ஏகத்துவம் – ஜூலை 2012

தலையங்கம்

ஆலிம்கள் vsஅல்குர்ஆன்

அருள்மிகு ரமளான் மாதம் வந்து விட்டது. தலைப்பிறை தோன்றிய நாளிலிருந்து கடைசிப் பிறை வரை பள்ளிகளில், இரவுத் தொழுகைகளில் ஓதப்படுகின்ற அல்குர்ஆன் அருமையாகவும் அழகாகவும் நம் காதுகளில் அலைமோதிக் கொண்டிருக்கும். அதன் பிறகு நடைபெறுகின்ற சொற்பொழிவுகள் செவிப்பறைகளைக் கிழித்துக் கொண்டிருக்கும். சில இடங்களில் பகல் வேளைகளில் லுஹர் தொழுகைக்குப் பின்னாலும் பயான்கள் அனல் பறக்கும்.

ஆலிம்களின் அழகிய கிராஅத், அனல் பறக்கும் பயான்களின் அலறல்கள் அத்தனையும் ஏன்? எதற்காக? நாங்கள் ஆடுவதும் பாடுவதும் காசுக்குத் தான் என்று சொல்வார்களே! அதைப் போன்று தான்.

இந்தப் புனித மாதத்தில் லைலத்துல் கத்ரை அடைவதற்காக இஃதிகாஃப் என்ற வணக்கம் இருக்கின்றது. இந்த வணக்கத்தையும் சில ஆலிம்கள் செய்யத் தவறுவதில்லை. கொசு வலைகளைக் கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விடுகின்றனர். கத்ர் இரவு கிடைக்கின்றதோ இல்லையோ, காசு நன்றாகக் கிடைக்கின்றது. ஏற்கனவே விதவிதமான, வித்தியாசமான பல்சுவைப் பதார்த்தங்கள், பாயாசங்கள், பண்டங்கள் போன்றவை குர்ஆன் ஓதும் ஹாபிழ்களுக்குப் பரிமாறப்படும். இஃதிகாஃபில் இருக்கும் இவர்களுக்கு பாக்கியமிகு ரமளானின் இந்தப் பாக்கியம் கிடைக்காமல் விட்டு விடுமா? விடாது.

உலமாக்கள் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தலாமா? இது அடுக்குமா? ஆகுமா? அவர்கள் அமல் செய்யக்கூடாதா? அதில் இக்லாஸ் இல்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றெல்லாம் கேட்கலாம்.

நாம் இதைக் கற்பனையாகச் சொல்லவில்லை; கதையாக அளக்கவில்லை. இவர்களது நடவடிக்கைகள் நம்மை அப்படிச் சொல்ல வைக்கின்றன. புனிதமிக்க ரமளான் இந்தப் புரோகிதர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இவர்களுடைய நிலையை திருக்குர்ஆன் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 62:5)

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்று திருக்குர்ஆன் சொல்கின்றது.

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.  (அல்குர்ஆன் 1:4)

இந்த வசனத்திற்கு மாற்றமாக, பச்சையாக, பக்காவாக முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமும், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியிடமும் இன்ன பிற இறந்து போன அடியார்களிடமும் பிரார்த்திக்கின்றனர். அவர்களை உதவிக்கு அழைத்து இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தகர்த்தெறிகின்றனர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்த ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு காட்டியுள்ளோம். இந்த ஆலிம்களின் திருக்குர்ஆன் விரோதப் போக்கை அடுக்க ஆரம்பித்தால் இந்த ஏடு தாங்காது. அந்த அளவுக்கு இவர்களின் அட்டகாசமும் அநியாயமும் அளவு மீறிச் சென்று கொண்டிருக்கின்றது. இது கொள்கை விஷயத்தில் ஆலிம்களின் குர்ஆனுக்கு எதிரான போக்குக்கு ஓர் எடுத்துக்காட்டு!

சட்ட விஷயங்களை எடுத்துக் கொண்டால் உதாரணத்திற்கு முத்தலாக்கை குறிப்பிடலாம்.

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.  (அல்குர்ஆன் 2:229, 230)

ஒரே அமர்வில் மூன்று தடவைகள் கூட அல்ல, “முத்தலாக்’ என்று சொல்லி மனைவியை நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விடுவதை இந்த ஆலிம்கள் ஆதரிக்கின்றனர். அல்குர்ஆனுக்கு எதிரான ஓர் அப்பட்டமான தீர்ப்பை அளித்து, அல்லாஹ்வுக்கு எதிராக நிற்கின்றனர்.

அதிலும் கொடுமை என்னவென்றால் நேரில் கூடச் சொல்லாமல் தொலைபேசியில் சொன்னால் போதும்; அல்லது ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி விட்டால் போதும்; மனைவி விவாக ரத்தாகி விடுவாள் என்று தீர்ப்பளிக்கின்றனர். கணவன் மனைவியைப் பிரித்து, பிள்ளைகளின் வாழ்க்கையை துவம்சம் செய்கிறார்கள். இவர்கள் குர்ஆனைப் பின்பற்றுபவர்களா? நிச்சயமாகக் கிடையாது. இவர்கள் யூத, கிறித்தவப் பாதிரிகளைப் போன்றவர்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களுடைய நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக் காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உட-ருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்என்று சொன்னார்கள்.

அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டைபோடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் (அவர்களின் அடையாளம்)என்று பதில் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 7562

ஆயிரம் ரமளான் வந்தாலும் இவர்கள் மாறுவதில்லை. எனவே மக்கள் இவர்களின் மாய வலையில், தீய வலையில் விழுந்து விடாமல் அல்குர்ஆன் அடிப்படையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை அடிப்படையிலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண் டும். அப்படி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகத் தான், குர்ஆனின் அருமையைப் புரிந்து அதன் பக்கம் நெருங்குவதற்காகத் தான் நோன்பை அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.  (அல்குர்ஆன் 2:185)

மாண்புமிகு ரமளான் மாதத்தின் நோன்பு இந்த மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் தரட்டுமாக! இந்த எல்லையை நோக்கி நமது தூய பயணம் அமையட்டுமாக!

—————————————————————————————————————————————————————-

 நபிவழிக்கு முரணாண மத்ஹபுகள்     தொடர்: 5

ரமளானில் 60 முறை குர்ஆன் ஓதி முடித்தல்

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மத்ஹபு வழி

ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமளானில் அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். இவை அனைத்தையும் தொழுகையிலேயே (இவ்வாறு ஓதி முடிக்க வேண்டும்.)

நூல்: இஆனா, பாகம் 1, பக்கம் 24

ரமளான் அல்லாத நாட்களில் தொழுகையில் ஒரு நாளைக்கு ஒரு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும், ரமளான் மாதத்தில் ஒரு நாளில் இரண்டு முறை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும் (அதுவும் தொழுகையில் தானாம்?) என்று மத்ஹபு கூறுகின்றது. இது தான் நபிகள் நாயகம் போதித்த வழிமுறையா என்பதை அலசுவோம்.

மாநபி வழி

சாத்தியமற்றது

இது நபிவழியா என்பதைப் பார்ப்பதற்கு முன் இது சாத்தியமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மத்ஹபு கூறும் இச்சட்டத்தை, போதனையை யாராலும் நடைமுறைப்படுத்த இயலாது. ரமலான் அல்லாத நாட்களில் தொழுகையில் ஒரு நாளில் ஒரு குர்ஆன் முழுவதையும் ஓத வேண்டும் என்பதை மத்ஹபைச் சார்ந்தவர்கள் கூட தங்கள் பள்ளிகளில் நிறைவேற்றுவதில்லை.  இதிலிருந்து இது சாத்தியமற்றது என அறியலாம்.

அதுவும் நோன்பு நோற்ற நிலையில் தொழுகையில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குர்ஆன் முழுவதையும் ஓதி முடிப்பதற்குள் அவருக்கு பல பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமே! இதைத் தான் நபிகள் நாயகம் போதித்தார்களா?

புறக்கணிக்கப்படும் கடமைகள்

ஒரு வாதத்திற்கு முடியும் என்றாலும் அவர் ஒரு நாளில் தனது வேலைகள் அத்தனையையும் புறக்கணித்து விட்டு முழு மூச்சாக, தொழுகை ஒன்றே கதி என்று கிடந்தால் மாத்திரமே இது சாத்தியம்.

தன் மீதிருக்கும் பிற கடமைகளை புறக்கணித்து விட்டு இவ்வாறு செய்தால் அதை இறைவன் விரும்புவானா? இறைவன் இதை விரும்ப மாட்டான் என்று மாநபி வழி நமக்கு மகத்தான வழிகாட்டுகின்றது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! “அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!என்றார்கள். “தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!என்றார்கள்.

நூல்: புகாரி 1975

குர்ஆன் ஓதி முடிப்பதன் எல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதி முடிப்பதற்கு ஒரு கால அவகாசத்தை, ஒரு எல்லையை வரையறுத்துள்ளார்கள். நபிகளார் கூறிய எல்லைக்குக் கட்டுப்பட்டுத் தான் முஸ்லிம்கள் குர்ஆனை ஓத வேண்டும். பின்வரும் ஹதீஸ்களில் அந்த எல்லை விளக்கப்படுகின்றது.

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!என்று கூறினார்கள். அப்போது நான், “(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளதுஎன்று கூறினேன். “அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கி விடாதேஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 5054

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக!என்று   கூறினார்கள். “இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது!என்று நான் கூறினேன். முடிவில், “ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!என்று கூறினார்கள். மேலும் “ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!என்றார்கள். “இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது!என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக் கொண்டே வந்து முடிவில், “மூன்று நாட்களில் ஒரு தடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி 1978

அதிகபட்சம் ஏழு நாட்கள், குறைந்த பட்சம் 3 நாட்கள் ஆக இதற்குக் குறைந்து யாரும் குர்ஆனை ஓதி முடிக்க கூடாது என்று இந்த நபிமொழிகள் உத்தரவிடுகின்றன.

அதாவது ஒருவர் குர்ஆனை ஓதி முடிப்பதாக இருந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும், காலம் தாழ்த்த வேண்டும். மூன்று நாட்களுக்கும் குறைவாக 2 நாட்களில் குர்ஆனை ஓதி முடிக்க கூடாது என்று இந்த ஹதீஸ்களில் சொல்லப்படுகின்றது. இதுவே நபிவழி.

இதை மீறி ஒருவர் குர்ஆனை ஓதி முடிப்பாரானால் அவர் அல்லாஹ்விடம் நல்லவராக, இறைநேசராகப் பார்க்கப்பட மாட்டார். மாறாக, மார்க்க வரம்பை மற்றும் நபிவழியை மீறிய, அவமதித்த குற்றவாளியாகவே பார்க்கப்படுவார்.

ஆனால் இதைச் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குர்ஆன் ஓதி முடிக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்கள். இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் மாபாதகச் செயலை செய்யத் தூண்டும் மத்ஹபை முஸ்லிம்கள் பின்பற்றலாமா? நபிகள் நாயகத்தை மதிக்கும் உண்மை முஸ்லிம்கள், பாவத்தைத் தூண்டும் இந்த மத்ஹபை ஒரு போதும் பின்பற்ற மாட்டார்கள். அதிலிருந்து விலகிவிடுவார்கள்.

ஜமாஅத் தொழுகைக்கு எத்தனை பேர்?

மத்ஹபு வழி

ஒருவர் இமாமாக நின்று மற்றவர்கள் அவரைப் பின்பற்றித் தொழும் முறைக்கு ஜமாஅத் தொழுகை என்று குறிப்பிடுகிறோம். ஜும்ஆ தொழுகையை இவ்வாறு ஜமாஅத்தாகத் தொழுவதற்கு குறைந்தபட்சம் எத்தனை பேர் அவசியம் தேவை? முதலில் மத்ஹபு கூறுவதைப் பாருங்கள்.

(ஜமாஅத் தொழுகைக்கு) இமாம் தவிர மூன்று பேர் அவசியம் தேவை என அபூஹனிபா கூறுகின்றார்.

நூல்: அல்இக்தியார் பாகம்1, பக்கம் 89

ஜமாஅத்தாகத் தொழுவதற்கு குறைந்தபட்சம் நான்கு பேர் தேவை என்று மத்ஹபு கூறுகின்றது.

மாநபி வழி

ஆனால் நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் முற்றிலும் இதற்கு மாற்றமானதாக உள்ளது. ஜமாஅத் தொழுகைக்கு குறைந்தபட்சம் இரண்டு பேர் போதுமானது என்பதே நபிகள் நாயகம் கற்றுத் தந்த வழிமுறை. இதைப் பல்வேறு ஹதீஸ்களில் அறிந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி ஸல் அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?” என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

நூல்: அபூதாவூத் 487

இந்தச் செய்தியில் நபிகள் நாயகத்தின் தூண்டுலின் பேரில், அவர்களின் அங்கீகாரத்துடன் இருவர் ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். தொழுவிக்க ஒருவர், (இமாம்) பின்பற்றித் தொழ ஒருவர் என இரண்டு பேர் ஜமாஅத் தொழுகைக்குப் போதுமானவர்கள் என்பதைத் தெளிவாக இச்செய்தி தெரிவிக்கின்றது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்தும் அறியலாம்.

ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாக தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: உபை பின் கஃப் (ரலி)

நூல்: அபூதாவூத் 467

இரண்டு நபர்கள் இருந்தாலே எந்தத் தொழுகையையும் ஜமாஅத்தாகத் தொழ முடியும் என்பதை இந்த ஹதீஸ்கள் வாயிலாக அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டியுள்ளார்கள்.

இறைத்தூதரின் இத்தூய வழிகாட்டுதலைப் புறக்கணித்து விட்டு ஜும்ஆ தொழுகைக்கு நான்கு பேர் அவசியம் என இமாம் அபூஹனிபா சட்டம் வகுத்திருப்பது எதைக் காட்டுகின்றது? நபிவழிகளை, நபிமொழிகளை கவனத்தில் கொண்டு மத்ஹபு சட்டங்கள் வகுக்கப்படவில்லை என்பதைத் தான்.

பொறுப்பாளர் இல்லாமல் திருமணம்

மாநபி வழி

இஸ்லாமியர்கள் தங்கள் திருமணத்தில் வரதட்சணை, வீண் விரையம் போன்றவைகளைத் தவிர்க்க வேண்டும்; எளிமை, சிக்கனம் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், திருமணம் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய நிபந்தனையையும் விதித்துள்ளார்கள்.  அது பெண்ணுக்கு வலீ எனும் பொறுப்பாளர் இருந்து, அவர் முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தான்.

திருமணத்தில் பெண்களின் விருப்பம் முக்கியம் என்றாலும் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு திருமண விவகாரத்தில் யாரும் அவர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக குடும்ப உறவினர்களில் தந்தை, சகோதரன் போன்ற ஆண்களை பெண்களுக்குப் பொறுப்பாளர்களாக இஸ்லாம் நியமிக்கின்றது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் அது அவளது கார்டியன் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டுதல் ஆகும்.

பொறுப்பாளர் இன்றி திருமணம் கிடையாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அபுதாவூத் 1785

பின்வரும் வசனத்தை சிந்தித்துப் பார்த்தால் பெண்களுக்கு திருமண விவகாரத்தில் பொறுப்பாளர் அவசியம் என இறைவன் கட்டளையிடுவதை அறியலாம்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.  (அல்குர்ஆன் 2:221)

இணை கற்பிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களை முஸ்லிம்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதை இறைவன் கூறும் போது, ஆண்களை நோக்கி நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்றும், பெண்கள் விஷயத்தில் திருமணம் முடித்துக் கொடுக்காதீர்கள் என்றும் இறைவன் கூறுவதிலிருந்து பெண்கள் தாங்களாக தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்ளக்கூடாது, மாறாக தங்களுக்கு விருப்பமானவர்களை, தங்கள் பொறுப்பாளர்களிடம் தெரிவித்து அப்பொறுப்பாளர்கள் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவே திருமணத்தில் பெண் சார்பில் வலீ இருப்பது அவசியம். இதுவே நபிவழி.

மத்ஹபு வழி

ஒரு பெண் வலீ இல்லாமல் தானே திருமணம் செய்து கொண்டால் அல்லது பொறுப்பாளர் அல்லாதவரிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கூறி, அவரும் அப்பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தார் எனில் இந்த திருமணம் கூடும். அவள் கன்னிப் பெண்ணாகவோ, விதவையாகவோ இருந்தாலும் சரியே. இமாம் அபூஹனிஃபா இந்தக் கருத்தையே தேர்ந்தெடுத்துள்ளார்.

நூல்: அல்மப்ஸுத், பாகம் 5, பக்கம் 16

பெண்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு வலீ எனும் பொறுப்பாளர் இன்றி பெண்கள் திருமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டியிருக்கும் போது இமாம் அபூஹனிபா, வலீ இல்லாமல் திருமணம் செய்வது கூடும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றார். இது தான் நபிவழியை பின்பற்றுவதா?

காதலனுடன் ஓடிப் போய் கல்யாணம் செய்கிற கள்வர்களுக்குக் கை கொடுப்பதாகவே இச்சட்டம் உள்ளது. இவருடைய இந்த ஃபத்வா ஏமாற்றும் ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்கும் கேடயமாக நிற்குமா? அல்லது பெண்களை நஷ்டத்தில் ஆழ்த்துமா என்பதை சிந்தனையுள்ளோர் சிந்திக்க வேண்டும்.

தலைப்பாகையின் மீது மஸஹ்

மாநபி வழி

உளூவின் போது தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வது இஸ்லாம் வழங்கியுள்ள சலுகைகளில் ஒன்று. நாம் அணிந்திருக்கும் தலைப்பாகையை மஸஹ் செய்வது, தலையை முழுமையாக மஸஹ் செய்வதற்குச் சமமாகி விடும். நபிகள் நாயகம் அவர்களே இத்தகைய முறையை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம் காலுறைகள், முன்தலை மற்றும் தலைப்பாகை ஆகியவற்றின் மீது தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: முஸ்லிம் 462

இதுபோன்று ஏராளமான செய்திகள் தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வது நபிவழி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றன.

மத்ஹபு வழி

தலைப்பாகையின் மீது மஸஹ் செய்வது கூடாது.

நூல்: ஹிதாயா, பாகம்1, பக்கம் 30)

நபிகள் நாயகம் எதைச் செய்தார்கள் என்று தெளிவான, வலுவான, ஏராளமான ஹதீஸ்களில் காண்கிறோமோ அதையே இமாம் அபூஹனிபா கூடாது என்று சொல்கிறார்.

மாநபியின் போதனைகளுடன் மத்ஹப் சட்டங்கள் தெளிவாகவே போர் தொடுக்கின்றன என்பதை இதைப் பார்த்தாவது முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? மத்ஹபு மாயையிலிருந்து விலக வேண்டாமா?

தொடரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

இரவுத் தொழுகையில் இரவல் ஹாபிழ்

பொதுவாக இன்று தமிழகத்தில் அரபி மதரஸாக்களில் பயில்வதற்கு அதிகமான மாணவர்கள் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற பெரும் பெரும் மதரஸாக்களில் இன்று பத்து, இருபது தேறுவதே அரிதாகி விட்டது. இதற்கு முதல் முக்கியக் காரணம், ஆலிம்கள் அடுத்தவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது தான்.

* ஆலிம்களை பள்ளியில் வேலைக்குச் சேர்க்கும் போதே, “சம்பளம் 2000 ரூபாய், உங்களுக்கு மேற்படி நிறைய வருவாய் கிடைக்கும்’ என்று முத்தவல்லி தெரிவிப்பார். வீடு வீடாகச் சென்று கத்தம் பாத்திஹா ஓதுவது, கல்யாணம், கருமாதி நடத்தி வைப்பவது போன்ற சடங்கு சம்பிரதாயங்களில் சம்பாதிக்கும் ஓர் ஈனப் பிழைப்பு!

* இந்த ஆலிம்களுக்குப் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் நிலைமை படுமோசம் ஆகி விடும். வரதட்சணையின்றி பெண்ணை வாழ வைக்க முடியாது. அதனால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சென்று, குமர்கள் இருக்கின்றன என்று கையேந்தும் யாசக நிலைமை.

* மதரஸாக்களில் படிக்கும் போதே அந்த மாணவர்களுக்கு மொட்டை அடித்து, ஜிப்பாக்கள் போட்டு, சமுதாயத்தில் ஏதோ ஓர் அப்பிராணியாக, அற்பப் பிராணியாக அவர்களை நடமாட விட்டது.

* அரபு நாடுகளில் வேலைவாய்புகள் கிடைத்து கணிசமான ஆலிம்கள் நல்ல கண்ணியமான வருவாய் பெற்றனர். இது அவர்களுடைய வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றியது. தங்களை மதரஸாக்களில் படித்த ஆலிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கும் நிலை தோன்றியது. நாங்களும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்ற மன திருப்தியை அடைய வைத்தது. காலமெல்லாம் தலை குனிந்த நாங்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றோம் என்று அவர்களை எண்ண வைத்தது.

* அரபு நாடு சென்று ஆடு மேய்த்தவர்கள், அடுப்படி வேலை பார்த்தவர்கள், ஓட்டுனர்களாக, உணவு விடுதிப் பணியாளர்களாக, அரபிகளின் பிள்ளைகளுக்கு ஆயாவாக வேலை பார்த்தவர்கள் அத்தனை பேரும் “உலகக் கல்வி படித்தால் தான் வாழ்க்கை’ என்ற பாடத்தை உணர்ந்தனர். அதன் தாக்கம், தங்கள் பிள்ளைகளை ஒரேயடியாகப் பள்ளிக்கூடங்களுக்கு வெள்ளமாய் பாய வைத்தனர்.

* தவ்ஹீது ஜமாஅத்தின் அக்னி பறக்கும் ஆவேசப் பிரச்சாரம், இந்த உலகின் அற்ப லாபங்களுக்காக மார்க்கத்தையும் மறுமையையும் விற்கின்ற உலமாக்களின் நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டிய அந்த அனல் பிரச்சாரம் ஆலிம்கள் மீது வெறுப்பு ஏற்பட முக்கிய, முதன்மைக் காரணமாகும்.

* தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்த இட ஒதுக்கீட்டுக்கான போர் முழக்கம், உலகக் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தது.

மதரஸாக்களில் மாணவர் பலம் குன்றியதற்கும் குறைந்ததற்கும் இவையெல்லாம் முக்கியக் காரணங்களாகும். இது போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலை என்றால், நம்முடைய நிலை மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.

நாம் இப்போது தான் தமிழகத்தில் காலூன்றி இருக்கின்றோம். தளத்தில் தடம் பதித்திருக்கின்றோம். ஆலிம்கள் பற்றாக்குறை! அழைப்பாளர்கள் தட்டுப்பாடு! ஏற்கனவே வந்த அழைப்பாளர்கள் கூட நம்முடைய ஜமாஅத்தின் கட்டுச் சிட்டான, கண்டிப்பான கட்டுப்பாட்டு வடிகட்டியில் பின்னுக்குப் போய் விடுகின்றனர். இதனால் எஞ்சியதும் மிஞ்சியதும் மிகச் சொற்பமே!

தாயீக்களைத் தேடும் கிளைகள்

அவசர நிலையைச் சமாளிக்க, தவ்ஹீத் ஜமாஅத் தலைமை ஓராண்டு கல்வித் திட்டத்தில் அழைப்பாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. அதுவும் பற்றவில்லை. இது மற்ற நேரத்தில் நமக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட ரமளானில் ஏற்படுத்தும் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு தான் ரமளானில் வெளிநாடுகளுக்குச் சென்று மார்க்கப் பிரச்சாரம் செய்த தாயீக்களை தலைமை உடனே நிறுத்தியது. வெளிநாடுகளுக்கு தாயீக்கள் சென்றது தங்களது பொருளாதார வேட்டைக்காக அல்ல! ஜமாஅத்தின் பொருளாதார நலனைக் கருத்திக் கொண்டு தான். ரமளான் மாதத்தில் அங்கு செல்லும் தாயீக்களைக் கொண்டு, அங்குள்ள மண்டல மர்கஸ்கள், அழைப்பு மையங்கள் ஜமாஅத்திற்குரிய நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதாவது, அங்கு வசிக்கும் நமது தமிழ் மக்களிடம் சந்தாக்கள், நன்கொடைகள் திரட்டுவதற்கு இது உபயோகமாக இருந்தது.

தற்போது அந்த வாசலும் அடைக்கப்பட்டு விட்டது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பு வெளிநாட்டு மண்டலங்களுக்கு அல்ல. மாநிலத் தலைமைக்குத் தான். இந்தச் சோதனைகள் அத்தனையையும் தலைமை சகித்துக் கொள்வதற்குக் காரணம், இருக்கின்ற தாயீக்கள் தமிழகத்திற்குப் பயன்படட்டுமே என்ற நோக்கத்தில் தான்.

சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே!

சில ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழகமெங்கும் பல்வேறு மதரஸாக்களிலிருந்து இரவுத் தொழுகைக்காக இரவல் தாயீக்களைத் தருவித்தனர். இதையும் தவ்ஹீத் ஜமாஅத் தலைமை வேண்டாம் என்று சொன்னது. ஏன்? நமது ஜமாஅத், குர்ஆன் ஹதீஸ் என்று மூல அஸ்திவாரங்களில் நிலைகொண்ட ஜமாஅத்தாகும்.

வாயளவில் இதைச் சொல்லி விட்டு, ஏட்டளவில் இதை எழுதி விட்டு செயல்பாட்டளவில் இதற்கு நேர் மாற்றமாக நடக்க மாட்டோம். இன்று இந்த இயக்கத்தைத் தவிர, குர்ஆன் ஹதீஸ் இயக்கம் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்ற அனைத்து இயக்கங்களும், பெயரளவில் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மூல ஆதாரங்கள் என்று சொல்லி விட்டு, செயல்பாட்டில் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையையும் நிறுவுகின்றனர்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:45

இந்த வசனத்திலும் இதற்குப் பின்னால் இடம் பெறுகின்ற 5:46 முதல் 5:50 வரையிலான வசனங்களிலும், இறைச்செய்தியைத் தவிர்த்து வேறெதையும் பின்பற்றக் கூடாது என்று திருக்குர்ஆன் நெற்றியடியாக அடிக்கின்றது.

ஆனால் இவர்களோ ஸஹாபாக்கள் என்ற மூன்றாம் அடிப்படையை எடுத்து, ஸஹபாக்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் இருப்பதாக நம்புகின்றனர். இது பக்கா இணை வைப்பாகும்.

இரவுத் தொழுகைக்கு இரவலாக வரக்கூடிய ஹாபிழ்கள் இதுபோன்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களாகத் தான் இருக்கின்றனர்.

ஜாக் மர்கஸ்களில் தொழுதால் அதற்குத் தக்கவும், நமது மர்கஸ்களில் தொழுதால் நமது கொள்கைக்குத் தக்கவும் தொழுது கொள்கின்றனர். பொதுவாகவே இதுபோன்ற ஹாபிழ்கள் சகலத்துக்கும் பொருந்துகின்ற அகல டப்பாக்கள் தான். ஷாஃபி மத்ஹபானாலும் சரி! ஹனபி மத்ஹபானாலும் சரி! எல்லாவற்றுக்கும் ஏற்றவாறு செல்கின்ற அவர்களை எப்படிப் பின்பற்றித் தொழ முடியும்?

அதனால் தான் இதுபோன்று இரவலுக்கு ஆள் பிடிக்க வேண்டாம் என்று தலைமை கூறியுள்ளது. இந்த வகையில் கிளைகளுக்குச் சிரமம் தான். இதைத் தவிர்ப்பதற்கு வழி என்ன? வகை என்ன?

இதற்கான விடையை, இதே இதழில் இடம் பெற்றுள்ள “மாண்புமிகு குர்ஆனை மனனம் செய்வோம்!” என்ற தலைப்பில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

சூனியம்அல்ஜன்னத்தின் அறியாமை வாதம்

திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டு விட்டு, சலபி எனும் புது மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டுள்ள “அல்ஜன்னத்’ மாத இதழ், சூனியம் குறித்து மிகப் பெரும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூனியம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு மறுப்பாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அப்படியானால் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆதாரத்தையும் ஒவ்வொரு வாதத்தையும் எடுத்துக் காட்டி அதற்கான மறுப்பை எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் தூரும் இல்லாமல் தலைப்பும் இல்லாமல் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதி அதன் மூலம் தனது அறியாமையை தானே பறைசாற்றியுள்ளது.

சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் என்று, கேள்விகளைச் சமாளிப்பதற்காக எதையாவது எழுதி விட்டு, நாங்கள் அப்போதே இதற்குப் பதில் சொல்லி விட்டோம் என்று கூறி சலபி மத்ஹபினரை நம்ப வைக்கவே இந்தக் கட்டுரையை அல்ஜன்னத் வெளியிட்டுள்ளது.

சூனியம் குறித்து நாம் எழுதிய ஆக்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே நமது இதழ்களிலும், இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆக்கங்களில் உள்ள பல ஆதாரங்களுக்கு எந்தப் பதிலும் இதில் சொல்லப்படவில்லை. மேலும் இதில் சொல்லப்பட்டுள்ள பல வாதங்களுக்கு நாம் முன்னரே பதில் சொல்லி இருந்தும் அதைக் கூட வாசிக்காமல் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதியுள்ளனர். இது குறித்து நாம் ஏற்கனவே எழுதியுள்ள ஆக்கங்களை வாசித்து விட்டு, அல்ஜன்னத் கட்டுரையையும் வாசித்தால் அல்ஜன்னத் கட்டுரையில் சரக்கு ஏதும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இவ்வளவு ஆக்கங்களிலும் நாம் எடுத்து வைத்த வாதங்களை ஒவ்வொன்றாக எழுதிப் பட்டியல் போட்டுக் கொண்டு அல்ஜன்னத்தின் அறியாமைக் கட்டுரையை வாசித்தால் ஏராளமான வாதங்களுக்கும் ஆதாரங்களுக்கும் இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை என்பதையும், இத்தனை ஆண்டுகள் தேடிப்பிடித்து இவர்கள் எழுதிய மறுப்பின் இலட்சணத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இவர்கள் இப்போது எழுதியுள்ள பல விஷயங்கள் முன்னர் ஒருவரால் எழுதப்பட்டு அதற்கு நாம் அளித்த பதிலும் ஏகத்துவம் இதழில் ஸிஹ்ர் ஒரு விளக்கம் என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தது. அந்த விளக்கங்கள் எதையுமே படிக்காமல் அவரது கட்டுரையில் இடம்பெற்ற வாதங்களையே மீண்டும் காப்பியடித்து எழுதியுள்ளனர்.

மேற்கண்ட நமது ஆக்கங்களில் தேவைக்கு அதிகமாகவே விளக்கம் இருந்தாலும் இப்போது மீண்டும் ஒருமுறை அல்ஜன்னத்தில் வெளியாகியுள்ள அபத்தக் கட்டுரைக்குப் பதிலை வெளியிடுகிறோம்.

உலகத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மார்க்கம் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதமும் இல்லை.  மனிதனுக்குக் கேடு விளைவிக்கின்ற, ஓரிறைக் கொள்கைக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய எல்லா நம்பிக்கைகளையும் இஸ்லாம் தகர்த்து எறியக் கூடிய மார்க்கம். ஆனால் இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள சிலர் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் அறியாத காரணத்தால் தற்போது மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

தங்களுடைய வழிகேட்டிற்குக் குர்ஆன் வசனங்களையே ஆதாரமாகக் காட்டி, இதை ஏற்றுக் கொள்வது தான் குர்ஆனுடைய வழி என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழி என்றும் கூறுகின்றனர்.

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் தங்களுடைய யூகங்களையும் கற்பனைகளையும் குர்ஆனில் புகுத்தி தவறான விளக்கம் கொடுக்கும் இவர்கள் மிக ஆபத்தானவர்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைக் குழப்ப நினைக்கும் குழப்பவாதிகள்.

ஜாக் அமைப்பு வெளியிடும் அல்ஜன்னத் என்ற மாத இதழ் இப்படிப்பட்ட குழப்பத்தைச் செய்து கொண்டிருக்கின்றது. சென்ற மே மாதம் அல்ஜன்னத் இதழில், “சூனியம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தனர்.

அதில் நம்முடைய கருத்துக்களை விமர்சித்து, சூனியத்துக்கு அவர்களாகக் கற்பனை செய்துகொண்ட விளக்கத்தைக் கூறி இருந்தனர். வழக்கம் போல் இந்தக் கற்பனைக் கதைகளுக்கு இடையே குர்ஆன் வசனங்களையும் குறிப்பிட்டு  தங்களுடைய சுய கருத்துக்களுக்குத் தோதுவாக அந்த வசனங்களை வளைத்துக் கொண்டனர்.

எனவே இந்த ஆய்வுக் கட்டுரையில் அவர்களின் அறியாமையை ஒவ்வொன்றாகத் தெளிவுபடுத்துவோம்.

வித்தைகளைப் போட்டார்களா?

கயிறுகளைப் போட்டார்களா?

நீங்களே போடுங்கள்!என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

அல்குர்ஆன் (7:116)

7:116வது வசனத்துக்கு மேற்கண்டவாறு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அடைப்புக் குறிக்குள், “தமது வித்தைகளை’ என்று   குறிப்பிட்டதை இவர்கள் சுட்டிக்காட்டி, இது குர்ஆனைத் திரித்துக் கூறும் செயல். தனது தவறான கருத்துக்குத் தோதுவாக குர்ஆனை வளைப்பதாகும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

திருக்குர்ஆனில் 26:43  மற்றும் 20:66 ஆகிய இடங்களிலும் சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டனர் என்று சொல்லப்பட்டு இருப்பதால் அடைப்புக் குறிக்குள் இதைச் சொல்லாமல் வித்தைகளைப் போட்டனர் என்று கூறியிருப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர்.

குர்ஆன் கூறாத கருத்தை அடைப்புக் குறிக்குள் குறிப்பிடுவது தவறு என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் குர்ஆன் கூறிய கருத்தை இல்லை என்று இவர்கள் மறுப்பதையே நாம் குறை கூறுகிறோம்.

நம்மைப் பொறுத்தவரை அடைப்புக்குறிக்குள் கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டனர் என்று கூறுவதும் சரி. வித்தைகளைப் போட்டனர் என்று கூறுவதும் சரி.

மூஸா நபியின் வரலாற்றை முழுவதுமாக படிக்கும் போது மூஸா (அலை) அவர்களுடன் போட்டி போட வந்த சூனியக்காரர்கள் கண்கட்டி வித்தை செய்தார்கள் என்று குர்ஆன் கூறுவதைத் தெளிவாக அறியலாம்.

7:116 வசனத்தை மட்டும் பார்த்து விட்டு இவர்கள் மேற்கண்ட விமர்சனத்தைச் செய்துள்ளனர். ஆனால் 7:115, 7:116, 7:117 ஆகிய மூன்று வசனங்களையும் வரிசையாகப் பார்ப்போம்.

மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று அவர்கள் கேட்டனர்.

நீங்களே போடுங்கள்!என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

உமது கைத்தடியைப் போடுவீராக!என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.

அல்குர்ஆன் (7:115,116, 117)

வித்தை என்ற சொல்லை 116வது வசனத்தில்  அடைப்புக்குறிக்குள் போடப்பட்டுள்ளது. 117வது வசனத்தில் அடைப்புக்குறிக்குள் இல்லாமல் போட்டுள்ளார். வித்தையை விழுங்கியது என நாம் மொழிபெயர்த்துள்ள 117ஆம் வசனத்தில் குர்ஆனில் யஃபிகூன் என்ற அரபுச் சொல் இடம்பெற்றுள்ளது. இதற்கு, “அவர்கள் பொய்யாக உருவாக்கியவை’ என்று அர்த்தம். இந்தச் சொல்லுக்கு இந்த அர்த்தம் இருப்பதை அரபு தெரிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். அவர்களின் வித்தையை விழுங்கியது என்று இவ்வசனம் சொல்வதால் அவர்கள் எதைப் போட்டார்கள் என்பதை விளக்கும் போது வித்தையை அடைப்புக்குறிக்குள் போடப்பட்டுள்ளது. அதாவது இந்தத் தொடர் வசனங்களில் கூறப்பட்டதை வைத்துத் தெளிவாகும் கருத்தை அடைப்புக்குறிக்குள் போடுவது எப்படி குர்ஆனில் இல்லாத கருத்தைத் திணிப்பதாக ஆகும்?

அவர்கள் பொய்யாக உருவாக்கியவை என்பதும், அவர்கள் செய்த வித்தை என்பதும் ஒரே கருத்தை தரக்கூடிய சொற்களாகும்.  இவ்விரண்டில் எதைக் கூறினாலும் அது குர்ஆனில் சொல்லப்பட்ட வாசகமே அன்றி வேறில்லை. இன்னும் சொல்லப்போனால் கயிறுகளையும் கைத்தடிகளையும் சாதாரணமாக அவர்கள் போட்டிருந்தால் அது மக்களைக் கவர்ந்திருக்காது. வித்தை கலந்து அதை போட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டது. இதை வைத்து பார்க்கும் போது நாம் அடைப்புக்குறிக்குள் சரியாகவே போட்டுள்ளோம் என்பது உறுதியாகிறது.

சூனியக்காரர்கள் கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்பாக மாற்றினால் அதை அற்புதம் என்று சொல்லலாம். அவர்கள் பாம்பாக மாற்றவில்லை என்பதை அல்ஜன்னத் இதழும் ஒத்துக் கொள்கின்றது.

கயிறுகளையும் கைத்தடிகளையும் தானாக நகர்வது போன்ற தோற்றத்தைத் தான் ஏற்படுத்த முடிந்தது. அது கூட உண்மையில்லை. பொய்யான தோற்றத்தையே ஏற்படுத்தினர். கயிறுகளும் கைத்தடிகளும் தானாக அசையாது. இது தான் யதார்த்தமான விஷயம். இந்த யதார்த்தத்திற்கு மாற்றமாக கயிறுகளும் கைத்தடிகளும் அசைந்தால் அது மக்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் பயத்தையும் ஏற்படுத்தவே செய்யும். இதைத் தான் சூனியக்காரர்கள் செய்தார்கள். இதற்கு வித்தை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

மேலும் 20:69வது வசனத்தில் சூனியக்காரர்கள் சூழ்ச்சியையும் தந்திரத்தையும் தான் செய்தார்கள் என்று தெளிவாகவே, அதாவது சூனியம் என்பது வித்தை என்று அல்லாஹ் கூறுகிறான்.

உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

அல்குர்ஆன் 20:69

7:116வது வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று கூறப்படுகின்றது.

நீங்களே போடுங்கள்!என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். 

அல்குர்ஆன் 7:116

இன்றைக்கு இதை எல்லாம் மிஞ்சும் வகையில் வித்தைக் கலை வளர்ந்துவிட்டது. எந்தச் சாதனமும் இல்லாமல் வானத்தில் பறப்பதைப் போன்றும், ஒரு பெரிய பொருள் திடீரென மறைவது போன்றும், இல்லாத பொருளைத் திடீரென கொண்டு வருவது போன்றும் இன்னும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய பல விஷயங்களை வித்தை செய்பவர்கள் செய்கிறார்கள்.

இவர்களுக்கு மறைமுகமான ஆற்றல் ஏதோ உள்ளது என்று ஜாக் அமைப்பினர் கூறுவார்களா? இவர்கள் இந்த வித்தைக்காரர்களையும் மந்திரவாதிகளாக ஆக்கினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

குர்ஆனில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சம்பவத்தில் முன்பின் வார்த்தைகளைக் கவனிக்காமல் சூனியம் பற்றி ஆய்வை வெளியிட்டால் அந்த ஆய்வு இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.

எனவே “வித்தைகளைப் போட்டார்கள்’ என நாம் அடைப்புக் குறிக்குள் போட்ட வாசகம் குர்ஆனில் கூறப்பட்ட கருத்தே ஆகும்.

புறச்சாதனமின்றி பாதிப்பை ஏற்படுத்த இயலாது

ஒருவர் எந்த புறச் சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்குத் தீங்கு விளைவிக்க முடியாது என்று நாம் கூறுகிறோம். இந்தக் கருத்துக்கு எதிராக திருக்குர்ஆனின் 2:102வது வசனம் அமைந்துள்ளது என அல்ஜன்னத் இதழ் வாதிடுகின்றது.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். “நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவைனை) மறுத்து விடாதே!என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததை யும் கற்றுக் கொண்டார்கள். “இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லைஎன்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் (2:102)

சூனியம் என்பது காஃபிராக்கிவிடும் அளவுக்குப் பெரும்பாவம். இதைச் செய்பவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லாமல் போகும். இதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிவை உண்டுபண்ண முடியும் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இதை அப்படியே நம்ப வேண்டும் என அல்ஜன்னத் கூறுகிறது.

குருட்டு நம்பிக்கையை குர்ஆனில் புகுத்தும் ஜாக்

இதை அப்படியே நம்ப வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. புறச்சாதனம் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த வசனத்தில் ஆதாரம் இருப்பதாக அல்ஜன்னத் கூறுகிறது. இந்தக் கருத்து இந்த வசனத்தில் எங்கே இருக்கின்றது என்பது தான் நம்முடைய கேள்வி.

புறச்சாதனம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று இந்த வசனம் உட்பட குர்ஆனில் எங்கும் சொல்லப்படவில்லை. இவர்களின் சுய கற்பனையைக் கொண்டு வந்து இந்த வசனத்தில் நுழைக்கிறார்கள். இவர்கள் எப்படி நுழைக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இந்த வசனத்தைக் கூறிவிட்டு இதன் கீழ் பின்வருமாறு ஜாக் எழுதுகிறது.

இது எவ்விதம் என்று நாம் கண்கூடாகப் பார்க்க இயலாத வண்ணமும் இருக்கலாம். புறச்சாதனங்களைப் பயன்படுத்தாமல் மறைமுக சாதனங்கள் ஏதாவதொன்றை பயன்படுத்தலாம். நம்மால் வெளிப்படையாக அறிந்துகொள்ள இயலாத ஒன்று சூனியத்திலும் இருக்கலாம்.

இது தான் இவர்கள் காட்டும் ஆதாரம். இது ஆதாரமா அல்லது இவர்களாக எழுதிக் கொண்டதா? ஆதாரம் என்றால் ஒரு வசனத்தை எடுத்துக் காட்ட வேண்டும், அல்லது ஒரு நபிமொழியை எடுத்துக் காட்ட வேண்டும். அவ்வாறு எதையும் காட்டாமல் இப்படி இருக்கலாம்; அப்படி இருக்கலாம் என்பது தான் ஆய்வு செய்யும் லட்சணமா?

எனவே, சூனியத்தில் புறச்சாதனங்கள் இல்லாமல் தீங்கு செய்ய முடியும் என்பதற்கு இவர்களின் யூகங்களைத் தான் ஆதாரங்களாகக் கூறியுள்ளார்கள். இதற்குக் குர்ஆனையோ ஆதாரப்பூர்வமான நபிமொழியையோ இவர்கள் காட்டவில்லை.

ஆதாரமற்ற இந்த யூகத்தின் அடிப்படையில், சூனியத்தின் மூலம் புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தெளிவான மூடநம்பிக்கையாகும்.

இவர்களின் இந்த யூகத்தைப் படித்தால் இந்த வசனத்தில் சொல்லப்படும் தீங்கை புறச்சாதனங்களைப் பயன்படுத்தியும் செய்யலாம். அச்சாதனங்கள் இல்லாமலும் செய்யலாம் என்ற கருத்தையே கூறியுள்ளனர். நமது விளக்கத்தை இவர்களால் மறுக்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த வசனத்தில் நமக்கு எதிரான கருத்து கூறப்பட்டுள்ளது என்று ஏன் சொல்ல வேண்டும்?

2:102வது வசனத்தில் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிக்க முடியும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. புறச்சாதனங்கள் இல்லாமல் இந்த தீங்கைச் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை. அப்படியிருக்க இவர்கள் தங்களுடைய குருட்டு நம்பிக்கைக்கு இந்த வசனத்தை எப்படி ஆதாரமாகக் காட்ட முடியும்?

நபிமொழி அடிப்படையிலான விளக்கம்

2:102வது வசனத்துக்குரிய சரியான விளக்கதை நபிமொழிகளின் துணையுடன் அறிந்து கொள்ள முடியும்.

சூனியக் கலையில் ஈடுபட்ட ஹாரூத் மாரூத் ஆகிய இருவரும் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் காரியத்தைக் கற்றுக் கொடுத்ததாக இவ்வசனம் கூறுகின்றது.

சூனியம் என்றால் பொய்யை உண்மை போல் காட்டும் வித்தை என்று மூஸா நபியின் வரலாறு விளக்குகின்றது. இந்த விளக்கம் இந்த வசனத்துடனும் பொருந்திப் போகின்றது.

பேச்சில் சூனியம் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 5146

கவர்ச்சியாகப் பேசினால் பொய்யைக் கூட உண்மை என்று நம்ப வைத்து விடலாம். இதுவும் சூனியக் கலையின் ஒரு அம்சமாகும். கவர்ச்சியான பேச்சின் மூலம் கணவனிடம் மனைவியைப் பற்றி தவறான அப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். இதே போன்று கவர்ச்சியாகப் பேசி மனைவியிடம் கணவனைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்த முடியும். முடிவில் கணவன் மனைவி பிரியும் சூழல் இதனால் ஏற்படும்.

இப்பாவத்தைச் செய்யக்கூடிய பலர் சமுதாயத்தில் இருக்கின்றனர். இவர்கள் எத்தனையோ குடும்பங்களைத் தங்களது நாவால் பிரித்திருக்கின்றனர். ஷைத்தான் இவ்வாறே கணவன் மனைவியைப் பிரிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லைஎன்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லைஎன்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீ தான் சரி(யான ஆள்)என்று (பாராட்டிக்) கூறுவான்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5419

எனவே, சூனியக்கலை ஒன்று இருக்கின்றது; இக்கலையால் பொய்யை உண்மையாக காண்பிக்கும் வித்தையை மட்டுமே செய்ய முடியும். ஒருவரின் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தவோ, உறுப்புக்களை செயலிழக்கச் செய்யவோ இதன் மூலம் முடியாது. பாமரர்களை ஏமாற்றி, கணவன் மனைவிக்கிடையே பிரிவினை ஏற்படுத்த முடியும் என்பது ஹதீஸ் துணையுடன் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.

சூனியமும் ஜோதிடமும்

ஜோதிடக்காரனுக்கு ஜின்கள் மறைமுக செய்தியைத் தெரிவிப்பார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இது போல் கண்ணுக்குத் தெரியாத தீய ஜின்களின் தீங்கு சூனியத்தில் இருக்கலாம் என்று ஜாக் கூறுகிறது.

சூனியத்தில் புறச்சாதனங்கள் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது எப்படி ஆதாரமாகும்? சூனியத்தைப் பற்றி விளக்குவதாகச் சொல்லிவிட்டு அது தொடர்பான ஆதாரத்தைக் காட்டாமல் ஜோதிடம் தொடர்பான செய்திக்குத் தாவினால் இவர்கள் என்ன தான் நினைக்கின்றார்கள்? ஆய்வு என்ற பெயரில் எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று மக்களைத் திசை திருப்பும் வேளையில் ஈடுபடுகின்றனர்.

ஜோதிடம் தொடர்பான ஹதீஸையும் இவர்கள் தங்கள் கருத்துக்கு வளைக்கப் பார்க்கின்றனர். ஓரிரு தகவல்களை ஜின்கள் குறிகாரனுக்குச் சொன்னது என்று ஹதீஸ் உள்ளது. இதனால் ஜின்களின் மூலம் மனிதனுக்குச் சில நன்மை ஏற்பட முடியும் என்று வேண்டுமானால் கூறலாம். இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று கூற முடியாது. அந்தக் கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இதில் இடம்பெறவில்லை.

ஆனால் இவர்களோ ஜின்கள் மனிதனுக்கு மறைமுகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த ஹதீஸ் கூறுவதாகச் சொல்கிறார்கள். ஹதீஸில் இல்லாத, தங்களுடைய சுய கற்பனையை ஹதீஸில் புகுத்தும் இவர்களுக்கு நாம் அடைப்புக்குறிக்குள் ஆதாரத்துடன் இட்ட விளக்கத்தை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது?

ஜோதிடம் தொடர்பான ஹதீஸில் கூறப்படும் நிலைமை திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்பிருந்த நிலையாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட பிறகு இது மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் ஜாக்கினர் இந்த அறிவும் இல்லாமல், இப்போதும் ஜின்கள் ஜோதிடக்காரனுக்கு தகவல்களை கடத்துவதாக உளறி இவர்கள் ஆய்வில் அரைகுறை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜோதிடம் தொடர்பான ஹதீஸின் விளக்கம்

“ஜோதிடக்காரன் பல பொய்களைச் சொன்னாலும் அவன் சொன்ன ஓரிரு விஷயங்கள் நடந்து விடுகின்றதே” என நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அந்த ஓரிரு செய்திகள் ஜின்கள் வானுலகத்தில் ஒட்டுக்கேட்டு வந்த இந்த ஜோசியக்காரனுக்கு சொன்ன செய்திகள். இதனுடன் அவன் நூறு பொய்களை சேர்த்துக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜோதிடக்காரனுக்கும் ஜின்களுக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு இருந்தது என இந்த ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்த நிலை இருந்தது. அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டவுடன் வானுலகத்தில் எந்தச் செய்தியையும் கேட்க முடியாதவாறு ஜின்கள் தடுக்கப்பட்டு விட்டார்கள். ஜின்களுக்கும் ஜோதிடக்காரனுக்கும் இடையிலான இந்த தொடர்பு முற்றிலும் முறிக்கப்பட்டுவிட்டது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.

அல்குர்ஆன் 26:210

வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.

அல்குர்ஆன் 72:8

ஜின்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டதால் மறைவான விஷயங்கள் எதுவும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இதை ஜின்களே கூறுகின்றன.

பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.

அல்குர்ஆன் 72:10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் “உக்காழ்எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப் பட்டு)விட்டனர். (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தனர். அப்போது தலைவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், “வானகத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டனஎன்று பதிலளித்தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர். “திஹாமாஎனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது “உக்காழ்சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “நக்லாஎனுமிடத்தில் தம் தோழர்களுக்கு “ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) “வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்என்று கூறினர்.

(இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, “ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டதுஎன (முஹம்மதே!) கூறுவீராக!…என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான். ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி “வஹியின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4921

திருக்குர்ஆன் வருவதற்கு முன்பு ஜின்களுக்கும் குறிகாரர்களுக்கும் இருந்த தொடர்பு குர்ஆன் அருளப்பட்ட பிறகு முற்றிலுமாக முறிக்கப்பட்டு விட்டது. தற்போது வானுலகத்தில் தீர்மாணிக்கப்படுகின்ற விஷயங்களில் ஓரிரு விஷயங்களைக் கூட ஜின்களின் மூலம் குறிகாரர்களால் அறிந்துகொள்ள முடியாது.

இவர்கள் குறிகாரர்களுக்கு ஜின்கள் மூலம் உதவிகள் கிடைக்கிறது என்ற இந்த ஆதாரத்தை வைத்துத் தான் ஸிஹ்ர் மூலம் பாதிப்புகளை செய்ய முடியும் என்றனர். இவர்கள் கூறுவது உண்மை என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் காலத்துக்குப் பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டதால் இவர்கள் வாதம் சுக்குநூறாக நொறுங்கி விடுகின்றது.

குறிகாரர்களிடம் செல்வதும் அவர்களிடம் குறி கேட்பதும் இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டள்ளது. அவர்கள் கூறுவது உண்மை நம்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் அவர் முஹம்மதுக்கு அருளப்பட்ட(இஸ்லாத்)தை விட்டும் நீங்கிவிட்டார்.

அறிவிப்பர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவுத் 3405

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: முஸ்லிம் 4488

கண்டிதிருஷ்டி ஆதாரமாகுமா?

சூனியத்தில் புறச்சாதனங்கள் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க இயலாமல் ஜோதிடத்துக்கு முதலில் தாவினார்கள். அடுத்து கண் திருஷ்டிக்குத் தாவுகின்றனர்.

கண்ணேறு எப்படி தாக்கம் ஏற்படுத்தும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. இது போன்று நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத ஒன்று சூனியத்திலும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத அம்சம் சூனியத்தில் இருக்கின்றது என இவர்களால் அடித்துச் சொல்ல முடியவில்லை. இருக்கலாம் என்று யூகம் தான் செய்ய முடிகின்றது.

இந்த யூகத்துக்கு வலு சேர்க்க கண்ணேறு தொடர்பான ஹதீஸை இழுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

கண்ணேறு தொடர்பான ஹதீஸ்கள் பற்றி விரைவில் நாம் தெளிவான விளக்கத்தைத் தர இருக்கின்றோம்.

ஒரு பேச்சுக்கு, கண்ணேறில் அதன் பாதிப்பை நம்மால் வெளிப்படையாக அறிய முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும் இதனால் சூனியத்திலும் இந்த அம்சம் அடங்கியுள்ளது என்று கூற முடியாது.

கண்ணேறும் சூனியமும் வெவ்வேறான விஷயங்கள் என்று இவர்களே நம்பும் போது கண்ணேறில் உள்ள அம்சத்தை சூனியத்தில் கொண்டு வந்து நுழைப்பது தவறாகும். இவர்களுடைய அனைத்து வாதங்களையும் கவனித்தால் இவர்கள் சம்பந்தமில்லாத செய்தியை ஆதாரமாகக் காட்டுவதும் பிறகு யூகத்தை நுழைப்பதும் தெரியவரும்.

அற்புதங்களை அற்பமாக்கிவிட்ட ஜாக்

நபிமார்கள் அற்புதங்களைக் கொண்டு வந்தபோது எதிரிகள் இதை சூனியம் என்று கூறி மறுத்தனர்.

அதாவது தந்திரம் செய்து அற்புதம் செய்வது போல் நம்மை ஏமாற்றுகிறார் என்ற கருத்தில் சிஹ்ர் என்ற சொல்லை எதிரிகள் பயன்படுத்தி வந்தனர் என்று நாம் கூறுகிறோம். இதற்குச் சான்றாக பல வசனங்களைக் குறிப்பிட்டு எழுதியுள்ளோம்.

எதிரிகள் சிஹ்ர் என்ற சொல்லை நாம் கூறிய கருத்தில் பயன்படுத்தவில்லை என்று ஜாக் மறுக்கின்றது. அப்படியானால் அவர்கள் எந்த அர்த்தத்தில் சொன்னார்கள்? ஜாக் கூறுவதைக் கேளுங்கள்.

நபி ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அற்புதத்தால் பிறவிக் குருடருக்குப் பார்வை கொடுத்தார்கள். குஷ்ட நோயாளியை குணமாக்கினார்கள். இதைப் பார்த்த எதிரிகள் இது தெளிவான சூனியம் என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியது தெளிவான அற்புதம். ஆனால் அதையும் எதிரிகள் சூனியம் என்றே சொன்னார்கள்.

“அற்புதத்தை தெளிவாகக் கண்ணால் காணும் போது இது கண்கட்டி வித்தை என்று எதிரிகள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்” என்று ஜாக் கேள்வி எழுப்புகிறது. இந்தக் கேள்விக்கு நாம் பதில் சொல்வதற்கு முன்னால் இவர்களின் அறியாமையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

ஏதோ ஒரு மறைமுக சக்தியின் உதவியினால் சில ஆச்சரியமான காரியங்களை சூனியக்காரர்களால் செய்ய முடியும். அந்த சூனியக்காரர்கள் எந்தவித தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் இது சாத்தியம் என்று எதிரிகள் நம்பியிருந்தார்களாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் இறைத்தூதர் மட்டும் அற்புதம் செய்ய மாட்டார். சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்று எதிரிகள் நம்பினார்கள் என இவர்கள் கூறுகின்றனர்.

இறைத்தூதர்களை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக எல்லா இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான். இந்த அற்புதங்கள் மக்களை சத்தியத்தின் பக்கம் ஈர்க்கும் சக்தியாக இருந்தது.

இறைத் தூதராக இல்லாத சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என மக்கள் நம்பினார்கள் என்றால் அல்லாஹ் கொடுத்தனுப்பிய அற்புதம் மக்களை எப்படி நேர்வழிக்கு கொண்டுவர உதவும்? இந்நிலையில் இறைத்தூதர் செய்து காட்டும் அனைத்து அற்புதங்களும் பயனற்றுப் போகும்.

அல்லாஹ் குர்ஆனில் அற்புதங்களைப் பற்றி குறிப்பிடும் போது சான்றுகள் என்றும் ஆதாரங்கள் என்றும் கூறுகிறான். சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்று நம்பக்கூடிய மக்களிடம் இறைத்தூதர் அற்புதம் செய்து காட்டினால் இந்த அற்புதம் அந்த மக்களுக்கு எப்படி சான்றாகவும் ஆதாரமாகவும் அமையும்?

எனவே இவ்வாறு கூறியதன் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்களும் தேவையற்ற காரியத்தைச் செய்தார்கள் என ஜாக் கூற வருகின்றது.

மூஸா நபி போட்டிக்கு ஒத்துக்கொண்டது ஏன்?

சூனியக்காரர்கள் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்திருந்தால் ஃபிர்அவ்னின் சூனியக்காரர்கள் போட்டிக்கு வருமாறு மூஸா நபியை அழைத்த போது அந்த அழைப்பை மூஸா நபி ஏற்றிருக்க மாட்டார்கள்.

ஏனென்றால் போட்டியில் மூஸா நபி வெற்றி பெற்றாலும் அவரை யாரும் நம்பப் போவதில்லை. வெற்றி பெற்றதால் திறமையான சூனியக்காரர் என்று மக்கள் சொல்வார்களே தவிர இறைத்தூதர் என்று கூறமாட்டார்கள்.

அப்படியானால் மூஸா நபி எதற்குப் போட்டி போட ஒத்துக் கொண்டார்கள்? அல்லாஹ்வும் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு மூஸா நபியிடம் ஏன் கூற வேண்டும்?

போட்டியில் வெற்றி பெற்றால் மூஸா நபி இறைத்தூதர் என்பது தெளிவாகும் என்பதால் தான் அல்லாஹ் இவ்வாறு கூறினான். இதிலிருந்து சூனியக்காரர்கள் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடமிருந்தது என்ற கூற்று தவறானது என்பதை அறியலாம்.

சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?

மூஸா (அலை) அவர்கள் செய்து காட்டிய அற்புதத்தைப் பார்த்தவுடன் போட்டியிட வந்த சூனியக்காரர்கள் மூஸா (அலை) அவர்களை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள்.

சூனியக்காரர்களும் அற்புதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை எதிரிகளிடம் இருந்திருந்தால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்க மாட்டார்கள். மூஸா நம்மை விட பெரிய சூனியக்காரர் என்று கூறி மறுத்திருப்பார்கள்.

மூஸா நம்மைப் போன்று ஒரு சூனியக்காரர் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் மூஸா நபியை போட்டிக்கு அழைத்தார்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கு ஏற்ப சூனியக்காரன் யார்? என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

மூஸா நபி செய்தது, தாங்கள் செய்தது போன்று வித்தை அல்லாமல் தெளிவான அற்புதமாக இருந்ததாலும் இதை இறைத்தூதரைத் தவிர சூனியக்காரர்களாலும் செய்ய முடியாது என்று நம்பியதாலும் இஸ்லாத்திற்கு வந்தார்கள். ஜாக் இந்த விஷயத்தை சிந்திக்கத் தவறிவிட்டது.

எதிரிகள் ஏன் மறுத்தார்கள்?

தெளிவாகத் தெரியும் அற்புதத்தை சூனியம் என்று கூறி எதிரிகள் ஏன் மறுக்க வேண்டும் என ஜாக் கேட்ட கேள்விக்கு வருவோம்.

நபிமார்கள் செய்து காட்டிய அற்புதம் எதிரி உட்பட அனைவரும் நம்பும் வகையில் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக இருந்தது. எதிரிகள் அனைவரும் இவர் இறைத்தூதர் தான் என்பதை நன்கு விளங்கி வைத்திருந்தனர். மனமுரண்டாகத் தான் மறுத்துக்கொண்டிருந்தனர்.

அதாவது நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்த்த பிறகு அவர் நபி என்றும் அவர் செய்து காட்டியது அற்புதம் என்றும் இது போன்று வேறு யாராலும் செய்ய முடியாது என்றும் எதிரிகள் நம்பினர்.

ஆனால் பதவி, அந்தஸ்து, முன்னோர்களின் வழி ஆகிய காரணங்களால் சத்தியம் விளங்கிய பிறகும் சத்தியத்திற்கு வர மறுத்தனர். இன்றைக்குப் பலர் இதுபோன்று இருப்பதைப் பார்க்கின்றோம். பின்வரும் வசனங்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றது.

நமது சான்றுகள் பார்க்கக் கூடிய வகையில் அவர்களிடம் வந்த போது “இது தெளிவான சூனியம்என்று அவர்கள் கூறினர். அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். “குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்று கவனிப்பீராக!

அல்குர்ஆன் 27:13

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்” என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.

வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே இவற்றைச் சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 17:102

எனவே சூனியக்காரர்களால் அற்புதம் செய்ய முடியும் என்ற கருத்தில் ஸிஹ்ர் என்ற வார்த்தையை எதிரிகள் பயன்படுத்தவில்லை என்று மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் தெளிவாகிவிட்டது.

சூனியம் என்பது பொய்யும் பித்தலாட்டமும் அடங்கிய கலை என்பதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்கள் ஆதாரங்களாக மக்களுக்கு மத்தியில் வைத்துள்ளோம். இதழ்கள் வாயிலாகவும் இணையதளத்தின் வாயிலாகவும் இதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.

ஜாக் இந்த ஆதாரங்களில் எந்த ஒன்றுக்கும் பதில் கொடுக்கவில்லை. ஆய்வு என்ற பெயரில் உளறிக் கொட்டியது தான் மிச்சம். இந்த லட்சணத்தில் இந்த ஆய்வை தொடரப் போவதாக வேறு அறிவித்துள்ளது.

இறுதியாக நாம் சொல்வது என்னவென்றால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னதை அப்படியே ஏற்போம். அவர்கள் கூறாத நம்முடைய சொந்தக் கற்பனைகளை மார்க்கத்தில் நுழைத்து, மூட நம்பிக்கைகள் பரவ நாம் காரணமாகி விடக்கூடாது. அல்லாஹ் நம்மை இதை விட்டும் பாதுகாப்பானாக!

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 23

அடைமானமும் அமானிதமும்

அடைமானம்

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் ஒரு யூத மனிதனிடம் அடைமானப் பொருள் கொடுத்து  கொஞ்சம்  கோதுமை வாங்கினார்கள்.  அதைத் திருப்பி வாங்காமலேயே மரணித்தார்கள் என்ற ஹதீஸை  பார்க்கிறோம்.  அது வட்டிக்கு இல்லை. அடைமானப் பொருளுக்கும் வட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அடைமானப் பொருள்

ஒரு பொருளை வாங்கும் போது அதற்குப் பதிலாக ஒரு பொருளை கொடுப்பதே அடைமானமாகும்

எனவே அடைமானம் வைத்து பொருளை வாங்கலாம் அல்லது அடைமானத்துக்கு பொருட்களை கொடுக்கலாம் என்பதை பின்வரக் கூடிய ஹதிஸ்கள்  உணர்த்துகின்றது

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள். (நூல்: புகாரி 2068, 2200, 2096, 2069)

ஆனால் இன்றைக்கு கிராமப்புறங்களில் அடைமானம் வைக்கப்பட்ட பொருட்களை அடைமானம் வாங்கியவர்கள் பயன்படுத்துவதைப் பரவலாகக் காணமுடிகிறது. வீட்டை வாடகை இல்லாமல் ஒத்திக்கு விடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. இது கூடாது. ஏனென்றால் நாம் கொடுத்த ரூபாயைத் தான் திரும்ப வாங்கப் போகிறோம். அதைக் குறைத்து வாங்க மாட்டோம். இதைப் போன்று தான் அவனுடைய பொருளையும் அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும். இதற்கு பெயர் தான் அடைமானம்.

கால்நடைகளை அடைமானம் வைத்தல்

ஆடு, மாடு, ஓட்டகம், கழுதை இவைகளை அடைமானம்  வைத்தால் அவைகளை அடைமானம் வாங்கியவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2511

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2512

அடைமானம் வைக்கப்பட்ட கால்நடைகளுக்கு உணவு கொடுத்தால் அவற்றுக்கு உணவு கொடுக்கின்ற அளவு பயன்படுத்திக் கொள்ள முடியும் உதாரணமாக, பால் தரக்கூடிய பசுவில் பாலைக் கறந்து  குடித்து கொள்ள முடியும். அதே போல சவாரி செய்ய கூடியதாகயிருந்தால் அதில் சவாரி செய்து கொள்ள முடியும், இன்னும் சில பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்தவில்லை என்றால் அது கெட்டு விடும் என்றால் நிபந்தனை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்

அமானிதம்

அமானிதம் என்றால் ஒரு பொருளை எப்படித் தந்தாரோ அப்படியே திருப்பிக் கொடுப்பது தான் அமானிதம் ஆகும்.

அமானிதத்தை எப்படிப் பதுகாக்க வேண்டும் என்றால், ஒரு மனிதர் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் நம்மிடம் ஒரு பொருளை அமானிதம் என்று தருகிறார் என்றால் அந்தப் பொருளை எப்படி அந்த மனிதர் தந்தாரோ அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்.

அன்றைக்கு வாழ்ந்த யூதர்கள், முஷ்ரிக்கீன்கள் மத்தியில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நம்பிக்கையாளர், உண்மையாளர் என்றெல்லாம் பெயர் எடுத்தார்கள் என்றால் நபியவர்கள் அமானிதத்தைப் பேணிப் பாதுகாக்கக் கூடியவராகயிருந்தார்கள்.

அமானிதத்தைப் பாதுகாக்க வேன்டும் என்று அல்லாஹ்வும் திருக்குர்ஆனில்  கட்டளையிடுகிறான்.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவ னாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4.58)

அல்லாஹ்வுடைய கட்டளைகளில் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை எப்படிக் கட்டளையிடுகிறானோ அதே போன்று அமானிதம் விஷயத்தில்  திருப்பிச் செலுத்துவதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்,

இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ், ரசூலுக்கு மாறு செய்தால் எப்படி குற்றமோ அதற்கு அடுத்த குற்றம் அமானித மோசடி என்று அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்! (அல்குர்ஆன் 8:27)

அமானிதத்தைப் பாதுகாப்பவரே மறுமையில் வெற்றி பெறுவார்

அமானிதத்தை நல்ல முறையில் யார் பாதுக்கிறாரோ அவர் வெற்றி பெற்று விட்டார்.

தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். (அல்குர்ஆன் 23:8)

அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள். (அல்குர்ஆன் 70:32)

அமானித மோசடி

அமானிதத்தை மோசடி செய்பவன் நயவஞ்சகர்களின் பட்டியலில் வந்து விடுவான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய்பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 330)

ஒருவர் நம்மை நம்பி பொருளை ஒப்படைத்தால் அதை மோசடி செய்யாமல் கொடுத்து விடவேண்டும். அவ்வாறு கொடுக்காமல் மோசடி செய்வது யூதர்களுடைய நடைமுறை என்று அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக்காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். “எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாதுஎன்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டி கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:75)

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை   தொடர்: 10

கியாமத் நாளின் அடையாளங்கள்

ஈஸா நபியின் வருகை

இன்னும் மர்யமின் குமாரரும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் அவர்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்குக் குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவோர் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:157, 158

இவ்விரு வசனங்களையும், அல்லாஹ்வின் வல்லமையை உணர்ந்து, விதண்டாவாதமும், வார்த்தை ஜாலமும் செய்யாமல் சிந்தித்தால் இது கூறக்கூடிய உண்மையை யாரும் தெளிவாக அறியலாம்.

“அவரை அவர்கள் கொல்லவில்லை” என்பது அவர் மரணிக்கவில்லை என்பதை அறிவிக்காது. யூதர்கள் கொல்லவில்லை என்பதைத் தான் குறிக்கும். வேறு வழியில் அவர் மரணித்திருக்கலாம் என்பதை இவ்வசனம் மறுக்காது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இத்துடன் அல்லாஹ் நிறுத்திக் கொண்டால் இவர்களது வாதம் பொருத்தமானதே! “மாறாக அவரைத் தன்னளவில் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான்” என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களும் கொல்லவில்லை. அவரைத் தன்னளவிலும் அல்லாஹ் உயர்த்திக் கொண்டான் என்பதையும் சேர்த்து சிந்தித்தால் அவர் மரணிக்கவில்லை என்பது தெளிவாகும்.

அவரை உயர்த்திக் கொண்டான் என்றால் அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டான் என்று அவர்கள் விளக்கம் கூறி சமாளிக்கின்றனர்.

அவர்களுடைய உடல் சம்பந்தமாகப் பேசி வரும் போது திடீரென்று அந்தஸ்து என்று தாவுவது ஏற்புடையதாக இல்லை. அந்தஸ்து உயர்வு பற்றி இங்கே கூற வேண்டியதில்லை.

அவரைக் கொல்லவில்லை. (கொல்லாத வகையில்) உயர்த்திக் கொண்டான் என்பது பொருத்தமாக அமைகிறது.

ஒரு வாதத்துக்காக அந்தஸ்து உயர்வு என்றே வைத்துக் கொள்வோம். வேறு பல சான்றுகள் இந்த வாதத்தை உடைத்து எறிகின்றன.

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.  ((அல்குர்ஆன் 43:61))

ஈஸா (அலை) அவர்கள் இறுதிக் காலத்தின் அத்தாட்சியாவார் என்ற வாசகம் பலமுறை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இது ஈஸா (அலை) அவர்களுக்கு முந்தைய வேதங்களில் சொல்லப்பட்டிருந்தால் எதையாவது கூறி சமாளிக்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினரை நோக்கி அல்லாஹ்வால் கூறப்படுகின்றது. கியாமத் நாளின் அடையாளம் என்றால் இனிமேல் அந்த அடையாளம் ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது. எப்போதோ இறந்து விட்ட ஒருவரைப் பற்றி இவ்வாறு கூற முடியாது.

கியாமத் நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார் என்ற குர்ஆன் வசனத்தை மனதில் இருத்திக் கொண்டு, அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதைச் சிந்தித்தால் அந்தஸ்து உயர்வு என்ற அர்த்தத்துக்கு வருவது பொருத்தமாக இராது. அந்தஸ்து உயர்வு என்று சாதித்தால் கூட “மறுமை நாளின் அடையாளமாக அவர் திகழ்கிறார்” என்பது மிகத் தெளிவாக இந்த உண்மையைக் கூறிவிடுகின்றது. ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்று கூறுவோர் இந்த வசனத்துக்கு ஏற்கத்தக்க எந்த விளக்கமும் கூற முடியவில்லை. இப்படி ஒரு வசனம் இருப்பதைக் கண்டு கொண்டதாகவே அவர்கள் காட்டிக் கொள்வதில்லை.

ஈஸா (அலை) இன்று வரை மரணிக்கவில்லை; உடலுடன் உயர்த்தப்பட்ட அவர்கள் இறுதிக் காலத்தில் இறங்குவார்கள் என்பதற்குச் சான்றாக மற்றுமொரு தெளிவான திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! “அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்” என்ற வசனத்திற்கு அடுத்த வசனமாக இந்த வசனம் இடம் பெற்றுள்ளது.

வேதமுடையவர்களில் எவரும் அவர் (ஈஸா) இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்பவராக இருப்பார்.

அல்குர்ஆன் 4:159

ஈஸா (அலை) அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மரணித்துவிட்டார்கள் என்று கூறக்கூடியவர்களின் நம்பிக்கைப்படியும் இந்த வசனத்திற்குப் பொருள் கொண்டு பார்ப்போம். ஈஸா (அலை) அவர்கள் இன்று வரை மரணிக்கவில்லை என்று கூறுவோரின் நம்பிக்கைப்படியும் பொருள் கொண்டு பார்ப்போம். எது சரியான பொருள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

“ஈஸா நபியின் மரணத்திற்கு முன்” என்ற சொற்றொடருக்கு முதல் சாராரின் நம்பிக்கைப் பிரகாரம் எப்படிப் பொருள் வரும்? ஈஸா நபியின் மரணத்திற்கு முன் என்றால் அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது என்றுதான் இவர்கள் பொருள் கொள்ள முடியும். ஈஸா நபியின் மரணத்திற்கு முன் அதாவது அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் என்பது தான் இந்தச் சொற்றொடரின் பொருளாகிறது.

வேதமுடையவர்கள் அனைவரும் ஈஸா (அலை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பது மொத்த வசனத்தின் பொருளாகிறது. ஈஸா (அலை) வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதற்கு ஏதேனும் பொருளிருக்கிறதா? அல்லாஹ்வின் வசனம் எந்த அர்த்தமுமில்லாததாக அல்லவா ஆகிவிடும்?

ஈஸா (அலை) இனிமேல் மரணிப்பதற்கு முன் – இனி மேல் வேதமுடையவர்கள் ஈமான் கொள்வார்கள் என்பது தான் பொருத்தமாக உள்ளது. ஈஸா நபி வாழ்ந்த காலத்தில் இனி ஈமான் கொள்வார்கள் என்பதில் எவ்வளவு குழப்பம் என்று பாருங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் இனி ஈஸா (அலை) மீது ஈமான் கொள்வார்கள் என்று அவர் மரணித்த பிறகு அல்லாஹ் சொல்வானா?

இதைச் சிந்தித்தால், ஈஸா (அலை) இன்றுவரை மரணிக்கவில்லை; அவர் மரணிப்பதற்கு முன்னால் வேதமுடையோர் அனைவரும் அவரை நேரில் பார்த்து ஈமான் கொள்வார்கள் என்பது தெளிவாகும். எவ்வளவு அழுத்தமாக ஈஸா நபி மரணிக்கவில்லை என்பதைக் குர்ஆன் கூறுகிறது என்று சிந்தியுங்கள்! மேலும் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் எனக் கூறப்படுவதால் உயர்த்திக் கொண்டான் என்பது உடலுடன் தான் என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தவறான வாதங்களும் தக்க பதில்களும்    தொடர்: 2

பிரிவினைகள் ஏன்?

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.

அல்குர்ஆன் 2:213

இந்த வசனத்தில் மார்க்கம் வழங்கப்படுவதற்கு முன்னால் மக்கள் அனைவரும் பிரிவினை இல்லாமல் ஒரே சமுதாயமாக இருந்தார்கள் என்றும் வேதம் வழங்கப்பட்டதற்குப் பின்னால் தான் பல பிரிவுகளாகப் பிரிந்தார்கள் என்றும் கூறுகின்றான்.

இன்றைக்கும் இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பலவாறாகப் பிரிந்து கிடப்பவர்கள் அனைவருமே வேதம் வழங்கப்பட்டு, தெளிவான ஆதாரங்கள் உள்ளவர்கள் தான். மற்றவர்கள் அனைவருமே பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருப்பதற்குக் காரணம், தெளிவான சான்றுகள் இல்லாதது தான்.

மார்க்கம் இல்லாதவர்கள் எதையும் கடவுளாக எடுத்துக் கொள்ளலாம். வழிபடலாம் என்று இருப்பதின் காரணத்தால் அவர்களுககுள் பிரிவினனை என்பதே இல்லை. வணக்க வழிபாடுகள், விழாக்கள், ஆடம்பரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதால்  அவர்களுக்குள் சண்டையும் வருவது கிடையாது.

ஆனால் வேதம் வழங்கப்பட்டு, தெளிவான சான்றுகள் வழங்கப்பட்ட  நாம் எல்லா விஷயங்களிலும் பிரிந்து கிடக்கிறோம். நமக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை நீக்குவதற்காகத் தான் வேதத்தை இறைவன் இறக்கினான். ஆனால் அவன் இறக்கிய அந்த வேதத்திலேயே நாம் கருத்து வேறுபாடு கொள்கின்றோம். இன்றைக்கு அனைத்து முஸ்லிம்களிடமும் குர்ஆன் இருக்கிறது. நபிகளாரின் போதனைகள் இருக்கின்றது. ஆனால்  நாம் தான் 72 கூட்டமாகப் பிரிந்து கிடக்கின்றோம்.

மேலும் இறைவன் தன்னுடைய வேதத்தில் கூறுகிறான்.

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

அல்குர்ஆன் 3:19

இந்த வசனத்தில் அல்லாஹ், என்னிடம் மார்க்கம் என்பது ஒரே மார்க்கமாகிய இஸ்லாம் மட்டும் தான். ஆனால் வேதம் வந்த பிறகு, வேதம் கொடுக்கப்பட்டவர்கள் பிறர் மேல் உள்ள பொறாமை, ஆணவம், அகம்பாவத்தின் காரணமாகத் தமக்குள் முரண்பட்டு விட்டனர். தங்களுடைய முன்னோர்களுடைய மார்க்கம் தான் சிறந்தது; அதை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அவரவர்களாகவே தங்களுடைய மார்க்கம் தான் உண்மையானதாகக் கருதி பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர் என்று கூறுகிறான்.

முன்னோர்களைப் பின்பற்றுதல்

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

அல்குர்ஆன் 2:170

தாய், தந்தை, முன்னோர்கள், இமாம்கள் எதை மார்க்கமாகக் கூறினார்களோ அதைப் பின்பற்றாதீர்கள்; அவர்கள் நேர்வழியைச் சொன்னால் பின்பற்று; அறிவுக்குப் பொருந்திய கருத்துக்களைச் சொன்னால் பின்பற்று. நேர்வழிக்கு மாற்றமாகச் சொன்னால் பின்பற்றாதீர்கள். அறிவுக்குப் பொருந்தாத விஷயங்களைச் சொன்னால் பின்பற்றாதீர்கள். உங்களுடைய இறைவன் இறக்கியதை மட்டும் பின்பற்றுங்கள் என்று இறைவன் இந்த வசனத்தில் கூறுகிறான். உஙகள் பெற்றோர் ஐவேளை தொழச் சொல்கிறார் என்றால் அது நேர்வழி,  குர்ஆன், ஹதீஸில் உள்ள செய்தி. அதைப் பின்பற்றலாம். நோன்பு நோற்கச் சொல்கிறார்கள் என்றால் அதைப் பின்பற்றலாம். ஏனென்றால் அதுவும் நேர்வழி.

ஆனால் மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை யார் சொன்னாலும் அதை கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. முன்னோர்களைப் பின்பற்றுவது என்பது நேர்வழி என்று தெரிந்தால் தான் பின்பற்றவேண்டும். அவர்கள் நேர்வழி பெறாமலும், விளங்காமலும் ஏதேனும் ஒரு விஷயத்தைச் சொன்னால் அவர்களைப் பின்பற்றக்கூடாது என்று இறைவன் எச்சரிக்கிறான்.

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தில் இருக்கிறோம். இதை நாம் மதரஸாவில் ஏழு வருடம் படித்து, ஆராய்ந்து இது தான்  சரி என்று கருதி அதில் இருக்கவில்லை. மாறாக நம்முடைய ஆலிம்கள் நமக்கு கற்றுத் தந்ததால் அதில் இருக்கிறோம். வாரா வாரம் ஜும்ஆ மேடையில் அதைப் பற்றித் தான் நமக்கு சொல்லித் தந்தார்கள்.

அது மட்டுமில்லாமல் நம்முடைய பெற்றோர்கள், நம்முடைய முன்னோர்கள் அந்த மார்க்கத்தில் இருந்ததால் அதில் இருக்கிறோம். நாமாகச் சென்று உன்னுடைய கருத்து என்ன, உன்னுடைய மார்க்கத்திற்கும், என்னுடைய மார்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டறிந்து அலசி ஆராய்ந்து பார்த்து, இதுதான் சரியான மார்க்கம் என்று நாம் அதில் இருக்கவில்லை.

இன்றைக்கு நான்கு மத்ஹபுகளில் இருக்கக் கூடியவர்களுக்கே மத்ஹபு என்றால் என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் ரசூலுல்லாஹ் எந்த மத்ஹபு என்று நம்மிடமே கேட்கிறார்கள். இந்த நான்கு இமாம்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் பிறந்தவர்கள் என்பது கூடத் தெரியவில்லை.

எனவே நாம் ஒரு மார்க்கத்தைக் கண்டறிவதாக இருந்தால் முன்னோர்கள் சொன்னது, மூதாதையர்கள் சொன்னது, இமாம்கள் சொன்னது, ஊர் வழக்கம் என மற்ற எல்லா கொள்கைகளையும் தூக்கி எறிய வேண்டும். இந்தக் கொள்கைகள் தான் உண்மையான மார்க்கம் எது என்பதைக் கண்டறிவதற்குத் தடையாக இருக்கும்.

பெரும்பான்மையைப் பின்பற்றுதல்

அதே போல் பெரும்பான்மையானவர்கள் சொன்னது தான் சரியானதாக இருக்கும். சிறு கூட்டத்தினர் சொல்வது தவறானது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தக் கருத்தும் தவறானது.

ஏனென்றால்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்கள் மத்தியில் விதைத்த போது அவர்களுடன் இருந்தவர்கள் மக்கத்து காபிர்களை விட மிகவும் குறைவானவர்கள். அப்படியானால் அவர்கள் சொல்வது தவறு என்று ஆகிவிடுமா? இதில் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். சொல்கிற செய்தி சரியா என்பதைத் தான் பார்க்க வேண்டுமே தவிர எத்தனை பேர் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கக் கூடாது. இறைவன் திருமறையில் கூறுகிறான்.

பூமியில் உள்ளவர்களில் அதிக மானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப் பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

அல்குர்ஆன் 6:116

இந்த உலகத்தில் முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அதனால் அவர்கள் சொல்லும் கருத்து சரியென்று ஆகிவிடுமா? ஒரு ஊரில் உள்ள பள்ளிவாசலுக்குத் தொழ வருபவர்களை விட தொழ வராதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பெரும்பான்மையானவர்கள் தொழ வரவில்லை. எனவே இது தான் நேர்வழி என்று சொல்வார்களா?

சினிமா கொட்டகையில் அதிமானவர்கள் சென்று சினிமா பார்க்கிறார்கள். குறைவானவர்கள் தான் பார்க்காமல் இருக்கிறார்கள். எனவே பெரும்பான்மையுடைவர்களுடைய கருத்து மற்றும் நடவடிக்கை தான் சரியாக இருக்கும் என்று இவர்கள் சொல்வார்களா?

எனவே அதிமானவர்கள் சொல்வது தான் சரி, குறைவானவர்கள் சொல்வது தவறு என்ற வாதத்தை விட்டுவிட்டு சொல்லும் செய்தி சரியா என்று தான் நாம் சிந்திக்க வேண்டும். சில நேரங்களில் அதிமானவர்கள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கும். நெருப்பை கையில் வைத்தால் சுடுமா? என்று கேட்டால் சுடும் என்று பெரும்பான்மையானவர்கள் கூறுவார்கள். பெரும்பான்மை என்ற காரணத்தால் அது தவறு என்றாகி விடாது.

எனவே நாம் எண்ணிக்கையைக் கவனத்தில் கொள்ளாமல் செய்தி சரியானதா என்பதை ஆராய வேண்டும்.

மதகுருமார்களைப் பின்பற்றுதல்

அதேபோல் இமாம்கள், ஆலிம்கள், மதகுருமார்கள் சொல்வதையும் சரி என்று நினைத்து கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது கூடாது என்றும் இறைவன் கூறுகிறான்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

அல்குர்ஆன்: 9:31

உலக மக்களுக்கு அல்லாஹ் சொன்ன முதல் செய்தி இதுதான். ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமியில் முதன் முதலாக தன்னுடைய கையால் படைக்கிறான். தன்னுடைய எல்லா ஆற்றல்களையும் அவருக்குக் காட்டுகிறான். அவரையும், அவருடைய மனைவியையும் சொர்க்கச் சோலைகளில் வாழச் செய்கிறான்.

அவர்களுக்கு இத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து அல்லாஹ் சொன்ன ஒரு செய்தி,  “இந்த மரத்தை மட்டும் நீங்கள் நெருங்காதீர்கள். அவ்வாறு நெருங்கினால் நீங்கள் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்’ என்று சொன்னான்.

ஆனால் அவர்கள் இறைவனது கட்டளையை மீறி விட்டார்கள். இதனால் அந்தச் சோலையிலிருந்து அவர்கள் இருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறு வெளியேற்றும் போது அல்லாஹ் அவருக்கு தன்னுடைய ஞானத்தை அவருக்கு கற்றுக் கொடுக்கிறான்.

அதற்கு முன்பு ஆதமைப் படைத்தவுடன் மலக்குமார்கள் அல்லாஹ்விடம் வந்து, “நாங்கள் தான் உனக்குப் பணிவிடை செய்கிறோமே. நீ எதற்காக பூமியில் இரத்தத்தை ஓட்டும் மனித இனத்தை படைக்க வேண்டும்?’ என்று தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதற்கு இறைவன் உங்களை விட நான் மிகவும் அறிந்தவன் என்று கூறிவிட்டு ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என்று கூறினான். அவர்களும் ஆதமுக்கு சிரம் பணிந்தனர்.

பல்லாண்டு காலமாக வாழ்ந்த மலக்குமார்களுக்குத் தெரியாத விஷயங்கள், அப்போது படைக்கப்பட்ட ஆதமுக்கு தெரிந்தது. அந்த அளவுக்கு மிகப் பெரிய அறிவாளியாக இருந்தார். இன்றைக்கும் யாரெல்லாம் அறிவாளியாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஆதமிடருந்து தான் அறிவு வந்தது. எல்லாமே அவருடைய ஜீன்களிலிருந்து கடத்தப்பட்டது தான்.

அவ்வாறு ஆதமை அவன் வெளியேற்றும்போது, உனக்கு நான் எல்லாவற்றையும் கற்றுத் தந்திருக்கிறேன். நீ தான் மிகப் பெரிய அறிவாளி. எனவே உலகத்திற்குச் சென்று எது சரி, எது தவறு என்பதை நீ தீர்மானித்து அதன்படி உன்னுடைய செயலை அமைத்துக் கொள் என்று இறைவன் கூறவில்லை. மாறாக இறைவன் கூறுகிறான்:

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்என்று கூறினோம்.

அல்குர்ஆன்: 2:38

அதாவது, நேர்வழி என்பது என்னிடமிருந்து தான் வரும். வேறு எதையும் நீர் மார்க்கமாகப் பின்பற்றக்கூடாது. நீர் முதல் மனிதராக இருக்கலாம். அறிவில் மிகுந்தவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது நான் தான். இது தான் ஆதமை அல்லாஹ் படைத்த போது மனித சமுதாயத்திற்குச் சொன்ன முதல் செய்தியாகும். மேலும் இறைவன் கூறுகிறான்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

அல்குர்ஆன்: 49:16

இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம்கள் மார்க்கத்தில் இல்லாததை புதிது புதிதாக உருவாக்கி வைத்துக் கொண்டு இது மார்க்கத்தில் உள்ள செயல் என்று செய்து கொண்டிருக்கிறார்கள்.

இறைவனுக்கு ஒன்றும் தெரியாதது போன்று, இவர்கள் புதிதாகக் கண்டுபிடித்து அவனுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் தான் இறைவன், நான் உங்களுக்கு மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டேன். இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரன் நான். உங்களுக்குத் தேவையான எல்லா சட்டங்களையும் நான் கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் எனக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்களா? என்று கேட்கிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

எனவே எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் இதை அல்லாஹ் சொல்லியிருக்கின்றானா என்று பார்க்க வேண்டும். மேலும் இறைவன் முஃமீன்களுடைய பண்பைப் பற்றிச் சொல்லும் போது,

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 24:51

அவ்வாறு அல்லாஹ் சொல்வதைக் கேட்காமல் அவனது தூதர் காட்டிய அடிப்படையில் வாழாமல் முன்னோர்கள், இமாம்கள், இவர்களுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களைப் பற்றி இறைவன் கூறும்போது,

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில்”நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள்.

எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன்: 33:66,67

நரகத்தில் அவர்களின் புலம்பலைப் பற்றி இறைவன் சுட்டிக் காட்டுகிறான். ஆகவே, இறைவன் அங்கீகரித்த மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான். அதில் எந்தப் பிரிவினையும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர் வைக்க வேண்டும்?

ஷாக்கிரா ஹாஷிம்

பொதுவாக எல்லா விஷயங்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தைகளுக்கு அழகிய பெயர்களைச் சூட்ட வேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

உங்களுடைய பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது அப்துல்லாஹ் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3975

எனவே நல்ல பொருள் கொண்ட பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும்.

? பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் குளிக்கலாம் என்று லண்டனில் இருக்கும் சிலர் கூறுகின்றனர். இது குறித்து குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் பதில் தரவும்.

நஸ்ருத்தீன்

பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

பெண்களோடு குளிக்கும் போது தனது அந்தரங்கப் பகுதிகளை மற்ற பெண்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து நீச்சல் குளத்தில் குளிப்பது தவறல்ல.

பாதுகாப்பான சூழ்நிலை இருந்தாலும் பெண்கள் நீச்சல் குளங்களுக்கு அறவே செல்லக்கூடாது என்று சிலர் தவறாகக் கூறுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அபுல் மலீஹ் அல்ஹதலீ கூறுகிறார்:

ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்கள் பெண்களை குளியல் குளங்களுக்கு நீங்கள் தான் அனுப்புகின்றீர்களா? “ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்என்று கூறினார்கள். 

நூல்: திர்மிதீ 2727

இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் புரிந்து கொண்டால் இவர்கள் கூறும் கருத்துக்கு இது ஆதாரமில்லை என்பதை அறியலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் குளிப்பது தொடர்பாக இதைக் கூறினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை எதுவென நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும் தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள்

 – இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வாக்கியமாகும். பெண்கள் ஆடையை அவிழ்ப்பது பற்றித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆடையை அவிழ்க்காமல் குளிக்கும் நிலை இருந்தால் அதை இந்தத் தடை கட்டுப்படுத்தாது.

மேலும் கணவனுடைய வீடு என்றால் வீடு என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. “கணவன் அல்லாத மற்றவர்கள் முன்னால்’ என்று தான் பொருள் கொள்ள வேண்டும்

கணவனும் மனைவியும் வேறு ஒரு உறவினரின் வீட்டுக்குச் செல்கின்றனர். இது கணவனுடைய வீடு இல்லை. இந்த வீட்டில் கணவன் முன்னால் மனைவி ஆடையை அவிழ்க்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணவன் முன்னால் என்பதைத் தான் கண்வன் வீடு என்ற சொல்லால் நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்தவர் வீடு என்ற காரணத்தால் அங்கு பெண்கள் குளிக்கவோ அல்லது கணவனுக்கு முன்னிலையில் ஆடை அவிழ்க்கக் கூடாது என்றோ யாரும் கூறுவதில்லை. பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இதை அனுமதிக்கின்றனர்.

பெண்கள் நவீன நீச்சல் குளத்தில் அன்னியர்கள் பார்க்காமலும் ஆடை அவிழ்க்காமலும் குளிக்கும் நிலை இருந்தால் அங்கே குளிப்பது தவறல்ல.

இன்றைக்குப் பெண்களுக்கான நவீன பாதுகாப்பான நீச்சல் குளங்கள் இருப்பதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. குளம், குட்டை போன்ற நீர் நிலைகளே பொது இடங்களில் இருந்தது. அங்கு சென்று பெண்கள் குளித்து வந்தனர்.

இவர்கள் குளிப்பதை அந்நிய ஆண் பார்க்க நேரிடும் என்பதால் பாதுகாப்பற்ற இது போன்ற நீர்நிலைக்குச் சென்று குளிக்கக் கூடாது என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் தற்போது இஸ்லாமியப் பெண்கள் ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று அரை குறை ஆடையுடன் குளிக்கக் கூடாது என்று கூறலாமே தவிர பாதுகாப்புள்ள இடங்களுக்கும் செல்லக்கூடாது என்று கூற முடியாது.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி பகுதி ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தால் அப்போது இது தவறாகாது.

குற்றாலம் போன்ற இடங்களிலும் தீம் பார்க்குகளிலும் ஆண்கள் பார்வையில் படாமல் பெண்கள் குளிக்க முடியாது என்பதால் அதுபோன்ற இடங்களில் குளித்து ஆண்களின் காட்சிப் பொருளாக ஆகக் கூடாது.

ஆனால் இன்று விடுதிகளில் தங்கும் தம்பதிகள் கூட ரகசியமாகப் படம் பிடிக்கப்படுகின்றனர். அது போல் குளியலறையிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

—————————————————————————————————————————————————————-

மாண்புமிகு குர்ஆனை மனனம் செய்வோம்

புனித மிக்க ரமளான் மாதம் விரைவில் பூக்கவிருக்கின்றது. புண்ணியம் பொங்கவிருக்கின்றது. அல்குர்ஆன் வருகையளித்ததை முன்னிட்டே இம்மாதத்தின் கண்ணியமும் கவுரமும் அமைகின்றது. அம்மாதம் முழுமைக்கும் அல்குர்ஆனே ஆட்சி செய்கின்றது.

உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் உன்னதக் குர்ஆன் இரவுத் தொழுகைகளில் அதிகம் ஓதப்படுகின்றது. மக்கா, மதீனாவில் அதன் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் சொல்லத் தேவையே இல்லை.

அதில் மிகக் குறிப்பாக மக்கா, இந்த ரமளான் மாதத்தில் அகமும் புறமும் ஒளிமயமாகக் காட்சியளிக்கின்றது. அல்குர்ஆன் ஒலிமயமாக உலக மக்களை உள்ளிழுத்து ஒருங்கிணைக்கின்றது.

உலகத்தின் ஒய்யார அரங்குகளில் மக்கள் ஒன்று கூடுகின்றார்கள் என்றால், ஒன்று கருவி வாத்தியங்கள் அலறுகின்ற மெல்லிசை, துள்ளிசைக் கச்சேரிகள், அல்லது கவர்ச்சிக் கன்னியர் ஆடுகின்ற நடனங்கள் இருக்கும். இவை தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.

ஆனால் இவை எதுவுமே இல்லாமல் ரமளான் மாதத்தில், ஹஜ் காலத்தையொத்த அல்லது அதை விஞ்சுகின்ற அளவிற்கு மக்கள் கூடவும் குழுமவும் காரணம் என்ன?

ஒலி அலைகளால் பரவி உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற குர்ஆனின் ஓசை நயம் தான். இசைக்கு இல்லாத குர்ஆனின் ஈர்ப்பு விசை தான். இந்த ஒலி நயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமாகக் குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) “அபூ மூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுஎன என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புகாரி 5048

இசையுடன் பின்னாத ராகங்கள், மக்களிடம் ஒரு சில மணி நேரங்கள் தாண்டினால் எடுபடுவதில்லை. மக்கள் அதை ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை. அந்தப் பாடல்கள், கவிதைகள் மக்களிடமிருந்து விரைவில் எடுபட்டு விடுகின்றன.

இசையுடன் கூடிய பாடல்களும் ஒரு சில மணி நேரங்களைத் தாண்டி சில காலங்கள் நீடிக்கின்றன. பின்னால் மறைந்து விடுகின்றன.

ஆனால் இந்தத் திருக்குர்ஆன், இசையை எதிர்த்து, எட்டி எகிறித் தள்ளிவிட்டு மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்து, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக, பாரம்பரியமாக, பன்னாட்டு மொழியினரிடம் ஆட்சி செய்கின்றது என்றால் இது படைத்தவனின் அற்புதத்தைத் தவிர்த்து வேறெதுவாகவும் இருக்க முடியாது.

பள்ளிவாசல்களில் தொழும் போதும், தொழாத போதும் அழகிய குரல் வளத்தில் ஓதப்படும் குர்ஆன், உள்ளத்தை ஒரு விதமாக வயப்படுத்தி விடுகின்றது.

குர்ஆனின் இந்த ஈர்ப்பு சக்தி அன்றிலிருந்து இன்று வரை அப்படியே தொடர்கின்றது.

ரசிக்கும் ரசூல் (ஸல்)

குர்ஆன் கொடுக்கப்பட்ட இறைத் தூதர் (ஸல்) அவர்கள், குரல் வளமிக்கவர்கள் அதை ஓதும் போது கேட்டு ரசித்திருக்கின்றார்கள். அவ்வாறு ஓதுவோரின் இல்லங்களை அடையாம் கண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்காவிட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும், அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்…. அல்லது எதிரிகளைச் சந்தித்தால்…. அவர்களைப் பார்த்து, “என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றனர்என்று (துணிவோடு) கூறுவார்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புகாரி 4232

குர்ஆனை அடுத்தவர் ஓதுவதைக் கேட்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “குர்ஆனை எனக்கு ஓதிக் காட்டுங்கள்!என்று சொன்னார்கள். நான் “தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அவர்கள் “பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5049

அண்ணலாரின் அமுதக் குரல்

அடுத்தவர் ஓதக் கேட்டு ரசிக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அந்த அருள்மிகு குர்ஆனை ஓதினால் அதன் அருமை எப்படியிருக்கும்?

இதோ அதன் அருமையையும் அழகையும் நபித்தோழர்கள் கூறக் கேட்போம்.

நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) “வத்தீனி வஸ்ஸைத் தூனியை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை விட “அழகிய குரலில்அல்லது “அழகிய ஓதல் முறையில்வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: புகாரி 769

ரசிக்கும் அல்லாஹ்

அல்குர்ஆனை அருளிய அல்லாஹ்வே, அவனது தூதர் (ஸல்) அவர்கள் ஓதும் போது அதை ரசிக்கின்றான். அதாவது ஓதக்கூடிய அவர்களை ரட்சிக்கின்றான். அவர் மீது தன் அருள்மழையைப் பொழிகின்றான்.

நபி (ஸல்) அவர்கள், “நான் இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதனையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5024

அல்குர்ஆனை ஓதக்கூடியவர் அல்லாஹ்வின் பார்வைக்கு உரித்தானவராகின்றார். அல்குர்ஆனை அழகிய குரலில் ஓதுவோர் அல்லாஹ்வின் அருளுக்குப் பாத்தியமாகின்றார்.

மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்ற குர்ஆனை மனனம் செய்யும் மகத்தான பணிக்கு இன்று யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு யாரும் முன்வருவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் இன்றைக்குப் பெரிய பாதிப்பில் இருக்கின்றார்கள். அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய இரவுத் தொழுகைப் புரட்சியில், அதிலும் குறிப்பாக ரமளானின் பிந்திய பத்துகளில் நின்று, நீண்ட நேரம் குர்ஆனைக் கேட்கும் ஆர்வத்திலும் ஆசையிலும் மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அவ்வாறு ஓதுவதற்கு ஹாபிழ்கள் தான் இல்லை.

தொழுகையில் அல்குர்ஆனைப் பார்த்தும் ஓதலாம். சவூதியில் தொழுகையில் அவ்வாறு பார்த்து ஓதுகின்றனர். ஆனால் அவ்வாறு பார்த்து ஓதும் போது அவர்கள் இடது கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு வலது கையில் குர்ஆனைப் பிடித்துக் கொள்கின்றனர். இது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தொழுகை முறைக்கு மாற்றமானதாகும்.

அப்படிப் பார்த்து ஓத வேண்டுமென்றால் தொழுவிப்பவர், குர்ஆனின் தாளைப் புரட்டுவதற்கு ஏதுவாக ஏதாவது ஒரு ஸ்டான்ட் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதில் வைத்துப் புரட்டிக் கொண்டால் நெஞ்சிலிருந்து கையை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இதுபோன்ற நெருக்கடியையெல்லாம் விட்டுத் தப்பிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, குர்ஆனை மனனம் செய்வது தான்.

மனித உள்ளத்தில் புனித வேதம்

அல்லாஹ் திருக்குர்ஆனைப் பற்றிச் சொல்கின்ற போது, இந்தக் குர்ஆன் ஞானம் வழங்கப்பட்ட மனித உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கின்றான்.

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 29:49

குர்ஆனை வழி வழியாகப் பாதுகாத்து வரும் சங்கிலித் தொடரின் ஒரு கண்ணி வலையாக நாம் அமைவது ஒரு பெரும் பாக்கியமல்லவா? நாம் ஏன் அந்தப் பாக்கியசாலியாக ஆகக் கூடாது?

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த காரிகளுக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளார்கள். தொழுவிப்பதற்கு முதல் தகுதியே குர்ஆனை மனனம் செய்வது தான்.

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்என்று சொன்னார்கள்எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறிவிப்பவர்: அம்ர் பின் சலிமா (ரலி)

நூல்: புகாரி 4302

முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள் – குபா பகுதியில் உள்ள – அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமையிலிருந்த சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 692

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1077

மக்களுக்கு வழி நடத்துவதில் மட்டும் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மண்ணில் அடக்கம் செய்வதற்கும் கூட அவர்களுக்குத் தான் நபி (ஸல்) அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களைப் போன்றே உமர் (ரலி) அவர்களும் காரிகளுக்கு முன்னுரிமை அளிப்பவர்களாக இருந்தனர்.

உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா‘ (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4642

குர்ஆனை மனனம் செய்தவருக்கு எவ்வளவு மாண்புகளும் மரியாதையும் காத்திருக்கின்றன என்பதற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

பொறாமை கொள்ளும் புனித வணக்கம்

பொறாமை என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய குணம். ஆனால் அதே சமயம் இரண்டு விஷயங்களில் பொறாமை கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதி வருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவருடைய அண்டை வீட்டுக்காரர், “இன்னாருக்குக் வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!என்று கூறுகின்றார்.

  1. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நேர் வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒரு மனிதர், “இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனேஎன்று கூறுகின்றார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5026

இரவு வேளைகளில் அழகிய குர்ஆனை ஓதி, நின்று தொழுகின்ற பணியும் இதில் உள்ளடங்குகின்றது. இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த மனனப் பணிக்கு மக்கள் முன்வர வேண்டும்.

இன்று போலி சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள், இந்தப் புனிதப் பணியை வருவாய்க்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மார்க்கத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்தத் துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கூலி வாங்காமல் குர்ஆனை ஓதும் ஒரு தலைமுறையை உருவாக்க வேண்டும்.

அந்தப் பொற்காலம், புனிதக் காலம் உருவாக வேண்டுமானால் தவ்ஹீத் ஜமாஅத் கொள்கைச் சகோதரர்கள் தங்கள் பிள்ளைச் செல்வங்களை இந்தத் தூய பணிக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

அன்று மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன்னால் ஒரு குழுவினர் குர்ஆனைக் கற்பிக்கும் ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் பரிமாணத்தை புகாரியில் பார்க்கலாம்.

நபித் தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு “ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் “முஸ்அப் பின் உமைர்’ (ரலி) அவர்களும், “இப்னு உம்மி மக்தூம்’ (ரலி) அவர்களும்தாம்.

அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தரலானார்கள். பிறகு, அம்மார் (ரலி), பிலால் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வந்தார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள(து வருகைய)ôல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், “இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்என்று கூறினர். நான், “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலாஎனும் (87ஆவது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 4941

நம்முடைய மக்கள் செல்வங்கள் இதுபோன்ற சமுதாயமாக உருவாக ஆரம்பித்து விட்டால் ரமளானில் மட்டுமல்ல, அனைத்து மாதங்களிலும் அழகிய குரலில் குர்ஆனைக் கேட்கும் பாக்கியத்தைப் பெறலாம்.

தாயீக்கள், ஹாபிழ்கள் இன்றி தவிக்கும் கிளைகள், தங்கள் பகுதியில் உள்ள பிள்ளைகளை இதற்காக அனுப்பி வைக்க வேண்டும். குர்ஆனை மனனம் செய்வதற்கென்று மாணவர்கள் வருவார்களானால் அதற்கென தனிப் பாடப்பிரிவைத் துவங்குவதற்கு இஸ்லாமியக் கல்லூரி மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றது.

தொழுகையும் அழுகையும்

இன்னும் ஒரு சில நாட்களில் அருள்மிகு ரமளான் மாதத்தை நாம் அடையவிருக்கின்றோம். அந்த மாதத்தை அடைகின்ற நாம், குர்ஆனுடன் அதிகமதிகம் தொடர்பு வைத்துக் கொள்வோம். அந்தத் தொடர்பை பலப்படுத்திக் கொள்வோம்.

குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முயல்வோமாக! குர்ஆன் வசனங்களை ஓதத் தெரிந்தவர் அதன் வசனங்களை மனனம் செய்து கொள்வோமாக! குர்ஆனை மனனம் செய்தவர் அதைப் பொருளுடன் ஓதக் கற்றுக் கொள்வோமாக!

தான் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

அல்குர்ஆன் 39:23

குர்ஆன் ஓதும் போது, அல்லது ஓதக் கேட்கும் போது மேனி சிலிர்க்க வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான். இந்தத் தாக்கத்தை நாம் பெற்றிருக்கிறோமா?

அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தை அதிகமாக்குகிறது.

அல்குர்ஆன் 17:109

குர்ஆனைக் கேட்கும் போது இத்தகைய பாதிப்பையும் நாம் உணர வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அல்குர்ஆன் 8:2

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.

அல்குர்ஆன் 22:35

குர்ஆனை ஓதும் போது அல்லாஹ்வின் அச்சத்தால் நமது உள்ளம் நடுங்க வேண்டும். ஈமான் அதிகரிக்க வேண்டும்; அந்த ஈமான் அதிகரித்ததற்கு அடையாளம் நமது கண்கள் நனைவதாகும்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!என அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 5:83

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்என்று சொன்னார்கள். நான், “உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன்.  “(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும் (4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் “நிறுத்துங்கள்என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 4582

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணீர் வடிப்பதை நாம் இங்கு பார்க்கிறோம். நபியவர்களைப் போன்று தான் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்குர்ஆன் வசனங்களில் ஈடுபாடு கொண்டு கண்ணீர் வடிப்பார்கள். இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்களின் மரண வேளையின் போது, அபூபக்ர் (ரலி)யைத் தொழுவிக்கும்படி ஏவுகையில் ஆயிஷா (ரலி) மறுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது. “மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்என்று கூறினார்கள். அதற்கு, “அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால் அவர்கள் அழுவதன் காரணத்தால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்.

மேலும் “அபூபக்ர் (ரலி) உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது.  எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள்என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹஃப்ஸா (ரலி) இடம் கூறினேன்.

அவர்களிடம் கூறிய போது. “நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்கள் கூட்டத்தைப் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா (ரலி) என்னிடம் “உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 716

அழுதவருக்கு அர்ஷின் நிழல்

இறைவனை நினைத்து, தனிமையில் அழுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பரிசாக அளிக்கின்றான்.

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான்.

  1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர். 5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும், அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6806

எனவே இப்படிப்பட்ட தன்மையைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, குர்ஆன் ஓதும் போது நமக்கு அழுகை வர வேண்டும் என்றால் அதன் அர்த்தம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

குர்ஆனைப் பொருள் தெரிந்து ஓத ஆரம்பித்தால் அதுவே நம்முடைய உள்ளத்தை உருகவும், கண்களில் கண்ணீரைப் பெருகவும் செய்து விடும். எனவே குர்ஆன் விரும்புகின்ற இந்த அழகிய பண்புகளைப் பெறுகின்ற நல்லடியார்களாக நாமும் ஆக முயற்சிப்போமாக!