ஏகத்துவம் – ஜனவரி 2015

தலையங்கம்

குழந்தைகளைக் கொன்ற கொடிய பாவிகள்

பாகிஸ்தான், கைபர் பக்துன்க்வா மாநிலம், பெஷாவர் நகரில் வார்சாக் சாலையில் இயங்கி வரும் ராணுவப் பள்ளிக்கூடத்தில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தெஹ்ரீக் தாலிபான் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த கொலை வெறியர்கள், ராணுவ உடையில் மதில் ஏறி இந்தப் பள்ளியின் பின்புறமாக நுழைந்தனர். அப்போது பள்ளியின் பெரிய வளாகத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் முதலுதவிக்கு வேலையே இல்லை எனுமளவுக்கு, உள்ளே நுழைந்த காட்டுமிராண்டிகள் குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.

இந்தக் காட்டுமிராண்டிகளைக் கண்டதும் பிஞ்சுகள் அலறியடித்துக் கொண்டு நடுங்கி, பெஞ்சுகளுக்கு அடியில் போய் படுத்துக் கொண்டனர். இவ்வாறு படுத்துக் கிடந்து தப்பிய பதினாறு வயது ஷாரூக்கான் என்ற சிறுவன், தன்னை நோக்கி வந்த மரணத்தைப் பற்றி விவரிக்கின்றான்:

“கொல்லுங்கள்! இருக்கைகளுக்குக் கீழ் கிடக்கும் மாணவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்!’ என்று ஒருவன் கத்தினான். துப்பாக்கி சுடுவதற்கு முன்னர் அல்லாஹு அக்பர் என்று முழங்கினான்.

என்னைச் சுட்டுத் தள்ளிவிடுவார்கள் என்று நான் பயந்து பெஞ்சுக்கு அடியில் படுத்து பதுங்கிக் கொண்டேன். அப்போது ஒரு கருப்பு ஷூ, டக் டக்கென்று ஒவ்வொரு அடியாக எடுத்து என்னை நோக்கி வந்தது. என் கருவிழிகள் அந்தக் கருப்பு ஷூவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. நெருங்கி வர நெருங்கி வர, நேரமாக நேரமாக எனக்கு மரணம் மிக அருகில் வந்து விட்டது என்று எண்ணினேன். அலறிவிடக்கூடாது என்பதற்காகக் கழுத்தில் கட்டியிருந்த டையை வாய்க்குள் வைத்து அழுத்திக் கொண்டேன்.

வந்தவன், குழந்தைகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் முட்டுக்கால்களில் முதலில் சுட்டான். எனது இரு முட்டுக் கால்களும் அந்தச் சூட்டிற்குப் பலியானதால் வேதனை தாங்க முடியாமல் தவித்தேன். நான் செத்து விட்டதைப் போல் நடித்தேன்.

அப்போது நான் பார்த்த காட்சிகள் என் மனத்திரையை விட்டு அகல மறுக்கின்றன. கீழே கிடந்த மாணவர்கள் உயிர் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் உடல் மீது சகட்டுமேனிக்கு அந்த வேட்டைக்காரன் வெறித்தனமாக சுட்டுக் கொண்டிருந்தான். இறுதியில் நான் ஒருவாறாக உயிர் தப்பினேன்.

இவ்வாறு அந்தச் சிறுவன் ஷாரூக்கான் கூறியுள்ளான்.

சுடப்பட்ட குழந்தைகள் நெற்றிப் பொட்டில், கண்களுக்கு இடையில் சுட்டுத் தள்ளப்பட்டனர். இருநூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். ஊழியர்கள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஓர் ஆசிரியை, நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு, அப்படியே உயிருடன் கொளுத்தப்பட்டார்.

இவ்வளவும் எதற்கு? வஜீரிஸ்தானில் தங்கள் பெண்டு பிள்ளைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காகத் தான் என்று தெஹ்ரீக் தாலிபான் அமைப்பினர் கூறுகின்றனர்.

ஜிஹாத் என்ற பெயரில் கொலைவெறியர்கள், குழந்தைகளைக் கொன்ற பாவத்திற்காக நாளை அல்லாஹ்விடம் விசாரணைக்குரியவர்கள் தான்.

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 4:93)

இந்த வெறியர்கள் குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற விதம், இந்த மூர்க்கர்களுக்கு மார்க்க நெறி கடுகளவு கூட இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் கலந்து கொண்ட புனிதப் போர் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 3015

நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தத் தடையை இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இவர்களுடன் போர் தொடுத்தவர்களை எதிர்த்து இவர்கள் போரிடாமல், இந்தக் கோழைகள் குழந்தைகள் மீது கொடூரத் தாக்குதல், கோரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதே ஹதீஸ் பெண்களைக் கொல்லக்கூடாது என்றும் தடுக்கின்றது. மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சித்ரவதை செய்யக்கூடாது என்று தடுக்கின்றார்கள்.

கொள்ளையடிப்பதையும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி 2474

மார்க்கம் கூறும் தடைகளையெல்லாம் இந்தக் காட்டுமிராண்டிகள் காற்றில் பறக்கவிட்டு விட்டு, ஒரு பெண் ஆசிரியையைக் கட்டிப் போட்டு கொளுத்தியிருக்கின்றார்கள். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக இஸ்லாம் கூறும் போர் நெறிகள் அத்தனையையும் காலில் போட்டு மிதித்துள்ளனர்.

முந்தைய காலத்தில், உலகின் ஒரு மூலையில் எங்காவது ஓர் அநியாயம் நடக்கும் போது அது அந்தப் பகுதியில் மட்டும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். அத்துடன் அது மறைந்துவிடும். ஆனால் இன்று உலகம் ஊடகத்தில் அடக்கமாகிவிட்டது. அதனால் எங்காவது ஒரு கொலை நடந்துவிட்டால் ஒளி அலைவரிசைகளில் அப்படியே உலகம் முழுவதும் தெரிந்துவிடுகின்றது.

அதிலும் குறிப்பாக, இஸ்லாம் – முஸ்லிம்கள் என்றால் எதிரிகள் இதுபோன்ற செய்திகளைப் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றனர். இதனால் உலக அலவில் வாழும் முஸ்லிம்கள் தங்களால் இயன்ற அளவு எதிரிகளுக்கு இதுபோன்ற மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். இதற்கு அரபியில் ஷமாதத் அதவாத் (எதிரிகளின் மகிழ்ச்சி) என்று பெயர். இந்த வார்த்தை, திருக்குர்ஆனில் ஹாரூன் நபியவர்கள் கூறுவதாக இடம்பெற்றுள்ளது.

கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பிய போது “எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?” என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) “என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!என்றார். (அல்குர்ஆன் 7:150)

நபி (ஸல்) அவர்களும் எதிரிகளின் மகிழ்ச்சியிலிருந்து பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் விதியின் கேடு, அழிவில் வீழ்வது, எதிரிகள் (கை கொட்டிச்) சிரிக்கும் நிலைக்கு ஆளாவது, தாங்க முடியாத சோதனை ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5246

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரிகள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்துத்துவா சக்திகளைப் போன்றவர்கள் இன்று இந்தச் செய்தியை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றார்கள். இந்த எதிர்விளைவு சிந்தனையெல்லாம் தெஹ்ரீக் தாலிபான் மரமண்டைகளுக்கு விளங்கப் போவதில்லை.

அடுத்து மிக முக்கியமான அம்சம், பிற மக்கள் இஸ்லாத்திற்கு வராமல் தடுக்கும் வேலையை இவர்கள் செய்துள்ளனர்.

பெஷாவர் படுகொலையின் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பள்ளிக்கூடங்களில், மழலைச் செல்வங்கள் தங்கள் மலர்க் கைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தி, தங்கள் மத வழக்கப்படி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த மழலை உள்ளங்களில் இஸ்லாத்தின் பிம்பம் எப்படிப் பதிவாகும்?

இந்தக் கொடியவர்கள் சுடப்பட்ட குழந்தைகளின் மீது மீண்டும் மீண்டும் சுட்டது, ஓட்டம் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் முழங்கால்களுக்குக் கீழ் சுட்டது, நெற்றிப் பொட்டில் சுட்டது போன்ற கொடுமைகள், கொடூரங்கள் இந்த மழலைகளின் உள்ளங்களில் எப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கும்?

அதிலும் குறிப்பாக, இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஒரு சிறுமியின் பொம்மை வடிவச் செருப்பை புகைப்படம் எடுத்து பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. கல் மனதையும் கரைத்துவிடும் இந்தப் புகைப்படம் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு வன்ம, வக்கிரப் பரிமாணத்தைக் காலம் முழுவதும் அந்தக் குழந்தைகளின் உள்ளத்தில் பதிய வைக்கும். இந்த மழலைகள் மட்டுமல்ல, பெரியவர்கள் கூட இஸ்லாத்திற்கு எப்படி வருவார்கள்?

இந்த வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாத்தின் ஜென்ம எதிரிகள். இவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்ற பாதகத்தைச் செய்துள்ளார்கள்.

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். “அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!  (அல்குர்ஆன் 2:217)

இப்படி அல்குர்ஆன், ஹதீஸ்களின் கட்டளைக்கு நேர்மாற்றமாக, கோர கொலைவெறித் தாக்குதலைக் குழந்தைகள் மீது நடத்தியிருக்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்பது தான் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

இப்படிப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசக்கூடியவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய அறியாமையில் இருக்கின்றார்கள் என்பதுடன் மட்டுமின்றி, எண்ண ஓட்டத்தில் அவர்களுடைய பாவத்தில் இவர்களும் பங்காளிகளாக ஆகிவிடுகின்றார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 19

மனைவிக்கு  மரியாதை

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்களிடத்தில் இஸ்லாம் வழங்கினாலும், அவர்கள் தன்னிச்சையாக மனம் போனபடி நிர்வகிக்கின்ற அதிகாரத்தை வழங்கவில்லை. எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் இஸ்லாம் ஆண்களுக்கு சொல்லித் தருகிறது.

“நான் நிர்வாகியாக இருப்பதால் அடிப்பேன்; உதைப்பேன்; கணவனாகிய நான் என்ன சொன்னாலும் மனைவி கேட்க வேண்டும்” என்பதைப் போன்று சர்வாதிகாரியாகவும் கரடுமுரடாகவும் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் ஆண்களுக்கு அதிகாரம் வழங்கப்படவே இல்லை.

இஸ்லாம் எந்தப் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்தாலும் அதற்குரிய விதிமுறைகளைச் சொல்லித்தான் ஒப்படைக்கும். விதிமுறைகள் சொல்லப்படாத எதுவும் மனிதனின் தன்னிச்சையான முடிவுக்குட்பட்டு கடைசியில் தவறில் தான் முடிகிறது.

பிற சமூகங்களில் பெண்கள் அடக்குமுறைகளுக்கு ஆளாவதையும் கொடுமைகள் இழைக்கப்படுவதையும் ஆராய்ந்தால், இஸ்லாம் வகுத்தளித்த இந்த விதிமுறைகளோடு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படவில்லை என்பதுதான் காரணம்.

“கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்”, “ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தலாம்” என்றெல்லாம் தவறான வழிகள் ஊட்டப்படுவதினால் நமது மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்து செயல்படுகிறார்கள் ஆண்கள். அதனால்தான் நம் மனைவியை நாம் எப்படிக் கொடுமைப்படுத்தினாலும் அதை யாரும் எதிர்த்துக் கேட்பதற்கு அதிகாரமில்லை என்பது போன்று நிர்வாகம் வேறு வேறு சமூகங்களில் வழங்கப்பட்டிருக்கிறது.

நபியவர்கள் காலத்தில் நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் நடந்த நிகழ்வு, மனைவியிடத்தில் ஆலோசனை கேட்டு கணவன் செயல்படுவதற்கு ஆதாரமாகும்.

நபியவர்கள் மக்காவிற்கு ஹஜ் செய்வதற்காகத் தமது தோழர்களுடன் செல்கிறார்கள். அப்போது மக்காவிலுள்ள காஃபிர்கள் அதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் மக்கா என்ற எங்களது ஊரிலிருந்து எங்களால் விரட்டியடிக்கப்பட்ட நீங்கள் மதீனாவிலிருந்து படை திரட்டி வந்து எங்கள் ஊருக்குள் நுழைவதை நாங்கள் ஒத்துக் கொள்ளமாட்டோம் என்கிறார்கள். தங்களது ஊரை இந்த முஹம்மதுவும் அவரது தோழர்களும் கைப்பற்றி விடுவார்களோ என்ற பயம்தான் இப்படி மறுப்பதற்குக் காரணமாகும்.

அப்போதுதான் தூதராக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவிற்குள் அனுப்பி வைக்கிறார்கள். அதன் பிறகு நபியவர்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இந்த ஆண்டு முஹம்மதையும் முஹம்மதின் கூட்டத்தாரையும் மக்காவிற்குள் நுழைய விடமுடியாது. அடுத்த ஆண்டில் வருவதற்கு அனுமதிப்போம், தற்போது திரும்பிப் போய்விட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். நமக்குள் எந்தச் சண்டையும் சச்சரவுகளும் வேண்டாம் என்றும் ஒப்பந்தம் போடச் சொல்கின்றனர்.

இஸ்லாம், குஃப்ர் என்று இரு சமூகமாக பிரிந்திருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களாகத் தான் இருந்தார்கள். அதனால்தான் தற்போது மக்காவிற்குள் நீங்கள் நுழைவது தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்; எனவே இந்த முறை விட்டுக் கொடுத்து அடுத்த முறை வருவதற்கு அனுமதிப்போம். அதற்கும் சில ஒப்பந்தங்களை இருதரப்புக்கும் இடையில் போட்டுக் கொள்வோம் என்று பல ஒப்பந்தங்கள் நிறைவேறுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறிய இடம் ஹுதைபிய்யா என்பதால் தான் இந்த ஒப்பந்தத்திற்கு ஹுதைபிய்யா ஒப்பந்தம் என்ற பெயர் வந்தது.

அதில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களில், மக்காவிலிருந்து முஸ்லிம்களாகிய எங்களிடமிருந்து யாராவது உங்களிடம் வந்தால் அவர்களை எங்களிடம் திருப்பி அனுப்பிட வேண்டும்; அதேபோன்று உங்களிடமிருந்து எங்களிடம் வந்தால் நாங்கள் திருப்பித் தரமாட்டோம் என்கிறார்கள். இப்படி எல்லா ஒப்பந்தங்களும் அவர்களுக்குச் சாதகமாகவே போடுகிறார்கள். நபியவர்கள் அதையெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள். இதைப் பார்த்த நபித்தோழர்களுக்கு கடுமையான கோபம் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

எங்களையெல்லாம் உம்ரா செய்ய வேண்டும், அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று அழைத்து வந்து, இங்கு அவர்கள் சொல்வதற்கெல்லாம் இணங்கினால் என்ன அர்த்தம்? என்றெல்லாம் நபியவர்களிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். நாம் சரியான மார்க்கத்தில் இருக்கிறோம், தவறான வழியில் இருக்கிற இவர்களிடம் பணிந்து போக வேண்டும் என்கிற எந்த அவசியமும் கிடையாது என்று உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள்; கோபிக்கிறார்கள்; கொந்தளிக்கிறார்கள். ஆனால் நபியவர்கள் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அளவுக்கு அதிகமாகவே விட்டுக் கொடுக்கிறார்கள்.  இப்படியெல்லாம் நபியவர்கள் விட்டுக் கொடுப்பது பின்னால் முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் வெற்றி கிடைப்பதற்காகத் தான் என்று இறைவன் வசனம் இறக்குகிறான்.

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப் படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

அல்குர்ஆன் 48:1,2,3

ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின்னால் அல்லாஹ் மேற்கண்ட இந்த வசனத்தை இறக்குகிறான். சஹாபாக்களுக்குக் கோபம் இருந்தாலும் நபியவர்கள் உறுதியாக நின்று ஒப்பந்தம் கையெழுத்தாகி நிறைவேறுகிறது. இப்படி ஒப்பந்தம் நிறைவேறியதால் அந்த ஆண்டு உம்ரா செய்ய முடியாமல் போய்விட்டது.

உம்ரா செய்வதற்கு நபியவர்களும் ஸஹாபாக்களும் ஆடு, மாடுகள், ஒட்டகங்களைக் கொண்டு வந்துள்ளனர். உம்ரா தடுக்கப்பட்டதினால் நபியவர்கள் ஹுதைபிய்யா என்ற இடத்திலேயே தலையை மழித்துவிட்டு அல்லது சிறிதளவு முடியை குறைத்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த பலிப்பிராணியை அறுப்பதற்குக் கட்டளையிடுகிறார்கள். ஆனால் எந்த நபித்தோழரும் தலைமுடியை மழிக்கவோ குறைக்கவோ எழுந்திருக்கவில்லை. ஆடு மாடுகளை அறுக்கவும் எழுந்திருக்கவில்லை. அதற்குத் தயாராகவுமில்லை.

உம்ராவோ, ஹஜ்ஜோ செய்யும் போது கடைசி வணக்க முறையாக, தலைமுடியை மழித்து அல்லது தலை முடியைச் சிறிதளவு குறைத்து ஆடு, மாடு, ஒட்டகம் ஏதேனும் ஒரு பலிப்பிராணியைப் பலியிட்டு அந்த உம்ராவை ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இதைத்தான் நபியவர்கள் ஹுதைபிய்யாவில் தடுக்கப்பட்டதால் அங்கேயே நிறைவேற்ற சஹாபாக்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். ஆனால் யாரும் பணியவில்லை.

நபியவர்கள் சொல்லிற்கு அப்படியே கட்டுப்படுகிற தோழர்கள், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக நபியவர்களின்  கட்டளையை நிறைவேற்ற ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை. இப்படி தனது கட்டளைக்கு நபித்தோழர்கள் கட்டுப்படாத சூழ்நிலையை வாழ்க்கையில் முதல் தடவை நபியவர்கள் சந்திக்கிறார்கள்.

தனது தோழர்கள் தனக்குக் கட்டுப்படவில்லை என்ற கவலையில் நபியவர்கள், தனது கூடாரத்திற்குள் செல்கிறார்கள். கூடாரத்திற்குள் மனைவி உம்மு சலமா அவர்கள் இருக்கிறார்கள். அதாவது பயணத்தில், மனைவிமார்களில் யாரையாவது ஒருவரை அழைத்து வருவது நபிகளாரின் வழக்கம்.

கூடாரத்திற்குள் கவலையுடன் வருகிற நபிகளாரை உம்மு சலமா அவர்கள் பார்த்ததும் நபியவர்கள் தமது கவலையை மனைவியிடத்தில் தெரிவிக்கிறார்கள்.

மனைவி என்றால் அடக்குமுறை செய்யப்பட வேண்டியவள் என்று எண்ணக் கூடாது. நமது தேவையை அவளிடம் கேட்கலாம், நமக்குத் தேவையான ஆலோசனைகளைக் கேட்கலாம். மனைவி கணவன் கேட்காமல் சூழ்நிலையைப் புரிந்து கொண்டும் சில ஆலோசனைகளைக் கணவனுக்குச் சொல்லலாம்; சொல்ல வேண்டும்.

அந்த அடிப்படையில் நபியவர்களின் மனைவி உம்மு சலமா அவர்கள், நீங்கள் சொன்ன கட்டளை உண்மையில் செயல்படுத்துவதற்காகத் தானா? அல்லது வேறு காரணங்களுக்காகச் சொன்னதா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் உண்மையில் செயல்படுத்துவதற்குத் தான் என்றதும், அப்படியெனில் நீங்கள் யாரிடமும் மீண்டும் கட்டளையிடாமல் எதுவும் சொல்லாமல் முதலில் அந்தக் கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள். நாவிதரை அழைத்து உங்களது தலைமுடியை மழித்து, நீங்கள் கொண்டு வந்த பலிப்பிராணியை அறுங்கள். நீங்கள் செய்வதைப் பார்த்து அப்படியே உங்களது தோழர்களும் உங்களைப் போன்றே நிறைவேற்றிவிடுவார்கள் என்று ஆலோசனை கொடுக்கிறார்கள்.

அதேபோன்று ஒப்பந்தம் சரியில்லை என்று கோபமடைந்த சஹாபாக்களும் நபியவர்களின் செயலைப் பார்த்து தங்களது கோபத்தைத் தூக்கியெறிந்து விட்டு கட்டளையைச் செயல்படுத்தினர்.

ஆக , மனைவியின் யோசனையைக் கேட்டு செயல்பட்ட செய்திகளை நபியவர்களிடம் முன்மாதிரியாகப் பெறுகிறோம். எனவே சில நேரங்களில், ஏன் பல நேரங்களில் பெண்களிடமும் நல்ல யோசனைகள் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டுதான் கணவன்மார்கள் குடும்ப நிர்வாகத்தை நடத்த வேண்டும்.

இவ்விடத்தில் நபிகளார், தனது மனைவியைப் பார்த்து நீ யார் எனக்கு யோசனை சொல்வதற்கு என்றோ, எங்களுக்குத் தெரியாதது உங்களுக்குத் தெரிந்து விட்டதோ என்றெல்லாம் கேட்கவில்லை. இதுபோன்ற விவகாரங்கள் மனைவிமார்களுக்குத் தெரியாது என்றெல்லாம் அலட்சியப்படுத்திடவில்லை.

நபியவர்கள் தமது மனைவி சொன்ன யோசனை சரியாகப் பட்டு அதை நிறைவேற்றியதால், அதைப் பார்த்த சஹாபாக்களும் தங்களது உம்ரா கடமைகளை நிறைவேற்றினர். இதில் நபியவர்களின் கட்டளையை மீற வேண்டும் என்கிற நோக்கமெல்லாம் சஹாபாக்களுக்குக் கிடையாது. மாறாக இப்படியெல்லாம் நாம் கோபப்பட்டால் நபியவர்கள் ஒப்பந்தத்தை நாம் நினைப்பது போல் மாற்றியமைத்துக் கொள்வார்கள். பிறகு நபியவர்களின் கட்டளையைச் செயல்படுத்துவோம் என்று நினைத்தார்கள். நபியவர்களின் கட்டளையை மீறுவதற்கு யாரும் தயாராக இல்லை. இருப்பினும் இந்த விஷயத்தில் சத்தியாகிரகம் செய்தால் நபியவர்களின் மனதை மாற்றிவிடலாம் என்று நினைத்தார்கள்.

ஆனால் நபியவர்கள் தான் சொன்ன சொல்லில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனை தானே முதலில் செயல்பட்டு செய்து காட்டியதினால் நபியவர்களே மாற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பதினால் ஸஹாபாக்களும் மொட்டையடித்து தங்களது பலிப்பிராணிகளை அறுத்தனர்.

இந்தச் செய்தியை புகாரியின் 2734வது செய்தியாகப் பார்க்கலாம். இது பெரிய சம்பவமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நபியவர்கள் தமது மனைவியிடம் ஆலோசனை கேட்ட செய்தியை மட்டும் சுருக்கமாகக் கூறியுள்ளோம்.

எனவே, நான் சொல்வது தான் சட்டம் என்பது போன்று நிர்வாகம் செய்யவே கூடாது. மனைவியர், வாழ்க்கைத் துணைவியர். அவர்களிடமும் நல்ல கருத்துக்கள் இருக்கும். அவர்கள் சொல்கின்ற கருத்து நாம் சொல்வதை விடவும் சிறப்பானதாகவும் இருக்கும். அதுபோன்ற சமயங்களில் பெண்கள் சொல்லி ஆண்கள் கேட்பதா? என்று நினைக்காமல், உதாசீனப்படுத்தாமல் சரியா? தவறா? என்று பார்க்க வேண்டும். சரியானதைச் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்கள். குடும்பத்தை நிர்வகிக்கிற ஆண்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்து, நிர்வாகம் செய்வது ஆண்களாக இருந்தாலும், எல்லாவற்றிலும் ஆண் விரும்பிவாறு ஒரு பெண்ணால் மனைவியால் நடக்கவே முடியாது. உலகில் எந்த மனிதனுக்கும் அப்படியொரு மனைவி இருக்க மாட்டாள். இரு நபர்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாக சிந்திக்கவே மாட்டார்கள். உடன் பிறந்த சகோதரர்களாக இருந்தாலும் அப்படித்தான். இதுதான் யதார்த்தம்.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், ஒரு தாய் சமைத்த உணவை ருசித்து வாழ்கிற இரு சகோதரர்களுக்கே கூட ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம். ஒரே வீட்டில் தான் இருவரும் வாழ்கிறார்கள். ஆனாலும் தம்பி கோபக்காரனாகவும் அண்ணன் சாந்தமாகவும் இருக்கிறான். அவன் சரியாகச் சிந்திக்கிறான். இவன் முட்டாளாக இருக்கிறான். ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே ஒரே கருத்து இருக்காது என்கிற போது, திருமணத்தின் மூலமாக சொந்தமாகிக் கொண்ட இருவருக்குள் எல்லாவற்றிலும் ஒரே கருத்து வருவதற்கு நிச்சயம் வாய்ப்பே இல்லை.

ஏனெனில் பெண் கணவனது வீட்டில் வளர்ந்தவளாக இருக்கமாட்டாள். இவளது வளர்ப்பு முறை வேறானது. அவனது வளர்ப்பு முறை வேறானது. அவளது சிந்தனை, விருப்பம், ஆசை வேறானது. அவளது சுவைக்கும் இவனது சுவைக்கும் சிந்தனைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் இருக்கும். எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்படித்தான்.

எனவே ஆண்கள், நாம் சொல்வதைப் போன்றுதான் 100 சதம் நமது மனைவிமார்கள் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. மேலும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத்தான் நான் திருமணம் முடிப்பேன் என்று ஒரு ஆண் ஆசைப்பட்டால் நிச்சயம் கியாமத் நாள் வரை அவன் எந்தப் பெண்ணையும் திருமணம் முடிக்கவே முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2915

மனைவியிடத்தில் ஒன்று பிடிக்காமல் இருந்தால் எது பிடித்ததாக உள்ளதோ அதைக் கொண்டு திருப்திபட்டுக் கொள்ளுங்கள். மனைவியை நன்றாகக் கவனித்துப் பார்த்தால், மனைவியிடத்தில் பிடித்த பண்புகள் நிறையவே இருக்கும். அதை வைத்து திருப்திபட்டுக் கொள்ள வேண்டும். மனைவிமார்கள் செய்வது அத்தனையும் வெறுப்புக்குரியது என்று உலகத்தில் ஒருத்தி கூட இருக்கமாட்டாள். அதாவது ஒரு பெண்ணிடத்தில் அத்தனையும் விரும்பத்தக்கதாக எப்படி இருக்காதோ அதுபோன்று அத்தனையும் வெறுக்கத்தக்கதாகவும் இருக்காது.

சில பெண்கள் எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசுபவர்களாக இருப்பார்கள், சிலர் எப்போது பார்த்தாலும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டேயிருப்பார்கள், ஒழுங்காக சோறு சமைக்கத் தெரியாது, அது நமக்குப் பிடிக்காமல் இருக்கும். அதிகமாக உப்பை அள்ளிப் போட்டு சமைப்பார்கள். இப்படி ஏதோ ஒரு வகையில் மனைவியிடம் பிடிக்காத பண்பு இருந்தால், அந்த மனைவியை நன்றாக உற்று நோக்கினால் எத்தனையோ நமக்குப் பிடித்த பண்புகள் இருக்கும். பிடிக்காததைப் பார்ப்பதை விட பிடித்ததைப் பார்த்து திருப்திபட்டு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என நபியவர்கள் நமக்குக் கட்டளையிடுகிறார்கள்.

எனவே 100 சதம் ஒரு ஆண் திருப்திபடும் வகையில் பெண் படைக்கப்படவில்லை என்பதை ஆண்கள் முதலில் புரிந்து நடக்க வேண்டும். அதேபோன்று ஆண்களும் 100 சதம் மிகச் சரியானவர்களாக நடப்பவர்களாகப் படைக்கப்படவில்லை என்பதும் உண்மை.

ஒரு பெண்ணை 100 சதம் திருப்திப்படும் வகையில் ஒரு ஆண் நடந்து கொள்ளவே முடியாது. எனவே மனைவி சரியில்லை என்று வேறொரு பெண்ணை மணக்கலாம் என்று போனால், அவளும் 100 சதம் சரியாக இருக்கமாட்டாள். அவளிடமும் 25 சதம் குறையிருக்கத்தான் செய்யும். இவளிடம் இருந்த குறைகள் இல்லாவிட்டாலும் வேறு குறைகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

எந்தப் பிரச்சனைக்காக முதல் மனைவி வேண்டாம் என்று சொன்னோமோ அதே பிரச்சனை மறுபடியும் தொடரத்தான் செய்யும். அதே சண்டை, அதே வம்பு, அதே பிரச்சனை என்று புறந்தள்ளிவிட்டு ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று ஒவ்வொரு நாளைக்கும் ஒரு திருமணம் செய்யமுடியுமா? செய்யமுடியாது. திருமணம் என்பதே நிம்மதிக்குத் தான் என்கிற போது அந்த அடிப்படையே நாசமாகிவிடும்.

எனவே ஒரு பெண்ணைத் திருமணம் முடித்து மனைவியாக்கிவிட்டால் அவளிடம் குறையும் இருக்கும் நிறையும் இருக்கும். நிச்சயம் நிறைகள்தான் குறைகளை விடவும் பன்மடங்கு அதிகமாக இருக்கும். அந்தக் குறை மற்றும் நிறைகளுடன் தான் இல்லறத்தை நடத்த வேண்டும். இதுதான் ஆண்கள் பெண்களை நிர்வகிக்கும் முறை. எனவே ஆண்களிடம் நிர்வாகம் இருக்கிறது என்பதால் எப்படி வேண்டுமானாலும் நிர்வாகம் செய்ய முடியாது. அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன முறைகளைத் தான் நிர்வாகம் செய்ய ஒரு ஆண் பயன்படுத்த வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 2   ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

ஆதம் நபி கண்ட ஐந்து பெயர்கள்

எம். ஷம்சுல்லுஹா

மவ்லிதுகள் அனைத்தும் ஷியாக்களின் வழியில் அமைந்தவையாகும். காரணம், ஷியாக்கள் தங்கள் இமாம்களை அல்லாஹ்வின் இடத்தில் கொண்டு போய் வைப்பார்கள்.

அத்துடன் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் துணிந்து பொய் சொல்பவர்கள். அந்த வேலையை ஹுஸைன் மவ்லிதை ஆக்கியவர் நன்கு, தங்கு தடையின்றி செய்திருக்கின்றார்.

அதற்கு எடுத்துக்காட்டாக ஹுஸைன் மவ்லிதில் ஆறாவது ஹிகாயத்தாக (சம்பவமாக) இடம்பெற்றுள்ள ஒரு செய்தியைப் பார்ப்போம்.

அல்குர்ஆன் 2:37 வசனம் தொடர்பாக சிறப்புமிகு தலைவர் ஜாஃபர் சாதிக் அறிவிக்கின்றார்.

சுவனத்தின் வீட்டிற்குள் ஆதமும் ஹவ்வாவும் அமர்ந்திருந்தனர். அவ்விருவரிடமும் ஜிப்ரீல் வருகையளித்து, தங்கம் வெள்ளியினால் கட்டப்பட்ட கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் ஓரங்கள் பச்சை மரகதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்து. கோட்டைக்குள் சிகப்பு மாணிக்கத்தால் அமைந்த கட்டில் கிடந்தது.

அந்தக் கட்டில் மீது ஒளியினால் அமைந்த மாடம் இருந்தது. அதில் ஃபாத்திமாவின் தோற்றம் காட்சியளித்தது. அவரது தலையில் கிரீடம் இருந்தது. இரு காதுகளிலும் இரண்டு வெண்முத்து வளையங்கள் தொங்கின. கழுத்தை ஒளி மின்னுகின்ற ஒரு மாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

ஃபாத்திமாவின் ஒளியைப் பார்த்து ஹவ்வா (அலை) ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். ஹவ்வாவின் அழகை மறக்கின்ற அளவுக்கு ஆதம் (அலை) அந்த ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனார்.

இது என்ன உருவம்? என்று ஆதம் கேட்டார்.

அந்த உருவம் ஃபாத்திமா! கிரீடம் அவரது தந்தை முஹம்மது (ஸல்) அவர்கள். கழுத்து மாலை அவரது கணவர் அலீ (ரலி). இரு காது வளையங்கள் ஹஸன், ஹுஸைன் ஆகிய அவரது செல்வங்கள் என்று கூறிவிட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையை உயர்த்தி மாடத்தை ஏறிட்டுப் பார்த்தார்கள். அதில் ஐந்து பெயர்கள் ஒளியினால் பொறிக்கப்பட்டிருந்தன.

(அல்லாஹ்வாகிய) நான் மஹ்மூத் – புகழப்படக்கூடியவன்; இவர் முஹம்மது – புகழப்படக்கூடியவர்.

நான் அஃலா – மிக உயர்ந்தவன்; இவர் அலீ – உயர்வானவர்.

நான் ஃபாத்திர் – முன்மாதிரியின்றி படைப்பவன்; இவர் ஃபாத்திமா

நான் அல்முஹ்ஸின் – நன்மை செய்பவன்; இவர் ஹஸன் – நன்மை.

என்னிடம் இஹ்ஸான் – நன்மை உள்ளது; இவர் ஹுஸைன் – சிறிய நன்மை

இந்த ஐந்து பேர் தான் அந்த மாடத்தில் ஒளி சிந்தும் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்போது ஜிப்ரீல், “ஆதமே! இந்தப் பெயர்களை நீங்கள் மனனம் செய்து கொள்ளுங்கள். இவை உங்களுக்குத் தேவைப்படும்” என்று சொன்னார்கள்.

ஆதம் (அலை) பூமியில் இறங்கியதும் முன்னூறு ஆண்டுகள் அழுது தீர்த்தார்கள். அதன் பிறகு இந்தப் பெயர்களைக் குறிப்பிட்டு, “யா அல்லாஹ்! முஹம்மது, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன். யா மஹ்மூத்! யா அலீ! யா ஃபாத்திர்! யா முஹ்ஸின்! இஹ்ஸானைக் கையில் வைத்திருப்போனே! என்னை மன்னித்துவிடு! என்னுடைய பாவமன்னிப்பை நீ ஏற்றுக் கொள்” என்று ஆதம் (அலை) பிரார்த்தனை செய்தார்கள்.

உடனே அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களிடம், “உன்னுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து நீ மன்னிப்புக் கோரியிருந்தால் நான் அவர்களுக்கும் சேர்த்து மன்னித்திருப்பேன்” என்று வஹீ அறிவித்தான்.

இவ்வாறு ஹுஸைன் மவ்லிதின் ஹிகாயத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுன்னத் வல்ஜமாஅத்தினர் எனப்படுவோர் பக்கா ஷியாக்கள் தான் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் இந்தச் செய்தியை மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவை) என்ற நூலில் பதிவு செய்து, இதன் தொடரில் இடம்பெற்றிருக்கும் பலவீனமான அறிவிப்பாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிகின்றார்கள். இதுபோல் இமாம் சுயூத்தி அவர்கள், அல் லஆலில் மஸ்னூஆ (போலி முத்துக்கள்) என்ற நூலிலும், இமாம் இப்னு இராக் அவர்கள் தன்ஸீஹுஷ் ஷரீஅத் (பொய்யான செய்திகளை விட்டும் ஷரீஅத்தைத் தூய்மைப்படுத்துதல்) என்ற நூலிலும் இந்த போலிச் செய்தியை அம்பலப்படுத்துகின்றார்கள்.

இந்தக் கேடுகெட்ட செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை வேறு! இதில் ஹஸன் பின் அலீ அஸ்கரிய்யு இடம் பெறுகின்றார். ஷியாக்களுக்கு 12 இமாம்கள் உள்ளனர். அவர்களில் இவர் இறுதியானவர். இவருடன் 12 இமாம்களின் வரிசை நிறைவுபெறுகின்றது.

இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இங்குதான் ஹதீஸ் கலை அறிஞர்களின் வேலைப்பாட்டை எண்ணி அதிசயிக்க வேண்டியுள்ளது. ஹுஸைன் மவ்லிதில் வந்திருக்கும் இந்த ஹதீஸை அறிஞர்கள் அடையாளம் காட்டியிருப்பார்களா என்ற ஐயத்துடன் இதை ஆய்வு செய்தால் இது தொடர்பான பொய்ச் சரக்குகளையும் அதைப் பற்றி அறிஞர்களின் ஆய்வுப் பார்வையையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

சுன்னத் ஜமாஅத்தினர் சுத்த ஷியாக்களே!

ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள் இந்தச் செய்தி, “அஸ்ஸய்யித் ஜஃபர் சாதிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்’ என்று துவங்குகின்றது. ஜஃபர் சாதிக் என்பவர் ஷியாக்களின் இமாம்களில் ஆறாவது இமாம் ஆவார். இவர்களுக்கெல்லாம் இமாம் என்ற பெயர்; அதற்கு ரலியல்லாஹு அன்ஹு என்ற துஆ வேறு!

இந்த ஜஃபர் சாதிக்கின் பெயரில் தான் ரஜப் மாதத்தில் பூரியான் பாத்திஹா என்ற பூஜை, மவ்லானா மவ்லவி பாகவி மிஸ்பாஹிகளால் நடத்தப்படுகின்றது. சுன்னத் வல்ஜமாஅத் என்று தம்பட்டம் அடிக்கின்ற இந்த ஐயாக்கள் சுத்த ஷியாக்கள் தான் என்பதை இந்த ஹுஸைன் மவ்லிதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஷியாக்களின் ஆறாவது இமாமை மதிப்பவர்கள் அவரது ஹதீஸ ஏற்பவர்கள் எப்படி சரியான முஸ்லிமாக இருக்க முடியும்?

இதை வருடாவருடம் முஹர்ரம் மாதத்தில் பயபக்தியுடன் படிக்கின்றார்கள் என்றால் இவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட இந்தப் பொய்ச் சரக்கு தான் இந்த மவ்லிது கிதாபில் ஜஃபர் சாதிக்கின் பெயரால் விற்கப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 110

இந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்திருந்தும், அவர்கள் மீது திட்டமிட்டு இப்படிப் பொய் சொல்கிறார்கள் என்றால் இவர்கள் நரகத்திற்குச் செல்வதற்குத் தங்களை பயிற்சியும் பக்குவமும் படுத்திக் கொண்டார்கள் என்பது தான் இதன் பொருளாகும். அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

ஷியாக்கள் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வதில் எந்த வஞ்சமும் செய்ய மாட்டார்கள்; எந்த தயவு தாட்சண்யமும் காட்ட மாட்டார்கள்.

அதுபோன்று இந்தப் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்களைச் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

இதுவரை இந்த ஹதீஸ் முழுவதும் இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதை அறிவிப்பாளர் ரீதியாகப் பார்த்தோம். இனி இந்தப் பொய்ச் செய்தியின் உள்ளே புகுந்து, இது எப்படி குர்ஆன், ஹதீஸை விட்டும் முரண்படுகின்றது என்பதை உரசிப் பார்ப்போம்.

ஜிப்ரீலை இழிவுபடுத்துதல்

ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் தனது திருமறையில் உயர்த்திப் பேசுகின்றான்; சிறப்பித்துக் கூறுகின்றான்.

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

அல்குர்ஆன் 26:193-195

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.  வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

அல்குர்ஆன் 81:20, 21

இத்தகைய சிறப்புக்குரிய ஜிப்ரீலை, நபி (ஸல்) அவர்களின் குடும்பச் செயலாளர் போன்று இந்தச் சம்பவம் சித்தரித்துக் காட்டுகின்றது. இந்த வகையில் இது மலக்குகளை இழிவாகப் பேசுகின்ற இழிசெயலாகும்.

சுவனத்தின் சொந்தங்கள்

சுவனம் முழுவதையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்காக அல்லாஹ் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டதாக இந்தச் செய்தி சித்தரிக்கின்றது. சுவனம் என்பது யார் அமல் செய்கின்றார்களோ அவர்களை அதற்கு வாரிசாக்கி விடுகின்றான். இதைப் பின்வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.

உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவேஎன்று அவர்களுக்குக் கூறப்படும்.

அல்குர்ஆன் 7:43

இதுவே நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட சொர்க்கம்.

அல்குர்ஆன் 43:72

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் அங்கசுத்தி (உளூ) செய்தாலும் அந்த அங்க சுத்திக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1149

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதருக்கு இம்மாபெரிய மகத்துவத்தைக் கொடுப்பதற்குக் காரணம் அவர் செய்த அமல் தான். இந்த அடிப்படையில் சுவனம் என்பது அமல் செய்தவர்களுக்குரியதாகும். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை கொண்டு, நல்லமல் செய்தால் அவர்கள் சுவனத்தின் சொந்தக்காரர்கள். இல்லையென்றால் இந்தப் பாக்கியத்தை இழந்துவிடுவார்கள். இதுதான் அல்லாஹ்வின் நியதி!

இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் மகளாகப் பிறந்ததால் அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தைப் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டதாக ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள இந்தச் செய்தி சித்தரிக்கின்றது. இந்த அடிப்படையில் குர்ஆன், ஹதீஸின் நிலைப்பாட்டிற்கு முரணாக இது அமைந்துள்ளது.

—————————————————————————————————————————————————————-

ஆய்வுக்கூடம்

மத்ஹபை இழிவுபடுத்தும் மவ்லானாக்கள்

கடந்த டிசம்பர் மாத மனாருல் ஹுதா இதழைப் பார்க்க நேர்ந்தது. அதில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பகுதியான மௌலானா பதில்கள் எனும் பகுதியைப் படிக்கும் போது கேள்விகளுக்குப் பதிலளிப்பது மௌலானாக்கள் தானா?  என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அந்த அளவு அதில் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் குர்ஆன், சுன்னா ஒளியில் பதிலளிக்கப்படுவதில்லை என்பதோடு பதில்கள் அனைத்தும் கோமாளித்தனமானதாகவும், மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளன.

இதுநாள் வரை அவர்கள் அளிக்கும் பதில்கள் யாவும் மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் தான் இருந்தன என்றால் மௌலானா வெளியிட்டிருக்கும் இந்த அரிய மார்க்க தீர்ப்பு அவர்கள் கொண்டிருக்கும் – ஆதரிக்கும் மத்ஹபையே இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. அந்தத் தீர்ப்பு வருமாறு:

கேள்வி: ஷாஃபியி மத்ஹபினர் ஹஜ், உம்ரா செல்லும் போது எந்த நிய்யத்தில் செல்ல வேண்டும்? ஏனெனில் அங்கு கூட்ட நெரிசலில் பெண்கள் மீது கைப்பட்டு ஒளூ முறிய வாய்ப்புள்ளதே விளக்கம் தரவும்?

பதில்: எல்லா சமயத்திலும் தத்தமது மத்ஹபை உறுதியாகப் பின்பற்றுவதே சிறந்ததாகும். எனினும் ஹஜ், உம்ரா போன்ற காலங்களில் கூட்ட நெரிசலில் பெண்கள் மீது கை பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பட்டால் ஷாஃபி மத்ஹபின் படி உளூ முறிந்து விடும். இது மிகவும் சிரமம் என்பதால் அப்போது வேறு மத்ஹப் படி அமல் செய்து கொள்ள அனுமதி உண்டு.

ஒருவர் பெண்ணைத் தொட்டால் அல்லது தன்னையும் அறியாமல் அவரது கை பெண்ணின் மீது பட்டு விட்டால் அவரது உளூ முறிந்து விடும் என்பது ஷாஃபி மத்ஹபின் சட்டம். ஹனஃபி மத்ஹபின் படி உளூ முறியாது.

இந்நிலையில் ஷாஃபி மத்ஹப்காரர் ஹஜ்ஜில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர் எந்த நிய்யத்தில் ஹஜ் செய்ய வேண்டும் என்று ஒருவர் எழுப்பும் வினாவிற்கு மௌலானா அளித்த பதில் தான் இது.

பொதுவாக தாம் கொண்ட மத்ஹபில் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற சூழ்நிலையில் மத்ஹபு மாற வேண்டியது தான் வேறு வழியில்லை என்ற பாணியில் (மௌலானாவிற்கும் வேறு வழியில்லாததால்) பதில் அளித்துள்ளார்.

பெண்களைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்பது குர்ஆன், ஹதீஸிற்கு எதிரான, தவறான நிலைப்பாடாகும். அவ்வாறு எங்கும் சொல்லப்படவில்லை. மேலும் நபிகள் நாயகம் அவர்கள் உளூவுடன் பெண்ணை (தம் மனைவியை) தொட்டு விட்டுப் பிறகு உளூ செய்தார்கள் என்று எந்தச் செய்தியும் கிடையாது. மாறாக தொழுகையிலேயே அன்னை ஆயிஷா அவர்களைத் தொட்டிருக்கிறார்கள் என்பதற்குத் தான் ஆதாரப்பூர்வமான பல செய்திகள் உள்ளன. (பார்க்க: புகாரி 382)

இது பன்னெடுங்காலமாக நாம் பிரச்சாரம் செய்துவரும் ஒன்று தான்.

இதில் கூடுதலாக கவனிக்க வேண்டிய அம்சம், தங்களது இந்த மார்க்கத் தீர்ப்பு மூலம் அவர்கள் தங்கள் மத்ஹபையே கேலிப்பொருளாக்கி உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

பெண்ணைத் தொட்டால் உளூ முறியுமா என்பதில் ஷாஃபி மத்ஹபினருக்கு ஒரு சட்டமாம். ஹனஃபி மத்ஹபினருக்கு ஒரு சட்டமாம்.

உளூ முறியும் என்பதும் முறியாது என்பதும் முரண்பாடான இரு சட்டங்களாகும். இரண்டில் ஒன்று தான் சரியானதாக இருக்கும். மற்றொன்று தவறானதாக இருக்கும்.

பெண்ணைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்ற கருத்து தவறானது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் நபிவழியில் நிறைந்துள்ளன.

அப்படி என்றால் மௌலானா (?) என்ன பதிலளித்திருக்க வேண்டும்?

இது சரி, இது தவறு என வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்பது போன்று அவரது பதில் அமைந்திருக்க வேண்டும். அதற்குரிய குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரங்களாக அடுக்கியிருக்க வேண்டும்.

ஆனால் அவரோ நீங்கள் ஷாபி மத்ஹபா? அப்படி என்றால் ஹஜ், உம்ராவின் போது மட்டும் ஹனபி மத்ஹபுக்குக் கட்சி மாறிக் கொள்ளுங்கள் என்கிறார்.

இது என்ன கோமாளித்தனமான தீர்ப்பு? பொதுவாக மத்ஹபில் உறுதியாக இருக்க வேண்டுமாம். அதேவேளை ஹஜ், உம்ராவின் போது மட்டும் கொள்கையற்று மத்ஹபிலிருந்து மாறிக் கொள்ள வேண்டுமாம். பிறகு மறுபடியும் தன் மத்ஹபிற்குத் திரும்பி வந்து, மீண்டும் அதில் உறுதியாக இருக்க வேண்டுமாம்.

இந்தத் தீர்ப்புக்கு அடிப்படையாக இருந்த குர்ஆன், மற்றும் ஹதீஸ்களைக் குறிப்பிடுவாரா?

அப்படியே நபிகள் நாயகம் எந்த மத்ஹபின் அடிப்படையில் ஹஜ், உம்ரா செய்துள்ளார்கள் என்பதையும் சேர்த்து மௌலானா விளக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறோம்.

அதேவேளை ஹஜ்ஜின் போது பெண்கள் மீது நம்மையும் அறியாமல் கை படாமல் இருப்பது சாத்தியமானது அல்ல என்பதையும் குறிப்பிடுகிறார்.

யாருக்கும் சாத்தியமில்லாத ஒன்றை நபிகள் நாயகம் எப்படிப் போதித்திருப்பார்கள் என்பதையும் சிந்திக்கத் தவறிவிட்டார்.

இப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு கேலிக்கூத்தாக பதிலளிப்பதையே அன்றாட வழக்கமாக்கியுள்ள இந்நிலையில் மனாருல் ஹுதா இதழ் மற்ற பத்திரிக்கைகள் போன்று கிடையாதாம். அதில் இடம் பெறும் அனைத்து தகவல்களையும் மக்கள் உண்மையாகப் பார்க்கும் உன்னத நிலையில் மனாருல்ஹுதா இருக்கிறதாம். இப்படி கிச்சுகிச்சு வேறு மூட்டுகின்றனர்.

இவர்கள் இது போன்ற கேலிக்கூத்தான தீர்ப்புகளை அளிப்பதற்கு அடிப்படைக் காரணம் குர்ஆன், ஹதீஸ் என்ற இறைவனின் வழிமுறையை விட்டும் விலகி இமாம்களின் வழிமுறையைப் பின்பற்றுவதே ஆகும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் 4:59

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு சொல்ல முன்வந்தால் எல்லாவற்றுக்கும் தெளிவான, குழப்பமற்ற பதில்களைச் சொல்ல இயலும். அதைவிடுத்து மனிதர்களின் கருத்தை நாடினால் இப்படி குழப்பங்கள் தான் மிஞ்சும்.

இவர்களும் நாமும் மதிக்கும் இமாம்களும் அதையே போதித்துள்ளார்கள் என்பதை மனாருல் ஹுதா மௌலானாவிற்கு (?) நினைவூட்டிக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

கொலைகாரர்களாகும் குறிகாரர்கள்

2012ஆம் ஆண்டு, ஜூன் 19 அன்று சவூதியிலுள்ள நஜ்ரான் என்ற ஊரில், முரீஃபின் அலீ பின் ஈஸா என்பவர் மக்கள் முன்னிலையில் தலை சீவப்பட்டு கொல்லப்படுகின்றார். இவர் செய்த குற்றம் என்ன? பில்லி, சூனியம், ஜோதிடத் தொழில் செய்தது தான் அவருடைய குற்றம். அத்துடன் இரண்டு பெண்களுடன் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சேர்த்து கணக்குத் தீர்க்கும் விதமாக அவருடய கழுத்து வெட்டப்பட்டது.

காவல்துறை கைது செய்த மாத்திரத்தில் தண்டனை அளிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டு கீழ் கோர்ட், மேல் கோர்ட் வரை வழக்கு சென்று தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்தச் செய்தி சவூதியிலுள்ள அரபிய பத்திரிகைகளிலும் பி.பி.சி. செய்தியிலும் வெளிவந்தது.

இதே குற்றத்திற்காக சவூதியில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். இதுபோன்று சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார். இவருக்காக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் உலக மனித உரிமை இயக்கமும் குரல் கொடுத்தது. இதை சவூதி அரசாங்கம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்தியாவில் பில்லி, சூனியம், மாயம், மந்திரம் தாயத்து, தட்டு, பேய், பிசாசு என்ற பெயரில் ஒரு பெருங்கூட்டமே தொழில் நடத்தி வருகின்றனர். இவர்கள் கார், பங்களா என அசத்தலாக, ஆடம்பரமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

போதாத குறைக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இவர்களுக்கென தனி நேரம் ஒதுக்கப்பட்டு விளம்பரம் அளிக்கப்படுகின்றது. காலை நேரங்களில் செய்திகள் ஒளிபரப்பாவதற்கு முன்னால் இவர்களது அக்கப்போர்கள் தாங்க முடியவில்லை.

* மனைக்கும் சோதிடம்

* மனைவிக்கும் சோதிடம்

* மனை கட்டுவதற்கும் சோதிடம்!

* மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்கும் சோதிடம்!

* வியாபாரம் தொடங்குவதற்கும் சோதிடம்!

* விவசாயத்தில் விதை விதைப்பதற்கும் சோதிடம்

இப்படி நமது நாட்டில் சோதிடம் களைகட்டிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் முதல் குடிமகனிலிருந்து, பிரதம அமைச்சர், முதலமைச்சர் உட்பட கடைக்கோடி குடிமகன் வரை அத்தனை பேரும் சாதி, மத வித்தியாசம் இல்லாமல் ஜோதிட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதில் பெயர் தாங்கி முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல! ஹஜ்ரத்மார்கள் இந்தக் குறி சொல்லும் தொழிலில் ஊறிப்போய்க் கிடக்கின்றனர்.

இதன் விளைவாக எத்தனையோ உயிர்ப்பலிகள் நடக்கின்றன. கொலையே நடக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டுகொள்வதுமில்லை. நடவடிக்கை எடுப்பதுமில்லை. காரணம் அத்தனை பேரும் இந்த சோதிட அறியாமையில் உழன்று கொண்டிருக்கின்றனர்.

குழந்தையின் உயிரைப் பறித்த குறிகாரன்

சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு சிறுவனைக் காணவில்லை என்று தேடுகின்றார்கள். காணாமல் போன பையன் ஒரு முஸ்லிம். அதனால் அவனது பெற்றோர் ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் குறிகாரரிடம் சென்றுள்ளனர். சிறுவன் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் போய்விட்டான் என்று குறிகாரன் விட்டு அடித்திருக்கின்றான்.

சிறுவனைத் தேடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அத்தனை பேரின் கவனமும் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் தான் இருந்தது. அருகில், அண்டை வீட்டில் அல்லது மொட்டை மாடியில் அவர்கள் கவனம் செல்லவே இல்லை.

இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டின் மொட்டை மாடியில் பிண வாடை வீசியிருக்கின்றது. வாடை வரும் இடத்தைப் பார்த்ததில் தண்ணீர் தொட்டியிலிருந்து நாற்றம் வந்தது. காணாமல் போன சிறுவனின் சடலம் தண்ணீர் தொட்டியில் ஊறி, உப்பி, பிய்ந்து நாறிக் கொண்டிருந்தது.

மாடியில் விளையாடச் சென்ற பையன், தொட்டியில் விழுந்து மரணத்தைத் தழுவியது பின்னரே தெரிய வந்தது. குருட்டு சிந்தனை கொண்ட குறிகாரனுக்கு, பையன் மாடி வீட்டில் தான் இருக்கிறான் என்ற உண்மை தெரியாததால் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் என்று உளறியுள்ளான்.

இவனது உளறலுக்காக செலவழித்த கால நேரத்தையும், கவனத்தையும் இங்கே செலுத்தியிருந்தால் ஒருவேளை பையனை உயிருடன் கூட மீட்டியிருக்கலாம்.

இப்போது இந்த உயிர் பறிபோனதற்கு யார் காரணம்? இந்தக் குறிகாரன் தான். இதற்காக இத்தகையவர்களுக்கு சவூதியைப் போன்று மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

கொலைகாரனான குறிகாரன்

இந்தக் குறிகாரர்கள் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதற்குப் பின்வரும் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

சுரேஷ் போரா (வயது 44) என்ற வியாபாரி புதிய முதலீடு செய்யும் போதெல்லாம் தன்னுடைய ஆஸ்தான ஜோதிடன் வசந்த் என்பவனிடம் கேட்காமல் எதையும் முதலீடு செய்வதில்லை.

இவ்வாறிருக்கையில், இரு தினங்களுக்கு முன்பு ஜோதிடன் வசந்த், தன்னுடைய வாடிக்கையாளர் சுரேஷ் போராவிடம், “இரண்டொரு நாட்களில் வருமான வரித்துறை உன் வீட்டை சோதனையிட உள்ளது. எனவே உன்னுடைய வீட்டில் பணம், நகையெல்லாம் வைத்திருக்காதே! எனது வீட்டில் கொண்டு வந்து வைத்துவிடு!” என்று ஆரூடமும் அறிவுரையும் சொல்லியிருக்கிறான்.

இந்த அப்பாவி வணிகர், அவனது வார்த்தைகளை அப்படியே நம்பி, தன் வசமிருந்த நகை, தொகை அத்தனையையும் அவனிடம் ஒப்படைத்துள்ளார். இதற்குப் பின்னர் அந்த வியாபாரியைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். வணிகரை வலைவீசி காவல்துறை தேடுகின்றது. குடும்பத்தினர் தேடுகின்றார்கள். கூடவே இந்தக் குறிகாரனும் தேடுகின்றான். இதற்கிடையில், அந்த வியாபாரி ஆயிரம் விளக்கு பகுதியில் காணப்படலாம் என்று மேற்படி குறிகாரன் மீண்டும் ஒரு குட்டி ஜோசியம் கூறுகின்றான்.

ஆனால் காவல்துறையினர் வியாபாரியின் அழுகிப் போன சடலத்தை ஒரு பார்க் அருகில் நின்ற காரிலிருந்து மீட்கின்றனர். காவல்துறையின் சந்தேகம் சரியான திசையில், ஜோதிடன் பக்கமே திரும்புகின்றது. கைது செய்து நையப் புடைத்ததில் ஜோதிடன் வசந்த் வணிகரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

பழத்தில் சயனைட் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கின்றான் என்பது காவல்துறை விசாரணையில் துலங்கியது. குறிகாரனின் வீட்டை சோதனையிட்ட போது, இரண்டு கோடி ரூபாய் பெறுமான நகைகள், 28 லட்ச ரூபாய் ரொக்கத்தை காவல்துறை கைப்பற்றியது. இந்தக் கொலைகாரக் குறிகாரன் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டான். இந்தச் சம்பவம் பிப்ரவரி 2007ல் சென்னை செம்பியத்தில் நடைபெற்றது.

இப்போது சொல்லுங்கள். இந்தக் குறிகாரர்களை என்ன செய்ய வேண்டும் என்று! இவர்களுக்கு மரண தண்டனையை விட மாற்றுத் தண்டனை கிடையாது என்பதை இந்தச் சம்பவமும் நமக்குத் தெளிவாக உணர்த்தவில்லையா?

ஆத்தூரில் இறந்த ஆறு குழந்தைகள்

சேலம், ஆத்தூர், உதயப்பட்டியில் 2008, ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து சிறு குழந்தைகள் ஒவ்வொன்றாக இறந்தன. குழந்தைகளுக்குக் கடவுளின் சாபம் இறங்கிவிட்டது என்று ஒரு சிலர் ஊரையே காலி செய்து விட்டு, கோயிலில் போய் தங்கினர். துவக்கத்தில் ஏதோ தொற்று நோய் என்று பயந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆய்வு செய்து பார்த்ததில் தொற்று நோயால் குழந்தைகள் இறக்கவில்லை என்று முடிவானது.

இந்நிலையில் தினேஷ் என்ற ஆறு வயதுச் சிறுவனும், பிரியதர்ஷினி என்ற மூன்று வயது சிறுமியும் இறந்தனர். பயத்தில் நடுங்கிய கிராமத்தில் காவல்துறை களமிறங்கி, இரண்டு குழந்தைகளின் பிரேதங்களையும் பரிசோதனை செய்து பார்த்த போது, குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.

தீவிர விசாரணையின் போது சந்தேகம், அந்த ஊரில் இருந்த இரண்டு ஜோதிடர்களை நோக்கிச் சென்றது. பெருமாயி, பழனிமுத்து ஆகிய தம்பதியர் தான் இந்தப் படுபாதகமான காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். குழந்தைகளுக்கு மிட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்களில் விஷத்தைக் கலந்து கொடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று, “உங்கள் குழந்தை ஒரு மணி நேரத்தில் இறந்துவிடும்’ என்று குறி சொல்லிவிடுவார்கள்.

சோகச் செய்தியாக இருந்தாலும் சொன்ன செய்தி பலித்தது அல்லவா? இந்த ஜோதிடத் தம்பதியின் மரியாதை கூட ஆரம்பித்துவிட்டது. இப்படி நாம் சொல்லவில்லை. அவர்களே காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்தனர்.

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கணவன் பழனிமுத்து சிறையிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகின்றான். அவனது மனைவி 2012, ஜூலை மாதம் சந்தேகத்தின் பலனாய் நீதிமன்றத்தால் விடுதலையாகி விடுகின்றாள்.

ஆறு குழந்தைகளை தனது குறி சொல்லும் தொழிலுக்காகக் கொலை செய்துவிட்டு, உதயப்பட்டிக் கொலைகாரியான குறிகாரி உத்தமியாக வெளியே வந்து விட்டாள். சட்டத்திற்கு முன்னால் இந்தக்  கொலைகளுக்கு தண்டனை பெறாமல் இவள் தப்பிவிட்டாள். ஆறு குழந்தைகளின் உயிர்கள் கால் காசுக்கு மரியாதை இல்லாமல் போனது தான் மிச்சம்.

இப்போது சொல்லுங்கள்! இந்தக் கயவர்களைக் கழுமரம் ஏற்றாமல் தப்ப விடுவது, தண்டிக்காமல் விடுவது நியாயமா?

கருவை அழித்த குறிகாரன்

2012, ஏப்ரல் 2 அன்று, “தி டெலிகிராப்’ பத்திரிகையில் பதிவான செய்தி:

ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் தெனாலி என்ற ஊரில் அல்லாபக்ஷ், முன்னி என்ற தம்பதிக்கு 2000ல் திருமணம் நடக்கிறது. திருமணம் முடித்ததிலிருந்து பிறந்ததெல்லாம் பெண் குழந்தைகள் தான். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்றாவது பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் மரணத்தைத் தழுவுகின்றது.

ஆண் குழந்தை வேண்டுமே! அதனால் ஜோதிட சாமியாரை அணுகுகின்றனர். அந்தப் பாவி, “இனி பிறக்கப் போவதும் பெண் குழந்தை தான். ஏழாவது குழந்தை தான் ஆண் குழந்தை’ என்று ஆரூடம் கூறியிருக்கின்றான். நான்காவது, ஐந்தாவது குழந்தைகளையும் கருவிலேயே கொலை செய்துள்ளார்கள். இரும்பு மனம் கொண்ட அவளது கணவன் அல்லாபக்ஷ் ஒரு வெல்டிங் தொழில் செய்யும் கொல்லன். ஆறாவதாக முன்னி கருவுற்ற போது கொலைகாரக் கொல்லனின் உறவினர்கள், மனைவியின் கைகளைப் பிடித்துக் கொள்ள, பெண் கருவைச் சுமந்த பாவத்திற்காக முன்னியின் அடி வயிற்றில் இரும்புக் கம்பியால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகின்றான். அவ்வளவு தான். கலங்கியது முன்னியின் கரு மட்டுமல்ல! முன்னியும் சேர்த்துத் தான்.

32 வயதான முன்னி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்படுகின்றார். அங்கு அவருக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் காத்திருக்கின்றது. இனிமேல் முன்னியின் வயிற்றில் குழந்தை பெறும் பாக்கியமே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தது தான் அந்த அதிர்ச்சித் தகவல்!

கொலைகாரக் கணவனும், அவனது தந்தை அப்துல் பாபு, தாய் தாஹிருன்னிஸா ஆகியோரும் கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள ஜோதிட சாமியாரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்று காவல்துறை ஆய்வாளர் ஷேக் உஸ்மான் தெரிவித்துள்ளார்.

“ஏழாவது தான் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஜோசியக்காரன் சொன்னதால், மூன்று தடவையும் என் மகள் கருவாகி, கருவாகி அநியாயமாகக் கலைக்கச் செய்தார்கள்” என்று முன்னியின் தாயார் பாத்திமா கூறினார்.

இந்த ஜோதிடக்காரனின் ஜோதிடத்தால் மூன்று குழந்தைகள் ஈவு இரக்கமில்லாமல் கலைக்கப்பட்டுள்ளன; கருவறுக்கப்பட்டுள்ளன.

இப்போது சொல்லுங்கள்! குறி சொல்லும் இந்தக் கொலைகாரப் பாவிகளை உயிருடன் விட்டு வைக்கலாமா?

பலிக்காத குறியால் பலியான ஜோதிடன்

22.12.2014 அன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் கார்மேகம் என்ற பத்திரிகையாளர், குறி பார்க்கும் கலாச்சாரம் கீழ்தட்டு மக்களிடம் மட்டும் இல்லை, மேல்தட்டு மக்களிடமும் உள்ளது என்ற தலைப்பின் கீழ் சமூக அவலத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

அறிவியல் வளர்ச்சி பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தும், சமுதாயத்தில் இந்த அறியாமை இன்னும் ஒழியவில்லை. அதனால், புரையோடிப் போன மூடப்பழக்கங்களைக் கல்வியறிவு களைந்து விடும் என்று யாரும் வாதிட முடியாது.

தினசரி பத்திரிகைகள், மாத, வார இதழ்கள், தொலைக்காட்சிகளில் ஜோதிடம் பெரிய அளவில் ஆக்கிரமித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் கூட இதை ஒரு பாடமாக்கியுள்ளன. அதனால் இந்தப் பழக்கம் கீழ்தட்டு மக்களிடம் மட்டும் குடிகொண்டுள்ளது என்று சொல்லிவிட முடியாது என இதுதொடர்பாக ஆய்வு நடத்திய கலாச்சார ஆய்வு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பேய்க்கும் பார்! நோய்க்கும் பார்!

கிராமப்புற மக்களுக்குக் காய்ச்சலோ, தீராத நோயோ ஏற்பட்டுவிட்டால் அது நோயாக இருக்கலாம்; அல்லது பேயாகவும் இருக்கலாம். எனவே நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும் என்று இரண்டுக்கும் சேர்த்தே பார்ப்பார்கள். உதாரணத்திற்கு அம்மை நோய், வைரஸ் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு விட்டால் அம்மனிடம் செல்கின்றனர். காணாமல் போன பொருட்களை மீட்க வேண்டுமானால் அந்தத் துறைக்கு சுடலை மாடனை நாடுகின்றனர்.

அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என படித்த பட்டதாரிகள், பண்டிதர்கள் அத்தனை பேரும் ஜோதிடம் எனும் மாய வலையில் வீழ்ந்து கிடக்கின்றனர். விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்கள், ஏவுகணைகள், விண்கலங்களை ஏவுவதற்கும், அனுப்புவதற்கும் ஜோதிடம் பார்க்கின்றனர். அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடவும் கூட்டணி அமைக்கவும் ஜோதிடம் பார்க்கின்றனர்.

இவை அனைத்தும் நமக்குப் படம்பிடித்துக் காட்டும் விஷயம், இந்த ஜோதிடம் என்ற மாய மந்திர நோய் அடித்தட்டு மக்களை மட்டுமல்லாது, படித்த பண்டிர்கள் அனைவரையும் தன் வலையில் இழுத்துப் போட்டு அவர்களை ஆட்டி அலைக்கழிக்கின்றது.

நல்ல காலமா? நாச காலமா?

அண்மையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி அற்புதசாமி என்பவர் விக்கிரமசிங்கபுரம் அருகில் மாரியப்பன் என்பவரால் கொலை செய்யப்படுகின்றார்.

மாரியப்பன் இதற்கு முன்பு அவரது உதவியாளராக செயல்பட்டவர். மாரியப்பனின் குடும்பத்திற்கு நல்ல காலம் வரும்; வளமும் செழிப்பும் பெருகும் என்று அற்புதசாமி அருள்வாக்கு சொல்லியிருந்தார். ஆனால் ஒன்றுமே பலிக்கவில்லை. அதனால் ஆத்திரமும் கோபமும் கொண்ட மாரியப்பன் அற்புதசாமியை போட்டுத் தள்ளிவிட்டார். மாரியப்பனுக்கு நல்ல காலம் பிறக்கவில்லை. நாச காலமே பிறந்தது.

தனது உதவியாளராக இருந்த மாரியப்பனுக்கு, தான் சொன்ன வாக்கு பலிக்காமல் போய் அவர் தனது உயிருக்கே உலை வைக்கப் போகின்றார் என்ற அறிவு குறிகார அற்புதசாமிக்கும் இல்லாமல் போய்விட்டது.

இறுதியில் தனது எதிர்காலத்தை அறியாத அற்புதசாமி என்ற தற்குறி, குறி சொல்லும் தொழிலுக்கு பரிதாபமாகப் பலியாகி விடுகின்றார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், கற்க வேண்டிய பாடம் இந்த ஜோதிடக்காரர்களின் சித்து விளையாட்டுக்களால், ஏமாற்று வேலைகளால் பல பேரின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. பல பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டுள்ளன. இத்தனைக்குப் பின்னரும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிகப்பட்சம் இந்த நாட்டிலுள்ள நீதிமன்றம் ஒரு சில ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கின்றது. அதற்குப் பின்னால் பழைய குருடி, கதவைத் திறடி என்ற கதையாக குறிகாரர்கள் தங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றார்கள். மக்கள் அந்த மாய வலையில் விட்டில் பூச்சிகளாய் மீண்டும் மீண்டும் விழுகின்றனர். இதற்கு விடிவும் முடிவும் இஸ்லாத்தில் மட்டும் தான் உள்ளது.

முதலில் இஸ்லாம் ஓர் அடிப்படையை முஸ்லிம்களுக்குத் தெரிவிக்கின்றது. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விஷயத்தையும் மனிதன் அறிய முடியாது. சிந்தனை அறிவின் மூலம் சிலவற்றை உணர்ந்து கொள்ள முடியும். மற்றபடி மறைவான செய்திகளை யாராலும் அறிய முடியாது என்று திருக்குர்ஆன் தெளிவாக பிரகடனப்படுத்துகின்றது.

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

இந்த ஐந்து விஷயங்களையும் மனிதன் ஐம்புலன்களைக் கொண்டு அறிய முடியாது என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் இந்த ஜோதிடர்கள் தலையெடுக்க முடியாது. மீறி தலையெடுத்தால் இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றபடி அவர்களைக் களையெடுத்தால் மனித சமுதாயம் இதுபோன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து பாதுகாப்பு பெற்றுவிடும்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 27

மாநபி அறிவித்த மறைவான செய்திகள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்கள் எல்லாமே அவர்கள் மட்டும் தெரிந்து கொள்வதற்காக அல்ல. நாமும் அதைத் தெரிந்து கொள்வதற்காத் தான்.

உதாரணமாக, சொர்க்கம் இருக்கிறது என்று நாம் நம்புகின்றோம். இது மறைவானது. இதை நமக்கு வழங்கப்பட்ட ஐம்புலன்களைக் கொண்டு பார்க்க முடியாது. ஆறவாது அறிவைக் கொண்டு சிந்தித்தாலும் கூட சொர்க்கத்தை அறிய முடியாது.

அப்படியானால் நாம் எவ்வாறு சொர்க்கத்தை நம்புகின்றோம்? சொர்க்கம் இருக்கிறது, அதை நம்ப வேண்டும் என்று படைத்தவன் சொல்லிவிட்டான் என்பதற்காக நம்புகிறோம்.

அவன் நமக்கு இதைச் சொல்லவில்லையானால் சொர்க்கம், நரகம் அதில் உள்ள பாலம், அர்ஷ், மஹ்ஷர் மைதானம், அதில் நடக்கும் விசாரணை இவை அனைத்தும் நமக்குத் தெரிந்திருக்காது. நபியவர்களுக்கு இறைவன் அறிவித்துக் கொடுத்திருக்கிறான். அதை அவர்கள் நமக்கு அறிவித்ததினால் நாம் அதை நம்பிக்கை கொள்ள வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் இந்த மறைவான விஷயங்களை நம்பிக்கை கொள்ளுமாறு முதலில் நமக்குக் கட்டளையிடுகின்றான்.

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

(அல்குர்ஆன் 2.3)

இந்த உலகத்தில் யார் யார் என்ன செய்கிறார்கள்? எவ்வளவு சம்பாதித்தார்கள்? என்ன சாப்பிட்டார்கள்? என்பதைக் கண்கானிப்பது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுடைய வேலை அல்ல. மக்கள் அனைவருக்கும் சொல்லித்தர வேண்டிய மறைவான விசயங்களை அல்லாஹ் தூதர்களுக்கு அறிவிப்பான். இறைவன் அறிவித்த அந்த மறைவான விசயங்களை அவர் வைத்துக் கொள்வதற்காக இல்லை. மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக அறிவிக்கிறான். அவர் அந்தச் செய்திகளை மக்களுக்கு சொல்கின்றாரா என்பதை கண்காணிக்கவும் மலக்குகளை நியமித்திருக்கின்றான்.

அந்த தூதர்கள் மறைவான விஷயங்களைப் பற்றி மக்களுக்கு சொல்லித் தராமல் தனக்குத் தானே வைத்துக் கொண்டால் அல்லாஹ் சும்மா விடுவானா? அவ்வாறு அவர் செய்து விடக் கூடாது என்பதற்காக கண்காணிப்பதற்கு மலக்குமார்களையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக இருந்தாலும் வேறு எந்த நபிமார்களாக இருந்தாலும் அல்லாஹ் எதை மறைவானது என்று அறிவித்துக் கொடுத்தானோ அவை அனைத்தையும் நமக்கும் சொல்லி விட்டார்கள். என்ன வித்தியாசமென்றால், அவர்கள் நேரடியாக அல்லாஹ்விடமிருந்து அறிந்து கொள்வார்கள். நாம் நபியவர்கள் நமக்கு அறிவித்ததனால் அவற்றை அறிந்து கொள்கிறோம். அவர்கள் அல்லாஹ்விடமிருந்து கேட்டு அதை நமக்கு சொல்லித் தருகின்றார்கள்.

எதுவெல்லாம் ஹதீஸ்களில் சொல்லப்பட்டு இருக்கிறதோ அதைத் தவிர வேறு மறைவான விஷயங்கள் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த மறைவான விஷயங்கள் அனைத்தும் நமக்கும் தெரியும். நாம் ஹதீஸ்களைத் தேடிப் பார்த்தோமென்றால், அவர்களுக்குத் தெரிந்த அத்தனை மறைவான விஷயங்களையும் மக்களுக்குச் சொல்லியிருப்பார்கள்.

உதாரணத்திற்கு நாம் இதற்கு முன் பார்த்த ஒரு சம்பவத்தையே இங்கு குறிப்பிடலாம். பத்து பேர் சுவர்க்கவாசி என்பது மறைவான விஷயம் தானே! அது நபியவர்களுக்கு மட்டுமா தெரியும்? நமக்கும் தெரியும். நாம் உறுதியாக அடித்துச் சொல்லலாம். ஏன் இவ்வாறு சொல்கிறோம்? நபியவர்கள் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கும் அது தெரியும்.

அதே போன்று நபியவர்களுக்குத் தெரிந்த எந்த மறைவான விஷயமாவது நமக்குத் தெரியாமல் இருக்குமா? இருக்கவே முடியாது. அதை அவர்கள் நமக்குக் கூறாமல் மறைக்கவும் முடியாது.

ஏனென்றால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற(வேதத்)தி-ருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்கüடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்றதை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்!என்று கூறுகிறான்.

நூல்: புகாரி 4612

நபிகளார் மறைவானதை அறிவார்கள். பூமியில் எங்கு என்ன நடந்தாலும் அவர்கள் இருந்த இடத்திலிருந்தே அறியக்கூடியவர்களாக இருக்கின்றார்கள் என்று சிலர் கூறிவருகிறார்கள்.

இப்போதும் (இறந்த பிறகும்) நபியவர்கள் மறைவானதை அறிவார்கள் என்று சொன்னால் அதையும் நமக்குச் சொல்லியாக வேண்டும். அதை நமக்குச் சொல்லவேண்டியது அவர்களுக்குக் கட்டாயக் கடமை அல்லவா? அவ்வாறு சொல்லவில்லையானால் அவர்கள் தூதுத்துவத்தில் குறை வைத்ததாக ஆகிவிடுமே?

இதைப்பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 5.67)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருக்க, இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாம் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; நம்முடைய மனதில் நினைப்பதை அறிவார்கள் என்று சொல்கிறார்கள்.

எனவே நபியவர்கள் தமக்கு அருளப்பட்ட எல்லா மறைவான விஷயங்களையும் நமக்குச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் அவ்வாறு சொல்லவில்லையென்றால் தூதுத்துவத்தை ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்றாகிவிடும்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

அல்குர்ஆன் 72:26,27,28

இந்த வசனங்களில் அல்லாஹ் தான் பொருந்தி கொண்ட தூதர்களுக்குத்தான் மறைவானதை அறிவித்துக் கொடுப்பேன். அவர்களை தவிர வேறு யாருக்கும் அறிவித்துக் கொடுக்க மாட்டேன் என்று தானே சொல்கிறான்.

இந்த வசனத்தின் அடிப்படையில் நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் இறந்து போன அவ்லியாக்கள் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் என்ன இறைவனின் திருப்தியைப் பெற்றவர்களா? அல்லது அவர்கள் இறைநேசர்களா? நாகூர் ஆண்டவருக்கு மறைவானது தெரியும் என்றால் அவர்கள் என்ன அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதரா?

மேலும் இவர்கள், நபிகளார் மறைவானதை அறிவார்கள் என்று வாயளவில் சொல்லி விட்டு அந்தத் தன்மையை அப்படியே அவ்லியாக்கள் என்ற பெயரில் இறந்து போன மனிதர்களுக்கு கொடுத்து விடுவார்கள். நாகூர் ஆண்டவர் மறைவானதை அறிவார்; அப்துல் காதர் ஜீலானி மறைவானதை அறிவார் என்கிறார்கள்.

அவர்கள் அவ்லியாக்கள், மகான்கள், இறைநேசர்கள் என்றால் திருக்குர்ஆனில் அல்லாஹ் எந்த வசனத்திலாவது இந்த மாதிரியான பெயர்களைக் கொண்டவர்கள் என்னுடைய நேசர்களாவர் என்று சொல்லியிருக்கின்றானா? அல்லது நபியவர்களாவது எனக்குப் பின்னால் இன்ன இன்ன பெயரைக் கொண்ட மனிதர்கள் வருவார்கள். அவர்கள் மறைவானதை அறிவார்கள் என்று எங்கேனும் சொல்லியிருக்கிறார்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆக இவர்கள், எந்த வசனத்தை (72:26,27) ஆதாரமாகக் காட்டி நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்று சொல்கிறார்களோ அந்த வசனம் அந்த அர்த்தத்தைச் சொல்லவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டுவிட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

(அல்குர்ஆன் 3.179)

இந்த வசனத்தை அவர்கள் ஆரம்பத்திலிருந்து படிக்காமல் பாதியிலிருந்து மேலோட்டமாகப் படித்து விட்டு, “இறைத்தூதர்களில் தான் நாடியோரை தேர்வு செய்து அவர்களுக்கு மறைவானதை அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பதாகச் சொல்கிறான்; அப்படியானால் நபியவர்களுக்கும் மறைவானது தெரியும்’ என்று வாதிடுகிறார்கள். ஆனால் இந்த வசனத்தின் ஆரம்பம் என்ன சொல்கிறது. அல்லாஹ் எதை அறிவித்துக் கொடுப்பதாகச் சொல்கிறான்? என்பதை விளங்காமல் வாதம் செய்கிறார்கள்.

வசனத்தின் ஆரம்பத்தைப் படித்துப் பார்த்தாலே இவர்கள் வைக்கின்ற வாதம் எந்த அளவுக்கு பயங்கரமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நபியவர்கள் வாழும் காலத்தில் முஸ்லிம்களோடு முனாஃபிக்குகளும் கலந்திருந்தார்கள். அவர்கள் தம்மை இஸ்லாமியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டே பல நயவஞ்சகக் காரியங்களில் ஈடுபட்டனர். அல்லாஹ் அதை அறிவித்துக் கொடுக்கும் வரை நபியவர்கள் அவர்களை அறியாதவர்களாக இருந்தார்கள். நபித்தோழர்களும் அவர்கள் முஃமின்கள் தான் என்று நினைத்திருந்தார்கள். எனவே தான் அவர்களில் முஃமின்கள் யார், முனாஃபிக்குகள் யார் என்பதைத் தெளிவுபடுத்துவதாக மேற்கண்ட வசனத்தில் சொல்கிறான்.

அனைத்து மக்களும் நம்பிக்கை கொள்ளக்கூடிய மறைவான விஷயங்களை அல்லாஹ் நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். ஆனால் அது நமக்காக அறிவித்துக் கொடுப்பது. அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக அறிவித்துக் கொடுத்ததல்ல. நமக்கு அந்தச் செய்திகள் வந்து சேர வேண்டும் என்பதற்காக அதைத் தனது தூதர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். அவர்களும் எதையெல்லாம் நமக்கு அறிவிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டானோ அவை அனைத்தையும் மீதம் வைக்காமல் நமக்குச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த அத்தனை மறைவான விஷயங்களையும் நமக்கும் சொல்லிவிட்டார்கள். இந்தச் செய்தி யாருக்குச் சென்றடையவில்லையோ அவருக்கு வேண்டுமானால் இது தெரியாமல் இருக்கும்.

நபியவர்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும் என்பதற்கு ஆதாரமாக வழிகேடர்கள் எடுத்துக் காட்டும் இரு வசனங்களின் நிலை இதுதான்.

ஒன்று முனாபிக்குகள் யார் என்ற விபரத்தை நபிகள் நாயகத்துக்கு அறிவித்துக் கொடுப்பதைப் பற்றி பேசுகிறது. மற்றொன்று சொர்க்கம் நரகம் போன்ற மறைவான விஷயங்களை நமக்காக நபிமார்களுக்கு அறிவித்துக் கொடுக்கப்படும் என்று கூறுகிறது. நபிகள் நாயகத்துக்கோ, மற்ற நபிமார்களுக்கோ மறைவான அனைத்தும் தெரியும் என்றோ அனைத்தையும் அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பான் என்றோ இவ்வசனங்கள் கூறவில்லை.

அதே போன்று மற்றொரு ஹதீஸையும் அவர்கள் ஆதாரமாகக் காட்டுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இந்த (கிப்லா) திசையில் முன்னோக்கிக் கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் நீங்கள் செய்வதையெல்லாம் நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கüன் பணிவும் (சஜ்தாவும்) உங்கüன் குனிவும் (ருகூஉம்) எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக எனது முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் பார்க்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 418

இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு, “பார்த்தீர்களா! பின்புறம் நடப்பது எல்லாமே நபிகளாருக்குத் தெரிகிறது. முதுகுக்குப் பின்னாலும் அவர்களுக்கு மூன்றாவதாக ஒரு கண் உண்டு. அதனால் அவர்கள் மறைவானதை அறிவார்கள்’ என்று வாதிடுகிறார்கள்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி தான். அதில் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் இதை அவர்கள் தவறாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.

விஷயம் என்னவென்றால், தொழுகையில் நீங்கள் ருகூவு செய்வதையும், ஸஜ்தா செய்வதையும் தான் நான் பார்ப்பேன் என்று சொன்னார்களே தவிர நீங்கள் தொழுகையில் செய்கின்ற அனைத்து செயல்களையும் நான் பார்ப்பேன் என்று சொல்லவில்லை. ஏன் அவ்விரண்டை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்கள் என்றால், ஒருவர் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது பின்னால் இருப்பவர்களும் நம் கண்ணுக்கு தெரிவார்கள். அவர்கள் ஒழுங்காக ருகூஉ செய்கிறார்களா இல்லையா என்பது தெரியும். நம்மாலும் இதைப் பார்க்க முடியும். இதைத்தான் நபியவர்களும் சொன்னார்களே தவிர தனக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

நீங்கள் ருகூவு செய்யும் போது நீங்கள் சரியாகச் செய்கிறீர்களா என்று நான் பார்ப்பேன். நீங்கள் தொழுகையில் கவனக் குறைவாக இருந்து விடக்கூடாது என்று ஒரு எச்சரிக்கைக்காக சொன்னார்கள். அவ்வாறு நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்றால் இதற்கு முன் நாம் பார்த்த எத்தனையோ சம்பவங்கள் நேர் முரணமாக அல்லவா அமைந்திருக்கின்றன?

மேலும், மற்றொரு வசனத்தையும் நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள். இந்த வசனம் பின்வருமாறு,

“(செய்பவற்றைச்) செய்யுங்கள்! உங்கள் செயலை அல்லாஹ்வும், அவனது தூதரும், நம்பிக்கை கொண்டோரும் அறிவார்கள். மறைவானதையும், வெளிப் படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 9.105)

இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, எதிரிகளுடைய, காஃபிர்களுடைய எல்லா செயல்களையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருப்பதை போல நபியவர்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் உட்கார்ந்து இரகசியம் பேசினால் எவ்வாறு அதை அல்லாஹ் அறிவானோ அந்த மாதிரி நபிகளாரும் அறிவார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. எனவே  நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்று வாதிடுகிறார்கள். இதிலும் அவர்கள் குறைமதி உடையவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

இவர்களுடைய பாணியே என்னவென்றால் எந்த வசனத்தையும் முழுவதும் படிப்பதே கிடையாது.

அந்த வசனத்தில் வெளிப்படையாக அவர்கள் செய்யக்கூடிய காரியங்களைத் தான் அல்லாஹ்வும் அவனது தூதரும் பார்ப்பார்கள் என்று சொல்கிறான். ஒரு பேச்சுக்கு நபிகளாரும் அல்லாஹ் அறிவதைப் போன்று அறிவார்கள் என்றால், நம்பிக்கை கொண்ட முஃமின்களும் அறிவார்கள் என்று அந்த வசனத்தில்  வருகின்றதே! அப்படியானால் நம்பிக்கை கொண்ட எல்லோருக்கும் அல்லாஹ் அறிவதை போன்று மறைவானதை அறியக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்று இவர்கள் சொல்வார்களா?

மேலும் அந்த வசனத்தின் தொடர்ச்சியில், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று வருகின்றது. வெளிப்படையானது, மறைவானது என இரண்டையும் அறியக்கூடியவன் அல்லாஹ் மட்டும் தான் என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?

—————————————————————————————————————————————————————-

புகாரியின் அறிவிப்பாளர்கள் பற்றிய அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை

ஹெச். முஹம்மது அலீ, ஏ. சபீர் அலீ

இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள்

தமிழ் பேசும் உலகிற்கு மத்தியில் ஏகத்துவ ஜோதி அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ஏற்றப்பட்ட பிறகு அது பட்டிதொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்து, தரம் கெட்ட தரீக்காக்களையும், மக்களை மயக்கிய  மத்ஹபுகளையும், அவர்களை மழுங்கடிக்கச் செய்த மண்ணறை வழிபாட்டையும், சீறிப் பாய்ந்த ஷியாயிசத்தையும், எகிறி வந்த காதியானியிசத்தையும் துவம்சம் செய்து மக்கிப் போன சாம்பலாக மண்ணோடு மண்ணாக ஆக்கியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இறைவனுடைய உதவியும் இறைவன் இறக்கிய ஆதாரங்களும் தான்.

ஆம்! கப்ரிலும், மத்ஹபிலும், தரீக்காவிலும், ஷியாயிசத்திலும், அஹ்லே குர்ஆனிலும், காதியானியிசத்திலும் கலந்திருந்த சமுதாயத்தை ஏகத்துவத்தின் பக்கமும் தூதுத்துவத்தின் பக்கமும் சாய வைத்தது திருமறைக்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் தான்.

இத்தகைய மாபெரும் மாற்றத்தைத் தந்தவற்றில் அருள்மறைக்குப் பிறகு உள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தொகுப்புகளில் மிகச் சிறந்து விளங்குவது ஸஹீஹுல் புகாரி ஆகும்.

மிகப்பெரிய உழைப்பையும் தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியையும் தியாகம் செய்த இமாம் புகாரி அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!.

உண்மையில், இந்தத் தொகுப்பை இயற்றுவதற்கு அவர் மிகப்பெரிய முயற்சியையும், சிரமங்களையும் சுமந்தார் என்பதில் எந்த ஓர் இறை நம்பிக்கையாளனுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், உலகத்தில் எந்த மனிதன் இயற்றிய புத்தகமாக இருந்தாலும் அதில் எந்தவொரு தவறுமே இருக்காது என்று வாதிட்டால் அது இறைவனுடைய தன்மை அவருக்கு இருக்கிறது என்று வாதிடுவது போன்றாகிவிடும். ஏனென்றால் மறதிக்கும் தவறுக்கும் அப்பாற்பட்டவன் இறைவன் மாத்திரம்தான்.

என்னுடைய இறைவன் மறக்கவும் மாட்டான் தவறிழைக்கவும் மாட்டான்.

(திருக்குர்ஆன் 20:52)

இம்மார்க்கத்தை இவ்வுலகிற்கு இறுதியாக எடுத்துரைக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மறதி, தவறையெல்லாம் இறைவன் வைத்திருந்தான். அதைத் தமது தோழர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுடைய தூதரே பிரகடனப்பத்தினார்கள்.

நான் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்றே நானும் மறக்கின்றேன்.

(நூல்: புகாரி 386)

அதே சமயம் அவர்கள் மறதியாகச் செய்தால் அதை இறைவன் தெளிவுப்புடுத்தி விடுவான்.

அல்லாஹ்வின் தூதரே மறக்கக்கூடியவர்கள், தவறிவிடக்கூடியவர்கள் என்றால் ஏனைய மனிதர்களின் நிலை எங்கே?

அப்படியிருக்க, இன்று பெரும்பான்மையான அறிஞர்கள் ஸஹீஹ் புகாரியில் அறிவிப்பாளர்கள் ரீதியில் எந்த பலவீனமும் இல்லை என்று நம்புவதை நாம் பார்க்கின்றோம். இது இமாம் புகாரி அவர்களை மனிதத்தன்மையை விட்டு உயர்த்திவிடும் பயங்கரமான செயலாகும்.

ஹதீஸ்களைப் பொறுத்தவரை திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது போன்று ஒட்டு மொத்த சமுதாயத்தாலும் சாட்சி சொல்லப்பட்டதன்று.

மாறாக, ஓரிரு அல்லது ஒரு சில நபித்தோழர்களால் எடுத்து சொல்லப்பட்டவைகளாகும். நபித்தோழர்கள் என்பவர்கள் ஒருவராக இருந்தாலும் அவர் சொல்லும் செய்தி சரியாக இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் அந்த நபித்தோழரிடமிருந்து ஹதீஸைத் தொகுத்த இமாம் வரை (உதாரணமாக புகாரி வரை) வருகின்ற அறிவிப்பாளர்களை எடை போட்டு பார்த்துவிட்டுத் தான் அதை ஏற்க முடியும்.

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதற்கு அடுத்து வரக்கூடிய அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் கண்டிப்பாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவர்களே.

இது போன்ற அறிவிப்பாளர்களைத் தம்மால் இயன்ற அளவு எடைபோட்டு, நல்லவர்கள் என்று தமக்கு உறுதியானவர்களைத் தான் புகாரி தம்முடைய ஸஹீஹ் புகாரியில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், அவரையும் அறியாமல் ஒரு சில அறிவிப்பாளர்களில் சரியானவர் என்ற தகுதி இல்லாதவரையும் கொண்டு வந்திருக்கிறார்.

இது போன்ற அறிவிப்பாளர்களை ஹதீஸ் கலையில் தேர்ச்சிபெற்ற சில இமாம்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஒருவர் ஒரு துறையில் எவ்வளவு பெரிய விற்பன்னராக இருந்தாலும் சில இடங்களில் அவருக்கும் தவறுகள் நிகழ்ந்து விடும் என்பதே இயற்கையின் நியதி. அதை விட்டு இமாம் புகாரியை மட்டும் விதிவிலக்காக்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

ஆகவே, புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஒரு சில அறிவிப்பாளர்களை, ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்ற, இமாம் புகாரிக்கு முன்னோடியாக இருந்த சில இமாம்கள் தக்க காரணங்களோடு விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இமாம் புகாரியின் அறிவிப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே அந்த அறிஞர்கள்கள் அவ்வாறு விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இது ஹதீஸ் கலை பற்றிய அறிவுள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்ககூடிய விஷயமாகும்.

இமாம் புகாரி ஸஹீஹுல் புகாரியைத் தொகுத்தவுடன் ஹதீஸ் கலையில் தலைசிறந்த இமாம்களான அஹ்மது இப்னு ஹம்பல், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ ஆகிய ஹதீஸ் கலை விறபன்னர்களிடம் தன்னுடைய தொகுப்பை எடுத்துக்காட்டி சரிபார்க்குமாறு வேண்டியபோது அவர்கள் அதில் நான்கு ஹதீஸ்களை விமர்சனம் செய்தார்கள். (பார்க்க: ஃபத்ஹுல் பாரி முன்னுரை, பாகம் 1, பக்கம் 5)

இங்கு புகாரி இமாமிடத்திலேயே அவருடைய அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை நாம் காண்கிறோம்

அந்த அடிப்படையில் தற்காலத்தில் ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்றவரான அறிஞர் அல்பானீ அவர்களும் இமாம் புகாரியின் சில அறிவிப்பாளர்கள் மீது ஹதீஸ்துறை விமர்சகர்களால் எடுத்துச் சொல்லப்பட்ட விமர்சனங்களை ஆதாரமாகக் கொண்டு, அவர்கள் தனியாக அறிவிக்கும் பட்சத்தில் அவர்கள் பலவீனமானவர்கள் என்ற ஆய்வை தக்க சான்றுகளோடு நம்முன் வைக்கின்றார்.

அறிஞர் அல்பானீ அவர்களால் இங்கே எடுத்துச் சொல்லப்படும் அனைத்து விமர்சனங்களும் சரியானது தான் என்பது நமது நிலைபாடாக இல்லையென்றாலும் ஹதீஸ்துறையில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட  புகாரியின் அறிவிப்பாளர்களில் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்கிறார் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறிஞர் அல்பானீ அவர்கள் விமர்சனம் செய்த புகாரியின் அறிவிப்பாளர்களில் உதாரணத்திற்கு ஒருவரை இப்போது பார்ப்போம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு தீனார்

புகாரியில் 694, 1403, 2159, 2887, 2892 உட்பட இன்னும் சில இடங்களிலும் இவருடைய அறிவிப்பு இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைப் பற்றி அல்பானீயால் எடுத்துச் சொல்லப்பட்ட விமர்சனங்கள்:

“கண்ணில் காணாததை கண்டதாகக் கூறுவது மிகப்பெரும் பொய்யில் உள்ளதாகும்” என்று நபியவர்கள் கூறியதாக புகாரி (7043) மற்றும் அஹ்மதில் (5453) பதிவுசெய்யப்பட்ட ஹதீஸை விமர்சனம் செய்யும் போது அதில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனாரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இந்த அப்துர்ரஹ்மான் என்பவர் புகாரியுடைய அறிவிப்பாளராக இருந்தாலும் அவருடைய மனனத்தன்மையில் பலஹீனம் இருக்கிறது.

இந்த ஹதீஸைக் கூறியதற்குப் பிறகு ஹாஃபீழ் இப்னு ஹஜர் தனது ஃபத்ஹுல் பாரி எனும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

இவர் மீது மாறுபட்ட விமர்சனம் உள்ளது.

“இவர் உண்மையாளர்” என இப்னு மதீனீ கூறுகிறார்.

“என்னுடைய கருத்துபடி இவருடைய ஹதீஸில் பலவீனம் இருக்கிறது” என இப்னு மயீன் கூறுகிறார்.

“இவர் விஷயத்தில் புகாரி மற்ற அறிஞர்களுக்கு மாறுபடுகிறார். இவர் விடப்படக்கூடியவராக இல்லை” என தாரகுத்னீ கூறுகிறார்.

(என்னுடைய கருத்துப்படி இவருடைய ஹதீஸில் பலவீனம் இருக்கிறது) என்ற தனது விமர்சனத்தை இப்னு மயீன் தெளிவுப்படுத்தவில்லை என்றும் இதன் மூலம் அவர் ஏதாவது குறிப்பான ஒரு ஹதீஸை நாடியிருக்கலாம் எனறும் இப்னு ஹஜர் தெரிவிக்கிறார்.

மேலும் இமாம் புகாரி இவரை துனைச் சான்றாகத் தான் கொண்டு வந்திருக்கிறார் என்றும் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்.

(அல்பானி கூறுகிறார்:) ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இத்துடன் மட்டும் நிற்காமல் அதற்குரிய துணைச் சான்றைக் கொண்டு அதை வைத்து அந்த ஹதீஸையும் வலுப்படுத்துகிறார். அவ்வாறு துணைச் சான்றை அவர் கொண்டு வந்திருக்காவிட்டால் இப்னு ஹஜர் இமாம் புகாரிக்கு முட்டுக் கொடுப்பது போதுமானதாக இருந்திருக்காது. இது விஷயத்தில் இமாம் புகாரிக்கு வரிந்து கட்டிக் கொண்டு இப்னு ஹஜர் சார்ந்து நிற்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது.

தஹ்தீப் எனும் நூலில் இந்த அறிவிப்பாளரைப் பற்றிய ஏனைய அறிஞர்களின் விமர்சனங்களைத் தானே பதிவு செய்து விட்டு அவற்றைக் கண்டுக் கொள்ளாமல் ஹாஃபிழ் இப்னு ஹஜர் கண்ணை மூடி இருந்து விட்டார்.

அந்த விமர்சனங்கள் வருமாறு:

“அவரிடம் பலவீனம் இருக்கிறது. அவரது ஹதீஸ் எழுதப்படும் ஆனால் ஆதாரமாகக் கொள்ளப்படாது” என அபூஹாதம் இமாம் கூறியுள்ளார்.

“இவருடைய சில அறிவிப்புகள் மறுக்கப்படக்கூடியவை. இவை துணைச் சான்றாகவும் கொள்ளப்படாது. எவரது ஹதீஸ் எழுதப்பட்டு பலவீனமானவர்களுடைய பட்டியலில் சேர்க்கப்படுமோ அப்படிப்பட்ட தரத்தில் உள்ளவராவார்” என்று இப்னு அதீ கூறியுள்ளார்.

இவை தஹதீபில் உள்ள விமர்சனங்களாகும். இவர் உண்மையாளர் அதே சமயம் தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் அவர்களே தனது தக்ரீபில் சுருக்கமாகக் கூறியுள்ளார்.

இவ்வாறே அல்பானீ அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் அல்பானீ அவர்கள் “காஷிஃப் எனும் நூலில் இந்தக் கருத்தையே தஹபீ இமாமும் சார்ந்திருக்கிறார். இது அல்லாத வேறு விமர்சனத்தை அவர் கூறவில்லை” என தெரிவிக்கிறார்.

(நூல்: அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா – பாகம் 8, பக்கம் 19)

மேற்கூறப்பட்ட இமாம்களின் விமர்சனங்களைப் பார்க்க: தஹ்தீபுல் கமால் – பாகம் 17, பக்கம் 208.

மேலும் இதே அறிவிப்பாளர் மீது புகாரி 6478 ஹதீஸில் இடம்பெறும்

“ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார் நபியவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்”

என்ற ஹதீஸை விமர்சனம் செய்யும் போது தன்னுடைய ஸில்ஸிலத்துல் அஹாதீஸுல் ளயீஃபா என்ற புத்தகத்தில் (பாகம் 3, பக்கம் 463) மேலே எடுத்து சொன்ன விமர்சனங்களையும் இன்னும் சில விமர்சனங்களையும் கூறிவிட்டுப் பின்வருமாறு அல்பானீ கூறுகிறார்.

 இவர் விஷயத்தில் இனி இன்னொரு ஆய்வாளர் ஆய்வு செய்வது அவசியமில்லாத அளவிற்கு மொத்தத்தில் அனைத்து இமாம்களின் ஒன்றுபட்ட கருத்துப்படி இந்த அறிவிப்பாளர் பலஹீனமாகி விட்டார்.

மேலும் அதே பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அறியாத ஒருவர் அல்லது பொறாமைக்காரர் அல்லது (கெட்ட) உள்நோக்கம் கொண்டவரோ, அல்பானீ ஸஹீஹுல் புகாரியிலேயே குறை சொல்லிவிட்டார் மேலும் புகாரியினுடைய ஹதீஸை பலவீனமாக்கி விட்டார் என்று சொல்லாமல் இருப்பதற்காகவும் சுன்னத்தைக் காப்பதற்காகவும் இந்த ஹதீஸைப் பற்றியும் அதன் அறிவிப்பாளரைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறேன்.

முந்தைய இன்னும் பிந்தைய காலக்கட்டத்தில் மனோ இச்சையைப் பின்பற்றக்கூடியவர்களுடைய செயலைப் போன்று எனது அறிவைக் கொண்டோ அல்லது என்னுடைய சுயக்கருத்தைக் கொண்டோ (இது விஷயத்தில்) நான் முடிவு சொல்லவில்லை.

மாறாக, இந்த அறிவிப்பாளர் விஷயத்தில், பலவீனமான ஹதீஸ்களையும் குறிப்பாக நம்பகமானவர்களுக்கு மாற்றமாக இருக்கும் (ஹதீஸ்களையும்) மறுக்க வேண்டும் என்ற சங்கைமிக்க ஹதீஸ் கலையின்  சட்டங்களையும், (ஹதீஸ்கலை) அறிஞர்கள் கூறியதையும் தான் இங்கே நான் கடைப்பிடித்துள்ளேன்.

மேற்கூறப்பட்ட விமர்சனங்களின் மூலம் அப்துர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு தீனார் என்ற இமாம் புகாரியினுடைய அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று அறிஞர் அல்பானீ அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை என்பதும் இவர் விஷயத்தில் அவருடைய விமர்சனம் வெளிப்படையானது என்பதும் தெளிவாகிறது.

எனவே புகாரியிலும் பலவீனமான ஹதீஸ்கள் இருக்கின்றன என்று தக்க காரணங்களோடு நாம் விமர்சனம் செய்யும்போது சகட்டுமேனிக்கு நம்மை விமர்சனம் செய்பவர்கள் அறிஞர் அல்பானீ அவர்கள் புகாரியினுடைய அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்யும் போது அவரையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வார்களா? என்பதை நடுநிலைக் கண்கொண்டு சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

நலம் நாடுவோம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம்; இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். எனவே, எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம்.

நலம் நாடுதல் என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது. நலம் நாடுதல் என்றால், அனைவரும் நலமாக இருப்பதற்காகச் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் குறிக்கும். நன்மையான காரியங்களை செய்வது, அதற்கு உதவுவது, தர்மம் செய்வது, நீதியை நிலை நாட்டுவது, பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றுவது, சிரமப்படுவோருக்கு உதவுவது, பசியைப் போக்குவது, ஏழைகளுக்கு உதவுவது, அநாதைகளை ஆதரிப்பது, இணக்கத்தை ஏற்படுத்துவது, நேர்மையாக நடப்பது போன்ற அனைத்து விதமான காரியங்களும் இதற்குள் வந்துவிடும்.

அதுபோன்று நலம் நாடுதல் என்பது, தீய காரியங்களைச் செய்யாமல் இருப்பதையும் உள்ளடக்கும். தீமையைச் செய்யாமல் இருப்பது, அதை விட்டும் காப்பாற்றுவது, அதைத் தடுப்பது, அதற்குத் துணை போகாமல் இருப்பது, வரம்பு மீறாமல் இருப்பது, அடுத்தவர் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பது, மோசடி செய்யாமல் இருப்பது, வட்டி வரதட்சனை போன்ற சமூகத் தீமைகளை விட்டும் விலகுவது என்று அனைத்து தீய  காரியங்களையும் விட்டு அகன்று கொள்வதையும் குறிக்கும்.

இந்த அடிப்படையில் சமுதாயத்தின் அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் பிறர் நலம் நாடும் வகையில் நடந்து கொள்வதற்கு தோதுவாக, இஸ்லாம் கூறும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. அவற்றுள் நலம் நாடுதல் தொடர்பாகக் குறிப்பிட்டுக் கூறப்படும் சிலவற்றை மட்டும் சுருக்கமாக இப்போது காண்போம்.

பெற்றோருக்கு நலம் நாடுதல்

பிறர் என்று சொல்லும் போது அவர்களில் முதல் நிலையில் இருப்பவர்கள் பெற்றோர்கள். ஒவ்வொரு நபரும் தமது பெற்றொருக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டும். அவர்களைப் புண்படுத்துதோ துன்புறுத்துவதோ பெரும்பாவம். மார்க்கத்திற்கு முரணில்லாத காரியங்கள் அனைத்திலும் அழகிய முறையில் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும்.

என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீஎனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு! அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன்  17:23,24)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உன் தாய்என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். “உன் தாய்என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பிறகு, உன் தந்தைஎன்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (5971)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கிறார்கள்)என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடுஎன்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்ல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புஹாரி (5972)

குழந்தைகளின் நலம் நாடுதல்

குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் மாபெரும் அருள். இத்தகைய குழந்தைகளை, பெற்றோர் சரியான முறையில் பராமரிப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் அமைவதற்குரிய ஏற்பாடுகளை முடிந்தளவிற்குச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும். அவர்களுக்கு மத்தியில் அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதில் பாகுபாடு கற்பிக்கக் கூடாது. அவர்களுக்கு சீரிய முறையில் நல்லொழுக்கங்களைப் போதிக்க வேண்டும்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. எனக்கு என் ஒரே மகள் மட்டுமே (இப்போது) வாரிசாக வருகிறாள். ஆகவே, என் செல்வங்கள் அனைத்திலும் (அவை அறவழியில் செலவிடப்பட) மரண சாசனம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்என்றார்கள். நான் “மூன்றில் இரண்டு பாகங்களில் (மரண சாசனம் செய்து விடட்டுமா)?” என்று கேட்டேன்.

அதற்கும் “வேண்டாம்என்றார்கள். “அவ்வாறாயின் பாதியிலாவது (மரண சாசனம் செய்து விடட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்என்று சொன்னார்கள். “அவ்வாறாயின் மூன்றில் ஒரு பாகத்திலேனும் (இமரண சாசனம் செய்து விடட்டுமா)?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “மூன்றில் ஒரு பாகமா! மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான். நீர் உமது செல்வத்திலிருந்து (பிறருக்கு) கொடுப்பதும் தர்மம் தான். நீர் உம்முடைய குடும்பத்தாருக்கு வழங்கும் செலவுத் தொகையும் தர்மம் தான். உமது செல்வத்திலிருந்து உம்முடைய துணைவி உண்பதும் தர்மம் தான். நீர் உம்முடைய வீட்டாரை மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச்செல்வதைவிட (பொருளாதார) நலத்துடன் (அல்லது நல்ல நிலையில்) விட்டுச்செல்வதே சிறந்ததாகும்என்று கூறினார்கள். (“கையேந்தும் நிலையில்என்று கூறும்போது) தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (3352)

ஆமிர் பின் ஷர்ஹபீல்  (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, “என் தந்தை அன்பüப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே!  நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, “இல்லைஎன்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்என்று கூறினார்கள்.  இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.

நூல்: புஹாரி (2587)

உடன் பிறந்தோருக்கு நலம் நாடுதல்

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போன்று, நமது சகோதரர்களும் சகோதரிகளும் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, அவர்கள் மீது பொறாமைப்பட்டு அவர்களுக்குக் கெடுதல் தரும் காரியங்களை செய்வதற்குத் துணிந்துவிடக்கூடாது. நமது உடன்பிறந்தவர்களின் நலனில் ஆர்வம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் (திருமணத்திற்காக) பெண் பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை மணவிலக்கு (தலாக் செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தனது பாத்திரத்தை நிரப்பிக்கொள்ள வேண்டாம்!என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி (2140)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புஹாரி (13)

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புஹாரி (2444)

உறவினருக்கு நலம் நாடுதல்

உறவுகளை இணைத்து வாழ வேண்டும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கட்டையிடுகிறது. ஆனால். சின்னஞ்சிறிய அற்பமான விஷயங்களை எல்லாம் பாரதூரமாக எடுத்துக் கொண்டு உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல் உறவினர்களுக்கு நலம் நாடி அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இயன்றளவு நன்மைகளை செய்ய வேண்டும்.

எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். இன்னும் இரத்த பந்த உறவுகளை (சீர்குலைப்பதை) அஞ்சுங்கள். திண்ணமாக அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

(திருக்குர்ஆன் 4:1)

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

(திருக்குர்ஆன் 16:90)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்து கொண்டேயிருப்பார்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் (5000)

முதலாளியின் நலம் நாடுதல்

மக்கள் பொருளாதாரம் வைத்திருக்கும் விஷயத்தில் அவர்களுக்கு மத்தியில் வித்தியாசம், ஏற்றத் தாழ்வு இருக்கிறது. பெரும்பான்மையான மக்கள் தங்களது பொருளாதாரத் தேவைக்காக பிறரிடம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய தொழிலாளர்கள் எப்போதும் தங்களது முதலாளிக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். தங்களுக்கு ஊதியம் தரும் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிடாமல், தரப்படும் பணியை சிறப்பாகச் செய்து கொடுக்க வேண்டும்.

தன் இறைவனை நல்லமுறையில் வணங்கி, தன் எஜமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி, அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொண்டு) அவனுக்கு கீழ்ப்படிந்தும் நடக்கின்ற அடிமைக்கு என்றால் அவனுக்கு இரு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி), நூல்:: புஹாரி (2551)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேருடைய நற்செயலுக்குரிய பிரதிபலன் இரண்டு முறை  அவர்களுக்கு வழங்கப்படும்.  அவர்கள்:

  1. ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றிருந்து அவளுக்குக் கல்வி கற்றுத் தந்து, அதை அழகுறக் கற்றுத் தந்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை அழகுறக் கற்பித்து, அவளை (தானே) மணம் புரிந்தும் கொண்ட மனிதர். இவருக்கு (அதற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
  2. வேதம் வழங்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கையாளர். (முந்தைய இறைத்தூதர் மீதும், முந்தைய வேதத்தின் மீதும்) நம்பிக்கை கொண்டிருந்த அவர், பிறகு நபி (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டுவிட்டார் எனில், இவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.
  3. அல்லாஹ்வின் உரிமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.

நூல்: புஹாரி (3011)

தொழிலாளிகளுக்கு நலம் நாடுதல்

முதலாளிகள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களது ஊதியத்தைக் கால தாமதம் இல்லாமல் சரியாக முழுமையாக வழங்கிவிட வேண்டும். நிறைவான பொருளாதாரம் பெற்று வளமாக இருப்பதற்கு தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொழிலாளர்களிடம் அவர்களது சக்திக்கு மீறிய காரியங்களைச் சுமத்தி வேதனையை அளிக்கக் கூடாது. தங்களது ஊழியர்கள் சிரமத்தில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும். எப்போதும் அவர்களின் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும்.

உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு “ஒரு பிடி அல்லது இரு பிடிகள்அல்லது “ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி (5460)

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) “ரபதாஎனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:

எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (3417)

ஆதரவற்றோருக்கும் ஏழைகளுக்கும் நலம் நாடுதல்

சமுதாயத்தில் பலதரப்பட்ட வாழ்க்கை நிலையில் பல மக்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஆதாரவற்றோர், அநாதைகள், ஏழைகள் போன்றோர் இருக்கிறார்கள். இத்தகைய மக்களுடைய வாழ்க்கையின் தரம் உயர்வதற்கு முடிந்தளவு உதவக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையானவை எல்லாம் பெற்றிருப்பவர்கள் சுயநலமாக இருந்து விட கூடாது. வாழ்வாதாரம் இல்லாமல் சிரமப்படுபவர்கள் இயல்பான தன்னிறைவான வாழ்க்கை பெற்று வாழ்வதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்அல்லது “இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புஹாரி 6006

“நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடைவெளி விட்டு) சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புஹாரி (6005)

தன் அடிமையில் தனக்குள்ள பங்கை எவர் விடுதலை செய்து விடுகின்றாரோ அவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர் மீது கடமையாகும்.  அவரிடம் செல்வம் இல்லையென்றால் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். அவன்  மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புஹாரி (2492)

பெண்களின் நலம் நாடுதல்

பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வகையில் பலவீனமாக, வலிமை குறைந்தவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்யாமல் அநீதம் இழைக்கப்படுவதையும் பார்க்கிறோம். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராகப் பல்வேறு குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. எனவே எப்போதும் பெண்களின் நலம் நாடுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால்  கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி (5186), முஸ்லிம் (2914)

பாதிக்கப்படுவோருக்கு நலம் நாடுதல்

நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது.

பாதிக்கப்பட்டோர், சிரமப்படுவோர், பலவீனமானவர்கள் போன்று பல்வேறு மக்கள் நமக்கு மத்தியில் இருக்கிறார்கள். அவர்களின் துயர் துடைப்பதற்கு உறுதுணையாக  இருக்க வேண்டும். அவர்களின் சிரமங்கள் நீங்குவதற்குத் துணை நிற்க வேண்டும். அவர்கள் இன்னல்கள் நீங்கி நலமாக வாழ அதரவு அளிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்:                       1. நோயாளிகளை நலம் விசாரிப்பது 2. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது 3. தும்மியவருக்கு அவர், “அல்ஹம்துலில்லாஹ்” (“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்என்று) சொன்னால், “யர்ஹமுக் கல்லாஹ்” – (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று துஆ செய்வது 4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது 5. அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு உதவுவது 6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது 7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்:  புஹாரி (2445)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் “நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?” எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், “வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!என்று கூறினார்.  உடனே, “அவரது தவறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்!என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புஹாரி (2077)

நான் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடுவதும்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.  நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்ததுஎன்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்  (தான் சிறந்தவர்கள்)என்று பதிலளித்தார்கள்.  நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?” என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள், “பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்என்று கூறினார்கள்.  நான், “இதுவும் என்னால் இயலவில்லையென்றால்….?” என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்குச் செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புஹாரி (2518)

குடிமக்களின் நலம் நாடுதல்

ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுப்பணிகளைச் செய்யும் பொறுப்பளர்கள் போன்றோர் மக்களுக்குரிய தேவைகளை, கடமைகளைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போதும், மற்ற நேரங்களிலும் பொதுமக்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் போதும் அவர்களுக்கு உதவ வேண்டும். எல்லா நேரத்திலும் அவர்களுக்கு நல்ல முறையில் சேவையாற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், முஆத்  அவர்களையும் என்னையும் யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள். அப்போது (எங்கள்) இருவரிடமும், “நீங்கள் இலேசானதையே மக்களுக்கு எடுத்துரையுங்கள்; சிரமமானதை எடுத்துரைக்காதீர்கள். மக்களுக்கு நற்செய்தி கூறுங்கள்; வெறுப்பூட்டி விடாதீர்கள். ஒருவரோடொருவர் இசைந்து பழகி (அன்பு செலுத்தி)க் கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் (கருத்து வேறுபாடு கொண்டு) பிணங்கிக் கொள்ளாதீர்கள்என்று (அறிவுரை) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூசா அல் அஷ்அரீ (ரலி), நூல்: புஹாரி (3038)

ஹஸன் அல்பஷரீ அவர்கள் கூறியதாவது:

(நபித்தோழர்) மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்என்று சொல்ல நான் கேட்டேன்எனக் கூறினார்கள்.

நூல்: புஹாரி (7150)

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 15

அறிவிலிகள் கூறும் அகமிய ஞானம்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்கள், விஷயங்களின் ரகசியங்கள் அப்படியே காட்சியளிக்கும் போது தான் செவிவழிச் செய்தியான ஹதீஸை ஏற்பார்கள். இல்லையென்றால் அதை ஏற்க மாட்டார்கள். இப்படி ஒரு சாரார் இருப்பதாக கஸ்ஸாலி வாதிடுகின்றார். இந்த சாராரின் இத்தகைய சிந்தனை இறை மறுப்பாகும் என ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்ற கருத்தின் சுருக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

மனிதன் விளக்கமும் உழைப்பும் உள்ளவன். அவனது நோக்கமும் செயல்பாடும் அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகின்ற விதத்தில் அமைந்திருந்தால் விளைவும் அவ்வாறே அமையும். செயல்களுக்கு ஏற்பத் தான் நிகழ்வுகளும் அமையும்.

தியானம் என்ற பெயரில், திரை மறைவுக்குள் முடங்கிக் கிடக்கின்ற இவர்களின் உள்ளங்களில் வெளியுலகில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்வதாக் காட்சிகள் தோன்றும். உண்மையில் வெளி உலகம் எப்போதும் போல் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு மாற்றமும் நடந்திருக்காது. நடந்ததெல்லாம் இவர்களின் மனப் பிரமைகளும் மாயத் தோற்றங்களும் தான்.

இத்தகைய ஆசாமிகள், இவற்றை இறைவனிடமிருந்து வந்த செய்திகளாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை ஷைத்தானிடமிருந்து வந்த செய்திகள், ஊசலாட்டங்கள், உளறல்களாகும். இதில் வேதனைக் கூத்து என்னவென்றால் இந்த ஆசாமிகளில் சிலர் அல்லாஹ்வை நேரடியாகக் கண்டதாகக் கருதுகின்றனர். மூஸா (அலை) அவர்களைப் போன்று அல்லாஹ்வின் பேச்சை நேரடியாகக் காதால் கேட்டதாகக் கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் கண்டது, கேட்டது எல்லாம் ஷைத்தானிடமிருந்து வந்தவையாகும். இதை அல்குர்ஆன் 26:221, 222 வசனம் தெளிவாக அடையாளம் காட்டி விடுகின்றது.

கனவுகளும் காட்சிகளும்

இந்தப் போலிகளின் பொய்ச் செய்திகளுக்குக் கருவூலமாகவும் களஞ்சியமாகவும் அமைவது கனவுகள் தான். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் வருகின்ற இந்த வாசல்களை அடைத்து விட்டார்கள்.

ஒரு மனிதனுடைய உள்ளத்தில் சதாவும் ஆக்கிரமித்துள்ள சிந்தனைகள் கனவில் பிரதிபலிக்கும். இவை தான் பிரம்மைகள். இந்த பிரம்மைகளைப் பார்த்து இறைவனின் காட்சிகள் என்று இவர்கள் பிதற்றிக் கொள்கின்றனர். இதற்கு முகாஷாஃபா – இறைக்காட்சி என்று பெயரும் வைத்துக் கொள்கின்றனர்.

முக்கடவுள் கொள்கையைக் கொண்ட ஒரு கிறித்தவர், தான் கொண்டிருக்கின்ற அந்தக் கொள்கைக்கேற்ப கனவு காண்கின்றார். அதைச் சரியென்று நம்புகின்றார். பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள் அதற்கேற்ப கனவு காண்கின்றனர். அதைச் சரியென்றும், தெய்வ வாக்கு என்றும் நம்புகின்றனர். இது நமக்கு உணர்த்துகின்ற பாடம், இவை ஷைத்தானின் வழிகேடுகள் என்பதைத் தான்.

தவறில் விழுவதை விட்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டவர்கள் நபிமார்கள் தான். நபிமார்கள் அல்லாதவர்களுக்கு மறைவான விஷயங்களை அறிகின்ற ஞான ஒளி எப்படி ஏற்பட முடியும்? விஷயங்களின் ரகசியங்கள் அவருக்கு எப்படி உதயமாகும்? அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தன்மைகளையும், அவனது மலக்குகளின் பண்புகளையும், அவனை நம்பியவர்களுக்கு அவன் ஏற்படுத்தி வைத்துள்ள சொர்க்கத்தையும், மறுப்பவர்களுக்கு அவன் ஏற்படுத்தியுள்ள நரகத்தையும் இந்தக் காட்சிகளால் எப்படி அறிய முடியும்?

தத்துவ ஞானிகளின் தடம்புரண்ட கொள்கை

இந்த வாதம் ஃபல்ஸஃபா என்ற தத்துவவாதிகள், கராமிதா என்ற கூட்டத்தாரைச் சேர்ந்த கொள்கையாகும். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் தான் நபித்துவம் என்ற இறைச் செய்தியைப் பத்து அறிவுகளில் ஒன்றான செயலாற்றும் அறிவின் மூலம் அறிய முடியும் என்கின்றனர்.

இது இறைநேசர்களின் உள்ளங்களில் இறங்குகின்ற ஒரு ஞானஒளி; இறைநேசரின் உள்ளத்தில் தோன்றும் காட்சிகள் மலக்குகளாகும்; அவர்கள் செவியுறுகின்ற ஓசைகள் அல்லாஹ்வின் பேச்சுக்களாகும் என்றெல்லாம் பிதற்றுகின்றனர்.

இந்த அடிப்படையில் இறைச் செய்தி என்பது, தான் தேர்ந்தெடுத்த அடியார்களுக்கு அல்லாஹ் அளிக்கக்கூடிய அருட்கொடை அல்ல, அடியார்கள் தாங்களாகத் தேடிப் பெறுகின்ற தகுதியும் பதவியுமாகும் என்று இவர்கள் வாதிடுகின்றனர். இந்த அபத்தத்தை முஸ்லிம்கள் மட்டுமல்லாது யூத, கிறித்தவர்களும் எதிர்க்கின்றனர்.

வினோதமான வாதம்

உங்களில் முழுமை பெற்ற ஒரு மகானுடைய இடத்தை, ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய பயிற்சி மற்றும் உழைப்பைக் கொண்டு அடைய முடியுமா? என்று கேட்டால் அவ்வாறு அடைய முடியாது என்று பதிலளிக்கின்றனர். அப்படியானால் ஒருவர் தவம் என்ற பெயரில் தலைகீழாக நின்றாலும், தியானம் என்ற பெயரில் தன்னையே மறந்து மூழ்கிக் கிடந்தாலும் நபிமார்களின் தகுதியையும் தரத்தையும் அடைய முடியாது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். இந்த வகையில் அசத்தியவாதிகளின் இந்த வாதம் வித்தியாசமான, வினோதமான வாதமாகும்.

இறைச்செய்தி என்ற ஞானத்தை, அல்லாஹ் தேர்வு செய்த தூதர் வழியைத் தவிர்த்து, வேறெந்த வழியிலும் அடைய முடியாது. இறைச்செய்தியை அடைவதற்கு இப்படி ஒரு வழிமுறை இருந்தால் நபிமார்களே அதற்கு மிகவும் தகுதியானவர்கள். ஆனால் அவர்களில் யாரும் இப்படி ஒரு குறுக்கு வழியில் அந்த ஞானத்தை அடைந்துவிட்டோம் என்று வாதிடவில்லை. அவர்கள் அந்த வழியில் ஈடுபடவுமில்லை.

சிலரை விட சிலர் சிறப்பானவர்கள்

நபிமார்களில் ஒரு சிலரை மற்ற சிலரை விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கின்றான். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.

இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.

அல்குர்ஆன் 2:253

வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களை உமது இறைவன் நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை விட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். தாவூதுக்கு ஸபூரைக் கொடுத்தோம்.

அல்குர்ஆன் 17:55

மூஸா (அலை) அவர்களிடம் தான் பேசிய பேச்சை தனிச்சிறப்பாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேச்சை செவியுற்றது போன்று எல்லா இறைத்தூதரும் செவியுற்று விட முடியாது என்பது தான் திருக்குர்ஆன் தெரிவிக்கின்ற தெளிவான விளக்கமாகும்.

நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் இரவிலும், ஏனைய இரவுகளிலும் அல்லாஹ் காண்பித்துக் கொடுத்த காட்சிகளை வேறு யாரும் காண முடியாது.

ஒரு தூதருக்குக் கிடைத்த இந்தச் சிறப்பு மற்ற தூதர்களுக்குக் கூட கிடையாது எனும் போது, இறைத்தூதர் அல்லாதவர்களுக்கு இந்தச் சிறப்புகள் எப்படிக் கிடைக்கும்?

மூஸா நபியிடம் அல்லாஹ் பேசிய பேச்சுக்களை, தனிநபர்களுக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வுகள், உதிப்புகள் என்ற ரகத்தில் இந்த ஆசாமிகள் சேர்க்கின்றனர். இவர்களுக்கு இப்படிப்பட்ட கேடுகெட்ட நம்பிக்கை இருப்பதால் தான் மூஸா நபியைப் போன்று மகான்களும் அல்லாஹ்வின் பேச்சை செவியுறுவதாக வாதிடுகின்றனர்.

இந்தத் தவறான கொள்கையைக் கொண்ட தத்துவஞானிகளின் கருத்துக்களை கஸ்ஸாலி தன்னுடைய மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலில் கொட்டியிருக்கின்றார். இந்தக் கருத்துக்களை யூத, கிறித்தவர்கள் கூட திருப்தி கொள்ள மாட்டார்கள்.

கல்உன் நஃலைன் என்ற நூலின் ஆசிரியரும், அவரைப் போன்ற இறை மறுப்புக் கொள்கையாளர்களும் இப்படிப்பட்ட விஷக்கருத்துக்களை தங்களுடைய நூல்களில் பக்கம் பக்கமாகப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

நூலாசிரியர் மக்ராவியின் விளக்கம்:

அன்புச் சகோதரர்களே! இஹ்யாவுக்குள் புதைந்து கிடக்கும் பொதி மூட்டைகளைப் பாருங்கள். குர்ஆன், ஹதீஸ் கூறும் கருத்துக்களைக் களைவது தான் அதன் மையக் கருவாக அமைந்திருக்கின்றது. முகாஷஃபா என்று இந்த ஆசாமிகள் கூறும் அகமிய ஞானம் எந்தக் கட்டுக்குள்ளும் வரையறைக்குள்ளும் நிற்காது. குர்ஆன், ஹதீஸ் என்ற வரம்புக்குள் வராத படு மோசமான கல்வியாகும்.

இந்த லட்சணத்தில் இந்தக் கேடுகெட்ட கல்வியைக் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் உள்ளது என அவர்கள் வாதிடுகின்றனர். குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இருக்கின்றது என்றால் அதற்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாவிட்டால் அதை அப்படியே தூக்கி எறிய வேண்டும். இது தான் சரியான கல்விக்குரிய அடையாளமாகும்.

அகமிய ஞானத்தின் அளவுகோல்

இப்போது இவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறோம். அகமிய ஞானத்தின் இலக்கணம் என்ன? அதன் அளவுகோல் என்ன? அகமிய ஞானம் உள்ளவர்களில் நம்பகத்தன்மையுடையவர்கள் யார்? நம்பகத்தன்மை இல்லாதவர்கள் யார்? முந்திச் சென்ற நல்லோர்களான நபித்தோழர்கள் இத்தகைய ஞானத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றார்களா?

இந்த ஞானம் இறைவனிடமிருந்து வந்தது என்றால், குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரமில்லாத எத்தனையோ சட்டங்களில் இவர்கள் ஏன் ஆட்டம் காண்கிறார்கள்? தட்டித் தடுமாறுகின்றார்கள். இதிலிருந்து இவர்களுடைய அடிப்படையே ஷைத்தானின் ஊசலாட்டங்களில் ஊன்றப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா கூறுகின்றார்கள்:

ஹதீஸ் துறையில் நல்ல ஹதீஸையும் கெட்ட ஹதீஸையும் பிரித்துக் காட்டுகின்ற திறனாய்வாளர்களின் திறமையோ அனுபவமோ கஸ்ஸாலிக்குக் கிடையாது. இதன் காரணத்தால் தான் தனது நூல்களில் பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டு வந்திருக்கின்றார். இல்லையெனில் இவற்றைத் தவிர்த்திருப்பார்.

நூலாசிரியர் மக்ராவி கூறுகின்றார்:

நபி (ஸல்) அவர்கள் மீது பொய் மூட்டைகளையும், புனைச் சுருட்டுகளையும் அள்ளிக் கொட்டுகின்ற ஒரு நூலை இயற்ற முன்வருவது இறையச்சமிக்க காரியமா? தகுதியில்லாத துறையில் ஒரு முஸ்லிம் மூக்கை நுழைப்பது சரியான காரியமா?

ஷரீஅத் தொடர்பான விஷயங்கள் அனைத்துமே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்தவையாகும். ஹதீஸ் துறையில் உரிய அனுபவமும் உறுதியான அறிவும் இல்லாதவருக்கு ஷரீஅத் சட்டங்களை இயற்ற அனுமதி கிடையாது.

உரிய அனுபவமும், உறுதியான அறிவும் இல்லையென்றால் குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் தடை செய்துள்ள பெரும்பாவங்களில் வீழ்ந்து விடுவார். அல்லாஹ்வின் மீது எந்த ஒரு ஞானமும் இல்லாமல் பொய் சொல்வது அந்தப் பெரும்பாவமாகும்.