80:6306 பிரார்த்தனைகள்

பாடம் : 2 பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். அவன் செல்வங்களையும், புதல்வர்களையும் அளித்து உங்களுக்கு உதவி செய்வான்; இன்னும்,உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து) ஓடுமாறு செய்வான். (71:10-12) அல்லாஹ் கூறுகின்றான்: (இறையச்சம் உடையோரான) அவர்கள் (பிறர் விஷயத்தில்) ஏதேனும் ஒரு குற்றம் புரிந்துவிட்டாலோ,தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ (அந்த நிமிடமே மனம் வருந்தி) அல்லாஹ்வை நினைத்துத் தம் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரு வார்கள். அல்லாஹ்வையன்றி பாவங்களை மன்னிப்பவர் யார்? இன்னும் அவர்கள் அறிந்து கொண்டே, தாம் செய்த(த)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (3:135) 
6306. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) 
இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். 
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார். 
Book : 80