ஏகத்துவம் – ஜூலை 2013

தலையங்கம்

மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம்

அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ரமளான் என்றாலே குர்ஆன் தான். ஆம்! ரமளான் மாதத்தை ஆக்கிரமிப்பதும், அலங்கரிப்பதும் அருள்மிகு குர்ஆன் தான். அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் இதய ஆவணத்தில் பதிய வைக்கும் அரும்பணியில் ஈடுபட்ட ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தான் அதுவரை அருளப்பட்ட குர்ஆனை மறுபதிவு செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமான ஆண்டில் இருமுறை மறுபதிவு செய்திருக்கிறார்கள்.

எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6285

இந்த மறுபதிவு ரமளான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நடைபெறும் என்பதை புகாரி 3554 ஹதீஸில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஏனிந்த மறுபதிவு? எதற்காக மறுபார்வை? அல்லாஹ்வின் இந்த அருள்மிகு குர்ஆன் எழுத்தளவில், ஏட்டளவில் இல்லாமல் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. (அல்குர்ஆன் 29:49)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இதைப் பாதுகாத்தது போன்று நபித்தோழர்களின் உள்ளங்களில் வைத்தும் அல்லாஹ் பாதுகாக்கின்றான்.

இந்த வசனத்தில் “சுதூர்’ – உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இது “சத்ர்’ என்ற வார்த்தையின் பன்மையாகும். இதன்படி நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மட்டுமல்லாமல் அந்த நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. அதன் பிறகு அது அடுத்த தலைமுறையினரின் உள்ளங்களில் பதியப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது.

அன்றிலிருந்து இன்று வரை இந்தப் புனிதக் குர்ஆன் இவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நபி (ஸல்) அவர்களால் அன்று ஓதப்பட்ட அதே ஒலி வடிவத்தில் ஓசை நயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவிலான ஏடுகள், உள்ளங்களில் உள்ள குர்ஆனின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றன.

முழுமையான, முதன்மையான பாதுகாப்பு, ஓசை வடிவக் குர்ஆனுக்குத் தான். தலைமுறை, தலைமுறையாக பதினான்கு நூற்றாண்டுகளைத் தாண்டி, கால வெள்ளத்தைக் கடந்து கலப்படம் இல்லாமல், கைச்சரக்கு கலக்காமல் மனித உள்ளங்களில் பயணித்து வருகின்ற தன்னிகரற்ற வேதம் இந்தக் குர்ஆன் மட்டும் தான்.

இப்படிக் குர்ஆனை தங்கள் மனப் பேழைகளில் மனனம் செய்வதன் மூலம் பாதுகாத்த மனிதர்கள் மகத்தானவர்கள் ஆவர். மாண்புறு குர்ஆனை சங்கிலித் தொடரில் பாதுகாப்பதற்காக மனனம் செய்து வரும் கன்னித் தலைமுறையினர் கண்ணியத்திற்குரியவர்கள் ஆவர். நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு மகிமை சூட்டுகின்றார்கள்; மதிப்பு கூட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 4937

அல்குர்ஆனை மனனம் செய்த மக்கள் மலக்குகளைப் போன்றவர்கள் என்றால் அதன் மகிமையையும் மாண்பையும் சொல்ல வேண்டியதில்லை.

தொழுவிப்பதில் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் முதல் மரியாதை அளிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்என்று சொன்னார்கள்

அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி),  நூல்: புகாரி 4302

மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுவிக்கட்டும். அவர்களில் தொழுவிப்பதற்கு மிகவும் தகுதியானவர் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),  நூல்: முஸ்லிம் 1077

இருக்கும் போது இந்த மரியாதை என்றால் இறந்த பின்னும் மரியாதை தொடர்கின்றது.

நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  நூல்: புகாரி 1343

இம்மாபெரிய சிறப்புக்களைக் கொண்ட இந்தக் குர்ஆனை மனனம் செய்வோர் பொதுவாக தமிழகத்தில் அருகி விட்டனர். இன்றைக்குத் தமிழகத்தில் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோரின் மதரஸாக்களில் மாணவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். இதற்குக் காரணம் இதை ஒரு வருவாய்க்குரிய வழியாக மட்டும் ஆலிம்கள் பார்த்தது தான்.

அதனால் மார்க்கக் கல்வி அதனுடைய மதிப்பை இழந்து விட்டது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒரேயடியாக உலகக் கல்வியில் கொண்டு போய் தள்ளுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக அமைந்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிலவுகின்றது. ஆனால் நம்மிடம் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மைக்ரோ அளவில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த ஹாபிழ்கள் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோரிலிருந்து வந்ததால் தான்.

ரமளான் வந்து விட்டது. இம்மாதத்தின் இரவு வேளைகளில் இலட்சக்கணக்கில் உலகெங்குமிருந்து மக்கா, மதீனாவில் மக்கள் குவிகின்றனர். அங்கு ஆட்டம், பாட்டம், இசைக் கச்சேரிகள், ஆபாச நடனங்கள் எதுவுமின்றி எப்படி இத்தனை பேர் குழுமுகின்றனர்? இதுபோன்றே நமது ஊர்களிலும் பள்ளிகளில் எப்படி மக்கள் குவிகின்றனர்? அனைத்து விதமான கேளிக்கைகளையும் இஸ்லாம் தடை செய்த நிலையிலும் இது எப்படி சாத்தியமானது?

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னதத் திருக்குர்ஆன் உலக மக்களைத் தன்வயப்படுத்தி இதை சாத்தியமாக்குகின்றது. சத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

தேனடையை மொய்க்கும் வண்டுகள் போன்று மக்கள் திருக்குர்ஆனை மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். அழகிய குரலில் குர்ஆன் ஒலி அலையாய் மாறும் போது, உருகாத உள்ளங்கள் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) ஆகியோர் ஓதும் போது ஆண்களும், பெண்களும் தங்கள் உள்ளங்களைப் பறி கொடுத்த அற்புத நிகழ்வை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.

நபி (ஸல்) அவர்களும் குர்ஆனைக் கேட்கும் போது இவ்வாறு தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்திருக்கின்றார்கள். ரீங்காரமிட்டு ஓதிய அபூமூஸா (ரலி) அவர்களை நபியவர்கள் பாராட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) “அபூ மூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுஎன என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),  நூல்: புகாரி 5048

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தராவீஹ் என்ற பெயரில் நடத்தப்படுகின்ற தொழுகைகளில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் படுவேகமானவை. ஒலிக்கின்ற வார்த்தை ஒன்று கூட விளங்காது. அத்துடன் அவர்களது தொழுகையும் அதி அவசரமானவை. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொழுகைகள் நிதானமானவை. இங்கு தொழுவிக்கும் ஹாபிழ்கள் நின்று நிதானமாகத் தொழுவிக்கின்றனர். ஆனால் இவ்வாறு நடப்பது ஒருசில இடங்களில் தான். தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒரு கூட்டம் நின்று, நீட்டித் தொழவும் நிதானமான நீண்ட கிராஅத்தைக் கேட்கவும், குர்ஆனைக் கேட்டு அழுவதற்கும் காத்திருக்கின்றனர். ஆனால் பரிதாப நிலை, இந்த மக்களுக்குத் தொழுவிக்க ஹாபிழ்கள் இல்லை.

இதைத் தீர்ப்பதற்கு ஒரே வழி தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும் ஆக்குவது தான். இருபது ரக்அத்களை எட்டு ரக்அத்களாகக் குறைத்து விட்டார்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினர் நம்மை நோக்கிக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இந்த எட்டு ரக்அத்களில் நிலை, ருகூவு, சுஜூது போன்றவற்றை நீட்டி நின்று தொழுது, இருபதைக் காட்டிலும் அதிக நேரம் எட்டு ரக்அத்தைத் தொழுவதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். தொழுகையில் காட்டப்படும் இந்த நிதானத்திற்காக ஒரு கூட்டம் தவ்ஹீதை நோக்கிப் படையெடுத்து வந்தது.

இப்படி அமல் செய்வதற்காகவே ஒரு கூட்டம் தாகத்துடன் காத்து நிற்கின்றது. இதன் வாயிலாகவும் ஒரு கூட்டம் தவ்ஹீதுக்கு வந்து கொண்டிருக்கின்றது. வரவும் தயாராக இருக்கின்றது. எனவே இந்த அரும்பணியை ஆற்றுவதற்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 4

ஓரினச் சேர்க்கை

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்பவியலில் முதற்கட்டமாக, குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் காரணங்களைப் பார்த்து வருகின்றோம்.

துறவறம், யாரும் யாருடனும் சேர்ந்து கொள்ளலாம் எனப் போதிக்கும் கட்டுப்பாடற்ற உறவுகள் போன்றவற்றின் தீமைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அந்த வரிசையில் ஒன்றுதான் ஓரினச் சேர்க்கையாகும்.

ஆண் இனம், பெண் இனத்துடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும். அதுதான் இயற்கை. அப்படித்தான் அல்லாஹ் படைத்திருக்கிறான். ஆனால் மனித சமூகத்தில் சில ஈனச் செயல் புரிகின்ற இழிபிறவிகள், ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்று சொல்லும் ஹோமோ, லெஸ்பியன் என்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். இப்படியொரு தவறான செயலைச் செய்து கொண்டு, அது தவறு இல்லை என்று ஓரினச் சேர்க்கைக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்கிற சூழ்நிலையெல்லாம் தற்போது நிலவி வருகின்றது. இதுபோன்ற நிலையை எல்லா ஆண்களும், பெண்களும் எடுத்தால், இவ்வுலகத்தில் மனித சந்ததிகள் அத்துடன் முடிவடைந்துவிடும்.

இப்படி ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண் என்று திரிபவர்களுக்கு இளமையாக இருக்கிற போது நன்றாகத்தான் தெரியும். ஆனால் ஐம்பது அறுபது வயதை அடையும் போது, இந்த உடலுறவு ஆசைகள் அற்றுவிடுகின்ற, தள்ளாடும் வயதை அடையும் போது அவனுக்குக் கஞ்சி கொடுப்பதற்கு வாரிசு இருக்குமா?

ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும் சேர்ந்தால் வாரிசு உருவாகாது. நமக்கென நாம் பெற்றெடுத்த ஒரு வாரிசு இருந்தால் தான் நம்மைத் தூக்கிப் பராமரிப்பார்கள். நமக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களைச் செய்து தருவார்கள். ஆணுடன் பெண், பெண்ணுடன் ஆண் என்று இயற்கை நியதியில் இருந்தால் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் சேவை செய்ய வேண்டும் என்கிற மனநிலையில் தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

ஆண், பெண் என்ற வெவ்வேறான பாலியல் முறையே சேவை செய்யத் தூண்டும். ஆனால் ஒரே இனத்தைச் சார்ந்த இருவர்கள் வாலிபப் பருவத்தில் அந்த உடலுறவு ஆசை இருக்கும் போது உள்ள ஈர்ப்பு கடைசி வரைக்கும் வராது. ஏனெனில் தவறானதைச் செய்வதற்குத் தான் பழகினார்களே தவிர, கணவன் மனைவி எனும் குடும்ப அமைப்பு அதில் இருக்காது. பிறகு எப்படி சேவை செய்கின்ற மனப்பான்மை வரும். நான் இவனுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும் என்று தான் தோன்றும். இந்த உறவு முறையை இன்றைய மீடியாக்களும், பத்திரிக்கைகளும், போலி அறிவு ஜீவிகளும் சரிகாண்பது மனித சமூகத்தைச் சீரழித்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எனவே ஓரினச் சேர்க்கை என்பதும் குடும்ப அமைப்பைச் சீரழிக்கின்ற காரணங்களில் உள்ளது தான். ஓரினச் சேர்க்கைக்கு எதிராக, லூத் என்ற ஒரு தனி நபியை அல்லாஹ் அனுப்பி எச்சரித்து, பிறகு அந்த ஓரினச் சேர்க்கையாளர்களின் ஊரையே அழித்ததாகத் திருக்குர்ஆன் மூலம் மனித சமூகத்தை இஸ்லாம் எச்சரிக்கின்றது.

இப்படிப்பட்ட ஹோமோ செக்ஸ் என்று சொல்லப்படும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், குடும்பத்துடன் இருந்தாலும் அவர்கள் குடும்பத்தினருக்குத் துரோகம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்தப் பழக்கத்தைச் சரி காண்பதற்காக இது ஆதி மனிதன் காலத்திலிருந்தே வந்ததாகச் சொல்லுவார்கள். ஆனால் அது தவறானது. இயற்கையில் ஒருபோதும் இந்தப் பழக்கம் வந்திருக்கவே முடியாது. இந்தப் பழக்கம் எவனோ ஒரு கேடுகெட்டவனால் மனித சமூகத்தில் இடையில் உருவாக்கப்பட்டது என்பதற்கு, இஸ்லாமிய மார்க்கத்தில் வரலாற்று ரீதியான செய்தியைப் பார்க்க முடிகிறது.

லூத் என்ற ஒரு நபியின் காலத்தில் தான் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் உருவானார்கள் என்பதே சரியானதாகும்.

இறைவனின் படைப்பில் ஆண் பெண் உறவு தான் இயற்கையானது. இதுபோன்ற கேடுகெட்ட செயல் இடையில் உள்ளது தான்.

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). “உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?” என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்.)

அல்குர்ஆன் 7:80, 81

லூத்தையும் (அனுப்பினோம்). “நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை. சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?” என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, “நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராகஎன்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 29:28, 29

இந்த வசனத்தில் லூத் நபியவர்கள், “இவ்வுலகில் நீங்கள் தான் முதன் முதலாக இந்த மானக்கேடான செயலைச் செய்கிறீர்கள்’ என்று சொன்னதிலிருந்தே லூத் நபி காலத்திற்கு முந்தைய மனித சமூகத்தில் இந்தக் கேடுகெட்ட பழக்கம் இருந்ததில்லை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆண் என்பவன் பெண்ணையும், பெண் என்பவள் ஆணையும் விரும்பக் கூடியவர்களாகத் தான் மனித உருவாக்கமே இருக்கிறது. அதனால் தான் அல்லாஹ், ஆதம் என்ற ஆணையும் ஹவ்வா என்ற பெண்ணையும் படைத்தான். ஆதம் நபியின் வழிகாட்டலில் தான் மனித சமூகம் வந்திருக்க வேண்டும். இந்த இயற்கை அமைப்பு உடைக்கப்பட்டு இயற்கைக்கு மாற்றமான செயல் லூத் நபி காலத்தில் உருவாக்கப்பட்டது.

அல்லாஹ் இந்த இழி செயலுக்குக் கொடுத்த தண்டனை, அந்த ஊரே தலைகீழாகப் புரட்டப்பட்டது. அவர்களின் இழிசெயலினால் அந்தளவுக்கு அல்லாஹ்விற்குக் கோபம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்தத் தண்டனையிலிருந்து நம்மால் உணர முடிகிறது.

நமது கட்டளை வந்த போது, அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக் கினோம்.

அல்குர்ஆன் 11:82

தோசையைப் புரட்டுவது போன்று புரட்டியதாகச் சொல்கிறான். மேலும் சூடேற்றப்பட்ட கற்களை மழையாகப் பொழிந்தான். மேலும் அவர்களைக் குருடர்களாக்கியதாகவும் சொல்கிறான்.

அவருடைய விருந்தினரை தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்! (என்றோம்) அதிகாலை நேரத்தில் நிலையான வேதனை அவர்களைப் பிடித்தது.

அல்குர்ஆன் 54:37, 38

ஒட்டுமொத்தமாக ஊரோடு அழித்துவிட்டான். காரணம் அல்லாஹ்விற்கு எதிராக யுத்தம் செய்கின்ற செயல் தான் இந்த ஓரினச் சேர்க்கை என்பது. ஏனெனில் இறைவன் உருவாக்கிய ஆண், பெண் என்ற இயற்கை அமைப்புக்கு எதிரான யுத்தமாகும்.

இன்னும் சொல்லப் போனால், மலம் வருகிற பாதையில் உடலுறவு கொள்வதும் எய்ட்ஸ் உருவாவதற்குக் காரணம் என்பதை இன்றைய உடற்கூறு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்குப் பல காரணங்களையும் சொல்கின்றார்கள்.

அன்றைக்கு ஊரோடு அழிப்பதைத் தண்டனையாக இறைவன் கொடுத்தான். ஆனால் இன்று எய்ட்ஸ் என்ற கிருமியைக் கொடுத்து, எந்த நோய் ஏற்பட்டாலும் குணமடையாமல், உயிருடன் இருந்து கொண்டே சாகின்ற நிலையை தண்டனையாகக் கொடுத்துள்ளான்.

எனவே முஸ்லிம்களாகிய நாம், குடும்ப அமைப்பை நாசமாக்குகின்ற எந்தவொரு காரியத்தையும் ஒருக்காலும் கையாண்டுவிடக் கூடாது.

முதலாவதாக, துறவறத்தை எதிர்த்துக் களமிறங்க வேண்டும். மேலும் அதற்கு எதிராக இன்றைய உலகில் வீரியமிக்க பிரச்சாரம் செய்தாக வேண்டும்.

அதேபோன்று குடும்ப அமைப்பைச் சீரழிக்கின்ற இரண்டாவது காரணமான, கட்டுப்பாடற்ற உறவு முறையைக் கடுமையாக எதிர்ப்பதுடன், அதன் விபரீதங்களை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லி மனித சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும். அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் யார் எதை ஆதரித்தாலும் நாம் ஒருக்காலும் இதுபோன்ற கேடுகெட்ட செயல் முறையை ஆதரித்துவிடக் கூடாது.

அதேபோன்று ஓரினச் சேர்க்கை எவ்வளவு தவறானது என்பதையும், இஸ்லாத்தில் எவ்வளவு பெரிய தண்டனைக்குரிய காரியம் என்பதையும் நம்முடைய முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சமூக மக்களுக்கும் விளக்க வேண்டும்.

குடும்ப அமைப்பைத் தெரிவதற்கு முன்னால், குடும்ப அமைப்பைச் சிதைக்கின்ற காரியங்களைத் தெரிய வேண்டும். அதில் தெளிவு பெற்றிருக்க வேண்டும். குடும்ப அமைப்பு சம்பந்தமான மேலும் செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

நபி மீது பொய்!  நரகமே தங்குமிடம்!

உயிர் காக்கும் உன்னத துஆ?

நபி மீது பொய்; நரகமே தங்குமிடம் என்ற ஏகத்துவத்தின் இந்தப் பகுதி மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் ஆற்றும் உரைகளிலும், அவர்கள் எழுதுகின்ற ஏடுகளிலும் இடம்பெறுகின்ற பொய்யான ஹதீஸ்களைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

அந்த அடிப்படையில் இஸ்லாமிய இனிய தென்றல் என்ற இதழில் பிப்ரவரி 2013 இதழில் இடம்பெற்ற ஒரு பொய்யான ஹதீஸைப் பார்ப்போம்.

எம்.எஸ்.பி. காஸிமி என்பவர் எழுதியுள்ள ஜுமுஆ சொற்பொழிவு என்ற கட்டுரையில், ஹயாத்துஸ் ஸஹாபா (நபித்தோழர்களின் வாழ்க்கை) என்ற நூலிலிருந்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஹயாத்துஸ் ஸஹாபா என்ற நூலை எழுதியவர் இந்தியாவைச் சேர்ந்த தப்லீக் இயக்கவாதியான முஹம்மது யூசுப் காந்தஹ்லவீ ஆவார்.

இஸ்லாமிய வரலாற்றில் பொய்யான, பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு தங்களது நூல்களை நிரப்பியவர் பலர் உண்டு. அவர்களில் தலைமை இடத்தைப் பிடிப்பவர் தமிழக ஆலிம்களால் கல்விக் கடல் என்று போற்றப்படுகின்ற கஸ்ஸாலி ஆவார். அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவர்கள் அமல்களின் சிறப்புகள் எழுதிய ஜக்கரியா மவ்லானா, அதே போன்று முஹம்மது யூசுப் காந்தஹ்லவீ ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அந்த அளவுக்கு வண்டி வண்டியாகப் பொய்யான, பலவீனமான ஹதீஸ்கள் இவர்களின் நூற்களில் மண்டிக் கிடக்கின்றன; மலிந்து காணப்படுகின்றன.

அந்த நூலிலிருந்து தான் இந்த எம்.எஸ்.பி. காஸிமி என்பவர் தனது ஜும்ஆ உரையில் ஒன்று விடாமல் ஒப்புவித்திருக்கின்றார்.

இத்தகையோருக்கு, “என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்” என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இங்கு சமர்ப்பிக்கின்றோம்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 6

இந்த ஹதீஸையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தக் கட்டுரையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போது இவர்கள் வெளியிட்டுள்ள அந்தப் பொய்யான ஹதீஸ்களைப் பார்ப்போம்.

ஹள்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். நபிகளாரது காலத்தில் ஒரு மனிதர் வியாபார நோக்கத்துடன் மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்குச் செல்வார். ஷாம் தேசத்திலிருந்து மதீனாவிற்குத் திரும்புவார். இவர் வியாபாரக் கூட்டத்தாரோடு சேர்ந்து செல்லாமல் தனியாகச் செல்வார். ஒரு சமயம் ஷாம் தேசத்திலிருந்து மதீனா நகர் வந்து கொண்டிருந்தார். பாதையில் ஒரு திருடன் குதிரையில் ஏறியபடி வந்தான். அவன் மிக உரத்த குரலில், நில் என சப்தமிட்டான். வியாபாரி நின்று விட்டார். வியாபாரி திருடனிடம், “எனது பொருளை எடுத்துக் கொள். எனது பிரயாணத்தைத் தொடர விடு” என்று கூறினார். “இந்தப் பொருள் என்னுடையதே. நான் உனது உயிரை எடுப்பதற்கு நாடுகிறேன்” என்று திருடன் சொன்னான். “என் உயிரை எடுப்பதால் உனக்கு என்ன பலன். எனவே எனது பொருளை எடுத்துக் கொண்டு விட்டு விடு” என்று வியாபாரி சொன்னார்.

பின்பும் அந்தத் திருடன் அதையே கூறினான். அந்த வியாபரி திருடனிடம், “ஒளு செய்து தொழ, எனது ரப்பிடம் துஆச் செய்ய எனக்கு அவகாசம் கொடு” என்றார். நீ விரும்பியதைச் செய்து கொள் என்று திருடன் கூறினான்.

வியாபாரி ஒளு செய்து நான்கு ரக்அத் தொழுதார். ரப்பிடம் துஆச் செய்தார்.

யா வதூத், யா வதூத், யாதல் அர்ஷில் மஜீத் யா முப்திவு யா முயீத் யா பஃஆலுல்லிமா யுரீது அஸ்அலுக பிநூரி வஜ்ஹிகல்லதீ மலஅ அர்கான அர்ஷிக வ அஸ்அலுக பிகுத்ரதிகல்லதீ கதர்த பிஹா அலாகல்கிக வபிரஹ்மதிகல்லதீ வஸிஅத் குல்ல ஷையின் லாயிலாஹ இல்லா அன்த யா முகீது அகித்னீ

இந்த துஆவை மூன்று தடவை செய்தார். துஆ முடிந்ததும் திடீரென ஒரு மனிதர் ஒளிமிக்க குதிரையில் ஏறியபடி, பச்சை நிற உடையணிந்தவராக வந்தார். அவரது கையில் பிரகாசிக்கும் கத்தி இருந்தது.

திருடன் அந்தப் புதிய மனிதரைப் பார்த்ததும் வியாபாரியை விட்டு விட்டு அவரிடம் சென்றான். வந்த மனிதர் திருடனைத் தாக்கி, கத்தியால் குதிரையை வீழ்த்தி திருடனைக் குதிரையிலிருந்து விழச் செய்து விட்டார். பின்பு வியாபாரியிடம் வந்து, “எழுந்து சென்று திருடனை நீங்களே கொல்லுங்கள்” என்றார்.

“நீங்கள் யார்?” என வியாபாரி கேட்டார். “நான் எப்போதும் யாரையும் கொன்றது இல்லை. உயிரைக் கொன்ற பின் என் மனம் சந்தோஷப்படவும் செய்யாது” என்று அவர் சொன்னர்.

பின்பு திருடனை அவர் கொன்று விட்டார். வியாபாரியிடம், “நான் மூன்றாவது வானத்திலுள்ள ஒரு வானவர். நீங்கள் முதல் தடவை துஆச் செய்த போது வானத்துடைய கதவுகளில் இருந்து அசைவை (சப்தத்தை) கேட்டோம். நீங்கள் இரண்டாவது தடவை துஆச் செய்த போது வானக் கதவுகள் திறந்து கொண்டன. மூன்றாவது தடவை துஆச் செய்த போது ஹளரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் எங்களிடம் வந்து, “இந்தச் சோதனையில் சிக்குண்ட மனிதனுக்கு உதவி புரிபவர் யார்?” என்று கேட்டார். நான் அல்லாஹ்விடம் என்னை அந்தத் திருடனைக் கொலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

மூன்றாவது வானத்திலிருந்து வந்த அந்த வானவர் வியாபாரியிடம், “அல்லாஹ்வுடைய அடியாரே, அறிந்து கொள்ளுங்கள். நீர் ஓதிய இந்த துஆவை எம்மனிதர் கஷ்டம், சோதனையில் ஓதுவாரோ அவரது கஷ்டத்தை, சிரமத்தை, சோதனையை அல்லாஹ் போக்கி விடுவான்” என்று சொன்னார்.

அதன் பின் அந்த வியாபாரி தனது பொருட்களுடன் மிக நிம்மதியுடன் மதீனா வந்தடைந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமூகத்திற்கு வந்து இந்த சம்பவத்தைச் சொன்னார்.

நபிகள் பெருமகனார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களை அல்லாஹ் உனக்குக் காட்டித் தந்துள்ளான். அந்த அழகிய திருநாமங்களைக் கொண்டு துஆச் செய்தால் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். அந்த அழகிய பெயர்களைக் கூறி அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அது தரப்படும்.

(ஹயாத்துஸ் ஸஹாபா, பாகம் 3, பக்கம் 679)

இந்த ஹதீஸை இப்னு அபித்துன்யா என்பவர் முஜாபித்தஃவா (பிரார்த்தனைக்குப் பதிலளிக்கப்பட்டவர்கள்) என்ற நூலில் பதிவு செய்திருக்கின்றார். ஹதீஸ் கலை ஆய்வாளர் நாஸிருத்தீன் அல்பானி இந்த ஹதீஸை தமது, ஸில்ஸிலத்துல் அஹாதீசுல் லயீஃபாத் (பலவீனமான ஹதீஸ்களின் சங்கிலி) என்ற நூலில் அடையாளம் காட்டுகின்றார். அல்பானி கூறுவதைப் பாருங்கள்:

இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பது நன்கு தெளிவாக, பார்க்கும் போதே புலப்படுகின்றது. ஹதீஸ் கலையில் போய் ஆய்வு செய்ய வேண்டிய அளவுக்கு இல்லாமல் வெளிப்படையாகத் தெரிகின்றது. இது இருள் கவ்விய இருட்டுத் தொடராகும்.

இந்தத் தொடரில் எனக்குத் தெரிந்தவர்கள் என்று ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால் ஹஸன் அல்பஷரீயைக் குறிப்பிடலாம். அவரும் தனக்கு முந்தைய அறிவிப்பாளரை இருட்டடிப்புச் செய்பவர். தனக்கு முந்தைய அறிவிப்பாளர் பெயரைச் சொல்லி, இவர் எனக்கு அறிவித்தார் என்று சொல்லி அறிவித்தால் மட்டுமே இவரது செய்தியை ஏற்றுக் கொள்ள முடியும். இவரிடமிருந்து, அவரிடமிருந்து என்று வெறுமனே அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அடிப்படையில் பலவீனமான ஹதீஸாகும்.

இந்தத் தொடரில் எனக்குத் தெரிந்த இன்னொருவரைச் சொல்ல வேண்டுமெனில் மூஸா பின் விர்தான் ஆவார். இவரது தரம் விவாதத்திற்குரியதாகும். பரவாயில்லை என்று இவரைப் பற்றி அபூஹாத்தம் குறிப்பிடுகின்றார். இந்த ஹதீஸின் ஆபத்தும் அபாயமும் ஹஸன் அல்பஷரீ என்பவரிடமிருந்து தான். அல்லது கலபீ என்பவரிடமிருந்து என்று சொல்லலாம்.

கலபீ என்பவர் மூஸா பின் விர்தானுக்கு முந்தைய அறிவிப்பாளர். இவர் யாரென்று தெரியாதவர் ஆவார். குர்ஆன் விரிவுரை செய்யக்கூடிய கலபீ என்ற ஒருவர் உண்டு. அவரும் நம்பத்தகுந்தவர் அல்லர். அதே சமயம் இவர் அந்த கலபீ அல்ல என்ற அளவுக்கு இவரைப் பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸில் இடம்பெறும் அபூமுஅல்லக் என்பார் நபித்தோழர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது வினோதத்திலும் வினோதமாகும். அவர் நபித்தோழர் என்பதற்கு இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸே சான்றாக அமைவது கேலிக்கூத்தாகும்.

ஹாபிழ் தஹபீயும் தஜ்ரீத் என்ற நூலில் இவர் நம்பத்தகுந்தவர் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு அல்பானி இந்த ஹதீஸின் தரத்தை அம்பலப்படுத்துகின்றார்.

கலபீ என்பவரை இப்னுல் கத்தான், அப்துர்ரஹ்மான் ஆகியோர் மற்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் விட்டுவிட்டார்கள் எனவும், சுலைமான் அத்தைமீ, ஜாயிதா, இப்னு மயீன் ஆகியோர் இவரைப் பொய்யர் என்று குறிப்பிடுகின்றனர் எனவும் அல்முக்னீ ஃபில்லுஅஃபா என்ற நூலில் இமாம் தஹபீ அவர்கள் குறிப்பிடுவதாக அல்பானி தெரிவிக்கின்றார்.

அல்பானி அவர்கள் குறிப்பிடுவது போன்ற இந்த விமர்சனம் அல்இலல் இப்னு அபீஹாத்தமிலும் பதிவாகியுள்ளது.

எனவே இந்தச் செய்தி பொய்யானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

புகாரியின் பெயரால் பொய்யும் புரட்டும்

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்:

உண்ணும் போதும், பருகும் போதும் வயிற்றை நிரப்புவதில் கவனமாக இருங்கள். திண்ணமாக அதிகமாகச் சாப்பிடுவது உடலுக்குக் கேடு விளைவிக்கும். தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். எனவே இவ்விரண்டிலும் (உண்ணுவதிலும் பருவதிலும்) கவனமாயிருப்பது உடலுக்கு நலன் தரும். செலவைக் குறைக்கும்.

நூல்: புகாரி

நோயற்ற வாழ்விற்கு… என்ற தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என்ற அறிவிப்பு, அதன் அடியில் புகாரி என நூல் குறிப்பு இவையனைத்தும் படிப்பவரை ஓர் உண்மையான ஹதீசுக்கு அழைத்துச் செல்கின்ற பிரமிப்பையும், பிரதிபலிப்பையும் பிம்பத்தையும் அளிக்கின்றது. ஆனால் உண்மையில் இந்தச் செய்தி, “ஒய்யாரக் கொண்டையாம்; அதன் உள்ளே இருப்பது ஈறும் பேனுமாம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது.

இப்படி ஒரு பளபளப்பான பொய் ஹதீஸ், ஷரீஅத்துல் இஸ்லாமியா என்ற பத்திரிகையில் பிப்ரவரி 2013 மாத இதழில் களையுடனும் கம்பீரத்துடனும் வெளியாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என்று போடுகின்றோமே, இது நபி (ஸல்) அவர்கள் சொன்னது தானா? என்று ஒரு சிறிய, குறைந்தபட்ச கவனத்தைக் கூட எடுக்காமல் இந்தப் பொய்யான ஹதீஸை வெளியிட்டிருக்கின்றார்கள்.

“என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்”

என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையெல்லாம் இவர்கள் கால் காசுக்குக் கூட மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது. கடுகளவு கூட நரகத்தைப் பற்றிய பயமில்லை என்பதை இவர்களின் நடவடிக்கை விளக்குகின்றது.

இப்படி ஒரு ஹதீஸை இவர்கள் புகாரியிலிருந்து எடுத்துக் காட்டுவார்களா? என்று ஷரீஅத் என்ற பெயரில் அல்லாஹ்வின் தூதரின் பெயரால் பொய் சொல்லும் ஷரீஅத்துல் இஸ்லாமியா பத்திரிகைக்கு சவால் விடுக்கிறோம். இவர்களால் இப்படியொரு ஹதீஸை புகாரியிலிருந்து எடுத்துக்காட்டவே முடியாது.

வேறு எந்தக் காரணத்தைச் சொல்லியும் இவர்களால் இதைச் சமாளிக்கவே முடியாது. அந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் மீது இது பகிரங்கப் பொய்யாகும்.

பொய்யிலும் ஓர் இருட்டடிப்பு

சத்தியத்தைச் சொல்லாமல் இருட்டடிப்பு செய்கின்ற இவர்கள் இந்தப் பொய்யான ஹதீஸைக் கூட முழுமையாகச் சொல்லாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர். இவர்களின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதற்காக இந்தப் பொய்யான ஹதீஸை வாசகர்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

உண்ணும் போதும், பருகும் போதும் வயிற்றை நிரப்புவதில் கவனமாக இருங்கள். திண்ணமாக அதிகமாகச் சாப்பிடுவது உடலுக்குக் கேடு விளைவிக்கும். தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். எனவே இவ்விரண்டிலும் (உண்ணுவதிலும் பருவதிலும்) கவனமாயிருப்பது உடலுக்கு நலன் தரும். செலவைக் குறைக்கும். உடல் கொழுத்த மார்க்க அறிஞர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்.

இது தான் இவர்கள் வெளியிட்டுள்ள பொய்யான ஹதீஸின் முழுமையான தோற்றமாகும். இந்த இறுதிப் பகுதியையும் சேர்த்து வெளியிட்டாலாவது இவர்களது திறந்த மனப்பான்மையைப் பாராட்டலாம். ஆனால் இதை அவர்கள் வெளியிட மாட்டார்கள். காரணம் அது இவர்களுக்கு பாதகத்தைத் தரக்கூடிய செய்தியாகும். சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள் பெரும்பாலும் உடல் கனத்தும் சதை வைத்தும் தான் காணப்படுகின்றார்கள். எனவே தான் இந்தப் பகுதியை மறைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் இது நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியா? என்றால் நிச்சயமாக இல்லை. இந்தச் செய்தி உமர் (ரலி) அவர்கள் கூறியதாக சில நூற்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதுவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தி தான்.

இஸ்பாஹுல் அஃமால், அல்ஜுஃவு போன்ற நூற்களில் இந்தச் செய்தி பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் கூபாவைச் சேர்ந்த அல்மஃலா பின் ஹிலால் அல் ஜுஃபி தஹாவீ என்வர் இடம்பெறுகின்றார்.

இவர் பொய்யர் என்று இப்னுல் மதீனி குறிப்பிடுவதாக அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ் துறையில் இவர் விடப்பட்டவர், இவருடைய ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ் ஆகும் என அஹ்மத் பின் ஹன்பல் குறிப்பிட்டதாக அல்ஜரஹ் வத்தஃதீல் தெரிவிக்கின்றது.

உமர் (ரலி) அவர்கள் சொன்னதாக வருகின்ற செய்தியே இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றால், இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால் தைரியமாக இதை நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என்று அந்த மாதப் பத்திரிகையில் வெளியிட்டிருக்கின்றார்கள்.

முழுமையான மூன்று பொய்கள்

இதில் இவர்கள் மூன்று பொய்களைச் சொல்லியிருக்கின்றார்கள்.

  1. நபி (ஸல்) அவர்கள் சொல்லாததை, அதாவது உமர் (ரலி) அவர்கள் சொன்னதாக வந்த செய்தியை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு பொய்.
  2. உமர் (ரலி) அவர்களும் சொல்லாத, அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியை வெளியிட்டிருப்பது இரண்டாவது பொய்.
  3. இந்தப் பொய்யான செய்தியை இமாம் புகாரி பதிவு செய்திருப்பதாகக் கூறியது மூன்றாவது பொய்.

இப்படி மூன்று பொய்களை, மறுமை விசாரணை பற்றிய பயம் இல்லாமல் தங்கள் மாத இதழ்களில் அரங்கேற்றி வருகிறார்கள்.

இங்கு இன்னொன்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தச் செய்தியின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ள, “உடல் கொழுத்த மார்க்க அறிஞர் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்’ என்ற செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தப்ஸீர் தப்ரீயில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இது முர்ஸல் என்ற தரத்தில் அமைந்த பலவீனமான செய்தியாகும். அத்துடன் இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனமான அறிவிப்பாளர்களும் இடம் பெற்றிருக்கின்றார்கள். அதை இவர்கள் வெளியிடவில்லை என்பதால் அதுகுறித்து இங்கு விரிவாக வெளியிட வேண்டிய அவசியமில்லை என்று விட்டு விட்டோம்.

இனியாவாது இந்த மாத இதழ் ஆசிரியர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸைக் கவனத்துடன் வெளியிடுவார் என்று நம்புகிறோம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 13

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிமார்களிலேயே அல்லாஹ் அதிகமாகப் புகழ்ந்து சொல்கின்ற ஒரு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான். ஒட்டுமொத்த மக்களிலேயே அவர்களை தான் அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்து தன்னுடைய நண்பர் எனவும் புகழ்ந்து கூறுகின்றான்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.  (அல்குர்ஆன். 4:125)

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் நபியவர்கள் சில விஷயங்களை விரும்பினார்கள். ஆனால் அவர்கள் விரும்பியதையெல்லாம் அல்லாஹ் அவர்களுக்கு நிறைவேற்றி வைக்கவில்லை.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்என்று அவன் கூறினான்

அல்குர்ஆன். 2:124

அல்லாஹ் அவருக்குப் பல சோதனைகளைக் கொடுத்தான். அதிலும் குறிப்பாக தான் பெற்ற மகனையே அறுத்துப் பலியிடச் சொன்னது தான் உச்சகட்ட சோதனை. அத்தனை சோதனைகளையும் அவர் வென்றதால் அவரை ஒட்டு மொத்த மனித குலத்துக்கே தலைவராகவும் நியமிக்கிறான். நமக்கெல்லாம் ஏகத்துவ இமாமாக நபி இப்ராஹீம் தான் திகழ்கிறார்கள்.

ஏகத்துவத்திற்கு, தவ்ஹீத் கொள்கைக்கு முன்மாதிரியாகவும் அவர்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்துள்ளான். இன்றைய முஸ்லிம்கள் நான்கு பிரிவுகளாக பிரிந்து கொண்டு எனக்கு ஷாபி இமாம், எங்களுக்கு ஹனபி இமாம், எங்களுக்கு மாலிக் இமாம், எனக்கு ஹன்பலி இமாம் என ஒவ்வொருவரையும் தலைவர்களாக ஆக்கிக்கொண்டு அவர்களைப் பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே இப்ராஹீமைப் பின்பற்றுமாறு தான் அல்லாஹ் கூறுகிறான். இத்தகைய சிறப்பைப் பெற்ற இப்ராஹீம் அவர்கள், தன்னை அனைத்து மக்களுக்கும் தலைவராக ஆக்கியதைப் போல், தன்னுடைய மகனையும் தலைவராக ஆக்குமாறு இறைவனிடம் முறையிட்டார்கள். ஆனால் அவர்களுடைய ஆசையை அல்லாஹ் நிறைவேற்றவில்லை. இதைப்பற்றி திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.

எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக)என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராதுஎன்று அவன் கூறினான்.  (அல்குர்ஆன்2:124)

அதேபோல ஏகத்துவத்தை உறுதியான முறையில் சொல்லியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்ராஹீம் நபி பிரார்த்தனை செய்ததை அல்லாஹ் கண்டிக்கிறான். “நீ என்னுடைய உற்ற நண்பனாக இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு உன்னுடைய பிள்ளைகளையெல்லாம் தலைவனாக ஆக்க முடியாது. உன்னுடைய தந்தையை மன்னிக்கவும் முடியாது. என்னை ஏற்றுக் கொள்ளாதவனை மன்னிக்குமாறு என்னிடம் நீ எவ்வாறு கேட்கலாம்? நான் போட்ட எல்லையைத் தாண்டி நீ எவ்வாறு அவருக்காக மன்னிப்பு கேட்கலாம்?’ என்று அல்லாஹ் கேட்டவுடன், இப்ராஹீம் நபியவர்கள் பயந்து போய், “யா அல்லாஹ் நான் தெரியாமல் கேட்டு விட்டேன்” என்று பின்வாங்கி விடுகின்றார்கள்.

அதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்,

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத்தன்மை உள்ளவர்.  (அல்குர்ஆன். 9:114)

அதே போல் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இப்ராஹீம். இஸ்ஹாக் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்த இரண்டு மகன்களையும் அவருடைய தள்ளாத வயதில், இனிமேல் நமக்கு குழந்தை பிறக்காது என்று நினைக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் கொடுத்தான்.

அவர் அல்லாஹ்வின் உற்ற நண்பராக இருந்தார். எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றவராக இருந்தார். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு செயலையும், சம்பவங்களையும் மார்க்கத்தில் நமக்கு வணக்கமாக்கி வைத்திருக்கிறான். அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் கூட குழந்தை பாக்கியத்தையும் ஒரு சோதனையாக ஆக்கினான்.

ஒவ்வொரு மனிதனும் தனது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் தனக்கு ஒரு சந்ததி வேண்டும் என்று ஆசைப்படுவான். இது போன்ற ஆசை இப்ராஹீம் நபியவர்களுக்கும் இருந்தது. அல்லாஹ்வின் நண்பர் என்பதால் அவர்களது ஆசையை அவர்களாகவும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வும் நிறைவேற்றவில்லை. தள்ளாத வயதில் தான் அவர்களுக்கு இஸ்மாயில், இஸ்ஹாக் ஆகிய புதல்வர்களை அல்லாஹ் வழங்கினான்.

லூத் நபியவர்களுடைய சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் மூழ்கிக் கிடந்த போது அவர்களிடம் சென்று, “நீங்கள் பெண்களிடம் செல்வதற்குப் பதிலாக ஆண்களிடம் உங்களுடைய இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்களே’ என்று லூத் நபி பிரச்சாரம் செய்கிறார்கள். அம்மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் இருந்ததால் இறைவனிடத்தில் அவர்களை அழித்து விடுமாறு லூத் நபி கோரிக்கை வைத்தார்கள். அப்போது இறைவன் லூத் நபியுடைய கோரிக்கையை ஏற்று அம்மக்களை அழிப்பதற்காக மலக்குமார்களை அனுப்பினான். அப்போது தான் அத்துடன் நபி இப்ராஹீம் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நற்செய்தியைக் கூறுவதற்காகவும் அம்மலக்குமார்களை அனுப்பினான். இதைப் பற்றி குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்,

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:71, 72)

நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர். “எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.  (அல்குர்ஆன் 15:53, 54)

அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்!என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, “நான் மலட்டுக் கிழவியாயிற்றேஎன்றார்.  (அல்குர்ஆன் 51:29)

இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.  (அல்குர்ஆன் 14:39)

ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படக் கூடிய வயதில் ஏன் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுக்கவில்லை. எதை விரும்புகிறானோ, எப்போது விரும்புகிறானோ அப்போது செய்யும் அதிகாரம் படைத்த ரப்புல் ஆலமீன் என்பது தான் காரணம்.

இதிலிருந்து நாம் சிந்திக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், அவ்லியாக்களுக்கும், மகான்களுக்கும் குழந்தை தரக்கூடிய பாக்கியம் இருக்குமென்றால் அவர்களை விட உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற நபிமார்களுக்கு இருக்குமல்லாவா? அதிலும் குறிப்பாக இறைவனின் உற்ற தோழரான இப்ராஹீம் நபிக்கு இருக்குமா? இல்லையா? அவருக்கு அந்த சக்தி இருந்தால் அவர்கள் ஏன் தள்ளாத வயதில் குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். அவர்கள் ஆசைப்பட்ட நேரத்தில் குழந்தை பாக்கியத்தைத் தானாகவே உருவாக்கியிருக்கலாமல்லவா? அந்த அதிகாரம் இல்லாததால் தான் இறைவனிடத்தில் முறையிடுகிறார்கள்.

ஆக மொத்தத்தில் எல்லா நபிமார்களுமே மனிதர்களாகத் தான் இருந்தார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லை என்பது விளங்குகின்றது.

அதே போன்று இந்த உலகத்தில் அதிக காலம் வாழ்ந்த மனிதர் யாரென்றால் நபி நூஹ் (அலை) கூறலாம். இதற்குக் குர்ஆனிலேயே ஆதாரம் இருக்கிறது.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது.

அல்குர்ஆன் 29:14

இவ்வாறு பல ஆண்டுகள் பிரச்சாரம் செய்த நூஹ் நபியவர்களுக்கு அவர்களுடைய மனைவியும், மகனும் எதிரிகளாக இருந்தனர். எந்த அளவுக்கென்றால் நூஹ் நபியைக் கேலி செய்வது, தொந்தரவு கொடுப்பது, அவருடைய பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களில் அவருடைய மகனும் ஒருவனாக இருந்தான்.

அவர்களையே நூஹ் நபியவர்களால் நேர்வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. இந்தக் கால கட்டத்தில் தான் தன்னுடைய பிரச்சாரத்தை யாரும் ஏற்றுக் கொள்ளாததாலும், தனக்கு மிகப் பெரிய அளவில் தொல்லை கொடுத்ததாலும் அவர்களை அழித்து விடுமாறு இறைவனிடம் முறையிடுகிறார்கள். உடனே இறைவன், “நீ ஒரு கப்பலைத் தயார் செய்து, அதில் நீயும் உன்னை ஈமான் கொண்டவர்களையும், உனது ஊரில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் ஒவ்வொரு ஜோடியை ஏற்றுவீராக!’ என்று இறைவன் கட்டளையிட்டான்.

அவரும் அதன்படி ஒரு மிகப் பிரமாண்டமான கப்பலைத் தயார் செய்தார். பிறகு அல்லாஹ் வானத்திலிருந்து தொடர்ச்சியாக மழையை இறக்குகிறான். பூமியிலிருந்தும் தண்ணிர் பீறிட்டு அடிக்கிறது. கொஞ்சம் வெள்ளம் வந்தவுடன் தன்னுடைய மகனை நோக்கி, “நீயும் இந்தக் கப்பலில் ஏறிக் கொள்’ என்று சொல்கிறார். இந்தச் சம்பவத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் விரிவாகக் கூறுகிறான்,

“(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப்படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்என்று அவர் கூறினார்.

 “இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!” (என்றும் கூறினார்)

 நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறினார்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!என்று நூஹ் கூறினார்.

ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லைஎன்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.

 “பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர் எனவும் கூறப்பட்டது.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்என்றார்.

நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்என்று அவன் கூறினான்.

இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன். 11. 37-47

ஒரு நபி தன்னுடைய மகனுக்காகக் கூட இறைவனிடம் பரிந்து பேச முடியவில்லை. அவ்வாறு பரிந்து பேசினால் அது அல்லாஹ்விற்குக் கோபத்தைத் தான் ஏற்படுத்துகிறது. அவன் எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறான். அதை மீறிச் செய்தால் அவன் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்பதற்கு இவை ஆதாரமாக இருக்கின்றன.

அதே போன்று நூஹ் நபியுடைய மனைவியையும், லூத் நபியுடைய மனைவியையும் அல்லாஹ், கெட்ட பெண்களுக்கு உதாரணமாகக் கூறுகிறான்.

நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர், எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர், எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை, இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.

அல்குர்ஆன் 60:10

எந்த மனிதனாக இருந்தாலும் தன்னைக் காப்பாற்றுவதற்குப் பாடுபடுவான். தன்னுடைய மனைவி மக்களைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடுவான். ஆனால் இந்த வசனத்தில் நூஹ் நபியால் தன்னுடைய மகனுக்காகவும். தன்னுடைய மனைவிக்காகவும் சிபாரிசு செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம்.

அப்படியானால் நாம் எப்படி யாரென்றே தெரியாத அவ்லியாக்களிடம் சென்று அவர் சிபாரிசு செய்தால் நாம் சொர்க்கத்திற்குச் சென்று விடலாம் என்று எவ்வாறு சொல்ல முடியும்? அவரும் நம்மைப் பார்த்தது கிடையாது; நாமும் அவரைப் பார்த்தது கிடையாது. அவருக்கும் நமக்கும் எந்த நட்பும் கிடையாது. இந்த நிலையில் அவரிடம் எப்படி நாம் நமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யச் சொல்ல முடியும்? அப்படியே அவர்கள் அவ்லியாக்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய நல்லடியார்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே தவிர அல்லாஹ்வின் அதிகாரம் பெற்றவர்கள் அல்லர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று நமக்கெல்லாம் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். மனிதகுலம் அனைவருக்கும் மறுமை நாள் வரைக்கும் அனைத்து மொழி பேசக்கூடியவர்களுக்கும், நபியாக அனுப்பப்பட்டார்கள்.

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 21:107

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 34:28

அதுமட்டுமல்லாமல் மறுமை நாளில் மற்ற எல்லோரையும் விட புகழப்பட்ட இடத்தில் உன்னை நான் எழுப்புவேன் என்றும் இறைவன் கூறுகிறான். இப்படிப்பட்ட சிறந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

(முஹம்மதே!) உமக்கு உபரியாக இருக்கும் நிலையில் இரவில் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) தஹஜ்ஜுத் தொழுவீராக! புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக் கூடும்.

அல்குர்ஆன் 17. 79

மறுமை நாளில் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யக் கூடிய சிறப்பை அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் வழங்கியிருக்கிறான். இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்ற நபியவர்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள மக்களின் வறுமையைப் போக்குவதற்கோ, கவலை மற்றும் நோயைத் தீர்ப்பதற்கோ குழந்தை பாக்கியத்தை அளிப்பதற்கோ எந்த ஒரு அதிகாரத்தையும் வழங்கவில்லை என்பதை குர்ஆனிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்

அல்குர்ஆன். 11:31

நான் அல்லாஹ்வால் நபியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்று மக்களிடம் சொல்லும் போது இந்தக் கருத்தையும் சேர்த்தே சொல்லுங்கள் என்று நபியவர்களிடம் இறைவன் கூறுகின்றான். ஏனென்றால் உம்மைக் கடவுள் என்றோ, அல்லது அல்லாஹ்வின் அதிகாரம் படைத்தவர் என்றோ அந்த மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு சொல்லச் சொல்கிறான்.

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:21, 22

என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 67:28

இதையெல்லாம் அல்லாஹ் சொல்லச் சொல்வதன் நோக்கம் அவர்கள் தங்களுக்கென பதவியை உண்டாக்கிக் கொள்வதற்கோ, தன்னை வணங்கக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ, தங்களிடம் பிரார்த்தனை செய்யக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ, அவர்களுக்கு நேர்ச்சை செய்யக்கூடிய கூட்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்கோ வரவில்லை. மாறாக இவை அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அவன் தான் அனைத்து அதிகாரமும் படைத்தவன் என்று சொல்வதற்காகத் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு மத்தியில் சொன்னார்கள். அவ்வாறு சொல்லும் போது மார்க்கத்தில் வளைந்து கொடுக்கக்கூடிய அளவுக்கு சில பேரங்கள் அவர்களிடத்தில் பேசப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் சில நேரங்களில் மனதில் சிறிது சலனம் ஏற்பட்டிருக்கிறது என்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

(முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்! அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையை சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர்.

அல்குர்ஆன் 17:74, 75

நபிமார்கள் அனைவரும் அவ்லியாக்களுக்கெல்லாம் சிறந்த அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ள்ளவும் சந்தேகம் இல்லை. அவர்களுக்குப் பல படித்தரங்களையும், சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான். நம்மில் யாருக்கும் கிடைக்காத பல அந்தஸ்துகளை மறுமை நாளில் அவர்களுக்கு வழங்க இருக்கிறான் என்றாலும் எந்தப் பிரச்சனைக்காவது முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தை வழங்கியிருக்கிறானா? என்பது தான் இந்த வசனங்களில் சொல்லப்படுகின்றது.

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 10. 49

நல்ல விஷயமாக இருந்தாலும், கெட்ட விஷயமாக இருந்தாலும் எனக்கே நான் எதுவும் செய்ய முடியாது எனும் போது எப்படி உங்களுக்குச் செய்ய முடியும்?

என்னுடைய வறுமையை நான் போக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய நோயை நான் போக்கிக் கொள்ள முடியாது. எனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டுமென்றால் என்னால் உண்டாக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய வேலை வாய்ப்பை நான் உருவாக்கிக் கொள்ள முடியாது. என்னுடைய பட்டம். பதவி, புகழ் எதையும் நானாக உருவாக்கிக் கொள்ள முடியாது. இவை அனைத்தையும் எனக்கே நான் செய்ய முடியாது எனும் போது எப்படி பிறருக்குச் செய்ய முடியும் என்று அல்லாஹ் சொல்லச் சொல்கிறான்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்

அல்குர்ஆன் 10:107

அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 6:17

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

—————————————————————————————————————————————————————-

அழைப்பாளர்களின் கனிவான கவனத்திற்கு…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் அடித்தளத்தில் ஆழமான வேர்கள் பிடித்து வண்ண வண்ண இலைகள் துளிர்த்த, கனிகள் குலுங்குகின்ற, வானளாவிய கிளைகள் பரப்பி அண்டை மாநிலங்களிலும் விரிந்து நிற்கின்ற பெரும் மரமாகும்.

நம்முடைய ஜமாஅத்தின் கிளைகள் ஆள் நடமாட்டமும் அரவமும் இல்லாத வனத்தில் அமையவில்லை. நம்முடைய கிளைகளும் அதன் அழைப்பு மையங்களும் கடை வீதிகளிலும் அடர்த்தியாக முஸ்லிம்கள் வசிக்கின்ற குடியிருப்புப் பகுதிகளிலும் அமைந்திருக்கின்றன. நமது மையங்களைச் சுற்றிலும் சூழவும் குடும்பங்கள் வாழ்கின்ற முஹல்லாக்கள்.

குடும்பம் என்பது, வயதுக்கு வராத விடலைப் பெண்கள், வயதுக்கு வந்த கன்னியர், திருமணம் முடித்த இளம் பெண்கள் போன்றோர் இணைந்த ஒன்றாகும். இவர்கள் எப்போதும் வீட்டுக்குள்ளேயே கட்டுண்டு கிடக்க மாட்டார்கள். அடுப்படி சமையல், உணவு பரிமாற்றம் முடிந்து மாலை நேரங்களிலும் இரவு வேளைகளிலும் காற்று வாங்க திண்ணையில் வந்து அமர்வார்கள். பகல் வேளைகளில் துவைத்த துணிகளைக் காயப் போட மாடிகளுக்கும் கொள்ளைப் புறங்களுக்கும் வருவார்கள்.

நம்முடைய ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் உறுப்பினர்களிலும் பொறுப்பு நிர்வாகிகள் உட்பட அத்துணை பேரும் இளைய தலைமுறையினர்; இளவட்டங்கள்.

இத்தகைய வாலிப வட்டங்களை வேட்டையாடுவதற்கு ஷைத்தான் தனது விஷ வலைகளை விசாலமாக விரித்து வைத்திருக்கின்றான்.

ஊரில் உள்ளவனை ஒழிப்பதற்கு ஒரு ஷைத்தான் முனைகிறான் என்றால் ஓர் ஏகத்துவவாதிக்கு ஒன்பது ஷைத்தான்கள் முற்றுகையிட்டு நிற்பார்கள்.

ஏனெனில் இவன் ஒருவன் தான் இஸ்லாத்தைத் தூய வடிவில் நிலைநாட்டப் புறப்பட்டவன்; அதற்காகப் பாடுபடுபவன்.

இவன் ஒழுக்கத்தின் ஒட்டுமொத்த உருவமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, நாணயத்தின் மறுபக்கமாக, ஏகத்துவத்தின் எஃகுக் கோட்டையாக, ஊருக்கு ஓர் உதாரண புருஷனாகத் திகழ்கின்றான்.

அதனால் இவனை வீழ்த்த ஷைத்தான் தனது படை பரிவாரங்களுடன் சுற்றி வளைக்கின்றான்.

பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்).

அல்குர்ஆன் 7:17

இந்த வசனத்தின்படி வலது, இடது என்று அனைத்துப் பக்கங்களிலும் ஷைத்தான் தாக்குதல் தொடுக்கின்றான். இதில் அவன் வீழ்ந்து விட்டால், “இவன் ஒன்றும் வித்தியாசமானவன் இல்லை, பத்தோடு பதினொன்று; அத்தோடு இவனும் ஒன்று’ என்ற எண்ணத்தை உருவாக்கி மற்றவர்களை தவ்ஹீதுக்கு வரவிடாமல் செய்வதற்கு ஷைத்தானுக்கு இது ஓர் அழகிய ஆயுதமாகி விடுகின்றது.

அதனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயீக்கள் ஷைத்தானின் இந்த விஷ வலையில் வீழ்ந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். உறுதிப்பாட்டுடன் நிற்கும் உறுதியாளர்களிடம் ஷைத்தானின் சதி வேலை பலிப்பதில்லை. அவனது சக்தி பாய்வதுமில்லை.

எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அல்குர்ஆன் 15:42

இதன்படி ஷைத்தானின் விளையாட்டு இந்த ஏகத்துவவாதிகளிடம் ஒருபோதும் எடுபடுவதில்லை.

பார்வை தடுமாற்றம்

நம்முடைய அழைப்பு மையங்களில் பணிபுரிகின்ற தாயீக்கள், எல்லாம் வல்ல அல்லாஹ்வை பயந்து, தங்களின் பார்வைகள் தடுமாற்றத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். பார்வை தடுமாறினால் பாதம் தடுமாறும். பாதை தடம் மாறி விடும். கண் போன போக்கில் கடிதம் போகும்; பின்னர் கால் போகும்.

இக்காலத்தில் கடிதம் போவதில்லை. கைபேசிகளி-ருந்து பாய்கின்ற காந்த அலைகளில் காதல் மொழிகள் பயணமாகின்றன; பரிமாறுகின்றன.

காதல் என்பது என்ன? காமத்தின் மறுபெயர் தான் காதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6243

ஏகத்துவத்தின் எஃகுக் கோட்டையாகத் திகழ்கின்ற ஓர் இளைஞனிடம் ஷைத்தான் காம வலைகள் விரித்து, எளிதாக ஒரு ஓட்டை போட்டு மிக லாவகமாக, தனக்கு லாபமாக அவனைச் சாய்த்து சரித்து விடுகின்றான். அவனைச் சந்தி சிரிக்க வைத்து விடுகின்றான். அதனால் தாயீக்கள், நிர்வாகிகள் ஷைத்தானின் சதி வலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நமது ஜமாஅத்தில் கண்ணியமாக இருந்தவர்கள், ஷைத்தானிய கன்னி வலையில் கவிழ்ந்து தான் காணாமல் போனார்கள். அதனால் கொள்கைவாதிகள், குறிப்பாக ஏகத்துவ அழைப்பாளர்கள், நிர்வாகிகள் போன்றோர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வழிதவறுவதற்குரிய வாசல்கள் என்னென்ன என்பதைக் கவனத்தில் கொண்டு அவற்றை அடைக்க வேண்டும்.

வழிதவறுகின்ற வாசல்கள்

  1. செல்போன்

வெட்டிப் பேச்சிலிருந்து விபச்சாரம் வரை கொண்டு போகின்ற கொடிய சாதனம் செல்போன் தான். இந்த போனில் பெண்களின் குரல்களில் உள்ள இயல்பான நளினம், நயம் ஓர் அபாயச் சங்கு.

மார்க்கக் கேள்வி கேட்டுத் தான் முதலில் தொடர்பு தொடங்கும். அப்புறம் குசலம் விசாரிப்புகள் தொடங்கி, அந்தப்புற அழைப்பில் போய் முடியும். அதனால் கேள்விக்குப் பதில் சொல்வதாக இருந்தாலும் சரி, குடும்பப் பிரச்சனையைச் சரி செய்யும் பஞ்சாயத்துக்களானாலும் சரி! பேசும் போது வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்று நிற்க வேண்டும்.

  1. பஞ்சாயத்து

குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கோரி நமது ஜமாஅத் தலைமையை நோக்கியும், கிளைகளை நோக்கியும் மனுக்கள் படையெடுத்து வருகின்றன. வேறெந்த ஜமாஅத்தையும் விட இவர்களிடம் நீதி, நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் பெருகி வருகின்றது. அந்தப் பஞ்சாயத்துக்கள் பல பரிமாணங்களைக் கொண்டவையாக அமையும்.

சில சமயங்களில் கணவனின் தாம்பத்திய பலவீனம் அல்லது வேறு ஏதேனும் பலவீனங்களைப் பற்றி மனைவி மனம் திறப்பாள். அதை ஒரு பிளாக்மெயில் ஆயுதமாக ஆக்கி, படுகுழியில் தள்ள ஷைத்தான் முயற்சிப்பான். அதனால் இந்தப் பஞ்சாயத்துக்களில் கவனமாக இருக்க வேண்டும். பஞ்சாயத்து என்று வருகின்ற போது ஒரு நிர்வாகி மட்டுமே இருந்து விசாரிக்கக் கூடாது. இரண்டுக்கு மேற்பட்டவர்கள் இருந்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை முடிவெடுத்துள்ளது. அதையே அனைத்து கிளைகளிலும் பின்பற்ற வேண்டும்.

  1. பெண்கள் மதரஸாக்கள்

பெண்கள் மதரஸாக்கள் நடத்துவோர் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஷைத்தான், தவ்ஹீது அழைப்பாளர்களை வெகு விரைவில் வீழ்த்தி விடும் கொலைக் களம் என்றே சொல்ல வேண்டும். இங்கு பணியாற்றக் கூடியவர்கள் பெண்களிடம் கனிந்து பேசக்கூடியவர்களாக இருக்கக் கூடாது. விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை. கடிந்து பேசக் கூடியவர்களாக, கண்டிப்புடன் நடக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கற்புக்குக் காவல் அரணாக தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனங்களைக் கருதுகின்றார்கள். அந்த நம்பிக்கைக்குக் குந்தகம் விளைவிப்பது அல்லாஹ்விடம் மாபெரும் அக்கிரமும் அநியாயமுமாகும்.

  1. மர்கஸ்களில் மகளிர்

நமது மர்கஸ்களிலும், மஸ்ஜிதுகளிலும் சில இடங்களில் ஐவேளைத் தொழுகைகளுக்கும் பல இடங்களில் ஜும்ஆ, ரமளான் மாத இரவுத் தொழுகைகளுக்கும் பெண்கள் வருகின்றனர். இங்கும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் காக்கப்பட்ட கண்ணியம் காக்கப்பட வேண்டும். இதில் ஏற்படும் தவறு காரணமாக பெண்கள் பள்ளிக்கு வருவது தடைப்பட்டால் அல்லாஹ்வின் ஆலயத்திற்கு வருவதைத் தடுத்த மிகப் பெரிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபோன்று இங்கு குறிப்பிடப்படாத இன்னும் பல்வேறு வாசல்களையும் அடையாளம் கண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தலைமையின் ஒழுக்க ரீதியிலான வழிகாட்டு நெறிகளுக்கு நேர்மாறாக நடந்து, வழிகேட்டில் வீழ்ந்தால் அதை இந்த ஜமாஅத் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

ஜாக் போன்ற சில இயக்கங்களில் பெண்கள் விஷயத்தில் சறுக்கியவர்களைப் பற்றி சுட்டிக்காட்டிய போது அவர்களை பதவியிலிருந்தும், பணியிலிருந்தும் நீக்குவதற்குப் பதிலாக பதவி உயர்வு வழங்கிக் கவுரவித்தார்கள். அதுபோன்ற செயலை இந்த ஜமாஅத் ஒருபோதும் செய்யாது. எவ்வளவு பெரிய கோபுரத்தில் இருந்தாலும் அவரை வீசியெறியத் தயங்காது என்பதை ஒவ்வொரு அழைப்பாளரும், நிர்வாகியும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

மாநபிக்கு முரணான மவ்லானா பதில்கள்

காலம் முழுதும் களா தொழுகை

கேள்வி: தொழுகையில் தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் சொல்லக்கூடாது என்பது தெரியும். தொழுகையிலோ அல்லது குர்ஆன் ஔராத் ஓதும் போதோ கொட்டாவி வந்தால் அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் சொல்லலாமா?

பதில்: தொழுகையின் இடையில் கொட்டாவி வந்தால் முடிந்த அளவு வாயைப் பொத்தி அடக்க வேண்டும். தொழுகையில் நின்ற நிலையில் இருக்கும் போது கொட்டாவி வந்தால் வலது கையின் புறங்கையைக் கொண்டும் தொழுகையின் மற்ற நிலையில் இருக்கும் போது இடது கையின் புறங்கையைக் கொண்டும் பொத்தி அடக்க வேண்டும். அவூது இஸ்திக்ஃபார் செய்யக்கூடாது.  –  மனாருல் ஹுதா, பிப்ரவரி 2013

வழக்கமாக மவ்லானாவின் பதில்களை அலசுவோம். இப்போது நாம் பதிலை அலசவில்லை. நாம் அலசப் போவது மவ்லானாவின் மவ்னத்தை!

கேள்வி கேட்பவர், “தொழுகையில் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் சொல்லக் கூடாது என்பது தெரியும்” என்று கூறி கேள்வி கேட்கிறார். அதாவது தொழுபவர் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் சொல்லக்கூடாது என்பது ஹனஃபி மத்ஹபின் சட்டம். இதை மவ்லானா அப்படியே ஆமோதிக்கின்றார்.

ஹனஃபி மத்ஹபின் இந்தச் சட்டம் சரியா என்று பார்ப்போம்.

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்‘ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள்மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் -என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.  (நூல்: முஸ்லிம் 836)

இந்த ஹதீஸில் முஆவியா பின் ஹகம் (ரலி), நபி (ஸல்) அவர்களின் ஜமாஅத் தொழுகையில் ஒருவர் தும்மி, யர்ஹமுக்கல்லாஹ் என்று சொன்னதை நபித்தோழர்கள் தங்கள் பார்வைகளால் ஆட்சேபிக்கின்றனர்.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னால் தான் கேட்பவர் யர்ஹமுக்கல்லாஹ் என்று கூற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தும்மினால், “அல்ஹம்து லில்லாஹ்‘ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) “உங்கள் சகோதரர்அல்லது “நண்பர்யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக “யர்ஹமுக்கல்லாஹ்என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) “யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்‘ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6224

இதன்படி தும்மியர் அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்ன பிறகு தான் முஆவியா பின் ஹகம் (ரலி) அவர்கள் யர்ஹமுக்கல்லாஹ் என்று சொல்லியிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைப் படிப்பவர் யாரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம், தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் யர்ஹமுக்கல்லாஹ் என்று முஆவியா பின் ஹகம் சொன்னதையும் ஆட்சேபிக்கவில்லை. ஆட்சேபணைக்குரியது அவரது பேச்சு மட்டும் தான்.

புகாரி 6224 ஹதீசுக்கு ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது பத்ஹுல்பாரியில் விளக்கமளிக்கும் போது, தொழுகையாளிகள் உட்பட அனைவரும் தும்மும் போது அல்ஹம்து லில்லாஹ் சொல்வது மார்க்கமாகும் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவிற்கு முஆவியா (ரலி) அவர்களின் ஹதீஸ் தெளிவாக அமைந்திருக்கின்றது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, தொழுகையில் தும்மியவர் அல்ஹம்து லில்லாஹ் சொல்வது மார்க்கமாகும் என்று தானாக வலிய வந்து மவ்லானா சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லாமல் மவுனம் காக்கின்றார். மாநபிக்கு எதிரான மத்ஹபு நிலைப்பாட்டை இந்த மவுனத்தின் மூலம் ஆதரிக்கின்றார். நபி (ஸல்) அவர்கள் மீது காட்டும் பாசத்தை விட, மத்ஹபுப் பாசம் தான் இவர்களிடம் மிகைத்து நிற்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது பிள்ளையையும் விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 14

இந்த ஹதீஸில் இடம்பெறும் எச்சரிக்கையை மவ்லானவிற்குச் சொல்லிக் கொள்கிறோம்.

அடுத்து ஜனவரி இதழில் வெளியான குர்ஆன், ஹதீசுக்கு முரணான ஒரு கேள்வி பதிலைப் பார்ப்போம்.

கேள்வி: எனக்கு வயது 43. பாலிகானதிலிருந்து விடுபட்ட நோன்புகளை 27 வருட நோன்புகள் ஓரிரு வருடங்கள் வைத்திருப்பேன். மீதமுள்ள களா நோன்புகளுக்குப் பகரமாக தர்மம் செய்ய முடியுமா?

பதில்: பருவ வயதை எத்திய பின் எத்தனை தொழுகைகள், நோன்புகள் தவறியுள்ளன என்று கணிப்பாகக் கணக்கிட்டு தொழுகைகளை ஒவ்வொரு நாளும், நோன்புகளை வாரத்திற்கு, மாதத்திற்கு இத்தனை என்பதாக முடிந்த அளவு களா செய்து கொண்டே வாருங்கள். அச்சமயம் எனது பருவ வயதிற்குப் பின் தவறிய தொழுகையை, கடந்து விட்ட ரமளான் நோன்பை களாவாக நிறைவேற்றுகிறேன் என்பதாக நிய்யத் வைத்துக் கொள்ளுங்கள். வாலிபம், ஆற்றல் இருக்கும் போது தொழுகைக்கோ, நோன்புக்கோ பகரமாக தர்மம் பரிகாரமாக அமையாது. களா தான் செய்தாக வேண்டும்.           (தஹ்தாவீ 259)      – மனாருல் ஹுதா, ஜனவரி 2013

மவ்லானாவிடம் கேள்வியாளர் எழுப்பிய கேள்வி, நோன்பு களாச் செய்வது பற்றித் தான். ஆனால் இவரோ வலிய வந்து தொழுகையின் களா பற்றியும் சேர்த்துச் சொல்கின்றார்.

தொழுகை விஷயத்தில் அல்லாஹ்வோ, அவனது தூதரோ வழங்காத தீர்ப்பை இந்த மவ்லானா எப்படி வழங்கத் துணிந்தார்?

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்ôவின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது😉 அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2155

களா தொழுகை என்பது குர்ஆனிலோ, ஹதீஸிலோ அறவே கிடையாது. தொழுகையை களா செய்யும் வாய்ப்பையும், வாசலையும் அல்லாஹ் அடைத்து விட்டான்.

ஒரு உளூச் செய்யத் தண்ணீர் இல்லையெனில் தயம்மும் செய்து தொழ வேண்டும்.

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.  (அல்குர்ஆன் 5:6)

பயணத்தில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைப்படி தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம்.

லுஹர், அஸர் ஆகியவற்றையும் மக்ரிப், இஷா ஆகியவற்றையும் சேர்த்தும் தொழுது கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் விரைவாக பயணம் புறப்பட நேரிட்டால் மஃக்ரிப் தொழுகையைப் பிற்படுத்துவார்கள். (மஃக்ரிபைச் சுருக்கித் தொழாமல்) மூன்று ரக்அத்களாகவே தொழுது சலாம் கொடுப்பார்கள். பின்னர் சிறிதே இடைவெளிவிட்டு இஷாத் தொழுகைக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்களாக அதை(ச் சுருக்கி)த் தொழுவார்கள். பின்னர் சலாம் கொடுப்பார்கள். இஷாத் தொழுகைக்குப் பிறகிலிருந்து நடு இரவில் அவர்கள் (தஹஜ்ஜுத் தொழுகைக்காக) எழும் வரை உபரியான தொழுகைகள் எதையும் தொழ மாட்டார்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 1092

நின்று தொழ இயலவில்லையானால் உட்கார்ந்து தொழவேண்டும்; உட்கார்ந்தும் தொழ முடியவில்லை என்றால் படுத்துக் கொண்டு தொழலாம்.

எனக்கு மூலவியாதி இருந்தது. அகவே நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் “நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக!என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: புகாரி 1117

இவை அனைத்துமே தெளிவாகத் தெரிவிப்பது ஒன்றே ஒன்று தான். அது தொழுகைக்கு களா இல்லை என்பது தான்.

அந்தந்த நேரத்தில் தொழ வேண்டும் என்று 4:103 வசனத்தில் அல்லாஹ் கடுமையாகக் கூறியிருந்தும் ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் உரிய நேரத்தில் தொழுதாக வேண்டும் என்று கண்டிப்பாக உணர்த்தியிருந்தும் சிலர் ‘களா’வாகத் தொழுகின்றேன் என்று கூறி இஷாவுக்குப் பிறகு நின்று கொண்டு சுபுஹ் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை மொத்தமாகத் தொழுது கடனைக் கழித்து கணக்கைத் தீர்க்கின்றனர்.

இப்படி அல்லாஹ்வின் சட்டங்களைக் கேலிக் கூத்தாக்குவதற்குக் காரணம், ஒரு வேளையில் தொழுகையை விட்டு விட்டால் மறுவேளையில் தொழுது கொள்ளலாம் என்பது போன்ற சட்டங்களைச் சொல்வதால் தான்.

“தொழுகையை இவ்வாறு களாச் செய்யலாம் என்று சொல்வது நல்ல நோக்கத்திற்காகத் தான். ஓர் அடியான் தன் மீது கடமையாகி விட்ட தொழுகையை விட்டு விட்டால் அது கடனாகி விடுகின்றது.  கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி கட்டாயமோ அதுபோல் செலுத்தியாக வேண்டும். இல்லையேல் அல்லாஹ் தண்டித்து விடுவான் என்பதற்காகத்தான் களாத் தொழுகை உண்டு என்று கூறுகின்றோம்’ என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றனர்.

மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். ”இவ்வளவு நாளும் தொழாமல் இருந்து விட்டோமே, சரி இன்றையிலிருந்து இனிமேலாவது ஒழுங்காகத் தொழுவோம்” என்ற நல்ல முடிவிற்கு ஒருவன் வந்து, மார்க்க அறிஞரிடம் ஃபத்வா கேட்கின்றான்.  இன்றையிலிருந்து நான் தொழப் போகின்றேன், இதுவரை நான் விட்ட தொழுகைகளின் நிலை என்ன? என்று கேட்கின்றான்.

இந்தக் கேள்வியாளர் போன்று 43வது வயதில் ஒருவர் திருந்தி, மனம் வருந்தி வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம். 16 வயதில் அவர் பருவமடைந்திருந்தால் 27 ஆண்டுகள் தொழுகையைக் களாச் செய்ய வேண்டிய நிலை ஏறப்படும். இந்த 27 ஆண்டு கால தொழுகையைத் தொழ வேண்டும் என்று சொன்னால் இதைத் தாங்க முடியாமல் வந்த பாதையை நோக்கித் திரும்பி விட நேரிடும். அந்தப் பாவம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்த மவ்லானாவுக்குத் தான் பதிவாகும்.

இந்தத் தீர்ப்பு தொழப் போகின்றேன் என்று திருந்தி வந்தவருக்கு திருப்பு முனையாக அமையவில்லை.  திருந்தி, வருந்தி வந்தவரின் நம்பிக்கையை அறுத்து விடும் கத்தி முனையாக அமைந்து விட்டது.  இவ்வளவு நாட்கள் நிலுவையாகக் குவிந்து கிடக்கும் தொழுகைகளுடன் இனிமேல் உள்ள தொழுகைகளும் கிடந்து விட்டுப் போகட்டும் என்று வந்த வழியைப் பார்த்து திரும்பி விடுகின்றார்

இதுதான் நல்ல நோக்கத்தின் பின்னால் புதைந்து கிடக்கும் பேராபத்தாகும். அப்படியானால் களா தொழுகையே இல்லையா? இவ்வளவு நாளும் தொழாமல் 20 வருடங்களாகத் தேங்கிப் போனவருக்கு வழி வகை என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் நோன்பு மாதம் வந்து, ஒருவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் ரமலான் மாதம் அல்லாத வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று நோன்பை களாச் செய்யுமாறு கூறுகின்றான்.

இப்படி நோன்பில் களாச் செய்யுமாறு கூறிய இறைவனுக்கு, தொழுகையில் களாவைப் பற்றி சொல்லத் தெரியாதா?  நிச்சயமாக அவன் ஞானமிக்கவன்.

தொழுகையில் அல்லாஹ் களாவை விரும்பவில்லை.  அவ்வப்போது உடனே தொழவேண்டும் என்று உறுதியாகக் கட்டளையிடுகின்றான்.  ஒரு மனிதன் போர்க்களத்தில் நின்றாலும் தொழுதாக வேண்டும்.  இதை அல்லாஹ் தன் திருமறையில் 4:102 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.  இந்த வசனத்தில் போர்க்களத்தில் எப்படித் தொழ வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு விட்டுப் பின்னர், தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று கூறுகின்றான்.

நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலைநாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்ற இடம் உண்டென்றால் அது போர்க்களம் தான்.  எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிடத் துடிக்கும் அந்தக் கட்டத்தில் கூட தொழுகையை விடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுவதிலிருந்து களாத் தொழுகை என்பது இஸ்லாத்தில் அறவே அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை விளங்கலாம்.

எனவே தொழுகையைக் களாச் செய்வதற்கு வல்ல அல்லாஹ் எந்தவிதமான வழியையும் விட்டு வைக்கவில்லை. அந்தந்த நேரத்தில் உரிய தொழுகையைக் கண்டிப்பாகத் தொழுதாக வேண்டும்.  களாத் தொழுகை என்ற ஒன்று இருக்கின்றது என்று சொல்வதால் தான் மக்களிடம் அலட்சியம் ஏற்படுகின்றது. அதனால் தொழுகையை விட்டு விட்டு களாவாக, பதினேழு ரக்அத்துகளையும் மொத்தமாகத் தொழும் நிலைக்குச் சென்று விடுகின்றார்கள்.  சினிமாவுக்குச் செல்வதற்காகத் தொழுகையை விட்டு விட்டு, சினிமா முடிந்த பின்னர் மூன்று வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர்களும் உண்டு.

ஒரு நேரத் தொழுகையை வேண்டுமென்று விடுவது இறை நிராகரிப்புக்குக் கொண்டு செல்லும் பெரும் பாவம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் உணரத் தலைப்பட்டு அந்தந்த நேரத்தில் அந்தந்த தொழுகையை நிலைநாட்டுவார்கள்.

ஒருவர் தனக்குத் தொழுகை கடமையான நாளிலிருந்து 20 வருடங்களாகத் தொழவில்லை என்றால் அதற்காக அவரது மனம் வருந்துகின்றது.  அவர் 15 வயதிலிருந்து விட்ட தொழுகையை எல்லாம் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.  இதற்குப் பரிகாரம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது தான். எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக் காத்திருக்கின்றான்.

அவர்களுக்குப் பின்னர் வழித்தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் நட்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 19:59, 60)

அல்லாஹ் இப்படி ஒரு விசாலத்தைத் தன் அடியார்களுக்கு வழங்கியிருக்கும் போது அதில் இந்த அறிஞர்கள் குறுக்கிட்டு, திருந்தி வருபவர்களிடம் களா எனும் பெரும் பாரத்தை ஏற்றி அவர்களை விரக்தியாளர்களாக, அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடையக் கூடியவர்களாக ஆக்கி விடுகின்றனர். இப்படி ஒரு நெருக்கடியை, மனந்திருந்தி வரும் அடியார் மீது திணிப்பதற்காக அல்லாஹ்விடம் இந்த மார்க்க அறிஞர்கள் பதில் கூறவேண்டும்.

ஒருவர் தொழாமல் தூங்கி விட்டால் தூக்கத்திலிருந்து விழித்ததும் தொழலாம்.  அல்லது மறந்து போய் தொழாமல் இருந்து விட்டால் நினைவு வந்ததும் தொழவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பியபோது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள் “பிலால்!என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்)தான் என்னையும் தழுவிக்கொண்டதுஎன்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். 

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், “தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!‘ (20:14) என்று கூறுகின்றான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம் 1097, அபூதாவூத்

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். சூரியன் உதித்த பிறகு தான் விழிக்கின்றார்கள். எழுந்ததும் உடனே அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கடந்து சென்று தொழுகை நடத்துகின்றார்கள். தொழுது முடித்து விட்டு, ”மறந்தவர்கள் நினைவு வந்ததும் தொழுங்கள்” என்று சொல்கின்றார்கள்.

இன்னொரு ஹதீஸில், ”யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகின்றாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அனஸ் (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு, முஸ்லிமில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து தூக்கம், மறதி ஆகியவற்றின் காரணமாக தொழுகை தாமதமாகி விட்டால் அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான்.  ஏனெனில் இவை இரண்டுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள்.  அதற்காக அலாரத்தை அணைத்து விட்டு வேண்டுமென்றே சுபுஹ் தொழாமல் தூங்குபவருக்கு இது பொருந்தாது.  எதுவுமே தெரியாத அளவுக்குத் தூங்கி விட்டால் அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். இந்த இரண்டு காரணங்களைத் தவிர்த்து சுய நினைவுடன் தொழுகையை விடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

“அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள்.”

நூல்: புகாரி 2731 & 2732

இது அதாரப்பூர்வமான ஹதீஸா? ஆதாரமான ஹதீஸ் என்றால் இது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இல்லையே ?

ஜாஹிர் அஹமத்

பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்த ஹதீஸாக இருந்தாலும் அது திருக்குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளுக்கும் மாற்றமாக இருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்ற நிலையை அடையாது. குறிப்பிட்ட நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் அல்லது அதைச் சொல்பவர் நம்பகமானவர் என்பது மட்டும் ஒரு ஹதீஸை ஆதாரப்பூவமானதாக ஆக்கிவிடாது.

நீங்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸ் பல பக்கங்களைக் கொண்ட நீண்ட ஹதீஸாகும். ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், எதிரிகளுக்கும் நடந்த உரையாடலும் ஒப்பந்தமும் அதில் இடம் பெற்றுள்ளன.

எதிரிகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த உர்வா பின் மஸ்வூத் என்பவர் அதாவது முஸ்லிமல்லாத ஒருவர் கூறியதாக நீங்கள் சுட்டிக் காட்டும் கருத்து இடம் பெற்றுள்ளது.

பிறகு உர்வா பின் மஸ்வூத், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களைத் தமது இரு கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்கிறார்கள். நபியவர்கள் அவர்கள் உளூ செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் சென்று விடுகிறார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), நூல்: புகாரி 2731

இது தான் நீங்கள் குறிப்பிடும் செய்தி. இதில் அறிவிப்பாளர்கள் ரீதியாக எந்தக் குறையும் இல்லை. என்றாலும் இது முஸ்லிமல்லாதவரின் கூற்றாகத் தான் இடம் பெற்றுள்ளது. ஒருவருக்கு முழுமையாகக் கட்டுப்படும் மக்களைக் காணும் போது இவரது சளியைக் கூட மேனியில் பூசிக் கொள்பவர்கள் என்று மிகைபடக் கூறும் வழக்கம் உள்ளது.

வெள்ளை வெளேர் நிறத்தில் உள்ளவரைப் பற்றி கூறும் போது இவரின் வெளிச்சம் இருக்கும் போது விளக்கு தேவைப்படாது என்று கூறுவது போல் இதையும் புரிந்து கொள்ள வேண்டும். நபித்தோழர்கள் நபிக்குக் கட்டுப்பட்டதைக் கண்டு வியந்த உர்வா பின் மஸ்வூத் என்பார் இவர் சளியைத் துப்பினால் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் அதைத் தாங்குவார்கள் போல் உள்ளதே என்று மிகைபடக் கூறினார் என்று இதை எடுத்துக் கொண்டால் இதற்கு நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது. அதிகம் கட்டுப்படுகிறார்கள் என்ற கருத்தைத் தான் கொள்ள வேண்டும்.

இது போல் வருகின்ற செய்திகள் அனைத்தையும் இப்படிப் புரிந்து கொண்டால் இதில் மார்க்க அடிப்படையில் குறைகாண முடியாது. இப்படி கருத்து கொண்டால் இது ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் தேவை இல்லை.

அவ்வாறு இல்லாமல் நிஜமாக நபிகள் நாயகம் எச்சிலைத் துப்பும் போது அதைப் பிடித்து உடல் முழுவதும் பூசிக் கொண்டார்கள் என்று நேரடியான கருத்து என்று எடுத்துக் கொண்டால் அப்போது இது ஆதாரமற்ற செய்தி என்ற நிலைக்கு இறங்கி விடும்,

இந்தக் கருத்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், திருக்குர்ஆன் போதனைக்கும் ஏனைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாகவும் ஆகிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் ஒட்டு மொத்த அறிவுரைகள் மூலம் நாம் அறிந்து வைத்துளோம். இது போல் அவர்கள் முன்னால் நடந்து இருந்தால் அதைக் கண்டு வெறுப்பவர்களாகத் தான் அவர்கள் இருந்திருப்பார்கள். மனிதன் இயல்பாகவே அருவருப்படையும் செயலை தன் முன்னால் தனக்காகச் செய்யும் போது அதைக் கண்டு மகிழ்வது அவர்களின் நற்பண்புகளுக்கும் பொருந்தவில்லை.

நபியின் இந்தப் பொதுவான பண்புகளைக் கூறும் எல்லா ஆதாரங்களுடனும் இந்தச் செய்திக்கு நேரடிப் பொருள் கொடுத்தால் அது மோதுகிறது.

நபிகளார் எந்த ஒரு சமயத்திலும் தான் புகழப்பட வேண்டும், தனக்கு ஏனையோர் மரியாதை செய்ய வேண்டும் என்று விரும்பியதில்லை. ஆதலால் தான் தனக்காக எழுந்து நிற்பதைத் தடை செய்து பிறர் தனக்காக எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்புவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அமருங்கள்என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்.

நூல்கள்: திர்மிதி 2769, அபூதாவூத் 4552

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

நூல்கள்: அஹ்மத் 12068, 11895, திர்மிதீ 2678

நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். தனக்காக எழுந்து நிற்பதையே வெறுத்த நபிகள் நாயகம் தமது சளியை மக்கள் முகத்தில் பூசிக் கொள்வதை அனுமதித்திருப்பார்களா? இது எழுந்து நின்று மரியாதை செய்வதை விடவும் மிக மோசமானதும், அருவருக்கத்தக்கதும் இல்லையா? சுயமரியாதையை வலியுறுத்திப் போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தொண்டர்களின் சுயமரியாதைக்குப் பெரிதும் இழுக்கான இக்காரியத்தை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக் கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் எனவும் கூறினார்கள்.  (நூல்: தப்ரானி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, ‘வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காகக் குடிதண்ணீர் வாங்கி வாஎன்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தத் தண்ணீரையே தாருங்கள்எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரேஎன்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்என்று கூறினார்கள்.  (நூல்: புகாரி 1636)

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். ‘சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

பார்க்க: நூல் இப்னு மாஜா 3303

சாதாரண இந்த மரியாதையையே ஏற்றுக் கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் தமது சளியைப் பிறர் முகத்தில் பூசி தனக்கு மரியாதை செய்வதை ஏற்றிருப்பார்களா? இப்படி மெய்யாகவே நடந்திருந்தால் இதைக் கண்டிக்காமல் மௌனியாக இருந்திருப்பார்களா?

நானும் மனிதனே ‘எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்’ என்று அழுத்தம் திருத்தமாக நபிகள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். “இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து “நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?’ எனக் கேட்டார்கள். “மாட்டேன்என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி),  நூல்: அபூதாவூத் 1828

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே!என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்என்றார்கள்.  (நூல்: அஹ்மத் 12093)

கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள்என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.  (நூல்: புகாரி 3445)

நபிகளாரின் சளியை மக்கள் தங்கள் முகத்தில் பூசிக் கொண்டு நபிகள் நாயகத்தின் தகுதியை விடவும் உயர்த்தும், வரம்பு மீறிய மரியாதையை அளிக்கும் இச் செயலை நபிகளார் அனுமதித்திருப்பார்களா?

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68:4)

நற்குணத்தை விரும்பும் நாமே இதைச் சகிக்க மாட்டோம் எனில் உயர்ந்த நற்குணத்தில் இருக்கிற நபிகளார் இதை எப்படி சகித்திருப்பார்கள்? நபிகளாரின் சளியை ஸஹாபாக்கள் தங்கள் முகத்தில் தேய்த்ததாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் அதன் நேரடிப் பொருளில் சொல்லப்பட்டு இருந்தால் இச்சம்பவம் குர்ஆன், ஹதீஸ் முழுதும் சொல்லப்பட்டிருக்கும் நபிகளாரின் நற்குணத்திற்கு எதிராக, மாமனிதர் என்ற நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது.

அதுமட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சளியை அருவருக்கத்தக்கது என்று சொல்லியிருக்கிறார்கள்.

கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும் போது “அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்அல்லது “அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்‘. ஆகவே, எவரும்  தமது கிப்லாத் திசை நோக்கிக்  கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும்என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் ரலி,  நூல்: புகாரி 405

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளி வாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் “மூக்குச் சளியைஅல்லது “எச்சிலைஅல்லது “காறல் சளியைக் கண்டார்கள். உடனே அதை சுரண்டி (சுத்தப்படுத்தி)விட்டார்கள்..

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),   நூல்: புகாரி 407

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் சளியை உமிழ்வதாக இருந்தால் அது முஸ்லிமின் மேனியில் பட்டு அல்லது அவரது ஆடையில் பட்டு அவருக்கு தொல்லை தராதவாறு சளியை மறைக்கட்டும் என நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ், நூல்: அஹ்மத் 1461

சளி அருவருக்கத்தக்கது என்றும் அது யாருடைய மேனியிலும் பட்டுவிடாதவாறு எச்சில் உமிழுமாறும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். நமது எச்சில், சளி பிறருடைய மேனியிலோ, ஆடையிலோ படுவது அவருக்குத் தொல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.  மேலும் நபியவர்கள் சுத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதை ஏராளமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களில் காண்கிறோம்.  இவை அனைத்துக்கும் மாற்றமாக நிச்சயம் நபித்தோழர்கள் செய்திருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.

—————————————————————————————————————————————————————-

சிகரத்தில் சவூதிப் பெண் சாதனையா? சாபமா?

கடந்த மே 18ஆம் தேதியன்று ஊடகங்களை ஒரு முக்கியச் செய்தி ஆக்கிரமித்திருந்தது. அது சவூதி அரேபியாவைப் பற்றித் தான். அதிலும் குறிப்பாக சவூதிப் பெண் பற்றித் தான்.

இவ்வாறு சொல்கின்ற போது சவூதிப் பெண்களுக்கு ஷரீஅத் விதித்திருக்கும் கட்டுப்பாட்டைப் பற்றிய விமர்சனமாக இது இருக்கும் என்று படிப்பவர்களுக்கு பரபரப்பான ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இந்தச் செய்தி அந்த ரகத்தைச் சார்ந்ததல்ல.

ஒரு சவூதிப் பெண் இஸ்லாமியப் பண்பாட்டிற்கும் ஷரீஅத்தின் கட்டுப்பாட்டிற்கும் நேர் எதிர்த் திசையில் செய்கின்ற பயணம் தொடர்பான செய்தி தான் அது.

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

அல்குர்ஆன் 2:120

இன்னோர் இடத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.

நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 2:109

யூத, கிறித்தவ சக்திகள் முஸ்லிம்கள் தங்களைப் போன்று ஆகிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றனர். அப்போது தான் முஸ்லிம்களும் அவர்களும் ஒரு கோட்டில் சமமாகவும் கொள்கையில் சமரசமாகவும் ஆகிவிடுவார்கள் அல்லவா?

அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்என்று அவர்கள் விரும்புகின்றனர்.

அல்குர்ஆன் 4:89

ஜித்தாவை சொந்த ஊராகக் கொண்டு, துபையில் பயில்கின்ற 25 வயது மாணவி ரஹா முஹர்க்க என்பவர் உலகின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கின்றாள். இந்த வகையில் சவூதிப் பெண் மகுடம் பெற்றிருக்கின்றாள்.

மனம் பூரிக்க, அங்கங்கள் புடைக்க, கைகளை உயர்த்தி மலை மேல் நின்று அவள் கொடுக்கின்ற போஸ், கருப்புக் கூந்தலைக் காற்றில் அலைய விட்டு அவள் காட்டுகின்ற ஆர்ப்பாட்டமான காட்சி உலக முஸ்லிம்களை முகம் சுளிக்க வைக்கின்றது.

பொதுவாக மலை ஏறுவதில் இரு வகைகள் உள்ளன.

ஒன்று ஆய்வு நோக்கம். இதற்காக ஒருவர் பயணம் மேற்கொள்கின்றார். மார்க்க அடிப்படையிலும் உலக அடிப்படையிலும் இதை வரவேற்கலாம். அத்தகைய பயணத்தை ஊக்கப்படுத்தலாம்; உற்சாகப்படுத்தலாம்.

மற்றொன்று, ஆவண நோக்கம். அதாவது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தன் பெயர் பதிவாவதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்வதாகும். இது சுத்த பைத்தியக்காரத்தனம்; பித்துக்குளித்தனம். இத்தகையவர்கள் கால நேரத்தின் அருமை தெரியாத முட்டாள்கள்.

இப்படிப்பட்ட வகையைச் சார்ந்தது தான் இந்த ஆர்ப்பாட்டப் பெண்ணின் அர்த்தமற்ற பயணம்; அடாவடிப் பயணம்.

இந்தப் பயணத்தில் இஸ்லாத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் கழற்றி எறிந்து விட்டார்.

  1. இந்தப் பெண், கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்தானி, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ராயித் ஜைதான், ஈரானைச் சேர்ந்த மஸ்வூத் முஹம்மத் ஆகிய மூன்று ஆடவருடன் பயணம் செய்திருக்கின்றாள்.

எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1082

நபி (ஸல்) அவர்களின் கட்டளையை எந்த உறுத்தலுமின்றி மீறியிருக்கின்றார்.

  1. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் 24:31

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:59

இந்த இறை வசனங்களின் கட்டளையையும் மீறியிருக்கின்றார்.

  1. உடைக் கட்டுப்பாடு, உரிய உறவினருடன் பயணம் செய்தல் அனைத்தையும் மீறி மேற்கொள்கின்ற பயணம் அறியாமைக் காலத்துப் பயணமாகும்.

இப்படிப்பட்ட பயணத்திற்கு அல்லாஹ் தடை விதித்திருக்கின்றான்.

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!

அல்குர்ஆன் 33:33

இந்த வகையில் அல்லாஹ்வின் இந்தத் தடையையும் இந்தப் பெண் மீறியிருக்கின்றாள்.

இந்த லட்சணத்தில் ஷார்ஜா விமான நிலையத்திற்கு வந்ததும் இவளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, “பெண்கள் தங்களுக்குத் தாங்களே சவால்களாகத் திகழ வேண்டும்” என்று அறிவுரை வேறு வழங்கியிருக்கின்றாள்.

ஒரு பெண் உலகின் உயர்ந்த மலை உச்சிக்குச் செல்வது சாதனையல்ல. அது ஒரு சாபம். ஒரு பெண் ஒழுக்கத்தின் உச்சிக்குச் செல்ல வேண்டும். அது தான் நபி (ஸல்) அவர்கள் கண்ட, காணச் செய்த முஸ்லிம் பெண்ணின் இலக்கணம்.

சவூதியில் பெண்கள் மீதுள்ள ஷரீஅத் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றது. இது உலக ஊடகங்களுக்கு உற்சாகமாகவும், உத்வேகமாகவும் அமைந்திருக்கின்றது. அதனால் சவூதிப் பெண்ணின் இந்த சாபக்கேட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு மகிழ்கின்றன. இதற்குக் காரணம் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் விரச சிந்தனையைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

—————————————————————————————————————————————————————-

தொடர்: 5

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

அப்துந் நாசிர், கடையநல்லூர்

முந்தைய  இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல், ஜமாஅத்தாகத் தொழுதல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம்.

இந்த இதழிலும் ஜமாஅத்தாகத் தொழுவதால் நமக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம்.

நாம் ஜமாஅத்தாகத் தொழும் போது வரிசையாக நின்று தொழும் பாக்கியத்தைப் பெறுகின்றோம். இவ்வாறு வரிசையாக நின்று தொழுவது நமக்குப் பல நன்மைகளைப் பெற்றுத் தருகிறது. தொழுகையை ஜமாஅத்துடன் பேணித் தொழுபவர்கள் இந்த நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். நாம் வரிசையாக நின்று தொழுவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் காண்போம்.

தொழுகைக்காக அணிவகுத்து நிற்பதின் சிறப்புகள்

வானவர்களைப் போன்ற அணிவகுப்பு

நாம் ஜமாஅத்துடன் கடமையான தொழுகைகளை நிறைவேற்றும் போது இறைவனுக்கு முன்னால் மலக்குமார்கள் அணிவகுத்து நிற்பதைப் போன்று அணிவகுக்கின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம். நாம் இறைவனுக்கு முன்னால் பணிவுடன் அணிவகுத்து நிற்பதன் மூலம் அல்லாஹ் தனது அருட்கொடைகளை நமக்கு வாரி வழங்குகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப் போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள்என்று கூறினார்கள். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்?” என்று கேட்டோம். அதற்கு “வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் (இடைவெளி விடாமல்) நெருக்கமாக நிற்பார்கள்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் சமுரா (ரலி)

நூல்: முஸ்லிம் (736)

முதல் வரிசையைப் பூர்த்தி செய்த பிறகு இரண்டாவது வரிசையை ஆரம்பம் செய்தால்தான் மலக்குமார்களுக்கு ஒப்பாக நாம் அணிவகுத்து நிற்க முடியும்.

இன்றைக்குப் பல பள்ளிகளில் வரிசைகளில் நிற்கும் ஒழுங்கினை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. ஒருவர் மற்றொருவருக்கு மத்தியில் மிகவும் இடைவெளி விட்டு நிற்பது, மேலும் முதல் வரிசையில் இடம் இருக்கும் பொழுதே இரண்டாம் வரிசையை ஆரம்பம் செய்வது போன்ற நடைமுறைகள் சர்வ சாதரணமாகக் காணப்படுகிறது. இது போன்ற ஒழுங்கீனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நபியவர்கள் கூறியதைப் போன்று முதல் வரிசையைப் பூர்த்தி செய்த பின் இரண்டாவது வரிசை ஆரம்பம் செய்தால் தான் நாம் முழுமையான நன்மைகளை அடைய முடியும்.

வரிசைகளில் இடைவெளி கூடாது

வரிசைகளில் இடைவெளி விட்டு தனித்தனியாக நிற்பதை நபியவர்கள் மிகவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் (ஒருவருக்கொருவர்)  இடைவெளி  விட்டு நிற்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அல் முஃஜமுல் கபீர் (11289 பாகம் : 9 பக்கம் ; 390)

மஜ்மவுஸ் ஸவாயித் (2505 பாகம் : 2 பக்கம் : 109)

சிறந்த வரிசை

ஆண்களும், பெண்களும் சேர்ந்து தொழுகின்ற பள்ளிகளில் ஆண்கள் முதல் வரிசையில் நிற்பதன் மூலமும், பெண்கள் அவர்களுக்குரிய கடைசி வரிசையில் நிற்பதன் மூலமும் சிறந்த வரிசையில் நிற்கின்ற பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (749)

இன்றைக்குப் பெரும்பாலான பள்ளிகளில் நபியவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக பெண்கள் பள்ளிக்கு வருவதற்குத் தடை விதிக்கின்றனர். இது மாபெரும் வழிகேடு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

அறிவில் சிறந்தவர் இமாமிற்கு அருகில் நிற்பதும் அமைதியைப் பேணுவதும்

ஜமாஅத்தில் நாம் வரிசையில் அணிவகுத்து நிற்பதற்குரிய அழகிய வழிமுறைகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். நாம் அவற்றைப் பேணி நடப்பதன் மூலம் முழுமையான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.

இமாமிற்கு அருகில் மார்க்கச் சட்டங்களை அறிந்தவர்கள் நிற்க வேண்டும். அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் அடுத்தடுத்த வரிசைகளில் நிற்க வேண்டும்.

அது போன்று அணிவகுத்து நிற்கும் போது கூச்சலிடுவதோ, சப்தமிடுவதோ கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் அறிவிற் சிறந்தவர் எனக்கு அருகில் (தொழுகையில் முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் (அடுத்த வரிசையில்) நிற்கட்டும். (இதை மூன்று முறை கூறினார்கள்.) மேலும், (தொழுகைக்கு ஒன்றுகூடும்போது) கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் (740)

முதல் வரிசையின் சிறப்புகளும், நன்மைகளும்

முதல் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டி

முதல் வரிசையில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் மாபெரும் பாக்கியங்களை வாரிவழங்குகிறான்.  அல்லாஹ் இதற்காக வாரி வழங்கும் நன்மைகள் நம்முடைய கண்களுக்குத் தெரிவதில்லை. அப்படி அல்லாஹ் நமக்கு அதனை அறிய வைத்தான் என்றால் அந்த நன்மைகளை அடைவதற்காகப் போட்டி ஏற்பட்டு, சீட்டு குலுக்கி முன்வரிசையில் நிற்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மாபெரும் பாக்கியத்தை அல்லாஹ் முன்வரிசையில் நின்று தொழுபவர்களுக்கு வாரிவழங்குகிறான்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (615), முஸ்லிம் (746)

இத்தகைய மாபெரும் நன்மைகளை அடையும் விஷயத்தில் இன்றைக்கு நாம் எவ்வளவு பொடும்போக்காக இருக்கின்றோம் என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இன்றைக்குப் பல பள்ளிகளில் தொழுகை ஆரம்பிக்கும் போது இரண்டு மூன்று நபர்களைத் தவிர வேறு யாரும் இருப்பதில்லை. பலர் தாமதமாகத் தான் தொழுகையில் வந்து இணைகின்றனர். நம்முடைய கவனமின்மையினால் நாம் எத்தகைய பாக்கியத்தை இழக்கின்றோம் என்பதைக் கவனத்தில் கொண்டு இது போன்ற நன்மைகளை அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

அல்லாஹ் மற்றும் மலக்குமார்களின் ஸலவாத்

முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். இன்னும் மலக்குமார்களும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டுகிறார்கள்.

பரா பின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதி வரை சென்று (தொழுகைக்காக அணிவகுத்து நிற்பவர்களின்) நெஞ்சுகளையும், தோள் புஜங்களையும் (நேராக இருக்குமாறு) சரி செய்வார்கள். மேலும் “(முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்என்று கூறுவார்கள். மேலும் “அல்லாஹ்வும், மலக்குமார்களும் முன்வரிசைகளில் உள்ளவர்கள் மீது ஸலாவாத்துக் கூறுகின்றனர்என்றும் கூறுபவர்களாக இருந்தனர்.

நூல்: அஹ்மத் (18539)

அல்லாஹ் ஸலவாத்து கூறுகிறான் என்றால் முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான் என்பதாகும். மலக்குமார்கள் ஸலவாத்து கூறுகிறார்கள் என்றால் முன்வரிசைகளில் நின்று தொழுபவர்களுக்கு அல்லாஹ்விடம் அருள்புரியுமாறு பிரார்த்தனை செய்கின்றனர் என்பதாகும்.

உள்ளங்கள் ஒருங்கிணையும் பாக்கியம்

ஜமாஅத் தொழுகையில் ஒருவருக்கொருவர் முரண்படாமல் நேராக அணிவகுத்து நின்று தொழுவதன் மூலம் உள்ளங்களுக்கு மத்தியில் அல்லாஹ் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறான். இந்தப் பாக்கியத்தை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுபவர்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், “நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். உங்களில் அறிவிற்சிறந்தவர்கள் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும்என்று கூறுவார்கள்.

தொடர்ந்து அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கடுமையான கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.

நூல்: முஸ்லிம் (739)

முதல் வரிசையும் மூன்று முறை பிராரத்தனையும்

திண்ணை ஸஹாபாக்களில் ஒருவரான இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முதலாவது வரிசைக்கு மூன்று முறையும், இரண்டாவது வரிசைக்கு ஒரு தடவையும் ஸலவாத் (பிரார்த்தனை) சொல்லக்கூடியவர்களாக இருந்நனர்

நூல்: அஹ்மத் (17196, 17202)

வரிசையில் பிந்தியவர்கள் மறுமையிலும் பிந்தியவர்களே!

தொழுகையாளிகள் அனைவருக்கும் மறுமையில் சிறந்த பரிசு இருக்கிறது. அதே நேரத்தில் பள்ளிக்கு முன்கூட்டியே வரும் சிலர் வரிசையில் வேண்டுமென்றே பிற்பகுதிக்குச் செல்வார்கள். இவ்வாறு முன்கூட்டியே வருபவர்கள் பின்வரிசையை நாடிச் செல்வது மறுமையில் நம்மை பிந்தச் செய்யக்கூடியதாகும்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது “முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (மறுமையில்) பின்தங்கச் செய்துவிடுவான்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (747)

மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலர் பள்ளிவாசலின் பிற்பகுதியில் (நிற்பதைக்) கண்டார்கள்…” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

நூல்: முஸ்லிம் (747)

அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களிடத்தில் (வரிசையில்) பின்தங்குவதைக்  கண்டார்கள். அவர்களை நோக்கி முந்தி வாருங்கள்! என்னைப் பின்பற்றுங்கள். உங்களுக்கு பின்னால் உள்ளவர்கள் உங்களைப் பின்பற்றட்டும். ஒரு கூட்டம் பின்னோக்கி சென்று கொண்டேயிருந்தால் அல்லாஹ் அவர்களை மறுமையில் பிந்தச் செய்து விடுவான்என்று கூறினார்கள்.

நூற்கள்  அஹ்மத் (11310)

வேண்டுமென்றே பின்வரிசையை நாடினால்…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு கூட்டத்தார் (வேண்டுமென்றே) முன் வரிசையிலிருந்து பின்தங்கிக் கொண்டேயிருந்தால் இறுதியாக அல்லாஹ் அவர்களை நரகத்தில் பின்தங்கச் செய்துவிடுவான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் ( 679)

வரிசையின் வலது புறம் நிற்பது சிறந்ததா?

தொழுகை வரிசையின் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வும், மலக்குமார்களும் (தொழுகை) வரிசைகளில் வலதுபுறத்தார்கள் மீது ஸலவாத்துக் கூறுகின்றனர்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் (578)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “உஸாமா பின் ஸைத்’ என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.

”இவர் ஒரு பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்ல” என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார்கள்.

யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்கள்.

”இவருடைய ஹதீஸ்கள் எழுதிக் கொள்ளப்படும். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது” என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்கள்

”இவர் உறுதியானவராக இல்லை” என இமாம் நஸாயீ கூறுகிறார்.

”இமாம் முஸ்லிம் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவருடைய ஹதீஸ்களை துணைச் சான்றாகவே பதிவு செய்துள்ளார்கள்” என இப்துல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1 பக்கம் 183)

மேலும் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் ”முஆவியா இப்னு ஹிஸாம்” என்றொரு அறிவிப்பாளரும் இடம்பெறுகிறார். இவரையும் இமாம்கள் குறைகூறியுள்ளனர். எனவே இவரும் பலவீனமானவர் ஆவார்.

வரிசைகளில் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாக இருப்பத்ôல் வலது புறத்தில் நிற்பதும், இடது புறத்தில் நிற்பதும் சமமே.

ஆனால் இமாமுடன் தொழுபவர் ஒருவராக மட்டும் இருந்தால் அவர் இமாமின் வலது புறத்தில் தான் நிற்க வேண்டும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டிருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். ….

நூல்: புகாரி (697)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் என் தாயாருக்கும், அல்லது என் சிறிய தாயாருக்கும் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள்.

நூல்: முஸ்லிம் (1171)

இமாமுடன் ஒருவர் மட்டும் நின்று தொழும் போது தான் அவர் இமாமிற்கு வலது புறம் நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வந்துவிட்டால் இமாம் முன்னால் சென்று விடுவார். பின்னர் வலதும், இடதும் சமமாகத் தான் இருக்க வேண்டும். இதுவும் வரிசையை சீராக ஆக்குவதில் உள்ளதாகும். பின்வரும் ஹதீஸில் ஒரு ஸஹாபி மட்டும் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது வலது புறம் நின்றார்கள். பின்னர் அதிகமான மக்கள் வந்ததும் அவர்கள் நபிகள் நாயகத்திற்கு பின்னால் வந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்று கொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள்.

நூல்: முஸ்லிம் (2014)

வலது புறத்தில் நிற்பதை மிகவும் சிறப்பாக மக்கள் விளங்கி இருப்பதன் காரணத்தினால் சில பள்ளிகளில் இடது புறத்தை அப்படியே விட்டுவிட்டு வலது புறத்தில் மட்டும் நிற்கின்றனர். இது வரிசைகளுக்குரிய ஒழுங்கு முறை கிடையாது. எனவே வரிசை சீராக அமையும் பொருட்டு வலது புறத்தையும், இடது புறத்தையும் சமமாக நிரப்புவதே சிறந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்ததும் வலது புறம் உள்ளவர்களை நோக்கித் திரும்புவார்கள். இதன் காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள்.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, “ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது “தஜ்மஉ‘) இபாதக்க‘ (இறைவா! உன் அடியார்களை “உயிர் கொடுத்து எழுப்பும்‘ (அல்லது ஒன்றுதிரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.

நூல்: முஸ்லிம் (1280)

மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகத்தின் மீதுள்ள பாசத்தினாலும், அவர்கள் செய்கின்ற துஆவிற்காகவும் ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள். இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இல்லாத காரணத்தினாலும், வலது புறம் நிற்பது தொழுகையின் அம்சமாகச் கூறப்படாத காரணத்தினாலும் மேற்கண்ட செய்தியின் அடிப்படையில் வலது புறம் நிற்பது சிறப்பானது என்ற கருதமுடியாது.

எனவே வலது புறமும், இடது புறமும் சீராக தொழுகை வரிசையை அமைத்துக் கொள்வதே சரியான செயல்முறையாகும்.