ஏகத்துவம் – ஜூலை 2014

தலையங்கம்

அல்குர்ஆனை மனனம் செய்ய ஆயத்தமாவோம்

நிகழ்ந்து கொண்டிருப்பது புனிதமிகு ரமளான் மாதமாகும். இதில் நினைவில் நிற்பது புனிதக் குர்ஆன் வேதமாகும். ஒவ்வொரு ரமளான் வருகின்ற போதும் நம்முடைய ஜமாஅத்தில் உள்ள ஒரு வெறுமையை, வறுமையை அது உணர்த்தவே செய்யும். அதுபோன்ற உணர்த்துதலை இந்த ரமளானும் மறுபதிவு செய்கின்றது என்றால் மிகையல்ல. அல்குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்கள் நம்மிடம் இல்லையே என்ற வெறுமையைப் பற்றியே இங்கு குறிப்பிடுகின்றோம்.

அல்லாஹ்வின் மகத்தான அருளால் தவ்ஹீத் ஜமாஅத் எனும் ஏகத்துவப் பெருமரத்தின் கிளைகள் தமிழகம் தாண்டி புதுவை, கேரளா, கர்நாடகம், மும்பை போன்ற மாநிலங்களிலும், கடல் தாண்டி இலங்கை போன்ற நாடுகளிலும் விரிந்து கிடக்கின்றன. அங்குள்ள மக்களைக் கவர்கின்ற வகையில் வாடகை அல்லது சொந்தக் கட்டடங்களில் தொழுகை மற்றும் பிரச்சாரப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒருசில பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் இமாம், குர்ஆனை மனனம் செய்தவர்கள், ஆலிம்கள் பற்றாக்குறையாகவும் பஞ்சமாகவும் இருக்கின்றது.

கொள்கை விஷயத்தில் யாரும் கடுகளவு கூட தடம் புரண்டுவிடக் கூடாது என்பதற்காக நம்முடைய ஜமாஅத் கடுமையான விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் வகுத்து வைத்திருக்கின்றது. அதனால் நமது ஜமாஅத்திற்கு அப்பாற்பட்ட முகாம்களிலிருந்து ரமளானிலோ அல்லது இதர மாதங்களிலோ தாயீக்களை இரவலாகப் பெறமுடியாது.

அத்தகைய இமாம்களை நம்முடைய ஜமாஅத்திலிருந்து தான் பெற்றாக வேண்டும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் கொஞ்சம் கொஞ்சம் குர்ஆன் ஓதத் தெரிந்த சகோதரர்களை வைத்து இமாமத் பணி தொடர்ந்து வந்தாலும், நன்கு குர்ஆன் ஓதத் தெரிந்தவர் தொழுவிப்பது தான் மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் தொழுவிப்பதற்குத் தகுதியாக நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் மனனத்தையே குறிப்பிடுகின்றார்கள்.

முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிர்கள் – குபா பகுதியில் உள்ள – அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்த சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 692

இமாமத் செய்த ஸாலிம் (ரலி) அவர்கள் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர் என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

மக்கா வெற்றி சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்என்று சொன்னார்கள்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலிமா (ரலி), நூல்: புகாரி 4302

இந்த ஹதீசும் அதே கருத்தை வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் உத்தரவையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி), நூல்: முஸ்லிம் 672, 673

முன்னுரிமை, முதலுரிமை அனைத்தும் குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்க்குத் தான் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

இமாமத் செய்வதற்கு மட்டும் குர்ஆன் மனனம் அவசியம் என்பதல்ல. மார்க்கப் பிரச்சாரத்திற்கும் குர்ஆன் மனனம் மிகவும் அவசியமாகும். என்ன தான் குர்ஆன் வசனத்தின் தமிழாக்கத்தைச் சொன்னாலும் அந்த வசனத்தை அரபியில் சொல்கின்ற போது அது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்து என்பதை ஒவ்வொரு பேச்சாளரும் நன்கு விளங்கி வைத்திருக்கின்றனர்.

பேச்சாளர்கள் வைத்திருக்கும் குறிப்பில் அவசியமான வசனங்களை எழுதி வைத்திருந்தாலும் உரையின் போங்கு, சூழல் போன்றவற்றுக்குத் தக்க பொருத்தமான வசனத்தைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் குர்ஆன் மனனம் இல்லாததால் அந்த வசனங்களைச் சொல்லாமல் கருத்தை மட்டும் சொல்லிவிட்டு நகர்கின்ற நெருக்கடி ஏற்படுவதைப் பேச்சாளர்கள் யாரும் மறுக்க முடியாது. இதுபோன்ற கட்டங்களில் நம்முடைய மனக்கிடங்கில் மேற்கண்ட வசனங்கள் பதிவில்லாமல் போனதே இந்த நழுவலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொழுகைக்குத் திருக்குர்ஆன் மனனம் மிகவும் இன்றியமையாதது. அதிலும் குறிப்பாக ரமளான் மாதத்தில் நம்முடைய ஜமாஅத் மக்கள் மட்டுமல்லாமல் மற்ற ஜமாஅத்தினரும் நின்று தொழ வேண்டும் என்பதற்காக ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் நம்முடைய பள்ளிகளுக்கு வருகின்றனர். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக நம்முடைய ஜமாஅத்தில் குர்ஆன் மனனம் செய்தவர்கள் போதிய அளவில் இல்லாதது பெரிய கவலையாக உள்ளது.

குர்ஆனை மனனம் செய்த, அத்துடன் அதன் விளக்கத்தையும் பெற்றவர்கள் இந்த ஜமாஅத்தின் மூலதனமும் முக்கியமான சொத்தும் ஆவார்கள். அத்தகையவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ரமளான் வரும் போது இதன் வேகம் அதிகரிக்கின்றது. அதன் பின்னர் அது அப்படியே ஆடி, அடங்கிப் போய்விடுகின்றது.

கடந்த காலத்தில் சுன்னத் ஜமாஅத்தில் குர்ஆனை மனனம் செய்தவர்களில் மிக சொற்மானவர்களைத் தவிர மற்றவர்கள் வருவாயின் அடிப்படையில் உருவானார்கள். ரமளான் மாதத்தில் இரவுத் தொழுகை தொழுவிப்பவர்களுக்கு பணமுடிப்புகள், கைலிகள், சட்டைகள், அன்பளிப்புகள் அணிவகுத்து வரும். இந்த உலகாதாயத்தில் நாட்டம் கொண்டு ஒரு கூட்டம் இந்தத் துறையை நோக்கிப் படையெடுத்தது. அதிலும் குறிப்பாக சிங்கப்பூர், மலேஷியா, புருனை என்று வாய்ப்பு கிடைத்துப் பறந்துவிட்டால் போதும். பல லட்சம் பார்த்து விடுவார்கள். ஆனால் இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

ரமளான் மாதம் வந்ததும் விழுப்புரம், சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி என்று குர்ஆனை மனனம் செய்தவர்கள் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் நாலா திசைகளிலும் படையெடுத்துப் பயணிப்பார்கள். இந்த முன்பதிவு ரமளான் வருவதற்கு முன்னரே தமிழக மதரஸாக்களில் செய்யப்பட்டுவிடும்.

இப்போது இந்த வியாபாரமும் வினியோகமும் நடைபெற்றாலும் கடந்த காலத்தைப் போல் இல்லை. காரணம் ஏற்கனவே உள்ள கணிசமான ஆலிம்கள் அரபு நாட்டுக்குப் பயணமானதால், அதில் வருமானம் பார்த்து இதை விட்டு விட்டார்கள். பெருமளவு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உலகக் கல்வியை நோக்கிப் பாதை திருப்பி விட்டுவிட்டார்கள். இதனால் குர்ஆனை மனனம் செய்தவர்கள் உருவாக்கம் அடைபட்டது; தடைபட்டது. சுன்னத் ஜமாஅத்திலும் அருகி விட்டனர்.

அதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரையில் ரமளானில் குர்ஆன் ஓதுவதற்கென்று காணிக்கையோ, கை மடக்குகளோ கொடுப்பதில்லை. இங்கு இம்மைப் பார்வையைப் பார்க்க முடியாது. மறுமைப் பார்வை மட்டும் தான் என்பதால் வருவாயை எதிர்பார்த்து குர்ஆனை மனனம் செய்பவர்களை இங்கு பார்க்க முடியாது. நமது ஜமாஅத்தில் குர்ஆன் மனனம் செய்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் உள்ளனர்.

இந்த நிலை மாற வேண்டும். மறுமைக்காகக் குர்ஆனை அதிகம் மனனம் செய்யும் ஒரு தூய திருக்கூட்டம் உருவாகியாக வேண்டும். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் திருக்குர்ஆனை அதிகம் மனனம் செய்தவர்கள் தவ்ஹீது கொள்கையைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னர் மறுமைப் பணியாற்றுவதை ஒரேயடியாக விட்டு விட்டு, தொழில், வியாபாரம் என்று இறங்கி அதிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தகையோர் நமது ஜமாஅத்தில் இந்த மறுமைப் பணியை மேற்கொள்ள முன்வந்தார்கள் என்றால் அவர்களுக்கு இம்மை, மறுமையின் பாக்கியங்கள் கிடைப்பதற்கு அது வழிவகுக்கும்.

நாம் செய்ய வேண்டிய முதல் கடமை, நாமும் குர்ஆனை மனனம் செய்து, நமது சந்ததிகளையும் இந்தப் புண்ணியப் பாதையில் செலுத்த ஆயத்தமாக்குவோம். அதே சமயம் உலக வாழ்க்கையையும் அடைவதற்கு ஏற்ப அவர்களது கல்விப் பயணத்தை அமைப்போம்.

—————————————————————————————————————————————————————-

முதலாளிகளின் கவனத்திற்கு…

பின்த் ஜமீலா அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம், மேலப்பாளையம்

கடந்த மே 1ஆம் தேதி உழைப்பாளிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறையும் மக்களுக்கு வழங்கப்பட்டது. சில முதலாளிகள் தங்களது தொழிலாளிகளுக்கு ஆடைகள் வழங்கி அந்நாளை சிறப்புப்படுத்தினர்.

இத்தினத்தை தொழிலாளர்களோடு கொண்டாடி, இத்தினத்தில் மட்டும் தொழிலாளர்களை சந்தோஷப்படுத்தும் முதலாளிகள் வருடம் முழுவதும் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களது கண்ணியத்தை சீர்குலைக்காமல், அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை, அவர்களது குடும்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைகளில் சலுகைகளும், தங்களால் முடிந்த அளவு பொருளாதார உதவியையும் செய்யலாம். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் மத்தியில் உள்ள உறவு எவ்வகையில் அமைய வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) “ரபதாஎனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள் மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:

எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த போது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3417

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு உணவு சமைத்துக் கொண்டுவந்தால், அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர் உண்ணட்டும். உணவு குறைவானதாக இருந்தால் அதில் ஓரிரு கவளங்களையாவது அவரது கையில் வைக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3421

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) “ச்சீஎன்றோ “இதை ஏன் செய்தாய்?” என்றோ, “நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.

நூல்: முஸ்லிம் 4623

ஒரு பணியாளரிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள். தங்களது குழந்தைகளிடம் கூட பெற்றோர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை. ஆனால் நபியவர்கள் தனது பணியாளரிடத்தில் சிறந்த முறையில் நடந்து முதலாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

முதலாளிகள் பெறவேண்டிய படிப்பினைகள்

  1. வாடிக்கையாளர்கள் முன் தொழிலாளிகளை இழிவுபடுத்துவதை முதலாளிகள் தவிர்க்கவேண்டும்
  2. அவர்களது வயதிற்கு மரியாதையளிக்காமல் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதை, கோபத்தில் அடிப்பது போன்ற செயல்களைக் கட்டாயம் செய்யக்கூடாது.
  3. அவர்களைத் திட்டுவது மட்டுமில்லாமல் தேவையில்லாமல் அவர்களது பெற்றோர்களையும் , குடும்பத்தினரையும் திட்டுவதைக் கைவிடவேண்டும்.
  4. பெண்களிடத்தில் சலனப்புத்தியுடன் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  5. அவர்களிடத்தில் வேலை வாங்குவதற்கேற்ப கூலிகளை உரிய முறையில் கொடுக்கவேண்டும்.
  6. அவர்களது பண்டிகை தினங்களில் அவர்களுக்கு ஆடைகளை வழங்கி உரிய விடுமுறைகளும் வழங்கவேண்டும்.
  7. அவர்களது தகுதிக்கேற்ப சம்பளங்களை உயர்த்த வேண்டும்.
  8. உரிய முறையில் அவர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.
  9. அவர்களுடன் கனிவாகப் பழகுதல், தம் வீட்டு விருந்துகளில் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்குதல்.
  10. வேலை பார்த்துக்கொண்டே படித்துக் கொண்டிருக்கின்ற பகுதி நேர தொழிலாளர்கள் இருப்பார்கள். தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வரும் அவர்களது தேர்வு போன்ற கட்டங்களில் அவர்களுக்குரிய பணிச்சுமைகளை குறைத்து உதவ வேண்டும்.

இது சம்பந்தமாக மார்க்கம் கூறும் உபதேசங்களைப் பார்ப்போம்.

சம்பளம் கொடுக்காமல் அநீதியிழைக்கக்கூடாது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும். கருமித்தனத்திலிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் கருமித்தனமானது, உங்களுக்கு முன்னிருந்தவர்களை அழித்தது; இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கிக்கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.

நூல்: முஸ்லிம் 5034

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அநீதியிழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.     

நூல்: புகாரி 2448

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் பணமோ, பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5037

ஊழியர்கள் செய்த தவறின் காரணமாக கோபத்தில் அவர்களை அடிக்கக்கூடாது; அவர்களிடத்தில் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்ததில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 4651

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 5054

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5055

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 5056

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: (படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 6013

(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களது தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், “என்ன இது?” என்று கேட்டார்கள். “கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்என்று சொல்லப்பட்டது. அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், “அறிக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்என்றார்கள்.     

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர், நூல்: முஸ்லிம் 5095

தொழிலாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குகள்

  1. தன்னிடம் முதலாளி நம்பி ஒப்படைத்த கடைகளில் உள்ள பொருட்கள் மற்றும் பணத்தைத் திருடக்கூடாது.
  2. வேலைகளை முகம் சுழிக்காமல் செய்ய வேண்டும்.
  3. முதலாளிக்கு எவ்வகையிலும் மோசடி செய்யாமல் இருக்க வேண்டும்.
  4. சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறக்கூடாது.
  5. ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் முதலாளிக்கு துரோகமிழைக்காமல் அவரது குடும்ப பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறும் உபதேசங்களைக் காண்போம்.

நம்பியவரை மோசடி செய்யக்கூடாது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

நூல்: முஸ்லிம் 164

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 164

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வதும், பேசும்போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை (நான்கும்).

நூல்: புகாரி 34

ஒருவன் செய்கின்ற தொழிலினால் அவனை உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ மக்கள் பார்க்கின்றனர். ஒரு கூலித்தொழிலாளியின் மனைவி கூட, தன் கணவன் கூலி வேலை செய்வதால் அவனை மதிப்பதில்லை. அவனது தொழிலை மற்றவர்களிடம் கூறுவதற்கு வெட்கப்படுகிறாள். இதனால் பல்வேறு இடங்களில் அவர்களை தனது தோழிகளிடமும், உறவினர்களிடமும் அறிமுகப்படுத்த மறுக்கின்றாள், வெறுக்கின்றாள். இது போன்றே அவனது பிள்ளைகளும் நினைக்கின்றனர்.

தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லை

அனைத்து இறைதூதர்களுமே ஆடு மேய்த்துள்ளார்கள். பெரும் சாம்ராஜ்யங்களுக்குத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூட ஆடு மேய்த்துள்ளார்கள். அதனை அவர்கள் இழிவாகக் கருதவில்லை. ஒரு தையல்காரர் நபியவர்களை விருந்துக்கு அழைக்க அதை நபியவகள் ஏற்றுக்கொண்டு அந்த விருந்தில் கலந்து கொள்கின்றார்கள். எனவே தொழிலை காரணம் காட்டி ஏற்றத்தாழ்வு பார்ப்பது நல்ல பண்பு அல்ல. இதுகுறித்து மார்க்கம் கூறும் செய்திகளைக் காண்போம்.

அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்தததில்லை!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், நீங்களுமா? என்று கேட்டார்கள். “ஆம். மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 226

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறரிடம் யாசகம் கேட்பதைவிட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2074

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது.  தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி)

நூல்: புகாரி 2072

நபித்தோழர்களில் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர்.  இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும்.  இதன் காரணமாகவே “நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்று அவர்களிடம் கூறப்பட்டது.      

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2071

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்ந்த இறைச்சித் துண்டுகளும் சுரைக்காயும் போடப்பட்ட குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்: நபி (ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன்.  அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகிவிட்டேன்.

நூல்: புகாரி 2092

ஆகவே, வியர்வை சொட்ட வெயிலிலும், மழையிலும், பனியிலும் உழைக்கின்ற உழைப்பாளிகளை தொழிலைக் காரணமாக வைத்து இழிவாகக் கருதாமல் அவர்களுடன் இயல்பாகப் பழகுவோம் என்று இத்தருணத்தில் நாம் உறுதிமொழியெடுப்போம்.

இந்த சந்தோஷம் மே 1 என்ற குறுகிய வட்டத்தில் இல்லாமல் எந்நாளும் தொடர முதலாளிகள் உறுதி கொண்டு, தங்களது தொழிலாளிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடின்றி அனைத்து நாட்களும் சகோதர உணர்வுடன் இருவரும் நடந்து கொள்ளவேண்டும். எந்நிறுவனத்தில் தொழிலாளர்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும், பணிபுரிகின்றார்களோ அந்நிறுவனம் தான் உயரும். நிறுவனம் நன்றாக இருந்தால் தான் முதலாளிக்கும் நல்லது, தொழிலாளிக்கும் நல்லது என்பதை இரு தரப்பும் உணர்ந்து செயல்படவேண்டும்.

—————————————————————————————————————————————————————-

இனிய குர்ஆன் ஓதி இரவில் தொழுவோம்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 38

புனிதமிகு ரமளான் வந்துவிட்டது. மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவதைப் போன்று பூத்துக் குலுங்கும் நன்மைகளைப் பறிப்பதற்கு மக்கள் போர்க்கோலம் பூண்டு, போர்க்களம் புகுந்துவிட்டனர். அருள்மிகு ரமளான் என்றதும் திருமறைக் குர்ஆனின் ஒலி எங்கு பார்த்தாலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். இரவு நேரத் தொழுகைகளில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இந்த இரவுத் தொழுகையை ரமளான் மாதத்தில் ஜமாஅத்தாகத் தொழுத போது மக்கள் ஆர்வத்தில் வெள்ளமாகத் திரண்டனர். மஸ்ஜிதுந்நபவியே பொங்கி வழிந்தது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) கலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.

நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபியவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் “அம்மா பஅத்‘ (இறைவாழ்த்துக்குப் பின்…) எனக் கூறிவிட்டு, நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவேதான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை)என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 924

இது மக்களுக்குக் கடமையாகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்ச ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே இந்த இரவுத் தொழுகை நபி (ஸல்) அவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் ரமளான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா மாதங்களும் கடமையாக்கப்பட்டிருந்தது.

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விடச் சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக!

அல்குர்ஆன் 73:1-4

பின்னர் தான் அது தளர்த்தப்பட்டு, இரவுத் தொழுகை என்பது உபரித் தொழுகையானது. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நான் “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (ஓதியிருக்கிறேன்)என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்ததுஎன்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்துவிடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும்வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன். பின்னர் எனக்கு ஏதோ தோன்ற, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றிக் கூறுங்கள்என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “நீர் யா அய்யுஹல் முஸ்ஸம்மில்…” (எனத் தொடங்கும் 73ஆவது) அத்தியாயத்தை ஓதியதில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (ஓதியிருக்கிறேன்)என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களின் மூலம் இரவுத் தொழுகையைக் கடமையாக்கினான். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஒரு வருட காலம் நின்று தொழுதனர். அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரை அல்லாஹ் பன்னிரண்டு மாதங்கள் வானிலேயே நிறுத்தி வைத்துக்கொண்டான். பின்னர் அந்த அத்தியாயத்தின் இறுதித் தொடரில் அல்லாஹ் சலுகையை அறிவித்தான். எனவே, கடமையாக இருந்த இரவுத் தொழுகை பின்னர் கூடுதல் தொழுகையாக மாறிற்றுஎன்று கூறினார்கள்.

நான், “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகை பற்றிக் கூறுங்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “நாங்கள் (இரவில் உறங்கச் செல்வதற்கு முன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அவர்களது பல் துலக்கும் குச்சி, தண்ணீர் ஆகியவற்றைத் தயாராக எடுத்துவைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் தான் நாடிய நேரத்தில் எழுப்புவான். அவர்கள் எழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் எட்டாவது ரக்அத்தி(ன் இறுதியி)ல்தான் அவர்கள் அமர்வார்கள். பின்னர் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு சலாம் கொடுக்காமல் எழுந்து ஒன்பதாவது ரக்அத் தொழுவார்கள். (ஒன்பதாவது ரக்அத்தில்) உட்கார்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிரார்த்திப்பார்கள். பிறகு எங்களுக்குக் கேட்கும் விதத்தில் சலாம் கொடுப்பார்கள். சலாம் கொடுத்த பின் உட்கார்ந்தவாறே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அருமை மகனே! ஆக, இவை பதினோரு ரக்அத்கள் ஆகும்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் முதுமையடைந்து உடலில் சதை போட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக ஏழு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்களில் முன்பு செய்ததைப் போன்றே செய்வார்கள். அருமை மகனே! இவை ஒன்பது ரக்அத்கள் ஆகும்.

(பொதுவாக) நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதை நிரந்தரமாகக் கடைப்பிடிப்பதையே விரும்புவார்கள். இரவுத் தொழுகைக்கு எழ முடியாதபடி உறக்கமோ நோயோ மிகைத்துவிட்டால் பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழு(து அதை ஈடு செய்)வார்கள். நபி (ஸல்) அவர்கள் முழுக் குர்ஆனையும் ஒரே இரவில் ஓதியதாகவோ, காலைவரை இரவு முழுக்கத் தொழுததாகவோ, ரமளான் அல்லாத மாதங்களில் ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத்

நூல்: முஸ்லிம் 1233

இரவுத் தொழுகை கடமையாக இருந்து உபரியாக மாறிய வரலாறு இந்த ஹதீஸில் முழுமையாக தெளிவுபடுத்தப்படுகின்றது. இப்போது இந்த ஹதீஸின் பின்னணியில் 73வது அத்தியாயத்தின் பிற்பகுதியைப் பார்ப்போம்.

“(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 73:20

நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் இரவுத் தொழுகை கடமையாக இருந்து, பின்னர் உபரியாக மாறியதையும், அதுபோல் அந்தத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை அதிகம் ஓதியதையும் மேற்கண்ட வசனம் விவரிக்கின்றது. நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இந்த இரவுத் தொழுகையை ரமளானில் மட்டுமன்றி எல்லா மாதங்களிலும் கடைப்பிடித்து வந்தனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத் தொழுகை உபரியாக ஆக்கப்பட்ட பின்னரும் இரவில் பெரிய அளவில் சூராக்களை ஓதித் தொழுததை நாம் பார்க்க முடிகின்றது.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் “அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் “அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் “அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் “அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) “அந்நிசாஎனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்….

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி), நூல்: முஸ்லிம் 1291

நம்மில் அதிகமானோர் நபி (ஸல்) அவர்களின் இந்த சுன்னத்தைக் கடைப்பிடிப்பதில்லை. பலருக்கு சுப்ஹ் தொழுகையே ஆட்டம் காண்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்:

இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் “நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் “இனி ஒருபோதும் நீர் பீதியடைய மாட்டீர்என்று கூறினார்.

இதை நான் (என் சகோதரியும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 1122

இந்த ஹதீஸ் இரவுத் தொழுகையின் சிறப்பை விவரிக்கின்றது. குறிப்பாக, ரமளான் மாதத்தில் இரவுத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்துகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 37

அதிலும் லைலத்துல் கத்ரில் நின்று தொழுவதற்குரிய சிறப்பை திருக்குர்ஆனே குறிப்பிடுகின்றது. திருக்குர்ஆன் 97வது அத்தியாயம் இதை சிறப்பித்துக் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களும் லைலத்துல் கத்ரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் “லைலத்துல் கத்ர்இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1901

லைலத்துல் கத்ரு 27ல் மட்டும் இருக்கின்றது என்று நம்பி ஒரு பெருங்கூட்டம் அந்த இரவில் மட்டும் நின்று தொழுதுவிட்டுப் போய்விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூசயீத் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்! நாங்கள் ரமளானின் நடுப்பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், “எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது; அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சஜ்தாச் செய்தார்கள். அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை நான் கண்டேன்என்று விடையளித்தார்.

அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான், நூல்: புகாரி 2036

பிந்திய பத்து இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடச் சொல்கிறார்கள். எனவே இந்த ரமளான் மாதத்தில், பாவமன்னிப்பைப் பெற்றுத் தருகின்ற நோன்பு, இனிய குர்ஆனை அதிகம் ஓதும் வாய்ப்பைத் தருகின்ற இரவுத் தொழுகை, லைலத்துல் கத்ரை அடையும் வகையில் இஃதிகாஃப் ஆகிய வணக்கங்களைப் புரிவோமாக! தொழுகையில் மட்டுமல்லாமல் எல்லா நேரங்களிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதுவோம். ரமளான் மாதத்தின் தாக்கத்தை ரமளானுக்குப் பிறகும் தொடர்வோமாக!

—————————————————————————————————————————————————————-

மறுமையின் சாட்சிகள்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருநாள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு அனைத்து மனிதர்களும் எழுப்பப்பட்டு விசாரணையை எதிர்நோக்கியவர்களாக அல்லாஹ்வின் முன்னால் நின்று கொண்டிருப்பார்கள். பூமியில் வாழும்போது செய்த அனைத்துக் காரியங்கள் குறித்தும் மனிதர்களிடம் கேள்வி கேட்கப்படும்.

அந்த நாளில் அனைத்து அதிகாரமும் ஆதிக்கமும் அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கும். அப்போது நினைத்ததை எல்லாம் அவனால் செய்ய முடியும். இருப்பினும், அவன் தமது மனம்போன போக்கில் விசாரித்து கூலி வழங்கமாட்டான். அவன் நீதமானவன். அவன் நமது செயல்களுக்கும் சில விதிமுறைகளை வழிமுறைகளை வைத்திருக்கிறான். அந்த வகையில், அவனது அனைத்து விசாரணைகளும் அதற்குரிய கூலிகளும் ஆதாரங்கள், சாட்சிகள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும். எவரும் எந்தவொரு செயலையும் எந்த வகையிலும் மறைக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது.

நன்மையான காரியங்களைச் செய்திருக்கும் நம்பிக்கையாளர்கள் தங்களுக்குரிய பரிசுகளை, வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார்கள். தீமையான காரியங்களைச் செய்திருக்கும் குற்றவாளிகள் தங்களுக்குரிய தண்டனைகளை, வேதனைகளைப் பெற்றுக்கொள்வார்கள். சின்னஞ்சிறிய அற்பமான செயல்களாக இருந்தாலும், மிகப்பெரிய மகத்தான காரியங்களாக இருந்தாலும் அனைத்துக்கும் அந்நாளில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருக்கும். பல்வேறு விதமான சான்றுகள் இருக்கும்.

இவ்வாறு, நல்லவர்களுக்கு ஆதரவாகவும் கெட்டவர்களுக்கு எதிராகவும் சாட்சிகள் நிறைந்திருப்பது என்பது மறுமை நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

சாட்சி கூறுவோர் மீதும் சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 85:3)

ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர். (அக்ல்குர்ஆன் 50:20,21)

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் நாளில்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு (பேச) அனுமதிக்கப்படாது. அவர்கள் (வணக்க வழிபாடுகள் செய்யுமாறு) வற்புறுத்தப்படமாட்டார்கள்.    (அல்குர்ஆன் 16:84)

நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் முன் வரும் நாளிலும் நாம் உதவுவோம்.  (அல்குர்ஆன் 40:51)

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். “உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும்.  (அல்குர்ஆன் 28:75)

பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 39:69)

எந்தவொரு நல்லறமும் செய்யாதவருக்கு சொர்க்கம் தரப்படுகிறது என்று அதிருப்தியில்  எவரும் எதிர்த்துப் பேசுவதற்கோ வாதம் செய்வதற்கோ வாய்ப்பே இருக்காது. எந்தவொரு தீமையும் செய்யாதவருக்கு நரகம் கொடுக்கப்படுகிறது என்று பொய் சொல்லி உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. காரணம், நன்மைகள் தீமைகள் அனைத்துக்கும் மிகத் துல்லியமான சாட்சிகள் இருக்கும். இந்த உலகில் வாழும்போது, நமக்குத் தெரியும் வகையிலும் தெரியாத வகையிலும் பல சாட்சிகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த வகையில், மறுமையில் எவ்வாறெல்லாம் சாட்சிகள் சூழ்ந்திருக்கும் என்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வே முதல் சாட்சியாளன்

நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிந்தவன். உறக்கம், ஓய்வு போன்ற பலவீனம் இல்லாமல் இரவு பகல் முழுவதும் நம்மை கண்காணித்துக் கொண்டிருப்பவன். மனிதர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக துல்லியமாக அறிந்தவன். இத்தகைய இறைவன் மறுமை நாளில் நமது செயல்களுக்கு முதல் சாட்சியாக இருப்பான்.

நாம் நல்லது செய்தோமா? கெட்டது செய்தோமா? என்று பகிரங்கப்படுத்துவதற்கு அவனே போதுமானவன். இதை நாம்  நமது மனதில் முதலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை குர்ஆனிலும் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அந்த ஆதாரங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.

இவர் இதை இட்டுக்கட்டிவிட்டார்என்று கூறுகிறார்களா? “நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!  (அல்குர்ஆன் 46:8)

முஹம்மதே!) “நீர் (இறைவனின்) தூதர் அல்லர்என்று, மறுப்போர் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். வேதத்தின் அறிவு உள்ளோரும் போதுமானவர்கள்என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 13:43)

(முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.  (அல்குர்ஆன் 10:46)

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லைஎன்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்என்றும் கூறுவார்கள்.  (அல்குர்ஆன் 10:28, 29)

உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் “தூதர்உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்என்று அவன் கூறினான்.  (அல்குர்ஆன் 3:81)

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்!என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்!என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்!என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்!என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்!என்றோம்.

பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்துவிட்டேனா?” எனக் கேட்டார்கள். மக்கள் “ஆம்!என்றனர். பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாவிட வேண்டாம்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), ஆதாரம்: புஹாரி (1741, 4403)

சாட்சியாகும் மலக்குகளும் பதிவேடுகளும்

நம்மைக் கண்காணிப்பது நமது காரியங்களைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகளைச் செய்வதற்கு மலக்குகளை அல்லாஹ் படைத்திருக்கிறான். குறிப்பாக, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது செயல்களைப் பதிவு செய்வதற்கென்று மலக்குகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு, நமக்காக நியமிக்கப்பட்டுள்ள அந்த மலக்குகள் அனைத்துத் தருணங்களிலும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களுக்குரிய ஏடுகளும் அவற்றை எழுதிய மலக்குகளும் மறுமை நாளில் நமது காரியங்களுக்கு முக்கியமான சாட்சிகளாக இருப்பார்கள். இந்த விளக்கத்தை பின்வரும் வரிகளின் வாயிலாக விளங்கலாம்.

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள். (அல்குர்ஆன் 82:10,11,12)

மனிதர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்என (முஹம்மதே!) கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர். (அல்குர்ஆன் 10:21)

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 50:16-18)

அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.        (அல்குர்ஆன் 43:80)

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.  (அல்குர்ஆன் 50:17,18)

மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் முன்னிலையில் இந்த என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை அல்லாஹ் வெளியே கொண்டு வருவான். தொன்னூற்று ஒன்பது ஏடுகள் அவனுக்கு விரித்து வழங்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தூரம் அளவிற்கு இருக்கும்.

அந்த மனிதனிடம் அல்லாஹ், “இதில் இருக்கும் ஏதேனும் ஒன்றை நீ மறுக்கிறாயா? (உன்னை கண்காணிப்பதற்கு நான் நியமித்த) எனது எழுத்தாளர்கள் உனக்கு (ஏதேனும் இதிலே தவறாக பதிவு செய்து) தீங்கிழைத்து இருக்கிறார்களா?” என்று கேட்பான். “இல்லை, எனது இறைவாஎன்று அந்த மனிதன் கூறுவான். மேலும் இறைவன், “உன்னிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா?” என்று அந்த மனிதனிடம் கேட்பான். “இல்லை, என் இறைவாஎன்று அந்த மனிதன் கூறுவான். உடனே இறைவன், “அவ்வாறில்லை, நம்மிடம் உமக்கு சிறந்த நன்மை இருக்கிறது; இன்று உனக்கு அநீதி இழைக்கப்படாதுஎன்று கூறுவான். (அந்த மனிதனுக்குரிய ஏடுகள்) அவற்றில் இருந்து ஒரு துண்டு சீட்டு வெளியே எடுக்கப்படும். அதில், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்று இருக்கும். “உன்னுடைய எடையை நிறுத்துஎன்று இறைவன் கூறுவான். “இறைவா! இந்த ஏடுகளுடன் இருக்கும் இந்தச் சீட்டு என்ன?” என்று அந்த மனிதன் அவனிடம் கேட்பான். அதற்கு, “நீ அநீதி இழைக்கப்படமாட்டாய்என்று இறைவன் கூறுவான்.

(நன்மை தீமைகளை அளவிடும் தராசின்) ஒரு தட்டில் ஏடுகளும் மற்றொரு தட்டில் அந்தத் துண்டுச்சீட்டும் வைக்கப்படும். ஏடுகள் எடையில் தாழ்ந்துவிடும். துண்டுச் சீட்டு எடையில் கனத்துவிடும். அல்லாஹ்வுடைய பெயரைவிட எந்தவொன்றும் கனத்துவிடாது.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2563, இப்னுமாஜா 4290, அஹ்மத் 6699

தங்களுக்கே சாட்சி சொல்லும் மனிதர்கள்

மறுமை நாள் என்பது திடுக்கங்களும் தடுமாற்றங்களும் நிறைந்திருக்கும் நேரம். என்ன நடக்குமோ? என்று எல்லோரும் பயத்தில் உறைந்திருக்கும் தருணம். இத்தகைய நேரத்தில், தங்களது காரியங்களை வெறுத்து மூடி மறைக்கவும், மறுத்துத் தவிர்க்கவும் இயலாத நிலையில் மனிதர்கள் இருப்பார்கள். இதன் காரணமாக, மனிதர்கள் தங்களது செயல்களை எடுத்துக் காட்டும் வேளையில் அதை ஒப்புக் கொள்வார்கள். இவ்வாறான நிலையை மனிதர்களில் இறைத்தூதர்கள் உட்பட அனைவருக்கும் வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்துள்ளான். இதைப் பின்வரும் ஆதாரங்களின் வாயிலாக நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். “அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்என அவர்கள் கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.  (அல்குர்ஆன் 7:37)

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்துவிட்டோம்என்றோ, “இதற்குமுன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின்வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?’ என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)  (அல்குர்ஆன் 7:172, 173)

உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 3:81)

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 12

அல்லாஹ்வின் ஆற்றலுக்கு  அணை போடும் கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

அறிவுக்கடல் கஸ்ஸாலி என்று தமிழக ஆலிம்களில் பாராட்டப்படுகின்ற கஸ்ஸாலி ஷியா சிந்தனைவாதி என்பதைக் கடந்த இதழில் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் கண்டோம். இவர் அறிவுக்கடல் அல்ல! அறியாமைக் கடல் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைப் பார்த்து இருக்கிறோம். மார்க்கம் என்ற பெயரில் அறியாமைக் களத்தில் நின்று இவர் ஆடிய ஆட்டம் சாதாரண ஆட்டமல்ல! சகிக்க முடியாத ஆட்டமாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹீக்கு மாற்றாக, தவமிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தனி வஹீ உதிக்கும் என்ற இவரது கதையளப்பை முன்பு நாம் பார்த்தோம். தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டுக் காட்டிய கஸ்ஸாலி, தூய அல்லாஹ்விடமே தனது விளையாட்டைக் காட்டுவதைப் பார்ப்போம்.

உணவு, தவணை, மகிழ்ச்சி, துக்கம், கவலை, ஆற்றல், இறை நம்பிக்கை, இறை மறுப்பு, கட்டுப்படுதல், மாறு செய்தல் என்று அல்லாஹ் தனது அடியார்களுக்கிடையே செய்த பங்கீடு அனைத்துமே நீதியும் நியாயமும் ஆகும். அதில் அநியாயமே இல்லை. எனினும் அது அவசியத்திற்கு ஒப்பவும் அவசியத்திற்குத் தக்கவும், அவசியத்திற்கு ஏற்பவும் நீதமான, கட்டாயமான ஓர் ஒழுங்குமுறைப்படி அமைந்திருக்கின்றது. இதைவிட மிக அழகான, நிறைவான, முழுமையான வேறொரு (உலக) அமைப்பு இருப்பதற்கு அறவே சாத்தியமில்லை.

இதற்கு அப்பால் இறையாற்றல் இல்லை

ஒரு பேச்சுக்கு அப்படி ஓர் உலகம் சாத்தியமாகி, அவன் தன் ஆற்றலுடன் அதைப் படைத்து அருட்புரியாமல் தன் வசம் சேமித்து வைத்திருந்தால், அது அவனது வடிகட்டிய கஞ்சத்தனமும் கருமித்தனமும் ஆகும். இது அவனது கொடைத் தன்மைக்கு நேர் எதிரான செயல்பாடாகும். அவனது நீதத் தன்மைக்கு எதிரான அநீதமான, அநியாயமான செயல்பாடாகும்.

இதை கஸ்ஸாலி (ஹகீக்கத்து தவ்ஹீத்) ஏகத்துவத்தின் யதார்த்தம் அல்லது உண்மை வெளிப்பாடு என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடுகின்றார்.

பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இந்த வார்த்தைகள் பக்கா தவ்ஹீதையும் அல்லாஹ்வின் நீத, நியாயத்தன்மையை அப்படியே அழகாகப் பிரதிபலிப்பது போல் தோன்றும். ஆனால் அத்தனையும் பசப்பு மொழி, பாசாங்கு மொழி என்பதை அவரது கடைசி விளக்கத்தைப் படித்தால் தெரிந்து விடும்.

அதாவது, இங்கு உலகத்தின் படைப்புத் திறன், அதன் படைப்பழகு, அதில் அல்லாஹ் பகிர்ந்திருக்கும் நீதி பகிர்மானம், உணவு விதி பரிபாலணம் அத்தனையும் அருமையிலும் அருமை என்று கூறுகின்ற அதே வேளையில், அல்லாஹ்வுக்கு இதைத் தாண்டி படைப்பதற்கு ஆற்றல் இல்லை என்று பகிரங்க, பூர்வாங்க வாக்குமூலம் கொடுக்கின்றார் கஸ்ஸாலி!

இந்தக் கொள்கையும் கோட்பாடும் கஸ்ஸாலியுடையதல்ல! இது தத்துவஞானிகளின் கொள்கையும் கோட்பாடுமாகும்.

தத்துவஞானிகளின் தறிகெட்டக் கொள்கை

அல்லாஹ் உலகைப் படைத்துவிட்டான். இதன் மூலம் அவனது நாட்டம் நிறைவேறிவிட்டது. அவனது நாட்டம் நிறைவேறிவிட்டதால் அந்த நாட்டம் அவனிடமிருந்து பிரிந்துவிட்டது. அல்லாஹ் தன் ஆற்றலால் இந்த உலகைப் படைத்துவிட்டான். அத்துடன் அவனது ஆற்றல் அவனை விட்டும் அறுந்துவிட்டது. அவனுக்கும் அந்த ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை. இதன் விளைவு, இனி இதுபோன்ற உலகத்தை அவனால் படைக்க இயலாது.

இதுதான் தத்துவவியல் கொள்கையும் கோட்பாடுமாகும். அல்லாஹ் இந்த அபத்தத்திலிருந்தும், அபாண்டத்திலிருந்தும் நம்மைக் காக்க வேண்டும்.

இதைப் பற்றி, கஸ்ஸாலியை கல்விக் கடல் என்று புகழ்கின்ற அவரது மாணவரான அபூபக்ர் பின் அரபீ தனது அஸ்மாஉல் ஹுஸ்னா (அழகிய திருநாமங்கள்) என்ற நூலின் விளக்கவுரையில் குறிப்பிடுவதாவது:

நம்முடைய ஆசிரியர் அபூஹாமித் (கஸ்ஸாலி) ஒரு பிரம்மாண்டமான, படுமோசமான கருத்தைக் கூறுகின்றார். அந்தக் கருத்துக்கு எதிராக உலமாக்கள் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

“தொழில்நுட்பத்திலும் நுணுக்கத்திலும் அல்லாஹ்வின் ஆற்றலில் இந்த உலகத்தைத் தவிர அழகான, அருமையான வேறொரு உலகம் இருக்க முடியாது. அவனது ஆற்றலில் இதைவிட வேறொரு அழகான, அருமையான வேறொரு உலகம் இருந்து, ஒரு வாதத்திற்கு அதை அவன் படைக்கவில்லை என்றால் அது அவனது தயாள, தாராள கொடைத்தன்மையை முடிவு கட்டுவதாக ஆகிவிடும். இது அசாத்தியமாகும்”

இதுதான் நம்முடைய ஆசிரியர் கஸ்ஸாலியின் கருத்தாகும்.

இவ்வாறு அபூபக்ர் பின் அரபீ அவர்கள் கூறிவிட்டு அதற்குப் பின்வரும் பதிலையும் அளிக்கின்றார்.

அல்லாஹ்வின் ஆற்றல் என்பது அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்ற ஓர் ஆற்றலாகும். உருவானவற்றுக்கும் அவனது ஆற்றலுக்கும் சம்பந்தமும் தொடர்பும் உண்டு. ஏற்கனவே உருவான பொருட்கள் மட்டுமே உருவானவை. இனி எதுவும் உருவாகாது என்று எல்லையோ வரம்போ அல்லாஹ்வின் ஆற்றலுக்குக் கிடையாது என்ற கொள்கையிலிருந்து கஸ்ஸாலி விலகி, தூரமாகிப் போய்விட்டார்.

அவனது ஆற்றல், உருவான இந்த உலகத்தில் மட்டும் தான் அடங்கியிருக்கின்றது. ஏனையவற்றில் இல்லை என்ற கொள்கையில் கஸ்ஸாலி உள்ளார். இது தத்துவவியலாளர்களின் தறிகெட்ட கொள்கையாகும். உண்மைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவது தத்துவவியலாளர்களின் வேலையாகும்.

உதாரணத்திற்கு, உயிருடன் இருக்கின்ற ஒரு பொருளுடன் மட்டும் தான் இறைவனின் தொழில்நுட்பத்தை இந்தக் கொள்கை இணைத்துப் பார்க்கின்றது. தற்போது செயல்படுகின்ற செவி, பார்வைப் புலன்களில் மட்டும் தான் அவனது ஆற்றல் அடங்கியிருப்பதாக இந்தக் கொள்கை நம்புகிறது.

இவர்களின் இந்தக் குருட்டு சிந்தனை, இவர்களது உள்ளங்களில் நல்ல, நியாயமான சிந்தனைக்கு அறவே இடமில்லாமல் ஆக்கிவிட்டது. இது அபத்தமான, ஆபத்தான கருத்து என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டிருக்கின்றது.

இறையாற்றலுக்கு எல்லை இல்லை

அல்லாஹ்வின் ஆற்றலால் உருவாகக்கூடியவைகளுக்கு எல்லையே கிடையாது. ஏற்கனவே அல்லாஹ்வின் ஆற்றலால் உருவானதை மட்டுமே அல்லாஹ்வால் உருவாக்க முடியும் என்று நம்புவது இறைநம்பிக்கையல்ல. அவனது ஆற்றலால் எதையும் உருவாக்க முடியும் என்று நம்புவதே நமது நம்பிக்கையாகும். ஏனெனில் அல்லாஹ்வின் ஆற்றல் நடந்தே தீரும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணமாகும்.

இவ்வாறு கூறுவதுடன் அபூபக்ர் பின் அரபி நிறுத்தவில்லை.

புலி வாலைப் பிடித்த கஸ்ஸாலி

“நம்முடைய ஆசிரியர் அபூஹாமித் (கஸ்ஸாலி) தத்துவவியலாளர்களின் தத்துவவியலை வாயில் விழுங்கி விட்டார். அதை அவர் வாந்தி எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அது அவரால் முடியவில்லை. அவரது கதை புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது” என்றும் குறிப்பிடுகின்றார்.

படைத்தவன் விவகாரத்திலும் இதுபோன்ற வாசகப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது தேவையற்ற காரியமாகும் என்று பத்ருத்தீன் ஜர்கஸீ தெரிவிக்கின்றார். மேற்கண்ட இந்தக் கருத்துக்களை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலாவில் பதிவு செய்துள்ளார்கள்.

“விதிக்கென்று ரகசியம் உண்டு. அதைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நம்முடைய ஆசிரியர் கஸ்ஸாலி கூறியுள்ளார். இவ்வாறு கூறிய கருத்துக்களுக்காகவும் அவர் கடுமையான கண்டனத்துக்குள்ளானார். விதிக்கு என்ன ரகசியம் வேண்டிக் கிடக்கின்றது? ஆய்வின் அடிப்படையில் அதை அடைய முடியும் என்றால் கண்டிப்பாக ஆய்வின் மூலம் அடைந்து விடலாம். ஹதீஸ்கள் அடிப்படையில் அதை அடைய முடியும் என்றால் அவ்வாறு அடைந்து விடலாம். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு ஹதீசும் நிரூபணம் ஆகவில்லை. ஞானநிலை, இர்பான் என்ற மறைமுக ஞானத்தின் மூலம் அதை அடைய முடியும் என்று கூறுவது வெட்டிப் பேச்சும் வெறும் பேச்சுமாகும். ரகசியத்தைப் பரப்புதல் என்று கஸ்ஸாலி குறிப்பிடுவதன் நோக்கம், நாம் விதி தொடர்பான விஷயத்தில் மூழ்கி அதில் சர்ச்சை செய்யக்கூடாது என்பதற்காகக் கூட இருக்கலாம்” என்றும் அபூபக்ர் பின் அரபி கூறுவதாக ஹாபிழ் தஹபீ அவர்கள் ஸியரில் குறிப்பிடுகின்றார்கள்.

நூலாசிரியர் மக்ராவியின் விமர்சனம்

கஸ்ஸாலியின் மாணவரான அபூபக்ர் பின் அரபியை விட வேறு ஓர் உண்மையாளர் வேண்டுமா? இவர் கஸ்ஸாலியின் மாணவராக இருந்தும் அவரது கொள்கையில் ஏற்பட்ட கோளாறை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார். கஸ்ஸாலி தத்துவக் கொள்கை எனும் கூடாரத்தில் குடியிருக்கின்றார். அவரிடமிருந்து பிறந்த கருத்துக்களில் அந்த சித்தாந்தத்தின் பாதிப்பே பிரதிபலிக்கின்றது.

தத்துவக் கொள்கையின் தகிடுதத்தங்களைப் பார்க்க விரும்புவர் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் தஆருலுல் அக்ல் வன்னக்ல் என்ற நூலைப் புரட்ட வேண்டும். அதில் இப்னு தைமிய்யா அவர்கள் தத்துவவியலாளர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்து அவர்களைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றார்.

எது எப்படி இருப்பினும் இங்கு நாம் காண வேண்டிய முக்கியமான விஷயம், அபூபக்ர் பின் அரபி, தனது ஆசிரியரின் கொள்கை முஸ்லிம்களின் சரியான கொள்கைக்கு நேர் முரணாக அமைந்திருக்கின்றது என்று படம்பிடித்துக் காட்டியிருப்பதைத் தான்.

அல்லாஹ்வின் தகுதிக்கும் தரத்திற்கும் ஒவ்வாத விஷயங்களைக் கொண்டு அவனை அறிமுகப்படுத்துகின்றார்.  அல்லாஹ்வின் பண்புகளுக்கும் அவனது பெயர்களுக்கும் வரம்பு கட்டுபவர் அவனது பெயர்களைத் திரித்துக் கூறுபவர் ஆவார். அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் வரையோ, வரம்போ இல்லை.

தனது படைப்பினத்தைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வுக்கு இருக்கின்றது. தனது அருளால் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றான். அவனது ஞானத்தின்படி படைப்பினங்களைப் புதிதாக உருவாக்கிக் கொள்கின்றான். அடியார்களுக்குரிய ஒரே கடமை, அதை அப்படியே நம்பி அவனது அருட்கொடைகளைப் போற்றிப் பாராட்டுவதாகும்.

அல்லாஹ்வை ஆட்சேபிப்பவர், அவனை விவாதப் பொருளாக்குபவர், அவன் மீது சுயமுடிவுகளைச் சொல்பவர் அல்லாஹ்வை மதிக்கத் தவறியவர் ஆவார்.

நமது விமர்சனம்

கஸ்ஸாலியின் ஆக்கமான இஹ்யாவைப் படிப்பவர், அல்லாஹ்வின் ஆற்றலுக்கு வரம்பு கட்டுகின்ற இந்த வரிகளைக் கட்டாயம் படிப்பார். இந்த வரிகள் கக்குகின்ற நெருப்புப் பொறிகளைக் காணவிடாமல் அந்த வாசகனின் கண்களை கஸ்ஸாலியின் மீது கொண்டுள்ள குரு பக்தியும் குருட்டு பக்தியும் மறைக்கின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

அல்லாஹ்வை அவமதிப்பவர்கள்

அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் வரம்பு கட்டுகின்ற கஸ்ஸாலியின் இந்த அத்துமீறிய போக்கை மேற்கண்ட அறிஞர்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றனர். ஆனால் தமிழக ஆலிம்களின் கண்களில் இது தவறாகப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழக மதரஸாக்களின் கடவுள் கொள்கையே தவறாக அமைந்திருப்பது தான். அல்லாஹ் எங்கிருக்கின்றான் என்று கேட்டால் இந்த அடிப்படைக் கேள்விக்குரிய விளக்கம் கூட மதரஸாக்களில் போதிக்கப்படுவதில்லை.

ஆடு மேய்க்கும் சிறுமியிடம் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்கிருக்கின்றான்?” என்ற கேட்கின்றார்கள். அதற்கு அந்தச் சிறுமி, “வானத்தில் இருக்கின்றான்என்று பதிலளிக்கின்றாள். நான் யார்? என்று நபியவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அவள் பதிலளிக்கின்றாள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவளை விடுதலை செய். ஏனெனில் இவள் இறைநம்பிக்கை கொண்டவள்என்று முஆவியா பின் ஹகம் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கின்றார்கள்.

நூல்: முஸ்லிம் 537

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று இந்த வசனம் தெரிவிக்கின்றது.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல்மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அப்போது அறிந்து கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 67:16, 17

அல்லாஹ் வானத்தில் இருக்கின்றான் என்று இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இந்த அடிப்படைக் கடவுள் கொள்கை தெரிந்திருந்தால் மன்சூர் ஹல்லாஜ் போன்ற வழிகேடர்களைத் தமிழக ஆலிம்கள் தூக்கிப் பிடிக்கமாட்டார்கள்.

தமிழக மதரஸாக்களில் கடவுள் கொள்கை என்பது அத்வைதக் கொள்கையாகத் தான் அமைந்திருக்கின்றது. ராத்திபத்துல் ஜலாலிய்யா என்ற பெயரில் வெள்ளிக்கிழமை இரவுகளில் திக்ரு நடைபெறும். அந்த திக்ரில்,

லா மவ்ஜூத் இல்லல்லாஹ் – காணும் பொருள் எல்லாம் கடவுள் தான்

அல்லாஹ் மவ்ஜூதுன் பில் உஜூத் – அல்லாஹ் படைப்பினத்தில் காட்சியளிக்கின்றான்

இதுபோன்ற திக்ருகள் இடம்பெறுகின்றன. இந்த அபத்தங்கள் நிறைந்த ராத்திபுகளை ஆலிம்களே முன்னின்று நடத்துகின்றனர் என்பது இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

மக்கா இணை வைப்பாளர்களையும் இறை மறுப்பாளர்களையும் நோக்கி அல்லாஹ் கூறும் போது, அல்லாஹ்வை மதிக்காதவர்கள் என்று குற்றம் சாட்டுகின்றான்.

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்;

அல்குர்ஆன் 22:74

இதற்குக் காரணம், அல்லாஹ்வுக்குரிய ஆற்றலை அப்படியே அவனது அடியார்களுக்குத் தாரளமாக, சர்வ சாதாரணமாக தூக்கிக் கொடுத்தார்கள்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)

அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள் என்று கூறினார்கள்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் எச்சரிக்கை

இதனால் தான் அல்லாஹ் அவர்களைப் பற்றிக் கூறும் போது, அவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை என்று குறிப்பிடுகின்றான். இந்தக் குற்றச்சாட்டு தமிழக ஆலிம்களுக்கு அப்படியே பொருந்திப் போகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஈனுத்தீன், ஷாகுல் ஹமீது ஆகியோரை அழைத்துப் பிரார்த்திப்பதன் மூலம் அவர்கள் உயிரோடிருப்பதாக இந்த ஆலிம்கள் நம்புகிறார்கள்.

எப்போதும் உயிருடன் இருப்பது, செவிமடுப்பது, பதிலளிப்பது, நிவாரணம் அளிப்பது அல்லாஹ்வின் அளப்பெரிய தனியாற்றல். அந்த ஆற்றலை இந்த நல்லடியார்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கின்றனர். இது அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காத தன்மையாகும். இப்படி அல்லாஹ்வை உரிய விதத்தில் மதிக்காத இந்த ஆலிம்களிடம் கஸ்ஸாலியின் அத்துமீறல் எப்படித் தவறாகத் தெரியும்? அல்லாஹ்வின் ஆற்றலை ஒரு குறுகிய வரம்புக்குள் கொண்டு வருகின்ற கஸ்ஸாலியை இந்த ஆலிம்கள் எப்படி குற்றம் காண முடியும்? கண்டு கொள்ளவே மாட்டார்கள்; கண்டிக்கவும் மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் திருந்தவில்லை என்றால் கஸ்ஸாலியையும் அவரது கோட்பாட்டை நம்புபவர்களையும் அல்லாஹ் விட்டுவைக்கப் போவதில்லை.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180)

இந்த எச்சரிக்கையை இதன் மூலம் கஸ்ஸாலியின் பக்த கோடிகளுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இஹ்யா பற்றி இமாம் தஹபீ

இஹ்யா…. அது ஒட்டுமொத்தமான பொய்யான ஹதீஸ்களின் ஒதுங்குமிடமாகும். வழிகெட்ட சூபிகள், தத்துவ ஞானிகளின் பாட்டைகளில் அமைந்த துறவுநிலை, அவர்களின் தடங்கள், அவர்களின் செயல்பாடுகள் போன்றவை இஹ்யாவில் இடம்பெறவில்லை என்றால் இஹ்யாவில் அதிக நன்மைகள் உள்ளன என்று கூறவிடலாம். நாம் அல்லாஹ்விடம் பயனுள்ள கல்வியைக் கேட்போமாக! பயனுள்ள கல்வி என்றால் என்ன?

அல்லாஹ் குர்ஆனில் அருளி, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல், செயல் மூலம் விளக்கமளித்த கல்வி தான். அல்லாஹ் அருளாததை, அவனது தூதர் (ஸல்) தடை செய்து விட்டார்கள். எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவனல்ல என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். (புகாரி 5063)

என்னருமைச் சகோதரனே! குர்ஆனின் சிந்தனையில் நீ ஈடுபடு! புகாரி, முஸ்லிம், நஸயீ, இமாம் நவவீயின் ரியாளுஸ்ஸாலிஹீன், அவர் இயற்றியிருக்கும் திக்ருகளை ஆழ்ந்து படி! நீ வெற்றி பெறுவாய். தத்துவஞானிகளின் பாட்டை, ஆன்மீக பயிற்சியாளர்கள், பாதிரிகளின் பாதையில் பயணம் செய்யாதே என்று உன்னை நான் எச்சரிக்கிறேன். தனிமை தவம் புரியும் தற்குறிகளின் தறிகெட்ட போதனைகளைச் செவிமடுக்காதே என்று உன்னை நான் எச்சரிக்கிறேன். நன்மைகள் அனைத்தும் தூய, நேரிய மார்க்கத்தைப் பின்பற்றுவதில் தான் அடங்கியிருக்கின்றது.அல்லாஹ்வின் ரட்சிப்பைக் கோருவோமாக! யா அல்லாஹ்! நேரிய பாதையை எங்களுக்குக் காட்டுவாயாக!

நூலாசிரியர் மக்ராவி கூறுகின்றார்:

இஹ்யாவைப் பற்றிய தனது கருத்துக்களை இமாம் தஹபீ அவர்கள் தெளிவாகப் பதிவு செய்துவிட்டார்கள். அதில் உள்ள வழிகேடுகளை தோலுரித்துக் காட்டிவிட்டார்கள். பொய்யான ஹதீஸ்களின் பொதிகளைச் சுமக்கின்ற ஒரு சரக்கு வண்டியாக இஹ்யா அமைந்திருக்கின்றது. இது வழிகேடுகளில் மிகப்பெரிய வழிகேடாகும். ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் இது பாரதூரமான பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சுன்னத் (நடைமுறை) மீது பொங்கி எழுகின்ற ரோஷ உணர்வு ஒவ்வொரு முஸ்லிமிடமும் குடிகொண்டிருக்கின்றது. இதை இமாம் தஹபீ அவர்கள் தட்டி எழுப்புகின்றார்கள்.

அத்துடன் குர்ஆன், ஹதீஸை மட்டுமே வழிகாட்டு நெறியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இமாம் தஹபீ அறிவுரை வழங்குகின்றார்கள். சூபிகளின், தத்துவ ஞானிகளின் போதை நிறைந்த பாதையைப் புறந்தள்ளச் சொல்கிறார்கள்.

இஹ்யாவிலிருந்து பொய்யான ஹதீஸ்கள், தத்துவ ஞானிகளின் புனையல்கள், ஆத்ம ஞானிகளின் அஞ்ஞானப் பாட்டைகள் அத்தனையும் நீக்கி விட்டுப் பார்த்தால் அது வெள்ளை வெளேரென்று வெறுந்தாளாக மட்டுமே காட்சியளிக்கும். ஒரு கருப்பு எழுத்தைக் கூட காணமுடியாது. இதுதான் இந்த இஹ்யாவின் வண்டவாளம். இந்த வண்டவாளம் இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும்.

—————————————————————————————————————————————————————-

பராஅத் இரவு

பொய்யான ஆதாரங்களும் புதிய விளக்கங்களும்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

முஸ்லிம் சமுதாயம் ஷஃபான் மாதம் 15ம் நாள் இரவில் பராஅத் இரவு என்ற பெயரில் நோன்பிருப்பது, சிறப்புத் தொழுகை தொழுவது என பலவாறான வணக்கங்களைச் செய்து வருவதைப் பார்க்கிறோம்.

பராஅத் இரவு இஸ்லாத்தில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது எனவும் இந்த நாளில் நோன்பு, இரவுத் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளைச் செய்யுமாறு அல்லாஹ்வும் அவனது தூதரும் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள் எனவும் ஒரு பிரிவினர் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களின் பார்வையில் பராஅத் இரவு அது பாவம் போக்கும் ஓர் மகத்தான இரவு என்பதே. இதற்கென சிறப்பு பயான்கள் ஏற்பாடு செய்து பராஅத் இரவின் புகழைப் பாடிவருகின்றனர்.

அதற்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன? அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதைப் பல வருடங்களுக்கு முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். உண்மையில் பராஅத் இரவு ஓர் தெளிவான வழிகேடு, இஸ்லாத்திற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நபிகள் நாயகம் காட்டித்தராத காரியங்களை அதில் செய்தால் அது நம் பாவத்தைப் போக்காது; நம்மைப் பாவியாக்கி விடும் என்பதை அதில் விரிவாக விளக்கியுள்ளோம்.

இப்போது மீண்டும் மக்களை ஏமாற்றும் விதமாக பராஅத் இரவு தொடர்பான பொய்யான தகவல்களை பரேலவிகள் மக்களிடம் பரப்புகின்றனர். இந்த ஆண்டு ஷஅபானில் பராஅத் இரவுக்கென வெளியிடப்பட்ட சிறப்பு பிரசுரங்களில் நாம் ஏற்கனவே பதிலளித்துள்ள செய்திகளுடன் புதிய சில பலவீனமான செய்திகளையும் ஆதாரம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். எனவே இவற்றுக்கும் நாம் பதிலளிப்பது கடமை என்ற அடிப்படையில் இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.

பரேலவிகளின் விசேஷ குணம், அவர்களின் வாதத்திற்கு நாம் என்ன மறுப்பளிக்கிறோம் என்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளமாட்டார்கள்.  தாங்கள் கூறியதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருப்பார்கள். அது தான் இப்போதும் வெளிப்பட்டிருக்கின்றது.

தாங்கள் சத்தியவாதிகள் என்ற எண்ணம் உண்மையில் இந்த பரேலவிகளுக்கிருந்தால் நாம் எழுதிய மறுப்புகளுக்கும் அவர்கள் உரிய முறையில் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற ஆக்கப்பூர்வ செயலை கப்ரு வணங்கிகளிடம் நாம் எதிர்பார்க்க முடியாது என்பதை மீண்டும் அவர்கள் நிருபித்திருக்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிடும் பல செய்திகளின் உண்மை நிலையை முன்னரே நாம் விளக்கியிருந்தாலும் புதிய ஆதாரங்கள் சிலவற்றையும் (உண்மையில் அவை ஆதாரமல்ல) அவர்கள் முன்வைப்பதால் அது தொடர்பான விளக்கத்தை இப்போது அறியத் தருகிறோம்.

ஆதாரம்: 1

ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணைவைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

இச்செய்தி முஆத் (ரலி) அவர்களின் அறிவிப்பாக இப்னுஹிப்பான் (5665), தப்ரானீ (6776) ஆகிய நூல்களிலும், அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களின் அறிவிப்பாக இப்னுமாஜா (1380) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூமூஸா (ரலி) அறிவிப்பு

அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களின் அறிவிப்பில் இடம் பெறும் ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இவர் யாரென்று அறியப்படாதவர் என இமாம் தஹபீ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

யாரென்று அறியப்படாத அறிவிப்பாளரின் அறிவிப்பு ஏற்கப்படாது என்ற அடிப்படையில் இது பலவீனமான அறிவிப்பாகும்.

மேலும் இந்த அறிவிப்பில் இப்னு லஹீஆ என்பாரும் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்

(பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம்: 2, பக்கம்: 475)

முஆத் (ரலி) அறிவிப்பு

முஆத் (ரலி) அவர்களின் அறிவிப்பில் மக்ஹூல் என்பார் மாலிக் பின் யுகாமிர் என்பார் வழியாக அறிவிப்பதாக உள்ளது.

ஆனால் மக்ஹூல் என்பவர் மாலிக் அவர்களைச் சந்திக்கவில்லை என இமாம் தஹபீ கூறியதாக இப்னுல் முஹிப்பு எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

(ஸிஃபாது ரப்பில் ஆலமீன், பாகம்: 2, பக்கம்: 129)

ஆகவே அவ்விருவருக்கிடையில் விடுபட்டுள்ள அறிவிப்பாளர் யாரென்று அறியப்படாத காரணத்தால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

எனவே ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான் என்பதற்கு ஏற்கத்தக்க எந்தச் செய்தியும் இல்லை.

ஆதாரம்: 2

ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இறைவன் தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரைத் தவிர மற்ற எல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1. பகைமை பாராட்டுபவன் 2. கொலைசெய்தவன்.

அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலி)

அஹ்மத் 6642

இந்தச் செய்தியில் இப்னு லஹீஆ என்பார் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் ஹூயய் பின் அப்துல்லாஹ் என்பவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் இவரது செய்திகள் மறுக்கப்படவேண்டியது என்றும் இமாம் புகாரி அவர்கள் (பலவீனமானவரை குறிக்கும் இமாம் புகாரியின் வார்த்தையான) இவர் விஷயத்தில் ஆய்வு உள்ளது என்றும் நஸாயீ அவர்கள், இவர் பலமானவர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

தஹ்தீபுல் கமால் பாகம் 7 பக்கம் 488

எனவே இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமான செய்தியல்ல.

ஆதாரம்: 3

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதி இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அந்த இரவில் அப்படி என்ன இருக்கின்றது! என்று நான் கேட்டேன். அப்போது நபி  (ஸல்) அவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்தவருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்கள் எழுதப்படுகின்றது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: மிஷ்காத் 1305

இந்தச் செய்தியை இவ்வாறு குறிப்பிட்டு அவர்கள் ஆதாரமாக முன்வைத்துள்ளனர். இதில் நாம் கவனிக்க வேண்டியது மிஷ்காத் என்பது ஒரு தொகுப்பு நூலாகும்.

புகாரி, முஸ்லிம், அபூதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் அந்த இமாம்கள் நேரடியாகப் பெற்று பதிவு செய்த செய்திகளை இவர் தனது நூலில் தொகுத்து பதிவு செய்திருப்பார். மிஷ்காத் நூலில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் அவரே நேரடியாக பெற்ற ஹதீஸ்கள் அல்ல என்பதை கவனித்தல் அவசியம்.

இதன் அடிப்படையில் இச்செய்தி மிஷ்காத் நூலில் உள்ளது என்றால் அவர் எந்த நூலிலிருந்து இந்த ஹதீஸை எடுத்தெழுதியுள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை.

எனினும் நாம் இந்தச் செய்தியை ஆய்வு செய்ததில் இமாம் பைஹகீ அவர்களின் அத்தஃவாதுல் கபீர் (ஹதீஸ் எண் 530,) மற்றும் ஃபழாயிலுல் அவ்காத் (ஹதீஸ் எண் 26) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளத் தகுதியான செய்தியல்ல.

ஏனெனில் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நள்ர் பின் கஸீர் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார்.

இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர் என்றும் எந்நிலையிலும் இவரை ஆதாரமாகக் கொள்வது கூடாது எனவும் இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்.

அல்மஜ்ரூஹீன், பாகம்: 3, பக்கம்: 49

இவரிடம் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் உள்ளன என்று இமாம் புகாரி அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 262

இன்னும் அஹ்மத், அபூதாவூத், உகைலீ, தாரகுத்னீ, இப்னுல் ஜூனைத், அத்தூலாபி போன்ற பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளனர்.

எனவே இந்த செய்தி மிகவும் பலவீனமான செய்தி என்பது உறுதியாகிறது.

ஆதாரம்: 4

நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு வைப்பார்கள். மாதங்களில் ஷஃபானில் மட்டும் நீங்கள் நோன்பு பிடிக்க மிகவும் விரும்புவதேன்? என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதில் தான் அல்லாஹ் அந்த வருடம் மரணிப்பவர்களை தீர்மானிக்கின்றான்.  என்னைப் பற்றிய தீர்மானம் வரும்போது நான் நோன்பாளியாக இருக்க விரும்புகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்னது அபீயஃலா 4911

பராஅத் இரவின் மகிமையை (?) நிலைநாட்ட இந்த ஹதீஸையும் ஆதாரமாக முன்வைத்து எழுதியுள்ளார்கள்.

இந்த ஹதீஸின் தரத்தை பற்றி அறியும் முன் இதில் பராஅத் இரவில் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதா என்பதை தயவு செய்து கூர்ந்து கவனியுங்கள்.

பொதுவாக ஷஃபானுடைய மாதம் என்று தான் வருகிறதே தவிர பராஅத் இரவு என்ற வாசகம் இந்த ஹதீஸில் இல்லை என்பது முதல் விஷயம். இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தால் கூட பராஅத் இரவின் இல்லாத சிறப்பை (?) நிலைநாட்ட இது ஆதாரமாகாது.

எனினும் இது கூட ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள முஸ்லிம் பின் காலித் என்பவரை இமாம் புகாரி அவர்கள் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

தாரீகுல் கபீர், பாகம்: 7, பக்கம்: 260

இப்னு மயீன் மற்றும் அபூதாவூத் ஆகிய அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்றும் அபூஹாதம் அவர்கள் இவரை ஆதாராமாக கொள்ளக் கூடாது என்றும் விமர்சித்துள்ளனர்.

மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 102

ஆதலால் தான் இமாம் ஹைஸமீ அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இவரிடம் விமர்சனம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மஜ்மஉஸ் ஜவாயித், பாகம்: 3, பக்கம்: 248

ஆகவே இதுவும் ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

ஆதாரம்: 5

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

அல்குர்ஆன் 44:2-4

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

ஆதாரம்: 6

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆதாரம்: 7

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: திர்மிதி 670

இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

ஆதாரம்: 8

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,

ஃபலாயிலுர் ரமளான் – இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பாக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பாக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஆதாரம்: 9

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள், “பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான்” என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

இவர்கள் ஆதாரமாக முன்வைக்கும் செய்திகள் அனைத்தும் தவறான கொள்கையில் இருந்த இவர்களது முன்னோர்கள் முன்வைத்த செய்திகள் தாம்.

இவர்கள் முன்வைத்த ஹதீஸ்கள் எதுவும் ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல என்பதை அல்லாஹ்வின் அருளால் தூய இஸ்லாத்திற்காகப் பாடுபட்ட பல நல்லறிஞர்கள் மக்களுக்கு விளக்கியுள்ளார்கள்.

மனோ இச்சையின் அடிப்படையில் தாங்கள் செய்து வரும் அனாச்சாரத்தை இஸ்லாமிய மார்க்க சாயம் பூசுவதற்காக இவர்கள் எண்ணற்ற ஆதாரங்களைப் பட்டியலிட்டாலும் அது சத்தியமல்ல என்பதை அல்லாஹ் தனது அடியார்கள் மூலம் நிலைநாட்டிடுவான்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தராததை, பொய்யான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒருவர் செய்து வருவாரேயானால் அது அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய செயல் என்பதை விளங்கி பராஅத் இரவு என்ற பெயரில் அனாச்சாரங்கள் செய்வதை விட்டும் விலகி கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்    தொடர்: 24

மாநபியும் மனிதரே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். நபிகள் நாயகத்தின் பிரியத்திற்குரிய மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவத்தைக் கடந்த இதழில் கண்டோம். நபியவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளக்க இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையில்லை எனும் அளவுக்கு இந்த அவதூறு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.

நபிகளாருக்கு மறைவான ஞானம் தெரியாது என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அன்னையே!  முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சி-ர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்-விட்டார்என்று கூறிவிட்டு, பிறகு “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்எனும் (6:103ஆவது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பா-ருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லைஎனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள்.

மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லைஎனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப் பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்…எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ, நூல்: புகாரி 4855

ஆயிஷா (ரலி) அவர்களுடைய இயல்பு என்னவென்றால் யாரிடமும் எந்த ஒரு விஷயத்தைப் பேசுவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தைச் சொல்லித்தான் பேசுவார்கள். குர்ஆன் வசனத்தையோ அல்லது அல்லாஹ்வின் தூதர் இவ்வாறு சொன்னார்கள் என்று ஆதாரத்தையோ குறிப்பிட்டே பேசுவார்கள்.

அந்த அடிப்படையில் நாம் ஒருவரைப் பற்றி அவருடைய குணங்கள் – தன்மைகள், அவர் நல்லவனா கெட்டவரா ஆகியவற்றைப் பற்றி தெரிவதாக இருந்தால் அவருடைய மனைவியிடம் கேட்டாலே அவரைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அல்லது அவருடைய நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவரைப் பற்றி ஒன்று விடாமல் சொல்லி விடுவார்கள்.

இந்த ஹதீஸில் தன்னுடைய கணவரும் ஒரு மனிதர் தான். அவருக்கு மறைவான விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் இறைவசனத்தை ஆதாரமாகக் காட்டி மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். ஏனென்றால் இறைவனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் – எதிரிகள் அனைவரும் அல்லாஹ்வின் தூதருடைய பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக இவரை சூனியக்காரர் என்று மக்களிடம் பொய் பிரச்சாரத்தை பரப்பினால் மக்கள் நம்பி விடுவார்கள். அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணம் கொண்டிருந்தனர். அந்த எதிரிகளின் பொய்ப் பிரச்சாரத்தை அவர்களின் தவறான எண்ணங்களைப் பொய்ப்பிக்கும் விதமாகத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரங்களோடு நிருபிக்கிறார்கள்.

அதிலும் நபிகளாருக்கு மறைவான விஷயங்கள் அறியும் ஆற்றல் இருக்கிறது என்றால் முதலில் அவர்களுடைய மனைவிக்குத் தான் தெரிய வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவணை 24 மணி நேரமும் கண்காணிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தெருவில் யாராவது ஒரு பெண்ணுக்கு தனது கணவன் உதவி செய்வதைப் பார்த்துவிட்டால் அல்லது ஒரு வீட்டின் முன் நின்று பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டால் அல்லது செல்போனில் அதிக நேரம் அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக நேரம் செல்போனில் பேசிவிட்டோம் என்றால் அவ்வளவுதான். வீடே இரண்டாகிவிடும். அவளுடன் என்ன உங்களுக்கு என்ன பேச்சு? அப்படி எதைத் தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள்? யாரிடம் போனில் சிரித்து சிரித்து இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தீர்கள்? என்று துருவி துருவி விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்குப் பெண்கள் தன்னுடைய கணவனை கண்காணிக்கக் கூடியவர்களாக  இருப்பார்கள். இது அவர்களுடைய இயல்பான குணங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.

இப்படி இருக்கும் போது நபிகள் நாயகத்துக்கு மறைவான விஷயங்கள் தெரியும்; நாளை நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது. நபியவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தன்மையை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறான் என்றால் அவர்களுடைய 12 மனைவிமார்களில் ஒருவருக்குக் கூடவா இந்த விசயம் தெரியாமல் போய்விட்டது? ஒருவேளை நபியவர்கள் தன்னுடைய மனைவிமார்களிடத்தில் சொல்ல மாட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர்களுடைய பழக்கவழக்கங்கள்- நடவடிக்கைகளைப் பார்த்தாவது கண்டுபிடித்திருப்பார்களே!

எனவே நபியவர்களுக்கு மறைவான விஷயம் தெரியும் என்று யார் சொன்னாலும் அவன் பொய்யன் தான். அது குர்ஆனுக்கு மாற்றம்தான். குர்ஆனில் அல்லாஹ் சொன்னதற்கு எதிராக இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கவில்லை என்று மறுக்கிறார்கள்.

இதுதொடர்பாக மேலும் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

இந்த உலகில்  புகழை விரும்பாத எந்த ஒரு மனிதருமே கிடையாது. செய்தவற்றிற்குப் புகழை விரும்பினால் கூட பரவாயில்லை. ஆனால் செய்யாத செயல்களுக்காகப் புகழை விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அதிலும் வரம்பு மீறி தன்னை யாராவது புகழ்ந்தால் அதற்காகப் பெருமைப்படக் கூடியவர்களும் நம்மில் இருக்கிறார்கள். ஆனால் நபியவர்கள் அந்தப் பெருமையை விரும்பாதவர்களாக இருந்தார்கள். தன்னை வரம்பு மீறிப் புகழ்ந்த ஒரு சிறுமியை அவர்கள் அவர்கள் கண்டித்த செய்தியை நாம் காணலாம்.

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி), நூல்: புகாரி 4001

மேலும் நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லையென்பதற்கு மற்றொரு சம்பவமும் சான்றாக அமைகிறது.

என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னவர்?’ என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி (“அவர் அதிகம் வணங்குபவர்என்று புகழ்ந்து) கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதும் நிறுத்து! (வணக்கவழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 43

இச்சம்பவத்தில் நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லையென்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. ஏனென்றால் நபிகளாருக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் தனது வீட்டில் இருந்த பெண்ணை யார் இவர் என்று கேட்டிருக்க மாட்டார்கள். மாறாக நீங்கள் இன்னார்தானே? நன்றாக இருக்கிறீர்களா என்று அந்தப் பெண்ணை நலம் விசாரித்திருப்பார்கள். நமக்குத் தெரியாத நபர் நம் வீட்டிற்கு வந்தால் நாம் எப்படி இருப்போமோ அந்த மாதிரிதான் நபிகளாரும் நடந்து கொண்டதைப் பார்க்கலாம். நாம் எவ்வாறு அறிமுகம் இல்லாத நபரை யாரென கண்டுபிடிக்க முடியாதோ அந்த மாதிரி தான் நபிகளாரும் இதுவரை அறிமுகம் இல்லாத அந்தப் பெண்ணைப் பார்த்தபோதும் இவர் யார் எனக் கேட்டார்கள்.

அதுபோன்று பஹ்ரைன் என்ற ஊரிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற அப்துல் கைஸ் என்ற ஒரு கூட்டம் நபியவர்களிடம் வருகிறார்கள். முதன் முதலாக மதினாவிற்கு வெளியே ஜும்ஆ நடத்தப்பட்ட ஊரும் அதுதான். முதன் முதலாக ஒரு ஊரே இஸ்லாத்திற்கு வந்தது என்று சொன்னால் அது பஹ்ரைன் தான். அத்தகைய சிறப்புகளைப் பெற்ற அந்த ஊரிலிருந்து ஒரு கூட்டம் நபிகளாரைப் பார்ப்பதற்கு வருகிறது. அவர்கள் நபிகளாரிடத்தில் வந்த உடன் அவர்களைப் பார்த்து இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? ஏன் வந்திருக்கிறார்கள்? என்று கேட்கிறார்கள். அதற்கு பிறகு தான் அந்தக் கூட்டம் தாங்கள் யார் என்பதை நபிகளாருக்கு அறிமுகம் செய்கிறார்கள். (பார்க்க: புகாரி53

நபியவர்கள் ஏன் அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அவ்வாறு கேட்க வேண்டும்? நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அந்தக் கேள்வியை அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அந்தக் கேள்வியைக் கேட்காமல் அவர்கள் வந்திருந்த மாத்திரத்திலேயே அவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து, வாருங்கள், நீங்களா? நீங்கள் பஹ்ரைன் நாட்டைச் சார்ந்தவர்கள் தானே என்று அவர்களை வரவேற்றிருப்பார்கள். ஆனால் இந்த கேள்வியை கேட்டதிலிருந்தே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பது தெளிவாகிறது.

(நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்  தங்கியிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது (அவர்கள் “அங்கசுத்திசெய்வதற்காக) அவர்களுக்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது. உடனே “இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 143

இந்த ஹதீஸில் நபியவர்களுக்குத் தண்ணீர் எடுத்து வைத்தவர் யார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தண்ணீர் எடுத்து வைத்த அனஸ் (ரலி) அவர்கள் பக்கத்தில் தான் நிற்கிறார்கள். அதுவும் தண்ணீர் எடுத்து வைத்து சில நிமிடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அவர்களால் இதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனதே! அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அந்த இடத்தில் இந்த கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. நீதான் இந்த (தண்ணீர் எடுத்து வைத்த) செயலை செய்தாயா? அல்லாஹ் உனக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பானாக என்று துஆ செய்திருப்பார்களே! ஆனால் சில நிமிடங்களுக்க முன்னால் நடந்த செயலை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் நாம் என்ன விளங்கி வைத்திருக்கிறோம்? அவ்லியாக்கள் என்பவர்கள் மனித சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்; அவர்கள் நேற்று நடந்ததையும் இன்று நடப்பதையும் நாளை நடக்க இருப்பதையும் சூழ்ந்து அறியக்கூடியவர்கள்; பல வருடங்களுக்கு முன்னால் நடந்ததையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அதைப் பற்றி கேட்டால் அதை யோசிக்காமல் சொல்பவர்கள் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் அவ்லியாக்களுக்கெல்லாம் அவ்லியாவான நபியவர்கள் தமக்கு முன்னால் நடந்த செயலைக் கூட அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இவையனைத்தும் நபியவர்கள் மனிதர் தான் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

உம்மு ஹராம் சம்பவம்

உண்மை நிலையும் உளறல்களுக்கு விளக்கமும்

அன்சாரி குலத்தைச் சார்ந்த உம்மு ஹராம் (ரலி) என்ற நபித்தோழியரின் வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் சென்று வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்ப்பார்கள்; உணவளிப்பார்கள் என்று ஒரு செய்தி புகாரி, முஸ்லிம் இன்னும் பல ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இது புகாரியில் 2789, 2800, 2895, 2924, 6282 7002 ஆகிய எண்களில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கூறப்படும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களின் சின்னம்மா ஆவார். அதாவது அனஸ் (ரலி) அவர்களின் தாயாரான உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சகோதரி ஆவார்.

நபி (ஸல்) அவர்கள் குரைஷி குலத்தைச் சார்ந்தவர்கள். இந்த பெண்மணி அன்சாரி குலத்தைச் சார்ந்தவர்கள். எனவே வம்சாவழி உறவு அடிப்படையில் பார்த்தால் இந்தப் நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருக்க முடியாது. இவர் நபி (ஸல்) அவர்களுக்கு அந்நியப் பெண் ஆவார்.

ஒரு ஆண் மஹ்ரமில்லாத அந்நியப் பெண்ணிருக்கும் இடத்திற்குச் செல்வதும், அவருக்கு அருகில் படுப்பதும், அவருக்குப் பேன் பார்த்து விடுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த ஹராமான விஷயங்களாகும். அப்படியிருக்க இந்த விதிமுறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடக்கமாட்டார்கள் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் ஆண் பெண்ணுக்கு மத்தியில் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் மாற்றமாக இருப்பதால் இந்தத் தகவல் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் இதை ஏற்க முடியாது என்று நாம் கூறினோம்.

புகாரியில் இடம்பெற்ற எந்தச் செய்தியும் தவறானது இல்லை. தவறான கருத்து தரும் செய்திகளைக் கூட எப்படியாவது சரிசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோய் சிலருக்குப் பிடித்திருக்கின்றது. நீண்ட காலம் நமது ஆதாரங்களுக்கு பதில் சொல்லாத இவர்கள் தற்போது சில அரைவேக்காடுகளை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகக் களம் இறக்கி விட்டிருக்கின்றார்கள்.

இருப்பதைக் கூறி இந்த அரைவேக்காடுகள் நம்மை விமர்சித்தால் அந்த விமர்சனம் வரவேற்கப்படும். ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி நம்மை மக்களுக்கு மத்தியில் விகாரமாகச் சித்தரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.

புகாரியின் விரிவுரையான பத்ஹுல்பாரியில், உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் குடி உறவின் மூலமாக சின்னம்மா உறவு உள்ளவர். எனவே இவர் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர் என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாத்தினர் அநியாயமாக உம்மு ஹராம் (ரலி) அவர்களை அந்நியப் பெண்ணாகக் கூறி இந்தச் செய்தியை மறுக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கும் நமக்கும் இடையே முரண்பாடு இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்ணுடன் இது போன்று நடக்க மாட்டார்கள் என்பதில் உடன்பாடு உள்ளது. எனவே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினரா? இல்லையா? என்பதை முடிவு செய்துவிட்டால் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பது தெளிவாகிவிடும்.

பிரச்சனைக்குரிய செய்தி

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தொடர்பாக புகாரியில் இடம்பெற்றுள்ள இந்தச் செய்தியை இன்றைக்கு நாம் மட்டுமே பிரச்சனையாகக் கருதுவது போன்ற பொய்யான தோற்றத்தை நம்மை விமர்சிப்பவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தச் செய்தி நமக்கு முன்பே காலம் காலமாக பிரச்சனைக்குரியதாகவே வரலாற்றைக் கடந்து வந்துள்ளது. இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் இந்த விஷயத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இந்த செய்தி பலருக்கு பிரச்சனையாகிவிட்டது.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம்: 11, பக்கம்: 78

உம்மு ஹராம் (ரலி) பால்குடி சிற்றன்னையா?

நபி (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் யார் என்ற விபரம் வரலாற்று நூற்களில் இடம்பெற்றுள்ளது. சுவைபா, ஹலீமதுஸ் சஃதிய்யா ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார்கள் என்ற தகவல் வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது.

இந்த நூற்களில் எந்த ஒரு இடத்திலும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பலூட்டிய தாயாகவோ அல்லது அந்த உறவின் மூலம் மஹ்ரமானவர் என்றோ கூறப்படவில்லை.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி மூலம் மஹ்ரமான உறவு உள்ளவர் என்ற விளக்கத்தை யார் சொல்கிறார்கள் என்று பார்த்தால் இப்படி சொல்பவர்கள் சஹாபியோ அல்லது உம்மு ஹராம் (ரலி) அவர்களை நேரில் கண்ட தாபியோ கிடையாது.

மாறாக, குறித்த ஹதீஸில் உள்ள பிரச்சனையை நீக்குவதற்காக சில அறிஞர்கள் தன் புறத்திலிருந்து சுய விளக்கமாகவே இந்தத் தகவலைக் கூறியுள்ளனர். ஒவ்வொரு பிரச்சனையிலும் அறிஞர்கள் பலவாறு கருத்து கூறுவார்கள். அவர்கள் கூறுவதில் எது சரி? எது தவறு? என்பதைப் பார்த்துத் தான் ஏற்க வேண்டும்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி உறவு மூலம் சின்னம்மா என்ற கருத்தை இப்னு அப்தில் பர் என்ற அறிஞர் தான் முன்வைக்கின்றார். அவர் கூறிய வாசகத்தைக் கவனித்தாலே இது வெறும் யூகம் தான் என்பதைத் தெளிவாக அறியலாம்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால்புகட்டியிருப்பார்கள். அல்லது அவருடைய சகோதரி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பால் புகட்டியிருப்பார்கள் என்றே நான் யூகிக்கின்றேன். எனவே இவ்விருவரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடித் தாயாகவோ அல்லது சின்னம்மாவாகவோ இருப்பார்கள். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களிடத்தில் சென்று உறங்கக்கூடியவராக இருந்தார்கள்.

நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)

நான் யூகிக்கின்றேன் என இப்னு அப்தில் பர் கூறுவது கவனிக்கத்தக்கது. மேலும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்புகட்டியிருப்பார்கள். அல்லது சின்னம்மாவாக இருப்பார்கள் என்று இப்னு அப்தில் பர் சந்தேகத்துடன் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

இந்தச் செய்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவே இப்னு அப்தில் பர் தன்னுடைய யூகத்தைக் கூறியுள்ளார். இதற்கு எந்தச் சான்றும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இப்னு அப்தில் பர் கூறியதைப் போன்று அவருக்கு முன்னால் யஹ்யா பின் இப்ராஹீம் என்பவரும் இப்னு வஹபும் இதே விளக்கத்தைக் கூறியுள்ளனர். இவர்களும் இந்தக் கருத்தை தங்களுடைய சுய விளக்கமாகவே கூறுகின்றனர். இவர்கள் நபித்தோழர்களோ நபித்தோழர்களைக் கண்ட தாபியீன்களோ கிடையாது.

இந்தச் செய்தியில் உள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தன் புறத்திலிருந்து இவர்கள் கூறிய விளக்கமே இவை. எனவே தான் இந்த விளக்கத்தைக் கூறிய இப்னு வஹப் இந்த நிகழ்வு ஹிஜாபுடைய சட்டம் வருவதற்கு முன்னால் நடந்திருக்கலாம் என்ற கருத்தையும் கூறியுள்ளார். ஆனால் இப்னு ஹஜர் (ரலி) அவர்கள் இந்தக் கருத்து தவறானது. இந்த நிகழ்வு ஹிஜாபிற்குப் பிறகு தான் நடந்தது என்பதை உறுதிசெய்கிறார்கள்.

இந்த சம்பவம் ஹிஜாபுக்கு முன்னால் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று இப்னு வஹப் கூறியுள்ளார். ஆனால் இது ஹிஜாபுக்குப் பிறகு தான் நடந்தது என்பது உறுதியான தகவல் என்பதால் இந்தக் கூற்று மறுக்கப்படுகின்றது.

நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)

உண்மையை உடைத்துச் சொன்ன அறிஞர் திம்யாதீ

உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான (திருமணம் செய்யத் தடை என்ற அளவுக்குள்ள) உறவு இருந்தது என்று கருத்தை திம்யாதீ என்ற அறிஞர் ஆணித்தரமாக மறுக்கின்றார்.

மஹ்ரமான உறவு உள்ளது என்று கூறுபவர்களுக்கு எதிராக திம்யாதீ கடுமையாக மறுப்புத் தெரிவித்துள்ளார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வம்சாவழியின் மூலமாகவோ, அல்லது பால்குடி உறவின் மூலமாகவோ சின்னம்மா ஆவார் என்று யார் கூறுகிறாரோ அவர் தவறிழைத்துவிட்டார். மேலும் மஹ்ரமான உறவு உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் தவறிழைக்கின்றனர். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் வம்சாவழித் தாய்மார்களும் பாலூட்டிய தாய்மார்கள் யார் யார் என்பது அறியப்பட்டிருக்கின்றது. இவர்களில் உம்மு அப்தில் முத்தலிப் என்பவரைத் தவிர அன்சாரிகளில் ஒருவர் கூட கிடையாது.

நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)

இப்னு ஹஜர் அஸ்கலானீயின் கருத்து

மேலே நாம் சொன்ன விபரங்களையும் இன்னும் பல தகவல்களையும் ஒன்றுதிரட்டிய இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்கள் கூட இவர்கள் கூறுகின்ற இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சின்னம்மா ஆவார் என்ற கருத்து சரியானதாக ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் இதை இப்னு ஹஜர் ஏற்றிருப்பார். இது வெறும் சிலர்களின் யூகம் என்பதால் இதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இந்தச் செய்திக்கு வேறொரு விளக்கத்தைக் கூறுகிறார்.

இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார்:

அந்நியப் பெண்ணாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டது அவர்களுக்கு மாத்திரம் பிரத்யேகமானது என்ற வாதம் தான் இந்தச் செய்திக்குரிய சிறந்த பதிலாகும்.

நூல்: பத்ஹுல் பாரீ (பாகம் 11, பக்கம் 78)

இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார்:

அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும், பார்ப்பதும் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அனுமதிக்கப்பட்ட விஷயம் என்பது வலுவான ஆதாரங்கள் மூலம் நமக்குத் தெளிவாகியுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவோ மனைவி என்ற உறவோ இல்லாத நிலையில் அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றது அவர்களுக்கு அருகில் உறங்கியது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்த்து விட்டது தொடர்பாக வரும் சம்பவத்திற்கு இது நபிக்கு மட்டும் உரிய பிரத்யேகமான விஷயம் என்பதே சரியான பதிலாகும்.

நூல் : பத்குல் பாரீ (பாகம் 9 பக்கம் 203)

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மனைவியோ மஹ்ரமான உறவோ இல்லை என தெள்ளத் தெளிவாக இப்னு ஹஜர் தெளிவுபடுத்தியுள்ளார். இதைச் சரியாக படிக்காத சில அரைவேக்காடுகள் உம்மு ஹராம், நபியின் சின்னம்மா என்று இப்னு ஹஜர் கூறியதாகப் பொய்யான தகவலைக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இப்னு ஹஜர் இவர்களுக்கு எதிரான கருத்தையே கூறியுள்ளார்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் சுட்டிக்காட்டுகிறோம். உம்மு ஹராம் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர் இல்லை என இப்னு ஹஜர் கூறினார் என்ற தகவலுக்காகவே இப்னு ஹஜர் அவர்களின் இந்தக் கூற்றை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அந்நியப் பெண்ணாக இருந்தாலும் நபி மட்டும் இது போன்று நடந்து கொள்ளலாம் என்று அவர் கூறிய கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கருத்தைப் பொறுத்தவரை உம்மு ஹராம் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருந்தார் என்று கூறுபவரின் கூற்றை விட மோசமானதாகவே நாம் கருதுகிறோம்.

ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களை விட மிகவும் பேணுதலாக வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒழுக்கமாகவும் நெறிமுறைகளைப் பேணியும் வாழ்ந்ததைப் போல் வேறு யாரும் வாழ முடியாது. அப்படியிருக்க  இந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை என்ற கூற்றுக்கு இடமே இல்லை.

அறிஞர் ஐனீ

புகாரிக்கு இன்னொரு விரிவுரை எழுதிய அறிஞர் ஐனீ என்பவரும் உம்மு ஹராம் (ரலி) தொடர்பான இந்தச் செய்திக்கு, “அந்நியப் பெண்ணாக இருந்தாலும் இது போன்று நடந்து கொள்வது நபிக்கு மட்டும் உரிய சிறப்புச் சலுகை’ என்று பதிலளித்துள்ளார்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமானவர் என்ற கூற்றை இவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகவே இந்தத் தகவலைக் குறிப்பிடுகின்றோம்.

நபி (ஸல்) அவர்களுக்கும், உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவோ, மனைவி என்ற உறவோ இல்லாத நிலையில் அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றது அவர்களுக்கு அருகில் உறங்கியது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்த்து விட்டது தொடர்பாக வரும் சம்பவத்திற்கு, “இது நபிக்கு மட்டும் உரிய பிரத்யேகமான விஷயம்’ என்பதே சரியான பதிலாகும்.

நூல்: உம்ததுல் காரிஃ, (பாகம் 29, பக்கம் 332)

வம்சாவழியை அறிந்தவர்கள் சொல்வதென்ன?

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வம்சாவழி மூலமாகவோ பால் குடி உறவின் மூலமாகவோ சின்னம்மாவாக இருந்தார்கள் என்ற கருத்தை இப்னுல் முலக்கன் என்ற அறிஞரும் வலுவாக மறுத்துள்ளார்.

நபி (ஸல்) அவர்களின் வம்சாவழியையும் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வம்சாவழியையும் அறிந்தவர் இப்படிச் சொல்ல முடியாது. இந்த அறிவு இல்லாதவரே இவ்வாறு கூறுவார் என இந்த அறிஞர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவு இருக்கலாம் எனக் கூறிய இப்னு அப்தில் பர் அவர்களின் கூற்றை எடுத்து சுட்டிக்காட்டி விட்டு இதற்கு மறுப்பாகவே இவ்வாறு இந்த அறிஞர் கூறுகிறார்.

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருந்தார்கள் என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது என்ற கூற்று ஆட்சேபணைக்குரியது. நபி (ஸல்) அவர்களின் வம்சாவழியையும் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வம்சா வழியையும் முழுமையாக அறிந்தவர் இவ்விருவருக்கிடையே எந்த மஹ்ரமான உறவும் இல்லை என்பதை அறிவார்.

நூல்: காயத்துல் சவ்ல் (பாகம் 1, பக்கம் 51)

எனவே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர் என்ற கருத்து இந்த தவறான ஹதீஸை நியாயப்படுத்துவதற்காகத் தரப்பட்ட ஆதாரமற்ற சுயக் கருத்தாகும். இதனடிப்படையில் குறித்த செய்தியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மடியில் படுத்தார்களா?

அடுத்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மடியில் படுத்ததாக எந்த ஹதீஸிலும் வரவில்லை. ஹதீஸில் இல்லாததை நாம் இட்டுக்கட்டுவதாக விமர்சனம் செய்கிறார்கள்.

இங்கே இவர்களின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. உம்மு ஹராம் (ரலி) அவர்களின் நபி (ஸல்) அவர்களுக்கு சின்னம்மா வேண்டும் என்பதற்கு இவர்கள் எந்த அறிஞரின் கூற்றை சுட்டிக் காட்டினார்களோ அதே அறிஞர் தான் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் தலை வைத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

இப்னு அப்தில் பர், இப்னு வஹப் மற்றும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் படுத்தார்கள் என்ற கருத்தை கூறியுள்ளனர்.

இப்னு வஹப் கூறுகிறார்:

உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி உறவின் மூலம் சின்னம்மா ஆவார். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் உறங்கக்கூடியவராகவும் அவர்களின் மடியில் உறங்கக்கூடியவராகவும் இருந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) நபிக்கு பேன் பார்த்தும் விட்டார்கள்.

நூல்: பத்ஹுல் பாரீ, பாகம் 11, பக்கம் : 78

இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார் :

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் செல்லும் போது அங்கே அவர்களுடன் பணியாள், குழந்தை, கணவன் இவர்கள் யாராவது இருந்திருக்கலாம் என்று சிலர் விளக்கம் தருகின்றார்கள். இந்த விளக்கம் இந்த ஹதீஸில் உள்ள பிரச்சனையை முழுமையாக நீக்காது. ஏனென்றால் பேன் பார்க்கும் போதும் மடியில் படுக்கும் போதும் ஒருவரையொருவர் உரசும் நிலை இருந்துள்ளது.

நூல்: பத்ஹுல் பாரீ,  பாகம் 11 பக்கம் : 78

எனவே இந்த அறிஞர்கள் ஹதீஸில் இல்லாததைத் துணிந்து இட்டுக்கட்டி விட்டார்கள் என்று இந்த அரைவேக்காடுகள் நம்மை விமர்சனம் செய்தது போல் இவர்களையும் விமர்சனம் செய்வார்களா?

புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களில் இடம்பெற்ற அறிவிப்புக்களில் மடியில் படுத்தார்கள் என்ற வாசகம் நேரடியாக வராவிட்டாலும் இந்தக் கருத்து தொணிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் படுத்தார்கள் என்று புகாரியில் 2800வது செய்தியில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் 3875வது அறிவிப்பில் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தன் தலையை வைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பல அறிவிப்புக்களில் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தலை வைத்தார்கள், உம்மு ஹராம் (ரலி) பேன் பார்த்தார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டே இந்த அறிஞர்கள், நபியவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் தலை வைத்தார்கள் என்று கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மடியில் தலை வைத்தார்கள் என்ற தகவலுக்கு நேரடியாக ஆதாரம் இல்லை என்றாலும் இதனால் இந்த ஹதீஸை நியாயப்படுத்த முடியாது. அந்நியப் பெண்ணுக்கு அருகில் படுக்கலாமா? அந்நியப் பெண் பேன் பார்த்து விடலாமா? அந்நியப் பெண் இருக்கும் இடத்திற்குச் செல்லலாமா? ஆகிய கேள்விகளுக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

உம்மு ஹராம் (ரலி) தொடர்பாக வரும் ஹதீஸில் குர்ஆனுக்கு முரணில்லாத வேறு பல செய்திகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் மறுக்கவில்லை. உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு இவ்வாறு பழகினார்கள் என்ற தகவலை மட்டுமே மறுக்கின்றோம். அந்தச் செய்தியில் வரும் மற்ற தகவல்களை ஏற்றுக் கொள்வதில் நமக்கு எந்த மறுப்பும் இல்லை.

உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மஹ்ரமான உறவு கிடையாது என்கிற போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் இப்படி நடந்தார்கள் என்று கூறினால் இது நபி (ஸல்) அவர்களுக்கு இழுக்கில்லையா? நபி (ஸல்) அவர்கள் இந்தக் காரியத்தை செய்திருப்பார்களா? என்று யோசிக்க வேண்டும்.

மேலும் இந்தத் தகவலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்வதால் சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படப் போகின்றது? இதைப் படித்த பின் மக்களுக்கு ஈமானும் இறையச்சமும் கூடப்போகின்றதா?  அல்லது இதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதேனும் மார்க்கச் சட்டம் இருக்கின்றதா? அல்லது மறுமையில் அல்லாஹ் நம்மிடம் உம்மு ஹராம் (ரலி), நபி (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விட்டதையும் அவர்களுக்கு அருகில் உறங்கியதையும் ஏன் நம்பவில்லை என்று கேள்வி கேட்பானா?

தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வார்த்தையில் கூறுவதை விட்டுவிட்டு இதை நியாயப்படுத்துவதற்காக தங்களுடைய ஆற்றலை செலவழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நபியின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும், ஒரு நன்மையும் இல்லாத கருத்தை புகாரியில் இருந்தாலும் நாம் நம்ப முடியாது. இமாம் புகாரியின் கண்ணியத்தை விட நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் மலையளவு உயர்ந்தது.

ஹதீஸ் துறை அறிஞர்கள் இதை தவறுதலாகப் பதிவு செய்துவிட்டார்கள் என்று சொல்வதால் இந்த அறிஞர்களின் கண்ணியம் சற்றும் குறையாது. காரணம் அவர்களின் முயற்சியால் இந்த சமுதாயத்திற்குக் கிடைத்த நன்மை அளப்பெரியது. மனிதர்கள் எல்லாம் தவறிழைப்பவர்களே!

நமக்குத் தவறு என்று தெரிவதை தயுவு தாட்சணையமின்றி தவறு என்று சுட்டிக்காட்டுவோம். மற்றவர்களின் மீது குருட்டு நம்பிக்கை வைக்கமாட்டோம். இது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் இதுபோன்ற செய்திகளை மறுக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டால் நிச்சயம் இதை ஒரு குறையாக யாரும் கூறமாட்டார்கள். நிறையாகவே பார்ப்பார்கள். அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.