ஏகத்துவம் – ஜூன் 2008 – OnlineTNTJ

முகப்பு / நூல்கள் / ஏகத்துவம் / 2008 / ஏகத்துவம் – ஜூன் 2008

ஏகத்துவம் – ஜூன் 2008

கேள்வி பதில்

? நான் பயணம் செய்வதற்காக மக்ரிப், இஷாவை ஜம்உ செய்து இஷாவையும் சேர்த்துத் தொழுது முடித்து விட்டேன். பிறகு பயணம் ரத்தாகி விட்டது. இஷா நேரத்தில் நான் ஊரில் தான் இருக்கிறேன். எனவே மீண்டும் இஷா தொழ வேண்டுமா? அல்லது தொழாமல் இருக்கலாமா? விளக்கம் தரவும்.

அதிரை எம். தீன் முஹம்மது, புரைதா

பயணத்தை முன்னிட்டு மக்ரிப், இஷாவை சேர்த்துத் தொழுத பின்னர் பயணம் ரத்தாகி விட்டால் மீண்டும் இஷா தொழுவது அவசியமில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பயணம், அச்சம், மழை போன்ற எந்தக் காரணமும் இன்றி ஜம்உ செய்து தொழுதுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பயமோ, மழையோ இன்றி லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 172

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ, பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1267

மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் ஜம்உ செய்து தொழுத பின்னர் பயணம் ரத்தாகி விட்டாலும் இஷா தொழுகையின் கடமை நிறைவேறி விடும். மீண்டும் தொழுவது கட்டாயமில்லை. எனினும் ஜமாஅத்துடன் தொழுவதன் நன்மை கருதி மீண்டும் இஷாவை நிறைவேற்றினால் அதுவும் தவறில்லை. ஆனால் இஷா நேரத்தில் பள்ளியில் இருந்தால் கண்டிப்பாக ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுதாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார்.  அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள்.  மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார்.  “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை!  நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்என்று கூறினார்.  “நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புஸ்ர் பின் மிஹ்ஜன்

நூற்கள்: நஸயீ 848, அஹ்மத் 15799

? துபையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒரு வாரமாகக் கடமையான தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவுக்குப் பின் நின்று கொண்டு துஆச் செய்கிறார்கள். இமாம் துஆச் செய்யும் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்கிறார்கள். இதை நாமும் பின்பற்றலாமா? இது பற்றிக் கேட்ட போது, பாலஸ்தீனத்தில் நடக்கும் சம்பவங்களுக்காக இவ்வாறு செய்வதாகக் கூறுகிறார்கள். விளக்கம் தரவும்.

குடியாத்தம் இர்ஃபான், துபை

நபி (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கும் அந்த இணை வைப்பவர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது.  (அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்)  அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1002

இந்த ஹதீஸின் அடிப்படையில், முஸ்லிம் சமுதாயத்திற்குச் சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்துஎன்று சொல்லி விட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!என்று பிரார்த்தித்தார்கள். உடனே மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், “(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்என்ற (3:128) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 7346

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை அல்லாஹ் 3:128 வசனத்தை அருளி, தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது.  எனவே இதன் அடிப்படையில் எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதுவது பற்றித் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிம் மற்றும் பல நூல்களில் கூறப்படும் காரணமான, “உஹதுப் போரின் போது அருளப்பட்டது’ என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.

மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப் படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி அவர்கள் நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. “நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082வது ஹதீஸ் கூறுகின்றது. இவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இதனால் தான் “ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது” என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.

இதே ஹதீஸ் புகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் 4560வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. அதில் “நபி (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்” என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்குச் சோதனையான கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் கடமையான தொழுகைகளில் குனூத் ஓதியுள்ளார்கள் என்பதால் நாமும் இது போன்ற கட்டங்களில் குனூத் ஓதலாம்.

நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, சுப்ஹ் ஆகிய அனைத்து தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸமியல்லாஹு லிமன் ஹமிதா என்று அவர்கள் சொல்லும் போது, பனூ சுலைம் கிளையினரைச் சார்ந்த ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் கூறுவர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 1231, அஹ்மத் 2610

இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் இந்த குனூத்தை ஓதும் போது பின்பற்றித் தொழுபவர் ஆமீன் கூற வேண்டும்.

? நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் செல்லும் போது உபரியான தொழுகைகளை வாகனத்திலேயே தொழுவார்கள். கடமையான தொழுகையின் போது இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று புகாரியில் இடம் பெற்றுள்ளது. சென்னைக்குப் பேருந்தில் பயணம் செய்யும் போது, லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய தொழுகைகளைப் பேருந்திலேயே நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் எப்படித் தொழுகையை நிறைவேற்றுவது?

திவான் மைதீன், பெரியகுளம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து தாம் செல்ல வேண்டிய திசை நோக்கித் தமது தலையால் சைகை செய்து தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். கடமையான தொழுகைகளில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ரபிஆ (ரலி)

நூல்: புகாரி 1097

இந்த ஹதீஸின் அடிப்படையில் கடமையான தொழுகைகளைத் தொழும் போது, வாகனத்திலிருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தான் தொழ வேண்டும். எனினும் நமது சொந்த வாகனமாக இருந்தால் அல்லது நாமே தனியாக வாடகைக்கு அமர்த்திச் சென்றால் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் பேருந்து, ரயில் போன்ற பொது வாகனங்களில் இது சாத்தியமில்லை. இவ்வாறு நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் நமக்கு எது சாத்தியமோ அதைச் செய்து கொண்டால் குற்றமாகாது.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

அல்குர்ஆன் 2:286

எனவே நபி (ஸல்) அவர்கள் உபரியான தொழுகைகளை வாகனம் செல்லும் திசையை நோக்கித் தொழுது வழி காட்டியிருந்தாலும், இது போன்ற நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் கடமையான தொழுகைகளையும் அவ்வாறு தொழுவதில் தவறில்லை.

கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:115

?   திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பில், சூரத்துல் பகராவின் 78வது வசனத்தில், “அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசனத்தில் பொய் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் வாரி விடுகின்றார் என ஒரு பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உண்மையைத் தெளிவுபடுத்தவும்.

சி. அஹ்மது நைனா, நாகூர்

அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

அல்குர்ஆன் 2:78

இந்த வசனத்தில் பொய்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள இடத்தில், “அமானிய்ய’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இதற்கு இட்டுக்கட்டுதல், கற்பனை செய்தல், பொய் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. “பொய் என்றாலே கற்பனையாக ஒருவன் இட்டுக்கட்டிக் கூறுவது தான்” என்று லிஸானுல் அரப் என்ற அகராதி நூலில் இதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது.

எனவே கற்பனை, இட்டுக்கட்டுதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கும் விதத்தில் அமைந்துள்ள பொய் என்ற அர்த்தம் இந்த இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை.

————————————————————————————————————————————————

தொடர்: 3         

முதஷாபிஹாத்

முதல் சாராரின் ஐந்தாவது ஆதாரம்

அல்லாஹ் தன் திருமறையில் சுவர்க்கம், நரகம், அர்ஷ், கியாமத், நீதி விசாரணை, துலாக்கோல் இன்னும் இது போன்ற பல விஷயங்களைக் கூறுகிறான். இவை எப்படி இருக்கும் என்ற சரியான விளக்கத்தைக் கல்வியில் சிறந்தவர்கள் உட்பட எவருமே அறிய முடிவதில்லை. அல்லாஹ் ஒருவன் மட்டுமே இவற்றை அறிவான்.

மனிதரில் எவருமே அறிந்து கொள்ள இயலாதவையும் குர்ஆனில் உள்ளன என்பதற்கு இது போதுமான சான்றாகும். முதஷாபிஹ் வசனங்களை எவருமே விளங்க முடியாது என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை என்பது இவர்களின் ஐந்தாவது ஆதாரம்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இந்த வாதம் இரண்டு வகையில் தவறானதாகும். “சுவர்க்கம், நரகம், இது போன்ற இன்ன பிற விஷயங்களைக் கூறும் வசனங்கள் தான் முதஷாபிஹாத் வசனங்கள்” என்று இந்த சாரார் விளங்கிக்     கொண்டதற்கு ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. “சுவர்க்கம், நரகம் போன்றவற்றைக் கூறும் வசனங்களே முதஷாபிஹ் ஆகும்” என்பதை திருக்குர்ஆனின் ஏனைய வசனங்களின் அடிப்படையிலோ, ஹதீஸ்களின் அடிப்படையிலோ நிரூபிக்காமல் அவர்களது யூகத்தின் அடிப்படையில் இவை தான் முதஷாபிஹ் என்ற முடிவுக்கு வருவது ஏற்க முடியாததாகும். முதலில் இவர்கள் இதை நிரூபித்து விட்டுத் தான் இதனடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்க வேண்டும்.

இவை தான் முதஷாபிஹ் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இவர்களின் வாதம் பொருளற்றதாகும். எப்படி என்று பார்ப்போம்.

முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியுமா? என்பதே இன்றுள்ள பிரச்சனை. ஒரு வசனம் விளங்கி விட்டது என்றோ, விளங்கவில்லை என்றோ எப்போது கூற முடியும்? ஒரு வசனத்தில் ஒரு விஷயம் எந்த அளவு கூறப்படுகிறதோ அந்த விஷயத்தை அந்த அளவுக்கு விளங்கி விட்டால் அந்த வசனம் விளங்கி விட்டது என்றே பொருளாகும்.

அந்த வசனத்தில் கூறப்படாதது, இறைவன் கூற விரும்பாதது விளங்கவில்லை என்பதற்காக, அந்த வசனமே விளங்கவில்லை என்று கூறுவது அறிவுடைமையாகாது.

“நீ இந்தக் காரியத்தைச் செய்தால் உனக்கு விலைமதிப்பற்ற ஒரு பொருளைத் தருவேன்” இது ஒரு வசனம். (குர்ஆன் வசனமல்ல) இந்த வசனத்தை நீங்கள் எவரிடமாவது கூறுகின்றீர்கள். நீங்கள் தருவதாகக் கூறும் பொருள் எதுவென்று அவனுக்குக் தெரியாமலிருக்கலாம். ஏனெனில் என்ன பொருள் என்பதை நீங்கள் சொல்லவில்லை. அதற்காக, “நீங்கள் சொன்ன வசனமே விளங்கவில்லை” என்று அவன் சொல்வானா?

அந்த வசனத்தில் நீங்கள் சொல்ல வருவது “ஏதோ ஒரு பொருளைத் தருவேன்” என்பது மட்டுமே! ஏதோ ஒரு பொருளை நீங்கள் அவனுக்குத் தரப் போகிறீர்கள் என்பதை அவனும் விளங்கிக் கொள்வான். அதாவது நீங்கள் கூறிய வசனத்தை விளங்கிக் கொள்வான்.

“இந்தக் காரியத்தை நீ செய்தால் உனக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன்” என்று ஒருவனிடம் நீங்கள் கூறுகிறீர்கள். அவனும் நீங்கள் சொல்ல வருவதை விளங்கிக் கொள்வான். நீங்கள் எப்போது திருமணம் செய்து வைப்பீர்கள் என்பதையோ, மணப் பெண் கருப்பா? சிவப்பா? என்பதையோ நீங்கள் குறிப்பிட்ட வசனத்திலிருந்து அவனால் விளங்க முடியாது. எவனாலும் விளங்க முடியாது. நீங்கள் சொல்லாத இந்த விபரங்கள் அவனுக்கு விளங்கவில்லை என்பதற்காக நீங்கள் கூறிய வசனமே விளங்கவில்லை என்று கூற மாட்டான்.

இதே போலத் தான் “கியாமத் நாள் உண்டு; அது எப்போது வருமென்று எவருக்கும் தெரியாது” என்று இறைவன் கூறுகிறான். இந்த வசனம் நமக்கு நன்றாகவே விளங்குகிறது. விளங்கியதால் தான் கியாமத் நாள் உண்டு என்று நம்புகிறோம். அது எப்போது வருமென்று எவருக்கும் தெரியாது என்றும் நம்புகிறோம்.    ஆக இந்த வசனத்தில் என்ன கூறப்படுகிறதோ அது நன்றாகவே விளங்குகிறது. என்ன கூறப்படவில்லையோ அது தான் விளங்கவில்லை. கூறப்படாத ஒன்று விளங்காததால் அந்த வசனமே விளங்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்?

நாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட முதஷாபிஹ் வசனங்களைப் பற்றியே சர்ச்சை செய்கிறோம். குர்ஆனில் கூறப்படாத, இறைவன் சொல்ல விரும்பாதவற்றைப் பற்றியல்ல!

முதல் சாராரின் இந்த வாதப்படிப் பார்த்தால் முதஷாபிஹ் மட்டுல்ல; முஹ்கமான வசனங்களையும் கூட விளங்க முடியாது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். “பன்றி உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது” என்ற வசனத்தை எடுத்துக் கொள்வோம். முதல் சாராரின் கருத்துப்படியும் இது முஹ்கமான வசனம். பன்றியை உண்ண இறைவன் தடுக்கிறான் என்பது இதிலிருந்து புரிகிறது. ஆனால் இறைவன் கூறாத, ஏன் தடுத்தான் என்ற விபரமோ, அது மட்டும் தடுக்கப்படுவதற்கான காரணமோ என்ன என்பது திட்டவட்டமாக நமக்கு விளங்கவில்லை.

இறைவன் கூறாத இந்தக் காரணம் விளங்கவில்லை என்பதற்காக அந்த வசனமே விளங்காது என்று எவருமே கூறத் துணிய மாட்டார்கள். இறைவன் எந்த அளவுக்குக் கூறுகிறானோ அந்த அளவுக்கு விளங்கி விட்டால் அந்த வசனம் விளங்கி விட்டது என்று முடிவு செய்து, அதனடிப்படையில் “பன்றி ஹராம்’ என்று சட்டங்கள் வகுக்கத்தானே செய்கிறோம்.

சுவர்க்கம், நரகம், கியாமத், இன்னபிற விஷயங்கள் பற்றிக் கூறும் எல்லா வசனங்களுமே இறைவன் கூறக்கூடிய அளவுக்கு விளங்கத்தான் செய்கிறது. அதனால் தான் அதை நாம் விசுவாசம் கொண்டிருக்கிறோம். இந்த வசனங்கள் விளங்கவில்லை என்று கூறுவது ஏற்க இயலாத வாதம். இவை தான் முதஷாபிஹ் என்று வாதிடுவதும் அடிப்படையற்றதாகும் என்று இரண்டாம் சாரார் இதை மறுத்து விடுகின்றனர்.

முதல் சாராரின் ஆறாவது ஆதாரம்

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் விஞ்ஞான அறிவு வளர்ந்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களைத் திருக்குர்ஆன் கூறும் போது அன்றைய மக்கள் ஒருவிதமாகப் புரிந்து கொண்டார்கள். விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் உண்மைகளுக்கு ஏற்றவாறு வேறு அர்த்தம் செய்கின்றனர். இதற்காகவே இறைவன் முதஷாபிஹ் வசனங்களை அருளினான். முதஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை அறிய முடியாது என்பதற்கு இதுவும் சரியான ஆதாரமாகும் என்று நூதனமான வாதத்தை இவர்கள் எடுத்து வைக்கின்றனர்.

இரண்டாம் சாராரின் மறுப்பு

இந்த வாதத்தில் அர்த்தமும் இல்லை. ஆதாரமும் இல்லை. விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட வசனங்கள் தான் முதஷாபிஹ் என்று எந்த ஆதாரமுமின்றிக் கூற இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? என்று இரண்டாம் சாரார் கேட்கின்றனர். விஞ்ஞானம் பற்றிய அறிவு காலத்திற்குக் காலம் மாறலாம். அதற்கேற்றவாறு பொருள் செய்ய ஏற்ற வகையில் திருக்குர்ஆனின் வார்த்தைப் பிரயோகம் அமைந்திருக்கலாம்.  இவை தான் முதஷாபிஹ் என்று இறைவன் கூறுவதாக எப்படிக் கூற முடியும் என்பதே கேள்வி.

உதாரணமாக ஒரு காலத்தில் “அலக்’ என்ற சொல்லுக்கு இரத்தக்கட்டி என்று பொருள் செய்தார்கள். அப்படி ஒரு நிலையே கருவுறுதலில் இல்லை என்று ஆனதும், அலக் என்பதற்கு வேறு பொருள் தருகிறார்கள். இரண்டுக்கும் ஏற்ற வகையில் அந்த வார்த்தை அமைந்திருக்கிறது என்பதெல்லாம் சரி தான். அதற்கும் முதஷாபிஹ் வசனங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே கேள்வி.

சர்ச்சைக்குரிய 3:7 வசனத்தில், “எவரது உள்ளங்களில் வழிகேடு உள்ளதோ அவர்கள் முதஷாபிஹ் வசனங்களைப் பின்பற்றுகிறார்கள்” என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஒரு காலத்தில் “அலக்’ என்ற பதத்திற்கு இரத்தக்கட்டி என்று பொருள் செய்தனர். இவ்வாறு பொருள் செய்த 1400 ஆண்டு கால மக்களும் வழிகேடர்கள் என்று ஆகிவிடாதா? அது போல் இன்றைக்கு வேறு அர்த்தம் செய்பவர்களும், முதஷாபிஹ் வசனங்களுக்குப் பொருள் செய்து விட்டதால் வழிகேடர்கள் என்று ஆக மாட்டார்களா? என்று இரண்டாம் சாரார் கேட்கின்றனர்.

“எவர்களின் உள்ளத்தில் வழிகேடு உள்ளதோ அவர்கள் குழப்பத்தை நாடி அதன் விளக்கத்தைத் தேடி முதஷாபிஹ் வசனங்களையே பின்பற்றுவர்” என்று இறைவன் கூறுவதிலிருந்து இவையெல்லாம் முதஷாபிஹ் அல்ல என்று தெளிவாகவே தெரிகின்றது.

முதஷாபிஹ் என்றால் இரண்டு விதமான பொருள் செய்ய ஏற்றதாக இருக்க வேண்டும். குழப்பத்தை நாடுவோர் அதற்கு ஒரு பொருளைச் செய்து கொண்டு அதன் வழியே செல்ல வேண்டும். குழப்பத்தை நாடாதோர் மற்றொரு விதமான பொருளைச் செய்து சரியான பாதையில் செல்ல வேண்டும். இப்படி அமைந்திருப்பவையே முதஷாபிஹ் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. விஞ்ஞான சமாச்சாரங்களில் இது போன்ற தன்மையெல்லாம் இல்லையே! இரண்டில் எந்தக் கருத்தைச் சொன்னவர்களும் வழிகேடர்கள் இல்லையே! இரண்டில் எந்தக் கருத்தைச் சொன்னவர்களும் குழப்பத்தை நாடுவோர் அல்லவே! என்று இரண்டாம் சாரார் மறுத்து விடுகின்றனர்.

(முதஷாபிஹ் எவை என்று இரண்டாம் சாரார் எடுத்து வைக்கும் விளக்கத்தின் போது இது விரிவாக உதாரணங்களுடன் விளக்கப்படும். முதஷாபிஹ் என்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட வசனங்கள் என்று கூறுவது ஒரு ஆதாரமுமில்லாத, அடிப்படையில்லாத கற்பனை என்பதை மட்டும் இப்போது புரிந்து கொண்டால் போதுமானது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *