விபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா! – பாகம் 1

விபச்சாரத்தை கண்டு கொள்ளாதே –
பிஜேவின் புதிய ஃபத்வா! – பாகம் 1

அறிஞர்? பிஜேவின் நிலை இந்தளவு படுமோசமாக, அதள பாதாளத்தை நோக்கி செல்லும் என யாரும் ஒரு நாளும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

தனது அருவருக்கத்தக்க, ஆபாசமான உரையாடல் தக்க ஆதாரங்களுடன் நிரூபணமாகியதால் ஜமாஅத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பிஜே, தனது அசிங்கமான அந்தரங்கத்தை மறைக்க அவ்வப்போது பல அஸ்திரத்தை கையிலெடுத்து மக்களிடம் தில்லாலங்கடி வேலை காட்டி வருகிறார்.

இது தமிழக முஸ்லிம்களுக்கு பார்த்து பழகிப் போன பழைய விஷயமாயிற்று.

தன்னை திருவாளர் பரிசுத்தமாக நிலைநிறுத்திக் கொள்ள எத்தகைய கயமைத்தனத்தையும் செய்ய துணிந்தவர் என்பதை நாள்தோறும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் முகநூல் நேரலையில் பேசும் போது ஹதீஸ்களை, தனக்கு தோதாக வளைத்து திரிக்கும் வேலையை போகிற போக்கில் செய்துள்ளார்.

அவற்றை அறிந்து கொள்ளும் முன் சிறியதொரு முன்கதை சுருக்கத்தை பார்த்து விடுவோம்.

முன்கதை சுருக்கம்

கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பிஜேவின் நடவடிக்கை பற்றி தூத்துக்குடியில் மாவட்ட செயற்குழுவில் விளக்கிடும் போது

பிஜேவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை எந்த காழ்ப்புணர்விலும் எடுக்கப்பட்டதல்ல, அவர் மீது காழ்ப்புணர்வில் இருந்தோம் என்று பிஜே சொல்வது உண்மையானால் கடந்த காலத்தில் பிஜே மீது இது போன்ற பெண் சம்பந்தப்பட்ட புகார் ஒன்று வந்தபோது அதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு நடவடிக்கை எடுத்திருக்க முடியாதா? என்று கடந்த கால சம்பவம் ஒன்றை கூறி விளக்குகிறார்.

ஏற்கனவே 28 நிமிட பிஜேவின் ஆபாச ஆடியோ ஒன்று வெளியானது. அதை பொய் என்று பிஜே மறுத்தார். ஆனால் 10 நிமிட ஆபாச ஆடியோ பிஜேவின் வாயினாலேயே உண்மை என்றாகி விட்ட போது 28 நிமிட ஆடியோவும் உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளது.

அவர் குற்றமிழைத்திருந்தால் இறைவனின் சாபத்தை அவருக்கெதிராக வேண்டுங்கள், அது பொய்யாக, அவதூறாக இருந்திருந்தால் அதை பரப்பியவர்கள் அனைவருக்கும் எதிராக துஆ செய்யுங்கள்.

இது கோவை ரஹ்மத்துல்லாஹ் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுவில் பேசியதாகும்.

இந்த வீடியோ பதிவு ஜமாஅத்தின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது தான் பிஜேவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி முகநூல் நேரலை எனும் முச்சந்திக்கு பிஜேவை கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

தொடர்ச்சி
மேற்படி முகநூல் உரையிலே பல திருகுதாளங்கள், ஹதீஸ்களை திரிக்கும் ஈனச்செயல்கள் ஆகியவற்றை அனாயசமாக அறிஞர்? பிஜே அரங்கேற்றம் செய்கிறார்.

அவ்வுரையிலே அவர் சொல்ல வரும் அரிய கருத்து இதுதான்

இறைவன் எல்லையற்ற கருணையாளன், நிகரற்ற மன்னிக்கும் மாண்புடையவன் அத்தகைய இறைவனிடத்திலே இவனை மன்னிக்காதே அழித்து விடு என்று பிரார்த்திக்கலாமா?

மற்றவர்களின் குறைகளை மறைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இறைவனிடத்திலே இவன் பாவத்தை அம்பலப்படுத்து மன்னிக்காதே என்று கோரலாமா?

இதுதான் பிஜேவின் வாதங்கள்

இவரது வாதத்தின் அபத்தங்களை அறிந்து கொள்ளும் முன் சற்று ரீவைண்ட் செய்து பார்த்துக் கொள்வோம்.

பாக்கர் நடவடிக்கை

இன்று இறைவனின் கருணையையும் அன்பையும் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பல மணி நேரம் விளக்கி பேசும் இந்த பிஜே தான் சகோ பாக்கர் மீது (அந்நியப் பெண்ணுடன் பஸ் பயணம்) நடவடிக்கை எடுத்தார்.

பாக்கரை தோண்டித் துருவி, விசாரித்து வீடியோ பதிவாக்கி, செயற்குழுவிற்கு வருகையளித்த உறுப்பினர்கள் ஒவ்வொருக்குமாய் கொடுத்த போது பிறரின் குறைகளை தோண்டித் துருவ கூடாது என்ற செய்திகள் மறந்து போயினவா?

பிறரின் குற்றங்களை மறைக்க வேண்டும் என்ற வஹிச் செய்தி அப்போது அருளப்படவில்லையா?

ஊர் ஊராகச் சென்று தியாகமா? துரோகமா? எனும் தலைப்பில் பாக்கர் செய்த தவறை பட்டியலிட்டு ஊர் முழுக்க சிறப்புரையாற்றும் போது பிறர் குறை துருவக் கூடாது எனும் போதனை என்னவானது?

அல்தாபி நடவடிக்கை

அதே போல அல்தாபி மீதான பாலியல் புகார் (அந்நியப் பெண்ணுடன் தனிமை சந்திப்பு) உறுதிப்படுத்தப்பட்ட போது அல்தாபி மீது நடவடிக்கை எடுத்ததும் இதே பிஜே தான்.

அல்தாபி மீதான நடவடிக்கை ஏன் என்பது குறித்து பக்கம் பக்கமாக விளக்கம் எழுதி மாவட்ட, மண்டலங்களுக்கு அனுப்பிய போது பிறரின் குறைகளை ஆராயதீர்கள் எனும் அறிவுரை என்னவானது? ஏன் கானல் நீரானது?

அல்தாபி முபாஹலா

மன்னிக்கும் தயாள குணம் கொண்ட இறைவனிடத்தில் இவனை மன்னிக்காதே இவனுக்கு தண்டனை வழங்கு, நாசத்தை ஏற்படுத்து என்று பிரார்த்திக்க கூடாது. அப்படி பிரார்த்தித்தால் அது பிஜேவின் பார்வையில் குப்ர் எனும் இறைநிராகரிப்பாகும். இப்படித்தான் முகநூல் நேரலையில் முகம் கடுக்க கூறுகிறார்.

இதுதான் பிஜேவின் உறுதியான கல்வி ஞானம் என்றால் அல்தாபி முபாஹலாவிற்கு அழைத்த போது அவரது முபாஹலா அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக முபாஹலா செய்தது ஏன்?

முபாஹலா என்பதே இறைவா இவனை மன்னிக்காதே இவனை தண்டித்து விடு என்பது தானே?

தனது பார்வையில் எது இன்றைக்கு இறைநிராகரிப்போ அதை அல்தாபி விஷயத்தில் பிஜே செய்து ஏன் இறைமறுப்பாளராக மாறினார்?

எப்போது கலிமா சொல்லி முஸ்லிமானார்?

இதற்கான விடை இன்றைய 10 மணி லைவில் கிடைக்குமா?

இதுவெல்லாம் அறிஞர்? பிஜேவை நோக்கி சாமானியர்கள் முன்வைக்கும் கேள்வித் தொகுப்புகள். இன்னும் பல உள்ளன. அவற்றில் எது ஒன்றுக்கும் பிஜேவால் பதிலளிக்க முடியாது.

சாபத்தை கேட்ட நபிகளார்

விபச்சாரம், கொலை போன்ற குற்றங்களை இறைவன் நாடினால் மன்னிப்பான். ஆகவே இத்தகைய பாவங்களில் ஈடுபட்டவர்களுக்கு இறைவனின் சாபத்தை கேட்க கூடாது. அவ்வாறு கேட்டால் அது இறைநிராகரிப்பு என்று பிஜே கூறுகிறார்.

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِ…. إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ

நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 1002

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.

இறைவன் கருணையாளன், எல்லாத்தையும் மன்னிப்பவன் எனவே எவரையும் சபித்து பிரார்த்தனை புரியக் கூடாது, அது இறைநிராகரிப்பு என்றால் நபிகளாரின் இந்த செயல் எந்த அடிப்படையிலானது?

இதையும் இறைநிராகரிப்பு என்பீர்களா?

இது இணைவைப்பாளர்களுக்கு எதிராக நபிகளார் கேட்ட துஆவாகும். இணைவைப்பாளர்கள் தான் நிரந்தர நரகிற்குரியவர்கள் ஆயிற்றே என்று சொல்வீர்களேயானால் இறைவன் இணைவைப்பை திருந்தி மன்னிப்புக் கோரினால் அதையும் மன்னிக்க தயாராகத்தானே உள்ளான்?

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ (73) أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

“மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்” என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர்.459 ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏகஇறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 5 73,74

இந்த வசனத்தை வைத்து முகநூல் உரையிலே தாங்களும் இதே விளக்கத்தை அளிக்கத்தானே செய்தீர்கள்?

இறைவன் பெரும்பாவங்களை நாடினால் மன்னிப்பான் ஆகவே அவர்களுக்கு எதிராக சாபத்தை வேண்டுவது இறைநிராகரிப்பு என்றால் இணைவைப்பையும் மன்னிப்பு கோரினால் இறைவன் மன்னிக்க தயாராக இருக்கும் போது இதற்கு எதிராக மட்டும் சாபத்தை வேண்டலாமா? நபிகளார் வேண்டியுள்ளார்களே? இதுவும் இறைநிராகரிப்பில் சேருமா?

இதே பாணியில் முளர் கோத்திரத்தார் மீதும் நபிகள் நாயகம் இறைவனின் சாபத்தை வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள்.

இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்

நூல் : புகாரி (6393)

இந்த செய்தியில் பிஜே எழுப்பிய அறிவார்ந்த வாதம் அதாவது இறைவன் எல்லையற்ற கருணையாளன் ஆகவே சாபத்தை வேண்டி துஆ செய்யக் கூடாது எனும் வாதம் பொருந்தாதா?

முபாஹலா பற்றி பிஜே சொன்னது என்ன?

முஸ்லிம்களுக்கு மத்தியில் முபாஹலா செய்யலாமா எனும் தலைப்பில் தனது தர்ஜூமா விளக்க குறிப்பு எண் 449 ல் பின்வருமாறு கூறுகிறார்.

யார் பொய்யர் என்பதைக் கண்டுபிடிக்கும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்கலாம் என்பதற்கான முக்கியமான சான்றாக இது உள்ளது.

மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் கண்டுபிடிக்க முடியாதபோது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிட்டு பிரச்சினையை முடிப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை.

முஸ்லிமுக்கு மத்தியில் யார் பொய்யர்கள் என்பதில் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை வேண்டக் கூடாது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

இது முபாஹலா குறித்து பிஜேவின் நிலைப்பாடாகும்.

இருநபர்களிடையே யார் உண்மையாளர் யார் பொய்யர் எனும் பிரச்சனை வரும் போது அதை முபாஹலா மூலம் இறைவனிடத்தில் ஒப்படைத்து முடித்துவிடலாம் என்கிறார்.

எது உண்மை எது பொய், யார் உண்மை உரைக்கின்றார்? யார் பொய்யுரைக்கின்றார்? எனும் பிரச்சனை ஏற்படும் போதே இறைவனின் சாபத்தை வேண்டலாம் என்று இங்கே பிஜே கூறிவிட்டு பெரும்பாவம் செய்தவர்களுக்கு எதிராக எதுவும் கேட்க கூடாது அல்லாஹ் கருணையாளன் என்கிறார்.

தனக்கு எதிராக பிரார்த்தனை புரிய மக்கள் கையேந்தினால் அல்லாஹ் கருணையாளன், மற்றோருக்கு எதிராக பிரார்த்தனை புரிய கையேந்தினால் அல்லாஹ் தண்டிப்பவன்.

ஆஹா என்ன ஒரு தத்துவம்

இப்படி பளிச்சென்று தெரியும் வகையில் மார்க்கத்தை தனக்காக வளைத்து விட்டு எப்படி தூய்மை வாதம் பேசுகிறார்?

தான் முன்பு எழுதியதை கூட மறந்து விட்டாரோ?

(நினைவுப்படுத்திக் கொள்ள விரும்பினால் இதோ நமது தவ்ஹீத் ஜமாஅத்தின் இணையதளத்தில் அது உள்ளது. விரும்பினால் க்ளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
https://onlinetntj.com/449-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8…/1795

இது முபாஹலாவுக்கு தான் பொருந்தும், தனித்தனியாக பிரார்த்திக்கும் போது பொருந்தாது என்பார் எனில் ஒரு காரியம் இறைமறுப்பு என்றாகி விட்ட போது அதை முபாஹலாவில் செய்யலாம், தனித்து செய்யக் கூடாது என்றாகுமா? அதற்கு என்ன ஆதாரம்?

பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனையை மறுக்கலாமா?

விபச்சாரம், கொலை போன்ற பெரும்பாவங்களை இறைவன் நாடினால் மன்னிப்பான். ஆகவே பெரும்பாவம் செய்தவர்களுக்கு எதிராக இறைவனிடத்தில் சாபத்தை வேண்டி பிரார்த்திக்க கூடாது, அவ்வாறு துஆ செய்தால் அது குப்ர் எனும் இறைநிராகரிப்பு என்பது பிஜேவின் நவீன பத்வா.

ஏனென்றால் இறைவன் கருணையாளன் என்பது தொடர்பான ஹதீஸ்களை அத்தகையோர் மறுக்கின்றார்கள் என்கிறார்.

சரிதான். ஹதீஸை மறுத்தால் சந்தேகமற அது இறைநிராகரிப்பு தான்.

ஆனால் இங்கே ஹதீஸை மறுப்பது யார் என்பது தான் கேள்வி

நபிகள் நாயகம் ஸல் அவர்கள், பாதிக்கப்பட்டவன் தனது பாதிப்பிற்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளலாம். அவனது பிரார்த்தனைக்கு இறைவனிடத்தில் எந்த தடையும் இல்லை என்று கூறி அனுமதிக்கின்றார்கள்.
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 1496

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 அறிந்தவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4 148

தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவன் யாராக இருந்தாலும் அவன் ஏற்படுத்திய பாதிப்புக்கேற்ப இறைவனிடத்தில் பிரார்த்தனை புரியலாம் என்று மார்க்கம் அனுமதிக்கின்றது.

தனக்கு நாசத்தை ஏற்படுத்தியவனுக்கு பதிலுக்கு இறைவனிடத்தில் நாசத்தை, அழிவை ஏற்படுத்துமாறு இறைவனிடம் பிரார்த்தனை புரிவதில் எந்த தடையுமில்லை. அதை இந்நபிமொழி அனுமதிக்கின்றது.

ஆனால் பிஜேவோ இந்நபிமொழியை மறுத்து பாதிக்கப்பட்டவன் பிரார்த்தனை புரிவது கூடாது அது இறைநிராகரிப்பு என்கிறார்.

மார்க்கம் அனுமதித்த ஒன்றை இறைமறுப்பு என்று மார்க்க தீர்ப்பு அளிக்கின்றார் என்றால் இவர் மார்க்கத்தை வளைக்கின்றார் என்பது புரியவில்லையா?

ஹதீஸை மறுத்து தான் சொன்ன இறைநிராகரிப்பை செய்கிறார் என்பது தெரியவில்லையா?

குப்ருக்கு அழைப்பு விடுத்த பிஜே

இறைவன் கருணையாளன், மன்னிப்பவன் அவனிடம் இன்னாருக்கு சாபத்தை கொடு என இறைஞ்சலாமா என தற்போது அங்கலாய்க்கும் பிஜே தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறாக பொருளாதார மோசடி குற்றத்தை சுமத்திய போது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகள் இறைவா இவர் சொல்வது போல நாங்கள் பொருளாதாரத்தில் மோசடி செய்திருந்தால் எங்களை அழித்து நாசமாக்கு என இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

அதற்கு பதிலளித்து பேசிய பிஜே நான் ஆறு கோடி கொடுத்தேன் என்பதற்கு இறைவனின் சாபத்தை கேட்போமா என கோல்மால் வேலையை செய்தார்.

ரஹ்மானாக – அளவற்ற அருளாளாளனாக உள்ளவனிடம் சாபத்தை கேட்கலாமா? அப்படி கேட்டால் அது குஃப்ர் என்று கொக்கரிப்பவர் அன்று அத்தகைய இறைநிராகரிப்பை செய்ய தானும் முன்வந்து பிறரையும் குப்ரை நோக்கி அழைத்ததன் மர்மம் என்ன?

இறைநிராகரிப்பை செய்து இறைமறுப்பாளனாக மாறிப் போனாலும் பிரச்சனையில்லை நமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வெறியா?

பிஜேவின் உரை சொல்லும் கருத்தென்ன?

இதை தாண்டி பிஜேவின் முகநூல் உரை சமுதாய மக்களுக்கு போதிக்கும் ஆழமிக்க கருத்து என்னவென்று பார்த்தால்

இறைவன் கருணையாளன்

நிகரற்ற அன்புடையவன்

ஆகவே யாரும் விபச்சாரத்தில் மூழ்கி திளைக்கலாம்.

பிறர் செய்யும் விபச்சாரம் பற்றி யாரும் கண்டு கொள்ளக் கூடாது

இஸ்லாமும் நபிகள் நாயகமும் அவ்வாறு தான் நமக்கு போதித்துள்ளார்கள்.

அதையும் மீறி விபச்சாரம் செய்பவனால் சமுதாயம் பாதிக்கப்பட்டு சீரழிந்து போனாலும் அவர்கள் விபச்சாரம் செய்தவனுக்கு எதிராக இறைவனிடத்தில் துஆ செய்யக் கூடாது.

மீறி இறைவனிடத்தில் பிரார்த்தனை புரிந்தால் அவன் இறைமறுப்பாளன்.

இதற்கு அவர் சொல்லும் ஹதீஸ்களின் ஆதாரத்தினூடே பிஜேவின் அறியாமையையும் விபச்சாரத்தை கண்டு கொள்ளாதீர்கள் எனும் பிஜேவின் சமூக அறிவுரையையும் இன்றைய 10 மணியில் உளறவிருக்கும் உளறல்களையும் சேர்த்து அடுத்த தொடரில் காண்போம் இன்ஷா அல்லாஹ்..!

பாகம் 2ஐ படிக்க…

http://stg.onlinetntj.com/articles/markathil-vilayadum-pj-part2