38:2287 ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)

பாடம் : 1 ஹவாலாவை ஏற்றுக் கொண்டவர் பிறகு மாறலாமா? கடன் யார் பெயருக்கு மாற்றப்பட்டதோ அவர் அவ்விதம் மாற்றப்பட்ட நாளில் செல்வந்தராக இருந்திருந்தால் (பின்னர் அவர் திவாலாகிவிட்டாலும்) அந்த (ஹவாலா) ஒப்பந்தம் செல்லும்! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும் கூறுகின்றனர். இரண்டு பங்காளிகளுக்கிடையிலோ வாரிசுகளுக்கிடையிலோ சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்துக் கொண்டபின், இவரது இருப்புக்கோ அவரது கடனுக்கோ இழப்பு ஏற்பட்டால் அதற்கு அவரவரே பொறுப்பு! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 
2287. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
‘செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!’ 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
Book : 38