50:2565 முகாதப்

பாடம்: 5 முகாத்தப், என்னை வாங்கி விடுதலை செய்து விடு என்று கூற, அவ்வாறே அவனை ஒருவர் வாங்கினால் (செல்லும்). 
2565. அபூ அய்மன்(ரஹ்)அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்து விட்டார். பிறகு, அவரது மக்கள் எனக்கு எஜமானர்கள் ஆனார்கள். மேலும், அபூ அம்ருடைய மகனுக்கு என்னை அவர்கள் விற்றார்கள். அப்போது உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள் என்று கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். பரீரா, என்னிடம் (தனக்கு) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையில் வந்திருந்தார். என்னை வாங்கி விடுதலை செய்து விடுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். நான், சரி என்று சொன்னேன். அதற்கு அவர், எஜமானர்கள் தங்களுக்கே (எனது) வாரிசுரிமை வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் என்னை விற்க மாட்டார்கள் என்று கூறினார். அதற்கு நான், அப்படியென்றால் எனக்கு அது (உன்னை வாங்கி விடுதலை செய்வது) தேவையற்றது என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேள்விப்பட்டார்கள். அல்லது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இது பற்றிக் கேட்க, நான் பரீரா என்னிடம் கூறியதைச் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவளை வாங்கி விடுதலை செய்து விடு. அவளது எஜமானர்கள் தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும் (அது செல்லப் போவதில்லை) என்று கூறினார்கள். ஆகவே, நான் பரீராவை வாங்கி விடுதலை செய்து விட்டேன். (அப்போதும்) அவரது எஜமானர்கள் (அவரது) வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும், அவர்கள் (அடிமையின் எஜமானர்கள்) நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று கூறினார்கள். 
Book : 50