ஏகத்துவம் – ஆகஸ்ட் 2019

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல
சமத்துவ வாதம் சகோதரத்துவ வாதம்

இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மை இல்லாத மார்க்கம், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம்.
இப்படி வகை வகையான பழிச் சொற்களால் இஸ்லாம் வறுத்தெடுக்கப்படுகின்றது.
இஸ்லாத்தைத் தவிர உலகத்தில் எந்த ஒரு மதமும் தனக்கு முன் இப்படிப்பட்ட அடைமொழிகளையும் அவப்பெயர்களையும் சுமந்திருக்காது. அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்தப்படுகின்றது.
எங்காவது வெடிகுண்டு வெடித்து விட்டால் போதும்! உடனே ஊடகங்கள் கொஞ்சமும் நியாய உணர்வின்றி, நீதமான பார்வையின்றி, குண்டுவெடிப்புப் பின்னணியில் இஸ்லாமிய பயங்காரவாதம்? என்ற ஒரு தலைப்பிட்டு, புலனாய்வுத் துறை புலனாய்வு செய்வதற்கு முன்னரே இவர்கள் ஊடகப் புலனாய்வை, இல்லை! ஊகப் புலனாய்வைத் தொடங்கி விடுகின்றனர்.
இஸ்லாமிய சமுதாயத்தின் மீது இவர்கள் குற்றப்பின்னணி முத்திரையைக் குத்தி அவர்களைக் குண்டு வைக்கின்ற குற்றப்பரம்பரை போல் ஆக்கி விடுகின்றனர். சம்பவம் நடந்த இடம் ஊடகங்களின் ‘லைவ்’ வளையத்திற்குள் வந்து விடுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் குருதி வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்து கதறுகின்ற காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சங்களை கதிகலங்கச் செய்து விடுகின்றது; கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகின்றது.
அதிலும் குறிப்பாக, கபடமறியாத கைக்குழந்தைகள், கைத்தடி ஊன்றி நடந்து சென்ற முதியவர்கள், மூதாட்டிகள் என்று வேறுபாடு பார்க்காமல் பதம் பார்த்த பயங்கரவாதத்தின் கோர முகத்தையும் கொடூர ஆட்டத்தையும் பார்க்கும் மக்கள் பதைபதைக்கின்றனர். இஸ்லாம் இவ்வளவு பயங்கரமான மார்க்கமா? என்று எண்ணத் தலைப்படுகின்றனர்.
பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று தெரிந்த மக்கள் கூட இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாகப் பார்க்கின்றனர். பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பது போல் பயங்கரவாதிகள் செய்த பாவத்திற்கும் வெறியாட்டத்திற்கும் இஸ்லாம் பலிகடாவாக ஆக்கப்படுகின்றது. இதன் எதிர்விளைவு? ஒட்டுமொத்த சமுதாயமும் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகின்றனர். ஆனால் உண்மை நிலை என்ன?
முஸ்லிம்களோ, அவர்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமோ, அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் வேதமான திருக்குர்ஆனோ, அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களோ ஒருபோதும் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிக்கவில்லை.
முஸ்லிம்கள் தீவிரவாதத்திலும் பயங்கர வாதத்திலும் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைத் தமிழகத்தில் வாழ்கின்ற தமிழ் சமுதாய மக்களுக்கும் உலகத்திற்கும் எடுத்துச் சொல்வதற்காக இவ்வாண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள், தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துகின்றது.
தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறை கலாச்சாரங்களில் ஈடுபடுகின்றவர்களை தயவு செய்து இஸ்லாத்துடன் இணைத்துக் கூறாதீர்கள்! அவர்கள் பிறமதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களை அந்த மதத்துடன் சம்பந்தப்படுத்திப் பேசாதீர்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்தத் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றது.
இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தனது மாவட்ட மற்றும் ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் இரத்த தான முகாம்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கின்றது. மழை நீர் சேமிப்புத் திட்டத்தை மக்களிடம் எடுத்துரைக்கின்றது. அதன் ஒரு செயல் திட்டமாகத் தான் ஏகத்துவத்தின் இந்த மாத இதழை தீவிரவாத எதிர்ப்பு சிறப்பிதழாக வெளியிட்டு அதை உங்கள் கைகளில் தவழ விடுகின்றது.
இஸ்லாத்தின் மீது எந்த அளவுக்குப் பழி சுமத்தப்படுகின்றது என்ற உண்மையை இந்த இதழ் உங்களுக்குப் படம் பிடித்துக் காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதிலும் குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாத்தை எதிர்ப்பது ஆதிக்க சாதியினர் தான். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, அதன் மூலம் ஒரு பிரிவினரை அடக்கியாள நினைக்கும் இந்த வர்க்கத்தினர் தான் இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க முயல்கின்றனர். அவர்களால் தான் இஸ்லாத்தின் மீது பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற முத்திரை குத்தப்படுகின்றது. இஸ்லாத்தில் தீவிரவாதமும் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. இங்கே இருப்பது சமத்துவ வாதமும் சகோதரத்துவ வாதமும் தான்.
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை, எதுவுமில்லை என்ற கொள்கையை ஒருவர் ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவருக்கு சக மனிதர்கள் சகோதரர்களாகி விடுகின்றார்கள். அவர்களிடம் மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடு ஒழிந்து விடுகின்றது.
மேல் சாதியினரைக் கீழ் சாதியினர் புனிதமாகக் கருத வேண்டும்; அவர்களை வணங்க வேண்டும்; காலா காலம் கீழ் சாதியினர் அடிமைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்; மேல் சாதியினர் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற சாதியக் கட்டமைப்பை இஸ்லாம் தகர்த்தெறிகின்றது. மேல்சாதியினராக இருந்தாலும் சரி! கீழ்சாதியினராக இருந்தாலும் சரி! வெள்ளையனாக இருந்தாலும் சரி! கருப்பனாக இருந்தாலும் சரி! அத்தனை பேரும் கடவுளுக்கு முன்னால் ஒரே வரிசையில் நின்று தொழவேண்டும்; எல்லோரும் கடவுளின் அடிமைகள் தானே தவிர, ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு அடிமையல்ல என்பதை இஸ்லாம் 1400 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
ஒரே கடவுள்! ஒன்றே குலம்!! என்ற கொள்கையின் அடிப்படையில் மனிதகுலம் அனைத்தையும் ஒரே குலமாக ஆக்கி விடுகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
இஸ்லாத்தின் இந்தக் கொள்கை, இங்குள்ள ஆதிக்க சாதியினரின் வர்ணாஸ்ரம தர்மத்தை, சாதி அடுக்குகளை, சாதிப்பிரிவுகளை, தீண்டாமையை, வேண்டாமையை அடித்துத் தகர்த்து, இவர்களது சாதியத்தை ஒழித்துக் கட்டி விடுகின்றது. இஸ்லாத்தின் இந்த சமத்துவ வாதம், சகோதரத்துவ வாதம் தங்கள் சாதிய சாம்ராஜ்யத்திற்கு சம்மட்டி அடியாகி விடும் என்பதால் தான் இந்த வர்க்கத்தினர் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடனும் தீவிரவாதத்துடனும் தொடர்புபடுத்துகின்றனர் என்பதே உண்மை!
இதை உங்கள் கனிவான கவனத்திற்கு இந்த ஏகத்துவ மாத இதழ் மூலம் கொண்டு வருகிறோம். இந்தக் கண்ணோட்டத்தை முன்னோட்டமாகக் கொண்டு இவ்விதழுக்குள் வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்.

இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள்
சபீர் அலி

இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம் கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் குடும்ப அமைப்பு, நட்பு வட்டாரம், வியாபாரத் தொடர்பு மற்றும் வேறு பலவிதமான தொடர்புகள் என ஏதேனும் ஒரு விதத்தில் இன்னொரு மனிதனைச் சார்ந்திருக்கிறான்.
சங்கிலித் தொடர்பு கொண்ட மனித சமுதாயத்தில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் தனி மனிதனுக்கு உரித்தான உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீறாமல் இருத்தல் வேண்டும்.
மனித உரிமைகளின் பட்டியல் நீண்டு காணப்பட்டாலும் அத்தனை விஷயங்களையும் மூன்று அடிப்படைகளின் கீழ் அடக்கிவிடலாம்.
உயிர், பொருள் மற்றும் மானம் ஆகிய மூன்றும் தான் அந்த அடிப்படையான உரிமைகள்.
எந்த ஒரு உரிமையாக இருந்தாலும் அவை இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் அமைந்துவிடும்.
எனவே, எந்த ஒரு மனிதனாயினும் இன்னொரு மனிதனின் உயிர், பொருள், மானம் ஆகிய விஷயங்களில் எல்லை தாண்டினால் அது மனித உரிமை மீறலே!
இன்று உலகில் மனிதர்களுக்கு எதிராக நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பொருளாதார மோசடி, கந்துவட்டி என அனைத்து குற்றங்களும் இந்த மூன்று அடிப்படையை மீறுவதில் ஒன்றாகத்தான் இருக்கும்.
வலுவான இரும்புக் கரம் கொண்ட சட்டங்களால் மட்டுமே இந்த உரிமை மீறல் குற்றங்களுக்குத் தீர்வு காண முடியும்.
அதைவிட முக்கியமாக, அடுத்தவர் உரிமையில் தலையிடுவதற்கு எந்த ஒருவருக்கும் அதிகாரம் இல்லை என்று ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாகப் பதியவேண்டும்.
இஸ்லாம் அதை அழகாகவும் மிக ஆழமாகவும் மக்களின் உள்ளத்தில் பதிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது (ஆற்றிய உரையில்), “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் (மக்கா) தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள்தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், ஆம் என்று நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர்.
நூல்: புகாரி 6785
நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி உரையில், தனது 23 ஆண்டு காலப் பிரச்சாரத்தின் சாராம்சத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
அதில், மிக முக்கியமான அறிவிப்பாக மக்களுக்கு அறிவித்த விஷயம், பிற மனிதரின் உரிமை தொடர்பான விஷயம்.
இஸ்லாமியர்களுக்கு மக்கா மாநகரமும் துல்ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் எவ்வளவு புனிதமிக்கது என்று அனைத்து மக்களுக்கும் தெரியும். அதைப் போலத்தான் பிற மனிதர்களின் உயிர், உடைமை, மானம் ஆகியவையும் அவர்களுக்குப் புனிதமாக இருக்கிறது. அந்தப் புனிதத்தைப் பாழ்படுத்துவது ஹராம் எனும் தடைசெய்யப்பட்ட விஷயமாகும்.
மேலும் இஸ்லாம், மறுமை வாழ்வு எனும் உலக அழிவிற்கு பின்னுள்ள வாழ்வை முஸ்லிம்களுக்கு நம்பிக்கையாக ஊட்டுகிறது.
எந்த ஒரு மனிதராயினும் அந்த நம்பிக்கை ஆழப்பதியும் போதுதான் அவர் உண்மை இறை விசுவாசம் கொண்டவராகக் கருதப்படுவார். அதுவே நிலையான வாழ்வாகும். அங்கு சுவனம், நரகம் எனும் இருவித வாழ்வுள்ளது.
இவ்வுலகில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நன்மை புரிவோர் சுவனத்திலும், இறைவனுக்கு மாறு செய்வோர் நரகத்திலும் கொண்டு சேர்க்கப்படுவர்.
அத்தகைய மறுவுலக வாழ்வான சுவன, நரகத்தின் பாதையைத் தீர்மானிக்கும் நாள்தான் விசாரணை நாள்.
அந்த விசாரனை நாளில் சிலருக்கு இவ்வுலகில் செய்த பாவத்திற்காக மன்னிப்பு வழங்கப்படாது. அவர்கள் பாவச்சுமையைச் சுமந்து நரகில் புகுவார்கள்.
அத்தகைய மன்னிப்பு வழங்கப்படாதவர்களில் ஒரு சாரார் யாரெனில், அடுத்தவர் உரிமையில் தலையிட்டு, எல்லை தாண்டி அவரை பாதிப்பிற்கு உள்ளாக்கியர்கள் ஆவர்.
எந்த மனிதன் இவ்வுலகில் பாதிக்கப் படுகிறானோ அவன், தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களை மனதார மன்னிக்கின்ற வரை இறைவன் அவர்களை மன்னிக்க மாட்டான்.
அந்தக் குற்றம் அவர்களது கணக்கில் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக விசாரணை நாளில் பாதிப்பை ஏற்படுத்தியவர் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என்று இஸ்லாம் சொல்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (பாதிக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (பாதிக்கப்பட்டவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
நூல்: புகாரி 2449
இந்த உலக வாழ்க்கை என்பதே, மனிதர்கள் இங்கு நற்செயல்கள் புரிந்து மறுவுலகில் சுவனத்தை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளத்தான்.
அத்தகைய நற்செயல்களை ஒருவன் எவ்வளவு செய்து சேமித்து வைத்திருந்தாலும் அவன் பிறர் உரிமையில் எல்லை தாண்டியிருந்தால் அது பாதிக்கப்பட்டவனின் கணக்கில் கொண்டு போய் சேர்க்கப்படும் என்றும், நன்மைகள் ஏதும் இல்லையென்றால் அல்லது அவன் ஏற்படுத்திய பாதிப்பு நன்மையை விட அதிகமாக இருந்தால் அதற்குப் பகரமாக, பாதிக்கப்பட்டவனின் பாவங்களை எடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டவனின் கணக்கில் சேர்க்கப்படும் என்றால் அது எவ்வளவு பெரிய கைசேதம்.
சேர்த்து வைத்த நன்மைகள் பயன் தராதது ஒருபுறம் வேதனையென்றால், செய்யாத குற்றத்திற்குத் தண்டனையை அனுபவிப்பது அதைவிட வேதனை.
இவ்வளவு கைசேதத்தை ஏற்படுத்தும் பாவமாக மனித உரிமை மீறலை இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது.
இதை இன்னும் தெளிவாகப் பின்வரும் செய்தி எடுத்துரைக்கிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் உண்டு. அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில இவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5037
தொழுகை, நோன்பு, ஜகாத் என்று இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளைச் செய்து நன்மைகளைச் சேமித்து வைத்திருந்தாலும் பிறரின் உரிமையில் எல்லை கடக்கும் விதமாக நடந்து கொண்டால் அத்தனையும் அவரிடமிருந்து பறிக்கப்படும்.
எந்த அளவிற்கு மனித உரிமைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட செய்தியில், “மறுமையில் திவாலாகிப் போனவர் ஒருவரைத் திட்டியிருப்பார்” என்ற வார்த்தை உணர்த்துகிறது.
ஒருவரைத் திட்டுதல் என்பது இன்றைக்கு சாதாரணமாகக் கருதப்படுகிற, கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத விஷயமாகத்தான் அனைத்து மக்களாலும் பார்க்கப்படுகிறது.
திட்டுதல் என்ற காரியத்தில் பிறரின் மானம் சம்பந்தப்படுகிறது. அதில் அவருக்கு ஒரு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது. அதனால் அதுவும் குற்றம் என்றே இஸ்லாம் சொல்கிறது.
சிறியதோ பெரியதோ, அடுத்தவர் உரிமை என்று வந்துவிட்டால் அதில் அளவுகளுக்கு வேலையில்லை. உரிமை மீறப்பட்டதா என்பதே கவனிக்கப்படும்.
மேற்படி தகவல்களிலிருந்து இஸ்லாம் மனித உரிமைகளை எவ்வளவு போற்றுகின்றது என்று தெரியும்.
இத்தகைய மனித உரிமைகளில் எல்லை மீறுகின்ற விஷயங்களில் இன்று மக்களிடம் தலை விரித்தாடும் சில விஷயங்களைப் பார்ப்போம்.
அவற்றில் முதலாவதாக, ஒருவரின் நம்பிக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் மோசடி செய்யும் விஷயமான, கடன் வாங்கி நிறைவேற்றாமல் ஏமாற்றுவதைப் பற்றி பார்ப்போம்.
கடன் மோசடி
இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் ஒரே சீரான நிலையில் வாழ வைக்கப்படவில்லை. ஏனெனில் மனிதர்கள் ஒரே சீரான நிலையில் இருந்தால் உலகம் சீராக இராது.
அனைவரும் பணம் படைத்த செல்வ மாந்தர்களாக இருந்தால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் போன்ற அத்தியாவசியங்கள் முதல் ஆடம்பரங்கள் வரை தயார் செய்யும் தொழிலாளிகளாக இருப்பதற்கு எவரும் இருக்க மாட்டார்.
அதனால்தான் இப்படியான ஏற்றத்தாழ்வு முறையை இறைவன் வைத்துள்ளான்.
அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு தேவை ஏற்படும் போது, நண்பர்கள் உறவினர்கள் எனப் பிறரிடத்தில் குறிப்பிட்ட நாட்களில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பெறப்படும் தொகையே கடனாகும்.
இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் யாசிப்பதையும் பிறரிடம் கையேந்துவதையும் சுயமரியாதைக்கு இழுக்கு தரும் விஷயமாக அறிமுகப்படுத்துகிறது. ஆனால் அதே சமயம், அவசியத் தேவைக்கு, திருப்பிச் செலுத்தும் நோக்கில் வாங்கப்படும் கடனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமயிருக்கிறது.
அந்த நிபந்தனைகளில் ஒன்றுதான், கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஆகும்.
இந்த நிபந்தனைகளில் இன்றைக்குக் கவனம் செலுத்துபவர்கள் மிக குறைவானவர்களே!
லட்சக்கணக்கான மதிப்புள்ள கொடுக்கல் வாங்கல் தங்களுக்கு மத்தியில் இருந்தாலும் அதை இன்றைக்கு எழுதிக்கொள்வதும் கிடையாது, சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வதும் கிடையாது.
இவ்வாறு இந்த நிபந்தனைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இன்றைக்குக் கடனால் பல ஏமாற்று, மோசடி போன்ற விஷயங்கள் ஏற்பட்டு, அது கொலை செய்யும் வரை அல்லது ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொள்ளும் வரை மனிதர்களைத் தள்ளிவிடுகிறது.
இந்த நிபந்தனைகள் யாவும் கடன் கொடுக்கும் மனிதனின் பொருளாதாரம் அவனிடம் சரியாக ஏமாற்றாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
கஷ்டத்திற்கு நம்பி உதவும் கடனில் மனித உரிமை மீறப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கிறது.
நிபந்தனையுடன் கடனுக்கு இஸ்லாம் அனுமதியளித்தாலும் கடனைப் பற்றி அதிகம் எச்சரிக்கையும் செய்கிறது. எச்சரிக்கைக்கான காரணத்தையும் தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது, ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜா-, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’ (இறைவா! கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள்.
(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 832
கடன் வாங்குபவன் பொய் பேசுபவனாகவும் வாக்குறுதி மோசடி செய்பவனாகவும் மாறி விடுகிற காரணத்தினால் தான் கடனிலிருந்து அதிகமாக நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
சிலர், நம்பிக் கடன் கொடுத்தவனுக்கு மோசடி செய்து அவனது பொருளாதாரத்தை ஏமாற்றியும் விடுகின்றனர்.
இது கடன் கொடுத்தவனுக்கு, நம்பிக் கொடுத்தோம்; ஏமாற்றிவிட்டான் என்ற மன உளைச்சலையும் அவனது பொருளாதாரம் என்ற உரிமையை மோசடி செய்து பறிப்பதாகவும் ஆகிவிடுகிறது.
அதனால்தான் இத்தகைய மனிதனின் உரிமையில் விளையாடும் இந்த ஏமாற்றுக் காரியத்தை இஸ்லாம் மன்னிக்கப்படாத குற்றமாக அறிவிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.
நூல்: முஸ்லிம் 3832
போரில் உயிர்த்தியாகம் செய்வது என்பது இஸ்லாத்தில் ஆகச்சிறந்த காரியமாக இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் அவருக்கு மிகப்பெரும் அந்தஸ்த்தைப் பெற்றுத் தரும் செயல். அவரது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்.
அத்தகையை உயிர்த்தியாகி, கடனைப் பெற்று அதைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் மரணித்துவிட்டால் அவருக்கு அதன் பாவங்கள் மன்னிக்கப்படாது என்றால் இதை இஸ்லாம் எந்த அளவுக்குப் பார்க்கிறது? மனித உரிமைக்கு எத்தகையை அந்தஸ்தைத் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு அவசியத்திற்கும் அத்தியாவசியத்திற்கும் கடன் வாங்கும் நிலை மாறி, ஆடம்பரத்திற்கும், அடுத்தவர் போல் வாழ வேண்டும் என்பதற்கும், திருப்பி செலுத்தும் எண்ணிமில்லாமலும் கடன் வாங்கப்படுகிறது.
கடன் பெற நான் அலைகிறேன், அதைத் திருப்பி என்னிடமிருந்து அவன் எப்படி வாங்குகிறான் என்று பார்த்து விடுவோம் என்ற ஏமாற்றும் மனக் கண்ணோட்டத்துடனே இன்று பலர் கடன் வாங்குகின்றனர்.
இதனால் கடன் கொடுத்தவன் மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் தற்கொலையும் செய்து கொள்கிறான்.
இத்தகைய கடன் உயிரையும், உடைமையும் ஏமாற்றிப் பறிக்கும் மனித உரிமை மீறலாகவே இருக்கிறது. அதனால்தான் இஸ்லாம் அதை மன்னிக்கப்படாத குற்றமாக அறிவிக்கிறது.
வட்டி எனும் வன்கொடுமை
கடனை வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது கடன் வாங்கியவன் செய்யும் உரிமை மீறல் என்றால், வட்டி என்பது கடன் கொடுத்தவன் செய்யும் உரிமை மீறலாக அமைந்துள்ளது.
இது, மனித உரிமை மீறலின் உச்சாணிக் கொம்பிலிருக்கும் முதன்மை விஷயங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.
ஒருவன் தேவைக்குக் கடன் வாங்கும்போது கொடுப்பவன் ஒரு நிபந்தனையுடன் வழங்குவான்.
இந்தக் கடன் தொகையை வாங்கப் பட்டதிலிருந்து மாதத்திற்கு இவ்வளவு என கால இடைவெளிக்கு ஏற்ப மேலதிக தொகையுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பான்.
ஒருவன் 10,000 ரூபாய் கடன் பெறுகிறான் எனில் குறிப்பிட்ட மாதம் கழித்து அதைத் திருப்பிச் செலுத்தும் போது 15,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் என்று காலத்திற்கு ஏற்ப வாங்கப்பட்ட தொகையை விட வட்டித் தொகையை அதிகமாகச் செலுத்துவான்.
இது ஒருவனது பொருளாதாரத்தையும் அதற்காக இரத்தம் சிந்தி, வியர்வை சிந்திப் பாடுபட்ட அவனது உழைப்பையும் அநியாயமாகப் பறிப்பதாகும்.
ஏமாற்றும் நோக்கில் கடன் வாங்கியவன், கொடுத்தவனின் உரிமையில் தலையிடுவதை இஸ்லாம் எந்த அளவிற்குக் கண்டிக்கிறதோ அதைவிட அதிகமாக, ஒருவன் திருப்பி செலுத்தும் நோக்கில் கடன் பெற்று, உண்மையில் அதைத் திருப்பி செலுத்த முடியாத கஷ்டத்தில் இருக்கிறான் எனில் அவனுக்குக் கடனில் சலுகை காட்டுவதற்கும் அவகாசம் அளிப்பதற்கும் மிகப் பெரும் கூலிகளையும் அந்தஸ்துகளையும் சொல்லி வரவேற்கிறது.
ஆனால், அவ்வாறின்றி கடன் பெற்று கஷ்டத்தில் இருப்பவனின் பொருளாதாரத்தை வட்டி என்ற பெயரில் அநியாயமாக ஒருவன் பறித்து அவனது உரிமையையும் உழைப்பையும் உரிஞ்சுகின்ற அட்டைப் பூச்சியாக இருக்கிறான் எனில் அவன் மிகப் பெரும் பாவி என்று இஸ்லாம் சொல்கிறது.
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.
நூல்: புகாரி 2766
இஸ்லாத்தில் ஏழு மிகப் பெரும் பாவங்களின் பட்டியலை நபி (ஸல்) அவர்கள் மேற்படி செய்தியில் நமக்குத் தந்துள்ளார்கள்.
அதில் கொலை, அனாதைகளின் சொத்தை உண்பது, அவதூறு என்று அதிகமானவை மனித உரிமை மீறும் குற்றங்களாகவே இருக்கின்றன. அதில் ஒன்றாக வட்டியையும் பெரும்பாவம் என்று இஸ்லாம் அறிவிக்கிறது.
மேலும், வட்டி கொடுத்தல், வாங்குதல், பதிவு செய்தல், அதற்கு சாட்சியாக இருத்தல் என வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் இஸ்லாம் சபிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3258
மறுவுலக வாழ்வை நம்பியிருக்கும் முஸ்லிம்கள் அங்கே சுவனத்தைப் பெற வேண்டும் என்றால் அதற்கு இறையருள் அவசியம்.
அத்தகைய இறையின் அருளை இழக்கச் செய்து சாபத்தைப் பெற்றுத் தருகிற பெருங்குற்றமாக இந்த வட்டி திகழ்கிறது.
மேலும் வட்டியை நிரந்தர நரகத்தில் தள்ளும் குற்றமாகவும் அல்லாஹ்விடத்தில் போர் செய்வதற்குச் சமமான கண்டனத்திற்குரிய குற்றமாகவும் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் இறைவன் சொல்கிறான்.
வட்டியை உண்பவர்கள், ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போன்றே (மறுமையில்) எழுவார்கள். “வியாபாரம், வட்டியைப் போன்றது தான்” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தபின் (வட்டியிலிருந்து) விலகிக் கொண்டவருக்கு முன்னர் வாங்கியது உரியது. அவருடைய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டியின் பக்கம்) திரும்புவோரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:275
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டுவிடுங்கள்.
நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போர்ப் பிரகடனம் செய்து விடுங்கள். நீங்கள் பாவமன்னிப்புக் கோரினால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்குரியது. நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது.
அல்குர்ஆன் 2:278, 279
இத்தகைய பெரும் குற்றம் கொண்ட பாவமாக இஸ்லாம் இந்த வட்டியை அறிவித்துத் தடை செய்வதற்குக் காரணம் இது ஒரு மனித உரிமை மீறல் என்பது தான்.
இந்த மனித உரிமை மீறல் தற்போது நாம் வாழும் தமிழகத்தில் நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை உலுக்கிய ஒரு துயரமான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது.
கந்துவட்டிக் கொடுமையினால் ஒரு தம்பதியினர் தங்களது சிறு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்கள்.
ஒட்டுமொத்த நாடும் அதிர்ந்தது. மக்களின் மனமெல்லாம் வாடியது. செய்தி ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் நிரப்பிய தலைப்புச் செய்தியாக மாறியது.
ஒரு வாரத்திற்குப் பிறகு அப்படியொரு நிகழ்வு நடந்ததையே மறந்துவிட்டோம்.
மனித உரிமை ஆணையம் எல்லாம் என்ன செய்தது என்று தெரியவில்லை.
‘உயிரைக் குடிக்கும் இத்தகைய வட்டி அழித்தொழிக்கப்படும்’ என்று மக்கள் நம்பும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்ததா என்றால் நிச்சயமாக இல்லை.
அரசாங்கமே வங்கியின் வட்டியையும் மதுவின் வருவாயையும் நம்பியிருக்கும் போது எப்படி நம்பிக்கை வரும்?
இப்படி மனிதர்களின் பொருளாதாரம், உழைப்பு, மானம் மற்றும் உயிர் என்று அனைத்து உரிமைகளையும் மீறும் ஒரு வன்கொடுமையாக உள்ளதால்தான் இஸ்லாம் வட்டியை வேறருக்கிறது.
மோசடி
அடுத்து, மனித உரிமை மீறும் வரம்பற்ற செயல்களில் ஒன்றாக இருப்பது “மோசடி”
இன்று மோசடி இல்லாத இடங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏமாற்றுப் பேர்வழிகள் நிரம்பிய நாட்டில் வாழ்ந்து வருகிறோம்.
நாட்டின் தலைவன் முதல் தொண்டன் வரை அதிகமானோர் மோசடிக்காரர்களாகவே உள்ளனர்.
இன்னும் சொல்லப்போனால் அரசியல் கட்சிகள் என்றாலே நினைவுக்கு வருவது மோசடிக் குற்றங்கள்தான்.
புதிதாக ஒரு கட்சி வந்தால்கூட, இவர்கள் எவ்வளவு சுருட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்றுதான் ஒவ்வொரு குடிமகனின் எண்ணமாக மாறிவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி ரஃபேல் ஊழல் வரை மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் பிரம்மாண்ட ஊழல்கள் ஒரு புறமும், நாள்தோறும் செய்தித்தாள்களில் படித்து சலித்துப் போகும் சிறு ஊழல்கள் மறுபுறமும் இருக்கின்றன.
இவையெல்லாம் யாருடைய பணம். ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து வரி கட்டும் மக்களின் பணமல்லவா?
நாட்டின் வரிக்கொள்கையே மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சும் வகையில் இருக்கிறது. அப்படிச் செலுத்தும் வரிப்பணமும் ஊழலால் சுரண்டப்பட்டு, மக்களுக்குச் சரியான முறையில் பயன்படவில்லையென்றால் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு ஏமாற்றப்பட்டு, மோசடி செய்யப்படுகிறான்?
இன்றைய ஆட்சியாளர்களே இத்தகைய மக்களின் பொருளாதார உரிமையில் வரம்பு மீறுவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால், நபி(ஸல்) அவர்கள் வெறும் பத்து ஆண்டு காலம் ஆட்சி செய்து, மதீனாவை மிகப் பெரும் வல்லரசாக, ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள் என்றால் அதன் காரணங்களில் அவர்களின் நீதியும் நேர்மையும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதன் எடுத்துக்காட்டுகளில் ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு!
உக்பா பின் ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன் என விளக்கினார்கள்.
நூல்: புகாரி 1221
மக்களுக்குச் சேர வேண்டிய பொருளாதாரமான தங்கக்கட்டியொன்று நபி(ஸல்) அவர்களிடம் இருக்கிறது. அது தன்னிடம் ஓர் இரவுப் பொழுது கூட இருந்துவிடக்கூடாது என்று பயந்து அதை உடனடியாக மக்களுக்கு விநியோகித்துவிடுகிறார்கள்.
இப்படி சிறுபொழுது கூடத் தன்னிடம் மக்களுக்குச் சேர வேண்டிய பொருளாதாரம் இருக்க கூடாது என்றெண்ணி, அதை உடனடியாக விநியோகிக்க வேண்டும் என்று விரும்பும் நபிகளார் எங்கே! இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே!
மோசடி, ஊழல், ஏமாற்றுதுல் என்பது மனிதனின் பொருளாதாரம் எனும் உரிமையை அவனை ஏமாற்றிப் பறித்துக் கொள்வதாகும்.
இன்றைக்கு உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது தொடங்கி, இல்லாத வசதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் வரை அனைத்தும் மோசடிதான்.
மற்ற மனித உரிமை மீறல்களைத் தடுத்து, பெருங்குற்றமாக அறிவிப்பதைப் போல இக்குற்றத்தையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!’’ என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?’’ என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 164
ஒரு தானிய வியாபாரி மழைநீர் தானியத்தில் பட்டுவிட்டதால் அதைக் கீழே வைத்து, காய்ந்ததை மேலே வைத்து மறைத்து வியாபாரம் செய்கிறார். மக்களுக்குத் தெரியாமல் மறைத்து இப்படி வியாபாரம் செய்வதென்பது மோசடி என்றும், மோசடி செய்பவர் தன்னைச் சார்ந்தவர் அல்ல அதாவது, இஸ்லாத்திற்கு மாறு செய்தவர் என்றும் கூறுகிறார்கள்.
இஸ்லாத்திற்கு மாறு செய்தவர் என்று மோசடியாளரைக் கண்டிக்கிறது எனில் மோசடியை இஸ்லாம் எந்தளவு வெறுக்கிறது என்று கவனிக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு மனிதன் நல்ல பொருளுக்கு நமது பொருளாதாரத்தைப் பகரமாக்கியிருக்கிறோம் என்று நம்பி அதை வாங்குகிறான். அல்லது நல்லவர்களிடம் நமது பொருளாதாரத்தை ஒப்படைக்கிறோம் அது சரியாகப் பயன்படுத்தப்படும் என்று நம்பி ஒப்படைக்கிறான். ஆனால் அதை மோசடி செய்து, ஏமாற்றி அவனது பொருளாதாரத்தைப் பாழ்படுத்துவது என்பது அவனது உரிமையில் தலையிடும் விஷயமாக இருக்கிறது.
அதனால்தான் இஸ்லாம் இந்தக் குற்றத்தையும் கண்டிக்கிறது.
நாம் மேலே பார்த்த இந்தக் குற்றங்கள் மட்டுமல்ல! அவதூறு, புறம், வழிப்பறி, திருட்டு என்று மனித உரிமைகளில் தலையிடும் எந்தக் குற்றமாயினும் அங்கு இஸ்லாம் தனது கண்டனத்தைப் பதிவு செய்து அவர்களின் மறுவுலக வாழ்வின் முடிவை கேள்விக்குறியாக்குகிறது.
இதிலிருந்தே இஸ்லாம் மனித உரிமைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் இஸ்லாம் என்றாலே மனிதர்களுக்கு நலம் நாடும், அவர்களின் உரிமைகள் போற்றும் மார்க்கமாகும்.
இவ்வாறு மனிதர்களின் சிறு சிறு உரிமைகளில் தலையிடுவதைக் கூடத் தடை செய்யும் இம்மார்க்கம் உயிரைப் பறிக்கும் மிகப் பெரிய மனித உரிமை மீறலை ஆதரிக்குமா? சிந்திக்கவும்!

இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மை
எம்.ஐ.சுலைமான்

அன்றும் இன்றும் இஸ்லாம் விமர்சனத்திற்குரிய மார்க்கமாகவே இருந்துள்ளது. என்றாலும் அதன் அறிவுரைகளும் போதனைகளும் எல்லோரின் உள்ளங்களையும் ஈர்த்தது. இந்த வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் இஸ்லாத்திற்கு எதிராகப் பல சதிகளையும் அறிவற்ற விமர்சனங்களையும் வைத்தனர்.
இறைவனின் பேருதவியால் அந்தந்த கால அறிஞர்கள் இவர்களின் சத்தற்ற வாதங்களுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கம் கொடுத்து இஸ்லாத்தின் மேன்மையை மென்மேலும் வளர்த்து வந்தனர்.
இதே போன்று இன்றைய காலத்திலும் இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் கடுமையாக இருப்பதையும் அதே அளவு அதன் வளர்ச்சி இருப்பதையும் நாம் மறைக்கவும் மறுக்கவும் முடியாது.
இஸ்லாம் தீவிரவாதத்தை வளர்க்கிறது, தூண்டுகிறது, இஸ்லாம் வாளால்தான் வளர்ந்தது என்ற சொத்தை வாதத்தை இன்று எடுத்துரைக்கிறார்கள். ஊடகங்கள் இக்கருத்தை உலகமெங்கும் கொண்டு செல்கின்றன.
இஸ்லாத்தை எவ்வளவு எதிர்க்கிறார்களோ அந்தளவு மக்களிடம் அது போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கிறது. எதிர்க்க எதிர்க்கத் தான், ‘இஸ்லாம் உண்மையில் அவ்வாறு தான் சொல்கிறதா?’ என்று படிக்கத் துவங்கிறார்கள். இறுதியில் இஸ்லாத்திலேயே இணைந்துவிடுகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
குற்றச்சாட்டுகளுக்குரிய ஆதாரங்களுடன் இஸ்லாத்தைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்கலாம். நாம் அதற்குரிய தகுந்த சான்றுகளுடன் பதிலளிப்போம். ஆனால் பெரும்பாலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளே அதிகம் வருகின்றன.
இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாது. எதிரிகளைக் கொல்வதில் தான் குறியாக இருப்பார்கள். இரக்க குணம் அறவே கிடையாது என்பதாகும்.
இந்தக் குற்றச்சாட்டை இஸ்லாத்தின் எதிரிகள் பரப்பிவருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை நடுநிலையாளர்கள் திருக்குர்ஆனின் போதனைகள், நபிகளாரின் அறிவுரைகளை ஆதாரமாக வைத்து முடிவு செய்ய வேண்டும்.
உண்மையில் முஸ்லிம்களுக்குக் கொலைவெறி ஊட்டப்பட்டிருந்தால் அவர்களின் அடிப்படைக் கோட்பாடும் இதுபோன்று இரக்கமற்றே இருந்திருக்க வேண்டும்.
எனவே, திருக்குர்ஆன் அறிவுரைகள், நபிகளாரின் போதனைகள் இதுபோன்று அமைந்திருக்கின்றதா? அல்லது இரக்கமும் சகிப்புத் தன்மையும் நிறைந்திருக்கிறதா? என்பதை பார்ப்போம்.
இரக்க குணம் உடையோரே இறைவனின் அருளுக்குரியவர்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்கள்: புகாரி (7376), முஸ்லிம் (4638)
மனிதர்களின் உள்ளத்தில் இஸ்லாம் ஆழமாகப் பதியச் செய்தது இந்த அறிவுரையைத் தான். இறைவனின் கருணையை எதிர்பார்ப்பவன் மனிதர்களிடம் இரக்கத்தைக் காட்ட வேண்டும். இல்லையெனில் படைத்தவனின் கருணை அவனை விட்டும் அப்புறப்படுத்தப்படும்.
இந்த அடிப்படை விதிகளைப் போதித்த இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்குமா? சிந்தித்துப் பாருங்கள்.
இஸ்லாத்தில் சிறந்தது
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரி (12), முஸ்லிம் (63)
இஸ்லாமிய அடிப்படைப் பண்புகளில் ஒன்று, பசித்தவனுக்கு உணவளிப்பதாகும். இதுவே இஸ்லாத்தில் சிறந்தது என்று போதித்தவர் நபிகளார்.
ஒருவர் கொலை வெறிபிடித்தவராக இருந்தால் கொலை செய்ய முயற்சிப்பாரா? அல்லது அவனுக்கு உணவூட்டி வாழவைப்பாரா?
வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் மட்டும்தான் இதுபோன்ற அறிவுரைகளை வழங்குவார்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்’’ (எனக் கூறுவார்கள்). (எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.
(அல்குர்ஆன் 76:8-9)
இந்த இறைவசனம் சொல்வது என்ன? முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையான மறுமை வாழ்க்கை சிறக்க அவர் இவ்வுலகத்தில் பசித்தவருக்கு உணவளித்து வரவேண்டும் என்று அறிவுரை வழங்கவில்லையா?
அதுவும் சிறையில் இருப்போருக்கும் வழங்கச் சொல்கிறது. நம்மை எதிர்த்து வந்தவன், அழிக்க வந்தவன் அவன் கைதியாகப் பிடிபட்டிருக்கும் போது அவனுக்கு உணவளித்துக் காப்பாற்றுவது மறுமை வாழ்க்கை சிறக்க உதவும் என்று போதித்த திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்குமா?
வறியவருக்கு வாரி வழங்குதல்
நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த ‘கம்பளி ஆடை’ அல்லது ‘நீளங்கி’ அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே ‘முளர்’ குலத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்க ளுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது “மக்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்’’ எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள். மேலும், ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயத்திலுள்ள “இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொருவரும் மறுமைக்கென்று தாம் செய்த வினையைக் கவனிக்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக் காசு, துணி, ஒரு ‘ஸாஉ’ கோதுமை, ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்’’ என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்’’ என்று வலியுறுத்தினார்கள்.
உடனே ஒவ்வொரு வரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக் காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ கோதுமையிலிருந்தும் ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம்பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; ஏன்? தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1848)
வறுமையில் இருந்த சமுதாயத்தைப் பார்த்து, செத்துத் தொலையட்டும் என்று நபிகளார் விட்டுவிடவில்லை. இந்நிலையில் இருந்தவர்களுக்கு உதவி செய்யாமல் இருந்தவர்களையே கண்டித்தார்கள். அது மட்டுமல்லாமல் அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளையும் பெற்று வழங்கினார்கள்.
இவ்வாறு நடந்த நபிகளார் மக்களைக் கொன்று குவிக்கக் கட்டளையிட்டிருப்பார்களா? நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.
ஏழைகளும் விதவைகளும்
வறுமையில் இருக்கும் மக்களுக்கும் விதவைகளுக்கும் உதவுவது இறைத்தொண்டு என்று நபிகளார் அறிவுறுத்தியுள்ளார்கள். அது படைத்தவனுக்குச் செய்யும் வணக்கங்களின் நன்மைகளை பெற்றுத் தரும் என்று ஆர்வமூட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார் அல்லது இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நூல்கள் புகாரி (5353), முஸ்லிம் (5703)
இல்லாதவர்களுக்கு உதவி செய்து வாழ வைப்பவன் கொலை வெறிபிடித்தவனாக இருப்பானா?
உதவிசெய்யும் எண்ணம் எப்போதும் வேண்டும்
சிரமப்படும் மக்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும். எந்த வகையிலாவது அடுத்தவர்களுக்கு உதவிட வேண்டும். உதவும் எண்ணம் இரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும் என்பதை நபிகளார் வலியுறுத்தியுள்ளார்கள்.
“தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “தம் இரு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்” என்று சொன்னார்கள். மக்கள், அவருக்கு ‘(உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?) என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்” என்றார்கள். மக்கள், (இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?) என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது ‘நற்கர்மத்தை’(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும் என்றார்கள். (இதையும்) அவர் செய்யாவிட்டால்? என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்கள்: புகாரி (6022), முஸ்லிம் (1834)
ஒரு மனிதனுக்கு உதவும் அளவுக்கு வசதியில்லாவிட்டால் உழைத்து உதவவேண்டும். அதுவும் முடியவில்லையானால் அடுத்தவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று போதித்த மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்குமா?
உயிர், உடமைக்குப் பாதுகாப்பு அளிப்பவரே இறைநம்பிக்கையாளர்
“நான் உங்களுக்கு (உண்மையான) இறை நம்பிக்கையானன் யார்? என்று அறிவிக்கட்டுமா?” என்று நபிகளார் கேட்டு விட்டு, “உயிர், உடமை ஆகியவற்றில் எவர் மூலம் பாதுகாப்பு பெறுகிறாரோ அவரே” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: பளாலா பின் உபைத் (ரலி)
நூல்: அஹ்மத் (22833)
ஓரிறைக் கொள்கையை ஏற்று, நபிகளாரை இறைத்தூதராக ஏற்ற எந்த முஸ்லிமும் அடுத்தவர்களின் உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்தமாட்டான். அப்படி ஏற்படுத்துவன் இறைநம்பிக்கையாளனாக இருக்க மாட்டான் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இதுபோன்ற எச்சரிக்கையை ஏற்று நடப்பவன் தீவிரவாதியாக இருப்பானா?
கோபத்தை மென்று விழுங்குதல்
பல எண்ணங்கள், கொள்கைகள் கொண்ட மக்களிடம் வாழும் போது கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் வரலாம். அப்போது கோபத்தை அடக்கிக் கொள்பவனே சிறந்தவன் என இஸ்லாம் போதிக்கிறது.
அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குர்ஆன் 3:134
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (6114), முஸ்லிம் (5085)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபத்தைக் கைவிடு என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (அறிவுரை கூறுங்கள் எனப்) பல முறை கேட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தைக் கைவிடு என்றே சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6116)
கோபம் வருபவனுக்கு வெறியை ஊட்டாமல் சகிப்புத்தன்மை வலியுறுத்தியது இஸ்லாம்தான்.
மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான்
கோபம் வந்து வெறியாட்டம் போடுவன் இறைவனிடம் எந்த நன்மையும் பெறமுடியாது. பொறுத்துக் கொண்டு மக்களை மன்னிப்பவனே இறையருளைப் பெற முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் (5052)
“அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி (6927), முஸ்லிம் (4373)
நபிகளார் காலத்தில் கோபத்தை ஊட்டும் பல சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. அப்போதெல்லாம் நபிகளார் வெறியூட்டி கொலை செய்யத் தூண்டவில்லை. அமைதிப்படுத்தி அழகிய அறிவுரைகளையே வழங்கியுள்ளார்கள்.
பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவர்
கோபமும் வெறியும் ஏற்படும் சூழ்நிலைகளில் அமைதியை ஏற்படுத்தி பக்குவத்தைப் போதித்தவர்கள் நபி (ஸல்) அவர்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருமுறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளிவாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் ‘நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார்.
பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்’’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளி தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (480)
இறைவனை வணங்குமிடத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தால் நாம் பார்த்துக் கொண்டிருப்போமா? நம்மிடம் எவ்வளவு கோபம் ஏற்படும். இதுபோன்ற நியாயமான கோபத்தைக் கூட நபிகளார் அமைதிப்படுத்தினார்கள். அறியாமல் செய்பவரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. அவரிடம் அழகிய அறிவுரை வழங்க வேண்டும் என்ற பாடத்தை நடத்திக் காட்டிய நபிகளார் தீவிரவாதத்தை ஆதரிப்பார்களா?
கடனை திருப்பிக் கேட்டவர்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து தடித்த வார்த்தையைப் பயன்படுத்தினர். நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு “அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒர் கட்டகத்தைக் கொடுங்கள்” என்றார்கள். நபித்தோழர்கள், அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (2306),முஸ்லிம் (3272)
கடனை திருப்பிக் கேட்டவர் அநாகரிகமாக நடந்து கொண்டு கேட்கிறார். பலர் முன்னிலையில் ஒரு தலைவரை கேவலப்படுத்தும் விதமாக நடக்கிறார். அப்போது எல்லோருக்கும் ஏற்படும் கோபம் நபித்தோழர்களுக்கும் ஏற்படுகிறது. அவரை அடிக்க முயன்ற தம் தோழர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அந்த மனிதர் தனது உயிரைக் கூட இழக்க நேரிட்டிருக்கும். ஆனால் தானும் சகிப்புத்தன்மையுடன் இருந்து தம் தோழர்களுக்கும் சகிப்புத் தன்மையை வழிகாட்டியவர் நபி (ஸல்) அவர்கள்.
யசாகம் கேட்டவர்
நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் நபியவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு மூலையில் அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரி (3149), முஸ்லிம் (1906)
நம்மை கடுமையாகத் தாக்கி ஒருவர் நம்மிடம் யாசகம் கேட்டால் அவரை நாம் விட்டுவிடுவோமா? அதே யாசகர், ஒரு தலைவரைத் தாக்கிவிட்டு ஏதாவது தாருங்கள் என்ற கேட்டால் அவரின் நிலைமை என்னவாகும்?
ஆனால் அவரது செயலைக் கூட பொறுத்துக் கொண்ட நபிகளார், அவருக்கு ஏதாவது கொடுத்தனுப்பச் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் தீவிரவாதக் கருத்துக்களை மக்களிடம் சொல்லியிருப்பார்களா?
நபிகளாரை சபித்தவர்
யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அஸ்ஸாமு அலைக்கும் (-உங்களுக்கு மரணம் உண்டா கட்டும்) என்று கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான், “அவர்களுக்கு வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)” என்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லி விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6024), முஸ்லிம் (4373)
ஒரு தலைவரைச் சந்திக்க வரும் நபர் நையாண்டி, நக்கல் செய்தால் நமக்கு வேகம்,« காபம் வராதா என்ன? நபிகளாரைப் பார்த்து உங்களுக்கு மரணம் வரட்டும் என்று சொன்னால் எப்படியிருக்கும்? இவ்வாறு சொன்னவரை, நபிகளாரின் துணைவியார் கோபத்தோடு திட்டியதைக் கண்டித்து, மென்மையாக நடந்து கொள்ளப் பணித்த நபிகளார் மக்களைக் கொன்று குவிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருப்பார்களா?
இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாகப் படிக்கும் எவரும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். மாறாக சகிப்புத்தன்மையும் அன்பும் இரக்கமும் போதிக்கும் மார்க்கமே இஸ்லாம் என்ற முடிவுக்கே வருவார்.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
எம்.ஷம்சுல்லுஹா

இஸ்லாம் வாளால் பரவியது என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒரு தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றது. அதற்கேற்ப சவூதி அரசின் கொடியில் வாள் பொறிக்கப்பட்டிருப்பது இந்த வாதத்திற்கு வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கின்றது.
சவூதி அரேபியாவின் கொடியில் ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்’ என்ற இஸ்லாமிய பிரகடனத்திற்குப் பின் வாள் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால் அது, அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் நீதியில் பாரபட்சம் கிடையாது என்பதை தெரிவிப்பதற்காகப் பொறிக்கப்பட்டிருக்கின்றதே தவிர, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் உன்னை வெட்டி விடுவேன் என்பது அதன் கருத்தல்ல.
இப்போது இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? என்ற கேள்விக்கு விடை காண, இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு முன்னால் முஸ்லிமல்லாத வரலாற்று ஆசிரியர்கள், அறிவு ஜீவிகள் இது பற்றி என்ன கூறுகின்றார்கள் என்று முதலில் பார்ப்போம்.
தாமஸ் கார்லைல்
‘முஹம்மத் (ஸல்) இஸ்லாத்தை வாளால் பரப்பினார்கள், வாளின் வலிமை இல்லாமல் இஸ்லாம் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை’ என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒரு கதையைக் கட்டி விட்டிருக்கின்றனர். முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் பரவியது வாளின் வலிமையினால் அல்ல. அது கொண்டிருக்கும் சத்தியத்தின் வலிமையினால் தான்! ஒவ்வொரு புதிய கருத்து உதயமாகும்போதும் அதன் ஆரம்ப கட்டத்தில் அது மிக சிறுபான்மை கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. அதைச் சொன்னவர் அதில் உறுதியாக நிற்கின்றார். உலக மக்களோ அவர் கொண்டு வந்த கருத்துக்கு நேர் எதிர் திசையில் நிற்கின்றனர். இந்நிலையில், அவர் அந்த கருத்தைத் திணிப்பதற்கு வாளெடுத்து செல்கின்றார் என்றால் அவர் காணாமல் போய் விடுவார். ஆனால் அவர் கொண்டு வந்தது சத்தியம் என்பதால் அது தானாக எந்த விதத்திலும் பரவிவிடுகின்றது.
இவ்வாறு புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் தாமஸ் கார்லைல் என்பார், “பிமீக்ஷீஷீமீs ணீஸீபீ பிமீக்ஷீஷீ ஷ்ஷீக்ஷீsலீவீஜீ – தலைவர்கள் மற்றும் தலைவர்கள் வழிபாடு” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
விவேகானந்தர்
“ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் முஸ்லிம்களின் படையெடுப்பு ஒரு விடுதலையாக அமைந்தது. ஆதலால்தான் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக மாறினர். இதனைச் சாதித்தது வாள் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. வாளாலும் நெருப்பினாலுமே இவை சாதிக்கப்பட்டது என்று கூறுவது மதிகேட்டின் உச்ச நிலையாகும்” என்று விவேகானந்தர் கூறினார்.
நூல்: இஸ்லாமும் இந்தியாவும், ஞானய்யா, அலைகள் வெளியீட்டகம், பக்கம் 124.
வரலாற்று ஆசிரியர் டி லேசி ஓ லியரி
பிரபல வரலாற்று ஆசிரியர் டி லேசி ஓ லியரி (ஞிமீ லிணீநீஹ் ளி’லிமீணீக்ஷீஹ்) எழுதிய ‘இஸ்லாம் கடந்து வந்த பாதை’ (மிsறீணீனீ கிt ஜிலீமீ சிக்ஷீஷீss ஸிஷீணீபீ) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் மீண்டும் உலகிற்குத் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருப்பது, வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதைத் தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது’
இன்னும் ஏராளமானவர்கள் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். முஸ்லிமல்லாத இந்த வரலாற்று ஆசிரியர்கள், அறிவிஜீவிகள், ஆன்மீகவாதிகளின் இந்தக் கருத்துக்கள், இஸ்லாம் பரவியது அதன் கொள்கை, உண்மையான வழிமுறையை வைத்துத் தானே தவிர வாளின் வலிமையை வைத்தல்ல என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றன.
அரபிய தீபகற்பத்தில் அந்நிய மதத்தவர்
வாள்முனையில், வற்புறுத்தலில் தான் இஸ்லாம் பரவியது என்றால் இன்றைய அரபுலகத்தில் ஒரு கிறிஸ்துவர் கூட இருக்கக் கூடாது.
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்களும், சில ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் இன்றும் கூட ஒரு கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள் (சிஷீஜீtவீநீ சிலீக்ஷீவீstவீணீஸீs) அங்கே வாழ்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்களாகத் தான் இருந்திருப்பர்.
இப்போது வளைகுடா நாட்டிற்கு முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோர் என இந்தியாவிலிருந்து அனைத்து மதத்தவரும் வாழ்வாதாரம் தேடி, படையெடுத்துச் சென்று வருவாய் ஈட்டி வருகின்றனர். எத்தனை அரபிகள் எத்தனை அந்நிய நாட்டினரை முஸ்லிம்களாக மாற்றி விட்டார்கள் என்ற விபரத்தைத் தர முடியுமா? நீ முஸ்லிமாக மாறினால் தான் உனக்கு வேலை தருவேன் என்று எந்த அரபியாவது முஸ்லிமாக மாற்றியிருக்கின்றனரா? என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் இதுவரை காணுகின்ற நிதர்சனமான உண்மையாகும்.
ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் ஸ்பெயின் நாட்டில் உள்ள மற்ற மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் ஸ்பெயின் தேசம் முழுமைக்கும் முஸ்லிம்களால் நிறைந்திருக்கும். ஆனால் அங்கு இன்று முஸ்லிம்களே இல்லை. காரணம், பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இதுதான் வரலாறு.
இந்தியாவை ஆண்ட முஸ்லிம்கள்
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் நினைத்திருந்தால் முஸ்லிம் அல்லாத மக்களைத் தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர் தான் இருக்கிறார்கள்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு, இன்று இந்தியாவில் இருக்கும் எண்பது சதவீத முஸ்லிமல்லாதோரே சாட்சிகளாவர்.
இந்தோனேஷியாவும் மலேசியாவும்
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களைக் கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமியப் படையினர் இந்தோனேஷியாவிற்கும் மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றினார்கள்?
இப்போது எப்படி இஸ்லாம் பரவுகின்றது?
இன்று உலகளவில் அதிலும் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் இஸ்லாம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்று புள்ளி விவரங்கள் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.
இப்போது யார் வாள் எடுத்துக் கொண்டு இஸ்லாத்திற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆள் பிடிக்கின்றார்கள்? அல்லது இப்போது வாள் கலாச்சாரம் முடிந்து துப்பாக்கிக் கலாச்சாரம் உலகெங்கும் தலை தூக்கியிருக்கின்றது. அதனால் துப்பாக்கி முனையில் இஸ்லாத்திற்கு ஆள் பிடிக்கின்றார்கள் என்று சொல்லப் போகின்றார்களா?
சொல்லப் போனால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க வேண்டும் என்பதற்காகத் துப்பாக்கி ஏந்துபவர்கள் தான் அங்கே அதிகம். இதுமட்டுமின்றி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு இஸ்லாத்தின் மீதான அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. இதையும் தாண்டி அங்கு இஸ்லாம் பரவுகிறது.
எனவே இப்போது இஸ்லாம் பரவுவது வாள் முனையில் அல்ல! அதன் கொள்கைக் கோட்பாட்டினால் தான் என்பதை நிதர்சனமாகப் பார்த்து வருகிறோம். இது தான் அன்றும் நடந்தது.
வாளுமில்லை! வற்புறுத்தலுமில்லை!
வாள் முனையில் பரப்ப வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டுள்ளதா? இது பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது? என்று பார்ப்போம்
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. ஷைத்தான்களை மறுத்து, அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:256
இஸ்லாத்தில் வற்புறுத்தல் கிடையாது என்றும், தெளிவான ஆதாரங்களை எடுத்துச் சொல்லி மார்க்கத்திற்கு அழைப்பு விடுப்பது மட்டுமே இஸ்லாத்தின் கொள்கை என்றும் இவ்வசனம் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது.
மார்க்கத்தில் யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது என்று திருக்குர்ஆனே கூறி விட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி யாரையும் மதமாற்றம் செய்திருப்பார்கள் என்று கருத நியாயம் இல்லை.
(நபியே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்ப்பந்திக்கிறீரா?
அல்குர்ஆன் 10:99
ஒருவர் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தால் அது இறைவனின் நாட்டப்படி தான் நடக்கிறது. நீர் யாரையும் கட்டாயப்படுத்துவதோ, நிர்ப்பந்தம் செய்வதோ கூடாது என்று இந்த வசனமும் பிரகடனம் செய்கின்றது.
இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் 9:6
வேறு மார்க்கத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்தால் அது தான் மதத்தைத் திணிப்பதற்குச் சரியான தருணமாகும். ஆனால் அப்படி யாரும் அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்பதை எடுத்துக் கூறுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவருக்குப் பாதுகாப்பான ஏற்பாட்டைச் செய்து தர வேண்டும் என்று இவ்வசனமும் தெளிவாகச் சொல்கிறது.
“இறைமறுப்பாளர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்ல. நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு’’ எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 109வது அத்தியாயம்)
உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு என்ற பிரகடனத்தின் மூலம் வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்புதல் இல்லை என்று தெளிவாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் எந்த நற்செயலாக இருந்தாலும் உளப்பூர்வமாக இருந்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. உள்ளத்தில் நம்பிக்கை இல்லாமல் வேண்டாவெறுப்பாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அதனால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு அழைப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது.
இறைவனை உளப்பூர்வமாக அஞ்சுவோரிடம் இருந்து தான் இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
அல்குர்ஆன் 5:27
இஸ்லாமிய ஆட்சியில் யூதர்களின் செல்வாக்கு
முப்பது ‘ஸாவு’ வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4467
நபி (ஸல்) அவர்கள் மன்னராக இருந்தும், யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தும் அவர்கள் யூதர்களாகவே இஸ்லாமிய ஆட்சியில் இருந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் முஸ்லிம்களை விடப் பொருளாதாரத்தை அதிகம் திரட்டும் அளவுக்கு உரிமை படைத்தவர்களாக இருந்தனர் என்பதற்கும் இது ஆதாரமாகும்.
வாள்முனையில் இஸ்லாம் பரப்பப் பட்டிருந்தால் இஸ்லாமிய நாட்டின் தலைநகரத்தில் யூதர்கள் எப்படி இத்தனை செல்வாக்குடன் இருந்திருக்க முடியும்?
ஒரு சவ ஊர்வலம் எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா’ என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னுஅப்தில்லாஹ்(ரலி)
நூல்: புகாரி 1311
வாள்முனையில் மதமாற்றம் செய்வது தான் இஸ்லாத்தின் கொள்கை என்றால் எப்படி யூதர்கள் அங்கே இருந்திருப்பார்கள்? எப்படி அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் வழியாக பிரேதத்தை எடுத்துச் சென்றிருப்பார்கள்? அந்தப் பிரேதம் கடந்து செல்லும் வரை எழுந்து நின்று மரியாதை செய்த ஒருவர் எப்படி வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பி இருப்பார்?
இதுபோல் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
வாளின் வலிமையா? ஆளின் ஆளுமையா?
இஸ்லாமிய ராணுவத்தினர், (எதிரிக் கூட்டத்தின்) ‘பனூ ஹனீஃபா’ குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்து, பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, ‘(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!’ என்று கேட்டார்கள். அவர், ‘நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்’ என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.
மறுநாள் வந்தபோது அவரிடம், ‘ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்’ என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, ‘நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்’ என்று கூறினார்கள்.
உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை’ என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், ‘முஹம்மது, இறைத்தூதர்’ என்றும் நான் உறுதி கூறுகிறேன்’ என்று மொழிந்துவிட்டு, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இதுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆம்விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக்கொண்டு விட்டார்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள்.
அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், ‘நீ மதம் மாறிவிட்டாயா?’ என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (என்னுடைய நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4372
மேற்கண்ட இந்தச் சம்பவத்தில் ஸுமாமா இப்னு உஸால் என்ற எதிரியை நபியவர்களின் படையினர் கைது செய்து கொண்டு வருகிறார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கவில்லை. மாறாக, நபியவர்களின் நடத்தையைப் பார்த்து அவரே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்.
முஹம்மது நபி என்ற தூதரின் ஆளுமையினால் தான் அவர் இஸ்லாத்திற்கு வந்தாரே தவிர்த்து வாளின் வலிமையினால் அல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்’ என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னுஅப்தில்லாஹ்(ரலி)
நூல்: புகாரி 2910
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்கின்றாயா? (இஸ்லாத்தை ஏற்கிறாயா?)” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்ட போது அவர், “இல்லை. ஆனால் உங்களிடத்தில் போர் தொடுக்க மாட்டேன்: உங்களுடன் போர் தொடுக்கும் கூட்டத்துடன் நான் சேர மாட்டேன்” என்று பதிலளித்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு விட்டார்கள்.
நூல்: முஸ்னத் அஹ்மத் 14401
முஹம்மது நபியவர்கள் ஆட்சித் தலைவராக, மரணத் தண்டனை கொடுக்கும் அதிகாரத்தில் இருந்தும் தன்னைக் கொல்ல முயன்றவரை இஸ்லாத்தை ஏற்குமாறு நிர்ப்பந்திக்கவில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறாயா? என்று கேட்டு, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போதும் அதற்காக அவரைத் தண்டிக்கவில்லை.
இஸ்லாம் வாள் வலிமையில் பரவவில்லை. கொள்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் வளர்ந்திருக்கின்றது என்பதை இது தெளிவாகத் தெரிவிக்கின்றது. எனவே, இஸ்லாம் வாளால் பரவியது என்ற குற்றச்சாட்டு காழ்ப்புணர்ச்சியில் இஸ்லாத்தின் மீது தெரிவிக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உயிர் புனிதமானது
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

மனித உயிர் புனிதமானது; மதிக்கப்பட வேண்டியது; முக்கியத்துவமாகக் கருதப்பட வேண்டியது.
முஸ்லிம் – முஸ்லிமல்லாதவர், உயர்ந்தவர் – தாழ்ந்தவர், பணக்காரர் – ஏழை, ஆண்கள் – பெண்கள் என்று யாராக இருந்தாலும் அவரது உயிருக்கு இஸ்லாம் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றது.
ஆனால், இன்றைய நவீன நாகரிக காலத்தில் மனித உயிர்கள் துச்சமாகக் கருதப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றது. மதிக்கப்பட வேண்டிய விதத்தில் மனித உயிர்களை மதிக்காமல் இழிவுபடுத்தப்படுகின்றது. ஐந்து அறிவு பிராணிகளின் உயிர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மனித உயிர்களுக்கு கொடுக்கப்படாமல் கொன்று குவிக்கப்படுகின்றன.
சர்வ சாதாரணமாக ஒன்றுமறியா அப்பாவிகளின் இரத்தமும், சிறுவர்களின் இரத்தமும், முதியவர்களின் இரத்தமும், உயிரும் ஓட்டப்படுகின்றது. ஏன் கொல்லப்பட்டோம்? என்று உயிரை நீத்தவர்களுக்குத் தெரியாத அளவுக்கு மனித உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.
இந்த உலகில் வாழ்கின்ற ஒரு சில கயவர்கள் மனித உயிர்களின் மதிப்புத் தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றார்களே! ஏன்? நாளுக்கு நாள் மனிதர்கள் அதிகமாகக் கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன? ஆங்காங்கே குண்டு வைக்கப்பட்டு அவ்வப்போது நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் கொன்று குவிக்கப்படுகின்றனவே! ஏன்? விலை மதிப்பற்ற மனித உயிரை அற்பமாக நினைத்து வெட்டி சாய்க்கின்றார்களே! ஏன்? சில கயவர்களின் வெறித்தனத்தை தீர்த்துக் கொள்வதற்கு மனித உடலைத் துண்டு துண்டாகச் சிதைத்து நொறுக்குகின்றார்களே! ஏன்?
எந்த மதமும் சித்தாந்தமும் கொள்கையும் கோட்பாடும் இதைக் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம், ஒட்டுமொத்த உலக மாந்தர்களின் உள்ளங்களிலும் அழுத்தந் திருத்தமாக, ஆணித்தரமாக ஒரு கருத்தைப் பதிய வைக்கின்றது. அதுதான், மனித உயிர் புனிதமானது என்பதாகும்.
உலகில் நம்முடன் வாழ்கின்ற சக மனிதர்களின் உயிர்களைப் புனிதமாகக் கருத வேண்டும்; துச்சமாகக் கருதக் கூடாது. கண்ணியமாகக் கருத வேண்டும்; அலட்சியமாகக் கருதக் கூடாது. அவ்வாறு மனித உயிர்கள் கண்ணியமாகவும் புனிதமாகவும் கருதப்படுமானால் உலகில் நடைபெறுகின்ற ஏராளமான பிரச்சனைகளுக்கும், கொலைகளுக்கும் தீர்வு கிடைத்து, மனித உயிர்கள் கொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.
மனிதன் என்பவன் இறைவனால் கட்டி எழுப்பப்பட்ட அழகான கட்டிடத்தைப் போன்றவன். அவனது உடலில் ஓடிக் கொண்டிருக்கின்ற இரத்தம் அமானிதமாகும். அவனது உயிரோ புனிதமாக மதிக்கப்பட வேண்டியதாகும்.
இறைவனால் வடிவமைக்கப்பட்ட மனிதன் என்ற இந்த அழகான கட்டிடத்தை யாராவது அத்துமீறி உள்ளே நுழைந்து தகர்த்தெறிய நினைத்தால், அத்தகைய கொடியவன் கடுமையான குற்றத்தைச் செய்து விட்டான். அவன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவன் என்று இஸ்லாம் பாடம் நடத்துகின்றது.
உலகில் நடந்த முதல் கொலை
இறைவன் உலகத்தில் முதல் மனிதரான ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்து, அவர்கள் மூலமாகப் பல சந்ததிகளை பல்கிப் பெருகச் செய்தான். ஆரம்ப காலத்தில் ஆதம் (அலை) அவர்களுக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவர் இறைவனுக்கு பயந்து நடக்கக்கூடியவராக இருந்தார். மற்றொருவர் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்தார்.
இந்தத் தருணத்தில் இறைவனுக்குக் கட்டுப்படாத மகன், தன்னுடைய சகோதரனுடன் சண்டையில் ஈடுபட்டு, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்று வரம்பு மீறி, தனது சகோதரன் என்று கூடப் பாராமல் கொலை செய்து விட்டார். இதுதான் உலகில் நடைபெற்ற முதல் கொலை ஆகும்.
உலகில் நடைபெற்ற முதல் கொலை குறித்த வரலாற்றை திருக்குர்ஆன் விளக்குகின்றது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைச் செய்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்’’ என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்’’ என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
“என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால், உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்ட மாட்டேன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்’’ (எனவும் அவர் கூறினார்.)
(இதன் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நஷ்டமடைந்தவனாக ஆகி விட்டான்.
தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. “அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே’’ எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.
அல்குர்ஆன் 5:27-31
தன்னுடைய சகோதரனை வரம்பு மீறிக் கொலை செய்து விட்டு, கொலை செய்த உடலை எவ்வாறு மறைப்பது? என்பது கூடத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றான். இறைவன் ஒரு காகத்தை அனுப்பிப் பாடம் எடுத்த பிறகே, இது கூட நமக்குத் தெரியவில்லையே? என்று நினைத்து, தன்னைத் தானே பழித்துக் கொண்டு கவலைப்படுகின்றான்.
உலகில் இவன் செய்த முதல் கொலைக்கு இறைவன் கொடுக்கின்ற தண்டனை, ஒட்டுமொத்த உலக மாந்தர்களுக்கும் மரண அடியாகவும், கொலை என்ற மாபாதகச் செயலை செய்வதற்கு யாருக்கும் துணிவு வரக் கூடாது என்பதையும் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
உலகில் நடைபெற்ற முதல் கொலையைக் கண்டித்து, இதோ! இறைவனின் பகிரங்கரமான எச்சரிக்கை:
“கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்”
அல்குர்ஆன் 5:32
இந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள்! எந்த மதமும், சித்தாந்தமும், கொள்கை – கோட்பாடுகளும் சொல்லவே முடியாத கடுமையான எச்சரிக்கைப் பதிவை மனித உயிர் விஷயத்தில் இறைவன் பதிய வைக்கின்றான்.
அநியாயமாக ஒரு மனிதரைக் கொலை செய்து விட்டால் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எல்லா மனிதர்களையும் கொன்று குவித்ததற்குச் சமம் என்று இறைவன் எச்சரிக்கின்றான். அதாவது கிட்டத்தட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற 800 கோடிக்கும் நிகரான மக்களைக் கொன்றதற்கு சமம்.
ஒரு வாதத்துக்குச் சொன்னால் கூட, ஒருவன் திட்டம் தீட்டி, முடிவெடுத்து, உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் கொலை செய்ய முடியுமா? வாழ்கின்ற அறுபது வருட, எழுபது வருட, அதிகப்பட்சமாக நூறு வருட காலத்தில் உலகத்தில் வாழ்கின்ற எல்லா மனிதர்களையும் கொலை செய்யப் போகின்றேன் என்று முடிவெடுத்து புறப்பட்டாலும் கூட, அதை அவனால் கண்டிப்பாகச் செய்து முடிக்க முடியாது.
ஆனால் உனக்கு உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் கொன்று குவித்தற்குண்டான கூலியும் சாபக்கேடும் வேண்டுமா? அநியாயமாக ஒரு மனிதனைக் கொலை செய்து விட்டாலே 800 கோடிக்கும் நிகரானவர்களைக் கொன்று குவித்தவனாகி விடுவாய் என்ற எச்சரிக்கையைப் பதிய வைத்து மனித உயிரின் புனிதத்தை உச்சத்தில் தூக்கி வைக்கின்றது இஸ்லாம்.
ஒருவன் ஒரு கொலை செய்தால் இஸ்லாத்தின் பார்வையில் உலக மக்கள் அனைவரையும் கொலை செய்ததற்குச் சமம். உலக மக்களில் கொலைகாரனின் தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினர்கள் என அனைவருமே அடங்குவர். தனது குடும்ப உறுப்பினர்களை ஒருவன் கொலை செய்யத் துணிவானா? ஒரு உயிரை அநியாயமாகக் கொலை செய்தால் இப்படிப்பட்ட பயங்கரமான செயலைச் செய்தவனாகி விடுவான்.
இந்த எச்சரிக்கைக்கு அஞ்சாமல் ஒருவன் கொலை செய்தால் அவன் முஸ்லிமாக இருந்தாலும் சரியே! கடுமையாகத் தண்டிக்கப்படுவான்.
மனித உயிர் புனிதமானது
மனித உயிரின் மகத்துவம் குறித்தும் புனிதம் குறித்தும் இஸ்லாமிய மார்க்கம் நூற்றுக்கணக்கான செய்திகளின் மூலம் அற்புதமான முறையில் பாடம் நடத்துகின்றது. மனித உயிரை அநியாயமாக ஒருவன் கொன்று விட்டால், விழுந்தால் வெளிவரவே முடியாத நாசப் படுகுழிக்குள் அவனைத் தள்ளி விடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தமது மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்ட வண்ணமிருப்பார்.
நூல்: புகாரி 6862
இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்று நடக்கின்ற ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை முறையாகப் பேணி நடக்க வேண்டும். மேலும், இஸ்லாத்தை வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்று நடப்பவர் இஸ்லாத்தின் சுவையை முழுமையாகச் சுவைக்க வேண்டும் என்றே விரும்புவார்.
அநியாயமாக ஒரு மனிதரைக் கொலை செய்தவன் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் அவன் தனது மார்க்கத்தின் விசாலத் தன்மையிலிருந்து தூரமாக்கப்பட்டு விடுவான். இறைவனின் அருளை இழந்து நெருக்கடியான வாழக்கைக்குத் தள்ளப்படுவான் என்று இஸ்லாம் கண்டிக்கின்றது.
ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் சுவையை முழுமையாகச் சுவைத்து இஸ்லாத்தின் தாராள குணத்தைக் காண வேண்டுமானால், எந்த உயிரையும் அநியாயமாகக் கொலை செய்யக் கூடாது என்று பாடம் நடத்துகின்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
இப்படிப்பட்ட அற்புதமான உபதேசத்தைப் புறக்கணித்து விட்டு ஒருவன் கொலை செய்தால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!
கஃபாவின் புனிதமும் மனித உயிரின் புனிதமும்
மனித உயிர் புனிதமாகக் கருதப்பட வேண்டும் என்று இஸ்லாம் ஏராளமான செய்திகளின் மூலம் எடுத்துரைக்கின்றது. எந்தளவிற்கென்றால், முஸ்லிம்கள் புனிதமாகக் கருதுகின்ற கஃபா நகரத்தை ஒப்பிட்டுக் காட்டி இந்த நகரத்தின் புனிதத்தைப் போன்று மனித உயிர்களைப் புனிதமாக மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் ஆழமாகப் பதிய வைக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். உடனே அவர்கள் “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’’ என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். உடனே அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?’’ என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’’ என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “(இது) புனிதமிக்க மாதமாகும்!’’ எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம், மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!’’ எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1742
முஸ்லிம்கள் இலட்சக்கணக்கான பொருளாதாரத்தை இறைவனுக்காகச் செலவு செய்து, உலகின் பல பகுதிகளிலிருந்தும் புனிதம் நிறைந்த மக்காவில் அமைந்திருக்கின்ற இறைவனால் கட்டப்பட்ட முதல் ஆலயத்தை சந்தித்தே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தை சகித்துக் கொண்டு பயணம் செய்கின்றார்கள்.
மேலும், இந்தப் புனிதம் நிறைந்த மக்கா நகரத்திற்கும் புனிதம் நிறைந்த ஆலயத்திற்கும் ஏராளமான சிறப்புகளையும் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் இறைவன் வழங்குகின்றான்.
உலகில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மக்காவையும், மக்காவில் அமைந்திருக்கின்ற கஃபா எனும் ஆலயத்தையும் உலகில் தாங்கள் நேசிக்கின்ற அனைத்துப் பொருட்களை விடவும் உச்சத்தில் வைத்துப் புனிதமாகக் கருதுகின்றார்கள்.
முஸ்லிம்கள் சாதாரணமாகக் கருதுகின்ற ஒன்றை ஒப்பிட்டுக் கூறினால் உள்ளங்களில் ஆழப் பதிய வாய்ப்பில்லை என்று சொல்லி, உலக முஸ்லிம்கள் அனைவரும் புனிதமாகக் கருதுகின்ற கஃபாவுக்கு நிகரானது மனித உயிர் என்பதை அழுத்தந் திருத்தமாக இஸ்லாம் பதிய வைக்கின்றது.
மனித உயிரின் புனிதமும் மறுமை விசாரணையும்
முஸ்லிம்கள் இந்த உலகத்தை மட்டும் இலக்காகக் கொண்டு வாழாமல் இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கின்றது என்றும், மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம் என்றும் ஆழமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் என்ற பயங்கரமான நாளில் இந்த உலகத்தில் மனிதர்கள் செய்த அத்தனை செயல்பாடுகளுக்கும் இறைவன் கூலி வழங்குவான். மனிதன் உலகில் நன்மை செய்திருந்தால் நல்லதாக அமையும். தீமைகள் செய்திருந்தால் அவனுக்குக் கேடாக அமையும்.
அந்த வரிசையில் மனித உரிமை தொடர்பான விசாரணையில் முதல் விசாரணை, ஒரு மனிதன் மற்றொருவனைக் கொலை செய்து உயிர்ப்பலி வாங்கியது பற்றி தான்.
இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
நூல்: புகாரி 6864
மறுமை நாளில் ஏராளமான செயல்பாடுகள் குறித்து இறைவன் மனிதர்களை விசாரிக்க உள்ளான். ஆனால் அவற்றை எல்லாம் பின்னால் வரிசையாக விசாரித்துக் கொள்ளலாம் என்று ஓரங்கட்டி வைத்து விட்டு, ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்தது தொடர்பாக இறைவன் விசாரணைப் பட்டியலை தொடங்குகின்றான் என்றால், இந்தக் கொலைக் குற்றத்தை இஸ்லாம் எவ்வளவு பெரிய கொடூர குற்றமாகப் பார்க்கின்றது என்பது விளங்குகின்றதா?
மேலும் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றார்கள்;
(இந்த உலகத்தில்) கொல்லப்பட்டவர் மறுமை நாளில் தம்மைக் கொலை செய்தவனை அவனது முடியைப் பிடித்து இரத்தம் வடியும் நிலையில் இழுத்து வருவார். அவனை அல்லாஹ்வின் அர்ஷின் கீழே போட்டு “என் இறைவா! இவன் தான் என்னைக் கொலை செய்தவன்” என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதீ 2955
இந்த உலகத்தில் சர்வ சாதாரணமாக, கொலை செய்து விட்டு மறைத்து விடலாம். சாட்சியைக் கலைத்து விடலாம். சாட்சியையும் சேர்த்து ஓட ஓட விரட்டிக் கொலை கூட செய்து விடலாம். ஆனால் நிச்சயமாக மறுமை நாளில் கொலை செய்யப்பட்டவனுக்கு நியாயம் கட்டாயம் வழங்கப்படும்.
எந்தளவிற்கென்றால், கொலை செய்யப் பட்டவன் தன்னை யார் கொன்றார்களோ அந்த அயோக்கியனின் முடியைப் பிடித்து இழுத்து கொண்டு வந்து, இறைவா! இவன் தான் என்னை கொன்றவன் என்று சாட்சி கூறுவான்.
இப்படிப்பட்ட கடுமையான எச்சரிக்கைக்கு அஞ்சி நடக்கின்ற ஒரு முஸ்லிம் கொலை என்ற மாபாதகச் செயலில் ஈடுபடுவானா? அவ்வாறு ஈடுபட்டால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தியுங்கள்!
மனித உயிரும் இறைவனின் கோபமும்
மனித உயிரின் புனிதத்தைத் தெரிந்து கொண்டே, வேண்டுமென்றே யார் கொலை செய்கின்றாரோ அல்லது கொலை செய்யத் தூண்டுகின்றாரோ அத்தகைய கொடூரச் செயலை செய்தவர்கள் படைத்த இறைவனின் கடும் கோபத்திற்கு உரியவர்கள் என்று இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன்.
நூல்: புகாரி 6882
ஒரு மனிதனின் புனிதமான இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக, கொலை செய்யத் தூண்டினால் அவன் இறைவனின் பார்வையில் பாவியாகி விடுவான். மேலும், இறைவன் இதுபோன்ற கொடூரச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது தனது கோபப் பார்வையைப் பொழிகின்றான்.
இத்தகைய பயங்கரமான எச்சரிக்கையைப் பதிய வைக்கின்ற இஸ்லாமிய மார்க்கம் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தச் சொல்லுமா? நடுநிலையாளர்களே! சிந்தித்துப் பாருங்கள்!
இறைவனின் கோபப் பார்வையைப் பெற்றுத் தருகின்ற, அழித்தொழிக்கின்ற காரியத்தை ஒரு முஸ்லிம் ஒருபோதும் செய்யவே மாட்டார். அப்படிச் செய்து விட்டால் அவன் முஸ்லிமாக இருக்க மாட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.
நூல்: புகாரி 6871
பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாக, கொலை செய்வது இருக்கின்றது. இறைவனுக்கு இணை வைப்பது எவ்வாறு கடுமையான, நிரந்தர தண்டனையைப் பெற்றுத் தருகின்ற காரியமோ, அதுபோன்று கொலைக் குற்றமும் நிரந்தர தண்டனையைப் பெற்றுத் தரும் காரியமாகும்.
இறைவன் தனது திருக்குர்ஆனில் கூறும்போது கொலை செய்தல் என்பது இறைவனின் சாபத்தையும், கோபத்தையும் பெற்றுத் தருகின்ற காரியம் என்று கூறி கடுமையாக எச்சரிக்கை செய்கின்றான்.
எவரேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் தயார்படுத்தியுள்ளான்.
அல்குர்ஆன் 4:93
இறைவனின் ஒட்டுமொத்த வெறுப்பையும், ஆத்திரத்தையும், சாபத்தையும் பெற்றுத் தரும் காரியமாக இந்தக் கொலைக் குற்றம் அமைந்திருக்கின்றது என்பதை மேற்கண்ட செய்தி தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாக இருக்கின்ற இந்தக் கொலையை ஒரு முஸ்லிம் செய்வானா? இறைவனின் சாபத்தைப் பெற்றுத் தருகின்ற காரியத்தை ஒரு முஸ்லிம் செய்வானா? அவ்வாறு செய்தால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!!
மேலும் இறைவன் தன்னுடைய திருக்குர்ஆனில் உலக மாந்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றான். யார் தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொலை செய்கின்றார்களோ அவனுக்குப் பன்மடங்கு வேதனை கிடைக்கும் என்றும், இழிவுபடுத்தப்பட்டவனாய் தூக்கி எறியப்படுவான் என்றும் இறைவன் கோபக்கணைகளால் கொந்தளிக்கின்றான்.
அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.
கியாமத் நாளில் வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும். அதில் இழிவு படுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்.
அல்குர்ஆன் 25:68,69
மறுமை நாளில் ஒரு மடங்கு வேதனையே கடுமையாகவும், சாவு வந்து விடாதா? என்று கதறும் அளவுக்குக் கொடூரமாகவும் இருக்கும்போது, இந்த உலகத்தில் கொலை செய்தவனுக்கு மறுமையில் இரண்டு மடங்கு வேதனையை இறைவன் வழங்குவான் என்றால் மனித உயிரின் உன்னதத்தை இஸ்லாம் எந்தளவிற்கு மகத்துவப்படுத்துகின்றது என்பது புரிகின்றதா?
பன்மடங்கு வேதனையையும் இழிவையும் ஒரு முஸ்லிம் விரும்புவானா? அவ்வாறு விரும்பினால் அவன் முஸ்லிமாக இருப்பானா? சிந்தித்துப் பாருங்கள்!
அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்யக் கூடாது.
மனித உயிர் புனிதமானது.
போர்க்களத்தில் கூட பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக் கூடாது.
தற்கொலைப் படை தாக்குதலை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஒரு உயிரைக் கொலை செய்தால் உலக மாந்தர்கள் அனைவரையும் கொலை செய்ததற்குச் சமம்.
கொலை செய்தால் இறைவனின் சாபம் இறங்கும்.
மறுமையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கப்படுவதில் முதன்மையானது கொலைக் குற்றம் பற்றியது தான்.
கொல்லப்பட்டவனின் வாரிசுகள் பழி வாங்குவதற்கு உரிமை இருக்கின்றது.
இஸ்லாமிய அரசாக இருந்தால் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் கொலைகாரன் வேரறுக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் அநியாயமாக ஓர் உயிரைக் கொலை செய்வதையும், தற்கொலைத் தாக்குதல்கள் நடத்துவதையும் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் கடுமையான வேதனையிருக்கிறது என்றும் எச்சரிப்பதை நம்மால் அறிய முடிகிறது.
எனவே ஒரு உண்மையான முஸ்லிம் இத்தகைய காரியங்களை நிச்சயமாகச் செய்யவே மாட்டான். அப்படி ஒரு முஸ்லிம், இஸ்லாமிய விதிகளை மீறி அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பானேயானால் அவனுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் திட்டவட்டமாகவும் பகிரங்கமாகவும் அறிவிப்புச் செய்கிறோம்.

இஸ்லாம் கூறும் ஜீவகாருண்யம்
அபு அதீபா

இஸ்லாம் அனைத்து உயிர்களுக்கும் அன்பு காட்டும் மார்க்கமாகும். இன்றைக்கு உலகெங்கிலும் இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்றும், தீவிரவாதத்தைத் தூண்டக்கூடிய மார்க்கம் என்றும் பொய்ப்பிரச்சாரம் வீரியமாக செய்யப் பட்டாலும், உண்மை இஸ்லாத்தைப் படிப்பவர்களை அது தன் பக்கம் ஈர்த்து வருகின்றது.
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உணவாக உட்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி கொடுத்துள்ள காரணத்தினால் அது “ஜீவ காருண்யத்திற்கு” எதிரான மார்க்கம் என்றும், இதுவே இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பதற்கு ஒரு சான்றாகவும் இஸ்லாத்திற்கு எதிரானவர்களால் முன்வைக்கப்படுகிறது.
இஸ்லாம் உயிரினங்கள் மீது அன்பு காட்டச் சொல்கின்றது. அதே சமயம், மனித இனத்தின் தேவை கருதி, மனித குல நன்மைக்காக இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட உயிரினங்களை அறுத்து உண்பதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இது பற்றி இந்த ஆக்கத்தின் பிற்பகுதியில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
இஸ்லாம் இறைவனை அளவிலா அருளாளனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் அறிமுகப்படுத்துகிறது.
இஸ்லாம் அன்பையும் கருணையையும் மிக மிக வலியுறுத்துகிறது.
“கருணையாளர்களுக்கெல்லாம் கருணை யாளனான அல்லாஹ், கருணையாளர்களுக்கே கருணை காட்டுகிறான். பூமியில் உள்ளவர்களுக்குக் கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்களுக்குக் கருணை காட்டுவான்” என்று இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதி (1847)
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் (இயல்பாகவே) இரக்க உணர்வை வைத்துள்ளான்; அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்.
அறிவிப்பவர்: உஸாமா (ரலி)
நூல்: புகாரி (7377)
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5997)
இஸ்லாம் அன்பைப் பொதுவுடைமையாக்கிய மார்க்கமாகும். மனிதர்கள், பறவைகள், நீரில் வாழும் உயிர்கள், தரையில் வாழும் உயிர்கள் என்று அனைத்தின் மீதும் அல்லாஹ் கருணை காட்டுகிறான்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்த போது அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். ஆகவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவ நம்பிக்கை கொள்ள மாட்டான். (இதைப் போன்றே,) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6469)
வாயில்லா ஜீவன்களுக்கு அன்பு காட்டுவதை இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகிறது. வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறது. மனித உயிர்களை மட்டுமல்ல! வாயில்லா ஜீவன்களை வதைத்தாலும் மறுமையில் நரகமே பரிசு என இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.
ஜீவ காருண்யத்திற்கு சொர்க்கமே பரிசு
மனித குலத்திற்குக் கேடு விளைவிக்காத அனைத்துப் பிராணிகளுக்கும் கருணை காட்டினால் அதற்கு இறைவன் சுவர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான் என்று கூறி இஸ்லாம் ஜீவ காருண்யத்தை வளர்க்கிறது.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதும், இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்!) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2363)
பெரும்பாவம் செய்யும் மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்குப் பிராயசித்தம் தேடி தங்களுடைய செல்வங்களைத் தவறான வழிகளில் செலவு செய்கின்றனர். போலி ஆன்மீகவாதிகளிடம் வழங்கி பொருளாதாரத்தை இழக்கின்றனர். ஆனால் இஸ்லாம் பாவத்திற்குப் பரிகாரமாக ஜீவ காருண்யத்தைப் போதித்து உயிரினங்களுக்கு நன்மை செய்கிறது.
பெரும்பாவம் செய்யும் மனிதர்களும் உயிர்ப் பிராணிகளுக்கு உதவி செய்தால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் ஜீவ காருண்யத்தை வளர்க்கிறது.
இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (3467)
உயிரினங்களை கொடுமைப்படுத்தக் கூடாது
இஸ்லாம் உயிரினங்களை வதைப்பதை கடுமையாகக் கண்டிக்கிறது. எந்த ஒரு ஜீவராசியையும் தேவையின்றி வதைப்பதை இஸ்லாம் தடுக்கிறது. உயிரினங்களுக்குக் கேடு விளைவித்தால் மறுமையில் நரகமே கூலி என்று எச்சரிக்கை செய்கிறது.
இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்குத் தண்ணீரும் கொடுக்கவில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக அவள் அதை (அவிழ்த்து) விடவுமில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (3482)
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு ஒட்டகத்தைக் கடந்து சென்றார்கள். (அதற்கு உணவளிக்கப்படாமல்) அதன் வயிறு முதுகுடன் ஒட்டிப் போயிருந்தது. அப்போது “இந்த வாயில்லா ஜீவன்களாகிய கால்நடைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அது நல்ல நிலையில் இருக்கும் போது அதில் பயணம் செய்யுங்கள். அது நல்ல (கொழுத்த) நிலையில் இருக்கும் போதே (அறுத்து) உண்ணுங்கள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: அபூதாவூத் (2548)
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் அன்சாரிகளுடைய தோட்டங்களில் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது ஒரு ஒட்டகம் சப்தமிட்டவாறு அவர்களிடம் வந்தது. அதனுடைய இரு கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. நபி (ஸல்) அதைக் கண்டதும் பரிதாபப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அதன் முன்பகுதியிலும், இரு திமிழ்களிலும் தடவிக் கொடுத்தார்கள். எனவே அது அமைதியடைந்தது. “இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்?” என்று கேட்டார்கள். ஒரு அன்சாரி இளைஞர் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! இது என்னுடையதுதான்” என்று கூறினார். “அல்லாஹ் உங்களுக்குச் உடைமையாக்கித் தந்துள்ள இந்தக் கால்நடைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளமாட்டீர்களா? நீ அதற்கு (உணவளிக்காமல்) பசிக்கொடுமைக்கு உள்ளாக்குவதாகவும் (ஓய்வின்றி) தொடர்ச்சியாக வேலை வாங்குவதாகவும் அது என்னிடம் முறையிட்டது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுஜஃபர்(ரலி)
நூல்: அஹ்மத் (1654)
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது ஒரு மனிதர் ஒரு சிறிய பறவையின் (கூட்டிலிருந்து) முட்டைகளை எடுத்தார். இதனால் அது (திடுக்கிட்டு) தனது இரண்டு சிறகுகளையும் விரித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் தலையைச் சுற்றி வந்தது. “அதனுடைய முட்டைகளின் மூலம் அதை திடுக்கிடச் செய்தவர் யார்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அந்த மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அதன் முட்டைகளை எடுத்தேன்.” என்று கூறினார். “அதைத் திருப்பி வைப்பாயாக! அதற்குக் கருணை காட்டுவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: அல் அதபுல் முஃப்ரத் (382)
முட்டையை உண்பதற்கு இஸ்லாம் அனுமதித்திருந்தாலும், அந்தப் பறவை திடுக்கிடும் வகையில் முட்டைகளை எடுத்ததை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள். இதன்மூலம் அந்தப் பறவையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தருகின்றார்கள்.
இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் மேற்கொண்டால், ஒட்டகங்களின் உடலில் எலும்பு மஜ்ஜை (பலம்) இருக்கவே விரைவாகச் சென்றுவிடுங்கள். (பயணத்தில்) நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், போக்குவரத்துச் சாலைகளைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அவை கால்நடைகளின் பாதைகளும் இரவில் விஷஜந்துகள் உலவும் இடமும் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (3891)
ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் என் பாட்டனார் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களுடன் (பஸ்ராவின் துணை ஆளுநரான) ஹகம் பின் அய்யூபின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு சிலர், கோழியொன்றைக் கட்டி வைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்தனர். இதைக் கண்ட அனஸ் (ரலி) அவர்கள், “விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’’ என்று கூறினார்கள்
நூல்: முஸ்லிம் (3956)
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்காதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3956)
மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு நிகராக ஜீவ காருண்யத்தைப் போதிக்கும் மார்க்கம் உலகில் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
புலால் உண்ணாமை ஜீவ காருண்யமா?
மாமிச உணவை உண்ணாமல் இருப்பதை ஜீவ காருண்யம் என்று சிலர் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறான சிந்தனையாகும்.
மாமிச உணவு, மனித குலத்தின் நல்வாழ்விற்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். எண்ணற்ற நோய்களுக்கு மருந்துகளும், மனித குலத்திற்கு அன்றாடம் தேவையான எண்ணற்ற பொருட்களும் கால்நடைகளின் உடற்பாகங்களிலிருந்து தான் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன.
மனித உடலுக்கு அவசியம் தேவையான பல ஊட்டச் சத்துக்கள் அசைவ உணவில்தான் உள்ளடங்கியுள்ளன.
உலகில் கணிசமான அளவில் மாமிசம் சாப்பிடக் கூடிய மக்கள் இருக்கின்ற காரணத்தினால் தான் சைவ உணவைச் சாப்பிடுபவர்களுக்குக் குறைந்த விலையில் காய்கறிகளும் தானியங்களும் கிடைக்கிறது.
அனைவரும் சைவ உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினால் சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட அவற்றை விலை கொடுத்து வாங்க இயலாத நிலைமை ஏற்பட்டுவிடும்.
இன்றைய உலகின் இயல்பு வாழ்க்கையில் கூட ஏழைக் குடும்பங்கள் அதிக விலை கொடுத்து காய்கறி, தானியங்களை வாங்க இயலவில்லை. அத்தகைய ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை குறைந்த விலையில் கிடைக்கும் மீன், மாட்டிறைச்சி போன்ற மாமிச உணவுகளிலிருந்து தான் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
மற்றொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் புலால் உண்ணாமை, உயிரினங்களைக் கொல்லாமை என்ற சிந்தாந்தம் வறட்டுச் சிந்தாந்தம் என்பதையும், நடைமுறை சாத்தியமற்றது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆடு, மாடு, ஒட்டகம், கோழி இன்னும் இதுபோன்ற பல பிராணிகளை மனிதர்கள் உண்பதால் தான் அவற்றின் மூலம் சம்பாதிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் அவற்றைப் பெருக்கம் செய்கின்றனர். கோடிக்கணக்கான மக்களின் வருவாய் இதன் மூலம் ஈட்டப்படுகிறது.
இவற்றை உண்பது கூடாது என வாதிட்டால் இவற்றைப் பெருக்கமடையச் செய்வது அறவே தடைப்பட்டுவிடும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு கேள்விக் குறியாகி விடும்.
ஒரு பசுமாடு பால் தருகின்ற காலம் வரை அதன் மூலம் மனிதர்களுக்குக் குடிபானமும், வருவாயும் கிடைக்கும். அது போன்று ஒரு காளை மாடு சுமை சுமக்கின்ற வரை அதன் மூலம் பல பலன்கள் மனிதர்களுக்குக் கிடைக்கும்.
பால் தருகின்ற பருவத்தை பசு தாண்டி விட்டால், காளைமாடு உழைக்க முடியாத பருவத்தை அடைந்து விட்டால் அவற்றின் மூலம் எந்த விதமான வருவாயும் மனிதர்களுக்குக் கிடைக்காது. அவை மரணிக்கின்ற வரை அவற்றைக் கட்டி வைத்து தீனி போடுதல் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற காரியமாகும்.
இந்துத்துவவாதிகள் மாடுகளைப் பாதுகாக்க கோசாலைகளை அமைத்து அதைப் பாதுகாப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் எண்ணற்ற கோசாலைகளில் மாடுகள் உண்ண உணவின்றி வயிறுகள் ஒட்டி பசிக் கொடுமையினால் பலநாட்கள் சீரழிந்து இறுதியில் துடிதுடித்து சாகின்றன. செத்த பிராணிகள் ஒட்டுமொத்தமாக பூமியில் புதைக்கப்படுகின்ற செய்திகளை அன்றாடம் தொலைக்காட்சி செய்திகள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் நாம் அறிந்து வருகிறோம்.
ஜீவ காருண்யம் என்ற பெயரில் வாயில்லா ஜீவன்களை வதைத்து, வதைத்துக் கொல்கின்ற காரியத்தைத் தான் இவர்கள் செய்கின்றனர்.
மாடுகள் உழைக்க முடியாத பருவத்தை அடைந்துவிட்டால் அவற்றை உணவிற்காக விற்பதன் மூலம் அந்த மாடுகளை வளர்த்தவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. மக்களுக்கு உணவாகவும் அவை பயன்தருகிறது. கோசாலைகளில் அடைத்து வைத்து உணவளிக்காமல் கொடுமைப்படுத்தப் படுவதிலிருந்தும் தப்பித்துவிடுகின்றன.
இஸ்லாம் மனிதகுல நன்மைக்காக உயிரினங்களை அறுத்துச் சாப்பிடுவதை அனுமதிக்கும் அதே நேரத்தில் அதில் கூட உயிரினங்களுக்குச் சிரமம் இல்லாத வகையில் அறுத்துச் சாப்பிட வேண்டும் என்றே வழிகாட்டுகிறது. அறுத்து உண்ணும் போது கூட ஜீவ காருண்யத்தை இஸ்லாம் கடைப்பிடிக்கச் சொல்கிறது.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே, கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3955)
இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் தனது காலை ஒரு ஆட்டின் கழுத்தில் வைத்து அழுத்திக் கொண்டே (அதை அறுப்பதற்காக) கத்தியை தீட்டி கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தார். அது தனது பார்வையால் அவரை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. “இதை (கிடத்துவற்கு) முன்பாகவே செய்திருக்கக் கூடாதா? அதை இரண்டு தடவை கொல்வதற்கு நீ விரும்புகிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள், அந்த மனிதரைக் கண்டித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத் (3590)
இன்றைக்கு உலகில் பல்வேறு மதங்களில் உயிரினங்களை வதைத்தும், கொடுமைப்படுத்தியும், யாகம் என்ற பெயரில் தீயில் எரித்தும் கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் அறுக்கும் போது கூட அப்பிராணிகள் வலியை உணராத வண்ணம் நடந்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறது.
வாயில்லா ஜீவன்களுக்குக் கூட அன்பு காட்டும் இஸ்லாம் எப்படி தீவிரவாதத்தைப் போதிக்கும்? இஸ்லாத்தை ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இஸ்லாம் அன்பு மார்க்கம் என்பதைத் தெளிவாய் அறிந்து கொள்வார்கள்.
தீங்கு தருபவற்றைக் கொல்லுதல்
சிலர் ஜீவ காருண்யம் என்ற பெயரில் மனித குலத்திற்குத் தீங்கு தரும் ஜீவராசிகளையும் கொல்வது கூடாது என வாதிக்கின்றனர். இது அடி முட்டாள்தனமான வாதமாகும்.
மனித குலத்திற்குத் தீங்கு தரும் ஜீவராசிகளைக் கொல்லாமல் விட்டால் ஜீவகாருண்யம் பேசுவதற்கு மனிதர்கள் இருக்கமாட்டார்கள்.
தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் மனிதனுக்குத் தீங்கு தரும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் செத்துவிடுகின்றன. இதனால் மனிதன் பல்வேறு நோய்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. உணவுகளை சமைத்தும் வேக வைத்தும் சாப்பிடுவதால் தான் பல்வேறு கேடு விளைவிக்கும் உயிரிகள் செத்து மனித உடலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் உள்ளது.
எனவே மனித குலத்திற்குத் தீங்கு ஏற்படுத்தும் உயிர்களைக் கொல்லுதல் ஜீவ காருண்யத்திற்கு எதிரானதல்ல. இதனால்தான் இஸ்லாம் மனிதனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் சில ஜீவராசிகளைக் கொல்லுமாறு உத்தரவிடுகிறது.
“ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும். அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை. அவை, காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (1826, 1827, 1828, 1829)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீங்கிழைக்கக் கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, வயிற்றுப் பகுதியிலும் மேற்பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 2254
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (4507)
எனவே ஜீவ காருண்யம் என்பதன் பொருளை சரியாக விளங்கிப் பின்பற்றினால் அது மனித குலத்திற்கு நன்மையாக அமையும்.

மனிதனை பண்படுத்தும் போர் நெறிகள்
எம்.முஹம்மது சலீம் M.I.Sc.

ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் ஒருவனே! அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவன் கட்டளைப்படியே வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கொள்கையை நோக்கி வருமாறு மனிதகுலத்தைத் திருக்குர்ஆன் அழைக்கிறது.
மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.
அல்குர்ஆன் 2:21
விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர்வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 16:125
இந்த வசனங்கள் கூறுவது போன்று, சுற்றியுள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது இறைத் தூதர்களுக்கு மட்டுமல்ல, இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமை. அதேசமயம், ஓரிறைக் கொள்கையை விளக்கிச் சொல்ல வேண்டுமே தவிர ஒருபோதும் அதை அடுத்தவர் மீது திணிப்பது கூடாது.
இம்மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. ஷைத்தான்களை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:256
(நபியே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்ப்பந்திப்பீரா?
அல்குர்ஆன் 10:99
இஸ்லாத்தை ஏற்று, துய முறையில் வாழ்பவருக்கு சொர்க்கம் கிடைக்கும். மாறாக, இதைப் புறக்கணித்து எப்படியும் வாழலாமென கண்மூடித்தனமாக வாழ்வோருக்கு நரகில் தண்டனை கிடைக்கும் என்று குர்ஆன் எச்சரிக்கிறதே தவிர, இந்தக் கொள்கையைத் திணிக்கும் வேலையை எந்த இடத்திலும் செய்யவில்லை. அதற்கான அனுமதியை எவருக்கும் அளிக்கவில்லை.
“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.
அல்குர்ஆன் 18:29
(நபியே!) அறிவுரை கூறுவீராக! நிச்சயமாக நீர் அறிவுரை கூறுபவரே! அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்ல! புறக்கணித்து (ஓரிறையை) மறுப்பவன் தவிர! அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
அல்குர்ஆன் 88:21
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அதை மறுப்பதும் அவரவர் உரிமை. அதற்காக அடுத்தவரைக் கட்டாயப்படுத்தத் துளியளவும் அனுமதி இல்லை.
வேறு கொள்கையில் இருக்கிறார்கள் என்பதற்காக எவரையும் துன்புறுத்தவோ நிர்ப்பந்திக்கவோ கூடாது; அவர்களுக்கு அநீதி இழைத்துவிடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. எந்தளவுக்கு என்றால் பகைவர்களின் விஷயத்திலும் கூட நீதியாக நடக்குமாறு அல்லாஹ் ஆணையிடுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 5:8
பிறமத மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்; இம்மார்க்கத்தில் இருக்க வேண்டியதன் அவசியத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்; அவர்களிடம் நீதமாக இருக்க வேண்டும்; உதவி கேட்டால் செய்து கொடுக்க வேண்டும். ஆனாலும் அவர்களை நிர்ப்பந்திக்காமல் விரும்பிய வழியைத் தேர்வு செய்து கொள்ள விட்டு விட வேண்டும்.
இவ்வாறெல்லாம் இஸ்லாம் போதிப்பதால் தான், முஹம்மது நபி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பிறமத மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாற்றுக் கொள்கை கொண்டவர்களுக்கு முழுமையான மதச் சுதந்திரம் கிடைத்தது.
ஆன்மீகக் கருத்துக்களை மட்டுமல்ல! தமக்குப் பிடித்த எந்த விஷயத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லலாமே ஒழிய அதை ஏற்றுக் கொள்ளும்படி கடுகளவும் நிர்பந்தம் செய்யக் கூடாது. இப்படி மனிதனைப் பண்படுத்தும் இஸ்லாம், பிற மத மக்களை அழித்தொழிக்க வழிகாட்டுமா? யோசித்துப் பாருங்கள்.
பிறகு ஏன் இஸ்லாம் போர் புரியுமாறு அனுமதி அளித்துள்ளது என்ற கேள்வி எழலாம்.காய்தல் உவத்தலின்றி நடுநிலையாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்த விஷயத்திலும் இஸ்லாம் தனித்து விளங்குவதைக் காணலாம்.
இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி. தனிமனிதனும் சமுதாயமும் சந்திக்கின்ற எல்லா வகையான பிரச்சனைக்கும் தகுந்த தீர்வைத் தரும் சித்தாந்தம்.
இந்த அடிப்படையில் எவரேனும் சக மனிதர்களால் துன்பத்திற்கும் தொல்லைக்கும் ஆளாகும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதலை இஸ்லாம் வழங்கியுள்ளது.
தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், மனிதர்களை ஆளும் அரசு கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் என்று இரு வகையான போதனைகள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன.
குறிப்பாக, குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் உண்மையாக சேவை செய்வதாகவும் வாக்களித்து, ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற ஓர் அரசாங்கம், தனது நாட்டு மக்களை, அவர்களது உயிர்களை, அவர்களது சொத்துக்களை அந்நிய அரசுகள் அபகரிக்கவும் அழிக்கவும் துடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக விளக்கியுள்ளது.
போர் தொடர்பாகக் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரு அரசுக்குச் சொல்லப்பட்ட அறிவுரைகள் தான். அவற்றைத் தனிமனிதனோ, குழுக்களோ, கூட்டமைப்புகளோ செயல்படுத்த அனுமதி இல்லை.
எந்த நேரத்திலும் அந்நிய அரசுகள் அத்துமீறலாம்; குடிமக்களுக்கு ஆபத்து தரலாம் எனும் பட்சத்தில் தற்காத்துக் கொள்வதற்காக படைகளைத் தயார் செய்து கொள்ளும் அரசை எவரும் குறைகூற மாட்டார்கள்.
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பாதுகாப்புத் துறை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதற்கென நாட்டின் மொத்த நிதியில் பெரும்பகுதியைச் செலவிடுவது இந்த அடிப்படையில் தான்.
இதே நோக்கத்தில் தான் படைகளைத் தயார் செய்து கொள்ள இஸ்லாமிய அரசுக்குக் குர்ஆன் கட்டளையிடுகிறது.
உங்களால் இயன்ற அளவு பலத்தையும் போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும், அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
அல்குர்ஆன் 8:60
‘உங்களுடைய கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு எங்கள் கொள்கைக்கு வாருங்கள்; இல்லையெனில் உங்களை அழித்து விடுவோம்’ என்று ஆயுதம் தூக்கி வருவோரிடமிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
இல்லையெனில் நாடும் நாட்டு மக்களும் பெரும் இழைப்பைச் சந்திப்பார்கள். இவ்வாறான நெருக்கடி நிலையை அடைபவர்கள் போர் புரிவதற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கிறான்.
தங்களுக்கு அநியாயம் செய்யப்பட்டுள்ளது என்பதற்காகப் போரிடுபவர்களுக்கு (அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். ‘எங்கள் இறைவன் அல்லாஹ்’ என்று கூறியதற்காக அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அல்குர்ஆன் 22:39
சுய உரிமைகள் பறிக்கப்பட்டாலோ, சொந்த மண்ணை விட்டும் துரத்தி அடிக்கப்பட்டாலோ அல்லது இதுபோன்ற நிலை நேராமலிருக்க எதிரிகளை எதிர்த்துக் களம் காண்பதை எப்படிக் குறை சொல்ல முடியும்?
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவரைக் கொண்டு மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)
ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு இத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டது. இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு எதிரிகள் மிரட்டினார்கள்; படை திரண்டு வந்து அழிக்க முற்பட்டார்கள். அவர்களிடமிருந்து முஸ்லிம்களைக் காக்கவே ஆட்சித் தலைவர் எனும் அடிப்படையில் முஹம்மது நபி, மக்களை திரட்டிப் போர் செய்தார்கள்.
இதுபோன்று, அநியாயக்காரர்கள் மூலம் பாதிக்கப்படும் மக்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு முஹம்மது நபியிடம் உதவி கேட்ட போது அவர்களின் உயிரைக் காக்கவும், உடமைகளை மீட்கவும் போர்க்களத்தில் இறங்கினார்களே தவிர, இஸ்லாத்தை வளர்ப்பதற்காக அல்ல!
“எங்கள் இறைவா! இந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன் புறத்திலிருந்து ஒரு உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!” என்று பலவீனமான ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்துவிட்டது?
அல்குர்ஆன் 4:75
ஒரு அரசாங்கம் தனது மக்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்ப பக்கத்து நாடுகளுடன் ஒப்பந்தம் போடும் பழக்கம் எல்லா காலத்திலும் இருந்துள்ளது.
ஒப்பந்தம் எனும் வாக்குறுதிக்கு மாறுசெய்து முதுகில் குத்தும் நாட்டினை எதிர்த்து நிற்பதும் தவறல்ல! தேவைப்பட்டால் போர் செய்வதும் குற்றமல்ல! இதையும் இஸ்லாம் கருத்தில் கொள்கிறது.
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (போரைத்) துவக்கியுள்ள நிலையில் நீங்கள் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
அல்குர்ஆன் 9:13
நல்லவர்களைப் போன்று வேடம் போட்டுக் கொண்டு, நயவஞ்சகம் மூலம் நாட்டையும் குடிமக்களையும் சீரழித்த நாசக்காரர்களுடன் போரிடுவது எந்த வகையில் குற்றமாகும்?
எல்லோரும் ஒப்புக் கொள்ளும் இந்த வரையறையின் படி போர் செய்ய இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி முஹம்மது நபி சில போர்க்களத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இப்படித் தகுந்த காரணங்களுக்காக மட்டுமே போர் செய்ய இஸ்லாம் அனுமதி அளித்துள்ளது.
உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு வரும் போது தான் போர்
போர் தொடுக்கும் உரிமை அரசுக்குத் தான் இருக்கிறது. தனி நபர்களுக்கோ, குழுக்களுக்கோ அந்த உரிமை இல்லை.
எதிரிப் படையினரின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பாதி அளவு வீரர்கள் இருந்தால் தான் போர் செய்ய வேண்டும்.
போரை முதலில் துவக்கக் கூடாது.
எதிரிப் படையினர் சமாதானத்திற்கு முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
போரிலிருந்து விலகிக் கொள்பவர்களுடன் போர் செய்யக் கூடாது.
இவ்வாறு, போர் புரிவதற்கு இஸ்லாம் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த நிலையெல்லாம் கடந்து போர் நடந்தாலும் கூட, போர்க்களத்தில் பேண வேண்டிய ஒழுங்குகளையும் இஸ்லாம் வகுத்துள்ளது. அவற்றுள் முக்கியமான சட்டங்களை பின்வரும் செய்திகள் மூலம் விளங்கலாம்.
கொள்ளையடிப்பதையும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரி 2474
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த ஒரு புனிதப் போரில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 3015
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள். பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்:
இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; (எதிரிகளின்) அங்கங்களை சிதைக்காதீர் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: புரைதா பின் அல்ஹசீப் (ரலி)
நூல்: முஸ்லிம் (3566)
போர் என்று வந்து விட்டால் எந்தவொரு தர்மத்தையும் பார்க்கக் கூடாது என்று சொல்லும் சித்தாந்தங்களுக்கு மத்தியில், போரில் கூட ஒழுக்கத்தையும் நீதியையும் போதிக்கின்ற ஒப்பற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. போர்க்களத்திற்கும் இஸ்லாம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
களத்தில் ஆயுதமேந்தி வரும் எதிரிகளிடம் போர் செய்ய வேண்டுமே தவிர அவர்களது ஊர், குடும்பம், வாரிசுகள் விஷயத்தில் அத்துமீறுவதற்கு இஸ்லாம் அனுமதி தரவில்லை.
இன்னும் சொல்லப்போனால் எந்தவொரு பிரச்சனைக்கும் போர்க்களம் சந்திக்காமல் அதற்குரிய தீர்வை எட்டுவதற்குத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
“எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால், (போரின் துன்பங்களைக் கண்டு நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3582
சுமூகமான சூழ்நிலை உருவாக்க எல்லா வகையிலும் முயற்சித்தும் முடியாத போது தான், இறுதியில் போர் புரியும் முடிவை எடுக்க வேண்டும். அதிலும் கூட இதுவரை பார்த்த அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படியான ஒரு மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்குமா? தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி கொடுக்குமா? என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.

வன்முறையை தூண்டுகிறதா வஹ்ஹாபியிஸம்
ஆர்.அப்துல் கரீம்

வஹ்ஹாபியிஸம்…
இன்றைய சூழலில் அதிகம் விமர்சிக்கப் படுகின்ற, எதிர்க்கப்படுகின்ற ஒன்று.
ஆனால் இதை எதிர்ப்போரில் பலருக்கும் வஹ்ஹாபியிஸம் என்றால் என்னவென்ற சரியான புரிதல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே அதற்கான நியாயமான பதிலாகும்.
வஹ்ஹாபியிஸம் வன்முறையைத் தூண்டுகிறது என்ற தவறான புரிதலைத் தாண்டி அது குறித்த விபரங்கள் எதையும் சரியாக உள்வாங்க இங்கே யாரும் தயாராக இல்லை.
வஹ்ஹாபியிஸம் என்று இவர்கள் எதைச் சொல்கிறார்கள்?
அது உண்மையிலேயே பயங்கரவாதத்தைத் தூண்டுகிறதா?
இந்த இரு கேள்விகளுக்குமான பதிலை அறிந்து கொள்ளும் முன் வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடலுக்கான வரலாற்று விளக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
சவூதியில் இன்றைக்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கப் புரிதல் இதற்கு முந்தைய காலத்தில் இருந்ததில்லை.
சவூதியின் பரப்பளவு சிறுசிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்த கால கட்டத்தில் இஸ்லாத்திற்கு விரோதமான ஏராளமான செயல்கள் அங்கு தலைவிரித்தாடின.
சிலை வழிபாடு, சமாதி வழிபாடு, மூட நம்பிக்கைகள் ஆகியவற்றின் கைகள் வலுவாக ஓங்கியிருந்த காலமது!
இந்தக் கால கட்டத்தில் பிறந்து, இஸ்லாமிய மார்க்கக் கல்வியை கற்றுத் தேர்ந்த ஒருவர் அம்மக்கள் செய்து வந்த சிலை மற்றும் சமாதி வழிபாடுகள் இஸ்லாத்தில் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்.
இஸ்லாத்தின் அடிப்படை முழக்கமான ‘லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்ற ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கின்றார்.
நாடு முழுக்க அவரது பிரச்சாரம் பரவுகிறது. எதிர்வினையாக அவருக்கு எதிர்ப்பும் வலுக்கின்றது.
ஒரு கட்டத்தில் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான உயைனா எனும் பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் நேரிடுகிறது.
அப்போது அதற்கு அருகிலுள்ள அத்தரயிய்யா எனும் பகுதியின் ஆட்சியாளர் முஹம்மத் பின் ஸஊத் தம் ஊருக்கு வரவழைத்து அடைக்கலம் கொடுக்கின்றார். தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்யுமாறு ஊக்கமூட்டுகின்றார்.
இப்னு ஸஊதின் ஆட்சியதிகாரம் உறுதுணையாக இருக்க, நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்கிறார். அவரது பிரச்சாரத்தை நோக்கி பெருந்திரளான மக்கள் ஈர்க்கப்படுகின்றார்கள்.
பின்னாளில் சிறுசிறு துண்டுகளாகப் பிரிந்து கிடந்த பல நிலப் பரப்புகள், முஹம்மத் பின் ஸஊதின் தலைமையில் ஒருங்கிணைந்த ஒரு நாடாக உருமாறுகிறது. இவரது உழைப்பைப் பறைசாற்றும் விதமாகவே அந்நாடு இப்போது ஸஊதி என்று அழைக்கப்படுகிறது
அந்நாட்டில் மக்களால் கறை படுத்தப்பட்ட இஸ்லாத்தின் கறையை நீக்கி, தூய இஸ்லாத்தை மக்களுக்குத் தனது பிரச்சாரத்தின் மூலம் எடுத்துரைத்த அந்த அறிஞர் தாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஆவார். இவர் கி.பி 1702-ல் பிறந்தவர்.
சிறு துண்டுகளாகச் சிதறிக் கிடந்த பல பகுதிகளை சவூதி என்று ஒரு நாடாக இணைத்ததிலும், ஏக இறைவன் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற தூய ஏகத்துவக் கொள்கையை அந்நாடு முழுக்கக் கொண்டு சேர்த்ததிலும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது.
வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடல் இவரது பெயரிலிருந்தே உருவாகிறது.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப், தமது காலத்தில் ஏகத்துவக் கொள்கையை எடுத்து சொன்னார் அல்லவா? உடனே ஏகத்துவக் கொள்கைப் பிரச்சாரத்துக்கு வஹ்ஹாபியிஸம் என்று அடையாளமிட ஆரம்பித்து விட்டனர்.
மார்க்க அடிப்படையில் சவூதி நிறைவேற்றும் குற்றவியல் சட்டங்களைக் கூட வஹ்ஹாபியிஸத்தின் வெளிப்பாடு என்று கருதுகின்றனர்.
திருடினால் கையை வெட்டுவது…
விபச்சாரம் செய்தோருக்குக் கசையடி அல்லது மரண தண்டனை விதிப்பது…
கொலையாளிகளுக்கு எவ்வித இரக்கமும் காட்டாது மரண தண்டனையை நிறைவேற்றுவது…
இதற்கெல்லாம் கூட இவர்கள் வைத்திருக்கும் பெயர் வஹ்ஹாபியிஸம் என்பதே!
இப்போது தெரிகிறதா இவர்களின் அரைவேக்காட்டுத்தனம்?
இவர்கள் வஹ்ஹாபியிஸம் என்று பெயரிடும் இவை யாவும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது நபியவர்கள் கற்றுத் தந்த இஸ்லாத்தின் கொள்கைகளாகும்.
ஒரு இறைவனை மட்டுமே வணங்குதல்
சிலை வழிபாடு, சமாதி வழிபாடு கூடாது
திருடினால் கையை வெட்டுதல்
கொலையாளிகளுக்கு மரண தண்டனை
என அனைத்துமே இஸ்லாம் கூறும் கொள்கை மற்றும் குற்றவியல் கோட்பாட்டு நெறிகளாகும்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவனால் இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆனில் இது குறித்த விபரங்கள் தெளிவாக உள்ளது.
அந்தத் திருக்குர்ஆனைப் படித்தறிந்து தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் இந்தப் பிரச்சாரத்தையே முன்னெடுக்கின்றார்.
உண்மை இவ்வாறிருக்க முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ள ஒரு சித்தாந்தத்தை வஹ்ஹாபியிஸம் என்றழைப்பது எவ்விதத்தில் அறிவுடைமையாகும்?
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏகத்துவக் கொள்கையை தத்தமது ஊர், நாடுகளில் பிரச்சாரம் செய்தவர்கள் இருக்கவே செய்வார்கள். அவை அனைத்திற்கும் வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடல் எப்படிப் பொருத்தமானதாக இருக்கும்?
இது வஹ்ஹாபியிஸம் என்ற சொல்லாடலுக்குப் பின்னுள்ள தவறான பார்வையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முதலாவது விஷயமாகும்.
அடுத்து வஹ்ஹாபியிஸம் வன்முறையைத் தூண்டுகிறது என்ற இவர்களின் பொய்யான குற்றச்சாட்டிற்கு வருவோம்.
நாட்டில் அல்லது உலகில் நடைபெறும் போர்கள், கொலைகள், தாக்குதல்கள் அனைத்திற்கும் வஹ்ஹாபியிஸம் தான் மூல காரணமாக உள்ளது என்றால் அதற்கான தரவுகள் என்னென்ன? ஆதாரங்கள் எங்கே?
ஏகத்துவக் கொள்கையை ஏற்றுள்ள ஒருவன் கொலை செய்தால் கூட, அவனும் அரசால் சட்டப்படிக் கொல்லப்பட வேண்டும் என்பதைத் தானே இவர்கள் புரிந்து வைத்துள்ள வஹ்ஹாபிஸம் போதிக்கின்றது?
அப்படியானால் பயங்கரவாதத்தை வஹ்ஹாபியிஸம் தூண்டுகிறது என்ற வாதம் எப்படி உண்மையாகும்?
ஓரிறைக் கொள்கை என்று முழக்கமிடுவதே பயங்கரவாதத்திற்கு வித்திடுகிறது என்ற தவறான சமன்பாட்டை, சரியானதென நிலைநிறுத்த இவர்கள் முயல்கிறார்கள்.
பயங்கரவாதத்திற்கு என்று ஒரு வரையறை கிடையாது.
எல்லா கோட்பாட்டைச் சார்ந்தவர்களிலும் சில அரைகுறைகள் இருப்பார்கள். மனிதநேயமற்ற காட்டுமிராண்டிகள் இருப்பார்கள். அவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சித்தாந்தத்தை இப்படித்தான் என முடிவு செய்ய முடியாது.
பயங்கரவாதத்தின் மறுவடிவம் வஹ்ஹாபியிஸம் என்ற இவர்களின் சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானது என்பதைப் புரிய வைக்க சில மேற்கோள்கள் அவசியமாகின்றது.
சிரியா நாட்டில் நடைபெறும் கோரச் சம்பவங்கள் யாருக்கும் நினைவூட்டத் தேவையில்லை என்ற அளவு அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும். அந்நாட்டு அதிபர் பஷருல் ஆஸாத் உள்நாட்டுப் போர் எனும் பெயரில் இலட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்துள்ளார். இதில் குழந்தைகள், பெண்கள் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர்.
இது பயங்கரவாதம் இல்லையா? இந்தப் பயங்கரவாதத்தை நிகழ்த்திய அதிபர் ஆஸாத் ஒன்றும் வஹ்ஹாபி இல்லையே! சொல்லப் போனால் வஹ்ஹாபியிஸத்திற்கு நேரெதிரான ஷியா மதத்தைச் சேர்ந்தவர். அப்படியெனில் இந்த பயங்கரவாதத்திற்கு என்ன பெயர் வைப்பார்கள்?
லெபனானின் ஹிஸ்புல்லா பல வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்கள் என்று பெரும் பட்டியலே உண்டு. ஹிஸ்புல்லா அமைப்பையும் இவர்கள் வஹ்ஹாபிகள் என்பார்களா?
1993-ம் ஆண்டில் 13 இடங்களில் குண்டு வெடித்து மொத்தமாக 257 நபர்களின் உயிரைக் காவு வாங்கிய மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியான தாவூத் இப்றாஹிம் வகையறாக்கள் யார்? வஹ்ஹாபிகளா? இல்லையே!
1988-ல் பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, முஹம்மது நபிகள் அவர்களைத் தூற்றும் வகையில் சாத்தானிக் வெர்சஸ் எனும் பெயரில் ஒரு நாவலை எழுதி வெளியிடுகிறார். உலகில் உள்ள பல முஸ்லிம்கள் இதற்கு ஜனநாயக பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளையில், சல்மான் ருஷ்டியின் தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தாரே ஈரானின் அல்குமைனீ. கற்பனையின் பெயரில் அநாகரீகமாக எழுதிய சல்மான் ருஷ்டியின் கருத்துக்கள் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக ஒருவரின் தலை கொய்யப்பட வேண்டும் என்று சொல்வது பயங்கரவாதமாகத் தெரியவில்லையா?
இந்த குமைனீ என்ன வஹ்ஹாபியா?
எல்லைப் பிரச்சனை காரணமாக 1980ம் ஆண்டு துவங்கிய ஈரான் – ஈராக் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டார்களே? இவர்கள் என்ன வஹ்ஹாபிகளா?
சிலை வணக்கத்தை அடியோடு எதிர்ப்பதே தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையாகும். இறைவனின் தூதர் முஹம்மது நபிக்குக் கூட சிலை வைக்கக் கூடாது எனும் நிலையில், தனக்குத் தானே சிலை வைத்துக் கொண்ட சதாம் ஹுசைன் எப்படி, எப்போது வஹ்ஹாபியானார்?
இந்தியாவில் உள்ள காஷ்மீர் போராட்டக் குழுவினர் வஹ்ஹாபிகளா?
தமிழகத்தில் தவ்ஹீத் கொள்கை பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட 1980களின் கால கட்டத்தில் எத்தனை எதிர்ப்புகள், வன்முறைச் சம்பவங்கள், வெட்டுக் குத்துகள் எல்லாம் நிகழ்ந்துள்ளன.
நவீனவாதிகள் கூறும் வஹ்ஹாபியர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை நிகழ்த்தியதும் வஹ்ஹாபிகள் தாமா?
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே! அதுபோல் காணும் வன்முறை சம்பவத்திற்கெல்லாம் வஹ்ஹாபியிஸம் என்று பெயரிடுவதும் ஒரு வகை மனநோயின் வெளிப்பாடே!
சொல்லப்போனால் பயங்கரவாதத்திற்கு – வன்முறையாளர்களுக்கு எந்த மதமும் கிடையாது.
எல்லா மதத்தைச் சார்ந்தவர்களிலும் வன்முறையாளர்கள் இருப்பார்கள்.
விடுதலைப்புலிகள் நிகழ்த்திய இரத்த வெறியாட்டம் நாடு அறிந்த ஒன்றே!
நக்ஸல்கள் எனப்படுவோர் யார்?
இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படும் காந்தியைக் கொன்று தனது பயங்கரவாதத்தை துவக்கியது ஆர்.எஸ்.எஸ்.
2006 மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய பயங்கரவாதிகளான பிரக்யா சிங், அசீமானந்தா இவர்கள் எல்லாம் யார்?
இதற்கும் இவர்கள் வஹ்ஹாபியிஸம் என முத்திரை குத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
பயங்கரவாதம் எந்த உருவில் வந்தாலும் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றே என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.
அதே நேரம் உண்மை இவ்வாறிருக்க, பல கோர முகங்களைக் கொண்டுள்ள பயங்கரவாதத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்க முயல்வதின் பின்னணியில் இரண்டில் ஏதேனும் ஒன்று தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று அறியாமை! இன்னொன்று இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி!
இதில் அறியாமை என்று சொல்வோமேயானால் அது நமது அறியாமையையே வெளிப்படுத்தும். எனவே இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இவர்களது வஹ்ஹாபியிஸ வெறுப்பு என்பதில் சந்தேகமில்லை.

இஸ்லாமிய தீவிரவாதம் (?)
ஆர். ரஹ்மத்துல்லாஹ்

உலகில் எங்கு குண்டு வெடித்தாலும் அனைத்து செய்திச் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் பரவும் முக்கியச் செய்தியின் முதன்மைத் தலைப்பு தான் இஸ்லாமிய தீவிரவாதம் (?) என்பதாகும்.
இஸ்லாமியர்களைக் குறி வைத்துப் பரப்பப்படும் இப்படி ஒரு சொல்லாடல் எதற்கு? எப்போது? யாரால் உருவாக்கப்படுகிறது என்பதையும் இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பதனையும் இக்கட்டுரையில் அலசுவோம்.
கட்டுரைக்குள் நுழையும் முன் ஒரு குட்டிக் கதை. கத்தைக் கத்தையாக எழுதுவதன் சாராம்சத்தை ஒரு குட்டிக் கதையில் சொல்லி விடலாமே என்பதற்காக…
“அது ஒரு முற்பகல் நேரம் அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் பாலத்தின் மேல் ஒரு பெண் நடந்து செல்கிறாள். ஒரு நாய் வெறி பிடித்த நிலையில் அந்தப் பெண்ணை கடித்துக் குதறப் பாய்கிறது. அலறி ஓடிய பெண்ணை ஒரு இளைஞன் காப்பாற்றி, கடிக்க வந்த நாயை விரட்டி அடிக்கிறான். மிரண்டு விரண்டோடிய நாய் பாலத்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறது”
இச்செய்தி அடுத்த சில நிமிடங்களில் பரவத் தொடங்குகிறது.
“அபலைப் பெண்ணை வெறி நாயிடமிருந்து மீட்ட அமெரிக்க இளைஞர்” என்று செய்தி வாசிக்கப்படுகிறது. அப்பெண்ணைக் காப்பாற்றியது அமெரிக்கர் அல்ல, வெளிநாட்டவர் என்று செய்தியாளர்களுக்குச் சொல்லப்படுகிறது. உடனே செய்தி சிறிய மாற்றங்களுடன் “ரோட்டில் சுற்றித் திரிந்த வெறிநாயை அங்கு சென்ற இளைஞர் விரட்டி அடித்தார்” என்று செய்தி வாசிக்கப்படுகிறது.
அந்த இளைஞர் ஒரு இஸ்லாமியர் என்று சிறிது நேரம் கழித்து செய்தியாளர்களுக்குச் சொல்லப்படுகிறது. உடனே பல மாறுதல்களுடன் “பாலத்தின் மேல் நடந்து சென்ற அமெரிக்கப் பெண்ணிடம் தகராறு செய்த முஸ்லிம் வாலிபர். ஆத்திரத்தால் குறுக்கே வந்த நாயை பாலத்திலிருந்து தூக்கி எறிந்தார். வீசி எறியப்பட்ட நாய் பரிதாபமாக உயிரிழந்தது. அந்த முஸ்லிம் வாலிபரை அல்கய்தா என்ற தீவிரவாத இயக்கம் அனுப்பி வைத்ததாகப் பேசப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி சித்தரிக்கப்படுகிறது.
இது கதையல்ல! ஒவ்வோரு நாட்டிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பின்னப்படும் சூழ்ச்சி. ஆம்! இது முஸ்லிம்களை மட்டுமே மையப்படுத்தி செய்யப்படும் சூழ்ச்சி.
ஒரு சிறிய நினைவூட்டலுக்காக ஒரு சில கடந்த கால நிகழ்வுகளை உங்கள் கண் முன் கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு இடத்திலும் ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதை யாரேனும் ஒருவர் செய்திருப்பார். அதைச் செய்தவன் இந்து, கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம், சீக்கியம், நாத்திகம், கம்யூனிஸம் என ஏதோ ஒரு கொள்கையைச் சேர்ந்தவனாகத் தான் இருப்பான். இதில் யார் எந்தத் தவறு செய்தாலும் அவனது பெயர் மட்டுமே அடிபடுகிறது. ஆனால் ஒரு முஸ்லிம் அதைச் செய்திருந்தால் அவன் ஏற்றுக் கொண்ட மார்க்கமான இஸ்லாமும், வழிகாட்டியான திருக்குர்ஆனும் விமர்சிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
6 கோடி யூதர்களைக் கொன்ற ஹிட்லரை யாரும் கிறித்துவத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
இலங்கை அரசுக்கு எதிராகப் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகளை யாரும் தமிழ் தீவிரவாதிள் என்றும் இந்துத் தீவிரவாதிகள் என்றும் சொல்வதில்லை.
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா என்ற சீக்கியர் பஞ்சாபைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி இந்திய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி, அதனால் பல உயிர்கள் பலி ஆயின. இவரை யாரும் சீக்கியத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த சத்வந்த் சிங் மற்றும் பீம் சிங்கை யாரும் சீக்கியத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
திரிபுராவில் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி 44 பேரைக் கொலை செய்த கிஜிஜிதி தீவிரவாதிகளை யாரும் கிறித்துவத் தீவிரவாதி என்று சொல்வதில்லை
இந்திய அரசுக்கு எதிராக அஸ்ஸாமில் போராடி சுமார் 750க்கும் மேற்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திய உல்ஃபா (ஹிலிதிகி) தீவிரவாதிகளை யாரும் இந்துத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
இந்திய அரசை எதிர்த்து நாடெங்கிலும் 150 மாவட்டங்களுக்கு மேல் தீவிரவாதச் செயல்களைச் செய்துவரும் நக்ஸலைட், மாவோயிஸ்ட்களை யாரும் இந்துத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
இவர்களின் தவறுக்காக இவர்கள் சார்ந்திருக்கும் மதத்தை யாரும் குறை சொல்வது இல்லை. அவ்வாறு சொல்வது நியாயமும் இல்லை.
ஆனால் அதே பார்வை, முஸ்லிம்கள் விஷயத்தில் வர வேண்டுமல்லவா? அதுதானே நியாயம்? அதில் ஏன் பாரபட்சம்?
ஒரு பக்கம் முஸ்லிம்களில் யாரேனும் ஒருவர் ஒரு தாக்குதலில் ஈடுபட்டால் அவர் இஸ்லாமியத் தீவிரவாதி என முத்திரை குத்துவதையும், மறுபக்கம் ஒரு முஸ்லிம் மதங்களைக் கடந்து மனிதநேயப் பணியில் ஈடுபட்டால் அவரின் சேவைகள் மூடி மறைக்கப்படுவதையும் பார்க்கலாம்.
டாக்டர் கஃபீல் கான் என்னும் மனிதநேயப் புயல்!
கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக ஆளும் உபி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. அதுமட்டுமின்றி, கவனிப்பாரின்றி விடப்பட்ட அந்த அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இவ்வேளையில் தான் களத்தில் குதித்தார் கஃபீல் கான். தனியார் மருத்துவமனையிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்து துரிதகதியில் இவர் செய்த மனிதநேய செயல்பாட்டால் நூற்றுக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டன.
இவரது அர்ப்பணிப்பை எந்த ஊடகத்திலாவது முக்கியத்துவப் படுத்தப்பட்டதா? இல்லையே! ஏன்? கபீல் ஒரு முஸ்லிம் என்பதால் தானே!
தமிழகத்திலும் ஒரு கஃபீல் கான்!
டாக்டர் அமானுல்லாஹ்….
கிருஷ்ணகிரியின் அதிமுகம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகின்றார் டாக்டர் அமானுல்லாஹ்.
சிகிச்சைக்கு வரக்கூடிய மக்களுக்கு மருந்துகளும் இலவசம்.
இவரது சேவையை அறிந்து அருகிலுள்ள உத்தனப்பள்ளி கிராம மக்கள் தங்களது பகுதியிலும் இலவச மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்தனர். அந்தக் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கேயும் ஒரு இலவச மருத்துவமனையைக் கடந்த 2016ஆம் ஆண்டு நிறுவியுள்ளார்.
இதுவரை 15,000 இலவச அறுவை சிகிச்சைகளை தனது சொந்தச் செலவில் ஏழை மக்களுக்குச் செய்து கொடுத்துள்ளார்.
2,400 கண் அறுவை சிகிச்சைகளை இலவசமாகச் செய்து கொடுத்துள்ளார்.
தற்போது மருத்துவத்தை வியாபாரமாக ஆக்கி காசு பார்க்கும் நிலையில், மனிதநேயத்தோடு நடக்கும் டாக்டர் அமானுல்லாஹ் அவர்களின் மனிதநேயப் பணி சிறப்புக்குரியது!
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள், மனிதநேய மருத்துவர் அமானுல்லாஹ் அவர்களின் மனிதநேயச் சேவைகளை வெளிஉலகுக்குக் கொண்டு வந்து மனித நேயம் தழைத்தோங்க வழி வகுக்க வேண்டும்.
இவர் முஸ்லிமாக இருப்பதால் தான் ஊடகங்களாலும், அரசாங்கத்தினாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றாரோ என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
8 குண்டுகளைத் தனது உடலில் வாங்கிய முஸ்லிம் சி.ஆர்.பி.எஃப். வீரர் குர்ஷித் அஹ்மது
முஸ்லிம் சமுதாயம் தங்களது சதவீதத்திற்கும் அதிகமாக இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டது.
கார்கில் போரிலும் கூட அதிகமான அளவு தியாகங்களைப் புரிந்து உயிர் விட்டது முஸ்லிம் இராணுவ வீரர்கள் என்பதுதான் வரலாறு.
அந்த வரிசையில் சிஸிறிதி வீரர் அஹ்மத் அவர்களின் தியாகம் பாராட்டத்தக்கது.
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் சிஆர்பிஎஃப் வீரரான அஹமத் உள்ளிட்ட பல வீரர்கள் துப்பாக்கிப் பயிற்சி முடித்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 8 வீரர்கள் உயிரிழந்தனர். பல வீரர்கள் படுகாயமடைந்தனர்.
சிஆர்பிஎஃப் வீரரான அஹமத் தனது உடலில் 8 துப்பாக்கிக் குண்டுகளை உள்வாங்கிக் கொண்டு உயிருக்காகப் போராடினார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இரண்டு மாதங்கள் கோமா நிலையிலேயே இருந்தார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மெல்ல மெல்ல மீண்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இறையருளால் மீண்ட அஹமத், தற்போது எழுந்து நடக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
தற்போது அவர் மீண்டும் நாட்டுக்காகப் பணியாற்ற முன்வந்துள்ளது தான் இங்கு மிகவும் நெகிழ்ச்சியான விஷயம்.
காணாமல் போன மலேசிய விமானம் பற்றி அன்றாடம் படம் பிடித்துக் காட்டிய மீடியாக்கள், தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்திய குர்ஷித் அஹ்மதைச் சொல்ல மறந்தது ஏன்?
இந்து யாத்ரீகர்களைக் காத்த இஸ்லாமியர் சலீம்
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து 50 யாத்ரீகர்களைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் சலீம் ஷேக்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தவர்களின் பேருந்தைக் குறிவைத்து, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டின் நடுவே, உயிரைப் பணயம் வைத்து பேருந்தில் இருந்த மற்றவர்களின் உயிரை அதன் ஓட்டுநர் சலீம் காப்பாற்றியுள்ளார். தெற்கு குஜராத்தை சேர்ந்த சலீம் ஷேக் கபூர் என்பவர் அங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அமர்நாத் யாத்ரீகர்களை சலீம் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் பேருந்தை நிறுத்தியிருந்தால் உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும். ஆனால் அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்று, இருட்டான பகுதியில் நிறுத்தி, பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஓட்டுநர் சலீமின் செயலைப் பாராட்டி 3 லட்சம் ரூபாய் வெகுமதி தருவதாக காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.
இச்செய்தியை இக்கட்டுரையில் நீங்கள் படிப்பதற்கு முன் எந்த ஊடகத்திலாவது சிறப்புச் செய்தியாகப் பார்த்த ஞாபகம் இருக்கிறதா? என யோசித்துப் பாருங்கள்.
இதுமட்டுமல்ல….
நீரில் மூழ்கிய இந்துக்கள் ஐந்து பேரை காப்பாற்றித் தன் உயிரை விட்ட முஸ்லிம் ரஊஃப் அஹ்மத் அவர்களின் தியாகம்.
நோன்பு நோற்ற நிலையில் இந்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்த தானம் செய்த முஸ்லிம்கள்.
துபையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இந்தியரைக் காப்பாற்றிய முஸ்லிம் பெண்.
என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதுபோல முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் மறைக்கப்படுவதும் முஸ்லிம் பெயர்தாங்கி ஒருவன் தவறு செய்தால் இஸ்லாமியத் தீவிரவாதம் என முத்திரை குத்தப்படுவதும் ஏன்?
‘ஒரு மனிதனை அநியாயமாகக் கொலை செய்தவர் ஒட்டுமொத்த மனிதகுலத்தையே கொன்றவன் ஆவான்’ என்ற திருக்குர்ஆன் வசனமும் தீவிரவாதத்தின் வாசலை இழுத்து அடைக்கிறது எனும் போது இஸ்லாமியத் தீவிரவாதம் என்று அவப்பழி சுமத்துவது ஏன்? ஒரு கணம் யோசித்தால் உண்மை விளங்கும்.
இந்திய நாட்டின் ஆட்சியாளர்களாக என்றென்றும் தாமே இருக்க வேண்டும் என்ற நீண்டகால செயல்திட்டத்துடன் இயங்கி வரும் சங்கப் பரிவாரங்களுக்கு பரம எதிரிகளே சிறுபான்மை மக்கள்தான். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களின் வாக்குகள் தமக்கு ஒருபோதும் கிடைக்காது என்பதால் தனக்குக் கிடைக்காத முஸ்லிம்களின் ஓட்டுக்கள் வீணடிக்கப்பட வேண்டும் என்பதால் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, பாகிஸ்தானின் வந்தேறிகளாக வதந்திகளைப் பரப்பி, முஸ்லிம்களுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்கி, இந்துக்களின் ஓட்டுக்களை அள்ளுவதற்கு ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார்கள் இட்ட பெயரே இஸ்லாமியத் தீவிரவாதம் என்கிற அவதூறாகும்.
இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை.நாட்டில் நடைபெற்றப் பல குண்டுவெடிப்புகளில் சமீப காலமாகப் பிடிபட்டு வரும் ஆர்எஸ்எஸ் காரர்களின் ஒப்புதல் வாக்குமூலமே அன்றி வேறில்லை.
மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினர் இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம். இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டோம். அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் அந்த இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான் என்று இதில் கைது செய்யப்பட்ட சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன.
2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீஸ் அடுத்தடுத்து கைது செய்தது.
2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன.
2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது.
மாலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின.
சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புக் காவல்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது கார்கரே மர்மமான முறையில் பலியானார்.
மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டு வைப்பு பயங்கரவாதச் செயல்களில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.
அசீமானந்தாவை சித்ரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே பா.ஜ.க.வும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன.
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாகக் குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள் தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டு வெடிப்புகள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரே பயங்கரவாதக் கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாய்வுத் துறையினர் உறுதிப்படுத்தினர்.
2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.-ன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளன. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்கள் தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே இதைக் காவல்துறையும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன.
நாட்டைத் துண்டாடி தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து வரும் இந்து, இஸ்லாமிய மக்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி, வன்முறைகளைத் தூண்டிவிட்டு, அதில் சிந்தப்படும் இரத்தங்களால் தமது ஆட்சியைத் தக்க வைக்க நினைக்கும் தீயசக்திகளை அறிந்து கொள்வோம்.
மத நம்பிக்கையில் நாம் வேறுபட்டாலும் மனிதன் என்ற பார்வையில் நேசம் வளர்ப்போம்! தேசம் காப்போம்!!

சமுதாயப் பணிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அபு ஷஹீன்

பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமிய‌ அடிப்படைகளில் தலையாயதாகும்.
ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாகவே இது இருந்தது.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
பிறருடைய நலனை பேணுதல் என்பது ஒரு முஸ்லிம் சக மனிதர்களிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஒர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது, கூடாது.
எவ்வாறு மலர்கள் நறுமணத்தை மட்டுமே பரப்புமோ, அதைப் போல, உண்மை முஸ்லிம், சக ‌மனிதருக்கு உபகாரம் செய்வதைத் தன் இயல்பாகவே கொண்டிருப்பார்.
முஸ்லிம் என்பவர் எந்தச் சூழலிலும் சமூக அக்கறை கொண்டவராக இருத்தல் அவசியம் என்கிற மார்க்க வழிகாட்டுதலைப் பேணி நடக்கும் ஜமாஅத்தாக, கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ஜிழிஜியி) இருந்து வருகிறது.
இஸ்லாத்தைத் தவறாகப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆனையும் நபிமொழிகளையும் சரியான முறையில் போதனை செய்வது, இஸ்லாம் பற்றிய முஸ்லிம் அல்லாத சகோதரர்களின் உள்ளத்தில் இருக்கும் தவறான புரிதல்களை பிரச்சாரங்களின் வாயிலாகக் களைய முனைவது என முக்கிய இரு குறிக்கோள்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சமூக நலன் சார்ந்த ஏராளமான மனித நேயப் பணிகளை முன்னெடுத்து செயலாற்றுவதையும் தமது அடிப்படை செயல்திட்டங்களுல் ஒன்றாக வகுத்து வைத்திருக்கிறது.
இதன் பயனாய், கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஜமாஅத் மனித நேயப்பணிகள் பலவற்றைச் செய்திருக்கிறது என சொல்வதை விட மனித நேயப் பணிகளில் சமூகத்தில் மிகப்பெரிய புரட்சியையே உருவாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.
இரத்த தான சேவை
வேகமாகச் சுழலும் கால ஓட்டத்தில் இன்று வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. விபத்துக்களில் சிக்கும் மக்கள் அவசர முதலுதவி கிடைக்காமல் சம்பவ இடங்களிலேயே மரணித்து விடும் பரிதாப சூழல் ஏற்படுவதற்குப் பெரும்பாலும் அதிகமான இரத்தம் வெளியேறுதல் மிக முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது.
தாமதமின்றி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான இரத்தமும் தக்க சமயத்தில் ஏற்றப்படுமானால் பெரும்பாலான உயிரிழப்புகளைத் தவிர்க்க இயலும் என்பதே யதார்த்தமான நிலையாக இருக்கிறது.
அதே போன்று, அதிகரித்து வரும் நோய்கள், அதன் விளைவாய் அதிகரிக்கும் அறுவை சிகிச்சைகளினாலும் அனைத்து பிரிவு இரத்தங்களும் அதிக அளவில் தேவைப்படும் சூழல் நிலவுகிறது.
ஆக, அதிக அளவில் இரத்தத்திற்கான தேவை இருப்பது ஒரு பக்கமெனில், அவை அனைத்துமே மிக மிக அவசரத் தேவையாகவும் அமைந்துள்ளதைப் பார்க்கிறோம்.
இன்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், ஊர்கள் என பட்டித்தொட்டியெங்கும் பரந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மக்கள் எதிர்கொள்கின்ற இத்தகைய அவசர இரத்தத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து தருகின்ற இரத்த வங்கியாகவே செயபட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகள் என உலகெங்கும் இரத்த தான சேவைகளில் தொடர்ந்து தனி முத்திரை பதித்து வருகிறது.
பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த ஜமாஅத்தில் அங்கம் வகிக்கும் குருதிக் கொடையாளர்களின் தொடர்பு விபரங்கள் அடங்கிய தரவுத்தளம் (பீணீtணீதீணீsமீ) சேகரித்து வைக்கப்பட்டிருப்பதுடன், இரத்தத்திற்கான தேவை எப்போது எழுந்தாலும் அவர்கள் முதலில் தொடர்பு கொள்வது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடர்பு எண்களைத் தான் எனச் சொல்கிற அளவிற்கு இரவு பகல் பாராது இந்த ஜமாஅத்தின் மருத்துவரணி அனைத்துப் பகுதிகளிலும் வீரியமான மனித நேயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
பணத்திற்காகக் குருதிகளை தானம் செய்கின்ற மக்கள் வாழ்கின்ற இக்காலத்தில், சாதி, மத, இன பாகுபாடுகள் எதனையும் பொருட்படுத்தாது, எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராது இலவசமாகவே இந்தச் சேவையை ஆற்றி வருகின்றது இந்த ஜமாஅத்.
இதன் விளைவாகக் கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக, இரத்த தான சேவையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் அமைப்பாக இந்த ஜமாஅத் இருப்பதோடு, தமிழகத்தின் அரசு மற்றும் பல தனியார் தொண்டு நிறுவனங்களிடமும், சவூதி, அமீரகம், குவைத் போன்ற நாடுகளின் அரசாங்கத்திலிருந்தும் இதற்கென பல விருதுகளையும் இந்த ஜமாஅத் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்!”- (திருக்குர்ஆன்- 5:32) எனும் திருமறை வசனத்தை மனதில் ஏந்தியவர்களாகவும், இறைவனின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்தவர்களாகவும் மட்டுமே இத்தூய பணியினை இந்த இயக்கமானது மேற்கொண்டு வருகிறது.
இதுவல்லாமல், தமிழகத்தின் பல பகுதிகளில் இலவச ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், இரத்தப் பரிசோதனைகள், இரத்தப் பிரிவு கண்டறிதல், பிரபலமான மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் துணை கொண்டு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடுகள் என மருத்துவம் சார்ந்த சேவைப் பணிகளாக இந்த ஜமாஅத் செயல்படுத்தும் சமூகப் பணிகள் ஏராளம்.
அதே போன்று, சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபடுதல், மரம் நடுதல், சாலை விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்துதல், கோடை காலங்களில் பொது இடங்களில் இலவச தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்தல், நோய்கள் பரவுகின்ற காலங்களில் இலவச நிலவேம்பு கஷாயம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்தல் போன்ற பொது நலப் பணிகளாக இந்த ஜமாஅத் பல்வேறு வகைகளில் சமூகப் பாதுகாப்பிற்கு துணை புரிந்து வருகின்றது.
சமூக முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பான வாழ்விற்கும் இயன்ற பங்களிப்பினைச் செய்வது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை.
அரசாங்கமே அனைத்தையும் செய்து விடும் என எதிர்பார்க்க முடியாது.
அரசாங்கம் கூடத் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்றிட தனி மனிதனின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்று என்கிற வகையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த சேவைகளானது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உத்வேகத்தை அளிப்பதாக அமைகிறது.
இயற்கைப் பேரிடர்களில் தன்னிகரில்லா சேவை
தமிழகம் பல சந்தர்ப்பங்களில் இயற்கை சீற்றங்களால் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. சென்னையைப் புரட்டிப் போட்ட பெரும் வெள்ளப்பெருக்கு, ஓக்கி புயல், கஜா புயல் என நம்மை நிலைகுலைய வைத்த பல இயற்கைப் பேரிடர்களை நாம் எளிதில் மறந்திருக்க மாட்டோம்.
அதுபோன்ற சூழ்நிலைகளில் உயிருக்குப் போராடும் மக்களை காப்பாற்றுவது ஒரு பக்கம். வீடு, சொத்துக்கள், விவசாய நிலங்கள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் மக்களுக்குத் தேவையான மீட்புப் பணிகளைச் செய்வது மறுபக்கம் என அரசாங்கமே அல்லோலப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர் படையினர் களமிறங்கி, பல்லாயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்த நிகழ்வுகள் அனைத்துமே வரலாறு.
இராணுவமே செல்லத் தயக்கம் காட்டிய பகுதிகளில் கூட தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் சென்று, வெள்ளத்தில் சிக்கிப் பல நாள் உணவின்றி தவித்த மக்களை மீட்டெடுத்ததை, மீண்டு வந்த மக்களே நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தனர்.
மக்களிடம் பணம், உணவுப் பொருட்கள் என தங்கள் சக்தியையும் மீறி திரட்டியதோடு வெள்ளத்தில் நீந்திச் சென்று கூட உணவின்றி தவித்த மக்களிடம் உரிய நிவாரணங்களைக் கொண்டு சேர்த்திருந்தனர்.
‘பாய்மார்களெல்லாம் எங்களுக்குத் தாய்மார்களாகக் காட்சியளித்தார்கள்’ என தப்பிப் பிழைத்த பொதுமக்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்திருந்த கருத்தானது, நாம் எந்த அளவிற்கு தன்னலம் பாராது நிவாரண உதவிகளை செய்திருந்தோம் என்பதற்குச் சான்றாக அமைந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 7376
மனிதர்களிடம் நீ கருணை காட்டினால் உன் மீது படைத்த இறைவன் கருணை காட்டுவான் என்கிறது இஸ்லாம்.
இந்த நபிமொழிக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டுகின்ற இந்த ஜமாஅத்தானது, இறை திருப்தி ஒன்றையே இலக்கெனக் கொண்டு பயணித்து வருகின்றது.
ஆதரவற்ற சிறுவர், முதியவர்கள் மீதான அக்கறை
சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்த சிறுவர், சிறுமிகள் இந்தச் சமூகத்தில் ஒழுக்கமாகவும் அதே சமயம் தன்னிறைவு பெற்ற எதிர்காலத்தை சுயமாக தேடிக் கொள்கின்ற வகையிலும் வளர வேண்டும் என்கிற நோக்கில் சிறுவர் ஆதரவு இல்லங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகிறது.
அதே போன்று, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், தங்கள் இறுதிக் காலங்களில் அன்பையும் பரிவையும் பெற்று நிம்மதியான வாழ்வினை வாழ வேண்டும் என்கிற நோக்கில் முதியோர் காப்பகங்களையும் இந்த ஜமாஅத் பல வருடங்களாக நடத்தி வருகிறது.
“அநாதைகளைக் காப்பவரும் நானும் சொர்க்கத்தில் இணைந்தே இருப்போம்” என்கிற நபிமொழியை மனதில் ஏந்தியவர்களாக, மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்வில் இறைவனின் அன்பைப் பெறுகின்ற ஒரே நோக்கத்தினை உள்ளத்தில் கொண்டவர்களாகச் செயல்படும் இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள், தனிப்பட்ட முறையில் பல்வேறு பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தன்னிகரற்ற இந்த மனித நேயப் பணியைத் தொடந்து வீரியமாகச் செய்து வருவது நிச்சயம் வியப்புக்குரியது.
கல்விப் பணியில்…
இன்னும், கல்வி வழிகாட்டி முகாம்கள், மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கான ஆலோசனை மையங்கள், வேலை வாய்ப்புக்கான முகாம்கள், விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் என இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகின்ற இயக்கமாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இருந்து வருகிறது.
பல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தியிருக்கும் இந்த இயக்கமானது, ‘என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்‘ எனும் தலைப்பிட்டு, எத்தகைய வேலைவாய்ப்புகளுக்கு என்னென்ன படிப்புகளைத் தற்போது பல்கலைகழகங்களில் தேர்வு செய்யலாம்? எந்தெந்த கல்லூரிகள் தரமான கல்வியை அளிக்கின்றன? போன்ற வழிகாட்டுதல்களை அதற்குரிய நிபுணர்கள் துணை கொண்டு ஆண்டு தோறும் வழங்கி வருகின்றது.
இது தவிர, சிறுபான்மை மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை உரிய முறையில் இந்தச் சமுதாயம் பெறாமல் இருந்து வந்தது.
இதைக் கருத்தில் கொண்டு, கல்வி உதவித் தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை இலவசமாகச் செய்து கொடுத்து, பல கோடி மதிப்புள்ள உதவித் தொகையை மாணவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது இந்த ஜமாஅத்.
போராட்டக் களங்கள்
சில சந்தர்ப்பங்களில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பின் தங்கியிருக்கும் சமூகத்தின் உரிமைகளும் உணர்வுகளும் ஜனநாயக வழியில் போராடினாலேயன்றி பெற்று விட முடியாது.
நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பே இப்படித் தான் அமைந்துள்ளது.
முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையாக இருந்தாலும், ஏனைய சமூக மக்கள் ஆதிக்க வர்க்கத்தினரால் துன்பங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளானாலும், ஜனநாயக முறைக்குச் சிறிதும் மாற்றமில்லாத வகையில் அறவழிப் போராட்டங்களின் மூலம் மக்களின் பாதிப்புகளையும் கோரிக்கைகளையும் ஆள்வோர் கவனத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய துணைச் சாதனமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல சந்தர்ப்பங்களில் விளங்கியிருக்கிறது.
சமூக தீமைகளுக்கு எதிராக..
இன்று நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கக் கூடிய வட்டி, வரதட்சணை போன்ற கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்ற இந்த ஜமாஅத், இதில் குறிப்பிடத்தக்க சீர்த்திருத்தத்தையும் செய்து காட்டியிருக்கிறது.
மார்க்க ரீதியாகவும், சமூகப் பார்வையிலும் வட்டி வாங்குவதாலும், வரதட்சணை வாங்குவதாலும் ஏற்படுகின்ற மோசமான விளைவுகளை எடுத்துச் சொல்வதன் மூலம் பலர், திருமணத்தின் போது அறியாமையினால் வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கின்ற அழகியதோர் சூழலை இந்த ஜமாஅத் உருவாக்கியிருக்கிறது.
வட்டிக்குக் கடன் கொடுத்தோர், அசலை மட்டும் திரும்பப் பெற்று, வட்டியைத் தள்ளுபடி செய்து விடுகின்ற வியத்தகு மாற்றத்தையும் இந்தப் பிரச்சாரங்கள் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும், மது, புகையிலை போன்ற போதைப் பொருட்களால் சமுதாயம் அடைகின்ற அவல நிலையை விளக்கும் பொருட்டு ஏராளமான விழிப்புணர்வுப் பணிகளையும் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது இந்த ஜமாஅத்.
டாஸ்மாக் என்கிற பெயரில் வீதிக்கு வீதி அரசாங்கமே சாராயக்கடை நடத்துகின்ற இக்காலத்தில் அதனால் ஒரு தனி மனிதனுக்கும் அவனைச் சார்ந்திருக்கும் அவனது குடும்பத்திற்கும் ஏற்படுகின்ற தீமைகளை விளக்கி, இயன்ற அளவு அவர்களைக் குடிப்பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து வருகிறது.
அதே போன்று, தீவிரவாதச் செயல்களுக்கு எதிராகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் இந்த ஜமாஅத் செய்து வருகின்ற பிரச்சாரப் பணிகளால் இந்த சமூகம் அடைந்த நன்மைகள் பல.
இந்தச் சமூகம் தீவிரவாதச் செயல்களால் அடைகின்ற பாதிப்பை, பொதுக்கூட்டங்கள், அமைதிப் பேரணிகள், துண்டுப் பிரசுரங்கள் போன்ற பல வழிகளின் மூலம் மக்களுக்கு விளக்குவதோடு நாட்டில் அமைதி விளைவதற்கான அத்தனை முயற்சிகளிலும் இந்த ஜமாஅத் தம்மை ஈடுபடுத்தி வருகின்றது.
குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்தல்
குடும்பங்களுக்கிடையே உருவாகும் மனக்கசப்புகளையும், கொடுக்கல் வாங்கல் தகராறு, வரதட்சணைக் கொடுமை போன்ற சர்ச்சைகளையும் பேசி அவற்றை மனோதத்துவ ரீதியில் தீர்த்து வைக்கின்ற வகையிலான கவுன்சிலிங் மையங்களைக் கூட இந்த ஜமாஅத் நடத்தி வருகிறது.
காவல்துறை மற்றும் நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறும் நிலைக்குத் தள்ளப்படும் பல குடும்பப் பிரச்சனைகளை இந்த மையங்களிலேயே இயன்ற அளவு சுமூகமாகத் தீர்த்து வைக்கின்ற அளவிற்கு இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் சமூக நலனோடு தங்களை இந்தப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
தனி மரமாக மனிதனால் இவ்வுலகில் வாழ இயலாது.
மனிதன் ஒரு சமூகப் பிராணியாவான்.
சமூகத்தோடு ஒன்றி வாழ்கிற போது தான் மனித வாழ்க்கை முழுமை பெறுகிறது.
அப்படியிருக்கும் போது, தான் சார்ந்திருக்கும் சமூகத்தை வாழ்வதற்குத் தகுதியான இடமாக மாற்றி அமைக்கின்ற முழுப் பொறுப்பும் அந்த மனிதனையே சாரும்.
இதனை முழுமையாக உணர்ந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் இந்தப் பேரியக்கம், வெறுமனே ஆன்மீக போதனைகளோடு தங்கள் பணிகளை சுருக்கிக் கொள்ளாமல், சாதி, மத, இன வேறுபாடுகள் அத்தனையையும் கடந்து, இந்தச் சமூகம் அனைத்து வகைகளிலும் சீர் திருத்தம் பெறுவதற்குத் தங்களால் இயன்ற வழிகளில் முயன்று வருகிறது.
அதனுடைய விளைவு, மக்கள் நலன் மற்றும் தேசப்பற்று மிகுந்த தலைமுறை ஒன்று உருவாவதற்கு சமூகத்தில் அடிகோலப்படுகிறது.
சத்தியக் கொள்கையிலிருந்து தடம் மாறி விடாமல், கொண்டிருக்கும் இத்தூய சமூகப் பணிகளை என்றென்றும் நிலைநாட்டிக் கொண்டிருக்க இந்த இயக்கத்திற்கு அல்லாஹ் அருள் புரியப் பிரார்த்திப்போம்.