ஏகத்துவம் – மே 2015

தலையங்கம்

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம்

அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, இஸ்லாத்தின் ஆதாரம் இறைச் செய்தி – வஹீ மட்டுமே என்று ஆணித்தரமாக மக்களிடம் பதிய வைத்தது. அந்தப் பிரச்சாரத்திலிருந்து எள்ளளவு கூட, இம்மியளவு கூட மாறவில்லை. சவூதி சம்பளத்தைப் பின்னணியாகக் கொண்ட மதனிகளுடன் சேர்ந்து அழைப்புப் பணி செய்யும் போதும் சரி! அவர்களை விட்டுப் பிரிந்து பணியாற்றும் போதும் சரி! குர்ஆன், ஹதீஸ் பார்வையில் சரியெனப்பட்டதையே மக்களிடம் எழுத்துரீதியாகவும், பேச்சுரீதியாகவும் பிரச்சாரம் செய்து வந்தோம்.

ஹாரூத், மாரூத் மலக்குகள் அல்ல! மாறாக அவர்கள் ஷைத்தான்கள் தான் என்ற விளக்கத்தை 1992ல் அல்ஜன்னத் இதழிலேயே எழுதி விட்டோம். ஸிஹ்ர் – சூனியம் தொடர்பான ஹதீஸ்களை அப்போதே விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டோம்.

இன்னும் சொல்லப் போனால் புகாரியில் இடம்பெறுகின்ற, மூஸா நபி மலக்குல் மவ்த்தைத் தாக்கிய சம்பவம், மூஸா நபி நிர்வாணமாக ஓடிய சம்பவம் போன்ற ஹதீஸ்கள் நெருடலானவை என்ற ஆய்வுப் பார்வையை சங்கரன்பந்தலில் தவ்ஹீது சிந்தனை துளிர்விடும் காலத்திலேயே துவக்கிவிட்டோம். தீன் விளக்கப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் மாதாந்திரக் கூட்டத்திற்கு வந்த ஆலிம்களிடம் இதை அலச ஆரம்பித்தோம்.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், சவூதி சார்பு சிந்தனை என்ற கட்டுப்பாட்டில் நாம் நிற்கவில்லை. பொருளாதார ரீதியாக சவூதி சம்பளம் வாங்குகின்ற மதனிகளைப் போன்று நில புல வசதிகள் அப்போதும் இப்போதும் நம்மிடம் கிடையாது. அப்போது அதள பாதாளத்தில் கிடந்த நேரம். அரபு நாட்டிலிருந்து சம்பளம் கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் கைகழுவிவிட்டோம். காரணம், சுய மரியாதையை இழக்க வேண்டிய நிலை வந்து விடும் என்பது ஒருபுறமிருக்க சுய சிந்தனையையும் இழக்க நேரிடும்; சவூதி அரேபியாவுக்கு அறிவை அடகு வைக்க வேண்டிய அவல நிலை ஏற்படும் என்பதற்காகத் தான்.

பொருளாதார ரீதியிலான கிடிக்குப்பிடிகள், நிதி அடிப்படையிலான நெருக்கடிகள் ஏதுமின்றி சுயமாகச் சிந்தித்தோம். அதன் வெளிப்பாடு தான் அந்நிய தாக்கம் இல்லாமல் சுதந்திரமாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னோம்.

ஏகத்துவ சிந்தனையில் இருக்கின்றோம் என்று சொல்கின்ற மதனிகள், சவூதி சம்பளத்தைச் சார்ந்து நிற்பவர்கள் குர்ஆன் ஹதீசுக்கு அடுத்தபடியாக எடுத்து வைக்கும் ஆதாரம் சவூதி தான்.

சவூதி ஆலிம்கள் அப்படிச் சொல்லவில்லை, சவூதியில் இப்படி நடைமுறை இல்லை என்று வெளிப்படையாகவே சொல்வதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்களை நோக்கி நாம் எழுப்புகின்ற கேள்வி, இரவுத் தொழுகை 11 அல்லது 13 என்று தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் வருகின்றது. அதை இதுவரைக்கும் சவூதி செயல்படுத்தாதது ஏன்?

அடுத்து, கப்ருகளை உடைக்க வேண்டும் என்று தெளிவான கட்டளை நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தும் அவர்களது கப்ரின் மேல் கம்பீரமாக நிற்கின்ற குப்பா என்ற குவிமாடம் உடைக்கப்படாதது ஏன்?

இரவுத் தொழுகை விஷயத்தில் அப்துல்லாஹ் பின் பாஸ் போன்ற சவூதி அறிஞர்கள் 11 அல்லது 13 ரக்அத் தொழுவது தான் சிறந்தது என்று சொன்னாலும் 20 ரக்அத் நிலைபாட்டை ஸஹாபாக்களைக் காரணம் காட்டி ஆதரிக்கின்றார்கள். எல்லா பித்அத்துகளும் வழிகேடு என்ற ஹதீசுக்கு மாற்றமாக இந்த 20 ரக்அத் இரவுத் தொழுகை அமைந்திருக்கின்றது. இதற்கு சவூதி சார்புச் சிந்தனை கொண்ட ஆலிம்கள் ஒருபோதும் சரியான பதிலைத் தரமுடியாது.

சவூதி அறிஞர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் கப்ரின் மீது எழுப்பப்பட்டுள்ள குவிமாடத்தைச் சரிகாணவில்லை, அதை நியாயப்படுத்தவில்லை என்பதை நாம் பாராட்டுகின்றோம்.

சவூதி அறிஞர் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களிடம், “மதீனாவில் நபி (ஸல்) அவர்களது கப்ரின் மீதுள்ள குப்பா ஏன் நீக்கப்படாமல் இருக்கின்றது?” என்று கேட்கப்பட்ட போது, “ஸஊது குடும்பத்தினர் குழப்பத்திற்குப் பயந்து அதை இடிக்காமல் விட்டு விட்டனர்” என்று தனது ஃபத்வாவில் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1330

இந்த ஹதீசுக்கு நேர்மாற்றமான ஒரு நிலைப்பாடு, இன்னும் பல ஹதீஸ்களில் சாபத்துடன் சேர்ந்து வந்திருக்கின்ற தடை மஸ்ஜிதுந்நபவியில் தொடர்கின்றதே! சாக்குகள் சொல்லலாம்! சமாதானங்கள் சொல்லலாம்! ஆனால் ஹதீசுடன் நேராக முரண்படுகின்றதே?

இப்போது  சவூதி சார்புச் சிந்தனையாளர்கள் இதையும் நியாயப்படுத்திப் பேசுவார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அந்த நெருக்கடி இல்லை; நிர்ப்பந்தம் ஏதுமில்லை.

சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான நிலைபாட்டைச் சொல்லும் போது சவூதி சார்பற்ற சிந்தனையாளர்கள் இவ்விஷயத்தில் சுயமாகச் சிந்திப்பார்கள்.

சவூதி ஆலிம்களிடம் சூனியம் தொடர்பான நமது நிலைபாட்டை நாம் நேரடியாகத் தெரிவித்தால் அவர்கள் கூட குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சிந்தித்து அதை ஏற்றுக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சவூதி ஆலிம்களைச் சந்திக்கும் வாய்ப்பும் சந்திப்புகளும் நமக்குக் கிடையாது.

ஒரு யூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நீங்கள் கஃபாவின் மீது சத்தியமாக எனக் கூறுகிறீர்கள். இதன் மூலம் இணை வைக்கிறீர்கள்என்று கூறினார். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் “கஃபாவின் இறைவன் மீது ஆணையாகஎன்று கூறுமாறு நபித்தோழர்களுக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: ஹுதைலா (ரலி), நூல்: நஸயீ 3713

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர் ஒருவர் சொன்ன நியாயத்தை ஏற்று, தவறை உணர்ந்து மாற்று உத்தரவைப் போட்டதை நாம் இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

என்னிடம் யூதப்பெண் ஒருவர் “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் சவக் குழிகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும் “யூதர்கள்தாம் (சவக் குழிகளில்) வேதனை செய்யப்படுவார்கள்” என்றார்கள்.

சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “நீ அறிவாயா? சவக் குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவக் குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1025

ஆரம்பத்தில் மறுத்த ரசூல் (ஸல்) அவர்கள், பின்னர் வஹீ அருளப்பட்டு, கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடும்படி கட்டளையிடுகின்றார்கள். இந்த அடிப்படையில் சூனியம் தொடர்பான நியாயமான வாதங்களை ஏற்பவர்கள் சவூதியில் இருக்கலாம்.

நம்முடைய நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தால் அவர்களிடம் எடுத்து வைக்கலாம். ஏற்றால் சரி! ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்போதும் போல் ஜமாஅத் பணி தொடரும்.

ஆனால் சவூதி சார்பு சிந்தனையாளர்களிடம், இங்குள்ள மதனிகளிடம் உண்மையை ஏற்றுக் கொள்ளும் இந்தத் தன்மையை ஒருபோதும் பார்க்க இயலாது. அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கச்சை கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள்.

“(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?” என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 2:142)

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் “உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன்.  (அல்குர்ஆன் 33:37)

மக்களைப் பயப்படாதீர்கள், எனக்கே அஞ்சுங்கள் என்று இந்த வசனங்களில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.  (அல்குர்ஆன் 33:39)

இந்த வசனத்தில் தூதுச் செய்தியைச் சமர்ப்பிப்பதில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சக் கூடாது என்று கட்டளையிடுகின்றான்.

இந்த ஜமாஅத் இறைச்செய்தியை எடுத்துச் சொல்வதில் யாருக்கும் அஞ்சாது. எனவே தான் புகாரியில் பலவீனமான ஹதீஸா? என்று பூதாகரமாகப் பார்ப்பவர்களைக் கண்டு பயப்படவில்லை. இது விஷயத்தில் அல்லாஹ்வுடைய, அவனுடைய தூதருடைய வஹீயை மட்டுமே இந்த ஜமாஅத் பின்பற்றுகின்றது. அல்லாஹ்வைத் தவிர எந்த சக்திக்கும் அஞ்சாது என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

தொடர்: 5   ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

செருப்பை முத்தமிடும் சுவனத்துப் பேரழகிகள்

எம். ஷம்சுல்லுஹா

இதுவரை ஹுஸைன் மவ்லிதில் வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை, நபி (ஸல்) அவர்களின் வீட்டுக் காவலாளி போல் சித்தரித்து மட்டம் தட்டியதைப் பார்த்தோம்.

இப்போது சுவனத்தில் உள்ள ஹூருல் ஈன்களை எப்படி மட்டம் தட்டுகின்றார்கள் என்று பார்ப்போம்.

பெரும் பெரும் அரசர்கள், மன்னர்கள், கிரீடங்கள் யாவும் ஹுஸைனின் கோட்டையிலுள்ள புழுதிக்குக் கூட ஈடாகாது. அது எப்படி ஈடாக முடியும்? சுவனக் கோட்டையில் உள்ள ஹூருல் ஈன்கள், ஹுஸைனின் செருப்பை முத்தமிட ஆவலாக உள்ளனர்.

ஹுஸைன் (ரலி) அவர்கள் மீதுள்ள கண்மூடித்தனமான காதலால் சுவனத்தின் ஹூருல் ஈன்கள் அவரது செருப்பை முத்தமிடும் அளவிற்குத் தரம் தாழ்த்தியுள்ளனர். இவர்களைப் பொறுத்தவரையில் எல்லாமே ஹுஸைன் தான். அவரைப் புகழ்வதற்காக ஜிப்ரயீல், மலக்குமார்கள், ஹூருல் ஈன்கள் என யாரையும் கேவலப்படுத்துவதற்குக் கொஞ்சம் கூடத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு மவ்லிதில் உள்ள இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டாகும்.

இந்தக் கவிதை வரிகள் குர்ஆன், ஹதீசுக்கு முற்றிலும் முரணான கவிதை வரிகளாகும்.

“ஹஸனும் ஹுஸைனும் சுவனவாசிகளான இளைஞர்களின் இரு தலைவர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (நூற்கள்: திர்மிதீ 3701, 3714, முஸ்னத் அஹ்மத் 10576)

இந்த ஹதீஸின்படி ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு சுவனம் கிடைக்கும் என்று ஒவ்வொரு முஃமினும் ஆதரவு வைக்கலாம். நாமும் அவ்வாறு தான் ஆதரவு வைக்கின்றோம்.

ஆனால் இந்த ஷியாக் கவிஞன் எந்த வரம்புக்கும் உட்பட்ட பார்வையைச் செலுத்தவில்லை. வரம்பு மீறிய பார்வையைப் பார்க்கிறான். அவன் சுவனமே ஹஸன், ஹுஸைன் மற்றும் அஹ்லுல் பைத்துக்குப் பட்டா போட்டு கொடுத்து விட்டது போன்ற பார்வையைச் செலுத்துகின்றான்.

சுவனம் என்பது அஹ்லுல் பைத்துக்கு உரியது என்று இந்த ஷியாக் கவிஞன் கருதுவதால் தான் ஹுஸைன் (ரலி) அவர்களின் செருப்பை முத்தமிட சுவனத்து அழகிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்று கூறுகின்றான்.

இது ஷியாவிற்கே உரிய திமிரும், தெனாவட்டும், தான்தோன்றித்தனமும் ஆகும். உண்மையில், ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஹூருல் ஈனுக்காக தவம் கிடந்தாக வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அற்புதப் படைப்பு! அருட்படைப்பு! குர்ஆனும் ஹதீசும் அந்த அளவுக்கு ஹூருல் ஈன்களைப் பற்றி வர்ணிக்கின்றன.

இனிய குர்ஆன் ஓர் இலக்கியமாக….

இலக்கியம் என்றால் பெண்ணைப் பற்றி வர்ணனை இருக்கும். பெண்ணைப் பற்றிய வர்ணனை இல்லையென்றால் அது இலக்கியமாக இருக்காது. அந்த வர்ணனையும் ஆபாச ரசம் சொட்டும் வகையில் அமைந்திருக்கும்.

குர்ஆன் ஓர் இலக்கிய நூல்! ஆனால் இலக்கியம் என்பது அதன் இலக்கல்ல! பெண்களைப் பற்றிய வர்ணனையும் அதில் விலக்கல்ல!

திருக்குர்ஆன் அந்தப் பெண்களை வர்ணித்திருக்கின்றது. ஆனால் அது அத்தனையும் எந்த ஒரு மனிதக் கண்ணும் பார்க்காத அழகு மங்கையை, எந்த ஓர் ஓவியனும் தூரிகையில் வரைய முடியாத, வடிக்க முடியாத வானழகிகளைப் பற்றிய வர்ணனையாகும். அதில் எள்ளளவும் ஆபாசம் ததும்பவில்லை. சரசம் தலைகாட்டவில்லை.

அந்த அளவுக்கு அல்லாஹ் தன்னுடைய அழகுப் படைப்பினத்தைப் பற்றி அற்புத வார்த்தைகள் கொண்டு அழகு நடையில் அறிமுகப்படுத்துகின்றான்.

அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம். அவர்களைக் கன்னியராகவும், ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன் 56:35-37)

இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம். (அல்குர்ஆன் 44:54)

முத்துக்களை ஒத்தவர்கள்

ஹூருல் ஈன்களும் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அல்குர்ஆன் 56:22, 23)

முட்டைகளை ஒத்தவர்கள்

அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள் மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள். (அல்குர்ஆன் 37:48,49)

இவை ஹூருல் ஈன்கள் பற்றிய குர்ஆனின் அற்புத வர்ணனைகளாகும்.

நபி (ஸல்) அவர்களும் தமது வைரமணி வார்த்தைகளால் ஹூருல் ஈன்களை வர்ணித்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சொர்க்கத்தில்) ஒவ்வொரு மனிதருக்கும் “ஹூருல் ஈன்எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களுடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3245, புகாரி 3254

இந்த ஹதீஸ் ஹூருல் ஈன்களின் கால் அழகைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றது. கால் அழகே இப்படி என்றால் ஆளழகு எப்படியிருக்கும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளது தலையிலுள்ள முக்காடு உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2796

ஹூருல் ஈன் எனும் வானுலகக் கன்னியர் ஒருமுறை பூமியை எட்டிப் பார்த்தால் போதும். பூமியை வெளிச்ச வெள்ளத்தில் நீந்த வைக்கும். மண்ணகத்தை நறுமணமயமாக்கி விடும். அவள் அணிந்திருக்கும் தலைமுக்காடு இந்த உலகம், உலகத்தில் உள்ள அனைத்தை விடவும் சிறந்தது என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள் என்றால் ஹூருல் ஈன்களை என்னவென்று சொல்வது?

எட்டாம் மன்னர் எட்வர்ட்

இங்கிலாந்தின் எட்டாம் மன்னர் எட்வர்ட் என்பவர் சிம்சன் என்ற பெண்ணைக் காதலித்தார். அப்போது இங்கிலாந்து அரசு அவரிடம் “சிம்மாசனம் வேண்டுமென்றால் சிம்சனை மறந்துவிடுங்கள்; சிம்சன் வேண்டும் என்றால் சிம்மாசனத்தை மறந்து விடுங்கள்’ என்று நிபந்தனை அளிக்கப்பட்டது. அவர் சிம்மாசனத்தை மறந்து விட்டு சிம்சனை மணந்து கொண்டார். உலகத்தில் ஒருவருக்கு அழகியாகத் தெரிபவர் மற்றவருக்கு அழகியாகத் தெரிவதில்லை. அந்த அழகை அடைவதற்காக ஆட்சியதிகாரத்தைத் துறக்கின்றான்; சொந்த நாட்டையே இழக்கின்றான். இதை உணர்த்தும் விதமாக நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி), நூல்: புகாரி 1

தான் விரும்பிய பெண்ணை அடைவதற்காகத் தன் தாய்நாட்டைக் கூட ஒருவன் துறந்து விடுவான் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகத் தெரிவிக்கின்றது. அற்ப உலகத்துப் பெண்ணுக்கு இந்தத் தியாகம் என்றால், அழிந்து போகாத மறுமை உலக சுவனப் பேரழகிக்கு ஒரு முஸ்லிம் தவம் கிடக்க வேண்டும்; காத்திருக்க வேண்டும்.

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா?

மஞ்சத்தில் உறங்கும் போது சிணுங்க மாட்டேனா?

இது ஒரு கவிஞன் எழுதிய கவிதை.

ஒருத்தியைக் காதல் கொண்டு விட்டால் அவள் கால் கொலுசாகக் கூட ஆகி விடுகின்றேன் என்றெல்லாம் திருமணம் முடிக்கும் வரை புலம்புவான். திருமணம் முடித்து விட்டால் கால் செருப்பை விட மோசமாக அவளை விளாசுவான். அது வேறு விஷயம்.

இங்கு நாம் பார்க்க வேண்டியது, ஓர் அற்ப ஆயுள் உள்ள பெண்ணை விரும்புபவன் அவளுடைய கால் கொலுசாகத் தயாராக இருக்கிறான் என்பதைத் தான். அழியாத சுவனத்துப் பெண்ணைப் பார்த்தால் அவன் என்ன சொல்வான்? என்ன செய்வான்? அவளின் கால் செருப்பாகவாவது நான் தேய்கின்றேன் என்பான். இது மனிதனின் இயல்பு!

இத்தகைய மனித இயல்பின்படி சொக்க வைக்கும் சுவனத்து சுந்தரிகளான அந்த ஹூருல் ஈன்களை நேசிக்கின்ற எவரும், உன் கண்களுக்கு மையாவேன், காதுகளுக்குத் தோடாவேன் என்று தான் சொல்வார்களே தவிர ஒருபோதும் சுவன அழகிகள் தங்கள் செருப்பை முத்தமிட வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் கூடாது.

அடுத்து, கால் செருப்பை முத்தமிடுவேன், அல்லது கால் செருப்பாய் தேய்வேன் என்றெல்லாம் சொல்வது இந்தியாவில் காணப்படும் அடிமைக் கலாச்சாரமாகும். இந்த மவ்லிதை எழுதிய ஷியா கவிஞன் இந்தியாவைச் சேர்ந்த ஷியா என்பதால் இந்த அடிமைத்தனமான பார்வையைச் செலுத்தி, சுவனத்துப் பேரழகிகளை இழிவுபடுத்தியிருக்கின்றான்.

—————————————————————————————————————————————————————-

அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

இறைத்தூதர்கள் காலம் முதல் இன்று வரை சத்தியத்திற்கு எதிராக அசத்தியவாதிகள் கையிலெடுக்கும் ஆயுதமாக அவதூறுப் பிரச்சாரம் எனும் ஆயுதம் இருந்து வருகிறது.

சத்தியத்திற்கு முன் அடிபணிந்து விட்ட, பதிலளிக்க இயலாத இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து, அதற்கு ஓர் அணைபோட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இறைத்தூதர்கள் குறித்துப் பல அவதூறுகளை மக்களிடையே அள்ளி வீசினார்கள்.

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 51:52

அன்று இறைத்தூதர்களுக்கு எதிராக இஸ்லாத்தின் எதிரிகள் கையிலெடுத்த அதே அவதூறு எனும் ஆயுதத்தை இன்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக அசத்தியவாதிகள் அனைவரும் கையிலெடுத்துள்ளனர்.

உண்மையில் அவதூறு பரப்புவது என்பது மாபெரும் விளைவை ஏற்படுத்தும் ஓர் பெரிய பாவமாகும்.

கற்பொழுக்கமுள்ள நல்ல பெண்கள் விஷயத்தில் அவதூறு பரப்புவதை அழித்தொழிக்கும் பெரும் பாவம் என்று மார்க்கம் கற்பித்துள்ளது.

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)என்று (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி 2766

நல்லொழுக்கமுள்ள பெண்ணொருத்தியின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்து அதை நிரூபிக்கும் வகையில் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில் குற்றச்சாட்டுச் சொன்னவர்களை எண்பது கசையடி அடிக்க வேண்டும் என்பதே இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டமாகும்.

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 24:4

இதிலிருந்தே இஸ்லாம் அவதூறு பரப்புவதை எத்தகைய ஒழுக்கக்கேடான குற்றமாகப் பார்க்கிறது என்பதை எவரும் அறியலாம்.

இன்றைய நிலை

இன்று பொய், அவதூறு என்பதெல்லாம் மக்களால் ஒரு பாவமான செயலாகவே பார்க்கப்படுவதில்லை. சர்வ சாதாரணமாக அவதூறு கூறும் பழக்கம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டுள்ளது.

பொய்யான தகவல்களை மக்களிடையே கூறுவதும், அதை பேஸ்புக் போன்ற இணையதள ஊடகங்கள் மூலம் பரப்புவதும் பலருக்கும் அன்றாட பழக்கமாகி விட்டது.

உறுதி செய்யப்படாத யூகங்கள் அனைத்தும் பொய்யே என்று நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள்.

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். 

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6064

உறுதி செய்யப்படாத எத்தனையோ செய்திகளை, தங்களுக்குப் பிடிக்காதவர்கள் விஷயத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அதை மக்களிடையே பரப்பிடும் சீர்கெட்ட கலாச்சாரம் இக்காலகட்டத்தில் மலிந்து விட்டது.

ஒரு காலத்தில் ஒருவர் மீது அவதூறு சொல்வதாக இருந்தால் நான்கு பேருக்கு மத்தியில் மட்டும் பேசிக் கொள்ளும் நிலையில் இருந்தது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை.

இருக்கவே இருக்கிறது பேஸ்புக், ட்விட்டர் போன்ற நவீன இணைய ஊடகங்கள். யாரும் எவர் மீதும் எதையும் ஆதாரமின்றி எழுதலாம், அதை ஆயிரக்கணக்கான மக்களிடையே பரப்பலாம். வாயளவில் பேசிக் கொள்ளும் காலத்தில் அந்தச் சபையோடு அவதூறு முடிவுபெறும் என்று இருந்த நிலை மாறி, நவீன ஊடகங்களோ காலம் முழுக்க அந்த அவதூறை அழியாமல் தாங்கி, பாதுகாத்துக் கொள்ளும் சூழல் தற்போது உள்ளது.

ஒருவர் பரப்பிய அவதூறு ஓராயிரம் பேருக்கும் ஓராயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர் வரையிலும் என வரைமுறையற்ற வகையில் அவதூறு பரவிடும் காலம் இது.

தவ்ஹீத் ஜமாஅத் மீது அவதூறு

பாலியல் ரீதியான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவர் எத்தகைய உயர்மட்டப் பொறுப்பில் இருந்தாலும் அவரை பொறுப்பிலிருந்து நீக்க இந்த ஜமாஅத் ஒரு போதும் தயங்கியது கிடையாது. ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் எனும் உயர் பொறுப்பில் உள்ளவர்களையும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்  பொறுப்பிலிருந்து நீக்கி, தனது நம்பகத்தன்மையையும் நல் ஒழுக்கத்தையும் இந்த ஜமாஅத் நிலைநாட்டியுள்ளது.

ஒரு நிர்வாகி அந்நியப் பெண்ணுடன் விபச்சாரம் புரிந்தார் என்றல்ல, தனிமையில் இருந்தார் என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டால் கூட அவர் பொறுப்பிலிருந்து தூக்கி எறியப்படுவார் என்ற சட்டத்தை வகுத்து அதனடிப்படையில் செயல்படும் தூய அமைப்பு இந்த தவ்ஹீத் ஜமாஅத்.

பாலியல் உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபட்ட கழிசடைகளுக்கு மேலும் மேலும் உயர்பதவிகளை வழங்கி அழகு பார்க்கும் கேடுகெட்ட ஜமாஅத் இதுவல்ல. அது போன்றவர்களுக்கு இந்த ஜமாஅத்தில் இடமில்லை.

தூய்மையைப் பறைசாற்றும் இத்தகைய ஜமாஅத்தின் நிர்வாகி மீது குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய தகுந்த ஆதாரங்களுடன் தலைமையை அணுகினால் நடவடிக்கை எடுக்க ஒருபோதும் இந்த ஜமாஅத் தயங்காது.

ஆனால் குழப்பம் செய்ய எண்ணி நல்லோர் மீது அவதூறு பரப்புவதைத் தொழிலாகக் கொண்டுள்ள கேடு கெட்ட கழிசடைகளிடம் இந்தக் குணத்தை எதிர்பார்க்க இயலாது.

பிற மனிதர்கள் மீது அவதூறு பரப்புவதை ஏதோ சாதாரண ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல.

தன் சகோதரி, மனைவி, மகள் சொந்தபந்தங்கள் ஆகியோர் விஷயத்தில் அவதூறு பரப்பினால் அதை இவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்களா? என்ற கேள்வியோடு நல்லோர் மீது அவதூறு பரப்பி ரசிக்கும் சைக்கோகளுக்கு மார்க்கத்தின் எச்சரிக்கையை நினைவூட்டுகிறோம்.

அவதூறு தரும் மண்ணறை வேதனை

பிறர் மீது பொய், மற்றும் அவதூறு கூறுவது கப்ரில் தண்டனையைப் பெற்றுத் தரும் பாவச் செயலாகும். பொய் மற்றும் அவதூறு பேசுபவருக்கு மண்ணறையில் இரும்பாலான கொக்கிகளால் முகம் முழுவதும் சிதைக்கப்படும்படியான தண்டனை வழங்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலுள்ள ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, சவக் குழிகளுக்குள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களுடைய ஒலத்தைச் செவியுற்றர்கள். அப்போது, “இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக  இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லைஎன்று சொல்லிவிட்டு, “ஆம்! இவ்விருவரில் ஒருவரோ, தம் சிறுநீரிலிருந்து (தமது உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார். மற்றொருவரோ, கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார்என்று கூறிவிட்டு, ஒரு (பச்சை) பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச்சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு சவக்குழியின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்விரு மட்டைகளும் காயாத வரை இவ்விருவரின் வேதனை குறைக்கப்படலாம்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 216

நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி “இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், “அல்லாஹ் நாடியது நடக்கும்எனக் கூறுவார்கள்.

இவ்வாறே ஒரு நாள், “உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?”  என்று கேட்டதும் நாங்கள் “இல்லை‘  என்றோம். அவர்கள்,

நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் “இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்என்றனர்.

அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே “இவர் யார்?’ என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்என்றனர். எனவே நடந்தோம். ….

(இறுதியில்) நான் இருவரிடமும் “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!எனக் கேட்டேன். அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜூன்துப் (ரலி)

நூல்: புகாரி 1386

உலகம் முழுவதும் பரவும் வகையில் பொய் பேசியவருக்கு வழங்கப்படும் தண்டனை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தண்டனையைக் குறிப்பிடுகிறார்கள்.

இது முழுக்க முழுக்க இணையத்தில் அவதூறு பரப்புவர்களுக்கு நூறு சதவிகிதம் பொருந்திப் போவதைக் காண்கிறோம். அவர் கூறும் பொய், அவதூறு விநாடியில் உலகம் முழுவதையும் அடைந்து விடுகிறது.

அந்த அவதூறு மக்களிடையே நிலைபெற்றிடும் காலமெல்லாம் அதற்குரிய இறைத்தண்டனையையும் இறைசாபத்தையும் அவர் பெற்றுக் கொண்டே இருக்கிறார் என்பதை அவதூறு பரப்புவோர் மறந்து விடக்கூடாது.

பறிக்கப்படும் மானம்! கிழிக்கப்படும் முகம்!

இஸ்லாத்தில் பிறர் மானம் காப்பது மிகவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. (சமூகத்திற்கு தீங்கிழைக்கும் கெட்டவர்களுக்கு இது பொருந்தாது) ஒரு முஸ்லிம் பிறர் மான விவகாரத்தில் தலையிட்டு அவனது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபவதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பிறர் மானம் புனிதமாக்கப்பட்டுள்ளது எனும் பின்வரும் நபிமொழியிலிருந்து இக்கருத்தை அறியலாம்.

(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்என்றோம். அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் “ஆம்என்றோம். நபி (ஸல்) அவர்கள் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 67

அவதூறு கூறுவதன் மூலம் பிறர் மான விவகாரத்தில் விளையாடியவர்களுக்கு மறுமையில் செம்பு உலோகத்தினாலான நகத்தால் உடல் முழுவதும் கீறிக்கிழிக்கப்படும் வகையில் தண்டனை அளிக்கப்படும்.

நான் மிஃராஜிக்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்தினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்கள் முகங்களையும், உடம்பையும் கீறிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரீல் அவர்களிடம் வினவினேன். இவர்கள் தான் (புறம் பேசுவதின் மூலம்) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 4235

பறிபோகும் நன்மைகள்

இன்னும் சிலர் பிறர் மானத்தைப் பறித்து அவதூறு பரப்புவதற்கென்றே சில இணைய தளங்களையும், பேஸ்புக் முகவரிகளையும் வைத்துக் கொண்டு சர்வ நேரமும் ஏதாவது ஒரு அவதூறை மக்களிடையே பரப்பி வருகிறார்கள். ஒரு நாள் அவதூறு கூறாவிட்டால் கூட இத்தகையவர்களுக்கு பொழுது புலராது; சரியாய் தூக்கம் வராது எனுமளவு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா?

அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஏதும் குறை வைத்தால் அல்லாஹ் நாடினால் மன்னித்து விடுவான். ஆனால் அடியார்கள் விஷயத்தில் குறை வைத்தால் அவர்களை அவ்வடியார் மன்னிக்காமல் அல்லாஹ் மன்னிப்பதில்லை.

பிறர் மீது அவதூறு பரப்புவது அடியார்கள் விஷயத்தில் செய்யும் குற்றமாகும். தொடர்புடைய அவர் மன்னிக்காத போது மறுமை நாளில் கண்டிப்பாக இது தொடர்பாகப் பழி தீர்க்கப்படும்.

அவதூறு கூறியவரிடமிருந்து நன்மைகள் பிடுங்கப்பட்டு அவதூறு கூறப்பட்டவருக்கு வழங்கப்படும், நன்மைகள் தீர்ந்து போகும் போது அவதூறால் பாதிக்கப்பட்ட நபர்களின் தீமைகள் அவதூறு கூறியவர்கள் மற்றும் அதில் பங்கெடுத்தவர்கள் மீது சுமத்தப்படும்.

இந்த எச்சரிக்கையை அல்லாஹ்வின் தூதர் வாயிலாக அறிந்து கொள்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவர் இருக்கிறார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5037

அவதூறு கூறுபவர்கள் மார்க்கத்தின் இந்த எச்சரிக்கைகளை மனதில் கொண்டு அதுபோன்ற தீமைகளிலிருந்து விலகிட வேண்டும் என்று வாஞ்சையோடு கூறிக் கொள்கிறோம். அவ்வளவு எளிதில் நாங்கள் திருந்துவோமா என்று கேட்பவர்களாக இருந்தால் அவதூறு கூறுவதால் பாதிக்கப்படுவோர்க்கு நன்மைகள் தானே தவிர ஒரு பாதிப்பும் இல்லை தவிர அவதூறு கூறுவோர் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஒரு போதும் தப்ப இயலாது.

இப்படித்தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் 68:33

அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

அல்குர்ஆன் 22:2

உமது இறைவனின் பிடி கடுமையானது.

அல்குர்ஆன் 85:12

அவதூறுக்கு ஆதரவு ஏன்?

மனிதர்களில் பெரும்பாலானோர் தாங்கள் தீமையைச் செய்யாவிடிலும், பிறர் செய்கின்ற தீமையில் பங்கெடுக்கத் தவறுவதில்லை. பிறர் ஏதேனும் தீமையைச் செய்தால் அதை ரசித்துப் பார்க்கின்ற மிக மோசமான மனநிலையில் மக்கள் ஊறித் திளைத்து விட்டனர்.

ஒருவர் புறம் பேசினால் அதை எத்தனை மணி நேரம் ஆனாலும் காது கொடுத்து கேட்கத் தயார் என்ற பாணியில் இவர்கள் பரப்பும் அவதூறை,  இது அவதூறு என்று தெரிந்த பின்னரும், அதைப் படிப்பதிலும், பரப்புவதிலும் சில மக்கள் ஈடுபடுகின்றனர்.

அவதூறைப் பரப்புவதற்கென்றே உள்ள இணைய தளங்களை இந்த வாரம் என்ன தான் கூறியிருக்கின்றார்கள் என்று பார்ப்போமே என்பது போல வலிந்து படித்து ரசிக்கின்றனர். இது போன்று தீமையை ரசிப்பவர்கள் இருக்கும் வரையிலும் அந்தத் தீமை மக்களிடையே மென்மேலும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும். இந்த வகையில் அந்தத் தீமை வளர்வதற்கு இவர்களும் காரணமாக இருப்பதின் மூலம் துணை போகின்றனர்.

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:2

அவதூறுக்கு மறுப்பளிக்கிறேன் பேர்வழிகளால் மக்களிடையே அது மேலும் பரவ பலரது செயல்பாடுகள் காரணமாக அமைந்து விடுகின்றது.

ஜமாஅத் தொடர்பான எந்த அவதூறாக இருந்தாலும் மாநிலத் தலைமை அதன் காரண காரியங்களை அலசி மக்களுக்குத் தெளிவுபடுத்தும். அதை விடுத்து அவதூறு செய்தியை ஒவ்வொரிடமும் பரப்பி அந்தக் கயவர்களுக்கு நாம் தீனி போட்டு விடக் கூடாது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்பிய போது முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கூறும் அறிவுரை இது தான்.

இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? “இது தெளிவான அவதூறுஎன்று கூறியிருக்கக் கூடாதா?

அல்குர்ஆன் 24:12

அவதூறில் பங்கெடுப்பதை நாம் சாதாரணமாகக் கருதுகிறோம். உண்மையில் அதுவும் பயங்கரமானதே!

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. இதைக் கேள்விப்பட்டபோது “இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறுஎன்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?

அல்குர்ஆன் 24:15, 16

இன்ன அவதூறு செய்தியை மக்களுக்கு அறியச் செய்வது தான் நமது நோக்கம் என்று கூறிக் கொண்டே பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அவதூறு செய்தியைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் அவதூறில் பங்கெடுப்பதாகவே அமையும்.

ஜமாஅத் ரீதியான எந்த அவதூறுக்கும் மாநிலத் தலைமை பதிலளிக்கும். அதைத் தவிர்த்து ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினால் விளைவு விபரீதமாகும். அவதூறு பரப்புவது மட்டுமின்றி அதில் பங்கெடுப்பதும் தீமையான காரியம் என்பதை அறிந்து செயல்படுவோமாக!

—————————————————————————————————————————————————————-

பணக்காரக் கடவுள்களின் பயன்படாத பொருளாதாரம்

எம். ஷம்சுல்லுஹா

மும்பையில் 200 ஆண்டு காலப் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. யானைமுகக் கடவுளான கணேஷன் கோயில், வளைத்து வளைத்து மாட்டப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 65 காவல் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்தக் கண்காணிப்புக் கேமராக்கள்? காவல் காக்கும் அதிகாரிகள்?

இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று! 67 மில்லியன் டாலர் மதிப்பிலான 158 கிலோ தங்கக் காணிக்கைகள் இந்தக் கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவை பக்காவாகப் பாதுகாக்கப்பட்டுள்ள கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் இந்தத் தடபுடல் பாதுகாவல்!

உலகிலேயே இந்தியா தான் தங்க ஆபரணங்கள் அணிபவர்களை அதிகம் கொண்ட நாடாகும்.

இந்தியாவின் கோயில்களில் பழமை வாய்ந்த நகைகளாகவும், கட்டிகளாகவும், நாணயங்களாகவும் தங்கம் குவிந்து கிடக்கின்றது. அவற்றில் சிலவற்றை விற்று பில்லியன் கணக்கில் டாலர்களை அவை சம்பாதித்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவிலுள்ள பத்மநாபா கோயிலில் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கக் கருவூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி இந்தியாவின் கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம் மட்டும் 3000 டன்களாகும். இது, அமெரிக்காவின் போர்ட் நாக்ஸ் கெண்டக்கி தங்க சேமிப்பு வங்கிகளில் இருக்கும் தங்கத்தின் அளவில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இருக்கும்.

அதனால் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தங்கத்தைப் பயன்படுத்துவதற்கு வழி என்ன? என்று யோசித்து இதன் மீது குறி வைத்திருக்கின்றார். இந்தப் பொன் மீது ஒரு கண் வைத்து விட்டார்.

கோயில் நிர்வாகங்களிடம் இந்தத் தங்கத்தை தேசிய வங்கியில் செலுத்தி சேமிக்கும்படியும், அதற்குப் பதிலாக வட்டித் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்க மோடி திட்டமிட்டுள்ளார்.

அரசாங்கம் இந்தத் தங்கத்தை உருக்கி, கடுமையான தேட்டத்திலும் தேவையிலும் உள்ள நகை வியாபாரிகளுக்குக் கடனாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மே மாதம் மோடி அரசாங்கம் துவங்கவுள்ளது.

இதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாகப் பாதிக்கின்ற தங்க இறக்குமதியைக் குறைக்க அரசாங்கம் நினைக்கின்றது.

தங்க இறக்குமதியின் மூலம் 2013ஆம் ஆண்டு, மார்ச் முடிவில் ஏற்பட்ட வணிகப் பற்றாக்குறை 28 சதவிகிதமாகும்.

இந்தியாவின் தங்க இறக்குமதி ஆண்டுக்கு 800 முதல் 1000 டன்களாகும். கோயில்கள் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தில் பங்கேற்றால் தங்க இறக்குமதியில் கால்வாசியைக் குறைத்து விடலாம்.

அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு பக்தர்கள் சிலர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் கொடுத்த தங்கக் காணிக்கைகள் உருக்கப்படக் கூடாது; கடவுளுக்குக் கொடுத்த தங்கம் தங்கமாகவே இருக்க வேண்டும்.

நானும் என் தந்தையும் சித்தி விநாயகர் கோயிலுக்கும் இதர கோயில்களுக்கும் 200 கிலோ தங்கத்தை இதுவரை காணிக்கையாகச் செலுத்தியிருக்கிறோம்.

கடவுளுக்குக் கொடுத்த அந்தத் தங்கத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது பாவமாகும். நான் கடவுளுக்குத் தான் அன்பளிப்புச் செய்துள்ளேன். கோயில் டிரஸ்டுக்கு அல்ல!

இவ்வாறு 52 வயது தங்க வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி ஙர்க்ண் ஞ்ர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ங்ஹ்ங்ள் ற்ங்ம்ல்ப்ங் ஞ்ர்ப்க் – கோயில் தங்கத்தைக் குறிவைக்கும் மோடி அரசு என்ற தலைப்பில் ஏப்ரல் 11 அன்று “இந்து’ நாளேட்டில் வெளியானது.

காக்கும் கடவுளுக்குக் கண்கள் இல்லை

சித்தி பெறுவதற்காகவே நாடிச் செல்வது மட்டுமல்ல, கோடிக்கணக்கான மதிப்புமிக்க நகைகள் மற்றும் கட்டிகள் வடிவில் காணிக்கையாகப் பெறுகின்ற சித்தி விநாயகர் தனக்குப் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளைக் கண்காணிக்கச் சக்தி இல்லாமல் போய்விட்டார். சுற்றியும் கண்காணிப்புக் கேமராக்களின் துணையை நாடியதிலிருந்தும், காவல்துறையினரின் பாதுகாப்பைத் தேடியதிலிருந்தும் தனக்குப் பார்க்கின்ற கண்கள் இல்லை என்பதை சித்தி விநாயகர் உறுதிப்படுத்துகின்றார்.

தனக்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட அணிகலன்களை, ஆபரணங்களைக் காக்க முடியாத சித்தி விநாயகருக்கு, தன்னை விட்டே தூரத்தில் சென்று விடும் பக்த கோடிகளைக் காக்கும் ஆற்றல் அறவே இல்லை என்பது இங்கு அம்பலமாகின்றது.

இதைத் தான் திருக்குர்ஆன் வசனம் ஆணித்தரமாக, அறைகூவலாகக் கேட்கின்றது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

ஏர்க்-க்கு ஏர்ப்க் தேவையா?

இந்தியாவில் வட்டிக்கு வாங்கிய கடனைச் செலுத்த முடியாமல் மகாராஷ்டிராவில் மட்டும் 2014ஆம் ஆண்டில் 204 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று 26.11.2014 தேதியில் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.

மகாராஷ்டிரா மாநிலம் அல்லாமல் இதே காலகட்டத்தில் தெலுங்கானாவில் 69, கர்நாடகாவில் 19, மோடியின் குஜராத்தில் 3, கேரளாவில் 3, ஆந்திராவில் 3 என மொத்தம் 97 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

அன்றாடம் வறுமையில் மட்டும் பல குடும்பங்கள் தற்கொலை செய்து சாகின்றன. அமெரிக்க வங்கியில் குவிந்து கிடக்கும் தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு தங்கத்தைத் தங்களிடம் கொண்டிருக்கும் கோயில்கள் இந்தத் தங்கத்தை ஏழை குடும்பங்களுக்குக் கொடுத்தால் என்ன? அந்தச் சிந்தனை அவர்களுக்கு அறவே வராது.

இதற்குக் காரணம் இவர்கள் கொண்டிருக்கும் கோளாறும் குறையும் கொண்ட கடவுள் கொள்கை தான். அதனால் தான் பக்தர், தங்கத்தை உருக்கக்கூடாது; பத்திரமாக அவை தங்கப் பாளங்களாக, கட்டிகளாகவே இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

கடவுளுக்கு இந்தத் தங்கம் இருப்பதால் என்ன பயன் என்று புரியாமல் இருக்கின்றனர்.

தன்னிறைவான கடவுள்

இங்கு தான் இஸ்லாமிய கடவுள் கொள்கையை இவர்கள் சற்று உற்று நோக்க வேண்டும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அல்லாஹ் ஒருவன்என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன்.  (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (திருக்குர்ஆன்: 112வது அத்தியாயம்)

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 51:57, 58)

உலகத்தைப் படைத்த உண்மையான இறைவன், தான் தேவையற்றவன், தன்னிறைவானவன் தனது படைப்பினங்களுக்கு உணவை வழங்குபவன் என்று பிரகடனப்படுத்துகின்றான்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 2:195)

அப்படியானால் இந்த வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் என்று சொல்கின்றானே! இஸ்லாத்திலும் தர்மப் பொருட்கள் கோடிக்கணக்கில் வழங்கப்படுகின்றனவே என்று கேட்கலாம். உண்மை தான். ஆனால் அவை அனைத்தும் ஏழைகளுக்காகவே என்று இஸ்லாம் சொல்கின்றது.

பணக்காரனுக்குப் பரிகாரம்! ஏழைக்குப் பலன்!

இஸ்லாமிய மார்க்கம் ஜகாத் என்ற கடமையை பணக்காரர்கள் மீது விதித்திருக்கின்றது.

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:43)

இது நேரடியாக ஏழைகளுக்காக வேண்டியே பெறப்படும் வரியாகும். இதனுடைய பலன் நேரடியாக ஏழைகளுக்குத் தான் செல்கின்றது.

மனிதன் தவறு செய்யக் கூடியவன்; பாவம் செய்யக்கூடியவன். அந்தப் பாவங்களுக்குப் பரிகாரமாக தர்மங்களை செய்யச் சொல்கின்றது.

ஒருவன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதற்கு மாறு செய்து விடுகின்றான். இதற்குப் பரிகாரம் என்ன?

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (அல்குர்ஆன் 5:89)

ஒருவன் தனது மனைவியை நோக்கி கோபத்தில் தாய்க்குச் சமம் என்று சொல்லிவிடுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். இது அறியாமைக் காலத்தில் நடந்த ஒருவிதமான விவாகரத்தாகும். இதற்குத் திருக்குர்ஆன் அளிக்கும் தீர்வு இதோ:

தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 58:3,4)

ஓர் இறைநம்பிக்கையாளன் தவறுதலாக ஒருவரைக் கொலை செய்து விடுகின்றான். இதற்குப் பரிகாரம் என்ன?

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். (அல்குர்ஆன் 4:92)

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள முஸ்லிம்கள் மீது கடமையாகும். அந்த நோன்பை வேண்டுமென்றே முறித்து விட்டால் அதற்குப் பரிகாரம் என்ன?

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்!என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு நோற்றுக்கொண்டு என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்!என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!என்றார். “தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “இல்லை!என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும்போது, நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அரக்எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் யாருமில்லை!என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா, (ரலி) நூல்: புகாரி 1936

ஒரு முஸ்லிம் ஹஜ் என்ற வணக்க முறைக்காகவும், அதில் குறைபாடு ஏற்பட்டால் அதற்காகவும் இஸ்லாம் பரிகாரம் செய்யச் சொல்கின்றது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. (அல்குர்ஆன் 2:196)

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை தர்மம், அல்லாஹ்வுக்காக வழங்குதல் என்று வந்து விட்டாலே அது அனைத்தும் ஏழைகளுக்குத்தான்.

இரு பெருநாட்களில் ஏழைகளுக்குத் தர்மம்

முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்கள் உள்ளன. நோன்புப் பெருநாளில் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். ஹஜ் பெருநாளில் மக்காவுக்குச் சென்றவர்கள் மற்றும் உள்ளூரில் உள்ள வசதி படைத்தவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அறுத்து ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும்.

இவ்வாறு இறைச்சியை அறுத்துப் பலியிடுகின்ற போது அது இறைவனுக்குச் செல்கின்றது என்று தவறாக யாரும் விளங்கி விடக்கூடாது என்பதற்காக திருக்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் அதையும் தெளிவுபடுத்துகின்றது.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 22:37

கடவளுக்குரிய தங்கம், தங்கமாகத் தான் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் குறிப்பிட்டதை மேலே பார்த்தோம். கடவுளுக்குக் கொடுத்தது அப்படியே கிடக்க வேண்டும் என்று நம்புகின்றனர். கடவுளுக்குக் கொடுத்தது ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற இஸ்லாமிய கடவுள் கொள்கை இவர்களுக்குத் தெரியவில்லை. பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட பணக்கார வர்க்கத்திடம் முடங்கிக் கிடக்கக் கூடாது என்ற இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை இவருக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புங்கள்! எதன் மேல் உங்களைப் பொறுப்பாளர்களாக அவன் ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு (நல்வழியில்) செலவிடுவோருக்கு பெரிய கூலி உண்டு. (அல்குர்ஆன் 59:7)

நரேந்திர மோடி இந்தப் பார்வையை, அவரையும் அறியாமல் பார்க்கின்றார். எனினும் கடவுளுக்கு அளிக்கப்பட்ட தங்கம், பொருள் கரையக் கூடாது என்று தான் அவரும் நினைக்கிறார். ஆனால் அதை நாட்டின் பொருளாதாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். என்ன தான் அவர் முயற்சித்தாலும் பக்தர்களின் மனோபாவத்தை அவரால் ஒருபோதும் மாற்ற முடியாது. அப்படி முயற்சி செய்தால் அவரை அந்த பக்தர்கள் அடுத்த தேர்தலில் மாற்றி விடுவார்கள்.

பொருளாதாரம் ஓரிடத்தில் ஒன்றுக்கும் உதவாக்கரையாக முடங்கி, உறங்கிக் கிடக்கக்கூடாது என்ற அற்புத சிந்தனையை மோடி போற்றுகின்ற, ஒபாமாவுக்குப் பரிசாக அவர் அளிக்கின்ற பகவத் கீதை சொல்லாது. இதைச் சொல்வது அனைத்துலக வழிகாட்டியான அல்குர்ஆன் தான்.

பக்தர்களின் பார்வை இஸ்லாம் கூறுகின்ற உண்மையான கடவுள் பக்கம் திரும்புமானால் பொருளாதாரம் இப்படி ஓரிடத்தில் குவிந்து கிடக்காது. இஸ்லாத்தில் பொருளாதாரம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். அதனால் பட்டினிச் சாவுகள் தடுக்கப்படும். எனவே மோடி நிறுவ வேண்டியது இந்து ராஷ்டிரம் அல்ல! இஸ்லாமிய ராஷ்டிரம் தான்.

இறுதியாக இந்தச் செய்தியின் மூலம் தெரிகின்ற விஷயம்,

  1. கடவுள் கொள்கை பகுத்தறிவு ரீதியில் இருக்க வேண்டும்.
  2. அந்தக் கடவுள் கொள்கை மூலம் விளைகின்ற பலன், ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காத, ஏழைகளுக்குப் பலனளிக்கக் கூடிய பொருளாதாரம்.

இவ்விரண்டையும் அடைய வேண்டுமானால் அதற்குத் தேவை இஸ்லாம். அத்துடன் கோயில் பொருளாதாரத்தை வளர்ச்சி என்ற பெயரில் வட்டிக்கு விடுவதைப் பாவம் என்று பக்தர் கூறுகின்ற இந்த கருத்தை நாம் வரவேற்கலாம். காரணம், அதுவும் இஸ்லாமியப் பொருளாதாரம் தான். ஆனால் அதே சமயம் அந்தப் பொருளாதாரம் ஏழைகளுக்கு வினியோகிக்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு! இதைப் பின்பற்றினால் விவசாயிகளின் தற்கொலை, பட்டினிச் சாவு போன்ற கேடுகெட்ட நிலையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 23

நபிகளாரின் வாழ்வினிலே…

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நமது குடும்பத்திலுள்ள சாதாரணப் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதுபோன்று தான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் நடந்துள்ளார்கள். கோபப்பட்டுள்ளார்கள்; சந்தேகப்பட்டுள்ளார்கள்; சண்டையிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பாடத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்என்று பதிலளித்தார்கள்.

உடனே நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லைஎன்று சொன்னேன். அப்போது “(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரியதை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)

(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த போது என் மனைவி, “நீங்கள் இப்படிச் செய்யலாமேஎன்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், “உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், “கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள்என்று சொன்னார்.

உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக் கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, “என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டுஎன்றார். அதற்கு நான், “அல்லாஹ்வின் தண்டனையையும்  அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!என்று (அறிவுரை) சொன்னேன்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரானன உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.

இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, “கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடிபிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்து விட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன்.

மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் நபி (ஸல்) அவர்களது அவையில் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.

(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) “ஃகஸ்ஸான்வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். “திறங்கள், திறங்கள்என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான், “ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?” என்று கேட்டேன். அதற்கவர், “அதைவிடப் பெரியது  நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள்என்றார்.

உடனே நான், “ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், “இந்த உமர் பின் கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும்  இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?”  என்று கேட்டார்கள்.

நூல்: புகாரி 4913

நாம் ஏதேனும் குடும்ப விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போது, வீட்டுப் பெண்கள் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால், உடனே சண்டையிடும் ஆண்களைத் தான் நடைமுறையில் பார்க்கிறோம். ஆனால் நபியவர்கள் அதை அனுமதிக்கிறார்கள். ஆண்கள் பேசும் போது பெண்களுக்கு என்ன வேலை? என்றெல்லாம் ஆண்கள் கேட்பதைப் பார்க்கிறோம். ஆண்கள் பேசும் போது பெண்கள் பேசினால் என்ன தவறு இருக்கிறது? பேசுகிற விசயம் தவறா? சரியா? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர மற்றபடி உரிமையைப் பறித்துவிடக் கூடாது. இதை நபிகளாரின் வாழ்வில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும்” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட  நான் அவர்களுக்கு “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்என்று சொன்னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்தான் “வஅலைக்கும்” (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்-விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள்.

நூல்: புகாரி 6024

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 5422

தன்னுடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவியரிடம் சென்று விட்டார்களோ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சந்தேகப்பட்டு, ரோஷம் கொள்வதை இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

எனவே சொர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட, அல்லாஹ்வினால் ரலியல்லாஹ் என்று பொருந்திக் கொள்ளப்பட்ட, நமக்கெல்லாம் தாயின் அந்தஸ்தில் இருக்கும் நபியவர்களின் மனைவிமார்கள் கூட சாதாரணப் பெண்கள் எப்படி நடப்பார்களோ அதுபோன்றுதான் நடந்திருக்கிறார்கள்,

அப்படியானால், நம்முடைய வீட்டில் வாழ்கிற பெண்களின் நிலை இன்னும் சாதாரணமாகத்தான் இருக்கும் என்பதில் எந்த வியப்பும் இல்லை. எனவே நிர்வாகம் செய்கிற கணவன்மார்கள் அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு செல்லவேண்டுமே தவிர, அதை வைத்து சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

நிர்வாகம் என்பது அடக்குமுறை செய்வதில் கிடையாது என்பதை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அரவணைக்க வேண்டும். ஒரு குழந்தை செய்யும் தவறுகளை தாய் பொறுத்துக் கொண்டு செல்லமாக எடுத்துக் கொள்வதைப் போன்று கணவன்மார்கள் மனைவியிடம் நடந்துகொள்ள வேண்டும்.

இன்னும் கணவன் மனைவி எப்படியெல்லாம் புரிந்து நடக்க வேண்டும் என்பதை அடுத்தடுத்த இதழ்களில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்    தொடர்: 30

அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இறைநேசர்கள் குறிப்பாக நபிமார்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற காரணத்தினால், அவர்களுக்கு சுயமாகவே அற்புதம் செய்யக்கூடிய ஆற்றல், சக்தி இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது என்பதையும் அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் இதுவரை நாம் பார்த்தோம்.

அற்புதங்களைப் பொறுத்தவரை, நபிமார்கள் பல அற்புதங்களைச் செய்தது போல நபிமார்களாக இல்லாத நல்லவர்கள் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள். அப்படியானால் நபிமார்களால் மட்டும்தான் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் ஏற்படுமா? என்பது இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிமார்களுக்கு மட்டுமில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் அற்புதம் நிகழலாம் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. ஒருவருக்கு அற்புதம் நிகழ்ந்தது என்றால் அவர் பெரிய மகானாக இருக்க வேண்டும். அவ்லியாவாக இருக்க வேண்டும். அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட அடியாராகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அது அடையாளம் கிடையாது.

எந்த ஒரு முஃமினாக இருந்தாலும் அவருக்கு அல்லாஹ் உதவி செய்ய நாடிவிட்டால் அற்புதமான முறையில் அந்த உதவியை கிடைக்கச் செய்வான். இந்த வகையான ஒரு அற்புதமும் மார்க்கத்தில் இருக்கிறது.

நபிமார்களுடைய அற்புதத்திற்கும், இந்த அற்புதத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், நபிமார்கள் ஒரு அற்புதத்தைச் செய்வதற்கு முன்னால் அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார்கள். அதன் பின்னர் நபிமார்கள் வழியாக அந்த அற்புதம் நிகழ்த்தப்படும். இதுபற்றிச் சென்ற இதழில் நாம் பார்த்தோம்.

அல்லாஹ், நபிமார்கள் வழியாக அவர்களுக்குத் தெரிய வைத்து இப்போது செய் என்று சொல்லி கட்டளையிட்டபின் அற்புதங்களைச் செய்வார்கள்.

இதல்லாமல் மற்றவர்களுக்கு நடக்கக்கூடிய அற்புதங்கள் என்னவென்றால், அவர்களுக்கு எந்த ஒரு செய்தியும் இறைவனிடமிருந்து வராது. இப்போது, இவ்வாறு நடக்கும் என்று நமக்கே தெரியாது. அல்லாஹ் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாடி விட்டால் நாம் அறியாத விதத்தில் நமக்கு அந்த உதவியைச் செய்வான்.  இதோ அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன் 65.3)

இந்த வசனத்தில், அல்லாஹ் மனிதன் அறியாத விதத்தில் அவர்களுக்கு உணவளிப்பான் என்று மட்டும்தான் வந்துள்ளது. இதையே உணவளிப்பது மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம். அவனே அறிந்து பார்க்காத அளவுக்கு எத்தனையோ விஷயங்களை அல்லாஹ் செய்வான்.

உதாரணமாக, ஒரு பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் இறந்து விடுகின்றார்கள். ஆனால் அதில் அதிசயமான முறையில் ஒருவன்  மட்டும் மயிரிழையில் உயிர் பிழைத்திருப்பான். விமானம் நொறுங்கி விழுந்தது. ஆனால் அதில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்; கார் விபத்துக்குள்ளானது, ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. இதுபோன்ற ஏராளமான சம்வங்களை நாம் அன்றாடம் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.

இந்த உயிர் பிழைத்த மனிதனுக்கு, நாம் மட்டும் சாகாமல் தப்பி விடுவோம் என்று தெரியுமா? அல்லது அல்லாஹ் இந்த விபத்தில் நீ மட்டும் உயிர் பிழைத்துக் கொள்வாய்? மற்ற அனைவரும் இறந்து விடுவார்கள் என்று வஹீ அறிவித்தானா? இல்லை. அவனுக்கே தெரியாத, அறியாத விதத்தில் நடக்கின்ற இந்த நிகழ்வும் ஒரு அற்புதம்தான். ஆனால் அந்த மனிதன் அதைச் செய்யவில்லை.

ஆனால், நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை நபிமார்கள் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும், தான் நபி என்பதற்கு ஆதாரமாக, அத்தாட்சியாகக் காட்ட வேண்டியிருப்பதாலும் அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லி அவர்கள் வழியாகவே அந்த அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான்.

ஆனால் மற்ற மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழுமா என்றால், பணக்காரன், பாமரன், ஏழை உட்பட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். ஒரு பணக்காரனுக்கு நடக்காத அதிசயம் ஏழைக்கு நடக்கும். அல்லாஹ் ஒருவனுக்கு சிறப்பு கவனம் எடுத்து உதவி செய்ய நினைத்து விட்டால் இது நடந்து விடும். ஆனால், நபிமார்களுக்கு நடந்தது போன்று அவர்கள் அறிகின்ற விதத்தில் நடக்காது. மற்ற மனிதர்களுக்கு அவர்கள் அறியாத வித்தில் நடக்கும். இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.

நபிமார்களுக்கு அல்லாஹ் தள்ளாத வயதில் குழந்தையைக் கொடுத்த சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு எப்படி குழந்தையைக் கொடுத்தான்? அந்த நபிமார்களிடம் அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லிய பிறகு குழந்தையைக் கொடுத்தான். இவ்வாறு அல்லாஹ் திருமறையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை கொடுத்ததைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்.

அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம். “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர் கிழவராகவும் இருக்கும் போது பிள்ளை பெறுவேனா? இது வியப்பான செய்தி தான்என்று அவர் கூறினார்.  “அல்லாஹ்வின் கட்டளை குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக் குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும். அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்என்று அவர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 11: 71,72,73)

இந்த சம்பவம் 51:29,30, 15:53-55, 14:39 ஆகிய வசனங்களிலும் இடம் பெற்றுள்ளது.

மேலும் ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கும் தள்ளாத வயதில் தான் குழந்தையைக் கொடுத்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.

.அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்என்று தம் இறைவனிடம் வேண்டினார். அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடுமிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். “என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித் தான் செய்வான்என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன் 3.38,)

இந்தச் சம்பவம் மேலும் 21:89,90, 19:3-10 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ளது.

இதுபோன்று இப்போதும் கூட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இப்ராஹீம் நபி மற்றும் ஸக்கரியா நபிக்குக் கிடைத்த மாதிரி, தள்ளாத வயதுடையவர்களில் யாரோ ஒருவருக்குக் கிடைத்து விடும்.

நாம் செய்தித் தாள்களில் கூடப் படித்திருப்போம். 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்று. இது ஒரு அதிசயமான, ஆச்சரியமான விஷயம் தான். ஏனென்றால், அந்த வயதில் மாதவிடாய் நின்று விடும். எந்த மருத்துவரிடம் சென்று மாத்திரை மருந்துகள் எடுத்தாலும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத வயது. மருத்துவர்கள் கூட, நீங்கள் குழந்தை பெறும் தகுதியை இழந்து விட்டீர்கள். அல்லது, உங்கள் கணவன் ஆண்மைத் தன்மையை இழந்து விட்டார். இனிமேல் உங்களுக்குக் குழந்தையே பிறக்காது என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால் அதையும் தாண்டி இறைவன் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத பெண்ணுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கியிருக்கிறான். அந்தப் பெண், நமக்கு இந்த வயதில் குழந்தை பிறக்கும் என்று அறிந்திருப்பாளா? என்றால் அறிந்திருக்க மாட்டாள். அல்லது, அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி நற்செய்தி சொல்லியிருப்பானா என்றால் அதுவும் இல்லை. அவளே அறியாத விதத்தில், நம்பிக்கையற்று இருந்த நேரத்தில் தான் இந்த அற்புதம் நடந்திருக்கிறது. இவ்வாறு சில அற்புதங்களை வழங்குவான்.

அத்தகைய அற்புதங்களை இப்போதும் அல்லாஹ் நிகழ்த்துவான். அந்த அற்புதங்கள் அவரிடம் நிகழ்ந்தவுடன் அவரை அவ்லியா என்று சொல்வதற்கோ, நல்லடியார்கள் என்பதற்கு அடையாளம் என்று சொல்வதற்கோ, அவர் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார் என்று சொல்வதற்கோ எந்த ஆதாரமும் கிடையாது. பொருந்திக் கொள்ளப்பட்டவர்களுக்கும் அவன் அற்புதங்களைச் செய்வான். சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்களைச் செய்வான்.

நம் வாழ்க்கையிலும் கூட யாராவது ஒருவருக்கு ஏதாவது ஒரு அற்புதம் – அதிசயம் நிகழ்ந்திருக்கும். உதாரணமாகச்  சொல்வதாயிருந்தால், ஒருவருக்கு மிகப் பெரிய நோய் ஒன்று ஏற்பட்டிருக்கும். அல்லது அவர் விபத்தில் படுகாயமடைந்து  மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரை ஸ்கேன் எடுத்து பார்த்து, பரிசோதித்து விட்டு, இவரை இனிமேல் காப்பாற்ற முடியாது. அவர் பிழைப்பது மிகவும் கஷ்டம். அல்லது அவர் பிழைக்கவே மாட்டார். எங்களால் காப்பாற்ற முடியாது. இனிமேல் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி கைவிரித்து விடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு சிறிது நேரத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவர் உயிர் பிழைத்தார்; அந்த நோயிலிருந்து குணமடைந்தார் செய்தியை நாம் கேள்விப்படுகிறோம்.

இவ்வாறு அவர் உயிர் பிழைத்ததால்- இந்த அதிசயம் நடந்ததால் அவரை அவ்லியா என்று முடிவு செய்ய முடியுமா? இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லடியார், அதனால் தான் இவர் உயிர் பிழைத்தார் என்று சொல்ல முடியுமா? முடியாது. அல்லாஹ் அவருக்கு உதவ நாடிவிட்டதால் அவருக்கு உதவி செய்தான். இதனால் அவர் மகான் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், இந்த அற்புதங்கள் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் நடக்கும் என்பதில்லை. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். இறைவனை நம்பாத, இறைவனை மறுக்கின்ற இறைமறுப்பாளர்களுக்கும் சில அற்புதங்களைச் செய்வான். மறுமையில் இவர்களுக்கு எந்தச் சிறப்பும் அந்தஸ்தும் கிடையாது. அவர்களுக்கு நரகம்தான் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் இவ்வுலகில் மட்டும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறப்பை – அந்தஸ்தை வழங்க நினைத்தால், அற்புதத்தைச் செய்து காட்ட நினைத்தால் அதை அல்லாஹ் அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டுவான்.

மேலும், அற்புதங்களிலேயே மிகப் பெரும் அற்புதத்தை செய்யக்கூடியவன் ஷைத்தானாகத் தான் இருக்கிறான். இவ்வுலகில் இப்லீஸ் செய்த அற்புதங்களுக்கு நிகராக வேறு யாரும் அற்புதங்கள் செய்திருக்கிறார்களா? நம்முடைய உள்ளத்திற்குள் நுழைந்து நம்மைத் திசை திருப்பி விடுகின்றான். நம்முடைய உள்ளத்தில் ஊடுருவுதல் போன்ற விஷயங்கள் அவனிடம் நடக்கின்றது. அற்புதங்கள் என்பது ஷைத்தானிடம் கூட நிகழ்வதனால், அவன் மகான் என்பதற்கு அடையாளமாகுமா? அவனை நல்லடியார் என்று சொல்ல முடியுமா? என்றால் முடியாது.

மேலும், நபிமார்கள் அல்லாமல் நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்களை மாத்திரம் தான் நாம் நல்லடியார்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, அவர்களை விடுத்து வேறு யாரையும் நாம் அல்லாஹ்வின் இறைநேசர் என்றோ நல்லடியார் என்றோ சொல்லக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாரை நல்லடியார்கள் என்று சொல்லியிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எப்பேற்பட்ட அற்புதங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதிசயங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களை மகான் என்றோ அவ்லியாக்கள் என்றோ இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என்றோ சொல்லக்கூடாது.

—————————————————————————————————————————————————————-

ஹதீஸ்களை மறுக்கும் ஹதீஸ்கலை விதிகள்

முஹம்மது அலீ, ஸபீர் அலீ

இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழகத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஏகத்துவச் சுடரை ஒளிரவிட்டதின் விளைவாக மத்ஹபுகளிலும், தரீக்காக்களிலும், கஃப்ஸாக்களிலும், பெரியார்களின் புராணத்திலும், ஷேகு முரீதுகளிலும் மூழ்கித்திளைத்த சமுதாயத்தை திருமறைக் குர்ஆன் ஹதீஸ்கள் என்ற ஏகத்துவப் பாதையில் ஒன்றிணைத்தது.

தொழுகையில் மாத்திரம் குர்ஆன் ஓதிய சமுதாயத்தின் வாழ்க்கையிலும் குர்ஆனை மிளிரவைத்தது.

ஹதீஸ்கள் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்புக்காக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருந்த சமுதாயத்தில் செவியேற்பதெல்லாம் ஹதீஸ்களாகாது; அதற்கென்று வழிமுறைகளையும் விதிமுறைகளையும் ஹதீஸ்துறை அறிஞர்கள் வகுத்துத் தந்துள்ளார்கள் என்று உலகத்திற்குப் பறைசாற்றியது.

இதன் மூலம் கட்டுக்கதைகள் மற்றும் கஃப்ஸாக்களை விட்டும் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டன.

ஏகத்துவ வாதிகளின் வாழ்க்கையில் குர்ஆனைப் போன்று ஹதீஸ்களும் ஓர் அங்கமாக மாறியது. அதன் விளைவுதான் சில ஹதீஸ்களை நிலைநாட்டியதற்காக ஏகத்துவ சொந்தங்கள் புரட்டி எடுக்கப்பட்டார்கள், ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள், செல்வங்களை இழந்தார்கள், சொந்தங்களால் பகைக்கப்பட்டார்கள். இன்னும் ஒருபடி மேல போய் சில ஏகத்துவவாதிகளின் உயிர்களும் பறிக்கப்பட்டது. அத்தனை போராட்டங்களும் குர்ஆனையும் ஹதீஸ்களையும் நிலைநாட்டுவதற்குத்தான்.

ஹதீஸ்களுக்காக இத்தனை துன்பங்களையும் சுமந்த இந்த ஜமாஅத்தை இன்று ஹதீஸ்களை மறுக்கும் ஜமாஅத் என்று சொல்வதுதான் மிகப்பெரும் வேடிக்கை!

இன்று நம்மைப் பார்த்து ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று குறை சொல்லக்கூடியவர்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ அவர்களும் பல ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நாம் மறுப்பது திருமறைக் குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணத்தினால் ஆகும். ஆனால் அவர்கள் மறுப்பதோ ஹதீஸ்கலை விதிக்கு மாற்றமாக இருப்பதினால் ஆகும்.

ஹதீஸ்கலை விதிகளுக்கு முரணாகிறது என்று மறுப்பதை விட குர்ஆனுக்கு முரணாகிறது என்று கூறி மறுப்பது மிகவும் உறுதியானது என்பதை இங்கே அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

நம்மைப் பார்த்து இவர்கள் “நவீன முஃதஸிலாக்கள், காரிஜியாக்கள்” என்று வசைபாடுகிறார்கள். முஃதஸிலாக்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி ஹதீஸ்களை மறுத்ததால் அந்த விதியையே மறுக்க வேண்டும் என்று வாதிடுகின்றார்கள்.

இந்த வாதத்தில் அவர்கள் உண்மையாளர்கள் எனில், முஃதஸிலாக்கள், அல்லாஹ் ஒருவன் என்று கூறுகிறார்கள். அதற்கு மாற்றமாக இவர்கள் கூறத் துணிவார்களா?

மார்க்க விஷயத்தில் முஃதஸிலாக்களும், காரிஜியாக்களும் எதைக் கூறியிருக்கிறார்கள் என்று கவனித்து, அதற்கு நேர் எதிராகக் கூறுவது அறிவார்ந்த செயலா? அல்லது அதில் குர்ஆனும் ஹதீசும் என்ன கூறுகிறது என்று முடிவு செய்வது அறிவார்ந்த செயலா?

நம்மைக் குறை கூறுபவர்கள், ஹதீஸ் கலையின் விதிகளின் அடிப்படையில் எவ்வாறு ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று கூறுவதற்கு முன்னால் இஸ்லாத்தின் ஓர் அடிப்படையை இங்கே பதிவுசெய்கிறோம்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் பாதுகாப்பு தன்மை

இஸ்லாம் என்ற மாளிகையில் இரு மாபெரும் தூண்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் பாதுகாப்புத் தன்மை ஒரே சமமானதாக இல்லையென்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வாறு நாம் கூறுவதினால் ஹதீஸ்கள் என்றாலேயே சந்தேகத்திற்கு இடமானது என்பது நமது வாதமல்ல.

மாறாக, குர்ஆனில் எவ்வித தவறோ, குறையோ, கலப்படமோ, கூட்டலோ, குறைத்தலோ, திரித்தலோ, மாற்றலோ இருக்கவே முடியாது என்பதை நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்கு, இலட்சக்கணக்கான நபித்தோழர்கள் சான்று பகர்கிறார்கள். அதற்கடுத்து, அதற்கடுத்து என்று பல தலைமுறையினர் அதை உறுதிப்படுத்துகிறார்கள்.

அதைவிட, படைத்தவனே அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்.

“இந்த உபதேசத்தை நாமே இறக்கினோம். இதை நாமே பாதுகாப்போம்”.

(அல்குர்ஆன் – 15:9)

ஆனால் ஹதீஸ்கள், குர்ஆனைப் போன்று அல்லாமல் வேறு முறையில் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. அதாவது குர்ஆனிற்கும், ஹதீஸிற்கும் மத்தியில் பாதுகாப்புத் தன்மையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

அதனால் தான் குர்ஆனுடைய வசனத்தை யாரேனும் கூறினால் அது நம்பகமானதா என்று ஆராய்வதற்கு அணுவளவும் இடமின்றி அதை அப்படியே தங்குதடையின்றி உடனே ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், ஹதீஸ்கள் என்று யாராவது கூறினால் அந்தச் செய்தி சரியானது தானா? அதனை அறிவிப்பவரின் நம்பகத்தன்மை எவ்வாறு? அவருடைய குலம் என்ன? கோத்திரம் என்ன? அவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்? அவருக்கு அறிவித்தவர் யார்? அவருடைய நம்பகத்தன்மை என்ன? நபி (ஸல்) அவர்களுடைய செய்தியை அறிவிப்பதற்கு அவர் தகுதியானவரா? என்று சல்லடை போட்டு வேறு யாருடைய வாழ்க்கையையும் இந்த அளவிற்கு ஆராய்ந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அவர் மீது கழுகுப் பார்வைகள் சுமத்தப்படுகிறது.

அத்துடன் விட்டுவிடாமல் அந்தச் செய்தியைப் பற்றியும் ஆய்வுசெய்து, இதே போன்ற வேறு செய்திகளுக்கு மாற்றமாக இந்த செய்தி இருக்கிறதா? அல்லது குர்ஆனுடைய ஏதேனும் வசனத்தின் கருத்திற்கு மாற்றமாக இது இருக்கிறதா? என்று நமக்கு முன்னால் வாழ்ந்த ஹதீஸ்கலை முன்னோடிகளான பல இமாம்கள் அதுபற்றிய சட்டங்களை நமக்கு வகுத்து தந்துள்ளார்கள்.

அந்தச் சட்டங்களை இன்று உலகமே ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், சில இடங்களில் அது தெளிவாகப் பேசப்படாமல் மூடலாக விடப்பட்டதின் காரணத்தினால், இன்று ஹதீஸ் கலையை சரியான ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகாத சிலர் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்கிறது என்ற ஒரு விதி மட்டுமே ஒரு ஹதீஸ் சரியானது என்பதற்கு ஆதாரமாகும் என்று கூறுகின்றனர்.

“அதனுடைய இஸ்னாத் (அறிவிப்பாளர் வரிசை) மாத்திரம்தான் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது, அதன் மத்தன் (ஹதீஸின் கருத்து) என்ன கருத்தை தருகிறது என்பதை ஆய்வு செய்யக்கூடாது, அப்படி ஆய்வுசெய்வது நம்மை ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் கொண்டு சேர்த்து விடும், இது போன்ற ஒரு விதி ஹதீஸ்கலையில் எங்குமே கிடையாது, இந்த விதியை எந்த நல்லறிஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, அறிவிப்பாளர்கள் வரிசை சரியாக அமைந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் ஒருபோதும் முரண்படாது, அப்படி வருமென்று நாம் நம்பினால் அது நமது அறிவுடைமை’ என்று பரவலாக வாதிடுவதை நாம் பார்க்க முடிகிறது.

இவர்களுடைய இந்த வாதம் திருமறைக் குர்ஆனுடைய அடிப்படையையே அறியாததின் விளைவாக எழுந்துள்ளது என்பதை திருக்குர்ஆனின் அடிப்படைகளை அறிந்திருக்கும் அனைவரும் புரிந்துக் கொள்வார்கள்.

ஏனென்றால், இஸ்லாமிய மார்க்கம் மற்ற அனைத்து மதங்களை விடவும் விலகி நிற்கும் முக்கியமான இடமே, இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்மூடிப் பின்பற்றாமல் அவற்றை அறிந்து சிந்தித்துப் பின்பற்ற வேண்டும் என்பதில்தான்.

அதனால்தான் அல்லாஹ் கூறுகிறான்,

(இறை நம்பிக்கையாளர்களுக்கு) தங்களின் இறைவனின் வசனங்களின் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அதன் மீது செவிடர்களாகவும் குருடர்களாகவும் விழமாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)

அவர்கள் இக்குர்ஆனை சிந்திக்க வேண்டாமாஅல்லது உள்ளங்களின் மீது பூட்டுகள் உள்ளதா? (அல்குர்ஆன் 47:24)

இதுபோன்று இன்னும் ஏராளமான வசனங்கள், இறை நம்பிக்கையாளர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்மூடி பின்பற்றக்கூடாது, கருத்தை விளங்கித்தான் பின்பற்றவேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.

ஆனாலும், இந்த ஆதாரங்களை மறந்து ஹதீஸ்கலை விதிகளை மாத்திரம் முன்னிறுத்தி வாதிடக்கூடியவர்களுக்கு ஹதீஸ்கலை விதிகளும் இதைத்தான் சொல்கிறது என்பதை எவ்வித காய்தல் உவத்தலின்றி நேரான கண்ணோட்டத்தோடும், தெளிவான சிந்தனையுடனும், ஹதீஸ் கலை விதிகளிலிருந்தே சில கேள்விகளை நாம் முன்வைக்கின்றோம்.

ஷாத்

ஹதீஸ்கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான  ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும்.

நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக அறிவிக்கும் போது அவருடைய ஹதீஸ் ஷாத் என்று கூறி மறுக்கப்படும். அதே நேரத்தில் அவரை விட வலுவானவருடைய செய்தி மக்பூல் என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

ஷாதிற்கு உதாரணம்

“உங்களில் ஒருவர் ஃபஜர் தொழுகையை தொழுதால் அவர் தனது  வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1070) மற்றும் திர்மிதியில் (385) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பற்றி இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் வாஹித் என்பவர் இந்தச் செய்தியில் பல அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக அறிவிக்கிறார்.

ஏனென்றால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்கள் இந்தச் செய்தியை நபியவர்களுடைய கூற்றாக அல்லாமல், நபியவர்கள் செய்ததாகத் தான் அறிவிக்கிறார்கள். இன்னும், இந்த ஹதீஸை அஃமஷ் எனும் அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கக்கூடிய நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் அப்துல் வாஹித் மாத்திரம் (நபியவர்களின் செயலாக அல்லாமல் கட்டளையாக) அறிவிக்கிறார் என்று இமாம் பைஹகீ கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 124)

மேற்கண்ட செய்தியில், பல நம்பகமான அறிவிப்பாளர்கள் நபியவர்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள் என்று அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளர் மாத்திரம் “படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் விதமாக அறிவிப்பதினால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிக்கும் செய்தி அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அந்த ஒரு அறிவிப்பாளருடைய செய்தியை ஷாத் என்று கூறி மறுக்கிறார்கள்.

இங்கு, ஷாத் என்று மறுக்கப்படக்கூடிய அறிவிப்பு மறுக்கப்படுவதன் காரணமே அவரை விட வலுவானவருக்கு அவர் முரணாக அறிவிக்கின்றார் என்பதுதான்.

அப்படியென்றால் ஓர் உறுதியான அறிவிப்பாளரை விட பலகோடி உறுதியான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட திருமறைக்குர்ஆனுக்கு, அறிவிப்பாளர் சரியாக இருக்கின்ற ஒரு ஹதீஸ் நேர்முரணாக வருகிறது என்றால் அதை மறுப்பது வழிகேடா?

இரண்டு ஹதீஸ்களுக்கிடையில் இது போன்ற முரண்பாடு வரும்போது ஷாத் என்று கூறி மறுப்பவர்கள், குர்ஆனுக்கு எதிராக ஒரு ஹதீஸ் வரும்போது, அதை மறுப்பதற்கு தயங்குவதேன்?

அறிவிப்பாளர் தொடர் சரியான எந்தச் செய்தியும் குர்ஆனுக்கு மாற்றமாக வராது. ஆனால், ஹதீஸிற்கு மாற்றமாக அறிவிப்பாளர் சரியான செய்திகள் வரும், என்றால் இது குர்ஆனை விட ஹதீஸை முன்னிறுத்தும் போக்கு இல்லையா?

முத்ரஜ்

ஹதீஸ்கலையில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.

அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர்.

இது போன்ற இடங்களில் இந்த வார்த்தை, யாரோ ஒரு அறிவிப்பாளரால் அறிந்தோ, அறியாமலோ நுழைக்கப்பட்டது என்று கண்டுப்பிடிப்பதற்குப் பல வழிமுறைகளை ஹதீஸ்கலை மேதைகளான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதில் ஒரு முறைதான் “நபி(ஸல்) அவர்கள் இந்த வாசகத்தைக் கூறுவது அசாத்தியமானது என்று முடிவெடுப்பது”.

(முத்ரஜை அறியும் வழிமுறைகளில் ஒன்று) நபியவர்களுடன் அதை இணைப்பது அசாத்தியமாவதாகும்.

(நுகத் அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ் பாகம் 2 / பக்கம் 812)

அதாவது, நபி (ஸல்) ஒருபோதும் இதுபோன்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று உளப்பூர்வமாக முடிவெடுப்பதாகும்.

முத்ரஜிற்கு உதாரணம்

“அடிமைக்கு இரண்டு கூலிகள் இருக்கிறது. என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஹதீஸ் துறை இமாம்கள் எடுத்து சொல்லி முத்ரஜிற்கு உதரணமாக குறிப்பிட்டு விட்டு “என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்ற கூற்று அபூஹுரைராவுடைய கூற்றாகும்.

நபியவர்கள் இதைக் கூறுவதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், நபியவர்கள் அடிமைத்தனத்தை ஆசைப்படவும் மாட்டாகள். மேலும் நபியவர்கள் தன்னுடைய தாய்க்குப் பணிவிடை செய்வதற்கு நபியவர்களின் தாயார் உயிரோடிருக்கவுமில்லை என்று கூறி மேற்கண்ட வாசகத்தை ஹதீஸ்கலை அறிஞர்கள் “முத்ரஜ்” என்று குறிப்பிடுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 132)

இதே வழிமுறையைத் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்யும் போது அதனுடைய முரண்பாட்டை விளக்கிவிட்டு, ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் வஹீ செய்திக்கு முரணாகப் பேசவே மாட்டார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

இப்படிக் கூறுவதை ஹதீஸ் மறுப்பு கொள்கை என்று கூறினால், மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஹதீஸ்கலை விதியை, ஹதீஸ்கலையை தொகுத்த ஏராளமான இமாம்கள் கூறுகிறார்களே இவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதிக்கிறார்கள் என்று நம்மை எதிர்ப்பவர்கள் கூறத்தயாரா?

இங்கே, ஒரு விஷயத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

குர்ஆனில் இது போன்ற இடைச்செருகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையினால்தான் குர்ஆனுடைய பாதுகாப்பிற்கும் ஹதீஸ்களுடைய பாதுகாப்பிற்கு மத்தியில் வித்தியாசம் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். ஹதீஸ்களை மறுப்பதற்கல்ல.

மக்லூப்

நம்பகமான அறிவிப்பாளர்கள்கூட சில இடங்களில் மாற்றமாக அறிவிப்பார்கள் என்பதை நிரூபிக்கும் மற்றுமொறு ஹதீஸ்கலை விதிதான் “மக்லூப்” என்பதாகும்.

அதாவது, ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவருடைய பெயரை மாற்றி அறிவிப்பதோ அல்லது அதனுடைய மத்தனின் (கருத்தின்) வார்த்தைகளை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ அறிவித்துவிடுவது.

மக்லூபிற்கு உதாரணம்

“தன்னுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு தனது நிழலைத் தருவான். அதில் ஒருவர், “தனது இடது கை செலவு செய்ததை வலது கை அறியாத அளவுக்கு மறைத்து தர்மம் செய்தவர்” என்று நபியவர்கள் கூறியதாக முஸ்லிமில் (1712) வரக்கூடிய செய்தியில் சில அறிவிப்பாளர்கள் வலது கை என்று வரக்கூடிய இடத்தில் இடது கை என்று மேற்கூறப்பட்டவாறு மாற்றமாக அறிவிக்கிறார்கள் என்று ஹதீஸ்துறை அறிஞர்கள் “இடது கை செய்கின்ற தர்மம்” என்ற செய்தியை “மக்லுப்” என்று மறுக்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 135)

இந்த இடத்தில் தவறு செய்திருப்பவர் நம்பகமான அறிவிப்பாளர்தான். அவர் பல நம்பகமானவர்கள் “வலது கரம் செய்யும் தர்மம்” என்று அறிவித்திருக்க அதற்கு மாற்றமாக இவர் மாத்திரம் “இடது கை” என்று அறிவிப்பதினால், அவர் தவறாக அறிவித்துவிட்டார் என்று ஹதீஸ் துறையில் அனைத்து இமாம்களும் முடிவெடுத்து விட்டனர்.

அப்படியென்றால், திரும்பவும் நாம் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை இங்கே கேட்பது பொருத்தமாக இருக்கும்.

நம்பகமான மனிதர்களுக்கு மாற்றமாக இங்கு ஒருவர் அறிவித்திருப்பதினால் இது மறுக்கப்படுகிறது என்றால் அனைத்து இமாம்களும் ஏன் நம்மை எதிர்ப்பவர்களும் இந்த விதியை ஏற்றுக் கொள்வதின் மூலம் ஹதீஸ் மறுப்பு கொள்கையை தங்களுக்குத் தாங்களே கூறிக் கொள்கிறார்கள். அல்லது நம்பகமான அறிவிப்பாளர் தவறுவிட்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டு குர்ஆனுக்கு முரணாகவும் இது போன்று அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தங்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.

முஸஹ்ஹஃப்

நம்பகமான அறிவிப்பாளர், தான் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் வார்த்தையையோ அல்லது கருத்தையோ அவர் அறிவிக்காத விதத்தில் மாற்றி அறிவிப்பதை ஹதீஸ் கலையில் “முஸஹ்ஹஃப்” என்று சொல்வார்கள்.

முஸஹ்ஹஃபிற்கு உதாரணம்

“நாங்கள் அனஸா எனும் கோத்திரத்தைச் சார்ந்த அந்தஸ்து மிக்க கூட்டத்தினர். நபியவர்கள் எங்களை நோக்கி தொழுதார்கள் என்று அபூ மூஸா அவர்கள் கூறுவதின் நோக்கம், “நபியவர்கள் அனஸாவை நோக்கி தொழுதார்கள்” எனும் அஹ்மதில் (18783) இடம்பெற்றிருக்கும் ஹதீஸாகும். நபியவர்கள் அபூ மூஸாவுடைய கோத்திரத்தை நோக்கி தொழுதார்கள் என்று அவர்கள் தவறாக விளங்கி கொண்டார்கள்.

இங்கே அனஸா என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுப்படுவது தொழக்கூடியவனுக்கு முன்னால் நட்டப்படும் ஈட்டியாகும் என்று கூறி “எங்களை நோக்கி தொழுதார்கள்” என்ற அறிவிப்பை “முஸஹ்ஹஃப்” என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் முடிவுசெய்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 146)

இது போன்று தவறாக அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர் பல தடவை தவறாக அறிவிக்கும் போதுதான் அவர் பலவீனமானவராக கருதப்படுவார்.

ஓரிரு முறை இவ்வாறு அறிவிப்பதால் அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற தரத்தை அடையமாட்டார் என்பதும், ஹதீஸ்கலை இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

அவர், தொடர்ந்து தவறாக அறிவிப்பதை வேறு சில ஹதீஸ்களை ஆய்வு செய்வதின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஹதீஸை ஆய்வு செய்து மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாக அவர் அறிவித்திருக்கிறார் என்று தெரியும்போது ஒரு அறிவிப்பாளரை பலவீனமாக்க முடியும் என்றால் திருமறை குர்ஆனின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதற்கு முரணாக வருகின்ற செய்திகளை மறுப்பதில் என்ன தவறிருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முழ்தரிப்

இறுதியாக ஹதீஸ்கலையில் “முழ்தரிப்” என்று ஒரு வகை உண்டு.

முழ்தரிப் என்றால், ஒரு செய்தி முரண்பாடாக பல வழிகளில் அறிவிக்கப்படும். ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் ஷாத் என்ற வகையில் கூறியது போன்று எந்த காரணமும் கூறி அதில் ஒரு அறிவிப்பை மற்ற அறிவிப்புகளை விட உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதவாறு முரண்படும். அதாவது, அந்த அறிவிப்புகள் பலத்திலும் சமமானதாக இருக்கும்.

அல்லது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஒரே செய்தியை முரண்பட்ட பல வகைகளில் அறிவிப்பார்.

உதாரணமாக, ஓருவர் ஒருமுறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றொரு முறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்க்கவில்லை என்றும் மாற்றி மாற்றி அறிவிப்பதாகும்.

முழ்தரிபுக்கு உதாரணம்

“ஸகாத்தைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. செல்வத்தில் ஸகாத் அல்லாத ஏனைய கடமைகளும் இருக்கிறது என்று நபியவர்கள் கூறியதாக ஃபாத்திமா பினத் கைஸ் (ரலி) அவர்களுடைய செய்தி திர்மிதியில் (596) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், இமாம் இப்னு மாஜாவில் (1779)  “செல்வத்தில் ஸகாத்தைத் தவிர வேறு கடமையில்லை” என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமாம் இராகீ அவர்கள், இந்தச் செய்திகள் இணைத்து விளக்கம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று நேர் முரணான “முழ்திரிப்” என்ற வகையை சார்ந்ததாகும் என்று கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 143)

இதுபோன்று முரண்பட்டு அறிவிக்கப்படும் அந்த அறிவிப்புகளில் அறிவிப்பாளர் வரிசை அனைத்தும் சரியானதாக இருக்கும்.

ஆனால், அதில் கூறப்படும் செய்தி முரண்பட்ட பல கோணங்களில் வருவதினால் அது பலஹீனமானது என்று முடிவு செய்யமுடியும் என்பது ஹதீஸ்கலை விதி என்றால், இந்த விதிக்கும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கவேண்டும் என்ற விதிக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்!

இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்கள் நம்பகமானவர் வழியாக வந்திருந்தாலும், அதில் ஒன்று மற்றொன்றுடன் மோதும் போது, அதில் ஒன்று மற்றொன்றை விட இந்த விதத்தில் சிறந்தது என்று காரணம் சொல்ல முடியாமல் போகும் நேரத்தில் அந்த இரண்டு செய்தியுமே மறுக்கப்படும் என்பது ஹதீஸ்கலை விதி.

அப்படி மறுக்கப்படும் போது இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் இதுவரை நம்பகமானவராகக் கருதப்பட்டவர்தான். ஆனால், அவர் அறிவிக்கின்ற  செய்திகளில் முரண்பாடு தெளிவாகிறது என்பதினால் அவருடைய அறிவிப்புகள் பலவீனமாக்கப்படுகிறது என்றால், குர்ஆனோடு இது போன்ற முரண்பாடுகள் ஒரு போதும் நிகழாது என்று சொல்வதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது?

மேலே நாம் எடுத்து காட்டிய உதாரணங்கள் அனைத்தும் ஹதீஸ்கலை இமாம்களால் எடுத்துக்காட்டப்படும் உதாரணங்களாகும். விளக்கத்திற்காக வேண்டி இங்கே அதை குறிப்பிட்டுள்ளோம்.

திருமறைக்குர்ஆனுடன் அறிவிப்பாளர் சரியான சில ஹதீஸ்கள் முரண்படும் என்ற கருத்தை ஹதீஸ் கலையில் ஆழ்ந்த ஞானமுள்ள பல இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதற்கு முன்னால் பல இடங்களில் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆகையால் அதை இங்கே கூறுவதைவிட்டும் சுருக்கி விட்டோம். அது போன்ற இமாம்களுடைய கருத்துக்களைப் பார்க்க விரும்பக்கூடியவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமான நமது ஆக்கங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எனவே, நம்பகமான அறிவிப்பாளர்கள் கூடத் தவறாக அறிவித்து விடுவார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஹதீஸை மாத்திரம் இங்கே உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள், மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் அணிந்த நிலையில் மணம் முடித்து கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3517)

ஆனால், மைமூனா (ரலி) அவர்களே அறிவிக்கக்கூடிய பின்வரும் செய்தியில் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள், என்னை இஹ்ராம் அணியாத நிலையில்தான் திருமணம் முடித்துக் கொண்டார்கள் என மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3519)

இந்த இரண்டு செய்தியுமே “ஸஹீஹ் முஸ்லிமில்” 3517, 3519 ஆகிய எண்களில் அறிவிப்பாளர் வரிசை சரியான செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளில், மைமூனா (ரலி) அவர்கள் தன்னைப் பற்றி அறிவிப்பதுதான் சரியாக இருக்க முடியும் என்பதை, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் திருமணம் முடிக்கக்கூடாது என்று தடை செய்த முஸ்லிமில் 3516வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.

இறுதியாக, ஹதீஸ்கலையில் ஒரு ஹதீஸை ஸஹீஹானது என்று அந்த துறையின் இமாம்கள் உறுதிசெய்துவிட்டால் எந்தச் சந்தேகமும் இல்லாமல் அது ஸஹீஹானது தான் என்று கூறமுடியாது. இதை நாம் கூறவில்லை. ஹதீஸ் கலையின் அடிப்படையே இதுதான்.

ஒரு ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்வதற்கு 5 நிபந்தனைகள் அவசியமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

  1. ஆரம்ப அறிவிப்பாளரிடமிருந்து கடைசி அறிவிப்பாளர் வரை ஒரு தொடரில் எந்த ஒரு அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர வேண்டும்.
  2. ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருக்க வேண்டும்.
  3. மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.
  4. தன்னை விட மிக நம்பமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக செய்தியை அறிவிக்கக்கூடாது.
  5. ஹதீஸைப் பாதிக்கின்ற குறை இடம்பெற்றிருக்கக்கூடாது.

இந்த ஐந்த நிபந்தனைகள் இடம்பெற்றுவிட்டால் அந்த ஹதீஸ் சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு ஹதீஸ் சரியானது என்று சொன்னால், மேற்கண்ட ஐந்து நிபந்தனைகள் அந்த ஹதீஸில் உறுதியாகின்றது என்று தான் அர்த்தமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்றாகி விடாது.

ஏனென்றால் மறதி, தவறு போன்றவை ஒரு நம்பகமானவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஸஹீஹாக வரக்கூடிய ஒரு செய்தியில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகத் தெளிவாகும் போது அதை நிறுத்தி வைத்து விட்டு திருமறைக் குர்ஆனை முன்னிறுத்துவது தான் அறிவவுடையோரின் தன்மையாக இருக்க முடியும்.

ஆகையால், நாம், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஒரு செய்தியை மறுப்பது குர்ஆனையும் ஹதீஸ்களையும் பாதுகாக்கும் நோக்கில் தானே தவிர அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட விஷயங்களை வைத்து அறிவுடையோர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?             தொடர்: 19

ஸைபுத்தீன் ரஷாதி சரியான ராபிளியே!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

ராபிளிய்யாக்கள் பற்றி ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிட்ட செய்தியைக் கடந்த இதழில் கண்டோம். அவர்கள் மேலும் கூறுவதாவது:

எங்களுடைய மார்க்கம் தகிய்யா ஆகும். அதாவது தங்களது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது, உண்மைக் கொள்கையை மறைத்துவிடுவது. அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது உண்மையை வெளியிடுவதற்குப் பெயர் தான் தகிய்யா. இவ்வாறு பொய் சொல்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கை, நாசமான கொள்கையாகும். இந்த நயவஞ்சகத்தைக் கொள்கையாகக் கொண்ட இவர்கள் தங்களை முஃமின்கள், இறை நம்பிக்கையாளர்கள் என்று பிதற்றிக் கொள்கிறார்கள். முந்திச் சென்ற நல்லவர்களைத் தடம் மாறியவர்கள், நயவஞ்சகர்கள் என்று ராபிளிய்யாக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வாறு இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள்.

மதரஸாக்களில் ஷியாக்கள்

இன்று சுன்னத் வல்ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் பக்கா ஷியாக்கள் என்பதை ஏகத்துவத்தின் பக்கங்களில் பக்காவாக, பல தடவை பதிய வைத்திருக்கின்றோம். இப்போது அதை இந்தத் தலைப்பின் கீழ் சற்று கண்டு வருவோம்.

தமிழகம் முழுக்க அரபிக் கல்லூரிகள் என்ற பெயரில் இயங்குகின்ற மதரஸாக்கள், நபி (ஸல்) அவர்கள் தொடர்பான ஹதீஸ்களை பலம், பலவீனம் என்று பார்க்காமல் போதிக்கின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி அவர்கள் எழுதிய அற்புதமான, ஹதீஸ் கலையின் அறிவிப்பாளர்களையும் ஹதீஸ்களையும் தரம் பிரித்துப் பார்க்கின்ற நுக்பத்துல் ஃபிக்ர் என்ற அடிப்படை விதிகளை எடுத்துச் சொல்கின்ற நூலையும் ஒருசில மதரஸாக்களில் பாடமாக வைத்திருக்கின்றனர்.

பாடத்தில் வைத்துப் பயன் என்ன? இதில் பொதி சுமக்கும் கழுதையாகத் தான் இவர்கள் நடத்தை உள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்தினர், இந்த ஹதீஸ் பலவீனம் என்ற சொன்னால், “பலவீனமாக இருந்தால் என்ன? பூஸ்ட், போர்ன்விட்டா கொடுத்தால் சரியாகி விடுமா?’ என்று கிண்டல் அடிக்கின்றனர்.

அரபி மதரஸாக்களில் எப்படிக் கற்றுக் கொடுக்கின்றார்களோ அதை அப்படியே மக்களிடம் ஜும்ஆ மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கொஞ்சம் கூட ஆய்வுக்கண் கொண்டு பார்க்காமல் அள்ளிக் கொட்டுகிறார்கள்.

இவர்களின் இந்த அநியாயத்தை தவ்ஹீத் ஜமாஅத் பலமுறை சுட்டிக் காட்டிய போது திருத்திக் கொள்ள மறுக்கிறார்கள்.

இதற்கு ஷாஃபி மத்ஹபு நூற்களில் வெள்ளிக்கிழமை தோறும் மஃஷர் என்ற பெயரில் ஓதப்படும் செய்தியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ரவல் புகாரி வல் முஸ்லிம், அன் அபீஹுரைரத்த, அன்னஹு கால, கால ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகராஇ, வஈதுல் மஸாகீன்

ஜும்ஆ தொழுகையின் போது முஅத்தின் ஒரு மொட்டை வாளை எடுத்துப் பிடித்துக் கொண்டு இப்படியொரு ஹதீஸை வாசிப்பார்.

இதன் பொருள் என்ன?

ஜும்ஆ வறியவர்களின் ஹஜ்ஜாகும். ஏழைகளின் பெருநாளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். இது புகாரி முஸ்லிம் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.

ஜும்ஆ தினத்தில் இப்படி ஒரு பகிரங்க, பச்சைப் பொய்யை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள். பல தடவை இதை நாம் சுட்டிக் காட்டிய பிறகும் கண்டு கொள்ளாமல் இன்றளவும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் யார்? இவர்கள் பகிரங்க ஷியாக்கள், ராஃபிளிய்யாக்கள்.

பயான்களின் பொய்கள் பத்திரிகைகளில் பொய்கள்

சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் பேசுகின்ற பயான்களில் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்களை அள்ளிவிடுகின்றார்கள். மாதப் பத்திரிகைகளிலும் பொய்களை அள்ளி விடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று வாய்க்கு வந்ததை ஹதீஸ் என்று பயான் செய்வது போன்று, கைக்கு வந்ததை ஹதீஸ் என்று பத்திரிகைகளில் எழுதித் தள்ளுகின்றார்கள்.

நபி மீது இவர்கள் கூறுகின்ற பொய்களைத் தாங்க முடியாமல் ஏகத்துவம் இதழில், “நபி மீது பொய்! நரகமே பரிசு!’ என்ற தலைப்பில் அடையாளம் காட்டினோம். அப்படியிருந்தும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.

கொஞ்சம் கூட இறையச்சம் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்லத் துணிகின்றார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

அல்குர்ஆன் 35:28

அல்லாஹ்வின் இந்தக் கூற்றுக்கு இவர்கள் நேர்மாறாக நடக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி)

நூல்: புகாரி 1291

தன் மீது சொல்கின்ற பொய்யானது மற்றவர்கள் மீது சொல்லும் பொய்யைப் போன்று அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போன்று சொல்கின்றார்கள். ஆனால் இதை சுன்னத் ஜமாஅத்தினர் பொருட்படுத்துவது இல்லை.

அவ்வாறு பொருட்படுத்தாமல் இருப்பதற்கு இவர்கள் ஆன்மீக ஆசான் கஸ்ஸாலி தான் காரணம். அதனால் எந்தவொரு உறுத்தலும் இல்லாமல் மாநபி மீது துணிந்து பொய் சொல்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மூல காரணம் இவர்கள் ஷியா, ராஃபிளிய்யா கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் சொல்வது போன்று, ஷியாக்களுக்குத் தான் ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடர் தேவையில்லை. கால ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் என்ற பெயரில் எதையும் அடித்து விடலாம்.

ரஷாதி ஒரு ராஃபிளியே!

தமிழகத்தில் ஷியா, ராஃபிளிய்யா கொள்கையைத் தாங்கிப் பிடிப்பவர்கள் பரேலவிகள் தான். இவர்கள் ஷியாக்களின் மறு ஆக்கமும் மறுபதிப்பும் ஆவார்கள். இவர்களின் தலைமைப் பீடராக அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் வலம் வருகின்றார். இவரைப் பற்றி மத்ஹபு சிந்தனையில் உள்ள, அதே சமயம் தர்ஹா வழிபாட்டை எதிர்க்கின்ற தமிழக ஆலிம்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதனால் அவர் பேசுகின்ற மேடையில் இவர்கள் பேசுவதில்லை.

ஆனால் தமிழக ஆலிம்களை பசுத்தோல் போர்த்திய புலியாக ஏமாற்றி வருபவர் ஸைபுத்தீன் ரஷாதி! பெயரில் தான் ரஷாதி; ஆனால் கொள்கையில் இவர் ராஃபிளி ஆவார். இவர் ராஃபிளி, கப்ரு வணங்கி என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து பொய் சொல்கின்ற பொய்யர் என்ற தகுதியே போதிய ஆதாரமாகும்.

சிலர் சாதாரணமாகப் பொய் பேசுவார்கள். ஆனால் தெரிந்து கொண்டே நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பொய் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் ஸைபுத்தீன் ரஷாதியோ சர்வ சாதாரணமாகப் பொய் பேசுவார். அந்தப் பொய்யை மற்றவர்கள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் பேசினால் இவர் நடுவீதியில், ஊர் ஊராகச் சென்று பொய் பேசுவார். இதை ஒரு மனிதர் சக மனிதர் மீது சொல்கின்ற பொய், பாவம் என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மீது பகிரங்கமாகப் பொய் சொல்கின்றார் என்றால் இவர் எவ்வளவு பெரிய பொய்யர், அயோக்கியர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மீது இப்படித் துணிந்து பொய் சொல்கின்றார் என்றால் இவர் ராஃபிளிய்யாவைத் தவிர வேறில்லை என்பது எள்முனையளவு ஐயத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது.

ஸைபுத்தீன் ரஷாதி, நபி மீது கூறிய பொய்களுக்கு சில எடுத்துக்காட்டுக்களை இங்கு காண்போம்.

  1. “தகல்லகூ பி அக்லாகில்லாஹ் – அல்லாஹ்வின் பண்புகளை கடைப்பிடியுங்கள்”
  2. அத்தாஜிருஸ் ஸதூகு ஹபீபுல்லாஹ் – நேர்மையான வியாபாரி அல்லாஹ்வின் நேசன் ஆவான்.
  3. “மன் ஸகத அனில் ஹக் ஃபஹூவ ஷைத்தானுன் அக்ரஸ் – (தீமை நடைபெறும் போது) யார் சத்தியத்தை சொல்லாது மௌனம் காக்கிறானோ அவன் ஊமை ஷைத்தான் ஆவான்”
  4. “மூன்று முறைக்கு மேல் அன்பளிப்புகளை மறுக்கக் கூடாது” என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

இந்த ஹதீஸ்கள் (?) ஸைபுத்தீன் ரஷாதி பேசிய உரைகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

ஸைபுத்தீன் வகையறாக்களுக்கு பெரிய அளவில் வீடியோ பதிவுகள் இல்லை. இவரது உரைகளில் நமக்குக் கிடைத்தவை ஐந்து சி.டி.க்கள் தான். இந்த ஐந்தில் கிடைத்தவை தான் மேற்கண்ட பொய்யான ஹதீஸ்கள்.

இவருடன் திருச்சியில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்த ஹதீஸ்களைப் போட்டுக் காட்டி இதற்கு ஆதாரம் எங்கே? என்று திரும்பத் திரும்ப நமது தரப்பில் கேட்கப்பட்டது.

விவாதம் முடியும் வரை இதுபற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. வசமாக மாட்டிய இவர் இறுதி வரை வாய் பூட்டியவராகவே இருந்தார்.

விவாதத்தின் போது இந்த ஹதீசுக்கு எந்த அறிவிப்பாளர் தொடரையும் காட்டாமல் நபி மீது அப்பட்டமாகப் பொய் சொன்ன ஒரு பொய்யர் என்பதை நிரூபித்தார்.

இதன் பின்னர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பிரியாணி பொட்டலம் கொடுத்து ஒரு கூட்டம் போட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸைபுத்தீன் ராஃபிளி, தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சேற்றை வாரி இறைத்தார்.

இதற்குப் பதிலடியாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் இவரை விட வயதிலும் அனுபவத்திலும் மிக மிக இளையவரான மவ்லவி அப்துல் கரீம் அவர்கள், ஸைபுத்தீன் பேசிய வீடியோ கிளிப்பிங்குகளைப் போட்டுக் காட்டி, மேற்கண்ட ஹதீஸ்களுக்கு ஆதாரம் கேட்டார். இதற்கும் ஸைபுத்தீன் ரஷாதி தரப்பில் எந்தப் பதிலும் இல்லை.

பிறகு மூன்று மாதங்கள் கழித்து அதே போன்று ஒரு பிரியாணி மாநாட்டை ஸைபுத்தீன் வகையறாக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் கலந்து கொண்டு பேசிய ஸைபுத்தீன், “உண்மையான, நம்பிக்கைக்குரிய வியாபாரி நபிமார்கள், சித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுடன்  இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைச் சொல்லி, “இந்த ஹதீஸின் கருத்து அடிப்படையில் தான் அவ்வாறு பேசினேன்’ என்று மழுப்பலான பதிலைக் கூறினார்.

இதற்கு நமது ஜமாஅத் சார்பில் போடப்பட்ட மறுப்புக் கூட்டத்தில் பேசிய அப்துல் கரீம் அவர்கள், ஸைபுத்தீன் பேசிய பொய்யான ஹதீஸ் கிளிப்பிங்கைப் போட்டுக் காட்டி, இதில் ஹபீபுல்லாஹ் – அல்லாஹ்வின் நேசர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நீங்கள் குறிப்பிடுவது எந்த ஹதீஸின் கருத்து? இப்படி நபி (ஸல்) அவர்கள் எங்காவது கூறியிருக்கிறார்களா? என்று கேட்டார். இதே கேள்வியைத் தான் திருச்சி விவாதத்தின் போதே பதிலளிக்காத இந்தப் பொய்யர் இனிமேல் எப்படிப் பதிலளிப்பார்?

இதில் வேடிக்கை என்னவென்றால்,  குர்ஆன் வசனங்களை வாசிக்கும் போது தவறாக வாசித்திருக்கின்றார் என்று கூறி ஒரு வீடியோ கிளிப்பிங்கைப் போட்டுக் காட்டி, நீங்கள் சொன்ன செய்திக்கு ஆதாரம் இருக்கின்றதா? என்று ஸைபுத்தீன் ரஷாதி கேட்டிருக்கின்றார்.

மனிதன் என்ற அடிப்படையில், பேசும் போது சில தவறுகள் ஏற்படலாம். இதை யாரும் குறை சொல்ல முடியாது. தவறு என்றால் தவறு என்று ஒத்துக் கொண்டு போய்விடுவார்கள். இவரைப் போன்று வறட்டுப் பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்.

ஆனால் இவரோ திட்டமிட்டு நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்லிவிட்டு, அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். வாயில் வந்ததையெல்லாம் ஹதீஸ் என்று சொல்லி அடித்து விடுகின்றார். நபியின் பெயரால் பொய் மூட்டைகளைக் கொண்டிருக்கும் மவ்லிதுகளை ஆதரிக்கின்றார். இஹ்யாவுக்கு வக்காலத்து வாங்குகின்றார். பலவீனமான ஹதீஸ்களைச் சுட்டிக் காட்டினால், பூஸ்ட் கொடுத்து பலமாக்கி விடுவோம் என்று மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக ஆக்குகின்றார்.

இதற்கெல்லாம் காரணம் நரகத்தைப் பற்றி எள்ளளவும் பயம் இல்லாதது தான். இது உண்மையில் பக்கா ஷியாக்களின், ராஃபிளிய்யாக்களின் சிந்தனையைத் தவிர வேறில்லை. அதனால் தான் இவரை ராஃபிளிய்யா என்று குறிப்பிடுகின்றோம்.

—————————————————————————————————————————————————————-

காற்று இறைவனின் சான்றே!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

சூரியக் கதிர்கள் சுடும் வெப்பத்தைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் கோடை காலம் இது. அக்னிக் கதிர்களின் ஆவேசத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாள வேண்டிய காலநிலை. அடிக்கடி நீர் ஆகாரங்களைப் பருகுவது, நிழல்களில் ஒதுங்கி ஓய்வெடுப்பது போன்றவை கட்டாயமாகிப் போன இக்கட்டான நிலை.

சூழ்நிலை இவ்வாறிருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று, அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் கொடுமை வேறு. ஓடாத மின்விசிறிகளுக்கு கீழே வியர்வை வழிய மனமும் தேகமும் வெந்து, காத்துக் கொண்டிருக்கும் மக்களின் பரிதாப நிலையை என்னவென்று சொல்வது?

இதனைத் தாக்குப்பிடிக்க இயலாத நபர்கள், தற்காலிக உதவியைத் தேடியவாறு ஓலை விசிறி, காகித விசிறி என்று பழைய சாதனங்கள் பக்கம் செல்லவும் தயாராகி விடுகிறார்கள். நெருக்கடியான அடுக்குமாடி வீடுகள் பெருகிவிட்ட காரணத்தால், காற்றோட்டத்திற்காக இரவு நேரத்தில் வீட்டு முற்றங்களிலும், மாடிகளிலும் படுத்துறங்கும் மக்கள் கூட்டம்.

இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்தும் உண்மைதான் என்ன? கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கு இருக்கும் வாய்ப்புகளில் காற்றும் முக்கியமான ஒன்று என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் பட்டியலில் இருக்கும் காற்றின் அருமையைப் புரிந்து கொள்ள வேண்டிய பொன்னான தருணம் இது. இப்போதாவது, இத்தகைய இன்றியமையாத காற்று குறித்து குர்ஆன் மற்றும் நபிவழிகளின் துணையோடு சில செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.

காற்றின் முக்கியத்துவம்

திருமறைக் குர்ஆனைப் படித்துப் பார்க்கும் போது, பல்வேறு இடங்களில் ஒரே விதமான வசனங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். அந்த வகையில், உலகிலே இருக்கும் முக்கியமான முக்கியத்துவமான பொருட்கள், காரியங்கள் மீது அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறும் வசனங்கள் ஆங்காங்கே அதிகம் காணப்படுகின்றன. அவற்றுள் ஓர் அங்கமாக, காற்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேகமாக புழுதியைப் பரத்துவதன் மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும், எளிதாகச் செல்பவை மீதும், கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக! நீங்கள் எச்சரிக்கப்படுவது உண்மை. (திருக்குர்ஆன் 51:1-5)

தொடர்ந்து அனுப்பப்படுபவை மீதும், கடுமையாக வீசும் புயல் மீதும் சத்தியமாக! பரப்பிவிடுபவை மீதும், ஒரேயடியாகப் பிரித்து விடுபவை மீதும் சத்தியமாக! மன்னிப்பாகவோ, எச்சரிக்கையாகவோ படிப்பினையைப் போடுபவற்றின் (காற்றின்) மீது சத்தியமாக! (திருக்குர் ஆன் 77:1-6)

காற்றே இல்லை; அப்படியோ காற்று இருந்தாலும் அது சுவாசிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பதாலேயே பிற கோள்களில் ஜீவராசிகள் வாழ்வதற்குக் கடுகளவும் வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். நாம் உயிர் வாழ்வதற்குக் காற்று கட்டாயம் இருக்க வேண்டும். அத்துடன் அது தேவையான அளவில் தகுதியான நிலையில் இருப்பதும் அவசியம். இத்தகைய தன்மை பூமியில் மட்டுமே நிலவுகிறது.

மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர். பெரிய அகன்ற தாவரங்கள் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் மூலம் தான் உயிர் வாழ்கின்றன. காற்றில் ஏற்படும் அழுத்த மாறுபாடு மழைப் பொழிவுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இப்படி, காற்றின் சிறப்புகளை, நன்மைகளை, பயன்களைச் சொல்வதாக இருந்தால் ஏடுகள் போதாது என்பதே நிதர்சனம்.

இறைவனை அறிவதற்குரிய சான்று

ஆகாய வெளியில் அங்கும் இங்கும் அலைபாயும் காற்று அற்பமானதும் அல்ல; அலட்சியம் செய்யத்தக்கதும் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைத்து, கட்டுக்கோப்பாக அடக்கி ஆளும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளத் துணைபுரியும் அற்புதமான சான்று. அவன் ஞானமிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன் என்பதை, திசை மாறிமாறி வீசும் காற்றின் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இந்தப் பேருண்மையை எடுத்துரைக்கும் திருமறை வசனங்களைப் பாருங்கள்.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:164)

அவன் தனது அருளை உங்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், கப்பல்கள் அவன் கட்டளைப்படி செல்வதற்காகவும், அவனது அருளை நீங்கள் தேடுவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் நற்செய்தி கூறும் காற்றுகளை அனுப்பி வைப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (திருக்குர்ஆன் 30:46)

இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானிலிருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 45:5)

மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் நினைத்தால் காற்றை நிறுத்தி விடுகிறான். உடனே அது அதன் (கடலின்) மேற்பரப்பில் நின்று விடுகின்றது. சகிப்புத் தன்மையும் நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 42:32,33)

இறைவனின் கட்டுப்பாட்டில் காற்று

இயற்கையின் கட்டுப்பாடு என்பது இறைவனின் கைவசத்தில் இருக்கிறது. அதிலே காற்றுக்கு மட்டும் விதிவிதிலக்கு இருக்கிறதா என்ன? அவ்வாறில்லை. அவனே தான் விரும்பும் வகையில் காற்றை இயக்குகிறான். அதன் மூலம் பல விதமான மாற்றங்களை, விளைவுகளை ஏற்படுத்துகிறான். கடவுளே இல்லை என்று வாதிடுபவர்களும், காண்பதை எல்லாம் கடவுள் என்று சொல்பவர்களும், அழித்துவிட இயலாத காற்றைக் குறித்துக் கொஞ்சமாவது கண்டிப்பாகச் சிந்திக்க வேண்டும். பருவ மாற்றத்திற்குத் தோதுவாக வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் காற்றின் மாறுதலுக்குப் பின்னணியில் இருக்கும் படைத்தவனின் நுட்பத்தைப் புரிந்து அவனுக்கு அடிபணிந்து வாழவேண்டும்.

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தோரையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.

(திருக்குர்ஆன் 7:57)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் உங்களுக்கு வழிகாட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.

(திருக்குர்ஆன் 27:63)

காற்றைக் இயக்கும் அற்புதம்

ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனது ஆணைப்படி அழகிய முறையில் வாழ வேண்டும் என்பதைப் போதிப்பதற்கு ஏராளமான இறைத்தூதர்கள் வந்துச் சென்றுள்ளார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு அல்லாஹ் அவர்களுக்குச் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தான். அத்தகைய திருத்தூதர்களில் ஒருவர்தாம் சுலைமான் (அலை) அவர்கள். இந்த நபிக்குக் காற்றை வசப்படுத்தும் அற்புதம் கொடுக்கப்பட்டு இருந்தது.

மனிதர்களால் ஒருபோதும் செய்ய முடியாத காரியத்தை சுலைமான் (அலை) அவர்கள் செய்ததன் மூலம், அவர் சத்தியத்தின் பக்கம் அழைக்கும் அல்லாஹ்வின் தூதர் என்பதை விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு அன்றைய கால மக்களுக்கு கிடைத்தது. இந்தச் செய்தியை இறைவனே தமது இறுதி வேதமான திருக்குர்ஆனில் குறிப்பிட்டும் இருக்கிறான்.

வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

(திருக்குர்ஆன் 21:81)

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்கு சுவைக்கச் செய்வோம்.

(திருக்குர்ஆன் 34:12)

ஸுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். “என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்எனக் கூறினார். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

(திருக்குர்ஆன் 38:34-36)

காற்றின் அற்புதங்கள் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் மார்க்கம் கூறும் செய்திகளை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.