இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா?

இறந்தவர்களை நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியுமா?

கேள்வி :

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நல்லடியாராக இருந்தால், நெருங்கிய உறவினரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாத புது மாப்பிள்ளையைப் போல் உறங்குவீராக என்று வானவர்கள் கூறுவார்கள் என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது. நெருங்கிய உறவினரைத் தவிர என்ற வாசகம், நெருங்கிய உறவினரால் எழுப்ப முடியும் என்ற கருத்தைத் தருகின்றதே? இது 46:5, 39:42, 23:99 ஆகிய வசனங்களுக்கு முரணாக உள்ளது. விளக்கவும்.

பி.எம். ஷேக் அப்துல் காதிர், மதுரை

பதில் :

அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன் 23:100)

ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் கூறுகிறது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஹதீசும் இதே கருத்தைத் தான் வலியுறுத்து கின்றது. இறந்தவர் நல்லடியாராக இருந்தால் அவர் இறுதி நாள் வரை உறங்குவார் என்று தான் அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. புது மாப்பிள்ளை எப்படி எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்குவாரோ அது போன்று நல்லடியார்கள் உறங்குவார்கள் என்பதே இதன் பொருள். அவரது நிம்மதியான உறக்கத்திற்குத் தான் புது மாப்பிள்ளையின் உறக்கம் உதாரணம் காட்டப்படுகின்றதே தவிர இறந்தவரை மாப்பிள்ளைக்கு உதாரணம் காட்டப்படவில்லை.

அப்படிப் பார்த்தால் புது மாப்பிள்ளையாக இருந்தாலும் காலையிலோ அல்லது சிறிது தாமதமாகவோ எப்படியும் சற்று நேரத்தில் விழித்து விடுவார். அதனால் இறந்தவரும் சிறிது நேரம் உறங்கி விட்டு விழித்து விடுவார் என்று பொருள் செய்ய முடியாது. அப்படிப் பொருள் செய்தால் அந்த ஹதீஸே அர்த்தமற்றதாகி விடும். எனவே நிம்மதியான உறக்கத்திற்குச் சொல்லப்பட்ட உதாரணமாகத் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி – பதில் – ஏகத்துவம், மார்ச் 2005