ஏகத்துவம் – அக்டோபர் 2019

முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் ஏன்? எதற்கு?

செப்டம்பர் 22, 2019 அன்று அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் 21வது மாநிலப் பொதுக்குழு ஈரோடு பிளாட்டினம் மஹாலில் கூடியது, அல்ஹம்துலில்லாஹ்.
மாநில பொதுக்குழுவுக்கு மேலாண்மைக் குழு தலைவர் தலைமை தாங்க வேண்டும் என்ற தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் பைலா விதியின்படி இப்பொதுக்குழு காலை 10.15 அளவில் மாநில மேலாண்மைக்குழு தலைவர் எம்.எஸ். சுலைமான் தலைமையில் துவங்கியது. அவரது துவக்க உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரல்கள் விறுவிறுப்பாகவும் உத்வேகத்துடனும் சென்றன.
முடமாகி விட்டது, முண்டமாகி விட்டது, இனி எழுந்து நடக்கவோ அடுத்த அடி நகரவோ முடியாது என்று கனவு கண்டவர்களுக்கு பொதுச் செயலாளர் வாசித்த ஆண்டறிக்கை சிம்ம சொப்பனமானது. கடந்த ஓராண்டில் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அவர் அறிக்கையாக வாசித்த போது மொத்த அரங்கமும் மலைத்துப் போனது.
அதைத் தொடர்ந்து அப்போதைய துணைப் பொதுச் செயலாளர் அப்துர் ரஹீம் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வரவு செலவு அறிக்கை ஜமாஅத்தின் நம்பகத்தன்மையை மேலும் மெருகூட்டச் செய்யும் விதத்தில் அமைந்தது.
கோடிகளை சுருட்டி விட்டார்கள், கொள்ளை அடித்து விட்டார்கள், அனாதைகளின் சொத்தை அபகரித்து விட்டார்கள், கையாடல் செய்து விட்டார்கள், கள்ளக் கணக்கு எழுதி விட்டார்கள், காஸ்ட்லி ஜமாஅத், சொகுசு ஜமாஅத், கார்ப்பரேட் சம்பளம்….
இப்படிப் பல்வேறு கதை வசனங்கள், கதறல்கள், முகநூல் முகாரி ராகங்கள், எண்ணிலடங்காத ஏராளமான குற்றச்சாட்டுகள்.
இவர்களுக்கு இறைநம்பிக்கை இருக்கின்றதா? இறந்த பின்னால் இறைவனுக்கு முன்னால் நிறுத்தப்படுவோமே என்ற அச்சமிருக்கின்றதா என்று எண்ணுமளவுக்கு இவர்களின் பொய்யான குற்றச்சாட்டுகள் இமயம் அளவுக்கு எழுந்து நின்றாலும் இது எந்த ஒரு கொள்கைச் சகோதரரின் உள்ளத்தையும் பதம் பார்க்கவில்லை. பொதுக்குழுவில் வாசிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை கொள்கைச் சகோதரர்களின் நம்பகத்தன்மையை சதமாக்கியது. இறுதியில், எதிரிகள் வீசிய விஷக் கணைகளைப் பற்றி அப்துர்ரஹீம் அவர்கள் விவரிக்கையில் பொதுக்குழு உறுப்பினர்களின் கண்களைக் குளமாக்கியது.
கொள்கைச் சகோதரர்கள் தலைமையுடன் சோதனைக் காலத்திலும் சாதனைக் காலத்திலும் கூடவே பயணிக்கின்ற பாச உணர்வையும் பந்தத்தையும் அது உறுதிப்படுத்தியது என்று சொன்னால் மிகையல்ல.
அதன்பின்னர், பொதுக்குழு அடுத்தடுத்த நிரல்களை நோக்கி நகர்ந்தது. இறுதியில், மாநிலத் தலைவரின் எதிர்கால செயல் திட்ட அறிவிப்புடன் பொதுக்குழு நிறைவடைந்தது.
ஒவ்வொரு உறுப்பினரும் வணக்க ரீதியாகக் குறைந்தபட்சம் ஐந்தம்சங்களைத் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இயன்றவரை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவை வருமாறு:
தஹஜ்ஜத் தொழுகை
சஹ்ர் நேரங்கள் பாவமன்னிப்புத் தேடுதல்.
ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுதல்.
கடமையான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகளைப் பேணித் தொழுதல்.
இரவில் படுக்கும் போது ஓதவேண்டிய துஆக்கள்.
இவை ஐந்தையும் ஒவ்வொரு உறுப்பினரும் கடைப்பிடித்து அமல்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
எதிர்கால செயல் ட்டங்களைப் பற்றி அவர் குறிப்பிடுகின்ற போது, இன்றைய மோடியின் ஆட்சி ஃபிர்அவ்னுடைய ஆட்சியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
ஃபிர்அவ்ன் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போது அவர்களை மீட்கும் பணியில் மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகிய நபிமார்கள் ஈடுபட்டார்கள். அந்த பாணியில், அந்தப் பணியில் நமது ஜமாஅத் களமிறங்க வேண்டும்.
இன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமை பல்வேறு வழிகளில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே அதை மனதில் கொண்டு, மையமாகக் கொண்டு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூலை 7, 2020 அன்று முஸ்லிம்களின் வாழ்வுரிமை மீட்புப் போராட்டத்தை நமது ஜமாஅத் நடத்தவிருக்கின்றது என்று அறிவித்தது தான் தாமதம். அல்லாஹு அக்பர் என்று உற்சாகத்துடனும் உணர்ச்சிப்பெருக்கோடும் பொதுக்குழுவின் அரங்கமே எதிரொலித்தது. அனைவரின் உள்ளங்களிலும் அந்த அறிவிப்பு தீயாகப் பற்றிக்கொண்டது.
வாழ்வுரிமை மீட்புப் போராட்டம் என்பது ஏதோ ஒரேயொரு உரிமை பறிப்பைக் கொண்ட ஒற்றைக் கோரிக்கையின் ஒரு வரி முழக்கமல்ல. நம்மிடமிருந்து இதுவரை பறிக்கப்பட்ட இனியும் பறிக்க வேண்டும் என்று சங் பரிவாரங்கள் திட்டமிட்டிருக்கின்ற ஒருங்கிணைந்த வாழ்வுரிமைகளின் ஒட்டுமொத்தக் கோரிக்கை முழக்கம் என்பதை அவரது உரை எடுத்துக் காட்டியது.
1. மாட்டிறைச்சியின் பெயரால் ஏராளமான முஸ்லிம்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தற்போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுமாறு முஸ்லிம்களை வற்புறுத்தி, சொல்ல மறுப்பவர்கள் அடித்தே கொலை செய்யப்படுகின்றனர். அல்லது கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இந்தக் கொலைகார, பயங்கரவாதக் கும்பலைத் தண்டிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருக்கின்றன. ஏகத்துவக் கொள்கையைத் தாங்கிய முஸ்லிமாக வாழும் உரிமை இந்த நாட்டில் கேள்விக்குறியாகியுள்ளது என்பதை விவரிக்க இதற்கு மேல் ஆதாரம் தேவையில்லை. எனவே, இந்தக் கொலைகாரக்¢ கூட்டத்தை சட்டத்தின் முன் நிறுத்தி, முஸ்லிம்களின் வாழ்வுரிமையை உறுதி செய்திட இந்தப் போராட்டம் அவசியமாகின்றது.
2. இன்று அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் 20 லட்ச மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளனர். இவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள்.
எல்லையோர மாநிலமான அஸ்ஸாமில் தான் இந்தக் கொடுமை என்றால் பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற எந்த நாட்டையும் எல்லையாகக் கொண்டிராத மாநிலங்களான உ.பி, ஹரியானா, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் இந்தத் திட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன. பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்படும் அதிமுக இதைத் தமிழகத்தில் அறிவித்தாலும் ஆச்சரியமில்லை.
இந்த தேசியக் குடியுரிமைப் பதிவேடு அறிவிப்புகள் அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான். முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிப்பது தான் இதன் நோக்கம். எனவே அது தொடர்பான விழிப்புணர்வை முஸ்லிம்களிடம் ஏற்படுத்த வேண்டும்
3. “எனது தொழுகை, எனது வணக்க வழிபாடு, எனது வாழ்வு, எனது மரணம் ஆகிய அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை. அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதன்மையானவன்’’ என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6:162, 163)
ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்வு, வணக்க வழிபாடு, மரணம் எல்லாம் அல்லாஹ்வுக்காகவே என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அதாவது ஷரீஅத் சட்டம் நமது வாழ்வுரிமை என்று உரத்துச் சொல்கின்றது.
ஷரீஅத்தை நம்மை விட்டுப் பிரித்து விட்டால் நாம் உயிரல்லாத வெறும் சடலம்தான். மோடி அரசு முத்தலாக் தடைச் சட்டத்தின் மூலம் நமது வாழ்வுரிமையை நம்மை விட்டும் பறித்திருக்கின்றது. ஒரே அமர்வில் முத்தலாக் கூடாது என்பது தனி விஷயம். ஆனால் அதைத் தடை செய்வதாகக் கூறி முஸ்லிம்களைச் சிறையில் அடைப்பதுடன், ஷரீஅத்தைப் பின்பற்றும் உரிமையை மோடி அரசாங்கம் பறிக்கின்றது. அதனால் அதை மீட்பது நமது கடமையாகும்.
4. இந்தியாவில் உள்ள சிக்கிம், மிசோராம், நாகலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பல்வேறு வகையான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் தற்போது மோடி அரசு, காஷ்மீரில் வாழும் முஸ்லிம்களைக் குறிவைத்து, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அம்மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகிய சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி, காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது.
அதுமட்டுமின்றி காஷ்மீர் மாநிலத்தின் முக்கியத் தலைவர்களை வீட்டுக்காவலில் சிறை வைப்பதும், காஷ்மீர் மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலை போல நடத்துவதும், தங்கள் உரிமை கோரிப் போராடும் மக்களை பெல்லட் குண்டுகளைக் கொண்டு சுடுவதும் போன்ற அடக்குமுறைகள் நடைபெற்று வருகின்றன.
காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதே மத்திய பாஜக அரசு நடத்தும் இந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்குக் காரணம். எனவே, காஷ்மீர் மக்களின் உரிமைக்காகப் போராடுவதும் நமது வாழ்வுரிமை மீட்பில் அடங்கும்.
5. என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமைக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே தேசியப் புலனாய்வு முகமையின் இதுவரையிலான செயல்பாடுகள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கடும் பாரபட்சத்துடன் செயல்படுவதை நிரூபித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களைக் கேள்வி கணக்கின்றி கைது செய்ய இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தடா, பொடா போன்று இச்சட்டத்தையும் முஸ்லிம்களைப் பழிவாங்கவே பாஜக அரசு பயன்படுத்தி வருகின்றது. என்.ஐ.ஏ மூலம் பெரும்பாலான வழக்குகளில் அப்பாவிகள் தான் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதே சமயம், சங் பரிவார பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. விசாரிக்கும் போது மட்டும் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். குறிப்பாக மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பிரக்யா சிங் தாகூர் என்ற பயங்கரவாதியை விடுதலை செய்வதற்கு என்.ஐ.ஏ. கடும் முயற்சிகளை மேற்கொண்டது. நடந்த குற்றத்தில் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்து அவர் மீதான வழக்கை முடித்து விடக் கோரியது.
இவ்வாறு பாரபட்சத்துடன் நடந்து வரும் என்.ஐ.ஏ. அமைப்புக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளதன் மூலம் முஸ்லிம்களைப் பழிவாங்குவது மட்டுமே மோடி அரசின் நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது. எனவே இதை எதிர்த்துப் போராடும் கடமை நமக்கு உள்ளது.
6. பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் இதுவரை பாஜக மற்றும் சங் பரிவாரங்கள் ‘மத நம்பிக்கையில் நீதிமன்றங்கள் தலையிட அனுமதிக்க மாட்டோம்’ என்று ஒற்றைக் கோரிக்கையை ஒரே குரலில் முழங்கிக் கொண்டிருந்தன. இப்போது தலைகீழ் மாற்றமாக நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்போம் என்று அவை கூறி வருகின்றன. இது முஸ்லிம்களுக்குப் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு, இழந்தவனுக்கு ஒரு பங்கு, இடித்தவனுக்கு இரண்டு பங்கு என அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சங் பரிவாரங்களின் மறுபதிப்பாக அமைந்தது.
மதச்சார்பு என்பதையும் தாண்டி மதவெறி எனும் புற்று நோயின் வெளிப்பாடு என்பதை அந்தத் தீர்ப்பு பறை சாற்றியது. நீதித்துறையிலும் காவிச் சிந்தனை ஊடுறுவி விட்டது என்பதையே அது எடுத்துக் காட்டியது.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழக்கின் போங்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பாதையில் பயணிப்பதாகவே தெரிகின்றது. அதனால் பாபரி மஸ்ஜித் போன்ற இதர வழிப்பாட்டுத் தலங்களும் நமது வாழ்வுரிமை தான். எனவே அந்த வழிப்பாட்டுரிமையை மீட்பதும் இந்த போராட்டத்தின் ஓர் அம்சமாகும்.
7. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் அனைவரும், ‘நமக்கு மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. இனி மயானத்தில் தான் இட ஒதுக்கீடு கிடைக்கும்’ என்ற விரக்தி நிலைக்குச் சென்று விட்டனர்.
நாம் இந்த மண்ணின் மைந்தர்கள். நாடு விடுதலை அடைவதற்கு முன்பு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது. நாடு விடுதலை அடைந்ததும் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது. இழந்த உரிமையை மீட்டு, சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் படி மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெறுவது நாம் நடத்துகின்ற வாழ்வுரிமை மீட்புப் போராட்டத்தின் மற்றொரு கோரிக்கையாகும்.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் தான் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மீட்புப் போராட்டம். இதற்கான வியூகத்தை வகுக்கவும் வடிவமைக்கவும் இன்ஷா அல்லாஹ் விரைவில் மாநில செயற்குழு கூடவிருக்கின்றது.
தவ்ஹீது ஜமாஅத்தின் பாதை வெறும் பூந்தோட்டம் அல்ல! அது மக்களுக்காகப் போராடும் போராட்டக்களம் என்பதை நிலைநிறுத்தும் விதமாக வாழ்வுரிமை மீட்புப் போராட்டக்களத்தை நோக்கிப் புறப்படுவோமாக! இந்தப் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக!

உரிமைகளை உரிய முறையில் வழங்குவோம்
எம். முஹமம்து சலீம் M.I.Sc.

பிறரிடம் இருந்து தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைப் பெறுவதில் முனைப்பாக இருக்கும் பல பேர், அவர்கள் அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைக் கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்.
இவ்வாறு சக மனிதர்களுக்குத் தர வேண்டிய உரிமையை நிறைவேற்றாமல் புறக்கணிப்பது பெரும்பாவம் என்று எச்சரித்த நபியவர்கள், இந்த விஷயத்தில் எப்போதும் சரியாக நடந்து கொண்டார்கள். எந்த வகையிலும் பிறருடைய உரிமையைப் பறிக்கவும் இல்லை; பாழ்படுத்தவும் இல்லை.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “(அவரை தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’’ என்று கூறினார்கள். நபித் தோழர்கள், “அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது’’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2390)
எப்போதும் நியாயமாக நடக்கும் நபியவர்கள் தமது கடனைத் திருப்பித் தராமல் இருக்கப் போவதில்லை. உரிய நேரத்தில் கண்டிப்பாகக் கொடுத்து விடுவார்கள். இது புரியாமல் கடன் கொடுத்தவர் நபியிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.
தன்னிடம் முறைதவறி நடந்தவரைத் தண்டிக்காமல் பொறுமையாக இருந்தார்கள். அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கடன் கொடுத்தவருக்கு அதைக் கேட்கும் உரிமையும் உள்ளது என்று சொல்லி, சிறந்த முறையில் கடனை நிறைவேற்றினார்கள். இதே போன்று இன்னொரு சம்பவத்தைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதை அருந்திவிட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர்(ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, ‘உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, ‘(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப் பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்’ என்றார்கள்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2352)
இந்த சம்பவத்தை நன்கு கவனியுங்கள். இடது புறத்தில் இருப்பவர் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள். தமது உடலாலும் உடமைகளாலும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு பக்கபலமாகத் துணை நின்ற பிரபலமான நபித்தோழர். வலது பக்கம் இருப்பவர் இளைஞர் ஒருவர்.
பொதுவாக சபையில் பரிமாறும் போது, விநியோகிக்கும் போது வலது பக்கம் இருப்பவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். அது அவர்களுக்குரிய உரிமை என்று நபிகளார் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
அந்த உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில் அண்ணலார் நடந்து கொள்ளவில்லை. தமது உற்ற தோழருக்காக வழக்கத்திற்கு மாற்றம் செய்யவில்லை. வலது பக்கம் இருப்பவருக்கான உரிமையைக் கொடுத்து விடுகிறார்கள்.
பலரும் கலந்து வாழ்கிற உலகில் சிலர் கட்டளையிடும் இடத்தில் இருப்பார்கள். சிலர் கட்டுப்படும் இடத்தில் இருப்பார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆணையிடும் போது அவருக்குக் கீழ் இருப்பவர்கள் அதை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.
கைகட்டி வேலை செய்கிற, கைநீட்டி சம்பளம் வாங்குகிற இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு தர வேண்டிய உரிமைகளைத் தராமல் விட்டுவிடக் கூடாது. இந்தத் தெளிவு இல்லாத காரணமாக பல இடங்களில் பிரச்சனைகள் வெடிக்கின்றன. இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓட விடு’ என்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள்.
(இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்ற பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்’ என்று கூறினார்கள்.
இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?’ என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது.
அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
(என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), ‘இறைவன் மீதாணையாக! ‘(நபியே!) உங்களுடைய இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தனைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 04:65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி)
நூல்: புகாரி (2359) (2362)
எவருடைய தோட்டம் முதலில் இருக்கிறதோ அவர் கால்வாய் நீரைத் தமக்குத் தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு அடுத்த தோட்டத்திற்குத் திறந்து விட்டு விட வேண்டும். இது அன்றைய காலத்தில் இருந்த பொது விதி.
ஆனால், முதல் தோட்டக்காரர் தேவையான தண்ணீரைப் பிடிப்பதற்கு முன்னரே இரண்டாவது தோட்டக்காரர் தண்ணீரைத் திறந்துவிடும்படி சண்டை போடுகிறார். நீண்ட சச்சரவுக்குப் பிறகு நபியிடம் சென்று தீர்ப்பு கேட்கிறார்கள்.
பொது வழக்கின் படி, தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு மடையைத் திறந்து விடுமாறு முதல் தோட்டக்காரருக்கு நபியவர்கள் கட்டளை இடுகிறார்கள். அடுத்தவரோ அந்த நியாயமான தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த போது அவரைக் கண்டித்து அல்லாஹ் வசனத்தை அருளினான்.
இதிலுள்ள பாடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் தண்ணீர் பெறும் உரிமை யாருக்கு இருக்கிறது என்றுதான் கவனித்தார்களே தவிர, உறவு முறையை அல்ல.
இதைப் புரிந்து கொண்டு எல்லோரும் எல்லா விஷயத்திலும் பிறருக்கான உரிமையை அவசியம் தந்து விட வேண்டும். இதன்படி பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையையும் வழங்க வேண்டும். இதோ நபிகளாரைப் பாருங்கள்.
கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்து வைத்த) அந்தத் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)
நூல்: புகாரி (6945)
திருமணத்திற்காக ஆணிடம் சம்மதம் கேட்பது போன்று பெண்ணிடமும் சம்மதம் கேட்டறிய வேண்டும். வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையை ஆணுக்கு அளிப்பது போன்று பெண்ணுக்கும் அளித்தார்கள், நபியவர்கள்.
பெண்ணுக்குரிய இந்த உரிமையோ பல சித்தாந்தங்களில் இன்றளவும் மறுக்கப்படுகிறது. ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெண்களுக்கு வழங்கியது போன்று விவாகரத்து செய்து கொள்ளவும் உரிமை வழங்கினார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் இணக்கமே இல்லாத காரணமாக, இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டால் பெரும்பாலான மதங்களில் விவாகரத்து செய்யும் உரிமையை ஆணுக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.
ஆனால், அந்த விவாகரத்து உரிமையைப் பெண்ணுக்கும் அல்லாஹ்வின் தூதர் கொடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால், இதைத் தமது குடும்ப விஷயத்தில் செயல்படுத்திக் காட்டினார்கள்.
குடும்பத்தாரின் தேவைக்குப் போக மீதமுள்ள செல்வத்தை நபியவர்கள் நல்வழியில் செல்வழித்து விடுவார்கள். அவசியம் இன்ல்லாமல் எதையும் சேர்த்து வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆரம்பத்தில், தூதரின் எளிமையைப் புரிந்து கொள்ளாமல் அவரது மனைவிமார்கள் அடிக்கடி அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள்.
அப்போது தான் சேர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து விடுவது என்று இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுமாறு தமது மனைவியருக்கு நபியவர்கள் உரிமை வழங்கினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிட்டப்பட்ட போது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) ‘நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்’ என்று கூறினார்கள். என் பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப் போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களின் வாழ்க்கைக்க உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்து வைத்துள்ளான்’ எனும் (திருக்குர்ஆன் 33:28) வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்’ என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (4786)
அல்லாஹ்வின் தூதருடைய மனைவியாக இருப்பதால் ஈருலகிலும் கிடைக்கும் சிறப்பை மனதில் கொண்டு சேர்ந்து வாழ்வதையே தேர்வு செய்தார்கள். அதன்பிறகு முன்பைக் காட்டிலும் எல்லா விஷயத்திலும் நபிகளாரைப் புரிந்து நடந்து கொண்டார்கள்.
மணம் செய்யும் உரிமை, விவாகரத்து உரிமை மட்டுமல்ல, சம்பாதிக்கும் உரிமை, சொத்துரிமை என்று ஆண்களுக்கு அளித்தது போன்று பெண்களுக்கும் பல உரிமைகளை நபிகளார் தந்திருக்கிறார்கள்.
குடும்பத்திலும் சமூகத்திலும் பிறருக்குத் தர வேண்டிய உரிமையை முழுமையாகக் கொடுத்ததால் தான் அவரது ஆட்சிக்குக் கீழ் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
இவ்வாறு மற்றவருக்குத் தர வேண்டிய உரிமையை சரியாக வழங்காவிட்டால் பிரச்சனைகள் தலைதூக்கும். இதுதான் இன்று பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
மக்களுக்குப் பல உரிமைகள் இருப்பதாக சட்டப் புத்தகத்தில் மட்டும் எழுதி வைத்துக் கொண்டு நடைமுறையில் பின்பற்றுவது கிடையாது.
குறிப்பாக, சிறுபான்மை மக்கள், பிந்தங்கிய மக்களுக்குத் தர வேண்டிய உரிமைகளை மறுக்கிறார்கள். இதனால் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராகப் போரட்டங்கள், கலவரங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய மார்க்கமும், அதைப் போதிக்க வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவரவருக்குரிய உரிமைகளை உரிய விதத்தில் வழங்கியதால் குறுகிய காலத்திலேயே உலகம் போற்றும் உன்னத ஆட்சியைத் தர முடிந்தது.

அருளா? சோதனையா?
சபீர் அலி

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த உலகத்தில் கடத்துவதற்கு இன்றியமையாத விஷயங்களில் ஒன்று பொருளாதாரம்.
பொருளாதாரம் இருந்தால் தான் நமது வாழ்க்கையின் அங்கங்களாக இருக்கும் பல காரியங்களை நிறைவேற்ற முடியும்.
மார்க்கத்தின் பல கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பொருளாதாரம் ஒரு நிபந்தனையாக உள்ளது.
மலை போல் நன்மையைப் பெற்றுத்தரும் உபரியான காரியங்களைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவைப்படுகிறது.
மேலும், நமக்கான மற்றும் நமது குடும்பத்திற்கான உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, நமது மானங்களை மறைத்துக் கொள்ள ஆடைகளுக்கு என எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கும் பொருளாதாரம்தான் அடிப்படைத் தேவையாக தற்போது இருந்து வருகிறது.
அத்தகைய பொருளாதாரத்தை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனின் முயற்சியும் செலவிடப்பட்டு வருகிறது.
அறிவாற்றல், உடலாற்றல் என அனைத்து ஆற்றலையும் பொருளாதாரம் என்ற ஒற்றை இலக்கை நோக்கி மனிதம் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவரின் உழைப்பும் அதற்கான பிரதிபலனும் வித்தியாசப்பட்டாலும் அடிப்படை பொருளாதாரம் என்ற ஒற்றை வார்த்தைதான்.
இத்தகைய பொருளாதாரத்தை இஸ்லாம் இரண்டு நேரெதிர் நிலைபாடுகளின் கீழ் முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
ஒன்று, பொருளாதாரம் இறைவனின் அருள்; மற்றொன்று, பொருளாதாரம் சோதனை என்பதுமே அந்த இரு நேரெதிர் நிலைபாடுகள்.
பொருளாதாரம் ஓர் அருள்
பொருளாதாரம் என்பது இறைவனிடமிருந்து கிடைக்கும் அருள் என்று ஏராளமான குர்ஆன் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டியது போன்று அவனை நினைவு கூருங்கள். நீங்கள் இதற்கு முன்பு வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
அல்குர்ஆன் 2:198
இந்த வசனத்தில் பொருளாதாரத்தைத் தேடுவதைப் பற்றிப் பேசும் போது ‘அருளைத் தேடுவது’ என்று கூறி செல்வம் அல்லாஹ்வின் அருள் என்று இறைவன் எடுத்துரைக்கிறான்.
அவன் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கிய போது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அவர்கள் புறக்கணித்து, திரும்பிச் சென்றனர்.
அல்குர்ஆன் 9:76
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் திரிந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். அல்லாஹ்வை அதிகமாக நினையுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 62:10
இந்த அனைத்து வசனங்களிலும் பொருளாதாரத்தை அல்லாஹ் தனது அருள் என்றே குறிப்பிடுகிறான்.
இதே கருத்தில் 3:174, 3:180, 4:32, 37, 73, 9:28, 59, 74, 75, 16:14, 17:12, 66, 24:22, 32, 33, 28:73, 30:23, 46, 35:12, 45: 12, 73:20 ஆகிய இடங்களிலும் பொருளாதாரத்தை அருள் என்றே குறிப்பிடுகிறான்.
பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருள்தான். தான் நாடியேருக்கு அதை அவன் அதிகமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடன் வழங்குகிறான் என்று ஒரு புறத்தில் பொருளாதாரத்தை நல்லதொரு விஷயமாக இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது.
பொருளாதாரம் ஒரு சோதனை
மேலுள்ள வசனங்களுக்கு நேரெதிராக, பொருளாதாரம் ஒரு சோதனை என்று கீழ்காணும் வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்.
உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் சோதனை என்பதையும் அல்லாஹ்விடமே மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன் 8:28
உங்கள் செல்வங்களும் பிள்ளைகளும் சோதனையே! அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.
அல்குர்ஆன் 64:15
இந்த வசனங்களில் செல்வத்தை சோதனை என்று இறைவன் அறிமுகப்படுத்துகிறான்.
இவ்வாறு, பொருளாதாரத்தை ஒருபுறம் அருள் என்றும், மறுபுறம் சோதனை என்றும் இரு நேரெதிர் நிலைபாடுகளில் இறைவன் தெரிக்கிறான்.
பொருளாதாரம் எப்போது அருளாக இருக்கும்? எப்போது சோதனையாக இருக்கும்? அது எவ்வளவு இருந்தால் அருள்? எவ்வளவு இருந்தால் சோதனை என்றெல்லாம் நமது உள்ளங்களில் தற்போது பல கேள்விகள் எழும்.
அதற்கான் விடையை அல்லாஹ்வும் அவனது தூதருமே தெளிவுபடுத்துகிறார்கள்.
பொருளாதாரம் என்பது மனிதர்களுக்குப் பெரும் கவர்ச்சியாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதை நோக்கித்தான் அவனது ஆசை, அவா அனைத்தும் விரைந்து செல்கிறது.
பெண்கள், ஆண்மக்கள், ஒன்று திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய உள்ளம் கவர்பவற்றை விரும்புவது மனிதனுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்வின் இன்பங்கள். அல்லாஹ்விடமே அழகிய தங்குமிடம் உள்ளது.
அல்குர்ஆன் 3:14
செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நற்காரியங்களே உமது இறைவனிடம் கூலியால் சிறந்ததும் ஆதரவு வைப்பதில் சிறந்ததுமாகும்.
அல்குர்ஆன் 18:46
பொருளாதாரம் மனிதனுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆக்கப்பட்டுள்ளது என்பதை மேற்படி வசனங்கள் எடுத்தரைக்கின்றன.
மனிதனின் உள்ளம் பொதுவாகவே அதிகம் ஆசைக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதிலும் கவர்ச்சியான விஷயங்கள் என்றால் அதன் ஆசையின் அளவு எப்படியிருக்கும் என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை.
அத்தகைய பொருளாதாரத்தின் மீதான மனிதனின் அளவு கடந்த ஆசை, அடங்காமலும் போதுமென்ற மனம் கொள்ளாமலும் மரணம் வரை துரத்தி வரும் என்பதை பின்வரும் செய்திகள் தெளிவுப்படுத்துகிறது.
“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (அளவுக்கு) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 6436
(செல்வத்தை) அதிகமாக்க வேண்டும் என்பது மண்ணறைகளைச் சந்திக்கும் வரை உங்களை திருப்பி விட்டது.
அல்குர்ஆன் 102:1, 2
மனிதனை விடாமல் பொருளாதாரக் கவர்ச்சியின் மோகம் துரத்திக் கொண்டேயிருக்கும் என்று இந்தச் செய்திகளிலிருந்து தெரிகிறது. நிசர்சனத்திலும் இதை உணரத்தான் செய்கிறோம்.
எவ்வளவுதான் பொருளாதாரமிருந்தாலும் அதில் போதுமென்ற மனமே பலருக்கு வருவதில்லை.
ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட தொகை தேவையிருக்கும். அதை அடைவதற்கு உழைப்பவன் அந்த இலக்கை அடைந்ததும் ஆசை போதுமாகவில்லை. அடுத்த தேவைகள் அதை விட அதிகமாகிறது. இப்படியே எவ்வளவுதான் இருந்தாலும் அவனது மனதின் தேவைகள் அதைவிட அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர குறைவதில்லை.
இத்தகைய அடங்க மறுக்கும் ஆசைகளின் பெருக்கம்தான் பொருளாதாரத்தை நமது வாழ்வின் சோதனையாக்கிவிடுகிறது.
பொருளாதாரத்தின் மீது இத்தகைய அளவுக்கதிமான கவர்ச்சியிருக்கிறது என்று சொல்லப்படுவதால் குறிப்பிட்ட அளவுதான் சம்பாதிக்க வேண்டும். அதிகம் சம்பாதிக்கக் கூடாது என்றெல்லாம் எந்தத் தடையும் இல்லை.
நாம் எவ்வளவு வேண்டுமானாலும் ஹலாலான முறையில் பொருளீட்டிக் கொள்ளலாம்.
அத்தகைய பொருளாதாரம் எனும் அருள் நம் வாழ்வில் சோதனையாக உருமாறிவிடாமல் இறைவனது நன்மையாகவே இருக்க வேண்டுமென்றால் அதற்கான வழியை அல்லாஹ் நமக்கு சொல்லித் தருகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்வின் நினைப்பை விட்டு உங்களை திசை திருப்பிட வேண்டாம். யார் அவ்வாறு (திசை திருப்பப்படச்) செய்கிறார்களோ அவர்களே நஷ்டவாளிகள்.
அல்குர்ஆன் 63:9
பொருளாதாரம் எனும் நன்மை இறைவனது சோதனையாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால் அது குறைவாகத்தான் இருக்க வேண்டும். அதிகமாக இருக்கக் கூடாது என்றெல்லாம் மார்க்கம் சொல்லவில்லை.
குறைவோ, அதிகமோ எவ்வளவாயினும் பொருளாதாரத்திற்காக மார்க்க நினைவை இழந்து விடாமல் இருக்கும் போதுதான் அது நன்மையாக இருக்கும்.
பொருளாதாரத்தைத் தேடுவதற்காக தொழுகையை மறக்கிறோம் எனில் அந்தப் பொருளாதாரம் நம்மை திசை திருப்பிவிட்டது.
வியாபாரத்தில் அதிக லாபத்திற்காக இறைவன் தடுத்த வியாபார முறைகளைக் கையாளுகிறோம் எனில் திசை திருப்பப்பட்டு விட்டோம் என்று பொருள்.
விற்பனைக்காகப் பொய், மோசடி, பித்தலாட்டம் செய்கிறோம் எனில் இதில் இறை நினைவில்லை.
இவ்வாறு பொருளாதாரத்தைத் தேடும் போதோ அல்லது அது வந்த பிறகோ அல்லாஹ்வை மறக்கிறோம் எனில் அந்தப் பொருளாதாரம் நிச்சயம் நன்மையாக இருக்காது.
பொருளாதாரம் எவ்வளவுதான் இருந்தாலும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
ஸகாத், ஹஜ் உட்பட பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருக்கும் கடமைகளாயினும் அதீத நன்மைகளை இறைவனிடம் பெற்றுத்தரும் உபரியான தர்மங்களாயினும் அவற்றைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
இத்தகைய மார்க்க நினைவுடன் கூடிய பொருளாதாரம்தான் இறைவனிடத்தில் நன்மையாகக் கருதப்படும். அந்த நினைவை இழந்து, பொருளாதார மோகத்தில் திளைத்துவிட்டால் அது பெரும் சோதனையாகவும் மறுமையில் நஷ்டமாகவுமே ஆகும்.
இதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகிறது.
உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்கள் குடும்பத்தாரும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், நஷ்டமாகிவிடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விரும்பும் வசிப்பிடங்களும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விடவும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விடவும், உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் அல்லாஹ்வுடைய கட்டளை வரும்வரையில் எதிர்பாருங்கள்! அல்லாஹ் பாவிகளான சமுதாயத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
அல்குர்ஆன் 9:24
நமது செல்வம், வியாபாரம், சொத்துக்கள் என அனைத்தும் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் அடுத்துதான்.
அவை எவ்வளவுதான் விரும்பத்தக்கவையாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே முதலிடம்.
அல்லாஹ்வை மறந்து, தூதரின் போதனைகளை மறந்து அவர்களுக்கு மாற்றமாக நமது பொருளாதாரம் சென்றால் அது நஷ்டத்திற்குரியதே!
எனவே, பொருளாதாரத்தின் அளவு இங்கு நன்மையென்றும் சோதனையென்றும் தீர்மானிக்கவில்லை. மாறாக, மார்க்க நினைவுதான் தீர்மானிக்கிறது.
ஒருவன் குறைவான பொருளாதாரம் ஈட்டுகிறான். அதில் இறை நினைவோ மார்க்க வரையறைகளோ பேணப்படவில்லையென்றால் இது நஷ்டத்திற்குரிய பொருளாதாரமே!
ஒருவன் அதிகம் ஈட்டினாலும் அல்லாஹ்வின் நினைவுடன் மார்க்க வரையறைகளைப் பேணி நடக்கிறான் எனில் இது நன்மைக்குரிய பொருளாதாரமே!
எனினும், பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் போது பலரின் முழுக் கவனமும் அதை நோக்கிச் செலுத்தப்பட்டு இறை நினைவை மறந்துவிடுகிற அபாயமும் இதில் இருக்கிறது.
இதைத்தான் பொருளாதாரம் தொடர்பாக இந்த நேரெதிர் நிலைபாடுகளை புரிந்து கொள்வதற்கான வழியாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
நபி (ஸல்) அவர்களும் தமது வாழ்க்கையில் இந்த அடிப்படையை நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பகலிலோ அல்லது இரவிலோ வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!’’ என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியே வரச் செய்தது’’ என்று கூறி விட்டு, “எழுங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்’’ என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை’’ என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்’’ என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3799
நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய மூவரும் பசியினால் வெளியே வந்து நடைபோடுகிறார்கள். அப்போது அன்ஸாரித் தோழரால் விருந்தொன்று வைக்கப்படுகிறது.
அந்த விருந்தில் பேரீச்சம் பழங்களும், ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டவுடன் நபி(ஸல்) அவர்களின் வார்த்தை என்னவாக இருந்தது?
தனக்குக் கிடைத்தது அற்பமோ அதிகமோ என்று பார்க்கவில்லை. இறையருள் கிடைத்ததும் இதுகுறித்தும் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்று மறுமையை நினைவுகூர்கிறார்களே அத்தகைய நினைவுதான் நமக்கும் தேவை.
எவ்வளவு பொருளாதாரம் வந்தாலும், மார்க்கத்தையும் மறுமையையும் மறந்துவிடாமல் இறை நினைவுடனும் இருந்தால் அதுவே நமக்கு நன்மையைப் பெற்றுத்தரும்.
இல்லையேல் அதில் எந்த பயனும் இருக்காது. மறுமையில் கைசேதம் தான் கிடைக்கும்.
“இவ்வுலக வாழ்க்கை என்பது விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருள் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதுமே ஆகும்’’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் இறைமறுப்பாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும், சொர்க்கத்திற்கும் முந்துங்கள்! அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே அல்லாஹ்வின் அருட்கொடை. தான் நாடியோருக்கு அதை வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
அல்குர்ஆன் 57:20, 21

தஃவா களத்தில் தளர்ந்து விடாதீர்
அஜீஸ் (இஸ்லாமியக் கல்லூரி)

மனிதர்களில் சிலர், ஒரு காரியத்தில் பலமுறை தோற்றுவிட்டால் மீண்டும் அதற்கு முயற்சி செய்யாமல் கைவிடக்கூடிய காட்சியை நம்மால் காண முடிகிறது. இது மனிதர்களிடத்தில் அறவே இருக்க கூடாத ஒரு பண்பாகும். இதற்கு நபியவர்களின் வாழ்க்கை நமக்குப் பெரும் பாடமாக உள்ளது.
நபியவர்கள் இந்த ஏகத்துவத்தை ஆரம்பத்தில் ரகசிய பிரச்சாரமாகச் செய்து வந்தார்கள். அப்போது அதை பகிரங்கப்படுத்தும் படி வேத அறிவிப்பு வந்த பிறகு அதை பகிரங்கப்படுத்தினார்கள்.
‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 26:214வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி(ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், ‘நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…’ என்று தொடங்கும் (111வது) அத்தியாயம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி 4770
இதில் அவர்கள் இஸ்லாத்தை மறுத்ததோடு மண்ணை அள்ளி நபியின் மீது எறிந்தார்கள். இதைக் கண்ட நபியவர்கள் பிரச்சாரத்தை நிறுத்தினார்களா? இல்லை மீண்டும் செய்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன்.
‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘நபியே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார். உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’ என்று சொன்னேன்.
நூல்: புகாரி 3231
இப்படி சுய நினைவு இல்லாத அளவுக்கு அவர்கள் கவலை கொண்டு, மனக்கஷ்டத்திற்கு ஆளான பிறகும் கூட நபியவர்கள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து சொல்லத்தான் செய்தார்கள்.
அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், ‘என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்’ எனக் கூறினார்கள்.
அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், ‘அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, ‘நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)’ என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்’ என்று கூறியதும், ‘இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று’ (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர்: முஸய்யப்(ரலி)
நூல்: புகாரி 1360
அவர்களுடைய சிறிய தந்தை இஸ்லாத்தை ஏற்கவில்லை. நபிகளாரின் கண் முன்னே இஸ்லாத்தை ஏற்க மறுத்துவிட்டு இறந்தார். அதனால் நபியவர்கள் வெறுத்துப் போய் பிரச்சாரத்தை விட்டு ஒதுங்கிவிடவில்லை. மீண்டும் தொடரத்தான் செய்தார்கள்.
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.
ஒருவர் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘(ஆம், உண்மைதான்.) ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்தபோது அவர்கள் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். எனவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.) நான் நபி(ஸல்) அவர்களை தம் ‘பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூ சுப்யான்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் இறைத்தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்’ என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.
நூல்: புகாரி 2864
இத்தனை நபர்கள் ஓடிய பின்பும் கூட நபியவர்கள் ஓடாமல் ஒழியாமல் தான் ஏற்ற கொள்கையை மரணிக்கும் வரையிலும் சொல்லியே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
இன்று நாம் இந்தக் கொள்கையில் நம்முடன் பயணித்த நமக்குப் பிடித்தவரோ, நம்மை நேசித்தவரோ, நம்முடன் பணி செய்தவரோ எவரேனும் வெளியே சென்று விட்டால் தஃவா பணி செய்யாமல் தளரந்து விடுகிறோம்.
ஆனால் நபியவர்கள் அப்படியல்ல. தம்முடன் போருக்கு வந்தவர்கள் பின்வாங்கினாலும் சரி! இலக்கை அடைந்தே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330
அல்லாஹு அக்பர்! மரணிக்கும் தருணத்திலும் கூட தஃவா பணியில் தளராமல் ஓயாமல், தான் பயணித்த கொள்கையை எடுத்துரைத்தார்கள்
‘போர்த்தி இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக!’ என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதிலிருந்து நபியவர்கள் கஃபன் ஆடையால் போர்த்தப்படுகின்ற வரை இந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை சலிப்பு இல்லாமல் நபியவர்கள் செய்தார்கள்.
எனவே நாமும் இந்த தஃவா பணியை சாகின்ற வரை செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

காக்கப்படும் மனித உரிமைகள்
நாஷித் அஹமத்

மத சித்தாந்தங்கள் என்றால் கடவுள் கொள்கையுடன் தங்கள் போதனையை சுருக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பரவலான புரிதலுக்கு மாற்றமாக, மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தலையிடுகின்ற, தீர்வளிக்கின்ற சித்தாந்தமாக இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே அமைந்துள்ளது.
உலக வாழ்வில் எவையெல்லாம் அனுமதிக்கப் பட்டவை என்பதை இஸ்லாம் வரையறுத்துள்ளது. என்னென்ன காரியங்களெல்லாம் தடுக்கப் பட்டவை எனவும் வரையறை செய்துள்ளது.
விபச்சாரம், வட்டி, கொலை போன்றவை பெரும்பாவங்கள் எனக் கூறுகின்ற இஸ்லாம், பிறருடைய மானம், மரியாதைக்குப் பங்கம் விளைவிப்பதையும் மிகப்பெரிய குற்றமாக, சம்பந்தப்பட்ட நபர் மன்னிக்காதவரை இறைவன் மன்னிக்க மாட்டான் என்கிற அளவிற்குப் பாரதூரமான எச்சரிக்கையுடன் கூடிய வகையில் நெறிப்படுத்துகிறது.
மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமை
இறைவனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளில் எந்த அளவிற்கு அவன் பேணுதலாக இருக்க வேண்டுமோ அதே அளவிற்கு, சக மனிதர்கள் விஷயத்திலும், அவர்களுடைய உரிமைகளைக் காக்கின்ற விஷயத்திலும் பேணுதல் காட்ட வேண்டும்.
மறுமை வெற்றி என்பது இறைவனுக்குத் தொண்டாற்றினால் மட்டுமே கிடைத்து விடாது என்பதே திருக்குர்ஆனும் அதைப் போதிக்க வந்த நபியவர்களும் உலக மாந்தர்களுக்குத் தருகின்ற நினைவூட்டலாக இருக்கிறது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (மக்களிடம்) ‘திவாலாகிப் போனவன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். அங்கு கூடியிருந்த மக்கள், ‘யாரிடம் வெள்ளிக்காசோ, பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களை பொறுத்தவரை திவாலானவர்’ என்று பதிலளித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போன ஒருவர் உண்டு. அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார். (அந்நேரத்தில்) அவர் ஒருவரை திட்டியிருப்பர்; ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார்; ஒருவரின் பொருளை (முறைகேடாக) புசித்திருப்பார்; ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளில் இருந்து சிலவற்றை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கப்படும். இன்னும் சிலவற்றை மற்றவருக்கு கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளில் இருந்து எடுத்து கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களில் இருந்து சிலவற்றை எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும் பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவர். (அவரே திவாலாகிப்போனவர்).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5037
உலகில் தவறு செய்தவரிடமிருந்து, அவரால் பாதிக்கப்பட்டவருக்கு மறுமை நாளில் நஷ்டஈடு வழங்கப்படுகிறது.
உலகில் நன்மைகளைச் செய்தவர் மறுமையில் திவாலாகி விடுகிறார். இங்கே தீமைகளைச் செய்திருந்தாலும் அவரது உரிமைகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர் அங்கே செல்வந்தராக மாறிவிடுகிறார்.
தொழுகை, நோன்பு என ஆன்மீகப் பாதையில் நெறி தவறாமல் வாழ்ந்த ஒருவன், நமது பார்வையில் சொர்க்கத்திற்குரியவன் போல் காட்சியளிக்கலாம். ஆனால், அவனால் இவ்வுலகில் சக மனிதர்களுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பின், அவற்றை இவ்வுலகிலேயே அவன் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
அல்லாமல், அந்த நிலையிலேயே அவன் மரணத்தைத் தழுவி விட்டான் எனில், அவனுடைய இறைத்தொண்டு முழுமை பெற்றதாக ஆகாது என்று இஸ்லாம் கூறுகிறது.
சக மனிதர்களின் உரிமை சார்ந்த விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியப் போக்கு என்பது சமயத்தில் நரகப் படுகுழிக்கே நம்மைத் தள்ளி விடும்.
நபிகளாரின் இறுதி எச்சரிக்கை
23 ஆண்டுகால நபித்துவ வாழ்வினை முஹம்மது நபியவர்கள் வாழ்ந்து வந்தார்கள். திருமறைக் குர்ஆனுடைய போதனைகளைத் தமது வாழ்வியல் மூலம் விளக்கிக் காட்டிய நபியவர்கள் இறுதிக் காலகட்டத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
நபிகள் நாயகத்துடன் சேர்த்து ஆயிரக் கணக்கான தோழர்களும் ஹஜ் எனும் கடமைக்காக, புனித மக்காவில் ஒன்று குழுமுகிறார்கள்.
23 ஆண்டுகளாக சிறுகச் சிறுக போதனை செய்த இஸ்லாமிய மார்க்கத்தினை சாறு பிழிந்து, அதனுடைய முக்கியமான சாராம்சங்களை மட்டும் மக்களிடம் நினைவூட்டும் பொருட்டு, தேர்வு செய்த மிக அவசியமான சட்ட திட்டங்களைத் தம் உரையில் சேர்த்துக் கொண்ட நபிகள் பெருமகனார், மக்களிடம் கூறிய அடிப்படையான விஷயம், சக மனிதர்களுடைய உரிமைகள் விஷயத்தில் பொடும்போக்காக இருந்து விடாதீர்கள் என்பது தான்.
சகோதரத்துவம்
“நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்”
அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஃ பின் ஹாரிஸ்(ரலி)
நூல்: புகாரி 4406
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5038
மனித உரிமைகள்
இந்த உலகில் அநீதி இழைத்தவன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அல்லது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அநீதியான தீர்ப்பைப் பெற்று விடலாம். ஆனால் மறுமையில் இந்த அதிகாரம், சொல்வாக்கு, செல்வாக்கு எதுவும் செல்லுபடியாகாது.
அங்கே நீதித் தராசு ஒன்று உண்டு. அது மனித நியாயங்களையும் அநியாயங்களையும் நீதமான முறையில் அளந்து காட்டி விடும்.
இது குறித்துத் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.
அல்குர்ஆன் 21:47
பிறரது உயிரும் உடமையும் புனிதம்
“நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று பல தடவை கூறினார்கள்.
நூல்: புகாரி 1739
இதுவும் இறுதி ஹஜ்ஜின் போது நபிகளார் செய்த பிரகடனமாகும்.
கிடைத்ததாலேயே ஆகுமானதாகி விடாது
நான் திருடவில்லை, யாரையும் ஏமாற்றி இந்தப் பணத்தை சம்பாதிக்கவில்லை, எனக்கு இன்னார் கொடுத்தார், நான் வாங்கிக் கொண்டேன். என்று நாம் நமக்குக் கிடைத்த ஒரு பொருளையோ பணத்தையோ ஆகுமானதாகக் கருதினால் அதைக் கூட இஸ்லாம் நுணுக்கமாக வேறுபடுத்துகிறது.
உனக்கு அந்தப் பணத்தை தந்தவர், மனம் விரும்பித் தந்தாரா அல்லது மனம் வெதும்பி,வேறு வழியின்றி தந்தாரா என்பதை வைத்து தான் அந்தப் பணம் உனக்கு ஆகுமானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்கிறது இஸ்லாம்.
மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வல் (ரலி)
நூல்: திர்மிதீ 3012, ஹாகிம் 318
அரசு அலுவலகம் ஒன்றில் ஒரு காரியத்திற்காக அதிகாரி லஞ்சம் பெறுகிறார். அவர் தந்தார், எனவே நான் வாங்கிக் கொண்டேன் என்று விளக்கம் சொல்லி விட்டால் அந்தப் பணம் அவருக்கு ஹலாலாகி விடாது.
ஏன் அந்தப் பணம் அவருக்குத் தரப்பட்டது? அவருக்கு இந்த அதிகாரி என்ன மாமன் மச்சானா? உறவா? நண்பனா? மகிழ்ச்சியுடன் தான் இதை அவருக்குத் தந்தானா?
நிச்சயமாக இல்லை.
இந்தப் பணம் உனக்கு தரப்படவில்லையெனில் அந்தக் காரியத்தை நீ செய்து கொடுக்க மாட்டாய் என்பதால் தரப்பட்டது, மனம் நொந்து தரப்பட்டது. எனவே அது உனக்கு ஹராம்.
பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுப்பது கூட இதே அளவுகோலின் படி தான் பார்க்கப்பட வேண்டும்.
அவர்கள் தருகிறார்கள், எனவே நாங்கள் பெறுகிறோம் என்று சால்ஜாப்பு சொல்வதை இஸ்லாம் ஏற்காது.
அவர்கள் அந்த சீதனப் பணத்தைத் தரவில்லை யெனில், தங்கள் வீட்டுப் பெண் மணமகன் வீட்டில் நிம்மதியாகக் காலம் தள்ள முடியாது என்கிற அச்சத்தின் காரணமாகவே அதைத் தருகின்றனர்.
அதை சொல்லிக் காட்டி, காலமெல்லாம் தன் மகளின் உள்ளத்தை நோகடிப்பதற்குப் பதில் இதை விட்டெறிந்து விடுவோம் என்பதே பெண்களைப் பெற்ற, ‌பெரும்பாலான பெற்றோரின் எண்ணமாக இருக்கிறது எனும் போது இதைப் பெறுவது எப்படி ஒருவருக்கு ஆகுமானதாகும்?
மானம் புனிதமானது
நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?”என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!”என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?”என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, “உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1742
அண்டை வீட்டாரை பேணுதல்
அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு, அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வலியுறுத்தினார்கள்.
நூல்: தப்ரானீ 7523, பாகம்: 8. பக்: 111
சக மனிதனின் சொத்துக்களையும், அவனுடைய மானம் மரியாதையையும் புனிதமாகக் கருத வேண்டும் என்கிற கடுமையான எச்சரிக்கை அந்த உரையில் மிளிர்ந்தது.
உண்மையான முஸ்லிம் யார்?
அத்தோடு நிறுத்தாமல், முஃமின் என்பதற்கும் முஸ்லிம் என்பதற்கும் நபிகள் நாயகம் அந்தத் தருணத்தில் மிக அழகிய இலக்கணம் ஒன்றை விளக்குகிறார்கள்.
எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார்.
நூல்கள்: பஸ்ஸார் 2435
தப்ரானீ 3444, பாகம்: 3, பக்: 293
மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அபயம் அளிப்பவரே முஃமின்.
நூல்கள்: பஸ்ஸார் 2435
இப்னு ஹிப்பான் 4862, பாகம்:11, பக்: 203
குற்றங்களையும், தவறுகளையும் விட்டு ஒதுங்கிக் கொள்பவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
நூல்: இப்னு ஹிப்பான் 4862
பாகம்:11, பக்: 203
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதில் தனது உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்) ஆவார்.
நூல்கள்: நூல்: இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11, பக்: 203
குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்சி
அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன்முதலில் ரத்து செய்யப்படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137, திர்மிதீ 3012, அபூதாவூத் 1628, 2896,
இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா
வட்டி ஒரு வன்கொடுமை
அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது.
நூல்கள்: முஸ்லிம் 2137, திர்மிதீ 3012, அபூதாவூத் 1628, 2896,
இப்னுமாஜா3046, 3065, இப்னு குஸைமா
கடன்
இரவல் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே! கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும்.
நூல்கள்: திர்மிதீ 1186, அபூதாவூத் 2046, இப்னுமாஜா 2396, அஹ்மத் 21263
சக மனிதர்களின் உரிமை சார்ந்த விஷயம் என வருகிற போது, ஒரு முஸ்லிம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.
இறந்த பிறகு இறைவனிடத்தில் சுவனம் பெறவேண்டும் என்பதற்காக வாழ்க்கை முழுவதும் தொழுகையை நிறைவேற்றுகிறோம். பெரும் பொருளாதாரத்தைச் செலவு செய்து ஹஜ் செய்கிறோம். ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பட்டினி கிடக்கிறோம். இப்படி நாம் பசி பட்டினியுடன் நோற்கும் நோன்பு, கஷ்டப்பட்டு செய்யும் வணக்கங்களின் முழுமையான கூலி நமக்குக் கிடைக்க வேண்டுமானால், மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லையேல், நாம் மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறிய காரணத்தால் அல்லது மற்ற மனிதர்களின் உரிமையைப் பறித்த காரணத்தினால், இந்த வணக்கங்களால் நமக்குக் கிடைக்கும் அளப்பெரும் நன்மைகளை நம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் அள்ளித்தர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும்.
அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்த மனித உரிமை பேணல்
கால ஓட்டத்தில் மிகவும் மலிவாகிப் போன பல விஷயங்களுல் முதன்மையானது மனித உரிமைகள்.
சாதியின் பெயராலும், ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறைகளாலும் மனித குலம் எதிர்கொள்கிற சவால்களில், மனித நேயத்தை இழந்து விடுவதே அதன் உச்சபட்ச பாதிப்பு எனலாம்.
சுய நலம், பணத்தாசை, புகழாசை போன்ற நோய்கள் மனிதனை ஆட்கொண்டு விட்ட இக்காலகட்டத்தில், அவற்றைத் தக்க வைப்பதற்காக எத்தகைய கீழ் நிலைக்கும் மனிதன் இன்று இறங்கத் தயாராக இருக்கிறான்.
சக மனிதனின் உயிர் அவனுக்கு மதிப்பாகத் தெரியவில்லை. அந்த உயிரைப் பறிப்பதால் சில லட்சங்கள் பணமோ, சொகுசான வாழ்க்கையோ இவ்வுலகில் அவனுக்கு அமையுமானால் அவ்வுயிரை எடுப்பதற்குக் கூட துணிகிறான்.
விலங்குகளுக்கு இருக்கும் உரிமைகளைக் கூட மனிதன் இன்று நம் சமூகத்தில் இழந்து நிற்கிறான் என்ற மோசமான உதாரணங்களை நாம் பட்டியலிட முடியும்.
மாட்டிறைச்சி வைத்திருந்தான் எனக் காரணம் கற்பித்து, வீடு புகுந்து ஒருவர் கொல்லப்படுகிறார்.
அங்கே மத வெறியும், ஆதிக்க வெறியும் தான் ஓங்கியதே தவிர, மனித நேயம் மண்ணோடு மண்ணாய்ப் போனது.
ஆனால் இஸ்லாமோ, மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் சிறு சிறு காரியங்களில் கூட அவனுடைய சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படா வண்ணம் சட்டங்களை வகுப்பதைப் பார்க்கிறோம். அற்பமான காரியங்களாக நாம் கருதுகின்றவற்றில் கூட ஒரு மனிதனின் உரிமை சார்ந்த விஷயம் என வருகின்ற போது அதில் மிகுந்த கவனமெடுக்கிறது இந்த மார்க்கம்.
மனித உரிமைகளைப் பேணுவதில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு நிகரான ஒரு சித்தாந்தத்தை உலகில் எங்குமே பார்க்க முடியாது என்பது தான் உண்மை.

உலகை விரும்பாத உத்தம தூதர்
ஆர். அப்துல் கரீம்

இவ்வுலகில் மனிதர்களின் புறத்திலிருந்து நிகழும் பல்வேறு தீமைகளுக்கு அச்சாரமாக திகழ்வது உலக ஆசையே!
உலக இன்பங்களின் மீதுள்ள அளவற்ற மோகமும் அதீத பற்றும் தான் மனிதனைத் தீமைகள் செய்யத் தூண்டுகிறது.
பணம், பொருள், பதவி, அந்தஸ்து என இவற்றில் ஒன்றின் மீது கொண்டுள்ள மோகம் மனிதனை எந்த நிலைக்கும் கொண்டு சென்று விடுகிறது.
ஒரு கட்டத்தில் இவையே வாழ்க்கை, குறிக்கோள், இலட்சியம் – இவை இல்லையேல் வாழ்க்கையே இல்லை – என்ற நிலைக்குச் சிலர் சென்றுவிடுகிறார்கள்.
தாங்கள் அடைய விரும்பிய பணம், பொருள், பதவி, அந்தஸ்து இவற்றில் ஒன்றை அடையாத போது வாழ்க்கையே வீணாகி விட்டது எனக் கருதுகின்றனர்.
ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்த அளவில் இவ்வுலக இன்பத்தில் எதுவொன்றை இழந்தாலும் அது அவனைப் பாதிக்காது.
மறுமையின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட எந்த ஒரு இறைவிசுவாசியும் இவ்வுலகில் எது இல்லை என்றாலும் அதற்காகக் கவலை கொள்ள மாட்டான். வருந்திக் கொள்ள மாட்டான். வாழ்க்கையின் விரக்தி நிலைக்குச் செல்ல மாட்டான்.
மறுமையின் இன்பமே நிலையானது என்றெண்ணி உலக இன்பத்தில் பற்றற்ற தன்மையைக் கடைப்பிடிப்பவராக ஒரு முஸ்லிம் திகழ்வார்.
பற்றற்ற தன்மை என்றால் எதற்கும் ஆசைப்படக் கூடாது என்பதல்ல. மாறாக எந்த ஒன்று கிடைக்காமல் போனாலும் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதாகும்.
மார்க்கம் அனுமதித்த முறைகளில், உலகத்தில் தாம் எதிர்பார்த்த ஒன்று கிடைத்தால் அல்ஹம்துலில்லாஹ். கிடைக்காவிட்டாலும் பாதிப்பில்லை என்ற மனநிலையைப் பெற்றவராக ஒரு முஸ்லிம் இருப்பார்.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும், பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 57:23
விதி மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம் இவ்வாறே இருப்பார் என்று திருக்குர்ஆன் உறுதிபடத் தெரிவிக்கின்றது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நபிகள் (ஸல்) அவர்களைக் குறிப்பிடலாம்.
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்போம்.
இதில் எந்த ஒன்றிலும் நபி (ஸல்) அவர்கள் முழுமை பெற்றவர்களாக இல்லை என்ற போதும் அவர்கள் துளியும் துவண்டு விடவில்லை.
உணவு
நபியவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார்கள். வெறும் தண்ணீரையும் பேரீச்சம் பழத்தையும் உண்டு காலம் கழித்துள்ளார்கள்.
(முஸ்லிம் 5688)
தொடர்ந்து 3 நாட்கள் வயிறார உண்டதில்லை. அவர்கள் மரணிக்கும் வரை இதே நிலை தான் இருந்தது.
(புகாரி 5416, 5374)
‘சாப்பாடு உள்ளதா?’ என்று வீட்டில் கேட்பார்கள். துணைவியார் ‘இல்லை’ எனும் போது ‘அப்படியெனில் நான் நோன்பிருக்கிறேன்’ என்பார்கள்.
(முஸ்லிம் 2125)
குழம்பாக வினிகரைப் பயன்படுத்தி வயிற்றுப் பசியைப் போக்கியுள்ளார்கள்.
(முஸ்லிம் 4172)
உடை
வண்ண வண்ண ஆடைகள் இல்லை.
மெல்லிய ஆடைகள் உடுத்தியதில்லை.
பெரும்பாலும் முரட்டு போர்வையே நபிகளாரின் உடை.
அவற்றையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
(புகாரி 2597, 6636)
இருப்பிடம்
மிக குறுகலான வீடு.
விசாலமான அறைகளில்லை.
ஒருவர் படுத்திருந்தால் மற்றொருவரால் தொழ முடியாது எனுமளவு இட நெருக்கடி.
விளக்குகள் இல்லை.
(புகாரி 382, 513)
பாயின் மீது விரிப்பில்லை.
படுத்துறங்கும் பாயே வீட்டின் கதவாகவும் பயன்படும்.
(புகாரி 730, 5862)
நபிகளார் தொடர்புடைய இந்தச் செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன?
இவ்வுலகத்தின் மிகச் சாதாரணமான இன்ப வளங்கள் கூட அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.
ஆனாலும் நபிகளார் இந்த வாழ்க்கையை சலித்துக் கொள்ளவில்லை.
இறைவிதியை மிக திருப்திகரமாகப் பொருந்திக் கொண்டு வாழ்ந்தார்கள்.
காரணம், நபிகளாரின் உலகப் பற்றற்ற தன்மையேயாகும்.
நபி (ஸல்) அவர்கள் உலகத்தின் மீதான பற்றை வெறுத்து, மறுமையின் மீதான பற்றை அதிகமாக்கிக் கொண்டார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக புரியலாம்.
பின்வரும் சம்பவத்தைப் பாருங்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பை தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்” எனக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனக்கும், “இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது” எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
நூல்: திர்மிதி 2299
நபி (ஸல்) அவர்களின் மேனியில் பாயின் அச்சு – தழும்புகள் பதிந்திருந்ததைக் கண்டு, விரிப்பொன்றை தயாரித்துத் தரவா என்கிறார்கள் நபித்தோழர்கள்.
அதற்கு நபியவர்கள் எனக்கும் இவ்வுலகிற்கும் என்ன தொடர்பு? எனக் கூறியதுடன் தனக்கும் இவ்வுலகத்திற்குமான தொடர்பை அற்புதமான உதாரணத்தின் மூலம் அருமையாக விளக்கமளிக்கின்றார்கள்.
இதோ நபிகளாரின் உலகப் பற்றற்ற தன்மையைப் புரிந்து கொள்ள மற்றொரு சம்பவத்தை பாருங்கள்
நபி ஸல் அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்றார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.
நூல்: புகாரி 4913
பிற நாட்டு மன்னர்களுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற வசதி வாய்ப்புகள் தங்களுக்கு இல்லையே என்ற போது நபியவர்கள் இந்த ஒப்பீட்டை முற்றிலும் வெறுத்தார்கள்.
இறைமறுப்பாளர்களான அவர்களுக்கு இவ்வுலகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் இறைநம்பிக்கையாளர்களான நமக்கு மறுமையே நிலையான வாழ்க்கை என்பதையும் நினைவூட்டிச் செல்கிறார்கள்.
நபிகளாரின் இந்த நடைமுறையானது, அவர்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்திய ஓர் அறிவுரையை நினைவூட்டுகிறது.
சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.
அல்குர்ஆன் 20:131
இந்த வசனத்தில் அறிவுறுத்தப்பட்டதற்கு ஏற்பவே நபிகளாரின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை மேற்கண்ட சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.
உலக இன்பங்களில் எதுவொன்று இல்லையென்ற போதும் அதற்காகக் கலங்கி விடாமல், விரக்தி கொள்ளாமல், மறுமையை நோக்கி வீறுநடை போட்டார்கள் என்றால் உலக வாழ்வின் இன்பங்களை நபியவர்கள் எந்தளவில் மதிப்பிட்டிருந்தார்கள் என்பதை அறியலாம்.
இத்தனைக்கும் உலக வாழ்க்கையின் இன்பங்களைத் திரட்டுவதற்கு சக்தியற்றவர்களாக நபியவர்கள் இருந்தார்களா? என்றால் அதுவும் இல்லை. இளம் வயதிலேயே மிகச் சிறந்த வியாபாரி, செல்வந்தர்.
இறைத்தூதராக இறைவனால் தேர்வு செய்யப்பட்ட பிறகோ ஆன்மீகம் மற்றும் அரசியல் என இரட்டைத்தலைமை அவர்களது கைவசம். இதன் மூலம் நபியவர்கள் உலக செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பினால் அது எளிதில் சாத்தியமாகக் கூடிய ஒன்றே. ஆனால் அதை நபியவர்கள் விரும்பவில்லை.
அது தான் நபியவர்களின் ஒப்பீடற்ற உலகப் பற்றற்ற தன்மை.
நபியவர்களின் இத்தகைய மறுமைப் பற்றை நாமும் கடைப்பிடித்தால் இவ்வுலக இன்பங்கள் தான் வாழ்க்கை என்ற எண்ணம் ஏற்படாது. உலக இன்பங்களுக்குப் பிரதான முக்கியத்துவமும் அளிக்க மாட்டோம்.
இவ்வுலகத்தின் மீதான பற்று அதிகரிக்கும் போதெல்லாம் பின்வரும் நபிமொழியை கவனத்தில் கொள்வோம்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் கூறுகிறார்:)
‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்
நூல்: புகாரி 6416

தனிமையில் ஒரு மனிதன்
அப்துர் ரஹ்மான்

இந்த உலகத்தில் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் மட்டும் தான் இறையருளைப் பெற்று மறுமையில் வெற்றி பெற முடியும் என்பதை இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம்.
என்றாலும், நவீன காலம் என்பது மனிதர்களைக் கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கி பல தரப்பட்ட ஷைத்தானிய சிந்தனைகளை உள்ளங்களில் ஊடுருவச் செய்கின்ற மிக மோசமான காலகட்டமாகும்.
எந்தளவிற்கென்றால் ஒரு மனிதன் இன்றைய நவீன காலகட்டத்தில் நல்லவனாக வாழ்வதே மிக மிகக் கடினம் என்று சொல்கின்ற அளவுக்கு மனிதர்களை வழிகேட்டின் பாதையில் தள்ளி விடுகின்ற ஏராளமான செயல்பாடுகள் அசுர வளர்ச்சி அடைந்திருக்கின்ற காலகட்டமாகும்.
அதிலும் குறிப்பாக, நான்கு நபர்களுக்கு மத்தியிலும், ஒரு கூட்டத்துக்கு மத்தியிலும், குடும்பத்தார்களுக்கு மத்தியிலும், நல்ல நண்பர்களுக்கு மத்தியிலும் மனிதன் தவறு செய்வதற்கு வெட்கப்பட்டு அஞ்சி நிற்கின்றான்.
அதே நேரத்தில் யாருமே இல்லாத தனிமையான சூழல் என்று வந்து விட்டால், அவனது தவறுகள் தலை விரித்துத் தாண்டவமாடுகின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.
முன்னர் ஒரு காலம் இருந்தது. அந்தச் சூழலில், தனிமை தான் ஒரு மனிதனைப் பாவத்தில் இருந்து விடுவித்து, அவனை ஞானியாக்கும் என்றார்கள். தனிமையில் இருப்பவர் அரிய பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, ஏராளமான சாதனைகளை சாதித்து விட முடியும் என்றார்கள்.தனிமையான சூழல் மனிதனை சிந்தனைச் சிற்பியாக வார்த்தெடுக்கும் என்றார்கள். தனிமை மனிதனை மிகப்பெரும் விஞ்ஞானியாக மாற்றும் என்றார்கள். தனிமையாக இருக்கும் மனிதன், இறைவனை அதிகமதிகம் நினைத்துக் கொண்டே இருப்பான் என்றார்கள்.
ஆனால் இதுபோன்ற பலதரப்பட்ட கருத்துக்களை, வார்த்தைகளை, குணநலன்களை, பண்புகளை உடைத்தெறிந்து சுக்குநூறாக நொறுக்கித் தள்ளுகின்ற அளவுக்கு இன்றைய நவீன கால கட்டத்தின் தனிமையான சூழல் மாறிவிட்டது.
இன்றைய சூழலில் தனிமை என்பது ஒரு மனிதனைக் கெட்டவனாக மாற்றுகின்றது. கேடுகெட்ட காரியத்தை அரங்கேற்றத் துடிக்கின்றது. மக்களுக்கு மத்தியில் நல்லவன் வேடம் போட்டுவிட்டு, தனிமைக்குச் சென்றால் அது அவனை அயோக்கியனாக மாற்றி விடுகின்றது. தனிமை பலதரப்பட்ட கெட்ட சிந்தனைகளைச் சிந்திக்க வைக்கின்றது. தடை செய்யப்பட்ட அத்தனை காரியங்களையும் சர்வ சாதரணமாகச் செய்து முடிக்க வைக்கின்றது. உச்சகட்ட அருவருக்கத்தக்க காரியத்தைக் கூட எவ்வித மன உறுத்தலுமின்றி செய்ய வைக்கின்றது.
மேற்சொன்ன அனைத்தும் அல்லாஹ் அருள் செய்த சில நல்லவர்களைத் தவிர! பெரும்பான்மையான மக்கள் தனிமையில் இருந்து தங்களைத் தாங்களே நரக நெருப்புக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு தனிமையான சூழல் மனிதனுக்கு ஏராளமான பாவமான காரியங்களைச் செய்ய வைத்து அதலபாதாளத்தில் தள்ளி விடுகின்றது. தனிமையில் இருந்து விடுபட்டு நல்லவனாக வாழ்வதற்கும், தனிமையான சூழலிலும் நல்லவனாக நம்மைப் பட்டை தீட்டிக் கொள்வதற்கும் இஸ்லாம் ஏராளமான வழிகாட்டுதல்களை நமக்குக் கற்றுத் தருகின்றது.
பிற மத மக்களிடத்தில், வழிபாட்டுத் தளங்களிலோ அல்லது வீட்டில் வைத்திருக்கும் வழிபாட்டு அறையிலோ மட்டும் தான் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்ற பயம் ஓரளவு இருக்கும். வெளியே வந்து விட்டால் தவறுகள் செய்வதற்கு வரம்பே கிடையாது.
ஆனால் இஸ்லாமிய மார்க்கம் இந்த சூத்திரங்களையெல்லாம் சுக்கு நூறாகத் தகர்த்தெறிகின்றது. வெளிப்படையாக மக்களோடு மக்களாகக் கலந்திருந்தாலும், யாருமே இல்லாத இடத்தில், தான் மட்டும் தனித்திருந்தாலும் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
ஒவ்வொரு மனிதனின் வலப்பக்கத்திலும் இடப்பத்திலுமாக இரண்டு வானவர்களின் மூலம் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற ஆழமான நம்பிக்கையை ஒவ்வொரு முஸ்லிம்களின் உள்ளங்களிலும் இஸ்லாம் அழுத்தந் திருத்தமாகப் பதிய வைக்கின்றது.
மேலும், தனிமையான சூழலில் ஒருவன் தன்னைத் தானே பாவம் செய்வதிலிருந்து தற்காத்துக் கொண்டால் இறைநேசத்தையும், மகத்தான கூலியையும், பிரம்மாண்டமான வெற்றியையும் பெற முடியும் என்பதையும் இஸ்லாம் ஆழமாக எடுத்துரைக்கின்றது.
மகத்தான கூலி:
இறைவன் தனது திருக்குர்ஆன் வசனங்களில் மனித குலத்துக்கு அறிவுரை கூறும் போது,
தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
அல்குர்ஆன் 67:12
யார் தனிமையில் இறைவனை அஞ்சுகின்றாரோ அத்தகையவருக்கு மகத்தான, பிரம்மாண்டமான கூலியைத் தயாரித்து வைத்திருப்பதாக இறைவன் வாக்குறுதி வழங்குகின்றான்.
அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.
அல்குர்ஆன் 21:49
தனிமையில் தன்னைத் தானே பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்வாரேயானால், அது நிச்சயமாக அவரைப் பரிசுத்தப்படுத்தும் என்று இறைவன் உத்தரவாதம் வழங்குகின்றான்.
தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.
அல்குர்ஆன் 35:18
தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு இறைவனின் புறத்திலிருந்து கிடைக்கின்ற மரியாதைக்குரிய கூலிக்குச் சொந்தக்காரர்களாக மாறி விட முடியும் என்று அல்லாஹ் சான்று பகர்கின்றான்.
இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும் மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் 36:11
அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான்
ஒரு மனிதர் பலதரப்பட்ட நபர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அல்லது யாருமே இல்லாத இடத்தில் தனிமையில் இருந்தாலும், எந்த இடத்தில் நாம் இருந்தாலும், அந்த இடத்தில் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற ஆழமான நம்பிக்கையை நாம் நம்முடைய உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.
இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்று ஒருவர் தன்னுடைய உள்ளத்தில் ஆழப் பதிய வைத்து விட்டால் எத்துனை பெரிய வழிகேட்டின் பாதையின்பால் தள்ளி விடுகின்ற அழிவில் சிக்கித் தவித்தாலும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்வார்.
வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானிலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 57:4
நீங்கள் எங்கே இருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் தான் இருக்கின்றான் என்ற வார்த்தையின் பொருளை ஆழமாக உள்ளத்தில் நிறுத்திக் கொண்டால் பாவக் கணைகள் நம்மை நோக்கிப் படையெடுக்கும் போது, சுக்கு நூறாக நொறுக்கி விட முடியும்.
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாமத் நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 58:8
அதிகமான நபர்கள் கூட்டு சேர்ந்து தவறிழைத்தாலும், அல்லது தனிமையில் அமர்ந்து கொண்டு தனிமனிதனாகத் தவறிழைத்தாலும், நீங்கள் எத்தனை நபர்கள் இருக்கின்றீர்களோ அந்த எண்ணிக்கையோடு சேர்த்து, கூடுதலாக இறைவனின் கண்காணிப்புப் பார்வையும் கிடுக்குப் பிடியாக இருக்கின்றது என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்.
அவர்களது இரகசியத்தையும், அதை விட இரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.
அல்குர்ஆன் 43:80
அவர்களின் இரகசியத்தையும், பரம இரகசியத்தையும் அல்லாஹ் அறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ் மறைவானவற்றையும் நன்கு அறிபவன்.
அல்குர்ஆன் 9:78
இரகசியமான காரியங்களைத் தனிமையில் அரங்கேற்றும் போது, யாரும் பார்க்கவில்லை! யாருக்கும் கேட்கவில்லை என்று நினைத்து அலட்சியமாக இருக்க வேண்டாம்; நமது தூதர்கள் மூலம் அவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம் என்று இறைவன் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றான்.
தனிமையில் சிறந்தவர்
முன்னொரு காலத்தில் நடைபெற்ற அற்புதமான ஒரு சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் காட்டி, உலகம் அழிகின்ற நாள் வரை வரவிருக்கின்ற ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களுக்கும் தனிமை குறித்துப் பாடம் நடத்துகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்துக் கொண்டது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந் திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராதவிதமாக) பெரும் பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், “நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை சாதனமாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மை விட்டு அகற்றி விடக் கூடும்’’ என்று பேசிக் கொண்டனர்.
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி- முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரு கால்களுக்கும் இடையே அமர்ந்த போது அவள், “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே’’ என்று கூறினாள். உடனே நான் எழுந்து விட்டேன். இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களை விட்டு சற்று நீக்கி விடுவாயாக!
இவ்வாறு அதில் ஒருவர் பிரார்த்தித்தார். உடனே, பாறை சற்று விலகியது. இதுபோன்ற மற்ற இருவரும் தாங்கள் செய்த நல்லறங்களைக் கொண்டு இறைவனிடம் வேண்டினர். பாறையை முழுவதுமாக அல்லாஹ் விலக்கினான்.
ஆதாரம்: புகாரி 2333 (ஹதீஸின் ஒரு பகுதி)
இந்தச் செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது, தான் செய்த நல்லறங்களில் சிறந்த செயலை அல்லாஹ்விடம் முறையிட்டுக் கேட்கின்றார்கள். இறைவனும் செவிசாய்த்து, பதிலளித்து, அவர்களின் இன்னல்களை நீக்கி காப்பாற்றுகின்றான்.
இந்த அற்புதமான செய்தியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள்:
கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, தாங்கள் செய்த நல்லறங்களிலேயே சிறந்ததைத் தேர்ந்தெடுத்து இறைவனிடத்தில் மன்றாடுகின்றனர்.
அந்த மூவரில் ஒருவர், தனக்கு பிடித்தமான, நேசத்திற்குரிய உறவுக்காரப் பெண்மணியிடம், தனிமையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இறைவனிடம் முறையிடுகின்றார்.
தனிமையில் தவறான முறையில் அந்தப் பெண்ணை நெருங்கப் பார்க்கின்றார். ஆனால் அந்தப் பெண்மனியோ! அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு! என்று சொன்ன வார்த்தை நெஞ்சை கீறிக் கிழித்துக் கொண்டு, துளைத்தெடுத்து மிரள வைத்தது.
தனிமை தான்! என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்! யாருக்கும் தெரிந்திருக்க கடுகளவு கூட வாய்ப்பில்லை!
ஆனாலும் கூட அந்த வாய்ப்பை, இறைவனுக்கு பிடித்தமான வாய்ப்பாக மாற்றிக் காட்டினார்களே! இதுவல்லவா! தனிமையைப் பயன்படுத்தும் அற்புதமான முன்மாதிரி.
அந்தப் பெண்மணிக்கு அந்த ஆண் மகனை பிடிக்கவில்லை என்பதோ அல்லது வேறு வேறு காரணங்களினாலோ அந்தப் பெண்மணி மறுக்கவில்லை! தனிமையான சூழல்! இருவரும் சம்மதித்து விட்டார்கள்! ஆனால் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று சொன்ன மாத்திரத்திலே வெடுக்கென்று எழுந்து ஓடோடி விடுகிறார். தனிமையில் சிறந்து விளங்கி இறையன்பையும் பெற்று விட்டார்!
இதுபோன்ற தனிமையான சூழலில், இந்த இடத்தில், இன்றைய காலத்தில் வாழ்கின்ற நம்மவர்களை ஒப்பு நோக்கிப் பாருங்கள்! தனிமையை தவறாகப் பயன்படுத்துகின்றோம்.
எத்தனை முறை கேட்டாலும், எத்தனை முறை படித்தாலும் நம்முடைய மேனியை சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு இந்தச் செய்தி நமக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இச்சம்பவம் நம்முடைய உள்ளங்களில் பசுமரத்தாணி போன்று ஆழமாகப் பதிய வேண்டும். உலகம் அழிகின்ற நாள் வரை இந்தத் தனிமை செய்தி நமக்கு அற்புதமான படிப்பினை செய்தி என்பதை யாராலும் மறுக்க இயலாது!
பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடாதீர்கள்!
இந்த உலகத்தில் வாழும் போது, வெளிப்படையாக நல்லவனாகவும், மக்களுக்கு மத்தியில் சிறந்தவனாகவும், மிகச் சிறந்த இறையச்சவாதியாகவும் நடித்து விட்டு, மறைவில் இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் கேடுகெட்ட காரியங்களை அரங்கேற்றுபவர்களாக நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாம் என்னதான் வெளிப்படையாக நல்ல பல அமல்களை செய்தாலும், நல்லவனாக வலம் வந்தாலும், பிறருக்கு அறிவுரை கூறும் போது, தேன் போன்ற தித்திக்கின்ற வார்த்தைகளைக் கொட்டினாலும், தனிமையில் மறைவான சூழலில் இருக்கும் போது இறைவனுக்கு அஞ்சி நடக்கவில்லையென்றால், மறுமையில் நாம் அடைகின்ற கைசேதம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
“எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் ‘திஹாமா’ மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்” என்று நபியவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!” என்றோம். அதற்கு நபியவர்கள் “அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: இப்னுமாஜா 4245
இந்தச் செய்தியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற மிக முக்கியமான வாசகத்தை நாம் உற்று நோக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அதாவது, திஹாமா மலை அளவுக்கு நன்மை செய்தவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக மாற்றி விடுவான். அத்தகைய கைசேதப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்து நபித்தோழர்கள் கேட்கும் போது, ஒற்றை வார்த்தையில், இரத்தினச் சுருக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தார்கள்.
அதாவது, மக்களுக்கு மத்தியில் நல்லவன் போன்று நடந்து கொள்வார்; தொழுகையை நிறைவேற்றுவார்; அதிகமான உபதேசங்களை மக்களுக்கு எடுத்துரைப்பார்; இரவு வணக்கத்தில் ஈடுபடுவார்; ஆனால் தனித்திருக்கும் போதும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதும் தடை செய்யப்பட காரியங்களை சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பார்.
இத்தகைய குணம் படைத்தவர்கள் எவ்வளவு பிரம்மாண்டமான, ஊர் மெச்சக்கூடிய அளவுக்கு அமல்கள் செய்தாலும் சரிதான், நெடுங்காலம் மார்க்கத்திற்காக தியாகம் செய்து, மார்க்கப் பணிகளைச் செய்து, அமல்களை சேர்த்து வைத்தாலும் சரிதான், எத்தனை பேர் சத்தியத்தை ஏற்பதற்குக் காரணமான இருந்தாலும் சரிதான். அத்தகைய நற்காரியங்கள் பரப்பப்பட்ட புழுதிக்குத்தான் சமம்.
கண்ணியத்திற்குரியவர்கள் யார்?
மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும் போதும் சரி; யாருமில்லாத தனிமையான சூழலில் இருக்கும் போதும் சரி; உண்மையான நல்லவர்களாக வாழ வேண்டும். இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்கள் என்ற பதவிக்குச் சொந்தக்காரர்களாக மாற முயற்சிக்க வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சமுடையவரே’’ என்று பதிலளித்தார்கள். மக்கள், “நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை’’ என்றனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரி 3490
யார் அல்லாஹ்வுக்கு அஞ்சி வெளிப்படையிலும் தனிமையிலும் பயபக்தியுடன் வாழ்கிறாரோ, அவரே மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள். மேலும், இறையச்சத்தின் முன்மாதிரி நபி யூஸுஃப் (அலை) அவர்கள் தனிமையில் இருந்த போதும் கூட, அல்லாஹ்வின் அருளால் தன்னுடைய கற்பை, தன்னுடைய எஜமானியிடமிருந்து தற்காத்துக் கொண்டார். இவரும் மக்களில் கண்ணியத்திற்குரியவர் என்றார்கள்.
உலக மாந்தர்களிடத்திலும், பெரும் கூட்டத்திலும் நல்லவன் வேடம் போட்டு வாழ்ந்து விட்டு, நாம் இந்த உலகத்தில் பெறத் துடிக்கும் அற்பத்திலும் அற்பமான இன்பத்திற்காக, நம்முடைய அந்தரங்க வாழ்க்கை அசிங்கமானதாக மாறி விடுமானால், நம்மை அதலபாதாளத்தில் தள்ளி, மிகப்பெரும் இழிவைப் பெற்றுத் தந்து விடும்.
என்னைப் படைத்த இறைவனிடத்தில் நான் கண்ணியத்திற்குரியவன் என்ற மகத்தான பட்டத்தைப் பெறுவதற்காகவே வாழ்நாள் முழுவதும், இயன்றவரை என்னுடைய வாழ்க்கையைப் பட்டை தீட்டிக் கொள்வேன்; சீர்திருத்திக் கொள்வேன்; வெளிப்படையான வாழ்க்கையிலும், அந்தரங்கமான தனிமையிலும் இறைவனுக்கு அஞ்சி நடப்பேன் என்ற சபதத்தை உளமாற ஏற்று நடப்போமாக!
பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.
அல்குர்ஆன் 6:120

சமூக அக்கறை கொள்வோம்
கலந்தர் (இஸ்லாமியக் கல்லூரி)

இந்த உலகில் உயிரோடு படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும், தன்னை சுற்றி வாழும் மற்ற உயிரினங்கள் மீது ஏதோ ஒரு விதத்தில் அக்கறை கொள்ளக் கூடியதாகத்தான் படைக்கப்பட்டுள்ளன.
மனிதர்களின் பார்வையில் அக்கறை என்பது இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது.
ஒன்று “என் குடும்பத்தார்கள், என் உறவினர்கள், என் நண்பர்கள்” என்ற சுயநலம் கலந்த சுயநல அக்கறையாகும்.
மற்றொன்று சமூகம் தவறான வழியில் தன் பயணத்தைத் துவக்கும் பொழுது “என் நாட்டவர், என் சமூகத்தார்” என்று கூறும் சுயநலமில்லா பொதுநலம் கொண்ட சமூக அக்கறையாகும்.
இவ்விரண்டில் சுயநல அக்கறை என்பது எல்லா மனிதர்களிடத்திலும் ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில் தானாக உருவெடுத்துவிடும். ஆனால் சமூக அக்கறை என்பது குறிப்பிட்ட சில நபர்களை தவிர எல்லா நபர்களிடத்திலும் தானாக வருவதில்லை. எனவே இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மாந்தர்களுக்கு சமூக அக்கறையை எந்த அளவிற்கு வலியுறுத்துகிறது என்பதையும், அதை நாம் கடைப்பிடித்தால் ஏற்படும் விளைவுகளையும் நாம் அறிந்து கொள்வோம்
சமூக அக்கறையாளர்களை உருவாக்கும் இஸ்லாம்
உலகம் படைக்கப்பட்ட நாள் முதல், மனிதகுலத்திற்குச் சீரான வழியை காட்டக்கூடியதாகவும், மாபெரும் ஒரு அருட்கொடையாகவும் இறைவன் தனது தூதர்கள் மூலமாக தந்ததுதான் இந்த மார்க்கம்.
அந்த மார்க்கம் குறித்து இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் மிக அழகாகவும், ரத்தினச் சுருக்கமாகவும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “இந்த (இஸ்லாமிய) மார்க்கம் என்பது பிறர் நலம் நாடக்கூடியது” என்று சொன்னார்கள். அப்போது நாங்கள், யாருக்கு? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இறைவனுக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் (நலம் நாடுவது)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: தமீமுத்தாரி (ரலி)
நூல்: முஸ்லிம் 205
நபி (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் குறித்து, பிறர் நலம் நாடக்கூடியது என்று அறிமுகப் படுத்துகிறார்கள். அப்போது நபிகளாரின் தோழர்களில் சிலர் யாருக்கு நலம் நாடவேண்டும்? என்று கேட்கிறார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் கூறும் பட்டியலில் பொதுமக்களையும் இணைத்துச் சொல்கிறார்கள். இந்தப் பொன்னான நபிமொழியிலிருந்து பொதுமக்களுக்கு நலம் நாடக்கூடிய சமூக அக்கறையாளர்களைத் தான் இஸ்லாம் உருவாக்குகிறது என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
மரணத்திற்கு பின்பும் சமூக அக்கறைகொண்ட நல்லடியார்
இறைவன் தன் வேதத்தில் ஒரு ஊராரிடத்தில் மூன்று தூதர்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பியதையும், அவர்களை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்த நிலையில் ஒருவர் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து இறைவனை நம்பிக்கை கொண்டதையும், அவரை அக்கூட்டத்தார் கொலை செய்த காரணத்தால் அவருக்கு இறைவன் வழங்கும் பரிசுகளைப் பற்றியும், அவர் தன் மரணத்திற்குப் பின்னால் தன் சமூகத்தார் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாட்டையும், யாஸீன் என்ற அத்தியாயத்தில் படம்பிடித்துக் காட்டுகிறான். அதை பாருங்கள்.
அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து “என் சமுதாயமே! தூதர்களை பின்பற்றுங்கள்! உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள் என்னை படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே திரும்ப நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். அவனன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள். அப்போது நான் பகிரங்கமான வழிகேட்டில் ஆவேன். நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்கு செவிசாயுங்கள்” என்று கூறினார்.
“சொர்க்கத்திற்கு செல்” என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர், “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமூதாயத்தினர் அறிந்து கொள்ளக்கூடாதா?” என்றார்.
அல்குர்ஆன் 36:20-27
பொதுவாக நாம் அளவுகடந்து விரும்பும் விஷயங்களை நாம் அடைந்து விட்டோமேயானால் உண்மை நிலை தெரியாமல் மெய்மறந்து போய்விடுவோம். ஆனால் தன்னைக் கொலை செய்த கூட்டமாக அந்த மக்கள் இருந்தும் கூட அவர் இறைவனின் மன்னிப்பையும் மகத்தான கூலிகளையும் பார்த்ததற்குப் பின்னால் இதுபோன்ற பரிசுகளை அவர்களும் பெறவேண்டுமே! ஆனால் அது சாத்தியமற்ற விஷயமாக மாறிவிட்டதே! என்று வருத்தப்படுகிறார் அந்த நல்லடியார். அப்படியானால் எந்த அளவிற்கு அவருடைய உள்ளத்தில் சமூக அக்கறை ஆழமாகப் பதிந்து இருக்கும் என்பதை சற்றுச் சிந்திக்கத் தான் வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்)
நமது உயிரை விட மேலாக நாம் மதிக்கக்கூடிய நபி (ஸல்) அவர்களிடத்தில் சமூக அக்கறை அளவுகடந்து இருந்ததை நாம் அறிவோம் அதை அல்லாஹ் குர்ஆனிலும் வர்ணித்து கூறுகிறான்.
உங்களிடம் உங்களை சார்ந்த தூதர் வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக இருக்கிறார். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும் இரக்கமும் உடையவர்.
அல்குர்ஆன் 9:128
மேற்கூறப்பட்ட இந்த வசனத்தைப் பிரதிபலிக்கும் விதமாக நபிகளாரின் வாழ்வில் பல சம்பவங்கள் இருந்தாலும் சுருக்கத்தைக் கவனத்தில் கொண்டு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நாம் குறிபிடுகிறோம்.
நபி(ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.
அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள்.
உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘நபியே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார். உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன்’ என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3231
இச்சம்பவத்தில் தனது சுயநினைவை இழக்குமளவிற்குக் கடுமையான பாதிப்பிற்கு நபி (ஸல்) அவர்கள் ஆளாகிறார்கள். அதன் காரணத்தினால் தான் இறைவனாக முன்வந்து நபிகளாரின் பாதிப்பிற்கு நிவாரணம் அளிப்பதற்காக அக்கூட்டத்தாரின் முடிவை நபியின் கைவசம் ஒப்படைத்து மலைகளை நிர்வகிக்கும் வானவர்களை அனுப்புகிறான்.
அந்தச் சூழ்நிலையில் கூட நபி (ஸல்) அவர்கள் சமூக அக்கறை கொண்டதால் தொலைநோக்குப் பார்வையோடு, அவர்களின் சந்ததிகள் ஏகத்துவக் காற்றை சுவாசிப்பார்கள் என்பதை யோசித்தார்கள்.
அன்று நபிகளாரின் சமூக அக்கறையின் வெளிபாடுதான் இன்று தாயிஃப் நகரம் தவ்ஹீத் நகரமாக மாறியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதே சமூக அக்கறை இன்றைய காலத்தில் நம்முடைய ஒவ்வொரு ஊர்களிலும் மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் நாடுகளிலும் வெளிபட்டால் இந்த உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஏகத்துவம் முழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்!
உலகளாவிய சூழ்ச்சிகளை முறியடிக்க…
மனிதநேயத்தை போதிப்பதில் தலையாய மார்க்கமான இஸ்லாத்தைக் கடைபிடிக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு எதிராக, முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற பொய் பிரச்சாரம் உலகளாவிய அளவில் நடைபெற்று வருகிறது. இனியும் நடைபெறும்.
குறிப்பாக நம் இந்தியாவில், நாம் வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரைக்கும் பல சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் வெளிப்பாடுதான் “நீ முஸ்லிமா? பாகிஸ்தானுக்குப் போ” என்ற கோஷம் முழங்கப்படுகிறது.
இப்படிப் பல ஆண்டுகளாக நடந்து வரும் சூழ்ச்சிகளைத் தவிடுபொடியாக்கியது எது? கடந்த 2015, டிசம்பர் மாதம் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட வெள்ளம். அதையொட்டி சமுதாய மக்கள் மீது ஏற்பட்ட முஸ்லிம்களின் சமூக அக்கறை! சங் பரிவார்களின் பல ஆண்டு சூழ்ச்சிகளை சில நாட்கள் செய்த சமூகப் பணிகள் முகவரி இல்லாமல் ஆக்கி விட்டதே! அந்தச் சமூக அக்கறை அன்றாடம் நம்மிடத்தில் இருந்தால்?
கண்ணியத்திற்குரிய இறைவனின் அடியார்களே! இந்த உலகத்தில் பல கொள்கை, கோட்பாடுகள் இருந்தாலும் இஸ்லாம் மட்டும் தான் சமூக அக்கறையை போதிக்கக் கூடிய மார்க்கமாக இருக்கிறது.
எனவே, இஸ்லாத்தைப் பின்பற்றும் நாமும் அதைக் கடைப்பிடித்து பிற மக்களுக்கும் எடுத்துரைக்கக் கூடிய மக்களாக நாம் மாற வேண்டும். அப்படி ஒரு மாற்றம் நம்மிடம் ஏற்பட்டால் நாம் நினைக்கின்ற மாற்றங்களைச் செய்ய முடியும், இன்ஷா அல்லாஹ்!
தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றி கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்றமாட்டான்.
அல்குர்ஆன் 13:11

அமல்களின் சிறப்புகள்
உளூவினால் கிடைக்கும் உடனடியான பலன்கள்
எம்.ஷம்சுல்லுஹா

ஒருவர் உறக்கத்தை விட்டு எழுந்தவுடன் மீண்டும் உறங்கவேண்டும் என்ற சோர்வூட்டும் எண்ணம் உள்ளிருந்து பிறந்து கொண்டிருக்கும். மீண்டும் படுக்கைக்குப் போய் விடுவோமா என்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கும். சொக்குப்பொடி போட்டு இரு கண்களையும் ஏற சொருக வைத்து சொக்குகின்ற தூக்கப்பிடியில் நம்மைச் சிக்க வைக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு முடிவு கட்டுவது நாம் செய்கின்ற உளூதான்.
உங்களில் ஒருவர் உறங்கும் போது அவரது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் ‘இரவு இன்னும் இருக்கின்றது, உறங்கு’ என்று கூறுகின்றான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூ செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மனஅமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராக காலைப் பொழுதை அடைகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1142, 3269 முஸ்லிம் 1295
ஷைத்தானின் இரண்டாம் முடிச்சை அவிழ்க்கும் அற்புத இயந்திரம் உளூவாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக்குகின்றது. உளூ செய்தவுடன் உடலில் ஒரு புத்துணர்ச்சியையும் அமல்கள் செய்யச் சரியான சத்துணர்ச்சியையும் பெற்று விடுகிறோம். இது நாம் நேரடியாகக் காணும் உளூவின் பயன்பாடு மற்றும் சிறப்பாகும். இந்த உளூவைச் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால் மறுமையில் கிடைக்கப் போகும் பயனும் சிறப்பும் என்னவென்று இனி காண்போம்.
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு “நான் உளூ செய்வதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரி 160, 164, 1934, 6433,
முஸ்லிம் 331, 332, 333, 336
இந்த ஹதீஸ் உளூச் செய்த உடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று காட்டுகின்றது. அது கடமையான தொழுகையாகக் கூட இருக்கலாம். அல்லது உளூச் செய்தவுடன் நாம் தொழக்கூடிய லுஹரின் முன் சுன்னத் அல்லது பஜ்ரின் முன் சுன்னத் போன்ற ஏதேனும் ஒரு தொழுகையாகக் கூட அது இருக்கலாம்.
ஆனால் பிலால் (ரலி) அவர்கள் நம்மிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றார்கள். அவர்கள் கடமையான மற்றும் அறியப்பட்ட நபிலான தொழுகை நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உளூச் செய்யும் போதெல்லாம் அவர்கள் இரு ரக்அத்கள் தொழத் தவறியதில்லை.
ஒரு ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி) இடம் “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சொர்க்கத்தில் நான் கேட்டேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) “இரவிலோ பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் நான் செய்யும் செயல்களில் சிறந்த செயல்’’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1149, முஸ்லிம் 4497
நாம் ஒருவரின் செருப்போசையை வைத்து அவர் இன்னார் தான் என்று அடையாளங்கண்டு கொள்கின்றோம் என்றால் அந்த அளவுக்கு அவர் நம்மிடம் அடிக்கடி வந்து சென்றிருக்க வேண்டும். நிச்சயமாக பிலால் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அடிக்கடி பள்ளிக்கும் வீட்டுக்கும் வந்து சென்றவர்கள் என்பதில் நமக்குக் கடுகளவும் சந்தேகமில்லை.
அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு பிலால் (ரலி)யின் இந்த அமலை நேரடியாக அறிவித்திருக்கலாம். சுவனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பிலாலின் செருப்போசையைச் செவியுற வைத்து, பிலால் செய்த அமல் என்ன? நபி (ஸல்) அவர்களை பிலால் (ரலி)யிடம் சஸ்பென்ஸாகக் கேட்க வைக்கின்றான். பிலால் (ரலி) இன்ன அமல் தான் என்று பதில் சொல்கின்றார். இவ்வாறு அல்லாஹ் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இந்த அமலுக்கான பரிசை அறிவிப்பதன் நோக்கம் பிலால் (ரலி)யைப் போன்று மற்றவர்கள் இதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்பதற்காகத் தான்.
எனவே, உளூச் செய்து விட்டு இரண்டு ரக்அத்கள் தொழுகின்றோம் எனில் அந்த அமல் நம்மை பிலால் (ரலி)யைப் போன்று சுவனத்திற்குச் சொந்தக்காரராக்கி விடுகின்றது. உளூச் செய்த பின் நாம் செய்கின்ற இந்தச் சிறிய அமல் பெரிய சுவனத்தைப் பெற்றுத் தருகின்றது. நபிவழிப்படி நடக்கும் கூட்டம் நாங்கள் என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேரிடம் இந்த அமல் உள்ளது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இங்கே நாம் இன்னோர் எச்சரிக்கையையும் கவனிக்கத் தவறி விடக்கூடாது. உளூவின் சிறப்பைப் பற்றி கூறக்கூடிய ஹதீஸில் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் பாவங்கள் கரைந்து விடுகின்றன. சுவனம் கிடைத்து விடுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நாம் சூதாடலாம், விபச்சாரம் செய்யலாம், வட்டி வாங்கலாம், கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம், மது அருந்தலாம்! என்ன செய்தாலும் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.
யார் நான் உளூச் செய்தது போல் செய்து, பள்ளிக்கு வந்து இரு ரக்அத்கள் தொழுது அமர்ந்திருந்தால் அவரது முந்தைய பாவம் மன்னிக்கப்பட்டு விடும். நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் வேறொரு இடத்தில் பதிவாகியுள்ளது.
(மதீனாவிலுள்ள) ‘மகாயித்’ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக உளூ செய்தார்கள். பிறகு ‘நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக உளூ செய்யக் கண்டேன்’ என்று கூறிவிட்டு, ‘யார் இதைப் போன்று (முழுமையாக) உளூ செய்து, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(ஆனால், இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்களில் மூழ்கி) விடாதீர்கள்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான் இப்னு அபான்(ரஹ்)
நூல்: புகாரி 6433
தொழுகையின் மூலம் மன்னிக்கப்படுவது சிறு பாவங்கள் தான். பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்றும் அந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கின்றார். இது தொடர்பாக நாம் மேலே தெரிவித்த எச்சரிக்கை நம்முடைய தன்னிச்சையான எச்சரிக்கையல்ல! நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாகும். அந்த எச்சரிக்கையை நாம் பேணிக் கொள்வோமாக!
பல் துலக்குதல்
பல் துலக்குதல், உளூச் செய்வதுடன் ஒட்டிய செயல் என்பதால் இச்செயலை வலியுறுத்துகின்ற ஹதீஸ்களை இங்கு காண்பது பொருத்தமாக அமையும். அந்த அடிப்படையில் பல்துலக்குதல் சம்பந்தமான ஹதீஸ்களைப் பார்ப்போம். நபி வழியைப் பின்பற்றுவோம் என்று மத்ஹபுகளை எல்லாம் விட்டெறிந்து விட்ட நாம் இதுபோன்ற நபிவழியை நடைமுறையில் கொண்டு வரவேண்டும்.
அமல்களின் சிறப்புகள் என்ற இந்த தலைப்பின் கீழ் அமல்களின் சிறப்புகளை மட்டும் சொல்வது நோக்கமல்ல. சிறுசிறு நபிவழிகளை எடுத்துக் காட்டி, அவற்றைச் செயல்படுத்தி, நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியவர்களாக வேண்டும் என்பது தான் நமது தலையாய நோக்கமாகும்.
எனது சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்களைப் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 887,7240 முஸ்லிம் 370
பல்துலக்குவது தொடர்பாக நான் உங்களுக்கு அதிகமாக வலிறுத்தியிருக்கின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 888
இந்த ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கும்படி வலியுறுத்தியுள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. பல் துலக்குவது ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூவைப் போல் கடமை என்ற இடத்தைப் பிடிக்க இருந்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் எனில், இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
துலக்கல் தரும் தூய்மை
பல் துலக்குவது வாய்க்குத் தூய்மையாகும்! இறைவனுக்குத் திருப்தியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 5
இந்த ஹதீஸ் பல்துலக்குவது இறை திருப்தியைப் பெற்றுத் தருவதாகத் தெரிவிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் இன்னொருவரை விட மூத்தவராக இருந்தார். மூத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்விருவரில் பெரியவருக்கு பற்குச்சியைக் கொடுப்பீராக என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 46
இந்த ஹதீஸில் பல்குச்சியை யாருக்கு வழங்க வேண்டும் என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கின்ற அளவுக்குப் பல் துலக்குதல் அல்லாஹ்விடம் மாபெரும் மரியாதையையும், மதிப்பையும் பெற்றுத் திகழ்கின்றது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம். அல்லாஹ்விடமும் அவனது தூதர் (ஸல்) அவர்களிடமும் பெற்ற மரியாதையை நம்மிடத்தில் இது பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
உளூச் செய்யும் முன் பல் துலக்கும் நேரங்கள்
நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 1136, முஸ்லிம் 374
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவு உறங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கண் விழித்ததும் பல் துலக்கி உளூ செய்தார்கள். அப்போது அவர்கள் ஆல இம்ரானின் 190ஆம் வசனத்திலிருந்து அந்த அத்தியாயம் முடியும் வரை ஓதினார்கள் என முஹம்மது பின் அலீ அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெறுகின்றது.
இதில் காலை எழுந்ததும் உளூச் செய்யும் முன் நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குவார்கள் என்று அறிகின்றோம்.
பல் துலக்கும் குச்சிக்கு இரவிலேயே ஏற்பாடு
ஸஃத் பின் ஹிஷாம் பின் ஆமிர் என்பார் ஆயிஷா (ரலி) யைச் சந்தித்து, வித்ரு தொழுகையைப் பற்றி வினவிய போது, “நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்காக பல்குச்சியையும் உளூச் செய்வதற்குரிய தண்ணீரையும் (இரவில்) தயாராக வைத்திருப்போம். இரவில் அல்லாஹ் அவர்களை எப்போது எழுப்ப வேண்டும் என்று நாடியுள்ளானோ அந்த நேரத்தில் அவர்களை எழுப்புவான். அவர்கள் எழுந்ததும், பல்துலக்கி, உளூச் செய்து பிறகு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள்’’ என்று பதிலளிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: முஸ்லிம் 1233
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையில் எழுந்ததும் முதன் முதலில் ஆற்றுகின்ற நல்ல காரியம் பல்துலக்குவது தான் என்று இந்த ஹதீஸ் நமக்கு தெரிவிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் வீட்டில் நுழைந்ததும் முதலில் எதைச் செய்யத் துவங்குவார்கள் என்று நான் ஆயிஷா (ரலி) யிடம் வினவினேன். அதற்கு, (முதன்முதலில்) பல்துலக்குவார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஷுரைஹ் பின் ஹானி
நூல்: முஸ்லிம் 371
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி பல் துலக்கியுள்ளார்கள் என்று காட்டுகின்றது.
மரணவேளையிலும் பல் துலக்கிய மாநபி (ஸல்)
(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானிடம், அவர் பல்துலக்கும் ஈரமான(பேரீச்சங்)குச்சி இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் ‘தம் கையை’ அல்லது ‘தம் விரலை’ உயர்த்திப் பிறகு, (“இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’’ என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு முடித்துக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4449
அதிகாலை எழுந்ததும் ஐந்து வேளை தொழுகையின் போதும் வீட்டிற்குள் நுழைந்ததும் பல் துலக்கிய ரசூல் (ஸல்) அவர்கள் தன் ஆயுள் முடியும் தருவாயிலும் அதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருக்கின்றோம். இன்றைய அறிவியல் மருத்துவம் உலகம் பல் துலக்குவதைப் பற்றி அதிகமதிகம் வலியுறுத்துகின்றது. உறங்குவதற்கு முன் பல்துலக்குவதற்கு ஊக்கமூட்டுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகம் பல்துலக்கியதையும் அதற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும் இந்த ஹதீஸ்கள் நன்றாகத் தெளிவுபடுத்துகின்றன. அத்துடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுமுன் உளூ செய்து விட்டு உறங்கியதையும் ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.
இப்படி எந்த ஒரு தலைவரேனும் தம் சமுதாயத்திற்கு, பல் துலக்கலைப் பற்றிப் பாடம் நடத்தியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அப்படி நடத்த வேண்டிய அவசியமும் இல்லை! ஆனால் இந்தத் தலைவர் மட்டும் இப்படிப் பாடம் நடத்துகிறார்களே! அது ஏன்?
அவர்கள் இயற்கை மார்க்கத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர். அதனால் அறிவியல் ரீதியான உள்ளர்த்தங்களைக் கொண்ட வகையில் பற்களை சரியாகப் பராமரிக்கச் சொல்கிறார்கள்.
மனிதன் சாப்பிட்ட உணவின் துகள்கள், குறிப்பாக இனிப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் பற்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றிலிருந்து சில பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகள் வாழத் துவங்கி விடுகின்றன.
வாய்க்குள் ஆக்ஸிஜன் கிடைக்காத போது அவை அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம், பல் எனாமலில் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸைக் கரைத்து விடுகின்றது. இதற்கு கனிமச் சத்து அரிமானம் என்று பெயர். இது தான் பற்சிதைவுக்கு வழிவகுக்கின்றது.
நாவில் ஓடும் உமிழ் நீர் இதை ஓரளவுக்குச் சரி செய்கிறது. ஆனால் அதே சமயம் பாக்டீரியாக்கள் கொத்தாக பற்களில் படிமானத்தை ஏற்படுத்தி விட்டால் இந்த உமிழ் நீர் அதற்குள் ஊடுறுவ முடியாது. அப்போது பல்லைச் சிதைத்து வலியை ஏற்படுத்தும். அத்துடன் நிற்பதில்லை. நேரடியாக மூளையைப் பாதித்து விடுகின்றது. மனிதன் மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.
இது பற்கள் மூலம் ஏற்படும் அதிகப்பட்ச பாதகம்!
வாய் துர்நாற்றம்
பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களில் குடித்தனம் நடத்தும் நுண்ணுயிரிகள் தான் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்மிடம் பேசுவோர் முகத்தைத் திருப்பிக் கொள்ள நேரிடுகிறது.
அது மட்டுமின்றி ஈறுகள் தொற்று நோய்க்குள்ளாகி இரத்தம் கசியவும், சீழ் வழியவும் ஆரம்பித்து விடுகிறது. இந்நோய்க்கு பயோரிய்யா என்று பெயர். இது பற்களால் ஏற்படும் குறைந்த பட்ச பாதகமாகும்.
இதனால் தான் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதில் இவ்வளவு கவனம் எடுத்துள்ளார்கள். தமது சமுதாயத்தையும் இதில் கவனம் எடுக்கச் சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் மார்க்கமும் அறிவியலும் வலியுறுத்துகின்ற பல்துலக்கலைத் தான் நாம் அலட்சியம் செய்து வருகின்றோம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இருக்கும் இந்த நாற்றத்தைப் போக்குவதற்கு மார்க்கம் பல்துலக்க ஆர்வமூட்டிக் கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் பீடி, சிகரட், சுருட்டு குடித்து விட்டு அந்த நாற்றத்துடன் பல சகோதரர்கள் தொழ வருவது தான்.

மனிதகுலத்தின் முன்னோடி நபிகள் நாயகம் – தொடர் 6
குற்றவியல் சட்டங்களால் தேசத்தை காத்தவர்
ஆர். ரஹ்மத்துல்லாஹ்

உலகெங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்தபாடில்லை.
இதற்கு மிக முக்கியக் காரணம், தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.
மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகின்றனர். படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது. அதை நபிகளார் தமது ஆட்சியில் செம்மையாக நிறைவேற்றியதன் மூலம் தேச மக்களைக் காத்தார்கள்.
இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமானமற்றவை என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம். ஆனால் இஸ்லாமியக் குற்றவியல்சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும். கொலைக் குற்றம் செய்த ஒருவனுக்கு மரண தண்டனை வழங்குவதால், கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப் போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப் போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப் பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதன் காரணம் என்ன?
1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். அவன் மன நிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.
குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன்பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன, குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.
ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை. அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.
குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?
திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்னபிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.
சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விடச் சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.
நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன.
இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
பெயரளவிலான இந்தத் தண்டனையால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.
50 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
20 முறை சைக்கிள் திருடியவர் மீண்டும் கைது!
என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 50 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.
சிறைச்சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால், நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே என்று எண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
மேலும் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் சிறைச்சாலைகளில் சந்தித்துக் கொள்வதற்கும், கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்குப் புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர். சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.
ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது. மனிதாபிமான (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.
இதன் விளைவாக குற்றங்கள் சர்வ சாதாரணமாகப் பெருகிவிட்டதை கடந்த ஆகஸ்ட் 2019-ல் நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதை நினைவுபடுத்தலாம்.
இந்தியாவில் ஆண்டு தோறும் 5 கோடி வழக்குகள் பதிவாகின்றன. அதில் 2 கோடி வழக்குகள் விசாரிக்கப்பட்டும், 3 கோடி வழக்குகள் நிலுவையிலும் இருக்கின்றன என்று சொல்லப்படும் அளவிற்கு நாடு நாசமடைந்து கிடக்கின்றது.
பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
திருட்டுக் கொடுத்தவனிடம் போய், திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய், கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையை வெட்ட வேண்டும் என்பானா?
கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
ஆனால் நபிகளாரோ பாதிக்கப்பட்டவனின் நிலையைத்தான் கவனத்தில் கொண்டார்கள்.நபிகளார் நடைமுறைப்படுத்திய குற்றவியல் சட்டங்களைப் பார்ப்போம்.
தேசத் துரோகத்திற்கான தண்டனை
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப்பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக உறுதிமொழி அளித்(து மதீனாவில் தங்கியிருந்)தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக்கொள்ளாமல் அவர்களது உடல் நோய் கண்டது. எனவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைப்பற்றி முறையிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நம் ஒட்டக மேய்ப்பருடன் ஒட்டகங்களிருக்கும் இடத்திற்குச் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் பயன்படுத்தி (நிவாரணம் பெற்று)கொள்கிறீர்களா?” என்றுகேட்டார்கள். அதற்கு அவர்கள் “சரி” என்று கூறி, புறப்பட்டுச் சென்று ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அந்த ஒட்டக மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.இவ்விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, உடனே அவர்களைப் பின்தொடர்ந்து ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் பிடிக்கப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். அப்போது அவர்களின் கை கால்களைத் துண்டித்து, அவர்களின் கண்களில் சூடிடுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் சாகும்வரை (ஹர்ரா என்ற பகுதியில்) வெயிலில் போடப்பட்டனர்.
நூல்: முஸ்லிம் 3448
கொலை மற்றும் வழிப்பறிக்கான தண்டைனை
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதனொருவன் ஒரு சிறுமியை, அவளது வெள்ளி நகைக்காகக் கல் எறிந்து கொன்று விட்டான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டார்கள். அவள் “இல்லை” என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் அவர்கள், “இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?” என்று கேட்டார்கள். அவள் அப்போதும் “இல்லை” என்று தலையாட்டினாள். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், “இன்ன மனிதரா உன்னைத் தாக்கினார்?” என்று (ஒரு மனிதரது பெயரைக் குறிப்பிட்டுக்) கேட்டபோது அவள் “ஆம்’’ என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவன் ஒப்புக்கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை (நசுக்கி)க் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 3453
கொலை செய்தனுக்கு நபிகளாரைப் போல் நம் அரசாங்கம் மரண தண்டனை விதித்தால், கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள். சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.
பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப் பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
திருட்டுக்கான தண்டனை
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“மக்ஸூமி” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள், “அந்தப் பெண் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பேசி, தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கச்) சொல்வது யார்?” என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் துணிந்து பேச முடியும்?” என்று சொன்னார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?” என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று பின்வருமாறு உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும், நான் அவரது கையைத் துண்டித்தே இருப்பேன்.
நூல்: முஸ்லிம் 3485
விபச்சாரத்திற்கான தண்டனை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்; என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர். அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று), பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால், நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 3489
இதுபோன்ற தண்டனைகளை நிறைவேற்றும் போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கம் அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பது தான். எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும் என்பதையும் நபிகளார் கவனித்தே தண்டனைகளை வழங்கியுள்ளார்கள்.
மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 3512
உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் விஷயத்தில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ? என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். வழிப்பறிகள் நிறைந்த மதீனா நகரை பத்தாண்டுகளில் பாதுகாப்பு மிக்க நகராக மாற்றிய நபிகளாரின் ஆட்சிமுறை வரவேண்டும்.
இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகக் கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். அதைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திக் காட்டினார்கள்.

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் – தொடர் 39
யாசகத்தை ஆதரித்து இஸ்லாத்தை எதிர்க்கும் இஹ்யா உலூமித்தீன்
மூலம் : முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அலீ மக்ராவி
தமிழில் : எம்.ஷம்சுல்லுஹா

பிறரிடம் பிச்சை எடுக்கும் தொழிலுக்குப் பச்சைக் கொடிக் காட்டி, கண்டவரிடமும் கையேந்தி யாசகம் கேட்கும் இழிநிலைக்கு, கஸ்ஸாலி தனது நூலான இஹ்யா உலூமித்தீனில் திறப்புவிழா நடத்தியிருக்கின்றார்.
அதற்குரிய எடுத்துக்காட்டு இதோ இஹ்யாவிலிருந்து…
قال الغزالي: وذلك كما روي أن بعضهم رأى أبا إسحاق النوري رحمه الله يمد يده ويسأل الناس في بعض المواضع، قال: فاستعظمت ذلك واستقبحته له، فأتيت الجنيد رحمه الله فأخبرته بذلك، فقال: لا يعظم هذا عليك، فإن النوري لم يسأل الناس إلا ليعطيهم وإنما سألهم ليثيبهم في الآخرة فيؤجرون من حيث لا يضرهم وكأنه أشار به إلى قوله: “يد المعطي هي العليا”(1)فقال بعضهم يد المعطي هي يد الآخذ للمال لأنه يعطي الثواب والقدر له لا لما يأخذه، ثم قال الجنيد: هات الميزان، فوزن مائة درهم ثم قبض قبضة فألقاها على المائة ثم قال: احملها إليه، فقلت في نفسي: إنما يوزن الشيء ليعرف مقداره، فكيف خلط به مجهولا وهو رجل حكيم؟ واستحييت أن أسأله فذهبت بالصرة إلى النوري، فقال: هات الميزان، فوزن مائة درهم، وقال: ردها عليه، وقل له: أنا لا أقبل منك أنت شيئا وأخذ ما زاد على المائة، قال: فزاد تعجبي فسألته فقال: الجنيد رجل حكيم يريد أن يأخذ الحبل بطرفيه، وزن المائة لنفسه طلبا لثواب الآخرة، وطرح عليها قبضة بلا وزن لله عز وجل، فأخذت ما كان لله تبارك وتعالى ورددت ما جعله لنفسه، قال: فرددتها إلى الجنيد فبكى، وقال: أخذ ماله ورد مالنا، الله المستعان
بيان أحوال السائلين من كتاب الزهد والفقر/ الجزء الرابع من إحياء علوم الدين
இது தொடர்பான விமர்சனத்திற்குள் செல்வதற்கு முன்பு கீழ்க்காணும் புகாரி, முஸ்லிமில் பதிவான ஹதீஸை ஒருமுறை பார்த்துக் கொள்வோம்.
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியது; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது’ என்றும் கூறினார்கள்.
நூல்கள்: புகாரி 1429, முஸ்லிம் 1872
இது புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸாகும். இதே கருத்தில் முஸ்னத் அஹ்மத் 14782 எண்ணில் இடம்பெறும் ஹதீஸில் கொடுப்பவரின் கை (யதுல் அல்முஃதீ) என்று இடம்பெறுகின்றது. இந்த ஹதீஸ்தான் கஸ்ஸாலி கூறுகின்ற பின்வரும் சம்பவத்தில் ஆதாரமாகக் காட்டப்படுகின்றது.)
அபூஇஸ்ஹாக் அந்நூரி ரஹிமஹுல்லாஹ் (?) சில இடங்களில் மக்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அது எனக்கு ஒரு பெரிய தப்பாகத் தோன்றி அதை வெறுத்தேன். நான் ஜுனைத் அல்பக்தாதி ரஹிமஹுல்லா (?) யிடம் வந்து தெரிவித்தேன். இது உனக்குப் பெரிதாகத் தோன்ற அவசியமில்லை. மக்களுக்குக் கொடுப்பதற்காக வேண்டியே தவிர நூரி அவர்களிடம் கேட்பதில்லை. நூரி மக்களிடம் கேட்பதற்கு ஒரே ஒரு காரணம் மறுமையில் இதன் மூலம் கூலி அளிப்பதற்காகத் தான். அதனால் மக்கள் மறுமையில் கூலி வழங்கப்படுகின்றார்கள்.
அதே சமயம் இவரது யாசகத்தின் காரணமாக மக்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை என்று ஜுனைத் பதில் அளித்தார். பணம் கொடுப்பவரின் கையே உயர்ந்தது என்று ஒரு ஹதீஸ் வருகின்றது. அதற்கு ஜுனைத் இப்படி ஒரு விளக்கம் கொடுப்பது போல் அமைந்திருந்தது. ஹதீஸில் பணம் கொடுப்பவர் என்று வந்திருக்கின்றது. அதற்கு இந்த இடத்தில் பணத்தைப் பெறுபவர் என்று பொருள் செய்தால் பொருத்தமாக அமையும். காரணம் இவர் யாசகம் தருபவருக்கு நன்மையையும் அவருக்கு அந்தஸ்தையும் கொடுக்கின்றார். (அதனால் உண்மையில் இங்கு கொடுப்பவர் என்றால் பெறுபவரைக் குறிக்கின்றது என்று யாரோ ஒருவர் இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றார்) அவர் பணத்தை பெறுகின்றார் என்பதால் தாழ்ந்த கை என்று குறிப்பிடக்கூடாது என்று சிலர் விளக்கமளித்துள்ளனர்.
பிறகு ஜுனைத் ‘தராசைக் கொண்டுவா’ என்று சொன்னார். தராசைக் கொண்டு வந்ததும் அதில் நூறு திர்ஹம்களை போட்டு நிறுத்தார். பிறகு ஒரு பிடி திர்ஹங்களை எடுத்து அந்த நூறு திர்ஹங்களில் போட்டு, ‘இதைக் கொண்டு போய் நூரியிடம் கொடு!’ என்றார்.
‘ஒரு பொருளை நிறுப்பதே அதன் எடை, அளவை தெரிந்து கொள்வதற்காகத் தான். ஆனால் இங்கு ஜுனைத் அளவு தெரிந்த பொருளுடன் அளவு தெரியாத பொருளைக் கலந்து விட்டாரே! ஆனால் அவர் ஓர் அறிவாளி’ என்று நான் என் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
அதை அவரிடம் கேட்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் கேட்கவில்லை. நான் பையை எடுத்துக்கொண்டு நூரியிடம் சென்றேன். அவரும், ‘தராசைக் கொண்டுவா’ என்று சொன்னார். தராசைக் கொடுத்ததும் மேலதிகமான திர்ஹங்களை எடுத்துக்கொண்டு, ‘நூறு திர்ஹங்களை ஜுனைதிடமே திரும்பக் கொடுத்துவிடு’ என்று சொன்னார். ‘உன்னிடமிருந்து வேறெதையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று அவரிடம் சொல்லிவிடு’ என்றும் சொன்னார். இதைக்கண்டு ஆச்சரியமடைந்த நான் அவரிடம் விளக்கம் கேட்டேன்.
அதற்கு அவர், “ஜுனைத் ஓர் அறிவாளி. ஒரு காரியத்தைச் செய்கின்ற போது அதன் துவக்கத்தையும் இறுதியையும் பார்த்து செயல்படக் கூடியவர். மறுமையின் கூலியை நாடி தனக்காக நூறு திர்ஹங்களை நிறுத்துக் கொடுத்தார். அல்லாஹ்வுக்கென்று வருகின்ற போது கணக்கில்லாமல் ஒருபிடி திர்ஹங்களை அள்ளிப் போட்டிருக்கின்றார். அல்லாஹ்வுக்கென்று அவர் கொடுத்த திர்ஹங்களை நான் எடுத்துக் கொண்டு அவர் தனக்காக ஆக்கியதை நான் திருப்பிக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்.
இந்த திர்ஹங்களை ஜுனைதிடம் திருப்பிக் கொடுத்தபோது அவர் அழுதுவிட்டார். “தன்னுடைய பணத்தை எடுத்துக் கொண்டு நம்முடைய பணத்தை திருப்பித் தந்துவிட்டார். உதவி தேடப்படுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்” என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு ஒருவர் சொன்னதாக அறிவிக்கப்படுகின்றது என்று கஸ்ஸாலி தெரிவிக்கின்றார்.
அத்தியாயம்: துறவு, வறுமை
யாசிப்போர் நிலைகள் தொடர்பான விளக்கம்
பாகம் : 4, இஹ்யா உலூமித்தீன்
இப்போது விமர்சனத்திற்குள் செல்வோம். இஹ்யா உலூமித்தீன் என்றால் ‘மார்க்க ஞானங்களுக்கு உயிரூட்டல்’ என்று அர்த்தம். ஆனால் கஸ்ஸாலியோ மார்க்கத்தை மரணிக்கச் செய்கின்ற பல்வேறு செய்திகளை, சம்பவங்களை இந்நூலில் அள்ளித் தெளித்திருக்கின்றார். அதில் ஒன்றுதான் மேலே நாம் காண்கின்ற செய்தியாகும்.
கஸ்ஸாலி கொண்டு வந்திருக்கும் இந்தச் சம்பவத்தில் இஸ்லாத்திற்கு எதிரான பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அதில் ஒன்று யாசகமாகும். யாசகத்தை மார்க்கம் தடை செய்திருக்கின்றது. இதற்குப் பல்வேறு ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன.
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’ எனக் கூறினார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்’ எனக் கூறினேன்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்.
நூல்: புகாரி 1472
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாசகத்தை ஒரு மட்ட ரகமான செயல் என்று உணர்த்துகின்றார்கள். இதை ஒரு ரோஷ உணர்வாக எடுத்துக் கொண்டு ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் யாரிடத்திலும் எதையும் பெறுதில்லை என்று சபதம் எடுத்துக் கொள்கின்றார்கள். அது போல் மரணம் வரை அதில் உறுதியாக இருந்ததை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
சதையில்லாத முகம்! சந்தி சிரிக்கும் அவலம்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…’
இதை இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 1475
பிறரிடம் யாசகம் கேட்பவர் நாளை மறுமையில் சதை பிய்ந்த முகத்துடன் வந்து கேவலப்படுவார் என பிச்சை எடுப்பதால் ஒருவர் மறுமையில் அடையும் அவலத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
உழைப்பை ஊக்குவிக்கும் உத்தமத் தூதர் (ஸல்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விறகு விற்றேனும் பிழைக்கவும் உழைக்கவும் சொல்லி ஊக்கப்படுத்தி, யாசகத்தின் வாசலை அடைப்பதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். (யாசகம் கேட்டால்) மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.
அறிவிப்பவர்: ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி)
நூல்: புகாரி 471
யாசகம் என்பது இழிவான தொழில் என்பதற்கு இந்த ஒரு ஹதீஸ் போதுமானது. ஓர் இறைநம்பிக்கையாளன் ஒருபோதும் தனது சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்பதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமான கவனம் செலுத்துவதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.
இத்தனையையும் மீறி கையேந்தி காசு வாங்கினால், அது காசல்ல! நரக நெருப்பின் கங்கு என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
வருவாய் அல்ல! நெருப்புக் கங்கு!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும்; அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 1883
நபி (ஸல்) அவர்கள், யாசகம் பற்றி நெருப்புக் கங்கு என்று சொன்ன பிறகு யாராவது இதைச் செய்ய முனைவார்களா? முன்வருவார்களா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தவ்ஹீதும் தன்மானமும்
ஒருவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டால் அவர் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையாகி விடுகின்றார். அவர் மனிதரில் எவருக்கும் அடிமையில்லை என்ற சுதந்திர உணர்வையும் சுய மரியாதையையும் பெற்று விடுகின்றார்.
அவர் அடுத்தவரிடம் கையேந்துகின்ற போது அவரது சுயமரியாதையை இழக்க நேரிடுகின்றது. அவர் அவமானப்படுகின்ற அவலநிலை ஏற்படுகின்றது. அதனால் மார்க்கம் அதைத் தடுத்து அவரது தன்மானத்தைக் காக்கின்றது என்பதை மேலே உள்ள ஹதீஸ்கள் எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் தர்மம் கொடுப்பதையே மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றான்.
நீங்கள் நல்லவற்றிலிருந்து எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
அல்குர்ஆன் 2:272
தவ்ஹீதைக் கொள்கையாகக் கொண்டவர் தன்னுடைய எல்லா தேவைகளையும் எல்லாம் வல்ல இறைவனிடத்திலேயே இறைஞ்சிக் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும். மற்ற மனிதர்களிடம் கையேந்தாமல் அல்லாஹ்விடமே இறைஞ்சுகின்றபோது அவரது தன்மானம், சுயமரியாதை பாதிக்கப்படாமல் அல்லாஹ் காக்கின்றான். அதை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சகிப்பவருக்கு அல்லாஹ் மேலும் சகிப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 6470
இதுவரை கண்ட இந்த ஹதீஸ்கள் யாசகம் வாங்குவதை மிகவும் மட்ட ரகமான, மானங்கெட்ட செயலாக, மறுமையில் தண்டனைக்குரிய காரியமாகக் காட்டுகின்றது. அதேசமயம், மார்க்கம் ஒரு சிலருக்கு விதிவிலக்களிக்கின்றது. விதிவிலக்கப்பட்ட அந்த சாராரை இப்போது பார்ப்போம்:
கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்’’ என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் “வாழ்க்கையின் அடிப்படையை” அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை” அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம்.
இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் “வாழ்க்கையின் அடிப்படையை” அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை” அடைகின்றவரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடைசெய்யப்பட்டதையே சாப்பிடுகிறார்.
நூல்: முஸ்லிம் 1887
இந்த மூன்று சாரார்களைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் யாசிப்பதற்கு அனுமதியில்லை என்று தெளிவாக ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதற்குப் பின்னால் கஸ்ஸாலி போற்றிப் புகழும் சூஃபிஸப் பேர்வழிகள் யாசகத்தைப் புனிதப்படுத்துகின்றார்கள் என்றால் இவர்கள் யார்? இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற வரம்பைத் தாண்டி, தங்களது சுய விருப்பத்தை மார்க்கமாக்கிக் கொண்டவர்கள் என்பதைத் தவிர்த்து வேறெதுவும் இங்கு கூறுவதற்கில்லை.
இதை எழுதி வைத்திருக்கும் இஹ்யா, மார்க்கத்தை உயிர்ப்பிக்கின்றதா? அல்லது உயிரைப் பிரித்து உணர்வற்ற சடலமாக்குகின்றதா? என்று அதன் வாசகர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
வழங்கும் கையா? வாங்கும் கையா?
சமுதாயத்தில், திருமணத்தை ஒரு பாரதூரமான செலவுகள் கொண்ட, பிரம்மாண்டமான சமூகக் கடமை என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டனர். கல்யாணம் பண்ணிப் பார் கட்டடத்தைக் கட்டிப் பார் என்று சொல்கின்ற அளவுக்குக் கல்யாணம் கடினமான செலவுகளால் கட்டமைக்கப்பட்டுவிட்டது.
அதை உடைத்துத் தகர்த்தெறிய வேண்டிய உலமாக்கள் தங்கள் பெண்மக்களின் கல்யாணச் செலவுகளுக்காக ஊராரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனால் கல்யாணம், தாங்க முடியாத மருத்துவச் செலவு போன்ற பொருளாதார நிர்ப்பந்தங்களுக்காக ஒரு காலகட்டத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்கு சிங்கப்பூர், மலேஷியா, புருணை போன்ற நாடுகளுக்கு யாசகம் கேட்டுப் பயணம் செய்தனர். ஆரம்பத்தில் சிங்கப்பூர், மலேஷியா, புருணை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் செல்வந்தர்கள், ‘நமதூர் ஹஜ்ரத் வந்துட்டாங்க’ என்று செழிப்பாகவும் சிறப்பாகவும் வசூல்செய்து கொடுத்தனர்.
ஆனால் போகப்போக இதைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டு அதிகமான ஆலிம்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் அவர்களால் தாக்குப்பிடிக்காமல் ஆனது. நம்மூரில் முஸாஃபிர்கள் என்ற பெயரில் யாசகம் கேட்கும் கூட்டத்தற்கு சில்லறைக் காசுகளைக் கொடுப்பது போன்று அவர்கள் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த ஆலிம்களும் கடை, கடையாக ஏறிக் கையேந்தும் நிலைக்குத் தங்களை தரம் தாழ்த்திக்கொண்டனர். இதற்கு அடிப்படைக் காரணமே நபி (ஸல்) அவர்கள் போதித்த மேற்கண்ட போதனைகளை விட இஹ்யாவின் போதனை அவர்களை ஆட்கொண்டு, அவர்களது உள்ளங்களை ஆக்கிரமித்து, அவர்களை ஆட்டுவித்ததுதான்.
குர்ஆன், ஹதீஸுக்குக் கொடுத்த இடத்தை விட இஹ்யாவுக்குத் தான் அவர்கள் அதிகம் இடம் கொடுத்தனர். அதனுடைய எதிர் விளைவு தான் இது.
ஆலிம்களின் பொருளாதார நிலை அந்த அளவில் தான் அன்றும் இன்றும் இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் ஆலிம்கள் இந்த அளவுக்கு இறங்க இஹ்யா பின்னணியில் இருக்கின்றது என்பதை இது நமக்கு உணர்த்துகின்றது.
யாசகத்தால் ஈட்டப்படும் வருவாய் நரகத்தின் கங்குகள் என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்டனக் கணைகள் ஆலிம்களின் உள்ளங்களை எட்டிப்பார்க்கவில்லை. அவர்களும் இந்தக் கண்டனத்தை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இதுபோன்ற அலட்சியங்களின் பின்னணியில் இஹ்யாவின் தாக்கம் இருக்கின்றது என்பது தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும்.
அதிலும் வேதனைக்குரிய விஷயம், ‘கொடுக்கும் கை’ என்று வருகின்ற ஹதீஸை தங்களின் சுய விருப்பத்திற்குத் தக்க ‘வாங்கும் கை’ என்று வளைப்பது தான். இது சூஃபிஸப் பேர்வழிகளுக்குக் கைவந்த கலை.
பிச்சை எடுத்து மோட்சத்தை அடைவது என்பது பிறமதக் கலாச்சாரம். குறிப்பாக இந்து மதத்தில் அது போற்றதலுக்குரிய புனிதக் காரியம். அதை சூஃபிஸப் பேர்வழிகள் இஸ்லாத்தில் புகுத்துவதற்கு கடும் முயற்சி செய்வதையும், அதன் கொள்கை பரப்புச் செயலாளராக கஸ்ஸாலி செயல்படுவதையும் தான் இஹ்யாவின் இந்த பாடப்பகுதி நமக்கு உணர்த்துகின்ற பாடமாகும். இது நாம் இந்தச் சம்பவத்தில் காணுகின்ற முக்கிய விமர்சனமாகும். இது அல்லாமல் இந்தச் சம்பவத்தில் ஜுனைதும், நூரியும் அல்லாஹ்வுக்குரிய மறைவான ஞானம் தங்களுக்கும் இருப்பதாக வாதிடுகின்றனர். இதுவும் சூஃபிஸத்தின் உச்சப்பட்ச ஆணவப் போக்காகும். அதற்கு பட்டுக் கம்பளம் விரிப்பது கஸ்ஸாலியின் வாடிக்கை. இதை நாம் பின்னொரு இடத்தில் அடையாளம் காட்டுவோம் இன்ஷாஅல்லாஹ்!