72:5478 (உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்

பாடம் : 4 வில்லால் வேட்டையாடுவது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்துவிட்டால் துண்டான உறுப்பைச் சாப்பிடாதீர்கள்! உட-ன் மற்ற பகுதிகளைச் சாப்பிடுங்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், நீங்கள் வேட்டைப் பிராணியின் கழுத்தையோ அதன் நடுப் பகுதியையோ தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள் என்றார்கள். ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு (அவர் வேட்டையாடச் சென்ற காட்டு)க் கழுதை ஒன்று அடங்க மறுத்தது. ஆகவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்) அவர்களால் இயன்ற முறையில் அதைத் தாக்கும்படி கட்டளையிட்டு, அதிலிருந்து (துண்டாகி) விழுவதை விட்டுவிடுங்கள். (மற்றதை) உண்ணுங்கள் என்று சொன்னார்கள். 
5478. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார் 
நான், ‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்’ என்று கூறினார்கள். 
Book : 72