ஏகத்துவம் – ஏப்ரல் 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்)! அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி

இஸ்லாம் மார்க்கம் முக்கியமான இரு கொள்கைகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை – என்ற கொள்கையாகும். மற்றொன்று முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதராவார்கள் – என்ற கொள்கையாகும். இவ்விரு கொள்கைகளையும் உள்ளத்தால் ஏற்று, வாயால் மொழிந்தால் தான் ஒருவர் இஸ்லாத்தில் இணைய முடியும்.

இவ்விரு கொள்கைகளையும் அதிகமான முஸ்லிம்கள் மேலோட்டமாகவே அறிந்து வைத்துள்ளனர். அரைகுறையாகவே நம்புகின்றனர்.

இவ்விரு கொள்கைகளையும் அதன் முழு பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் கடமையை உணர்ந்து, லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் முதல் கொள்கையை மக்களுக்கு முழுமையாக விளக்கிட ஷிர்க் ஒழிப்பு  மாநாட்டை நடத்தினோம்.

ஷிர்க் என்றால் என்ன என்பதையும், எவையெல்லாம் ஷிர்க்கில் அடங்கும் என்பதையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் ஆறுமாத காலம் மக்கள் மத்தியில் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதன் மூலம் அதிகமான மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினான்.

அடுத்த கட்டமாக, “முஹம்மது அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்ற கொள்கையை அதன் முழுப்பரிமாணத்துடன் மக்களிடம் கொண்டு செல்லும் தொடர் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுத்துள்ளது. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில் தமிழகமெங்கும் மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநாட்டிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை அறிந்து வருகின்றார்கள்.

முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதர் என்று குருட்டுத்தனமாக முஸ்லிம்கள் நம்புவதில்லை; அப்படி நம்பவும் கூடாது. பல வகையிலும் ஆய்வு செய்து அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை விளங்கியே நம்புகின்றனர்.

தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று வாதிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்குத் தக்க சான்றுகளை முன்வைத்தே வாதிட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் திருக்குர்ஆன் என்ற செய்தியை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அந்தக் குர்ஆனை நீங்கள் ஆய்வு செய்தால் அது மனிதனின் கூற்றாக இருக்க முடியாது என்பதையும், அல்லாஹ்விடமிருந்து தான் வந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்றால் அதைக் கொண்டு வந்த நான் அல்லாஹ்வின் தூதரே என்பது அவர்கள் எடுத்து வைத்த முதல் சான்றாகும்.

எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இதுபோல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று திருக்குர்ஆன் 2:23, 10:38, 11:13, 17:88, 52:34 ஆகிய வசனங்கள் அறைகூவல் விடுக்கின்றன.

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ளப்படவில்லை. இனியும் யாராலும் எதிர்கொள்ள முடியாது எனவும் 2:23 வசனத்தில் திருக்குர்ஆன் திட்டவட்டமாக அறிவிக்கின்றது.

முஹம்மது நபியின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதைவிடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறைவேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த முஹம்மது நபி எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆனைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது. எந்தத் துறையைப் பற்றிப் பேசினாலும் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் பேசுவது போல் அது அமையவில்லை. மாறாக இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களைத் திருக்குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒருசேரச் சிந்திக்கும் யாரும் “இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்” என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதில் கீழ்க்காணும் எட்டு அமசங்கள் அடங்கியுள்ளன.

  1. முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதற்கு ஏற்ற வகையில் அமைந்த அவர்களின் தூய வாழ்க்கை.
  2. முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்குக் கடவுள் தன்மை இல்லை.
  3. முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் மார்க்கம் தொடர்பாகக் காட்டிய வழிகாட்டுதல் அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்தல்ல; அல்லாஹ்விடமிருந்து வந்தவையே!
  4. முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் காட்டாமல் அவர்களுக்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடாகும்.
  5. முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களின் வழிகாட்டுதல் திருக்குர்ஆனுக்கு அடுத்து ஏற்று நடக்கத்தக்கதாகும்
  6. அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் வழியாக மட்டுமே இறைச்செய்தி நமக்குக் கிடைத்தது. அவர்களைத் தவிர யாராக இருந்தாலும், நபிதோழர்களாக இருந்தாலும் மாபெரும் இமாம்களானாலும், தவசீலர்களாக இருந்தாலும் வஹீ எனும் இறைச் செய்தி வராது. அவர்கள் கூறுவது மார்க்க ஆதாரம் அல்ல.
  7. முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் திருக்குர்ஆனுக்கு மாற்றமாக ஒரு செய்தியையும் சொல்ல மாட்டார்கள். அப்படி அவர்கள் பெய்ரால் சொல்லப்படும் செய்திகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை
  8. முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்கள் இறைத்தூதர் என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கூறிய சொந்தக் கருத்துக்கள் மார்க்கமாகாது

இவற்றை மக்கள் மத்தியில் தக்க சான்றுகளுடன் விளக்கி, அகில உலகுக்கும் முன்மாதிரியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதுதான் இதன் நோக்கமாகும்.

இந்த உன்னதமான நோக்கத்தில் தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வரும் மாவட்ட மாநாடுகளின் தொடர்ச்சியாக, சென்னை மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் 23 அன்று சென்னை தீவுத்திடலில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு நடைத்தவுள்ளது.

இம்மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் முகமாக துண்டுப்பிரசுரங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், சுவரொட்டிகள், பேனர்கள், உள்ளரங்கு நிகழ்ச்சிகள், தனி நபர்களைத் தேடிச் சென்று தெளிவுபடுத்துதல் போன்ற பல்வேறு அழைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஏகத்துவம் ஏப்ரல் மாத இதழை, மாநாட்டு சிறப்பு மலராக வெளியிடுவது எனத் தீர்மானித்துள்ளோம்.

இம்மையிலும், மறுமையிலும் வெற்றியைப் பெற்றுத் தந்து மக்களை நேர்வழியில் அழைக்கும் இப்பணியில் நீங்களும் பங்கெடுத்து மறுமையில் இதற்கான பயனைப் பெற்றுக் கொள்ள அழைக்கிறோம்.

—————————————————————————————————————————————————————————————

அரசியல் களத்தில் அண்ணலார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனால் நியமனம் செய்யப்பட்ட தூதராக ஒரு புறம் இருந்தாலும், மறுபுறத்தில் ஒரு பெரும் சாம்ராஜியத்தை ஆட்சிபுரிகின்ற சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தார்கள்.

பொதுவாக உலகில் ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் பதிவ ஏற்பதற்கு முன்னால் வரை சாமானியர்களாக இருந்து பதவி ஏற்று சில நாட்களிலேயே லட்சாதிபதிகளாகவும் கோடீஸ்வரர்களாகவும் உருவெடுப்பதைப் பார்க்கின்றோம்.

மேலும், ஆட்சியாளர்கள் என்றாலே மக்களை விட்டு அப்பாற்பட்டு தங்களுக்கென்று ஒரு தனி வாழ்க்கை வாழ்பவர்களாகவும், மக்களைத் தங்களுக்கு அருகில் கூட நெருங்க விடாதவர்களாகவும் இருப்பதைப் பார்க்கின்றோம்.

இன்னும் மக்களின் வரிப்பணங்களைச் சூறையாடும் ஊழல் வாதிகளாகவுமே ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தும் கூட தமக்காகவும் தம் குடும்பத்திற்காகவும் எந்தச் சொத்தும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை. சுகபோகமாக வாழவுமில்லை. மக்களை விட்டு அப்பாற்பட்டும் இருக்கவில்லை.

எளிமையாகவும், ஏழ்மையுடனும், மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் சாமாண்யராகவுமே தமது மரணம் வரை வாழ்ந்துள்ளார்கள்.

நபிகள் நாயகத்தின் ஏழ்மை

ஒரு மனிதன் வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியமானதாகும். அந்த உணவிற்கு வழியில்லாத நிலையில்தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்தது.

‘மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை’ என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார். ‘என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?’ என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) ‘பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்‘ என விடையளித்தார்.

அறிவிப்பவர் : உர்வா

நூல் : புகாரி 2567, 6459

நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5374

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) ‘எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2069, 2508

மாமன்னராக இருந்த நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் சரியான சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்கள். மேலும், தமது ஊழியர் கொண்டு வந்து கொடுக்கும் உணவை உண்ணுகிற நிலையில் தான் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இருந்துள்ளது என்பதிலிருந்து அவர்களது ஊழலற்ற நேர்மையான ஆட்சியை விளங்கலாம்.

நபிகள் நாயகத்தின் ஆடை

அரசியல்வாதிகள் என்றாலே ஆடை முறையில் தங்களுக்கென்ற தனி அடையாளத்தை வைத்துள்ளார்கள்.

ஒரு ஆடைக்காக பல லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுபவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி ‘இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்’ என்று குறிப்பிட்டார்.

நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகத்தின் வீடும் உபயோகப் பொருட்களும்

இன்று சாதரணமான வார்டு பதவியில் வகிப்பவர்கள் கூட பதவிக்கு வந்த பிறகு மாளிகையைப் போன்ற வீடுகளை வசப்படுத்திக் கொள்கின்றனர்.. ஆடம்பரத்தில் அவரும் அவரது குடும்பத்தாரும் திளைக்கின்றனர்.

ஆனால், நபிகள் நாயகத்தின் வீடு, ஒருவர் தொழுதால் மற்றவர் கால் நீட்டி படுக்க முடியாத அளவுக்கு ஒடுக்கமாகவும், ஒரு அறையை விட சிறியதாகவுமே இருந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல் : புகாரி 382, 513, 1209

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5’ ஜ் 5’ இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!

மேலும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் தன்மைகளைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்’’ என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்‘ எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது’ எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

இன்றைக்கு இருக்கும் பரம ஏழைகூட இத்தகைய வாழ்க்கை வாழ்வது இல்லை. ஆனால் மாபெரும் சக்கரவர்த்தி  இத்தகைய வாழ்க்கை வாழ்ந்துள்ளார் எனில் இவரது ஆட்சியில் ஊழலுக்கு இடம் இருந்திருக்குமா?

அவர்களது ஆட்சியில் ஏற்பட்டது போன்ற தன்னிறைவை அவர்களுக்குப் பின் இன்று வரை எந்த நாட்டிலும் எந்த ஆட்சியும் அடைய முடியவில்லை. ஆம் அந்த அளவுக்கு அவர்களது ஆட்சியில் செல்வம் கொழித்தது. அந்த நிலையில் தான் இவ்வளவு எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டார்கள்.

இன்று இது போன்று ஒரு அரசியல்வாதியை நம்மால் பார்க்க முடியுமா?

மேலும், ஆட்சியாளர்களின் வருகை என்றாலே அவர்களைச் சாதாரண மக்கள் நெருங்க முடியாது. ஆட்சியாளர்களுக்கு முன்னும் பின்னும் பாதுகாவல் என்று புடைசூழ வருகை தருவார்கள். ஆனால் நபிகள் நாயகம் தனக்கென்று தனித்துவத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சிறுவர்கள் உட்பட அனைவரிடமும் கலந்து பழகிவந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் ‘உனது குருவி என்ன ஆனது?’ என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள்.

நூல் : புகாரி 6129

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்‘ என்று அப்பாஸ் (ரலி) மக்களிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித் தான் இருப்பேன்’ எனக் கூறினார்கள்.

நூல் : பஸ்ஸார் 1293

மக்களில் ஒருவனாகத் தான் இருக்க வேண்டும் என்பதையே இந்த சக்கரவர்த்தி விரும்பியுள்ளார்.

ஆனால், இன்றைக்கு ஒரு அரசு அதிகாரியையோ அல்லது ஒரு அரசியல்வாதியையோ சந்திக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை பணம் கொடுத்து சரிகட்டினால் தான் சந்திக்க முடியும் என்ற நிலைமை உள்ளது.

பெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்த ஒரு மாமன்னர் தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் எதையும் சேமித்துக் கொள்ளாமால் தன் வாழ்க்கை முழுவதையும் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————

பழிவாங்காத பண்பாளர்

முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம்

நபிகளாரின் பரிசுத்தமான வாழ்க்கையைப் பார்த்து அன்றைய கால மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்பட்டார்கள். இன்றளவும் பலர், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தும் கேட்டும் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். காரணம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்பண்புகளின் உறைவிடமாக திகழ்ந்தார்கள்; ஒழுக்க சீலராக விளங்கினார்கள்.

சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தூதரின் குணநலன்கள் இருந்தன. இது குறித்து குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் ஒரு முக்கியமான செய்தியைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகள், துன்பங்கள்) எதற்காகவும் தமக்கென ஒருபோதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி (6853) (6126) (3560)

குடிமக்களுக்குப் பாதுகாப்பை, அமைதியை அளிக்கும் வகையில் ஆட்சியாளர் எனும் அடிப்படையில் அல்லாஹ் அருளிய குற்றவியல் சட்டங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தினார்கள்; நீதியை நிலைநாட்டினார்கள்.

அதேசமயம், தமது தனிப்பட்ட விவகாரத்திற்காக எவரையும் எப்போதும் பழிவாங்கியதே இல்லை. தமக்குப் பிறரால் பெரும் துன்பங்கள் நேர்ந்த போதிலும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள்.

இன்று மக்களிடம் அரிதிலும் அரிதாகி வரும் பண்புகளுள் இதுவும் ஒன்று. அற்பத்திலும் அற்பமான விசயங்களைக் கூட மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கத் துடிக்கிறார்கள். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் மார்க்கம் தடுத்த பல்வேறு பண்புகள் அவர்களிடம் நுழைந்து விடுகிறது. இத்தகைய நபர்களுக்கு நபிகளாரிடம் பாடம் இருக்கிறது.

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’’ என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப்போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’’  என்று கூறினார். உடனே, “(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’’ என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3231

சத்தியத்தைச் சொன்ன நபியிடம் தாயிஃப் நகர மக்கள் வரம்பு மீறினார்கள். கடுமையான துன்பங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தூதரையே இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நபிகளார் மறுத்து விடுகிறார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. நபியை நேசிப்பதாகச் சொல்லும் பித்அத்வாதிகள், தங்களிடமுள்ள நபிவழிக்கு முரணான காரியங்களைப் பற்றி எவரேனும் பேசினால் கொதிக்கிறார்கள். தங்களிடம் ஏமாறாத வண்ணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தவ்ஹீத் சகோதரர்களுக்கு எதிராகப் பிரச்சனைகளைக் கிளப்பி விடுகிறார்கள். இனியாவது இவர்கள் இத்தகைய பழிதீர்க்கும் குணத்தை விட்டொழித்து, மார்க்கப்படி தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள்.  அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’’  என்று கூறினார்கள். நபித் தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது’’ என்று கூறினார்கள்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2390)

மற்றவர் முன் தம் கண்ணியத்தைப் பாழ்படுத்தும் வகையில் கடுமையாக பேசிய நபரை நபிகளார் மன்னித்தார்கள். தம்மீது நேசம் கொண்ட நபித்தோழர்கள் ஆவேசம் அடைந்த நேரத்தில், அவர்களை அமைதிப்படுத்தினார்கள். இதுபோன்று இன்னொரு சந்தர்ப்பத்தில், மற்றவர் முன்னிலையில் தமது நேர்மையை சந்தேகிக்கும் வகையில் முறைதவறி பேசிய ஆளையும் நபிகளார் தண்டிக்காது விட்டார்கள்.

அலீ (ரலி) அவர்கள் (யமனிலிருந்து)  நபி (ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ (ரலி), உயைனா பின் பத்ர் அல் ஃபஸாரீ (ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ (ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல் ஆமிரி (ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும் கோபமடைந்து, “நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கின்றார்; நம்மை விட்டு விடுகின்றாரே’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களுடைய உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்’’ என்று கூறினார்கள்.

அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, “முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்’’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?’’ என்று கேட்டார்கள். அப்போது வேறொரு மனிதர் இப்படி (குறை) சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார்…. அனுமதி கேட்ட அவர் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தாம் என்று நினைக்கின்றேன்- அவரை நபி (ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்து விட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்ற போது நபி (ஸல்) அவர்கள், “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து…. அல்லது இவரின் பின்னே – ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள்  வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்;  இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் “ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்.’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (3344)

இவ்வாறு பிறரால் தொல்லைகள், இடையூறுகள் வரும் வேளையில், தம்மிடம் உண்மையும் உரிமையும் இருந்த போதிலும் நபியவர்கள் பொறுமையாக இருந்தார்கள். ஆனால், இன்று இருக்கும் மக்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள்.

சிலர் தங்கள் வீட்டு வரதட்சனை திருமணத்திற்கு வராத உறவினர்களைப் பகைத்துப் பழிதூற்றுகிறார்கள். இதுபோன்ற நபிவழிக்கு முரணான திருமணத்தை ஜமாஅத் நடத்தி வைக்காவிட்டால் நிர்வாகத்திற்கும் நிர்வாகிக்கும் எதிராக அடுக்கடுக்கான அவதூறுகளை பரப்புகிறார்கள்.

எந்தளவெனில், பழிவாங்கும் மனநிலை காரணமாக, ஜமாஅத் செய்யும் நன்மையான காரியங்களையும் வீம்புக்கு குறைசொல்கிறார்கள்; தவறாகச் சித்தரிக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.

இந்தக் காலத்தில் எவரையாவது பிடிக்காமல் பழிவாங்க முடிவெடுத்து விட்டால், அவர் செய்த்ச் நற்செயல்கள், அறப்பணிகள் என்று எதுவாயினும் அவற்றைத் தடுக்க முனைகிறார்கள்; முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்கள் நபியைப் பார்த்து படிப்பனை பெற்றுக் கொள்ள முனவர வேண்டும்.

இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமல்ல, தமது மனைவி மீது அவதூறு பரப்பி குடும்பத்திற்குள் குழப்பம் விளைவிக்க நினைத்த முனாஃபிகுகளின் தலைவனுக்கும் நபிகளார் நலம் நாடினார்கள். அவன் இறந்தபோது அவனுக்காக தொழுகை நடத்தினார்கள். இந்த மனம் யாருக்காவது வருமா? (இச்சம்பவதை அடுத்து இத்தகைய ஆட்களுக்கு தொழுவிக்கக் கூடாது என்று சட்டம் இறங்கியது.)

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டான். அப்போது அவனது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ““அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள்;  அவரை அதில் பிரேத உடை (கஃபன்) அணிவிக்க வேண்டும்;  மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது, அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, “(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுவிப்பேன்’’ என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’’ எனக் கூறிவிட்டு, “நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை’’ என்ற (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ““அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்‘’ எனும் (9:84ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (1269)

இன்னும் சொல்வதாயின், சிலர் நபிகளாரின் உயிருக்கே ஊறு செய்ய நினைத்தார்கள்.  அப்போது தூதர் ஒரு கட்டளை இட்டிருந்தால் போதும் அவர்களின் கதை முடிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அல்லாஹ்வின் தூதரோ அவர்களைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது.  உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய் விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார். நான் கண் விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், “என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் “அல்லாஹ்’ என்று (மூன்றுமுறை) கூறினேன்’’ என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும்கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (2910) (2913) (4137) (4139)

யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். “அவளைக் கொன்று விடுவோமா?’’ என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், “வேண்டாம்‘’ என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (2617)

இவ்வாறு, நபியவர்கள் பழிவாங்காத பண்பாளராக இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக பல சம்பவங்கள் உள்ளன. இப்பண்பு சத்தியத்தை எதிர்க்கும் மக்களைக் கூட அதற்குரிய ஆதரவாளர்களாக, நேசர்களாக, பாதுகாவலர்களாக ஆக்கியது. ஆனால், இன்று இந்தக் குணம் இல்லாமல் போனதின் விளைவாக சமூகத்தில் எண்ணற்ற விறிசல்கள் ஏற்படுகின்றன.

இன்றெல்லாம் தம்மீது குற்றத்தை வைத்துக் கொண்டு அதற்கு ஒத்துபோக, துணைபுரிய மறுப்பவர்களுக்கு துன்பம் தருவது வாடிக்கையாகி விட்டது. நினைத்த நபரைப் பழிவாங்க முடியாத பட்சத்தில் அவருடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கு துன்பம் இழைக்கும் கொடுமையும் நடக்கிறது.

இதன் உட்சகட்டமாக, தங்களது குரோத சிந்தனையை குழந்தைகளிடமும் விதைத்து தலைமுறை தலைமுறையாக பழிவாங்கும் படலமும் தொடர்கிறது.

ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள், தெருவாசிகள், குடும்ப உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து இருக்கும் இடங்களில் அவர்களுக்கு மத்தியில் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு பழிவாங்கும் குணம் முக்கிய காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

ஆகவே நம்பிக்கை கொண்ட மக்கள் இத்தகு மோசமான குணத்தில் விழுந்துவிடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம். தங்களது வாழ்வில் வணக்க வழிபாடுகள் உட்பட எல்லா விசயங்களிலும் நபிகளாரை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், நபிகளாரின் பரிசுத்தமான வாழ்வை, நற்குணங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதுடன், அவ்வாறு அழகிய முறையில் வாழும்போது அதுவே மிகப்பெரும் அழைப்புப் பணியாக அமையும். இந்த நல்ல புரிதலை அனைவருக்கும் தந்து அல்லாஹ் அருள்புரிவானாக! ஈருலகிலகிலும் வெற்றியை அளிப்பானாக!

—————————————————————————————————————————————————————————————

நபிவழி நடந்தால் நரகமில்லை

இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்குச் சொந்தமான மார்க்கமாகும். இந்த மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் வஹி என்னும் இறைச் செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே.

திருக்குர்ஆன் 3:9

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.

திருக்குர்ஆன் 3:85

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் கிடையாது.

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.

திருக்குர்ஆன் 12:40

இறைவனுக்கு மட்டுமே சொந்தமான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுயவிருப்பப்படி எதையும் சட்டமாக்கி விட முடியாது.

(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்!

திருக்குர்ஆன் 18:27

இது அகிலத்தாரின் இறைவனிடமிருந்து அருளப்பட்டது.. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.

திருக்குர்ஆன் 70:43-48

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் “இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!’’ என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்’’ என (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:15

நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிக்கமாட்டேன் என்று கூறியபோது இறைவன் அதனை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளான்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (66 : 1) என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

மேலும் பத்ருப் போர் கைதிகள் விசயமாக நபியவர்கள் சுய முடிவு எடுத்த நேரத்திலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்கு போதித்த அனைத்தும் இறைச் செய்திதான். அதாவது ஹதீஸ்கள் என்று நாம் கூறுபவை நபியவர்கள் தமது சுய இஷ்டப்படி கூறியவையல்ல. மாறாக அவையும் இறைச் செய்திதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.

இறைத்தூதரும் கூட இறைவனுடைய கட்டளைகளைத்தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதைத்தான் இறைவன் பின்வரும் வசனத்தில் உலகமக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகின்றான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

அல்குர்ஆன் 7:3

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் 6:106

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். . இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 43:43,44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என் பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

திருக்குர்ஆன் 5:49

மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

திருக்குர்ஆன் 5:44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 5: 45

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

திருக்குர்ஆன் 5:47

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக் கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

திருக்குர்ஆன் 42:21

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

திருக்குர்ஆன் 9:31

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 49;16

நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களிலெல்லாம் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்:  நஸாயீ 1560

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே “அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

“(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’’ என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்’’ என்று சொல்லப்படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!’’ என்று (இரண்டு முறை) கூறுவேன்.

நூல் : புகாரி 6584

அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்’’ என்று சொல்வான்.

நூல் புகாரி 6585

உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டார்கள்’’ என்றார்.

நூல் : புகாரி 6587

புகாரி 6584வது ஹதீஸில் மார்க்கத்தை மாற்றியவர்கள் என்றும், 6585வது ஹதீஸில் பழைய மதத்திற்கு திரும்பியவர்கள் என்றும், 6587வது ஹதீஸில் மதம் மாறியவர்கள் என்றும் பித்அத்துகளைச்  செய்பவர்களை அல்லாஹ் கூறியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!

அறிவிப்பவர்  : ஆயிஷா(ரலி)

நூல் : புகாரீ (2697)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 3243

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான (தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

அறிவிப்பவர் :  இர்பாள் பின் ஸாரியா (ரலி)

நூல் : அஹ்மத் 16519

நபிகள் நாயகமும் இறைச் செய்தியையே பின்பற்ற வேண்டும்

உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற் படுத்தியுள்ளோம்.

அல்குர்ஆன் 5:48

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 6:106

நபிவழியும் இறைச் செய்தியே!

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.  அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.  அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார்.

திருக்குர்ஆன் 53:3-7

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை.  அவர் பேசுவதெல்லாம் வஹி என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது.  குர்ஆன் வஹி என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர்.  குர்ஆன் வஹியாக உள்ளது என்பதை மட்டும் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை.  “இவர் மனோ இச்சைப் படி பேச மாட்டார்’’ என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் தான் எடுத்துக் கொள்ளும்.  மனோ இச்சைப் படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹி தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் – முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் – விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப் பட்டவையல்ல.  மாறாக அது இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹி எனும் இறைச் செய்திதான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

குர்ஆன் எப்படி வஹியாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹியாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் – அந்தப் பேச்சுக்கள் வஹி இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

இறைத்தூதருக்கு கட்டுப்படுதல்

திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத்தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதற்குக் காரணம் இறைவனுடைய இறைச் செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக்கூற்று கிடையாது. சில நேரங்களில் நபியவர்கள் இறைவனின் அனுமதியில்லாமல் சில வார்த்தைகளைக் கூறிய காரணத்தினால் அவர்கள் இறைவனால் கடுமையாகப் கண்டிக்கப்பட்டுள்ளார்கள். இறைத்தூதராக இருந்தாலும் இறைமார்க்கத்தில் அவர் தன்னுடைய சுயக்கருத்தினை கூற முடியாது என்பதை நாம் தனியாக விளக்கியுள்ளோம். இங்கே நாம் மிக முக்கியமாக விளங்கவேண்டியது இறைத்தூதருக்கு கட்டுப்பவதின் நோக்கின் அவர் இறைச்செய்தியை கூறுவதுதான். மார்க்கத்தில் இறைவன் வகுத்தான் சட்டமே தவிர அங்கு வேறுயாருடைய கருத்தும் கலந்துவிட இறைவன் அனுமதிக்க மாட்டான்.

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் அனுப்புவதில்லை.

(அல்குர்ஆன் 4 : 64)

அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இறைத்தூதர்கள் அனுப்பட்டார்கள். இறைத்தூதருக்கு கட்டுப்படுதல் என்பதே இறைவனுக்காகத்தான். அதாவது இறைச் செய்தியைத்தான் நாம் பின்பற்றவேண்டும். இறைச் செய்தியை பின்பற்ற வேண்டும் என்றால் அதைக்கூறும் இறைத்தூதரின் வார்த்தைகள் இறைச்செய்தி என நம்பிக்கை கொண்டு அவ்வார்த்தைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். இதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் தெளிவு படுத்துகின்றான்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப் பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை

(அல்குர்ஆன் 4 : 80)

இறைச்செய்திகளை இறைவனிடமிருந்து பெற்று இறைத்தூதர் அறிவிக்கின்ற காரணத்தினாலேயே இறைவன் இறைத்தூதருக்கு கட்டுப்பவதை தனக்கு கட்டுப்படுவதாக சொல்லிக்காட்டுகின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம்தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்

(அல்குர்ஆன் 7 : 158)

அல்லாஹ் இறைத்தூதருக்கு கட்டுப்படுமாறு கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் கூறுகிறான். அதாவது ‘’ இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்!’’  என்ற வாசகமே அது.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக

(அல்குர்ஆன் 3 : 311)

இறைக்கட்டளைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதுதான் இறைநேசத்தை பெற்றுத்தரும். அப்படிப்பட்ட இறைநேசத்தை பெறுவதற்கு நபிக்கு கட்டுப்பட வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான். நபியவர்கள் இறைக்கட்டளைகளை எடுத்துக் கூறுகின்ற காரணத்தினால் அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதுதான் இறைக்கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். இதன்காரமாகத்தான் இறைநேசம் பெறுவதற்கு இறைத்தூதருக்கு கட்டுப்படுங்கள் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 3 : 32)

இறைத்தூதருக்கு கட்டுப்ட மறுத்தால் இறைவனை மறுப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைத்தூதர்தான் இறைவன் என வழிகேட்ர்கள் பொருள் கொள்வதைப் போன்று நாம் விளங்கி காஃபிர்களாகி விடக்கூடாது. மாறாக இதன் சரியான கருத்து இறைத்தூதர் கூறுவது அவரது சுயக் கருத்தல்ல. இறைக்கட்டளைகள். அவருடைய கருத்தை நாம் புறக்கணித்தால் இறைத்தூதரின் சுயக்கருத்தை நாம் புறக்கணிக்க வில்லை. மாறாக இறைவனின் கருத்தையே புறக்கணிக்கின்றோம். இதன் காரணமாகத்தான் அவர்களை காஃபிர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்படுவதே முஃமின்களின் பண்பு

அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்‘’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 24 : 51, 52)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன்  9 : 36)

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4 : 65)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய திருக்குர்ஆன் எனும் வேதத்தையும், ஹதீஸ் எனும் இறைச்செய்திகளையும் மட்டுமே பின்பற்றி இம்மை மறுமையில் வெற்றி பெறுவோம்.

—————————————————————————————————————————————————————————————

நபித்தோழர்களை மதிப்பது நேர்வழி! அவர்களைப் பின்பற்றுவது வழிகேடு!

இறைவனால் இறக்கியருளப்பட்ட வஹீச்செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும்; வஹீ அல்லாததை யார் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் வழிகேட்டின் பக்கம் சென்றுவிட்டார்கள் என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படை.

இதை வல்ல இறைவன் தனது திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான்.

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் : 6:106

அல்லாஹ் எதை வஹீச் செய்தியாக அருளியுள்ளானோ அந்த வஹீச் செய்தி மட்டும் தான் மார்க்கம் என்பதே இறைவனின் கட்டளை.

ஆனால் இன்று தங்களையும் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும், கப்ரு வணங்கிகளும் சஹாபாக்களையும் நாம் பின்பற்ற வேண்டும்; அவர்கள் சொல்லிய, செய்த அனைத்தும் மார்க்கம் என்று சொல்லி வருகின்றனர்.

அதற்கு அவர்கள் வைக்கும் பிரதானமான வாதம், “சஹாபாக்கள் சாதாரண ஆட்கள் இல்லை; அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரிடத்திலேயே பாடம் படித்தவர்கள்; அவர்களை விட மார்க்கத்தை நன்கு அறிந்தவர்கள் யாருமில்லை; எனவே அவர்களின் வழிகாட்டுதலும் அதுவும் மார்க்கமாகும்” என்பதுதான் அந்த வாதம்.

இது முற்றிலும் தவறு என்பதை திருக்குர்ஆனிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்.

வல்ல இறைவன் ஆதம் (அலை) அவர்களை இந்தப் பூமிக்கு அனுப்பும் போது அவர்களிடம் சொல்லிய செய்தியை தனது திருமறையில் குறிப்பிட்டுள்ளான்.

அந்தச் செய்தி இதோ:

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்’ என்று கூறினோம்.

திருக்குர்ஆன் : 2:38

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை, “என்னிடமிருந்து நேர்வழி பெறும் அந்த நேர்வழியைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்” என்பதுதான்.

இதன் பொருள் என்ன?

ஆதம் நபி தனது அறிவைக் கொண்டு சொல்லும் சொல்லோ, தனது சிந்தனையின் மூலம் யோசித்து செய்யும் செயலோ மார்க்கமல்ல; மாறாக அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்படும் வஹீச் செய்திதான் மார்க்கமாகும் என்பதுதான்.

சஹாபாக்கள் நபிகளாரிடம் பாடம் படித்ததால் அவர்கள் சொல்வது அனைத்துமே மார்க்கம் என்று சொல்வோர் ஆதம் நபிக்கு அல்லாஹ் இட்ட கட்டளை குறித்து சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடத்திலே நேரடியாகப்  பாடம் படித்தவர்கள்; அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ்தான் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்ததாகச் சொல்லிக் காட்டுகின்றான்.

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான்.

அல்குர்ஆன் 2:31

அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்தான் என்பதன் பொருள், “அனைத்து பொருட்களின் பெயரை மட்டும் அறிந்து கொள்வதல்ல; அந்த பொருள் குறித்த முழுமையான அறிவைப் பெறுதல்” என்பதுதான். அப்படியானால் அனைத்து கல்வி  ஞானத்தையும் ஆதம் நபியவர்கள் தனது இறைவனிடமிருந்தே நேரடியாகக் கற்றுக் கொண்டார்கள்.

இறைவனிடம் நேரடியாகப் பாடம் படித்த ஆதம் (அலை) அவர்கள் கூட தன் விருப்பத்திற்கு மார்க்க சட்டத்தைச் சொல்லிவிடக்கூடாது; மாபெரும் அறிவு படைத்த அறிஞராக ஆதம் (அலை) அவர்கள் திகழ்ந்த போதும் கூட, “என்னிடத்திலிருந்து வரும் வஹீச் செய்தியை மட்டும் தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்” என அல்லாஹ் கட்டளையிடுகின்றான் என்றால், நபிகளாரிடம் பாடம் படித்த ஒரே காரணத்திற்காக சஹாபாக்கள் சொல்வது அனைத்தும் மார்க்கம் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பித்அத் செய்த சஹாபாக்களின் மறுமை நிலை

சஹாபாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் என்று சொல்வோர், இஸ்லாத்தில் உள்ள புதிய பித்அத்களைப் புகுத்தியதற்காக மறுமையில் சஹாபாக்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த நபிகளாரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளட்டும்.

பித்அத் செய்த சஹாபாக்களின் மறுமை நிலை குறித்து நபிகளார் செய்யும் முன்னறிவிப்பு இதோ :

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதைபதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் “அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் “நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான் “அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 3349, 3447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?

நபித்தோழர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்களை உருவாக்குவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. என்னிடம் சில கூட்டத்தினர் வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும். “அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன். ‘உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்பது உமக்குத் தெரியாது’ என்று கூறப்படும். “எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான்; கேடு தான் என்று நான் கூறுவேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.

இது பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது “நியாயத் தீர்ப்பு நாளில் என் தோழர்களில் ஒரு கூட்டத்தினர் என்னிடம் வருவார்கள். அவர்கள் (கவ்ஸர்) தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள். அப்போது நான் “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்; என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் எனக் கூறுவேன். “உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்ற அறிவு உமக்கு இல்லை. அவர்கள் வந்த வழியே பின்புறமாகத் திரும்பிச் சென்று விட்டனர் என்று இறைவன் கூறுவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6585, 6586

இதே கருத்து புகாரி 4740, 6526, 6576, 6582, 7049 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதையும், செய்ததையும் மட்டுமே நபித்தோழர்கள் செய்வார்கள். நபிவழியில் இல்லாத எந்த ஒன்றையும் நபித்தோழர்கள் செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் காரணம் கூறித் தான் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று வாதிட்டு வருகின்றனர்.

அவை அனைத்துமே ஆதாரமற்ற பொய்க்கூற்று என்பது இந்த நபிமொழிகள் மூலம் தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததையும், செய்யாததையும் சில நபித்தோழர்கள் புதிதாக உருவாக்கி, அதன் காரணமாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றால் இந்தக் கடும் எச்சரிக்கையில் இருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்ன?

நபித்தோழர்களின் சொற்களாக இருந்தாலும், செயல்களாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலிருந்தும், நபிவழியில் இருந்தும் ஆதாரம் காட்டப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவை எதுவாக இருந்தாலும் அவை பித்அத்தாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை மார்க்க ஆதாரமாகக் கருதக் கூடாது என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.

நபித்தோழர்கள் நம்மை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது.

நபிகள் நாயகத்தின் தோழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் எது செய்தாலும் அது மார்க்க ஆதாரமாக ஆகிவிடாது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

சஹாபாக்களில் சிலர் இதுபோன்று பித் அத்களை உருவாக்கியதால் நானும் அந்த பித்அத்தைப் பின்பற்றுவேன் என்று சொல்வது வழிகேடுதான் என்பது இதன் மூலம் தெளிவாகிறதல்லவா?

சஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த போர்:

மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்களை மட்டும் செய்யவில்லை; மாறாக நீங்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு காஃபிர்களாக ஆகிவிடாதீர்கள் என்ற நபிகளாரின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவும் சஹாபாக்கள் நடந்துள்ளார்கள் என்பதையும் வரலாற்றை நாம் ஆய்வு செய்யும் போது அறிந்து கொள்கின்றோம்.

ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்.

நூல் : புகாரி 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6868,

6869, 7077, 7078, 7080, 7447

ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு ஆளாயினர்.

ஆயிஷா (ரலி) தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்களும் அவர்களில் இருந்தனர்.

அலி (ரலி) அவர்களின் தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்கள் இந்த அணியிலும் இருந்தனர்.

தலைமை தாங்கிய இருவரும் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் தாம்.

அப்படி இருந்தும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி போர் செய்தார்கள். (அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக!)

அவர்களை விமர்சனம் செய்வதற்காக இதனை நாம் எடுத்துக் காட்டவில்லை.

மனிதர்கள் என்ற முறையில் இத்தகைய பாரதூரமான காரியத்தையே அவர்கள் செய்திருக்கும் போது அவர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதற்காகவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

இது போலவே முஆவியா (ரலி) தலைமையிலும், அலி (ரலி) தலைமையிலும் நபித்தோழர்கள் அணி திரண்டு போர் செய்தனர். ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.

கொலை செய்தவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர்.

அதன் பின்னர் நடந்த கர்பலா யுத்தத்திலும் இரண்டு அணியிலும் சில நபித்தோழர்கள் இருந்தனர்.

ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் ஆயுதம் தாங்கி கொலை செய்வது மிகப் பெரிய பாவச் செயல் என்ற நிலையிலும் நபித்தோழர்களிடம் இது நிகழ்ந்துள்ளது.

வஹீயைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பானது இல்லை என்பதை அறிந்திட இது போதுமான சான்றாக அமைந்துள்ளது.

பொதுவாக நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களது சிந்தனையில், தீர்ப்புகளில் நிச்சயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஆதாரங்கள் விளக்குகின்றன.

நபிகளாரின் கட்டளைக்கு மாற்றமாக நடந்த நபித்தோழர்களின் செயல்பாடுகள்:

நபித்தோழர்களின் செயல்பாடுகளில் பல செயல்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமாக அமைந்திருந்தன.

அது குறித்த சிறு தொகுப்பை காணுங்கள்:

உற்ற தோழராக விளங்கிய உமர் (ரலி) அவர்கள் நபிவழிக்கு மாற்றமான பல செயல்களைச் செய்துள்ளார்கள்.

அல்லாஹ் அனுமதித்த தமத்துவு ஹஜ் முறைக்கு தடைவிதித்த உமர் (ரலி):

மூன்று விதத்தில் ஹஜ் செய்வதற்கு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள்.

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது. இவ்வாறு ஹஜ் செய்வதை திருக்குர்ஆன் (2:196) அனுமதிக்கிறது. அனுமதிக்கப்பட்ட மூன்று விதமான ஹஜ்ஜின் வகைகளில் இந்த தமத்துவு ஹஜ்ஜு முறையும் ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவ்வாறு செய்ய அனுமதித்துள்ளார்கள்.

ஆனால் உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் தமத்துவு முறையில் ஹஜ் செய்வதற்கு தடை போட்டுள்ளனர்.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) என்ற நபித்தோழர் தமத்துவு ஹஜ்ஜிற்கு தடை போட்ட செய்தியை கண்டிக்கின்றார்.

தமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : புகாரி, 1572, 4518

நபிகளாரின் மருமகனான அலி (ரலி) அவர்களும் தமத்துவு ஹஜ் செய்வதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் போட்ட தடையை மீறி, “நான் தமத்துவு முறையில் ஹஜ் செய்வேன்” என்று அறிவிப்புச் செய்துவிட்டு தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள். நீங்கள் போடும் தடையை நான் ஏற்க முடியாது என்று உஸ்மான் (ரலி) அவர்களிடத்திலேயே நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு தமத்துவு முறையில் ஹஜ் செய்து நபி வழியை நிலைநாட்டினார்கள் அலி (ரலி) அவர்கள்.

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். “எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,

நூல் : புகாரி, 1563

மற்றொரு அறிவிப்பில்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததைத் தடுப்பது தவிர உமது நோக்கம் வேறு இல்லை என்று உஸ்மான் (ரலி)யிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு இரண்டையும் சேர்த்துச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பார்க்க புகாரி : 1569

தந்தை சொல் கேட்காத மகன்:

நபிகளாரின் கட்டளை என்று வந்துவிடுமேயானால் தந்தை போட்ட கட்டளையையும் கூட மதிக்கமாட்டேன்; நபிகளாரின் கட்டளையைத்தான் மதித்து நடப்பேன் என்பதை தமத்துவு ஹஜ் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் மகன் இப்னு உமர் (ரலி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ள செய்தி, சஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் “அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,

நூல் : திர்மிதி 753

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தது பரவலாகத் தெரிந்த நிலையில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய நபித் தோழர்கள் இதற்கு தடை போட்டுள்ளார்கள் என்றால், நபியிடம் பாடம் படித்த நபித்தோழர்களுக்கு இது தெரியாதா? என்று கேட்டு நாமும் அல்லாஹ் அனுமதித்த தமத்துவு ஹஜ் முறைக்கு தடை போட்டால் அது சரி வருமா?

இப்படி அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

இதுதானே அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுப்பது?

இதை நாம் செய்யக்கூடாது.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:

இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது’ என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்..

திருக்குர்ஆன் : 16:116

அல்லாஹ் அனுமதித்ததை ஹராமாக்கும் அதிகாரத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது; சஹாபாக்கள் செய்த இந்த தவறை அல்லாஹ் மன்னிப்பான்; ஆனால் இதே பாவத்தை நாம் செய்தால் நமது மறுமை நிலை என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்?

நபிகளார் அனுமதித்த, அனைவருக்கும் தெரிந்த,  அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ள, ஒரு வணக்க வழிபாட்டு முறையை, ஒரு நபிவழியை மிகச் சிறந்த நபித்தோழர்கள் தடை செய்திருப்பதைக் கண்ட பின்பும் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படிச் சரியான கருத்தாக இருக்க முடியும்?

பெற்றெடுத்த மகனான இப்னு உமர் (ரலி) அவர்களே  நபி வழிக்கு முரணான தனது தந்தையில் சொல்லைக் கேட்கவில்லை எனும் போது நாம் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

தயம்மம் செய்யக்கூடாது என மறுத்த உமர் (ரலி):

தொழுகைக்காக உளூ செய்வதற்கு தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்துள்ள மார்க்கச் சட்டமாகும்; தூய மண்ணை வைத்து தயம்மம் செய்து தொழ வேண்டும் என்பது இறைவன் தனது திருமறையில் இட்டுள்ள கட்டளை.

இந்தச் சட்டத்தையும் உமர் (ரலி) அவர்கள் மறுத்துள்ளார்கள்.

மிகச் சிறந்த நபித்தோழரான உமர் (ரலி) அவர்கள் குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்தார். “எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “(தண்ணீர் கிடைக்காவிட்டால்) நீ தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள் “முஃமின்களின் தலைவரே! நானும், நீங்களும் ஒரு சிறு படையில் சென்றோம். நம் இருவருக்கும் குளிப்பு கடமையானது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது, “உமது இரு கைகளால் தரையில் அடித்து வாயால் ஊதிவிட்டு கைகளால் முகத்திலும் முன் கைகளிலும் தடவிக் கொள்வது உமக்குப் போதுமே! என்று கூறினார்கள். இது உங்களுக்கு நினைவில்லையா? என்று உமர் (ரலி) அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அப்போது உமர் ரலி) அவர்கள் “அம்மாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று கூறினார்கள். “உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் இது பற்றி நான் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 553

கடமையான குளிப்புக்காகவும் தயம்மும் செய்யலாம் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அந்தச் சட்டம் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அம்மார் அவர்கள் சுட்டிக் காட்டியதையும் உமர் (ரலி) அவர்கள் நம்பவில்லை என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து தெரிகிறது.

மிகச் சிறந்த நபித்தோழருக்கே இது பற்றிய சட்டம் தெரியவில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதை சலஃபுக் கும்பலும், சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

தலாக் சட்டத்தில் நபி வழியை மாற்றி புதிய கட்டளை பிறப்பித்த உமர் (ரலி):

முத்தலாக் என்று மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் சொல்லி பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகின்றது என்பதுதான் தற்போது இஸ்லாம் குறித்து இஸ்லாத்தின் எதிரிகள் சுமத்தும் குற்றச்சாட்டு.

மூன்று தலாக்கையும் ஒரே நேரத்தில் விடுவது நபிகளரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமான செயல்.

மனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.

மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ, திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

ஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன? என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.

நூல் : முஸ்லிம் 2689

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தின் போது ஏற்பட்ட தடுமாற்றம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பார்கள் என்று திருக்குர்ஆனிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தனது மரணம் பற்றி முன் அறிவிப்பு செய்திருந்தார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்க மாட்டார்கள்; உயித்தெழுவார்கள் என்றும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

அபூ பக்ர் (ரலி) அவர்கள் தக்க ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையைப் புரிய வைக்கும் வரை நபித்தோழர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பார்க்க: புகாரி 1242, 3670

நபிகளார் மரணித்துவிட்டார்கள் என்று யாரேனும் சொன்னால் அவர்களை வெட்டுவேன் என்று சொன்னவர்கள் உமர் (ரலி) அவர்கள்.

பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும் போது நாம் எப்படி நிலை குலைந்து போவோமோ அது போல் நபித்தோழர்களும் நிலை குலையக் கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எனவே தான் தவறுகளுக்கு அறவே இடமில்லாத வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்த உமர் (ரலி):

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களும் ஐந்து நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்து சென்றனர்.

புகாரி : 362, 86, 184, 362, 372, 578, 707, 807, 809, 814, 837, 850, 865, 867, 868, 873 ஆகிய எண்களில் இது பற்றிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நபிகளாரின் இந்த கட்டளைக்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதை தடுத்துள்ளார்கள்.

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், “(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, “அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் “பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள்’ என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்‘’ என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 900

நபிவழிக்கு மாற்றமாக பள்ளிவாசலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் போட்ட கட்டளையை அவர்களது மனைவிகூட மதிக்கவில்லை; காரணம் இது அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதலுக்கு எதிரான கட்டளை என்பதுதான்;

உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுவதாக நபிகளார் நற்சான்று பகர்ந்துள்ள நிலையில் உமர் (ரலி) அவர்கள் நபி வழிக்கு மாற்றமான பல கட்டளைகளைப் போட்டுள்ளார்கள்; அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சொர்க்கத்திற்குரியவர்கள் என்று நபிகளார் வாயிலாக அறிவிக்க வைத்துவிட்டான் என்ற போதிலும், உமர் (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணாக செய்த செயல்பாடுகளை நாம் செய்ய முடியுமா?

இது மார்க்க ஆதாரமாகுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

உமர் (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணாக செய்த ஒரு சில செயல்பாடுகளை இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம். இதுபோல் ஏராளமான நபித்தோழர்கள் நபி வழிக்கு முரணான பல செயல்களை செய்துள்ளார்கள்; அதுவெல்லாம் மார்க்க ஆதாரம் ஆகாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அப்படியானால் உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுகின்றான் என்பதன் பொருள் என்ன என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.

உமர் (ரலி) அவர்கள் சில சட்டங்கள் குறித்து இப்படி இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தனது கருத்தை தெரிவித்திருந்தார்கள்; அவர்கள் சொன்னது போல அல்லாஹ் ஒரு சில சட்டங்களை இறக்கி அருளினான்; அதனால் தான் உமர் (ரலி) அவர்கள் நாவில் அல்லாஹ் பேசுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களே தவிர உமர் (ரலி) அவர்கள் செய்யும் அத்தனையும் மார்க்க அங்கீகாரம் என்ற கருத்தில் அது சொல்லப்படவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையை மற்ற நபித்தோழர்களும் விளங்கியதால் தான் நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் சொன்ன செய்திகளை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.

நபிகளார் மரணிக்கவே மாட்டார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் சொன்ன நிலையில் அதை அபூபக்கர் (ரலி) அவர்கள் மறுத்தது ஏன்?

உமர் (ரலி) நாவில் அல்லாஹ் பேசுகின்றான் என்று சொல்லி அதை ஆமோதித்தார்களா? இல்லையே!

தமத்துவு ஹஜ் முறைக்கு தடைவிதித்த உமர் (ரலி) அவர்களது தடையை அவரது மகன் இப்னு உமர் (ரலி) கூட ஏற்கவில்லையே!

உமர் (ரலி) நாவில் அல்லாஹ் பேசுவதாகச் சொல்லி தமத்துவு ஹஜ் தடையை அனைவரும் ஆதரித்தார்களா? இல்லையே!

பள்ளிவாசலுக்கு பெண்கள் வரக்கூடாது என்று சொன்ன உமர் (ரலி) அவர்களின் கட்டளையை அவரது மனைவி கூட ஏற்கவில்லையே!

உமர் (ரலி) நாவில் அல்லாஹ் பேசுகின்றான்; அவர்கள் சொல்வது எல்லாம் வஹீச் செய்தி என்றிருக்குமேயானால் அதை அவர்கள் மனைவியும் ஏற்றிருப்பார்களே!

இதிலிருந்து அவர்கள் சொன்னதெல்லாம் மார்க்கமாக ஆகாது; வஹீச் செய்தி மட்டும் தான் மார்க்கமாக ஆகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தயம்மம் செய்யலாம் என்ற நபி வழியை மறுத்த இப்னு மஸ்வூத் (ரலி):

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன? என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் “அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர்? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் “நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 346, 347

உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

தக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.

ஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.

சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித்தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? நபித்தோழர்களின் நடவடிக்கைகளும் மார்க்க ஆதாரங்கள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும்?

நபித்தோழர்களை நாம் இழிவுபடுத்துகின்றோமா?:

வஹீச் செய்தியை மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டும்; அவையல்லாத இன்னபிற செய்திகளை பின்பற்றுவது வழிகேடு; அது சஹாபாக்களின் தனிப்பட்ட சொந்த கருத்தாக இருந்தாலும் அதையும் பின்பற்றக்கூடாது என்று நாம் சொல்லும் போது, சஹாபாக்கள் செய்த தவறுகளை நாம் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம்.

இதைப் போன்று நபித்தோழர்களிடத்தில் நிகழ்ந்த தவறுகளை நாம் சுட்டிக்காட்டும் போது நம்மை எதிர்க்கக்கூடியவர்கள் நமக்கு எதிராக மக்களை உசுப்பேத்தி விடும் வகையில் ஒரு தவறான அவதூறைப் பரப்புகின்றார்கள்.

அதாவது இவ்வாறு நபித்தோழர்களின் தவறுகளை வெளியே சொல்லி நாம் நபித்தோழர்களை இழிவுபடுத்துகின்றோம் என்பதுதான் அவர்களது அவதூறு.

இங்கு நாம் நபித்தோழர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களது வழிகாட்டுதல்களும் மார்க்க ஆதாரம் என்று சொல்லும் போதுதான் அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம்.

நபித்தோழர்களின் தியாகம்; அவர்களது அர்ப்பணிப்பு; அவர்கள் இந்த மார்க்கம் மேலோங்குவதற்குச் செய்த அருந்தொண்டுகள் எதையும் நாம் மறுக்கவில்லை; அதை மதிக்கின்றோம்; அவர்களை கண்ணியப்படுத்துகின்றோம்; ஆனால் அதற்காக அவர்களை மார்க்க ஆதாரமாக ஆக்கி அவர்களை பின்பற்ற முடியாது என்பதுதான் நமது வாதம்.

மேலும் இவற்றை புகாரி முஸ்லிம் உள்ளிட்ட அறிஞர்கள் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்களே அவர்கள் நபித்தோழர்களை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

இதே நேரத்தில் ஒரு நபித்தோழர் நபிகளாரின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக சொன்ன செய்தியை மற்ற நபித்தோழர்கள் பின்பற்றாமல் புறக்கணித்துள்ளார்கள். அப்படியானால் ஒரு நபித்தோழரை மற்ற நபித்தோழர்கள் அனைவரும் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று இவர்கள் சொல்வார்களா?

நபிகளார் மரணிக்கவே இல்லை என்று உமர் (ரலி) சொன்ன செய்தியை அபூபக்கர் (ரலி) அவர்கள் மறுத்ததால் உமர் (ரலி) அவர்களை அபூபக்கர் இழிவுபடுத்திவிட்டார் என்று சொல்ல வருகின்றார்களா?

தமத்துவு ஹஜ்ஜிற்கு தடை விதித்தது குறித்து உமர் (ரலி) அவர்கள் சொன்ன சட்டத்தை அலி (ரலி) அவர்களும், இப்னு உமர் (ரலி)அவர்களும் ஏற்கவில்லை; அதனால் இப்னு உமர் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களை இழிவுபடுத்திவிட்டார்கள் என்று அர்த்தமாகிவிடுமா?

ஆக நாம் நபித்தோழர்களை இழிவுபடுத்தவில்லை; அல்லாஹ்வுடைய தூதரைக் கண்ணியப்படுத்துகின்றோம்.

அல்லாஹ்வின் வஹீச் செய்திக்கு கண்ணியமளிக்கின்றோம்.

எனவே சஹாபாக்களைப் பின்பற்றுவதும் மார்க்கம் என்ற அந்த வழிகேடான கொள்கையை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றி, வஹீச்செய்தியை மட்டுமே பின்பற்றி சுவனம் செல்லும் நன்மக்களாக வல்ல இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.

—————————————————————————————————————————————————————————————

இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா?

திருக்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும். நபித்தோழர்கள், இமாம்கள், பெரியார்கள் உள்ளிட்ட யாரையும் பின்பற்றக் கூடாது என்பதற்கான ஆதாரங்களை இந்தச் சிறப்பு மலரில் பல்வேறு தலைப்புகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று தங்களைக் கூறிக் கொள்வோர், மத்ஹபுகளின் மூலமாகவே இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்றும், மத்ஹபு இமாம்களின் துணையின்றி குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியாக நாம் ஆய்வு செய்து பின்பற்றக் கூடாது என்றும் கூறுகின்றனர்.

மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் போது சில எதிர்வாதங்களை மத்ஹபின் காவலர்கள் எடுத்து வைப்பது வழக்கம்.

அதில் ஒன்று தான், குர்ஆன், ஹதீஸை நாம் நேரடியாக ஆய்வு செய்ய முடியாது என்ற வாதமாகும்.

இந்த வாதம் பல காரணங்களால் தவறாகும்.

இப்படி வாதிடுவோர் தமது வாதத்தை தாமே மறுத்துக் கொள்கின்றனர் என்பது முதல் காரணமாகும்.

மத்ஹபை நம்பக் கூடியவர்கள் உலகில் ஒரே ஒரு மத்ஹப் தான் உள்ளது எனக் கூறுவதில்லை. நான்கு மத்ஹபுகள் உள்ளன என்பதுதான் அவர்களின் வாதம். இந்த நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் இவர்களின் கொள்கை. இதன் கருத்து என்ன? இருக்கும் நான்கு மத்ஹபுகளையும் ஆய்வு செய்து அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் இதன் கருத்து.

நான்கில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் போதே மத்ஹபுவாதிகளும் ஒரு வகையில் ஆய்வுதான் செய்கிறார்கள். நான்கு மத்ஹபுகளையும் சீர்தூக்கிப் பார்த்து அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், அதை அனைவரும் செய்யமுடியும் என்றால் ஹதீஸ்கள் அடிப்படையில் ஏன் ஆய்வு செய்ய முடியாது?

உலகில் ஒரே ஒரு மத்ஹப் இருந்து, அந்த ஒரு மத்ஹபிலும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒரு விஷயத்தில் ஒரு ஃபத்வா மட்டும் இருக்குமானால் அப்போது தான் இவர்கள் ஆய்வு செய்யாமல் மத்ஹபைப் பின்பற்றுகிறார்கள் என்று ஆகும்.

ஆனால் நான்கு மத்ஹபுகள் உள்ளதாகவே மத்ஹப்வாதிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு மத்ஹபிலும் இமாம்கள் மத்தியில் மாறுபட்ட தீர்ப்புக்கள் உள்ளன எனவும் கூறுகிறார்கள்.

ஒரு மத்ஹபின் அறிஞர்கள் மத்தியில் அனேக முரண்பாடுகளும், மாறுபட்ட ஃபத்வாக்களும் உள்ளன. அந்த ஃபத்வாக்களில் ஒன்றைத் தேர்வு செய்து அபூஹனீபா சொன்னது சரியில்லை. அபூயூசுப் சொன்னது தான் சரி என்று ஒன்றை மறுத்து மற்றொன்றைத் தேர்வு செய்கின்றனர். இதிலும் ஆய்வு அடங்கியுள்ளது.

ஒரு ஊரில் ஒரு மத்ஹபைச் சேர்ந்த ஒரு இமாம் கொடுக்கும் ஃபத்வாவுக்கு மாற்றமாக அதே ஊரைச் சேர்ந்த அதே மத்ஹபைச் சேர்ந்த இன்னொரு இமாம் வேறு ஃபத்வா கொடுக்கிறார். அந்த ஊரைச் சேர்ந்த அந்த மத்ஹபைப் பின்பற்றும் மக்கள் அவ்விரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கின்றனர்.

ஒரு மத்ஹபைச் சேர்ந்த இரு இமாம்கள் கூறுவதில் ஒன்றை ஏற்று மற்றொன்றை மறுக்கும் அளவுக்கு பொதுமக்களே ஆய்வு செய்கிறார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும்.

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதை விட்டு விலகுவதற்கு இவர்கள் எடுத்துக் காட்டும் இந்தக் காரணம் மத்ஹபைப் பின்பற்றுவதால் நீங்கவில்லையே?

அப்படியானால் மத்ஹபைப் புறக்கணித்து விட்டு யார் சொல்வது குரான் ஹதீசுக்கு முரணில்லாமல் உள்ளது என்று ஆய்வு செய்ய முடியாதா?

ஒரு மார்க்க விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குழம்ப வேண்டிய அவசியமில்லை. இறைவன் நமக்கு வழங்கிய அறிவைப் பயன்படுத்தி நடுநிலையோடு நம்மால் இயன்ற அளவு சிந்திக்க வேண்டும். எக்கருத்து ஏற்புடையதாக உள்ளதோ அதை ஏற்க வேண்டும்.

மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் நியாயமாகச் சிந்தித்தாலே பெரும்பாலும் சரியான முடிவை பாமர மக்களாலும் எடுக்க முடியும். இவ்வாறு செயல்படும் போது சில நேரங்களில் தவறான முடிவை சரி என்று கருதவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு தவறிழைப்பது மனித இயல்பு என்பதால் இறைவன் இதற்குக் குற்றம் பிடிக்க மாட்டான். மாறாக மார்க்க விஷயத்தில் நாம் செய்த முயற்சிக்காக ஒரு நன்மையை வழங்குகின்றான். சரியான முடிவு எடுத்தால் இரண்டு நன்மைகள் வழங்குகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : புகாரி 7352

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களின் ஒரு கட்டளையைப் புரிந்து கொள்வதில் நபித்தோழர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை.

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம்‘’ என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், “பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்‘’ என்று கூறினர். வேறு சிலர், “(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை; (“வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்’ என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்‘’ என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி(

நூல் : புகாரி 4119

தூய எண்ணத்துடன் இருவர் ஒரு ஹதீஸை அணுகி அதைப் புரிந்து கொள்வதில் அவ்விருவரும் முரண்பட்டால் இருவருமே குற்றவாளிகளாக மாட்டார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

திருக்குர்ஆனையோ, ஹதீஸ்களையோ ஆய்வு செய்யாமல் இரு இமாம்களைப் பின்பற்றி மத்ஹப் என்ற பெயரில் முரண்பட்டு நடப்பதற்கு இது ஆதாரமாகாது.

எல்லோருக்கும் அரபுமொழி தெரியாது!

அரபுமொழி தெரியாதவர்களுக்கு குர்ஆன் விளங்குமா? சாதாரணமானவர்களால்  குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழி பெயர்ப்புகளைத்தானே நம்ப வேண்டியுள்ளது ?

மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அர்த்தமற்ற  வாதங்களில்  இதுவும்  ஒன்றாகும்.

திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.

திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத்தான் நம்பவேண்டியுள்ளது என்பதும் உண்மைதான்.

இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா?

அபூஹனீபா தவிர மூன்று இமாம்களும் அரபி மொழியைத் தமது தாய் மொழியாகக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.

பொதுமக்களுக்கு அரபுமொழி தெரியாததால் அவர்களால் திருக்குர்ஆனையும், ஹதீஸ்களையும் விளங்க முடியாது என்ற வாதம் உண்மை என்றால் இவர்கள் மத்ஹபிலும் இருக்கக் கூடாது.

மத்ஹபுகளின் இமாம்கள் அரபுமொழியில் தான் சட்டங்களை எழுதினார்கள் என்பதாலும், அந்த இமாம்கள் எழுதியதை மொழிபெயர்ப்புகளை வைத்துத் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும், அதன் சட்டங்களும் விளங்காது என்று இவர்கள் கூறியிருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும் அப்படிச் செய்யவில்லையே அது ஏன்?

இதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால் தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றார்கள்.

அரபுமொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்களைத் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால் இந்த நியாயம் குர்ஆன், ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?

மத்ஹபுகள் மீது இவர்களுக்கு வெறி இருப்பதாலும், குர்ஆன், ஹதீஸ் இவார்களுக்குத் தேவையற்றதாக இருப்பதாலுமே இந்தப் பாரபட்சமான முடிவுக்கு வருகின்றனர்.

தவறானவையும், சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபுமொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால் தவறே இல்லாமல், முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆன், ஹதீஸ்கள் தமிழாக்கம் செய்யப்படும் போது ஏன் விளங்காது?

மொழிபெயர்ப்புகளில், மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களினாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன், ஹதீஸ் மட்டுமின்றி எல்லா மொழிமாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும்.

அரபிமொழி அறியாதவர்களால் சிலவேளை இதைக் கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.  அதற்காக குர்ஆன், ஹதீஸை விட்டு விட முடியுமா? விட்டு விட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உள்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.

நம்மால் இயன்றளவு முயற்சித்துப் பார்த்துவிட்டு மொழி பெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன், ஹதீஸை அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தாங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில், புத்தகங்களில் குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகின்றார்களே விளங்காத குர்ஆன், ஹதீஸை ஏன் மக்களிடம் கூற வேண்டும்.

மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன், ஹதீஸ்களைக் கூறினால் விளங்கும்; மற்ற விஷயங்களுக்கு விளங்காதா?

நாம் எப்படி திருக்குர் ஆனுக்கு தமிழாக்கம் வெளியிட்டுள்ளோமோ அது போல் குர்ஆன் விளங்காது என்ற கொள்கை உடையவர்கள் ஏன் திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளியிட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது..

இந்த வாதம் ஷைத்தானின் மாயவலை. இதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

இமாம்களை விட நாம் நன்றாக அறிய முடியுமா?

இமாம்கள் சிறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். நபியின் காலத்துக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் போல் நம்மால் திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் விளங்க முடியாது என்பதால் மத்ஹபுகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும், நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித்தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. இதன் பொருள் என்ன என்பதை இதன் இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.

நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த காலத்து மக்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் தான் இதை விளங்க வேண்டும்.

இமாம்கள் காலத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் மார்க்கத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்யவும் அவர்களை விட பிற்காலத்தவர்களுக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மார்க்கத்தைச் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் பரவலாக்கப்பட்டும் எளிதில் கிடைக்கும் வகையிலும் முழுமையாகத் திரட்டப்பட்டும் இருக்க வேண்டும்.

ஆதாரங்கள் சிதறி, முழுமையாகத் திரட்டப்படாமல் இருந்தாலோ, எளிதில் கிடைக்காமல் இருந்தாலோ ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப் படையில் தான் முடிவு செய்வார். ஆதாரம் கிடைக்காத போது சுயமாக முடிவு எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் மக்களுக்குக் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் எந்த நபித்தோழரும் அறிந்திருக்கவில்லை. ஒரு நபித்தோழருக்குத் தெரிந்த ஹதீஸ் ஏராளமான நபித்தோழர்களுக்குத் தெரியாமல் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின்னர் நபித்தோழர்கள் பல பகுதிகளுக்கும் சென்றார்கள். அவரவர் தான் தெரிந்து வைத்திருந்த ஹதீஸ்களை அந்தப் பகுதி மக்களுக்கு தேவைக்கேற்ப அறிவித்தார்கள்.

ஒரு நபித்தோழருக்கு நூறு ஹதீஸ்கள் தெரியும் என்று வைத்துக் கொள்வோம். அவர் பாக்தாத் நகருக்குச் சென்று குடியேறினால் அந்த நூறு ஹதீஸ்களை மட்டும் தான் அவரால் அங்கே அறிவிக்க முடியும். அதைக் கூட அந்த ஊரில் உள்ள அனைவரும் அறிய மாட்டார்கள்.

நபித் தோழர்கள், இமாம்கள் காலத்தில் ஹதீஸ்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இருக்கவில்லை. எனவே இந்த நிலையில் நபித் தோழர்கள் தாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அனைத்து ஹதீஸ்களையும் ஆய்வு செய்து தேடிப் பார்த்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பை பெறவே இல்லை. எனவே தான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக எதை அறிந்தார்களோ அதைப் பின்பற்றினார்கள். மற்ற விஷயங்களில் தாமாக முடிவு செய்வது மட்டுமே அவர்கள் முன் இருந்த ஒரே வழி என்பதால் அதைத் தான் அவர்கள் செயல்படுத்த முடிந்தது.

ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் தமக்கென குர்ஆனை வைத் துள்ளோம்.

ஹதீஸ்கள் அனைத்தும் பாடம் வாரியாகத் தொகுக்கப்பட்டு நூல்களாக உள்ளன. அனைவரிடமும் அனைத்து நூல்களும் இல்லாவிட்டாலும் நூலகங் களிலும், மதரஸாக்களிலும் அவை உள்ளன.

சாப்ட்வேர்களாகவும் அனைத்தும் வந்துள்ளன.

எந்தக் கடினமான கேள்விக்கும் அரை மணி நேரம் செலவிட்டு அதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடிக்கும் அளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது.

இந்தக் காலத்தில் நபித் தோழர்கள் வாழ்ந்தால் நம்மை விடச் சிறப்பாக இந்த வசதியைப் பயன்படுத்தி சரியான ஃபத்வாக்களை வழங்குவார்கள். அவர்கள் காலத் தில் நாம் இருந்தால் அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளை விட அதிகத் தவறு செய்பவர்களாக நாம் இருப்போம்.

இந்த நிலை ஏற்படும் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் “எனது செய்திகளை வந்தவர்கள் வராதவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். எடுத்துச் சொல்பவரை விட யாரிடம் எடுத்துச் சொல்லப்படுகிறதோ அவர்கள் அதனை நன்கு பேணிப் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் என்று முன்னறிவிப்பு செய்தனர்.

புகாரி : 1741, 7074

உலகம் அழியும் வரை என்ன நடக்கும் என்பதையெல்லாம் அறிந்து வைத்துள்ள இறைவனால் தரப்பட்டதே இஸ்லாம். உலகம் அழியும் வரை தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய வகையில் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்தந்த காலத்தை அடைபவர்களால் தான் அதன் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும்.

எனவே இது போன்ற விஷயங்களில் நபித்தோழர்கள் புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இன்று நாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.

சந்திர மண்டலத்தில் கிப்லாவை எவ்வாறு நோக்குவது? செயற்கை முறையில் கருத்தரிப்பது கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளை அன்றைக்கு அவர்களிடம் கேட்டால் இதெல்லாம் நடக்குமா என்ன? என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும்.

இன்று நாம் பல நவீன பிரச்சனைகளை நேரடியாகவே சந்திப்பதால் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் நிச்சயம் குர்ஆனிலும், நபிவழியிலும் வாசகம் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வு செய்தால் அதற்கான விடை கூறக் கூடிய ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

ஆழ்கடலில் அலைகள் உள்ளன.

வானத்தைக் கூரையாக ஆக்கியுள்ளோம்.

மலைகளை முலைகளாக ஆக்கியுள்ளோம்.

ஃபிர்அவ்னின் உடலை நாம் பாதுகாத்து வைத்துள்ளோம்.

ஜுதி மலையில் நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக உள்ளது.

இது போல் எண்ணற்ற வசனங்கள் குர்ஆனில் உள்ளன. இவற்றை நாம் விளங்கியது போல நபித்தோழர்களால் விளங்க முடியாது. ஆய்வு செய்து இதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதால் நமக்கு இது சாத்தியமாகிறது.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்விடம், நிகழும் நேரம் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!!

திருக்குர்ஆன் 6:67

எனவே குர்ஆனும் நபிவழியும் மட்டுமே மார்க்க ஆதாரங்களாகும். இவ்விரண்டைத் தவிர நபித்தோழர்கள் உள்ளிட்ட எவரது சொல்லும் மார்க்க ஆதாரங்களாகாது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

—————————————————————————————————————————————————————————————

மத்ஹபுகளைப் பின்பற்றாதீர்கள்

இமாம்களின் வாக்குமூலம்

பிரபலமான இமாம்கள் நால்வரும் குர்ஆன் , ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றே கூறியுள்ளனர். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மத்ஹபைத்தான் பின்பற்றுவோம் என்று கூறும் உலமாக்கள் இவற்றை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இமாம்களின் சத்தியக்கூற்றுகளிலிருந்து சிலவற்றைக் காண்போம்.

இமாம் அபூ ஹனீஃபா

صَحَّ عَنْ الْإِمَامِ أَنَّهُ قَالَ : إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي  (رد المحتار – (1 / 166)

இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கூறினார்கள்: ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுவே என்னுடைய மத்ஹபாகும்.

நூல் : ரத்துல் முஹ்தார்

பாகம் : 1 பக்கம் : 166

وذكر في الخزانة عن الروضة الزندويسية سئل أبو حنيفة إذا قلت قولا وكتاب الله يخالفه قال اتركوا قولي لكتاب الله فقيل إذا كان خبر الرسول صلى الله عليه وسلم يخالفه قال اتركوا قولي لخبر رسول الله صلى الله عليه وسلم (إيقاظ الهمم – (1 / 62)

நீங்கள் கூறிய கருத்து அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என இமாம் அபூ ஹனீஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் : அல்லாஹ்வின் வேதத்திற்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் என கூறினார்கள். அல்லாஹ்வின் தூதருடைய கருத்திற்கு மாற்றமாக இருந்தால் என்ன?  என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய செய்திக்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் எனக் கூறினார்கள்

நூல் : ஈகாளுல் ஹிமம்  பாகம் : 1 பக்கம் 62

وذكر في المثانة عن الروضة الزندويسية عن كل من أبي حنيفة ومحمد أنه قال إذا قلت قولا يخالف كتاب الله وخبر الرسول صلى الله عليه وسلم فاتركوا قولي (إيقاظ الهمم – (1 / 62)

இமாம் முஹம்மத், இமாம் அபூ ஹனீஃபா கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் வேதத்திற்கோ, இறைத்தூதரின் செய்திக்கோ மாற்றமாக ஏதேனும் ஒரு கருத்தை நான் கூறியிருந்தால் என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள்

(நூல்: ஈகாளுல் ஹிமம், பாகம்: 1, பக்கம்: 62)

فإن أبا حنيفة وأبا يوسف رحمه الله قالا لا يحل لأحد أن يأخذ بقولنا مالم يعلم من أين أخذناه  (إيقاظ الهمم – (1 / 53)

இமாம் அபூ ஹனீஃபா, இமாம் அபூ யூசுப் ஆகியோர் கூறுகிறார்கள் : நாங்கள் எங்கிருந்து எடுத்தோம் என்பதை அறியாமல் எங்கள் கருத்தை எடுப்பது யாருக்கும் அனுமதியில்லை.

(நூல் :ஈகாளுல் ஹிமம் பாகம் : 1 பக்கம் : 53)

இமாம் ஷாஃபி

وقد قال الشافعي إذا صح الحديث فهو مذهبي  (المجموع – (1 / 92)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள்: ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுவே என்னுடைய மத்ஹபாகும்.

(அல்மஜ்மூ,  பாகம்: 1, பக்கம் : 92)

 الشافعي يقول مثل الذي يطلب العلم بلا حجة كمثل حاطب ليل يحمل حزمة حطب وفيه أفعى   تلدغه وهو  لا يدري ( المدخل إلى السنن الكبرى ج: 1 ص: 211)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள்: ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின் உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும்.  அவன் ஒரு கட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும் விஷப்பாம்பு இருக்கிறது. அவன் அறியாத நேரத்தில் அவனைத் தீண்டிவிடும். (இது போன்றுதான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனை அக்கல்வி அவன் அறியாத விதத்தில் அவனை வழிதவறச் செய்துவிடும்)

(மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 211)

மேலும் இமாம் ஷாஃபி அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும்தான் ஆதாரமாகக் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قلنا هذا مأخوذ مأخوذ حتى قدم علينا الشافعي فقال ما هذا إذا صح الحديث عن رسول الله صلى الله عليه وسلم فهو مأخوذ به لا يترك لقول غيره قال فنبهنا لشيء لم نعرفه يعني نبهنا لهذا   ((مختصر المؤمل ج: 1 ص: 59)

ஷாஃபி இமாம் அவர்கள் எங்களிடம் வருகை தருகின்ற வரை நாங்கள் நபியவர்கள் சொன்னதாக எங்களுக்கு கூறப்படுமென்றால் ‘’இது எடுத்துக் கொள்ளப்படவேண்டியது’’ ‘’இது எடுத்துக் கொள்ளப்படவேண்டியது’’ என்று கூறுவோம். ஷாஃபி அவர்கள் ‘’ என்ன இது? நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுதான் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். எவருடைய சொல்லிற்காகவும் அது விடப்படக் கூடாது’’ என்று கூறினார்கள். நாங்கள் அறியாத ஒன்றை எங்களுக்கு உணர்த்தினார்கள்.

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 59)

وفي رواية روى حديثا فقال له قائل أتأخذ به فقال له أتراني مشركا أو ترى في وسطي زنارا أو تراني خارجا من كنيسة نعم آخذ به آخذ به آخذ به وذلك الفرض على كل مسلم  (مختصر المؤمل ج: 1 ص: 58)

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் ‘’ நீ என்னை இணைவைப்பாளன் என்று நினைக்கிறாயா? அல்லது என்னுடைய இடுப்பில் (நெருப்பு வணங்கிகளுக்குரிய) இடுப்பு வாரைப் பார்க்கிறாயா? அல்லது தேவாலாயத்திலிருந்து வெளியேறிய (கிறிஸ்தவன்) என்று நினைக்கிறாயா? ஆம். நான் அதை பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். இது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று கூறினார்கள்.

(முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்: 58)

قال وسمعت الشافعي يقول وروى حديثا قال له رجل تأخذ بهذا يا أبا عبد الله فقال ومتى رويت عن رسول الله  صلى الله عليه وسلم حديثا صحيحا فلم آخذ به فأشهدكم أن عقلي قد ذهب وأشار بيده إلى رأسه (مختصر المؤمل ج: 1 ص: 57)

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் ‘’எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து  ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்க வில்லையோ (அப்போது)  என்னுடைய அறிவு மழுங்கிவிட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்’’ என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள்.

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)

إذا وجدتم عن رسول الله صلى الله عليه وسلم سنة خلاف قولي فخذوا السنة ودعوا قولي فإني أقول بها (مختصر المؤمل ج: 1 ص: 57)

‘’என்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நீங்கள் ஒரு நபியவர்கள் வழிகாட்டுதலை பெற்றுக் கொண்டால் நீங்கள் நபியவர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய சொல்லை விட்டு விடுங்கள். நிச்சயமாக நான் நபியுடைய வழிகாட்டுதலைக் கொண்டு கூறுபவன்தான்.

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)

كل مسألة تكلمت فيها بخلاف السنة فأنا راجع عنها في حياتي وبعد مماتي (مختصر المؤمل ج: 1 ص: 57)

என்னுடைய வாழ்விலும், என்னுடைய மரணத்திற்கு பின்பும் எந்த மார்க்கச் சட்டங்களிலெல்லாம் அதிலே நான் நபி வழிக்கு மாற்றமாக பேசியுள்ளேனோ அத்தகைய  மார்க்கச் சட்டத்தை விட்டும் நான் திரும்பக் கூடியவன்தான்.

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)

قال الشافعي كل ما قلت وكان قول رسول الله صلى الله عليه وسلم خلاف قولي مما يصح فحديث النبي صلى الله عليه وسلم أولى فلا تقلدوني (مختصر المؤمل ج: 1 ص: 58)

நான் கூறிய ஒவ்வொன்றும் நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக இருக்குமென்றால் நபியவர்களுடைய ஹதீஸதான் ஏற்றமானதாகும். என்னை கண்மூடிப் பின்பற்றாதீர்கள்.

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)

عن أبي ثور قال سمعت الشافعي يقول كل حديث عن النبي صلى الله عليه وسلم فهو قولي وإن لم تسمعوه مني  (مختصر المؤمل ج: 1 ص: 58)

நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸஹஹம்தான் என்னுடைய கருத்தாகுதம். அதை நீங்கள் என்னிடமிருந்து கேட்கவில்லையென்றாலும் சரியே

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)

 وقال الشافعي من تبع سنة رسول الله صلى الله عليه وسلم وافقته ومن غلط فتركها خالفته صاحبي اللازم الذي لا أفارقه الثابت عن رسول الله صلى الله عليه وسلم  (مختصر المؤمل ج: 1 ص: 58)

யார் நபிவழியைப் பின்பற்றுகிறாரோ நான் அவரோடு ஒன்று படுகிறேன். எவன் தடுமாறி அதனை விட்டுகிறானோ அவனோடு நான் மாறுபடுகிறேன். நான் விட்டுப் பிரியாத என்னுடைய உறுதியான தோழன் நபியவர்களிடமிருந்து வருகின்ற உறுதியான நபிமொழிகள்தான்.

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)

وسمعت الشافعي يقول ما من أحد إلا وتذهب عليه سنة لرسول الله ( صلى الله عليه وسلم ) وتعزب عنه فمهما  قلت من قول أو أصلت من أصل فيه عن رسول الله ( صلى الله عليه وسلم ) خلاف ما قلت فالقول ما قال رسول الله ( صلى الله عليه وسلم ) وهو قولي قال وجعل يردد هذا الكلام ( تاريخ دمشق – (51 / 389)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் வழிமுறை கிடைக்கும் போது அதைவிட்டும் தூரமாகுபவர் யாரும் இல்லை. நான் நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாக ஏதாவது ஒரு கருத்தைக் கூறினால் அல்லது ஏதாவது ஒரு அடிப்படையை அமைத்தால் நபியவர்கள் கூறியதுதான் சட்டமாகும். அதுதான் என்னுடைய கருத்துமாகும். இதனை அவர்கள் திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள்.

(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)

سمعت الشافعي يقول كل حديث عن النبي ( صلى الله عليه وسلم ) فهو قولي وإن لم تسمعوه مني (تاريخ دمشق – (51 / 389)

நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸும் அதுதான் என்னுடைய கருத்தாகும். அதை நீங்கள் என்னிடமிருந்து செவியேற்காவிட்டாலும் சரியே!

(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)

قال البويطي سمعت الشافعي يقول لقد ألفت هذه الكتب ولم آل جهدا ولا بد أن يوجد فيها الخطأ لأن الله تعالى يقول وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا فما وجدتم في كتبي هذه مما يخالف الكتاب والسنة فقد رجعت عنه (مختصر المؤمل ج: 1 ص: 60)

ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்: ‘’ நான் இந்த புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் ‘’ அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள் ‘’ என்று தன்திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்த புத்தகங்களிலே திருமறைக்குஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்).

(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 60)

وقال الشافعي: أجمع الناس على أن من استبانت له سنة عن رسول الله صلى الله عليه وسلم لم يكن له أن يدعها لقول أحد من الناس  (إعلام الموقعين عن رب العالمين – (2 / 325)

யாருக்கு நபியவர்களின் சுன்னத் தெளிவாகிறதோ அவர் மக்களில் யாருடைய சொல்லிற்காகவும் அதனை விடுவது அவருக்கு தகுதியானதில்லை என்ற கருத்தில் மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.

(இஃலாமுல் முவக்கிஈன் பாகம்: 2 பக் : 325)

قال لنا الشافعي أنتم أعلم بالحديث والرجال مني فإذا كان الحديث الصحيح فأعلموني إن شاء يكون كوفيا أو بصريا أو شاميا حتى أذهب إليه إذا كان صحيحا (المدخل إلى السنن الكبرى – (1 / 172)

 இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸைப் பற்றியும் அறிவிப்பாளர்களைப் பற்றியும் என்னை விட நீங்கள்தான் அறிந்தவர்கள். ஒரு ஸஹீஹான ஹதீஸை கூஃபா வாசி, பஸராவாசி, ஷாம்வாசி யாரிடமிருந்து எனக்கு நீங்கள் அறியச்செய்தாலும் அது ஸஹீஹாக இருக்குமென்றால் நான் அதன் பக்கம் சென்றுவிடுவேன்.

(அல்மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 172)

سمعت الشافعي يقول: “كل مسألة تكلمت فيها صح الخبر فيها عن النبي صلى الله عليه وسلم عند أهل النقل بخلاف ما قلت فأنا راجع عنها في حياتي وبعد موتي  (إعلام الموقعين عن رب العالمين – (2 / 328)

“.என்னுடைய வாழ்நாளிலும் என்னுடைய மரணத்திற்குப் பிறகும் எந்த ஒரு மார்க்கச்சட்டதிலும் நான்கூறியதற்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுநர்களிடம் ஸஹீஹான ஒரு செய்தி நபியவர்களிடமிருந்து வருமென்றால் நான் என்னுடைய கருத்தை விட்டும் திரும்பக்கூடியவன் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்

(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் 2 பக் : 328)

இமாம் மாலிக்

وقال الإمام مالك – رحمه الله -: (إنما أنا بشر أخطيء وأصيب فانظروا في رأيي، فكل ما وافق الكتاب والسنة فخذوه ، وكل ما لم يوافق الكتاب والسنة فاتركوه ) ( مواهب الجليل في شرح مختصر الشيخ خليل – (7 / 392)

இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக நான் மனிதன்தான். தவறாகவும் கூறுவேன், சரியாகவும் கூறுவேன். என்னுடைய கருத்தை ஆய்வுசெய்து பாருங்கள். குர்ஆன், சுன்னாவிற்கு ஒத்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.  குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான அனைத்தையும் விட்டு விடுங்கள்

(மவாஹிபுல் ஜலீல் பாகம் : 7 பக்கம் : 392)

قال الإمام مالك والإمام أحمد: ليس أحد بعد النبي صلى الله عليه وسلم إلا ويؤخذ من قوله ويترك إلا النبي صلى الله عليه وسلم  (الحجج السلفية في الرد على آراء ابن فرحان المالكي البدعية – (1 / 41)

இமாம் மாலிக், இமாம் அஹ்மத் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒருவருடைய கூற்றை ஏற்று பின்பற்றப்படுவதும், ஒருவருடைய  கூற்றை ஏற்று தவிர்ந்து கொள்வதும் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை

(அல் ஹுஜஜ் ஸலஃபிய்யா பாகம் : 1 பக்: 41)

இமாம் அஹ்மத்

سمعت أحمد بن حنبل يقول رأي الأوزاعي ورأي مالك ورأي أبي حنيفة كله رأي وهو عندي سواء وإنما الحجة في الآثار  (جامع بيان العلم وفضله) – (2 / 149)

இமாம் அஹ்மது கூறினார்கள் : அவ்ஸாயீயின் கருத்து, மாலிக்கின் கருத்து, அபூ ஹனீஃபாவின் கருத்து. எல்லாமே கருத்துதான். என்னிடத்தில் அனைத்தும் சமம்தான். நிச்சயமாக ஆதாரம் என்பது ஹதீஸ்களில்தான் இருக்கிறது.

(ஜாமிவு பயானில் இல்ம் பாகம்: 2 பக்: 149)

ه أحمد بن حنبل رحمة الله يقول : ‘ من رد  حديث رسول الله  فهو على شفا هلكة ‘(الحجة في بيان المحجة – (1 / 207)

இமாம் அஹ்மத் கூறினார்கள் : யார் நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸை மறுத்து விட்டானோ அவன் அழிவின் விழிம்பின் மீதிருக்கின்றான்.

(அல்ஹுஜ்ஜா பாகம் : 1 பக்கம் :207)

لا تقلدني ولا تقلد مالكا ولا الثوري ولا الأوزاعي وخذ من حيث أخذوا”  (إعلام الموقعين عن رب العالمين – (2 / 226)

என்னை கண்மூடிப் பின்பற்றாதே. மாலிக்கையும் கண்மூடிப்பின்பற்றாதே. ஸவ்ரியையும் பின்பற்றாதே. அவ்ஸாயியையும் பின்பற்றாதே. அவர்கள் எங்கிருந்து எடுத்தார்களோ அங்கிருந்தே நீயும் எடு.

(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் : 2 பக் : 226)

—————————————————————————————————————————————————————————————

இதுதான் மத்ஹப் சட்டங்கள்!

இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

மத்ஹபு ஆதரவாளர்கள், மக்களிடம் மத்ஹபு வெறியை ஊட்டி சிந்தனையை மழுங்கச் செய்ய ஒரு வழிமுறையைக் கையாள்கின்றனர். அதாவது மத்ஹபு இமாம்கள் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்துக்குச் சமமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை விட மேலானவர்கள் என்றும் கட்டுக்கதைகளைப் புகுத்துவார்கள். ஆலிம் படிப்பு படிக்கச் சென்றவருக்கு சிறு வயதில் இப்படி பக்தி ஊட்டப்பட்டு பின்னர் அது வெறியாக மாற்றப்பட்டு விடுகிறது. இதன் காரணமாகத்தான் மத்ஹபில் உள்ள அபத்தங்கள் மக்களுக்குப் புரியும் அளவுக்கு ஆலிம்களுக்குப் புரியவில்லை.

இமாம்களின் கருத்தில் தவறே வராது என்று மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணான மத்ஹப் சட்டங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக மத்ஹப் இமாம்களை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாகவும், அல்லாஹ்வின் தூதருக்கு மேலானவாரகவும் ஆக்கியுள்ள கொடுமையைப் பாருங்க்கள்:

كيف وقد صلى الفجر بوضوء العشاء أربعين سنة، وحج خمسا وخمسين حجة، ورأى ربه في المنام مائة مرة؟ ولها قصة مشهورة. وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم نصف القرآن، ثم ركع وسجد، ثم قام على رجله اليسرى ووضع اليمنى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة- – الدر المختار

அபூஹனீபா அவர்கள் நாற்பது ஆண்டுகளாக (அதாவது பதினைந்தாயிரம்  நாட்களாக) இஷாவுக்குச் செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுகை தொழுதுள்ளார்கள்.   ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார்கள்.  தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்கள்.

அபூஹனீபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள்.  அவரும் அனுமதி கொடுத்தார்.  உள்ளே நுழைந்து – இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது காலின் மீது வைத்துக் கொண்டு, வலது காலில் நின்றார்கள்.  இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார்கள்.  பின்னர் ருகூவு செய்து, ஸஜ்தா செய்தார்கள்.  பின்னர் வலது காலை இடது காலின் மீது வைத்துக் கொண்டு இடது காலில் நின்றார்கள்.  மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார்கள்.  ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்.

என் இறைவா!  உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை.  ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீபா கூறினார்.

உடனே கஅபாவின் மூலையிலிருந்து, “அபூஹனீபாவே!  நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர்.  அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர்.  எனவே உம்மையும், கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்’’ என்று ஓர் அசரீரி கேட்டது.

நூல் : ஹனபி மத்ஹபின் சட்ட  நூலாகிய துர்ருல் முக்தார்

இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு பதினைந்தாயிரம் நாட்கள் பஜ்ரு தொழுகை தொழுதார்கள் என்றால் என்ன பொருள்?

15 ஆயிரம் இரவுகள் அவர் உறங்கவில்லை!  மலஜலம் கழிக்கவில்லை!  காற்றுப் பிரியவில்லை!  மனைவியுடன் குடும்பம் நடத்தவில்லை! என்பதுதான் இதன் பொருள்.  இப்படி எந்த மனிதராலும் நடக்க முடியுமா? இவ்வாறு நடக்க மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

ஒற்றைக் காலில் நின்று வணங்க மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா?  ஒரு இரவில் முழுக் குர்ஆனையும் முறைப்படி ஓத முடியுமா?  அல்லாஹ்வை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டேன் என்று அல்லாஹ்விடம் ஒருவர் கூறலாமா? நபிமார்கள் அல்லாத மனிதர்களிடம் அல்லாஹ் இவ்வாறு உரையாடுவானா?  அபூஹனீபாவை மட்டுமின்றி கியாம நாள் வரை அவரைப் பின்பற்றக் கூடியவர்களையும் மன்னித்து விட்டதாக அல்லாஹ் கூறியிருக்க முடியுமா?

மத்ஹபின் மேல் வெறி ஏற்றுவதற்காக இப்படியெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடலாமா?

அபூஹனீபா பற்றி அவிழ்த்து விட்ட மற்றொரு கட்டுக்கதையைப் பாருங்கள்!

وعنه عليه الصلاة والسلام إن سائر الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني – الدر المختار

எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமையடைகின்றனர்.  ஆனால் நானோ அபூஹனீபாவின் மூலம் பெருமையடைகின்றேன்.  யார் அவரை நேசிக்கிறாரோ அவரை நானும் நேசிக்கிறேன்.  யார் அவரை வெறுக்கிறாரோ அவரை நானும் வெறுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : துர்ருல் முக்தார்

அபூஹனீபா மூலம்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெருமை என்றால் நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவரா? உயர்ந்தவரா?

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறியதாகத் திட்டமிட்டு இட்டுக்கட்டிக் கூறக்கூடிய இந்த நூலை எப்படி நம்ப முடியும்?  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறியிருந்தால் அது இடம் பெற்ற ஹதீஸ் நூல் எது?  அதன் அறிவிப்பாளர்கள் யார்?  அவர்களின் தரம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு மட்டுமின்றி நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா உயர்ந்தவரா? என்ற கேள்விக்கும் மத்ஹப் உலமாக்களால் பதில் சொல்ல முடியாது.

மேலும் அதே நூல் கூறுவதைப் பாருங்கள்!

وعنه عليه الصلاة والسلام إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتي – الدر المختار

என்னை வைத்து ஆதம் பெருமை அடைந்தார். நான் என் சமுதாயத்தில் தோன்றக் கூடிய நுஃமான் எனும் அபூஹனீபாவை வைத்து நான் பெருமை அடகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: துர்ருல் முக்தார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகிலத்தின் அருட்கொடை என்பதால் அவர்களை வைத்து ஆதமுக்குப் பெருமை என்று கூறுவதை ஏற்க முடிகிறது. ஆனால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை அபூ ஹனீபாவை வைத்துத் தான் என்று சொன்னால் அபூ ஹனீபா நபிகள் நாயகத்தை விட மேலானவர் என்பதாகும். இப்படி ஒரு நச்சுக்கருத்தைச் சொன்னவன் முஸ்லிமாக இருப்பானா? யூதக் கைக்கூலியாக இருப்பானா?

நபிகள் நாயகத்தை விட அபூஹனீபா பெரியவர் என்ற கருத்தை விதைத்து விட்டால் ஹதீஸ்களை விட அபூஹனீபாவின் கருத்துக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது தான் இந்தக் கட்டுக் கதையின் நோக்கம்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புளுகி வைத்துள்ள ஹனபி மத்ஹப் வெறியர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையுடன் எடுத்துக் காட்டத் தயாரா?

மேலும் புளுகியுள்ளதைக் காணுங்கள்!

 لو كان في أمتي موسى وعيسى مثل أبي حنيفة لما تهودوا ولما تنصروا – الدر المختار

மூஸா நபி, ஈஸா நபி ஆகியோரின் சமுதாயங்களில் அபூஹனீபா போன்றவர் இருந்திருந்தால் அவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ ஆகியிருக்க மாட்டார்கள்.

நூல் : துர்ருல் முக்தார்

அபூஹனீபா என்பவர் இந்த உம்மத்தில் பிறந்த்தால் தான் இந்த உம்மத் வழிகெடாமல் இருக்கிறது என்றால் இது எவ்வளவு பெரிய திமிர்பிடித்த வாதம்? அபூபக்ர், உமர் மற்றும் அனைத்து நபித்தோழர்களை விடவும் இவலர் மேலானவரா? இவரது மத்ஹபைப் பின்பற்றும் மக்களில் அதிகமானவர்கள் சமாதி வழிபாட்டில் ஈடுபட்டு யூத கிறித்தவர் வழியில் போய்க்கொண்டு இருக்கிறார்களே? தன் மத்ஹபில் உள்ளவர்களையே ஷிர்கில் விழாமல் காப்பாற்ற இவரால் முடியவில்லையே?

இது இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய் அல்லவா?  அபூ ஹனீபா என்பவர் இந்த உம்மத்தில் பிறந்திருந்தும் ஷியாக்கள், காரிஜியாக்கள், முஃதஸிலாக்கள், மத்ஹபுவாதிகள் சமாதி வழிபாடு செய்வோர், பித்அத்வாதிகள் ஆகியோர் உருவானது எப்படி?

மேலும் எல்லை மீறி புகழ்வதைக் கேளுங்கள்!

وقد جعل الله الحكم لأصحابه وأتباعه من زمنه إلى هذه الأيام، إلى أن يحكم بمذهبه عيسى – عليه السلام – الدر المختار

அபூஹனீபாவின் சகாக்களுக்கும், அவரைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ் ஞானத்தை வழங்கி விட்டான்.  (அல்லது அதிகாரத்தை வழங்கி விட்டான்) இறுதியில் இவரது மத்ஹபின்படியே ஈஸா நபி தீர்ப்பு வழங்குவார்கள்.

நூல் : துர்ருல் முக்தார்

ஈஸா நபி ஹனபி மத்ஹபைப் பின்பற்றுவார்கள் என்று கூறியவர் யார்?  ஈஸா நபிக்குக் கூட குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்து முடிவு செய்ய முடியாதா?  அவர்களை விட அபூஹனீபா சிறந்தவரா?

நபிமார்களை அவமானப்படுத்திவிட்டு இவரது புகழைப் பரப்ப வேண்டும் என்று வெறிபிடித்து அலைவது தான் ஷரீஅத்தைப் பாதுகாக்கும் இலட்சணமா?

தனது மத்ஹப் இமாமைப் போற்றுவதாக எண்ணி மற்ற இமாம்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்தி உள்ளனர் என்று பாருங்கள்!

فلعنة ربنا أعداد رمل … على من رد قول أبي حنيفه – الدر المختار

அபூஹனீபாவின் கருத்தை மறுக்கக் கூடியவர்களுக்கு மணல்களின் எண்ணிக்கை அளவுக்கு நமது இறைவனின் சாபம் (லஃனத்) உண்டாகட்டும்.

நூல் : துர்ருல் முக்தார்

அபூஹனீபாவின் கருத்தை மூன்று இமாம்கள் மறுத்துள்ளனரே!  அபூஹனீபாவின் மாணவர்களான அபூ யூசுப், முஹம்மது போன்றவர்கள் பலமுறை மறுத்திருக்கிறார்களே!  அவர்கள் எல்லாம் சாபத்துக்கு உரியவர்களா?

அது போல் அமைந்த ஒரு கட்டுக்கதையைப் பாருங்கள்!

وَالْحَاصِلُ أَنَّ أَبَا حَنِيفَةَ النُّعْمَانَ مِنْ أَعْظَمِ مُعْجِزَاتِ الْمُصْطَفَى بَعْدَ الْقُرْآنِ  ( الدر المختار ج: 1ص: 56)

சுருங்கச் சொல்வதென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனீஃபா தான்.

(நூல்: துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 52)

ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாக அரபிக் கல்லூரிகளில் போதிக்கப்படும் துர்ருல் முக்தாரில் இந்தத் தத்துவம் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களில் திருக்குர்ஆன் மகத்தானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கடுத்த அற்புதம் அபூஹனீஃபா தான் என்றால் அதன் பொருள் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்க்காத, அவர்களின் காலத்தில் பிறந்திராத அபூஹனீஃபாவை, நபியவர்களின் அற்புதம் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?

குர்ஆனில் எந்தத் தவறும் இல்லாதது போன்று, அபூஹனீஃபாவின் தீர்ப்புகளிலும் தவறே இருக்காது என்று இதன் மூலம் நச்சுக்கருத்து ஊட்டப்படுகிறது.

நபித்தோழர்களை விட, நான்கு கலீபாக்களை விட இவர் சிறந்தவரா?

நபியவர்கள் தமது நபித்துவத்தை நிரூபிக்க குர்ஆனைச் சமர்ப்பித்தார்கள். அது போல் அபூஹனீஃபாவையும் சமர்ப்பித்து தமது நுபுவ்வத்தை நபியவர்கள் நிரூபித்தார்களா?

எனவே இமாம்கள் மீது பக்தி வெறியூட்டுவதற்காக இவ்வாறு உளறியுள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.

மத்ஹப் நூல்களில் குர்ஆன் ஹதீஸுக்கு முரணாகவும், ஆதாரமற்றதாகவும் தொழுகையைக் கேலிக்கூத்தாக்கும் வகையிலும் பல சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

கஅபா இடம் பெயர்ந்தால்…

الْكَعْبَةُ إذَا رُفِعَتْ عَنْ مَكَانِهَا لِزِيَارَةِ أَصْحَابِ الْكَرَامَةِ فَفِي تِلْكَ الْحَالَةِ جَازَتْ الصَّلَاةُ إلَى أَرْضِهَا . (رد المحتار – (ج 3 / ص 341)

கராமத் உடையவர்களைச் சந்திப்பதற்காக கஃபா ஆலயம் இடம் பெயர்ந்து விட்டால் அது அமைந்திருந்த இடத்தை நோக்கித் தொழலாம்.

(துர்ருல் முக்தார் பாகம் : 1 பக்கம் : 402)

கஃபா ஆலயம் எவரையும் சந்திப்பதற்காக இடம் பெயருமா? பெயரும் என்றால் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக அது மதீனாவிற்குச் சென்றிருக்குமே? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக் செய்ய வந்தபோது ஊரின் எல்லையில் அவர்களை வரவேற்கச் சென்றிருக்குமே.? இதைப் பற்றிய அறிவு கூட இதை எழுதியவருக்கு இல்லை.

கஃபாவை புனிதமான ஆலயத்தை மக்களுக்காக நிலையானதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்

(அல்குர்ஆன் 5: 97)

மக்களுக்காக மக்கள் அங்கே சென்று தவாப் செய்வதற்காக கஃபாவை நிலையானதாக ஆக்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். கஃபா எங்கேயும் நகர்ந்து செல்லாது என்பதையும், அதைச் சந்திக்கச் செல்லூம் மக்களை ஏமாற்றாது என்பதையும் திட்டவட்டமாக இந்த வசனம் கூறுகிறது.

குர்ஆனுக்கு முரணாகவும் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையிலும் இந்த நூலாசிரியர் கற்பனை செய்து அதிசயமான சட்டத்தை மக்களுக்கு வழங்குகிறார். அதற்கும மாநபி வழிக்கும் சம்பந்தம் உண்டா என்பதை மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்.

நாய் சோப்பு

 لَوْ وَقَعَ إنْسَانٌ أَوْ كَلْبٌ فِي قِدْرِ الصَّابُونِ فَصَارَ صَابُونًا يَكُونُ طَاهِرًا لِتَبَدُّلِ الْحَقِيقَةِ . ا هـ . (رد المحتار – (2 / 465)

மனிதன் அல்லது ஒரு நாய் சோப்பு பாத்திரத்தில் விழுந்து சோப்பாக மாறிவிட்டால் அது தூய்மையானதாகும். (மனிதன் மற்றும் நாயின்) தன்மை மாறிவிட்டதின் காரணத்தினால்…

(ரத்துல் முஹ்தார் பாகம் : 2 பக்கம் : 465)

பிறையை சுட்டிக் காட்டக்கூடாது

إذَا رَأَوْا الْهِلَالَ يُكْرَهُ أَنْ يُشِيرُوا إلَيْهِ لِأَنَّهُ مِنْ عَمَلِ الْجَاهِلِيَّةِ   (الدر المختار – (2 / 433)

பிறையைப் பார்த்தால் அதன் பக்கம் சுட்டிக் காட்டுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனென்றால் இது அறியாமைக்கால பழக்கவழக்கங்களில் உள்ளதாகும்

(துர்ருல் முஹ்தார் பாகம் : 2 பக்கம் : 433)

குழாயை ஆறாக மாற்றும் அதிசய சட்டம்

ஹனபி மத்ஹப் சட்டப்படி ஒரு தடவை உளூச் செய்த தண்ணீரில் மீண்டும் உளூச் செய்யக் கூடாது. குளம் குட்டை போன்ற ஓடாத தண்ணீராக இருந்தால் அது பத்து முழம் ஆளமும், பத்து முழம் அகலமும் கொண்டதாக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூச் செய்யலாம். ஒருவர் உளூ செய்த பின் அதே தண்ணீரில் கைகளை விட்டு மற்றவர்கள் உளூச் செய்யலாம். மேற்கண்ட அளவை விட குறைவாக இருந்தால் அதில் கைகளை விட்ட உடன் அது பயன்படுத்திய தண்ணீராகி விடும். அதில் கைகளை விட்டவரும் உளூச் செய்ய முடியாது. மற்றவரும் உளூச் செய்ய முடியாது.

ஆனால் ஒடும் தண்ணீராக இருந்தால் அதில் கைகளை விட்டு உளூ செய்யலாம். அதில் அசுத்தமான பொருள் மிதந்தாலும் அது சுத்தமான தண்ணீராகும்.

இப்படி ஹனபி மத்ஹப் சட்டம் கூறுகிறது. இது ஆதாரமற்ற சட்டம் என்றாலும் இதில் பெரிய அளவில் கிறுக்குத் தனம் இல்லாததால் இதை விட்டு விடலாம்.

ஆனால் ஓடும் தண்ணீர் என்று ஹனபி இமாம்கள் கூறியதை மத்ஹபு சட்டப் புத்தகம் எழுதியவர்கள் எப்படி புரிந்து கொண்டு துணைச் சட்டம் எழுதியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்களுக்கு நிகரான அறிவீனர்கள் உலகில் இருக்க முடியாது என்று அறிந்து கொள்ளலாம்.

அந்தத் துணைச் சட்டம் இதுதான்:

أو صب رفيقه الماء في طرف ميزاب وتوضأ فيه وعند طرفه الآخر إناء يجتمع فيه الماء جاز توضؤه به ثانيا وثم وثم –  الدر المختار

ஒருவன் உளூச் செய்வதற்காக இன்னொருவன் தண்ணீர் ஊற்றுகிறான். அவன் உளூச் செய்த தண்ணீர் ஒரு குழாயின் ஒரு முனையில் ஓடுகிறது. அதன் மறுமுனையில் ஒரு பாத்திரம் வைக்கப்பட்டு அதில் அந்தத் தண்ணீர் சேர்கிறது. அந்தத் தண்ணீரில் மீண்டும் மீண்டும் மீண்டும் உளூச் செய்யலாம்.

துர்ருல் முஹ்தார் பாகம் : 1 பக்கம் : 204

இப்போது ஓடும் தண்ணீர் என்ற தகுதி வந்து விட்டதாம். குழாய் வழியாக இல்லாமல் நேரடியாக அந்தத் தண்ணீர் பாத்திரத்தில் பிடிக்கப்பட்டால் அதில் மீண்டும் உளூச் செய்ய முடியாது. குழாய் வழியாக ஓடி ஒடும் தண்ணீராக ஆகிவிட்டால் எத்தனை தடவையும் உளூச் செய்யலாமாம்.

ஆறு போன்ற ஓடும் நதிகளில் அதிக அளவில் தண்ணீர் ஒடுவதால் அதில் ஊளுச் செய்யலாம் என்று அந்த மத்ஹப் அறிஞர்கள் கூறியதைக் கூட சரியாக விளங்காத அறிவிலிகள் தான் மத்ஹப் சட்ட நூல்களை எழுதி உள்ளனர். இதைப் படித்து அறியாமையைப் பெருக்கிக் கொண்டவர்கள் தான் அறிஞர்களாக கருதப்படுகிறார்கள்.

பைத்தியமாக்கும் பல் குச்சி

உளூச் செய்யும் போது பல் துலக்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளனர்.

எப்படி பல் துலக்குவது என்பதற்கு குறிப்பிட்ட வழிமுறை எதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.

ஆனால் ஹனபி மத்ஹப் நூலில் பல்துலக்குவதற்கான சட்டம் பின்வருமாறு எழுதப்ப்பட்டுள்ளது.

وَيَسْتَاكُ عَرْضًا لَا طُولًا ، وَلَا مُضْطَجِعًا ؛ فَإِنَّهُ يُورِثُ كِبَرَ الطِّحَالِ ، وَلَا يَقْبِضُهُ ؛ فَإِنَّهُ يُورِثُ الْبَاسُورَ ، وَلَا يَمُصُّهُ ؛ فَإِنَّهُ يُورِثُ الْعَمَى ، ثُمَّ يَغْسِلُهُ ، وَإِلَّا فَيَسْتَاكُ الشَّيْطَانُ بِهِ ، وَلَا يُزَادُ عَلَى الشِّبْرِ ، وَإِلَّا فَالشَّيْطَانُ يَرْكَبُ عَلَيْهِ ، وَلَا يَضَعُهُ بَلْ يَنْصِبُهُ ، وَإِلَّا فَخَطَرُ الْجُنُونِ قُهُسْتَانِيٌّ . ( الدر المختار – (1 / 124)

பல் துலக்கும் குச்சியை அகல வாட்டத்தில் வைத்து பல் துலக்க வேண்டும். நீள வாட்டத்திலும், படுக்கை வாட்டத்திலும் வைத்து பல் துலக்கக் கூடாது. ஏனெனில் இது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடும். அதை முழுக் கையால் பற்றிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் அது மூல நோயை உருவாக்கி விடும். அதை வாயில் வைத்து சப்பக் கூடாது. ஏனெனில் அது பார்வையைக் குருடாக்கி விடும். அதைக் கழுவி விட வேண்டும். கழுவவில்லை என்றால் அதை வைத்து ஷைத்தான் பல் துலக்குவான். அதை ஒரு ஜான் அளவில் தான் வைத்திருக்க வேண்டும். அதை விட நீளமாக வைத்திருந்தால் ஷைத்தான் அதில் சவாரி செய்வான். அதைக் கீழே கிடத்தி விடாது நாட்டி வைக்க வேண்டும். இல்லையேல் பைத்தியம் பிடித்து விடும்.

நூல்: துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 124

இந்த அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கு என்ன ஆதாரம்?

வாயில் வந்ததையெல்லாம் எழுதி வைத்து விட்டு, மார்க்கச் சட்டங்கள் என்று கூறும் இந்த மத்ஹபு நூல்களை ஆதரிப்பவர்கள் உண்மையில் சுய நினைவோடு தான் ஆதரிக்கிறார்களா?

இந்தச் சட்டங்களுக்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை இந்த நூலே ஒப்புக் கொள்கிறது. அதனால் நபிமொழியைக் காரணம் காட்டாமல் அது ஏற்படுத்தும் விளைவுகளைக் காரணம் காட்டுகிறது.

நீள வாக்கில் பல்துலக்கினால் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று எப்படி அறிந்து கொண்டார்கள்? அன்றைக்கே கல்லீரலை எக்ஸ்ரே எடுத்து அல்லது ஸ்கேன் எடுத்து வீங்கி இருப்பதைக் கண்டு பிடித்தார்களா? நிஜமாகவே ஒருவனுக்கு கல்லீரல் வீங்கி இருந்தால் அன்றைய மருத்துவ அறிவைக் கொண்டு கண்டு பிடிக்க முடியாது. அவ்வாறிருக்க இந்த அறிவீனர்கள் அதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்?

இன்று இது போல் ஒருவரை பல் துலக்க வைப்போம். ஒருவாரம் கழித்து ஸ்கேன் போட்டுப் பார்த்து கல்லீரல் வீங்கி இருப்பதை நிரூபிக்கத் தயாரா? அப்படி இல்லாவிட்டால் மக்களை மூடர்களாக்கிய இந்த நூலைத் தீயிட்டுப் பொசுக்கத் தயாரா?

முழுக்கையால் பிடித்தால் தான் போதிய அழுத்தம் கிடைக்கும். இரு விரல்களால் பிடித்தால் பல் துலக்குவதற்குத் தேவையான அழுத்தம் கிடைக்காது என்று கூறியிருந்தாலாவது ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு செய்தால் மூல நோய் ஏற்படும் என்று எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார்? மேலே சொன்னவாறு இதையும் நிரூபித்துக் காட்டத் தயாரா?

ஒரு ஜானுக்கு மேல் இருந்தால் அதில் ஷைத்தான் சவாரி செய்வான் என்று எழுதியுள்ளனர். இதை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியாது. வஹீ மூலம் தான் கண்டுபிடிக்க முடியும். அதாவது அல்லாஹ்வோ அவனது தூதரோ சொன்னால் தான் இதை அறிய முடியும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை. எனவே இட்டுக்கட்டி சொல்லி உள்ளனர். இவர்களின் தலையில் ஷைத்தான் ஏறி உட்கார்ந்து கொண்டு இப்படி எழுத வைத்துள்ளான் என்று தெரிகிறது.

பல் குச்சியை நாட்டி வைக்காவிட்டால் பைத்தியம் பிடிக்கும் என்று எழுதி வைத்துள்ளனர். பைத்தியம் எதனால் ஏற்படுகிறது என்று பல காரணங்களை விஞ்ஞாகள் கண்டறிந்துள்ளனர். அதில் பல் குச்சியை படுக்க வைப்பது இடம் பெறவில்லை. அப்படியானால் இப்படி உண்மைக்கு மாறானதை எழுதியவர்களுக்குத் தான் பைத்தியம் இருந்துள்ளது என்று தெரிகிறது.

சந்தேகம் தீர்க்கும் காமெடிச் சட்டம்

الشك في غسل الوضوء  : ولو علم أنه لم يغسل عضوا وشك في تعيينه غسل رجله اليسرى لأنه آخر العمل (الدر المختار

ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்று தெரியவில்லை. அப்படியானால் (இடது காலாகத் தான் அது இருக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும்.  ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.

துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 51

இப்படி ஒரு அற்புதச் சட்டத்தை எழுதி தங்களின் அறியாமையை அவர்களே வெளிப்படுத்துகிறார்கள்.

உளூ செய்து முடித்த பின் ஏதோ ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்று யாருக்கும் சந்தேகம் வராது. கையக் கழுவினோமா என்று சந்தேகம் வரும். அல்லது காலைக் கழுவினோமா என்று சந்தேகம் வரும். ஏதோ ஒன்றைக் கழுவவில்லை என்று எவருக்கும் சந்தேகம் வராது.

எந்த உறுப்பைக் கழுவியது குறித்து சந்தேகம் வருகிறதோ அந்த உறுப்பைக் கழுவவில்லை என்று முடிவு செய்து அதை மீண்டும் கழுவ வேண்டும் என்று முடிவு செய்வதற்குத் தான் ஆதாரங்கள் உள்ளன.

ஏதோ ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்று சந்தேகம் வந்தால் இறுதியாக கழுவ வேண்டிய இடது காலாகத் தான் இருக்கும் என்று முடிவு எடுக்க எந்த வசனம் ஆதாரம்? எந்த ஹதீஸ் ஆதாரம்?

இடது கால் கடைசியாக கழுவுவதால் அதைத் தான் கழுவ்வில்லை என்ற்டு முடிவு செய்ய எந்த லாஜிக்கும் இல்லை. கடைசியில் கழுவியது தான் ஒருவனுக்கு மற்றதை விட நன்றாக நினைவிலிருக்கும்.

ஒருவன் முதலில் செய்ய வேண்டிய காரியத்தையும் மறக்கலாம்.  நடுவில் செய்ய வேண்டிய காரியத்தையும் மறக்கலாம். கடைசியில் செய்யவேண்டிய காரியத்தையும் மறக்கலாம். இதுதான் யதார்த்தமானது.

உளூச் செய்யும் போது இடது காலைக் கழுவாது விட்டிருந்தால் சட்டென்று நினைவுக்கு வந்து விடும்.  மேலும் கழுவப்பட்ட காலுக்கும், கழுவப்படாத காலுக்கும் வித்தியாசம் இருக்கும்.  அதை வைத்து கால் கழுவப்பட்டதையும் கழுவப்படாததையும் கண்டுபிடிக்க முடியும்.

வலது கால் சுத்தமானதாகவும், இடது கால் அழுக்காகவும் இருந்தால் இடது கால் கழுவப்படவில்லை என்று கண்டுபிடிக்கலாம்.  ஏனெனில் ஒப்பிட்டுப் பார்க்க இரண்டு கால்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன.

இரண்டு கால்களும் ஒரே மாதிரியாக சுத்தமானவையாக இருந்தாலும் இடது காலைத்தான் கழுவ்வில்லை என்று முடிவு செய்து அதைக் கழுவ வேண்டும்;  அது நன்றாகக் கழுவப்பட்டிருந்தாலும் அது கழுவப்படவில்லை என்று கிறுக்குத் தனமாக நாம் கருதிக் கொள்ள வேண்டுமாம்.

இவர்கள் கூறுவது போல் ஏதோ ஓர் உறுப்பு கழுவப்படவில்லை என்று சந்தேகம் வருவதாகவே வைத்துக் கொள்வோம். எந்த உறுப்பு என்று நினைவுக்குக் கொண்டு வர முடியாவில்லை அனைத்து உறுப்புகளிலும் சந்தேகம் இருந்து கொண்டு உள்ளது. எனவே மீண்டும் ஒருமுறை முழுமையாக உளூச் செய்து கொள்ள வேண்டும் என்பதுதானே பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு முடிவு செய்வதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

1300 – وحدثنى محمد بن أحمد بن أبى خلف حدثنا موسى بن داود حدثنا سليمان بن بلال عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبى سعيد الخدرى قال قال رسول الله -صلى الله عليه وسلم- « إذا شك أحدكم فى صلاته فلم يدر كم صلى ثلاثا أم أربعا فليطرح الشك وليبن على ما استيقن ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى خمسا شفعن له صلاته وإن كان صلى إتماما لأربع كانتا ترغيما للشيطان

ஒருவர் தொழுத ரக்அத்களின் எண்ணிக்கை மூன்றா, நான்கா என்ற சந்தேகம் வந்தால் சந்தேகத்தை (அதாவது நான்கு என்பதை) எறிந்து விட்டு உறுதியானதை (அதாவது மூன்று என்பதை) எடுத்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

இங்கே நான்காவதைத் தொழுதோமா இல்லையா என்று சந்தேகம் ஏற்படுகிறது.  சந்தேகத்துக்குரியதைச் செய்யவில்லை என்று முடிவு செய்யுமாறு இந்த நபிமொழி வழிகாட்டுகிறது.  நான்காவது ரக்அத் தொழுதோமா என்று சந்தேகம் வந்தால் அதைத் தொழவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

இதே அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பும் கழுவப்பட்டதா இல்லையா என்று சந்தேகத்திற்குரியதாகி விடுவதால் எதையும் கழுவவில்லை என்ற முடிவுக்கு வந்து மீண்டும் உளூச் செய்வது தான் சரி.  இது வலிமையான சந்தேகத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியதாகும்.

ஏதேனும் உறுப்பு கழுவப்படாமல் விடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலிமையில்லாததாக இருந்தால் அதைக் கண்டு கொள்ள வேண்டியதில்லை.

இவ்வாறு முடிவு செய்வதற்கு ஒரு நபிவழியை நாம் ஆதாரமாகக் கொள்ளலாம்.

137 – حدثنا علي، قال: حدثنا سفيان، قال: حدثنا الزهري، عن سعيد بن المسيب، ح وعن عباد بن تميم، عن عمه، أنه شكا إلى رسول الله صلى الله عليه وسلم الرجل الذي يخيل إليه أنه يجد الشيء في الصلاة؟ فقال: «لا ينفتل – أو لا ينصرف – حتى يسمع صوتا أو يجد ريحاயு صحيح البخاري

ஒருவர் தொழுகையில் இருக்கும் போது காற்றுப் பிரிந்தது போல் சந்தேகம் ஏற்பட்டால் நாற்றம் அல்லது சப்தம் கேட்காத வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்பது நபிமொழி.

நூற்கள் : புகாரி 137, முஸ்லிம்

திட்டவட்டமில்லாத சந்தேகங்களுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை என்பதை இந்த நபிமொழிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆக ஹதீஸ்களின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்வதை விடுத்து முட்டாள்தனமாக முடிவு செய்துள்ளனர்.

இரு விரல்களால் பல் துலக்குதல்

திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பற்றிய ஞானம் மத்ஹபு அறிஞர்களுக்கு அறவே இல்லை என்றாலும் பொது அறிவாவது இருக்க வேண்டும் அல்லவா? இவர்கள் இயற்றிய சட்டங்களைப் பார்த்தால் மன நோயாளிகளின் உளறலைப் போல் அமைந்துள்ளதை நாம் காணலாம். அது போல் அமைந்த ஒரு சட்டத்தைப் பாருங்கள்!

والأفضل أن يستاك بالسبابتين، يبدأ بالسبابة اليسرى ثم باليمنى، – الدر المختار

இடது ஆட்காட்டி விரல், வலது ஆட்காட்டி விரல் ஆகிய இரு ஆட்காட்டி விரல்களைக் கொண்டு பல்துலக்குவது சிறந்ததாகும். முதலில் இடதுகை ஆட்காட்டி விரலாலும், பின்னர் வலதுகை ஆட்காட்டி விரலாலும் பல் துலக்க வேண்டும்.

நூல் : துர்ருல் முக்தார்

பல் துலக்குதல் போன்ற காரியங்கள் வலது கையால் செய்ய வேண்டும் என்பது நபிவழியாகும்.

168 – حدثنا حفص بن عمر، قال: حدثنا شعبة، قال: أخبرني أشعث بن سليم، قال: سمعت أبي، عن مسروق، عن عائشة، قالت: كان النبي صلى الله عليه وسلم «يعجبه التيمن، في تنعله، وترجله، وطهوره، وفي شأنه كله – صحيح البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்துகொள்ளும் போதும், தலைவாரிக் கொள்ளும் போதும், சுத்தம் செய்யும் போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 168

மத்ஹபு உலமாக்களுக்கு இது போன்ற நபிமொழிகள் கூட தெரியவில்லை. நாகரீகமுள்ள எந்த மனிதனாவது இடது கை விரல்களை வாய்க்குள் நுழைப்பானா? வாய்க்குள் நுழைத்து பல்லைத் தேய்ப்பானா? இரு ஆட்காட்டி விரல்களால் ஒருவன் பல்துலக்கினால் அவனை கிறுக்கனாகத்தானே மக்கள் கருதுவார்கள்? உங்களைக் கிறுக்கர்களாக ஆக்கும் இந்த மத்ஹபுகள் உங்களுக்குத் தேவையா?

இந்த அறிவீனர்கள் வகுத்துத் தந்த சட்டங்களை நாகரீகமுள்ள மக்கள் பின்பற்றலாமா? சிந்தித்துப் பாருங்கள்.

தொழுது கொண்டே வியாபாரம்

தொழுகை என்பது அல்லாஹ்விடம் மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும். தொழுகையை எந்த அளவுக்கு மத்ஹபுகள் கேலிக் கூத்தாக்குகின்றன என்று பாருங்கள்!

 فلو باع في صلاته بالإشارة انعقد البيع ولا تبطل صلاته وبه يلغز ويقال لنا إنسان يبيع ويشتري في صلاته عامدا عالما ولا تبطل صلاته – إعانة الطالبين ج: 4 ص: 16

ஒருவர் தொழுது கொண்டு இருக்கும் போது சைகை மூலம் விற்பனைச் செய்தால் அந்த வியாபாரம் செல்லும். தொழுகை பாழாகாது. தொழும்போது அறிந்த நிலையில் வேண்டுமென்றே ஒருவன் விற்கிறான்; வாங்குகிறான். அவனது தொழுகை முறியாது என்று இதைத் தான் விடுகதையாகச் சொல்கின்றனர்.

நூல் : ஷாபி மத்ஹபின்

சட்ட நூலாகிய இஆனா

ஒருவன் தொழும் போது இன்னொருவன் வந்து உங்கள் வீட்டை எனக்கு விற்கிறீர்களா என்று கேட்கிறான். தொழுபவன் சைகையால் தலையை அசைத்து ஆம் என்கிறான். எவ்வளவு என்று அவன் கேட்கிறான். எட்டு விரலைக் காட்டி எட்டு ரூபாய் என்கிறான். இப்படிச் செய்தால் தொழுகை செல்லுமாம். வியாபாரமும் செல்லுமாம்.

அல்லாஹ்வின் அச்சம் கடுகளவு இருப்பவன் கூட இதை ஏற்பானா? மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் அல்லாஹ்வின் வணக்கத்தைப் பாழாக்கும் இந்தப் பாவிகள் மார்க்க அறிஞர்களா? உங்கள் மறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் மத்ஹபுகள் தேவைதானா? சிந்தித்துப் பாருங்கள்!

—————————————————————————————————————————————————————————————

நபிவழிக்கு முரணான தப்லீக் ஜமாஅத்

தப்லீக் ஜமாத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும்.

பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக்கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.

இந்த இயக்கம் புத்துயிர் பெற்ற பிறகு சமாதிகளில் மண்டியிட்டவர்கள் அல்லாஹ்வின் சன்னதியில் சிரம் பணியலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.

இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்தக்கவர்கள் என்ற நிலை இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள். அதில் ஈடுபாடு கொண்ட மக்களின் நோக்கத்தில் இன்றளவும் குறைகாணமுடியாது.

ஆனாலும் பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்களின் புதல்வர் யூசுப் (ரஹ்) ஆகியோரின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தின் மார்க்க அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள்.

மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடலானார்கள்.

இந்தபணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவராவார். காலம் சென்ற இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

குர்ஆனையும், நபிவழியையும் கற்பிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இவர் எழுதிய கற்பனைகளும்,கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு, தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.

தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.

தொழுகையின் சிறப்பு, ஸதகாவின் சிறப்பு, ரமலானின் சிறப்பு என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வாரத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன.

ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன் பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.

ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்று விடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது. அதிலுள்ள அபத்தங்கள் அனைத்தையும் எழுதுவதென்றால் பல ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டும். ஆகவே சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும் நாம் இனம் காட்டுகிறோம்.

தொழுகையின் சிறப்புக்களைக் கூறும் சாக்கில் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்தும் கதையைக் கேளுங்கள்!

மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்

அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஜவாஹிர் என்ற நூலில் எழுதியுள்ளதாவது:

ஒரு பெண் இறந்து விட்டாள். அடக்கம் செய்யும் போது அப்பெண்ணின் சகோதரரும் உடனிருந்தார். அப்பொழுது அவருடைய பணப்பை அக்கப்ரில் விழுந்து விட்டது. அது அவருக்குத் தெரியவில்லை. பிறகு அது அவருக்கு நினைவு வந்த பொழுது மிகவும் கவலையடைந்தார். யாருக்கும் தெரியாமல் கப்ரை தோண்டி அதனை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குச் சென்று கப்ரை தோண்டியபோது அந்தக் கப்ரு நெருப்புக் கங்குகளால் நிரம்பி இருக்கக் கண்டு பயந்து போய் அழுதவராக தன் தாயாரிடத்தில் வந்து விபரத்தைக் கூறி விளக்கம் கேட்டார். அதற்கு அவருடைய தாயார், “அவள் தொழுகையில் சோம்பல் செய்பவளாக அதனைக் களா செய்பவளாக இருந்தாள்” என்று கூறினார்.

இந்த கதை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் பக்கம் 76ல் இடம்பெற்றுள்ளது.

தொழுகையை விடுவது மிகப்பெரும் பாவம் என்பதும் கப்ருடைய வேதனை உண்டு என்பதும் முழு உண்மைதான். இந்த இரண்டையும் வலியுறுத்த எண்ணற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தக்கதை உண்மையா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய உண்மை.

கப்ரில் நடக்கும் வேதனைகளை உலகில் வாழும் மனிதர்கள் அறிய முடியுமா? என்பதை முதலில் ஆராய்வோம்.

அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:100)

மனிதர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் முன்னே திரை போடப்படுகின்றது என்று இவ்வசனம் கூறுவதால் உயிருடனிருப்பவர்கள் கப்ரில் நடப்பதையும், கப்ரில் இருப்பவர்கள் இவ்வுலகில் நடப்பதையும் அறிய முடியாது என்பதை அறிகிறோம். அறிய முடியும் என்றால் திரை போடப்படுகின்றது என்ற இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.

இந்த சமுதாயம் கப்ரில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நான் செவியுறுகின்ற கப்ரின் வேதனையை நீங்கள் செவியுறுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திருப்பேன் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி)

நூல் : முஸ்லிம்

கப்ரில் நடந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்ய முன்வரமாட்டீர்கள் என்ற தகுந்த காரணத்தைக் கூறி, அதனால் கப்ரில் நடப்பதை நீங்கள் அறிய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

கப்ரில் நடக்கும் வேதனையை மனித – ஜின் இனத்தைத் தவிர கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட அனைத்தும் செவியுறும் என்பது நபிமொழி.  

அறிவிப்பவர் : பரா (ரலி)

நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்

இந்த ஹதீஸும் கப்ரில் நடப்பதை எந்த மனிதனும் அறிய முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

இந்த நபிமொழிகளுக்கும், மேற்கண்ட குர்ஆன் வசனத்துக்கும் முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.

தொழுகையை விட்ட எத்தனையோ நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திரும்பவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. எத்தனையோ காபிர்களின் சடலங்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டி எடுக்கப்படும்போது தீக்கங்குகளால் கப்ரு நிரம்பியிருந்ததை எவருமே கண்டதில்லை.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சில நாட்களுக்குப் பின் மற்றொருவர் அடக்கம் செய்யப்படுகிறார். இப்படி ஒரு இடத்தில் பல நூறு நபர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றொருவரை அடக்கம் செய்வதற்காக ஒரு அடக்கத்தலம் தோண்டப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் எவரும் கப்ரில் தீக்கங்குகள் நிரம்பி இருந்ததை காணவில்லை.

இந்த நடைமுறையும் அந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது.

இந்தக் கதை பொய்யானது என்பதற்கு இந்தக் கதையே சான்று கூறுவதையும் சிந்திக்கும் போது உணரலாம்.

அந்தக் கதையில் உலகில் எவருமே காணாத ஒரு காட்சியை ஒருவர் காண்கிறார். இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியைக் கண்டவர் யார் என்பது பிரசித்தமாக இருக்க வேண்டும்.

இதைக் கண்டவரின் பெயரோ அவரின் தந்தையின் பெயரோ, அவர் நம்பகமானவர் என்பதற்கான சரித்திரக் குறிப்புகளோ எதுவுமே இக்கதையில் இல்லை.

இவ்வளவு அதிசயமான நிகழ்ச்சி நடந்த காலம் என்ன? எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாடு, எந்த ஊர் என்ற விபரமும் இல்லை.

இக்கதையில் வரும் சகோதரிக்கும் முகவரி இல்லை. தாயாருக்கும் முகவரி இல்லை.

இது உண்மை என்றிருக்குமானால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்கும். அவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்தக் கதை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒருவன் தான் மதிக்கின்ற பெரியாரின் புகழை மேலோங்கச் செய்ய எண்ணி அப்பெரியாரின் கப்ரு ஒளிமயமாக இருந்தது என்று கதை விடலாம். மறுமையில் இறைவன் வழங்கக் கூடிய தீர்ப்பை இங்கேயே வழங்க சிலர் முற்படலாம். தனக்கு பிடிக்காதவர்களின் கப்ரில் தீக்கங்குகளை கண்டதாக கதை விடலாம். இது தான் இந்தக் கதையினால் ஏற்படும் விளைவாகும்.

இந்த விளைவை ஏற்படுத்துவதே இந்தக் கதையை எழுதியவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றுகிறது.

சில பெரியார்களின் கப்ரு வாழ்க்கைப் பற்றி கட்டிவிடப்பட்டுள்ள கதைகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.

கப்ரில் தொழுத பெரியார்

ஸாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன். அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அருகிலிருந்தவரிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.

 தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 129 ல் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.

கப்ரில் நடப்பதை எவரும் அறியமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இந்தக் கதையும் நேரடியாக மோதுகிறது.

ஸாபித் பன்னானி அவர்கள் உண்மையில் நல்லடியாராக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். நல்லடியாராக இருந்தால் கப்ரில் எத்தகைய நிலையில் இருப்பார் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

நல்லடியார்கள் மண்ணறையில் வைக்கப்பட்டதும் முன்கர் நகீர் எனும் இரு வானவர்கள் அவரிடம் கேள்வி கேட்பர். அவர் கேள்விக்கு சரியான விடையளிப்பார். அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) விளக்கும் போது,

“கேள்வி கேட்கப்பட்ட பின் 70 / 70 என்ற அளவில் அவரது அடக்கத் தலம் விரிவாக்கப்படும். பின்னர் அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பின்னர் அவரிடம் ‘உறங்குவீராக’ எனக் கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இச்செய்தியைக் கூறிவிட்டு வருகிறேன்” என்று அவர் கூறுவார். அப்போது இரு மலக்குகளும் “புது மணமகனைப் போல் உறங்குவீராக!” எனக் கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (திர்மிதி)

நல்லடியார்கள் கியாமத் நாள் வரை மண்ணறையில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இந்த நபிமொழிக்கு மாற்றமாக ஸாபித் என்ற பெரியார் தொழுது கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி கப்ரிலிருந்து செங்கல் ஒன்று விழுந்துவிட்டது. அதன் மூலம் ஓட்டை ஏற்பட்டது என்று கூறப்படுவதும் நம்பும்படி இல்லை. கப்ரில் செங்கல்லுக்கு வேலை இல்லை. அதுவும் ஸாபித் பன்னானி அடக்கம் செய்யப்படும் போதே இது நிகழ்ந்துள்ளது. செங்கல்லால் கட்டடம் கட்டத் தடை இருந்தும் தொழும் காட்சியைக் கண்டு அறிவித்த இந்த மகான் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

எனவே இந்தக் கதையும் உண்மை கலக்காத பச்சைப் பொய் என்பதில் சந்தேகமில்லை.

இரவில் உறங்காத பெரியார்கள்

அபூ இதாப் ஸல்மீ (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இருந்தார்கள் பகல் முழுவதும் நோன்பு வைத்திருந்தார்கள். (பக்கம் 132)

இமாம் அஹ்மதுப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்அத்கள் நபில் தொழுபவர்களாக இருந்தார்கள். (பக்கம் 132)

இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையில் அறுபது தடவை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். (பக்கம் 132)

ஹஜ்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) ஐம்பது ஆண்டுகள் இஷாவையும், சுபுஹையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள். (பக்கம் 131)

 அபுல் முஃதமர் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இவ்விதம் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 131)

 இமாமுல் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகள் அல்லது நாற்பது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹைத் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 132)

 இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி அனைவருக்கும் தெரியும், அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன. அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 130)

இப்படிப்பட்ட கதைகள் நூல் நெடுகிலும் மலிந்து காணப்படுகின்றன. மத்ஹபையும், தரீக்காவையும் நியாயப்படுத்துவதற்காக இப்பெரியார்களின் வணக்க வழிபாடுகள் பற்றி மலைப்பூட்டப்படுகின்றன.

உண்ணுதல், உழைத்தல், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இவைகளை எல்லாம் முடித்து விட்டு 200 அல்லது முன்னூறு ரக்அத்கள் தொழ முடியுமா?

நாற்பது, ஐம்பது ஆண்டுகள் உறங்காமல், மனைவியுடன் கூடாமல், மலஜலம் கழிக்காமல் இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு சுபுஹ் தொழ முடியுமா?

ஒரு இரவுத் தொழுகையில் இரண்டு தடவை குர்ஆனை ஓதி முடிக்க முடியுமா?

இதைச் சிந்தித்தாலே இந்தக் கதைகளின் தரத்தை விளங்கிக் கொள்ளலாம். இதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது மற்றொரு கதை!

ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 160)

ஒரு ரக்அத்துக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு இரவுக்கு 1000 ரக்அத் நபில்கள் தொழ முடியுமா? இஷாவிலிருந்து சுபுஹ் வரை 500 நிமிடங்கள் கூட இராது.

இந்தச் சாதாரண கணக்கைக் கூட சமுதாயம் கவனிக்கத் தவறுவதால் ஸகரிய்யா சாஹிப் வாயில் வந்தவாறெல்லாம் கதையளக்கிறார்.

ரக்அத்களின் எண்ணிக்கை பற்றிக் கூறும் போது 1000 ரக்அத்கள், 200 ரக்அத்கள் என்றெல்லாம் பெரியார்கள் தொழுது வந்ததாக பிரமிப்பூட்டும் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்பதைக் கூறும்போது மலைப்பின் உச்சிக்கே நாம் சென்று விடுகிறோம்.

ஹஜ்ரத் உவைஸுன் கரனீ (ரஹ்) அவர்கள் பிரபலமான பெரியார். தாபியீன்களின் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் இரவு நேரங்களில் தொழும்போது சில சமயங்களில் ருகூவுச் செய்வார்கள். இரவு முழுவதும் அப்படியே ருகூவிலேயே சென்று விடும். சில சமயங்களில் ஸஜ்தாச் செய்வார்கள். இரவு முழுவதும் ஒரு ஸஜ்தாவிலேயே கழிந்துவிடும். (பக்கம் 161)

இப்படியெல்லாம் தொழவேண்டுமென்பதற்காக இந்த சம்பவத்தையும் ஸகரிய்யா சாஹிப் எழுதுகிறார். தொழுகை இப்படித்தான் அமைந்திருக்க வேண்டுமென்றால் 1000 ரக்அத்து சமாச்சாரமெல்லாம் பொய்யென்று ஆகின்றது.

தொழுகையின் சிறப்பு என்ற பெயரில் ஸகரிய்யா சாஹிபுடைய புருடாக்கள் சிலவற்றைக் கண்டோம். பலவீனமான ஹதீஸ்கள் பல இடம் பெற்றிருந்தாலும் அவற்றை நாம் விமர்சனம் செய்யவில்லை. கதைகளை மட்டுமே விமர்சித்துள்ளோம்.

எவ்வகையிலும் நியாயப்படுத்திட இயலாத இந்தப் பொய்கள் தான் தொழுகையின் சிறப்பு பகுதி முழுவதும் மலிந்துள்ளன.

மாதிரிக்காக ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே நாம் இனம் காட்டியுள்ளோம். சிந்தனையுடைய மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.

குர்ஆனும், நபிவழிக்கும் முரணான – தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக!