முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா? (பாகம்-2)

முஸ்லிமில் இடம் பெறும் செய்தி ஸஹீஹானதா?
(பாகம்-2)

(பிஜேவின் மறுப்புக்கு மறுப்பு)

முதல் கட்டுரையின் தொடர்ச்சி….

அது எப்படி என்பதை விரிவாக காண்போம்

உறுதிப்படுத்துவது எவ்வாறு?

முஸ்லிமில் இடம் பெறும் செய்தியை ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து முஹாரிப் என்பார் அறிவிக்கின்றார். முஹாரிப் என்பாரிடமிருந்து ஷூஃபா – சுப்யான் என இருவர் அறிவிக்கின்றனர்.

முஹாரிப் என்பாரிடமிருந்து ஷூஃபா அவர்கள் அறிவிக்கும் போது ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல் வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள் என்று மட்டுமே அறிவிக்கின்றார்.

ஆனால் முஹாரிப் என்பாரிடமிருந்து சுஃப்யான் என்பார் அறிவிக்கும் போது ” ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்” என்று அறிவித்துவிட்டு

”வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”

என்ற வாசகத்தை முஹாரிப் தனது சொந்தக் கருத்தாகக் கூறினாரா? அல்லது நபியின் கருத்தாக கூறினாரா? என்பதை நான் அறியமாட்டேன் என்கிறார்.

இந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள்தான் கூறினார்கள் என்று பிஜே அவர்கள் நிரூபிக்க வேண்டுமென்றால் முஹாரிப் அவர்களின் மாணவர்களில் சுஃப்யான் அல்லாதவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக அறிவித்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டி நிரூபிக்க வேண்டும். அதுதான் நிரூபிக்கின்ற முறையாகும். இந்த வழிமுறையை ஹதீஸ்கலை அறிந்த பிஜே நன்கறிவார்.

ஆனால் பிஜே அவர்களோ ”சுஃப்யான்” இந்த வாசகத்தை கூறினாரா? இல்லையா? என்பதைப் போன்று சந்தேகத்தைக் கிளப்பி சுஃப்யானின் மாணவர்களில் யார் வலிமையானவர் என்ற ஆய்விற்குள் நுழைகின்றார். இதுதான் பிஜேயின் பொம்மலாட்டம் ஆகும்.

தனது பாலியல் குற்றத்தை திசைதிருப்புவதை போலவே இதிலும் தனது திசைதிருப்பல் வேலையை சாதுர்யமாக வெளிப்படுத்த முயற்சிக்கின்றார்.

சுஃப்யானின் மாணவர்களில் யார் வலிமையானவர் என்ற ஆய்விலாவது அவர் உண்மையாளராக இருக்கிறாரா என்று பார்த்தால் அதிலும் அவர் உண்மையாளராக இல்லை. பொய்யான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்துள்ளார்.

ஆய்வின் முறை

முஸ்லிமில் இடம் பெறும் செய்தியை சுஃப்யான் என்பாரிடமிருந்து வகீவு, அபூ நுஐம், அப்துர்ரஹ்மான், முஹம்மது இப்னு யூசுப் மற்றும் சிலர் அறிவிக்கின்றனர். பெயர் குறிப்பிட்டு நாம் கூறியுள்ள இந்த நான்கு பேருமே நம்பகமானவர்கள் ஆவர்.

இந்த நான்கு பேரில் மிகவும் வலிமையானவரும், சுஃப்யான் அவர்களிடமிருந்து அறிவிப்பதில் நுணுக்கமானவரும் ”அப்துர் ரஹ்மான்” என்ற அறிவிப்பாளர் ஆவார்.

இந்த அப்துர் ரஹ்மான் என்பார் தொடர்பான தகவல்களை யெல்லாம் பிஜே அவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டு தன்னுடைய கருத்திற்கு சாதகமாக வளைக்க வேண்டும் என்பதற்காக அபூநுஐம் என்பாரை பற்றிய விமர்சனங்களைக் எடுத்துக் கூறுகின்றார்.

சுஃப்யானுடைய மாணவர்களில் அபூ நுஐம் மற்றும் வகீவு ஆகியோரை ஒப்பிடும் போது அபூ நுஐம் அவர்கள் ”குறைவான தவறுகளைச் செய்பவர்” என்று கூறப்பட்ட விமர்சனத்தை எடுத்துக் காட்டுகிறார்.

வகீவு என்பவருடன் ஒப்பிடும் போதுதான் அபூ நுஐம் என்பார் குறைவான தவறுகளைச் செய்பவர் என்றே கூறப்பட்டுள்ளது.

ஆனால் அப்துர்ரஹ்மான் தொடர்பாக அறிஞர்கள் கூறிய கருத்துக்களை எடுத்துப் பார்த்தால் ”அபூ நுஐம்” என்பவரை விட ”அப்துர் ரஹ்மான்” என்பவர்தான் மிகவும் வலிமையானவர் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ளலாம்.

”அப்துர் ரஹ்மான்” என்ற அறிவிப்பாளர் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் சிறப்பித்துக் கூறிய ஏராளமான கருத்துக்களில் இருந்து இங்கு தேவையான தகவல்களை மட்டும் காண்போம்.

قلت: فأبو نعيم أثبت، أم وكيع؟ قال: أبو نعيم أقل خطأ، قلت: فأيما أحب إليك: عبد الرحمن، أو أبو نعيم؟ قال: ما فيهما إلا ثبت، إلا أن عبد الرحمن كان له فهم.

”அபூ நுஐம், வகீவு ஆகியோர் யார் மிகவும் உறுதியானவர்? என்று நான் இமாம் அஹ்மத் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் ”அபூ நுஐம் மிகக் குறைவாக தவறு செய்பவர்” என்று கூறினார். அப்துர் ரஹ்மான், அபூ நுஐம் ஆகியோரில் உங்களுக்கு மிக விருப்பமானவர் யார்? என்று கேட்டேன். இருவருமே உறுதியானவர்கள்தான் . என்றாலும் அப்துர்ரஹ்மான் அவர்களிடம் விளக்கம் உள்ளது” என்று இமாம் அஹ்மத் கூறினார்கள்.

நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 7 பக்கம் 61

அபூ நுஐம் என்பாரை விட அதிக விளக்கமிக்கவர் அப்துர்ரஹ்மான் என்று இமாம் அஹ்மத் நற்சான்று அளிக்கின்றார்.

ஆனால் பிஜே அவர்களோ தன்னுடைய தவறான கருத்தை நிலை நாட்ட அப்துர்ரஹ்மான் என்பாரின் அறிவிப்பை மறுத்து ”அபூ நுஐம்” என்பாரின் அறிவிப்புதான் சரி என திசைமாற்றும் வேலைகளைச் செய்கின்றார்.

وكفاك بعبد الرحمن إتقانًا،

உறுதியாகக் கூறுவதில் அப்துர் ரஹ்மான் உனக்கு போதுமானவர் என இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறுகிறார்.

நூல் : தஹ்தீபுல் கமால் பாகம் 23 பக் 208

ஒருவர் கூறியதை மிகவும் நுணுக்கமாக கவனித்து உறுதிப்படுத்துபவர் அப்துர் ரஹ்மான் என்பது மேற்கண்ட இமாம் அஹ்மத் அவர்களின் நற்சான்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

قَالَ أَحْمَدُ بنُ حَنْبَلٍ: عَبْدُ الرَّحْمَنِ أَفْقَهُ مِنْ يَحْيَى القَطَّانِ وَقَالَ: إِذَا اخْتَلَفَ عَبْدُ الرَّحْمَنِ وَوَكِيْعٌ، فَعَبْدُ الرَّحْمَنِ أَثْبَتُ؛ لأَنَّهُ أَقْرَبُ عَهداً بِالكِتَابِ، وَاخْتَلَفَا فِي نَحْوٍ مِنْ خَمْسِيْنَ حَدِيْثاً لِلثَّوْرِيِّ. قَالَ: فَنَظَرْنَا، فَإِذَا عَامَّةُ الصَّوَابِ فِي يَدِ عَبْدِ الرَّحْمَنِ

அப்துர் ரஹ்மான் என்பார் யஹ்யா அல்கத்தான் அவர்களை விட விளக்கசாலியாவார்.

அப்துர்ரஹ்மான் மற்றும் வகீவு ஆகியோருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால் அப்துர் ரஹ்மான்தான் மிகவும் உறுதியானவர் ஆவார். ஏனென்றால் அவர்தான் புத்தகமாக எழுத்தாக்கியதில் அவர்தான் காலத்தால் மிக நெருங்கியவர் ஆவார்.

வகீவு, அப்துர்ரஹ்மான் ஆகிய இருவரும் சுஃப்யானுஸ் ஸவ்ரி என்பாருக்குரிய ஐம்பது ஹதீஸ்களில் முரண்பட்டனர். அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது அனைத்திலும் அப்துர் ரஹ்மான்தான் சரியாகச் சொன்னவராக இருந்தார்.

நூல் தஹ்தீபுல் கமால் பாகம் 17 பக்கம் 437

இது அப்தர் ரஹ்மான் என்பார் தொடர்பாக இமாம் அஹ்மத் அவர்களுடைய நற்சான்று ஆகும்.

….قالَ مُحَمَّدُ بنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ:… أَثْبَتُ مَنْ يَحْيَى بنِ سَعِيْدٍ، وَأَتْقَنُ مِنْ وَكِيْعٍ، كَانَ عَرَضَ حَدِيْثَهُ عَلَى سُفْيَانَ

முஹம்மது பின் அபூபக்கர் கூறுகின்றார் : அப்துர் ரஹ்மான் என்பவர் யஹ்யா பின் ஸயீத் என்பாரை விட மிக உறுதியானவர் ஆவார். வகீவு என்பாரை விட மிக நுணுக்கமானவர் ஆவார். அப்துர் ரஹ்மான் தன்னுடைய ஹதீஸ்களை சுஃப்யான் அவர்களிடம் எடுத்துக் காட்டுபவராக இருந்தார்.

அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 1 பக்கம் 255

….. أَبُو الرَّبِيْعِ الزَّهْرَانِيُّ: سَمِعْتُ جَرِيْراً الرَّازِيَّ يَقُوْلُ:مَا رَأَيْتُ مِثْلَ عَبْدِ الرَّحْمَنِ بنِ مَهْدِيٍّ … ، وَوَصَفَ حِفْظَهُ وَبَصَرَهُ بِالحَدِيْثِ…

ஜரீர் அர்ராஸி கூறுகின்றார் : அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தி அவர்களைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. அவருடைய மனனத்தன்மையையும், ஹதீஸ்களில் அவருடைய ஆழ்ந்த பார்வையையும்தான் இப்படி வர்ணிக்கின்றார்.

அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 1 பக்கம் 251

قَالَ مُحَمَّدُ بنُ أَبِي صَفْوَانَ: سَمِعْتُ عَلِيَّ بنَ المَدِيْنِيِّ يَقُوْلُ: لَوْ أُخِذْتُ، فَحُلِّفْتُ بَيْنَ الرُّكْنِ وَالمَقَامِ، لَحَلَفتُ بِاللهِ أَنِّي لَمْ أَرَ أَحَداً قَطُّ أَعْلَمَ بِالحَدِيْثِ مِنْ عَبْدِ الرَّحْمَنِ بنِ مَهْدِيٍّ…..

அலி இப்னு மதீனி கூறுகின்றார் :

நான் தண்டிக்கப்பட்டாலும், கஅபாவில் ருக்னுமல் யமானி மற்றும் மகாமு இப்ராஹீமிற்கு மத்தியில் வைத்து சத்தியம் செய்யுமாறு கோரப்பட்டாலும் ”அப்துர் ரஹ்மான் மஹ்தி என்பாரை விட ஹதீஸ்களில் மிக அறிந்தவரை நான் ஒரு போதும் பார்த்ததில்லை” எனறு அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவேன்.

தஹ்தீபுல் கமால் பாகம் 17 பக்கம் 438

قال سألت على بن المديني من أوثق أصحاب الثوري قال يحيى القطان وعبد الرحمن بن مهدى

அலீ இப்னுல் மதீனீயிடம்
சுஃப்யானுடைய மாணவர்களில் மிக வலிமையானவர்கள் யார் என கேட்ட போது யஹ்யா அல்கத்தான் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் என பதிலளித்தார். ஆவர்.

பார்க்க அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 1 பக்கம் 251

قَالَ ابْنُ المَدِيْنِيِّ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ لِي سُفْيَانُ: لَوْ أَنَّ عِنْدِي كُتُبِي، لأَفَدْتُكَ عِلْماً.

அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ கூறுகிறார் : “என்னுடைய புத்தகங்கள் என்னிடம் இருந்திருந்தால் கல்விக்காக உனக்கு ஈடாகக் கொடுத்திருப்பேன். ” என்று சுஃப்யான் அவர்கள் என்னிடம் கூறினார். இந்தத் தகவலை இப்னுல் மதீனி கூறுகின்றார்.

அப்துர் ரஹ்மான் தொடர்பான இந்த நற்சான்றுகள் அனைத்தும் இமாம் தஹபி அவர்களுக்குரிய ”ஸியரு அஃலாமுன் நுபலாவு” என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.

அப்துர் ரஹ்மான் தொடர்பாக இன்னும் ஏராளமான அறிஞர்கள் நற்சான்று கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் எடுத்துரைத்தால் இன்னும் ஏராளமான பக்கங்கள் நீண்டு கொண்டே போய்விடும்.

அறிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு நாம் மேலே கூறிய சான்றுகளே போதுமானதாகும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் இது தான்.

”வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”

என்ற வாசகத்தை முஹாரிப் தனது சொந்தக் கருத்தாகக் கூறினாரா? அல்லது நபியின் கருத்தாக கூறினாரா? என்பதை நான் அறியமாட்டேன் என சுப்யான் கூறுகிறார்.

சுஃப்யானுடைய மாணவர்களில் மிக மிக உறுதியானவரான அப்துர் ரஹ்மான் என்பாரும், மற்றொரு உறுதியான மாணவரான முஹம்மது யூசுஃப் என்பாரும் சுஃப்யான் கூறிய மேற்படி தகவலை உறுதிப் படுத்தி அறிவிக்கும் போது பிஜே அவர்கள் சுஃப்யானின் மற்ற மாணவர்கள் இதை கூறவில்லை என்று கூறி திசைதிருப்ப வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? சரியான வழிமுறைக்கு மாற்றமாக தவறான பாதையில் ஏன் செல்ல வேண்டும்?

பிஜே நேர்மையாளராக நடந்து கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

”வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்”

என்ற வாசகம் நபி கூறியது கிடையாது என்பதை மிக இலகுவாக ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள இயலும்.

ஜாபிர் அவர்களிடமிருந்து ஷஅபி என்பார் அறிவிக்கும் போதும் அவருடைய ஏராளமான மாணவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக குறிப்பிடவில்லை. (பார்க்க புகாரி 5244)

ஜாபிர் அவர்களிடமிருந்து நுபைஹ் அல் அனஸி என்பார் அறிவிக்கும் போதும் அவருடைய ஏராளமான மாணவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக குறிப்பிடவில்லை.

ஜாபிர் அவர்களிமிருந்து முஹாரிப் அவர்கள் அறிவிக்கும் போது அவருடைய மாணவரான ஷுஅபாவும் அவருடைய ஏராளமான மாணவர்கள் இந்த வாசகத்தை நபி கூறியதாக குறிப்பிடவில்லை.

அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலும் இந்த வாசகம் நபி கூறியதாக குறிப்பிடப்படவில்லை

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான அறிவிப்பிலும் இந்த வாசகம் நபி கூறியதாக கூறப்படவில்லை.

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து முஹாரிப் என்பார் அறிவிக்கும் போது அவருடைய மாணவரான சுஃப்யான் தன்னுடைய மாணவர்களுக்கு அறிவிக்கும் போது அவர்களில் ஒரு சிலர் இதனை ஹதீஸாக அறிவித்தாலும் சுஃப்யானுடைய மாணவர்களில் மிக மிக வலிமையானவரான அப்துர் ரஹ்மான், மற்றும் முஹம்மது பின் யூசுப் ஆகியோர் சுஃப்யான் இந்த வாசகத்தில் சந்தேகம் தெரிவித்தார் என்ற அதிகப்படியான தகவலையும் இணைத்து அறிவிக்கின்றனர்.

ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் அதன் வாசகம் நபி கூறியதா? இல்லையா? என்று சந்தேகம் தெரிவித்தால் அதன் மற்ற அறிவிப்பாளர்கள் அதனை நபி கூறியதாக அறிவித்துள்ளார்களா? எனப் பார்க்க வேண்டும். அவர்களில் யாரும் அதனை நபி கூறியதாக அறிவிக்கவில்லை என்றால் அது இடைச் செருகல் என்பதுதெளிவாகிவிடும்.

சுஃப்யான் எந்த வாசகத்தை நபி கூறியதா? இல்லையா? என்று சந்தேகம் தெரிவிக்கின்றாரோ அந்த வாசகம் சுஃப்யான் அல்லாத மற்றவர்களின் அறிவிப்புகளில் இடம் பெறவில்லை. எனவே அது இடைச் செருகல்தான் என்பது மிக மிகத் தெளிவாகின்றது.