27:1808 (ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்

1808.  நாஃபிவு அறிவித்தார். 
இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை (ஹஜ்ஜாஜின்) ராணுவம் முற்றுகையிட்டிருந்த நாள்களில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (அவரின் மக்களான) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும், ‘நீங்கள் இவ்வாண்டு ஹஜ்ஜு செய்யாதிருப்பது உங்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காது; நீங்கள் கஅபாவிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்!’ என்றனர். அதற்கு இப்னு உமர்(ரலி) ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் (நபி(ஸல்) அவர்களைத்) தடுத்தனர்; நபி(ஸல்) தம் பலிப்பிராணியை அறுத்து (பலியிட்டுவிட்டு)த் தலையை மழித்தார்கள்: நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன். கஅபாவிற்குச் செல்ல வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன்! அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்தது போல் நானும் செய்வேன்!’ என்றார்கள். பிறகு, துல்ஹுலைஃபா எனும் இடத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். பிறகு, சிறிது நேரம் நடந்துவிட்டு, ‘ஹஜ் உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானவையே! நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என் மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்!’ என்றார்கள். துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வந்து, பலியிடும்வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை. ‘மக்காவில் நுழையும் தினத்தில் (ஹஜ், உம்ராவிற்காக) ஒரேயொரு முறை வலம்வரும்வரை இஹ்ராமிலிருந்து (முழுமையாக) விடுபட முடியாது’ என்றும் கூறி வந்தார்கள். 
‘நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!’ என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவரின் மகன்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின் போது) கூறினார்!’ என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது. 
Book :27