (எனது கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதமிருந்தது. நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நானே சாட்சியம் அளிக்கின்றேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 5443

இதில் சாதாரண ஏழை நண்பரின் மீதுள்ள அரசனின் இத்தகைய பாசம் ஓர் அசாத்தியம்.

பாதிப்பு ஏற்படுத்தியவருக்கும் பாசம் காட்டிய நபி

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப்என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும், அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் சரிஎன்று கூறினார். உடனே, ஆயினும், இந்த மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)என்று சொன்னேன்.

நூல்: புகாரி 3231

நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பதற்காக பாதிப்பை ஏற்படுத்தியவருக்கும் பாசத்தைக் காட்டினார்கள்.

பாசத்திற்குப் பகட்டில்லை

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலைமாட்டில் அமர்ந்து, ‘இஸ்லாத்தை ஏற்றுக் கொள்!என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், ‘அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படுஎன்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

நூல்: புகாரி 1356

இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப் பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.

அல்குர்ஆன்:18:6

பாசமிகு தாய்ப் பறவையின் கதகதப்பான அரவணைப்பில் கிடக்கும் குஞ்சுகள் தாய்ப் பறவை இறந்துவிட்டால் எவ்வாறு தவியாய்த் தவிக்குமோ அதுபோன்ற தவிப்பிற்கு அவர்கள் உள்ளாகிறார்களே! மக்கள் நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்று பதறுகின்றார்களே! இது என்ன மாயம்? கவலையால் மாய்த்துக் கொள்ளும் அளவுக்கான இப்பாசத்திற்கு இணையில்லை இவ்வுலகிலே!

பிரதிபலனை எதிர்பார்க்கவில்லை

இறைவனே! இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழிகெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்என்று இப்ராஹீம் நபி கூறியதாகக் குறிப்பிடும் குர்ஆன் வசனத்தையும், (14: 36) “அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்)என்று ஈஸா நபி கூறியதாக குறிப்பிடும் வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். பிறகு தம் கையை உயர்த்தி, “இறைவா! என் சமுதாயம்! என் சமுதாயம்என்று கூறி அழுதார்கள். (அப்போது) இறைவன் அதை அறிந்த நிலையிலே, “ஜிப்ரீலே முஹம்மதிடம் சென்று உம்மை அழச் செய்தது எது? என அவரிடம் கேளுங்கள்என்று கூறினான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து அதைக் கேட்டார்கள். நபி (ஸல்) விஷயத்தைக் கூறினார்கள். (அப்போது) ஜிப்ரீலே முஹம்மதிடம் சென்று, “நாம் உம் சமுதாயம் விஷயத்தில் உம்மைக் கண்ணியப்படுத்துவோம், உம்மை மறக்க மாட்டோம்என்று சொல்லுங்கள் என அல்லாஹ் கூறினான்.

நூல்: முஸ்லிம் 520

முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாளனின் உற்ற நண்பராவார்என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், ‘அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும், அவனுடைய வார்த்தையும் ஆவார்என்று சொல்வார்கள்.

உடனே, மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய்ப் பாருங்கள்என்று சொல்வார்கள்.

உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், ‘நான் அதற்குரியவன் தான்என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் விழுவேன். அப்போது முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்என்று சொல்லப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்என்பேன். அப்போது, ‘செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும் பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்என்று கூறப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் அணுவளவுஅல்லது கடுகளவுஇறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்என்று சொல்லப்படும்.

நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், ‘என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்என்பேன். அதற்கு அவன், ‘செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன்.

நூல்: புகாரி 7510

சமுதாயத்தின் மீது தாம் அன்பு கொண்டிருந்ததைப் போன்றே மக்கள் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5997

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.

 அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 13

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியேஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5122

—————————————————————————————————————————————————————-

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று”

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி மங்கலம்

ஊர் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு

நபி (ஸல்) அவர்கள் நஜ்த்பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபாகுலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்பவரைக் கைது செய்து வந்தார்கள். பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள். மூன்று நாளுக்குப் பிறகு அவர் நபிகளாரால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தைப் பாருங்கள்.

ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லைஎன்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்என்றும் நான் உறுதி கூறுகிறேன்’’ என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்’’ என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’’ என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதி அளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறி விட்டாயா?’’ என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (4372)

”நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை எனது நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது” என்ற வார்த்தையை உற்றுக் கவனியுங்கள்.

இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதா? ஊர் ஜமாஅத்தாக இருந்தாலும் மார்க்கத்திற்குப் புறம்பான செயல்களுக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்ல நிறைய பேருக்கு தைரியம் இல்லை.

என்னதான் இருந்தாலும் ஊர் ஜமாஅத்தை விட்டும் விலகி விடக்கூடாது என்று கெட்டியாக ஒட்டிக் கிடக்கிறார்கள். இணைவைப்பு, பித்அத் குறித்து அறிந்திருந்தும் ஊர்ப் பற்று என்ற பெயரில் கந்தூரி விழா, மவ்லூது, மீலாது போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள்.

தடம்புரள வைக்கும் ஊர்ப்பற்று

ஊர்களை மையமாக வைத்துப் பெரும் சண்டைகள் நடக்கின்றன. மூடநம்பிக்கைகள், பெரும்பாவங்கள் குறித்துப் பிரச்சாரம் செய்தால், கருத்துச் சொன்னால் வெளியூர்காரன் பேசக் கூடாது என்கிறார்கள். உள்ளூர்க்காரர்கள் அடித்துக் கொள்வோம், சேர்ந்துக் கொள்வோம்; நீங்கள் தலையிடக் கூடாது என்கிறார்கள்.

எது சரியானது என்பதைக் காட்டிலும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதையே கவனிக்கிறார்கள். இப்படி மதீனாவாசிகள் கேள்வி கேட்டிருந்தால் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்திருக்குமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

நபிகளாரிடம் பயிற்சி பெற்ற நபித் தோழர்களையே ஊர் நினைப்பு தடுமாற வைத்துள்ளது.

நபியவர்கள் இறந்துபோன தருணம், அவர்கள் இறக்கவே இல்லை எனும் கருத்தில் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆனில் இருக்கும் 39:30 மற்றும் 3:144 ஆகிய இரு வசனங்களை ஓதிக்காட்டி. நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைப் புரிய வைத்தார்கள். அதன் பிறகு நடந்த நிகழ்வைக் காண்போம்.

உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மி அழுதார்கள். அன்சாரிகள் (தமது) பனூ சாஇதாசமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி (தம் தலைவர்) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “ “எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)’’ என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூபக்ர், உமர் பின் கத்தாப், அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூபக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன்’’ என்று கூறி வந்தார்கள்.

பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், “(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாக இருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர் களாக இருங்கள்’’ என்று சொன்னார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் பின் முன்திர் (ரலி) அவர்கள், “இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் உங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்)என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்களே தலைவர்களாக இருப்போம். நீங்கள் அமைச்சர்களாக இருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவே, உமர் பின் கத்தாப், அல்லது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’’ என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இல்லை; நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்’’ என்று சொல்லிவிட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் : புஹாரி 3667, 3668

மக்காவைச் சேர்ந்த முஹாஜிர்களுக்கு ஒரு தலைமை, மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளுக்கு வெறொரு தலைமை என்று இந்தச் சமூகம் பிரிந்து சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டது. அவர்கள் சுதாரித்துக் கொண்டதால் நிலைமை சீரானது. யோசித்துப் பாருங்கள்! இதற்குக் காரணம், நம் ஊர்; நம் ஊர்வாசி; நமக்கான அரசு என்று சிலர் யோசித்ததின் விளைவு என்பதை மறுக்க முடியுமா?

நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டுமே தவிர, தவறு செய்தவர் நமது ஊரைச் சார்ந்தவர் என்பதால், அவருக்குத் துணைபோகக் கூடாது. ஊர் மோகம் கொண்டு நிதானத்தையும், நியாயத்தையும் இழந்துவிடக் கூடாது. அது நம்மைத் தடம்புரளச் செய்துவிடும்; வழிகெடுத்து விடும்.

ஊர் வழக்கத்தை ஒழித்த இஸ்லாம்

ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் பல அராஜகங்கள் நடக்கின்றன. இன்றும் பிறமத மக்கள் வாழும் ஊர்களில் தாழ்ந்த சாதி மக்களுக்கென ஊரில் ஒரு பகுதியை ஒதுக்கி இருப்பார்கள். ஊரைப் பிரித்து வைத்திருப்பார்கள். இவர்கள் மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேற முடியாது.

இது போன்ற நடவடிக்கை மக்கத்து முஷ்ரிக்குகளிடம் வேறு வடிவில் இருந்தது. ஹஜ்ஜின் போது மக்கள் அனைவரும் ஒன்பதாம் நாள் அன்று அரஃபா திடலில் தங்குவது வழக்கம். இதற்கு மாறாக, உயந்த குலம் என்று சொல்லப்பட்ட குறைஷிகள் மட்டும் முஸ்தலிபா எனும் இடத்தில் தங்குவார்கள். காரணம், முஸ்தலிபா என்பது கஅபாவின் எல்லைக்கு உள்ளேயும், அரஃபா என்பது அதற்கு வெளியேயும் அமைந்திருக்கும். இது ஒதுக்கப்பட்ட மக்களுக்கான இடமாகக் கருதப்பட்டது.

இந்த ஊர் வழக்கத்தை இஸ்லாம் உடைத்து எறிந்தது. ஹஜ் கிரியைகள் செய்யும் அனைவரும் ஒன்பதாம் நாள் “அரஃபா’ திடலில் இருக்க வேண்டும் என்று 2:199 வசனத்தின் மூலம் இஸ்லாம் பிரகடனம் செய்தது. சமத்துவத்தை நிலைநாட்டியது.

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும், அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் – புனித எல்லையை விட்டு வெஜயேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) உறுதிமிக்கவர்கள்எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கி வந்தார்கள். இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்’’ எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி 4520

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! ஊர் வழக்கம், ஊர்க் கட்டுப்பாடு என்ற தோற்றத்தில் மார்க்க நெறிமுறைகளைத் தகர்க்கும் வகையில் எந்தவொரு செயல் இருப்பினும் அதற்குக் கட்டுப்படாதீர்கள். அவற்றை உதைத்துத் தள்ளுங்கள். அந்தச் சட்டங்களுக்கு ஒருபோதும் உடந்தையாகி விடாதீர்கள்.

ஊர்ப் பற்றினால் ஏற்படும் ஏனைய தீங்குகளை இன்ஷா அடுத்த இதழில் தொடரும்…

—————————————————————————————————————————————————————-

ஹுஸைன் மவ்லிது ஓர் ஆய்வு தொடர்-10

ஐங்கடவுள்களை ஆராதிக்கும் ஐந்தடிக் கவிதை மாலை

ஹுஸைன் மவ்லிதில் ஒன்பதாவது ஹிகாயத்…

இதில் இந்தக் கவிஞர் உரை நடையில் உளறியிருக்கும் ஓர் ஆதாரமற்ற அபத்தம் இதோ:

தலைவர் ஹுசைன் ஹிஜிரி 61,  முஹர்ரம் மாதம் ஆஷூரா (பத்தாம் நாள்) வெள்ளியன்று கொல்லப்படுகின்றார். அப்போது அவருக்கு வயது 65. இப்ராஹீம் (அலை) அவர்கள் நம்ரூத் என்பவனால் நெருப்பில் தூக்கி எறியப்பட்ட நாளில் கிரகணம் ஏற்பட்டது போன்று  ஹுசைன் மரணம் அடைந்த நாளில் சூரியன் கிரகணம் ஏற்பட்டது. இது  வழக்கத்திற்கு மாற்றமான நிகழ்வு என்று வான சாஸ்திர நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கஸ்ஸாலியும் ஏனையோரும் ஹுசைன் (ரலி)யின் கொலைச் சம்பவத்தை அறிவிப்பது கூடாது; அது தடை செய்யப்பட்டது என்று கூறியுள்ளதால் நாம் அந்தச் சம்பவத்தைக் கூறாமல் மவ்னம் காத்து விட்டோம்.

நபி (ஸல்) அவர்களுக்கும் கனீமத் (போரில் கிடைத்த வெற்றி) பொருள் விருப்பமானது; தர்மப் பொருட்கள் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும்  தடை என்பதால் அன்னார் மீது நான் தொடுக்கும் புகழ் மாலைப் பூக்களை வெற்றிப் பொருளாகக் கருதி  அவற்றை ஐந்தடி பாக்களாக்கி அன்பளிப்பாக வழங்குகின்றேன். அந்த ஐந்தடி கவிதைகளை அவர்களுக்கு காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன். இதன் பலனாக நபி (ஸல்) அவர்களின் வாசலில்  பாவிகள் அடைக்கலம் புகின்ற அந்நாளில் வெற்றி பெற விரும்புகின்றேன். அவர்களின் இரு பேரர்களை  ஒரு பொருட்டாக்கி -வஸீலாவாக்கி- ஏற்றம் பெற எண்ணுகின்றேன்

இது உரை நடையில் இந்தக் கவிஞன் உளறிய உளறல். பொதுவாக ஷியாக்கள் ஹுசைன் (ரலி)யை புகழ்வதிலும், போற்றுவதிலும் வரம்புக் கடந்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.  அதற்கு ஓர் எடுத்துக் காட்டுத் தான் சூரிய கிரகண விவகாரம்.

ஹுசைன்  காலத்தில் கிரகணம் பிடித்ததையே நம்மால் ஜீரணிக்க  முடியாத போது இப்ராஹீம் நபி காலத்து கிரகணத்தை நாம் எப்படி ஜீரணிக்க முடியும்?   எந்த ஆதாரமும் இல்லாத இந்த வானளாவியப் பொய்க்கு  வான சாத்திர நிபுணர்களின் வாய்க்கு வந்தபடியான  வாக்கு மூலங்கள் வேறு!  வான சாஸ்திரங்கள் என்றாலே பொய்கள் நிறைந்த போலி ஜோசியங்களின் களஞ்சியங்கள் என்பது உலகறிந்த விஷயம். அவர்களைத் தான்  இந்த ஷியாக் கவிஞர்   துணைக்கு கூப்பிட்டுக் கொள்கின்றார்.

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் மகன் இப்ராஹீம் மரணித்த போது இது போன்ற பேச்சுக்கள் மக்களிடம்  உலாவின. ஊர் முழுக்கப் பரவின. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனடியாக  அந்த வாசலையே அடைத்தனர்.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத் தான் கிரகணம் ஏற்பட்டது’’ என்று பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவ தில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் பிரகாசம் வரும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்!’’ என்று சொன்னார்கள்.

 அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)

நூல் : புகாரி எண்: 1060

இந்த ஹதீஸில் யாருடைய மரணித்திற்காகவும் சூரிய, சந்திரன் மறையாது என்று கூறி  மக்களின் மூட நம்பிக்கைக்கு மரண அடி கொடுக்கின்றார்கள். அவ்வாறு கொடுக்கவில்லையென்றால், இறந்த மகனான இப்ராகீமுக்கும், தந்தையான முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் தெய்வீகத் தன்மையைக் கொடுத்து அவர்களைக் கடவுளாக்கி அழகு பார்த்திருப்பார்கள். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அணை போட்டுத் தடுக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடுத்த அந்தக் காரியத்தைத் தான் இந்தக் கேடு கெட்ட ஷியா கவிஞர்  ரசனையாக ரசித்துக் கூறுகின்றார். இதன் மூலம் தான் குரு மகா சன்னிதானமாகக் கருதுகின்ற ஹுசைன் (ரலி) மீது கொண்டிருக்கின்ற கள்ளக் கடவுள் பக்தியை இந்த உரை நடைப் பகுதியில் போட்டு உடைத்து, தன்னை ஒரு  ஷியா என்று  பக்காவாகவும், பகிரங்கமாகவும் அடையாளப்படுத்திக் கொள்கின்றார்.

நபியின் பேரர்களைக் கொண்டு இவர் தேடப் போகின்றேன் என்று சொல்கின்ற இந்த வஸீலாவிற்கு,  சென்ற இதழில் சமத்தையான சம்மட்டி அடி கொடுத்துள்ளோம். அதனால் இங்கு அதை திரும்பக் கூறவில்லை. இப்போது இவர் உரை நடைப் பகுதியில் கூறியபடி ஐந்தடி பாக்களில் அள்ளி விட்டிருக்கின்ற அபாயகரமான நச்சுக் கருத்துகளைப் பார்ப்போம்.

يا أهل بيت النبي ياسول من فقرا

سبطي رسول كريم راحم الفقرا

أخذا بكف عبيد آثم حقرا 

فأحسناه كما إحسانكم وقرا

ممن براكم من الزهرا علت قمرا

நபியின் குடும்பமே! ஏழைகளின் நாட்டமே!  ஏழைகளுக்கு இரக்கம் காட்டுகின்ற சங்கைமிகு தூதரின் இரு பேரர்களே!  கேவலப்பட்ட இந்தப்  பாவியான அடிமையின் கையைப் பிடியுங்கள்! இவனுக்கு நீங்கள் உதவுங்கள்! உங்கள் உதவிக்கு ஒரு மரியாதை உண்டு! ஏனென்றால்,  நீங்கள் வான் மதியான (ஃபாத்திமா எனும்) பெண்மணியிடமிருந்து உதயமானவர்கள்!

ஏழைகளின் நாட்டம் என்றும், நபி (ஸல்) அவர்கள் ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவர்கள் என்றும் வர்ணனை செய்வதிலிருந்து இந்தக் கவிஞன் நபியின் குடும்பத்தாரிடம் உதவி என்ற பெயரில் காசு பணத்தைத் தான் கோருகின்றார் என்று  இந்தக் கவிதை அடிகளை படிப்பவர் எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  பொதுவாக எல்லா மவ்லிதுகளின் பாடலாசிரியர்கள், தாங்கள் யாரைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் ஆக்கி கவிதை மாலை தொடுக்கின்றார்களோ அவர்கள் அனைவருமே அவர்களிடம் காசு பணத்தைக் கேட்காமல் இருப்பதில்லை. அவர்களைப் போன்றே இந்தக் கவிஞனும் ஹசன், ஹுசைன் (ரலி) ஆகியோரிடத்தில் காசு பணத்தைக் கேட்கின்றார்.

இவ்வாறு கேட்பதற்கு ஏற்றவாறு, முதலில், நபியின் குடும்பத்தாரே வசதியிலும், வளத்திலும் இருந்தார்களா?

அடுத்து, நபி (ஸல்) அவர்களும், அவர்கள் குடும்பத்தாரும் வறுமையைப் போக்குபவர்களாக இருந்தவர்களா? என்ற  இரண்டு விஷயங்களை நாம் இங்கு பார்க்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள், அவர்களது குடும்பத்தார்களின் வாழ்க்கையைப் பார்ப்பவர்களுக்கு அவர்களின் வறுமை எந்த அளவுக்கு அவர்களை வாட்டி எடுத்தது என்று தெளிவாகப் புரிவது மட்டுமல்ல; அவர்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்து விடும். அதற்கு இதோ சில எடுத்துக் காட்டுக்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 5374

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5383

நபி (ஸல்) அவர்கள் உலகத்தை விட்டுப் பிரிகின்ற வரை மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை என்று இந்த ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது போர்க் கவசம் ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “இரும்புக் கவசம்‘’ என்றும் இன்னோர் அறிவிப்பில், “இரும்புக் கவசம் ஒன்றை யூதரிடம் அடகு வைத்தார்கள்’’ என்றும் இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2916

இறுதி நபி (ஸல்) அவர்கள் இறுதியாகப் பிரிகின்ற வரை வறுமை அவர்களை வாட்டி வதைத் திருக்கின்றது. ஆட்டி அலைக் கழித்திருக்கின்றது.

ஃபாத்திமா ரலி) ஷியாக்களால் கடவுளாகவும், கருணை சிந்தும் ரட்சகியாகவும் பார்க்கப்படுபவர்; பாவிக்கப்படுபவர்.  அவர்களும் வறுமையில் தான் உழன்றார்கள்.  அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கு ஒரு பணியாளர் கூட கிடையாது.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா, நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப் போனோம். அவர்கள், “நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்’’ என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும், ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? “நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போதுஅல்லது உங்கள் விரிப்புக்குச் செல்லும்போதுமுப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்‘’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல்: புகாரி  5361

நபி (ஸல்) தமது அருமை மகள் ஃபாத்திமா (ரலி) மீது அதிகமான அன்பும், பாசமும் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபாத்திமா என்னில் ஒரு பகுதி யாவார். எனவே, அவருக்குக் கோப மூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவர் ஆவார்.

இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 3714

 அப்படிப்பட்ட மகளார் ஒரு பணிப்பெண்ணை வேண்டிக் கேட்கும் போது நபி (ஸல்) அவர்களால் அதைக் கூட கொடுக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இப்படிப்பட்ட வறுமையில் தான் தங்களது வாழ்நாள் முழுவதும் உழன்று கொண்டிருந்தார்கள். இது எதை உணர்த்துகின்றது?  நபி (ஸல்) அவர்கள்  தமது வறுமையைப் போக்கிக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதைத் தான் உணர்த்துகின்றது.

ஹசன், ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் பெரிய செல்வச் சீமான்களாக வாழவில்லை என்பதைத் தான் வரலாற்றில் நாம் பார்க்க முடிகின்றது. அதனால் ஹசனும், ஹுசைனும் தங்களது வறுமை தீர்த்துக் கொள்ளும் நிலையில் இல்லாத போது அடுத்தவர்களின் வறுமையைத் தீர்க்க முடியும் என்பது  இந்த ஷியாக் கவிஞருக்கு புரியவில்லை.  இதற்குக் காரணம் இஸ்லாமியக் கடவுள் கொள்கையில் இவருக்கு ஏற்பட்டிருக்கும் கோளாறு தான்!

அதைத் தான் இங்கு இரண்டாவது விஷயமாகப் பார்க்கப் போகின்றோம்.

மக்கா காஃபிர்களின் பக்கா நம்பிக்கை

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?’’ என்று கேட்பீராக! அல்லாஹ்என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா’’ என்று நீர் கேட்பீராக!

அல்குர்ஆன் 10:31

உணவு அளிப்பவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை மக்கத்து காஃபிர்களிடம் இருந்துள்ளது. ஆனால் இது இந்த ஷியாக் கவிஞரிடம் இல்லை.

பிற தெய்வங்களுக்கு அறவே சக்தி இல்லை

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

அல்குர்ஆன் 30:40

இந்த வசனம் உணவு வழங்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே  தவிர வேறு யாரிடமும் இல்லை என்பதை பிரகடனப்படுத்துகின்றது. ஆனால் இந்த கவிஞரோ நபி (ஸல்) அவர்களுக்கும், அன்னாரின் குடும்பத்தாரான அஹ்லுல் பைத்துக்கும் இருக்கின்றது என்று வாதிடுகின்றார்.

விரித்தும் குறைத்தும் வழங்குபவன் அவனே!

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 13:26

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:30,31

உலகில் ஒரு சாரார் வசதிமிக்கவர்களாகவும், மற்றொரு சாரார் வசதியில்லாதவர்களாகவும் வாழ்கின்றனர். வசதியில்லாத ஒவ்வொருவரும் தானும் எப்படியும் ஒரு பணக்காரராக ஆகி விடவேண்டும் என்று துடிக்கின்றனர். மிக ஒரு சிலரைத் தவிர  அவர்களால் அவ்வாறு ஆக முடிவதில்லை. அந்த ஒரு சிலர் செலவந்தர்களாகும் போது மற்ற சில பணக்காரர்கள் ஏழைகளாகி விடுகின்றனர். படி அளப்பது அல்லாஹ் தான் என்பதை  இது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணர்த்துகின்றது.

நபிக்கு உணவளிப்பதும் நாயன் அல்லாஹ் தான்

உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

அல்குர்ஆன் 20: 132

இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்களை நோக்கி உனக்கு  உணவளிப்பவன் நான் தான் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.

அல்குர்ஆன் 15:20

இந்த வசனத்தின் படி உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவன் தான் உணவளிக்கின்றான் என்ற பொதுப் பட்டியலில் நபி (ஸல்) அடங்கி விடுகின்றார்கள். அதனால் நபி (ஸல்) அவர்களுக்கென்று தனியாக, குறிப்பாக உனக்கு உணவளிக்கின்றேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும், இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமே  இப்படி கையேந்திக் கேட்கின்ற கண்மூடித்தனமான கூட்டம் உருவாகும் என்று வல்ல நாயன் அறிந்திருந்ததால் தான் இப்படியொரு நெற்றியடியான வார்த்தையைப் பயன்படுத்துகின்றான் என்று நம்மால் மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அனைத்தையும் அறிந்த அந்த ஆற்றல்மிகு அறிவாளனுக்கு அனைத்துப் புகழும்!

இதுவரை நாம் கவிஞரின் ஐந்தடிக் கவிதையில் அவர் தூவிய இணை வைப்பெனும் கந்தகப் பொடிக்கு சந்தேகமற்ற விளக்கத்தைப் பார்த்தோம். இப்போது அவரது அடுத்த கந்தகம் நிறைந்த  ஐந்தடிகளை அடுத்த இதழில்  பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

“அருள்மறை வசனங்களின் சிறப்புகளும் அருளப்பட்ட காரணங்களும்”

அபூ அம்மார்

மனிதகுலத்திற்கு நேர்வழி காட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்துவதற்காகவும், சத்தியம் எது? அசத்தியம் எது? என்று பிரித்துக் காட்டுவதற்காகவும் திருமறைக்குர்ஆன் அருளப்பட்டது. கடந்தகால வரலாற்று நிகழ்வுகளையும், நிகழ்காலத்திற்கான தீர்வுகளையும், எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் திருமறைக் குர்ஆன் உள்ளடக்கியுள்ளது.

ஓரிறைக் கொள்கையின் முக்கியத்துவத்தையும், தூதுத்துவத்தின் அவசியத்தையும், மனித வாழ்விற்குத் தேவையான சட்டங்களையும், சொர்க்கம் பற்றிய நற்செய்திகளையும், நரகம் பற்றிய எச்சரிக்கைகளையும் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

திருமறைக் குர்ஆனின் பெரும்பாலான வசனங்கள் மேற்கண்ட நோக்கத்திற்காகத்தான் அருளப்பட்டன. அதே நேரத்தில் நபித்தோழர்கள், நபியோடு வாழ்கின்ற காலகட்டத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன. அந்த நிகழ்வுகள் தொடர்பாகப் பல்வேறு வசனங்கள் அருளப்பட்டன. நபித்தோழர்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட பிரச்சனைகள் ஏற்படும் போது அது தொடர்பாக மார்க்கச் சட்டங்களை தெளிவு படுத்தியும் இறைவசனங்கள் அருளப்பட்டன. இவ்வாறு ஒரு வசனம் அருளப்படுவதற்கான நிகழ்வையே “அருளப்பட்டதற்கான காரணம்” என்று குறிப்பிடுவர்.  இறைவசனங்கள் அருளப்பட்டதற்கான காரணங்களை இஸ்லாமிய வழக்கில் ”அஸ்பாபுன் நுசூல்” என்ற பெயரால் குறிப்பிடுவார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்கின்ற காலகட்டத்தில் வெவ்வேறான பல்வேறு பிரச்சினைகள், நிகழ்வுகள் நடைபெற்றிருக்கும். இவ்வனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே வசனம் தீர்வாக அருளப்படும். இந்நேரத்தில் ஒரு வசனத்திற்கே பல்வேறு காரணங்கள் கூறப்படும்.

அது போன்று ஒரு சம்பவத்தின் பின்னணியில் அது தொடர்பாகப் பல்வேறு வசனங்கள் அருளப்பட்டிருக்கும். இப்போது அது தொடர்பாக இறங்கிய அனைத்து வசனங்களுக்கும் அந்த ஒரு சம்பவமே காரணமாக அமையும்.

திருமறைக் குர்ஆனின் எல்லா வசனங்களும் காரணங்களின் பின்னணியில் அருளப்பட்டவை அல்ல. எனவே அனைத்து வசனங்களுக்குமான காரணங்களை யாராலும் கூற முடியாது. குறைவான வசனங்களே காரணங்களின் பின்னணியில் அருளப்பட்டுள்ளன.

வசனங்கள் அருளப்பட்டதின் காரணங்களையும், சூழ்நிலைகளையும், காலகட்டத்தையும் நாம் அறிந்து கொள்ளும் போது அவ்வசனங்களின் தெளிவான பொருளை நாம் அறிந்து சரியான வழியில் நடைபயில முடியும்.

இன்றைக்கு வழிகேடுகள் தோன்றுவதற்கு முக்கியமான காரணங்களில், வசனங்கள் அருளப்பட்டதின் காரணங்களை அறியாமல் இருப்பதும் ஒன்றாகும்.

எனவே நாம் இந்தத் தொடரில் எந்தெந்த வசனங்கள் குறிப்பிட்ட நிகழ்வின் பின்னணியில் அருளப்பட்டதோ அந்த வசனங்களையும் அந்த நிகழ்வுகளையும் காணவிருக்கின்றோம். அத்துடன் பல்வேறு வசனங்களுக்குரிய சிறப்புகளையும், அதற்கான விளக்கத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். அவற்றையும் நாம் இத்தொடரில் காணவிருக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ்! இத்தொடரை இறுதிவரை கொண்டு செல்லவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையில் ஆரம்பம் செய்கின்றேன். இறைவன் அவனுடைய திருமுகத்தை நாடிச் செய்கின்ற நற்காரியமாக இதனை ஆக்கி அருள்புரிய வேண்டும்.

திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயத்திலிருந்து இறுதிவரை எந்தெந்த அத்தியாயத்திற்கும், வசனங்களுக்கும் நபியவர்கள் சிறப்புகளையும், விளக்கங்களையும் கூறியுள்ளார்களோ அவற்றையும், அது போன்று எந்தெந்த வசனங்களெல்லாம் காரணத்தின் பின்னணியில் அருளப்பட்டுள்ளதோ அவற்றையும் நாம் காணவிருக்கின்றோம்.

சூரத்துல் ஃபாத்திஹாவின் சிறப்புகள்

நபித்தோழர்களால் வரிசைப்படுத்தப்பட்ட திருமறை அத்தியாயங்களின் முதலாவது அத்தியாயமாக ”சூரத்துல் ஃபாத்திஹா” இடம் பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் அருளப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் ஏதும் கிடையாது. ஆனால் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான சிறப்புகள் ஹதீஸ்களில் வந்துள்ளன. இந்த அத்தியாயத்திற்குப் பல பெயர்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

حدثنا عبد بن حميد حدثنا أبو علي الحنفي عن ابن أبي ذئب عن المقبري عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم الحمد لله أم القرآن وأم الكتاب والسبع المثاني

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்ஹம்து லில்லாஹ்” (அத்தியாயமாகிறது) உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), இன்னும் உம்முல் கிதாப் (வேதத்தின் தாய்), இன்னும் அஸ்ஸப்வுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும்) ஆகும்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதி (3049) அஹ்மத் (9789)

மகத்தான குர்ஆன் என்பதும், திரும்பத்திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்பதும்  அல்ஹம்து சூராவிற்குரிய பெயர்களில் உள்ளதாகும்.

அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் அல்ஹம்து சூராவை மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றான்.

{وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ } [الحجر: 87]

(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.

 அல்குர்ஆன் (15 : 87)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: فِي أُمِّ الْقُرْآنِ: ” هِيَ أُمُّ الْقُرْآنِ، وَهِيَ السَّبْعُ الْمَثَانِي، وَهِيَ الْقُرْآنُ الْعَظِيمُ ” )مسند أحمد)

நபி (ஸல்) அவர்கள் உம்முல் குர்ஆன் தொடர்பாக கூறும் போது அது தான் உம்முல் குர்ஆன் (குர்ஆனின் தாய்), அதுதான் அஸ்ஸப்வுல் மஸானீ” (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு), அதுதான் அல்குர்ஆனுல் அளீம்” (மகத்தான குர்ஆன்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மத் (9788)

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், “நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹாஅத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும்என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 4474

அஸ்ஸலாத் (தொழுகை)

பின்வரும் நபிமொழியில் அல்ஹம்து சூரா ”அஸ்ஸலாத்” (தொழுகை) என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

« قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِى وَبَيْنَ عَبْدِى نِصْفَيْنِ وَلِعَبْدِى مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ). قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِى عَبْدِى وَإِذَا قَالَ (الرَّحْمَنِ الرَّحِيمِ ). قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَىَّ عَبْدِى. وَإِذَا قَالَ (مَالِكِ يَوْمِ الدِّينِ). قَالَ مَجَّدَنِى عَبْدِىوَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَىَّ عَبْدِىفَإِذَا قَالَ (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ). قَالَ هَذَا بَيْنِى وَبَيْنَ عَبْدِى وَلِعَبْدِى مَا سَأَلَ. فَإِذَا قَالَ (اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ ). قَالَ هَذَا لِعَبْدِى وَلِعَبْدِى مَا سَأَلَ யு. قَالَ سُفْيَانُ حَدَّثَنِى بِهِ الْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِى بَيْتِهِ فَسَأَلْتُهُ أَنَا عَنْهُ.

அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.

அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்என்று கூறுவான்.

அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்‘  (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்என்று கூறுவான்.

அடியான் “மாலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்என்று கூறுவான். -(நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்என்றும்  கூறியுள்ளார்கள்.)-

மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்என்று கூறுவான்.

அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘  என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 655

இந்த ஹதீஸ் ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்பை உணர்த்துவதோடு, அதன் அமைப்பையும் நமக்குத் தெளிவாக்குகின்றது.

  1. முதல் மூன்று வசனங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றும் விதமாக அருளப்பட்டுள்ளன. இந்த வசனங்களை ஒருவன் கூறும் போது அல்லாஹ்வை உரிய விதத்தில் புகழ்ந்தவனாக இறைவனால் கருதப்படுகிறான்.
  2. நான்காவது வசனம், இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத் தெளிவாக்குகின்றது. அல்லாஹ்வை எஜமானனாக ஏற்றுக் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வருவதும் அவனிடம் மட்டுமே உதவி தேடுவதும் தான் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள உறவாகும். எஜமான் அடிமை என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் இறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் இல்லை என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.
  3. இறுதியில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இறைவனிடம் மிக முக்கியமான கோரிக்கையை முன் வைக்கும் விதமாக அருளப்பட்டுள்ளன. அந்தக் கோரிக்கை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இந்த ஹதீஸ் அளிக்கின்றது.

அல்லாஹ் இந்த அத்தியாயத்தை மூன்று பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளதை இந்த ஹதீஸ் மூலம் அறிகிறோம்.

“ருக்யா” ஓதிப்பார்ப்பதற்குரிய அத்தியாயம்

அல்ஹம்து அத்தியாயத்திற்கு “ருக்யா” என்றும் பெயர் கூறுவார்கள். “ருக்யா” என்றால் ஓதிப் பார்ப்பதற் குரியது என்று பொருளாகும். இந்தப் பெயருக்கான காரணத்தைப்  பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الْحَيِّ فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ شَيْءٌ فَقَالَ بَعْضُهُمْ لَوْ أَتَيْتُمْ هَؤُلَاءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ فَأَتَوْهُمْ فَقَالُوا يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ فَهَلْ عِنْدَ أَحَدٍ مِنْكُمْ مِنْ شَيْءٍ فَقَالَ بَعْضُهُمْ نَعَمْ وَاللَّهِ إِنِّي لَأَرْقِي وَلَكِنْ وَاللَّهِ لَقَدْ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنْ الْغَنَمِ فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ وَيَقْرَأُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ قَالَ فَأَوْفَوْهُمْ جُعْلَهُمْ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ فَقَالَ بَعْضُهُمْ اقْسِمُوا فَقَالَ الَّذِي رَقَى لَا تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ فَقَالَ وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ ثُمَّ قَالَ قَدْ أَصَبْتُمْ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும்பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்…. என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப்பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்ட போது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

நூல் : புகாரி ( 2276, 5007, 5736, 5749)

நன்மைகளை வாரிவழங்கும் அற்புத ஒளி

حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ وَأَحْمَدُ بْنُ جَوَّاسٍ الْحَنْفِيُّ قَالَا حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ هَذَا بَابٌ مِنْ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلَّا الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الْأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلَّا الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلَّا أُعْطِيتَهُ (رواه مسلم)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லைஎன்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹாஅத்தியாயமும் “அல்பகராஅத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லைஎன்று கூறினார்.

நூல் : முஸ்லிம் 1472

ஃபாத்திஹா அத்தியாயத்தின் மேலும் பல சிறப்புக்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

குர்ஆன் வழி நடந்த கோமான் நபி

ஆர்.அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி

உலகத்தில் வாழ்ந்து மறைந்த எந்த மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!

அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு தான் அவரது குணநலன்கள் என்ன? பழக்கவழக்கங்கள் என்ன? அவருக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பன போன்றவற்றை அறிந்து கொள்வது சாத்தியமாகும்.

ஆனால் இந்தப் பொதுவிதியிலிருந்து அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் விலக்கு பெறுகிறார்கள்.

ஆம்! நபிகள் நாயகத்திற்கு மட்டும் அவர்களது வாழ்வுதனை முழுமையாக அறிந்து கொள்ள நம் முன் இரண்டு வழிமுறைகள் உள்ளன.

ஒன்று, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வது. இது எல்லாருக்குமான பொது வழிமுறையாகும்.

மற்றொன்று நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பானது. அது தான் இப்புனித ரமலானில் அருளப்பட்ட திருக்குர்ஆன்.

திருக்குர்ஆன் வாயிலாகவும் நபிகள் நாயகம் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பதைத் தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்து கொள்ளலாம்.

குர்ஆன் என்பது மக்களைப் பண்படுத்த, நேர்வழிப்படுத்த, நல்வழிப்படுத்த அருளப்பட்ட பொது வேதமாயிற்றே! இதில் மனிதர்களுக்கான அறிவுரைகளும் ஆர்வமூட்டல்களும் தானே இருக்கும்? இத்தகு குர்ஆன் மூலமாக எப்படி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியும்? என்று சற்றே நெருடலாகத் தோன்றலாம்.

முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்ட அருளப்பட்ட வான்மறை வேதமாகத் திருக்குர்ஆன் திகழ்ந்தாலும் குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் பிரித்து பார்ப்பது பகலையும், சூரியனையும் பிரித்துப் பார்ப்பதற்குச் சமமானதாகும்.

திருக்குர்ஆன் வேறு, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத வகையில் குர்ஆனோடு பிணைந்ததாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது.

நபிகள் நாயகம் நபித்துவத்தை அடைந்து திருக்குர்ஆன் அருளப்பெற்றதிலிருந்து அன்னாரது வாழ்க்கை திருக்குர்ஆனின் ஒவ்வொரு சொல்லையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

குர்ஆன் பாய்ச்சிய ஒளியினாலேயே நபிகள் நாயகம் தம் வாழ்க்கைப் பாதையை வெளிச்சமுள்ளதாக ஆக்கியிருந்தார்கள்.

இதை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள்

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஃத் பின் ஹிஷாம்

நூல்: அஹ்மத் 24139

நபிகள் நாயகத்தின் குணநலண்கள் என்னென்ன என்பதை அறிய எங்கும் அலைய வேண்டியதில்லை. திருக்குர்ஆனை வாசித்தாலே போதுமானது.

திருக்குர்ஆன் எதைப் போதிக்கின்றதோ அது தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்று இரத்தினச் சுருக்கமாக நபியின் வாழ்க்கையை அன்னையவர்கள் விளக்கி விட்டார்கள்.

குர்ஆனின் கட்டளைகளையும், அதற்கேற்ற வகையில் நபிகள் நாயகம் நடந்து கொண்டதையும் அறிந்து கொண்டால் அன்னை ஆயிஷா (ரலி) சொன்னது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையென்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் அதிக வலுப்பெறும்.

அதற்கான தரவுகளைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.

குறிப்பாக முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்ற தொடர் பிரச்சாரத்தை தவ்ஹீத் ஜமாஅத் கையிலெடுத்திருக்கும் இந்நேரத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி இத்தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் ஏகத்துவம் இதழ் மகிழ்ச்சி அடைகிறது.

இதோ குர்ஆனைப் பிரதிபலித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அலசுவோம்.

நல்லதைக் கொண்டு தீயதைத் தடுப்பீராக!

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41: 34,35

நமக்குத் தீங்கிழைக்க முற்படுவோருக்கும், தீங்கிழைத் தவர்களுக்கும் நன்மை செய்து அவர்களை நண்பர்களாக்க முயற்சிக்க வேண்டும் என்று குர்ஆன் அறிவுறுத்துகிறது.

அதாவது எதிரிகள் நமக்குச் செய்த தீங்கை மறந்து மன்னித்து விட வேண்டும். அப்படிச் செய்யும் போது தீங்கிழைத்தவன் கூனிக்குறுகி மனந்திருந்திட வாய்ப்புண்டு.

அதே நேரம் இந்தக் குணம் எல்லாருக்கும் வாய்த்து விடாதென்றும், இதைக் கடைபிடிப்பவரை மகத்தான பாக்கியம் உடையவர் என்றும் குர்ஆன் புகழாரம் சூட்டுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த இறைவசனத்தை அப்படியே உள்வாங்கி தமது வாழ்க்கையில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

ஓரிரு முறை அல்ல, பல முறை நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மேற்கண்ட வசனத்தின் படி நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பதாகவே இருந்தது.

தமக்குத் தீங்கிழைத்த பலரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்முகத்துடன் மன்னித்திருக்கிறார்கள்.

ஒருமுறை நபியவர்களிடம் யாசகம் கேட்க வந்த ஒருவர் சற்றே கடுமையாக நடந்து கொள்கிறார். உச்சகட்டமாக நபிகள் நாயகத்திடம் வன்முறையைப் பிரயோகிக்கிறார். அதனால் நபிகள் நாயகமும் பாதிப்படைகிறார்கள். இருந்தபோதிலும் சிரித்துக் கொண்டே அந்த யாசகருக்குத் தேவையானவற்றை வழங்கும் படி உத்தரவிடுகிறார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின்  ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 3149

தன்னைக் கொல்ல முன்வந்தவனைக் கூட நபியவர்கள் தண்டிக்காது மன்னித்து விட்டார்கள் என்றால் குர்ஆன் வசனங்களைப் பின்பற்றுவதிலும், பிரதிபலிப்பதிலும் நபிகள் நாயகத்தை நம்மால் ஒரு போதும் மிஞ்ச முடியாது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது.  உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும் போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார். நான் கண் விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், “என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் “அல்லாஹ்என்று (மூன்று முறை) கூறினேன்என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 2910

தமக்குத் தீங்கிழைத் தவர்களைத் தண்டிக்காது மன்னித்து விடுவார் என்று நபிகள் நாயகம் பற்றி தவ்ராத்திலும் வர்ணிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) நாம் உங்களை சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே “தவ்ராத்வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

நபியே! நிச்சயமாக நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கின்றோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (“முத்தவக்கில்‘) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).

(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்க மாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்து விட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.

நூல்: புகாரி 4838

பிறரை மன்னிக்க வேண்டும் என்ற வசனம் நபிகள் நாயகத்தை எந்தளவு பாதித்திருந்தது என்றால் தனக்காக யாரையும் நபிகள் நாயகம் பழிக்குப்பழி வாங்கியதில்லை. தனிப்பட்ட முறையில் தனக்குத் துன்பம் தந்த அனைவரையும் மன்னித்தே விட்டிருக்கிறார்கள்.

இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவ்விரண்டில் இலேசானதையே எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 6786

சமூகத்தைப் பாதிக்காத வகையிலும், மார்க்கத்தின் புனிதம் கெடாத வகையிலும் தனக்கு இழைக்கப்படும் துன்பங்கள் யாவற்றையும் நபிகள் நாயகம் மன்னித்து உள்ளார்கள் என்றால் குர்ஆனின் வசனங்களை, கட்டளைகளைப் பிரதிபலிப்பதில் நபியவர்களுக்கிருந்த குன்றா ஆர்வத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் போதனையை வாழ்க்கையாகக் கொண்டு நடந்த மேலும் சில செய்திகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி

இஸ்லாம் மார்க்கம் பிரதானமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும்.

மற்றொன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் – என்ற கொள்கையாகும்.

இவ்விரு கொள்கைகளையும் ஏற்று வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் சேர முடியும்.

இஸ்லாத்தின் அடிப்படையாக அமைந்துள்ள இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். இவ்விரு கொள்கைகளையும் அரைகுறையாகவே நம்புகின்றனர்.

இவ்விரு கொள்கைகளையும் அதன் முழுப்பரிமானத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் கடமையை உணர்ந்து லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் முதல் கொள்கையை மக்களுக்கு முழுமையாக விளக்கிட ஷிர்க் ஒழிப்பு  மாநாட்டை நடத்தினோம்.

ஷிர்க் என்றால் என்ன என்பதையும், எவை ஷிர்க் என்பதில் அடங்கும் என்பதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் ஆறுமாத காலம் மக்கள் மத்தியில் விளக்கி விழுப்புணர்வை ஏற்படுத்தினோம். இதன் மூலம் அதிகமான மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினான்.

அடுத்த கட்டமாக முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் – முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்ற கொள்கையை அதன் முழுப்பரிமானத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுத்துள்ளது.

முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதர் என்று குருட்டுத்தனமாக முஸ்லிம்கள் நம்புவதில்லை; அப்படி நம்பவும் கூடாது. பலவகையிலும் ஆய்வு செய்து அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை விளங்கியே நம்புகின்றனர்.

தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வாதிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்குத் தக்க சான்றுகளை முன்வைத்தே வாதிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் திருக்குர்ஆன் என்ற செய்தியை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அந்தக் குர்ஆனை நீங்கள் ஆய்வு செய்தால் அது மனிதனின் கூற்றாக இருக்க முடியாது என்பதையும், அல்லாஹ்விடமிருந்து தான் வந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்றால் அதைக் கொண்டு வந்த நான் அல்லாஹ்வின் தூதரே என்பது அவர்கள் எடுத்து வைத்த முதல் சான்றாகும்.

எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இதுபோல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று திருக்குர்ஆன் 2:23, 10:38, 11:13, 17:88, 52:34 ஆகிய வசனங்கள் அறைகூவல் விடுகின்றன.

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர்கொள்ள முடியாது எனவும் 2:23 வசனத்தில் திருக்குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

முஹம்மது நபியின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதைவிடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறைவேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த முஹம்மது நபி எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆனைப் பொருத்தவரை அது ஆன்மிகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது. எந்தத் துறையைப் பற்றிப் பேசினாலும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் பேசுவது போல் அது அமையவில்லை. மாறாக இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒருசேரச் சிந்திக்கும் யாரும் “இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்‘’ என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் கூட திருக்குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு திருக்குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

தமது நாற்பதாண்டு கால வாழ்க்கையை அடுத்த சான்றாக முன்வைத்தார்கள். இது எந்த மனிதனாலும் எடுத்து வைக்க முடியாத சான்றாகும்.

நாற்பது ஆண்டுகள் நான் உங்களுடன் வாழ்ந்துள்ளேன். நான் ஒரு பொய் சொன்னதாகவோ, யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதியிழைத்ததாகவோ தீயபழக்கங்கள் உள்ளவனாகவோ, கர்வம் கொண்டவனாகவோ, பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படுபவனாகவோ என்னை நீங்கள் பார்த்ததுண்டா?

என்று மக்களை நோக்கி கேட்கும் அளவுக்கு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இதுபற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்!

அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:16

சொந்த ஊரில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து விட்டு அந்த வாழ்க்கையை ஆதாரமாக எடுத்துக்காட்டி தனக்கு ஆள் சேர்ப்பது எவருக்கும் இயலாததாகும்.

இப்படி ஒரு வாதத்தை இறைத்தூதர் அல்லாத எந்த மனிதராலும் செய்ய முடியாது.

நாற்பது ஆண்டுகள் சொந்த ஊரிலேயே ஒருவர் தங்கி இருந்தால் அவரது இளமைப் பருவத்தில் பல சேட்டைகள் செய்திருப்பார். அந்த சமுதாய மக்கள் எந்தத் தீமைகளை உறுத்தல் இல்லாமல் செய்து வந்தார்களோ அவற்றை அவரும் செய்பவராக இருப்பார். அதிலும் அதிகப்படியான சொத்துக்களும், பண வசதிகளும் உள்ளவராக இருந்தால் அதைப் பயன்படுத்தி மற்றவர்களை விட அதிகத் தீமைகளைச் செய்திருப்பார்.

இப்படி எல்லா மனிதர்களைப் போலவும் வாழ்ந்திருந்த ஒருவர் தனது நாற்பதாம் வயதில் அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னால் என்னவாகும்? நீர் நேற்று எங்களுடன் சேர்ந்து என்னவெல்லாம் செய்தீர் என்பது தெரியாதா? உம்மைத் தான் அல்லாஹ் தூதராக நியமித்து விட்டானா? என்று கேட்டு அவர்களை நிராகரித்து இருப்பார்கள்.

தன்னை தினமும் பார்த்துப் பழகிய சொந்த ஊர் மக்களிடம் நான் உங்களுடன் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேனே சிந்திக்க மாட்டீர்களா என்று முஹம்மது நபி கேட்டார்கள். அவர்களைத் தனது தூதராக நியமிக்க வேண்டும் என்று இறைவன் தீர்மானித்து இருந்தால் தான் நாற்பது ஆண்டுகள் அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்…