59:3191 படைப்பின் ஆரம்பம்

3191. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார். 
நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!’ என்று கூறினார்கள். அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்’ என்று பதில் கூறினார். பிறகு, ‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்’ என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டது’ என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! ‘நான் அதை அப்படியேவிட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)’ என்று நான் ஆசைப்பட்டேன். 
Book :59