ஏகத்துவம் – பிப்ரவரி 2010

தலையங்கம்

பரவும் காய்ச்சலில் பறிபோகும் சிந்தனைகள்

தமிழகம் முழுவதும் ஒரு விதமான மர்மக் காய்ச்சல் பரவி வருகின்றது. இது மக்களைப் பலி கொண்டும் வருகின்றது. இதல்லாமல் சிக்குன்குனியா என்ற காய்ச்சலும் தனது முழு வீரியத்தையும் காட்டி மக்களைப் படுக்க வைப்பதுடன், அவர்களைப் பாதி முடமாகவும் ஆக்கி விடுகின்றது.

டெங்கு காய்ச்சலும் தன் பங்குக்கு தனது விஷ விளையாட்டைக் காட்டி, ஓடி விளையாடும் குழந்தைகளின் உயிர்களைக் கொள்ளை கொண்டு செல்கின்றது.

மருத்துவத்திற்கே இந்தக் காய்ச்சல் ஒரு சவாலாகக் கிளம்பியுள்ள நேரத்தில் மக்களில் சிலர் இயல்பாகவே மாந்திரீகத்தின் பக்கம் செல்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மந்திரவாதிகளையே இந்த முடக்குக் காய்ச்சல் முடமாக்கி மருத்துவமனையில் படுக்க வைத்திருக்கின்றது. இந்த உண்மை கூட, சிந்தனை முடமாகிப் போன மக்களுக்குப் புரியவில்லை.

இந்நேரத்தில் மக்கள் பார்க்க வேண்டியது மருத்துவமே தவிர மாந்திரீகம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது மட்டுமின்றி, மக்கள் வேறொரு வகையிலும் ஏமாந்து கொண்டிருக்கின்றனர். அது என்ன? இப்போது பள்ளிகள் தோறும் மவ்லவிகள் விஷக் காய்ச்சலுக்காக விஷேச ராத்திபுகள், ஸலாத்துன்னாரிய்யாக்கள், அபூர்வ துஆக்கள் என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். மந்திரக்காரர்கள் போலவே இந்த மவ்லவிகளும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் இவர்களும் அந்த மந்திரத் தொழிலைச் செய்பவர்கள் தான். அதனால் இவர்கள் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல!

பஞ்சம் ஏற்பட்டால் அதற்கு மழைத் தொழுகையையும், கிரகணம் ஏற்பட்டால் அதற்கு கிரகணத் தொழுகையையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போல், தொற்று நோய் ஏற்பட்டால் அதற்கு ஒரு கூட்டுப் பிரார்த்தனையையோ, ராத்திபுகளையோ காட்டித் தரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்கüன் ஒரு கூட்டத்தார் மீது…. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது…. (அவர்களுடைய அட்டூழியங்கள் அதிகரித்து விட்ட போது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவி விட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெüயேறாதீர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா (ரலி), நூல்: புகாரி 3473

இப்படி ஒரு பரிகாரத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்களே தவிர இதற்கென்று தனியாக ஒரு வணக்க முறையைக் காட்டித் தரவில்லை. இதற்குக் காரணம், திருக்குர்ஆன் இதற்கான சரியான வழிமுறையை நமக்குக் காட்டித் தந்திருப்பது தான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2:155-157

இதுபோன்ற சோதனைகளில் உயிர்ப் பலிகள் ஏற்படும் போது இந்த இறை வசனம் நமக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக அமைகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:153

இந்தச் சோதனையிலிருந்து பாதுகாவல் தேடி, அவரவர் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். (நபியவர்கள் கற்றுத் தந்த துஆக்கள் இவ்விதழில் “வேதனை தீர்க்கும் விஷேச பிரார்த்தனைகள்’ என்ற தனித் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.)

அதனால் தான் இதற்கென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்தவொரு கூட்டுப் பிரார்த்தனையையும் கற்றுத் தரவில்லை. அப்படி ஒரு கூட்டுப் பிரார்த்தனையை, கூட்டு வணக்கத்தை இந்த மவ்லவிகள் நபிவழியிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

இந்த உண்மை தெரிந்தும் மவ்லவிகள் இப்படியொரு கூட்டுப் பிரார்த்தனையை, கூட்டு வணக்கத்தை, ஒரு புதிய பித்அத்தைச் செய்கிறார்கள் என்றால் இது பகிரங்க ஏமாற்று வேலை, மோசடியைத் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்?

எனவே, இவர்களது ஏமாற்று வலையில் மக்கள் விழுந்து விடக் கூடாது என்று எச்சரிக்கின்றோம்.

வேதனை தீர்க்கும் விஷேச துஆக்கள்

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:153

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்என்று அவர்கள் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 2:155-156

பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுவதுடன், அந்தச் சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளையும், சொல்ல வேண்டிய வார்த்தைகளையும் சொல்லித் தருகின்றன.

இப்ராஹீம் நபி அவர்களுக்கும் அவர்களது துணைவியார் சாரா அவர்களுக்கும் மிகக் கடுமையான சோதனை ஏற்படுகின்றது. அந்நேரத்தில் அவர்கள் தொழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். “அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்!என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் செய்து, “இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?’ எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) “என் சகோதரிஎன்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள், “நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லைஎன்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை, கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா, “இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையை, கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா, “இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2217

இன்று தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் விஷக் காய்ச்சல் போன்றவற்றுக்காக அவரவர் தனியாக விரும்பிய நேரமெல்லாம் தொழுது இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.

சில சமயங்களில் தொழுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களிலும் ஏனைய எல்லாக் காலங்களிலும் சொல்லக் கூடிய துஆக்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அந்த துஆக்களில் ஒன்று தான் மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்பதாகும்.

இந்தக் காய்ச்சல் எல்லாம் அல்லாஹ்வின் சோதனையாகும். இந்தச் சோதனையின் போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைச் சொல்லாமல், சோதனைகளைத் தாங்கிக் கொண்டு தொழ வேண்டும். இந்த துஆ வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.

அல்லாஹ் கூறும் இந்த வழிமுறைகளைக் கையாள்பவர்களுக்கு, அவன் வழங்குகின்ற அருட்கொடைகளை அடுத்த வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2:157

இவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள் என்ற புகழாரத்தையும் அல்லாஹ் சூட்டுகின்றான்.

இதற்கு அணி சேர்க்கும் விதமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு மணியான துஆவையும் இந்த துஆவுடன் சேர்த்து ஓதுமாறு கற்றுத் தருகிறார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்‘ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்,

அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா‘ (இறைவா, எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அதற்கு ஈடாக அதை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லைஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(என் முதல் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்த போது நான் “அபூசலமாவை விட முஸ்லிம்களில் சிறந்தவர் எவர் இருக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதன்முதலில் நாடு துறந்து வந்த குடும்பம் (அவருடைய குடும்பம் தான்)என்று கூறினேன். ஆயினும், இன்னாலில்லாஹி… என்று (மேற்கண்ட பிரார்த்தனையை) நான் சொன்னேன். அவ்வாறே அவருக்கு ஈடாக அல்லாஹ் தன்னுடைய தூதரையே (இரண்டாவது கணவராக) எனக்கு வழங்கினான்.

அறிவிப்பவர்: உம்மு சலமா ஹிந்த் பின்த் அபீ உமய்யா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 1674)

இது போன்ற சோதனைகளின் போது, நமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குப் பகரமான உடல் நலத்தை, அல்லது வேறு விதமான நன்மையை வழங்குவான் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், துன்பம் ஏற்படும் போது கூறுவதற்காக மற்றொரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ü வரப்புல் அர்ஷில் கரீம்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது ஓதுவார்கள்.

பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6346

அல்லாஹும்ம இன்னீ அப்து(க்)க வப்னு அப்தி(க்)க வப்னு அம(த்)தி(க்)க நாஸிய(த்)தீ பியதி(க்)க மாலின் ஃபிய்ய ஹுக்மு(க்)க அத்லுன் ஃபிய்ய களாவு(க்)க அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹு ல(க்)க ஸம்மை(த்)த பிஹி நஃப்ஸ(க்)க அவ் அல்லமத்ஹு அஹதன் மின் கல்கி(க்)க அவ் அன்ஸல்(த்)தஹு ஃபீ கிதாபி(க்)க அவ் இஸ்தஃர(த்)த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்த(க்)க அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ வநூர ஸத்ரீ வ ஜிலாஅ ஹுஸ்னீ வ தஹாப ஹம்மீ.

(பொருள்: இறைவா! நான் உன் அடிமை! உன் அடியாரின் மகன்; உன் அடியாளின் மகன். என் நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. உன் முடிவே என்னிடம் நடக்கிறது. உன் தீர்ப்பு என்னிடம் நியாயமானது. குர்ஆனை என்னுடைய இதயத்தின் வசந்தமாகவும், என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும், என் கவலையை களையக் கூடியதாகவும், என் துக்கத்தைப் போக்கக் கூடியதாகவும் நீ ஆக்கி வைக்க வேண்டும் என்று உனக்கு நீயே வைத்துக் கொண்ட அல்லது உனது படைப்பில் நீ யாருக்கேனும் கற்றுக் கொடுத்த அல்லது உன் வேதத்தில் இறக்கியருளிய, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் தேர்வு செய்த உனக்குரிய ஒவ்வொரு பெயரையும் வைத்துக் கேட்கிறேன்.)

இவ்வாறு துக்கமும் கவலையும் ஏற்பட்ட ஒருவர் சொன்னால் அல்லாஹ் அவருடைய துக்கத்தையும், கவலையையும் போக்கி விடுகின்றான். அவருக்கு மகிழ்ச்சியை அதற்குப் பகரமாக்கி விடுகின்றான்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும், “அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் கற்றுக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! அதைச் செவியுற்றவருக்கு அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: அஹ்மத் 3528

மீன்வாசி (யூனுஸ் நபி), மீன் வயிற்றில் இருந்த போது செய்த பிரார்த்தனை:

லா இலாஹ இல்லா அன்(த்)த சுப்ஹான(க்)க இன்னீ குன்(த்)து மினல் ளாலிமீன்

(பொருள்: உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்)

எந்தவொரு சோதனையிலும் ஒரு முஸ்லிம் இதைக் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவருக்கு அல்லாஹ் பதிலளித்தே விடுகின்றான்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: திர்மிதி 3427

மணி மணியான இந்த துஆக்கள் அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் நமக்குக் கற்றுத் தரப்பட்டவை. ஒப்புக் கொள்ளப்படும் இந்த அரும் பெரும் துஆக்களை இந்தச் சோதனையிலும் வேறெந்தச் சோதனையிலும் ஓதி சுகம் பெறுவோமாக!

————————————————————————————————————————————————

மர்மக் காய்ச்சல் தண்டனையா? சோதனையா?

ஏற்கனவே டெங்கு, மலேரியா, மூளைக் காய்ச்சல் எனப் பல்வேறு காய்ச்சலில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கையில், புதுப் புது ரகமாய் வெளியாகும் நோக்கியா போன் வரிசையைப் போன்று இப்போது புதுப்புது பெயர்களில் காய்ச்சல்கள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்றவை இந்த வரிசையில் உள்ள காய்ச்சல்களாகும்.

இறக்கை கட்டி வந்து மக்களைத் தாக்கி முடமாக்கி, தற்காலிகமாகப் படுக்க வைத்தும், நிரந்தரமாகப் படுக்க வைத்தும் வேடிக்கை பார்க்கும் இந்த ராட்சஷப் பறவையைப் பார்த்து மக்கள் பயத்தில் ஆடிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

இது அல்லாஹ்வின் தண்டனை என்று ஒரு சில அசத்தியவாதிகள் கூறியும் திரிகின்றனர். ஏகத்துவவாதிகள் அவ்லியாக்களைத் திட்டுவதால் தான் இவ்வகைக் காய்ச்சல்கள் தலை காட்டுகின்றன என்று சொல்லி அசத்தியவாதிகள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இறந்து விட்ட நல்லடியார்களை இறைவனுக்கு நிகராகக் கருதி, அவர்களிடம் உதவி தேடுவதையும் அவர்களுக்கு விழா எடுப்பதையும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் விமர்சிக்கிறோம். இதைத் தான் இவர்கள் அவ்லியாக்களைத் திட்டுவதாகக் கூறுகின்றனர்.

சரி! இதனால் தான் இந்த விஷக் காய்ச்சல் வந்து விட்டது என்று ஒரு வாதத்திற்கு ஒத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் மட்டும் இவ்வகைக் காய்ச்சல்கள் நடமாடுவதில்லை.

பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்றவை உலகளாவிய காய்ச்சல்கள் ஆகும். அப்படியானால் உலகெங்கும் தவ்ஹீதுவாதிகள், அவ்லியாக்களைத் திட்டுகிறார்கள் என்று கூறுவார்களா?

இவர்கள் இவ்வாறு சொல்வதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. இறைத் தூதர்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட வாதங்கள் தாம் இவை!

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை

அல்குர்ஆன் 7:131

ஸாலிஹ் (அலை) அவர்களை நோக்கியும் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வை வணங்குங்கள்என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.

என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? நீங்கள் அருள் செய்யப்பட அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேட மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.

உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 27:45-47

யாஸீன் அத்தியாயத்தில் மூன்று இறைத் தூதர்களின் வரலாற்றை இறைவன் குறிப்பிடுகின்றான். அந்த வரலாற்றிலும் இறைத் தூதர்களை நோக்கி எதிரிகள் இதே வாதத்தைச் சொன்னதாகத் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

சத்தியப் பாதையில் இதுபோன்ற குற்றச்சாட்டை, வாதத்தை ஏகத்துவவாதிகள் சந்திக்க வேண்டும். அதைத் தான் நாம் சந்திக்கிறோம். இது, நாம் சத்தியத்தில் இருக்கிறோம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தண்டனையா? சோதனையா?

ஏகத்துவப் பிரச்சாரம் வந்ததால் தான் இந்தத் தண்டனை என்று கூறுகின்ற இவர்களிடம் மார்க்க அறிவு கடுகளவுக்குக் கூட இல்லை என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தண்டனை என்றால் என்ன? சோதனை என்றால் என்ன? என்ற வித்தியாசம் இவர்களுக்குப் புரியவில்லை.

அல்லாஹ் இட்ட கட்டளையை அடியார்கள் செய்யாத போது, அல்லது அவனது கட்டளையை மீறும் போது அல்லாஹ் இறக்கக் கூடிய வேதனைக்குப் பெயர் தான் தண்டனை.

அல்லாஹ்வை மட்டும் தான் அடியார்கள் வணங்க வேண்டும் என்று அடியார்களுக்கு அல்லாஹ் உத்தரவு போடுகின்றான். அதுபோல் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று தடையும் போடுகின்றான்.

அடியார்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்காததுடன், அவன் போட்ட தடையையும் மீறினார்கள். அதனால் அவர்கள் மீது வேதனை இறக்கப்படுகின்றது.

நூஹ் நபியின் சமுதாயம் வெள்ளத்தில் அழிக்கப்பட்டது. ஹூது நபியின் ஆது சமுதாயம் காற்றில் அழிக்கப்பட்டது. ஸமூது சமுதாயம் பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டது. லூத் நபியின் சமுதாயம் கல்மாரி பொழிந்து அழிக்கப்பட்டது. ஷுஐப் நபியின் சமுதாயம் வெப்ப மழையால் அழிக்கப்பட்டது. இவையெல்லாம் தண்டனைகளாகும். இந்தத் தண்டனைகள் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களைப் படிப்பவர்கள் இரண்டு நியதிகளைத் தெளிவாகப் பார்க்கலாம்.

  1. ஒரு சமுதாயம் அழிக்கப்படுவதற்கு முன்னால் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத் தூதருக்கு இது குறித்த எச்சரிக்கை வரும். அந்த எச்சரிக்கையை இறைத் தூதர் மக்களுக்குத் தெரிவிப்பார். ஆனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்வர். இறுதியில் அந்த வேதனை வந்து அம்மக்களை அழிக்கும். இது ஒரு நியதி!

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்என்று அவர் கூறினார். “இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!” (என்றும் கூறினார்)

அல்குர்ஆன் 11:38, 39

  1. தீயவர்கள் அழிக்கப்படும் போது இறைத் தூதரும் அவரை நம்பியவர்களும் அவ்வூரில் இருக்க மாட்டார்கள். திரும்பிக் கூடப் பார்க்காமல் நல்லவர்கள் ஊரைக் காலி செய்து விட வேண்டும்.

லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்றனர்.

அல்குர்ஆன் 11:81

நூஹ் நபியின் காலத்தில் வெள்ளப் பிரளயம் என்பதால் நூஹையும் அவரது சமுதாயத்தையும் அல்லாஹ் கப்பலில் ஏறச் செய்து, அதாவது நல்லவர்களை மட்டும் பிரித்தெடுத்து காப்பாற்றுகின்றான். இது இரண்டாவது நியதி.

படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்.

அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் “அது எங்களுக்காக (கிடைத்தது)எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். “கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை

எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லைஎன்று அவர்கள் கூறினர்.

எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.

அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் “மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர்களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர்.

அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.

அல்குர்ஆன் 7:130-136

இந்த வசனங்களில் ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரை மட்டும் வேதனை செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். அந்த வேதனையை, மாற்றி மாற்றிச் செய்ததாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இன்று ஏற்படுகின்ற இந்தக் காய்ச்சல்கள் நல்லவர்கள், கெட்டவர்கள், முஸ்லிம், கிறித்தவர்கள், இறை மறுப்பாளர்கள் என அனைவரையும் சேர்த்தே பீடிக்கின்றன. அதனால் இதைத் தண்டனை என்று ஒரு போதும் கூற முடியாது.

இந்தத் தண்டனையைப் பற்றி அறிவிப்பதற்கு இறைத் தூதர்கள் இருந்தாக வேண்டும். காரணம் அவர்கள் வஹீயின் தொடர்பில் இருப்பதால் அல்லாஹ் அவர்களிடம் தான் அது பற்றி அறிவிப்பான்.

இந்த நியதிகளின் அடிப்படையில் அமைந்தால் தான் மக்களுக்கு ஏற்படும் வேதனையை அல்லாஹ்வின் தண்டனை என்று சொல்ல முடியும். இல்லையென்றால் அது சோதனையாகும்.

சோதனை

தண்டனை என்பது ஒருவர் செய்த தீமைக்குப் பரிசாக வழங்கப்படும் வேதனை! இதைத் தான் நபிமார்களின் வரலாறுகளில் நாம் கண்டோம். இதை இன்னும் தெளிவுபடுத்துவதற்காக, பனூ இஸ்ரவேலர்கள் குரங்குகளாக மாற்றப்பட்ட வரலாற்றைக் குறிப்பிடலாம்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.

அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம்.

தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!என்று அவர்களுக்குக் கூறினோம்.

அல்குர்ஆன் 7:163-166

சனிக்கிழமையன்று வணங்க வேண்டும் என்ற கட்டளையை பனூ இஸ்ரவேலர்கள் செய்யாததுடன், அந்நாளில் மீன் பிடிக்கக் கூடாது என்ற தடையையும் மீறினார்கள். இதனால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இறைவனின் கட்டளையைச் செய்யாமல், அவன் விதித்த தடையையும் மீறியதற்காக இந்தத் தண்டனை.

சோதனை என்பது இரு விதங்களில் அமையும்.

  1. திருத்துவது.
  2. தேர்வு செய்தல், பரிசளித்தல்

திருத்துதல்

திருத்துதல் என்பது காஃபிர்களுக்குரியதாகும்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.  (அல்குர்ஆன் 29:65)

கடலில் பயணம் செய்யும் போது அல்லாஹ் கடுமையான புயலை அனுப்புகின்றான். அதன் மூலம் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளிக்கின்றான். அவர்கள் திருந்தவில்லை எனில் அவர்களுக்கு மறுமையில் நிரந்தர நரகத்தைக் கூலியாக வழங்குகின்றான்.

தேர்வு செய்தல், பரிசளித்தல்

இது இறை நம்பிக்கையாளர்களுக்குரியதாகும்.

இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெரும் அந்தஸ்தை அளிக்கின்றான். தலைவர் என்ற பதவியை அளித்தான். அந்தப் பதவிக்கு அவரைத் தேர்வு செய்வதற்கு முன்னால் பல விதமான சோதனைகளைச் செய்கிறான்.

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராதுஎன்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2:124

அந்தச் சோதனைகளில் மகத்தான சோதனை, இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகனை அறுத்துப் பலியிட வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையாகும். அந்தக் கட்டளையை நிறைவேற்ற முன்வந்து அந்தச் சோதனையில் வெற்றியும் அடைகின்றார்.

அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

அல்குர்ஆன் 37:101-107

பயிற்சிப் போட்டிகள்

ஒரு விளையாட்டுப் போட்டிக்குச் செல்வதற்கு முன்னால், பல்வேறு பயிற்சிப் போட்டிகள் நடக்கின்றன. அதன் பின் கால் இறுதி, அரையிறுதிப் போட்டிகள். அவற்றில் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுபோன்று ஒரு போர்க்களத்தில் கலந்து கொள்வதற்கு முன்னரும் அல்லாஹ் ஒரு சில சோதனைகளை வைக்கிறான்.

தாலூத், படைகளுடன் புறப்பட்ட போது “அல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம் சோதிக்கவுள்ளான். அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர் என்னைச் சேர்ந்தவர்; கை அளவு அருந்தியவர் தவிரஎன்றார். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்த போது “ஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த வலிமையும் இல்லைஎன்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம் என்று நம்பியோர், “எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்என்றனர்.

ஜாலூத்தையும், அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்த போது “எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!என்றனர்.

அல்குர்ஆன் 2:249, 250

போர்க்களத்திலும், போர்க் காலத்திலும் மட்டுமல்லாது, சாதாரண ஹஜ் போன்ற வணக்கத்திலும் அல்லாஹ் சோதனை வைக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! “தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?’ என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 5:94

ஹாஜிகளிடமிருந்து ஹஜ் என்ற வணக்கத்தை ஏற்றுக் கொள்வதற்கும் அல்லாஹ் இந்தத் தேர்வை நடத்துவதைப் பார்க்கிறோம்.

இதுபோன்று பரிசு, சன்மானம் வழங்குவதற்கும், பாவத்தை அழிப்பதற்கும் அல்லாஹ் சோதனையை வைக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்கüடம் நான் சென்றேன். “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே!என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; உங்கüல் இரு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகின்றேன்என்று சொன்னார்கள்.

நான், “(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம்; அது அப்படித் தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5648

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சோதிக்கப்படுகிறார்கள்; அதிலும் கடுமையாகச் சோதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

நபி (ஸல்) அவர்களுக்கும், முஃமின்களுக்கும் ஏற்படுகின்ற சோதனை அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பரிசைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சோதனையாகும். இதைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனங்களில் குறிப்பிடுகின்றான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்என்று அவர்கள் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 2:155, 156

இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தக் காய்ச்சல் இறை நம்பிக்கையாளர்களையும் பிடித்திருக்கின்றது; இறை மறுப்பாளர்களையும் பிடித்திருக்கின்றது. எனவே இதை அல்லாஹ்வின் தண்டனை என்று கூற முடியாது. இது இறைவன் வைத்திருக்கும் சோதனை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தச் சோதனை மூலம் இறை நம்பிக்கையாளர்களுக்கு அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். இறை மறுப்பாளர்களுக்கு இதன் மூலம் திருந்துவதற்கான வாய்ப்பை அளிக்கின்றான் என்று விளங்கிக் கொள்வோமாக!

————————————————————————————————————————————————

தொற்று நோய்கள் பார்வையும் பாதுகாப்பும்

காட்டுத் தீயை விட, அதைப் பரப்பும் காற்றை விட மிக வேகமாகப் பரவி வருகின்ற காய்ச்சல்கள் தான் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்கள். இதற்குப் பலர் பலியாகி வருகின்றனர். தமிழகத்தில் சிக்குன் குனியா, டெங்கு, ஃபுளு போன்ற காய்ச்சல்களும் ஒரு விதமான மர்மக் காய்ச்சலும் பரவி வருகின்றது.

தொற்று நோய் – இஸ்லாமியப் பார்வை

தொற்று நோயில் ஒரு முஸ்லிமின் பார்வை எப்படியிருக்க வேண்டும்?

பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் காரணமான வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாதுஎன்று கூறினார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5717

இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபி (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை வேண்டும். இவருடைய கண்ணைப் பார்த்ததால் தான் எனக்குக் கண் வலி வந்து விட்டது என்று கூறுவது இறைவனின் விதியை மறுப்பதைப் போன்றதாகும். இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை.

தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி)யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “ஷாம் நாட்டிற்குப் போகலாமா?” என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.

அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், “இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்என்று சொல்ல நான் கேட்டேன்என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி  5279

கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.

இப்போது பரவுகின்ற இந்தக் காய்ச்சல்கள் காற்றின் மூலம் பரவுகின்றது; கொசுக்கள் மூலம் பரவுகின்றது. அம்மை நோய்க்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த மருத்துவ உலகம், கொசுக்களின் மூலம் பரவுகின்ற மலேரியாவுக்கும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் தற்போது பரவி வருகின்ற காய்ச்சல்களுக்குச் சரியான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்காமல் தட்டழிகின்றது; தடுமாறுகின்றது. இதுபோன்ற கட்டங்களில் நாம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்த நோய்கள் ஏற்பட்டவுடன் மாந்திரீகத்தை நாடக் கூடாது, மருத்துவத்தை நாட வேண்டும் என்று ஏற்கனவே விளக்கியுள்ளோம். மருத்துவத் துறையிலும் சாதாரண மருத்துவர்கள், நோயை ஆராய்ந்து அதற்குரிய மருந்தைக் கொடுக்காமல் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுத்து விடுகிறார்கள். இது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. அதனால் இதற்கு சிறப்பு மருத்துவர்களை நாடுவது நல்லது.

பத்தும் ஒரு குத்தும்

பத்து ரூபாய் கொடுத்தால் மருத்துவர் ஊசி எடுத்து ஒரு குத்து குத்தியதும் நோய் செத்து விட்டது என்று நாம் திரும்பி விடுகின்றோம். தற்போதுள்ள இந்த சீசனில், இது என்ன காய்ச்சல் என்று கவனத்தைச் செலுத்த அவர்கள் தயாராக இல்லை. காசில் மட்டுமே குறியாகவும் வெறியாகவும் உள்ள மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் உடனடியாகப் பக்க விளைவை ஏற்படுத்தி விடுகின்றன.

அண்மையில் நமது ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவர் வழக்கம் போல் ஊசி போட்டு அனுப்பி விட்டார். ஆனால் ஓரிரு நாளில் அந்தப் பெண்ணுக்குப் பார்வை மங்க ஆரம்பித்து விட்டது. பார்வை பறி போய் விட்டது என்று அவரும் அவரது குடும்பத்தாரும் முடிவு செய்து கலங்க ஆரம்பித்தனர். பெரிய கண் மருத்துவமனை ஒன்றை நாடிய போது கண் விழித் திரையில் பாதிப்பில்லை என்ற விபரம் தெரிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தில் ஏதோ ஒன்று தான் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கண் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே கண்ட கண்ட டாக்டர்களிடம் சென்று ஏமாந்து விடாமல் ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மூளைக் காய்ச்சல்

குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் அதுவும் திரும்பத் திரும்ப வந்தால் அப்போது மெத்தனமாக இருக்கக் கூடாது. காரணம், அது மூளைக் காய்ச்சலாக இருக்கலாம். எனவே இந்தச் சந்தர்ப்பங்களில் நாம் உரிய சிறப்பு மருத்துவரை நாட வேண்டும்.

சிக்குன் குனியா

இந்தக் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் மிகக் கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். மாதக் கணக்கில் நடக்க முடியாமல் அவதிப்படுபவர்களும் உண்டு. இதற்குச் சித்த மருத்துவம் சிறந்த முறையில் கைகொடுக்கின்றது என்று அனுபவமுள்ள மருத்துவர்கள் (ஆங்கில மருத்துவர்களும்) கூறுகின்றனர். நிலவேம்புக் குடிநீர் என்ற கசாயப் பொடி மருந்துக் கடைகளில் கிடைக்கின்றது. இது சிக்குன்குனியாவுக்குச் சிறந்த நிவாரணியாக உள்ளது. பக்க விளைவுகள் இல்லாதது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பொடியைக் கசாயமாகக் காய்ச்சிக் குடித்தால் அது நோயின் கடுமையான தாக்குதலிலிருந்து காக்கின்றது.

சுகாதாரமான சூழல்

சிக்குன்குனியா போன்றவை கொசு மூலம் பரவுவதால் நமது வீட்டில் கொசுக்கள் தங்குவதற்கு வழிவகுக்கக் கூடாது. கொட்டாங்கச்சி, நல்ல தண்ணீர் போன்றவை சிக்குன்குனியாவைப் பரப்பும் கொசுக்களின் குடியிருப்புக்கள். இவற்றில் கொசுக்கள் தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படுக்கும் போது நல்ல கனமான ஆடை அணிந்து கொள்ள வேண்டும். கால்களில் காலுறை அணிந்து கொள்ள வேண்டும். கொசு வலை போட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.

கழிவு நீர், குப்பைகள் போன்றவை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில், திறந்த வெளியில் மலஜலம் கழிக்கக் கூடாது. குழந்தைகளைக் கண்ட இடத்தில் அசுத்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு, “மக்களின் நடை பாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பது தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 448)

சாபத்திற்குரிய இந்தக் காரியத்தை ஒரு முஸ்லிம் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இவை தனி நபர்கள் தங்களை இந்தக் கொசுக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் சூழலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுமாகும். அரசாங்கமும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

  1. திறந்த வெளியில் மல, ஜலம் கழிக்கும் அவல நிலையை உடனே தடை செய்ய வேண்டும். பேருந்து நிலையங்களில் அமைந்துள்ள கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தும் சரியான முறையில் அவற்றைப் பராமரிக்காததால் மக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்துகின்றனர். பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு முன் அங்குள்ள துர்நாற்றம் நமது மூக்கில் நுழைந்து அவஸ்தைப்படுத்துகின்றது. இதற்குச் சரியான நடவடிக்கை எடுத்து சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
  2. தேங்கிக் கிடக்கும் சாக்கடைகளுக்குப் போக்கிடம் ஏற்படுத்த வேண்டும்.
  3. மலையளவு குவிந்து, குடலைக் குமட்டும் குப்பை மேட்டுக் கோபுரங்களைக் களைய வேண்டும்.
  4. இவற்றில் உறைந்து வாழ்கின்ற பன்றிகளை ஒழிக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றால் உயிர்ப்பலிகள் ஒரு தொடர்கதையாகவே ஆகி விடும்.

தேங்கி நிற்கும் சாக்கடைகள், குவிந்து கிடக்கும் குப்பை மேடுகள் போன்றவை தான் கொசுக்களை உரம் போட்டு வளர்க்கின்ற பண்ணைகளாகத் திகழ்கின்றன. இவற்றில் மேயும் பன்றிகளின் மேல் உட்கார்ந்து உறிஞ்சுகின்ற இரத்தத்தைப் பச்சிளம் குழந்தைகளுக்குப் பாய்ச்சுகின்ற போது அந்தக் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்படுகின்றது. அந்த மூளைக் காய்ச்சலுக்குக் குழந்தைகள் அதிகம் பலியாகி விடுகின்றனர்.

இந்த உண்மை அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தும் பன்றிகளை ஒழிக்காமல் அது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த அலட்சியத்தால் தான் சுகாதாரக் கேடு ஏற்படுகின்றது.

இதுபோன்ற சுகாதார விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் பஞ்சாயத்துக்கள், ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கி இந்தச் சுகாதாரக் கேட்டை ஒழிக்கப் பாடுபட வேண்டும். இப்படித் தனி மனிதர்களும் அரசாங்கமும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய்கள் பரவாமல் காப்போமாக!

————————————————————————————————————————————————

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு        தொடர்: 3

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

பணமாக, பாத்திரமாக, நகையாக, நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது, அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது, அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை. அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். ஜாக் போன்ற அமைப்புகள் பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.

வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது, பெண் சிசுக் கொலை, பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது, பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது, பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து, ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி

பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல், வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால், பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி, வழித்து, சுருட்டி, சுரண்டிக் கொண்டிருந்த, வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று, வேண்டாம் வரதட்சணை, வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன், தான் பெண் பேசிய வீட்டில், பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை, விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை, விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.

புறக்கணிப்பு

இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர், “நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை” என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர், அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. “நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்?” என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை, சாபக் கேட்டை, சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி, புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல, பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.

ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும், திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின், பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத், அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.

அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள், இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக, அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.

இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!  (அல்குர்ஆன் 5:2)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.

அதிலும் குறிப்பாக, திருமணம் முடிக்கும் ஆண்கள், நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!

சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்

பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம், அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில், அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள், எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி, விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட, கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம், அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள், சமாளிப்புகள்.

இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.

அன்பளிப்பின் அடிப்படை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“அஸ்த்எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கüடம் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பüப்பாக வழங்கப்பட்டதுஎன்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பüப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 6636

இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.

இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து, அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!

திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.

பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை, பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள், கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.

இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி, லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு, ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள், விருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து, ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு, பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————————————

முதஷாபிஹாத்         தொடர்: 11

சமாதி வழிபாடும் முதஷாபிஹ் வசனங்களும்

முதஷாபிஹ் வசனங்களின் தன்மை எத்தகையது என்பதை முன்னர் கண்டோம். அந்தத் தன்மைகளைச் சரியாகப் புரிந்து கொண்டால் எவை எவை முதஷாபிஹ் வசனங்கள் என்பதைத் தெளிவாக உணர முடியும். அதை மேலும் தெளிவுபடுத்தும் விதமாக, நடைமுறையில் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டு வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டப்படும் ஒரு சில முதஷாபிஹ் வசனங்களைக் காண்போம். அதன் பின்னர், புதிதாக எழுப்பப்படும் ஆட்சேபங்களுக்கான பதிலைப் பார்ப்போம்.

இறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம், இறைவனல்லாதவர்களையும் வணங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதைக் காண்கிறோம். இவர்கள் தங்களின் இணை கற்பிக்கும் செயலை நியாயப்படுத்திட திருக்குர்ஆன் வசனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:154

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

அல்குர்ஆன் 3:169

இவ்விரு வசனங்களும் சமாதி வழிபாட்டுக்காரர்களால் அடிக்கடி எடுத்தாளப்படுகின்றன. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று மட்டும் இறைவன் கூறவில்லை. மாறாக, அவர்களை இறந்தவர்கள் என்று எண்ணியும் பார்க்காதீர்கள்; அப்படிக் கூறவும் செய்யாதீர்கள் என்று இறைவன் தடையும் விதிக்கிறான். இதிலிருந்து நல்லடியார்கள் உயிருடனே உள்ளதால் அவர்களிடம் பிரார்த்திக்கலாம்; அல்லது இறைவனிடம் பெற்றுத் தருமாறு வேண்டலாம் என்று இவர்கள் வாதிடுவர்.

இவர்களின் உள்ளங்களில் வழிகேடு குடி கொண்டிருப்பதும், இது பற்றி ஏனைய வசனங்களில் கூறப்படுவது என்ன? இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் தந்த விளக்கம் என்ன? என்பதையெல்லாம் கண்டு கொள்ளாதிருப்பதுமே இதற்குக் காரணம். இவர்கள் தங்களது தவறான பாதையை இவ்வசனங்களின் துணை கொண்டு பலப்படுத்த எண்ணுகின்றனர்.

இவ்வசனங்களை முழுமையாக ஆராய்பவர்கள், இதற்கு நபி (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தைத் தேடுபவர்கள், இதுபற்றி ஏனைய வசனங்களில் கூறப்படுவது என்ன என்று பார்ப்பவர்கள் இவ்வசனங்களின் சரியான பொருளைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்கிறார்கள். இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில் இவ்வசனங்களின் சரியான பொருளைப் பார்ப்போம்.

முதல் அம்சம்

“இறைவனின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இறந்தவர்கள் அல்லர்; நம்மைப் போன்று உயிருடன் உள்ளனர்” என்று சமாதி வழிபாட்டுக்காரர்கள் இவ்விரு வசனங்களுக்கும் கூறும் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் கூட சமாதி வழிபாட்டுக்கு இவ்வசனங்களில் என்ன ஆதாரம் இருக்கிறது? ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்ற காரணத்தால் அவரை வணங்கலாம், அவரிடம் பிரார்த்திக்கலாம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

எத்தனையோ நல்லடியார்கள் உயிருடன் இன்றும் உலகில் வாழத் தான் செய்கிறார்கள். அவர்களிடம் போய் பிரார்த்திக்கலாம் என்று இவர்கள் முடிவு செய்வார்களா? மனிதர்களிலேயே மிகவும் சிறந்த நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்ததில்லை. நபி (ஸல்) அவர்களுக்காக நேர்ச்சை செய்ததுமில்லை. நபி (ஸல்) அவர்களின் பெயரால் அறுத்துப் பலியிடவுமில்லை.

உண்மையில் இவர்கள் கருதக்கூடிய அர்த்தத்தில், அவர்கள் உயிருடன் உள்ளனர் என்றாலும் கூட அவர்களை வணங்குவதற்கு இதில் என்ன ஆதாரம் இருக்கிறது? இவர்களின் உள்ளங்களில் குடிகொண்டுள்ள வழிகேடு இவர்களை இவ்வாறு பேச வைக்கின்றது.

“இறந்தவர்கள் அல்லர்; உயிருடன் உள்ளனர்” என்பதற்கு இவர்கள் கூறக்கூடிய அர்த்தம் தானா என்றால் அதுவுமில்லை. ஏனெனில் இவ்விரு வசனங்களில் முதல் வசனத்தில், “எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள்” என்றும் சேர்த்தே இறைவன் சொல்கிறான்.

உயிருடன் உள்ளனர் என்பதற்கு இவர்கள் என்ன விளக்கம் கொள்கிறார்களோ அந்தப் பொருளில் அவர்கள் உயிருடன் இல்லை. மாறாக அதை நீங்கள் உணர முடியாது. உங்களால் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் வேறு விதமாக உயிருடன் உள்ளனர். இதனால் தான் “அதை நீங்கள் உணர மாட்டீர்கள்” என்று இறைவன் சேர்த்துச் சொல்கிறான்.

இரண்டாவது வசனத்தில், “தங்கள் இறைவனிடம் உயிருடன் இருக்கிறார்கள்” என்று இறைவன் குறிப்பிடுகிறான். “உயிருடன் இருக்கிறார்கள்” என்பதைக் கேட்டதும் சாதாரணமாக எந்த அர்த்தத்தை நாம் விளங்குவோமோ அந்த அர்த்தத்தில் அவர்கள் உயிருடன் இருப்பதாக எண்ணாதீர்கள்; தங்கள் இறைவனிடம் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்று ஆணி அறைந்தாற்போல் இறைவன் தெளிவாக்குகின்றான்.

இந்தக் கருத்து இல்லையென்றால், “தம் இறைவனிடம்” என்று இறைவன் சொன்னதற்கு அர்த்தம் எதுவுமில்லாமல் போய் விடும். அந்த வசனத்தையே சரியாகச் சிந்தித்துப் பார்க்கும் போது இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போய் விடுகின்றது.

இரண்டாவது அம்சம்

இதன் பிறகும் கூட, தங்கள் விளக்கமே சரி என இவர்கள் சாதிக்க முயன்றால், திருக்குர்ஆனுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதைச் சிந்திப்பார்களானால் அதில் இவர்களுக்குப் பரிபூரண விளக்கம் கிடைக்கும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்எனும் இந்த (3:169) இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.

அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!என்று கூறுவர்.

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 3834)

“உயிருடன் இருக்கிறார்கள்” என்பதற்கு சமாதி வழிபாட்டுக்காரர்கள் கொண்ட பொருள் தவறு; அவர்கள் நினைத்திருக்கின்ற பொருளில் உயிருடன் இல்லை. மாறாக, சுவனத்தில் வேறு வடிவில் அவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் பொருள் என்று மிகவும் தெளிவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். “தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்” என்று இறைவன் குறிப்பிடுவது எதைப் பற்றி என்பது இதிலிருந்து தெளிவாகவே விளங்குகின்றது. எனவே சமாதி வழிபாட்டுக்காரர்களின் தவறான கொள்கைக்கு இவ்வசனங்களில் அறவே ஆதாரம் இல்லை. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இவர்களின் நம்பிக்கையை மறுக்கும் விதமாகவே இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

மூன்றாவது அம்சம்

இதன் பின்னரும் தங்களின் சமாதி வழிபாட்டுக்கே இவ்வசனங்கள் பாதை போட்டுத் தருகின்றன என்று இவர்கள் சாதிக்க முற்பட்டால், இந்தப் பிரச்சனை பற்றி ஏனைய வசனங்கள் கூறுவதென்ன என்பதையாவது இவர்கள் கவனிக்க வேண்டும்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப் படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

இவ்வசனத்தில் இரண்டு உண்மைகளை அல்லாஹ் நமக்குக் கூறுகின்றான். யாரையாவது பிரார்த்திக்க வேண்டுமென்றால் அவர் படைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் யாராலும் படைக்கப் பட்டிருக்கக்கூடாது என்று இறைவன் கூறுகின்றான்.

ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டுமே அவரைப் பிரார்த்திக்க முடியாது. உயிருடன் இருப்பதுடன், அவர்கள் படைப்பவர்களாக, எவராலும் படைக்கப்படாதவர்களாக, சுயம்புவாக, தான்தோன்றியாக இருக்க வேண்டும். இவர்கள் பிரார்த்திக்கும் நல்லடியார்களுக்கு இந்தத் தகுதிகள் உண்டா? இதைச் சிந்தித்தால் மேற்கூறிய வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக்க முன்வருவார்களா?

மேலும் இந்த வசனத்தில், “அவர்கள் இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர்” என்றும் ஆணித்தரமாக இறைவன் கூறுகின்றான். இதற்கு முரண்படாத வகையில் தானே மேற்கண்ட 2:154, 3:169 வசனங்களை விளங்க வேண்டும்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள், இவர்கள் நினைக்கும் பொருளில் உயிருடன் உள்ளனர் என்றால் அதை அவர்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். எப்படி நிரூபிக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ்வே சொல்கிறான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194, 195

இவ்வசனங்கள் கூறுகின்றபடி சமாதிகளில் உள்ளவர்களை எழுப்பி நடக்க வைக்க வேண்டும்; அவர்களது கைகளால் பிடிக்க வைக்க வேண்டும்; அவர்களைப் பார்க்க, கேட்கச் செய்ய வேண்டும். அந்தச் சமாதிகளில் போய் கூப்பிட்டுப் பார்க்க வேண்டும். அங்கிருந்து எந்தப் பதிலும் வரவில்லையானால் அவர்கள் உயிருடன் – அதாவது இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் உயிருடன் – இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் திருக்குர்ஆனில் 2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:14, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4, 46:5 இது போன்ற ஏராளமான வசனங்கள் இவர்களின் நம்பிக்கையைத் தரைமட்டமாக்கும் போது, 2:154, 3:169 ஆகிய முதஷாபிஹான வசனங்களுக்குத் தவறான பொருள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரு வசனங்கள் குறித்துப் பல முறை விளக்கம் தரப்பட்டுள்ளதால் சுருக்கமாகவே தந்துள்ளோம். முந்தைய தொடரை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தால் அதில் குறிப்பிடப்பட்ட கிறித்தவர்களின் அதே போக்கு இவர்களிடமும் உள்ளதை உணரலாம்.

இன்னும் சில முதஷாபிஹ் வசனங்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

————————————————————————————————————————————————

நிர்வாகவியல்                        தொடர்: 8

ஆலோசனை (மஷ்ஷூரா)

இன்று பல நிர்வாகங்களில் உள்ள பிரச்சனை என்னவென்றால், “என்னவெல்லாமோ நடக்கிறது; எனக்கு ஒன்றும் தெரியாது, எனக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை” என சக நிர்வாகிகளைக் குறை கூறுவது மலிந்து கிடக்கும்.

ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் நிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து ஆலோசனை செய்து செயல்படுத்த வேண்டிய காரியங்கள் எவை? அவசரத் தேவைகளைக் கருதி, தலைவர் தானாக எதை எதை எல்லாம் முடிவு செய்து கொள்ளலாம்? ஆகிய இரு விஷயங்கள் பற்றிய தெளிவு இல்லாமை தான் இதற்குக் காரணம்.

இவை இரண்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசங்களைப் பல நிர்வாகிகள் தெரிந்து கொள்ளாதது தான், “சொல்லவில்லை’ “கேட்கவில்லை’ போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம்.

சில அமைப்புகளில், நிறுவனங்களில் ஒரு பட்டியல் உருவாக்கி வைத்திருப்பார்கள். இதையெல்லாம் ஆலோசனை செய்து தான் முடிவு செய்ய வேண்டும். இதையெல்லாம் தலைவர் சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என பட்டியல் வைத்திருப்பார்கள். திடீரென பட்டியலில் இல்லாத ஒரு பிரச்சனை வந்து விடும். ஆகையால் இதற்குப் பட்டியல் உருவாக்குவது சாத்தியமில்லாதது.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், திட்டங்கள், பிரச்சனைகள் என செயல்பாடுகள் பிரிக்கப்பட வேண்டும். திட்டங்கள் சிறிதோ பெரிதோ அதை அவசியம் ஆலோசனைக்கு உட்படுத்த வேண்டும். அப்படி ஆலோசனை செய்து திட்டங்களை நடமுறைப்படுத்தும் போது ஏற்படும் தடங்கல், சிக்கல், சிரமங்களைச் சமாளிக்க ஆலோசனைக் கூட்டம் கூட்ட வேண்டியதில்லை. ஆனால் என்ன பிரச்சனை எப்படி சமாளிக்கப்பட்டது என்பதை சக நிர்வாகிகளுக்கு விளக்க வேண்டும். இது தான் முறை; இனி இப்படித் தான் நடக்கும் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்து விட வேண்டும்.

ஆலோசனைக் கூட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில், நடைமுறைப்படுத்தவிருக்கும் திட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி பல்வேறு கோணங்களை, கருத்துக்களை அலசி ஆராய்ந்து ஒரு முடிவு செய்வதாகும்.

உங்களுக்கு எந்தப் பொருள் கொடுக்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளே. அல்லாஹ்விடம் இருப்பதே நம்பிக்கை கொண்டு தம் இறைவனையே சார்ந்திருப்போருக்கும், பெரும் பாவங்களையும், வெட்கக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்வோருக்கும், கோபம் கொள்ளும் போது மன்னிப்போருக்கும், தமது இறைவனுக்கு பதிலளித்து தொழுகையை நிலை நாட்டி தமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும்.

அல்குர்ஆன் 42:38

ஆலோசனைக்  கூட்டத்தில் பேண வேண்டிய சில நடைமுறைகள்

  1. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகிகள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் கூட்டத்தில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் தெரியாத காரணத்தால் முடிவு தனக்கு சாதகமானதா பாதகமானதா என்று யோசித்து சாதகமாக இருந்தால் நிறைவேற்றுவார்கள், பாதகமானது என்று சிந்தித்தால் சாக்குப் போக்கு சொல்வார்கள். அந்த முடிவின் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பேசி, தனக்கு சாதகமாக ஆள் சேர்ப்பார்கள். ஆகையால் ஒவ்வொரு நிர்வாகியும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வது மிக மிக அவசியம்.
  2. ஒரு நிர்வாகம் விரும்பினால் நிர்வாகிகள் அல்லாத பலரையும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கலாம். அவர்கள் துறை சார்ந்த நிபுணர்களாகவோ, சிறந்த களப் பணியளர்களாகவோ, புரவலர்களாகவோ, இருக்கலாம். ஆனால் ஒரு நிர்வாகத்தில் பணக்காரர்கள், நாவன்மை மிக்கவர்கள் முடிவுகளை தங்கள் வசதிக்குத் திருப்பி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பல வேலைகளில் தாங்கள் களமிறங்க வேண்டி வருமே என்ற பயத்தில் முடிவுகளை தங்களுக்குச் சாதகமாகத் திருப்ப முயற்சி செய்வார்கள். இது இயக்கம் அல்லது நிறுவனம் வீரியமிகு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவதில் முட்டுக்கட்டையாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. சில ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களைப் பார்த்தால் சந்தைக் கடை போல் இருக்கும். எல்லோரும் ஒரே நேரத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். யார் பேச்சும் யாருக்கும் புரியாது. ஆலோசனைக் கூட்டத்துக்குள்ளேயே ஆங்காங்கே குட்டி குட்டி ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும். நேரமெல்லாம் வீண் விரயமான பிறகு அவசர அவசரமாக ஓர் முடிவை எடுத்து விட்டுக் கலைந்து சென்று விடுவார்கள். இந்த நிலை ஒரு நிர்வாகத்தின் அழிவுக்குப் போதுமானது. ஆகையால் இதற்கு இடமளித்து விடக்கூடாது.
  4. நிர்வாகிகளை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கும் போதே இடம், நேரம் குறிப்பிட்டு அழைப்பது போல் விவாதப் பொருள் (ஆஞ்ங்ய்க்ஹ) என்னவென்று தெரிவித்து விட வேண்டும். அப்போது தான் விவாதிக்கும் பொருள் சம்பந்தமான முழு விபரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருவார்கள்.
  5. ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது தலைவர், விவாதிக்கப்படும் விஷயங்களை முன்மொழிய மற்றவர்கள் கருத்துக் கூற வேண்டும். ஒருவர் பேசும் போது இன்னொருவர் எக்காரணம் கொண்டும் பேசக் கூடாது.
  6. முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள நிர்வாகி, விவாதிக்கப்படும் விஷயத்தில் முழுத் தகவல்களை, அதன் சாதக பாதகங்களைத் தெரிந்து வைத்திருப்பது மிக நல்லது.

7, பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் எவை? நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டு, தலைவர் முடிவு எடுக்க வேண்டிய விஷயங்கள் எவை? என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கொள்கை அடிப்படையிலான முடிவு என்றால் ஒரு முறை எல்லா நிர்வாகிகளிடமும் கருத்துக் கேட்டு விட்டு, தலைவர் ஒரு முடிவு செய்து கொள்வது தான் சிறந்தது. ஆனால் ஒரு திட்டம் தீட்ட வேண்டும் என்றால், அதில் பொருளாதாரத் தேவைகள் உள்ளது என்றால் பெரும்பான்மை அடிப்படையில் முடிவு செய்து கொள்ளலாம்.

முடிவெடுத்தல்

பல தலைவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள்; மிக நன்றாக செயல்படுவார்கள். ஆனால் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்தால் வேறு ஆள் மீது போட்டு விட்டு ஓடி விடுவார்கள்.

அடிப்படையில் முடிவு எடுக்கும் திறமை சிலருக்கு நிறைந்து இருக்கும். அவர்கள் இயற்கையான தலைவர்கள்.

சில இயற்கைத் தகுதிகளோடு சில நுட்பங்களையும் தெரிந்து கொண்டால் மிக எளிதாக இருக்கும். அவை:

  1. ஆலோசனை செய்யப்படும் விஷயத்தில் மொத்தம் எத்தனை கருத்துக்கள் வந்துள்ளன என்று வரிசைப்படுத்துவது.
  2. ஒவ்வொரு கருத்தின் சாதக, பாதகங்களையும் அலசுவது.
  3. தன்னலமில்லாத, இறைவனுக்கு அஞ்சிய மனோநிலையை உருவாக்கிக் கொண்டு, அலசப்பட்ட கருத்துக்களிலிருந்து ஒன்றை முடிவாகத் தேர்வு செய்வது.
  4. முடிவை, சக நிர்வாகிகளுக்குப் புரியும் வண்ணம் விளக்கிக் கூறுவது.

எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துதல்

பல நிர்வாகங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடக்கும். பல முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் ஒன்றும் நடைமுறைக்கு வராது. செயல்பாட்டிற்கு வந்த சில முடிவுகளும் கூட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல் இருக்காது. இது அந்த நிர்வாகத்திற்குக் கீழுள்ள மக்களிடம் நிர்வாகத்தைப் பற்றிய நம்பகத் தன்மை குறைய வழி செய்து விடும். பல தலைவர்கள் வழியில் கிடக்கும் துரும்பைக் கூட மலையாகப் பார்ப்பார்கள். முடிவை மாற்றியதற்குப் பல பொருந்தாத காரணங்களைக் கூறுவார்கள்.

அதே நேரத்தில் எடுத்த முடிவை விட சிறந்ததைக் கண்டால் ஆலோசனை செய்த சக நிர்வாகிகளை அழைத்து, காரண காரியங்களை விளக்கிக் கூறி முடிவை மாற்றலாம். அதுவல்லாத எந்தக் காரணத்துக்காகவும் மாற்ற கூடாது

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

மோதல், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் நிர்வகித்தல் (ஈர்ய்ச்ப்ண்ஸ்ரீற் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்)

ஒரு மனிதன் மட்டும் ஒரு வேலையைச் செய்யும் வரை எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பித்தால்  மாறுபட்ட அபிப்ராயங்கள், முரண்பாடுகள், சண்டை என பிரச்சனைகளும் தொடங்கி விடும்.

அப்படி ஏற்படும் பிரச்சனைகளை, பல நிர்வாகங்களில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளே ஊதிப் பெரிதாக்குவார்கள். தனது நிர்வாகத்தின் உறுப்பினர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டே இருப்பது தான் தனது பதவிக்குப் பாதுகாப்பு என்று நினைப்பார்கள். இவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தை, அமைப்பை அழிப்பதற்கான வேலையில் நேரடியாகவே இறங்கி விட்டார்கள் எனலாம்.

ஆகையால் ஒரு நிர்வாகத்திற்குள் ஏற்படும் பிரச்சனைகளை உடனே களைய வேண்டும். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என இன்றைய நிர்வாகவியல் கல்வியில் போதிக்கப்படுபவற்றைப் பார்ப்போம்.

மோதல் அல்லது பிரச்சனை ஏன் ஏற்படுகிறது?

  1. ஒரு நிர்வாகத்திற்குக் கீழ் இருக்கும் இரண்டு தனி நபர்களுக்கு மத்தியிலோ, அல்லது இரண்டு குழுக்களுக்கு மத்தியிலோ அவர்களது குறிக்கோளை அடையும் முயற்சியில் மறைமுகமான அல்லது வெளிப்படையான கருத்து வேறுபாடுகள், மோதல்கள் ஏற்படும்.
  2. தனி நபர்களுக்கிடையிலோ, குழுக்களுக்கிடையிலோ, நாடுகளுக்கு இடையிலோ ஏற்படும் ஒப்பந்த முறிவு.
  3. கொள்கை பேதங்கள் (தர்ப்ப் ஸ்ரீர்ய்ச்ப்ண்ஸ்ரீற்): ஒரு நிர்வாகம், இயக்கம், தனது அடிப்படைக் கொள்கையிலிருந்து மாறிச் சென்றால், அதை அந்த நிர்வாகத்தில் உள்ள மற்றவர்கள் எதிர்த்தால் ஏற்படும் மோதல்.
  4. ஒரு நிர்வாகத்தின் கீழ் உள்ளவர்களுக்குப் பொறுப்புகள் பிரிக்கப்பட்ட பின், ஒருவர் பொறுப்பில் மற்றவர் அவசியமில்லாமல் தலையிடுவதால் மோதல் ஏற்படும்.

மோதல், சண்டைகள், பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் விளைவுகள்

  1. நிர்வாகிகள் மத்தியில் ஏற்படும் மன அழுத்தம், உடல் பாதிப்புகள்.
  2. தொடர்புகள் குறைந்து போய்விடும். இதனால் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும்.
  3. எல்லோருடைய கவனமும் பிரச்சனையில் இருக்கும். அதனால் இயங்கு திறன் குறைந்து, செயல்பாடுகள் நின்று விடும்.
  4. எதிர்மறை மனோநிலை வளர்ந்து, ஒருவர் பற்றி மற்றவர் திரித்துப் பேசத் தொடங்குவார்கள். யூகங்களை நம்பி அதன் அடிப்படையில் காரியங்களை அமைத்துக் கொள்வார்கள்.
  5. எல்லா ஆற்றலும் அப்போதைய சண்டையில் வெற்றி பெறுவதற்காக வீண் விரயம் செய்யப்படும். இதனால் உண்மையான குறிக்கோளிலிருந்து விலகி விடுவார்கள்.

தனி நபர் பிரச்சனைகளில் ஏற்படும் மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள்

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 49:10

  1. பிரச்சனை மேலும் பெரிதாகாமல் இருக்க, இருவரையும் மூன்று நாட்கள் பிரிந்திருக்கச் செய்வது. (ஈர்ர்ப்ண்ய்ஞ் ர்ச்ச் டங்ழ்ண்ர்க்)
  2. இந்த நேரத்தில் இருவரின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருவது.
  3. இக்காலத்தில் இருவரையும் தனித் தனியே சந்தித்து ஒருவரைப் பற்றி ஒருவருக்கு நல்ல எண்ணத்தை ஏற்படுத்துவது.
  4. சமாதானம் தான் ஒரே வழி என்பதைப் புரிய வைப்பது, அதற்காக நிர்பந்திப்பது, ஏற்பாடுகளைச் செய்வது.
  5. சம்பந்தப்பட்ட இருவரையும் நேருக்கு நேர் அழைப்பது.
  6. நாம் ஒரு குழுவாகச் செயல்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனை, தனி நபர் பிரச்சனை அல்ல என்பதைப் புரிய வைப்பது.
  7. பழைய விஷயங்களை விட்டு விட்டு, குறிக்கோளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது.
  8. இரு தரப்பையும் அவரவர்கள் தரப்பை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பளிப்பது. அந்த நேரத்தில் யூகத்தின் அடிப்படையில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது.
  9. தீர்ப்பளிப்பது, அல்லாஹ்வுடைய அச்சத்தை ஏற்படுத்துவது, அல்லாஹ் எவ்வளவு கருணையாளன் என்பதை நினைவுபடுத்துவது, தவறு ஒருவர் மீது என்று தெளிவாகத் தெரியும் போது சிறிய தண்டனைகள் வழங்குவது, இருவரும் ஒருவரிடம் மற்றொருவர் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு நிர்பந்திப்பது, நடந்தவற்றை எழுதி இருவரிடமும் கையெழுத்து வாங்குவது, விசாரணையில் கலந்து கொண்ட மற்றவர்களும் சாட்சிகளாகக் கையெழுத்திடுவது.

குழுக்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளை அணுகும் முன்

  1. குறிக்கோளின் பக்கம் முழுக் கவனத்தையும் மாற்றி விடுவது.
  2. நமது சக்தி, இந்தச் சண்டையில் விரயமாகின்றது; இந்தச் சக்தி முழுவதும் நமது வளங்களை பெருக்கப் பயன்பட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இரு தரப்பினருக்கும் புரிய வைப்பது.
  3. பொது எதிரியை அடயாளம் காண்பது. எப்போதுமே ஒரு குழு இரண்டாக உடைந்தால் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஒரு பொது எதிரி வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அதற்குக் காரணமாக இருப்பது இயற்கை என்பதை அடையாளம் காட்டினால் பிரச்சனை இலகுவாகத் தீர்ந்து விடும்.
  4. சில நேரங்களில் ரோஷம் (ஊஞ்ர்) காரணமாக ஏற்படும் சண்டைகளில் ஒன்றாக அமர்ந்து பேசுவதற்கே ஒரு சாரார் மறுக்கக் கூடும். அந்த நேரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 49:9

தொடக்கம்

இத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கு முடிவு என்று தலைப்பிடாமல் தொடக்கம் என்பது தலைகீழாகத் தெரிகிறதே என்று கேட்கலாம். படித்தவற்றைக் கொண்டு பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத் தான்.

பல நிர்வாகங்களில் வசதி வாய்ப்புகள் நிரம்பி வழியும். ஆனால் தலைவர்கள் தூங்கி வழிவார்கள். நிர்வாகத்திற்குக் கீழ் உள்ள மக்கள் தலைவர்களைத் தூண்டி விட்டால் தான் வேலைகள் நடக்கும். தொடங்கு திறன் (ஒய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங்) நிரம்பப் பெற்றவர்கள் நிர்வகிக்கும் நிர்வாகத்தில் இந்த நிலை இருக்காது.

நம்மில் பலர் நிர்பந்தம் ஏற்பட்டால் தான் செயல்படுவார்கள். நிர்பந்தத்தில் செயல்படுவது, பிரச்சனைகள் ஏற்பட்டால் தீர்த்து வைப்பது, நிர்வாகத்தில் வழமையாக நடைபெறும் சில காரியங்களைத் தொடர்வது, இவை இவை மிகப் பெரும் சாதனைகள் என்று மார்தட்டிக் கொள்வது, இவையனைத்தும் தொடங்கு திறன் இல்லாதவர்களின் அடையாளங்கள்.

தொடங்கு திறனை ஆங்கிலத்தில் ண்ய்ண்ற்ண்ஹற்ண்ஸ்ங் என்று கூறுவார்கள், புதுப்புது திட்டங்களையும், திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கும் யுக்திகளையும், தடைகளைக் கண்டு துவண்டு விடாத மனோ நிலையையும் பெற்றவர்கள் தான் தொடங்கு திறன் கொண்டவர்கள்.

திட்டமிடுதல் என்பது செய்யும் வேலையில் பாதியாகும். இது இன்றைய நிர்வாகவியல் கல்வியின் நம்பிக்கை. நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கை முழுவதும் திட்டமிடுதல்கள் நிறைந்து காணப்படுவதைப் பார்க்க முடியும்.

மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து, அத்திட்டத்தைக் கட்டம் கட்டமாக அவர்கள் நடைமுறைப்படுத்திய விதம். மக்கா வெற்றிப் போருக்கு அவர்கள் திட்டமிட்ட முறை, அதை நடைமுறைப்படுத்திய விதம்.

ஆனால் இன்று திட்டமிடலுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று கூறும் அளவுக்குத் தான் நமது நிலை இருக்கிறது. ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் அனைவரும் வந்து விடுவார்கள். ஆனால் அப்போது தான் நிர்வாகிகள் சிலர், எப்படி கூட்டத்தை நடத்தப் போகிறோம் என்று ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள்.

எந்தக் காரியமானாலும் அதை முன்கூட்டியே ஆலோசனை செய்து, முடிவுகள் செய்து விட வேண்டும். கடைசி நேரத்தில் அங்கும் இங்குமாக பதட்டத்தில் ஓடக் கூடாது. திட்டமிடுதலை, சுருக்கமாகப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

  • திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு என்ன செலவாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்வது.
  • திட்டமிடப்பட்ட வேலையை முடிக்க எவ்வளவு நாளாகும் என்பதை கணக்கிட்டுக் கொள்வது.
  • திட்டத்தில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதை பிரித்தளிப்பது.
  • திட்டத்தை நிறைவேற்றத் தேவையானவற்றை (ஈட்ங்ஸ்ரீந் ப்ண்ள்ற்) பட்டியலிட்டுக் கொள்வது. அது நிறைவேற்றப்பட்டு விட்டதா என இடையிடையே சோதித்துக் கொள்வது.

பல நேரங்களில் திட்டமிடுதல் என்ற பெயரால் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காக, அது இல்லை, இது இல்லை என்று கூறி எல்லாவற்றையும் தட்டிக் கழிக்க வழி இருக்கிறது. இந்த முறையை “மிகையான திட்டமிடல்” (ஞஸ்ங்ழ் டப்ஹய்ய்ண்ய்ஞ்) என்று கூறுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். நடுநிலை பேணப்பட வேண்டும். கையில் உள்ள வளங்களைக் கொண்டு காரியங்களை முடிக்க வேண்டும்.

நம்மில் பலருக்குத் தடைகளைக் கண்டு பெரும் பயம். தடைகளைக் காரணம் காட்டி வீரியமான புதுத் திட்டங்களை செயல்படுத்த மாட்டார்கள். எதிர்ப்புகள், விமர்சனங்கள் இல்லாமல் வேலையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நாம் செய்யும் எந்தச் செயலையும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் தான் மெருகூட்டுகின்றன என்பதே உண்மை.

ஆகையால் ஒரு திட்டத்தை, செயல்பாட்டைச் சிந்திக்கும் போதே தடைகளையும் சிந்தித்து அதை எதிர்கொள்ளும் முறையையும் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பல நேரங்களில் நிர்வாகிகள் தடைகளைக் காரணம் காட்டித் தங்கள் கோழைத்தனத்தை மறைத்துக் கொள்வார்கள். ஆகையால் நல்ல முறையில் திட்டமிட்டு, தடைகளை எதிர் கொள்வதற்கான வழிமுறைகளோடு அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து செயல்பாடுகளைத் தொடங்குபவர்கள் அல்லாஹ்வின் நேசராவார்கள்.

உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

————————————————————————————————————————————————

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

(இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்வியைப் பல்வேறு சகோதரர்கள், ஏகத்துவம் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்புகின்றனர். அந்தச் சகோதரர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலும் இதுதொடர்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.)

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் என்பது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளை நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை. எனவே நபிகள் நாயகம் காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.

ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணை வைப்பும் நுழைந்தது.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ, பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.

நபிகள் நாயகம் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காதே தவிர எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்வோம்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 9:17

இணை வைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டுகிறது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.

அன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் என்பது கீற்றுக் கூரைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணை கற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம் இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகையைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.

எனவே அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவர்களின் அமல்கள் அழிந்து விட்டன என்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதிலிருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும்.

இன்னும் சொல்லப் போனால் வெள்ளை அடித்தல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல், மின் இணைப்பு பணி செய்தல், பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம். ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும்.

இன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும். தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.

எனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை, தகுதி இணை வைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வது எளிதானதே.

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

அல்குர்ஆன் 3:28

மூமின்களைத் தான் (அதாவது இணை கற்பிக்காதவர்களைத் தான்) தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்க முடியாது என்ற அச்சுறுத்தல் இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அது ஆட்சித் தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலான வணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.

பின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 9:23

நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் 4:139

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?

அல்குர்ஆன் 4:144

தொழுகையில் நமக்காகவும் அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். இணை கற்பிப்பவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோருவதைப் பின்வரும் வசனம் தடை செய்யும் வகையில் உள்ளது.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

அல்குர்ஆன் 9:113

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை – நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை – மீறப்படும் நிலை ஏற்படும்.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தைச் சிலர் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் அனைத்து முஸ்லிம்களுக்கான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் இணை கற்பிப்பவர்களும் உள்ளனர். அவர்களையும் ஒரு பக்கம் முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொண்டு இன்னொரு பக்கம் இணை கற்பிப்பவர்கள் என்று முத்திரை குத்துவது ஏன்? அவர்கள் பின்னே தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?

இது தான் அந்தக் கேள்வி. தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் போராடக் கூடாது என்பதற்காக இப்படி கேட்கிறார்களா? அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.

ஆனாலும் இதற்குப் பதில் சொல்லும் கடமை நமக்கு உண்டு.

இணை வைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று நாம் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவது போலவே அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்ப்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் தான்.

ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு. உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக் கொள்வார் என்பதும் இஸ்லாத்தின் நிலைபாடு தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கிராமவாசிகள் இஸ்லாத்தின் கொள்கையை நம்பாமல் தங்களை மூமின்கள் நம்பிக்கையாளர்கள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதை அல்லாஹ் கண்டித்து, அவ்வாறு கூறக் கூடாது; ஆனால் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோம்என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக, “கட்டுப்பட்டோம்என்று கூறுங்கள்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 49:14

தமிழாக்கத்தை மட்டும் பார்த்தால் நாம் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியாது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு மூலத்தையும் கவனித்தால் தான் முழுமையாகப் புரியும்.

கிராமவாசிகள் “ஆமன்னா’ எனக் கூறினார்கள். இது ஈமான் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதாவது தம்மை மூமின்கள் என்று அவர்கள் வாதிட்டனர். நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை என்று கூறி அவர்களிடம் ஈமான் இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டு “அஸ்லம்னா’ என்று கூற அனுமதிக்கிறான். “அஸ்லம்னா’ என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் “அஸ்லம்னா’ (முஸ்லிம்களாக இருக்கிறோம்) என்று அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

அவர்களிடம் ஈமான் இல்லாவிட்டாலும் வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று சொல்லலாம் என்று அல்லாஹ் அனுமதிப்பதை இதிலிருந்து அறியலாம்.

இதே கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். “அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை முஸ்லிம் என்று சொல்என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறி விட்டு, “ஸஅதே! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான் கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளி விடுவானோ எனும் அச்சம் தான்என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 27

உலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனுடைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு. எனவே (இப்படிப்பட்டவர் மீது) அல்லாஹ் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பில் அல்லாஹ்வுக்கு வஞ்சனை செய்து விடாதீர்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 391

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிட வேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி, நாம் தொழுவது போன்று தொழுது, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி, நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்; மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 392

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், அபூஹம்ஸா! ஓர் அடியாரின் உயிரையும் பொருளையும் தடை செய்வது எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து, நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது, நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர் தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு; மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மைமூன் பின் சியாஹ்

நூல்: புகாரி 393

ஒருவர் வெளிப்படையான காரியங்களைச் செய்தால் இஸ்லாமிய அரசில் அவர் முஸ்லிமாகக் கருதப்பட்டுவார். அனைத்து முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையைப் பெறுவார். ஆனால் அவர் உண்மையில் மூமினாக இல்லாவிட்டால் அவரைப் பற்றிய விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது என்று தெளிவுபடுத்துகிறார்கள். இஸ்லாமிய அரசாங்கம் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஈமான் இல்லாத கிராமவாசிகள் முஸ்லிம்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்து, தன்னை முஸ்லிம் என்று சொல்பவரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் நாமும் சேர்க்க வேண்டும்.

நபிகள் நாயகத்துக்குப் பின் இன்னொருவரை நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்கள் தனி மதத்தவர்களாவர். காதியானி, 19 கூட்டத்தினர் இதில் அடங்க மாட்டார்கள்.

அதே சமயம் இணை கற்பிப்பவர்களை இமாமாக ஏற்கக் கூடாது; இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; இணை கற்பிப்பவருக்குப் பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது போன்ற கட்டளைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் உலக உரிமைகளில் முஸ்லிம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் அவரை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். இரண்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான்.

மாற்றுக் கருத்துக்கு மறுப்பு

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று வாதிட்டு ஒரு இணைய தளம் சில வாதங்களை எடுத்து வைத்தது. அவர்கள் இது குறித்து எடுத்து வைக்கும் வாதங்கள் சரிதானா? என்பதைப் பார்ப்போம்.

அவர்களின் முதல் வாதம்

இணை வைக்கும் (ஷிர்க்) இமாமைப் பின்பற்றலாமா?

(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு – நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில் தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன். (31:23)

தோல்வியுற்று ஓடும் எதிரிப் படையில் ஒருவனை நபித்தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்டபோது அவர் “லா இலாஹ இல்லல்லாஹுஎன்று கூறினார். அப்போது நபித்தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்தி விட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபி (ஸல்) அவர்களிடம் இது விஷயத்தை எடுத்து கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக் கிடக்கியை நாவின் மூலமே வெளியிட முடியும்என்றார்கள்.

அறிவிப்பாளர்: கபீஸா பின் துவைபு (ரழி)

நூல்: முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்

இந்த குர்ஆன் ஹதீஸ் இரண்டிலுமிருந்து ஒருவனுடைய உள்ளத்தின் நிலை பற்றிய திட்டமான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது. அது விஷயத்தில் நாம் தலையிடுதல் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகின்றன.

ஒருவனுடைய உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பது யாராலும் மறுக்க முடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதே சமயம் வெளிப்படையாகத் தெரிவதை வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. ஒரு கொள்கையைப் பேசும் இவர்களுக்கு இன்னொரு பக்கம் அது தொடர்பான மார்க்க அறிவு இல்லாததே இந்த வாதத்தின் அடிப்படை.

இணை கற்பிக்கும் இமாம் என்று நாம் எப்படி முடிவு செய்கிறோம்? அவரது உள்ளத்தில் ஊடுறுவிப் பார்த்துத் தான் முடிவு செய்கிறோமா? நிச்சயமாக இல்லை. வெளிப்படையான அவரது செயலைப் பார்க்கிறோம். அது அப்பட்டமான இணை வைப்பாக இருக்கிறது. இதை வைத்து அவர் இணை கற்பிக்கிறார் என்று நாம் முடிவு செய்கிறோம்.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸும் அதைத் தான் சொல்கிறது. ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி விட்டார். இது வெளிப்படையாகத் தெரிகிறது. இதை வைத்து முடிவு செய் என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டுகிறார்கள். அது போல் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் ஒரு கல்லை வணங்குகிறார். இதுவும் வெளிப்படையானது தான். லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை இவர் நம்பவில்லை என்பதை இவரே வெளிப்படுத்தி விட்டார். ஆனால் இப்போது வெளிப்படையானதை வைத்து முடிவு செய்யக் கூடாது என்பது இவர்களின் ஆராய்ச்சி.

“உள்ளத்தைப் பிளந்து பார்த்து முடிவு எடுக்க முடியாது’ என்று கூறப்படுவதை, “வெளிப்படையாகத் தெரிந்தாலும் முடிவு எடுக்கக் கூடாது’ என்று விளங்கும் இவர்கள் எவ்வளவு அறிவாளிகள் என்று தெரிகிறது.

இவர்கள் முதன் முதலில் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை இவர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டால் ராமகோபாலனையும் இமாமாக ஏற்றுப் பின்பற்றலாம் என்று கூற வேண்டும். (நம்மை எதிர்ப்பதற்காக அவ்வாறு கூறினாலும் ஆச்சர்யம் இல்லை.)

ஏனெனில் காஃபிர்களைப் பற்றித் தான் அவ்வசனம் கூறுகிறது. அவர்களின் உள்ளங்களில் உள்ளதையும் அறிய முடியாது என்பதால் அத்வானி இமாமத் செய்தாலும் அவரைப் பின்பற்றலாம் என்பது தான் இவர்களது ஆய்வின் முடிவு.

திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இணை கற்பிப்பவர்களுடன் எப்படி நடக்க வேண்டும்; கெட்டவர்களுடன் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டப்பட்டுள்ளது. இவர்களின் வாதப்படி அவை யாவும் வீணானவையாகி விடும்.

“ஒருவன் இணை கற்பிப்பவன் என்பதும் ஒருவன் கெட்டவன் என்பதும் அல்லாஹ்வுக்குத் தெரிந்த விஷயம்; நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டோம்’ என்றால் இவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்கிறார்கள் என்பது தெரிகிறது.

“உங்கள் புதல்விகளை நல்ல ஒழுக்கமானவனுக்குத் திருமணம் செய்து கொடுங்கள்; கெட்டவனுக்கு திருமணம் செய்து கொடுக்காதீர்கள்’ என்று கூறினால், வெளிப்படையான செயல்களை வைத்து முடிவு எடுக்க முடியும் என்றால் தான் அவ்வாறு கூற முடியும்.

எனவே இவர்கள் வாதத்துக்கும் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுவதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இணை கற்பிப்பவர் என்ற முடிவு வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் முடிவு செய்யப்படுகிறது.

இரண்டாவது ஆதாரம்

மறுமை நாளின் போது முறையே புனிதப் போரில் ஷஹீதானவரில் ஒருவரையும், தானும் கற்று பிறருக்குத் கற்பித்துக் கொடுத்த ஆலிம் – அறிஞரில் ஒருவரையும், நிறைய செல்வங்கள் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும் கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்படும். இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்து உணர்த்துவான். அப்போது அவர்களும் அதை உணர்ந்து கொள்வார்கள். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறு செய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காக குர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்று பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன் என்பார். மூன்றாம் நபர் நீ விரும்பும் அத்துனை விஷயங்களுக்கும் நான் உனக்காக அனைத்துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார்.

அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர். உண்மையில் நீ ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டப்பட்டு ஷஹீதாகியுள்ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொருவரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர் உண்மையில் நீ ஓர் ஆலிம் – அறிஞர் அழகாக ஓதுபவர் என்று அழைக்கப்படுவதற்காக செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டு விட்டது என்று கூறி இவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மூன்றாமவரை நோக்கி, நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவதற்காகவே செலவு செய்துள்ளீர். அவ்வாறு அழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஹதீஸ் சுருக்கம்: அபூஹுரைரா (ரழி), முஸ்லிம்)

சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக ஒருவர் அந்த சத்தியத்தை எதிர்த்து போராடுபவர்களை எதிர்த்து சண்டையிட்டு மரணிக்கிறார். அதனை நாம் கண்ணால் காணுகிறோம். அந்த சண்டையில் வெட்டுப்பட்டு மரணிப்பதும் நமக்கு தெரிகிறது. நம் காணும் அறிவின் படி அவர் வெட்டுப்பட்டு ஷஹீதாகியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட ஷஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக் கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கிறார். அவரது உபதேசங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையை உணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தௌபா செய்து நேர்வழிக்கு வந்து விடுகின்றனர். அவரைப் பெரும் சீர்த்திருத்தவாதி என உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது.

அதே போல் மிகப் பெரிய செல்வந்தர் தமது செல்வங்களில் பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே பார்க்கிறோம். அவர் பெரும் கொடை வள்ளல் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ் அவரையும் நரகில் எறிவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா – இறை விசுவாசமா, குஃப்ரா – இறைநிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று நம் நாட்டு பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத் தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

மீண்டும் அதே அறியாமை தான் இங்கும் வெளிப்படுகிறது. இவ்வுலகில் நாம் நல்லவன் என்று நினைத்தவன் மறுமையில் கெட்டவனாக இருக்கலாம். நாம் கெட்டவன் என்று நினைத்தவன் மறுமையில் நல்லவனாக இருக்கலாம் என்பது வேறு. இவ்வுலகில் வெளிப்படையானதை வைத்து நல்லவன் கெட்டவன் என்று முடிவு எடுக்கலாமா என்பது வேறு. இந்த அடிப்படையும் இவர்களுக்குத் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே சிலரை நல்லவர்கள் என்று முடிவு செய்திருப்பார்கள்; ஆனால் அவர்கள் மறுமை நாளில் ஹவ்லுல் கவ்ஸருக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவார்கள் என்று உள்ளது. நாம் வெளிப்படையானதை வைத்து முடிவு எடுக்க வேண்டும்; ஆனால் அல்லாஹ்வின் முடிவும் இப்படித் தான் இருக்கும் என்று கூற முடியாது.

இவர்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸின் படி மூன்று பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அந்த மூன்று பேரையும் வெளிப்படையான செயல்களை வைத்து நல்லவர்கள் என்று கூறியவர்கள் கண்டிக்கவோ தண்டிக்கவோ படவில்லையே?

சரி! இவர்கள் உலக வாழ்க்கையில் அப்படித் தான் நடக்கிறார்களா? வெளிப்படையாக இவர்களுக்கு எதிராக நடப்பவர்களை இவர்கள் ஏன் எதிரிகளாக நினைக்கின்றனர்? அவர்களின் உள்ளத்தில் உள்ளது எங்களுக்குத் தெரியாது என்று கூறக் காணோமே?

மார்க்கத்தை வளைப்பதற்கு மட்டும் இந்தத் தவறான வாதத்தை எடுத்து வைப்பவர்கள், சொந்த விஷயம் என்று வரும் போது ஒருவனை கெட்டவன் என்று முடிவு செய்வது ஏன்?

இதிலிருந்து இவர்கள் செய்வது சந்தர்ப்பவாதம் என்பது தெரிகிறது.

எந்த மனிதனையும் நாங்கள் வெளிப்படையான செயல்களை வைத்து கண்டிக்க மாட்டோம் என்று அறிவித்து, அதன் படி நடக்கத் தயாரா? இல்லை என்றால் அவர்கள் ஏதோ புதிதாக எதையாவது கூறி, பேர் எடுக்க வேண்டும் என்பதற்காகக் கூறுகிறார்கள் என்பது உறுதியாகிறது.

மனிதர்கள் இவ்வுலகில் வாழும் போது வெளிப்படையான செயல்கள் அடிப்படையில் முடிவு செய்யும் நிலையில் தான் படைக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முடிவு செய்தால் அதன் பொருள் என்ன? எங்களுடைய சக்திக்கு உட்பட்டு வெளிப்படையானதைத் தான் பார்க்க முடியும். அதன்படி தான் முடிவு செய்ய முடியும். அவ்வாறு முடிவு செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். ஆனால் நாங்கள் செய்த முடிவுக்கு மாற்றமாக அல்லாஹ்வின் முடிவு இருக்கலாம். இவ்வளவு அர்த்தத்தையும் உள்ளடக்கியே ஒருவனை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ ஒரு முஸ்லிம் கூறுகிறான். இதைக் கூட விளங்காதவர்கள் ஆய்வு செய்யக் கிளம்பி விட்டனர்.

என்னிடம் வழக்கு கொண்டு வருவார்கள். வெளிப்படையான வாதத்தை வைத்து நான் ஒருவருக்கு சார்பாகத் தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் வேறுவிதமாக தீர்ப்பு இருக்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதைக் கவனித்தால் இன்னும் இது தெளிவாகும்.

மேற்படி கருத்துடையவர்கள் நீதிபதி பொறுப்பில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பொருள் யாருக்குச் சொந்தம் என்று இரண்டு பேர் வழக்கு கொண்டு வருகின்றனர். இந்த நீதிபதி, “இது யாருக்கு உரியது என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பளிக்க மாட்டேன்” என்று தீர்ப்பளிப்பார்.

ஒருவர் விபச்சாரம் செய்ததாக வழக்கு வருகிறது. தக்க சாட்சிகள் உள்ளனர். இருந்தாலும் இவர் விபச்சாரம் செய்தாரா இல்லையா என்று அல்லாஹ்வுக்குத் தான் தெரியும். நான் தீர்ப்பு அளிக்க மாட்டேன் என்று இந்த நீதிபதி கூறுவார்.

இஸ்லாத்தைக் கேலிக் கூத்தாக்கும் எவ்வளவு ஆபத்தான வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை விளக்குவதற்காகவே இவ்வாறு தெளிவுபடுத்துகிறோம்.

இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்கலாம் என்ற கருத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லாத ஆதாரங்களை பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்தியுள்ளனர்.

மூன்றாவது வாதம்

மக்கத்து காபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாகக் கொண்டிருப்பதை இணை வைத்தலை ஆதரிப்பதை நம்மால் திட்டவட்டமாக ஊர்ஜிதம் செய்ய முடியாது. இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று சொல்வதோடு இந்த உம்மத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள ஒருவர் அல்லாஹ்வின் கட்டளையின்படியும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படியும் ஒருவர் தொழும் போது அதனைப் பின்பற்றித் தொழமாட்டேன் என்று எவ்வாறு ஒரு முஸ்லிம் சொல்ல முடியும்? அப்படிச் செய்தால் அல்லாஹ்வின் கட்டளையையே நிராகரித்த குற்றத்திற்கல்லவா ஆளாக நேரிடும். மேலும் அப்படிப்பட்ட ஒருவரைப் பின்பற்றித் தொழுவதால் அவரின் தவறான கொள்கைகளுக்கும் நாம் துணை போவதாகப் பொருளாகாது.

அவர்களைப் பின்பற்றித் தொழுதால் தான் அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்ததாக ஆகுமென்பதை அல்லாஹ்வின் வசனங்களை எடுத்துக் காட்டி நமது கட்டுரையில் முன்னரே விளக்கி விட்டோம்.

நான்காவது ஆதாரம்

ஒரு முறை ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் பித்அத்தையுடைய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அத்தகையவருக்குப் பின்னால் அவருடைய “பித்அத்’ அவரிடமே இருக்கும் நிலையில் தொழுவீராக! என்றார்கள்.

ஹிஷாமும் பின் ஹஸ்ஸான் (ரஹ்), முஸ்னத் ஸயீது பின் மன்சூர்

அதிய்யு பின் கியார் என்பவர் உஸ்மான் (ரழி) அவர்களிடம் வந்து, நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றித் தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவர்கள் “தொழுகை தான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகுறச் செய்யும் போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக’ என்றார்கள்.

அதிய்யு பின் கியார் (ரஹ்), புகாரி

மேற்காணும் உஸ்மான் (ரழி) அவர்களின் கூற்றிலிருந்து தொழ வைப்பவர், அவர் “பித்அத்’காரராக அல்லது வேறு தவறுகள் செய்பவராக இருப்பினும், நாம் ஜமாஅத்துடைய பலன் இழந்து நஷ்டம் அடைவதை விட அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத் தொழுவதே மேல் என்பதை அறிய முடிகிறது.

பின்பற்றி தொழுவோர் முறையாகத் தொழுதிருக்கும் போது, இமாம் முறைகேடாகத் தொழுது இமாமுடைய தொழுகை முறிந்து விடுவதால், அவரை பின்பற்றித் தொழுதவரின் தொழுகைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

“உங்களுக்கு சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கு நல்லது தான். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லது தான். அன்றி அவர்களுக்குத் தான் கேடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரழி), புகாரி

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜு பின் யூசுப் எனும் மிகக் கொடிய அநியாயம் செய்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களும், அபூஸயீதில் குத்ரி (ரழி) அவர்கள் பெரும் குழப்பவாதியாக இருந்த “மர்வான்’ என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களும், மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர் (ரழி) அவர்கள் கஷ்பிய்யா, காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால், அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.

அது சமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்கு பின்னால் நின்று தொழுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யார் “ஹய்ய அலஸ்ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்குப் பதில் அளிப்பேன். யார் “ஹய்ய அலல் ஃபலாஹ்’ (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார் “ஹய்ய அலா கத்லி அக்கீல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ’ (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள்.

நாபிவு (ரழி), ஸூனனு ஸயீதுபின் மன்சூர்

ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள்.

ஸாலிம் (ரழி),  தாரகுத்னீ

ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி – குளிப்புக் கடமை உள்ளவர்களாயிருக்கும் போது (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிந்ததும்) மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை.

அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாரகுத்னீ

மேற்காணும் ஹதீஸ்கள் அஃதர்- ஸஹாபாக்களின் சொற்செயல்கள் வாயிலாக தொழ வைக்கும் ஓர் இமாம் அவர் தொழுகையிலோ அல்லது வெளியிலோ என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும் போது, அவற்றால் இவர்களின் தொழுகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிகிறோம். தொழுகையில் இமாம் செய்யும் தவறுகளே மற்றவர்களின் தொழுகையைப் பாதிக்காது எனும் போது, தொழுகைக்கு வெளியில் அவர் செய்யும் தவறு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்?

இங்கே இவர்கள் எடுத்துக் காட்டியுள்ள சம்பவங்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எத்தனையோ பேர் எத்தனையோ கருத்துக்களைக் கூறி இருப்பார்கள். தமது கூற்றுக்கு குர்ஆன் வசனத்தையோ நபிமொழியையோ ஆதாரமாகக் காட்டி இருந்தால் மட்டுமே அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இவர்கள் எடுத்துக் காட்டும் சம்பவங்களில் கூட இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்று கூறப்படவில்லை. எதையாவது போட்டு பக்கத்தை நிரப்புவதற்காக எழுதியுள்ளனர்.

ஒரு வேளை இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்ற கருத்தை இந்தச் சம்பவங்கள் தெரிவிக்குமானால் திருக்குர்ஆனுக்கு முரணாக அமைந்திருப்பதால் இதை நாம் நிராகரித்து விட வேண்டும்.

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் திருக்குர்ஆனும் நபி வழியும் தான். இணை கற்பிப்பவரை இமாமாக ஆக்க முடியாது என்பது அல்லாஹ்வின் வசனத்தில் இருந்து தெரியும் போது அதற்கு முரணாக அமைந்த எவருடைய சொல்லும் ஆதாரமாகாது என்ற அடிப்படையை விட்டு விலகி நின்று வாதிடுகிறார்கள். மேலும் இவர்கள் எடுத்துக் காட்டிய தனி நபர் தொடர்பான சம்பவங்களில் கூட இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்பதற்கு ஆதாரம் இல்லை. பாவம் செய்தவர்களைப் பின்பற்றலாமா என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது.

எவர் நமது தொழுகையைத் தொழுகிறாரோ, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, நாம் அறுத்ததைச் சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வின் தூதரினதும் பாதுகாப்பில் உள்ளார். எனவே இந்த பாதுகாப்பில் இருப்பவருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்.

அனஸ் (ரழி), புகாரி, அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, தாரமி, அஹ்மத்

அப்படியானால் அவர் ஒரு முஸ்லிம், மற்ற முஸ்லிம்களுக்கிருக்கும் அதே உரிமைகளும், கடமைகளும் அவருக்கும் உண்டு. (புகாரி) என்று இன்னொரு அறிவிப்பில் இவ்வாறு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களிலிருந்து ஷிர்க், பித்அத் சடங்குகளைச் செய்கிறவர்கள் பின்னால் தொழுதாலும், தொழுபவரின் தொழுகை கூடாமல் போகாது; மேலும் இக்காரணங்களைக் கூறி ஒருவர் பின்னால் தொழுவதை ஒருவர் தவிர்த்துக் கொண்டால், அந்த இமாம் முஸ்லிம் இல்லை; காஃபிர் அல்லது முஷ்ரிக் என்று இவர் முடிவு செய்தே பின்பற்றாமல் இருக்கிறார். ஒருவரது உள்ளத்தில் இருப்பதை அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் அறிய முடியாது. அவர்களின் வெளிரங்கமான செயல்களை வைத்து ஒருவரை காஃபிர் என்றோ, முஷ்ரிக் என்றோ ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் பெற மாட்டார். இதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் ஆதாரங்களாக இருக்கின்றன.

இங்கே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்கள் ஷிர்க், பித்அத்கள் செய்யும் இமாம்களைப் பின்பற்றலாம் என்ற கருத்தைக் கூறுவதாக எழுதி அல்லாஹ்வின் தூதர் மீது பொய்யை இட்டுக்கட்டியுள்ளனர். இந்த ஹதீஸ்களின் கருத்து என்ன என்பதையும், இவர்கள் கூறும் கருத்தை இந்த ஹதீஸ் தரவில்லை என்பதையும் இக்கட்டுரையின் துவக்கத்தில் நாம் விளக்கியுள்ளோம்.