ஏகத்துவம் – ஜூன் 2017

இறை மார்க்கம்  ஓர் எளிய மார்க்கமே!

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.

திருக்குர்ஆன் 2:185

இந்த வசனம் முதலாவதாக  புனித மாதமான ரமலானைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இரண்டாவதாக,  அதில் அருளப்பட்ட புண்ணிய வேதமான குர்ஆனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. மூன்றாவதாக, கடமையாக்கப்பட்ட நோன்பில் அளிக்கப்படுகின்ற சலுகையைப் பற்றிக் கூறுகின்றது. அதன் பின்னர், ‘அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகின்றான்; சிரமமானதை நாடமாட்டான்’ என்று சொல்கின்றது.

குறைந்தது பதினான்கு மணி நேரம், அதிலும் குறிப்பாக ஐரோப்பா போன்ற நாடுகளில் கோடை காலங்களில் பதினெட்டு மணி நேரம் பசி, பட்டினி, தாகத்துடன் கிடக்கின்ற உடலை வாட்டி வருத்துகின்ற ஒரு சிரமமான வணக்கத்தைக் கடமையாக்கி விட்டு, ‘உங்களுக்கு இறைவன் எளிதையே நாடுகின்றான்’ என்று சொல்வது  நம்மை கேலி செய்வது போன்று உள்ளதே  என்ற ஒரு கேள்வி  எழலாம்.

அது நியாயமான கேள்வி தான். அல்லாஹ் அடியார்களிடம் கேலி செய்வதை விட்டும் தூய்மையானவன் என்பதை நமது கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தக் கேள்விக்கு ஒரு சில உதாரணத்துடன் விடை காண்போம்.

ஒருவருக்கு உடலில் இதயத்தில் ஓர் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதை அறுவை சிகிச்சை செய்து தான் நீக்க முடியும் என்றால் அதை அறுவை சிகிச்சை செய்து தான் நீக்கியாக வேண்டும். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யும் சில  நாட்கள் மிகவும் சிரமமானவை. அதிலும் குறிப்பாக, அறுவை சிகிச்சை செய்கின்ற அந்த சில மணி நேரங்கள் இன்னும் சிரமமானவை. ஆனால் அதன் பின்னர் அது காலமெல்லாம் சுகமானதாகவும்  எளிமையானதாகவும் ஆகி விடுகின்றது.

அதுபோல் தான் ஒருவன் நோன்பு நோற்றிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவனது நோன்பின் போது கடும் தாகமான நேரத்தில் அவன் உலூச் செய்கின்றான். அவ்வாறு உலூச் செய்கையில் நாவில் குளிர்ந்த சுவையான தண்ணீர் வாய் கொப்பளிப்பதற்காக வாயில் பாய்கின்றது. வாயில் பாய்கின்ற அந்தத் தண்ணீர் தங்கு தடையின்றி தொண்டைக் குழி வரை பயணிக்கின்றது. தொண்டைக் குழி என்ற பள்ளத்தில் இறங்குவதற்குப் பல மைல் தொலைவோ தூரமோ இல்லை. மயிரிழை தூரம் தான் உள்ளது. ஆனாலும் தாகம் நாக்கைச் சுருட்டினாலும் அது அதில்  இறங்குவதில்லை. போன வேகத்தில் திரும்ப வந்து விடுகின்றது.

காரணம் என்ன?

எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற அவனது  அச்சம் தான்.

இந்த இறையச்சத்தைத் தருவது தான் இந்த நோன்பின் நோக்கமாகும். அப்படிப்பட்ட இறையச்சத்தை உருவாக்குகின்ற  இந்த நோன்பு உண்மையில் ஓர் அறுவை சிகிச்சை போன்றதாகும். அறுவை சிகிச்சை முடிந்த பின் இதயத்தில் உள்ள அடைப்பு சரியாகி மொத்த உடலும் சீராகி விடுகின்றதோ அது போன்று நோன்பு நோற்பவரிடம் ஏற்பட்ட அடைப்புகள் எல்லாம் சரியாகி, நல்ல ரத்தம் பாய ஆரம்பித்து விடுகின்றது. அவனிடத்தில் கெட்ட குணங்கள் மறைந்து நற்குணங்கள் உருவாகத் துவங்கி விடுகின்றன.

இதற்கு இன்னோர் உதாரணத்தையும் கூறலாம். ரமலான் நோன்பு என்பது ஒரு குடிநீர் கிணறு தோண்டுவது போன்றாகும். ஒரு கிணறுக்காக பல இராட்சதக் கருவிகளைப் பயன்படுத்தி பூமியில் பல நூறு அடிகள் தோண்ட வேண்டும். தோண்டும் பணியின் ஊடே பாறை குறுக்கிடும் போது அவற்றை வெடி வைத்தும் தகர்க்க நேரிடும். இப்படிப்பட்ட கடினமான, பூமி அதிரக்கூடிய அளவுக்கு பாரமான பணிக்குப் பிறகு பூமியிலிருந்து ஊற்று நீர் பீறிடுகின்றது. பாறைகளிலிருந்து வெடித்து வருகின்ற, பளிங்கு போன்று  பளிச்சிட்டுப் பாய்கின்ற நீரைப் பார்த்த மாத்திரத்தில் பட்ட கஷ்டமெல்லாம் பறந்து  விடுகின்றது.  சுனைகளிலிருந்து சுதந்திரமாகத் துள்ளிக் குதித்துக் கொப்பளிக்கின்ற சுவை நீர் சுண்டிய முகத்தின் சுருக்கங்களை மகிழ்ச்சியில் விரிவடையச் செய்து விடுகின்றது.

தலைமுறை தலைமுறைக்கும் தாகம் தணிக்கும் தடாகம்  உருவாகி விடுகின்றது.

நோன்பும் இது போன்று தான். நோற்கும் போது சிரமம். நோன்பின் பயன்களைப் பார்க்கும் போது நோன்பின் சிரமங்கள் அத்தனையும் நம்மிடமிருந்து மறைந்து விடுகின்றன. இந்த பலன்களைப் பற்றித் தெரிவதற்கு நாம் ரொம்ப தூரம் செல்ல வேண்டியதில்லை. அந்த அருள் மிகு ரமலானிலேயே கண்கூடாக, கை மேல் பலனாகப் பார்க்கின்றோம்.

  1. கடமையான தொழுகைகளில் பள்ளிவாசல் நிரம்பி வழிதல்.
  2. இரவுத் தொழுகைகளுக்கு மக்கள் வெள்ளம்.
  3. தான தர்மங்கள் பொங்கி வழிதல்.
  4. பிந்திய பத்துகளில் லைலத்துல் கத்ரைத் தேடி இரவுகளை உயிர்ப்பித்தல்.
  5. குர்ஆன் இறங்கிய மாதத்தில் அதிகமதிகம் குர்ஆன் ஓதுதல்.
  6. நகை, நில புலன்கள், விளைச்சல், வணிக லாபம் ஆகியவற்றுக்கு ஜகாத் ரமலானில் தான் வழங்க வேண்டும் என்பதில்லை. இருப்பினும் ரமலானில் கோடிக்கணக்கான ஜகாத் ஏழை எளியவர்களை நோக்கிக் கரை புரளுதல்.

இப்படி நோன்பின் மாண்புகளை நாம் பார்க்கின்றோம். ஒவ்வொரு ரமலான் வந்து சென்றதும் அது கொடுத்த பயிற்சியில் எத்தனையோ சகோதரர்கள் இரவுத் தொழுகையைத் தொடர்வதை நாம் பார்க்கின்றோம். ரமலான் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இதை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாம் ரமலான் ஏற்படுத்திய வெளிப்படையான  மாற்றங்கள்! அவை தான் செயல்பாடுகளில் பளிச்சிடுகின்றன.

அதே சமயம் அது ஏற்படுத்திய உளவியல் ரீதியான மாற்றங்களை நாம் பட்டியல் இட முடியாது.  அவை அபரிமிதமானவை. அவை எந்த அளவுகோலிலும் அளவிட முடியாதவை. அந்த அளவுக்கு ரமலான் மாபெரும் பலன்களை அளிக்கக் கூடிய ஓர் அருட்கொடையாகும். இப்படிப்பட்ட ரமலான் நோன்பு கஷ்டமானது என்றாலும் அது ஏற்படுத்துகின்ற நல்ல விளைவுகளினால் அது ஒரு கஷ்டமில்லை என்றாகி விடுகின்றது. அந்த அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்வி அர்த்தமற்றதாகி விடுகின்றது.

அடுத்து  ‘‘அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகின்றான். சிரமமானதை நாடமாட்டான்” என்று அல்லாஹ் கூறக் கூடிய கருத்தை இப்போது பார்ப்போம். நோன்பின் போது பயணம் மேற்கொண்டாலோ அல்லது நோய் ஏற்பட்டு விட்டாலோ அதற்காக அந்த ரமலானிலேயே உடலை வருத்திக் கொண்டு நோன்பு நோற்க வேண்டிய கட்டாயமில்லை என்று எளிமையை மக்களுக்கு வழங்கியதை இங்கே குறிப்படுகின்றான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். நோன்பில் மட்டுமில்லாமல் ஏனைய வணக்கங்களிலும் இதைத் தான் வழிமுறையாகக் கொண்டிருக்கின்றான்.

தொழுகைக்காக உலூவையும் அது போல் இந்திரியம் வெளிப்பட்டால் குளிப்பையும் கடமையாக்கிய அல்லாஹ், தண்ணீர் இல்லாத கட்டத்தில் மண்ணைத் தொட்டு தயம்மம் செய்ய அனுமதி அளித்திருக்கிறான்.

பயணத்தின் போது நான்கு ரக்கஅத்துகளை இரண்டாகக் குறைத்துக் கொள்ள அனுமதி.

பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் தொழுகை ரத்து.

இதுபோன்ற சில எடுத்துக்காட்டுகள் இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ் எளிமையாக்கியிருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ரமலான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் இமாமாக நின்று தொழுவிப்பதைத் தவிர்த்ததும் தன் சமுதாயத்திற்கு எளிதையே நாடியுள்ளார்கள் என்பதை உணர்த்துகின்றது.

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழவராமல் உட்கார்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். ‘இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 729, 924

ஆனால் அல்லாஹ்வுடைய, அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுடைய அணுகுமுறைக்கு மாற்றமாக ஆலிம்கள் மார்க்கத்தைக் கடினமானதாக ஆக்கி விட்டார்கள்.

  1. தொழுகை எனும் வணக்கத்தில் அன்றாடம் அந்த அந்தந்த வேளைகளில் தொழுவதைத் தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். பயணத்தில் இருந்தால் ஒரு தொழுகையை மறு தொழுகையுடன் சேர்த்துத் தொழுது கொள்ள அனுமதியளித்திருக்கின்றான். ஆனால் அந்தத் தொழுகையை ஒத்திப் போட்டு அல்லது தள்ளி வைத்து களாவாகத் தொழுவதற்கு அனுமதியில்லை, ஆனால் இவர்களோ மார்க்கத்தில் களா என்ற பெயரில் இல்லாததைக் கடமையாக்கி வைத்திருக்கின்றனர்.

ஒருவர் 16 வயதில் பருவம் அடைந்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் 50 வயது வரை தொழாமல் இருந்து பின்னர் குற்ற உணர்வு ஏற்பட்டு அவர் தொழ முன் வருகின்ற போது, நீ கடந்த 34 ஆண்டுகளுக்கான அத்தனை ஐவேளைத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று இவர்கள் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றனர். திருந்தி வந்தவர் அவ்வளவு தான் திரும்ப போய் விடுகின்றார். இவ்வளவு பெரிய கடினத்தையும், கஷ்டத்தையும் மக்கள் மீது இந்த ஆலிம்கள் மார்க்கம் என்ற பெயரில் திணித்து அநியாமும் அக்கிரமும் புரிகின்றனர். இது தொழுகை என்ற வணக்கத்தில் மக்கள் மீது ஏற்படுத்திய  கடினமும் கஷ்டமும் ஆகும்.

ஜகாத் எனும் வணக்கத்தில் ஆண்டு தோறும் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஜகாத்  வணக்கத்திலும் கடினத்தை ஏற்படுத்தினர்.

நோன்பு என்ற வணக்கத்திலும் நோன்பு  நோற்க  முடியாதவர்கள் ஃபித்யா எனும் பரிகாரம் கொடுக்க வேண்டும் கடினத்தை உருவாக்கினர்.

வணக்கங்களில் இப்படி பாரங்களை மக்கள் மீது ஏற்றியவர்கள் வாழ்வியலில் தலாக் என்ற விவாகரத்து விவகாரத்தில் ஒரே ஓர் அமர்வில் முத்தலாக் கூறுவதன் மூலம் பெண்ணின் வாழ்க்கையைப் பறித்து தலாக் சட்டத்தைக் கடுமையாக்கினர்.

சதி என்ற பெயரில் கணவன் இறந்ததும் மனைவியையும் உடன்கட்டை ஏறச் செய்து  மனைவியைப் படுகொலை செய்த சங் பரிவார மகா பாவிகள் எல்லாம் இன்று தலாக் சட்டத்தைக் கொடிய சட்டம் என்று குரல் கொடுக்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த முத்தலாக் முறை கேலிப் பொருளாக, கொத்திக் குதறப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் என்ன? அல்லாஹ் எளிதாக்கிய மார்க்கத்தை இவர்கள் கஷ்டமாக்கியது தான்.

இந்த ஆலிம்கள் ரமலான் மாதத்திலாவது, ரமலான் தொடர்பான வசனத்திலிருந்து பாடம் பெற்று அல்லாஹ் எளிதாக்கிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் தொடர முன் வருவார்களா? இந்த ரமலான் அவர்களுக்குப் பாடம் தரும் என்று எதிர்பார்ப்போமாக!

—————————————————————————————————————————————————————————————

நபிகளார் கூறிய நீர் மேலாண்மை!

அபு ஆதில்

மனித சமுதாயம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுள் தலையாயது தண்ணீர் பற்றாக்குறையாகும்.

வீதியில் எங்கு பார்த்தாலும் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக அலைமோதும் கூட்டத்தை அதிகமாகவே பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் நீரால் நிரம்பியிருந்த ஏரி, குளம், போன்றவை இன்று சிறுவர்களின் விருப்பமான விளையாட்டு மைதானங்களாக மாறிப் போயுள்ளது.

இருக்கின்ற ஏரிகளை எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றி, தண்ணீர் லாரிக்குப் பின்னே மக்கள் அலைந்து திரியும் அவலம் நாள்தோறும் நடந்தேறுகிறது. பல பகுதிகளில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போன்ற போராட்டங்களும் வெடிக்கின்றன.

போதாக்குறைக்கு தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு சரிந்துள்ளது.

மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம், நிலத்தடி நீர்மட்டம் குறித்துக் கடந்த மார்ச் மாதம் ஆய்வு நடத்தியது. இதே அமைப்பு கடந்தாண்டு 2016 மார்ச் மாதம் நடத்திய ஆய்வுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஐந்தாறு மாவட்டங்களின் நிலையை வைத்து  நிலத்தடி நீர் நிலைமை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதை உணரலாம்.

நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு மீட்டர் குறைந்துள்ளது என்ற விவரம்:

மாவட்டம்            2016    2017

திருநெல்வேலி        2.92    9.43

ஈரோடு         7.55    13.19

தர்மபுரி               5.67    11.04

தேனி          8.57    13.31

சேலம்              9.05    14.25

மதுரை               6.20    10.34

கோவை              12.81   17.40

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்தாறு மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைந்துள்ளது என நீர்வள ஆதார ஆய்வு மையம் தரும் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐ.நா.வின் அறிக்கையோ வேறு விதமாகப் பயமுறுத்துகிறது.

2050ஆம் ஆண்டு வாக்கில் 50 கோடி மக்கள் நீராதாரம் இன்றி பாதிக்கப்படுவார்கள் என்று 1995ல் கணித்த ஐ.நா. அடுத்த பத்தாண்டில் தனது கணிப்பை மாற்றிக் கொண்டது. ஆம்! இந்தக் கணிப்பை 2005ல் ஐ.நா. மறு ஆய்வுக்கு உட்படுத்தி 50 கோடி மக்கள் என்ற எண்ணிக்கையை 400 கோடியாக மாற்றியுள்ளது. தற்போதைய ஆண்டில் ஐ.நா.வின் கணக்கில் எவ்வளவு கோடிகள் அதிகரித்துள்ளது என்று தெரியவில்லை.

இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மைய காரணம் எது என்றால் நம் நாட்டில் நீரின் அளவு மட்டும் அல்ல நீர் மேலாண்மையும் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது என்பதே!

நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கும் குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

நீர் மேலாண்மை என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்று.

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உணவு இல்லாமல் கூட பெருமளவு காலத்தைக் கழித்து விடக் கூடும். (உணவு தயாரிக்கவும் தண்ணீர் தேவை) ஆனால் தண்ணீர் இல்லாமல் காலம் தள்ளுவது கற்பனை செய்ய முடியாத ஒன்று.

இவ்வளவு அத்தியாவசியத் தண்ணீரை நிர்வாகம் செய்யும் முறைகளில் குறைபாடு ஏற்பட்டால் அது மனித வாழ்வை அதிகம் பாதிக்கும் என்பதைச் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே இன்று அது தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நம்நாட்டு வரைபடத்தில் பல ஆறுகள் இருந்த போதிலும் அவற்றில் தண்ணீர் இல்லாதது கவலை அளிக்கிறது என ஊர் சுற்றும் பிரதமர் மோடி வெற்று அறிக்கை விடுவதோடு சரி! அதற்கான தீர்வு என்ன? என்று ஆக்கப்பூர்வ நீர் மேலாண்மை நடவடிக்கையில் களமிறங்குவதில்லை.

மழை நீரைச் சேமிக்கவும், இருக்கும் நீரைப் பாதுகாக்கவும் எந்தத் திட்டமும் இன்றைய அரசிடம் இல்லை. நிலைமையைச் சீர் செய்வதற்கு மாற்றமாக இன்னும் மோசமாக்கும் வகையில் ஆற்று நீரை அயல் நாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் திட்டங்கள் தாம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவர்களும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து விட்டு, தரையை மட்டும் மிச்சம் வைத்துச் செல்கின்றார்கள். அந்தத் தரையிலுள்ள மண்ணையும் நம்மூர் ஆள்கள் விட்டுவைப்பதில்லை. அள்ளிச் சென்று பள்ளம் ஆக்கி விற்றுத் தீர்த்து விடுகிறார்கள். இவர்களால் எச்சில் இலைகளாக்கப்பட்ட ஆற்றிடங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் கூறு போட்டு விற்பனை செய்யும் கொடுமை சொல்லி மாளாத தனிக்கதை.

அணைகள், ஏரிகள் மட்டும் தண்ணீரின்றி பல்லிளிக்கவில்லை. அத்துடன் அரசின் நீர் மேலாண்மையும் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு இவை அழிக்க முடியாத சாட்சியங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு, தேவை முன்மாதிரியான நீர் மேலாண்மைத் திட்டமாகும்.

1400 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மை குறித்துப் பல அற்புதமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய பெருமை பெருமகனார் முஹம்மது நபி (ஸல்) அவர்களையே சாரும்.

நீர் மேலாண்மை குறித்து நபிகளார் நவின்றுள்ள போதனைகளை இன்றைய உலகம் செவிதாழ்த்திக் கேட்குமெனில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதோடு அதனால் விழையும் பல பிரச்சனைகளுக்கும் எளிதாக முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

இருக்கும் நீரைப் பாதுகாத்திட…

நாட்டில் நிலவும் கடும் வறட்சிக்கு யாரைக் கேட்டாலும் பருவ மழை பொய்த்து விட்டது என்பார்கள். அதெல்லாம் சரிதான்.

ஏற்கனவே பெய்த மழைகள் மூலம் பெற்ற, ஆறு, குளம், குட்டைகளில் இருக்கும் நீரைப் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பதில் இவர்கள் காட்டும் அக்கறை என்ன?

நீர் பாதுகாப்பு என்பது நீர் மேலாண்மையில் முக்கியப் பங்காற்றும் அம்சமாகும்.

இதோ நீரைப் பாதுகாத்திட நபிகளார் வழங்கிய நற்போதனைகளைப் பாரீர்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 474

இச்செய்தியின் வாயிலாக மக்கள் பயன்படுத்தும் தண்ணீரை அசுத்தப்படுத்தக் கூடாது என்று கூறி, தண்ணீரைப் பாதுகாக்க நபிகளார் வலியுறுத்துகிறார்கள்.

தேங்கி நிற்கும் தண்ணீர் என்று வந்துள்ளதால் ஓடும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தலாம் என்று பொருளாகாது. பொதுவாகத் தேங்கி நிற்கும் தண்ணீரை இலகுவாக சிறுநீர் கழிப்பதற்குரிய இடமாக மக்கள் தேர்வு செய்து விடுவர். அதனால் இங்கு இது குறிப்பிடப்படுகிறதே ஒழிய ஆறுகளில் மலஜலம் கழிக்கலாம் என்ற அர்த்தத்தில் அல்ல.

ஆற்று நீர் மக்களின் குடிநீராக, குளிநீராக என்று பல வகைகளில் பயன்படுவதால் அதை அசுத்தப்படுத்தும் காரியத்தில் ஈடுபடக்கூடாது.

சுருக்குப்பை அளவு தண்ணீராக இருந்தாலும் அதையும் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது தான் நபிகளார் முன்வைக்கும் நீர் மேலாண்மைத் திட்டமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் உறங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும், பானத்தையும் மூடிவையுங்கள்’’ என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 5624

மாசடையாமல் தண்ணீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நபிகளாரின் போதனை பின்பற்றப்பட்டால்  எவ்வளவு தண்ணீர் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சேமிக்கப்படும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றைக்கு பெரும்பாலான ஆறு, குளம் போன்றவைகளில் சாக்கடை, கழிவுநீர் ஆகியவை கலக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றது. கழிவு நீர்ப் பாதை அமைக்கும் செலவினங்களைக் கவனத்தில் கொண்டு அரசு நிர்வாகமே இந்த வேலையைச் செய்கின்றது.

பல்வேறு ஆலை நிறுவனங்களின் ரசாயனம் கலந்த கழிவு நீர் ஆறு, குளம் போன்றவைகளில் கலப்பதால் அந்நீரைப் பயன்படுத்துவது தடுக்கப் படுவதோடு மக்களுக்குப் பெரிய அளவிளான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதுபோக இத்தகைய கழிவுகளை பாதாள சாக்கடை வழியாக உரிய இடங்களில் செலுத்தாமல் பூமியின் மேற்பரப்பிலும் திறந்த வெளி சாக்கடையிலும் விட்டு விடும் போது சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் மாசடைகிறது.

இப்படி கண்ணுக்குத் தெரியும் நீரையும், கண்ணுக்குத் தெரியாத நிலத்தடி நீரையும் மாசுபடுத்துவது தான் சிறந்த நீர்மேலாண்மையா?

கங்கை நதியை எடுத்துக் கொண்டால் பல மூடநம்பிக்கையினால் அது அசுத்தப் படுத்தப்படுகிறது.

கங்கையில் எரியூட்டப்பட்டால் மறுபிறவியிலிருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான உடல்கள் அங்கே எரியூட்டப்படுகின்றன. பிணங்கள் எறியப்படுகின்றன. இச்செயல்களினால் உலகிலேயே அதிக மாசடைந்த நதிகளில் ஒன்றாக கங்கை நதி பெயர் பெற்றிருப்பது அது எவ்வளவு அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்தியா போன்ற நாட்டில் நதிகளை, நீர் நிலைகளை இப்படி அசுத்தப்படுத்த விடலாமா?

சுருக்குப்பை அளவு தண்ணீராக இருந்தாலும் அதை மாசடையாமல் பாதுகாத்திட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்ற நபிகளாரின் போதனை தண்ணீருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்து விடுகிறது.

சென்னை வெள்ளம் ஏன்?

கையளவு தண்ணீரை எதையாவது கொண்டு மூடி பாதுகாத்து விடலாம். ஆனால் ஆறு, குளம், அணைகள் போன்றவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் செய்வதைப் போன்று தெர்மாகோல் கொண்டு மூடி பாதுகாத்திட முடியாது. அதற்கான வழி தூர்வாருவதாகும். தூர்வாருவது தண்ணீரைப் பாதுகாப்பது மட்டுமல்ல வெள்ளம் போன்ற சந்தர்ப்பங்களில் மக்களைக் காக்கும் வழிமுறையும் கூட!

சென்னையில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது? வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது என்பார்கள். அது உண்மையோ பொய்யோ அதை விடப் பேருண்மை வடிகால்கள், நீர்வழித்தடங்கள் சரியாக தூர்வாரப்படாமல் இருந்ததும் அணைகள், ஏரிகள் சரிவர பேணப்படாமல் இருந்ததுமே சென்னை பெருவெள்ளத்துக்குக் காரணம் என்பதாகும்.

ஏரி, குளங்களின் நீர்வழித்தடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு தூர்வாரப்பட்டிருந்தால் அதிக மழை பெய்தாலும் தண்ணீர் செல்வதற்கான போக்கிடம் கிடைக்கப் பெற்றிருக்கும்.

கிளைகள் – கசடுகளால் நீர்வழித்தடங்கள் நிரம்பியதால் உரிய இடங்களுக்குத் தண்ணீர் செல்வது தடுக்கப்பட்டு, ஊருக்குள் தண்ணீர் புகும்படி ஆகிவிட்டது.

இன்னும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கும் அணைகள், ஆறு, குளம் குட்டைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவையாக உள்ளன.

காவிரி நீரைச் சேமிக்­கப் புதிதாக 400 ஏரி, குளங்களைக் கர்­நா­டக அரசு ஏற்­படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகள் 13,779-ல் 54% ஏரிகள் இன்னமும் தூர் வாரப்படாமல் இருக்கின்றனவாம். அதுமட்டுமா? மேட்டூர் அணையைத் தூர் வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. உலக வங்கி இதற்கென பல கோடிகள் தமிழகத்திற்குக் கடன் வழங்கியும் நிலைமை சீர் செய்யப்படவில்லை என்பது கசப்பான உண்மை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் நற்செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை, அவர்களின் நற்செயல்களி(ன் பட்டியலி)ல் கண்டேன். பள்ளி வாசலில் (உமிழ்ந்து) மண்ணுக்குள் புதைக்கப் படாமல் இருக்கும் சளியை, அவர்களின் தீய செயல்களில் கண்டேன்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 959

வழித்தடங்களில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை சிறந்த நற்காரியமாக அண்ணல் நபியவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.

இந்தச் சிறப்புமிக்க நன்மை, நீரோட்டங்கள் செல்லும் வழித்தடங்களை தூர்வாருவதையும் குறிக்கும். அரசாங்கத்தால் தான் இதைச் செய்ய முடியும். முஹம்மது நபியின் இந்த போதனை அதிகாரிகளால் பின்பற்றப்பட்டால் நீர் மேலாண்மையில் சிறந்த நிலையை எளிதாக எட்டி விடலாம்.

விற்காதே – தடுக்காதே

இன்றைக்குத் தண்ணீரை மையப்படுத்தி ஒரு நாட்டில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் தண்ணீரைப் பங்கிடுவதில் தான் சூழ்ந்துள்ளது.

அருகருகே அமைந்திருந்தும் கூட கேரளம் தமிழத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது.

கர்நாடகமும்  தன் பயன்பாட்டுக்குப் போக மேலதிக தண்ணீரை தன் அண்டை மாநிலமான தமிழகத்திற்குத் தராமல் மல்லுக்கட்டுகிறது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தண்ணீர் வழங்க மனிதாபிமானம் இருந்தாலே போதும். நதிநீர் பகிர்வு திட்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலம் மேலதிகத் தண்ணீரைப் பெறுவதற்கு பல சட்டங்கள், திட்டங்கள் இருந்தும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வந்த பின்னும் தண்ணீர் தர மறுப்பவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

ஒரு அரசு இயந்திரத்தை மீறி தன் அண்டை மாநிலத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் மாநில அரசுகளை மத்திய அரசு கண்டு கொள்ளாததன் பின்னணியில் பல அரசியல்.

இன்றைக்கு தண்ணீர் மக்கள் தாகம் தீர்க்கும் குடிபானம் என்பது மாறி அரசியல்வாதிகளின் வெறி தீர்க்கும் அரசியல் பொருளாக மாறிப்போயுள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு நபிகள் நாயகம் தீர்வளிக்கின்றார்கள்.

தண்ணீரைப் பங்கிடுவது பற்றி நபிகளார் முன்வைக்கும் முத்தான அறிவுரைகள் இரண்டு உள்ளது.

தேவை போகவுள்ள தண்ணீரை விற்காதே!

தேவை போகவுள்ள தண்ணீரை தடுக்காதே!

இவையிரண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படத் தகுந்த, எக்காலத்திலும் மனித சமுதாயத்திற்குத் தேவையான அறிவுரையாகும்.

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2925

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2353, 2354, 6962

தனிநபரோ, குழுவோ யாராக இருந்தாலும் தனக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு மிதமிஞ்சிய தண்ணீரை யாருக்கும் விற்கக் கூடாது, அதாவது இலவசமாக வழங்கி விட வேண்டும். அதேவேளை மேலதிகத் தண்ணீரை உனக்குத் தரமாட்டேன் என்று யாருக்கும் தண்ணீரைச் செல்லவிடாமல் தடுக்கக் கூடாது. தன் பயன்பாட்டுக்குப் போகவுள்ளதை பிறர் பயன்பாட்டுக்குச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இது நபிகளார் முன்வைக்கும் நீர் பங்கீட்டு திட்டமாகும்.

நபிகளார் நவின்றபடி மேலதிகத் தண்ணீரை தடுக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்ற அறிவுரையை எந்த அரசு கடைப்பிடிக்குமோ அங்கே தண்ணீர் அரசியலுக்கு இடமிருக்காது. மாநிலங்களுக்கான சண்டைகளுக்கு முடிவு கட்டப்படும்.

நமது நாட்டில் தண்ணீருக்காக சண்டை போடுவதைப் போன்று அரபு நாடுகளுக்கிடையே தண்ணீர் சண்டை இருப்பதை நாம் எந்தப் பத்திரிக்கையிலும் படிக்க இயலாததற்கு காரணம் நபிகளாரின் இந்தத் தீர்வு தான்.

தண்ணீர் பிரச்சனைக்கு முஹம்மது நபியிடம் தீர்வு உண்டு. செவி சாய்ப்போர் உண்டா?

—————————————————————————————————————————————————————————————

நோன்பாளிக்கு உணவளித்தால் ஹவ்லுல் கவ்ஸர் கிடைக்குமா?

எம்.ஐ. சுலைமான்

நோன்பாளிக்கு உணவளித்தலைச் சிறப்பித்துக் கூறும் ஹதீஸ் ரமலான் மாதத்தில் அதிக அளவில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இதுகுறித்த ஹதீஸ் சரியானது தானா என்பதைப் பார்ப்போம்.

صحيح ابن خزيمة ط 3 – (2 / 911)

1887 – ثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، ثَنَا يُوسُفُ بْنُ زِيَادٍ، ثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَلْمَانَ قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ، فَقَالَ: “أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ، شَهْرٌ مُبَارَكٌ، شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، جَعَلَ اللَّهُ صِيَامَهُ فَرِيضَةً، وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا، مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْرِ، كَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً، كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَهُوَ شَهْرُ الصَّبْرِ، وَالصَّبْرُ ثَوَابُهُ الْجَنَّةُ، وَشَهْرُ الْمُوَاسَاةِ، وَشَهْرٌ يَزْدَادُ فِيهِ رِزْقُ الْمُؤْمِنِ، مَنْ فَطَّرَ فِيهِ صَائِمًا كَانَ مَغْفِرَةً لِذُنُوبِهِ، وَعِتْقَ رَقَبَتِهِ مِنَ النَّارِ، وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ”. قَالُوا: لَيْسَ كُلُّنَا نَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ. فَقَالَ: “يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى تَمْرَةٍ، أَوْ شَرْبَةِ مَاءٍ، أَوْ مَذْقَةِ لَبَنٍ، وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ، مَنْ خَفَّفَ عَنْ مَمْلُوكِهِ غَفَرَ اللَّهُ لَهُ، وَأَعْتَقَهُ مِنَ النَّارِ، وَاسْتَكْثِرُوا [197 – ب] فِيهِ مِنْ أَرْبَعِ خِصَالٍ: خَصْلَتَيْنِ تُرْضُونَ بِهِمَا رَبَّكُمْ، وَخَصْلَتَيْنِ لَا غِنًى بِكُمْ عَنْهُمَا، فَأَمَّا الْخَصْلَتَانِ اللَّتَانِ تُرْضُونَ بِهِمَا رَبَّكُمْ، فَشَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَتَسْتَغْفِرُونَهُ، وَأَمَّا اللَّتَانِ لَا غِنًى بِكُمْ عَنْهُمَا، فَتَسْأَلُونَ اللَّهَ الْجَنَّةَ، وَتَعُوذُونَ بِهِ مِنَ النَّارِ، وَمَنْ أَشْبَعَ فِيهِ صَائِمًا، سَقَاهُ اللَّهُ مِنْ حَوْضِي شَرْبَةً لَا يَظْمَأُ حَتَّى يَدْخُلَ الْجَنَّةَ”.

மனிதர்களே! உங்களுக்கு மகத்தான மாதம் நிழலிட்டுள்ளது. (அது) அருள்நிறைந்த மாதமாகும். அந்த மாதத்தில் ஆயிரம் மாதத்தைவிட சிறந்த இரவு உள்ளது. அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். இரவில் வணங்குவதை உபரியான வணக்கமாக ஆக்கியுள்ளான். யார் நன்மையான ஒரு காரியத்தைக் கொண்டு (அல்லாஹ்வை) நெருங்குவாரோ அவர் அதுவல்லாத கடமையான செயலைச் செய்தவர் போன்றவராவார்.

யார் அந்த மாதத்தில் கடமையான செயலை நிறைவேற்றுவாரோ அவர் அதுவல்லாத எழுபது கடமையை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இது பொறுமையின் மாதமாகும். பொறுமை, அதன் நன்மை சொர்க்கமாகும். (இது) பெருந்தன்மையுடன் நடக்கும் மாதமாகும். (இந்த) மாதத்தில் இறைநம்பிக்கையாளனின் செல்வம் அதிகரிக்கப்படும். யார் ஒரு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், நரகத்திலிருந்து விடுதலை பெறவும் அது காரணமாக அமையும். நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மை போன்று நோன்பு துறக்கச் செய்தவருக்கும் கிடைக்கும். நோன்பாளின் நன்மையின் எந்த ஒன்றும் குறைக்கப்படாது.

‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாருக்கு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்யும் பொருட்கள் உள்ளது?’’ என்று கேட்டபோது, ‘‘ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு அல்லது தாகம் தீர்க்கும் அளவு தண்ணீரைக் கொடுத்து அல்லது தண்ணீர் கலந்த பாலைக் கொண்டு ஒரு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்யக் கூடியவருக்கு அல்லாஹ் இந்த நன்மை வழங்குகிறான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த மாதம், அதன் முதல் பகுதி ரஹ்மத் (அருள் வளம்) கொண்டதாகும். நடுப்பகுதி மன்னிப்பு உள்ளதாகும். கடைசி பகுதி நரகத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்குரியதாகும். யார் தன்னுடைய அடிமையிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரோ அவருடைய பாவத்தை அல்லாஹ் மன்னிக்கின்றான், மேலும் அவரை நரத்திலிருந்து விடுதலை செய்கின்றான்.

இந்த மாதத்தில் நான்கு விஷயங்களை அதிகப்படுத்துங்கள். அதில் இரண்டு விஷயங்களை உங்கள் இறைவன் திருப்தி கொள்கின்றான். இரண்டு விஷயங்கள் அதை நீங்கள் (ஒரு போதும்) தவிர்க்க முடியாததாகும்.

உங்கள் இறைவன் பொருந்திக் கொள்கின்ற இரண்டு விஷயங்களாவது, வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்புவதாகும். (இரண்டாவது) நீங்கள் (உங்கள் பாவங்களுக்காக) அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதாகும்.

நீங்கள் தவிர்த்துக் கொள்ள முடியாத இரண்டு விஷயங்களாவது, (ஒன்று) நீங்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்பது, (இரண்டாவது) நரகத்திலிருந்து அவனிடம் பாதுகாவல் தேடுவது.

யார் இம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு வயிறு நிறைய (உணவு) வழங்குவாரோ அவருக்கு என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் அல்லாஹ் நீர் புகட்டுவான், சொர்க்கம் நுழையும் வரை அவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சல்மான் (ரலி)

நூல்: இப்னு ஹுஸைமா (1887)

இதே செய்தி ஷுஅபுல் ஈமான், பைஹகீ அவர்களின் அத்தஃவாத் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

அனைத்து நூல்களிலும் அலீ பின் ஜைத் பின் ஜுத்ஆன் என்பவர் இடம்பெற்றுள்ளார். அவரைப் பற்றி அறிஞர்கள் கருத்து என்ன என்பதைப் பார்ப்போம்.

الضعفاء للعقيلي – (3 / 229)

1231- علي بن زيد بن جدعان.

قال كان بن عيينة يضعف بن عقيل وعاصم بن عبيد الله وعلى بن زيد بن جدعان ،

இப்னு அகீல், ஆசிம் பின் உபைதுல்லாஹ், அலீ பின் ஜைத் ஆகியோரை பலவீனமானவர்கள் என்று இப்னு உயைனா அவர்கள்  குறிப்பிட்டார்கள்.

நூல் : அல்லுஅஃபா, பாகம் :3, பக்கம் :229

حَدَّثَنَا هيثم بن خلف ، قال : حَدَّثَنا أبو بكر الأعين ، قال : حَدَّثَنا سليمان بن حرب ، قال : حَدَّثَنا حماد بن زيد ، قال : حَدَّثَنا علي بن زيد وكان يقلب الأحاديث.

அலீ பின் ஜைத் என்பவர் நபிமொழிகளைப் புரட்டி அறிவிப்பவர் என்று ஹம்மாத் பின் ஸைத் கூறுகிறார்.

நூல்: அல்லுஅஃபா, பாகம் :3, பக்கம் :229

حَدَّثنا محمد بن عيسى ، قال : حَدَّثَنا عمر بن علي قال كان يحيى يتقي الحديث عن علي بن زيد.

அலீ பின் ஜைத் என்பவரின் செய்திகளை விட்டும் யஹ்யா அவர்கள் தவிர்ந்திருப்பார் என்று உமர் பின் அலீ அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : அல்லுஅஃபா, பாகம் :3, பக்கம் :229

حَدَّثَنا معاوية بن صالح ، قال : سَمِعْتُ يحيى يقول علِي بن زيد بن جدعان بصري ضعيف.

அலீ பின் ஜைத் என்பவர் பலவீனமானவர் என்று யஹ்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : அல்லுஅஃபா, பாகம் :3, பக்கம் :229

المجروحين – (2 / 104)

سمعت عباس بن محمد يقول: سمعت يحيى بن معين يقول: على بن زيد بن جدعان ليس بشئ

அலீ பின் ஜைத் பின் ஜுத்ஆன் என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மஜ்ரூஹீன், பாகம் :2 பக்கம் :104

المجروحين – (2 / 104)

كان ممن يروى عن ثابت ما لا يشبه حديث ثابت حتى غلب على روايته المناكير التى يرويها عن المشاهير فاستحق الترك.

இவர் ஸாபித் என்பவர் அறிவித்திராத செய்திகளை அவர் பெய்ரால் அறிவிப்பார். பிரபலமான அறிவிப்பாளர்களின் பெயர்களில் மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பது அவரிடம் மிகைத்துள்ளது. எனவே (இவரின் செய்திகளை) விட்டுவிடுவது கடமையாகும்.

நூல்: மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 104

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.

யார் நன்மையான ஒரு காரியத்தைக் கொண்டு (அல்லாஹ்வை) நெருங்குவாரோ அவர் அதுவல்லாத கடமையான செயலைச் செய்தவர் போன்றவராவார்.

யார் அந்த மாதத்தில் கடமையான செயலை நிறைவேற்றுவாரோ அவர் அதுவல்லாத எழுபது கடமையை நிறைவேற்றியவரைப் போன்றவராவார்.

(இந்த) மாதத்தில் இறைநம்பிக்கையாளனின் செல்வம் அதிகரிக்கப்படும்.

யார் ஒரு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும் நரகத்திலிருந்து விடுதலை பெறவும் அது காரணமாக அமையும்.

இந்த மாதம், அதன் முதல் பகுதி ரஹ்மத் (அருள் வளம்) கொண்டதாகும். நடுப்பகுதி மன்னிப்பு உள்ளதாகும். கடைசிப் பகுதி நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்குரியதாகும்.

யார் இம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு வயிறு நிறைய (உணவு) வழங்குவாரோ அவருக்கு என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் அல்லாஹ் நீர் புகட்டுவான், சொர்க்கம் நுழையும் வரை அவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார்.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஆதாரமற்ற வையாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————

முத்தலாக் விமர்சனங்களும் விளக்கங்களும்

சபீர் அலீ  M.I.Sc.

“மனாருல் ஹுதா” என்ற மத்ஹப் பத்திரிக்கை ”குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முத்தலாக்” என்ற தலைப்பின் கீழ் ஒரு ஆக்கத்தைத் தொடராக வெளியிட்டு வருகிறது.

அதில், முத்தலாக் சொல்லும் வழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது என்பதற்கு சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். அதற்கான விளக்கங்களைப் பார்த்து வருகிறோம். முதல் ஆதாரத்திற்கான விளக்கத்தைக் கடந்த இதழில் கண்டோம். அடுத்த செய்தியைப் பார்ப்போம்.

செய்தி 2

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ أَخْبَرَهُ أَنَّ عُوَيْمِرًا الْعَجْلَانِيَّ جَاءَ إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ الْأَنْصَارِيِّ فَقَالَ لَهُ يَا عَاصِمُ أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ سَلْ لِي يَا عَاصِمُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عَاصِمٌ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسَائِلَ وَعَابَهَا حَتَّى كَبُرَ عَلَى عَاصِمٍ مَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَجَعَ عَاصِمٌ إِلَى أَهْلِهِ جَاءَ عُوَيْمِرٌ فَقَالَ يَا عَاصِمُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عَاصِمٌ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ قَدْ كَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْأَلَةَ الَّتِي سَأَلْتُهُ عَنْهَا قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لَا أَنْتَهِي حَتَّى أَسْأَلَهُ عَنْهَا فَأَقْبَلَ عُوَيْمِرٌ حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسْطَ النَّاسِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَنْزَلَ اللَّهُ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَاذْهَبْ فَأْتِ بِهَا قَالَ سَهْلٌ فَتَلَاعَنَا وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا فَرَغَا قَالَ عُوَيْمِرٌ كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ إِنْ أَمْسَكْتُهَا فَطَلَّقَهَا ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ابْنُ شِهَابٍ فَكَانَتْ تِلْكَ سُنَّةَ الْمُتَلَاعِنَيْنِ رواه البخاري 5259

அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் (ரலி) அவர்கள்,  ஆஸிம் பின் அதீ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் வந்து, “ஆஸிமே! தம் மனைவியுடன் மற்றோர் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகின்றீர்கள்? அவன் அந்த  ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால் (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து ஆஸிமே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்’’ என்று கூறினார்.

அதனால், ஆஸிம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று கேட்கத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று. ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது உவைமிர் வந்து “ஆஸிம் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள் “நீ எனக்கு நன்மை செய்யவில்லை.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் கேட்ட இந்தக் கேள்வி பிடிக்கவில்லை’’ என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உவைமிர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானே இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்’’ என்று கூறியபடி மக்களிடையேயிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவுகொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவன் அந்த ஆடவனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால் பழிக்குப் பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்’’ என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் (குர்ஆன் வசனத்தை) இறக்கிவிட்டான். அதனால், நீ சென்று, உம்முடைய மனைவியை அழைத்து வா!’’ என்று சொன்னார்கள்.

பிறகு அவர்கள் இருவரும் (“லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். அப்போது மக்களுடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அவர்கள் இருவரும் லிஆன் செய்து முடித்தபோது,  உவைமிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (பிரியாமல் என்னுடனே) வைத்திருந்தால் இவள் மீது நான் பொய் சொன்னவனாக ஆகிவிடுவேன்’’ என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார் (தல்லக்கஹா ஸலாஸன்).

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத்(ரலி)

நூல்: புகாரி 5259

இதே செய்தி அபூதாவூதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني (2/ 242)

2252 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ الْفِهْرِىِّ وَغَيْرِهِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ فِى هَذَا الْخَبَرِ قَالَ فَطَلَّقَهَا ثَلاَثَ تَطْلِيقَاتٍ عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَنْفَذَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَكَانَ مَا صُنِعَ عِنْدَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- سُنَّةً.

قَالَ سَهْلٌ حَضَرْتُ هَذَا عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَمَضَتِ السُّنَّةُ بَعْدُ فِى الْمُتَلاَعِنَيْنِ أَنْ يُفَرَّقَ بَيْنَهُمَا ثُمَّ لاَ يَجْتَمِعَانِ أَبَدًا.

நபி (ஸல்) அவர்கள் அருகில் அவர் மூன்று தலாக் சொன்னார். அதை நபி (ஸல்) அவர்கள் செல்லுபடியாக்கினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் செய்யபட்ட செயல் சுன்னத்தாகும் என்று ஸஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : அபூதாவூத் (2252)

மேற்கண்ட செய்தியில் உவைமிர் (ரலி) அவர்கள் லிஆன் சம்பவத்திற்குப் பிறகு தன்னுடைய மனைவியை மூன்று தலாக் விட்டதாக இடம் பெற்றுள்ளது.

ஆனால் அவ்வாறு அவர் மூன்று தலாக் விட வேண்டும் என்று நபியவர்கள் அவர்கள் கட்டளை இடவில்லை. அவராகவே தான் மூன்று தலாக் விடுகின்றார்.

அவர் விட்ட மூன்று தலாக்கை நபியவர்கள் செல்லுபடியாக்கினார்கள் என்பது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கு எதிரான கருத்தாகும்.  நபியவர்கள் சாப அழைப்பு பிரமாணம் செய்துவிட்டால் கணவன் மனைவி பிரிந்தாக வேண்டும் என்பதைத்தான் உறுதிப்படுத்தினார்களே தவிர அவர் மூன்று தலாக் விட்டதைச் செல்லுபடியாக்கினார்கள் என்று ஹதீஸ் கலை ஞானமுடையவர்கள், மார்க்கச் சட்டம் அறிந்தவர்கள் முடிவு செய்ய இயலாது.

சாப அழைப்புப் பிரமாணம் செய்து விட்டாலே கணவன் மனைவிக்கு மத்தியில் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டுவிடும்.

இதனைப் பின்வரும் நபிமொழி கடுகளவும் சந்தேகமின்றி மிகத் தெளிவாக விளக்குகிறது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்)  செய்த அந்தத் தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), “இனி அவள் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’’ என்று சொன்னார்கள்.

அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) எனது பொருள் (என்னாவது)?’’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவள் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவள் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகு தொலைவில் உள்ளது’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (5350)

சாப அழைப்புப் பிரமாணம் செய்த உடன் “இனி அவள் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’’ என நபியவர்கள் கிடையாது என்று கூறியதை மேற்கண்ட ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.

ஒருவர் சாப அழைப்புப் பிரமாணம் செய்து விட்டால் அவர் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதையும் அதற்கான காரணத்தையும் மேற்கண்ட புகாரி 5350வது ஹதீஸ் மிகத் தெளிவாக விவரிக்கிறது.

பின்வரும் ஹதீஸ்களும் நபியவர்கள்தான் சாப அழைப்பு பிரமாணம் செய்த கணவன் மனைவிக்கு மத்தியில் பிரித்து வைத்தார்கள் என்பதை மிகவும் உறுதிப்படுத்துகிறது.

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்: அன்சாரிகளில் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்பதியராகிய) அவ்விருவரையும் சத்தியம் செய்ய வைத்தார்கள். பிறகு, அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள்.

நூல்: புகாரி (5306)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர்  தம் மனைவியின் மீது (விபச்சாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி (ஸல்) அவர்கள் “குழந்தை அப்பெண்ணிற்குரியது’’ என்று தீர்ப்பளித்து, ‘லிஆன்’ செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்து வைத்தார்கள்.

நூல்: புகாரி (4748)

சாப அழைப்புப் பிரமாணம் செய்து விட்டாலே மனைவியோடு சேர்ந்து வாழ்வதற்கு எந்த வழியுமில்லை என்று மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக அறிவிக்கின்றன. உவைமிர் (ரலி) அவர்கள் தலாக் விடுகிறேன் என்ற வாசகத்தை தன் மனைவியை நோக்கிக் கூறாவிட்டாலும் அவர் தன்னுடைய மனைவியுடன் இனி ஒரு போதும் சேர்ந்து வாழமுடியாது என்ற நபியவர்கள் கருதிய காரணத்தினால் தான் நபியவர்கள் கட்டளையிடுவதற்கு முன்பே அவர் கூறிய தலாக்கை நபியவர்கள் கண்டு கொள்ளவில்லை.

மேலும், அபூ தாவூதின் அறிவிப்பில் இடம்பெறும் இயாழ் பின் அப்துல்லாஹ் எனும் அறிவிப்பாளர் மீது அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இவர் மீது நல்லெண்ணம் யாரும் கொள்ளவில்லை.

تهذيب الكمال 742 (22/ 570)

قال أبو حاتم (1) : ليس بالقوي.

وذكره ابنُ حِبَّان في كتاب “الثقات (2).

تقريب التهذيب (2/ 437)

5278- عياض ابن عبدالله ابن عبدالرحمن الفهري المدني نزيل مصر فيه لين من السابعة م د س ق

இவர் பலமானவர் இல்லை என்று அபூ ஹாதம் கூறியுள்ளார்.

தஹ்தீபுல் கமால் பாகம் 22 பக்கம் 570

இவரிடத்தில் பலஹீனம் உள்ளது என்று இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்.

தக்ரீபுத் தஹ்தீப் பாகம் 2 பக்கம் 437

இன்னும், குர்ஆன் மற்றும் நபிமொழியிலிருந்து விளங்குவதே முஃமின்களுக்குப் போதுமானதாகும். இமாம்களும் சொன்னால்தான் நாங்கள் ஏற்போம் என்ற கருத்தில் சிலர் இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்காக இமாம்களின் கருத்தையும் பதிவு செய்கின்றோம்.

உவைமிர் (ரலி) அவர்களுக்கும் அவருடைய மனைவிக்கும் லிஆன் எனும் சாப அழைப்பு பிரமாணத்தினால் தான் பிரிவு ஏற்பட்டது. தலாக்கினால் அல்ல என்பதை பல இமாம்கள் குறிப்பிட்டுள்ளனர்.

معالم السنن (3/ 266)

والوجه الآخر أن يكون معناه انفاذ الفرقة الداائمة المتأبدة، وهذا على قول من لا يراها تصلح للزوج بحال وإن أكذب نفسه فيما رماها به. وإلى هذا ذهب الثسافعي ومالك والأوزاعي والثوري ويعقوب وأحمد وإسحاق وشهد لذلك قوله ولا يجتمعان أبداً.

நபியவர்கள் செல்லுபடியாக்கினார்கள் என்ற வார்த்தையின் கருத்தாகிறது, நிரந்தரமான பிரிவை செல்லுபடியாக்கினார்கள் என்பதாகும். இந்தக் கருத்தில் தான் ஷாஃபி, மாலிக், அவ்ஸாயீ, சவ்ரீ, யஃகூப், அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் உள்ளனர். எனவே, இந்த ஹதீசும் முத்தலாக்கிற்கு ஆதாரமாக ஆகாது.

—————————————————————————————————————————————————————————————

பெண்கள் பகுதி

மனம் ஏற்றுக் கொள்ளாத  மார்க்கச் சட்டங்கள்

ஆப்ரின் சிதிரா

இவ்வுலகில் விரலிட்டு எண்ண முடியாத ஏராளமான கடவுள் கொள்கைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனுக்கு இயலாத பல காரியங்களை மார்க்கம் என்ற பெயரால் கட்டளையிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வாழ்க்கைக்கு ஏற்ற இனிமையான எளிமையான உயரிய கோட்பாடுகளையும், நேரிய சட்ட திட்டங்களையும் கொண்டுள்ள ஓர் உன்னதமான மார்க்கமாகும். ஏனெனில் இது மனோஇச்சைகளாலோ, கற்பனைகளாலோ தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் கிடையாது. ஈடு இணை இல்லாத இறைவனால் வழங்கப்பட்ட ஈடற்ற மார்க்கமாகும்

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே!

திருக்குர்ஆன் 3:19

முஸ்லிம் என்பவன் யார்?

இம்மார்க்கத்திற்கு இஸ்லாம் என இறைவனே பெயரிட்டது போல இம்மார்க்கத்தை ஏற்றிருப் பவர்களுக்கும்  முஸ்லிம் என்று இறைவன் பெயரிட்டுள்ளான். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நடப்பவரே முஸ்லிம் ஆவார்.

இதோ அல்லாஹ் கூறுகிறான்.

எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்’’ என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:163

இறைவன் தந்த இந்த அழகிய மார்க்கத்தில் இருக்கும் நாம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். வாழ்வு சீர்பெற, செம்மையாக அமையப் பலவிதமான போதனைகளை நம் மார்க்கம் வகுத்துள்ளது. ஆனால் நம்மவர்களோ சாதகமானதை ஏற்று, பாதகமானதை விட்டு விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக நம் கொள்கைச் சொந்தங்களாலும் கூட சில விஷயங்களை ஏற்க முடிவதில்லை. அவ்வாறு மனம் ஏற்க மறுக்கும் மார்க்கச் சட்டங்களில் சில…

மணமகள் தேர்வில்…

வரதட்சணை இல்லாத, ஆடம்பரம் இல்லாத கல்யாணம் தான் நபிவழித் திருமணம் என்பதே பெரும்பான்மையான மக்களின் நிலைப்பாடு. ஆனால் திருமணத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் மார்க்கம் காட்டித்தந்த அடிப்படையில் அமைவதே நபிவழித் திருமணம் ஆகும். மக்களுக்கு மத்தியில் நடக்கும் திருமணத்தை பார்க்கும் போது இங்கே திருமணமா? அல்லது திருவிழாவா? என்று வியந்து போகும் அளவிற்கு ஆடம்பரமான மிக விமரிசையான திருமணங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கின்றோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் அந்த ஆடம்பரங்கள் குறைந்து எளிமையான திருமணங்கள் அரங்கேறுவதை தற்போது காணமுடிகிறது. எனினும் முழுமையான இலக்கை அடையவில்லை. ஏனெனில் திருமணத்தில் வரதட்சணை, மணவிருந்து போன்ற வெளிப்படையாகத் தெரியும் அனாச்சாரங்களைத் தவிர்க்கும் முஸ்லிம்கள் மறைமுகமாக உள்ள சில விஷயங்களை மறந்துவிடுகின்றனர்.

திருமணத்தில் அஸ்திவாரமாக, ஆரம்பமாக இருப்பது மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்வது தான். வீட்டிற்கு வரும் மருமகள் அழகாக, அந்தஸ்து உள்ளவளாக, சுண்டினால் இரத்தம் வரும் நிறத்தில் இருக்க வேண்டும் என்று மனம் சொல்கிறது. ஆனால் மார்க்கமோ நல்லொழுக்கமுள்ளவளாக, மார்க்கம் தெரிந்தவளாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதோ மார்க்கம் சொல்வதைக் கேளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் நான்கு நோக்கத்திற்காகத் திருமணம் முடிக்கப்படுகிறாள்.

  1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  2. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்.

நூல்: புகாரி 5090

இறைத்தூதர் முதன்மைப்படுத்திய மார்க்கம் முற்றாய் மறைந்து போய் மனம் சொல்வதே முதன்மையாக்கப்படுகின்றது. மார்க்கம் தெரியாத வர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால், மார்க்கத்தைத் தெரிந்து கொண்ட கொள்கைவாதிகளும் கூட இந்த ஹதீஸிற்குச் செயல் வடிவம் கொடுப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆண்கள் அழகையும் அந்தஸ்தையும் எதிர்பார்த்து இந்த ஹதீஸை மறுக்கின்றனர்; மறக்கின்றனர் என்றெல்லாம் விமர்சனங்களைத் தொடுக்கும் பெண்களே! நீங்கள் இந்த ஹதீஸை செயல்முறைப்படுத்துகிறீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 தமது மகன், தமது சகோதரன், தம் குடும்பத்தார் என்று வரும் போது உங்கள் நிலைபாடு என்ன? உறவினர்களும், சம்பந்த வீட்டுக்காரர்களும், சமூகத்தாரும் இழிவாகக் கருதிவிடக்கூடாது; கௌரவக்குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை மையமாகக் கொண்டே ஒரு பெண் தேர்வு செய்யப்படுகின்றாள். அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் நிறைந்த ஒரு பெண்ணுக்கு மார்க்கம் தெரியவில்லை என்றாலும், இணை வைப்பாளராக இருந்தாலும் சரி அது பொருட்டாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்கள் பார்க்கும் இத்தகுதியை இறைவன் பார்ப்பதில்லை. இதோ இறைவன் கூறுகிறான்.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள்.

திருக்குர்ஆன் 24:26

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:221

இங்கே பெண்களை மட்டும் குறிப்பிடுவதால் ஆண்கள் தவறிழைப்பதில்லை என்று நாம் கூறவில்லை. ஆண்களைப் போன்று பெண்களும் இத்தவறில் கூட்டாகி உள்ளனர் என்பதையே நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

மனம் வெறுக்கும் திருமணம்

திருமணம் என்று சொன்னாலே வீட்டளவிலாவது விருந்து வைக்க வேண்டும்; உற்றார் உறவினர்களை அழைப்பதும் கட்டாயக் கடமை என்ற நிலையை நம்மவர்கள் உருவாக்கி உள்ளனர். வாழையடி வாழையாக இது ஒரு சம்பிரதாயமாகப் பார்க்கப்படுவதால் ஒவ்வொருவரும் இவ்விஷயத்தில் வலிந்து சிரமத்தை ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு மணி நேரத்தில் நடந்து முடியும் ஒரு சுபக் காரியம் நம்மீது ஒரு சுமையாகவே மாறிவிட்டது. ஆனால் நம் மார்க்கமோ எளிமையானது; எளிமையை போதிக்கக்கூடியது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே, (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள். நற்செய்தியையே சொல்லுங்கள்.

நூல்: புகாரி 39

வணக்கத்திலும் கூட நமக்கு நாமே சிரமத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். வணக்கத்திற்கே இது தான் அளவுகோல் என்றால் உலக விஷயங்களில் எந்தளவிற்கு எளிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று சற்று சிந்தியுங்கள்! அனைத்திலும் எளிமையைக் கடைபிடித்த நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த திருமணத்தைப் பாருங்கள்!

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்’’ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், (மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!’’ என்றார். நபி (ஸல்) அவர்கள் உன் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா? என்று பார்! என்றார்கள். அவரும் சென்று பார்த்துவிட்டு, திரும்பி வந்து ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எதுவும் கிடைக்கவில்லை அல்லாஹ்வின் தூதரே!’’ என்று சொன்னார். இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா? என்று பார்! என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டு திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான  மோதிரம் கூட கிடைக்கவில்லை. ஆனால், இதோ! இந்த எனது வேட்டி உள்ளது’’ என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவர் மீது எதுவுமிருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது எதுவுமிருக்காது. ஆகவே (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக’’ என்றார்கள். அவர் (தேடிவிட்டு வந்து) ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று சென்னார்கள் அப்போதும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5135

மணப்பந்தல் இல்லை, மணமேடை இல்லை, ஆடம்பரங்கள் இல்லை, ஆர்ப்பரிக்கும் கூட்டங்கள் இல்லை. நடந்ததோ ஓர் எளிய திருமணம். அழகிய முன்மாதிரியாகிய இறைத்தூதர் அவர்களே முன்னின்று நடத்திய திருமணத்தை மேற்கோள் காட்டினாலும், அதை ஏற்க மனம் முன்வருவதில்லை.

‘அதற்காக சொந்தபந்தங்கள் இல்லாமல் நற்காரியத்தை நடத்த முடியுமா? உறவுகள் இல்லாதவர்களுக்கு மட்டும் இது சாத்தியம். நபிவழித் திருமணம் என்ற பெயரில் அனைத்து சம்பிரதாயங்களும், சடங்குகளும், ஆடம்பரங்களும் குறைந்து விட்டன. இதில் உறவுகளையும் கூட அழைக்கக் கூடாதா? அது எப்படி முடியும் சாத்தியமே இல்லை’ என்று நம் சகோதரிகள் கொந்தளிப்பார்கள், குமுறுவார்கள் தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பார்கள்.

ஆம்! நம் உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாது, விரும்பாது தான். ஏனெனில் குடும்பத்தாரும், சமூகத்தாரும் சுற்றிச் சூழ ஆடம்பரங்கள், கேளிக்கைகள் நிறைந்தது தான் திருமணம் என்று நாம் காலம்காலமாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதனால் தான் நபிவழி அடிப்படையில் ஒரு திருமணம் நடந்தாலும் கூட இது கல்யாண வீடா? கருமாதி வீடா? எந்த ஒரு சொந்த பந்தமும் இல்லாமல் நடக்கும் கல்யாணம் ஒரு கல்யாணமா? என்று நம்மைச் சேர்ந்தவர்களே விமர்சிக்கும் நிலை உருவாகிவுள்ளது.

மார்க்கம் கற்றுத் தந்ததாக இருந்தாலும் அதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. திருமணத்தை பெரிய பிரம்மாண்டமான ஒரு காரியமாக நமது உள்ளம் சித்தரித்து வைத்துள்ளது. ஆனால் நம் மார்க்கமோ அதை ஓர் உடன்படிக்கை என்கிறது. இதோ இறைமறை இயம்புகிறது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

சகோதரிகளே! உறவுகளே வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. உறவுகளை உபசரிக்கும் ஓர் உன்னத மார்க்கத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றாலும் உறவுகளைக் காரணம் காட்டி எளிமையான இம்மார்க்கத்தைச் சுமையாக ஆக்கி நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்திவிட கூடாது என்றே குறிப்பிடுகிறோம்.

கவனிக்கத் தவறிய ஹிஜாப்

பெண்களைக் கண்ணியப்படுத்தவும் அவர்களது கற்பைப் பாதுகாக்கவும் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஓர் அழகிய சட்டம் தான் ஹிஜாப். ஹிஜாப் என்றால் கருப்பு நிற ஆடை அணிவது தான் என்றும் வெளியில் செல்லும் போது மட்டுமே அதைப் பேணவேண்டும் என்றும் பெரும்பாலானவர்கள் விளங்கி வைத்துள்ளனர்.

அதனால் தான் மணம் முடிக்கத் தகுந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருக்கும் போது கூட ஹிஜாப் முறையைப் பேணுவதில்லை. இதற்குக் காரணம் அந்நிய ஆடவர்கள் யார்? என்பதை உணராமல் இருப்பது தான். அல்லாஹ் நெருங்கிய உறவுகளை பட்டியலிடுகிறான்.

 தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

திருக்குர்ஆன் 24:31

மேலே குறிப்பிட்டவர்களைத் தவிர மற்ற அனைவரும் அந்நிய ஆடவர்கள் தான். அவர்கள் எத்தகைய உறவாக இருந்தாலும் சரியே!

ஹிஜாப் சட்டத்தைப் புரிந்து வைத்துள்ள பெண்களும் கூட, பெரியம்மா மகன், சின்னம்மா மகன் முன்னிலையில் ஹிஜாபைப் பேணாமல் சர்வசாதாரணமாக நிற்பது, அவர்களைத் தொட்டுப் பேசுவது, அவர்களுடன் வெளியே செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இது தவறு என்று தெரிந்தும் கூட அதைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை.

சிறு வயது முதலே ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்திருக்கிறோம். சகோதர சகோதரிகளாகப் பழகியிருக்கிறோம் அப்பேற்பட்ட உறவுகளை அந்நியமாக்க முடியுமா? என்ற முகத்தாட்சணை  தான் இதற்குக் காரணம். அந்நியர்களை அண்ணனாக மனம் ஏற்றுக் கொண்டதால் தான் மார்க்கச் சட்டத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

என் அண்ணன், என் தம்பி என்று உரிமையோடு உறவு பாராட்டினாலும் மாதிரி உறவுகள் ஒருபோதும் மஹ்ரமான உறவுகள் ஆகாது. நேற்று வரை சகோதரர்களாக இருந்தவர்கள் நாளை வாழ்க்கைத் துணையாகவும் மாறலாம் என்பதை மனதில் ஆழப்பதிவு செய்ய வேண்டும்.

ஹிஜாப் முறையுடன் மார்க்கம் அனுமதித்த அடிப்படையில் உறவைப் பேணி வாழ வேண்டும். இல்லையேல் பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதை போன்ற பாதக சூழல் உருவாகி விடும். மார்க்கத்தை தெரிந்து கொண்டவர்களே இத்தகைய தவறில் நீடித்திருப்பது கவலைக்குரியதே. மார்க்கம் என்று வரும்போது  அங்கே நம் சுய விருப்பங்களுக்கு இடமில்லை. மனம் சொல்வது ஒருபோதும் மார்க்கம் ஆகாது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

மனம் சொல்வதைக் கேட்டு ஷைத்தானின் சூழ்ச்சிகளுக்குக் கட்டுப்படாமல், மன இச்சைகளைப் புறந்தள்ளி மார்க்கக் கட்டளைகளுக்கு செவி சாய்ப்போமாக!

—————————————————————————————————————————————————————————————

வலீமார்களிடம் உதவி தேடலாமா?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

வலீமார்களிடம் உதவி தேடலாம்; அதற்கு திருக்குர்ஆன் ஹதீஸ்களில் ஆதாரமுண்டு என்று கூறும் பரேலவிகள் ஒரு சில வாதங்களை வைக்கிறார்கள். அவர்களின் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்த்து வருகிறோம்.

வாதம் – 3

ان اراد عونا فليقل يا عبادالله اعينوني يا عبادالله اعينوني يا عبادالله اعينوني

நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பகர்ந்துள்ளார்கள்.

எவருக்காவது உதவி தேவைப்படுமானால் ‘அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்’ என்று மூன்று முறை கூறவும்.

(ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹஸீன்)

பதில் – 3

தப்ரானியில் (பாகம் 12, பக்கம் 44) சில வாசக மாற்றத்துடன் இவர்கள் கூறும் செய்தி இடம்பெறுகிறது.

இதுவும் பல காரணங்களால் மிகவும் பலவீனமான செய்தியாகும்.

இதில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் பின் ஷரீக் என்பார் ஹதீஸ் துறையில் மிகவும் மோசமானவர் ஆவார்.

இவ்வாறு இமாம் அபூஹாதம் விமர்சித்துள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம் 17, பக்கம் 170

இதில் இடம் பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் மீதும் நினைவாற்றல் ரீதியாக விமர்சனம் உள்ளது.

அது தவிர இச்செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகக் கருதப்படும். ஏனெனில் இதில் ஜைது பின் அலீ என்பவர் உத்பா பின் கஸ்வான் (ரலி) யிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது. இதில் ஜைது பின் அலீ ஹிஜ்ரி 122ல் மரணமடைகிறார்.

தாரீகுல் கபீர், பாகம் 2, பக்கம் 403

அப்படி எனில் சுமார் ஹிஜ்ரி 20 ல் பிறந்திருப்பார் என்று பார்த்தாலும் கூட உத்பா (ரலி) யிடமிருந்து ஜைது அறிவிக்க இயலாது. ஏனெனில் உத்பா (ரலி) ஹிஜ்ரி 20க்குள் மரணித்து விட்டதாக வரலாறு சொல்கிறது.

எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த செய்தியாகவும் இருப்பதால் இது முழுக்க பலவீனமானகும்.

தப்ரானியின் மற்றொரு அறிவிப்பில் (பாகம்9, பக்கம் 67) மஃரூப் பின் ஹஸ்ஸான் என்பார் இடம்பெறுகிறார்.

இவரது நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் அதுவும் பலவீனம் ஆகும்.

(அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 8, பக்கம் 323)

இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.

إن لله ملائكة في الأرض سوى الحفظة يكتبون ما سقط من ورق الشجر فإذا أصاب أحدكم عرجة بأرض فلاة فليناد : أعينوا عباد الله.

பூமியில் அல்லாஹ்வுக்கென்று நன்மை தீமை பதிவு செய்யும் வானவர்கள் அல்லாத மற்றும் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் மரத்திலிருந்து உதிரும் இலைகளைப் பதிவு செய்வார்கள். உங்களுக்கு பாலைவன பூமியில் (மேலேறிச் செல்லும்) சிரமம் ஏற்பட்டால் ‘அல்லாஹ்வின் அடியார்களே உதவி செய்யுங்கள்’ என்று அழையுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்னது பஸ்ஸார், பாகம் 2, பக்கம்  178

இச்செய்தியில் இடம்பெறுகிற உஸாமா பின் ஸைது அல்லைஸீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.

யஹ்யா அல்கத்தான் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்.

இவர் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டார் என்று அபூஹாதம் விமர்சித்துள்ளார். இவரது செய்தியில் மறுக்கப்பட வேண்டிய அம்சம் உள்ளது என அஹ்மத் கூறியுள்ளார். இன்னும் பல அறிஞர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.

பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப்

பாகம் 1, பக்கம் 183

இந்தக் கருத்திலமைந்த அனைத்து செய்திகளும் அறிவிப்பு ரீதியாகவே பலவீனமாக உள்ளன. மேலும் இந்த ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுக்கும் எதிராகவே உள்ளது. (இதுபற்றி கீழே விளக்கப்பட்டுள்ளது.)

வாதம் – 4

 பற்பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்குக் கட்டளையிடுகிறார்கள்.

பதில் – 4

நபிகள் நாயகம் மீது இதை விட அபாண்டத்தை அநியாயமாக பரப்பிச் செல்ல முடியாது.

அல்லாஹ் அல்லாதவர்கள் ஒரு காலத்திலும் மனிதர்களின் துஆக்களை அறியமாட்டார்கள் என்றும் அதற்குப் பதிலளிக்க மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாகக் குர்ஆன் வழியே நபிகள்  நாயகம் நமக்கு போதித்து விட்டார்கள்.

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 7:197,198

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்திப்பவன் வழிகெட்டவன் என்று குர்ஆன் வர்ணிக்கின்றது.

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

அல்குர்ஆன் 46:5

அல்லாஹ் அல்லாதவரை அழைத்துப் பிரார்த்திப்பவன் அநீதி இழைத்தவன் என்று குர்ஆன் சாடுகிறது.

அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர்ஆன் 10:106

அல்லாஹ் அல்லாத யாரும் மனிதர்களின் பிரார்த்தனையைச் செவியுற மாட்டார்கள். செவியுற்றாலும் பதிலளிக்க சக்தி பெறமாட்டார்கள்.

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:13,14

தரையானாலும் கடலானாலும் எங்கும் அல்லாஹ்வே காப்பாற்றுகிறான் என்று இறைவன் கூறுகிறான்

தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?’’ என்று கேட்பீராக! “இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’’ என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:63, 64

இத்தகைய எண்ணற்ற இறைவசனங்களுக்கு மாற்றமாக, தான் கொண்டு வந்த சத்திய வேதத்திற்கு முரணாக, பாலைவனத்திலோ எங்குமோ ஒருவருக்கு உதவி தேவைப்படும் போது அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு நபிகள் நாயகம் ஒரு போதும் கூற மாட்டார்கள்.

எந்த செயலைப் பயனற்றது, வீணானது, வழிகேடு, இணைவைப்பு என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் போதித்துச் சென்றார்களோ அச்செயலை அந்த அல்லாஹ்வின் தூதரே செய்யுமாறு சொன்னார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமும் நம்ப மாட்டான்.

அப்படி நம்புபவன், அவ்வாறு சொல்பவன் உண்மை முஸ்லிமாக இருக்க மாட்டான். அவன் வேண்டும் என்றே நபிகள் நாயகம் மீது பொய்யுரைத்து நரகை முன்பதிவு செய்கிறான்.

இதில் மிகக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?

அவ்லியாக்களான இறைநேசர்களிடம் (?) நேரடியாக உதவி கோரலாம் என்று குர்ஆனே வழிகாட்டுகிறதாம். அதற்கு அவர்கள் குறிப்பிடும் ஆதாரத்தைப் பாருங்களேன்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————————————

அல்லாஹ்வின் பண்புகளை  நாம் மறுக்கிறோமா?

அர்ஷத் அலீ M.I.Sc.

அனைத்தையும் படைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்லாஹ்வின் குறிப்பிட்ட சில பண்புகளை நாம் மறுப்பதாக சமூக வலைத்தளங்களில் கள்ள ஸலஃபிக் கூட்டத்தினரால்  நமது ஜமாஅத்தைப் பற்றி தவறான விமர்சனம் செய்யப்படுகிறது.

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகிறானா?

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இரவின் மூன்றில் இறுதி  ஒரு பங்கு இருக்கும் போது  பாக்கியம் பெற்ற உயர்ந்துவிட்ட  நமது இறைவன் உலக வானத்திற்கு வந்து என்னை அழைப்பவர் யார்? அவருக்கு நான் பதிலளிப்பேன். என்னிடத்தில் (எதையாவது) கேட்பவர் யார்? அவருக்கு (அதனை) வழங்குவேன். என்னிடத்தின் மன்னிப்புத் தேடுபவர் யார்? அவரை மன்னிப்பேன். என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல்: புகாரீ 1145, 6321, 7494

இந்தக் கருத்துள்ள செய்தி முஸ்லிம், திர்மிதீ, அபூ தாவூத், அஹ்மத் இன்னும் பிற நூற்களிலும் ஆதாரப்பூர்வமான செய்தியாகப் பதிவிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்காமல் அல்லாஹ்வின் அருள் இறங்குகிறது என்று நாம் விளக்கம் அளிக்கின்றோம்.

இதை அடிப்படையாகக் கொண்டு தான் கள்ள ஸலபுக் கூட்டம் நம்மை விமர்சிக்கின்றார்கள்.

அல்லாஹ் இறங்கி வருகிறான் என்பதற்கு நேரடிப் பொருள் தான் கொடுக்க வேண்டும்.  மாற்று விளக்கம் அளிக்கக் கூடாது  என்று இந்த யூத ஸலஃபி கூட்டம் கூறுகின்றனர்.

நம்மைப் பொறுத்தவரை அல்லாஹ்வைப் பற்றி பேசுகிற அனைத்து சான்றுகளுக்கும் நேரடிப் பொருள் தான் கொடுக்க வேண்டும்.

எங்கே நேரடிப் பொருள் கொடுப்பது மற்ற சான்றுகளுடன் பொருந்திப் போகாமல் முரண்படுகிறதோ அங்கே மாற்று விளக்கம் அளிக்கலாம் என்பது தான் நமது நிலைப்பாடு.

அல்லாஹ் இறங்கி வருகின்றான் என்பதை நேரடிப் பொருளில் எடுத்துக் கொண்டால் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று வரக்கூடிய குர்ஆன் வசனங்களுடனும் அது தொடர்பான ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுடனும் அந்தப் பொருள் பொருந்திப் போகாமல் முரண்பாடு ஏற்படுகிறது.

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அவனே காரியங்களை நிர்வகிக்கிறான்.

அல் குர்ஆன் 10:3

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருந்தான் என்ற கருத்தில் (7:54 13:2 20:5 25:59 32:4 57:4) ஆகிய வசனங்களிலும் ஏராளமான நபிமொழிகளிலும் இடம்பெற்றிருக்கிறது.

அல்லாஹ் இறங்கி வருகிறான் எனும் புகாரி செய்தியை நேரடிப் பொருளில் புரிந்து கொண்டால் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் எனும் கருத்துடைய இவையனைத்தையும் மறுக்கும் நிலை ஏற்படும்.

எனவே அல்லாஹ்வின் இறங்குதல் என்பதற்கு வேறு பொருள் கொடுக்கிறோம். அதாவது அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அவனே இறங்குவதில்லை. அவனது அருள் இறங்குகிறது.  அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற சான்றுகள் இருப்பதாலேயே இந்த நபிமொழிக்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்று கூறுகிறோம்.

இந்த வாதத்தை நாம் குறிப்பிடும் போது இந்த கள்ள ஸலஃபிக் கூட்டம் சில தவறான வாதங்களை வைக்கின்றனர்.

அவை…

*             அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்றால் அர்ஷில் இருக்கின்றான் என்றும், அல்லாஹ் இறங்கி வருகிறான் என்றால் அல்லாஹ் இறங்கி வருகிறான் என்றும் நேரடியாகப்  பொருள் கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள் வைப்பது அல்லாஹ்வுக்கு இறங்குதல் என்ற பண்பிருப்பதை மறுப்பதாக அமையும்.

*             இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன போது நபித் தோழர்கள் இறங்குதல் என்பதை முரணாக விளங்கிக் கொண்டு ஏன் நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்கவில்லை?

*             அல்லாஹ்வின் அனைத்து  பண்புகளை நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும் என்ற விதி இருக்கும் போது மாற்று பொருள் கொடுப்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நமது பதில்கள்

முதல் அடிப்படையாக இவ்வாறான வாதங்களுக்கு, அல்லாஹ்வின் தன்மைகளையும் மொழி வழக்கையும் குர்ஆன் ஆதராபூர்வமான நபி மொழியின் அடிப்படையில் சரியாக விளங்காததே இதற்கு காரணம்

அல்லாஹ்வின் அனைத்துப்  பண்புகளையும் நேரடியாகத் தான் விளங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

எங்கே மற்ற சான்றுகளுடன் பொருந்திப் போகவில்லையோ அங்கே மாற்றுப் பொருள் கொடுப்பதில் தவறில்லை. இன்னும் அத்தகைய இடங்களில் மாற்றுப் பொருள் கொடுப்பது தான் சரியான வழிமுறையும் கூட.

திருக்குர்ஆன், நபிமொழிகளில் அவ்வாறு நேரடிப் பொருள் கொடுக்க முடியாத பல இடங்களில் அனைவராலும் மாற்றுப் பொருள்தான் கொடுக்கப்படுகின்றது.

நாம் அல்லாஹ் இறங்குகிறான் என்பதற்கு மாற்றுப் பொருள் கொடுத்ததும் ‘ஆ! இது அல்லாஹ்வின் பண்பை மறுக்கும் செயல்’ என தாம் தூம் என்று வானத்திற்கும், பூமிக்குமாய் துள்ளிக் குதிக்கும் கள்ள ஸலபிக் கூட்டம் வசதியாக அதை மறைத்து விடுகிறார்கள்.

கள்ள ஸலபுக் கூட்டம் முதல் கொண்டு அனைவராலும் மாற்று விளக்கம் அளிக்கப்படுகின்ற ஆதாரங்களைக் காண்போம்.

பிடரி நரம்பை விட நெருக்கத்தில் உள்ள அல்லாஹ்

அல்லாஹ் தனக்கும் மனினுக்கும் உள்ள நெருக்கத்தை பற்றி குறிப்பிடும் போது,

நாம் அவனுக்கு பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம்.

அல்குர்ஆன் 50:16

என்று கூறுகிறான்.

ஒவ்வொருக்கும் பிடரி நரம்பை விட அல்லாஹ் நெருக்கம் என்றால் ஒவ்வொவருக்கும் ஒரு அல்லாஹ் என்றாகிவிடும். அனைத்தையும் நேரடிப் பொருளில் தான் விளங்க வேண்டும் என்ற வாதத்தின்படி இதையும் பொருள் செய்வார்களா? அல்லது இது அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. நேரடி பொருளில் பயன்படுத்தவில்லை   என்பதை அல்லாஹ்வே இந்த அத்தியாயத்தின் அடுத்த வசனங்களில்  விளக்குகிறான் என்பார்களா?

வலப்புறத்திலும் இடப்புறத்திலும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடத்தில் கண்கானிக்கும் பதிவாளர் இல்லாமல் இருப்பதில்லை.

அல்குர்ஆன் 50:17, 18

பிடரி நரம்பை விட நெருக்கம் என்பதற்கு வானவர்களின் மூலமான கண்காணிப்பே என்று அருமையான விளக்கத்தை அல்லாஹ் தருகிறான்.

இதை கள்ள ஸலபுக் கூட்டம் மறுப்பார்களா? நேரடிப் பொருள் தான் கொடுக்க வேண்டும் என வாதிப்பார்களா?

அல்லாஹ் கட்டிடங்களுக்கு கீழே செல்கிறானா?

அவர்களுக்கு முன்சென்றோரும்  சூழச்சி செய்தனர். அல்லாஹ் அவர்களின் கட்டிடங்களில் அடிப்புறத்தில் வந்தான். மேலேயிருந்த முகடு  அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் உணராத விதத்தில் அவர்களிடத்தில் வேதனை வந்தது.

அல்குர்ஆன் 16:26

நேரடிப் பொருளில் தான் விளங்க வேண்டும் என்றால் கட்டிடங்களில் கீழ்ப்பகுதியில் அல்லாஹ் சென்று தரைமட்டமாக்கினான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் தான் கட்டிடங்களைத் தகர்ப்பதற்கு இவ்வாறு சிரமப்பட வேண்டும். அல்லாஹ் தீயவர்களை அழிப்பதற்கு இவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகு என்றால் ஆகி விடும் என்பது தான் அகிலங்களின் அதிபதியின் பண்பாகும்.

மேற்கண்ட வசனத்திற்கு நேரடி விளக்கம் கொடுத்தால் அல்லாஹ்வின் பல பண்புகள் செயல்களை மறுத்தவர்களாகி விடுவோம். எனவே பூகம்பம் ஏற்படுமாறு அல்லாஹ் இட்ட கட்டளை என்று தான் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் விளக்கம் கூறிய வசனங்களை எவ்வாறு விளங்கிக் கொள்கிறோமோ அதைப் போலத் தான் இந்த வசனத்தை விளங்குவது முறையாகும்.

நாங்கள் எங்கும் நேரடிப் பொருள் தான் செய்வோம் எனக் கூறி அல்லாஹ் கட்டிடங்களுக்கு அடியில் நேரடியாக வந்து அசைத்து விட்டு சென்றான் என்று இந்த கூட்டம் வாதிப்பார்கள் போலும்.

அல்லாஹ் அழிப்பதற்கு இறங்கி வருவானா?

மேகக் கூட்டங்களில் அல்லாஹ்வும் வானவர்களும் வந்து முடிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?

அல் குர்ஆன் 2:210

பூமியை அதன் ஓரங்களில் குறைப்பதற்காக  பூமிக்கு நாம் வருவதை அவர்கள் பார்க்கவில்லையா?

அல் குர்ஆன் 13:41

அல்லாஹ் தீயவர்களை அழிப்பதற்கு நேரடியாகவோ, மேகக் கூட்டங்களிலோ வர வேண்டும் என்ற அவசியமில்லை.

அது ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்

அல் குர்ஆன் 36:29

எனவே அல்லாஹ் மேகக்கூட்டங்களில் வருவதென்றால் பெரும் மேகத்தில் அல்லாஹ்வின் வேதனை இடியாலும், பெரும் மழையாலும் பேரழிவு ஏற்படுத்தும் என்று பொருள் கொண்டால் தான் சரியாக பொருள் கொள்ள முடியும்.

அது போல பூமியின் ஓரத்தைக் குறைப்பதற்கு அல்லாஹ் வருகின்றான் என்பதையும் அல்லாஹ்வின் வேதனை என்று பொருள் கொண்டால் தான் அல்லாஹ்வின் மற்ற எந்த பண்புகளையும் பாதிக்காது.

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் கையின் மீது வைத்து பைஅத் செய்தார்களா?

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது.

அல்குர்ஆன் 48:10

இதற்கு நேரடிப் பொருள் கொடுப்பதாக இருந்தால் அல்லாஹ் அர்ஷிலிருந்து கை நீட்டி பைஅத் செய்தான் என்று தான் பொருள் கொள்ள முடியும். இப்படித்தான் கள்ள ஸலபிகள் விளங்குவார்கள் போலும்.

நபித்தோழர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை இருக்கிறதென்றால் அல்லாஹ்வின் தூதரின் கைகளைப் பிடித்து உறுதிமொழி செய்தது  அல்லாஹ்விடத்தில் செய்த உறுதிமொழியை போன்றது. உறுதிமொழிக்கு மாற்றமாக நடக்காமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்திற்காக தான் அல்லாஹ் கூறுகிறான். என்று தான் விளங்க முடியும்.

அனைவருடனும் அல்லாஹ் இருக்கிறான்

அல்லாஹ் பொறு¬மாயாளர்களுடன் இருக்கிறான்

அல்குர்ஆன் 2:153, 2:249, 8:46

அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான்

அல்குர்ஆன் 2:194,  9:36, 9:123

அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்

அல்குர்ஆன் 8:19

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்

அல்குர்ஆன் 57:4

இந்த வசனங்களுக்கு எல்லாம் நேரடிப் பொருள் கொடுத்தால் மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதரிடத்திலும் அல்லாஹ் இருக்கிறான் வழிகெட்ட ஆபத்தான பொருள் வந்து விடும்.

மனிதர்கள் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் இருக்கிறான் என்றால் அவனது கண்காணிப்பு உள்ளது என்பது இவ்வசனங்களின் பொருள் என்பதை யாரும் விளங்கலாம். அப்படித்தான் கள்ள ஸலபுகள் முதல் கொண்டு அனைவரும் பொருள் செய்கின்றனர்.

இப்படி நிறைய வசனங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அல்லாஹ்வுக்கு உதவி தேவையா?

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

அல்குர்ஆன் 47:7

தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவி செய்கிறான்.

அல்லாஹ் நம்மிடத்தில் கடன் கேட்கிறானா?

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

அல் குர்ஆன் 2:245

இதே கருத்தில் 5:12 57:11  57:18 64:17 73:20 ஆகிய வசனங்கள் வருகிறது.

அல்லாஹ் தன் நேசரின் கண்ணாக, கையாக, காலாக மாறினானா?

அல்லாஹ் கூறுவதாக (ஹதீஸ் குத்ஸீ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

எனது நேசருக்கு எதிராக எவன் செயல்படுகிறானோ அவனுக்கெதிராக நான் யுத்தத்தை அறிவிக்கிறேன். எனது அடியான் மீது கடமையாக்கியவை (வணக்க வழிபாடு)களை விட எனக்கு விருப்பமான உபரியான (வணக்க வழிபாடு)களை வைத்து என்னை அவன் தொடர்ந்து நெருங்கிக் கொண்டே இருக்கும் போது இறுதியாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் கேட்கின்ற காதாக, அவன் பார்க்கின்ற பார்வையாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிறேன். என்னிடத்தில் (எதையாவது) கேட்டால் உறுதியாக நான் அவனுக்கு வழங்குவேன். என்னிடத்தில் பாதுகாப்பு தேடினால் உறுதியாக நான் அவனைப் பாதுகாப்பேன். இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதற்குத் தயங்குவதை விட வேறெதையும் செய்வதற்கும் நான் தயங்கமாட்டேன். அவன் மரணத்தை வெறுக்கிறான். அவனுக்கு நான் அதன் தீங்கை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலீ)

நூல்: புகாரீ 6502

இந்தச் செய்தியில் அல்லாஹ் தனக்கு விருப்பமான அடியார்களின் கண்ணாக, காதாக, கையாக, காலாக இருப்பதாகக் கூறுகிறான். அனைத்திற்கும் நேரடிப் பொருள் தான் என்ற கள்ள ஸலபுகளின் அர்த்தப்படி நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ்வின் நேசருக்கு  அல்லாஹ்வே கண்ணாக, காதாக, கையாக, காலாக மாறிவிட்டான் என்ற மிக இழிவான பொருள் கொண்டு அல்லாஹ்வை படைப்பினங்களுக்கு ஒப்பாக்குகின்ற இணைவைப்பில் தள்ளிவிடும்.

இதற்கு நேரடிப் பொருள் செய்து தான் அவ்லியாக்கள், வலிமார்கள் என்ற பெயரில் மக்களை தரீக்காவாதிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதை கள்ள ஸலபுக் கூட்டம் ஆதரிக்கின்றதா?

அல்லாஹ் அடியானுக்காக ஓடி வருகிறானா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியான் என்னை நினைக்கும் இடத்தில்  நான் அவனுடன் இருக்கிறேன். என்னை அவனது மனதிற்குள் அவன் நினைத்தால் நானும் அவனை என் மனதிற்குள் நினைப்பேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னைப் பற்றி கூறினால் நானும் அதை விடச் சிறந்த கூட்டத்தில் அவனைப் பற்றிக் கூறுவேன். அவன் என்னை ஒரு ஜான் அளவு நெருங்கினால் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் என்னை ஒரு முழம்  நெருங்கினால்  அவனை நான் நான்கு முழம் நெருங்குவேன். என்னிடத்தில் அவன் நடந்து வந்தால் அவனிடத்தில் ஓடி வருவேன்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலீ)

நூல்: புகாரீ 5195

மூஸா நபியுடன் அல்லாஹ்

மூஸா (அலை) அவர்களும் அவர்களது கூட்டத்தினரும் தங்களுக்கு முன்பாகக் கடலும் பின்பாக ஃபிர்அவ்னும் அவனது படையும் அழிப்பதற்காக வரும் போது மூஸா (அலை) அவர்கள் சொன்னதை அல்லாஹ் கூறுகிறான்.

அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்’’ என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 26:62

இதற்கு எப்படி அல்லாஹ் மூஸா நபியுடன் இருந்ததாக நேரடியாகப் பொருள் கொள்ள முடியாதோ அதுபோலத்தான் அல்லாஹ் இறங்கி வருகிறான் எனும் புகாரி செய்தியில் நேரடிப் பொருள் கொடுத்தால் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பதற்கு முரணாகப் போய் அந்த வசனத்தையே அர்த்தமற்றதாக ஆக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

ஏனெனில் இந்த ஹதீஸில், இரவின் மூன்றில் இறுதி ஒரு பங்கு இருக்கும் போது என்று சொல்லப்படுகிறது. இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது அல்லாஹ் இறங்குறான் என்றால் ஒவ்வொரு வினாடியும் அவன் இறங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் பூமி உருண்டையாகவும் சுழலக்கூடியதாகவும் உள்ளதால் இறைவன் இறங்குவதாகக் கூறப்படும் நேரம் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டு இருக்கும். அல்லாஹ் எல்லா நேரமும் முதல் வானத்திலேயே இருப்பான் என்ற கருத்து கிடைக்கும். அர்ஷில் அவன் சிறிது நேரம் கூட இருக்க மாட்டான் என்ற கருத்து வரும்.

அதனாலேயே அல்லாஹ்வின் அருள் இறங்கி வருகிறது என்று மாற்றுப் பொருள் கொடுக்கிறோம்.

கள்ள ஸலபுகள் கூறுவதைப் போல மாற்றுப் பொருள் கொடுப்பது இறைவனின் பண்பை மறுக்கும் செயல் என்றால் மேலே நாம் குறிப்பிட்ட அனைத்து சான்றுகளிலும் இவர்கள் முதற்கொண்டு அனைவருமே மாற்று அர்த்தம் தானே கொடுக்கிறார்கள்? அப்படி என்றால் அவர்கள் அனைவரும் இறைவனின் பண்பை மறுத்தவர்களா? என்பதை கள்ள ஸலபுகள் விளக்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————

இணை கற்பித்தல் தொடர் – 49

மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

கனவுகளில் இறந்தவர் வருவது ஆதாரமாகுமா?

மரணித்து விட்ட இந்தப் பெரியார் என் கனவில் வந்தார்; அதனால் அவர் உயிரோடு உள்ளார் என்பதையும் சமாதி வழிபாடு செய்பவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள்.

ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அதுபோன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் என்றே புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளும் உண்மையுமாகும்.

உதாரணமாக இன்று உயிருடன் உலகத்தில் வாழும் ஒருவரை நாம் கனவில் காண்பதாக வைத்துக் கொள்வோம். கனவில் அவரைப் பார்த்த பின்னர் அவரை நாம் நேரிலும் சந்திக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அந்த மனிதர் “நான் நேற்றிரவு உன் கனவில் வந்தேனே?’’ என்று கூறுவாரா என்றால் நிச்சயமாகக் கூற மாட்டார்.

நமது கனவில் அவர் வந்தது நமக்குத் தான் தெரியுமே தவிர அவருக்குத் தெரியாது. “உங்களை நான் கனவில் கண்டேன்’’ என்று அவரிடம் நாம் கூறினால் தான் அதை அவரால் அறிந்து கொள்ள முடியும்.

எத்தனையோ விஷயங்களை ஒருவர் நம்மிடம் பேசுவதாக நாம் கனவு கண்டிருப்போம். நாம் அவரிடம் போய் “நேற்று என் கனவில் நீங்கள் கூறிய அறிவுரையை மீண்டும் கூறுங்கள்’’ என்று கேட்டால் அவரால் அதைக் கூற முடியாது. “நான் கனவில் என்ன அறிவுரை கூறினேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்?’’ என்பது தான் அவரது பதிலாக இருக்கும்.

எனவே ஒருவரை நாம் கனவில் கண்டால் அவரே வந்து விட்டார் என்று கருதக் கூடாது. அவர் நம்மோடு பேசியது அனைத்தும் அவரது வார்த்தைகள் என்றும் நாம் நினைக்கக் கூடாது. அவருக்கு நமது கனவில் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அவரை எடுத்துக் காட்டி அவர் கூறுவது போல் சில செய்திகளை இறைவன் நமக்குக் கூறலாம். அல்லது ஷைத்தான் அவரது வடிவத்தில் வந்து நமக்குக் கெட்ட கனவை ஏற்படுத்தியிருப்பான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் உயிருடன் உள்ள ஒருவரை ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கூட கனவில் காண முடியும். அவர் ஆயிரம் இடத்துக்குச் சென்று காட்சியளித்தார் என்று அதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒருவரை வீடியோவில் பதிந்து மற்றவருக்குக் காட்டுவது போல் தான் கனவில் காண்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?

சில பெரியார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாக சில நூல்களில் எழுதப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர் என்று சிலர் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா? என்பது பற்றிய அறிவும் நமக்கு இருப்பது அவசியமாகும்.

யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 610, 6197

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.

என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்’’ என்பது தான் அந்த நபிமொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6993

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யார் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.

“என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும்போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும்.

அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும்போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது.

இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார்’’ என்று கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைச் சான்றாகக் கொண்டு நான் தான் முஹம்மது நபி என்று கனவில் ஒருவர் நம்மிடம் சொல்வது போல் கண்டால் கனவில் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று சிலர் கருதுகின்றனர்.

என் பெயரைச் சொல்லி ஷைத்தான் கனவில் வரமாட்டான் என்று சொல்லப்பட்டால் தான் அதிலிருந்து இந்தக் கருத்தை எடுக்க முடியும். ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான் என்ற சொல்லில் இருந்து இவர்கள் கூறும் கருத்தை எடுக்க முடியாது.

ஷைத்தான் அவனுக்கே உரிய வடிவில் வந்து நான் தான் முஹம்மத் நபி என்று சொல்லலாம். அவர்களின் பெயரைப் பயன்படுத்தி பொய் சொல்லி இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

தர்காக்களில் அற்புதம் நடக்கிறதா?

இறந்தவர்களுக்கு ஆற்றல் இல்லை என்றால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? அது எப்படி என்று சிலர் கேட்கின்றனர்.

தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்துப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் “இவர் ஒரு மகானா’’ என்று கூறிவிட்டால் ஏதேனும் கேடு விளைந்து விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி, கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் மரணித்து விடுவதைப் பார்க்கிறோம். தர்காக்களில் அற்புதம் நடக்கவில்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை.

கோவில்களிலும், சர்ச்சுகளிலும் இன்னும் பல வழிபாட்டுத் தலங்களிலும் நடப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு நடப்பதாக அவர்கள் நம்புவதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விடப் பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. பெரும்பாலும் தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் வாதமாக இருக்கிறது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே! இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறும்.

அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது என்று 7:34, 10:49, 16:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

மரணித்த மகான்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். இதை 4:157-159, 5:75, 43:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?

அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.

இது பற்றி அல்லாஹ் தெள்ளத் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள்!

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 13:14

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். ‘எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக் கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 6:36

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 27:80

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 30:52

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

திருக்குர்ஆன் 35:22

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:5,6

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193

வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?’ என்று (முஹம்மதே!) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! ‘அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்’ என்று கூறுவீராக! ‘குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா?’ என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக ‘படைத்தது யார்?’ என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்’ என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:16

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!’ என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4

இந்த வசனங்களும், இது போன்ற எண்ணற்ற வசனங்களும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:197, 10:12, 10:106, 14:39, 14:40, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66,

மரணித்தவர்கள் ஆன்மாக்கள் உலகில் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உயிருடன் உள்ளனர்; அவர்கள் இவ்வுலகுக்கு வர முடியாது; இவ்வுலகில் நடப்பதையும், பேசுவதையும் அறிய முடியாது; அவர்களால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதை உணர்ந்து அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

—————————————————————————————————————————————————————————————

ஹதீஸைப் போன்று தோற்றமளிக்கும் நபித்தோழர்களின் செய்திகள்

எம். எஸ். ஜீனத் நிஸா, கடையநல்லூர்

நபித்தோழர்களின் கூற்றுக்கள் மற்றும் செயல்கள் மார்க்க ஆதாரங்களாக ஆகாது என்பதை யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். எனினும் நமது பேச்சாளர்களில் சிலர் அறியாமை மற்றும் கவனக் குறைவின் காரணமாக நபிகளாரின் செய்திகளைப் போன்று தோற்றமளிக்கின்ற நபித்தோழர்களின் கருத்துக்களை மக்களிடத்தில் நபிகளார் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று பிரச்சாரம் செய்வதைக் காணமுடிகின்றது.

இதற்கு கீழ்க்காணும் ஹதீஸ்களை உதாரணங்களாக குறிப்பிடலாம்.

ஹாரிஸ் இப்னு சுவைத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றை தாமாகக் கூறினார்கள். (அவையாவன:)

  1. இறைநம்பிக்கையாளர் தமது பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலை தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால் பாவியோ தன் பாவங்களை தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று அற்பமாகக் காண்பான். இதைக் கூறிய போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவதைப் போல தம் கையால் சைகை செய்தார்கள். பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்:
  2. ஒரு மனிதன் பயணத்தினிடையே ஒய்வெடுக்க ஒரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும், பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழே வைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் கடுமையான வெப்பமும், தாகமும் அல்லது அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று ஏற்பட்டது. அவன் நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பச் செல்கின்றேன் என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப் போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். அந்த மனிதன் மகிழ்ச்சியடைவதை விட தன் அடியான் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான்.

நூல்: புகாரி 6308

மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் ஹாரிஸ் இப்னு சுவைத் (ரஹ்) என்பவர் எனக்கு இப்னு மஸ்வூத் இரு செய்திகளை அறிவித்தார். அதில் ஒன்று நபிகளாரின் கூற்று மற்றொன்று இப்னு மஸ்வூத் (ரலி)யின் சொந்த கூற்று என்பதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் பேச்சாளர்கள் அறிவிப்பாளர் கூறுவதை கவனிக்கத் தவறி இப்னு மஸ்வூதின் கூற்றையும் நபிகளாரின் கூற்றைப் போன்று கூறிவிடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் இடம் பெறக்கூடிய, ‘இறை நம்பிக்கையாளர் தமது பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும் அந்த மலை தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால் பாவியோ தன் பாவங்களை தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று அற்பமாகக் காண்பான்’ என்ற செய்தியை பாவத்திற்கு எந்தளவிற்கு அஞ்ச வேண்டும்? மூஃமின்களின் பார்வையில் பாவம் என்பது எந்தளவிற்கு தோற்றமளிக்க வேண்டும்? தவ்பா தேடுவதின் முக்கியத்துவம் யாது? என்பது போன்ற தலைப்புகளின் கீழ் அதிகமான பேச்சாளர்கள் மேற்கண்ட செய்தியை இன்றும் பயன்படுத்துவதை காண்கின்றோம். ஆனால் அது இப்னு மஸ்வூதின் சொந்தக் கூற்று என்பதைப் பேச்சாளர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இறைவனுக்குப் பயந்தவர்களாக குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்க ஆதாரங்கள் என்பதை ஒவ்வொரு மேடைகளிலும் நமது ஜமாஅத் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் நமது பேச்சாளர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

இது போன்று பேச்சாளர்கள் ‘உலகப்பற்றின்மை’ என்ற தலைப்பில் பிரபலமாகப் பேசக்கூடிய மற்றொரு செய்தி இதோ:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

நூல்: புகாரி: 6416

மேற்கண்ட செய்தியில், ‘நீ இந்தப் பூமியில் அந்நியனைப் போல இரு! அல்லது வழிப்போக்கனைப் போல இரு’ என்பது மட்டும் தான் நபிகளாரின் கூற்று. ஆனால் அதனைத் தொடர்ந்து வருகின்ற  “நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறிதைச் செலவிடு. உனது இறப்புக்காக உனது வாழ்நாளில் சிறிதைச் செலவிடு’’ என்பது இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்த கூற்று.

ஆனால் ஒரு சில பேச்சாளர்களோ மேற்கண்ட நபிகளாரின் கூற்றைக் கூறி முடித்த பிறகு கீழ்க்காணும் இப்னு உமரின் கருத்தையும் சேர்த்துக் கூறி அதற்கும் ஹதீஸின் தோற்றத்தைக் கொடுத்து விடுகின்றனர். இது தவறாகும். இது போன்ற செய்திகளை ஜும்ஆ மேடைகளிலும், தர்பிய்யாக்களிலும் அதிகம் கேட்க முடிகின்றது. எனவே பேச்சாளர்கள் இது போன்ற செய்திகளைத் தவிர்க்க வேண்டும்.

இன்னும் சிலர் தாங்கள் உரையாற்றும் வேளையில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் எதையேனும் மறந்துவிட்டால் மக்களுக்கு மத்தியில்  அது தமக்கு கௌரவக் குறைச்சலாகிவிடும் என்று எண்ணி அந்தச் சமயத்தில் தமது வாயில் வந்ததையெல்லாம் சொல்லி விட்டு இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான், இவ்வாறு இறைத்தூதர் கூறினார்கள் என்று கூறிவிடுகின்றனர்.

மேலும் சிலர் பலவீனமான செய்திகளையும் தங்களது உரைகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறாகும். இதையும் பேச்சாளர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதுபோன்ற விஷயங்கள் நபிகளாரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டதாகும்.

அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராய் இருந்தபோது நான் (மஸ்ஜிது கூஃபா) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர் மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்‘’ என்று  கூறுவதை நான் கேட்டுள்ளேன்.

நூல்: முஸ்லிம் 5

மேலும் ஒரு சில பேச்சாளர்கள் நபிகளாரின் ஹதீஸ்களைக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் தங்களது சொந்தக் கருத்துக்களையும் கூறி முடித்துவிட்டு ‘இவ்வாறு நபிகளார் கூறியுள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுவிடுகின்றனர்.

உதாரணமாக, முகஸ்துதிக்காக செய்யப்படும் நல்லறங்களுக்கு இறைவனிடத்தில் கூலி கிடைக்காது என்பதை விளக்கிக் கொண்டிருக்கும் பேச்சாளர், ‘நம் அருகில் நின்று தொழும் ஒருவர், நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ அல்லது அவரால் நாம் கண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ நாம் வழக்கமாகத் தொழுவதை விட நீட்டித் தொழுதால் அது முகஸ்துதி என்று நபிகளார் குறிப்பிடுகிறார்கள்’ என உரை நிகழ்த்துகிறார்.

இதனை அவர் எவ்வாறு விளக்கவேண்டுமெனில் ‘நம் அருகில் நின்று தொழும் ஒருவர், நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ அல்லது அவரால் நாம் கண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ நாம் வழக்கமாக தொழுவதை விட நீட்டித் தொழுதால் அது தான் முகஸ்துதி’ என்று கூறிவிட்டு அதற்கான ஆதாரத்தை அவர் மேற்கோள்  காட்ட வேண்டும்.

அபூசயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இறைவனின்) கணுக்காலை விட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம் பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ, பாராட்டுக்காகவோ சிரம் பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அவர் சிரம்பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்துவிடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)

நூல்: முஸ்லிம் 302  (சுருக்கம்)

முகஸ்துதிக்காக செய்யப்படும் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்காது என்பதை நபிகளார் மேற்கண்ட செய்தியில் குறிப்பிடுவதாகத் தெளிவுபடுத்த வேண்டும். விளக்கம் என்ற பெயரில் ஹதீஸ்களையும் தங்களது சொந்தக் கருத்துக்களையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் தெளிவாக உரை நிகழ்த்த வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————

தீமையைத் தடுப்பதும் மார்க்கப்பணியே!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

ஏகத்துவக் கொள்கையை தூய முறையில் பின்பற்றுவதுடன் அது குறித்து பிற மக்களுக்கும் நாம் எடுத்துரைக்க வேண்டும். சத்தியத்தை நோக்கி அடுத்த மக்களையும் அழைக்க வேண்டும். இத்தகைய அழைப்புப் பணி தொடர்பான வழிமுறைகள் குர்ஆன் ஹதீஸில் நிறைந்துள்ளன. அந்தப் போதனைகளை அறியாமல் அல்லது அறிந்தாலும் அதன்படி செயல்படாமல் அநேக மக்கள் இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வதன் அவசியத்தை அறிந்து அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவோரும் இருக்கின்றனர். ஆனால், அவர்களில் அதிகமானோர், நன்மையை ஏவுவதற்கு முக்கியத்துவம் தருவதைப் போன்று தீமையைத் தடுப்பதற்கு முன்வருவதில்லை; போதுமான அளவு முனைப்பு காட்டுவதில்லை.

காரணம், தீமையைக் கண்டிப்பது குறித்து சில தவறான நிலைபாடுகளும் சிந்தனைகளும் அவர்களிடம் புகுந்துள்ளன. எனவே இது தொடர்பாக மார்க்கம் கூறும் சில செய்திகளை இப்போது காண்போம்.

தீமையைத் தடுக்கும் மார்க்கம்

இஸ்லாம் என்பது முழுமையான வாழ்வியல் களஞ்சியம். அது மனித சமுதாயத்திற்கு நன்மை தரும் காரியங்கள் அனைத்துக்கும் தெளிவாக வழிகாட்டியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல், சமுதாயத்தைப் பாதிக்கும் எல்லா வகையான தீமைகளையும் கடுமையாகத் தடுத்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்வதாயின் நமக்கு முன்மாதிரியாக இருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய வாழ்வில் இந்த இரு அம்சங்களும் இணைந்தே இருந்தன.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு தடை செய்கிறார்.

திருக்குர்ஆன் 7:157

அபூதர் (ரலி) கூறினார்கள்:

நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ‘ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், ‘நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா’ என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், ‘உன்னிடம் என்ன செய்தி உண்டு’ என்று கேட்டேன். ‘நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்’ என்றார். நான் அவரிடம், ‘போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை’ என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்) பையையும், கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (3522)

என்னிடமிருந்து ஒரு செய்தியை அறிந்தாலும் அதைப் பிறருக்கு அறிவியுங்கள் எனும் அல்லாஹ்வின் தூதருடைய வார்த்தையை நினைவூட்டி அழைப்புப் பணி செய்யும் சகோதரர்கள் ஒருகணம் யோசிக்கட்டும்.

நபியவர்கள் நற்செயல்களைப் போதித்தது போலவே அழித்தொழிக்கும் செயல்களைப் பற்றியும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் தானே? ஆகையால், தொழுகை, நோன்பு, பொறுமை, தர்மம் போன்றவற்றை மட்டும் வலியுறுத்தாமல் அனாச்சாரங்களை ஒழிக்கவும் மூடநம்பிக்கைகளைக் களையவும் துணிந்து களமிறங்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மார்க்கப் பணி பரிபூரணமாகும் என்பதை புரிந்து கொள்ளட்டும்.

நம்பிக்கையாளர்களின் நற்பண்பு

முஃமின்களின் பண்புகளைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு வசனங்களில் பேசுகிறான். அவ்வாறு கூறும் போது, நம்பிக்கை கொண்டவர்கள் சக மனிதர்களைத் தீமைகளில் இருந்து தடுப்பார்கள் என்று சேர்த்தே குறிப்பிடுகிறான். ஆகவே, சமூகத்தில் இருக்கும் தீமைகள் சிறிதாயினும் பெரிதாயினும் அவற்றைக் களைந்தெறிந்து நமது நம்பிக்கையை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:71

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

திருக்குர்ஆன் 3:114

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.

திருக்குர்ஆன் 22:41

நல்ல சிந்தனைகளை விதைத்தால் போதும் தீமைகள் தானாகத் தொலைந்துவிடும் என்று சிலர் வாதிடுகின்றனர். தீமையைத் தடுக்க வேண்டும் என்கிற இறைவனின் ஆணைக்கு அணைகட்ட நினைக்கிறார்கள். இவர்களின் கருத்து எல்லா இடங்களிலும் சாத்தியமாகாது. அசுத்தத்தை அகற்றாமல் வெறும் நறுமணத்தைக் கொட்டுவதால் மட்டும் எதிர்பார்க்கும் முழுத் தூய்மை கிடைத்து விடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளங்க வேண்டும்.

தீமையைத் தடுக்காத சமுதாயம்

முன்சென்ற சமுதாயத்தாரிடம் இருந்த மோசமான பண்புகளை அல்லாஹ் திருமறையில் அடையாளம் காட்டியுள்ளான். அவ்வகையில், பனூ இஸ்ராயீல் கூட்டத்தார் சமுதாயத்தில் அரங்கேறும் கெட்ட செயல்களைத் தடுக்காமல் இருந்தார்கள் என்பதை அறியலாம். ஆதலால், நேர்வழியில் நிலைத்திருக்க விரும்பும் நாம் வழிகேடுகளைத் தகர்க்கும் விஷயத்தில் அவர்களைப் போன்று பொடும்போக்குத்தனமாக இருந்து விடக் கூடாது. அப்போதுதான் அல்லாஹ்விடம் சிறந்தவர்கள் எனும் தகுதியைப் பெற இயலும்.

தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 5:78,79

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!

திருக்குர்ஆன் 3:110

தீமையை தடுக்காததும் குற்றமே!

மார்க்கம் தடுக்கும் காரியங்களை செய்வதும் குற்றம். அவற்றை மற்றவர்கள் செய்யும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் குற்றம். இதைக் கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு ஊராருடைய வரலாறு நமக்கு விளக்குகிறது. அவர்களை அல்லாஹ் சோதித்த போது வரம்பு மீறியவர்களும், அவர்களைத் தடுக்காமல் சுயநலமாக இருந்தோரும் தண்டிக்கப்பட்டார்கள். தாங்களும் கட்டுப்பட்டு பிறரையும் கட்டுப்படுமாறு கூறிய மக்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள்.

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம். “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?’’ என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)’’ எனக் கூறினர். கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!’’ என்று அவர்களுக்குக் கூறினோம்.

திருக்குர்ஆன் 7: 163-166

அனைவரும் தவறு என்று ஒத்துக் கொள்கிற விஷயத்தைப் பற்றி பேசுவோமே தவிர, சரியென நினைத்து காலங்காலமாகச் செய்யும் தவறுகளைக் குறித்து மூச்சுவிட மாட்டோம் என்கின்றனர் சிலர். நல்லவற்றை ஆதரித்துப் பேசுவோமே தவிர தப்புகளை பற்றி வாய்திறக்கவே மாட்டோம் என்று மழுப்புகின்றனர். இவ்வாறு தட்டுத்தடுமாறும் ஆட்களுக்குரிய தக்க பாடம் மேலுள்ள சம்பவத்தில் உள்ளது.

தீமை பெருகிவிட்டால் பாதிப்பு

எவரும் எதையும் செய்யட்டும் என்று நல்லவர்கள் அலட்சியமாக இருப்பது முறையல்ல. சமூகத்தில் ஹராமான காரியங்கள் பெருகிவிட்டால் அவற்றைச் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பாதிப்பு வரும். இதைச் சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் நபியவர்கள் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும், அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.  (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).  அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) “நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்‘ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டு விட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 2493

நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது’ என்று தம் கட்டை விரலையும் அதற்கு அடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்..’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)

நூல்: புகாரி 3346, 3598

இன்று இந்த எச்சரிக்கையை உலகமே உணர்ந்து கொண்டிருக்கிறது. வரதட்சணை கலச்சாரம் தலை விரித்தாடுவதால் மார்க்க ஒழுக்கம் பேணும் பெண்களின் திருமணமும் தடைபடுவதைப் பார்க்கிறோம். வட்டியோடு கலந்த கொடுக்கல் வாங்கல் அதிகமானதால் விலைவாசி உயர்வு உட்பட ஏராளமான சிரமங்களை அனைவரும் சந்திக்கிறோம். எனவே எந்தவொரு சீர்கேட்டையும் கண்டு கண்ணை மூடிக் கொள்ளாமல் அவற்றை அடக்கி ஒடுக்கத் தயாராகுங்கள்; துணிந்து எழுங்கள்.

தீமையைத் தடுப்பதும் தர்மமே!

சமூகக் கேடுகளைத் துடைத்தெறியப் பாடுபடுவதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? நல்லதைச் சொல்வதற்கு மட்டுமல்ல, சமூகக் கொடுமைகளைக் கண்டிப்பதற்கும் தடுப்பதற்கும் அல்லாஹ் நன்மைகளை அள்ளித் தருவான். இந்தப் பணியும் தர்மமாகப் பதிவு செய்யப்படும்.

‘‘உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு “ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1302)

இயன்றளவு தீமைகளைத் தடுப்போம்

தீமையைத் தடுக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. தமது அதிகாரம் மற்றும் பொறுப்புக்குக் கீழ் இருப்பவர்களிடம் உரிமை கிடைப்பது போன்று மற்றவர்களிடம் கிடைக்காது. எனவே நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் முடிந்தளவு தீமையைத் தடுக்க முயல வேண்டும். அதன் மூலம் நமது ஈமான் வலுப்பெறும்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 78

அல்லாஹ்வின் உதவியால் நமது நாட்டில் இருக்கும் பேச்சுரிமையைப் பயன்படுத்தி நமது தவ்ஹீத் ஜமாஅத் இப்பணியை சிறப்பாகச் செய்து வருகிறது. இஸ்லாத்தின் தனித்துவமான தன்மையை எட்டுத் திக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

மறுமை வெற்றிக்கான வழி

தலைவிரித்தாடும் தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் எதிர்ப்பு வரும்; சங்கடங்கள் ஏற்படும் என்றெல்லாம் சிலர் தயங்குகிறார்கள். ஊர்நீக்கம் செய்யப்படுவோம்; தனிமைப்படுத்தப்படுவோம் என்று அஞ்சுகிறார்கள். இப்படியெல்லாம் நினைத்து மறுமை வெற்றிக்கான வழியைப் புறக்கணித்து விடாதீர்கள்; அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள். சோதனைகளைக் கடந்து தளர்ந்து விடாமல் இப்பணியைச் செய்யும் போதுதான் நாம் முழுமையான வெற்றியைப் பெற இயலும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 3:104

அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.

திருக்குர்ஆன் 13:22

பிறமத சகோதர்களிடம் அழைப்புப் பணி செய்வோம்; ஆனால், முஸ்லிம்கள் செய்யும் தீமைகள் பற்றி வாய்திறக்கவே மாட்டோம் என்ற எண்ணம் சிலரிடம் மிகைத்து இருக்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் மார்க்கச் சட்டங்களைக் குறித்து பேசுவதும் அதற்கு நேரத்தை ஒதுக்குவதும் அற்பமானதாகக் கருதுகிறார்கள். இத்தகைய கருத்துக்கள் அபத்தமானவை. அழைப்புப் பணிக்கு ஆபத்தான இத்தகு எண்ணங்களை துடைத்தெறிவது கட்டாயம்.

தீமையைத் தடுக்க தூண்டுங்கள்

சமூகத் தீமைகளைத் தடுக்கும் பணியைச் செய்யுமாறு நாம் பிற மக்களையும் தூண்ட வேண்டும். அதன் அவசியம், சிறப்பு குறித்து அவர்களுக்கு அதிகம் ஆர்வமூட்ட வேண்டும்.

குடும்பத்தாரோ அல்லது நெருக்கமானவர்களோ அழைப்புப் பணியாற்றும் போது, ‘‘அடுத்தவரைப் பற்றி உனக்கென்ன கவலை? உன் வேலையைப் பார்” என்று முட்டுக்கட்டைப் போடும் மக்களே! சத்தியப் பணிக்குத் தடைக்கற்களாக இல்லாமல் ஊக்கம் தந்து உறுதுணையாக இருங்கள். லுக்மான் (அலை) அவர்கள் தமது மகனுக்கு கூறிய அறிவுரையில் பாடம் பெறுங்கள்.

என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.

திருக்குர்ஆன்  31:17

நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 46

நபிகளாரின் அறிவுரைக்கும், வழிமுறைக்கும் முரணாகப் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக் கிறார்கள். மக்களிடம் செல்வாக்கு பெறுவதற்காக நடுநிலை, ஒற்றுமை எனும் பெயரில் ஒளிந்து கொண்டு இப்பணிக்குப் பெரும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அரசியல், பதவி போன்ற உலக ஆதாயங்களுக்காக ஷிர்க், பித்அத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகிறார்கள்.

சமூகத் தீமைகளைச் சுட்டிக் காட்டும் ஏகத்துவ சகோதரர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்; அவதூறுகளைப் பரப்புகிறார்கள்; தவறாகச் சித்தரிக்கிறார்கள். இத்தகைய நபர்கள் இனியாவது அல்லாஹ்விற்கு அஞ்சி தங்களைத் திருத்திக் கொள்ளட்டும்.

கொள்கைச் சொந்தங்களே! நாம் மக்கள் திருப்தியை மனதில் கொண்டு அழைப்புப் பணியை மேம்போக்காக, பெயரளவுக்குச் செய்யாமல் படைத்தவனின் திருப்திக்காக வீரியத்தோடும் விவேகத்தோடும் செய்வோமாக! நன்மையை ஏவி தீமையைத் தடுத்து ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக!

—————————————————————————————————————————————————————————————

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

ஆர். அப்துல் கரீம்

எதற்கும் எல்லையுண்டு என்பார்கள். ஆனால் மத்ஹபு நூலான ஹிதாயாவில் நபி மீது புனையப்பட்ட பொய்களோ எல்லைகள் கடந்து தம் பயணத்தைத் தொடர்கின்றன.

அப்பயணத் தொடர்ச்சியில் மற்றுமொரு செய்தியைத் தான் இப்போது நாம் அறியப் போகிறோம்.

திருமணம் என்பது…?

சிறுவர் சிறுமியருக்குப் பொறுப்பாளர் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறிவிட்டு அஸபாக்கள் தான் பொறுப்பாளர்களாவர் என்கிறார்.

(சிறார் திருமணத்தை இஸ்லாம் தடை செய்துவிட்டது)

வாரிசுரிமையில் பங்கு சொல்லப்பட்டவர்கள் தங்கள் பங்கை எடுத்தது போக மீதமுள்ளவற்றை எடுக்கும் உரிமை கொண்ட நெருங்கிய உறவுகளே அஸபாக்கள் ஆவர்.

தந்தை, பாட்டன், மகன், சகோதரர்கள் ஆகியோர் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பங்கீடு போக மீதமுள்ளவற்றை எடுக்கும் உரிமை படைத்தோர் ஆவர்.

இந்த அஸபாக்களில் ஒருவர் திருமணத்திற்கு வலீயாக – பொறுப்பாளராக இருக்கலாம் என்பது தான் இவர் சொல்ல வரும் கருத்து.

பொறுப்பாளராகத் தந்தை இல்லாத பட்சத்தில் பெண்ணின் முக்கிய – நெருங்கிய உறவினர் வலீயாக இருக்கலாம் என்பதில் நாம் உடன்படுகிறோம்.

ஆனால் இதிலே மத்ஹபு செய்வதென்ன? இக்கருத்தை நிலைநாட்ட தவறான முறையில் நபிகள் நாயகம் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

الهداية شرح البداية – (1 / 198)

قوله عليه الصلاة والسلام النكاح إلى العصبات

திருமணம் என்பது அஸபாக்களின் வசமுள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198

அஸபாக்களில் யார் வேண்டுமானாலும் பெண்ணின் வலீயாக இருக்கலாம் என்று ஒரு கருத்தை உதித்து விட்டு இதை நபிகள் நாயகமே சொல்லியுள்ளார்கள் என்கிறார்.

நபிகளார் இச்செய்தியைச் சொன்னார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?

இந்தச் செய்தி எந்த நூலில் உள்ளது? புகாரியிலா? முஸ்லிமிலா? திர்மிதியிலா? நஸயீயிலா? அபூதாவூதிலா?

இப்படிப் பட்டியலிட்டு, ஆதங்கப்பட்டு என்ன பலன்? யார் பதிலளிக்கப் போகிறார்கள். எனவே அடுத்த செய்தியைப் பார்ப்போம்.

சிறுவன் – பைத்தியக்காரனின் தலாக் செல்லாது

இஸ்லாத்தில் சிறார் திருமணத்திற்கு அனுமதி கிடையாது என்பதை முன்னரே நினைவுபடுத்தியுள்ளோம். இது அதற்குரிய ஆதாரங்களைப் பதிவிடும் களமல்ல. எனவே நபி பெயரைப் பயன்படுத்தி இதில் என்ன திருகுதாளம் செய்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்போம்.

சிறுவன் – பைத்தியக்காரன் தலாக் கூறினால் அது செல்லாது என்று கூறிவிட்டு அது பற்றி நபிகள் நாயகம் கூறியதாகப் பொய்யாக ஒரு செய்தியைச் சொல்கிறார்கள்.

الهداية شرح البداية (1/ 229)

ولا يقع طلاق الصبي والمجنون والنائم لقوله عليه الصلاة والسلام كل طلاق جائز إلا طلاق الصبي والمجنون

சிறுவன், பைத்தியக்காரன், தூங்குபவன் ஆகியோரது தலாக் செல்லாது. ஏனெனில் சிறுவன் பைத்தியக்காரனின் தலாக்கைத் தவிர அனைத்து தலாக்கும் செல்லுபடியாகும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 229

இப்படி நபிகளார் நவின்றுள்ளார்களா? என்று தேடினால் நமக்கு கிடைக்கும் விடை என்ன தெரியுமா?

மூளை குழம்பியவனின் தலாக்கைத் தவிர அனைத்து தலாக்கும் செல்லுபடியாகும் என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி திர்மிதி 1191ல் பதிவாகியுள்ளது.

இது முற்றிலும் பலவீனமான செய்தி. இதில் இடம் பெறும் அதாஃ பின் அஜ்லான் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் திர்மிதி அவர்களே அச்செய்தியின் தொடர்ச்சியில் குறிப்பிடுகிறார்.

பலவீனமான இச்செய்தியைக் கணக்கில் சேர்த்தால் கூட நூலாசிரியரின் பொய்ச் செய்திக்கு விடை கிடைக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

நூலாசிரியர் என்ன சொன்னார்? சிறுவன், பைத்தியக்காரன் இருவரது தலாக்கைத் தவிர மற்ற தலாக் செல்லும் என்று நபிகள் நாயகம் கூறியதாகக் குறிப்பிட்டார். அப்படி எனில் நபிகளாரின் வார்த்தைகளில் இதைக் குறிப்பிட வேண்டுமா? இல்லையா? எங்கும் இவர் குறிப்பிட்ட வார்த்தைகளில் நபியின் செய்தி இல்லை. பலவீனமான செய்தியில் கூட மூளை குழம்பியவனைப் பற்றி மட்டும் தான் உள்ளது. அதில் இவர் சிறுவனையும் சேர்த்து ஒரு தனிச்செய்தியாக்கி நபி பெயரையும் இணைத்து புத்தகத்தின் பக்கத்தை நிரப்பிக் கொண்டார்.

சிறுபிள்ளைக்குச் சோறு ஊட்டும் தாய்மார்கள் கொஞ்சம் சோறு, கொஞ்சம் கதை என்ற பாணியில் ஊட்டுவார்கள். நூலாசிரியரும் அதே பாணியில் பயணிக்கிறார். கொஞ்சம் நபி சொன்னது – அதுவும் பலவீனம் – அத்துடன் தன் கருத்து என இரண்டையும் கலந்து கட்டி செய்தியாகத் தருவதில் ஹிதாயா நூலாசிரியர் தனித்துத் தெரிகிறார்.

இதோ தலாக்கிலும் கூட இதே போன்ற விஷமத்தைச் செய்துள்ளார்.

யார் சத்தியம் செய்து அதனுடன் இன்ஷா அல்லாஹ் கூறிவிட்டாரோ அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார் என்று நபி சொன்னதாக ஒரு செய்தி உள்ளது. (திர்மிதி 1532) அது பலமானதா? பலவீனமானதா? என்பது தனி.

ஆனால் இந்தச் செய்தியை ஹிதாயா நூலாசிரியர் எப்படி அழகு சேர்த்துக் கூறுகிறார் பாருங்கள்.

الهداية شرح البداية (1/ 254)

لقوله عليه الصلاة والسلام من حلف بطلاق أو عتاق وقال إن شاء الله تعالى متصلا به فلا حنث عليه

யார் தலாக் விடுவதாகவோ, விடுதலை செய்வதாகவோ சத்தியம் செய்து பிறகு இன்ஷா அல்லாஹ் என்று அதனுடன் இணைத்துக் கூறி விடுகிறாரோ அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 254

நபி சொன்ன செய்தியில் சத்தியம் செய்து அதனுடன் இன்ஷா அல்லாஹ் கூறினால் என்றுதான் வருகிறது. அதில் இவர் மனைவியை தலாக் விடுவதாக – அடிமையை விடுதலை செய்வதாக சத்தியம் செய்து என்று தனக்கு தோன்றுவதையும் தான் எழுதும் தலைப்புக்குத் தேவையானதையும் சேர்த்து, கோர்த்து, செருகிச் சொல்கிறார்.

அன்னாரது அலட்சியத்தில் நாம் கருத்துச் சொல்ல என்னவிருக்கிறது?

இதுபோன்ற பொய்களும் இடைச்செருகலும் நிறைந்தது தான் ஹிதாயா என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி!

—————————————————————————————————————————————————————————————

வாடும் பெற்றோரும் வதைக்கும் பிள்ளைகளும்

கே.எம். அப்துந்நாஸர்

நாகரீக உலகில் மனித சமூகத்தைப் பீடித்துள்ள மிகப்பெரும் சமூக வியாதிகளில் ஒன்று வயோதிகப் பெற்றொர்களை வதைப்பதாகும்.

காலூன்றி நடக்க முடியாத தள்ளாத வயதினிலே விழுதுகளாய் பெற்றோரைத் தாங்க வேண்டிய பிள்ளைகள், தங்கள் அன்னையர்களை அல்லல் படுவோராக அலைக்கழிப்பது வார்த்தைகளில் வடிக்க இயலாத மாபெரும் கொடுமையாகும்.

ஆம்! இன்றைக்குப் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் மனித சமூகம் மிகப்பெரும் அலட்சியப் போக்கில் உள்ளது.

அமுதூட்டி வளர்த்த பெற்றோரை அரவணைக்க வேண்டிய பிள்ளைகள், அவர்களின் மனவிருப்பங்கள் என்ன? அவர்களின் தேவைகள் என்ன? என எந்த ஒன்றையும் அறியாமல் அவர்களைத் தவிக்க விட்டுவிடுகின்றனர்.

இதற்கு இஸ்லாமிய சமுதாயமும் விதிவிலக்கல்ல. ‘பெற்றோர்களை வதைப்பது பெரும்பாவம்’ என்று எச்சரிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பலரும் பெற்றோர்களைப் பரிதவிக்க விடுகின்றனர்.

இதனால் வயோதிக காலத்திலே அரை ஜான் வயிற்றிற்காகக் கையேந்தும் நிலைக்கும் பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.

சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, கேன்சர், கண்பார்வைக் குறைபாடு, காது கேளாமை போன்ற கடும் வியாதிகளில் பாதிக்கப்பட்ட வயோதிகர்கள் தெருவோரங்களிலும், சாலையோரங்களிலும் சீரழிந்து கிடக்கின்றனர். நாளுக்கு நாள் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

சர்க்கரை வியாதியினால் ஒரு வயோதிகத் தாயின் கால்களில் ஏற்பட்ட காயத்தில் மலத்தில் மொய்க்கும் புழுக்களைப் போல் புழுக்கள் வடிந்தன. தாயைக் கவனிக்கும் மனமில்லா பிள்ளைகளைப் பார்க்கும் போது நமது உள்ளம் வெடித்துச் சிதறும் மனநிலைக்கே சென்றுவிட்டது.

இந்தக் காட்சி நம்முடைய தமிழகத்தில் ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் கண்ட காட்சிகள். இது போன்ற அவலக் காட்சிகள் நம் கண்களைக் குளமாக்குகின்றது.

இந்தப் பிள்ளைகளுக்கு உள்ளம் என்பதே கிடையாதா? இவர்கள் மனிதர்களா? விலங்குகளா? நாளை இதே நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டால் இவர்களின் நிலை என்ன? படைத்த இறைவன் மறுமையில் விசாரிப்பானே என்கின்ற பயம் கிடையாதா? என்ற பல கேள்விகள் உள்ளத்தில் எழுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பெற்றெடுத்த பெற்றோருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும் என்றும் உபகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

உடல் உழைப்பினாலும், செல்வத்தினாலும் எப்படியெல்லாம் பெற்றோருக்குப் பாடுபடுவது சாத்தியமோ அத்தகைய அனைத்து வழிகளிலும் பெற்றோருக்காக உழைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.

ஒழுக்க மாண்புகளுடன் பெற்றெடுத்த தாய் தந்தையர்களுடன் உரையாட வேண்டும் என மார்க்கம் வழிகாட்டுகின்றது.

எந்நிலையிலும் பெற்றோர்களை நோவினைப் படுத்துவதையும் அவர்களை உடலாலும், உள்ளத்தாலும் துன்புறுத்துவதையும் மிகப் பெரும் பாவமாக இஸ்லாம் எச்சரிக்கை செய்கின்றது.

வயோதிகப் பருவத்தில் அவர்களுக்குப் பணிவிடை செய்வதை கட்டாயக் கடமையாக இஸ்லாம் வகுத்துள்ளது.

என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!’’ என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ‘‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’’ என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 17:23,24

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

அல் குர்ஆன் 31:14

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது “என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’’ என்று கூறுகிறான்.

அல்குர்ஆன் 46:15

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் நபியே! நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?’’ என்று கூறினார்கள். “அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டேன். அதற்கு “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’ என்றார்கள். “அடுத்தது எது? அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’ என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 138

பெற்றோருக்குப் பணிவிடை செய்வது எவ்வளவு அவசியம் என்பதை மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ் மனித சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றது.

பெற்றோர்கள் இணை வைக்குமாறு ஏவினால், அல்லது பாவமான காரியங்களைச் செய்யுமாறு நிர்ப்பந்தித்தால் அதில் அவர்களுக்குக் கட்டுப்படுவது கூடாது என்றாலும் அவர்கள் இணை வைப்பாளர்களாக இருந்தாலும் அவர்களுடன் அழகிய முறையில் உறவாட வேண்டும் என்றும் அவர்களுக்குரிய கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் திருக்குர்ஆன் பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறது.

தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

அல்குர்ஆன் 29:8

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

அல்குர்ஆன் 31:15

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என்னிடம் என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்போராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?’’ என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் “ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்’’ என்று கூறினார்கள். 

நூல்: புகாரி 2620

பெற்றோர் இணை வைத்தாலும் அவர்களுடன் உறவைப் பேணி வாழ வேண்டும் என்பதே மார்க்கத்தின் வழிகாட்டுதல் என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

ஸஃது (ரலி) அவர்களுடைய தாயார், ‘அவர்  (ஸஃது) தன்னுடைய மார்க்கத்தை (இஸ்லாத்தை) மறுக்கின்ற வரை அவரிடம் நான் ஒருபோதும் பேச மாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்த மாட்டேன்’ என்று சத்தியம் செய்தார்கள். மேலும் “அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய்! நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்’’ என்றும் கூறினாள். இவ்வாறு அவள் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவளுக்குக் கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவள் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவளாக ஆகிவிட்டாள். அப்போதுதான் அல்லாஹ் “தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.’’ (அல்குர்ஆன் 29:8)  என்று வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: முஸ்அப் பின் ஸஃது (ரலி)

நூல்: முஸ்லிம் 4432

பெற்றோரும் அழகிய நட்பும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாய்’’ என்றார்கள். அவர் “பிறகு யார்?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாய்’’ என்றார்கள். அவர், “பிறகு யார்?’’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “பிறகு, உன் தந்தை’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5971

பெற்றோருக்காகச் செலவிடுதல்

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதை களுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:215

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது “கொடுப்பவரின் கரம் தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத் தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்’’ என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: தாரிக் (ரலி)

நூல்: நஸயீ (2485)

பெற்றோர் பணிவிடையே மாபெரும் தியாகம்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “ஆம் (உயிருடனிருக்கின்றனர்)’’ என்று பதிலளித்தார்.  நபி (ஸல்) அவர்கள் “அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுஅம்ரு(ரலி)

நூல்: புகாரி (3004)

பெற்றோருக்குச் செய்யும் பணிவிடைகள் இறையுதவியைப் பெற்றுத் தரும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள  குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், “நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’’ என்றனர்.

அவர்களில் ஒருவர், “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.  ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என்காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து’’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி (2214)

பணிவிடை செய்யாதவன் செல்லுமிடம் நரகம்தான்

அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், (இழிவடை யட்டும்!)  அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், அவனுடைய மூக்கு மண்ணாகட்டும்‘’ என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே அவன் யார்?’’ என்று கேட்கப்பட்டது. “யார் வயதான தாய் தந்தையர்களில் இருவரையுமோ, அல்லது இருவரில் ஒருவரையோ (உயிருடன்) பெற்று அவர்களுக்கு (பணிவிடை செய்வதின் மூலம்) சுவனம் புகவில்லையோ அவன்தான்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (4627)

நோவினை செய்வது பெரும்பாவமாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பெற்றெடுத்த தாய்மார்களுக்குத் துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்’’

அறிவிப்பவர்: முகீரா பின் ஸுஃபா (ரலி)

நூல்: புகாரி (2408)

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (2653)

பெற்றோரைச் சபிப்பது பெரும்பாவமாகும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தன் பெற்றோரைச் சபிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்து விட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்து விட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக் கல்லை மாற்றியவனை  அல்லாஹ் சபித்து விட்டான்’’

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் (4003)

ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களைச் சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 5973

பெற்றோர்களுக்கு விடுபட்ட நோன்புகளை நிறைவேற்றுதல்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1953)

மரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்

பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்து விட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம் (பலனளிக்கும்)’’ என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2762

பெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களுக்குப் பிறகும் இணைத்து வாழுதல்

மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராமவாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரைத் தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள். தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக் கண்ட நாங்கள்) ‘‘அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக் கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ள வேண்டும்)’’ என்று கேட்டோம். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் “இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். ‘(தந்தைக்குச் செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான்’ என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு தீனார்,

நூல்: முஸ்லிம் 4629

பெற்றோர்களுக்காகச் செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்

சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!’’

அல்குர்ஆன் 17:28

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

அல்குர்ஆன் 14:41

என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக’’

அல்குர்ஆன் 71:28

என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’’

அல்குர்ஆன் 46:15