ஏகத்துவம் – நவம்பர் 2018

வான்மறைக் குர்ஆனை வாழ்வியலாக்குவோம்

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி 27, 2019 அன்று விழுப்புரத்தில் திருக்குர்ஆன் மாநாடு நடைபெறவுள்ளது.

திருக்குர்ஆன் மாநாடு நடத்துவதன் நோக்கம் என்ன?

திருக்குர்ஆனை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வாழ்வியலாகக் கொண்டிருக்க வேண்டிய இந்தச் சமுதாயம், அதை விட்டும் வெகு தொலைவில் நிற்கின்றது.

அது எந்தெந்தத் துறைகளில் விலகி நிற்கின்றது? என்பதைக் கீழ்க்காணும் பட்டியல் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

  1. கடவுள் கொள்கை

உலகத்தைப் படைத்து, இயக்கிக் கொண்டிருப்பவன் ஏக இறைவனான ஒரே கடவுள் தான். அவனுக்கு நிகராக, இணையாக யாருமில்லை என்பது தான் இஸ்லாமிய கடவுள் கொள்கையாகும்.

உலகத்திலேயே பாமரன் முதல் பண்டிதன் வரை அத்தனை ரக மக்களும் எளிதில் விளங்கக் கூடிய ஓர் அற்புதமான கடவுள் கொள்கையை மனித சமுதாயத்திற்கு வழங்கியது திருக்குர்ஆன் தான்.

படைப்பினங்களில் உயிருள்ளவரோ, இறந்தவரோ எவரும் கடவுளாக முடியாது.

வான்வெளியின் உச்சத்தில் உலா வந்து, உயிரினங்கள் அத்தனையும் வாழ்வதற்கு ஒளி வீசிக் கொண்டிருக்கும் உதய சூரியன், அதனிடம் இரவலாக ஒளி வாங்கி இரவில் பிரகாசிக்கும் சந்திரன், வான வீதியில் நீந்திக் கொண்டிருக்கின்ற கோள்கள், கருவிழியின் கட்டுக்குள் வராமல் காட்சியளிக்கின்ற கட்டுக்கடங்காத இன்ன பிற நட்சத்திரங்கள், நிலம் முழுவதையும் நீங்காமல் சுற்றி வளைத்து, சூழ நின்று, அயராது அலை எழுப்பி ஆர்ப்பரிக்கின்ற நீல நிறக் கடல், நிலப்பரப்பின் நீள அகலப் பரப்பில் பரவிக் கிடக்கும் கல், மண், பச்சை பசேல் என்று வளர்ந்து பார்ப்பவரைப் பரவசமடையச் செய்யும் தாவர இனங்கள், உயிரினங்கள் என இவற்றில் எதுவும் கடவுளாக முடியாது என்ற, சிந்தனைக்கு இனிய, எளிய இறைக் கோட்பாட்டைத் திருக்குர்ஆன் மக்களுக்கு வழங்குகின்றது.

ஆனால் நடைமுறையில் முஸ்லிம்கள், ஆன்மீகம் என்ற பெயரில் அற்ப மனிதர்களான ஷைகுகளையும் பீர்களையும் கடவுளாக வணங்கத் தலைப்பட்டு விட்டனர். இறந்தவர்களுக்குக் கப்ருகளும் தர்ஹாக்களும் கட்டி அவர்களை வணங்கவும் வழிபடவும் ஆரம்பித்து விட்டனர். குர்ஆன் கூறுகின்ற உண்மையான கடவுள் கொள்கையைக் கைவிட்டதன் மூலம் அவர்கள் குர்ஆனை விட்டும் வெகுதூரம் விலகிப் போய்விட்டனர்.

  1. இறைத்தூதரைப் பின்பற்றுதல்

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக அடித்துச் சொல்கின்றது.

ஆனால் நமது சமுதாயமோ ஷாஃபி, ஹனஃபீ, ஹன்பலி, மாலிக்கி என்று இமாம்களைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டது.

மத்ஹபுகள் கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் கூட நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்று கூறி, புதுவிதமான வழிகேட்டை உருவாக்கி விட்டனர்.

இங்கேயும் திருக்குர்ஆன் கூறுகின்ற கட்டளையைக் கைவிட்டதன் மூலம் திருக்குர்ஆனை விட்டும் சமுதாயம் தூர விலகிச் சென்று விட்டது.

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறும் யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்)

அதாவது, அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், முஹம்மது (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையிலேயே சமுதாயம் ஆட்டம் கண்டு விட்டது.

  1. குடும்ப வாழ்க்கை

                திருமணம்

பெண்களுக்கு மஹ்ர் கொடுத்துத் திருமணம் முடிக்க வேண்டும் குர்ஆன் கட்டளையிடுகின்றது. ஆனால் இதற்கு நேர்மாற்றமாக பெண்ணிடத்தில் வரதட்சணை வாங்கித் திருமணம் முடிக்கும் கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. குர்ஆனின் இந்தக் கட்டளையிலும் சமுதாயம் முற்றிலும் விலகி நிற்கின்றது.

                விவாகரத்து

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டால் இருவரும் பிரிந்து கொள்வதற்குத் தலாக் என்ற வழிமுறையை திருக்குர்ஆன் தந்திருக்கின்றது. அந்தத் தலாக்கை மூன்று கால கட்டங்களில் சொல்ல வேண்டும் என்றும் கணவனுக்கு வழி காட்டியிருக்கின்றது. ஒவ்வொரு கால கட்டமும் சுமார் 3 மாதங்கள் கொண்டதாகும். இதில் இரண்டு தலாக்குகள் மீட்டிக் கொள்ளக் கூடிய தலாக் ஆகும். மூன்றாவது தலாக் தான் மீட்டிக் கொள்ள முடியாத தலாக் ஆகும்.

குர்ஆன் கட்டளையிட்ட தலாக்கிற்கு நேர் முரணாக ஒரே அமர்வில் முத்தலாக் என்று சொல்லி மனைவியை விவாகரத்துச் செய்கின்ற அநியாயத்தைச் செய்வதன் மூலம் குர்ஆனை இந்தச் சமுதாயம் புறக்கணித்து, அதை விட்டும் வெகுதூரத்தில் விலகி நிற்கின்றது.

  1. பொருளாதாரம்

திருக்குர்ஆன் வட்டியைத் தடை செய்திருக்கின்றது. அதற்கு நிரந்தர நரகம் என்றும் என்று குறிப்பிடுகின்றது. குர்ஆன் கூறக்கூடிய இந்தப் பொருளாதார வழிகாட்டலை விட்டும் சமுதாயம் முற்றிலும் விலகி வெளியேறி, வட்டியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

வட்டி வாங்குவது, கொடுப்பது என்பது சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதைப் பற்றிய உறுத்தலோ உள்ளத்தைத் துளைக்கின்ற குற்ற உணர்வோ இல்லாமல் இந்தச் சமுதாயம் எட்டாத ஒரு தூரத்தில் சென்றுவிட்டது. வான்மறைக் குர்ஆனை அன்றாட வாழ்க்கை நெறியாகவும் வாழ்வியலாகவும் ஆக்குவதை விட்டும் வானளவு தூரத்தில் சென்று விட்டது.

இதன் பொருள் என்ன?

தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக, தன்னுடைய வாழ்வில் குர்ஆன் குறுக்கிடக் கூடாது என்று ஒரு முஸ்லிம் நினைக்கின்றான். அதாவது அந்தக் குர்ஆனை அவன் வெறுக்கின்றான் என்பது தானே அதன் அர்த்தமாக இருக்க முடியும்? குர்ஆனை ஒருவர் வெறுத்தால் நாளை மறுமையில் என்ன விளைவு ஏற்படும்?

இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.

என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்’’ என்று இத்தூதர் கூறுவார்.

அல்குர்ஆன் 25:30

ஆம்! தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் புகார் செய்வார்கள். தூதரின் புகார் அல்லாஹ்வுடைய நீதிமன்றத்தில் மறுக்கப்படாத விண்ணப்பமாகும். விண்ணப்பிக்கப் பட்ட புகாருக்கு விதிக்கப்படும் தண்டனை என்ன? நரகம் தான் அதற்குக் கூலியாகும்.

குர்ஆனை விட்டு விலகி, வெகு தூரத்தில் நிற்பவர் யார்? என்பதை இம்மாத ஏகத்துவம் இதழ், திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றது.

குர்ஆன் கூறும் இந்தப் பாவங்களை விட்டும் ஒருவர் விலகி விடுகின்ற போது அவர் திருக்குர்ஆனிடம் ஐக்கியமானவராக, அதை அள்ளி அரவணைத்தவராக ஆகி விடுவார். அவர் அற்புதமிகு திருக்குர்ஆனைத் தனது வாழ்நாள் முழுமைக்கும் வாழ்வியலாக்கியவர் ஆவார்.

பிறகு என்ன? தன்னை அரவணைத்தவரை, தன்னையே வாழ்நாள் முழுமைக்கும் வாழ்க்கை நெறியாகவும் வாழ்வியலாகவும் ஆக்கிக் கொண்டவரை, அல்லாஹ்வின் சுவனத்தை அடையச் செய்வதற்கும் அதில் ஆனந்தமாகக் குடியமர்த்துவதற்கும் அது பொறுப்பேற்றுக் கொள்கின்றது.

இதோ குர்ஆன் கூறுகின்றது.

யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

அல்குர்ஆன் 7:170

அதாவது உரிய கூலியான சுவனத்தைப் பரிசாக அளிக்கின்றது.

ஆம்! நாளை மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் சன்னிதானத்தில் ஸஜ்தாச் செய்து, மன்றாடிப் பரிந்துரை செய்வார்கள். அவர்களது ஒவ்வொரு பரிந்துரையின் போதும் நம்பிக்கை கொண்டோர் அத்தனை பேர்களும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால் அல்குர்ஆன் தடுத்தவர்களைத் தவிர!

பார்க்க: புகாரி 4476, 6565, 7401

ஆக, நாளை மறுமையில் நமக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை அல்குர்ஆன் தான் தீர்மானிக்கின்றது. அல்குர்ஆனின் அந்த இறுதித் தீர்ப்பை உணர்த்துவதற்காகவும், அதை நமது வாழ்வியலாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் திருக்குர்ஆன் மாநாட்டை தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரத்தில் 27.01.2019 அன்று மாநிலம் தழுவிய அளவில் நடத்துகின்றது.

இம்மை, மறுமை நலன்களை நிலை நிறுத்துகின்ற இம்மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பற வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

—————————————————————————————————————————————————————————————————————

நன்மைகளின் களஞ்சியம் திருக்குர்ஆன்

குர்ஆன் முஃமின்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பொற்களஞ்சியமாக இருக்கின்றது.

குர்ஆன் இரண்டு விதமான நன்மைகளைத் தன்னுள் உள்ளடக்கியிருக்கிறது. ஒன்று, அதை அதன் மூல மொழியான அரபியில் வாசிக்கின்ற போது கிடைக்கும் நன்மைகள். மற்றொன்று அதைப் பொருளுணர்ந்து நம் தாய் மொழியில் படிக்கும் போது கிடைக்கும் நன்மைகள்.

ஆனால், இன்று இவ்விரண்டு விதமாகவும் படிக்கின்ற வாய்ப்புகள் மிக இலகுவாக வாய்க்கப்பட்டும் கூட அதைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் நன்மை ஓடையைத் தாங்களே அணை போட்டுத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

குர்ஆனைத் தெரிந்து கொள்வது சிரமமாக இருந்த கால கட்டத்தில் கூட நபித்தோழர்களும், நபித்தோழியர்களும் குர்ஆன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அறிந்து வைத்திருந்ததால் நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது ஓதும் குர்ஆன் வசனங்களையும், அத்தியாயங்களையும் கேட்டு மனனம் செய்துக் கொண்டார்கள்.

இன்றைய நவீன வாழ்க்கையில் உலகமே நம் உள்ளங்கையில் இருக்கிறது. நாம் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே குர்ஆனை அரபியிலும் ஓதலாம், தமிழிலும் பொருளுணர்ந்து படிக்கலாம்.

குர்ஆனை அரபியில் ஓதத் தெரியாதவர்கள் கூட, ஆசிரியர்கள் இல்லாமலே வலைத்தளங்களை ஆசிரியர்களாகக் கொண்டு கற்றுக் கொள்ளலாம். அல்லது குர்ஆன் ஓதத்தெரியாமல் எவ்வளவு வயதைக் கடந்திருந்தாலும் ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று கற்றுக் கொள்ளலாம்.

வயது கடந்து விட்டது என்ற வீண் வெட்கவுணர்வு இவ்விஷயத்தில் நன்மைகளில் முந்திச் செல்வதை விட்டும் நம்மைத் தடுத்து விட வேண்டாம்.

ஏனெனில், குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதற்கான நன்மைகள் ஏராளம்! ஏராளம்!

அல்லாஹ்வின் அருள் மறையான திருக்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன்.மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)

நூல்: திர்மிதீ 2910

‘‘குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4937

அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து, தொழுகையை நிலை நாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இழப்பில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்த்து (நல் வழியில்) செலவிடுவோர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.

அல்குர்ஆன் 35:29, 30

சற்றுக் கற்பனையாகக் கணக்கிட்டுப் பாருங்கள்! ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை! பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று ஓதினாலே 19 எழுத்துக்கள் என்ற அடிப்படையில் 190 நன்மைகள் கிடைக்கும்.

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் குர்ஆனில் ஒரு பக்கத்தை ஓதி வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?

நம் கற்பனை கணக்கிற்குக் கூட எட்டாத எண்ணிக்கையளவு நன்மைகளை அள்ளித் தருகிறது அல்குர்ஆன்.

இந்த நன்மைகளோடு சேர்த்து இறைவனின் அருள் மழையையும் நம் வாழ்வில் பொழிய வைக்கிறது.

‘‘மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 5231 (சுருக்கம்)

இவ்வாறாக, திருக்குர்ஆனை அதன் மூல மொழியில் படிப்பது, பல நன்மைகளையும் இறையருளையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கின்றது.

அடுத்து, குர்ஆனைப் பொருளுணர்ந்து படிப்பதன் அவசியத்தையும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் குர்ஆன் நமக்குப் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.

அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

அல்குர்ஆன் 8:2,3,4

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.

அல்குர்ஆன் 22:35

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!’’ என அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 5:83

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

அல்குர்ஆன் 39:23

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.

அல்குர்ஆன் 59:21

மேற்படி வசனங்கள் யாவும் குர்ஆன் நம்முடைய வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்துப் பேசுகின்றன.

அதன் ஒட்டுமொத்த சாராம்சமும் இறையச்சம் என்பதுதான். நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தை படரச் செய்து, பாவங்களில் விழுந்துவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் கேடயமாகவும், நன்மைகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் பாலமாகவும் குர்ஆன் இருக்கும் என்பதை மேற்படி வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இத்தகைய மாற்றம் நம்மிடத்தில் எப்போது ஏற்படும்? நாம் என்ன படிக்கின்றோம் என்று பொருளுணர்ந்து படிக்கும் போதுதான்.

ஆங்கிகலம் தெரியாத ஒருவர் ஆங்கில செய்தித் தாள் படிக்க வேண்டும் என்றால் அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ள, அதன் பொருளை உணர்ந்து படிக்க வேண்டும்.

அதுபோலத்தான் குர்ஆனில் உள்ள செய்திகள் நமக்குத் தெரிய வேண்டும் என்றால் அதன் பொருளோடு அதைப் படிக்க வேண்டும். அந்தச் செய்திகள் தெரிந்தால் தான் இறைவனைப் பற்றித் தெரியும். இறைவனைப் பற்றித் தெரிந்தால் தான் அவன் மீது அச்சம் ஏற்படும். அவன் மீது அச்சம் ஏற்பட்டால் தான் பாவங்கள் செய்யாமல் நன்மைகளை நோக்கி விரைவோம்.

ஆனால் இன்றைக்கு இதுபோன்று குர்ஆனைப் படிப்போர் மிக மிகக் கணிசமான தொகையினரே!

குர்ஆன் தான் நமக்கு அருளப்பட்ட வேதம். அதைப் படிப்பது தான் நமக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பலன் அளிக்கும். ஆனால் இன்று அந்தக் குர்ஆனை மறந்துவிட்டு, அதன் நன்மைகளை விட்டுவிட்டு, இஸ்லாத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத மவ்லிதுப் புத்தகங்களில் தங்களில் ஒட்டுமொத்த வாழ்வையும் சிலர் அடகு வைத்திருப்பதை பார்க்கின்றோம்.

ஆண்டுக்கொரு முறையோ அல்லது இரு முறையோ, யாரேனும் இறந்து விட்டாலோ, அல்லது ரமலான் வந்து விட்டாலோ குர்ஆனைத் திறப்பவர்கள் மவ்லிது கிதாபுகளைத் தினந்தோறும் பக்தியோடு அணுகக் கூடிய காட்சிகளைப் பார்க்கின்றோம்.

இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத, இணைவைப்புக் கொள்கையை உள்ளடக்கிய மவ்லிதுக் கிதாபுகளை விட்டொழிப்போம். குர்ஆன் எனும் நம் இறைவேதத்தோடு தோழமை கொள்வோம்.

குர்ஆனை அரபு மொழியில் ஓதி, நன்மைகளை மலைச் சிகரங்களாக மறுமைக்குச் சேமிப்போம். பொருளுணர்ந்து படிப்பதன் மூலம் இறையச்சத்தைப் பெற்று, நரகத்திற்கான கேடயத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.

—————————————————————————————————————————————————————————————————————

நஜ்ஜாஷியின் கண்களை நனைத்த குர்ஆன் நமது கண்களை நனைக்காதது ஏன்?

இன்று ஊடகங்களின் இருபத்து நான்கு மணி நேர சேவையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்ற அலைவரிசைகளில் மக்கள் கவனத்தை அதிகம் கவர்ந்திழுப்பவை நகைச்சுவைக் காட்சிகள் தான். அந்த அளவுக்கு மக்கள் தங்களை மறந்து சிரிப்பில் மூழ்கிக்கிடப்பதை பார்க்கின்றோம்.

உயர் தரமிக்க உலக இலக்கிய நூல்கள், உன்னதமான காவியங்கள் எல்லாம் சிரிப்புக்கு ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத்து, அதற்கு உரமூட்டி, உற்சாகமூட்டி, உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கையில் சிரிப்பை ஓரங்கட்டி விட்டு, அழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒற்றை வேதம் உண்டென்றால் அது திருக்குர்ஆன் தான்.

இலக்கியம் என்றால் அதில் நகைச்சுவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் நகைச்சுவைக்கு இடமளிக்காமல் உலக இலக்கிய நூல்களின் மகுடத்தில் திருக்குர்ஆன் நின்று கொண்டிருக்கின்றது.

உலகில் என்னைப் போல் ஒரு வேதமுண்டா? அப்படியிருந்தால் ஒரு வசனத்தைக் கொண்டு வா பார்ப்போம் என்று உலகை நோக்கி அறைகூவல் விடுக்கின்றது.

இது திருக்குர்ஆனின் ஓர் அற்புதமாகும்.

அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும்!

அல்குர்ஆன் 9:82

அழட்டும் என்று சொன்ன வேதம், காந்தத்தை மிஞ்சிய தன் ஈர்ப்பு விசையின் மூலம் மக்களின் இதயங்களை ஈர்த்து அழவும் வைத்தது. அது எப்படி என்று அறியவும் அவர்களின் இதயங்களை ஈர்த்த குர்ஆன் நமது இதயங்களை ஏன் ஈர்க்கவில்லை? அவர்களை அழ வைத்த குர்ஆன் நம்மை ஏன் அழ வைக்கவில்லை என்று நம்மை உரசிப் பார்க்கவும் திருக்குர்ஆனின் மாநாட்டை முன்னிட்டு இந்தக் கட்டுரையை ஏகத்துவ மாத இதழ் உங்கள் கவனத்திற்குத் தருகின்றது.

இறைமறுப்பாளர்களை ஈர்த்த இனிய குர்ஆன்

நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய கால கட்டத்தில், தங்களுக்கு மக்காவில் இறை நம்பிக்கையுடன் வாழ்வதற்கு வழியில்லை, வாய்ப்பில்லை என்று தெரிந்து ஜஃபர் பின் அபீதாலிப் தலைமையில் நபித்தோழர்கள், தோழியர்கள் அடங்கிய ஒரு கூட்டம் அபீசீனியாவில் அடைக்கலம் தேடிச் சென்றனர்.

அபீசீனியாவின் மன்னர் நஜ்ஜாஷியின் முன்பு ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற தூய ஏகத்துவக் கொள்கையையும் அதற்காகத் தங்கள் மீது மக்கா இறை மறுப்பாளர்கள் தொடுத்த அக்கிரமங்கள் அநியாயங்கள் அத்தனையையும் பட்டியலிட்டு ஒரு சொற்பொழிவையே நிகழ்த்தி விடுகின்றார்கள்.

ஜஃபர் (ரலி)யின் உரை வெறும் சொற்பொழிவாக அல்லாமல் வஹீயின் வான்மழைப் பொழிவாக அமைந்தது. அவரது உரை வீச்சின் வசீகரத்தில் வயப்பட்டுப் போன நஜ்ஜாஷி மன்னர், முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வஹீயின் வேத வசனங்கள் ஏதேனும் இருக்கின்றதா? என்று வினவுகின்றார்கள்.

ஜஃபர் (ரலி) அவர்கள் உரை வடிவில் பொழிந்ததும் பிழிந்து கொடுத்ததும் வஹியின் சாறைத் தான்! அதுவே அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது என்றால் வஹீயின் வெளிப்பாடான குர்ஆனின் வசனங்கள் அவரது உள்ளத்தை எப்படிக் கொள்ளை கொள்ளாமல் இருக்கும்?

அல்குர்ஆனின் வசனங்கள் ஏதேனும் இருக்கின்றதா? என்று மன்னர் நஜ்ஜாஷி கேட்ட மாத்திரத்தில் ஜஃபர் (ரலி) சமயோசிதத்துடனும் சபை பொருத்தத்துடனும் குர்ஆன் வசனங்களை எடுத்துப் போடுகின்றார்கள்.

ஆம்! நஜ்ஜாஷி கிறிஸ்துவர் அல்லவா? அதற்கேற்பவும் பாதிரிகள், மந்திரிகள், படையினர் அமர்ந்திருக்கும் அந்த அவைக்கேற்பவும் காஃப், ஹா, யா, ஐன், ஸாத், திக்ர் ரஹ்மத்தி ரப்பிக்கஎன்று துவங்குகின்ற மர்யம் (19வது) அத்தியாயத்தின் துவக்க வசனங்களை ஓத ஆரம்பிக்கின்றார்கள்.

ஏற்கனவே ஜஃபர் (ரலி)யின் உரை வீச்சில் வயப்பட்டுப் போன மன்னர் நஜ்ஜாஷி, இதயங்களை ஈர்க்கின்ற குர்ஆனின் ஈர்ப்பு விசையிலும் முற்றிலும் தன் இதயத்தை இழந்து விடுகின்றார். அவர் வான்மறை வசனங்களின் வசமானார். வாசமிக்க அல்குர்ஆனின் வாசகரானார். அதன் அடையாளமாக அவரது கண்கள் அருவியாகி விடுகின்றன. வழிந்தோடி வரும் கண்ணீரில் அவரது தாடியே நனைந்து விடுகின்றது.

அவர் மட்டுமல்ல! அவையில் அமர்ந்திருந்த பாதிரிகளும், பரிவாரங்களும் அழுதனர். அவர்கள் முன் விரிந்து கிடந்த ஏடுகளும் நனைந்தன என்றால் அவர்களின் கன்னக் கதுப்புகளில் வடிந்த கண்ணீரின் பரிமாணத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

நஜ்ஜாஷி மன்னர் தழுவியிருந்த மார்க்கத்தைக் கருத்தில் கொண்டு, புத்திசாலித்தனமாக மர்யம் அத்தியாயத்தை ஓதிய ஜஃபர் (ரலி)யின் மதிப்பீடு உரிய பலனை பெற்றுத் தந்தது. முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்த குர்ஆனும் மூஸா அலைஹி அவர்கள் கொண்டு வந்த தவ்ராத்தும் ஓரே மாடத்தில் உதித்த ஜோதி தான் என்று ஜஃபர் (ரலி)யிடம் மன்னர் நஜ்ஜாஷி தெரிவித்தார். (ஹதீஸ் சாராம்சம்)

நூல்: முஸ்னத் அஹ்மத் 1649

மன்னர் நஜ்ஜாஷி வடித்த கண்ணீர், இதோ நாம் பார்க்கின்ற இந்த வசனங்களுக்கு சத்திய சாட்சியாக அமைந்து விட்டது.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!’’ என அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 5:83

பாக்கியம் பெற்ற நஜ்ஜாஷி மன்னர்

நஜ்ஜாஷி மன்னர் குர்ஆனின் வசனங்களைச் செவியுறும் போது முஸ்லிமாக இல்லை. கிறிஸ்தவராகத் தான் இருந்தார். கிறிஸ்துவத்தின் முக்கடவுள் கொள்கையில் நம்பிக்கை கொண்டவராகத் தான் இருந்தார். இத்தகைய நம்பிக்கையைக் கொண்டவர்கள் திருக்குர்ஆனின் பார்வையின் படி இறைமறுப்பாளர் தான்.

மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்’’ என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.

அல்குர்ஆன் 5:73

இந்த நிலையில் இருந்த நஜ்ஜாஷி அவர்கள், ஜஃபர் (ரலி) அவர்கள் ஓதிய குர்ஆன் வசனங்களைச் செவியுற்று கண்ணீர் வடித்திருக்கின்றார்கள்.

ஆனால் நாம் முஸ்லிம்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். குர்ஆன் வசனங்கள் நமது இதயத்தில் ஊடுறுவிப் பாயவில்லையே? இமைகளில் கண்ணீரை வடிக்கச் செய்யவில்லையே ஏன்? அல்குர்ஆன் வசனங்கள் ஓதப்படும் போது இறை நம்பிக்கை கொண்ட மக்கள் அழுவார்கள், முகங்குப்புற விழுவார்கள் என்று அல்லாஹ் சொல்கின்றானே! அந்தத் தாக்கம் நம்மிடம் ஏன் ஏற்படவில்லை?

இறைநம்பிக்கை என்ற வளையத்திற்குள்ளும் வட்டத்திற்குள்ளும் வராத நஜ்ஜாஷி மன்னரின் உள்ளத்தை உருகச் செய்து கண்ணீரை பெருகச் செய்த குர்ஆன் நம்மிடம் ஏன் அந்த மாற்றத்தைக் கொண்டு வரவில்லை?

அன்று குர்ஆன் ஈர்ப்பு விசையில் இலக்கானவர் இறுதியில் இஸ்லாத்தைத் தழுவி, முஸ்லிமாகவே இறப்பையும் தழுவுகின்றார். அன்னாரின் மரணச் செய்தியை அறிவித்து அண்ணல் நபி (ஸல்) அவருக்காகப் பாவமன்னிப்பு தேடச் சொல்லி, காயிப் ஜனாஸா தொழுகை நடத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களை பார்க்காமலேயே தோழராகும் பாக்கியமும் நாயகம் (ஸல்) அவர்களின் ஜனாஸா தொழுகை எனும் பாக்கியமும் கிடைத்த ஒரு பாக்கியவாதியாகிவிடுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் மக்களை முஸல்லா எனும் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷி மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா தொழுகை நடத்தி)னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1328

இப்போது திருக்குர்ஆன் ஈர்த்த இன்னொரு இறை மறுப்பாளரைப் பார்ப்போம்.

ஜுபைர் பின் முத்இமை சுண்டியிழுத்த குர்ஆன்

பத்ருப் போரில் சிறை பிடிக்கப்பட்ட, தனது உறவினர்களான கைதிகளை ஈட்டுத் தொகை கொடுத்து மீட்டுச் செல்வதற்காக ஜுபைர் பின் முத்இம் என்பார், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியும் அன்றைய ஆட்சித் தலைவருமான முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்திக்க வருகின்றார்கள்.

அவர் வரும் வேளையில் மக்ரிப் தொழுகையில் தூர் என்ற அத்தியாயத்தின் வசனங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குரிய இனிய குரலில் லயித்து ஓதிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வசனங்களை செவியுற்ற ஜூபைர் பின் முத்இம் (ரலி) அளித்த பேட்டி புகாரியில் இடம் பெறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர்எனும் (52வது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். ‘(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கிறார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்களுடைய இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள் தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?’ எனும் இந்த (திருக்குர்ஆன் 52:35-, 36, 37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)

நூல்: புகாரி 4854

சிறைக்கைதிகளை மீட்க வந்தவர் தூர் அத்தியாயத்தின் இந்த வசனங்களில் சிறைக் கைதியாகின்றார் என்பதையும் இறைமறுப்பாளரான அவரது உள்ளம் சீர்மிகு குர்ஆனின் வசனங்களின் ரசிப்பிலும் லயிப்பிலும் ஈர்ப்புக்குள்ளாகி சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டது என்றும் அவரே சொல்கின்றார். அத்துடன் நிற்கவில்லை. அவரது உள்ளத்தில் அந்த வசனங்கள் ஈமானிய ஒளியைப் பற்றவும் பதியவும் வைத்து விட்டது என்றும் கூறுகின்றார்.

நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர்’ (என்னும் 52-வது) அத்தியாயத்தை ஒதிக் கொண்டிருக்க கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை என்னுடைய இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)

நூல்: புகாரி 4023

இதன் பின்னர் உஹத் போர்க்களத்தில் ஹம்சா (ரலி)யை வஹ்ஷி வீழ்த்துவதற்கு அவர் காரணமாக இருந்தாலும் (பார்க்க: புகாரி 4072) இறுதியில் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பிந்தைய காலத்தில் மக்கா வெற்றிக்கு முன்பு ஈமானிய ஜோதியில் தன்னை இணைத்துக் கொள்கின்றார். (நூல்: அல்இஸாபா)

இங்கு நாம் பார்ப்பது நஜ்ஜாஷி, ஜுபைர் பின் முத்இம் ஆகிய இருவருமே இறைமறுப்பாளர்களாக இருக்கும் போதே திருக்குர்ஆன் அவர்களை ஈர்த்திருக்கின்றது. முஸ்லிம்களாக வாழ்கின்ற நம்மை ஏன் ஈர்க்கவில்லை? ஆம்! நம்மிடம் எழுத்தில் இருக்கும் குர்ஆன் இதயத்தில் இருக்கவில்லை. உதட்டை அசைக்கும் குர்ஆன், உள்ளத்தை அசைக்கவில்லை என்பது தான் உண்மை!

இறை மறுப்பாளர்களின் உள்ளங்களை அல்குர்ஆன் உருக வைத்ததையும் அவர்களின் கண்களில் கண்ணீரைப் பெருக வைத்ததையும் பார்த்தோம். இப்போது முஸ்லிம்களின் உள்ளங்களை உருக வைத்ததையும் கண்களில் கண்ணீர் பெருக வைத்ததையும் இப்போது பார்ப்போம்.

குர்ஆன் ஓதுகையில் குளமாகும் கண்கள்

இந்தப் பண்பில் முதல் இடத்தையும் முன் வரிசையையும் பிடித்தவர்கள் நபிமார்கள் என்பதைப் பின்வரும் வசனம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது,

அவர்கள் ஆதமுடைய வழித்தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்பலில் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித்தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள்.

அல்குர்ஆன் 19:58

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்’’ என்று சொன்னார்கள். நான், “உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்’’ என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். “(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?’’ எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் நிறுத்துங்கள்’’ என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)

நூல்: புகாரி 4582

இந்தச் சமுதாயத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் இதில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதை நாம் பார்க்கின்றோம்.

அடுத்த இடத்தில் அபூபக்ர் (ரலி)…

இந்தப் பண்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அடுத்த இடத்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் பிடித்திருப்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் விளக்குகின்றது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்காவில் சுதந்திரமாக வணங்க முடியவில்லை என்று அபீசீனியாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது அவர்களை இடைமறித்து இப்னு தஃகினா என்பவர் அடைக்கலம் தருவதாக வாக்களிக்கின்றார். மக்காவிற்கு வந்ததும் சில நிபந்தனைகள் அடிப்படையில் அபூபக்ர் (ரலி) தனது வணக்கத்தைத் தொடர்கின்றார்கள். இது தொடர்பாகப் புகாரி ஹதீஸ் குறிப்பிடுவதைப் பார்ப்போம்.

அபூபக்ர் (ரலி) தமது இல்லத்திற்குள்ளேயே அல்லாஹ்வை வணங்கியும் தமது தொழுகையைப் பகிரங்கப்படுத்தாமலும் குர்ஆன் வசனங்களை வீட்டிற்கு வெளியே ஓதாமலும் இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மாற்று யோசனை தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.

அப்போது இணை வைப்பவர்களின் மனைவி, மக்கள் அபூபக்ர் (ரலி)யைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) குர்ஆன் ஓதும் போது தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கை தங்களது இளகிய மனம் படைத்த மனைவி, மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணைவைப்பவர்களான குரைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது.

நூல்: புகாரி 2297 (சுருக்கம்)

இந்தப் பண்பு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் இறுதி வரை தொடர்ந்ததைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது, “மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால் அவர்கள் அழுவதன் காரணத்தால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்’’ என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்.

மேலும் அபூபக்ர் (ரலி) உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹஃப்ஸா (ரலி) இடம் கூறினேன்.

அவர்களிடம் கூறிய போது. நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்கள் கூட்டத்தைப் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) என்னிடம் உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

 நூல்: புகாரி 716

இப்படிக் குர்ஆன் ஓதும் போது அடக்க முடியாத அளவுக்கு அழுபவர்களாக அபூபக்ர் (ரலி) இருந்துள்ளனர்.

இதுபோன்று ஏனைய நபித்தோழர்களும் அழுதுள்ளனர்.

“(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று அவர்களிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்….’’ எனும் (திருக்குர்ஆனின் 98வது) அத்தியாயத்தை உங்களுக்கு ஓதிக் காட்டும்படி அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்’’ என்று நபி (ஸல்) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “என் பெயரைக் குறிப்பிட்டா கூறினான்?’’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அழுதார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 3809

இதுவெல்லாம் எதை காட்டுகின்றது?

அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது (அல்குர்ஆன் 17:109) என்ற குர்ஆன் வசனப்படி அவர்களது வாழ்க்கை அமைந்ததைக் காட்டுகின்றது.

ஆனால் நம்மிடம் இந்தக் குர்ஆன் இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்ற இந்தப் பண்பு நம்மிடம் வரவேண்டும். அதாவது, குர்ஆனுடன் நமக்கு முழுத்தொடர்பு ஏற்பட வேண்டும். இயன்ற வரையில் அதன் பொருளுணர்ந்து ஓத வேண்டும் அப்போது தான் திருக்குர்ஆன் கூறுகின்ற இந்தப் பண்பை நாம் பெற முடியும். இந்தப் பண்பின் மூலம் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் அடைக்கலமாக வேண்டும்.

இறைவனை நினைத்து, தனிமையில் அழுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பரிசாக அளிக்கின்றான்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும், அழகும் உடைய ஒரு பெண் தம்மைத் தவறு செய்ய அழைத்த போதும், “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்’’ என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6806

குர்ஆன் கூறும் இந்தப் பண்புகளை நாமும் கொண்டிருக்கின்றோமா? என்று உரசிப் பார்ப்பதற்கும் அந்தப் பண்புகளை இனி நாம் நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்காகவுமே விழுப்புரத்தில் திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுகின்றது. எனவே, நாம் இந்த மாநாட்டில் பங்கெடுத்து நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்வோமாக!

—————————————————————————————————————————————————————————————————————

குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?

உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்று இறைவன் அக்குர்ஆனிலேயே பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். மறுமை வெற்றி திருக்குர்ஆன் வழியில் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அறிவுள்ள எவரும் அறிவர். இந்த உண்மையை முஸ்லிம் சமுதாயத்தினரும் உணர்ந்துள்ளனர். திருக்குர்ஆனைப் பற்றிப் பேசும் போது இந்த உண்மையை வெளிப்படுத்துவர். ஆனால் மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தும் பல மார்க்கத்திற்கு முரணான சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

திருக்குர்ஆனைத் தொடுவதற்கு உளூ அவசியம்! குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், இஸ்லாத்தை ஏற்காதவர்கள் போன்றோர் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது; தொடுவது ஹராம் என்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, திருக்குர்ஆனின் பக்கம் மக்கள் செல்வதைத் தடுத்து வருகின்றனர்.

முஸ்லிமல்லாத ஒருவர், திருக்குர்ஆனை ஆராய்ந்து படித்துப் பார்த்தாரேயானால் கண்டிப்பாக அவர் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வார். அந்த அளவுக்குத் திருக்குர்ஆன் எளிமையாகவும், மக்களுக்கு நேர்வழி காட்டும் வகையிலும் அருளப்பட்டுள்ளது.

ஆனால், திருக்குர்ஆனை முஸ்லிமல்லாதவர்கள் தொடக்கூடாது என்ற, மார்க்கம் கூறாத நிபந்தனையை இவர்கள் தேவையில்லாமல் திணித்ததால் அந்த மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அது தடையாக அமைந்து விட்டது.

இவ்வாறு தடுப்பதற்கு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் ஆதாரம் உள்ளதா? என்று வினவினால் அதற்கு சில ஆதாரங்களை எடுத்துரைக்கின்றனர். இந்த ஆதாரங்களின் தரம் என்ன? இவற்றை ஏற்கலாமா? என்பதைக் காண்போம்.

திருக்குர்ஆனை உளூவின்றி தொடக் கூடாது என்பதற்கு, திருக்குர்ஆனிலிருந்தே ஒரு சான்றை எடுத்து வைக்கின்றனர்.

தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.

அல்குர்ஆன் 56:79

உளூவின்றி திருக்குர்ஆனைத் தொடக்கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை எடுத்து வைக்கின்றனர். பல திருக்குர்ஆன் பிரதிகளின் அட்டை முகப்பிலும் இவ்வசனம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது.

இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள், ஆம்! திருக்குர்ஆனை உளூவின்றி, தூய்மையின்றி தொடக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள். ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது எப்போது இறங்கியது என்பதையும் திருக்குர்ஆன், நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள ‘தூய்மை யானவர்கள்’ என்றால் யார்? தொடமாட்டார்கள் என்றால் எதை? என்பதை முதலில் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை’’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

அல்குர்ஆன் 6:7

“எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்’ என்று கூறப்படுவதில் “எழுத்து வடிவில் அருளப்படவில்லை’ என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது.

தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப் பட்டிருந்தால் மட்டும் தான் ‘இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள்’ என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56:79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.

அல்குர்ஆன் 56:77-79

56:79 வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களை நீங்கள் படிக்கும் போது ஓர் பேருண்மை உங்களுக்கு விளங்கும்.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கின்ற மதிப்பு மிக்க திருக்குர்ஆன்என்று கூறுகின்றான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்என்று கூறுகின்றான்.

இப்போது அதைஎன்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப் பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற பேருண்மை தெளிவாகின்றது.

இக்கருத்தை மேலும் வலுவூட்டும் வகையில் திருக்குர்ஆனின் 80ம் அத்தியாயம் 11-16 வசனங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளன.

அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.

அல்குர்ஆன் 80:11-16

இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப் பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றிப் பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56:79 வசனத்தில் கூறப் பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56:79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.

‘தூய்மையானவர்கள்’ என்று 56:79 வசனத்தில் கூறப்பட்டுள்ளவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. அவர்கள் வானவர்கள் தாம் என்பது இவ்வசனத்திலிருந்து அறிய முடிகின்றது.

‘தூய்மையானவர்கள்’ என்பது வானவர்களையும், ‘குர்ஆன்’ என்பது வானத்தில் உள்ள குர்ஆனையும் தான் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

“அதைத் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) தொட மாட்டார்கள்’’ என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள தொடுதல் என்பது வானத்தில் உள்ள வேதமாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: தஃப்ஸீர் தப்ரீ, பாகம்: 27, பக்கம்: 205)

தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள். அதாவது வானவர்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

(நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்,

பாகம்: 4, பக்கம்: 299)

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இந்தக் குர்ஆன் ஷைத்தான்கள் கொண்டு வந்தது என்று இணை வைப்பவர்கள் குற்றம் சாட்டிய போது, இக்குர்ஆன் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற) பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்றது. இதைத் தூய்மையான வானவர்களைத் தவிர மற்றவர்கள் தொட முடியாது. அவ்வாறிருக்க ஷைத்தான் எவ்வாறு கொண்டு வர முடியும்? என்று அல்லாஹ் கேட்பது போல் இந்த வசனம் அமைந்துள்ளது.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் போது, 56:79 வசனத்தில் கூறப்பட்ட ‘தூய்மையானவர்கள்’ என்பது வானவர்கள் என்பதும், ‘அதை’ என்று கூறப்பட்டுள்ளது, வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே 56:79 வசனத்தை வைத்துக் கொண்டு, தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடலாம் என்பதற்குத் திருக்குர்ஆனுடைய பல வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன. இவ்வேதம் யாருக்காக அருளப்பட்டது? அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்தால் கூட திருக்குர்ஆனைத் தூய்மையின்றி தொடக் கூடாது என்று கூற மாட்டார்கள்.

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன. (அல்குர்ஆன் 10:57)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (அல்குர்ஆன் 2:185)

இவை போன்ற இன்னும் ஏராளமான வசனங்கள் மனித சமுதாயம் அனைவருக்கும் இந்தத் திருக்குர்ஆன் நேர்வழிகாட்டியாகத் திகழ்கின்றது என்பதைக் கூறுகின்றன. அல்லாஹ்வை ஏற்காதவன், இணை வைப்பவன் என்று எல்லா தரப்பு மக்களுக்கும் இக்குர்ஆன் நேர்வழி காட்டும் என்று கூறும் போது உளூச் செய்யாமல் இதைத் தொடக் கூடாது என்றால் அவர்கள் எவ்வாறு இக்குர்ஆனைப் படிப்பார்கள்? எப்படித் திருந்துவார்கள்?

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கி உள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:17, 22, 32, 40)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன் 47:24)

இக்குர்ஆனை அனைவரும் எடுத்துப் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் மிக எளிமையாக ஆக்கி வைத்துள்ளான். மேலும் இதை நன்றாக ஆய்வு செய்து பார்க்குமாறும் இதில் முரண்பாடுகள் உள்ளனவா? என்றும் மனித சமுதாயம் அனைவரிடமும் அல்லாஹ் கேட்கின்றான்.

மனித இனம் அனைவரும் இதைப் படிக்க வேண்டும் என்று இவ்வளவு தெளிவாக அல்லாஹ் கூறிய பிறகும் குர்ஆனைத் தொட உளூ அவசியம் என்று கூறி மாற்று மதத்தவர் மற்றும் ஆய்வு செய்ய எண்ணுபவர்களைத் தடை செய்வது இறைக் கட்டளையை மறுப்பதாக ஆகாதா?

நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை மாற்று மதத்தவர்களுக்கு எழுதி அனுப்பியுள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!’’ என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!’’ எனக் கூறி விடுங்கள்! என்ற 3:64 வசனத்தை ரோமாபுரி மன்னர் ஹெர்குலிசுக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

(பார்க்க: புகாரி எண் 7 மற்றும் 4553)

மாற்று மதத்தவர்களும் இவ்வசனங்களைப் படித்துத் திருந்த வேண்டும் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தை எழுதி அனுப்பினார்கள். தூய்மையற்றவர்கள் தொடக் கூடாது, ஓதக் கூடாது என்றிருக்குமானால் நபி (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு எழுதி அனுப்பியிருக்க மாட்டார்கள்.

நாம் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் இவற்றைப் பார்க்கும் போது திருக்குர்ஆனை எவரும் எந்நிலையிலும் தொடலாம் என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஆனால் தூய்மையின்றி திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுபவர்கள் 56:79 வசனத்துடன் சேர்த்து வேறு சில நபிமொழிகளையும் சான்றாகக் கூறுகின்றார்கள். அவை எவை? அவற்றின் தரம் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்ற கருத்தில் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி), இப்னு உமர் (ரலி), உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி), ஸவ்பான் (ரலி), அனஸ் (ரலி), ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) ஆகிய ஆறு பேர்கள் மூலம் சில செய்திகள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் முழு விபரத்தைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்று எழுதியிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீபக்ர்

நூல்: முஅத்தா 419

இதே செய்தி அபூதாவூத் அவர்களின் அல்மாரஸீல் என்ற நூலிலும், தாரகுத்னீயிலும், தப்ரானீ மற்றும் பல நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெறும் இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசை கொண்ட செய்தி அல்ல! இதில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். இச்செய்தியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் தாபியீ ஆவார். இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல! இவ்வாறிருக்க நபி (ஸல்) அவர்கள், அம்ர் பின் ஹஸ்ம் (ரலி)க்கு எழுதிய கடிதத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்க முடியாது. அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் ஒன்றோ அல்லது பல அறிவிப்பாளர்களோ விடுபட்டிருக்க வேண்டும். எனவே இவ்வகை செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் விடுபட்டவர்களில் பொய்யர்கள், பலவீனர்கள் இருக்கக் கூடும் என்பதால் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு தாபியீ, நபி (ஸல்) அவர்கள் தொடர்புடைய செய்தியை அறிவித்தால் அச்செய்திக்கு முர்ஸல் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர். எனவே தான் இமாம் அபூதாவூத் அவர்கள் தமது மராஸீல் (முர்ஸலான செய்திகள்) என்ற நூலில் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். எனவே இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு சட்டம் கூற முடியாது.

இதே செய்தி சில நூற்களில் கூடுதலாக இரண்டு அறிவிப்பாளர்கள் இடம் பெற்று தொடர்பு முழுமை பெற்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இச்செய்தியும் பலவீனமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் வாரிசுரிமைச் சட்டம், சில வழிமுறைகள், இழப்பீடு சட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன் ‘தூய்மையானவர்களைத் தவிர குர்ஆனைத் தொடக் கூடாது’ என்றும் எழுதப் பட்டிருந்தது.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஹஸ்ம் (ரலி)

நூல்: ஷுஅபுல் ஈமான் (பைஹகீ)

இதே செய்தி தாரமீ, தாரகுத்னீ ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் சுலைமான் பின் தாவூத் அல்கவ்லானீ என்பவர் இடம் பெறுகின்றார்.

ஸுஹ்ரியிடமிருந்து இவரும், இவரிடமிருந்து யஹ்யா பின் ஹம்சாவும் அறிவிக்கும் இந்த சுலைமான் பின் தாவூத் என்பவரைப் பற்றி யஹ்யா பின் முயீனிடம் கேட்கப்பட்ட போது, ‘இவர் ஒரு பொருட்டாகவே கருதப்பட மாட்டார்’ என்று கூறினார்கள்.

(நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல்,

பாகம்: 4, பக்கம்: 110)

(தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்ற முர்ஸலான) இச்செய்தி முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமானது அல்ல. (நூல்: அல்மராஸீல், பாகம் 1, பக்கம் 122)

எனவே அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) வழியாக அறிவிக்கப்படுவதில் முர்ஸல் என்ற தரத்தில் அறிவிக்கப்படுவதே சரியானதாகும். இச்செய்தியை ஆதாரமாகக் கொண்டு குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்று வாதிட முடியாது.

தூய்மையானவர்களைத் தவிர மற்றவர்கள் குர்ஆனைத் தொட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: தப்ரானீ ஸகீர் – கபீர், தாரகுத்னீ

இச்செய்தியும் ஆதாரப்பூர்வமானது இல்லை. இதில் சுலைமான் பின் மூஸா என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

சுலைமான் பின் மூஸா என்பவர் ஹதீஸ் துறையில் பலமானவர் இல்லை என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்,

பாகம் 1, பக்கம் 49)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்….. நீ தூய்மையாக இருந்தாலே தவிர குர்ஆனைத் தொடாதே!

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி)

நூல்: தப்ரானீ (கபீர்)

இச்செய்தியில் இஸ்மாயில் பின் ராபிவு என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர்.

இஸ்மாயில் பின் ராபிவு ஹதீஸில் விடப்பட வேண்டியவர் (பொய்யர்) என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்,

பாகம் 1, பக்கம் 16)

உமர் (ரலி) அவர்கள் வாளைத் தொங்க விட்டவர்களாக வெளியேறினார்கள். அப்போது அவர்களிடம், “உம்முடைய மச்சானும் சகோதரியும் மதம் மாறி விட்டனர்’’ என்று கூறப்பட்டது. உடனே அவ்விருவரிடம் உமர் (ரலி) சென்றார்கள். அங்கு கப்பாப் எனப்படும் முஹாஜிர்களில் ஒருவர் இருந்தார். அ(ங்கிருந்த)வர்கள் தாஹா என்ற அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

உங்களிடம் உள்ள அந்தப் புத்தகத்தை நான் படிக்கின்றேன்’’ என்று உமர் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அப்போது அவரது சகோதரி, “நீர் அசுத்தமானவர், இதைத் தூய்மையானவர்களைத் தவிர (யாரும்) தொட மாட்டார்கள். எனவே நீர் எழுந்து குளியும். அல்லது உளூச் செய்யும்’’ என்றார்கள். உமர் (ரலி) எழுந்து உளூச் செய்து விட்டு அவ்வேதத்திலிருந்து எடுத்து தாஹா என்ற அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூற்கள்: தாரகுத்னீ 435, பைஹகீ 417

இச்செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதை இதைப் பதிவு செய்த இமாம் தாரகுத்னீ அவர்களே அச்செய்தியின் கீழ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

(இதில் இடம்பெறும்) அல் காஸிம் பின் உஸ்மான் என்பவர் பலம் வாய்ந்தவர் இல்லை.

மேலும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இடம்பெறவில்லை. உமர் (ரலி) அவர்களின் சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நீ தூய்மையாக இருக்கும் நிலையில் தவிர குர்ஆனைத் தொடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஷாம் (ரலி)

நூல்: தாரகுத்னீ 434

இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அபூஹாத்தம் என்ற ஸுவைத் என்பவர் பலவீனமானவர்.

இவரை யஹ்யா பின் மயீன் அவர்கள் பலவீனமானவர் என்று கூறியதை நான் கேட்டேன் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள். பலமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ குறிப்பிடுகின்றார்க்ள. பலவீனமானவர் என்று இமாம் நஸயீ குறிப்பிடுகின்றார்கள்.

(நூல் : தஹ்தீபுல் கமால்,

பாகம் 12, பக்கம் 243)

திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக்கூடாது என்று நபிமொழித் தொகுப்புகளிலிருந்து அவர்கள் எடுத்துக் காட்டிய அனைத்து ஆதாரங்களும் பலவீனமானவையாக உள்ளன. எனவே இச்சான்றுகளை வைத்து திருக்குர்ஆனை தூய்மையின்றி தொடக் கூடாது என்ற முடிவுக்கு வரமுடியாது.

உளூச் செய்யாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று கூறியவர்கள் உளூ இல்லாமல் ஓதலாம் என்கின்றனர். இக்கருத்து வியப்பிற்குரிய ஒரு செய்தியாகும்.

திருக்குர்ஆனைத் தொடுவதால் நன்மை கிடைக்குமா? ஓதுவதால் நன்மை கிடைக்குமா? என்று கேட்டால், ஓதுவதால் தான் நன்மை கிடைக்கும் என்று எவரும் சொல்லி விடுவார்கள்.

ஒருவர் திருக்குர்ஆனை ஒரு நாளைக்குப் பல தடவை தொட்டுத் தொட்டுப் பார்க்கின்றார். இவருக்கு நன்மை பதிவு செய்யப்படுமா? ஓதினால் தானே நன்மை பதியப்படும்! நன்மை கிடைக்கக் கூடிய ஒரு காரியத்திற்கு (ஓதுவதற்கு) உளூ அவசியம் இல்லையென்றால் நன்மை கிடைக்காத ஒரு காரியத்திற்கு (தொடுவதற்கு) உளூ அவசியமாகுமா? சிந்தித்துப் பாருங்கள்!

திருக்குர்ஆனிடமிருந்து மக்களை தூரமாக்கும் இதுபோன்ற செயல்களை விட்டும் விலகி, அதன் பக்கம் மக்களை நெருக்கி வைப்பதற்காகவே இந்தத் திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுகின்றது.

—————————————————————————————————————————————————————————————————————

அல்லாஹ்வா? அவ்லியாவா?

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்றைய மக்காவில் வாழ்ந்த மக்களுக்கு ஒரே ஒரு ஏக நாயனை மட்டும் வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான்.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

ஆனால் அவர்களோ இறந்து போன நல்லடியார்களைக் கடவுளர்களாக ஆக்கிக் கொண்டார்கள். நீங்கள் ஏன் அவர்களை வணங்குகிறீர்கள் என்ற கேள்வி அவர்களிடம் முன் வைக்கப்பட்ட போது அவர்கள் அளித்த பதிலை திருக்குர்ஆன் கூறுகின்றது.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 39:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

இன்றைய முஸ்லிம்களும் தங்கள் தேவைகளுக்கு அவ்லியாக்களைத் தான் அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றார்கள். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் ஏன் வணங்கக் கூடாது என்று நாம் அவர்களிடம் கேட்கும் போது, அன்றைய மக்கா காஃபிர்கள் என்ன பதிலை அளித்தார்களோ அதே பதிலைத் தான் இவர்களும் அளிக்கின்றார்கள்.

இங்கு தான் அன்றைய மக்கா காஃபிர்களின் கடவுள் கொள்கையும் இன்றைய முஸ்லிம்களின் கடவுள் கொள்கையும் ஒரு மையப் புள்ளியில் சந்திக்கின்றது; ஒன்று மற்றொன்றுடன் ஒத்துப் போகின்றது. இந்த அம்சத்தில் இன்றைய முஸ்லிம்கள் குர்ஆனை விட்டு வெகு தூரம் விலகி போய் விடுகின்றார்கள்.

‘அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்’ என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் தலை தெறிக்க ஓட்டமெடுக்கின்றார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல! ஒட்டுமொத்த இந்தியாவில் வாழ்கின்ற முஸ்லிம்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். இதன் மூலம் குர்ஆன் கூறுகின்ற கடவுள் கொள்கையை விட்டும் முற்றிலும் விலகி அன்றைய மக்கா காஃபிர்கள் கொண்டிருந்த கடவுள் கொள்கையைத் தான் இவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய முஸ்லிம்களிடம் உங்களுக்கு அல்லாஹ்வின் மீது விருப்பம் அதிகமா? அவ்லியாக்கள் மீது விருப்பம் அதிகமா? என்று கேட்டால் அவர்கள் அவ்லியாக்கள் என்று தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர்கள் அவ்லியாக்கள் மீது அலாதியான பிரியத்தையும் அளவு கடந்த நேசத்தையும் கொண்டிருக்கின்றார்கள். இது மக்கா காஃபிர்களின் நம்பிக்கையை ஒத்திருக்கின்றது. அதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் தெளிவாக விளக்குகின்றான்.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

இது மக்கா காஃபிர்களின் மன நிலையைப் படம்பிடித்துக் காட்டும் வசனமாகும். இந்த நிலையை நூற்றுக்கு நூறு அப்படியே இன்றைய முஸ்லிம்களிடமும் பார்க்கலாம். அல்லாஹ் என்று சொல்லும் போது இவர்களின் உடலில் எந்த அசைவையும் பார்க்க முடியாது. ரஹ்மான் ரஹீம் என்று அல்லாஹ்வின் பெயர்களைச் சொல்லும் போது இவர்களிடம் எந்த அசைவும் தென்படாது. ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்று சொல்லும் போது கத்தஸஹுல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் (அல்லாஹ் அவரது அந்தரங்கத்தைத் தூய்மைப்படுத்துவானாக!) என்று பூரித்துப் புளங்காகிதம் அடைகின்றனர்.

அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்; அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்று சொன்னால் அன்றைய காஃபிர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதே நிலைமையை, முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு இன்று இணை வைத்துக் கொண்டிருக்கும் இவர்களிடமும் பார்க்கலாம்.

குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்.

அல்குர்ஆன் 40:12

இவை அனைத்தும் மக்கா இணை வைப்பாளர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த கோரமான வெறுப்பாகும்.

மக்கா காஃபிர்களும் இன்றைய முஸ்லிம்களும் இந்த அடிப்படையில் ஒரே கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்காவில் வாழ்ந்த அந்த மக்கள் காஃபிர்கள்; அவர்கள் மறுமையை நம்பாதவர்கள்; ஆனால் இந்த முஸ்லிம்களோ மறுமை நம்பிக்கை கொண்டவர்கள்; இவர்களும் அவர்களும் எப்படி ஒன்றாவார்கள்?

மக்கத்துக் காஃபிர்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் தெளிவான நம்பிக்கையில் இருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய காலத்து இந்த இணை வைப்பு முஸ்லிம்களை விட அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி மிக மிகத் தெளிவான நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதை நாம் திருக்குர்ஆனில் விளக்கமாகப் பார்க்கலாம்.

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அல்குர்ஆன் 43:87

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?’’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்’’ எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 43:9

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை அவர்கள் விளங்கி வைத்திருந்தனர்.

மேலும் அல்லாஹ்வை அஸீஸ், அளீம் – மிகைத்தவன், அறிந்தவன் என்பதையும் மக்கத்து முஷ்ரிக்குகள் ஒப்புக் கொண்டிருந்தனர்.

பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)’’ என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்லாஹ்வுக்கே’’ என்று அவர்கள் கூறுவார்கள். சிந்திக்க மாட்டீர்களா?’’ என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:84, 85

ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?’’ எனக் கேட்பீராக! அல்லாஹ்வே’’ என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா?’’ என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:86, 87

மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வையும், அவனது அர்ஷையும் நம்பியிருந்தார்கள் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.

பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப் படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)’’ என்று கேட்பீராக! அல்லாஹ்வே’’ என்று கூறுவார்கள். எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?’’ என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:88, 89

இந்த வசனங்கள் அனைத்தும் மக்கா காஃபிர்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன. இன்றைய முஸ்லிம்களும் இதே நம்பிக்கையைத் தான் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களிடம் வானங்கள், பூமியைப் படைத்தது யார்? உங்களைப் படைத்தது யார்? வானத்திலிருந்து மழையைப் பொழிவிப்பவன் யார்? அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டால் அல்லாஹ் என்று தான் பதிலளிப்பார்கள்.

அதே சமயம் கடுமையான ஆபத்திலும் சிக்கலிலும் மாட்டிக் கொண்டால் அல்லாஹ்வை அழைப்பதை விட்டு விட்டு, தங்களுக்குப் பிரியமான அவ்லியாக்களைத் தான் அழைப்பார்கள். இந்த விஷயத்தில் இவர்கள் மக்கா காஃபிர்களை விட்டும் வித்தியாசப்படுகின்றார்கள்; வேறுபடுகின்றார்கள். இங்கு மக்கா காஃபிர்களின் இறை நம்பிக்கை இவர்களை விட மிஞ்சி விடுகின்றது.

அல்லாஹ்வை மட்டும் அழைத்த காஃபிர்கள்

அல்லாஹ்வை இப்படியெல்லாம் நம்பியிருந்த அந்தக் காஃபிர்கள், சாதாரண காலங்களில் மற்ற தெய்வங்களை அழைத்துப் பிரார்த்திப்பார்கள். மிக நெருக்கடியான காலகட்டங்களில் அல்லாஹ்வை மட்டும் தான் அழைத்தார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் பார்க்கலாம்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 31:32

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

இப்படி சோதனையான காலத்தில் அந்தக் காஃபிர்கள் இறைவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தித்தனர். ஆனால் இன்றோ இவர்கள் சாதாரண காலத்திலும், அசாதாரண காலத்திலும் அதாவது ஆபத்துக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு நிற்கும் போதும் அல்லாஹ்வை அழைக்காமல் முஹ்யித்தீனை அழைக்கின்றனர்.

குறிப்பாகப் பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகப் பயங்கரமான கட்டம்! அந்த நெருக்கடியான, இக்கட்டான கட்டத்தில் இந்தப் பெண்கள் ‘யா முஹ்யித்தீன்’ என்று அழைக்கிறார்கள். இந்த அடிப்படையில் இவர்கள் மக்கா காஃபிர்களை விடவும் கேடு கெட்டவர்கள். இணை வைப்பில் அவர்களை விட மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். மற்ற வகையில் அவர்களுக்கு எல்லா வகையிலும் ஒப்பானவர்களாக இருக்கிறார்கள்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 39:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’’ என்றும் கூறுகின்றனர். வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

இதே வாதத்தைகளைத் தான் இன்றைய இணை வைப்பாளர்களும் முன்வைக்கிறார்கள்.

‘நாங்கள் கேட்பதை இந்த அவ்லியாக்கள் தருவார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. இவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்’ என்று மக்கா காஃபிர்கள் சொன்னதைப் போல் சொல்கிறார்கள்.

மக்கா காஃபிர்கள் அல்லாஹ்வின் படைப்பாற்றலை நம்பியிருந்தார்கள். அவர்கள் கண்களால் காணாத, மறுமையில் மட்டுமே பார்க்கக் கூடிய அர்ஷை நம்பியிருந்தார்கள்.

ஆனால் அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தார்கள்.

அந்தத் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பினார்கள்.

இந்த நம்பிக்கை கொண்டவர்களைத் தான் காஃபிர்கள், இணை வைப்பாளர்கள் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான்.

அப்படியானால் இதே கொள்கையைக் கொண்டிருக்கும் இந்த இணை வைப்பாளர்களை, எப்படி முஸ்லிம்கள் என்று கூற முடியும்?

இரத்த பந்தமான இறைத்தூதர்கள்

இன்னும் சொல்லப் போனால் தங்களது பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் எவர்களை நம்பிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! அவர்கள் மாபெரும் இறைத் தூதர்கள். இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள்.

இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்’’ என்று கூறி விட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601, 3352

இவ்விரு இறைத்தூதர்களும் சாதாரண தூதர்கள் கிடையாது. அந்த அரபியர்களின் தந்தையர்களும் ஆவர். இப்படி அவர்களது இரத்தத்துடன் இரண்டறக் கலந்த அந்தத் தூதர்களைத் தான் தங்கள் பரிந்துரையாளர்கள் என்று மக்கா இணை வைப்பாளர்கள் நம்பினர்.

அவர்கள் நம்பிய அந்த மாபெரும் இறைத் தூதர்கள் எங்கே? இறை நேசர்கள் என்ற பெயரில் இங்க இவர்கள் நம்புகின்ற சாதாரண அடியார்கள் எங்கே?

அந்த இறைத் தூதர்கள், நல்லடியார்கள் தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இவர்கள் இறை நேசர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்ற முஹ்யித்தீன், காஜா முஈனுத்தீன், ஏர்வாடி இப்ராஹீம், ஷாகுல் ஹமீது, மஸ்தான் போன்றோர்கள் இறை நேசர்கள் என்பதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கோ நேரடியாக எந்தச் சான்றும் இல்லை.

மக்கா இணை வைப்பாளர்கள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட  தூதர்களைப் பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்த போதும் அவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் தகர்த்தெறிந்து, அந்த மக்களை இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று முத்திரையிட்டு விட்டான்.

இன்றைய முஸ்லிம்களோ அந்த நபிமார்களுக்கு அருகில் கூட நெருங்க முடியாத ஆட்களை, வரலாற்றுத் தடயமே இல்லாதவர்களை, ஆதாரப்பூர்வமான வரலாற்றை இழந்து விட்ட சாதாரணமானவர்களைப் பரிந்துரையாளர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கையை இறைவன் எப்படி ஏற்றுக் கொள்வான்?

இந்த வகையில் மக்கா காஃபிர்களின் கடவுள் நம்பிக்கை சற்று உயர்வாகவும், இவர்களது நம்பிக்கை மிக மிக மட்ட ரகமானதாகவும் அமைந்து விடுகின்றது. இதன்படி பார்க்கும் போது இன்றைய முஸ்லிம்கள் மக்கா காஃபிர்களை விட கீழ் நிலையிலேயே உள்ளார்கள். மக்கா காஃபிர்கள் இன்றைய முஸ்லிம்களை விட மேலானவர்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை நிரந்தரநரகவாதிகள் என்று குறிப்பிட்டு விட்டான்.

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:161, 162

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

அல்குர்ஆன் 98:6

இந்த அடிப்படையில் பார்க்கும் போது இன்றைய முஸ்லிம்கள் மக்கா காஃபிர்களை விடவும் அதிகமான நரகத் தண்டனை பெறுவதற்குத் தகுதியானவர்களாகி விடுகின்றார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

இன்றைய முஸ்லிம்கள் என்ன தான் மறுமை நம்பிக்கை கொண்டிருந்தாலும் அந்த நம்பிக்கை, இணை வைப்பின் காரணமாகத் தகர்ந்து போய் விடுகின்றது.

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அல்குர்ஆன் 39:65, 66

இந்த எச்சரிக்கை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல! எல்லா இறைத் தூதர்களுக்கும் தான்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

அல்குர்ஆன் 6:88

இறைத் தூதர்கள் இணை கற்பித்தாலே அவர்களது அமல்கள் எல்லாம் அழிந்து போகும் எனும் போது இவர்கள் எம்மாத்திரம்?

இவர்களது இறை நம்பிக்கை, ஏனைய அமல்கள் எல்லாமே இணை வைப்பின் காரணமாக அழிந்து போய் விடுகின்றன. இவர்களது தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள், இன்ன பிற சமூக நலச் சேவைகள் அத்தனையுமே அழிந்து போய் விடுகின்றன.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் போதும். அவ்வளவு பாலும் விஷமாக மாறி வீணாகி விடுகின்றது. அது போல் இணை வைப்பவர்கள் செய்கின்ற அத்தனை அமல்களும் பாழாகிப் போய் விடுகின்றன. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

சமுதாய மக்களை இந்த இணைவைப்பிலிருந்து காப்பாற்றும் பணியில் இந்த ஜமாஅத் கடந்த முப்பது ஆண்டுகளாகக் களத்தில் நின்று பணியாற்றுகின்றது. அதில் அல்லாஹ்வின் அருளால் வெற்றியும் கண்டிருக்கின்றது.

இருப்பினும் இன்னும் அதிகமான மக்கள் இந்த இணைவைப்பில் மூழ்கிக் கிடக்கவே செய்கிறார்கள்.

குர்ஆன் கூறுகின்ற ஏகத்துவக் கொள்கையை அவர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தில் திருக்குர்ஆன் மாநாட்டை இந்த ஜமாஅத் நடத்துகின்றது. அந்த உயர்ந்த லட்சியத்திற்காக நடத்தப்படுகின்ற இந்த மாநாட்டில் சமுதாய மக்களே! குடும்பத்துடன் அணி திரண்டு வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.

—————————————————————————————————————————————————————————————————————

அவ்லியாக்கள் மறுமையில் கைகொடுப்பார்களா? கை விடுவார்களா?

அல்குர்ஆன் அளிக்கும் அழகிய விளக்கம்அதிகமான முஸ்லிம்கள் அவ்லியாக்கள் மீது அதீதமான, அலாதியான பற்றும் பாசமும் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் அவர்களின் நினைவாகப் பள்ளிவாசல்களை மிஞ்சும் அளவுக்கு வானளாவிய மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

அவற்றிற்காகக் கந்தூரிகள், சந்தனகூடுகள், கொடியேற்றங்கள் போன்றவை ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. அவர்களின் பெயரால் மீலாது விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மவ்லிதுகள் ஓதப்படுகின்றன. அந்த மவ்லிதுக்காக புலவுச் சோறு சமைக்கப்பட்டு புனிதம், புண்ணியம் என்ற பெயரில் விநியோகிக்கப்படுகின்றன.

மேலும் இப்படிக் கூட்டாக இல்லாமல் இன்னொரு பக்கம் தனித்தனியாகவும் தங்களது வீடுகளில் அவ்லியாக்கள் பெயர்களில் மவ்லிதுகள், கத்தம் ஃபாதிஹாக்கள் ஓதுவதையும் முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அவ்லியாக்களின் கதாநாயகனாக, அற்புத நாயகனாக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி பார்க்கப்படுகின்றார். அவரை அடுத்து காஜா முஈனுத்தீன், நாகூர் ஷாஹுல் ஹமீது என்று தரவரிசைப் பட்டியல் நீண்டு கொண்டு போகின்றது. தமிழக முஸ்லிம்களின் பெரும்பாலான பெயர்களில் மைதீன் (முஹ்யித்தீன் என்பதிலிருந்து மாறிய தோற்றம்), காஜா, ஷாஹுல் ஹமீது என்ற இந்த மூன்று பெயர்களைத் தாண்டி நீங்கள் பார்க்கவே முடியாது.

அதே போன்று பெண் அவ்லியாக்கள் என்று ஒரு பட்டியல் இருக்கின்றது. அவர்களுக்கும் தர்ஹாக்கள் கட்டப்பட்டு அவற்றிற்கும் கந்தூரிகள், சந்தனக் கூடுகள், கொடியேற்றங்கள் அனைத்தும் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.

முஸ்லிம் பெண்களின் பெயர்களில் செய்யது அலீ ஃபாத்திமா, பீமா என்ற பெயர் தாக்கங்கள் பெரிதும் ஆக்கிரமித்திருப்பதற்கு இது தான் காரணம்.

தர்ஹாக்கள் கட்டப்படக் கூடாது; அப்படியே கப்ருகளுக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை அப்படியே அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க அந்த தர்ஹாக்களை தரிசிப்பதெற்கென்று பெரும் சிரமத்தையும் சிக்கலையும் தாங்கிக் கொண்டு ஒரு பெரிய பயணத்தை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். உள்மாநிலம், வெளிமாநிலம், உள்நாடு, வெளிநாடு என்று இதற்கு விதிவிலக்கில்லை. இந்தப் பயணத்திற்காகப் பெரிய அளவில் பொருளாதாரத்தையும் செலவழிக்கின்றனர்.

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

அல்குர்ஆன் 2:165

அல்குர்ஆன் கூறுவது போல் அப்படியே இவர்களது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. இப்படி செல்லக் கூடிய முஸ்லிம்களில் இரு சாரார் இருக்கின்றனர்.

ஒரு சாரார் அவ்லியாக்களிடம் நேரடியாகவே கேட்கின்றனர். ‘யா கவுஸ், யா முஹ்யித்தீன், என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அவ்லியாக்களை நேரடியாக அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். மற்றொரு சாரார், அவ்லியாக்கள் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பிச் செல்கின்றனர்.

இவர்களில் முதல் சாராரின் நம்பிக்கைக்குக் குர்ஆன் என்ன பதில் சொல்கின்றது என்று பார்ப்போம்:

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:21

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:14

இறந்தவர்கள் ஒரு போதும் செவியுற மாட்டார்கள் ஒரு வாதத்திற்கு செவியுற்றாலும் அவர்கள் நாளை கியாமத் நாளையில் மறுத்து விடுவார்கள் என்று அல்லாஹ் அடித்துச் சொல்லி விட்டான்.

அவ்லியாக்கள் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பும் இரண்டாவது சாராருக்குக் குர்ஆன் சொல்கின்ற பதிலைப் பார்ப்போம்:

விசாரணை நாளில் விசாரிக்கப்படும் மலக்குகள்

நாளை மறுமையில் மக்களால் கடவுளாக ஆக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். மலக்குகள் மனிதர்களை விட வலிமையானவர்கள் என்று நாம் நன்கு புரிந்து வைத்திருக்கின்றோம். அதனால் மக்கள் மலக்குகளை அழைத்துப் பிரார்த்தனை செய்திருக்கின்றார்கள். அதற்காக வேண்டி மலக்குகள் விசாரிக்கப்படுகின்றார்கள். அல்லாஹ்வின் அந்த விசாரணையும் அதற்கு அந்த மலக்குகளின் பதிலும் இதோ:

(அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்! பின்னர் இவர்கள் உங்களைத் தான் வணங்குவோராக இருந்தார்களா?’’ என்று வானவர்களிடம் கேட்பான்.

நீ தூயவன். நீயே எங்கள் பாதுகாவலன். இவர்களுடன் (எங்களுக்குச் சம்பந்தம்) இல்லை. மாறாக, இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்’’ என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன் 34:40, 41

இங்கே தங்களைப் பரிந்துரையாளர்கள் என்றோ கடவுளாகவோ நம்பியவர்களை, அவ்வாறு நம்பி வழிபாடு செய்தவர்களை மலக்குகள் கைகழுவி விடுகின்றனர்.

விசாரிக்கப்படும் ஈஸா (அலை)

நபி ஈஸா (அலைஹி) அவர்கள் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படுகின்றார்கள். அதனால் ஈஸா நபி அவர்களும் அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்கள். அந்த விசாரணையும் அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலும் இதோ:

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!என நீர் மக்களுக்குக் கூறினீரா?’’ என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்’’ என்று அவர் பதிலளிப்பார்.

நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்’’ (எனவும் அவர் கூறுவார்.)

அல்குர்ஆன் 5:116-118

விசாரிக்கப்படும் முஹம்மத் (ஸல்)

நம்முடைய சமுதாயத்திற்குத் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களும் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். அவர்களும் கூண்டில் நிறுத்தப்படுவார்களா? என்று கேட்கலாம். இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே பதிலளிக்கின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர் களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்.

பிறகு, ‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தின் பால்) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்என்று (அவர்களை விட்டு விடும்படி) கூறுவேன். அப்போது, ‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்என்று கூறுவார்கள்.

அப்போது, நல்லடியார் (ஈஸா நபி அவர்கள்) கூறியதைப் போல், ‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே, நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்என்னும் (திருக்குர்ஆன் 05:117,-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3349

இன்று பிரபலமாக, சகல நோய் நிவாரணி போல் பாவிக்கப்பட்டு, கல்யாண வீடு முதல் கருமாதி வீடு வரை, வரவேற்பு நிகழ்ச்சிகளிலிருந்து வழியனுப்பு நிகழ்ச்சிகள் வரை ஓதப்படுகின்ற யாநபி பைத்து, யாஸய்யிதீ யாரசூலல்லாஹி குத்பியதி, சுப்ஹான மவ்லிது போன்றவற்றில் முஹம்மது (ஸல்) அவர்கள் கடவுளாக ஆக்கப்பட்டிருப்பதை, அல்லாஹ்வுக்குச் சமமாக ஆக்கப்பட்டிருப்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ளலாம்.

அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்படி ஒரு பதிலை ரப்புல் ஆலமீன் முன்னால் சமர்ப்பிக்கின்றார்கள். தன்னை மக்கள் கடவுளாக்கிய பாவத்திற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கைகழுவி விடுகின்றார்கள். இது நபிமார்கள் நிலை என்றால் மற்றவர்களின் நிலையை நாம் சொல்லவே வேண்டியதில்லை.

விசாரிக்கப்படும் நல்லடியார்கள்

இன்று முஸ்லிம்கள் நம்பியிருக்கின்ற இந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஈனுத்தீன் ஜிஷ்தி, ஷாஹுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் ஷா போன்றவர்கள் (அவர்கள் நல்லவர்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்) அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தப்படுவார்கள். அப்போது அவர்களும் இறைவன் முன்னால் மறுத்து விடுவார்கள்.

அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில் எனது அடியார்களை நீங்கள் தான் வழிகெடுத்தீர்களா? அவர்களாக வழிகெட்டார்களா?’’ என்று கேட்பான்.

நீ தூயவன். உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்’’ என்று (வணங்கப்பட்ட) அவர்கள் கூறுவார்கள்.

அல்குர் ஆன் 25:17,18

இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் புரியும்படி தெள்ளத் தெளிவாக விளக்குகின்றான்.

நீங்கள் கூறியதை இவர்கள் பொய்யாக்கி விட்டனர் (என்று இணை கற்பித்தவர்களிடம் கூறிவிட்டு, வணங்கப்பட்டவர்களை நோக்கி) தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம் (என்று கூறப்படும்.)

அல்குர்ஆன் 25:19

இந்த வசனத்தில் இவர்கள் யாரை நம்பி வந்தார்களோ அந்த அவ்லியாக்கள் இவர்களைப் பொய்யர்கள் என்று பகிரங்கமாக அந்த மஹ்ஷர் மைதானத்திலேயே மறுத்து விடுகின்றார்கள்.இப்போது அவ்லியாக்களின் பக்தர்கள் என்ன செய்ய முடியும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவ்லியாக்கள் மீது பாசம் கொண்டவர்கள் அவர்களை நேரில் கண்டதும் ‘இதோ எங்கள் அவ்லியாக்கள்’ என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள். அப்போது அவர்கள் தங்கள் பக்தர்களை நோக்கி, ‘நீங்கள் பொய்யர்கள்’ என்று சொல்வார்கள்.

இணை கற்பித்தோர் தங்கள் தெய்வங்களைக் காணும் போது “எங்கள் இறைவா! அவர்களே எங்கள் தெய்வங்கள். உன்னையன்றி அவர்களையே பிரார்த்தித்து வந்தோம்’’ என்று கூறுவார்கள். நீங்கள் பொய் சொல்கிறீர்கள்’’ என்று அவர்கள் மறுமொழி கூறுவார்கள். அன்று அல்லாஹ்விடம் சரணாகதியைச் சமர்ப்பிப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விடும்.

அல்குர்ஆன் 16:86, 87

எந்த அவ்லியாக்களை பக்தர்கள் நம்பினார்களோ அந்த அவ்லியாக்கள் அவர்களுக்குக் கைகொடுக்க முன்வரமாட்டார்கள்.

இவ்வளவு இழிவும் வேதனையும் எதனால் ஏற்பட்டது? அல்லாஹ்விடம் இவர்கள் பரிந்துரைப்பார்கள் என்ற தவறான நம்பிக்கையால் தான்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்க மாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 39:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’’ என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

ஆகிய வசனங்களில் மக்கா காஃபிர்கள் இந்த நம்பிக்கையைத் தான் கொண்டிருந்தார்கள். அந்தத் தவறான நம்பிக்கையிலிருந்து அவர்களை மீட்டெடுக்கத் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் இன்று நமது சமுதாய மக்கள் அதே கொள்கையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அந்தத் தவறான கொள்கையிலிருந்தும் நம்பிக்கையிலிருந்தும் மீட்டெடுக்கும் விதமாகத் தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் நீண்ட நாட்களாக மக்களிடத்தில் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றது.

குர்ஆன் கூறுகின்ற உண்மையான கடவுள் கொள்கையை விட்டும் விலகி நிற்கின்ற சமுதாய மக்களை, அந்தக் கொள்கையின் பக்கம் அழைப்பதற்காகத் தான் இந்த ஜமாஅத் விழுப்புரத்தில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை நடத்துகின்றது.

வலீ வேண்டுமா? பரிந்துரையாளர் வேண்டுமா?

தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ இல்லை’’ என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.

அல்குர்ஆன் 6:51

அல்லாஹ் தன்னையே வலிய்யாகவும் பரிந்துரையாளனாகவும் ஆக்கச் சொல்கின்றான்.

அவ்லியாக்கள் எங்களுக்கு வக்கீலாக வாதிடுவார்கள் என்று ஒரு வாதம் வைக்கின்றார்கள்.

(அவன்) கிழக்குக்கும், மேற்குக்கும் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. எனவே அவனையே பொறுப்பாளனாக்கிக் கொள்வீராக!

அல்குர்ஆன் 73:9

கிழக்கிற்கும் மேற்கிற்கும் அதிபதியான தன்னையே வக்கீலாக எடுத்துக் கொள்ளச் சொல்கின்றான். அவனையே வலிய்யாகவும் வக்கீலாகவும் ஆக்கிக் கொள்ள அழைக்கும் அந்தக் குர்ஆனின் கட்டளையைப் பின்பற்ற அழைப்பதற்காகவே திருக்குர்ஆன் மாநாடு!

குர்ஆன் கூறும் கடவுள் கொள்கையைக் கடைப்பிடித்திட குடும்பத்துடன் இம்மாநாட்டிற்கு வாருங்கள் என்று அன்புடன் இம்மாத இதழ் உங்களை அழைக்கின்றது.

—————————————————————————————————————————————————————————————————————

தக்லீதைத் தகர்த்தெறியும் திருக்குர்ஆன்

மனித சமுதாயம் நேரான வழியில் செல்வதற்காக அல்லாஹ் இறுதித் தூதராக முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்கு அல்குர்ஆன் என்ற இறைவேதத்தையும், ஏனைய மார்க்க ஞானங்களையும் இறைவன் வழங்கி அதனையே உலகம் அழியும் வரை தோன்றும் மக்கள் பின்பற்ற வேண்டிய இஸ்லாம் எனும் மார்க்கமாகவும் ஆக்கினான்.

ஆனால் இறைவனின் நேர்வழியை மனித சமுதாயத்திற்குப் போதித்த இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, எவர்களின் சொற்களும், செயல்களும் மார்க்க ஆதாரமாகக் கொள்ளப்படாதோ அவர்களின் சுய கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றும் சூழல் இஸ்லாமிய சமூகத்தில் அதிகமானவர்களிடம் ஊடுருவியது.

‘‘பின்பற்றுவதற்குத் தகுதியில்லாதவர்களின் சுய கருத்துக்களையும், செயல்களையும் மார்க்க ஆதாரமாகக் கொள்வது தான் ‘‘தக்லீத்” என்பதாகும். இதனைக் ‘‘கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல்” என்றும் பொருள் செய்கின்றனர்.

அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதர் ஆகிய இருவரின் வழிகாட்டுதல்களைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதல்களும் மார்க்க ஆதாரமாகாது.

இதனைத் திருமறைக் குர்ஆன் ஏராளமான வசனங்களில் மிக மிக வலிமையாக எடுத்துரைக்கின்றது. சான்றிற்காக சில வசனங்களை இங்கே காண்போம்.

அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்

(அல்குர்ஆன் 7:158)

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக

(அல்குர்ஆன் 3:311)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக

(அல்குர்ஆன் 3:32)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்’’ என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 24:51, 52)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 9:36)

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 4:65)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களிலெல்லாம் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 1560

இது போன்ற ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை திருமறைக் குர்ஆன், நபிகள் நாயகத்தின் மார்க்க வழிகாட்டுதல்கள் ஆகிய இரண்டு மட்டும் தான் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதற்கு நேர் எதிரானது தான் தக்லீத் ஆகும்.

இஸ்லாமிய சமூகத்தில் ஊடுருவிய தக்லீத்

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு பின்பற்றுவதற்குத் தகுதியில்லாதவர்களின் சுய கருத்துக்களையும், செயல்களையும் மார்க்கமாகப் பின்பற்றும் தக்லீத் எனும் இந்தக் கொடிய நோய் இஸ்லாமியர்களிடம் படிப்படியாக ஊடுருவியது.

இன்றைக்கு ஸலபிக் கொள்கை என்ற பெயரிலும், மத்ஹபுகள் என்ற பெயரிலும் தரீக்காக்கள் என்ற பெயரிலும், தப்லீக் ஜமாஅத் என்ற பெயரிலும் தக்லீதின் கோரப்பிடியில் ஏராளமான முஸ்லிம்கள் சிக்கித் தங்களுடைய மறுமை வாழ்வைச் சீரழிக்கும் கொள்கையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

தவ்ஹீதை அடிப்படையாகக் கொண்டுள்ளோம் என்று கூறுபவர்களில் சிலரிடமும் இந்த தக்லீத் எனும் துர்வாடை வீசிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் தவ்ஹீதை முகமூடியாகப் பயன்படுத்துகிறார்களே தவிர உண்மையான தவ்ஹீத்வாதிகள் அல்லர்.

நபித்தோழர்களாக இருந்தாலும், இமாம்களாக இருந்தாலும், மார்க்க அறிஞர்களாக இருந்தாலும் குர்ஆன், சுன்னாவின் ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கூறும் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் குர்ஆன், சுன்னாவை ஆதாரமாக வைத்து ஒருவர் ஒரு கருத்தைக் கூறினால் அது அவருடைய சொந்தக் கருத்தல்ல. திருக்குர்ஆனிலும், சுன்னாவிலும் உள்ளடங்கியுள்ள ஞானத்தையே அவர் எடுத்துரைக்கின்றார்.

அதே நேரத்தில் குர்ஆன் சுன்னாவில் இல்லாத கருத்துக்களையோ, அல்லது தன்னுடைய சுய கருத்துக்களையோ மார்க்கம் என்ற பெயரில் ஒருவர் கூறினால் அதனை நாம் மார்க்க அடிப்படையில் உள்ளதா என்பதைச் சிந்திக்காமல் பின்பற்றினால் நிச்சமயாக அது நம்மை நரகத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இன்றைக்கு ஸலபிக் கொள்கை என்று சொல்லிக் கொள்வோரில் அதிகமானவர்கள் குர்ஆன், சுன்னாவின் ஆதாரமின்றி ஸஹாபாக்கள் கூறியவற்றையும் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகெட்ட கொள்கையில் செல்கின்றனர்.

அதுபோன்று மத்ஹபுவாதிகள், குர்ஆன் சுன்னாவில் இல்லாவிட்டாலும், குர்ஆன் சுன்னாவிற்கே எதிராக இருந்தாலும் தங்களுடைய மத்ஹபு இமாம்கள் சொன்னவற்றையே மார்க்கமாகக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உச்சகட்ட தக்லீதில் ஊறித் திளைக்கின்றனர்.

அது போன்றுதான் தரீக்காவிலும், தப்லீக்கிலும் மனிதர்களின் மனோஇச்சைகள் மட்டுமே மார்க்கம் என்ற பெயரில் அதிகம் போதிக்கப்படுகின்றது. அதனை அவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றி தக்லீதின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர்.

தக்லீத் செய்வது வழிகேடே!

மார்க்கத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. (அல்குர்ஆன் 12:40)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

(அல்குர்ஆன் 5:44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 5:45)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

(அல்குர்ஆன்5:47)

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

(அல்குர்ஆன் 42:21)

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

(அல்குர்ஆன் 9:31)

மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும் அல்லாஹ் அருளியதின் அடிப்படையில் தான் தீர்ப்பளிக்க வேண்டும், மார்க்கச் சட்டங்கள் எடுக்க வேண்டும் என்பதையும் இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றக் கூடாது என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

குறிப்பாக, 9:31வது வசனத்தில் கிறத்தவர்கள் தங்களது மதபோதகர்களையும், பாதிரிகளையும், ஈஸா (அலை) அவர்களையும் கடவுள்களாக்கினர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

கிறித்தவர்கள் ஈஸா நபியைக் கடவுளாக வணங்குகின்றனர். எனவே அவர்கள் ஈஸாவைக் கடவுளாக்கி விட்டனர் என்பதன் பொருளை நாம் நேரடியாகவே விளங்கிக் கொள்ளலாம்.

மதபோதகர்களையும், பாதிரிமார்களையும் கடவுளாக்கிக் கொண்டனர் என்பதன் பொருள் என்ன?

அந்த மதபோதகர்கள், மற்றும் பாதிரிகளின் சுய கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றுவதைத் தான் அவர்களைக் கடவுளாக்குதல் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்தின் மையக் கருவைச் சிந்தித்தாலே குர்ஆன், சுன்னா ஆதாரம் இல்லாமல் நபித்தோழர்கள், இமாம்கள், மார்க்க அறிஞர்கள் என்று யாருடைய சுய கருத்தை மார்க்கமாகக் கருதிப் பின்பற்றினாலும் அது அவர்களைக் கடவுளாக்குதல் எனும் நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும்.

அல்லாஹ்வின் வேதக் கட்டளைகள், அல்லாஹ்விடம் இருந்து நபி (ஸல்) அவர்கள் பெற்றுத் தந்த வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைத் தவிர வேறு யாருடைய கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்றக் கூடாது என்பதைத் திருமறைக் குர்ஆன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கின்றது.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7:3)

எனவே யாருடைய கருத்தாக இருந்தாலும் அதற்குரிய மார்க்க ஆதாரம் அறியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது மார்க்கத்திற்கு எதிரானது நாம் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

தக்லீத் செய்பவர்கள் வழிகேடர்களே!

குர்ஆன், சுன்னா ஆதாரமில்லாதவற்றை மார்க்கம் எனக் கருதிப் பின்பற்றுபவர்களிடம், ‘ஏன் இவ்வாறு தக்லீத் செய்கிறீர்கள்? இதற்கு குர்ஆனிலும், நபிவழியிலும் எந்த ஒரு ஆதாரமும் இல்லையே?’ எனக் கேட்கும் போது அவர்கள், ‘நபித்தோழர்கள் இவ்வாறு செய்துள்ளனர், எங்கள் இமாம்கள் இவ்வாறு வழிகாட்டியுள்ளனர், மார்க்க அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்’ என்ற ஒற்றைப் பதிலையே மறுப்பாகக் கூறுகின்றனர்.

உண்மையில் மார்க்க விஷயத்தில் இவ்வாறு முன்னோர்கள் மீதும் அறிஞர்கள் மீதும் பழி போட்டுத் தப்பிப்பது காஃபிர்களின் வழிமுறையாகும்.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு எதிராகக் காஃபிர்கள் இது போன்ற பதிலையே கூறினர்.

நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?’’ என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்டபோது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்’’ என்று அவர்கள் கூறினர். நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்’’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 21:52-54)

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படும் போதெல்லாம் வழிகேடர்கள் ‘தங்களது முன்னோர்கள் அவ்வாறு செய்தனர்’ என்ற சொத்தை வாதத்தையே பதிலாகக் கூறியுள்ளனர் என திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது. இதனைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்‘’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏகஇறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 2:170, 171)

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்’’ என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன் 5:104)

இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வேதத்தை நாம் கொடுத்தோமா? அதை அவர்கள் (இதற்குரிய சான்றாக) பற்றிப் பிடித்துக் கொண்டார்களா? அவ்வாறில்லை! எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளில் நடப்பவர்கள்’’ என்றே கூறுகின்றனர்.

இவ்வாறே உமக்கு முன் ஒரு ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்’’ என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதை விட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? என (எச்சரிக்கை செய்பவர்) கேட்டார். எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே’’ என்று அவர்கள் கூறினர். எனவே அவர்களைத் தண்டித்தோம். பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!

(அல்குர்ஆன் 43:21-25)

மேற்கண்ட வசனங்களில், ‘முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் என்று கூறியவர்கள் காஃபிர்கள், அவர்கள் எந்த முன்னோர்களைப் பின்பற்றினார்களோ அவர்களும் காஃபிர்கள், ஆனால் நாங்கள் ஸஹாபாக்களையும், இமாம்களையும், மார்க்க அறிஞர்களையும் தானே ஆதாரமாகப் பின்பற்றுகிறோம். எனவே அவர்களுடன் எங்களை எப்படி ஒப்பீடு செய்யலாம்?’ என தகலீத் செய்பவர்கள் கேட்கலாம்.

இன்றைய தக்லீத்வாதிகளுக்கும், மேற்கண்ட இறைவசனங்களில் கூறப்படும் தக்லீத்வாதிகளுக்கும் உள்ள பொதுவான விஷயமே இறைச் சட்டங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் இருந்ததுதான். இரு சாராருமே இறைச் சட்டங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் மனிதர்களின் சுய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் இதிலுள்ள பொதுவான அடிப்படையாகும்.

இதனைப் புரிந்து கொண்டாலே இன்றைய தக்லீத்வாதிகளுக்கும் இவ்வசனங்கள் பேரிடியாக அமைந்துள்ளன என்பதைச் சிந்தனையாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

சிந்திக்கத் தூண்டும் திருக்குர்ஆன்

திருமறைக் குர்ஆன், அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மட்டுமே கட்டுப் படவேண்டும் என்பதை ஏராளமான வசனங்களில் எடுத்துரைக்கின்றது. இதற்குரிய ஆதாரங்களை நாம் முன்னர் கண்டோம். யாருடைய கருத்தாக இருந்தாலும் அது குர்ஆன் சுன்னாவிற்கு ஒத்திருக்கின்றதா? என்பதை ஆய்ந்தறிந்தே பின்பற்ற வேண்டும் எனவும் திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.

ஒருவர், குர்ஆன் சுன்னாவிலிருந்து நான் ஆய்வு செய்து கூறுகிறேன் என்று ஒரு புதிய கருத்தை முன்வைக்கின்றார். அதற்கு ஆதாரம் என்ற பெயரில் குர்ஆன் வசனங்களையும், சுன்னாவையும் முன்வைத்தாலும் அவர் எடுத்துவைக்கும் ஆதாரங்களில் அதற்கான சான்றுகள் இருக்கின்றதா என்று சிந்தித்து, அதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு கருத்தைக் கூறி அதற்குப் பொருத்தமில்லாத குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை வைத்தால் அக்கருத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. அந்த அறிஞர் ஆய்வு செய்தால் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பிப் பின்பற்றுவது தான் தக்லீதின் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன் வசனங்கள் எடுத்து வைக்கப்பட்டாலும் அதில் கூறப்படும் கருத்திற்குப் பொருத்தமான ஆதாரம் உள்ளதா? என்பதைச் சிந்தித்தே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 25:73)

இறை வசனங்களில் கூறப்படும் சரியான கருத்தை அறிந்து பின்பற்ற வேண்டும் எனவும் கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது என்றும் அல்லாஹ் வழிகாட்டியுள்ளான்.

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

(அல்குர்ஆன் 47:24)

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

இதிலிருந்து திருமறைக் குர்ஆன் சிந்திக்காமல் பின்பற்றுவதை மிகக் கடுமையாக எதிர்க்கின்றது என்பதை நாம் அறிந்கொள்ளலாம்.

அல்லாஹ் மனிதனுக்கு பார்வைப் புலன், கேள்விப் புலன் மற்றும் சிந்தனைத் திறனை வழங்கியுள்ளான்.

நாம் பார்க்கும் விஷயங்களையும், கேட்கும் விஷயங்களையும் சிந்தனையைப் பயன்படுத்தி சிந்தித்து அறிய வேண்டும் என்று திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் வலியுறுத்துகின்றது.

‘‘பூமியில் பயணம் செய்யுங்கள்! அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான்என்பதைக் கவனியுங்கள்!’’ என்று கூறுவீராக! பின்னர் அல்லாஹ் மற்றொரு தடவை உற்பத்தி செய்வான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 29:20)

அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன.

(அல்குர்ஆன்22:46)

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

(அல்குர்ஆன்7:179)

மேற்கண்ட வசனங்களில் உண்மையை அறிய நாம் பார்வைப் புலன், மற்றும் செவிப் புலன், சிந்தனைத் திறன் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் அவ்வாறு சிந்தனை செய்யாமல் இருப்பவர்களைக் கால்நடைகளோடும், அதை விடக் கீழாகவும் இறைவன் கூறுகின்றான். அவர்கள் நரகவாதிகள் என்றும் எச்சரிக்கை செய்கின்றான்.

தக்லீத் வாதிகளின் மறுமை நிலை

பின்பற்றத் தகுதியில்லாதவர்களின் சுய கருத்துக்களையும், வழிகெட்ட கருத்துக்களையும் பின்பற்றியவர்களின் மறுமை நிலை குறித்து திருமறைக் குர்ஆன் பல்வேறு வசனங்களில் எச்சரிக்கை செய்கின்றது. குர்ஆனைப் புறக்கணித்து, மனிதர்களின் சுய கருத்தை மார்க்கமாகப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக மறுமையில் நபி (ஸல்) அவர்களே இறைவனிடம் முறையிடுவார்கள்.

அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில் இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே’’ என்று கூறுவான். இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா? அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.) என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்’’ என்று இத்தூதர் கூறுவார்.

(அல்குர்ஆன் 25:27-30)

அது போன்று பின்பற்றத் தகுதியில்லாதவர்களை, அவர்களின் சுய கருத்துக்களை கண்மூடிப் பின்பற்றினால் நாளை அவர்கள் பின்பற்றியவர்களை விட்டும் விரண்டோடி விடுவார்கள். அவர்களும் வழிகேடர்களாக இருந்திருந்தால் இரு சாராருமே நரக வேதனையை அனுபவிப்பார்கள்.

பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும்போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும். “(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்’’ என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர்.

( அல்குர்ஆன் 2:166, 167)

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்’’ எனவும் கூறுவார்கள்.எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!’’ (எனவும் கூறுவார்கள்.)

அல்குர்ஆன் 33:66-68

இம்மையிலும் மறுமையிலும் கொடிய நாசத்தை உண்டாக்கும் இந்தக் கொடிய தக்லீத் எனும் வியாதியிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! குர்ஆன், சுன்னாவை மட்டுமே பின்பற்றி வாழக்கூடிய நன்மக்களாகவும், யாருடைய கருத்தாக இருந்தாலும் அது குர்ஆன் சுன்னாவிற்கு உட்பட்ட கருத்தா? என்பதைச் சிந்தித்து நடைமுறைப்படுத்தக் கூடிய நன்மக்களாகவும் அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————————————————————

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள்.

வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப் போட்டு விட்டான்.

கார் டிரைவர் வேலைக்கு வந்தேன்; ஆனால் எனது கஃபீல் என்னை காட்டில் ஆடு, ஒட்டகம் மேய்க்கும் வேலையில் தூக்கிப் போட்டு விட்டான்.

கம்பெனியில் மேனேஜர் என்று சொல்லி என் ஏஜண்ட் என்னை அனுப்பி வைத்தான்; இங்கு என்னை சமையல் வேலையில் தள்ளி விட்டான்.

எட்டு மணி நேர டூட்டி, இரண்டு மணி நேரம் ஓட்டி (ஓவர் டைம்) என்றார்கள்; ஆனால் இங்கு 18 மணி நேர டூட்டி; உண்ண உணவில்லை; உறங்க நேரமில்லை. பகல் நேரத்தில் கடுமையான வெயில்! இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிர்!

அதனால் இங்கிருந்து தப்பிப்பதற்கும் தாயகம் திரும்புவதற்கும் என்ன வழி? ஏது வழி? இந்த வேதனையிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா? இந்தச் சோதனையிலிருந்து விமோசனம் கிடைக்குமா என்று அழுது புலம்புவான்.

தன் சொந்தபந்தம், தனது ஊர், மாவட்டம், மாநிலம், நாடு என்று ஒவ்வொரு வட்டமாக உதவி தேடி அணுகுவான். தன்னை விடுவிக்கவும் அந்த வெளிநாட்டிலிருந்து வெளியேற்றவும் முயற்சி செய்வான். இப்படித் தனக்கு வாய்க்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்துவான். தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் தப்புவித்துக் கொள்ளவும் அத்தனை வாசல்களிலும் போய் கதவை தட்டுவான். வேறு எந்த வழியும் இல்லையென்றால் இதற்கு அரபகங்களில் இருக்கின்ற ஒரே வழி சிறையில் மாட்டுவது தான். அப்படி சிறையில் மாட்டி தாயகத்திற்குத் திரும்பி விடுவான்.

இப்படி மானத்தை, மரியாதையை இழந்தேனும் அடுத்தவர் கையைப் பிடித்து காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்டாவது அரபு நாட்டிலிருந்து தப்பி, தாயகம் திரும்பி விடுவான். இது இம்மையில் ஏற்படும் ஒரு சோதனை. இப்போது இந்த நிலையை மறுமையோடு சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.

மனிதனின் மறுமையை நோக்கிய பயணத்தில் முதன் முதலில் அவன் சந்திப்பது மரணவேளை தான். அந்த மரணவேளையில், உயிர் கைப்பற்றப்படும் போது மறுமை என்றால் என்னவென்று கண்ணெதிரே பார்த்து விடுகின்றான். அப்போது அவன் வைக்கின்ற கோரிக்கை இது தான்.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99,100

மரணத் தறுவாயிலேயே ஊருக்கு, உலகுக்குத் திரும்ப அனுப்பி வையுங்கள் என்று கேட்கவும் கெஞ்சவும் ஆரம்பித்து விடுவான். ஆனால் அவனது இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விடும்.

தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்’’ எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 4:18

மறுமையில் எழுப்பப்பட்டவுடன், நரகத்தைப் பார்த்தவுடன் அந்தக் காட்சியை திருக்குர்ஆன் இதோ படம் பிடித்துக் காட்டுகின்றது.

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.

அல்குர்ஆன் 70:11-14

குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, “எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்’’ என்று கூறுவதை நீர் காண வேண்டுமே!

அல்குர்ஆன் 32:12

நரகின் முன்னே அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் நாங்கள் திரும்ப அனுப்பப்படலாகாதா? எங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்யெனக் கருதாமல், நம்பிக்கை கொண்டோராக ஆவோமே’’ என்று கூறுவார்கள். மாறாக, இதற்கு முன் அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டதையே மீண்டும் செய்வார்கள். அவர்கள் பொய்யர்களே.

அல்குர்ஆன் 6:27, 28

வெளிநாட்டு வாழ்க்கையையும், மறுமையில் ஏற்படும் நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த உலகிற்குத் திருப்பி அனுப்புமாறு கெஞ்சுகின்றான். ஆனால் அவனது கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது.

ஒருவன் தனது மரண வேளையின் போது துவங்கும் இந்தக் கெஞ்சல் அடுத்தடுத்து அவன் சந்திக்கின்ற ஒவ்வொரு கட்ட வேதனையிலும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

பணமும் பந்தமும் பயனளிக்காத நாள்

நரகத்தின் காட்சி அப்படி ஒரு காட்சி. அது ஓர் அகோரக் காட்சி. மனிதனை ஆட்டங்காணவும் அதிரவும் வைக்கின்ற காட்சி. அவன் காண்கின்ற அந்த நரகத்தின் அகோரமும் ஆர்ப்பரிப்பும் அது எழுப்புகின்ற அபாயகரமான ஒலியும் அதற்கு ஈடாகப் பூமி நிறைய பொன்னும் பொருளும் இருந்தாலும் அவற்றைக் கொடுத்து, தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைப்பான். ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

அநீதி இழைத்தோருக்கு பூமியில் உள்ளவை அனைத்தும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கும் இருக்குமானால் கியாமத் நாளில் தீய வேதனைக்கு ஈடாகக் கொடுப்பார்கள். அவர்கள் எண்ணிப் பார்க்காதவை அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும்.

அல்குர்ஆன் 39:47

அப்போது அவர்கள் தங்கள் வாழ்நாளில் பேசியதை எடுத்துக் கூறி நரகத்தை வேதனையை அனுபவியுங்கள் என்று இறைவன் பதில் அளிப்பான்.

இதற்கு முன் அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டதையே மீண்டும் செய்வார்கள். அவர்கள் பொய்யர்களே.

நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்’’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

தமது இறைவன் முன் அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் இது உண்மையல்லவா?’’ என்று இறைவன் கேட்பான். ஆம். எங்கள் இறைவன் மீது ஆணையாக! (உண்மையே)’’ எனக் கூறுவார்கள். நீங்கள் (என்னை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!’’ என்று (இறைவன்) கூறுவான்.

அல்குர்ஆன் 6:28-30

இப்போது அவன் நரகத்தில் தூக்கி வீசப்படுவான். அப்போது அவனிடம் மலக்குகள் எழுப்புகின்ற கேள்வியும் அவன் அளிக்கின்ற பதிலையும் பாருங்கள்.

அதில் அவர்கள் போடப்படும்போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கடும் இரைச்சலைச் செவியுறுவார்கள்.

கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?’’ என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அதற்கவர்கள் ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்’’ எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 67:7-9

(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராகத் தறிகெட்டு ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.

மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்’’ என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?

அல்குர்ஆன் 14:43, 44

அரபு நாட்டிலிருந்து தப்பி வர முனைந்தது போன்றும் முயற்சித்தது போன்றும் இப்போது நரகத்திலிருந்து தப்பி வர நினைக்கின்றான். ஆனால் நரகத்திற்குத் திரும்ப அனுப்பப்பட்டு விடுகின்றான்.

ஒரு நாள் விடுமுறை வேண்டி விண்ணப்பம்

வேதனையிலிருந்து ஒரு நாள் விடுமுறைக் கோரி நரகத்தின் அதிகாரிகளிடம் விண்ண்ப்பிக்கின்றனர்.

உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்’’ என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 40:49

அதற்கு நரகத்தின் அதிகாரிகள் சொல்கின்ற பதில் இதோ:

உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?’’ என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்’’ என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

அல்குர்ஆன் 40:50

எரியும் நெருப்பில் எறியப்பட்டதும் அங்கும் அவன் ஊருக்கு, உலகுக்கு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சுவான்.

எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?’’ என்று அவர்கள் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 40:11

மரணத்தைக் கேட்டு மன்றாடும் அவலம்

தப்பிக்க வழியில்லை எனும் போது மரணத்தைக் கேட்டு மன்றாடுவார்கள். அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்படுகின்றது.

“(நரகக் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்களுக்கு எதிராக (மரணத்தை)த் தீர்ப்பளிக்கட்டும்’’ எனக் கேட்பார்கள். நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்’’ என்று அவர் கூறுவார்.

அல்குர்ஆன் 43:77

இவை அத்தனை வசனங்களுமே ஒருவன் நரகில் கிடந்து கொண்டு ஊருக்கு, உலகுக்குத் திரும்ப அனுப்புங்கள் என்று கெஞ்சிக் கேட்கின்ற புலம்பல்களாகும்.

இறுதியாக இவர்களிடம் அல்லாஹ் சொல்கின்ற வார்த்தையைக் கேளுங்கள்.

எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்’’ என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை’’ (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 35:37

இவை அனைத்தும் உணர்த்தும் உண்மை ஒன்றே ஒன்றைத் தான்.

உலகில் வாழும் போது வெளிநாட்டு வேலைக்குச் சென்று, அங்கு வேலை சரியில்லை என்றதும் தப்பித்து வந்தது போல் மறுமை வாழ்க்கையிலிருந்து தப்பி வரவே முடியாது என்பதை உணர்த்துகின்றன.

முஸ்லிம்களும் சரி! முஸ்லிம் அல்லாதவர்களும் சரி! இந்த நாளைப் பற்றிக் கடுகளவு கூட அச்சமற்று இருக்கின்றனர்.

மறுமை உலகம் என்பது திரும்ப வர முடியாத ஒரு வழிப்பாதையும் ஒரு வழிப் பயணமும் ஆகும். இதை மக்களிடம் சொல்லி, அந்த நாளுக்காக நீங்கள் ஆயத்தமாகுங்கள் என்று எச்சரிப்பதற்காகவும், அந்த மறுமை வாழ்க்கையைப் பற்றி எச்சரிக்கின்ற திருக்குர்ஆனின் பக்கம் மக்களை இழுப்பதற்கும் ஈர்ப்பதற்கும் தான் இந்தத் திருக்குர்ஆன் மாநாடு. இம்மாநாட்டில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

—————————————————————————————————————————————————————————————————————

திருக்குர்ஆன் வழங்கிய பொருளாதாரத் திட்டம்

மனிதர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை ஏவுவதும், அவர்களுக்குத் தீமை விளைவிப்பதை விட்டுத் தடுப்பதும் திருக்குர்ஆன் செய்யும் பணிகளில் ஒன்றாகும்.

குர்ஆன் கூறும் பெரும்பாவங்களில் முதன்மையானது ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைக்கும் காரியம். அதன் பிறகு பெரும் பாவங்களின் பட்டியலில் முக்கியமாக இடம்பெறுவது வட்டியாகும்.

வட்டி என்பது, கொடுக்கல் வாங்கலின் போது கால இடைவெளி ஏற்படுவதால், கடனாகக் கொடுத்த தொகையை விடக் கூடுதலான தொகையை, கால இடைவெளிக்கு ஏற்ப நிர்ணயித்துப் பெற்றுக் கொள்வதாகும்.

இன்று ஏழை முதல் பணக்காரன் வரை, பாமரன் முதல் படித்தவன் வரை தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பது இந்த வட்டி எனும் பெரும் பாவத்தில் தான். வட்டியின் காரணமாக தனது பிஞ்சுக் குழந்தைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தி விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளும் பெற்றோரைப் பார்க்கிறோம்.

உலக அளவிலும் ஏழை நாடுகள் மீது பணக்கார நாடுகள் ஏகாதிபத்தியம் செலுத்துவதற்கு அந்நாடுகள் வாங்கும் கடனும், அதற்கான வட்டியுமே காரணமாக அமைந்துள்ளது.

வட்டியை இஸ்லாம் பெரும்பாவங்களில் ஒன்றாக அறிவிப்பதோடு அதை முற்றும் முழுவதுமாகத் தடை செய்கிறது.

இதன் மூலம் இந்த உலகத்திற்குத் திருக்குர்ஆன் ஒரு மாபெரும் பொருளாதாரத் திட்டத்தை வழங்குகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

அல்குர்ஆன் 2:278,279

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:275)

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான்’’ என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 2766

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3258

இவ்வாறெல்லாம் மறுமை வாழ்வை கைசேதத்திற்கு உள்ளாக்கும் பெரும்பாவமான வட்டியை இன்றைக்கு இஸ்லாமிய சமூகம் சர்வ சாதாரணமாகச் செய்து வருகிறது.

ஏழ்மை என்ற காரணம் எங்களை வட்டியை நோக்கி வீழ்த்துகிறது என்பது வட்டிக்கு வாங்குபவர்களின் உள்ளத்தில் புகுத்தப்பட்ட எண்ணம். உண்மையில், ஏழ்மை என்பது வட்டிக்கு அழைத்துச் செல்லும் காரணம் அல்ல.

வட்டியைத் தடைசெய்த நபி (ஸல்) அவர்களை விட ஏழ்மையான ஒரு மனிதரை நம் வாழ்வில் கண்டதுண்டா? தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணாமலும், இரு மாத காலங்கள் வீட்டில் அடுப்பு எரிக்காமலும், படுக்கையில் படுத்து எழுந்தால் முதுகில் கயிற்றின் காய வடுக்களை ஏந்திக் கொண்டும் தான் கழிந்தது அண்ணலாரின் வாழ்க்கை.

எனவே, ஏழ்மை என்பது வட்டிக்கு அழைத்துச் செல்லும் காரணி அல்ல. போதுமென்ற மனமில்லாமலிருப்பது தான் வட்டிக்கு அழைத்துச் செல்லும் காரணியாக இருக்கிறது.

கோடிகள் திரட்டி வைத்திருப்பவன் செல்வந்தன் அல்ல. போதுமென்ற மனம் படைத்தவன் தான் உண்மையான செல்வந்தன் என்பது இஸ்லாம் சொல்லும் தத்துவம்.

ஆனால், இன்றைக்கு இவ்வாறு போதுமென்ற மனதோடு தங்கள் வாழ்க்கையை வாழப் பழகாத மக்கள் ஆடம்பர வாழ்க்கை முறையைத் தேர்வு செய்வதால் வட்டியும் பல பரிமாணங்களில் நம் மக்களிடையே உலா வரத் தொடங்கியிருக்கிறது.

இன்றைக்கு ஒத்தி, லீஸ், அடைமானம், இன்ஸ்டால்மென்ட், ணிவிமி போன்ற பல பெயர்களால் இந்த வட்டி பெயர் மாற்றம் செய்யப்பட்டு மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற வட்டியினால் இன்று மக்கள் மானம், மரியாதையை இழந்து கடைசியில் அந்த வட்டி, குட்டி போட்டு அதைக் கட்ட முடியாமல் குடும்பத்தோடு சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பார்த்து வருகிறோம்.

இந்தப் பெரும்பாவத்திற்கு இஸ்லாமிய சமூகமும் அடிமைப்பட்டு இந்த உலக வாழ்க்கையையும் இழந்து மறுமை வாழ்க்கையையும் இழந்து கொண்டிருப்பது தான் வேதனையான விஷயம்.

வாழ்வதற்கு வசதி இல்லாமல் ஒருவன் இந்த வட்டியில் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் செல்வந்தர்களுக்கு ஸக்காத்தை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.

அடுத்து, செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வழங்கும் உதவிகளில் மிகவும் முக்கியமானது கடன் உதவியாகும். இவ்வாறு கடன் கொடுத்து உதவுவதற்குக் குறுக்கே வந்து நிற்பது வட்டி! எனவே தான் வட்டியை இஸ்லாம் வேரறுத்து எறிகின்றது. மீறி ஈடுபடுவோருக்கு நிரந்தர நரகத்தைத் தருகின்றது. அதே வேளையில் வட்டியின் மூலம் லாபத்தைக் கண்டு பழகி விட்ட மனிதனுக்கு, வட்டியில்லாமல் கடன் வழங்கினால் அதற்காக மறுமையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

“(கடன் வாங்கி சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்கினால்) கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அவர் அளித்த தொகையைப் போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா (ரலி)

நூல்: அஹ்மத்

இவ்வாறு இஸ்லாம் ஓர் அழகிய பொருளாதாரத் திட்டத்தை வழங்கி ஏற்றத்தாழ்வுகளை அகற்றுகின்றது.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லையேல் மனித வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும். ஆனால் அதே சமயம், இந்தப் பாகுபாட்டின் காரணமாக ஏழைகள் பட்டினியால் சாக வேண்டும்; பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று விட்டு விடவில்லை.

மனிதனைப் படைத்த இறைவனிடமிருந்து வந்த இயற்கை மார்க்கம் என்பதால் இஸ்லாம் இப்படியொரு பொருளாதாரத் திட்டத்தை அமைத்து அனைவரும் வாழ வழி வகை செய்கின்றது.

குர்ஆன் கூறும் இந்தப் பொருளாதாரத் திட்டத்தை உலகிற்கு அறிவிப்பதற்காகவும், குர்ஆனை விட்டு விலகி, வட்டியில் மூழ்கியிருக்கும் மக்களைக் குர்ஆனை நோக்கி அழைப்பதற்காகவுமே திருக்குர்ஆன் மாநாடு!

வான்மறைக் குர்ஆனை நமது வாழ்வியலாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்போம் இன்ஷா அல்லாஹ்!

—————————————————————————————————————————————————————————————————————

மஹரை மகத்துவப்படுத்திய  திருக்குர்ஆன்

இறைவன் இந்த உலகத்தைப் படைத்து கோடிக்கணக்கான மனிதர்களை பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் மொழி பேசுகின்ற ஒவ்வொரு தூதர்களை இறைவன் அனுப்பி மக்களுக்கு நேர்வழி காட்டியிருக்கின்றான். மேலும், தூதர்களை இறைவன் அனுப்பும் போது, சில அற்புதங்களையும் இறைவன் கொடுத்தனுப்பியிருக்கின்றான்.

அப்படிப்பட்ட தூதர்களில் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருளை அருட்கொடையாக, அற்புதமாகக் கொடுத்து, உலகம் அழிகின்ற நாள் வரை இந்தத் திருக்குர்ஆனின் போதனைகள் அடிப்படையில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

திருக்குர்ஆனில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய, வாழ்வில் செயல்முறைப்படுத்த வேண்டிய ஏராளமான உபதேசங்கள் இறைவனால் கற்றுத் தரப் பட்டிருக்கின்றது. அத்தகைய பலதரப்பட்ட அறிவுரைகளில், உபதேசங்களில் மிகமிக முக்கியமானதும், ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாததுமான காரியம் திருமணம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வில் மாற்றத்தைத் தருவதும், மன அமைதியைத் தருவதும், மனிதன் முன்னேற்றப் பாதையை நோக்கிப் பயணிக்க மிகமிக அவசியமானது திருமணம். மணவாழ்க்கை என்பது, ஒரு மனிதனின் வாழ்வைப் புரட்டிப் போடுகின்ற நிகழ்வாகும். இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே மனிதன் சென்று விடும் அளவுக்கு மன நிம்மதியை ஏற்படுத்தி விடும்.

ஒவ்வொரு மனிதனும் கெட்ட செயல்கள் செய்வதிலிருந்தும், அருவருக்கத்தக்க காரியங்களை அரங்கேற்றுவதிலிருந்தும், கேடுகெட்ட உறவுகள் வைத்துக் கொள்வதிலிருந்தும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கின்ற மாபெரும் கேடயம் இந்தத் திருமணம்.

உலகத்தில் எந்த மதமும், மார்க்கமும், சித்தாந்தமும் சொல்லாத பல்வேறு அற்புதமான வழிகாட்டல்களை, அறிவுரைகளை இந்தத் திருமணத்தின் பொழுது செயல்படுத்துவதற்காகத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இன்னும் சொல்வதாக இருந்தால், திருமணம் எப்படி நடைபெற வேண்டும்? திருமணத்தில் ஆண் மகன் செய்ய வேண்டிய காரியம் என்ன? பெண்களின் பங்கு என்ன? என்பது போன்ற பல்வேறு சட்ட திட்டங்களை ஆணித்தரமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் இஸ்லாம் ஆழப்பதிய வைக்கின்றது.

திருமணத்தின் பெயரால் நடக்கின்ற பல விதமான கேவலமான செயல்களுக்குத் திருக்குர்ஆன் மரண அடி கொடுக்கின்றது. திருமணத்தின் பெயரால் சீரழிந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்திற்குத் திருக்குர்ஆன் அற்புதமான முறையில் வழிகாட்டுகின்றது.

மஹர் – கட்டாயக் கடமை

திருமணம் முடிக்கின்ற ஆண் மகன் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான காரியம் மஹர் தொகை. மஹர் என்று சொன்னால் தன்னை நம்பி ஒப்படைக்கப்பட இருக்கின்ற மணப்பெண்ணுக்காக அதாவது, தன்னுடைய துணைவியாகக் கரம் பிடிக்கக் காத்துக் கொண்டிருக்கின்ற பெண்ணுக்காக ஆண்மகன் வாரி வழங்குவதையே மஹர் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது.

உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள்.

அல்குர்ஆன் 4:24

ஏதேனும் பொருட்களைக் கொடுத்து திருமணம் முடிக்க வேண்டும் என்றும், மணக் கொடைகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகின்றான்.

நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 5:5

கணவனில்லாத பெண்களை மணக்கும் போதும் கூட மஹர் தொகையை வழங்கியே திருமணம் முடிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் பாடம் நடத்துகின்றது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் 4:4

ஒரு ஆண் மகன் தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு மனமுவந்து மணக்கொடையைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாகப் பெண் வீட்டாரிடமிருந்து மாப்பிளை வீட்டார் அடித்துப் பிடுங்கி வரதட்சணை என்ற பெயரால் அராஜகம் செய்வதைப் பார்க்கின்றோம்.

வல்ல இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், பெண்களுக்கு வாரிவாரிக் கொடுப்பதை விட்டுவிட்டு, கையேந்தி வரதட்சணை என்ற பெயரால் பிச்சை எடுத்து வருவதைப் பார்க்கின்றோம். வரதட்சணை என்ற கேடுகெட்ட காரியத்திற்குத் திருக்குர்ஆன் சாவு மணி அடிக்கின்றது.

இழப்பிற்கு ஈடு மஹர்

ஒரு ஆண்மகன், பெண்களுக்கு ஏன் மஹர் கொடுக்க வேண்டும்? என்ற சிந்தனையற்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றைய காலகட்டத்தில், நாங்களும் திருமணத்தின் போது மஹர் கொடுக்கின்றோம் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு, பதிவுப் புத்தகத்தில் வெறுமனே பெயருக்குப் பதிய வேண்டும் என்பதற்காக சில சில்லரைக் காசுகளை மஹர் தொகையாகப் பெண்களுக்குக் கொடுத்து விட்டு, பெண் வீட்டாரிடமிருந்து இலட்சக்கணக்கான தொகையைப் பொருளாக, பணமாகப் பிடுங்கிக் கொள்கின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்.

நீங்கள் பெண்ணுக்குக் கொடுக்கின்ற 101, 201, 501, 1001 ரூபாய்கள் தான் உங்களின் வாழ்க்கைத் துணைக்கு வழங்குகின்ற மஹர் தொகையா? அவர்களின் அளப்பரிய தியாகத்திற்கும், கஷ்டத்திற்கும், சிரமத்திற்கும் நீங்கள் கோடியைக் கொட்டிக் கொடுத்தாலும் தகுமா?

வாழ்க்கை முழுவதும் உங்கள் வீட்டில் எந்தக் கூலியையும் எதிர்பார்க்காமல், குடும்பத்திலே இருக்கின்ற அத்தனை உறுப்பினர்களுக்காகவும் ஓடாகத் தேய்ந்து உழைக்கின்ற தியாகிக்கு நீங்கள் வழங்குகின்ற பரிசுத்தொகை நூற்றி ஒன்றா? சிந்திக்க வேண்டாமா?

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, உறவினர்கள் என்ற தனது ஒட்டுமொத்த குடும்பத்தார்களையும் பரிதவிக்க விட்டுவிட்டு, யாரென்றே தெரியாத ஒரு ஆண் மகனோடு, அதாவது தன்னுடைய கணவனாகக் கரம் பிடித்தவனோடு செல்கின்றாள்.

தன்னுடைய வீட்டில் அந்தப் பெண் தான் எஜமானி. அவள் நினைத்தத்தை, எண்ணிய நேரத்தில் விருப்பத்திற்கேற்ப செய்து கொள்வாள். யாரும் அவளைக் கேள்வி கேட்க முடியாது.

ஆனால் ஒரு ஆண்மகனைக் கரம் பிடித்த பிறகு, ‘இதைச் செய்! அதைச் செய்யாதே!’ என்று சொல்லி ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள்! அறிவுரைகள்!

அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த சுதந்திரமும் திருமணத்திற்குப் பிறகு பறிக்கப்பட்டு, கைதியாக மாறி விடுகின்றாள்.

தன்னுடைய வீட்டில் பெரும்பாலும் எந்த வேலையையும் செய்யாத பெண், திருமணதிற்குப் பிறகு தன்னுடைய கணவனின் வீட்டை சுத்தப்படுத்துகின்றாள், கணவனுக்குப் பணிவிடை செய்கின்றாள், கணவனின் குடும்பத்தாருக்கு சேவை செய்கின்றாள், சமைத்துக் கொடுக்கின்றாள், துணிகளை துவைத்துக் கொடுக்கின்றாள். இதுபோன்ற ஏராளமான வேலைகளையும், பணிகளையும், மன உளைச்சல்களையும் சகித்துக் கொள்கின்றாள்.

தன்னுடைய கணவனின் வாரிசைத் தன்னுடைய வயிற்றில் சுமந்து கொள்கின்றாள். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் படுகின்ற சிரமம், கஷ்டம், சோதனை, வேதனைகளை வார்த்தைகளால் சொல்லவே முடியாத அளவுக்குப் பல்வேறு விதமான துன்பத்தை அனுபவிக்கின்றாள். சரியாக நடக்க முடியாது; படுக்க முடியாது; சாப்பிட முடியாது; சாப்பிடாமலும் இருக்க முடியாது என்று சொல்லி பலதரப்பட்ட வேதனைகளைச் சுவைக்கின்றாள்.

குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் கூட, நிம்மதியற்ற வாழ்க்கை, வேதனை தொடர்கின்றது. தன்னுடைய இரத்தத்தை உணவாகத் தனது பிள்ளைக்குக் கொடுக்கின்றாள். தூக்கத்தை தியாகம் செய்து கண்ணிமை போன்று பெற்றெடுத்த பிள்ளையைப் பாதுக்காக்கின்றாள்.

இதுபோன்ற பெண்களின் ஏராளமான தியாகங்களுக்கும், சிரமங்களுக்கும் நீங்கள் கொடுக்கின்ற சில்லறைக் காசு, கால் தூசு அளவுக்கு வருமா? பெண்களின் அனைத்து தியாகங்களையும் உள்ளடக்கும் விதமாக ஒற்றை வார்த்தையில் நறுக்குத் தெறித்தாற்போன்று இறைவன் சொல்லும்போது, ‘மனமுவந்து கட்டாயமாக வழங்கி விடுங்கள்’ என்று உள்ளங்களில் ஆணித்தரமாகப் பதிய வைக்கின்றான்.

மஹரை அள்ளிக் கொடுங்கள்

பெண்களின் ஈடு இணையற்ற தியாகத்திற்குப் பகரமாக, ஆண் மகன் எவ்வளவு கொடுத்தாலும் தகும் என்றும், எவ்வளவு கொடுத்தாலும் திரும்பக் கேட்கலாகாது என்றும் இறைவன் பதிய வைக்கின்றான்.

ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

அல்குர்ஆன் 4:20

இறைவன் இந்த வசனத்தில் மஹராக, மணக்கொடையாக பெருமதிப்பையே வழங்கி யிருந்தாலும், அதாவது ஒரு மிகப்பெரும் குவியலையே கொடுத்திருந்தாலும் திரும்பப் பிடுங்கிக் கொள்ளக் கூடாது என்றும், திரும்ப வாங்குபவன் மிகப்பெரும் அக்கிரமத்தையும், பெரும் குற்றத்தையும் செய்து விட்டான் என்றும் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி எச்சரிக்கை விடுக்கின்றான்.

இந்த வசனம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? எவ்வளவு கொடுத்தாலும், விவாகரத்துச் செய்வதாக இருந்தால் கூட அந்தப் பெண்ணிடமிருந்து திருப்பிக் கேட்காதே என்றும், ஒரு குவியலையே மணக்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த வசனம் நமக்குப் பாடம் நடத்துகின்றது.

ஒரு அழகான வரலாற்றுக்குச் சொந்தக்காரரான நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றியும், அவர்கள் திருமணம் முடிக்கின்ற நேரத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பற்றியும் திருக்குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகின்றது. அதிகப்படியான மஹர் தொகையைக் கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆர்வமூட்டி, புத்துணர்ச்சி வழங்குகின்ற ஒரு தனிச்சிறப்பை மூஸா (அலை) வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

மூஸா (அலை) அவர்களின் மண நிகழ்வைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும்போது,

எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்’’ என்று அவர் கூறினார். இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்’’ என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 28:27,28

மூஸா (அலை) அவர்கள் ஒரு பெண்ணைக் கரம்பிடிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண் வீட்டார் எட்டு அல்லது பத்து ஆண்டுகள் வேலை செய்து என்னுடைய புதல்வியை கரம்பிடித்துக் கொள்! என்று மஹர் தொகையைப் பேசி முடிக்கின்றார்கள். இறுதியாக மூஸா (அலை) செய்த ஒப்பந்தத்தை நிறைவு செய்து விட்டு, அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கின்றார்கள்.

பெண் வீட்டாரிடமிருந்து அடித்து அநியாயமாக வாங்குபவர்களே! இந்தச் செய்தியை நன்றாகப் படித்துப் பாருங்கள்! கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும், ஆற்றலையும், திறமையையும், சக்தியையும் மஹர் தொகையாக நிர்ணயம் செய்து, அதைச் துணிச்சலோடு திறம்பட செய்து முடிக்கின்றார்.

இன்றைக்கு பத்து ஆண்டு காலம் ஒரு இடத்தில் ஒருவர் வேலை செய்கின்றார் என்றால், அந்த வேலைக்கு வழங்குகின்ற கூலியின் மதிப்பு பல இலட்சங்களாக உயர்ந்து நிற்கும். இப்படிப் பல இலட்சங்களை பத்து வருடத்திற்குக் கூலியாக வாங்கியோ அல்லது அந்தக் கூலிக்குத் தகுந்த உழைப்பை செய்து கொடுத்தோ மணக்கொடையை வாரிவாரி வழங்கியிருக்கின்றார்கள்.

மணக்கொடை இல்லையேல் மனைவி ஹராம்

இஸ்லாமிய மார்க்கம் மஹரைக் கொடுத்துத் திருமணம் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இல்லையென்றால் கரம் பிடிக்கும் மனைவி அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள் என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது.

அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை.

அல்குர்ஆன் 60:10

மணக்கொடையை வழங்காமல் மணமுடிக்கக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் மஹ்ர்தான்.

ஆதாரம்: புகாரி 2721

மனைவியை அனுமதிக்கப்பட்டவளாக ஆக்க வேண்டுமானால் முதன்மையானது மஹர் தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தெள்ளத் தெளிவாக ஆழப்பதிய வைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தைத் தடை செய்தார்கள்’’ என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள். உடனே நான் நாஃபிஉ அவர்களிம், “ஷிஃகார் (முறைத் திருமணம்) என்றால் என்ன?’’ என்று கேட்டேன். அவர்கள், “ஒருவர் மணக்கொடை (மஹ்ர்) ஏதுமில்லாமல் இன்னொருவரின் மகளை மணந்துகொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைப்பதாகும். அவ்வாறே மணக்கொடை ஏதுமில்லாமல் ஒருவர் மற்றொருவரின் சகோதரியை மணந்து கொண்டு (அதற்கு பதிலாக) அவருக்குத் தன் சகோதரியை மணமுடித்துவைப்பதாகும்’’ என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்: புகாரி 6960)

இந்த ஷிகார் முறை திருமணத்தை, அதாவது பெண் கொடுத்துப் பெண் எடுப்பதை, மணக்கொடை இல்லாததன் காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தடை செய்கின்றார்கள் என்றால் மஹரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கட்டளையை மனிதர்கள் முறையாகவும், சரியாகவும் பின்பற்றாத காரணத்தினால் தான் வரதட்சணை என்ற வன்கொடுமை, அதாவது பெண்கொடுமை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கோரமான, கொடூரமான செயலை சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டுமானால், மஹர் கொடுத்துத் திருமணம் முடித்து, மஹரை மகத்துவப்படுத்துங்கள்!

திருக்குர்ஆனின் போதனைகளைப் பின்பற்றி நடந்து மஹரைக் கொடுத்து திருமணம் முடிப்போம்! வரதட்சணை என்ற வன்கொடுமையைக் குழிதோண்டி புதைப்போம் என்பதை உலகிற்கு உணர்த்தவே திருக்குர்ஆன் மாநாடு!

—————————————————————————————————————————————————————————————————————

குர்ஆன் கூறும் விவாகரத்துச் சட்டம்

சமீபத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைப்பதற்காக, முத்தலாக்கிற்கு எதிராக ஒரு பைத்தியக்காரத்தனமான சட்டத்தைப் பிறப்பித்தது.

தலாக், தலாக், தலாக் என மூன்று முறை ஒரே சமயத்தில் மனைவியிடம் கூறும் கணவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை என்பதுதான் அந்தச் சட்டம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மூக்கை நுழைக்கும் மத்திய அரசின் இந்த அவசரக் கோல சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஒருபக்கம் போராட்டங்கள் நடத்தினாலும், ஒரே அமர்வில் முத்தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் எள் முனையளவுக்கும் இடமில்லை என்பதை மேடைக்கு மேடை முழங்கியே வருகிறோம்.

அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு முழு முதற்காரணம் பாஜக அரசாக இருந்தாலும், வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கதையாக, முஸ்லிம்களுக்கு எதிராகக் காவிகளுக்குத் தீனி போட்டதே நம்முடைய முன்னோர்கள் தான்.

தன்னை முஸ்லிம் என்று வாயளவில் சொன்னவர்கள் அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்காத காரணத்தாலும் பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் உள்ளடக்கிய இறைவேதத்தைப் படிக்காமல் அலமாரியில் போட்டுப் பூட்டி வைத்ததன் விளைவாலும் இஸ்லாமிய திருமணச் சட்டம் என்ன? விவாகரத்துச் சட்டம் என்ன? என்ற அறியாமையின் வெளிப்பாட்டால் இஸ்லாத்தில் இல்லாத முத்தலாக் என்ற மூடத்தனமான செயலை முஸ்லிம் சமுதாயம் அங்கீகரித்தது. அதன் விபரீதத்தைப் பல எதிரிகள் மூலம் இன்றளவும் எதிர் கொண்டு வருகிறோம்.

திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் என்ன? என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தால் முத்தலாக் என்ற மூடத்தனத்திற்கு முட்டுக்கொடுத்திருக்க வேண்டியதில்லை.

  • ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது.
  • பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.
  • பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும்.
  • விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.
  • இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.
  • இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது அவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.
  • இதனால் தன்னிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள். அவனிடம் தவறு இருந்தால் அவனும் திருத்திக் கொள்வான்.
  • தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.
  • தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் லேசாக அடித்துத் திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.
  • இதன் பின்னரும் இணக்கம் ஏற்படா விட்டால் உடனே தலாக் கூற முடியாது.
  • ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை (லேசாக) அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:34

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:35

நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

மூன்று வாய்ப்புகள்

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டமாகும்.

ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)

ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது, மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு எந்தச் சடங்கும் கிடையாது.

இது குறித்துத் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக, சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்களைக் கீழே காண்க!

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 2:228

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 2:229

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.

இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.

தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

முதல் வாய்ப்பைப் பயன்படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம். இதையும் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.

இப்படி தலாக் கூறிய பின் உடனே மனைவியை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக மூன்று மாத காலம் கணவன் வீட்டில் தான் அவள் இருக்க வேண்டும். இருவரும் எப்படியாவது சேர்ந்து கொள்ளமாட்டார்களா என்று கருணை கொண்டு அல்லாஹ் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறான்

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற் றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

திருக்குர்ஆன் 65:1

இருவரும் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கருணை இதில் வெளிப்படுகிறது.

முஸ்லிமல்லாத மக்கள் செய்து கொள்ளும் விவாகரத்தினால் அவர்கள் முழுமையாகப் பிரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம் தற்காலிக விவாகரத்தாக இரு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை செலுத்துகிறது.

உலகில் உள்ள எந்த நாட்டின் விவாகரத்துச் சட்டங்களையும் விட இஸ்லாத்தின் விவாகரத்துச் சட்டம் பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.

எஸ்.எம்.எஸ். மூலம், தபால் மூலம், போன் மூலம், வாட்சப் மூலம் தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இது இஸ்லாத்தை அறியாத மூடர்களின் செயலாகும். ஏனெனில் விவாகரத்துச் செய்வதாக இருந்தாலும், பின்னர் சேர்ந்து கொள்வதாக இருந்தாலும் இரு சாட்சிகள் முன்னிலையில் தான் சொல்ல வேண்டும்.

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:2

சாட்சிகள் என்றால் தலாக் கூறுவதற்கும், சேர்வதற்கும் மட்டும் சாட்சிகள் என்று கருதக் கூடாது. மாறாக முன்னர் நாம் எடுத்துக் காட்டிய எல்லா வழிமுறைகளையும் அந்த ஆண் கடைபிடித்துள்ளானா என்பதையெல்லாம் அறிந்தவன் தான் சாட்சி சொல்ல வேண்டும். அநீதியாக சாட்சி கூற இஸ்லாத்தில் தடை உள்ளது.

எல்லா முயற்சிகளையும் கடைப்பிடித்து விட்டு இறுதியாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்பதை அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.

இரண்டு முறை தலாக் கூறி சேர்ந்து வாழும்போது மீண்டும் தலாக் கூறும் முடிவுக்கு ஒருவன் வந்தால் அதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.

அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

விவாகரத்துச் செய்த பின்னர் மீண்டும் சேர்வதற்கான வாசலை உலகில் எந்தச் சட்டமும் இந்த அளவுக்கு விசாலமாகத் திறந்து வைக்கவில்லை.

எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் விவாகரத்துச் செய்கின்றனர். அந்தச் சட்டங்களை விடப் பெண்களுக்கு அதிக நன்மைகள், இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்தில் தான் உள்ளது.

இந்த நேரத்தில் முத்தலாக் என்பதற்கும் மூன்று தலாக் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முத்தலாக்கா? மூன்று தலாக்கா?

தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.

இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2689, 2690, 2691

ஒரே அமர்வில் மூன்று தலாக் என்று ஒருவன் கூறினாலும் முப்பது தலாக் என்று கூறினாலும் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.

மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் சொல்லும் தலாக் சட்டத்தை விருப்பு வெறுப்பின்றி சிந்திக்கும் எவரும் இதை பெண்களுக்குப் பாதகமாகக் கருதமாட்டார்கள்.மாறாக, பாதுகாப்பாகவே கருதுவார்கள்.

ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்காகவே இந்தச் சட்டங்களை இறைவன் அருளியுள்ளான். இப்படிப்பட்ட உன்னதமான சட்டத்தை உள்ளடக்கிய இறைவேதத்தை இந்தச் சமுதாயம் புறக்கணித்ததன் விளைவுதான் இத்தகைய விபரீதங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: இந்த வேததின் மூலம் எத்தனையோ சமுதாயத்தை அல்லாஹ் உயர்த்தியுள்ளான். இவ்வேதத்(தை கைவிட்ட)தின் மூலம் எத்தனையோ சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளான்

 அறிவிப்பவர்: உமர் (ரலி)

 நூல்: முஸ்லிம் 1353

அல்லாஹ்வின் வேதத்தில் சொல்லப்பட்ட அறிவுரைகளைப் படித்து, அதன் வழி நடந்தால் நாம் கண்ணியத்துடன் வாழ இயலும். அந்த இறைவனின் வேதத்தைக் கண்டும் காணாமல் விட்டால் இழிவுதான் நிகழும்.

அறியாமை எனும் இருளிலிருந்து வெளியேற வாருங்கள்! திருக்குர்ஆனைப் படிப்போம்! பற்றிப் பிடிப்போம் என திருக்குர்ஆன் மாநாட்டிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

—————————————————————————————————————————————————————————————————————

மங்கையர் நலன் நாடும் மாமறை

சமூகம் எனும் கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டுமெனில் அதன் அடித்தளமாகத் திகழும் ஆணும் பெண்ணும் ஒழுக்கத்தோடு வாழ்வது அவசியம். ஆகவேதான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும், ஒழுக்கமே உண்மையான சொத்து போன்ற சொற்கள் சமூக வழக்கில் உள்ளன.

இந்த வகையில், பொதுநலன் பேணும் இஸ்லாமிய மார்க்கம் ஆண்களும் பெண்களும் சுய ஒழுக்கத்தோடு வாழுமாறு அதிகம் போதிக்கிறது. அவர்களுக்குப் பல்வேறு உரிமைகளை வழங்கி இருப்பது போன்று, சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. அவற்றில் ஆரம்பகட்ட அறிவுரையாக, பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுமாறு போதிக்கிறது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன் 24:30)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 24:31)

மனிதன் ஒன்றை விரும்புவதற்கும் வெறுப்பதற்கும் பார்வையே முக்கிய காரணியாக உள்ளது. ஒழுக்க நெறிகளின் பட்டியலில் முதல் இடம் வகிப்பது, பார்வைக் கட்டுப்பாடு தான். இதைக் கடைப்பிடிப்பதில் ஆண்களுக்குக் கூடுதல் அறிவுரையை இஸ்லாம் வழங்குகிறது. அதற்குத் தகுந்த காரணம் உள்ளது.

மனித சமுதாயம் தழைத்தோங்க சில தனித்துவமான வேறுபாடுகளை, ஏற்பாடுகளை இறைவன் செய்திருக்கிறான். அதன்படி, ஆண்களை ஈர்க்கும் அம்சங்கள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதைப் பெரும் ஆராய்ச்சி இல்லாமல் இயல்பாகவே புரிந்து கொள்ளலாம்.

ஒரு ஆண் மிகவும் குறைந்த ஆடையுடன் இருந்தாலும் கூட அவனைப் பார்க்க பெண்கள் பெரிதும் ஆசைப்படுவதில்லை; ஆர்வம் காட்டுவதில்லை. அதேசமயம், ஒரு பெண் குறைந்த அளவு உடல் எடுப்பைக் காட்டினாலும் சுற்றியிருக்கும் ஆண்களின் பார்வையில் மாற்றம் ஏற்படுகிறது; மனம் தடுமாற்றம் அடைகிறது.

பெண்கள், ஆண்மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளைநிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக ஆக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.

(திருக்குர்ஆன் 3:14)

பெண்கள் அலங்காரத்தை வெளிக்காட்டும் போது ஆண்களிடம் சஞ்சலத்தைத் தூண்டுகிறது. இந்த உண்மையை உள்ளூர் முதல் உலக அளவில் நடந்த பாலியல் தொடர்பான பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஆய்வுகளும் ஒப்புக் கொள்கின்றன. ஆதலால், இஸ்லாத்தில் ஆண்களுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறப்படுகிறது.

எதேச்சையாக (அந்நியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக் கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4363

உங்களில், திருமணத்திற்கான செலவுகளுக்குச் சக்தி பெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (1905)

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல! கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது, இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6243)

ஆண்களின் சலனத்தை, சபலத்தைத் தூண்டும் வகையில், பெண்கள் ஆடை அணிவது சமூகச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்று சமூக அக்கறை கொண்டவர்கள் சரியாகப் புரிந்திருக்கிறார்கள்.

அவர்கள் பெண்களுக்குச் சொல்லும் ஆடைக் கட்டுப்பாட்டை மனதார வரவேற்கிறார்கள். எனவே தான் நமது நாட்டிலும் கூட ஆடை ரீதியாகப் பல சட்டங்கள் போடப்பட்டன.

கோயில்களுக்கு வரும் மக்களுக்கு இந்து அறநிலையத் துறை ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. பள்ளி மற்றும் கல்லூரியில் பெண்கள் முழுமையான ஆடையை அணியுமாறு விதி வகுக்கப்பட்டது. வருவாய் துறையில் இருப்போர் ஆடை விஷயத்தில் கட்டுக்கோப்புடன் இருக்குமாறு அத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.

இதுபோன்று பல சட்டங்கள், பல்வேறு காலகட்டங்களில், பல இடங்களில் அறிவிக்கப் பட்டுள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்று தான். ஆண்களின் மனக்கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்களின் ஆடை இருந்து விடக் கூடாது.

ஆனால், பெண்களிடமுள்ள ஈர்ப்பைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ஆட்களோ விளம்பரங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் பெண்களைக் காட்சிப் பொருளாக நிறுத்த முனைகிறார்கள். சுயநலத்துக்காக சமூகத்தை நாசப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

முழுமையாக உடை அணிவதுதான் கண்ணியமென ஒப்புக் கொள்ளும் இவர்கள், பெண்கள் விஷயத்தில் மாறுபட்டு நிற்கிறார்கள். அங்க அவயங்களை வெளிக்காட்டும் ஆடைகளை மகளிர் அணியும்போது ஆதரிக்கிறார்கள்.

அதேசமயம், இத்தகைய கயவர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் அப்படி வெளியே சென்று வருவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் மூலம் இவர்களின் வக்கிர நோக்கம் பளிச்செனப் புரிகிறது. இந்த நபர்கள் தங்களது கீழ்த்தரமான எண்ணங்களை மறைப்பதற்குப் பெண் உரிமை எனும் முழக்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியும் உரிமை பெண்ணுக்கு இருக்கிறது; அவள் சமூகத்தைப் பற்றிக் கண்டு கொள்ள வேண்டியதில்லை என்று வறட்டுத்தனமாக வாதிடுகிறார்கள்.

அதன் பின்னணியில் ஒளிந்துள்ள பாதகங்களைப் புரியாமல் நவீனகாலப் பெண்களும் அதில் மயங்கி விடுகிறார்கள். எவ்வித உறுத்தலும் இல்லாமல் ஆபாசமான நடைபோடத் துவங்கிவிடுகிறார்கள். தங்களை முற்போக்குவாதிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஆசாமிகள் இதற்கு வக்காலத்து வாங்குவது தான் வேதனை.

இவ்வாறு பெண்கள் போகப் பொருளாகப் பார்க்கப்படுவதையும், வலம் வருவதையும் இஸ்லாம் அறவே வெறுக்கிறது. அவர்களை சமூகத்தில் கண்ணியமாக வாழச் செய்வதற்காக வழிகளை வகுத்துள்ளது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(திருக்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 33:59)

சமூகத்தில் எழும் சிக்கல்களுக்கு இஸ்லாம் பல கோணங்களில் தீர்வைச் சமர்ப்பிக்கும். இன்னும் சொல்வதாயின் அந்தப் பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்து களையெடுக்கும். அந்த ரீதியில் பெண்கள் விஷயத்தில் எல்லை தாண்டிவிடக் கூடாதென ஆண்களைப் பலமாக எச்சரித்துள்ளது. அதுபோன்று பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

உடலை முழுமையாக மறைத்துக் கொள்வது நபிகளாரின் மனைவியருக்கு மட்டும் உரிய தனிச்சட்டம். மற்ற முஃமினான பெண்கள், அந்நிய ஆண்களுக்கு முன்பு தங்களது முகம், முன்கைகள், பாதங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும். இதனை மேற்கண்ட வசனங்கள் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

இக்கட்டளையைப் பெண்கள் முறையாக பின்பற்றும் போது அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். அவர்களிடம் ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் தன்மை வெளிப்படாது. இதனால், தேவையற்ற தொல்லைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

இதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகளை முஃமினான பெண்கள் உணர்ந்து செய்லபட வேண்டும். அவர்களுக்குப் பின்வரும் செய்திகளில் தகுந்த பாடமும் வழிகாட்டுதலும் இருக்கிறது.

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! “(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!’’ எனும் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டாவாக ஆக்கிக்கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (4758)

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்குத் திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது.

நூல்: புகாரி 578

அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வாழ்ந்த நபித்தோழிகள் மார்க்கம் கூறும் வகையில் தங்களை மாற்றிக் கொண்டார்கள். ஹிஜாப் அணிவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த விஷயத்தில் இன்றைய காலப் பெண்களோ அதிக அலட்சியத்தோடு இருக்கிறார்கள்.

ஒரு கைக்குட்டை அளவு துணியை தலையில் கட்டிக் கொண்டு ஹிஜாப் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். முஸ்லிம் அல்லாத அந்நிய ஆண்களிடம் ஹிஜாபைப் பேண வேண்டியதில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆலிம்கள் முன்னிலையில் வரும்போது மட்டும் முக்காடு போட்டுக் கொள்வோரும் உள்ளனர்.

சிலரோ உடலோடு ஒட்டிப் பிடிக்கும் வண்ணம் இறுக்கமாக ஆடை அணிந்து செல்கிறார்கள். பார்வை ஊடுருவும் வகையில் மெல்லிய துணியில் ஹிஜாபை அணிகிறார்கள். இப்படியெல்லாம் கவனக்குறைவாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் மறுமையை அஞ்சி, தங்களை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும்.

இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடிப்பார்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை, மற்றும் கழுத்து, நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4316

ஹிஜாப் விஷயத்தில் முஸ்லிம் பெண்களிடம் அலட்சியப் போக்கு நுழைய மற்றொரு காரணமும் உள்ளது. பெண்களின் ஆடைக்குரிய அளவுகோலைச் சரியாக அறியாமலும், பேணுதல் என்ற பெயரிலும் வரம்புமீறி சில முஸ்லிம்கள் பெண்களுக்குக் கூடுதல் கட்டுப்பாட்டைத் திணிக்கிறார்கள்.

மார்க்க சட்டத்திற்கு மாற்றமாக, முகத்தையும் முன்கையையும் பாதங்களையும் கட்டாயம் மறைக்க வேண்டுமென ஹிஜாப் சட்டத்தில் கடுமை காட்டுகிறார்கள். இது சிலருக்கு ஹிஜாப் சட்டத்தின் மீது தவறான புரிதலும் வெறுப்பும் ஏற்படக் காரணமாகி விடுகிறது.

பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

ஆதாரம்: புகாரி 3331

இந்நிலையில்தான் நமது ஜமாஅத் மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஹிஜாப் பற்றிய தெளிவைக் கொண்டு சென்றோம். அது குறித்த சட்டத்தைக் கூட்டாமல் குறைக்காமல் முன்வைத்தோம்.

பெண்கள் பயான், தெருமுனைக் கூட்டம், பொதுக் கூட்டம், மாநாடு, மாத இதழ், வாராந்திர பத்திரிக்கை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பல்வேறு களங்களில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனது கிருபையால் பெரும் மாற்றம் முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டது. மார்க்கத்தில் உள்ளவாறு ஹிஜாபைப் பேணும் பெண்கள் அதிகரித்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஹிஜாப் என்பது பெண்ணை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று நெடுங்காலமாகக் கூறப்பட்ட தவறான கருத்து பெருமளவு களையப்பட்டது.

இத்தோடு நாம் ஓய்ந்து விடக் கூடாது. இன்னும் ஹிஜாப் பற்றிய போதுமான புரிதல் இல்லாத மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பும் நமக்கு உள்ளது. இந்த அழைப்புப் பணியின் ஓர் அங்கமாகத் தான் எதிர்வரும் ஆண்டு ஜனவரியில் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாமறையும் அதன் விளக்கமான நபிமொழிகளும் பெண்களுக்குப் போதிக்கின்ற நெறிமுறைகளே அவர்களின் வாழ்வுக்கு உகந்தவை. அதற்கேற்ப வாழும்போது அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். சமூகத்தில் உரிய பாதுகாப்பும் முன்னேற்றமும் கிடைக்கும்.

இச்செய்தியை மாநாட்டுப் பணிகள் மூலம் எட்டுத் திக்கும் எடுத்துச் செல்வோமாக! இம்மையிலும் மறுமையிலும் இறையருள் பெறுவோமாக!