30:1895 நோன்பு

பாடம் : 3 நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரமாகும். 
1895. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். 
‘ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?’ என்று உமர்(ரலி) கேட்டார். ‘நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! ‘ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!’ என்றேன். அதற்கு உமர்(ரலி), ‘நான் (சோதனை என்னும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை. கடலலை போல் தொடர்ந்து வரக்கூடிய (குழப்பம் என்னும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்!’ என்றார்கள். அதற்கு நான் ‘உமக்கும் அதற்கும் இடையே மூடப்பட்ட வாசல் இருக்கிறது!’ என்று கூறினேன். ‘அது திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?’ என்று உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘உடைக்கப்படும்!’ என்று பதிலளித்தேன். ‘அப்படியானால் மறுமை நாள் வரை அது மூடப்படாது!’ என்று உமர்(ரலி) கூறினார். 
‘அந்த வாசல் யார் என்று உமர்(ரலி) அறிந்திருந்தாரா என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேளுங்கள்!’ என்று மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம்! அவ்வாறே அவர் கேட்டார்! அதற்கு ஹுதைஃபா(ரலி) ‘ஆம்! நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவதைப் போல் அதை அவர் அறிந்திருந்தார்!’ என்று பதிலளித்தார்!’ என அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார். 
Book : 30