ஏகத்துவம் – ஆகஸ்ட் 2017

கொள்கையே தலைவன்

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

இந்த வசனம் அல்லாஹ்வின் நேசத்தையும், அவனது தூதரைப் பின்பற்றுவதையும் வலியுறுத்துகின்றது

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3:34

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட இவ்வசனம் ஆணையிடுகின்றது.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

அல்குர்ஆன் 4:69

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதால் அவர்களுடன் சுவனத்தில் சேர்ந்திருக்கின்ற பாக்கியம் கிடைக்கும் என இவ்வசனம் தெரிவிக்கின்றது.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நட்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:24

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட மற்றவர்களை நேசத்திற்குரியவர்களாக  ஆக்கக்  கூடாது என்று இவ்வசனம் கட்டளையிடுகின்றது.

நபித்தோழர்கள் அல்லாஹ் கூறுகின்ற அடிப்படையில் அவனது தூதரைப் பின்பற்றினார்கள்; கட்டுப்பட்டார்கள்;  பிரியம் கொண்டார்கள்;  தங்கள் உயிர், உடல், உடைமை அத்தனையையும் அவர்கள் அவனது தூதருக்காக அர்ப்பணம் செய்தார்கள்.

அப்படிப்பட்ட தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  உஹத் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கிடைக்கின்றது. அவ்வளவு தான்!  அது அவர்களுடைய உள்ளங்களில் பெரும் அதிர்வலைகளையும், அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இறந்து போய் விட்டார்கள். இனிமேல் நமக்கு இந்த உலகத்தில் என்ன இருக்கின்றது? என்று நபித் தோழர்கள் தம்மையே மறந்தார்கள். இனிமேல் வாழ்வதில் அர்த்தமேது? என்ற விரக்தி நிலைக்கும், வெறுமை உணர்வுக்கும் சென்று விட்டார்கள்.

இதைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் திருக்குர்ஆனில்  3:144 வசனத்தை அருள்கின்றான்.  தூதர் போய் விட்டதால் தூதுச் செய்தி போய் விடாது என்று உணர்த்துகிறான்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

அல்குர்ஆன் 3:144

இறைத்தூதர் இறந்து விட்டால் அவர் கொண்டு வந்த கொள்கை இறந்து விடாது. அது சத்தியக் கொள்கை என்று அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

இறைத்தூதர் இருந்தாலும் இறந்தாலும் இந்தக் கொள்கை இருக்கும் என்று அவர்களுக்கு உணர்த்துகின்றான்.  உஹத் போர்க் களத்தில் அவர்களுக்கு இந்தப் பாடத்தை நடத்தி விடுகின்றான்.

உண்மையில்,  எல்லாம் வல்ல அல்லாஹ்  நபி (ஸல்) அவர்களுக்குரிய ஓர் ஒத்திகை மரணத்தை நபித்தோழர்களுக்கு நடத்திக் காட்டினான். விமான நிலையங்களில், விமான நிலைய ஊழியர்களுக்குத் தெரியாமல், எதிரிகள் தாக்குதல் நடத்துவது போன்று ஒரு போலி தாக்குதலை ஆட்சியாளர்களே நடத்துவார்கள். இதற்கு விஷீநீளீ ஞிக்ஷீவீறீறீ என்று குறிப்பிடுவார்கள். இந்த செயற்கைத் தாக்குதலின் போது விமான ஊழியர்கள் எப்படி செயல்படுகின்றார்கள் என்று பார்ப்பார்கள்.

அதுபோன்று உஹத் போர்க்களத்தில் இப்படி மரண ஒத்திகையை நடத்தி  நபித்தோழர்களுக்கு அல்லாஹ் ஒரு பாடமெடுத்து விடுகின்றான். இந்தப் பாடம் அவர்களுக்கு உஹதுக்குப் பிறகு உடனே பலனளிக்கவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு பயனளித்தது.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்த போது) உமர் (ரலி) எழுந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் – நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே – தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி – ஸல் – அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும், கால்களையும் துண்டிப்பார்கள்என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, ‘தங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். ‘(நபியவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) பேசியபோது உமர் (ரலி) அமர்ந்தார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போன்றிவிட்டு, ‘முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர் அல்லாஹ் (என்றும்) உயிருடன் இருப்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்என்று கூறினார்கள். மேலும், ‘நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களேஎன்னும் (திருக்குர்ஆன் 39:30ஆம்) இறை வசனத்தையும், ‘முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்என்னும் (திருக்குர்ஆன் 3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி 3670

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்ற கருத்தில் உமர் (ரலி) அவர்கள் மயங்கிக் கிடந்த வேளையில் உஹத் தொடர்பாய் அருளப்பட்ட 3:144 வசனத்தை அபூபக்ர் (ரலி) எடுத்துக் காட்டுகின்றார்கள். அவ்வளவு தான். உமர் (ரலி) உட்பட அத்தனை பேர்களையும் அது உசுப்பி விட்டது என்று சொல்வதை விட அவர்களை உயிர் கொடுத்துத் தட்டி எழுப்பியது என்று சொல்லாம்.  அன்று அபூபக்ர் (ரலி) அந்த வசனத்தை மட்டும் ஓதிக் காட்டவில்லை என்றால் உயரிய உன்னதக் கொள்கை கால் நூற்றாண்டைத் தாண்டுவதற்கு முன்னால் முடிவுக்கு வந்திருக்கும்.

உண்மையில், இஸ்லாம் நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பிறகும் வளர்ச்சியை நோக்கியே பயணத்தைத் தொடர்கிறது.

இந்த வசனத்திலிருந்தும், இது இறங்கிய பின்னணியிலிருந்தும் நபி (ஸல்) மரணத்தின் போது அபூபக்ர் (ரலி) பொருத்தமாக அந்த வசனத்தைக் கையாண்ட சம்பவத்திலிருந்தும் பெற வேண்டிய பாடமும், படிப்பினையும் என்ன?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தால் தான் மார்க்கம்; இல்லையேல் மார்க்கம் இல்லை என்று யாரும் சென்று விடக் கூடாது என்று இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.

ஏகத்துவக் கொள்கையில் ஒரு தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் இறந்து போகலாம்; அல்லது  பொறுப்பிலிருந்து விலகிப் போகலாம்; அல்லது கொள்கையிலிருந்து விலகிப் போகலாம்; அல்லது அவரது குற்றச்செயலுக்காக விலக்கப்படலாம்.

இது மாதிரியான கட்டங்களில் இன்னார் இருந்தால் நான் இருப்பேன்; இல்லையென்றால் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கருதினால் அவர் ஏகத்துவக் கொள்கையில் இருப்பவர் கிடையாது, அத்தகையவர்களுக்குக் கொள்கை தலைவன் கிடையாது, குருட்டு நம்பிக்கை தான் தலைவன். அத்தகையவர்கள் தனி நபர் வழிபாட்டில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் புடம் போட்டவர்கள் அல்லர் என்பது தான் இதிலிருந்து கிடைக்கும் பாடமும் படிப்பினையுமாகும்.

ஏகத்துவக் கொள்கையில் இருக்கின்ற நாம் இந்த அடிப்படையைப் புரிந்து பயணிப்போமாக!

—————————————————————————————————————————————————————————————

ஹஜ் தொடர்பான ஆதாரப்பூர்வமான துஆக்கள்

அபுஆதில்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை இரண்டு.

  1. ஜகாத், 2. ஹஜ்.

பொருளாலும், உடலாலும் சக்தி பெற்றவர்கள் மீது வாழ்நாளில் ஒருமுறையாவது மக்கா சென்று கஃபாவை ஹஜ் செய்வது கடமையாகும். இவ்வாறு குர்ஆன் கட்டளையிடுகிறது.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.

அல்குர்ஆன் 3:97

எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் (முஸ்லிம் 2286) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதுடன் அதன் முறைகளைச் செய்து காட்டி விட்டும் சென்றுள்ளனர்.

நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் கிரியைகள் மீது கவனம் செலுத்தினால் அதில் ஒரு விஷயம் நமக்கு நன்றாகப் புலப்படும்.

படைத்த இறைவனை நினைவு கூர்வது தான் ஹஜ்ஜின் நோக்கம் என்பதை நபிகளாரின் ஹஜ் செய்முறை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லும்.

பின்வரும் வசனமும் ஹஜ்ஜின் போது இறைவனை நினைவு கூர்வதை வலியுறுத்துகின்றன.

(ஹஜ்ஜின்போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும்போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.

அல்குர்ஆன் 2:198

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனை எவ்வாறு நினைவு கூர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றினார்களோ அவ்வாறே முஸ்லிம் சமுதாயம் ஹஜ் செய்ய வேண்டும். அதுவே இறைவனின் கட்டளை.

ஹஜ்ஜின் போது சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இன்னின்ன துஆக்களை – திக்ருகளை ஓதிட வேண்டும் என்று நபிகளார் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

ஹஜ்ஜுடைய மாதம் நெருங்கி விட்டதால் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முஸ்லிம்கள் இந்த துஆக்களை மனனமிட்டு முறையாக ஓதும் போது இறைவனின் அளப்பரிய அருளைப் பெறலாம்.

துவக்கமாக ஹஜ்ஜுக்காகப் பயணம் மேற்கொள்ளும் போது பயண துஆவை மறக்காமல் ஓதிவிட வேண்டும் என்பதால் அதை மனனமிட்டு கொள்ள வேண்டும்.

பயணத்தின் போது…

தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை

اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ

அல்லாஹு அக்ப(B]ர் – அல்லாஹு அக்ப(B]ர் -அல்லாஹு அக்ப(B]ர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

பின்னர்

سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُاَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ

ஸுப்(B]ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B]னா லமுன்கலிபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ[தி] ஸப[தி]ரினா ஹாதா அல்பி(B]ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப[தி]ரனா ஹாதா வத்வி அன்னா பு(B]ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B] பி[தி]ஸ்ஸப[F]ரி வல் கலீப[தி](த்)து பி[F]ல் அஹ்லி அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப[F]ரி வகாப(B]தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B] பி[F]ல் மாலி வல் அஹ்லி

பொருள் :

அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குக் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

என்று கூறுவார்கள்.

பார்க்க: முஸ்லிம் 2392

ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும், உம்ராவையும் செய்ய நாடுபவர் கூற வேண்டிய துஆ

லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன் (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்)

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால்…

லப்பைக்க ஹஜ்ஜன்

உம்ராவை மட்டும் செய்ய நாடினால்…

லப்பைக்க உம்ரதன்

இஹ்ராம் ஆடை அணிந்த பின் மேற்கண்டவாறு கூற வேண்டும். இதற்குப் பெயரே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

பார்க்க: முஸ்லிம் 2194, 2195

தல்பியா

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَك

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக

பார்க்க: புகாரி 1549, 5915

இதன் பொருள்:

இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.

இஹ்ராம் கட்டியவர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூற வேண்டும். ஏனைய துஆக்கள் ஓதும் இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தல்பியாவை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள் என்பது நபிமொழி.

பார்க்க: புகாரி 1544, 1683, 1687.

மஸ்ஜிதுல் ஹராமில் நுழையும் போது…

மஸ்ஜிதுல் ஹராமில் நுழையும் போது ஓதுவதற்கென்று பிரத்தியோகமாக எந்த துஆவையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பொதுவாகப் பள்ளிவாசலில் நுழையும் போது ஓத வேண்டிய துஆ மஸ்ஜிதுல் ஹராமிற்கும் பொருந்தும் என்பதால் அதையே ஓதிக் கொள்ள வேண்டும்.

اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்[F]தஹ் லீ அப்(B]வாப(B] ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

நூல்: முஸ்லிம் 1165

கஃபாவை தவாஃப் செய்யும் போது…

தவாஃப் செய்யும் போது ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

ரப்பனா ஆ(த்)தினா ஃபித்துன்யா ஹஸன(த்)தன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்.

இதன் பொருள்:

அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!

பார்க்க: அஹ்மத் 14851,  அபூதாவூத் 1616

ஸஃபா மற்றும் மர்வாவில் ஓத வேண்டியவை

தவாஃபுல் குதூம் எனும் தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும்.

ஸஃபா குன்றின் மேல் ஏறி நின்று கிப்லாவை முன்னோக்கி செய்ய வேண்டிய துஆ

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كَلِّ شَىْءٍ قَدِيرٌ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா

மர்வாவிலும் இவ்வாறே துஆ ஓதிக் கொள்ள வேண்டும்.

இதன் பொருள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக பல படையினரை தோற்கடித்துவிட்டான்

பார்க்க: முஸ்லிம் 2137, புகாரி 1616, 1624

மஷ்அருல் ஹராமில் கூற வேண்டியவை

குறிப்பிட்ட நாளில் மஷ்அருல் ஹராம் என்ற இடத்துக்கு வந்ததும் அங்கே கிப்லாவை முன்னோக்கி இறைவனை இறைஞ்சுவதோடு பின்வருமாறு கூற வேண்டும்.

அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லாயிலாஹ இல்லல்லாஹு

இதன் பொருள்:

அல்லாஹ் மிகப் பெரியவன். அவனன்றி வேறு கடவுள் இல்லை. அவன் தனித்தவன். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை.

பார்க்க: முஸ்லிம் 2137

ஜம்ரதுல் அகபா

துல்ஹஜ் பத்தாம் நாள் காலையில் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபா என்ற இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் கூற வேண்டியது

அல்லாஹூ அக்பர்

ஏழு கற்களை எறிந்த பின் கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும்.

பார்க்க: புகாரி 1753

ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளையும் முடித்து ஊருக்குத் திரும்பும் போது பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

பயணத்திலிருந்து திரும்பும் போது…

آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبّنَا حَامِدُوْنَ

ஆயிபூ(B]ன தாயிபூ(B]ன ஆபி(B]தூன லிரப்பி(B]னா ஹாமிதூன்.

இதன் பொருள் :

எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும்புகழ்ந்தவர்களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.

பார்க்க: முஸ்லிம் 2392

—————————————————————————————————————————————————————————————

நற்குணத்தில் உயர்ந்த  நபித்தோழியர்கள்

கே.எம். அப்துந்நாஸிர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழியர்கள் மிக உயர்ந்த நற்குணங்களுக்கு சொந்தக்காரர்களாகத் திகழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிந்திக்கும் எவரது கண்களிலும் கண்ணீர்த் துளிகள் பெருக்கெடுக்கும். அந்த அளவிற்கு இஸ்லாத்தினை உள்ளத்தில் கடுகளவும் சந்தேகம் இன்றி மிக உறுதியாகப் பின்பற்றியுள்ளனர். மறுமை நம்பிக்கை என்பதை வெறும் வாயளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியுள்ளனர்.

இறைச் செய்தியான குர்ஆன் மற்றும் சுன்னாவை மட்டும் பின்பற்றிய நபித்தோழியர்களை, அந்த அற்புத இஸ்லாம் எப்படிப்பட்ட உயர்ந்த நற்குணம் குடிகொண்டவர்களாக மாற்றியது என்பதற்குச் சில உண்மையான வரலாற்றுச் சான்றுகளைக் காண்போம்.

நீளமான கை கொண்ட அன்னை ஸைனப் (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களது மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டார். அதற்கு, ‘உங்களிள் கை நீளமானவரேஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்த போது சவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் -ரலி- இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்

நூல்: புகாரி 1420

அண்ணலாரின் அருமை மனைவியார் அன்னை ஸைனப் (ரலி) அவர்களின் மிக உயர்ந்த நற்குணத்தை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

திருமறைக் குர்ஆனின் ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் இறைவழியில் வாரி வழங்குவதன் சிறப்புகளை எடுத்துரைக்கின்றன. ஆனால் வெறுமனே படித்து விட்டும், கேட்டுவிட்டும் கடந்து செல்வோர் தான் ஏராளமாக உள்ளனர். திருமறை வசனங்களும், இறைத்தூதர்களின் போதனைகளும் அவர்களின் உள்ளங்களில் எத்தகைய மாற்றத்தையும் உருவாக்குவதில்லை.

ஆனால் அண்ணலெம் பெருமானாரின் அருமை மனைவியார் அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் இறைக் கட்டளைகளுக்கிணங்க வாரிவழங்கும் மிக உயர்ந்த நற்குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர்.

மரணம் என்பது நிரந்தப் பிரிவல்ல. முஃமின்களுக்கு அது ஒரு தற்காலிகப் பிரிவுதான். இதனால் தான் நபியவர்கள் மரணித்த பிறகும் முஃமின்களுக்கு அழிவில்லை என்பதை ‘‘உங்களில் கை நீளமானவர் என்னை முதலில் சந்திப்பார்’’ என்று கூறி மரணத்திற்குப் பிறகும் முஃமின்களுக்கு சந்திப்பு உண்டு என்று எடுத்துரைக்கிறார்கள்.

உயிரினும் மேலான உத்தம நபியை முதலில் சந்திக்கும் வாய்ப்பை அன்னை ஸைனப் (ரலி) அவர்கள் தம்முடைய வாரி வழங்கும் உயர்ந்த உள்ளத்தால் உடனடியாகப் பெற்றுக் கொள்கிறார்கள்.

தனக்குத் தேவையிருந்தும் வாரி வழங்கிய அன்னை ஆயிஷா (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள் எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1418

முஃமின்களின் மிக உயரிய பண்பினை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப் படுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 59:9

திருக்குர்ஆன் குறிப்பிடும் முஃமின்களின் மிக உயர்ந்த பண்பினைக் கொண்டவர்களாக அன்னை ஆயிஷா (ரலி) திகழ்ந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தி எடுத்துரைக்கிறது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பேரீச்சம்பழம் தான். அந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட தன்னிடம் யாசகம் கேட்டு வந்த அந்த ஏழைப் பெண்ணிற்கு வழங்குகிறார்கள்.

தன்னுடைய தேவை போகத்தான் தானம் என்பதே மனித இயல்பு. ஆனால் தனக்கில்லாத போதும் பிறர்க்கு வழங்குதல் மனித நேயர்களின் இயல்பு. அத்தகைய மனிதநேயமிக்க நற்குணம் கொண்டவர்களாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இஸ்லாம் எடுத்துரைக்கும் தர்ம சிந்தனைகளை தன்னுடைய சிந்தையில் இருத்தி சீரிய செயலாற்றல் கொண்டவர்களாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

நரகத்திற்கு அஞ்சி வாரி வழங்கிய ஸைனப் (ரலி)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள் என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?’ எனப் பெண்கள் கேட்டதும், ‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்என்று நபி (ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி (ஸல்) அவாகள் வினவ, இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்! என்று கூறப்பட்டது. அவருக்கு அனுமதி வழங்குங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதைத் தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?)’ என்று கேட்டார். இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும், உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1462

பெண்களே அதிகம் தர்மம் செய்யுங்கள். உங்களைத் தான் நான் நரகில் அதிகம் கண்டேன் என்ற இறைத்தூதரின் எச்சரிக்கை ஸைனப் அவர்களின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மேற்கண்ட சம்பவம் எடுத்துரைக்கிறது.

நரகத்தின் மீது அவர்கள் கொண்ட பயத்தினையும், இறைத்தூதரின் வார்த்தைகளின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையையும், அவர்களுக்கிருந்த வாரி வழங்கும் உயர்ந்த உள்ளத்தையும் இச்சம்பவம் நம் கண்களின் முன் கொண்டு வருகிறது.

கணவரே தனது தேவையை எடுத்துரைத்து தனக்கு தர்மம் செய்யுமாறு வேண்டிய பிறகும் இறைத்தூதரின் கருத்தறியாமல் வழங்க இயலாது என்பதை எடுத்துரைக்கிறார்கள். இறைத்தூதர் வழிகாட்டிய பிறகே அதனை நல்வழியாகக் கருதுகின்றார்கள்.

நபித்தோழியர்களின் வாழ்வில் நடந்த இச்சம்பவத்தில் நாம் பெற வேண்டிய பல படிப்பினைகள் இச்சம்பவத்தில் நிறைந்துள்ளன.

அன்னதானம் வழங்கிய அன்னை உம்முஷரீக் (ரலி)

உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார்கள்.    

நூல்: முஸ்லிம் 4506

உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும், அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக் கூடியவராகவும் இருந்தார். அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள். நபி (ஸல்) அவர்களே  உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார் என்று மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். இதனை ஸஹீஹ் முஸ்லிம் (5638) ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 5638

பசித்தோருக்கு உணவளிப்பது மிகச் சிறந்த நல்லறமாகும்.

அல்லாஹ் தீயவர்களின் பண்பினை பற்றிக் குறிப்பிடும் போது ‘‘ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை” (அல்குர்ஆன் 107:3)  என்று குறிப்பிடுகின்றான்.

உண்மையான நல்லடியார்களின் பண்பு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனின் திருமுகத்தை மட்டும் நாடி பசித்தோருக்கு உணவளிப்பதாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ‘‘அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை’’ (எனக் கூறுவார்கள்.)

அல்குர்ஆன் 76:8, 9

இறைவன் எடுத்துரைக்கும் நல்லடியார்களின் நற்பண்பினைக் கொண்டவர்களாக அன்னை உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். இறைவன் அவர்களுக்கு தாராளமாகச் செல்வ வசதியைக் கொடுத்த காரணத்தினால் தம்முடைய செல்வத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு விருந்தளித்துப் பசி போக்கியுள்ளார்கள்.

அதனால் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை உம்மு ஷரீக் (ரலி) அவர்களைப் பற்றி பாராட்டிக் கூறியுள்ளார்கள்.

செல்வ வசதி பெற்ற எத்தனையோ செல்வந்தர்கள் பிறர் நலத்தினைப் பற்றிக் கடுகளவும் அக்கறையின்றி செயல்படும் போது அன்னை உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் தம்முடைய செல்வத்திலிருந்து உணவளித்து, விருந்தளித்தது அவர்களின் உயரிய குணத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஏழைகளுக்கு உணவளித்த உன்னதப் பெண்மணி

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும்.

நாங்கள் ஜுமுஆத் தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

நூல்: புகாரி 938

நபியவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் எந்த அளவிற்குச் சிறந்து விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

வெள்ளிக்கிழமை என்றாலே மிகச் சிறப்பாக உணவருந்த வேண்டும் என அனைவரும் விரும்புவர். ஆனால் வெள்ளிக்கிழமை கூட வயிற்றுக்கு உணவில்லாத ஏழை ஸஹாபாக்களும் நபியவர்கள் காலத்தில் இருந்துள்ளனர். அத்தகைய ஏழை நபித்தோழர்களுக்கு ஒரு அடைக்கலமாக தன்னுடைய வயோதிக காலத்திலும் ஒரு பெண்மணி திகழ்ந்துள்ளார் என்றால் எத்தகைய உயரிய நற்குணங்களுக்கு உரியவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதைக் கண்டு நம் மெய்சிலிர்க்கின்றது.

வயோதிக காலத்திலும் தமது தோட்டத்தில் தானே பயிர் செய்து, அதனை அறுவடை செய்து, தானே சமையலும் செய்து, வெள்ளிக்கிழமை ஏழை நபித்தோழர்களுக்கு உணவளித்துள்ளார் என்றால் உண்மையில் மிகச் சிறந்த இறைநம்பிக்கையாளராகவும், இறை நம்பிக்கையாளருக்கு உதாரணமாகவும் இப்பெண்மணி திகழ்ந்துள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

—————————————————————————————————————————————————————————————

தவறான புரிதலால் ஏற்படும் குழப்பங்கள்

எம்.எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்

வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருக்கும் கணவன், மனைவியிடம் போனில் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசிக் கொண்டிருக்கும் போது செல்போன் துண்டிக்கப்பட்டுவிட்டால் வேண்டு மென்றே துண்டித்துவிட்டாள் என்று கணவனும், கோபத்தில் போனைத் துண்டித்துவிட்டார் என்று மனைவியும் நினைக்கின்ற காரணத்தினால் இருக்கின்ற சின்ன சின்ன பிரச்சனைகளையும் கூட பெரிதாகச் சித்தரிக்கின்ற மனநிலை இன்று பெரும்பாலான நபர்களிடத்தில் காணப்படுகின்றது. இந்தக் காரணத்துக்காகவே விவாகரத்துச் செய்து கொண்ட தம்பதிகளும் உண்டு.

சிலர் அவசரத் தேவைக்காக போன் செய்யும் போது எதிர்முனையில் உள்ளவர் போனை எடுக்காமல் இருப்பார். ஒருவேளை செல்போனில் பேலன்ஸ் தீர்ந்திருக்கலாம்; டவர் பிரச்சனையாக இருக்கலாம்; அல்லது ஏதேனும் வேலையில் இருக்கலாம்; கழிவறை, குளியலறையில் இருக்கலாம்; அல்லது பயணத்தில் இருக்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டால் பிரச்சனையும், மன அழுத்தமும் குறையும்.

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.

நூல்: புகாரி:6475

நேருக்கு நேர் பேசும் போதே பிரச்சனைகள் அதிகமாக வரும் போது போனில் பேசும் போது என்ன நிலையாகும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிரிந்திருக்கும் போது பல மனக் குழப்பத்தினாலும் பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பிலும் வேலைப்பளு மற்றும் உடல் உபாதைகளினாலும் ஏற்படுகின்ற மனவலியில் கடும் கோபம் ஆண்களுக்கு ஏற்படும். அதை யாரிடத்தில் வெளிப்படுத்துவது என்பதை அறியாமல் தனக்குக் கிடைத்த அடிமை மனைவி தானே என்று மனைவியிடம் பேசும் போது சிறிய பிரச்சனையை கணவன் பெரும் பிரச்சனையாக ஆக்குவதை காண்கின்றோம். இதில் அவளை மட்டும் குற்றம் சாட்டாமல் அவளது குடும்பத்தில் உள்ள அனைவரையும் அவன் குற்றவாளியாக ஆக்கி பழைய பல விஷயங்களை தோண்டி எடுத்து அதற்குக் காரணத்தையும் தேட ஆரம்பித்துவிடுகின்றான்.

தன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும்; அவளுக்குத் தேவையான நகை நட்டுகள், வீடுகள், சொத்துக்கள் சேர்க்க வேண்டும் என்று தான் மனிதன் வெளிநாட்டை நோக்கிக் கடல் கடந்து செல்கின்றான். ஆனால் எந்த சந்தோஷத்தை அவளுக்குக் கொடுக்க வேண்டும்  என்று நினைத்தானோ அதையே மறந்து, கீழ்த்தரமாக அவளிடத்தில் நடந்தும் கொள்கின்றான். தனது உணர்வுகளையும், ஆசாபாசங்களையும் சாகடித்துக் கொண்டு தன்னைத் தானே நொந்தும் கொள்கின்றான். தன்னை நம்பி வந்தவளையும் நோகடிக்கின்றான்.

இதே போன்று தான் பெண்களும். கணவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் அம்மா இப்படிச்  சொன்னார்; அப்படிச் சொன்னார் என்றெல்லாம் குறை சொல்லி டென்ஷனை ஏற்றி விடுவார்கள்.

இழக்கக்கூடாததை இழந்துவிடாதீர்

உறவுகளுக்குப் பாலமாக இருக்கின்ற அன்பையும், பாசத்தையும் பிறந்த மண்ணிலே தொலைத்து விட்டு, அதை வெளிநாடுகளில் தேடுவதில் அர்த்தமில்லை. தவறான விஷயங்களுக்குத் துணைபோகும் தனிமை, சந்தேகப்பார்வை, தந்தையின் கண்காணிப்பு இல்லாமல் வளரும் இளைய சமுதாயம், தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க முடியாமை, பெற்றோரின் இறுதிக் காரியங்களில் கலந்து கொள்ள முடியாமை இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் வெளிநாட்டு வாழ்க்கையில் கொட்டிக் கிடக்கின்றன.

வீடுவாசல், நகைநட்டுகள், சொத்துபத்துக்கள் சேர்க்க வேண்டும் என்ற பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அன்பான கணவன், அரவணைக்கும் பிள்ளைகள், பிரச்சனைகள் என்றால் ஓடிவரும் சகோதரன், தோள்கொடுக்கும் தோழன் போன்ற உண்மையான உறவுகளை இழந்து காலத்திற்கும் வருந்தாதீர்கள். பணம் மட்டும் வாழ்க்கையல்ல! அதையும் தாண்டி நாம் அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் நம் வாழ்க்கை முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன என்பதை உணர்ந்து அதற்கேற்ப நம் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் மாற்றிக்கொண்டால் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழலாம்.

ஒளிவு மறைவு  இல்லாத இல்லறம்

பல கணவன்மார்கள் தங்களின் மனைவியிடம் தன்னைப் பற்றியும் தனது மனச்சுமைகளான பொருளாதாரம், உடல்நிலை போன்றவற்றைப் பற்றியும் முறையாக வெளிப்படுத்துவதில்லை. இதுவும் கணவன் மனைவிக்கு மத்தியில் பல மனக்கசப்புகளுக்குக் காரணமாக ஆகிவிடுகின்றது.

ஒரு இரகசியம் தனக்குத் தெரியவில்லையென்றால் மண்டை கபாளமே சுக்கு நூறாக ஒடிந்தது போலத் தோன்றும் குணமுள்ள பெண்களுக்கு, தனது கணவனின் அந்தரங்கம் மற்றும் வெளிப்டையான செயல்களுக்குக் காரணம் தெரியவில்லையென்றால் எப்படியிருக்கும்? கணவனின் உடல் மற்றும் மனநிலை, குடும்பச்சூழல், பொருளாதார சூழ்நிலைகள் கண்டிப்பாக மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

தான் எப்படிப்பட்டவரைத் திருமணம் செய்திருக்கின்றோம், அவரது தகுதி என்ன? அவரால் நமக்கு எந்தளவிற்கு செலவு செய்ய முடியும் என்பதை விளங்காத பல பெண்கள், தாங்கள் ஏதோ டாடா பிர்லாவைத் திருமணம் முடித்ததாக நினைத்துக் கொண்டு கணவனின் சூழ்நிலைகளை அறியாமல் கண்மூடித்தனமாக செலவுசெய்வதைக் காண்கின்றோம்.

எனவே கணவன் மனைவி இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர்கள் நன்கு புரிந்திருக்க வேண்டும். ஆணும் பெண்ணும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். திருமணம் என்ற ஒப்பந்தத்தில் இருவரும் இணையும் போது புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் என்பவை மட்டும் இல்லையென்றால் அந்த இல்லற வாழ்க்கை இனிய வாழ்க்கையாக இல்லாமல் விபரீதத்தில் போய் முடிந்துவிடும்.

கணவன், மனைவி ஆகிய இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு, கலந்துரையாடி வாழ்க்கையைத் தொடர்ந்தால் இல்லறம் இனிமையாக இருக்கும்.

—————————————————————————————————————————————————————————————

ஸபீலுல் முஃமினீன் – நம்பிக்கையாளர்களின் வழி என்றால் எது?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

வஹீ எனும் இறைச்செய்தியையே முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வஹீ அல்லாத எதுவாயினும் அது பின்பற்றத்தக்கதல்ல என்பதோடு அவைகளைப் பின்பற்றுவது வழிகேடு என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் தலையாய பிரச்சாரமாகும்.

இறைச்செய்தியை மட்டுமே பின்பற்றுதல் எனும் நேர்வழியில் முஸ்லிம்கள் நாமனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து நாம் விடுத்து வருகிறோம். அநேக மக்கள் இந்த சத்தியப் பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

முன்னோர்களைப் பின்பற்றுதல், இமாம்களைப் பின்பற்றுதல், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் என்பன போன்ற தாங்கள் கொண்டிருந்த தவறான கொள்கைகளை விட்டும் விலகி இறைச் செய்தியை மட்டுமே பின்பற்றுவோம் என்று சூளுரைத்து இக்கொள்கையில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.

ஆனால் வழிகேட்டை மக்களிடையே பரப்பும் வழிகேடர்கள் அவ்வப்போது ஏதேனும் ஒரு குர்ஆன் வசனத்தை எடுத்துக் கொண்டு, அதை திரித்துக் கூறி வஹீ அல்லாததைப் பின்பற்றுதல் எனும் வழிகேட்டுக்கு ஆள்சேர்க்கும்  தரங்கெட்ட வேலையைப் பார்க்கிறார்கள்.

இவ்வேலையை ஏதோ கப்ர் வணங்கிகளும் மத்ஹப்வாதிகளும் மட்டுமே பார்க்கிறார்கள் என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.

தவ்ஹீதின் போர்வையில் உலாவரும் கள்ள ஸலபிகளும் கன கச்சிதமாக இதைச் செய்கிறார்கள். சொல்லப்போனால் தர்காவாதிகளை விட மனோஇச்சைக் கருத்தை மார்க்கத்தின் பெயரால் புகுத்துவதில் கள்ள ஸலபிகளே முதலிடத்தில் இருக்கிறார்கள்.

இறைச்செய்தியை விடுத்து மனிதக்கருத்துக்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எவரிடத்திலும் எக்காலத்திலும் ஆதாரம் இருந்ததில்லை, இருக்காது, இருக்கப்போவதுமில்லை.

ஆனால் இந்தக் கள்ள ஸலபிகளோ நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை மார்க்கத்தின் பெயரால் சொல்லி, மக்களைத் தவறான கொள்கையை நோக்கி அழைக்கின்றார்கள். அதற்காக இறைவசனத்தில் பல தகிடுதத்தங்களை, திருகுதாளங்களைச் செய்கிறார்கள்.

இவர்களின் கள்ளத்தனத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.

{ وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا} [النساء: 115]

நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 4:115

இவ்வசனத்தைக் கூறி, பின்வருமாறு வாதம் எழுப்புகிறார்கள்.

தூதருக்கு மாறு செய்தாலும் நரகம், சபீலுல் முஃமினீன் அல்லாத வேறு வழியைப் பின்பற்றினாலும் நரகம் என்று இவ்வசனம் கூறுகிறது.

அப்படி என்றால் தூதரையும் பின்பற்ற வேண்டும் ஸபீலுல் முஃமினீன் எனும் முஃமின்களின் பாதையையும் பின்பற்ற வேண்டும். இறைவன் குறிப்பிடும் முஃமின்கள் சஹாபாக்கள் ஆவர்.

எனவே முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு இரண்டு வழியை இறைவன் முன்வைத்துள்ளான்.

  1. தூதரின் பாதை
  2. நபித்தோழர்களின் பாதை

இவ்விரண்டையும் பின்பற்றாவிட்டால் நரகம் என்று அல்லாஹ்வே எச்சரிக்கை செய்வதால் நபித்தோழர்களையும் பின்பற்ற வேண்டும்.

இதுதான் கள்ள ஸலபிகள் முன்வைக்கும் கயமை நிறைந்த வாதமாகும்.

முஃமின்களின் பாதை எது?

இவ்வசனத்தில் முஃமின்களின் பாதை என்று தான் சொல்லப்பட்டுள்ளது.

நபித்தோழர்களின் பாதை என்று சொல்லப் படவில்லை. நபித்தோழர்களையும் கியாமத் நாள் வரை வரக்கூடிய அனைத்து முஃமின்களையும் குறிக்கும் வகையில் தான் இச்சொற்றொடரை அல்லாஹ் பயன்படுத்தி உள்ளான்.

இன்னும் சொல்வதாக இருந்தால் இந்தக் கட்டளை முதலில் நபித்தோழர்களுக்குத்தான். அவர்களை நோக்கியே இவ்வசனம் பேசுகிறது.

‘நீங்கள் முஃமின்களின் பாதையை பின்பற்றுங்கள்’ என்று நபித்தோழர்களுக்கே கட்டளை இடப் பட்டுள்ள போது நபித்தோழர்களைப் பின்பற்றுதல் என்று பொருள் கொள்வது உளறலாக ஆகிவிடுகிறது.

நபித்தோழர்களே! நீங்கள் நபித்தோழர்களின் பாதையைப் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்வது இறைவார்த்தையின் பொருளை நீர்த்துப் போகச் செய்து, அதை அர்த்தமற்ற உளறலாக்கும் மகா பாவமானதாகும்.

அதேவேளை, இது நபித்தோழர்களுக்கு மட்டுமே உரிய கட்டளையல்ல, நபித்தோழர்கள் காலத்துக்குப் பின்னால் வந்தவர்களுக்கும் இக்கட்டளை உள்ளது. அவர்களும் இக்கட்டளையில் அடங்குபவர்களே. அவர்களும் முஃமின்களின் பாதையைப் பின்பற்ற வேண்டும்.

முஃமின்களின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்றால் யார் முஃமின்கள் என்று நாம் அறிந்தாக வேண்டும். ஆனால் ஈமான் எனும் இறை விசுவாசம், உள்ளம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் யாரிடம் ஈமான் உள்ளது என்பதை நம்மால் அறிய முடியாது.

உள்ளத்தில் உள்ளதை ஊடுருவி அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. அல்லாஹ்வையன்றி யாரும் எவருடைய உள்ளத்தில் உள்ளதையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களில்லை.

எப்போது ஈமான் என்பது உள்ளம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டதோ அப்போதே யார் ஈமான்தாரிகள், முஃமின்கள் என்பதை மனிதர்கள் அறிய முடியாது; அல்லாஹ் ஒருவனே அறிவான் என்றாகி விட்டது.

உண்மையான இறை நம்பிக்கையாளர்களை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான் என்று ஏராளமான சான்றுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

குழந்தையின் நிலை

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை’’ என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5175

ஒன்றுமே அறியாத சிறு குழந்தையைக் கூட இறை நம்பிக்கையாளர் என்ற அடிப்படையில் அவரது நிலையை முடிவு செய்யக் கூடாது என்று இந்த செய்தி தெரிவிக்கின்றது. ஒரு குழந்தையின் நிலையே இதுவென்றால் பெரியவர்களின் நிலை குறித்து முடிவு எடுப்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமோ?

முஹாஜிர்

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார், எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்’’ எனக் கூறினேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?’’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’’ என நான் கேட்டேன். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது’’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

நூல்: புகாரி 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிக நல்லவராகவும், வணக்கசாலியாகவும் வாழ்ந்து, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பல காலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்முல் அஃலா அவர்கள், “அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்’’ எனக் கூறுகிறார். நபியவர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

நம்முடைய பார்வைக்கு இறை நம்பிக்கையாளராக, நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

நபியவர்கள் கூட ஒரு நபித்தோழரின் நிலையை, தாம் பார்த்த அடிப்படையில் முடிவு செய்யக் கூடாது என்றால் நாம் எப்படி அறிய முடியும்? முடிவு செய்ய முடியும்?

உயிர்த்தியாகி என்பதால்…

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்துடன் இணைந்து போரிட்டார். அப்போரில் அவர் கொல்லப்பட்டார். அவர் சொர்க்கவாசி என்று நபித்தோழர்கள் கூறியதை நபியவர்கள் கண்டித்துள்ளார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்என்று கூறிக்கொண்டே வந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் 182

உயிரைத் தியாகம் செய்வதற்கு நிகரான நல்லறம் ஏதும் இல்லை. அவர்களை விட உண்மையான முஃமின்கள் என்று வேறு யாரைத் தான் அடையாளப்படுத்த இயலும்? ஆனால் அத்தகைய ஷஹீதுகள் குறித்து நபித்தோழர்கள் எடுக்கும் முடிவை நபிகள் நாயகம் கண்டிக்கின்றார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். 

அல்குர்ஆன் 60:10

வெளிப்படையான செயல்களாலும் நடவடிக்கை களாலும் ஒருவர் நமது பார்வைக்கு முஃமின்களாகத் தெரிந்தாலும் உண்மையான முஃமின்கள் யார் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் என்று இவ்வசனம் தெளிவாக விளக்கி விட்டது.

நாம் யாரை முஃமின்கள் என்று முடிவு செய்கிறோமோ அவர்கள் அல்லாஹ்விடத்திலும் முஃமின்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கணிப்பு தவறாகி விடவே வாய்ப்பு அதிகம் என்றும் இந்த சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. (இன்னும் பல சான்றுகள் உள்ளன. நீளம் கருதி தவிர்த்திருக்கிறோம். அதை அறிய விரும்புவோர் ‘‘அவ்லியாக்களை அறிந்து கொள்வது எப்படி?’’ என்ற சகோ. பிஜேவின் நூலைப் பார்வையிடவும்.)

இந்நிலையில் அல்லாஹ் மட்டுமே அறிந்த முஃமின்களை நாம் கண்டுபிடித்து அவர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கூறுவானா?

இதனடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்கு கள்ள ஸலபிகள் அளிக்கும் வியாக்கியானம் எத்தகைய தவறான விளக்கம் என்பதை அறியலாம்.

இரு அர்த்தங்கள்

அப்படி என்றால் எது சரியான பொருள்?

முஃமின்களின் பாதை என்ற சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உள்ளன.

முஃமின்கள் சென்ற பாதை என்பது ஒரு பொருள்.

முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்பது மற்றொரு பொருள்.

முஃமின்கள் சென்ற பாதை என்று பொருள் கொண்டால் முஃமின்கள் யார் என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் ஆற்றலை அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்க வேண்டும். அந்த ஆற்றலை அல்லாஹ் நமக்கு மட்டுமல்ல, இறைத்தூதருக்கே வழங்கவில்லை என்பதை மேலே சான்றுகளுடன் கண்டோம். எனவே அந்தப் பொருள் கொள்ள முடியாது.

முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்று பொருள் கொண்டால் அதை அல்லாஹ் நமக்கு அறிவித்து உள்ளான்.

வஹீயைப் பின்பற்றுவது தான் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்று அல்லாஹ் நமக்குத் திருக்குர்ஆன் – நபிமொழிகள் மூலம் காட்டி தந்து விட்டதால் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதையில் நாம் பயணிக்க முடியும்.

இவ்வாறு பொருள் கொள்ளும் போது இது நபித்தோழர்களுக்கும் அழகாகப் பொருந்தும். நபித்தோழர்களாக இருந்தாலும் அவர்கள் தம் இஷ்டப்படி நடக்கக் கூடாது. மாறாக முஃமின்கள் செல்ல வேண்டிய பாதையில் தான் அவர்களும் செல்ல வேண்டும் என்பது மிகப் பொருத்தமாக அமைந்து விடுகிறது.

நபித்தோழர்கள் அல்லாதவர்களும் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதையில் செல்ல வேண்டும் என்பதும் அழகாகப் பொருந்திப் போகிறது.

சரி! முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை என்ன?

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத் தூதராகவே இருந்தாலும் அவர்களும் இறைவன் காட்டிய வழியில் தான் நடக்க வேண்டும், இறைச்செய்தியையே பின்பற்ற வேண்டும். இதுதான் முஃமின்கள் செல்ல வேண்டிய பாதை.

இக்கருத்தினை எண்ணற்ற இறைவசனங்கள் எடுத்தியம்புகின்றன. இதோ அல்லாஹ் கூறுகிறான்.

ஆதம் நபி

ஆதம் (அலை) அவர்கள் தாம் வசித்து வந்த சோலையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

அவர்களை வெளியேற்றும் போது அவர்களிடம் இறைவன் தன் வழிகாட்டுதலின் படி நடக்க வேண்டும் என்றே அறிவுரை கூறினான்.

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்என்று கூறினோம்.

திருக்குர்ஆன்  2:38

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.

திருக்குர்ஆன் 20:122

ஆதம் (அலை) அவர்களும் இறைவனிடமிருந்து வரும் நேர்வழியை – வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று இவ்வசனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதம் நபி அவர்களே இறைவனிடமிருந்து தெரிவிக்கப்படும் வஹீ எனும் இறை வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் – தாம் செல்லும் பாதையை சுயமாகத் தேர்வு செய்ய முடியாது என்றால் நபித்தோழர்கள் மட்டும் தாங்கள் செல்லும் பாதையை சுயமாகத் தேர்வு செய்து விட முடியுமா?

ஆதம் நபிக்கு வழங்காத அதிகாரத்தை அல்லாஹ் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்ற சஹாபாக்களுக்கு வழங்கிவிடுவானா?

இதிலிருந்து ஸபீலுல் முஃமினீன் – முஃமின்களின் பாதை எனும் இறைவார்த்தையில் கள்ள ஸலபிகள் முன்வைக்கும் வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்)

இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் வஹீயைத் தான் பின்பற்றி நடக்க வேண்டும்.

அதாவது இறைவன் காட்டிய பாதையிலேயே – இறைவழியிலேயே நபிகள் நாயகம் பயணிக்க வேண்டும். மாறாக தாம் விரும்பிய பாதையில் நபிகள் நாயகம் கூடப் பயணிக்க முடியாது.

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் 6:106

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:2

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லைஎனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 46:9

இறைவழியே நபிவழி

நபிவழியே நம்வழி என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் உண்மை என்னவெனில் இறைவழியே நபிவழியாகும். அல்லாஹ்வின் வழியில் தான் நபிகள் நாயகம் செல்ல வேண்டும். நபிக்கு என்று தனிவழி எல்லாம் கிடையாது.

(முஹம்மதே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!

அல்குர்ஆன் 45:18

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:15

இறைவனின் புறத்திலிருந்து அறிவிக்கப்படும் இறைச்செய்தியிலிருந்து ஒரு சொல்லைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் நபிக்கு வழங்கப் படவில்லை என்று இறைவன் தெளிவாக அறிவித்து விட்டான்.

ஒரு சொல்லை மாற்றியமைக்கும் அதிகாரம் இல்லை என்றால் புதிய பாதையில் போய்விடுவதென்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது.

இந்நிலையில் நபிகள் நாயகமே இறைவன் காட்டாத புதிய பாதையில் செல்ல முடியாது எனும் போது நபித்தோழர்கள் மட்டும் இறைவன் காட்டாத தாங்கள் விரும்பும் புதிய பாதையில் பயணித்து விட முடியுமா?

இதிலிருந்து அனைத்து முஃமின்களும் செல்ல வேண்டிய பாதை அல்லாஹ்வின் வஹீ மட்டுமே என்பதை அறியலாம்.

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என அல்லாஹ் கூறியதாகச் சொல்வது கள்ள ஸலபிகளின் மனோஇச்சைக் கருத்தாகும். இறைவசனத்தை தங்களுக்குத் தோதாகத் திரிக்கும் தீய(வர்களின்) வேலையாகும்.

ஏனெனில் நபித்தோழர்களாயினும் அவர்கள் இறைவனின் புறத்திலிருந்து நேர்வழி வராமல் – அதைப் பின்பற்றாமல் அவர்களால் நேர்வழி பெற முடியாது.

உங்கள் தெய்வங்களில் உண்மைக்கு வழிகாட்டுபவர் உண்டா?’’ என்று கேட்பீராக! அல்லாஹ்வே உண்மைக்கு வழிகாட்டுகிறான்’’ என்று கூறுவீராக! உண்மைக்கு வழிகாட்டுபவன் பின்பற்றத்தக்கவனா? பிறர் வழிநடத்தினால் தவிர தானாகச் செல்ல இயலாதவை பின்பற்றத்தக்கவையா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

அல்குர்ஆன் 10:35

இறைவன் நேர்வழி காட்டினாலே தவிர சுயமாக நேர்வழி பெற இயலாத நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அழைப்பது வழிகேட்டிற்கு அழைப்பதாகும்.

அல்லாஹ் காப்பானாக!

—————————————————————————————————————————————————————————————

லைலத்துல் கத்ருக்கு நிகரான வணக்கம்?

எம்.ஐ. சுலைமான்

سنن الترمذى – مكنز – (3 / 291)

763 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْبَصْرِىُّ حَدَّثَنَا مَسْعُودُ بْنُ وَاصِلٍ عَنْ نَهَّاسِ بْنِ قَهْمٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِى الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مَسْعُودِ بْنِ وَاصِلٍ عَنِ النَّهَّاسِ. قَالَ وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعْرِفْهُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ مِثْلَ هَذَا. وَقَالَ قَدْ رُوِىَ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- مُرْسَلاً شَىْءٌ مِنْ هَذَا. وَقَدْ تَكَلَّمَ يَحْيَى بْنُ سَعِيدٍ فِى نَهَّاسِ بْنِ قَهْمٍ مِنْ قِبَلِ حِفْظِهِ.

துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் மற்ற நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளைவிட அல்லாஹ் வுக்கு மிகவும் விருப்பமானவை ஆகும். அவற்றில் நோற்கப்படும் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஓராண்டு நோன்புக்கு நிகரானதாகும். அவற்றில் ஒவ்வோர் இரவில் நின்று தொழுவதும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று தொழுவதற்கு நிகரானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதீ (689), இப்னுமாஜா (1718) ஷுஅபுல் ஈமான், பாகம்: 5, பக்கம்: 311.

‘‘நான், இமாம் புகாரி அவர்களிடம் இந்த ஹதீஸைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், இந்த ஹதீஸில் உள்ளதைப் போன்று இந்த அறிவிப்பாளர் தொடரில் தவிர வேறு அறிவிப்பாளர் தொடரில் வந்திருப்பதாக எமக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள்’’ என்று திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்.

யாரும் சொல்லாத புதிய கருத்தாக இந்தச் செய்தி அமைந்துள்ளது என்பது புகாரி அவர்களின் ஆட்சேபணையாகும்.

(இதன்  நான்காவது அறிவிப்பாளர்) நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பாரின் நினைவாற்றல் குறித்து யஹ்யா பின் சயீத் அல்கத்தான் அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

இதையும் இமாம் திர்மிதீ இந்தச் செய்தியின் கீழே குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் பல அறிஞர்கள் நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال أحمد كان قاضيا وكان يحيى بن سعيد يضعف حديثه

இவருடைய செய்திகள் பலவீனமானது என்று யஹ்யா பின் ஸயீத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال الدوري عن ابن معين كان ابن عدي يقول لا يساوي شيئا

இவருடைய செய்திகள் எந்த மதிப்பும் இல்லாதது என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

قال ابن معين وليس هو بشئ كذا قال أبو حاتم

இப்னு மயீன், அபூஹாத்திம் ஆகியோர் இவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று குறிப்பிட்டுளார்கள்.

وقال عثمان الدارمي وغير واحد عن ابن معين ضعيف.

உஸ்மான் தாரிமி உட்பட பலர் இவரை பலவீனமானவர் என்று இப்னுமயீன் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال النسائي ضعيف

நஸாயீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال ابن حبان كان يروي المناكير عن المشاهير ويخالف الثقات لا يجوز الاحتجاج به

பிரபலமானவர்கள் வழியாக மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர். நம்பகமானவர்களின் செய்திகளுக்கு மாற்றமாக அறிவிப்பவர். எனவே இவரின் செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இப்னுஹிப்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

وقال الدارقطني مضطرب الحديث تركه يحيى القطان.

இவர் ஹதீஸ்களை குளறுபடியாக அறிவிப்பவர். இவரை யஹ்யா அல்கத்தான் அவர்கள் (ஆதாரத்திற்குரியவராக எடுக்காமல்) விட்டுள்ளார்கள் என்று தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

وقال العقيلي قال يحيى بن سعيد القطان لست اخذت عنه بشئ.

இவரிடமிருந்து எந்த ஒன்றையும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்று உகைலீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,

பாகம்: 10, பக்கம்: 426,427

மேலும் இந்தச் செய்தி மஸ்வூத் பின் வாஸில் என்பவர் வழியாக மட்டும்தான் வந்துள்ளது என்றும் திர்மிதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த மஸ்வூத் பின் வாஸில் என்பவர் வலிமையானவர் இல்லை என்று அபூதாவுத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

تهذيب التهذيب ـ محقق – (10 / 108(

قال الآجري عن أبي داود ليس بذاك

இவர் நம்பகமானவர் இல்லை என்று அபூதாவுத் அவர்கள் குறிப்பிட்டதாக ஆஜிரீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

பாகம்: 10, பக்கம்: 108.

تهذيب التهذيب ـ محقق – (10 / 108(

وقرأت بخط الذهبي ضعفه أبو داود الطيالسي ثم وجدت ذلك في الضعفاء لابن الجوزي.

அபூதாவுத் தயாலிஸி இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்னுல் ஜவ்ஸி அவர்களும் லுஅஃபா (என்ற நூலில் பலவீனமானவர் பட்டியிலில்) இணைத்திருந்தைப் பார்த்துள்ளேன்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,

பாகம்: 10, பக்கம்: 108.

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல.

மேலும் இது போன்று சிறப்புகள் உள்ளதாக வேறு சில செய்திகளும் உள்ளன. அதன் தரத்தைப் பார்ப்போம்.

تذكرة الموضوعات – الفتني – (1 / 119)

عائشة “ صيام أول يوم من العشر يعدل مائة سنة واليوم الثاني يعدل مائتي سنة فإذا كان يوم التروية يعدل ألف عام وصيام يوم عرفة يعدل ألفي عام “ فيه محمد بن المحرم كذاب.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் முதல் நாள் நோன்பு நோற்பது நூறு வருடங்கள் நோன்பு நோற்பதற்கு சமமாகும். இரண்டாம் நாள் நோன்பு நோற்பது இருநூறு வருடங்கள் நோன்பு நோற்பதற்குச் சமமாகும். தர்விய்யா (துல்ஹஜ் எட்டாம்) நாள் நோன்பு நோற்பது ஆயிரம் வருடங்கள் நோன்பு நோற்பதற்குச் சமமாகும். அரஃபா நாளன்று நோன்பு நோற்பது இரண்டாயிரம் வருடம் நோன்பு நோற்பதற்குச் சமமாகும்.

நூல்: தத்கிரத்துல் மவ்லூஆத்,

பாகம்: 1, பக்கம் : 119.

இச்செய்தியில் இடம்பெறும் முஹம்மத் பின் முஹர்ரம் என்பவர் பொய்யராவார் என்று இந்த செய்தியைப் பதிவு செய்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானது அல்ல. எனினும் இந்தச் செய்தியில் குறிப்பிடும் அளவுக்கு சிறப்புகள் இல்லாவிட்டாலும் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்கு சில சிறப்புகள் உள்ளதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் எந்த நற்செயலும் இந்த (அய்யாமுத் தஷ்ரீக்) நாட்களில் செய்யும் எந்த நற்செயலையும் விடச் சிறந்ததல்ல’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறப்போர் (ஜிஹாத்) கூட (சிறந்தது) இல்லையா? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அறப்போர் கூட(ச் சிறந்தது) இல்லைதான். ஆனால், தம் உடலையும் தமது பொருளையும் (இறைவழியில்) அர்ப்பணிக்கப் புறப்பட்டுச் சென்று எதுவுமில்லாமல் திரும்பி வந்த மனிதரைத் தவிர’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்கள்: புகாரி (969), திர்மிதீ (688), அபூதாவுத் (2082), இப்னுமாஜா (1717), அஹ்மத் (1867)

இந்தச் செய்தி ஆதாரப்பூரமானதாகும்.

—————————————————————————————————————————————————————————————

மகளிரை விழுங்கும் மது எனும் சுனாமி!

எம். ஷம்சுல்லுஹா

ஆண்டுக்கு ஆண்டு மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு காலத்தில் மது அருந்தும் பெண்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டது கிடையாது.

ஆனால் இன்று ஆண்டு தோறும் மது அருந்துகின்ற பெண்கள் தொடர்பான பத்து வழக்குகள் இப்போது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அவர்கள் 30 வயதினராக இருக்கின்றார்கள்.

அவர்கள் மதுக் கடைகளுக்குப் போய் அருந்துவது கிடையாது.  பாழும் மதுக் கிண்ணத்தில் என்று சொல்வதை விட  பாழும் கிணற்றில் தள்ளி விடுவது அவர்களது சக தோழியர்களோ அல்லது அந்நிய சக்திகளோ கிடையாது. அவர்களது கணவர்களே இந்த அரக்கத்தனத்தை அரங்கேற்றி விடுகின்றார்கள்.

பெண்களுக்கு மத்தியில்  வரம்பு கடந்து குடிப்பது வாடிக்கையாகி விட்டது. வாரத்தில் நான்கு நாட்கள் குடிப்பது கிடையாது. வாரத்தின் இறுதி நாட்களில் வைத்து வெளுத்துத் தள்ளி விடுகின்றார்கள்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் வயதும் இப்போது வெகுவாகக் குறைந்து கொண்டே வருகின்றது. போதைத் தடுப்பு  முகாம்களுக்குச் சில பள்ளிக் குழந்தைகள் வருகின்றனர்.  அவர்களுக்குப்  பழக்கமான பொருட்கள் ஆச்சரியத்தை தருகின்றன. ஒட்டுவதற்குப் பயன்படும் குளூவின் வாடை, பெட்ரோல் வாடை, எழுத்துப் பிழைகளை அழிப்பதற்குப் பயன்படுத்துகின்ற ஒயிட்னர் என்று அந்தப் பட்டியல் நீளுகின்றது. இது மிகவும் அபாயகரமானது. காரணம் ஒரு சில  கட்டங்களில் அவர்களின் மத்திய நரம்பு மண்டலத்தையே பாதிக்கச் செய்து விடும்.

கடந்த 10 ஆண்டுகளில்  மது அருந்தும்  பழக்கம் 38% அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது (Voluntary Health Services – VHS) தன்னார்வ சுகாதாரச் சேவை அமைப்பின் உளவியல் துறையின் தலைவர்  லக்‌ஷ்மி  தெரிவிக்கின்றார்.

இது 01.06.2017 அன்று இந்து ஆங்கில  நாளிதழில் வெளியான செய்தி. உண்மையில், இது அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தியாகும்.

மது எனும் சுனாமி ஆண்களைப் பல்வேறு வகைகளில் அள்ளிக் கொண்டு செல்கின்றது; அது பெண்களை இழுத்துச் செல்லாமல் விட்டிருந்தது என்று இதுவரை நாம் வலுவாக நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது. இப்போது அந்த ஆழிப் பேரலை பெண்களையும் அள்ளி வாரிக் கொண்டு செல்கின்றது.

அப்படி அள்ளிக் கொண்டு போனால் அதன் விளைவு என்னவாகும்? குடும்பத்திற்கும் ‘குடி’ என்று பெயர். மது குடிப்பதற்கும் ‘குடி’ என்று பெயர்.  பெண்கள் குடிக்க ஆரம்பித்தால் குழந்தைகளும் குடிகாரர்களாகி விடுவர். மொத்ததில் குடியே குடியாகி விடும்.  குடிகாரக் குடும்பத்தில் வளர்கின்ற வருங்கால தலைமுறையும் குடிகாரத் தலைமுறையாக மாறி, குட்டிச் சுவராக மாறி விடும்.

அலறி அடித்து, பதறித் துடித்து இதற்கு விடையும், விடிவும் காண வேண்டிய  மத்திய மாநில அரசுகள் மெத்தனமாகவும் மெத்த அலட்சியமாகவும் இருக்கின்றன.

 மது அருந்துபவன், மதுக் கடை நடத்துபவன் மாபாதகனாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, மாற்று அரசியலைக் கொண்டு வருகின்றேன் என்று கூறி பொய்களை மூலதனமாக்கி ஆட்சிக்கு வந்த பொய் மன்னன், கோயபல்ஸின் உடன் பிறவா சகோதரன் மோடியும் அவனது பயங்கரவாதப் பரிவாரமும் மாட்டு அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றது.

மது அருந்தியவனை, வியாபாரம் செய்பவனை மாட்டு மாட்டென்று மாட்டுவதற்குப் பதிலாக மாட்டிறைச்சி சாப்பிடுவனை, விற்பவனை கொடூரமாகக் கொலை செய்து கொண்டிருக்கின்றது.

மது அருந்துவதால் ஏற்படுகின்ற விளவுகளை ஓர் உதாரணத்திற்கு  சொல்ல வேண்டுமென்றால்  சாலை விபத்துகளைச் சொல்லலாம். இன்று அதிகமான சாலை விபத்துகள் நடப்பதற்குக் காரணம் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் தான்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவன், தான் மட்டும் அழிவதில்லை. போதையின்றி  வாகனம் ஓட்டுபவர் மீதும் சாலையில் நடந்து செல்வோர் மீதும் மோதி அப்பாவியான அவர்களைச் சாகடித்து விடுகின்றான். இப்படிப்பட்டவர்கள் சமூக விரோதிகளாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக சாதாரணமாகவே பார்க்கப்படுகின்றார்கள்.

இதற்குக் காரணம் மது அருந்துவதை ஒரு கொடிய பாவமாக மக்களும் பார்ப்பதில்லை; மத்திய மாநில அரசாங்கங்களும் பார்ப்பதில்லை. மாறாக, மத்திய மடமை அரசுக்கு மாட்டுக் கறி மதுவை விட கொடுமையான பாவமாகத் தெரிகின்றது. மதுவுக்கு எதிராகப் பல்வேறு விதமான போராட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை இதுவரை ஈர்க்கவில்லை.

தமிழகத்தில் கடைகளை மூடும் போராட்டம் மக்களிடத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.  என்ன தான் மக்கள் எதிர்த்தாலும் அதற்கு அரசு இறங்குவதாகத் தெரியவில்லை.  அதிலும் குறிப்பாகப் பெண்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கடுகளவு கூடக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பெண்கள் மதுவருந்துவதால் ஏற்படும் பாதகங்களை, பாதிப்புகளை, பரிதவிப்புக்ளை “மெல்லத் தமிழன் இனி…” என்ற நூலில் அதன் ஆசிரியர் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார். அதை சற்று இப்போது பார்ப்போம்

ஆண்/பெண் குடிநோய் வேறுபாடு என்ன?

பெண்கள் மது அருந்தலாம், அருந்தக் கூடாது, ஆண்களுக்கு இணையாக உரிமைகள் உண்டு என்கிற வாதங்களையெல்லாம் இங்கு ஒதுக்கி வைத்துவிடலாம். ஏனெனில், குடிநோய் என்பது ஓர் ஆட்கொல்லி விலங்குபோல. அதற்கு ஆண்/பெண் தெரியாது. அழிக்க மட்டுமே தெரியும்.

ஆண்களின் குடிநோய் அதிர்ச்சி எனில், பெண்களின் குடிநோய் பேரதிர்ச்சி. கொங்கு மண்டலத்தின் சிற்றூர் ஒன்றின் தென்னந்தோப்புக்கு நடுவிலிருந்த மதுபானக் கூடத்துக்குத் தன்னார்வலர்கள் சிலர் அழைத்துச் சென்றார்கள். கூடத்தின் ஒரு பகுதியைப் பிரித்து, திரை போட்டு மூடப்பட்டிருந்தது. எட்டிப் பார்த்தேன். பெண்கள் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். தனிப் பகுதியாம்!

யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான பெண்கள் கணவரின் குடிநோயாலேயே மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. இன்று தமிழகத்தின் அநேக மதுபானக் கூடங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளெல்லாம் அதிர்ச்சிக்கு அப்பாற்பட்டவையாகி விட்டன.

‘நல்லா தூக்கம் வரும்’, ‘சளிக்கு நல்லது’, ‘குழந்தை புஷ்டியா பொறக்கும்’, ‘வலி தெரியாது’ என்பன போன்ற தூண்டில் வார்த்தைகளே பெண்களை மதுவின் வலையில் சிக்க வைக்கின்றன. இதைத் தவிர்த்து, குடும்பங்களிலேயே கட்டாயப்படுத்தி வாயில் மதுவைத் திணிக்கும் செயல்களும் உண்டு.

தென் மாவட்டங்களில் சில ஊர்களில் செங்கல் சூளை, கட்டிட வேலை, வயல் வேலை செய்யும் பெண்களில் பலரும் கூலியுடன் மதுபாட்டில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ‘பப்’ கலாச்சாரம் பயமுறுத்துகிறது. அங்கெல்லாம் பெண் துணையுடன் சென்றால் மட்டுமே அனுமதி. அதாவது, பெண்களைக் குடிக்கக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

அழகல்ல… ஆபத்து!

“ஆணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் பெண்ணுக்கு இருக்கும் குடிநோய்க்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று மருத்துவரிடம் கேட்டேன். “குடிநோயில் பெண்ணுக்கே பாதிப்பு அதிகம். சமீபகாலமாக ‘டிரங்கோரெக்சியா’ (Drunkorexia) கேஸ்கள் நிறைய வருகின்றன. வயிறு ஒட்டிப்போய் எலும்பும் தோலுமாக இளம் பெண்கள் வருகிறார்கள். இவர்களுக்கு மதுபோதை தொடர்ந்து வேண்டும்.

வெறும் வயிற்றில் குடிப்பார்கள். நன்றாகப் பசித்தாலும் கொறிப்பார்களே தவிர, சாப்பிட மாட்டார்கள். உடல் பெருத்துவிடும் என்கிற பயமும் சேர்ந்து கொள்கிறது. இது பெண்களுக்கே உரித்தான குடிநோய். ஒருகட்டத்தில் இது மரணம் வரையும்கூட இழுத்துச் செல்லும்.

அழகையும், மெல்லிய உடற்கட்டையும் விரும்பும் பெண்களே அறியாமையால் இந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். உடல் அழகு கூடும், தோல் மெருகேறும், சிவந்த நிறத்தைப் பெறலாம் என்பது போன்ற கவர்ச்சி வார்த்தைகளில் மயங்கிய பெண்கள், மதுவைப் பழகியிருக்கிறார்கள். என்னிடம் வந்த ஒரு பெண் குடிநோயாளி, “நட்சத்திர மதுக் கூடங்களில் பெண்களின் மெல்லிய உடற்கட்டுக்கு என்று பிரத்யேக மதுபானங்களையே வைத்திருக்கிறார்கள்” என்றார். எவ்வளவு கொடுமையான வியாபார உத்தி!

உண்மையில், மது அருந்துவதால் ஒரு போதும் அழகு கூடாது. மாறாக, தோல் சுருக்க பாதிப்புகள் விரைவிலேயே ஏற்படும். அதுவும் ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம். ஏனெனில், ஆண்களின் உடலை விடப் பெண்களின் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகம். மதுவின் பாதிப்பால் கல்லீரல் சுருங்கி கொழுப்பு அங்கு கூடுதலாகும்போது என்சைம்களில் பாதிப்பு ஏற்படும். இது தோல் சுருக்கத்தை விரைவுபடுத்துகிறது.

அளவு ஒன்று… ஆபத்து இரண்டு!

அடுத்தது, மது அருந்தும் பெண்கள் ஆண்களை விட விரைவில் மயக்கம் அடைவார்கள். மது அருந்தும்போது ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹாலின் அளவுக்கு மருத்துவக் கணக்கீடுகள் உண்டு. இதனை, ‘ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் (Blood alcohol content level) என்கிறோம். ஆண் ஒருவர் சுமார் 240 மில்லி அளவுக்கு மது அருந்தும்போது இந்த அளவு சராசரியாக 0.20-லிருந்து 0.29 வரை இருக்கும். இது ‘சுயநினைவு இல்லாமல்போகவாய்ப்புள்ள’ நிலை.

ஆனால், இதுவே பெண் ஒருவர் அதே அளவு மது அருந்தும்போது, அந்தஅளவு 0.30-லிருந்து 0.39 வரை உயர்கிறது. இது ‘சுயநினைவு இல்லாதநிலை’. மருத்துவம் இதனை மரணத்துக்கு வாய்ப்புள்ள நிலை என்றும் குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், ஆண்களின் உடலைவிட பெண்களின் உடலில் நீர்ச்சத்து குறைவு.

பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் போது மட்டும் கணவர் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார் என்கிறார்கள் சில பெண்கள்.

மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வது என்பது ஆரோக்கியமானதல்ல என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. பாலியல் உறவின்போது ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிக்கும். தவிர, உணர்ச்சி வசப்படும் தன்மை பெண்களுக்கு அதிகம். அப்போது மதுவின் வீரியமும் சேர்ந்து கொள்வதால் ரத்த அழுத்தம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி வெடிக்கலாம். தொடர் அழுத்தங்களால் இதயத்தில் ஓட்டை விழலாம். தாறுமாறாக இதயம் துடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம்.

பாலியல் உறவைப் பொறுத்தவரை ஆணைவிடப் பெண்ணின் உடல் உள்உறுப்புகளுக்கே பணிகள் அதிகம். ஆல்கஹாலின் தன்மையால் உள்உறுப்புகள் சோர்வடைந்திருக்கும் நிலையில், பிறப்புறுப்பில் இயற்கையாகச் சுரக்க வேண்டிய திரவம் சுரக்காது. இது வலியை ஏற்படுத்தி, பாலியல் உறவைச் சிக்கலாக்குகிறது. மனரீதியான அழுத்தங்களுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் வழி வகுக்கிறது. சமயத்தில் கர்ப்பமும் உண்டாகிறது.

குழந்தையா? சதைப் பிண்டமா?

கர்ப்பத்துடன் முடிந்துவிடவில்லை பிரச்சினைகள். குழந்தை புஷ்டியாக இருப்பதற்காக, கர்ப்ப காலத்தில் ஒயின் குடிக்கலாம் என்கிற தவறான கருத்துக்கள் இங்கே அதிகம். ஒயினில் இருந்தாலும் ஓட்காவில் இருந்தாலும் ஆல்கஹால் என்பது ஒன்றே. கர்ப்ப காலத்தில் மது அருந்துவது என்பது ஒரு சந்ததியையே அழிக்கும் பாவத்துக்கு ஈடானது. இதனால், ‘ஃபீட்டல் ஆல்கஹால் சின்ட்ரோம்’(Fetal alcohol syndrome) என்கிற நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை ‘கிரானியோ ஃபேஷியல் அப்நார்மாலிட்டீஸ்’ (Cronio facial abnormalities) என்கிறார்கள். இவ்வகைக் குழந்தைகள் பிறக்கும்போது எந்த வடிவத்தில் இருக்கும் என்றே சொல்ல முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உயிருள்ள/ உயிரற்ற சதைப் பிண்டங்கள் தான் அவை” என்று முடித்தார் மருத்துவர்.

மூளைக்குள் உறையும் பூதம்

ஈரோடு அருகே அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு வயது 35 இருக்கும். நடுத்தரக் குடும்பம். கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நான் பார்த்தபோது அந்தப் பெண் கடும் போதையில் இருப்பது போலத் தெரிந்தது. பத்தடிகள் அவரால் இயல்பாக நடக்கமுடியவில்லை. தடுமாறுகிறார். கால்கள் பின்ன விழப்போகிறார். தலைதொங்கிக் கிடக்கிறது. அவரால் திடமாக நிற்க முடியவில்லை.

பெண்ணின் கணவர் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். லேசாகச் சிரித்தவரிடம், “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டேன்.

“இட்லி நல்லாவே இல்லை, மழைன்னு ஸ்கூலு லீவு விட்டுட்டாங்க’’ என்றார்.

“இல்லை, உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குன்னு கேட்டேன்” என்று புரியவைக்க முயன்றேன்.

“உடம்பா…” என்று யோசித்தவர், என் கழுத்தில் கை வைத்துப் பார்த்து, “ஜூரம் எல்லாம் இல்லை, ஊசி போட வேண்டாம். எங்க, நல்லா ஆகாட்டுங்க…” என்றார்.

குழப்பமாக இருந்தது. அவர் குடித்திருக்கவில்லை. ஆனால், போதையில் இருப்பவரைவிட அதிகம் தள்ளாடுகிறார். அவரது கணவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன்.

கணவருக்கும் அடி விழும்!

ஈரோடு அருகே ஒரு மில்லில் இருவரும் பணிபுரிந்திருக்கிறார்கள். கணவரிடம் குடிப் பழக்கம் இருந்திருக்கிறது. அது மனைவிக்கும் தொற்றிக் கொண்டது. தினமும் இரவானால் இருவரும் சேர்ந்து மதுஅருந்தி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இரவில் மட்டும் மது அருந்திய அந்தப் பெண், பகலிலும் அருந்தத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் காலையிலேயே மது அருந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பயந்துபோன கணவர் தன்னுடைய குடிப் பழக்கத்தை நிறுத்திவிட்டார். மனைவியால் முடியவில்லை. தினமும் கணவர் மது வாங்கித் தரவில்லை என்றால், வீட்டில் ரகளையே நடந்தது. பொருட்களை விற்றுக் குடிப்பது, குழந்தைகளை அடிப்பது, கணவரை உதைப்பது என ஆண்குடி நோயாளிகள் செய்யும் அத்தனையையும் அந்தப் பெண் செய்தார். அதனால்தான் சொன்னேன், குடிநோய்க்கு ஆண்/பெண் தெரியாது என்று!

நடிக்கும் மூளை நரம்பு செல்கள்!

மருத்துவர் மோகன வெங்கடாஜலபதியிடம் பேசினேன். “அந்தப் பெண் மது குடிப்பதை நிறுத்தி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால், அவர் முழுமையாகக் குணமாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அவருக்கு இருப்பது ‘வெர்னிக்கி கார்சாகாஃப் சின்ட்ரோம்’ (Wernicke korsakoff syndrome). தொடர்ந்து மது அருந்துவதால் பி-1 விட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் மூலம் உண்டாகும் மூளை நரம்புப் பாதிப்புகளில் ஒன்று. மேற்கண்ட சின்ட்ரோமின் உடல்ரீதியான பிரச்சினையான ‘வெர்னிக்கிஸ் என்ஸிபாலோபதி’ (Wernicke’s encephalopathy)  என்கிற தீவிர நோய்த் தாக்கத்தால், அந்தப் பெண்மணி அவதிப்பட்டுவருகிறார்.

அந்தப் பெண்ணின் பெரும்பாலான மூளை நரம்பு செல்கள் சேதமடைந்திருக்கின்றன. அதாவது, தொடர்ந்து பல காலம் மிக அதிகமாக மது குடித்ததால், மது குடிக்காத நாட்களிலும், ‘போதை இல்லாத’ நிலையை மூளை நரம்பு செல்கள் விரும்புவதில்லை. நரம்பு செல்களில் மதுவின் தாக்கம் வடிந்து பல நாட்கள், பல மாதங்கள் ஆகியும் கூட அவை அதிலிருந்து விடுபட விரும்பாமல், மயக்க நிலையிலேயே இருக்கின்றன அல்லது நடிக்கின்றன.

அதனால்தான், மது அருந்தாத, மதுவின் போதை இல்லாத நிலையிலும், இந்த வகை நோயாளிகள் தள்ளாடித்தான் நடப்பார்கள். வலது கையைத் தூக்கு என்று மூளை கட்டளையிட்டால், இடது காலைத் தூக்குவார்கள். உட்கார் என்றால் நிற்பார்கள். அதாவது, உடலின் பிற உறுப்புகளுக்கு மூளை சரியான கட்டளைகளைப் பிறப்பிக்க இயலாது. கண்களின் நரம்புகளும் பாதிக்கப்பட்டிருப்பதால், விழி பாப்பாக்கள் ஓரிடத்தில் நிற்காது. அலைபாயும். லேசாகக் கண்ணை மட்டும் திருப்பி பக்கவாட்டில் பார்க்க முடியாது. ஆளே திரும்பினால் தான் பக்கவாட்டுக் காட்சியைப் பார்க்க முடியும். இது போன்ற பாதிப்புகளை ‘அட்டாக்ஸியா’ (Ataxia) என்கிறோம். இவை எல்லாம் உடல்ரீதியான பாதிப்புகள்.

மெமரி கார்டு இல்லாத கேமரா

சிகிச்சை எடுத்துக் கொள்ளாதபோது இந்த நோய், கார்சாகாஃப் சைக்கோசிஸ் (Korsakoff’s psychosis) என்கிற மனநோயாக அதன் இரண்டாவது நிலைக்கு முற்றுகிறது. மூளை நரம்பு செல்களில் புதிய பதிவுகள் எதுவுமே தங்காது; கண்ணால் பார்க்கும் காட்சிகள் அந்தந்த கணத்தில் அழிந்து விடும். அதாவது, மெமரி கார்டு போடாத டிஜிட்டல் கேமராவில் படம் எடுப்பதுபோல. இதன் பெயர் ‘ஆன்டிரோகிரேடு அம்னீஷியா’ (Anterograde amnesia). நாம் ஏதாவது பேசினால், அதில் சில வார்த்தைகளை மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். அதனால், கேள்விக்கான நேரடியான, முழுமையான பதிலைத் தர முடியாது. அதனால்தான், அந்தப் பெண்மணி, ‘நல்லா இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், ‘இட்லி நல்லா இல்லை’ என்கிறார்.

இந்த இரண்டாம் கட்ட நோயின் நிலையில்தான் அந்தப் பெண்மணி சிகிச்சைக்கு வந்தார். அப்போதும் அவர் வரவில்லை எனில், அவர் நோயின் முற்றிய மூன்றாவது கட்டத்துக்குப் போயிருப்பார். அது குணப்படுத்த முடியாத ‘ரெட்ரோகிரேடு அம்னீஷியா’ (Retrograde amnesia). நிரந்தர மூளை ஊனம் இது. புதிய பதிவுகள் மட்டுமின்றி, மூளையின் பழைய பதிவுகளும் படிப்படியாக அழியத் தொடங்கும். கொடுமையான மனநோய் இது. தனது பெயர் தெரியாது; தாய்மொழி புரியாது. ஒலிகளே மொழியாகிவிடும். மூளையின் நிரந்தர ஊனம் இது.

மது, எது வரையிலும் செல்லும் என்பதற்கு இது ஒன்று போதுமே” என்றார் மருத்துவர்.

நூல்: மெல்லத் தமிழன் இனி…

ஆசிரியர்: டி.எல். சஞ்சீவிகுமார்

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்

பெண்கள் மதுவை நோக்கித் தூண்டப் படுகின்றார்கள். புருஷன்களாலும், மற்றவர்களாலும் மதுவென்னும் மாபாதகத்தை நோக்கித் தள்ளப்படுகின்றார்கள் என்பதையும் பெண்கள் மதுவருந்துவதால் ஏற்படும் மருத்துவ ரீதியலான பாதிப்புகளும் பாதகங்களும் அந்தப் பெண்களோடு மற்றும் நின்று விடாமல் அவர்களது கருக்களில் குடியிருக்கும் குழந்தைகளை நோக்கியும் பாய்ந்து விடுகின்றன என்பதையும் மிகவும் விளக்கமாக எடுத்துச் சொல்கின்றார்.

இதைப் படிக்கும் போதே உடலில் பாய்ந்து ஓடும் ரத்தம் உறைந்து பனிக்கட்டியாகி விடும் போல் தெரிகின்றது. அதனால் தான் ஒரு கூட்டம் இதை எதிர்த்து இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்தப் போராட்டக்கார்களுக்கும் இந்த மது ஒழிந்து ஓய்ந்து விடாதா? என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் சிந்தனைமிகு சீர்த்திருத்தவாதிகளுக்கும் நாம் சொல்லிக் கொள்வது, இந்த மதுவை ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழி இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான்.

உலகத்தில் மதுவிலக்கு அமல்படுத்திய நாடுகளெல்லாம் தோல்வியைத் தான் சந்தித்திருக்கின்றன.  அவர்கள் கொண்டு வந்த மதுவிலக்கு சட்டம் ஒரு சில ஆண்டுகளில் மரணத்தைத் தழுவியது.  ஆனால் அரபகத்தில் மட்டும் அது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதற்குக் காரணம் திருக்குர்ஆனும் திருநபியின் வழிமுறையும் தான்.

திருடி சம்பாதிப்பதை உலகம் அறவே ஜீரணிக்கவில்லை.  மது விற்பனை மூலம் வரும் வருவாயும் திருடிச் சம்பாதிப்பதைப் போன்று தான் என்ற சிந்தனை ஓட்டம் அரசிடமும் இல்லை.  தனி மனிதரிடத்திலும் இல்லை.

ஆனால் இஸ்லாமிய மார்க்கம் மதுவின் வருவாயை அந்த ரகத்தில் வைத்துப் பார்க்கின்றது. அதனால் தான் மதுவின் வருவாயைத் தடை செய்து விட்டது.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரி 8ஆம் ஆண்டில் தன்னை விரட்டி அடித்த மக்காவை வெற்றி கொள்கின்றார்கள். வெற்றி கொண்ட மாத்திரத்தில் தனது அரசின் தடைகளைப் பிரகடனப்படுத்துகின்றார்கள். அந்தத் தடையுத்தரவுகளில் மதுவின் தடையையும்  சேர்த்துக் குறிப்பிடுகின்றார்கள்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, ‘‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!’’ என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது விலக்கப்பட்டது!எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2236

மதுவின் வியாபாரத்தை இஸ்லாம் எந்த ரகத்தில் வைத்திருக்கின்றது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அதுவரைக்கும் மக்கா இஸ்லாமிய  ஆட்சியின் கீழ் இல்லை. இப்போது அது இஸ்லாமிய ஆட்சிக்குக் கீழ் வந்ததால் மது வியாபாரத் தடையை பிரகடனப்படுத்துகின்றார்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமலான இந்த மது விலக்குச் சட்டம் இன்றும் தொடர்கின்றது.

இந்தியாவிலும் தற்காலிக மதுவிலக்காக இல்லாமல் நிரந்தரமான மதுவிலக்கு வேண்டு மென்றால் அதற்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு.

எனவே, சிந்தனையாளர்கள் தங்களது மது விலக்குப் போராட்டம் வெற்றி பெற இந்த மையப் புள்ளியை நோக்கித் தங்கள் பயணத்தை நகர்த்துவார்களாக!

—————————————————————————————————————————————————————————————

மரணத்திற்கு முன்…

சபீர் அலீ  M.I.Sc.

இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் கொள்கை ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.

எத்தனை கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தில் ஒன்றிணைவது, “அனைவரும் மரணிக்கக் கூடியவர்கள்” என்ற ஓர் உண்மையில் தான்.

கடவுள் நம்பிக்கையில் இருக்கும் ஆத்திகனாயினும், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகனாயினும் கண்களால் அனுதினமும் கண்டு கொண்டிருக்கின்ற இப்பேருண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், மரணத்திற்குப் பிறகுள்ள மறுமை வாழ்வு விஷயத்தில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து தெரிவிக்கின்றனர்.

மறுமை வாழ்வு என்பது இவ்வுலகில் மனிதன் செய்த செயல்களுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட்டு நன்மை புரிந்தோர் சுவனத்திலும் தீமை புரிந்தோர் நரகத்திலும் பிரவேசித்து நிரந்தரமாக வாழ்கின்ற வாழ்க்கையாகும்.

இத்தகைய மறுமை வாழ்வை நம்புபவர்களே மூஃமின்கள் ஆவார்கள்.

பிறக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணிக்கக் கூடியதே என்பதை ஒப்புக்கொள்ளும் மனிதன், அந்த மரணம் எப்போதும் வரலாம் என்றும் அதற்குள் நன்மைகளை விரைவாகப் புரிய வேண்டும் என்றுமில்லாமல் மரண சிந்தனையற்று பாராமுகமாக இருப்பதினால் இஸ்லாம் மரணத்தை அதிகமாக நினைவூட்டுகிறது.

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 29:57

எந்த மனிதரும் தான் எப்போது? எங்கே? எப்படி மரணிப்பார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான ஞானம்.

யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

எந்த மனிதனும் தன்னை மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது.

நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.

அல்குர்ஆன் 4:78

இத்தகைய மரணம் வருவதற்கு முன்னால் ஒவ்வொரு மனிதனும் தன் மறுமை வாழ்வை செம்மையாக்கிக் கொள்வதற்காக இறைவன் சொன்ன நன்மையான காரியங்களைச் செய்து முடித்துவிட வேண்டும்.

அவ்வாறில்லாமல் நல்ல செயல்களையும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யாமல் அலட்சியமாக இருந்தால் அது மறுமையில் மிகப்பெரும் கைசேதத்தை ஏற்படுத்தும்.

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான். எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்

அல்குர்ஆன் 63:10, 11

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்‘’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித் திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனு பவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 35:37

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களையும் நாம் செய்த பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுதல் போன்ற அனைத்து நன்மையான காரியங்களையும் மரணத்திற்கு முன்பாக நாம் நிறைவேற்றிவிட வேண்டும். இல்லையேல் அது மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மேற்படி வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

அதே போன்று மரணத்திற்கு முன்னால் சக மனிதனுக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் இருக்கின்றன. அதை விட்டும் நம்மில் பலர் அலட்சியமாக இருக்கிறோம்.

  1. கடனை அடைப்போம்

பிறரிடமிருந்து கடன் வாங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும்.

அல்குர்ஆன் 2:282

கடன் கொடுக்கல் வாங்கலுக்கு அனுமதியளிக்கும் இஸ்லாம் அந்தக் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்றும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனையிடுகிறது.

இந்த நிபந்தனைகளில் இன்றைக்குக் கவனம் செலுத்துபவர்கள் மிக குறைவானவர்களே.

லட்சக்கணக்கான மதிப்புள்ள கொடுக்கல் வாங்கல் தங்களுக்கு மத்தியில் இருந்தாலும் அதை இன்றைக்கு எழுதிக் கொள்வதும் கிடையாது, சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வதும் கிடையாது.

நிபந்தனையுடன் கடனுக்கு இஸ்லாம் அனுமதியளித்தாலும் கடனைப் பற்றி அதிகம் எச்சரிக்கையும் செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடத்தில் அதிகமாகப் பாதுகாவல் தேடியது கடனை விட்டுத்தான்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’’

இறைவா! மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்’’ என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 832

கடன் வாங்குபவன் பொய் பேசுபவனாகவும், வாக்குறுதி மோசடி செய்பவனாகவும் மாறி விடுகிற காரணத்தினால் தான் கடனிலிருந்து அதிகமாக நான் பாதுகாப்பு தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

கடன் என்று ஒரு வாசலைத் திறந்துவிட்டால் அது பல பாவங்களுக்கான வழியாக அமைந்துவிடுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உணவுக்கும் அத்தியாவசிய தேவைக்கும் கஷ்டப்பட்ட காலத்தில் கூட அதிகமாகக் கடனிலிருந்து பாதுகாவல் தேடியுள்ளார்கள்.

ஆனால் இன்றைக்குக் கடன் என்பது அத்தியாவசியத் தேவைக்கு, சிரமம் ஏற்படும் போது கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை மாறி அடுத்தவரைப் போன்று தானும் வாழ வேண்டும் என்ற பெருமைக்காகவும், பகட்டுக்காகவும் கடன் வாங்குகின்ற சூழ்நிலை இருக்கிறது.

கடனை வாங்குபவர்கள் அதைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணமில்லாமல் மரணம் வரை அலட்சியமாக இருந்து மரணித்து விடுகின்றனர்.

கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அது இறைவனால் மன்னிக்கப்படாத மிகப்பெரும் பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 3832

ஷஹீத் என்பது இஸ்லாத்தில் ஆகச்சிறந்த காரியமாக இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் அந்தஸ்தைப் பெற்றுத்தரும் செயல். அவரது அனைத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அத்தகையை ஷஹீத் கடன் இருக்கும் நிலையில் மரணித்துவிட்டால் அவருக்கு அதன் பாவங்கள் மன்னிக்கப்படாது என்றால் மரணத்திற்கு முன்னரே நிறைவேற்ற வேண்டிய காரியங்களில் கடன் முதன்மையானதாக இருக்கிறது.

  1. மனம் திருந்தி மன்னிப்பு கேட்போம்

ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஏதேனும் விதத்தில் சார்ந்திருப்பவனாக இருக்கிறான். அவ்வாறு சார்ந்திருக்கும் போது ஒருவர் மற்றவரை சர்வ சாதரணமாகப் புண்படுத்திவிடுகின்றனர்.

உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, சொல்லாலோ அல்லது செயலாலோ மற்றவர்கள் புண்படும் படி நடந்துகொள்கின்றனர்.

இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டவர்கள் அதற்காக சம்பந்தபட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, தமது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கின்றனர்.

இவ்வாறு சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பு வழங்குவதில்லை. மறுமையில் மிகப்பெரிய கைசேதமும் ஏற்படும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5037

இதுபோன்று மறுமையில் மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் காரியத்திலிருந்து நாம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக நாம் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் நமது மரணத்திற்கு முன்னால் அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். இதை கவுரவக் குறைச்சலாக எண்ணக் கூடாது.

அவ்வாறு எண்ணி மன்னிப்பு கேட்காமல் இருந்துவிட்டால் நிலையான வாழ்க்கையாகிய மறுமையில் மிகப்பெரும் அவமானமாகவும் இழப்பாகவும் மாறிவிடும்.

  1. வஸிய்யத் (மரண சாசனம்) செய்வோம்

வஸிய்யத் என்பது ஒருவர் மரணத்தை நெருங்கும் போது தன்னுடைய பொருளாதாரத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அடுத்தவர்களுக்கு ஒதுக்கிவிட்டுச் செல்வதாகும்.

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

அல்குர்ஆன் 2:180

இந்த வசனத்தில் ‘பெற்றோர் மற்றும உறவினர்களுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது மாற்றப்பட்டுவிட்டது.

பெற்றோருக்கும், வாரிசு முறையில் சொத்து பங்கீட்டில் உள்ளவர்களுக்கும் வஸிய்யத் என்பது கிடையாது.

திருக்குர்ஆன் 4:11,12 ஆகிய வசனங்களில் யாரையெல்லாம் வாரிசுதாரர்கள் பட்டியலில் இறைவன் சேர்த்து விட்டானோ அவர்களுக்கு வஸிய்யத் செய்ய கூடாது. அவர்கள் அல்லாத மற்ற உறவினர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வஸிய்யத் செய்யலாம்.

வஸிய்யத் செய்ய வேண்டும் என்பதற்காக எந்த வரம்புமின்றி அனைத்துப் பொருளாதாரத்தையும் வஸிய்யத் செய்வதற்கும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும்  ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.  அப்போது நான் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்துவிட்டேன்.  நான் தனவந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்துவிடட்டுமா?’’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம்’  என்றார்கள்.  பின்னர் நான் பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன்.  அதற்கும் நபி (ஸல்)  அவர்கள் ‘‘வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது’’ என்று கூறினார்கள். 

நூல்: புகாரி 1295 (ஹதீஸின் சுருக்கம்)

நமது சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வஸிய்யத் செய்யக் கூடாது என்றும் மூன்றில் ஒரு பங்கு செய்வதே அதிகம் என்றும் இந்தச் செய்தியிலிருந்து நமக்குத் தெளிவாகிறது.

வஸிய்யத் செய்கிறோம் என்கிற பெயரில் ஒட்டுமொத்த சொத்தையும் மரண சாசனம் செய்துவிட்டு வாரிசுகளுக்கு ஒன்றுமில்லாமல் ஆக்குவதும் பாவமாகிவிடும்.

ஒருவர் வஸிய்யத் செய்திருக்கிறார் எனில் அவர் மரணித்த பிறகு சொத்து பங்கீடு செய்வதற்கு முன்னால் அவருக்கு ஏதேனும் கடனோ, அல்லது அவர் யாருக்கேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றிய பிறகுதான் சொத்தைப் பங்கிட வேண்டும்.

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 4:12, 13, 14

இவ்வாறு அதிகம் வலியுறுத்திக் கூறியுள்ள வஸிய்யத் செய்வது சில சமயம் அவசியமாகிறது.

உதாரணமாக, ஒருவர் மரணத் தருவாயில் இருக்கிறார். அவருக்கு வாரிசுகள் இருக்கிறார்கள். அவரது மகனோ அல்லது மகளோ தந்தையாகிய இவர் இறப்பதற்கு முன்னால் இறந்து விட்டனர் என வைத்துக் கொள்வோம். அந்த இறந்த மகன் அல்லது மகள் வழியாகப் பேரன், பேத்தி போன்ற உறவுகள் இவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் சொத்திற்கு சொந்தக்காரர் இறந்து விட்டால் ஏற்கனவே இறந்து விட்ட இவரது மகன் வழியாக உள்ள பேரக்குழந்தைகளுக்கு வாரிசு முறையில் எந்தப் பங்கீடும் கிடைக்காது.

ஏனெனில் சொத்திற்குச் சொந்தக்காரர் இறந்த பிறகுதான் அந்தச் சொத்தில் பங்கீடு ஏற்படும். அவர் இறப்பதற்கு முன்னால் அவரது மகன் அல்லது மகள் இறந்துவிட்டால் அவர்களுக்கு இவரிடமிருந்து எந்தப் பங்கும் கிடையாது.

இவ்வாறு தந்தைக்கு முன்னால் இறந்த பிள்ளைகளுக்கு எந்தப் பங்கும் கிடைக்காதென்றால் அவர்கள் வழியாகவுள்ள பேரக்குழந்தைகளுக்கும் எந்தப் பங்கும் கிடைக்காது.

இந்தச் சூழ்நிலையில் சொத்திற்குச் சொந்தக்காரர், தான் இறப்பதற்கு முன்னால் தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களைப் பரிதவிக்க விட்டுவிடாமல் அவர்களுக்கு தனது சொத்திலிருந்து வஸிய்யத் செய்வது அவசியமாகிறது.

இதுபோன்று வாரிசுதாரர்களின் பட்டியலில் தன்னுடைய உறவினர்களுக்கு வஸிய்யத் செய்வது மிக அவசியமானதாக இருக்கிறது.

ஆனால், இவ்வாறு வாரிசுரிமையில் சொத்தில் பங்கீடு பெறாத தன்னுடைய குடும்பத்தாருக்கு வஸிய்யத் செய்வதை விட்டும் பலர் அலட்சியத்துடன் இருக்கின்றனர்.

இதுவும் நம்முடைய மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய அவசியமான காரியங்களில் உள்ள ஒன்றாகும்.

எப்போது மரணம் வரும் என்று தெரியாத நாம் இதுபோன்ற மரணத்திற்கு முன்னால் செய்ய வேண்டிய காரியங்களை விரைவாகச் செய்து முடித்துவிட வேண்டும்.

இதபோன்ற காரியங்களில் அலட்சியத்துடன் இருந்து இறைவனிடத்தில் குற்றவாளியாக மாறிவிடக்கூடாது.

—————————————————————————————————————————————————————————————

வீணானதை விட்டும் விலகுவோம்

எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்,சி மங்கலம்.

படைத்தவன் உதவியால் இந்த வருடத்தின் நோன்பை நாம் நல்ல முறையில் கடந்து இருக்கிறோம். வருடந்தோறும் நோன்பு மாதம் வந்து, நமக்குப் பல விதமான விஷயங்களையும், பாடங்களையும் கற்றுத் தந்து செல்கிறது. எதிர்வரும் காலங்களில் எப்படி இருக்க வேண்டுமெனும் பக்குவத்தைக் கொடுக்கும் சிறந்த களமாகத் திகழ்கிறது.

அதில் பெற்ற பயிற்சியை நினைவில் கொண்டு அடுத்தடுத்த மாதங்களிலும் நாம் சரியாகச் செயல்பட வேண்டும்.

பொதுவாக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் வீணான, தேவையற்ற காரியங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்களின் பேச்சிலும், நடத்தையிலும் பெரிய மாற்றம் தென்படும். சின்னத்திரை, சினிமா படங்கள் மற்றும் பாடல்களின் ஓசைகள் ஒடுங்கியும் அதிர்வுகள் அடங்கியும் வீடுகள் அமைதியாய் இருக்கும். தொழுவது, குர்ஆன் படிப்பது, திக்ரு செய்வது போன்ற இபாதத்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

இப்படி ஒரு மாதம் மட்டுமல்ல! மற்ற நாட்களிலும் முஃமின்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொய்யான நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து பண்பட்டவர்களாக வாழ்வது அவசியம். ஏனெனில், ஒழுக்க நெறியோடு இருப்பது நம்பிக்கையாளர்களிடம் எப்போதும் இருக்க வேண்டிய பண்பாக ஏக இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார். அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

திருக்குர்ஆன் (25:72)

பொதுவாக, நல்லவைகளைக் காட்டிலும் தீமைகள் ஷைத்தானால் அழகாகவும் ஈர்ப்பாகவும் காட்டப்படும். இதனால் அதிகமானோர் அவற்றின் பக்கம் படையெடுத்துச் செல்வார்கள்; அவற்றில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய நபர்களை விட்டும் அவர்கள் வரம்பு மீறும் வீணான செயல்களை விட்டும் அகன்று கொள்வதற்கான வழிமுறையை வல்ல ரஹ்மான் விளக்கியுள்ளான்.

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்’’ எனவும் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் (28:55)

இந்த வசனத்திற்குக் கட்டுப்பட்ட நிலையில் நமது வாழ்க்கை இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. சமூகத்தில் இருக்கும் சிந்தனைகள், செயல்கள் என்று அனைத்திலும் கலப்படங்கள் மிகைத்து விட்டன; பொய்யானவை அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன.

எனவே, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் அதன் மூலம் நமக்கோ அல்லது பிறருக்கோ ஏதேனும் பயனுள்ளதா என்று கவனிக்க மறந்து விடக் கூடாது. எப்போதும் எதிலும் பயன் தரும் பாதையில் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டுமென அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நமக்கு அறிவுரை பகன்றுள்ளார்கள்.

பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்என்று சொல். ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமேஎன்பதைச் சுட்டும்) லவ்எனும் சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5178)

படைத்தவனிடம் கையேந்தும் போதெல்லாம் நமக்குரிய பல்வேறு விதமான கோரிக்கைகளை, தேவைகளை முன்வைக்கிறோம். அப்போது, அவற்றின் பயனைப் பெறுவதற்கான முழு வாய்ப்பையும் வழங்குமாறு கேட்பது சிறந்தது.

வெறுமனே செல்வத்தை மட்டும் கேட்காமல், அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றித் தரும்படியும் கேட்க வேண்டும். நீண்ட ஆயுளை மட்டும் கேட்காமல் சுய தேவையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத தள்ளாத வயதை விட்டும் பாதுகாவல் தேட வேண்டும். கல்வியை மட்டும் கேட்காமல் அக்கல்வி அர்த்தமுள்ளதாக, பயன் தருவதாகக் கேட்க வேண்டும்.

குறிப்பிட்டுக் கூறுவதாயின், அனைத்து வகையான வீணான அம்சங்களை விட்டும் காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் மன்றாடும் பழக்கம் இருப்பது மிகவும் நல்லது. இதற்கான அழகிய முன்மாதிரியை மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வில் காணலாம்.

அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி வந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும்   கோழைத்தனத்தில் இருந்தும் கருமித்தனத்தில் இருந்தும் தள்ளாமையில் இருந்தும் மண்ணறையின் வேதனையில் இருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியில் இருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்தில் இருந்தும் திருப்தியடையாத மனத்தில் இருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையில் இருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

நூல்: முஸ்லிம் (5266)

அம்ரு பின் மைமூன் அல் அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி – இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; புதை குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்’’ என்று கூறிவிட்டு, “இந்த விஷயங்களில் இருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்’’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி (2822)

நாம் இந்த உலகில் இன்பமாக இருப்பதற்கும் மறுமை வெற்றிக்குத் தயாராகிக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் எண்ணற்ற அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.

அவற்றின் அருமை பெருமைகளை விளங்காமல் அநேக மக்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தளவிற்கெனில் ஒரு முறை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளவே முடியாத மிக முக்கியமான விஷயங்களையும் கூடப் பாழடித்து விடுகிறார்கள். இதோ நபிகளார் கூறுவதைக் கேளுங்கள்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். (அவை:) 1. ஆரோக்கியம். 2. ஓய்வு. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (6412)

இந்தச் செய்தி நூற்றுக்கு நூறு சதவீதம் இன்றைய காலத்திற்குப் பொருந்திப் போகிறது எனலாம். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் விழுந்து பொன்னான நேரங்களை வீணடிக்கிறார்கள். இரவு பகல் பாராது அரட்டை அடித்து ஆரோக்கியத்தை அழித்துக் கொள்கிறார்கள்.

அவதூறு கூறுதல், புறம் பேசுதல் உட்பட வெட்டியான பேச்சுக்களிலே திளைப்போர் ஏராளம். இத்தகைய நபர்கள் பின்வரும் செய்தியை அறிந்த பிறகாவது தங்களை சீர்செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(திருக்குர்ஆன் 102:8)

(பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சுக்கள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஅபா(ரலி)

நூல்: புகாரி (2408) (5975)

சமூக வலைத்தளங்களின் வலை விரிப்பில் பெரியவர்கள் சிக்கிக் இருப்பது போன்று, சிறியவர்களும் பல வகையான வீடியோ கேம்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். இதனால் படிப்பையே  கெடுத்துக் கொள்வோரும் உண்டு.

இதனால், பல சமயங்களில் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் கூட மறந்து விடுவதை மறுக்க முடியாது. இந்த மாதிரி இருப்பவர்கள் இரட்சகனைப் பயந்து தங்களை திருத்திக் கொள்ளட்டும்.

“(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்’’ எனக் கூறுவீராக!.

திருக்குர்ஆன்  62:11

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு (வாணிப) ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரெண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சி இருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், “அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்’’ (62:11) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி (936, 2064)

அனுமதிக்கப்பட்ட வியாபாரத்திற்காகக் கூட ஜுமுஆத் தொழுகையை விட்டுவிடுவதை அல்லாஹ் கண்டிப்பதில் நமக்குப் பெரும் பாடம் இருக்கிறது. மார்க்கம் தடுத்த வீணான நிகழ்வுகளில் பொழுதைக் கழித்து, கடமையான தொழுகை போன்ற வணக்கங்களில் கவனக்குறைவாக இருப்பவர்கள் இச்சமயம் ஒரு கணம் சிந்திக்கக் கடமைப்பட்டு உள்ளனர்.

இன்னும் சொல்வதாயின், சில காரியங்களை எந்தவொரு சிரமும் இல்லாமல் இலேசாகச் செய்துவிட முடியும். சில காரியங்களை கடினமாக மட்டுமே செய்ய வேண்டிய நிலை இருக்கும்.

சிலவற்றை எளிமையாகவும் செய்ய இயலும்; கஷ்டப்பட்டும் செய்ய இயலும். இதுபோன்று இரண்டு நிலை இருக்கும் போது வீண் சிரமம் எடுப்பதைத் தேர்வு செய்து விடக் கூடாது. எந்தவொரு காரியத்திலும் வீணான முயற்சியே எடுக்கக் கூடாது எனும் போது, வீண் காரியங்களைச் செய்து வாழ்வைக் கழிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

உமர் (ரலி) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது அவர்கள், ‘வீண் சிரமம் எடுத்துக்கொள்ளக் கூடாது என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுஎன்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (7293)

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (39)

மறுமையில் சொர்க்கத்தில் நுழைவிக்கும் காரியங்கள் பற்றியும் நரகத்தில் தள்ளும் காரியங்கள் குறித்தும் தெள்ளத் தெளிவாக மார்க்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவ்வுலகில் வாழும் போது வெட்டியான விஷயங்களில் மூழ்கித் திளைத்திருப்பதை நரகத்தில் சேர்த்துவிடும் குற்றமாக அல்லாஹ் எச்சரிக்கிறான்.

பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். அவர்கள் வீணானவற்றில் (மூழ்கி) விளையாடிக் கொண்டிருந்தனர்.

திருக்குர்ஆன் (52:12)

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் (31:6)

மறுமையில் ஒருவரைக் குற்றவாளியாக நிறுத்துகிற, தண்டனையைப் பெற்றுத் தருகின்ற அனைத்து நம்பிக்கைகளும் பாவமான செயல்களும் வீணானவை என்பது மறுக்க முடியாத ஒன்று.

இதைப் புரிந்து கொள்ளாமல் பலர் இறைமறுப்பு, இணைவைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள். கண்மூடித்தனமாக மூடத்தனமான சடங்குகளை செய்கிறார்கள். ஹராமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

பெரும்பாலும் ஒரு மணி நேர வேலையாயினும் ஊதியமின்றி செய்வதற்கு யாரும் சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், கொஞ்சமும் யோசிக்காமல் மறுமையில் கைசேதமளிக்கும் விஷயங்களுக்காகத் தங்களது பொருளாதாரத்தை, உடல் உழைப்பை இழந்து கொண்டிருக்கிறார்கள். மறுமை வெற்றியை நாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

(ஏக இறைவனை) மறுப்போருக்குக் கேடு தான். அவர்களது செயல்களை அவன் அழித்து வீணானதாக்கி விட்டான்.

திருக்குர்ஆன்  47:8

எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நட்டமடைந்தவர்கள் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் (29:52)

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

திருக்குர்ஆன் (29:67)

இனியாவது இவர்கள் சுதாரித்து, குர்ஆன் ஹதீஸைப் பின்பற்ற முனைய வேண்டும். அதன் வழியில் தங்களது கவனத்தையும் முயற்சியையும் அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் வீணான அம்சங்கள் எதுவுமில்லா சொர்க்க வாழ்க்கையைப் பெற்றிட இயலும்.

அங்கே ஒருவருக்கொருவர் குவளைகளை மகிழ்ச்சியால் பறித்துக் கொள்வார்கள். அதில் வீணானதும் குற்றம் பிடிப்பதும் இருக்காது.

திருக்குர்ஆன் (52:23)

அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்.

திருக்குர்ஆன் (56:25)

அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.

திருக்குர்ஆன்  78:35

அன்பார்ந்த சகோதர்களே! சொர்க்கத்தில் மட்டும் தான் எந்தவொரு வீணான அம்சமும் இல்லை; அதற்கான வாய்ப்பும் இல்லை.

ஆனால், இவ்வுலகில் அவையே அதிகமதிகம் இருக்கின்றன. கொஞ்சம் அசந்தால் அவை மறுமையை மறக்கடித்து மார்க்கத்தை விட்டு நம்மை தூரப்படுத்தி விடும்; பெயரளவு முஸ்லிம்களாக மாற்றிவிடும்.

இதை உணர்ந்து பயனற்ற விஷயங்களை விட்டும் விலகி இருந்து ஈருலகிலும் வெற்றி பெறும் வகையில் செயல்படுவோமாக. அதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக.

—————————————————————————————————————————————————————————————

நபித்தோழர்களும் மனிதர்களே!

எம். எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்.

இப்படியொரு தலைப்பிட்டுக் கட்டுரை எழுதுகின்ற நிலைக்கு இஸ்லாமிய சமுதாயம் தள்ளப்பட்டிருப்பதை நினைத்து வருந்தி, வேதனையோடு இக்கட்டுரையைத் தொடர்கிறோம்.

ஆன்மீகத்தின் பெயரால் மக்கள் வழிதவறிவிடக் கூடாது என்பதற்காக ‘நபிமார்களும் மனிதர்களே!’ என்பதை மக்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து மாற்றம் கண்டு கொண்டிருக்கின்ற வேளையில் ‘ஸஹாபாக்களும் மனிதர்களே!’ என்பதை விளக்க வேண்டிய நிலை.

மக்களைத் திருத்துவதற்கும் மார்க்கத்தை அவர்கள் முழுமையாக விளங்குவதற்கும் கடும் முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் அதளபாதாளத்தில் அவர்களைத் தள்ளும்  கொடுமையை எங்கு போய் சொல்வது? மக்கள் எந்த இடத்தில் நின்றார்களோ அதை விட மோசமான இடத்தில் அவர்களைத் தள்ளி வழிகெடுப்பவர்கள் இறைவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும்.

இதற்கு முன் பல வருடங்கள் உங்களிடம் வாழ்ந்துள்ளேன். விளங்கமாட்டீர்களா? என்று (முஹம்மதே) கூறுவீராக!

அல்குர்ஆன் 10:16

இறைத்தூதர் என்று தம்மை அறிமுகப் படுத்துவதற்கு முன் பொய், பித்தலாட்டம், ஒழுக்கக்கேடு, தீய பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்திலிருந்தும் அவர்கள் விடுபட்டு, பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் அறியலாம். இப்படிப்பட்ட அல்லாஹ்வின் தூதரே நானும் மனிதன் தான் என்று கூறியுள்ளார்கள்.

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, “நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கின்றேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டுவிடட்டும்‘’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2458

இறைவன் புறத்திலிருந்து இறைச் செய்தி எனக்கு வருகின்றது என்பதைத் தவிர்த்து நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று அறிவிப்புச் செய்யுமாறு இறைவனும் தனது திருமறையில் நபிகளாருக்குக் கட்டளை பிறப்பிக்கின்றான்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது.

அல்குர்ஆன் 18:110

‘‘என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும் தூதராகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே) கூறுவீராக!

அல்குர்ஆன் 17:93

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு பிரகடனப்படுத்தச் சொல்கிறான் எனும் போது ஸஹாபாக்களும் மனிதர்களே என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. எனினும் நபித்தோழர்கள் செய்ததெல்லாம் மார்க்கம் என்று பிரச்சாரம் செய்யும் சிலருக்காக நாம் இதைச் சொல்ல வேண்டியுள்ளது.

நபித்தோழர்களும் மனிதர்கள் தாம் என்பற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

காலித் பின் வலீத் (ரலி)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு அஸ்லம்னா – நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்என்று சொல்லாமல் ஸபஃனா, ஸபஃனா’ – ‘நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறிவிட்டோம்என்று சொல்லலானார்கள். உடனே காலித் (ரலி) அவர்கள், அவர்களில் சிலரைக் கொல்லவும், சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார்.

ஒருநாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்’’ என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, ‘‘இறைவா! காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லைஎன்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று இருமுறை சொன்னார்கள்.

நூல்: புகாரி 4339

நாங்கள் இருக்கும் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டோம்; இஸ்லாத்தை ஏற்றுவிட்டோம் என்ற கருத்தில் அமைந்த ‘மதம் மாறிவிட்டோம்’ என்று அம்மக்கள் கூறிய வார்த்தையின் கருத்தை விளங்காமல் அம்மக்களை கொல்லும் படி காலித் பின் வலீத் (ரலி) கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி):

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவிலுள்ள என் உறவினர்களையும், சொத்துக்களையும், உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்என்றும் மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும், சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.  (ஒப்பந்தப் படிவத்தில்) அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, “ரஹ்மானை நான் அறிய மாட்டேன்; அறியாமைக் காலத்து உமது பெயரை எழுதும்’’ என்று அவன் கூறினான்.  நான் அப்து அம்ரு என்று (என் பழைய பெயரை) எழுதினேன்.  பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கிச் சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார்.  பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, “இதோ உமையா பின் கலப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது’’ எனக் கூறினார்.  (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்.) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர்.  அவர்கள் எங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன்.  அவனை அன்ஸாரிகள் கொன்றனர்.  பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர்.  உமய்யா உடல் கனத்தவனாக இருந்தான். (அதனால் ஓட இயலவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், ‘குப்புறப் படுப்பீராக!என்று கூறினேன்.  அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன்.  அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர்.  அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார்.

நூல்: புகாரி 2301

மிகச் சிறந்த தோழரான அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மனிதன் என்ற முறையில் மார்க்கத்துக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார்கள்.

ஹாத்திப் பின் அபீ பல்தஆ:

போர்க்கால சமயத்தில் முஸ்லிம்களின் உயிர் களையும், உடைமைகளையும் காப்பாற்றுவதற்காக தந்திரம் செய்யலாம், பொய் சொல்லலாம் என்கின்ற அளவிற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருக்க ஹாத்திப் பின் அபீ பல்தஆ என்ற நபித்தோழரோ முஸ்லிம்களின் நிலையை சற்றும் புரிந்து கொள்ளாமல் முஸ்லிம்களின் இராணுவ நடவடிக்கைகளை மக்கத்து குறைஷியர்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின்  தூதர்  (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத்  அவர்களையும், “நீங்கள் ரவ்ளத்து காக்எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண்  இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ரவ்ளாஎனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம்.

நாங்கள் (அவளிடம்),  ‘‘கடிதத்தை வெளியே எடு’’ என்று  கூறினோம். அவள், ‘‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை’’ என்று சொன்னாள். நாங்கள்,  “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்’’ என்று  சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள்.

நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஹாத்திபே! என்ன இது?’’ என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால்,  (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான்  உபகாரம்  எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை’’ என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உங்களிடம் உண்மை பேசினார்’’ என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்!’’ என்று கூறினார்கள். அதற்கு  நபி (ஸல்)  அவர்கள், “இவர் பத்ருப்  போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்என்று கூறி விட்டிருக்கலாம்’’ என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ் பின்வரும் (60வது) அத்தியாயத்தை அருளினான்: நம்பிக்கை கொண்டோரே! எனது பாதையிலும், எனது திருப்தியை நாடியும் அறப்போருக்குப் புறப்படுவோராக நீங்கள் இருந்தால் எனது பகைவரையும், உங்கள் பகைவரையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் உங்களிடம் வந்துள்ள உண்மையை மறுக்கின்றனர்…….(60:1)

நூல்: புகாரி 4274

அயிஷா (ரலி)

எந்த மார்க்கத்தில் குரோதம், பிணக்கு  கூடாது என்று வலியுறுத்தப்பட்டதோ அதே மார்க்கத்தின் தலையங்கமாகத் திகழ்ந்த நபித்தோழர்களிடத்திலும் இது போன்ற பிரச்சனைகள் நிலவியதைக் காண்கின்றோம்.

எதிரியிடத்தில் கூட மென்மையைக் கடைப்பிடித்த, தன்னைக் கொல்ல வந்தவனிடம் கூட மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட, மோசமானவர்களிடத்தில் கூட இனிமையாகப் பழகியவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அவர்களுடன் வாழ்ந்த அவர்களது அன்பிற்குரிய மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாரின் மருமகனான அலீ (ரலி) அவர்களிடம் நடந்து கொண்ட முறையைப் பாருங்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?’’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லைஎன்று பதிலளித்தேன். அவர்தாம் அலீ (பின் அபீதாலிப் (ரலி)’’ என்று அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 198

இவ்வாறு ஆயிஷா ரலி அவர்கள் அலீ (ரலி) யின் பெயரைக் கூட குறிப்பிட விரும்பாததற்குக் காரணம் ஆயிஷா (ரலி) மீது அவதூறு சுமத்தப்பட்ட போது நபிகளார் அவர்களைப் பற்றி கருத்துக்கணிப்பு கேட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள்.  அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியமாட்டேன்’’ என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்’’ என்று அலீ (ரலி) அவர்கள் கருத்துக் கூறினார்கள்.

இவ்வாறு கருத்துக் கூறினால் எந்தப் பெண் தான் தாங்கிக்கொள்வாள்? ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? சக பெண்மணிகள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அது போலத்தான் ஆயிஷா (ரலி) அவர்களும் நடந்து கொண்டார்கள் என்பதற்கு மேற்கண்ட செய்திகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதுவே அவர்களின் மனக்கசப்பிற்குக் காரணமாக இருந்தது.

—————————————————————————————————————————————————————————————

படைத்தவனுக்குப் பிரியமான பாவமன்னிப்புக்கோரல்!

வல்ல இறைவனிடம் வழங்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலம்!

எம்.எஸ். செய்யது இப்ராஹிம்

நாம் செய்யும் பாவங்களில் இருந்து நாம் மீள நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதுதான் ஒரே வழி. நாம் செய்த பாவங்களை நாம் ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கி படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோரினால் அருளவற்ற அருளாளனான இறைவன் நமக்கு மன்னிப்பளித்து அருள் புரிகின்றான்.

சாமானியர்களாக இருக்கும் நம்மில் பலரும், பல பாவங்களைச் செய்துவிட்டு இவற்றையெல்லாம் இறைவன் மன்னிப்பானா என கேள்வி எழுப்பி அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றோம்.

ஆனால் மனிதர்களிலேயே இறைவனுக்கு மிகவும் பிரியமானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்களே பாவங்களைச் செய்துள்ளார்கள்; அவர்கள் செய்த பாவங்களில் இருந்து அவர்களைத் தூய்மைப்படுத்தியது அவர்களது  பாவமன்னிப்புக் கோரல்தான் என்பதை, படைத்த இறைவன் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான்.

இறைவா! நான் இன்ன பாவத்தைச் செய்துவிட்டேன்; எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன்; எனது பாவத்தை நீ மன்னித்துவிடு என்று படைத்த இறைவனிடம் நமது பாவங்கள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி, நாம் சரணாகதி அடையும் போது இறைவன் நமது பாவங்களை மன்னிக்கப் போதுமானவனாக இருக்கின்றான்.

இறைவனிடம் மிக நெருக்கமான நபிமார்கள் செய்த பாவங்களும், அவைகளை இறைவன் மன்னித்த நிகழ்வுகளும் நமக்குப் பெரும் படிப்பினையாக இருக்கின்றன.

ஆதம் (அலை) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல்:

ஆதம் நபியவர்கள் இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள்; அவர்களைப் படைத்து இறைவன் சொர்க்கச் சோலையில் விட்டுவிட்டு ஒரேயொரு மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம் என கட்டளையிட்டான். ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்கள் இறைவனின் கட்டளையை அப்பட்டமாக மீறினார்கள். இறைவனது பார்வையில் இது மிகப்பெரிய வரம்பு மீறலாக இருந்த போதிலும் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகிய நமது தாய் தந்தையர் இருவரது பாவத்தை அல்லாஹ் எப்படி மன்னித்தான் தெரியுமா?

என்னிடம் இன்னின்ன வாசகங்களைச் சொல்லி பாவமன்னிப்புக் கேளுங்கள் என்று அல்லாஹ்வே அவர்களுக்கு பாவமன்னிப்புக் கேட்பதற்கான வாசகங்களை கற்றுத்தந்ததாக தனது திருமறையில் சொல்லிக்காட்டுகின்றான்.

(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர் ஆன் 2:37

தான் கற்றுக்கொடுத்த அந்த வாசகங்கள் என்ன என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்‘’ என்று அவ்விருவரும் கூறினர்.

அல்குர் ஆன் 7:23

நாங்கள் அநியாயம் செய்துவிட்டோம்; எங்களை மன்னித்து அருள்புரியாவிட்டால் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் சொன்னதால் தான் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்.

நூஹ் (அலை) அவர்களின் பாவமன்னிக்கோரல்:

அதுபோல நூஹ் (அலை) அவர்கள் ஒரு பாவத்தைச் செய்ததாதகவும் அந்தப் பாவத்திலிருந்து அவர்கள் மீண்டது எப்படி என்பதையும் அல்லாஹ் தனது திருமறையில் தெளிவுபடுத்துகின்றான்.

நூஹ் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்காத முஷ்ரிக்கான தனது மகனுக்காக அல்லாஹ்விடம் வாதாடினார்கள்; அதை அல்லாஹ் கண்டிக்கின்றான்.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்’’ என்றார்.

அல்குர் ஆன் 11:45

இவ்வாறு நூஹ் (அலை) அவர்கள் கூறிய மாத்திரத்திலேயே அதைக் கண்டித்து அல்லாஹ் கீழ்க்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கின்றான்.

 “நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்’’ என்று அவன் கூறினான்.

அல்குர் ஆன் 11:46

இறைவனின் இந்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகுதான் தான் செய்த தவறை நூஹ் (அலை) அவர்கள் உணர்கின்றார்கள்.

கீழ்க்கண்டவாறு அல்லாஹ்விடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரினார்கள்.

இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் நட்டமடைந்தவனாகி விடுவேன்’’ என்று அவர் கூறினார்.

அல்குர் ஆன் 11:47

மேற்கண்டவாறு தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததால் இறைவன் நூஹ் (அலை) அவர்களின் பாவத்தை மன்னித்தான்.

மூஸா (அலை) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல்:

மூஸா (அலை) அவர்கள் கோபத்தில் ஒரு குத்துவிட்டதால் ஒருவன் செத்துவிட்டான்; மூஸா (அலை) அவர்கள் அந்தக் கொலையைச் செய்த பிறகுதான் தான் ஷைத்தானின் வலையில் வீழ்ந்துவிட்டதை நினைத்து வருந்துகின்றார்கள்.

அவர்கள் இறைவனிடம் கேட்ட பாவமன்னிக்குரிய வாசகங்கள் இதுதான்:

என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!’’ என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

 “என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்’’ என்றார்.

அல்குர்ஆன் 28:16, 17

எனக்கு நானே அநியாயம் செய்துவிட்டேன்; என்னை மன்னித்துவிடு என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியதால் தான் மூஸா (அலை) அவர்களுக்கு மன்னிப்பு கிடைத்தது.

யூனுஸ் (அலை) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல்:

யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார்கள். இறைவனின் பார்வையில் இது மிகப்பெரும் தவறு. ‘யூனுஸ் நபியைப் போல நீ ஆகிவிடாதே’ என அல்லாஹ்வுடைய தூதரை அல்லாஹ் எச்சரிக்கும் அளவிற்கு அந்தப் பாவம் இருந்த நிலையிலும் கூட அல்லாஹ் அவர்களை மன்னித்து அருள்புரிந்தான்.

யூனுஸ் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னிக்க காரணமான அந்த பிரார்த்தனை என்ன தெரியுமா?

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்’’ என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்’’ என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

அல்குர் ஆன் 21:87, 88

மேற்கண்ட ஒப்புதல் வாக்குமூலத்தை யூனுஸ் (அலை) அவர்கள் இறைவனிடம் வழங்கியதால் தான் அவர்களை அல்லாஹ் மன்னித்து அருள்புரிந்தான்.

ஒருவன் தான் செய்த பாவத்தை உணர்ந்து அதை அப்படியே ஒப்புக்கொண்டு, படைத்த இறைவனிடம் அதைச் சொல்லி, பாவமன்னிப்புக் கோருவதுதான் அவன் அந்தப் பாவத்திலிருந்து மீள வழி.

இறைவனின் அருள் பெற்ற நபிமார்களாக இருந்தாலும் கூட அவர்களும் தாங்கள் செய்த பாவத்தை ஒப்புக்கொண்டு, படைத்த இறைவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி பாவமன்னிப்புக் கோரினால் தான் பாவங்களை இறைவன் மன்னிப்பான்.

அதனால் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களும் கூட ஒருநாளைக்கு நூற்றுக்கும் அதிகமான தடவை பாவமன்னிப்புக் கோரியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்.  ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவ மன்னிப்புக் கோருகிறேன்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5235

இதுபோன்று தினமும் நாமும் நமது பாவங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி நமது பாவங்கள் குறித்து இறைவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி மன்றாட வேண்டும்.

இதற்காகப் பிரத்தியேகமாக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் தினமும்  காலையிலும் மாலையிலும் பாவமன்னிப்புக்கோரி படைத்த இறைவனிடம் வழங்க வேண்டிய ஒப்புதல் வாக்குமூலத்தை, பாவமன்னிப்புக் கோரலை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மராயம் கூறியுள்ளார்கள்.

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பிB]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீ ப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த.

இதன் பொருள் :

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

நூல்: புகாரி 6306

இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அனுதினமும் நாம் கூறி, வல்ல இறைவனுக்குப் பிரியமானவர்களாக நாம் மாற வேண்டும். அல்லாஹ் அருள் செய்ய வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————

குடும்பவியல்    தொடர்: 39

கணவனின் குடும்பத்தாருக்குப் பணிவிடை செய்தல்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

வீட்டைப் பொறுத்த வரை மொத்த வீட்டுக்கும் பெண்தான் பொறுப்பாளியாவாள். ஒரு மனைவி தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கு மட்டும் தான் பொறுப்பாளி என்று நினைக்கக் கூடாது. கணவரின் தாய், தந்தையரையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றும் சிலர் தவறாக விளங்கி வைத்து உள்ளனர். ஆனால் நபியவர்கள் காட்டித் தந்த மார்க்கத்தில் அப்படி இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். …பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்….. (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 893

வீட்டுக்குப் பொறுப்பாளி என்றால் வீட்டிலுள்ள எல்லாவற்றுக்கும் என்று பொருள். கணவரின் தாய், தந்தை, சகோதரிகள், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் குறிக்கும்.

அதேபோன்று குடும்பத்தின் வேலைகளை யெல்லாம் மனைவிமார்கள் சுயவிருப்பத்துடன் தன் கடமை என எண்ணி, முழுமனதுடன் வேலை பார்க்க வேண்டும். நபியின் மகள் பாத்திமாவின் நிலையைப் பாருங்கள். இன்றைய காலத்தில் மனிதர்களின் பல வேலைகளை மிஷின்தான் செய்கிறது. ஆனால் நபியவர்கள் காலத்தில் கால், கைகள் வலிக்கும் அளவுக்கு வேலைகளைப் பார்ததுள்ளனர். அதற்காகத் தனது மருமகனை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மகளிடம் அப்படியொன்றும் செய்யத் தேவையில்லை என்றெல்லாம் சொல்லவில்லை.

குடும்பம் என்றால் அதுவெல்லாம் இருக்கத் தான் செய்யும். எனவே பொறுப்புக்களை உணர்ந்து மனைவிமார்கள் வீடுகளில் வேலை செய்து பழகவேண்டும்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம்.

(நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், “நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்’’ என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்). அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் கேட்டதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5361, 3113, 3705

மேலும் மனைவிமார்கள் வீட்டை விட்டு வெளியேறி சம்பாதிக்கும் நிலை நம்மிடம் இல்லை. நகணவன் உழைத்து வரவில்லையெனில் நாமும் நமது பிள்ளைகளும் நல்ல உணவை உட்கொள்ள முடியாது. நல்ல ஆடைகளை அணியமுடியாது. தேவையான காரியங்களை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து வீட்டு வேலைகளை மனைவிமார்கள் செய்யவேண்டும்.        அந்தக் காலத்துடன் நம்மை ஒப்பிடவே கூடாது. ஏனெனில் வீட்டு வேலைகளில் அதிகமானதை மிஷின்கள் மூலமாகத்தான் செய்கிறோம். ஆனாலும் நமக்கு அலுப்பாகத் தெரிகிறது. அப்படி நாம் நினைக்கக் கூடாது. இது நம் கடமைதான் என்றெண்ணி மனைவிமார்கள் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும்.

கணவனின் குடும்பத்தார்

குடும்பவியலில் பெண்கள் கணவனுக்குச் செய்யும் கடமைகள் மட்டுமின்றி வீட்டிலுள்ள முக்கியமான பணிகளிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடமைதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனைவிமார்கள், கணவனின் பொறுப்பில் உள்ளவர்களையும் உடன் பிறந்தவர்களையும் முறையாகக் கவனிக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது மார்க்கத்தில் உள்ள முக்கிய அம்சம் என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:   

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன். அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள்.  நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)? என்று கேட்டார்கள். ‘‘என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!’’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நீர் மணமுடித்து விட்டீரா?’ என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னி கழிந்த பெண்ணையா?’ என்று கேட்டார்கள். கன்னி கழிந்த பெண்ணைத் தான்!என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக் குலாவி மகிழலாமே!’’ என்று கூறினார்கள்.

நான்,‘‘எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும்என்று விரும்பினேன்!’’ என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்போது ஊருக்குச் செல்லப்போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 2097, 5367

மற்றொரு அறிவிப்பில் ஜாபிர்  அவர்கள் கூறுகிறார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் மக்களை விட்டுவிட்டு உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலைவாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)’’ என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரிதான்’’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4052

தனது தங்கைமார்களுக்கு சேவை செய்வதற்காகவே திருமணம் செய்ததாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் அதை, சரியான வேலையைச் செய்ததாகப் பாராட்டினார்கள்.

உங்களது தங்கைமார்களுக்குப் பணிவிடை செய்வது மனைவிக்குத் தேவையொன்றுமில்லை  என்றோ, உனக்கு மட்டும்தான் பணிவிடை செய்வது கடமை, உன் குடும்பத்தாருக்கெல்லாம் கிடையாது என்றோ நபியவர்கள் சொல்லாமல், பாராட்டத்தான் செய்தார்கள்.

அப்படியெனில் இந்தச் செய்தியிலிருந்து விளங்குவது என்னவெனில், ஒரு ஆண் திருமணம் செய்தாலும் அவர் யாரையெல்லாம் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறாரோ அவர்களையெல்லாம் கவனிப்பதும் பெண்களின் கடமைகளில் ஒன்று என்பதை அறியலாம்.

இப்படியெல்லாம் கவனிப்பதுதான் ஒரு பெண் தனது கணவரின் விருப்பதைப் பெறுவதற்கான முக்கியக் காரணமாக அமையும். மனைவி கணவனின் பொறுப்பிலுள்ளவர்களைக் கவனிக்கத் தேவையில்லை என்ற எண்ணத்தில் செயல்படத் துவங்கினால், ஆணின் முக்கியப் பொறுப்பான பொருளீட்டும் பணியில் தொய்வேற்படும். அவன் தன் பொறுப்பிலுள்ளவர்களை முழு நேரமாக உட்கார்ந்து கவனிக்கும் நிலை ஏற்பட்டால் நிச்சயம் அது ஒரு பெண்ணிற்கு நஷ்டமாகத்தான் அமையும்.

எனவே மனைவி தன் பொறுப்பில் இருப்பவர்களைச் சரியாகக் கவனிப்பாள் என்ற அம்சம் தான் ஆணின் பொருளீட்டும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. ஆகவே பெண்கள் கணவனின் பொறுப்பிலுள்ளவர்களைக் கவனித்துக் கொள்வதும் நம்முடைய கடமையென்று செயலாற்றும் குடும்பங்கள் தான் நிம்மதியாக மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

எனவே நம்முடைய சுகபோகத்தை  மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நமது குடும்பத்தின் நிலையைக் கவனித்து, நம் குடும்பத்தினைக் கவனிப்பதற்கு இன்னின்ன குணநலன்களைக் கொண்ட பெண்ணாக இருந்தால் சரியாக இருக்கும், இன்னின்ன வேலைகள் தெரிந்த பெண்மணி தான் நமக்கு மனைவியாக வேண்டும் என்று தேர்வு செய்து திருமணம் முடிப்பதில் எந்தத் தவறுமில்லை.

அதேபோன்று தன் தாயாரைக் கவனிக்க வேண்டும், தங்கைமார்களைக் கவனிக்க வேண்டும் என்பது போன்ற நோக்கங்களுக்காகவும் திருமணத்தை முடிக்கலாம் என்று விளங்குகிறது. இதுவெல்லாம் திருமணம் பேசுகிற போது ஒப்பந்த உடன்படிக்கையிலேயே சேர்ந்து விடுகிறது.

அழகிய முறையில் குடும்பம் நடத்துங்கள் என்று சொன்னால், கணவர்களுக்கு எந்த மாதிரியான தேவைகள் இருந்தாலும் அத்தகைய காரியங்களில் மனைவிமார்கள் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்; மனைவிமார்களுக்கு என்னவெல்லாம் தேவைகள் இருக்கிறதோ அவற்றிலெல்லாம் கணவன்மார்கள் ஒத்துழைப்பாக நடந்து கொள்ள வேண்டும். இதற்குத்தான் அழகான இல்லறம் என்றுபொருள்.

ஆனால் இவற்றையெல்லாம் சில பெண்கள் மறுத்து, கணவரின் தங்கை, அக்காமார்களுக்குப் பணிவிடைசெய்யச் சொன்னால், கணவனை எடுத்தெறிந்து பேசுவதைப் பார்க்கிறோம். உங்களுக்கு மனைவியா? அல்லது உங்களது தங்கைமார்களுக்கு மனைவியா? உங்கள் தங்கை எனக்கு என்ன செய்தாள்? நான் அவளுக்குப் பணிவிடை செய்வதற்கு? என்றெல்லாம் பேசுகிற பெண்களைச் சமூகத்தில் இன்றைக்கு ஏராளமாகப் பார்க்கிறோம்.

இதுபோன்ற மனநிலையை மாற்றி தனது கணவனின் பொறுப்பிலுள்ளவர்களுக்காகவும் நாம் பாடுபடுவது மார்க்கம் வலியுறுத்துகிற கடமை என்று நடப்பார்களானால் அத்தகைய பெண்களின் இல்லறமும் நன்றாக இருக்கும். மார்க்கக் கடமையை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும் என்று புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று இன்னொரு சான்றையும் காணமுடிகிறது.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை ஸுபைர் பின்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்து பத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து நானே பேரீச்சங்கொட்டைகளை (ப்பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான) அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக இஃக், இஃக்‘’ என்று சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும் நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரது ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள்.

நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து “(வழியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக் கொள்வதற்காக (த்தமது ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்’’ என்று கூறினேன். அதற்கு என்கணவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதை விட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது’’ என்று கூறினார்.

(இவ்வாறாக வீட்டுப்பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல்இருந்தது.

நூல்: புகாரி 5224

இந்த ஹதீஸில் பல விஷயங்கள் இருக்கின்றன. அபூபக்ர் மகள் அஸ்மா (ரலி) செல்வச்செழிப்போடு வாழ்ந்த பெண்மணி. மக்காவிலும் சரி; மதீனாவிலும் சரி. இதனை நபியவர்களே கூடச் சொல்கிறார்கள். எந்த மனிதரின் பொருளை விடவும் அபூபக்கரின் பொருள் அளவுக்கு எனக்குப் பயன்பட்டதில்லை என்று நபியவர்கள் சொல்லும் அளவுக்கு அபூபக்கர் பெரிய செல்வந்தராகத் தான் இருந்துள்ளார்கள். (பார்க்க: புகாரி 467)

அதே போன்று ஊருக்கு வெளியில் பெரிய அளவில் வீடெல்லாம் கட்டியிருந்தார்கள். பெரிய வியாபாரியாகவும் இருந்தார்கள். நபியவர்கள் இறக்கும் போதுகூட அபூபக்கர் அவர்கள் மதீனாவில் இல்லை. வியாபாரத்திற்குத் தான் போயிருந்தார்கள். இதனால் அபூபக்கர் வசதி வாய்ப்புள்ளவர் என்பதில் இருவேறு கருத்தில்லை.

இப்படியிருப்பவர்கள் பெரும்பாலும் தம் மகளை பணக்கார மாப்பிள்ளையைத்தான் பார்த்துக் கட்டிக் கொடுப்பார்கள். நம் பிள்ளை நன்றாக, செழிப்பாக இருக்க வேண்டும் என்று மட்டும் பார்ப்பார்கள். மார்க்கத்தைப் பேண மாட்டார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) அப்படிப் பார்க்கவில்லை. நல்ல மனிதராகவும் மனைவியை நல்லமுறையில் வைத்திருப்பாரா? என்று தான் பார்த்தார்கள். பொருளாதாரத்தைப் பெரியளவுக்குக் கணக்குப் பார்த்து மாப்பிள்ளையை அபூபக்கர் (ரலி) பார்க்கவில்லை. தீனைப் பேணுகிறவரா? என்பது தான் முக்கியமான அம்சம்.

பெரிய செல்வந்தர், மூட்டை தூக்கி உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்குத் தங்களது பெண்ணைக் கொடுக்க மாட்டார்கள்.

உழைப்பாளியாக இருந்து, ஒழுக்கம், வணக்க வழிபாடுகளைச் செவ்வையாகச் செய்வது, மார்க்கக் கடமைகளைச் சரியாகச் செய்பவர் என்பதைத்தான் நல்ல மாப்பிள்ளைக்கான அளவுகோலாக அபூபக்கர் (ரலி) பார்த்தார்கள்.

மேலும் அஸ்மா (ரலி) படும் கஷ்டங்களையெல்லாம் நபியவர்கள் நேரடியாகப் பார்த்த பிறகும், ஸுபைர் (ரலி)யைக் கண்டிக்கவில்லை. இப்படியெல்லாம் பெண்கள் வேலை செய்வது பெண்களுக்கு எதிரான கொடுமை என்றால், ஸுபைர் (ரலி)யைக் கூப்பிட்டு கண்டித்திருப்பார்கள். பல நேரங்களில் மிம்பரில் எச்சரித்ததைப் போன்று பொதுவான எச்சரிக்கையையும் செய்திருப்பார்கள். அப்படியான ஒரு செய்தியையும் ஹதீஸ்களில் காணமுடியவில்லை என்பதே இது போன்று கணவர் வீட்டிலுள்ள வேலைகளையும் கணவனின் பொறுப்பிலுள்ளளவர்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளையும் ஒரு பெண் செய்வது கடமை என்பதைப் புரியலாம்.

அஸ்மாவின் கஷ்டத்தைப் பார்த்த நபியவர்கள் அவரது கணவர் ஸுபைரைக் கண்டிக்காமல், அஸ்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். அபூபக்கர் தனது மகள் அஸ்மாவுக்கு ஒரு அடிமையைக் கொடுத்தது கூட, அபூபக்கராகக் கொடுக்கவில்லை. நபியவர்கள்தான் அஸ்மாவுக்கு உதவி செய்யும் பொருட்டு கொடுக்கச் சொன்னதாகவும் அல்லது கொடுத்ததாகவும் மற்றொரு அறிவிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கணவர் வீட்டில் படும் கஷ்டத்திற்குப் பகரமாக வேறொரு வகையில் உதவினார்களே தவிர, கணவர் வீட்டில் வேலை பார்ப்பது தவறு என்று சொல்லவில்லை.

ஆக, பெண்கள் கணவர் வீட்டு சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டு நடந்து கொள்வதே சரியான குடும்ப வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.