58:3159 “ஜிஸ்யா“ காப்புவரி ஒப்பந்தமும்

3159. பக்ரு இப்னு அப்தில்லாஹ் அல் முஸனீ(ரஹ்) மற்றும் ஸியாத் இப்னு ஜுபைர் இப்னி ஹய்யா(ரஹ்) ஆகிய இருவரும் அறிவித்தார்கள். 
உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தில்) இணைவைப்போருடன் போர் புரிய மக்களைப் பெரும்பெரும் நகரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது (‘ருஸ்தும்’ என்கிற பாரசீகத் தளபதியான) ‘ஹுர்முஸான்’ இஸ்லாத்தை ஏற்றார். உமர்(ரலி) ஹுர்முஸான்(ரஹ்) அவர்களிடம், ‘நான் என்னுடைய இந்தப் (புனிதப்) போர்களில் உங்களிடம் தான் ஆலோசனை கேட்கப் போகிறேன்’ என்றார்கள். அதற்கு அவர், ‘சரி, நீங்கள் போரிட விரும்பும் நாடுகளின் நிலையும் அதிலுள்ள எதிரிகளின் நிலையும் ஒரு தலையும் இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் கொண்ட ஒரு பறவையின் நிலை போன்றதாகும். (அதன்) இரண்டு சிறகுகளில் ஒன்று ஒடிக்கப்பட்டு விடுமாயின், கால்கள் இரண்டும் தலையும் (மீதியுள்ள) ஒரு சிறகின் உதவியால் எழுந்து விடும். மற்றொரு சிறகும் ஒடிக்கப்பட்டு விடுமாயின், இரண்டு கால்களும் தலையும் (மீண்டும்) எழும். தலையே நொறுக்கப்பட்டால் இரண்டு கால்களும், இரண்டு சிறகுகளும், தலையும் போய்விடும். (சாசானியப் பேரரசனான) கிஸ்ரா (குஸ்ரூ) தான் தலை. சீசர் ஒரு சிறகும் பாரசீகர்கள் மற்றொரு சிறகும் ஆவர். எனவே, கிஸ்ராவை நோக்கிப் புறப்படும்படி முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுங்கள்’ என்று (ஆலோசனை) கூறினார். 
அறிவிப்பாளர்கள் பக்ரு இப்னு அப்தில்லாஹ்(ரஹ்), ஸியாத் இப்னு ஜுபைர்(ரஹ்) ஆகிய இருவரும் சேர்ந்து, ஜுபைர் இப்னு ஹய்யா(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாவது. 
உடனே, உமர்(ரலி) எங்களை (போருக்குப் புறப்படும்படி) அழைத்து, நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) அவர்களை எங்களுக்குத் தலைவராக்கி (அனுப்பி)னார்கள். இறுதியில், நாங்கள் எதிரியின் பூமியில் (ஈரானிலுள்ள நஹாவந்தில்) இருந்தபோது எங்களைத் தாக்கிட கிஸ்ராவின் தளபதி நாற்பதாயிரம் பேர் கொண்ட படையுடன் வந்தான். (அவர்களின்) மொழி பெயர்ப்பாளர் எழுந்து, ‘உங்களில் ஒருவர் பேசட்டும்’ என்று சொல்ல, முகீரா இப்னு ஷுஅபா(ரலி), ‘நீ விரும்பியதைப் பற்றி கேள்’ என்றார்கள். அந்த மொழி பெயர்ப்பாளர், ‘நீங்கள் யார்? (எதற்காக வந்திருக்கிறீர்கள்?)’ என்று கேட்டதற்கு முகீரா(ரலி), ‘நாங்கள் அரபு மக்கள். நாங்கள் பசியின் காரணத்தால் (காய்கள், பழங்களின்) தோலையும் கொட்டையையும் சப்பித் தின்று கொண்டிருந்தோம்; முடியையும் கம்பளியையும் அணிந்து கொண்டிருந்தோம். இந்நிலையில் தான், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி – அவன் புகழ் உயர்ந்தது; அவன் மகத்துவம் தெளிவானது – (அல்லாஹ்) எங்களிலிந்தே ஒரு நபியை எங்களிடம் அனுப்பினான். அவரின் தாய், தந்தையை நாங்கள் (நன்கு) அறிவோம். எங்கள் நபியும், எங்கள் இறைவனின் தூதருமான அவர் உங்களுடன் நாங்கள் போரிட வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிட்டார். ‘ஒன்று, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வழிபட வேண்டும்; அல்லது நீங்கள் ‘ஜிஸ்யா’ வரி செலுத்த வேண்டும். (இதற்காக நாங்கள் போராடி) இந்தப் போராட்டத்தில் எங்களில் எவரேனும் கொல்லப்பட்டால், அவர் (இதற்கு முன்) ஒருபோதும் கண்டிராத இன்பமயமான சொர்க்கத்திற்குச் செல்வார்; (கொல்லப்படாமல் வெற்றி வாகை சூடி) எங்களில் ஒருவர் உயிர் வாழ்ந்தால் உங்கள் பிடரிகளை அவர் உடைமையாக்கிக் கொள்வார்’ என்று எங்கள் இறைவன் தெரிவித்த தூதுச் செய்தியை எங்கள் நபி எங்களுக்கு அறிவித்தார்கள்’ என்றார்கள். 
Book :58