குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா?

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா?

கேள்வி :

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா?

பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம்

பதில் :

சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 222

அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹுசைன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மடியில் இருக்கும் போது, அவர்கள் மடி மீது சிறுநீர் கழித்து விட்டார்கள்.  “வேறு ஆடையை அணிந்து கொண்டு உங்களின் இடுப்பாடையைக் கழுவுவதற்கு என்னிடம் கொடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். “பெண் குழந்தையின் சிறுநீருக்காக மட்டுமே கழுவப்பட வேண்டும்.  ஆண் குழந்தையின் சிறுநீருக்காக தண்ணீர் தெளிக்கப் பட வேண்டும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: லுபாபா பின்த் அல்ஹர்ஸ்
நூல்: அபூதாவூத் 320

குழந்தைகளின் சிறுநீருக்கே கழுவ வேண்டும் அல்லது தண்ணீர் தெளித்து விட வேண்டும் எனும் போது குழந்தைகளின் மலம் அசுத்தம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

குழந்தைகள் என்றால் எத்தனை வயது வரை என்பது குறித்து ஹதீஸ்களில் எதுவும் கூறப்படவில்லை. என்றாலும் புகாரியின் 223 மற்றும் 5693 ஆகிய ஹதீஸ்களில் “திட உணவு சாப்பிடாத ஆண் குழந்தையின் சிறுநீருக்காக நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தெளித்தார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. எனவே பால் குடிக்கும் ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் மட்டுமே தண்ணீர் தெளித்து விட வேண்டும். உணவு சாப்பிடும் குழந்தைகள் ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் கழுவ வேண்டும்.

கேள்வி – பதில் – ஏகத்துவம், மார்ச் 2005