83:6621 சத்தியங்களும் நேர்திக்கடன்களும்

பாடம் : 1 அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவ தில்லை. ஆயினும், நீங்கள் உறுதிப்பாட்டுடன் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற் கான குற்றப் பரிகாரம் (இது தான் ): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால், (இவற்றில் எதற்கும்) சக்தி பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்துவிட்டால் இது தான் அவற்றுக்குரிய குற்றப் பரிகாரமாகும். எனவே, உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள். இவ்வாறு தன்னுடைய சட்டத் திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்து வோராய் திகழக்கூடும் என்பதற்காக! (5:89) 
6621. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் சத்தியத்தை முறித்ததற்காக பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும் வரை (தாம் செய்த) எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்துவந்தார்கள். மேலும் அவர்கள், ‘நான் ஒரு சத்தியத்தைச் செய்து, அதன்பின்னர் (அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் நன்மை எதுவோ அதையே செய்வேன். சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தையும் செய்துவிடுவேன்’ என்றார்கள்.2 
Book : 83