ஏகத்துவம் – நவம்பர் 2014

தலையங்கம்

களங்கம் துடைக்கும் கண்ணிய ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை “தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்’ என்ற வியூகத்தைக் கையில் எடுத்துக் கடந்த சில நாட்களாக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை அனைத்துத் தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இந்தப் பிரச்சார வியூகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கையில் எடுத்தது? களத்தில் ஏன் கொண்டு சென்றது?

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள்; முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள்; இஸ்லாம் என்பது பயங்கரவாத மார்க்கம்; இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்று ஊடகங்களால் பன்முகப் பரிமாணங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.

எங்காவது குண்டு வெடிப்பு நடந்துவிட்டால் குண்டு வைத்தவன் யார் என்று காவல்துறையினர் முறையாகக் கண்டுபிடிக்கும் முன்னரே, இந்தக் கொடும் செயலில் ஈடுபட்டவன் முஸ்லிம் தான் என்று ஊடகங்கள் உலகத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றன.

குண்டு வைத்தவன் முஸ்லிம் இல்லை, பிற சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்போது இதே ஊடகங்கள் ஊமையாகி, ஊனமாகி விடுகின்றன. அப்போது எந்த ஊடகமும் தான் முன்னர் வெளியிட்ட செய்தியைத் தவறு என மறுப்பு வெளியிடுவது கிடையாது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் ஒரு குற்றவாளியும் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு முஸ்லிமை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றது. பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த முஸ்லிமின் ஊர், தெரு, வீடு அத்தனையையும் திரும்பத் திரும்ப ஊடகங்கள் காட்சிப்படுத்தி, முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி என்று ஊதி ஊதிப் பெரிதாக்கி ஊளையிட்டுக் கொண்டிருக்கும்.

இரவு நேரங்களில் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இந்தச் செய்தியின் சாதக, பாதகங்களைப் பற்றி விலாவாரியாக, விரிவான கோணங்களில் விவாதம் நடத்தப்படும்; விளாசித் தள்ளப்படும். இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஒரு முஸ்லிம் என்று மக்கள் மனதில் ஆழப் பதிய வைக்கப்படும்.

பாகிஸ்தான் பயங்கரவாதி, 16 அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர், லஷ்கரே தொய்பாவுடன் தொடர்பு கொண்டவர் என்றெல்லாம் கண், மூக்கு, காது வைத்துக் காட்டப்பட்ட அந்த முஸ்லிம் பல ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்தால், நிரபராதி, அப்பாவி என விடுதலை செய்யப்படுவார். பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போது வளைத்து வளைத்துக் காட்டி, முஸ்லிம் தீவிரவாதி என்று ஊளையிட்ட ஊடகங்கள் இப்போது ஊமையாகி விடுகின்றன.

இப்போது களங்கப்பட்டு நிற்பது முஸ்லிம் சமுதாயமும், தூய இஸ்லாமும் தான். இந்தக் களங்கத்தைத் துடைப்பதற்கும், தூர எறிவதற்கும் நம் சமுதாயத்தில் தேசிய அளவில் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையோ, பத்திரிகைகளோ இல்லை.

இந்தக் களங்கத்தைப் பற்றிய கவலையும், கரிசனமும் தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து கலங்கரை விளக்கமாகத் திகழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தான் உள்ளது. ஆனால் மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பத்திரிகை, தொலைக்காட்சி ஆரம்பிக்கும் அளவுக்குக் கையில் காசில்லை. இருப்பினும் தனது சக்திக்குட்பட்டு, இஸ்லாத்தின் மீது படிந்துள்ள கரையை, களங்கத்தைக் கழுவ களமிறங்கியுள்ளது.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல் சிறு சிறு துண்டுப் பிரசுரங்களைக் கொண்டே இந்த அரும்பணியைச் செவ்வனே செய்து வருகின்றது.

தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தவ்ஹீத் ஜமாஅத் கொண்டுள்ள செயல்திட்டங்கள்:

  1. தெருமுனைப் பிரச்சாரங்கள்
  2. துண்டுப் பிரசுரங்கள்
  3. சுவரொட்டிகள் மற்றும் புளோரோசென்ட் போஸ்டர்கள்
  4. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பேனர் வைத்தல்
  5. டி ஷர்ட் மூலம் விளம்பரம்
  6. பேஸ்புக் மூலம் பிரச்சாரம்
  7. சுவர் விளம்பரம்
  8. உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம்
  9. வீடு வீடாகப் பிரச்சாரம்
  10. பொதுக்கூட்டங்கள்
  11. வாகனப் பிரச்சாரம்
  12. பெண்கள் மூலம் பிரச்சாரம்
  13. பத்திரிகையாளர் சந்திப்பு
  14. போலீஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்தல்
  15. கிராமங்கள், சேரிகளில் புரஜக்டர் மூலம் பிரச்சாரம்
  16. கட்டுரைப் போட்டி அறிவித்து பரிசு வழங்குதல்
  17. பள்ளிக்கூட நிர்வாகம், பஞ்சாயத்தார், கவுன்சிலர்களுக்குப் பிரச்சாரம்
  18. உள்ளரங்க கருத்தரங்குகளை அமைத்து அதிகாரிகளை அழைத்தல்
  19. குழந்தைகள் கைகளில் பதாகைகள் கொடுத்து பிரச்சாரம்
  20. ரேஷன் அட்டை உறைகளில், மின் அட்டை உறைகளில் விளம்பரம்
  21. உள்ளூர் தொலைக்காட்சிகளில் பிரச்சார ஸ்க்ரோளிங் செய்தல்
  22. பேனா, பென்சில், கைக்குட்டை, தொப்பி போன்றவற்றில் விளம்பரம் செய்து இலவசமாகக் கொடுத்தல்
  23. இரத்த தானம் செய்தல்
  24. தீவிரவாத எதிர்ப்பு சிறப்பு இதழாக வெளிவந்திருக்கும் அக்டோபர் மாத ஏகத்துவம் இதழை வாங்கி பிறமத நண்பர்களுக்கு வழங்குதல்

களங்கம் துடைத்து, இஸ்லாத்தின் கண்ணியம் காக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் களமிறங்கி, கொட்டும் மழையிலும் கொழுந்து விட்டெரியும் தீயாக இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், இஸ்லாம் மனிதநேய மார்க்கம் போன்ற செய்திகளை முஸ்லிமல்லாத மக்களிடம் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் இஸ்லாத்தின் தூய வடிவத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:13

அல்லாஹ் கூறுவது போன்று மனித குலம் அனைவரும் ஒரு தாய், தந்தையின் மக்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மதங்களைக் கடந்து அனைத்து சமுதாயத்தினருக்கும் இரத்த தானம் செய்து மனிதநேயப் பணிகளில் சிகரத்தில் நிற்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.

அல்குர்ஆன் 5:32

இந்த வசனத்தின் பக்கம் பிற சமுதாய மக்களின் கவனத்தை ஈர்த்து, இஸ்லாம் மனிதனை வாழ வைக்கும் மார்க்கம்; மாள வைக்கின்ற, வீழ வைக்கின்ற மார்க்கமல்ல என்பதை உலகுக்குப் பறைசாற்றி, தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த வகையில் இம்மாத ஏகத்துவம் இதழ் தனது வழக்கமான ஒரு சில தொடர்களை ரத்துச் செய்து விட்டு, தீவிரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய செய்திகளைத் தனது பக்கங்களில் பதிவு செய்வதில் பல மடங்கு மகிழ்ச்சியடைகின்றது.

—————————————————————————————————————————————————————-

பிறர்நலம் நாடும் இஸ்லாம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

இஸ்லாம் என்பது இறை மார்க்கம். மனிதன் அமைதியாக வாழ வேண்டும்; நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்தும் அறிந்த ஏக இறைவனால் வழிமுறைகள் வகுக்கப்பட்ட மார்க்கம். இத்தகைய இஸ்லாமிய மார்க்கம், மனித சமுதாயம் எப்போதும் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான அனைத்து விதமான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றது.

சமுதாய நலனைச் சீர்குலைக்கும் அனைத்து விதமான இடையூறுகளையும், பிரச்சனைகளையும் அடையாளம் காட்டுவதோடு, அவற்றை முழுமையாகக் களைவதற்கான ஆலோசனைகளை அளிக்கின்றது. ஒவ்வொருவரும் பிறர் நலத்தை நாட வேண்டும், பேண வேண்டும் என்பது அவற்றுள் முக்கியமான முதன்மையான ஒன்றாகும். இது குறித்து இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைப் பார்ப்போம்.

பிறர்நலம் நாடுவதே இஸ்லாம்

உலகில் பல்வேறு கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவற்றை உருவாக்கியவர்கள், பின்பற்றுபவர்கள் என்று பலரும் அவை ஒவ்வொன்றுக்கும் பல்வேறு வகையில் விளக்கங்களை, வரையறைகளைக் குறிப்பிடுகிறார்கள்.

இஸ்லாம் என்பதற்கும் அதன் அடிப்படையை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் முக்கியமான ஒன்று, பிறர் நலம் நாடுதல் என்பதாகும். இதன் மூலம் இஸ்லாம் எந்தளவிற்கு அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்கிறது; ஆர்வம் காட்டுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவதுதான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத்தாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (95)

பொதுநலனுக்குப் பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை இஸ்லாம் கூறுவதாக எவராலும் எந்தவொரு சட்டத்தையும் சுட்டிக் காட்ட இயலாது. இஸ்லாம் கூறும் பொதுநலம் சம்பந்தமான கருத்துக்களைக் குறித்து சுட்டிக் காட்டாமல் இஸ்லாத்தை ஒருவருக்கு முழுமையாக எடுத்துச் சொல்ல இயலாது எனும் அளவிற்கு இஸ்லாம் அது பற்றி அதிகம் அதிகமாகப் பேசுகிறது என்பதே உண்மை.

(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னிடம் கூறியதாவது:

அவர் (முஹம்மது – ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்?’ என்று உம்மிடம் நான் கேட்டேன். அதற்கு நீர், “அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும்படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்.

அறிவிப்பவர்: அபூ சுஃப்யான் (ரலி)

நூல்: புகாரி (2681)

முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பளர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஒப்பந்தங்கள் நடைமுறையில் இருந்த காலகட்டத்தின் போது, அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அப்போது அவரிடம் ஹிராக்ளியஸ் மன்னர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதைப் போதிக்கிறார் என்று இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கிறார். அப்போது அதற்கு அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அளிக்கும் பதிலில் இருந்து, இஸ்லாம் என்பது பிறர் நலத்தைப் பற்றி போதிக்கும் மார்க்கம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதுதான் இறைத்தூதரின் பண்பாகும் என ஹிராக்ளியஸ் மன்னரே ஒப்புக் கொள்வது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இறை நம்பிக்கையின் அடையாளம்

இறை நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர், இஸ்லாம் கூறும் அனைத்து செய்திகளையும் நம்பியவராக இருந்தால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்பாடுகளும் அவரிடம் அவசியம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர், உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் ஈமான் கொண்டவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளுள் முக்கிய ஒன்றாக, பிறருக்கு நலம் நாடும் பண்பு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பிறர் நலத்தைக் கெடுக்கும் காரியம் எதுவாயினும் அதனைச் செய்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது என்பதையும் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி (2446)

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி (6011)

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும் போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2682)

சமுதாயத்தில் ஒரு சிலர் தீமையான காரியங்களைச் செய்கிறார்கள். அந்த மோசமான செயல்கள் காரணமாக மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் ஒருவர், எந்தளவிற்கு முனைப்போடு அந்தத் தீய காரியங்களைக் களைவதற்கு களத்தில் இறங்குகிறோரோ அதைப் பொறுத்து அவரது நம்பிக்கையின் வீரியம் வெளிப்படுகிறது. இவ்வாறு, மக்களுக்குத் துன்பம் தரும் காரியங்களைத் தடுத்து, அதன் தாக்கத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது.

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (78)

இறையச்சத்தின் வெளிப்பாடு

நமக்குச் கொடுத்திருக்கும் அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் இறைவன் மறுமையில் நம்மை விசாரிப்பான். அப்போது அதற்குரிய சரியான பதில் நம்மிடம் இருந்தால் மட்டுமே நாம் முழுமையாக வெற்றி பெற்றவர்களாக இருக்க முடியும். ஆகவே, அல்லாஹ்விற்குப் பயந்து அவன் அருளியிருக்கும் அருட்கொடைகளைக் கொண்டு அடுத்தவர்களுக்கு நலம் நாடுபவர்களாக, நன்மை செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு பிறருக்கு நன்மை செய்யும் வகையில் நற்காரியங்களைச் செய்வது; தீய காரியங்களை விட்டும் விலகியிருப்பது என்பது இறைச்சத்தின் வெளிப்பாடு என்பதைப் பின்வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

(திருக்குர் ஆன் 2:177)

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(திருக்குர்ஆன் 3:133,134)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் (5010)

பிறர் நலம் நாடிய நபிகளார்

பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன. நீதி, நேர்மை, தர்மம், பெருந்தன்மை, மன்னித்தல், உதவி செய்தல், பிறருக்கு துஆ செய்தல் போன்ற மக்களுக்கு நலம் தரும் எல்லா விதமான நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள். இந்த மாபெரும் மகத்தான உண்மையை நபிகளாரின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வார்கள். இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம்.

(நபியவர்கள் ஹிரா குகையில் இருந்த போது அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்தார்கள். 96 அத்தியாயத்தின் 1-5 வரையிலான வசனங்கள் அருளப்பட்டன) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு “எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்என்று சொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (3)

உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1810)

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர்.  உடனே நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்தபோது தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்று இருப்பதைக் கண்டார்கள். எனவே, “எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டிருக்கும்போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகையில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே நான் (சென்று) அதைப் பங்கிட்டுவிடுமாறு பணித்(து வந்)தேன்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி)

நூல்: புகாரி (851)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (6)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை. இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்என்று சொன்னார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (4629)

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)

நூல்: புகாரி (707)

நபி (ஸல்) அவர்கள் இந்த (இஷா)த் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பெண்களும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள் என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் தமது விலாவிலிருந்து வழியும் தண்ணீரைத் துடைத்தபடி, “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (இஷாத் தொழுகைக்கு) இதுதான் சரியான நேரம் (என்று சொல்லியிருப்பேன்)என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (7239)

அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார்கள். நான், “எகிப்தியரில் ஒருவன்என்று பதிலளித்தேன். அவர்கள், “உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “வெறுக்கத் தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்என்று விடையளித்தேன்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காதுஎன்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

நூல்: முஸ்லிம் (3732)

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.

அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)”  என்று கூறினார்.

அதற்கு நான், “(வேண்டாம்😉 ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (3231)

பிறர் நலம் நாடும் உறுதிமொழி

இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், தமது காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் பல்வேறு போதனைகளை போதித்து அதன்படி வாழும்படி அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். நபித்தோழர்களும் நபித்தோழியரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறருக்கு நலம் நாடும் வகையில் இருக்கும் பல்வேறு காரியங்கள் அந்த உறுதிமொழியில் பிரதானமாக இடம் பெற்றிருந்தன.  இதன் மூலம் பிறருக்கு நலம் நாடுதல் எனும் உயர்ந்த உன்னதமான பண்பினை, நபிகளார் அவர்கள் எந்தளவிற்கு அழுத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (57), (58), (2714)

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்க மாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறுசெய்ய மாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டு விட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலிலி)

நூல்: புகாரி (18), (3893), (6073)

அனைவரும், அனைவருக்கும் நலம் நாடுதல்

சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. நலம் நாடும் செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும்; அவர்கள் தான் நன்மையான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று எவரும் ஒதுங்கிக் கொள்ளாமல், அனைவரும் பிறருக்கு நலம் நாடி செயல்பட வேண்டும். இந்தப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதைக் கவனத்தில் கொண்டு எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக நலம் நாட வேண்டும்; நன்மை செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும்  (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் (உங்கள்து பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (5188)

பிறர் நலம் எனும் பட்டியலில் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டினர், ஊர்மக்கள் என்று அனைத்து மக்களும் அடங்குவர். எனவே அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதோடு அதற்குரிய காரியங்களைச் செய்ய வேண்டும்.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(திருக்குர்ஆன் 4:36)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.

(திருக்குர் ஆன் 2:83)

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதை களுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 2:215)

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவதுதான்என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (95)

மற்றவர்களின் நலம் நாட வேண்டும் என்று சொல்வதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அதை எந்தளவிற்குக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்குரிய பல்வேறு போதனைகளை இஸ்லாம் முன்வைக்கிறது. அவற்றுள் மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடை பாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது  எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1833)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (448)

நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச்  சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (2465)

(கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்கள், (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டார்கள். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்புறத்தில் நின்று கொண்டு, “அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி (ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். “யார் “ரூமாஎன்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி(வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி (ஸல்) அவர்கள் “எவர் பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவி செய்து) தயார்படுத்துகின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?” என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றுக் கொண்டனர்.

அறிவிப்பவர்: அபூ அப்திர் ரஹ்மான் (ரலி)

நூல்: புகாரி (2778)

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக்கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் (மக்கள்) நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராகஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)

நூல்: முஸ்லிம் (5109)

பிறர் நலம் நாடுவோரும், கெடுப்போரும்

சமுதாயத்தில் பிறர் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனமுவந்து உழைப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்காகப் பல்வேறு சிரமங்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். பொதுநலன் சார்ந்த பணிகளில் அயராது ஈடுபடுகிறார்கள். இத்தகைய மக்களுக்கு இறைவனின் உதவி இம்மையிலும் மறுமையிலும் இருக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று தூய சிந்தனையோடு செயல்படும் இவர்களுக்கு அல்லாஹ் அளவற்ற நன்மைகளை அள்ளி வழங்குவான்.

இதற்கு மாற்றமாக, தாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும்; அடுத்தவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன? என்று சுய நலத்தோடு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் உலக ஆதாயங்களுக்காக  அடுத்தவர்களுக்குத் தீமை செய்வது, உரிமைகளைப் பறிப்பது என்று கல் நெஞ்சம் கொண்டவர்களாக, தீய காரியங்களைச் செய்பவர்களும் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் ஈருலகிலும் இறைவனின் அன்பையும் கருணையும் இழந்தவர்கள். அவனது எச்சரிக்கைக்கும் தண்டனைக்கும் உரித்தானவர்கள். இதை மனதில் கொண்டு நாம் எப்போதும் பிறர் நலம் நாடுவேராக இருக்க வேண்டுமே தவிர ஒருபோதும் பிறர் நலம் கெடுப்போராக இருந்துவிடக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5231)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர்.  அவ்விருவரில் ஒருவர், “அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!”  என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!”  என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1442)

நபி (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும் தமது) தேவையை முறையிட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவிசெய்யும்படி பிறரிடம்) பரிந்துரை(யாவது) செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்என்று கூறுவார்கள். பிறகு “அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான்என்பார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி (1432)

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நூல்: புகாரி (1433)

மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மரமொன்றை, ஒரு மனிதர் வந்து வெட்டி (அப்புறப்படுத்தி)னார். இ(ந்த நற்செயலைச் செய்த)தற்காக அவர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (5108)

தரீஃப் அபீதமீமா பின் முஜாலித் அல்ஹுஜைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள், ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உபதேசம் செய்து கொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களுடைய தோழர்களும், “நீங்கள் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றீர்களா?” என்று கேட்க ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டேன் என்று சொன்னார்கள்: யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவரை (அவரது நோக்கத்தை) அல்லாஹ் மறுமை நாளில் விளம்பரப்படுத்துவான். யார் (மக்களைச்) சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் சிரமத்திற்குள்ளாக்குவான்.

நூல்: புகாரி (7152)

பிறருக்கு நலம் தரும் காரியங்களைச் செய்யுங்கள்; நலத்தைக் கெடுக்கும் காரியங்களைச் செய்யாதீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது.

இது தொடர்பாக இஸ்லாம் மேலோட்டமாக, பெயரளவிற்குப் பேசவில்லை. இதனைத் தனது கொள்கையின் அடிப்படையாக, அடிநாதமாக வைத்து உரக்கச் சொல்கிறது.  பிறர் நலம் நாடுவது என்பது இறைநம்பிக்கை மற்றும் இறையச்சத்தின் பிரதிபலிப்பு, மறுமை வெற்றிக்கான மகத்தான வழிமுறை என்று பறைசாற்றுகிறது.

இத்தகைய இனிமையான இஸ்லாமிய மார்க்கம், மக்களுக்கு இன்னல்களை அளிக்கின்ற, பொதுமக்களை அழித்தொழிக்கின்ற தீவிரவாதத்தை ஆதரிக்குமா? என்று நெஞ்சின் மீது கைவைத்து யோசித்துப் பாருங்கள். இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது; எப்போதும் அதற்கு எதிரானது என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

—————————————————————————————————————————————————————-

இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்கள் பங்கு

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள்; இஸ்லாம் என்றால் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற பார்வை உலகம் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல! இந்தத் தவறான சிந்தனையைக் களைந்து, இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்பதை நிறுவுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்திலும், புதுவை, கேரளா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

வீரியமிகு இந்தப் பிரச்சாரம் பிற சமுதாயங்களிடம் வேகமாகச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது.

“முஸ்லிம்கள் தீவிரவாதிகள்’ என்ற கருத்தைப் போலவே “இந்தியாவில் முஸ்லிம்கள் அந்நியர்கள்’ என்ற விஷக்கருத்தும் திட்டமிட்டு, ஒரு சில தீய சக்திகளால் பரப்பப்படுகின்றது.

முஸ்லிம்கள் மீது நல்லெண்ணம் வைத்திருக்கும் பிற சமுதாய மக்களிடம் கூட இந்த விஷக் கருத்து ஒரு தவறான சிந்தனையைத் தோற்றுவிக்கின்றது.

முஸ்லிம்கள் அன்றும், இன்றும், என்றும் இந்த நாட்டு மண்ணின் மைந்தர்கள்; அவர்கள் அந்நியர்கள் அல்லர்; இந்த நாட்டுக்காக, இந்திய விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக “தேன்கூடு’ என்ற வலைத்தளத்தில் ஷேக் மைதீன் என்வரால் பதியப்பட்ட இந்த ஆக்கத்தை வாசகர்களுக்குத் தருகின்றோம்.

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாகப் போரில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

வரி தர மறுத்த வரிப்புலிகள்

இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடினார் பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ஆம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.

கதி கலக்கிய கான் சாஹிபு

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஷா அப்துல் அஜீஸ்

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை ‘தாருல் ஹர்ப்’ ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் ‘பத்வா’ எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

அஞ்சாத புலி ஹைதர் அலி

18ஆம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

தீரன் திப்பு சுல்தான்

‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ஆம் ஆண்டு முதல் 1792ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான்.  அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

வங்கத்துச் சிங்கங்கள்

வங்காளத்தில் 1776ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரைக் கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

தென்னாட்டு வேங்கைகள்

தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ஆம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது.

ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்திய விடுதலைக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

இஸ்லாம் எந்த நிலையிலும் தற்கொலை செய்வதை அனுமதிக்கவில்லை. முற்றிப் போன தேசபக்தியால் இப்படி தற்கொலை செய்தவர்களும் இருந்தனர் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.

முஃப்தீ இனாயத் அஹ்மது

தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ஆம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின.

இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ‘நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?’ என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

‘ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்’ என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அன்றும் அயோத்தியின் அவலம்

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறுவேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றான்.

புதைந்து போன புரட்சி மலர்கள்

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

அன்றும் ஒரு பொடோ

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது ‘ரௌலட் சட்டம்’. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். ‘கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். ‘எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்’ என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மனசாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. ‘நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்’ என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று ‘லப்பைக் லப்பைக்’ என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலி, ஷௌகத் அலி, அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர்.  காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர். கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.

சிலையை உடைத்த சீலர்

தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், ‘மேடை முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். ‘மேடை முதலாளி’ அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.

கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.

சிங்கை சிங்கம்

1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915ஆம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லா, இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 அன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இப்படி இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.

இந்திய நாடு எங்கள் நாடு, என்றும் நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மறைத்து, இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளை அடையாளம் காட்டுவோம்.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமாதானத்திற்குக் கொடுத்த முன்னுரிமையையும், முக்கியத்துவத்தையும் சென்ற இதழில் கண்டோம். இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டையும் இப்போது பார்ப்போம். ஹுதைபிய்யா ஒப்பந்த விதியின்படி மக்காவிலிருந்து எந்த முஸ்லிம் மதீனாவுக்கு வந்தாலும் அவரைத் திருப்பியனுப்ப வேண்டும்.

(ஒப்பந்த விதி இவ்வாறு இருக்கும் நிலையில்) குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்றுகொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அபூபஸீர் (ரலி) அவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்” என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்; மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்” என்று சொன்னார்.

அபூபஸீர் அவர்கள், “எனக்கு(அதை)க் காட்டு. அதை நான் பார்க்கிறேன்” என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்று விட்டார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்ட போது, “இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்” என்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நின்ற போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்” என்று கூறினார்.

உடனே அபூபஸீர் அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி விட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவரது தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்” என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.

இது புகாரி 2732வது ஹதீஸ் தெரிவிக்கும் செய்தியாகும்.

இந்த ஒப்பந்தத்தை வளைக்கும் விதமாக அபூபஸீர் ஒரு தந்திரமான சமாதானத்தைக் கூறுகின்றார். நபி (ஸல்) அவர்கள் அந்தத் தந்திர சமாதான யுக்தியை ஏற்றுக் கொள்ளவில்லை.

அத்துடன், “இவர் போர்த்தீயை மறுபடியும் மூட்டிவிடுவார்’ என்று அபூபஸீரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து, அவர்கள் போரைத் தவிர்ப்பதில் எந்த அளவுக்கு உறுதி பூண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.

நபி (ஸல்) அவர்கள் காட்டிய உறுதிப்பாடு தன்னை மீண்டும் மக்காவில் கொண்டுபோய் தள்ளிவிடும் என்று தெரிந்த மாத்திரத்தில் அபூபஸீர் தப்பித்து விடுகின்றார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதில், அமைதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொண்டிருந்த உறுதிப்பாட்டை நாம் அறிந்து கொள்ளலாம்.

எதிரிகளின் வெறியும் இறைத்தூதரின் நெறியும்

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் போரை முற்றிலும் தவிர்ப்பதிலும் உறுதியாக இறைநெறியைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஆனால் எதிரிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொல்வதிலேயே குறியாகவும் வெறியாகவும் இருந்தார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

நாங்களும், மக்காவாசிகளும் சமாதான ஒப்பந்தம் செய்து, எங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடிக் கொண்டபோது, நான் ஒரு மரத்தை நோக்கி வந்து, அதன் (அடிப்பாகத்தில் இருந்த) முற்களை அகற்றிவிட்டு அதற்குக் கீழே படுத்துக்கொண்டேன்.

அப்போது மக்காவாசிகளான நான்கு இணைவைப்பாளர்கள் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. உடனே மற்றொரு மரத்துக்கு நான் மாறிக் கொண்டேன். அந்த நால்வரும் தம் ஆயுதங்களை (அந்த மரத்தில்) தொங்கவிட்டுவிட்டு அவர்களும் படுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், யாரோ ஒருவர் அந்தப் பள்ளத்தாக்கின் கீழேயிருந்து “முஹாஜிர்களுக்கு ஏற்பட்ட நாசமே! (நம் தோழர்) இப்னு ஸுனைம் கொல்லப்பட்டுவிட்டார் (ஒப்பந்த மீறல் நடைபெற்றுவிட்டது)என்று உரக்க அறிவித்தார். உடனே நான் எனது வாளை உருவிக் கொண்டு, படுத்திருந்த அந்நால்வரைத் தாக்கினேன். அவர்களின் ஆயுதங்களை எடுத்து ஒரே கட்டாக என் கையில் வைத்துக் கொண்டேன்.

பிறகு “முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் தலையைத் தூக்கிப் பார்த்தால் அவரது கண் உள்ள பகுதியிலேயே அடிப்பேன்என்று கூறினேன்.

பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் “அபலாத்குலத்தைச் சேர்ந்த “மிக்ரஸ்எனப்படும் ஒரு மனிதரை பிடித்துக்கொண்டு, துணி விரிக்கப்பட்ட குதிரையொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடன் எழுபது இணை வைப்பாளர்களும் இருந்தார்கள்.

அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு “அவர்களை விட்டு விடுங்கள். (ஒப்பந்த மீறல்) குற்றம் அவர்களிடமிருந்தே தொடங்கி மீண்டும் ஏற்பட்டதாக இருக்கட்டும்என்று கூறி, அவர்களை மன்னித்து விட்டுவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் 3695

மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் திடீர்த் தாக்குதல் தொடுப்பதற்காக “தன்ஈம்மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கி வந்தனர். அப்போது சரணடைந்த அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிடித்து, (மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்தான்” (48:24) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: முஸ்லிம் 3696

மக்காவாசிகள் மீது நபி (ஸல்) அவர்கள் நேரடியாகப் போர் தொடுப்பதற்கு அத்துணை நியாயமிருக்கின்றது. ஆனாலும் போர் செய்ய வந்த, புனித நபியைக் கொல்ல வந்த எண்பது எதிரிகளை நபி (ஸல்) அவர்களே மன்னித்து விடுகின்றார்கள். இது நபி (ஸல்) அவர்கள் போரை விரும்பாமல் அமைதியையே விரும்பினார்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 16

அறிவியல் கூறும் ஆண் பெண் வேறுபாடு

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் ஆண்களுக்குத் தான் உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாம் இப்படிக் கூறுவதை பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக சிலர் சித்தரிக்கிறார்கள். இஸ்லாம் ஒரு கோட்பாட்டைச் சொல்கிறது என்பதற்காக எதிர்ப்பவர்கள் அறிவியல் இது குறித்து சொல்வதையாவது கவனிக்கட்டும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை ஆணுக்குப் பதிலாக பெண்ணுக்குக் கொடுத்தால் என்ன? என்ற கேள்வியை எழுப்புவார்கள் பலர். இதை இன்றைய விஞ்ஞானம் எப்படிச் சொல்கிறது என்று பாருங்கள்!.

மூளையின் செயல்திட்டங்கள்

முதலில் மனிதன் என்று தீர்மானிப்பது மூளையிலுள்ள செயல்திட்டங்கள் (டதஞஏதஆஙஙஒசஏந) தான். அதனால் தான் நாம் மனிதர்களாகவே இருக்கிறோம். மனிதர்களாகிய நமக்கும் மூளை இருக்கிறது. ஆடு மாடுகளுக்கும் மூளை இருக்கத் தான் செய்கிறது. அவைகளுக்கெல்லாம் மனிதனை விட பெரிதாகத் தான்  மூளை இருக்கிறது. ஆனால் நமக்குள்ள செயல்திட்ட வேலைகள் ஆட்டுக்கும் மாட்டுக்கும் கிடையாது. மூளையை வெறும் பொருளாகப் பார்த்தால் எல்லா மூளைகளும் ஒன்றாகத்தான் தெரியும்.

மூளை என்பது ஒரு வகையான கொழுப்பு போன்றது. அதில் என்ன செயல்திட்டங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் முக்கியம். உதாரணமாக, கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் என்ற ஒரு பொருள் உள்ளது. அதில் செயல்திட்டங்களால் நிரப்பப்பட்டவைகளும், புதிதாக வாங்கியதும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஹார்ட் டிஸ்க்கிலுள்ளதை அழித்து (foamat) செய்து ஒன்றுமில்லாவிட்டாலும் அதை HARD DISC என்றுதான் சொல்கிறோம்.

இதில் WINDOWS-7 போடப்பட்டுள்ளது, இதில் XP போடப்பட்டுள்ளது என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் ஹார்ட் டிஸ்கைத் தனியாகப் பார்த்தால் என்ன ஆப்பரேட்டிங் சிஸ்டம், மென்பொருள் போட்டாலும் போடாவிட்டாலும் எல்லா ஹார்ட் டிஸ்குகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அதைக் கம்யூட்டரில் பொருத்தி செயல்படுத்திப் பார்த்தால் தான் அது சரியாக இருக்கிறது; சரியாக இல்லை, இன்ன மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தியைப் புரிந்து கொள்ளமுடியும்.

அதே போன்று தான் மனித மூளைக்குள் இறைவன் (PROGRAMMINGS) செயல்திட்டங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். இன்னின்ன செல்கள் (உயிரணுக்கள்) இன்னின்ன வேலையைச் செய்ய வேண்டும் என பல்லாயிரக்கணக்கான செல்களையும் பல்லாயிரக்கணக்கான வேலைகளையும் வைத்து மூளையை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். இந்த வேலைகளை மனிதனல்லாத மற்ற உயிரினங்களுக்கு இறைவன் கொடுக்கவில்லை.

ஆடு மாடுகளுக்கும் மூளை இருக்கிறது. அதில் செயல்திட்டங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதனுடைய செயல்திட்டங்கள் வேலைகள் எல்லாம், எதைச் சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக் கூடாது? என்ற செயல்திட்டங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. பசி எடுக்கிறது, வயிறு நிரம்புகிறது போன்ற உணர்வுகள் மட்டும் உடையவைகளாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அதாவது அறிவு சார்ந்த செயல்திட்டங்கள் இருக்காது. உடல் தேவைகளைப் பூர்த்தி செய்கிற செயல்திட்டங்கள் மட்டும் இருக்கும்.

உதாரணத்திற்கு, வேப்ப மரத்து இலை மனிதர்களுக்குக் கசக்கிறது. ஆனால் ஆடு மாடுகள் அதைச் சாப்பிடுகின்றன. அப்படியெனில் அவற்றின் மூளையில் கசப்புக்கான செயல்திட்டங்கள் கிடையாது. அதை உணர்த்துகின்ற நாக்கின் நரம்பிலும் அப்படியொரு செயல்திட்டம் இல்லை என்பதைப் புரியலாம். ஏன் இப்படி நடக்கிறது என்றால், மனிதர்களின் மூளையில் இவை வெறுக்கத்தக்கதாகவும் ஆடு மாடுகளின் மூளையில் விரும்பத் தக்கதாகவும் எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆக மூளையில் இருக்கிற செயல்திட்டங்களை வைத்துத் தான் மனிதன் அனைத்தை விடவும் சிறப்பிற்குரியவனாக இருக்கிறான்.

குருவிக்கும், எறும்புக்கும் கூட அதற்குத் தேவையான செயல்திட்டங்களுடன் இயங்குகிற மூளை இருக்கத்தான் செய்கிறது.

எனவே மூளையின் மூலமாக, அதாவது மூளையில் ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற செயல்திட்டங்கள் மூலமாகத் தான் பேசுகின்ற, மனப்பாடம் செய்து கொள்கின்ற தன்மை மனிதனுக்கு இருக்கிறது. சிந்திக்கும் செயல்திட்டங்களும் நமக்குத் தெரிந்ததை பிறருக்கு அழகிய முறையில் எடுத்துச் சொல்லும் திட்டங்களும் மனிதர்களுக்குத் தான் இருக்கிறது. சொத்து சேர்க்கின்ற செயல் திட்டம் நமக்குத்தான் இருக்கிறது. ஆடு மாடுகள் சொத்துச் சேர்க்குமா? இது உனக்குரியது; இது எனக்குரியது என்று எல்லையை வகுப்பது, பழிவாங்குவது போன்ற நல்லது கெட்டதுகளை தேர்வு செய்கிற செயல்திட்டங்கள் மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் இருக்கிறது. மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் இந்தச் சிறப்பியல்பு கிடையாது.

இப்படி மனித மூளையில் செயல்திட்டங்களை ஏற்படுத்திய இறைவன் ஆணும் பெண்ணும் சமம் என்றால், ஒரே மாதிரியான செயல் திட்டங்களைத் தான் இறைவன் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை. அதாவது மனிதன் என்ற வகையில் மிருகங்களிலிருந்து வித்தியாசம் இருப்பது எப்படி உண்மையோ அதுபோன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் மனிதன் என்பதற்குத் தேவையான பொதுவான செல்களையும் செயல்திட்டங்களையும் படைத்துவிட்டு, ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அல்லது பெண்ணிலிருந்து ஆணை வேறுபடுத்திக் காட்டுவதற்காக குறிப்பிட்ட செயல்திட்டங்களையும் செல்களையும் ஏற்படுத்தி வித்தியாசப்படுத்தியிருப்பதையும் மறுக்கவே முடியாது. அதனால்தான் இவன் ஆணாகவும் அவள் பெண்ணாகவும் இருக்கிறாள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் வித்தியாசம் இருக்க  வேண்டும் என்பதற்காக பெண்ணின் மூளையில் ஆணை விட சில மாறுதல்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

உடல் கூறுகளிலும், உள் கட்டமைப்பிலும், வெளிப்புறத் தோற்றத்திலும் பல்வேறு மாறுதல்களை இறைவன் ஏற்படுத்தியிருப்பதை எவராலும் மறுக்கவே முடியாது. அதாவது மிருகங்களிலிருந்து வேறுபட்ட நமக்கு, ஆண் பெண் ஆகிய நமக்கு, பேசுவதிலும், மகிழ்ச்சியாக இருப்பதிலும், கோபப்படுவதிலும், சொத்து சேர்ப்பதிலும், பொய் சொல்வதிலும் இப்படி நாம் செய்கிற செயல்களினால் மிருகங்களிலிருந்து மாறுபடுகிறோம். ஆனால் இவை ஒவ்வொன்றிலுமோ அல்லது சிலவற்றிலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. அப்படித்தான் இறைவன் படைத்துள்ளான். எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண் பெண் வேறுபாடுகள்

மனிதன் என்பதற்கு முதல் ஆதாரமாக இருக்கிற சிந்தனையின் பிறப்பிடமான மூளையை எடுத்துக் கொள்வோம். ஆண் மூளையின் வடிவமும் பெண் மூளையின் வடிவமும் சமமாக இல்லை. ஆண் மூளை பெண் மூளையை விட 100 கிராம் பெரியதாக உள்ளது. வெளிப்படையில் ஆண் மண்டையும் பெண் மண்டையும் ஒன்றாகக் கூட இருக்கலாம். அல்லது பெண் மண்டை, ஆண் மண்டையை விடப் பெரிதாகக் கூட இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் சராசரியாக பெண் மூளையை விட ஆண் மூளை 100 கிராம் பெரிதாக இருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இன்றைய அறிவியல் உலகம் பெண்ணை விட ஆணுக்கு மூளை பெரிதாக இருப்பதினால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதையும் சேர்த்து ஆய்வு செய்துள்ளது.

அதே போன்று மூளையில் பலவகைப் பயன்பாடுகள் உள்ளன. மூளையின் வலது புறம் நினைவாற்றலுக்குரியது. மூளையின் இடது புறம் சிந்தனை செய்வதற்கு, மூளையின் வலது பின்புறம் வரலாற்றுப் பூர்வமான செய்திகளை நினைவுபடுத்தவும், பழைய செய்திகளை நினைவுபடுத்தவும், இது உணர்வுப்பூர்வமாக அணுகும் பகுதி, இது கோபப்படுவதற்கான பகுதி, இது ஆசைப்படுவதற்கான பகுதி, என்றெல்லாம் பிரித்து பிரித்து ஆய்வு செய்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

ஒரு பெண், ஆணை விரும்புகிற செயலுக்கும், அதற்குத் திட்டம் தீட்டுகிற பகுதியும் கூட மனித மூளையில் இருக்கத்தான் செய்கிறது. ஆக மனிதன் செய்கிற வேலை மூளையின் செயல்திட்டப் பகுதிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் பொய் பித்தலாட்டம் போன்ற வேலை மனிதனின் முன் நெற்றி மூளையின் செல்கள் தான் தீர்மானிக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அல்லாஹ்கூட பொய் சொல்கிற முன்நெற்றி ரோமத்தைப் பிடித்து இழுப்போம் என்கிறான்.

அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.

அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.

(அல்குர்ஆன் 96:11-17)

எனவே மனிதனின் முன் நெற்றியிலுள்ள மூளையின் செல்கள்தான் பொய் சொல்வதற்கும் பித்தலாட்டம் செய்வதற்கும் வழிவகுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஆண், பெண் யாராக இருந்தாலும் முன் நெற்றி தான் பொய் சொல்கிறது. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவைகளில் மிக முக்கியமானது சிந்திப்பது, ஆய்வு செய்வதுதான். அதாவது ஒன்றிலிருந்து இன்னொன்றைக் கண்டுபிடிப்பது, தர்க்கம் செய்து விவாதிப்பது போன்ற சிந்தனைக்குண்டான செயல்திட்டம் மூளையில் இருக்கிறது. இது ஆணுக்கும் இருக்கிறது. பெண்ணுக்கும் இருக்கிறது. அதே போன்று மனனம் செய்து கொள்கிற செயல்திட்டங்களும் உள்ளன.

இதற்கு நடைமுறையில் கூட உதாரணம் சொல்லலாம். ஒரு செய்தியைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிற போது, கேட்கிற போது மனப்பாடமாகி விடுகிறது. செல்போன் நம்பரைப் பார்க்காமல் சொல்கிறோம். நம்முடைய இணையதள முகவரிகள், வலைதள முகவரிகள், முகநூல் போன்றவற்றை மனப்பாடமாக வைத்துக் கொள்கிறோம். மனனம் என்பது சிந்திக்கிற வேலை கிடையாது. ரிக்கார்டு போன்று பதிவு செய்து கொள்ளும் வேலை மட்டும்தான்.

சிந்திக்கின்ற, மனனம் செய்கின்ற ஆகிய இந்த இரண்டையும் ஆய்வு செய்கிறார்கள் விஞ்ஞானிகள். பெண்களின் நினைவாற்றல் செயல்திட்டங்கள் எப்படி இருக்கிறது என்றும் ஆண்களின் நினைவாற்றல் செயல்திட்டங்கள் எப்படி இருக்கிறது என்றும் பெண்ணின் சிந்திக்கும் திறன், ஆணின் சிந்திக்கும் திறன் எப்படி எப்படியெல்லாம் இருக்கும் என்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்படி மேற்கண்ட ஆய்வில், பெண்ணை விட ஆணின் சிந்திக்கும் திறன் கொண்ட பகுதி மூளை 13 சதவீதம் வலுவான நியூரான்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து விட்டனர்.

அதேபோன்று நினைவாற்றலைப்  பொறுத்தவரை ஆண்களை விட பெண்களின் மூளை பகுதி 11 சதவீதம் அதிக திறன் கொண்டதாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஆண்கள் 80 சதவீதம் நினைவாற்றல் உடையவர்களாக இருந்தால் பெண்கள் 91 சதவீதம் நினைவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

இந்த அடிப்படையினால் தான் மனனம் செய்கிற துறையில் பெண்கள் பிரகாசிப்பார்கள். இன்று பள்ளிக்கூடப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதில் அதிகமானவர்கள் பெண்களாகத் தான் இருப்பார்கள். ஆண்கள் நூற்றுக்கு நூறு வாங்காமல் இருப்பதற்கு வேறு பல புறக் காரணங்கள் இருந்தாலும் அடிப்படையான காரணம், மனனம் செய்கிற கல்வி முறையினால் தான். பள்ளிக் கூட படிப்பைப் பொறுத்தளவுக்கு புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே எழுதினால் தான் அதிக மதிப்பெண் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. தவறுதலாக இருந்தால் கூட மதிப்பெண் கிடைத்துவிடும்.

இதற்குத் தான் மெக்காலே கல்வித் திட்டம் என்கிறார்கள். இது சிறிதும் சிந்தனைக்கு சம்பந்தமில்லாத கல்வித் திட்டமாக இருப்பதைப் பார்க்கிறோம். இது இந்திய நாட்டை ஆண்ட வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய கல்வித் திட்டமாகும். இதில் ஆராய்ச்சிக்கு எந்த அடிப்படையும் கிடையாது. மனனத்திற்கு முக்கியத்துவம் இருப்பதனால் தான் பெண்கள் புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனனம் செய்து எழுதிவிடுகிறார்கள். அதனால் முதல் மதிப்பெண் பெறுகின்றனர்.

ஆணைப் பொறுத்த வரை ஒரு விஷயத்தைச் சிந்திப்பான். சரி தவறு என்று ஆராய்வான். இப்படி ஆண் மூளை இருப்பதினால் மனனம் செய்வதில் கோளாறு வருகிறது.

திருக்குர்ஆனை சிறுவயதிலேயே மனனம் செய்தால் தான் எளிதாக மனப்பாடம் செய்ய முடியும். அரபி இலக்கணத்தைப் படித்துவிட்டு பிறகு மனனம் செய்வது என்பது சிரமமான காரியம் தான். ஏனெனில் இவனது சிந்தனை வார்த்தையைத் தேடிக் கொண்டேயிருக்கும். அங்கு ஒரு வார்த்தை இருந்தால் இவனது மூளை இன்னொரு வார்த்தையை அறிவிக்கும். அதனால்தான் பெரிய வயதில் மனனம் செய்வது கடினமாக இருக்கிறது.

இதைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் ஆய்வில் தெளிவுபடுத்துகின்றனர். மனனத்தில் பெண்கள் முதலிடம் வருவதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். பிள்ளை பிறந்த தேதி, திருமண தேதி, முக்கிய நாட்களின் தேதி போன்றவற்றை மிகச் சரியாகச் சொல்பவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆண்களால் இதைச் சொல்ல முடியாது. அதேபோன்று குடும்பங்களில் சண்டை வந்தால், பத்து, இருபது வருடங்களுக்கு முன்னால் உள்ளதையெல்லாம் மறக்காமல் வைத்திருந்து சண்டையில் எடுத்துவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம் ஞாபக சக்தி அதிகமாக இருப்பது தான். ஆனால் ஆண்கள் அப்படியெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அந்த நிகழ்வு நடந்ததும் அப்படியே மறந்துவிடுவார்கள். சிந்திப்பதற்குண்டான விஷயம் இருந்தால் மட்டும் அதைப் பயன்படுத்துவார்கள்.

இதற்குக் காரணம், அல்லாஹ்வே அதுபோன்ற தன்மையைப் பெண்களுக்கு வழங்கியிருப்பதினால் அதைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அதுபோன்ற தன்மையை ஆண்களுக்கு இறைவன் குறைவாக வழங்கியிருக்கிறான். அதனால் ஆண்களால் வெளிப்படுத்த முடியவில்லை.

அதே நேரத்தில் சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு  ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும். உலகில் அதிகமான சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் ஆண்களில்தான் அதிகம் இருக்கிறார்கள். அதிகம் என்ற சொல்வதை விட ஒரு சிலரைத் தவிர மற்றனைவரும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.

ரேடியோவைக் கண்டுபிடித்தவர், மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர், விமானத்தைக் கண்டுபிடித்தவர் என்று கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் பட்டியலை எடுத்தால் அனைவரும் ஆண்களாவே இருக்கின்றனர். காரணம் சிந்திக்கிற ஆய்வு செய்கிற மூளைத் திறன் செயல்திட்டங்கள் ஆண்களின் மூளையில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இவைகளெல்லாம் பெண்களுக்குக் குறைவு என்று அறிவியல் ஒத்துக் கொண்டுவிட்டது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பெருமானாரின் பெருந்தன்மை

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர் ஆவார்கள். அவர்கள் மனித சமுதாயத்தை அழகிய பண்பிலும் அருங்குணத்திலும் வார்த்தெடுத்தார்கள் என்றால் மிகையல்ல.

முஹம்மது நபியின் தோழர்களில் ஒருவரும் இஸ்லாமியக் குடியரசின் இரண்டாவது ஆட்சித் தலைவருமான உமர் (ரலி) அவர்களது அவையில் நடந்த ஒரு நிகழ்வு, அவர்கள் பாடம் பயின்ற பாசறையையும் அதன் அற்புத ஆசிரியரையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தாஎன்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.

உயைனா அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லைஎன்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோனான அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்என்று சொன்னார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக்கூடியவர்களாய் இருந்தார்கள்.

நூல்: புகாரி 4642

உமர் (ரலி) அவர்கள் கோபத்திற்கும், கொந்தளிப்பிற்கும் பேர் போனவர்கள். ஆனால் அவர்கள் தமது அவையில் உள்ள ஓர் இளைஞரின் வாயிலிருந்து வந்த ஒருசில மந்திரச் சொற்களில் அடங்கி, அமுங்கிப் போய்விடுகின்றார்கள். ஆர்த்தெழுந்த அந்த ஆவேசக்காரரை, ஆட்சித் தலைவரை அடக்கிய அந்த மந்திரச் சொற்கள் திருக்குர்ஆன் வசனத்தின் வரிகள் தான்.

பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!

அல்குர்ஆன் 7:199

இதற்குத் தான் அந்த இரும்பு மனிதர் அடங்கிப் போகின்றார்.

முஹம்மது நபி (ஸலர்) அவர்களை வார்த்ததும் வடித்ததும் இந்த அல்குர்ஆன் தான். அந்தப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள் தான் உமர் (ரலி) அவர்கள். இந்த உமர் (ரலி) இப்படியென்றால் அன்னாரது ஆசான் நபி (ஸல்) அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதற்குக் கட்டியம் கூறுகின்ற நிகழ்வு தான் மேற்கண்ட நிகழ்வாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கும் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்கின்றது.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஃபதக்நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) “அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்இருந்தார். அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

(எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபி (ஸல்) அவர்களிடம் “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்என்றார்.

இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

 பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் “சஅதே! அபூ ஹுபாப் – அப்துல்லாஹ் பின் உபை – சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்து விட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:

உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும். (3:186)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (2:109)

அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷி இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் “(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. ஆகவே, இந்த(இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர்.

நூல்: புகாரி 4566

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவை ஆள்கின்ற ஆட்சித் தலைவர் ஆவார்கள். அந்த ஆட்சித் தலைவருக்கு சரிநிகர் போட்டியாளனாகக் காட்டிக் கொள்ள முனைகின்ற அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பவனை நபி (ஸல்) அவர்கள் கொன்றால் கூட இந்தத் தலைவரை எதிர்த்துக் கேட்க அரபுலகில் எந்தக் கொம்பனும் இல்லை. தண்டிக்க சக்தியிருந்தும் அவரை மன்னித்து, பெருந்தன்மைக்குப் பெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

பெருமானாரின் இதுபோன்ற பெருந்தன்மை தான், சுபாவத்திலேயே ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் கொண்ட உமர் (ரலி) அவர்களைப் பக்குவப்படுத்தியது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் பக்குவப்படுத்தியது பண்புகள் நிறைந்த திருக்குர்ஆன் தான். அதனால் தான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அன்னாரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “குர்ஆன் தான் நபி (ஸல்) அவர்களின் குணமாக இருந்தது’ என்று கூறுகின்றார்கள். (முஸ்லிம் 1233)

மன்னிக்கும் மனப்பாங்கு

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் – எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப் பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.

நூல்: புகாரி 3560

சுமாமா என்பவர் போர்க்கைதியாகப் பிடித்து வரப்பட்டு பள்ளிவாசல் தூணில் கட்டி வைக்கப்படுகின்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கொண்ட அணுகுமுறையைப் பின்வரும் ஹதீஸ் விவரிக்கின்றது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “நஜ்த்பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் “பனூ ஹனீஃபாகுலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, “(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?” என்று கேட்டார்கள். அவர், “நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார்.

மறு நாள் வந்தபோது அவரிடம், “ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, “நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லைஎன்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், “முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்என்றும் நான் உறுதி கூறுகிறேன்என்று மொழிந்துவிட்டு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக்கொண்டு விட்டனர்என்று சொல்லிவிட்டு, “மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள்.

அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறிவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராதுஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4372

இங்கு நபி (ஸல்) அவர்களிடம் மன்னிப்பு, தண்டிப்பு ஆகிய இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் மன்னிப்பையே தேர்வு செய்கின்றார்கள் என்பதை இந்தச் சம்பவத்தில் நாம் பார்க்கின்றோம். அவர்களது பெருந்தன்மை இங்கு வெளிப்படுகின்றது.

மன்னிப்புக்கே முதலிடம்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிய போது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வுகொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள்.

நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் தூங்கிக் கொண்டிருந்த போது இவர் எனது வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரது கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், “என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், “அல்லாஹ்என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்என்று கூறினார்கள். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. (மன்னித்து விட்டுவிட்டார்கள்.)

நூல்: புகாரி 4135

இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவருக்கு மரண தண்டனை அளிப்பதற்குரிய அனைத்து நியாயமும் இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவரைத் தண்டிக்காது மன்னிப்பளித்து, தமது பெருந்தன்மையைக் காட்டுகின்றார்கள்.

காலையில் பகைவன்; மாலையில் நண்பன்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைக்கு மக்காவில் எதிரிகள் விலை நிர்ணயம் செய்கின்றார்கள். அந்த இக்கட்டான கட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது நண்பர் அபூபக்ர் (ரலி) அவர்களும் தப்பி மதீனாவுக்குச் செல்கிறார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் வர (மக்காவிலிருந்து) மதீனா நோக்கி (ஹிஜ்ரத்) சென்றார்கள்….

….அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு (அவர்களுக்குப் பின்னால்) ஒரு குதிரை வீரர் (சுராகா) அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ!) இந்தக் குதிரை வீரர் நம்மை (நெருங்கி) வந்தடைந்து விட்டார்என்று கூறினார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு, “இறைவா! அவரைக் கீழே விழச் செய்!என்று பிரார்த்தித்தார்கள். உடனே குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது; பிறகு கனைத்துக் கொண்டே எழுந்து நின்றது. (உடனே சுராகா மனம் திருந்தி), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பியதை எனக்கு உத்தரவிடுங்கள்என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இங்கேயே நின்று கொள். எங்களை பின் தொடர்ந்து வரும் எவரையும் விட்டு விடாதேஎன்று கூறினார்கள். இந்த சுராகா முற்பகலில் அல்லாஹ்வின் நபிக்கெதிராகப் போரிடுபவராக இருந்தார்; பிற்பகலில் நபியைக் காக்கும் ஆயுதமாக மாறினார்.

நூல்: புகாரி 3906, 3911

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அவர்கள் எதிரிகளிடமிருந்து தப்பியோடிய நிகழ்வு! அவர்களது தலைக்கு வலை வீசப்படுகின்றது; விலை பேசப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் தம்மைத் துரத்தி வந்த துரோகியை நபி (ஸல்) அவர்கள் மன்னிக்கிறார்கள் என்றால் அல்குர்ஆன் தான் அவர்களை அப்படி வார்த்தெடுத்தது.

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.

பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41:34, 35

இந்தச் சம்பவத்திலும் இதற்கு முன்பு நாம் கண்ட சம்பவங்களிலும் நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனின் மேற்கண்ட போதனைகளைச் செயல்படுத்திக் காட்டி, பகையை வெல்லும் பாக்கியவான் என்பதை நிரூபிக்கின்றார்கள். பெருந்தன்மையுடன் நடந்து பெருந்தகையாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

நல்ல காரியத்திற்கு இப்படி ஈவு இரக்கம் காட்டுகின்ற இனிய நபியவர்கள், பாவமான காரியம் என்றால் தயவு தாட்சண்யம் பார்ப்பது கிடையாது.

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“அஸ்த்எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (“ஸகாத்வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுஎன்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்!என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், “அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுஎன்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தமது பிடரியில் சுமந்துகொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்என்று கூறிவிட்டு “(இறைவா! உனது செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 6636

ஜகாத் நிதி என்பது ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய பொருளாகும். அந்தப் பொருளில் அநியாயம் நடக்கும் போது நபி (ஸல்) அவர்கள் கொதித்து, கொந்தளித்து எழுகின்றார்கள். மன்னிப்பது, மறப்பது, விட்டுக் கொடுப்பது எல்லாம் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிராக நடப்பவர்களிடம் கிடையாது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

இப்படி பாவமான காரியங்களைத் தவிர மற்ற காரியங்களில் நபி (ஸல்) அவர்கள் மிகப் பெருந்தன்மையுடனும், மன்னிக்கும் மனப்பான்மையுடனும் நடந்து காட்டியிருக்கின்றார்கள். இது அவர்களுக்கு இறைமறை போதித்த பண்பாகும். இப்படிப்பட்ட இறைத்தூதர் எப்படி பயங்கரவாதத்தைப் போதித்திருப்பார்கள்? தீவிரவாதத்தை எப்படி ஆதரிப்பார்கள்? என்பதை நியாயவான்கள், நீதிமான்கள் சிந்திக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

பிற மதத்தவர்களிடம் அன்பு காட்டிய பெருமானார்

முஸ்லிம்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே! அவர்கள் தம் சமுதாய மக்களுக்கு சகிப்புத்தன்மையை வலியுறுத்தி போதித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன் ஆவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6114

அவர்களது வாழ்வில் எந்தளவு சகிப்புத்தன்மை நிறைந்திருந்தது, பிற மதத்தவர்களிடம் எவ்வளவு அன்பாகவும், பெருந்தன்மையாகவும் நடந்துள்ளார்கள் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் நிறைந்துள்ளன.

பொதுவாக ஒரு மதத்தின் ஆன்மீகத் தலைவர்கள் வேறு மதத்தவர்களை இழிவாகவே கருதுவது வழக்கம். அது போல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்பவர் ஒரு மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுடையவராக இருந்தால் அவரும் பிற மதத்தவர்களை இழிவாகவே கருதுவார்.

ஏற்கனவே தமக்குக் கொடுமைகள் புரிந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கும் என்றால் அவர் தமக்குக் கொடுமைகள் இழைத்தவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். உலக வரலாற்றில் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து அனைத்து வகையான தீமைகளையும் எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளை அவர்கள் சம்பாதித்திருந்தனர். அந்த எதிரிகள் மூலம் ஏராளமான கொடுமைகளையும் சந்தித்தனர். பல தோழர்கள் எதிரிகளால் கொன்று குவிக்கப்பட்டனர். ஊரை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர். இத்தகையோர் மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு சீக்கிரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களைப் பழிவாங்கியிருந்தால் அதை யாரும் குறை காண முடியாத அளவுக்கு அதற்கு நியாயங்கள் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கை முழுமையாக ஓங்கியிருந்த காலகட்டத்திலும் யாரையும் பழிவாங்கவில்லை. முஸ்லிமல்லாத மக்களுடன் நட்புறவுடனேயே அவர்கள் பழகி வந்தனர்.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் “நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?’ என்று கேட்டார்கள். “அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.

நூல்: திர்மிதி 1866

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர்களில் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)யும் ஒருவர். அவர் தமது அண்டை வீட்டு யூதருக்கும் தமது வீட்டில் அறுக்கப்பட்ட ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையையே அவர் காரணமாகக் காட்டுகிறார்.

அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணுமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத்தின் அடிப்படையில் அண்டை வீட்டாருக்கு உதவுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளக்கமளித்ததால் தான் அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழரால் இவ்வாறு நடந்து கொள்ள முடிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மிடம் ஆட்சியும், அதிகாரமும் வந்த பின்பும் முஸ்லிமல்லாத மக்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதற்கு மற்றொரு சான்றையும் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யூத மதத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் பணி செய்து வந்தார். அவர் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். உடனே அவரை விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றனர். அவரது தலைக்கருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்தார்கள். “இஸ்லாத்தை நீ ஏற்றுக் கொள்ளலாமேஎன்று அவரிடம் கூறினார்கள். அப்போது அந்த இளைஞரின் தந்தையும் அருகில் இருந்தார். அந்த இளைஞர் தமது தந்தையைப் பார்த்தார். “நபிகள் நாயகம் கூறுவதைக் கேள்என்று தந்தை கூறியதும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். “இவரை நரகத்திருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.

நூல்: புகாரி 1356

இந்த நிகழ்ச்சியில் பல விஷயங்களை நாம் அறிந்து கொள்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் வாழ்ந்த யூதர்கள் பலவகையிலும் நபிகள் நாயகத்துக்கு இடையூறு செய்து வந்தனர். எதிரி நாட்டவருக்குத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டவர்களும் அவர்களில் இருந்தனர். இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களாக நடித்து ஏமாற்றியவர்களும் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன் யூதர்கள் தான் பெரும்பான்மையாக இருந்தனர். அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் எஞ்சியவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மீது கடுமையான கோபம் இருந்தது.

இத்தகைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களிடம் மனித நேயம் மிகைத்திருந்தது. இதனால் தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

மேலும் இவ்வாறு அந்த இளைஞரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது, அருகில் இருந்த தந்தை அதை ஏற்கச் செய்கிறார் என்றால் அந்த மக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு மனித நேயத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்திருப்பார்கள் என்பதை ஊகம் செய்யலாம்.

தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தியோ அல்லது எஜமான் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தியோ நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரை மதம் மாற்றிவிடவில்லை. அவர் இறக்கும் தருவாயில் அவரிடம் சென்று அழைப்புப் பணி செய்கின்றார்கள். அந்த இளைஞரும் தமது தந்தையிடம் அனுமதி பெற்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தச் சம்பவம் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.

இத்தகைய பண்பாடுகளாலும், எல்லையற்ற மனித நேயத்தினாலும் தான் மனிதர்களை அவர்கள் வென்றெடுத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இரும்புக் கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து அவரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.

நூல்: புகாரி 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எளிமையான வாழ்வுக்குச் சான்றாக இது அமைந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகத்தின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர்.

நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் இரட்டை வேடம் போட்டு வந்த சமுதாயத்தவர்களை எந்த நாடும் மரியாதையுடன் நடத்துவதில்லை. ஆனால் யூதர்கள் பலவிதமான இடையூறுகள் அளித்த நிலையிலும் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் எந்த அளவு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

நாட்டின் அதிபதி அடைமானம் வைக்கக் கூடியவராகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெற்றுக் கொள்பவராகவும் இருந்தனர் என்பதிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விசாலமான உள்ளத்தை அறிந்து கொள்ள முடியும்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 2617

நபிகள் நாயகத்திற்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண்மணி விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்த போது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்தது. அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்ட போது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் நிலை என்னவென்றால் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்பது தான்.

இந்தச் சட்டத்தில் யாருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) வளைந்ததில்லை. உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி திருடிய போது அவருக்காக பலரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்த போது என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: புகாரி 3475, 3733, 4304, 6787, 6788)

சட்டத்தை அமுல்படுத்துவதில் கடும் போக்கை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய சொந்த விவகாரம் என்றவுடன் மன்னித்து விடுகிறார்கள்.

தமது குடிமக்களில் வேறு யாரையாவது அப்பெண் கொல்ல முயன்றிருந்தால் அவரைக் கடுமையாகத் தண்டித்திருப்பார்கள். கொலை முயற்சி தமக்கு எதிரானது என்பதால் தான் அப்பெண்ணை மன்னித்து விடுகிறார்கள்.

நேருக்கு நேர் நின்று மோதுவதை விட பெண்களை முன்னிறுத்தி கொல்ல முயல்வதும், உணவில் விஷம் கலந்து நம்பிக்கை துரோகம் செய்வதும் மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்.

இவ்வாறு துணிவுடன் ஒரு பெண் விஷம் கலந்து கொடுக்கிறார் என்றால் அதற்குப் பலமான பின்னணி இருக்க வேண்டும். திட்டமிட்டவர் யார்? தூண்டியவர் யார்? யாருக்கெல்லாம் இதில் பங்கு உண்டு என்றெல்லாம் விசாரணை நடத்துவது தான் உலக வழக்கம். சாதாரண குடிமக்களுக்காக இவ்வாறு நடத்தப்படாவிட்டாலும் நாட்டின் தலைவர்களின் உயிரோடு விளையாடியவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் தான் எடுக்கப்படும்.

அந்தச் சதியில் சம்பந்தப்பட்டவர் யார் என்பதோடு கூட நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். மாறாகக் குற்றவாளியின் இனத்தைச் சேர்ந்த அப்பாவிகளையும் கூட கொன்று குவிப்பது தான் உலக வழக்கம்.

ஆனால் இந்த மாமனிதரோ, அப்பெண்ணையும் தண்டிக்கவில்லை; அப்பெண்ணுக்குப் பின்னணியில் இருந்தவர் யார் என்பதையும் விசாரிக்கவில்லை. அப்பெண் எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவளோ அந்தச் சமுதாயத்தை – யூத சமுதாயத்தை – பழிவாங்கவும் இல்லை.

எதுவுமே நடக்காதது போல் அவர்கள் பதிலளித்ததைக் காணும் எவரும் இந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கும் மனித நேயத்திற்கும் ஈடானது ஏதுமில்லை என்பதை ஒப்புக் கொள்வார்.

முஸ்லிமல்லாத மக்களிடம் இது போன்ற இன வெறுப்பைக் காட்டாது இஸ்லாம் கற்றுத் தந்த மனித நேயத்தைக் காட்டினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது எதிரிகளின் உள்ளங்களை வென்றது போல் வெல்ல முடியும் என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனித நேயத்துக்கு எடுத்துக் காட்டாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரிமையியல் (சிவில்) வழக்குகளில் முக்கியமான சட்ட விதியைக் கடைப்பிடிப்பது வழக்கம்.

ஒருவரது கைவசம் உள்ள பொருளுக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடினால் உரிமை கொண்டாடுபவர் அதற்கான சான்றுகளைக் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமை கொண்டாடும் வாதியிடம் சான்று ஏதும் இல்லாவிட்டால் யாருடைய கைவசம் அப்பொருள் இருக்கிறதோ அவரை அழைத்து ‘இறைவன் மேல் ஆணையாக இது என்னுடையது தான்’ எனக் கூறச் சொல்வார்கள். அவ்வாறு கூறிவிட்டால் அப்பொருள் அவருக்குச் சொந்தமானது எனத் தீர்ப்பு அளிப்பார்கள். சத்தியம் செய்ய அவர் மறுத்தால் உரிமை கொண்டாடி வழக்குத் தொடுத்த வாதியிடம் அப்பொருளை ஒப்படைப்பார்கள்.

ஒரு முஸ்லிமுக்கும், யூதருக்கும் இடையே இது போல் உரிமையியல் தொடர்பான வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது. அதன் விபரம் வருமாறு:-

ஒரு முஸ்லிமுடைய பொருளை அபகரிப்பதற்காக யார் பொய்யாகச் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் அல்லாஹ்வை சந்திப்பார்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) என்ற நபித்தோழர் என் விஷயமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ஒரு நிலம் தொடர்பாக எனக்கும், ஒரு யூதருக்கும் விவகாரம் இருந்தது. அவர் அதை எனக்குத் தர மறுத்தார். அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னிடம் சான்று ஏதும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். இல்லைஎன்று நான் கூறினேன். உடனே யூதரிடம் “நீ சத்தியம் செய்!என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உடனே நான் குறுக்கிட்டு “அல்லாஹ்வின் தூதரே! இவன் சத்தியம் செய்து என் சொத்தை எடுத்துக் கொள்வான்எனக் கூறினேன். அப்போது 3:77 வசனத்தை அல்லாஹ் அருளினான்என்று அஷ்அஸ் கூறினார்.

நூல்: புகாரி 2357, 2411, 2417, 2516, 2667

பொதுவாக அன்றைய யூதர்கள் பொய்ச் சத்தியம் செய்வதற்கு கொஞ்சமும் கூச்சப்படாதவர்களாக இருந்தனர். முஸ்லிம்களோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியதால் நபிகள் நாயகம் (ஸல்) முன்னிலையில் பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டார்கள்.

இந்த நிலையில் யூதர் பொய்ச் சத்தியம் செய்யத் தயங்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாரபட்சமான தீர்ப்புக் கூறவில்லை. வழக்கமாக இரண்டு முஸ்லிம்களுக்கிடையில் இது போன்ற விவகாரம் எழுந்தால் எவ்வாறு தீர்ப்பு வழங்குவார்களோ அதே விதியின் கீழ் தான் யூதருக்கும் நீதி வழங்கினார்கள்.

தனது சமுதாயத்தவர், தனது எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று பேதம் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீதி வழங்கியதில்லை என்பதற்கு இதுவும் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது சாந்தி நிலவட்டும் – எனக் கூறுவது இஸ்லாமிய முகமன் ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் சிறுபான்மையாக இருந்த யூதர்கள் இந்த வாசகத்தை வேறு விதமாக மாற்றிக் கூறி முஸ்லிம்களைப் புண்படுத்தி வந்தனர். நபிகள் நாயகத்திடமே இவ்வாறு பயன்படுத்தவும் துணிந்தனர்.

அஸ்ஸலாமு என்பதில் “லா’ வை நீக்கி விட்டு “அஸ்ஸாமு’ என்று கூறுவர். அஸ்ஸாமு அலைக்கும் என்றால் உங்களுக்கு நாசம் ஏற்படட்டும் என்று பொருள்.

அஸ்ஸலாமு என்று சொல்வது போல் பாவனை செய்து அஸ்ஸாமு எனக் கூறி வந்தனர்.

பொதுவாக இது போன்ற விஷமத்தனங்களைப் பெரும்பான்மை மக்கள் தான் சிறுபான்மை மக்களிடம் செய்வது வழக்கம். சிறுபான்மையினர் இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்ற சில்மிஷங்களுக்காகக் கோபம் கொள்ள மாட்டார்கள் என்று யூதர்கள் நன்றாக அறிந்திருந்ததால் தங்கள் வழக்கத்தில் நீடித்து வந்தனர்.

யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபிகள் நாயகத்திடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு நாசம் ஏற்படட்டும்) எனக் கூறினார்கள். அவர்கள் கூறியது எனக்கு விளங்கியதால் “அலைகுமுஸ் ஸாமு (உங்கள் மீதும் அழிவு ஏற்படட்டும்)என்று நான் கூறினேன்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆயிஷாவே! நிதானம் வேண்டும். அனைத்து காரியங்களிலும் மென்மையான போக்கையே அல்லாஹ் விரும்புகிறான்என்று என்னிடம் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே அவர்கள் கூறியது உங்கள் காதில் விழவில்லையா?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அலைகும் (உங்களுக்கும்) என்று நான் கூறி விட்டேனேஎன விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 6024

மாமன்னராகவும் மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் நபிகள் நாயகம் இருந்த போது சிறுபான்மைச் சமுதாயம் இப்படிக் கூறத் துணிந்தது எப்படி?

எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் யூதர்களுக்கு வழங்கப்பட்டதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்த கொள்ள முடிந்தது.

அவர்கள் சொன்ன அதே வார்த்தையைத் தமது மனைவி திரும்பிக் கூறியதைக் கூட இந்த மாமனிதர் கண்டிக்கிறார்.

உங்கள் மீதும் நாசம் ஏற்படட்டும் என்று பதில் கூறாமல், ‘உங்கள் மீதும்’ என்று மட்டும் பதில் கூறுமாறு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் பயன்படுத்திய அநாகரீக வார்த்தையைக் கூட அவர்கள் தவிர்க்கிறார்கள்.

மன்னராட்சியில் இது போன்று நடந்து கொண்டவர் உயிர் பிழைப்பதே அரிது என்ற நிலையுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நபிகள் நாயகத்தின் பெருந்தன்மை எத்தகையது என்பது விளங்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் பலரது உறவினர்களும் குடும்பத்தாரும் இஸ்லாத்தை ஏற்காமல் இருந்தனர்.

இஸ்லாத்தை ஏற்காத தங்களின் உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யலாமா? என்று இஸ்லாத்தை ஏற்றவர்கள் கேட்டபோதெல்லாம் உறவினருக்கான கடமைகளைச் செய்தாக வேண்டும் என்பது தான் நபிகள் நாயகத்தின் அறிவுரையாக இருந்தது.

இஸ்லாத்தை ஏற்காத நிலையில் என் தாய் என்னிடம் வந்தார். அவரை என்னோடு வைத்துக் கொள்ளலாமா? என்று நபிகள் நாயகத்திடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் “ஆம்! கண்டிப்பாக உன் தாயை உன்னோடு சேர்த்துக் கொள்எனக் கட்டளையிட்டனர் என்று அஸ்மா (ரலி) அறிவிக்கிறார்.

நூல்: புகாரி 2620, 3183, 5979

ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீதும் மிகவும் கருணையுடன் நடந்து கொள்வது அவர்களின் வழக்கம். மனிதர்கள் புனிதமாக மதிப்பவை சிதைக்கப்படும் போது தான் அதிகமான கோபம் கொள்வது வழக்கம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பள்ளிவாசல் தான் மிகவும் புனிதமானதாகும். அதிலும் மூன்று பள்ளிவாசல்கள் அதிகமான புனிதம் கொண்டவை.

அவற்றுள் மஸ்ஜிதுந்நபவீ என்ற பள்ளிவாசல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது திருக்கரத்தால் கட்டிய பள்ளிவாசலாகும். அங்கே நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

ஒரு கிராமவாசி வந்து பள்ளிவாசலில் சிறுநீர் கழிக்கலானார். மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள்! மென்மையாக நடந்து கொள்ளுமாறு தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்! கடுமையாக நடந்து கொள்ளுமாறு கட்டளையிடப்படவில்லை என்றார்கள்.

நூல்: புகாரி 220, 6128

….அவர் சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டு விடுங்கள் என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்தார்கள். “இது அல்லாஹ்வின் ஆலயம். இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது. தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவு கூர்வதற்கும் உரியதுஎன்று அறிவுரை கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்: 429

சிறுநீர் கழிப்பவர் அதை அடக்கிக் கொள்வதற்காகச் சிரமப்படக் கூடாது என்பதற்காக அவர் சிறுநீர் கழிக்கும் வரை காத்திருந்து அவரை அழைத்து அறிவுரை கூறுகிறார்கள். குறைந்த பட்சம் கடுமையான வார்த்தைகளால் அவரை ஏசியிருக்கலாம். அல்லது அவரையே சுத்தம் செய்து தருமாறு கட்டளையிட்டிருக்கலாம். அறியாமையின் காரணமாக அவர் செய்ததை உணர்ந்து மென்மையான முறையில் அவருக்கு போதனை செய்கிறார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் கோபம் வராத, நிதானம் தவறாதவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.

எனவே பிற மக்களிடம் அன்பாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்பவனே நபிகள் நாயகத்தின் உண்மை தொண்டன் ஆவான். அவனே உண்மை முஸ்லிமும் ஆவான். அன்புக்கு எதிராக காட்டுமிராண்டித்தனத்துடன் நடப்பவர்கள் யாரும் நாங்கள் நபிகள் நாயகத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் என்று சொல்ல அருகதையற்றவர்கள். இப்படிப்பட்ட மனிதர் போதித்த இஸ்லாமிய மார்க்கம் எப்படி தீவிரவாதத்தை ஆதரிக்கும் என்பதையும் அனைவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.