69:5354 (குடும்பச்) செலவுகள்

5354. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது„
நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)? என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற்கென்றால் நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்) அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும்., வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள். 
Book :69