ஏகத்துவம் – ஜனவரி 2020

குடியுரிமை திருத்தச் சட்டம்

முஸ்லிம்களை நாடுகடத்தும் மோடி அரசின் சதித்திட்டம்

எங்கள் ஊரிலிருந்து உங்களை வெளியேற்றுவோம்; அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்” என இறைமறுப்பாளர்கள் தமது தூதர்களிடம் கூறினர். “அநியாயக்காரர்களை அழிப்போம். அவர்களுக்குப் பின் அவ்வூரில் உங்களை வசிக்கச் செய்வோம். என் முன்னால் நிற்பதை அஞ்சுவோருக்கும், என் எச்சரிக்கைக்கு அஞ்சுவோருக்கும் இது உரியது” என்று தூதர்களுக்கு அவர்களது இறைவன் வஹீ அறிவித்தான்.

அல்குர்ஆன் 14:13,14

லூத் நபியை நோக்கி அவரது சமுதாயம் இதைத்  தான் சொன்னது.

லூத்தின் குடும்பத்தாரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாக உள்ளனர்” என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

அல்குர்ஆன் 27:56

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதைப் பின்வரும் திருக்குர்ஆன்  வசனம் தெரிவிக்கின்றது.

எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அல்குர்ஆன் 22:40

மக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் செய்த ஒரே ஒரு பாவம் ஏக இறைவனான அல்லாஹ்வை நம்பியது தான். இன்று இந்தியாவில் முஸ்லிம்கள்  சந்திக்கின்ற சோதனையும் இதே மாதிரியாகத் தான் உள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் CAB (Citizenship Amendment Bill)  குடியுரிமை திருத்த மசோதா, ஆளும் பாசிக பாஜக அரசாங்கத்தால் கடந்த 09.12.2019 திங்கட்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையாக இருப்பதால் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 311:80 என்ற வாக்கு விகிதத்தில் சட்டம் நிறைவேறியது.

அதைத் தொடர்ந்து கடந்த 11.12.2019 புதன்கிழமை அன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு 6 மணி நேர விவாதத்திற்குப் பிறகு 125:105 விகிதத்தில் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜக பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் அதிமுக என்ற அடிமைக் கட்சியின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு இரு அவைகளிலும் இந்தச் சட்டம் நிறைவேறிய பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அது சட்டமாகி விட்டது. அதனால் அது இனி மசோதா என்று அழைக்கப்படாது. Citizenship Amendment Act (CAA) குடியுரிமை திருத்தச் சட்டம் என்றே அழைக்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன?

1982ஆம் ஆண்டு பர்மா அரசாங்கம் குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தது. யாரேனும் பர்மாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அவர்கள் 1824ஆம் ஆண்டிலிருந்து பர்மாவில் குடியிருக்க வேண்டும் என்ற விதியை அதில் கொண்டு வந்தது. இதுதான் 2017-ல் பல இலட்சக்கணக்கான ரோஹிங்கிய முஸ்லிம்களை, பர்மாவை விட்டு விரட்டியடிக்கக் காரணமானது.

ஜெர்மனியில் ஹிட்லர் 1935ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தைக் கொண்டு வந்தார். லட்சக்கணக்கான யூதர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கும், அவர்களைக் கொன்றொழிப்பதற்கும் அதுதான் காரணமாக அமைந்தது.

வரலாற்றில் இன அழிப்புக்கான ஒரு வலிமையான ஆயுதம் தான் குடியுரிமை சட்டம். அதைத்தான் இன்று சங்கப்பரிவாரங்கள் கையில் எடுத்திருக்கின்றனர் என்பதைக் கவனத்தில் கொண்டு, பின்வரும் செய்தியை கவனமாகப் படியுங்கள்!

என்ன திருத்தம்?

1955ஆம் ஆண்டுக்கான இந்திய குடியுரிமைச் சட்டம் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் குடியுரிமை கோரும் வெளிநாட்டினர் இந்தியாவில் 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.

அவர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் குடியேறியிருக்க வேண்டும்.

இதில்தான் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகின்றது.

இந்தியாவில் குடியேறிய வெளிநாட்டினர் இனி 11 வருடங்கள் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் 2014 டிசம்பர் 31க்கு முன்பு, அதாவது 5 ஆண்டுகள் தங்கியிருந்தால் போதும். அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாக இருந்தாலும் இனி சட்டப்பூர்வமான குடியேறிகள் ஆகிவிடுவார்கள். அதனால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால் இந்தத் திருத்தத்தின் கீழ் குடியுரிமை பெறத் தகுதியுடையோர், 1. இந்துக்கள், 2. கிறிஸ்தவர்கள், 3. பௌத்தர்கள், 4. பார்சிகள், 5. சீக்கியர்கள்,  6. ஜைனர்கள் ஆகிய 6 மதங்களைச் சார்ந்தவர்கள் மட்டும் தான். முஸ்லிம்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாது என்பது தான் அந்தச் சட்டத்திருத்தம்.

இந்திய அரசியல் சாசனத்தின் 14வது விதி, சமத்துவத்துக்கான உரிமையை அளிக்கின்றது. இந்தச் சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும்.

அதேபோன்று, அரசியல் சாசனத்தின் 15வது விதியும் சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பு இவற்றின் அடிப்படையில் யாருக்குமிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகின்றது.

இவையெல்லாம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை விதிகள். இவற்றுக்கு மாற்றமாக எந்தச் சட்டத்தையும் யாரும் நிறைவேற்ற முடியாது. அவர்கள் நாடாளுமன்றத்தில் மிருக பலம் கொண்டிருந்தாலும் சரி! அசுர பலம் கொண்டிருந்தாலும் சரி!

ஆனால் அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த அடிப்படை உரிமைகளுக்கு எதிராகத் தான் பாசிச பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, முஸ்லிம்களைத் தவிர பிற மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடே எரிமலையாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக முஸ்லிமல்லாத பிற மதத்தவர்களும் சேர்ந்து இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கையில், “இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமல்ல! ஓரிடத்தில் கூட இது முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை” என்று குறிப்பிடுகின்றார். இங்குள்ள அடிமை ஓப்பி, ஈப்பிகளும் அதையே வாந்தியெடுக்கின்றனர்.

மத ரீதியாக இந்தியர்களைப் பிளவு படுத்துகின்றது என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்தச் சட்டத்தை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க வேண்டும். ஆனாலும் CAA முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று அமீத்ஷா சொல்வதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். ஆனால் அமீத்ஷா இத்துடன் நின்றால் பரவாயில்லை. அவர் NRC என்ற சட்டத்தையும் சேர்த்து அமல்படுத்துவோம் என்று அன்றும் இன்றும் அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்கின்றார். இதில்தான் முஸ்லிம்களுக்கு ஆபத்து ஒளிந்திருக்கின்றது. அதைத் தெரிந்து கொள்வதற்கு இங்கு நாம் NRC அல்லது NRIC என்ற சட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் இருக்கிறோம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்றால் என்ன?

National Register of Citizens அல்லது National Register of Indian Citizens தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது தான் NRC என்று அழைக்கப்படுகின்றது.

CAA என்பதற்கும் NRC என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

என்ன வித்தியாசம்?

CAA எனும்  குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றிய விளக்கத்தை மேலே நாம் பார்த்தோம்.

CAA என்றால் சுருக்கமாக இந்தியக் குடிமக்களாக ஒரு தரப்பு மக்களைச் சேர்த்தல் என்றும், NRC என்றால் இந்தியக் குடிமகன் என்ற தகுதியிலிருந்து ஒரு தரப்பு மக்களை நீக்குதல் என்றும் நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

இப்போது நாடு முழுமைக்கும் அமித்ஷா குறிப்பிட்டது போன்று NRC அமலுக்கு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த NRC திட்டப்படி இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், தான் இந்தியர் தான் என்று அரசிடம் நிரூபிக்க வேண்டும். அதற்கு ஆதார் கொடுத்தால் மட்டும் போதாது. ஏனென்றால் ஆதார் அட்டையிலேயே, “இது அடையாளத்திற்கான சான்று மட்டுமே! குடியுரிமைக்கான சான்று அல்ல!” என்று அச்சிட்டுத்தான் தருகிறார்கள். எனவே ஆதாரை வைத்து எதுவும் செய்ய முடியாது.

நீங்கள் இந்த ஊரில் தான் பிறந்தீர்கள், இன்ன நபருக்குத்தான் பிறந்தீர்கள், உங்கள் தந்தையும் இங்கே தான் பிறந்தார் என்று நிரூபிக்க வேண்டும். எல்லா அலுவலகத்திலும் லஞ்சம் கொடுத்து ஆவணங்களைத் திரட்ட வேண்டும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்வோர் வேலையை விட்டு விட்டுத் தங்கள் ஊருக்கு வந்து, இவற்றைச் செய்ய வேண்டும். அப்படியும் திருப்திகரமாக ஆவணங்களைக் காட்ட இயலாவிட்டால், அல்லது எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் சங் பரிவாரச் சிந்தனை கொண்ட அரசு அதிகாரிகள் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தால், இந்த நாட்டின் பூர்வக் குடிமக்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியரல்லர் என்று அறிவிக்கப்படுவார்கள்.

அப்படிக் காட்ட இயலாமல் போவதில் இந்துக்களும் இருப்பார்கள் அல்லவா? அப்படியானால் இது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பலாம்.

இங்குதான் CAAயின் தேவை வருகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியராக இல்லாவிட்டாலும் CAA சட்டத்தின்படி குடியுரிமை பெறுவார். அதாவது, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகிய ஆறு பிரிவினரும் CAAவுக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் தமது வாழ்நாளை அப்படியே தொடரலாம்.

ஆனால் இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த ஒரு முஸ்லிமுக்கு CAAயின் பாதுகாப்பு இல்லாததால் வந்தேறி என்ற முத்திரை குத்தப்படுவார். இந்த இரண்டு சட்டங்களையும் வைத்து இந்தியாவில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை சுலபமாக வந்தேறிகள் என்று அறிவித்து விடலாம். அவர்களது குடியுரிமையைப் பறித்து விடலாம்.  ரேஷன் கார்டு, வாக்குரிமை போன்றவை பறிக்கப்பட்டு Detention camp என்ற தடுப்பு முகாம்களில் அவர்களை அடைத்து விடலாம்.

NRC அமலுக்கு வந்ததும் நாடு முழுவதிலும் சரியாக ஆவணங்கள் இல்லாத முஸ்லிம்களும், அதுபோல் மேலே குறிப்பிட்ட ஆறு மதத்தினரும் தங்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பார்கள். இப்போது அரசாங்கத்திற்கு முன்னுள்ள வேலை மிகவும் எளிது. CAA அடிப்படையில் குடியுரிமைக்குத் தகுதியான ஆறு மதத்தவர்களை மட்டும் சேர்த்து விட்டு, NRC அடிப்படையில் முஸ்லிம்களைக் கழித்து விடுவார்கள். இதன் பின்னர் முஸ்லிம்கள் கைதிகளாகவோ அல்லது அகதிகளாகவோ இருக்க வேண்டும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

வெளியேறு! அல்லது சிறையில் இரு!’ என்பது தான் முஸ்லிம்களை நோக்கி இன்றைய இந்தியாவில் இந்துத்துவாவினர் வைக்கின்ற கோஷமாகும். இது முஸ்லிம்களுக்குப் புதிதல்ல! ஏற்கனவே இறைத்தூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வைக்கப்பட்ட கோஷமாகும்.  இவர்கள் இந்தப் பூமி தங்களுக்கென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் தனது திருமறையில், இந்தப் பூமி தனக்கே சொந்தம் என்று சொல்கின்றான்.

ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் “பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்”என்று எழுதியிருந்தோம்.

அல்குர்ஆன் 21:105

மூஸா நபி அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவக் கொள்கையை ஏற்ற இஸ்ரவேல் மக்களை ஃபிர்அவ்ன் அன்றாடம் வதைத்துக் கொண்டிருந்தான்.   அப்போது அவர்கள் மூஸா நபியிடம் முறையிட்டார்கள்.

மூஸாவும் அவரது சமூகத்தாரும் இந்தப் பூமியில் குழப்பம் செய்து, உன்னையும் உன் கடவுள்களையும் புறக்கணிப்பதற்காக அவர்களை நீ விட்டுவைக்கப் போகிறாயா?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயத் தலைவர்கள் கேட்டனர். “அவர்களது ஆண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, பெண்களை உயிருடன் வாழ விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்!” என்று அவன் கூறினான்.

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையை மேற்கொள்ளுங்கள்! இப்பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதைச் சொந்தமாக்குகிறான். இறையச்சமுடையோருக்கு நல்ல முடிவு உள்ளது” என்று மூஸா தம் சமுதாயத்திடம் கூறினார்.

நீர் எங்களிடம் வருவதற்கு முன்பும், எங்களிடம் வந்த பிறகும் நாங்கள் துன்புறுத்தப்படுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து, இப்பூமிக்கு உங்களை வழித்தோன்றல்களாக்கி, நீங்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள் என்று கவனிப்பான்” என அவர் கூறினார்.

அல்குர்ஆன்  7:127-129

இந்த வசனங்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயம் சந்தித்த சோதனைகளையும் அவர்களுக்கு மூஸா (அலை) அளித்த ஆறுதல், அறிவுரை, அழகான வாக்குறுதியையும்  விளக்குகின்றன.   மூஸா (அலை) அம்மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறும் காலம் நெருங்கியது.  ஃபிர்அவ்ன் நாட்டை விட்டு அவர்களை துரத்திவிடத் திட்டமிட்டான். ஆனால் அது நடக்கவில்லை. அவனே அழிக்கப்பட்டான். இதைத் திருக்குர்ஆன் விவரிக்கின்றது.

வானங்கள் மற்றும் பூமியின் இறைவனே இவற்றை ஆதாரங்களாக அருளியுள்ளான் என்பதை நீ நன்கறிவாய்! ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.  அவர்களை அவன் அப்பூமியிலிருந்து வெளியேற்ற நினைத்தான். ஆனால் அவனையும் அவனுடன் இருந்த அனைவரையும் நாம் மூழ்கடித்தோம். இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் “நீங்கள் இப்பூமியில் குடியிருங்கள்! மறுமையின் வாக்குறுதி நிறைவேறும் போது, உங்களை ஒட்டு மொத்தமாகக் கொண்டு வருவோம்” என்று கூறினோம்.

அல்குர்ஆன் 17:102,103,104

தோட்டங்கள், நீரூற்றுக்கள், பொக்கிஷங்கள், மதிப்புமிக்கத் தங்குமிடங்கள் ஆகியவற்றை விட்டு அவர்களை வெளியேற்றினோம்.  இவ்வாறே இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.

அல்குர்ஆன் 26:57-59

பலவீனர்களாக்கப்பட்ட அந்தச் சமுதாயத்தை, நாம் அருள் வளம் புரிந்த அப்பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும் மேற்குப் பகுதிகளுக்கும் வாரிகளாக்கினோம். இஸ்ராயீலின் சந்ததிகள் பொறுமையாக இருந்ததால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்களுக்கு முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயமும் உருவாக்கிக் கொண்டிருந்தவற்றையும், அவர்கள் உயரமாகக் கட்டிக் கொண்டிருந்தவற்றையும் அடியோடு அழித்தோம்.

அல்குர்ஆன் 7:137

மூஸா (அலை) அவர்களையும் அவரது சமுதாயத்தையும் நாட்டை விட்டுத் துரத்த அவன் முயற்சிக்கும் போதே அவனும் அவனது படையினரும் அழிவைச் சந்தித்து விட்டனர்.

ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்களும் நாட்டை விட்டே துரத்தியடிக்கப்பட்டனர். அவர்கள் சொந்த நாடான மக்காவை விட்டும் வெளியேற்றப்பட்டார்கள்.

எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

அல்குர்ஆன் 22:40

உம்மை இவ்வூரிலிருந்து காலி செய்து, இங்கிருந்து வெளியேற்ற அவர்கள் முயன்றனர். அப்படிச் செய்திருந்தாலும் உமக்குப் பின்னர் அவர்கள் குறைந்த காலமே (அங்கு) வாழ்ந்திருப்பார்கள்.

அல்குர்ஆன் 17:76

முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களது  தோழர்களும் மதீனாவின் அரவணைப்பையும் ஆதரவையும் பெற்று, இறுதியில் மக்காவை வெற்றி கொண்டார்கள்.

உமது பாவத்தில் முந்தியதையும், பிந்தியதையும் உமக்கு அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தன் அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்தவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை அளித்தான்.)

அல்குர்ஆன் 48:2

மக்காவின் மையப்பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 48:24

இது தெரிவிப்பது என்ன?  இறுதி வெற்றி ஏகத்துவத்திற்குத் தான். இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டர்களிடமே இப்பூமி திரும்ப அளிக்கப்படுகின்றது. இன்று அகன்ற பாரதம் என்ற பெயரில் முஸ்லிம்களை அடித்துத் துன்புறுத்தவும், நாட்டை விட்டு விரட்டவும், சிறைக் கொட்டடிகளில் அடைக்கவும் காவிக் கொடுங்கோலர்கள் திட்டமிட்டு, அதை படிப்படியாகச் செயல்படுத்தியும் வருகின்றார்கள். அவர்களுக்கு இந்தத் திருக்குர்ஆனின் வாக்குறுதியையும் எச்சரிக்கையையும் சமர்ப்பித்துக் கொள்கின்றோம்.

அதே சமயம், முஸ்லிம்கள் ஏகத்துவக் கொள்கை வாதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் தர்ஹா வாதிகளாகவும் தரீக்கா வாதிகளாகவும் இருந்தால் இது சாத்தியமில்லை. ஏகத்துவக் கொள்கையில் இருந்து அதிலேயே இறந்து விட்டால், இம்மை வாழ்வு தொலைந்தாலும் மறுமை வாழ்வு நிச்சயம் அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது.

இதன் அடிப்பபடையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்று, தங்களது இம்மை, மறுமை வாழ்வை சிறக்கச் செய்வார்களாக!

முஸ்லிம்களுக்குரிய குடியுரிமையை இந்தக் கொடுமையாளர்கள் பறித்தால், எல்லாம் வல்ல இறைவனால் அது அவர்களிடம் திரும்ப அளிக்கப்படும் என்ற இறை வாக்குறுதியை மீண்டும் பதிவு செய்து கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————————————————————

குடியுரிமை சட்டத்தின் பாகுபாடும் பாரபட்சமும்

ஒரு நாட்டின் சட்டம் என்றால் அது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதைத் தான் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று கூறுகிறோம். அதாவது, குடிமக்கள் யாருக்கும் பாகுபாடு, பாரபட்சம் காட்டக்கூடாது.  இது பொதுவான விதியாகும்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அது மதச் சார்பின்மையைத் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடாகும். இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு மத்தியில் மதம், மொழி, இனம், ஆண், பெண் என்ற அடிப்படையில் எந்த ஒரு பாகுபாடும் பாரபட்சமும் காட்டக்கூடாது என்று இந்திய அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகின்றது.

‘‘State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India” – ‘இந்தியப் பிரதேசத்தில்  உள்ள எவருக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை அல்லது சட்டப்பாதுகாப்பை அரசாங்கம் மறுக்கக் கூடாது’ என அரசியல் சட்டத்தின் 14வது பிரிவு வலியுறுத்திக் கூறுகின்றது.

அரசியல் சட்டம் கூறுகின்ற இந்த வரையறைக்கு உட்பட்டு  குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்திருக்கின்றதா என்று பார்ப்பது நமது கடமையாகும்.

பொதுவாகவே சட்டத்தின் முன் காட்டப்படுகின்ற பாகுபாட்டை, பாரபட்சத்தை விளக்குவதற்குப் பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.

கீழ்மட்ட நிலையில் பணிபுரிகின்ற ஓர் அதிகாரி லஞ்சம் வாங்கி விட்டால் அவன் மீது பாய்ந்து விழுந்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம், நாட்டின் முதலமைச்சர் அல்லது பிரதம அமைச்சர் லஞ்சம் வாங்கி விட்டால் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமத்துவம் இங்கு  பேணப்படவில்லை என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்தச் சட்டமே பாரபட்சங்கள், பாகுபாடுகளின் ஒட்டுமொத்த தொகுப்பாகத் தான் அமைந்திருக்கின்றது.

இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வருவோம்.

நிலவியல் அடிப்படையிலான பாரபட்சம்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லிமல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

இந்த மூன்று நாடுகளை மட்டும் சேர்த்து விட்டு, இதர அண்டை நாடுகளைச் சேர்க்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. நாடு பிரிவினை அடைவதற்கு முன்னுள்ள இந்தியாவை அளவுகோலாகக் கொண்டுள்ளார்கள் என்றும் காரணம் கூற முடியாது. ஏனெனில், ஆப்கானிஸ்தான் எப்போதும் பிரிட்டிஷ் இந்தியாவின் அங்கமாக இருந்ததே இல்லை.

இந்தியாவின் எல்லையில் இல்லாததால், நிலவியல் ரீதியாக அண்டை நாடென ஆப்கானிஸ்தானைக் கோருவதற்கும் வாய்ப்பு கிடையாது.

முக்கியமாக, இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளான நேபாளம், பூடான், மியான்மர் போன்ற தேசங்கள் ஏன் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டன என்பதற்குரிய சரியான காரணம் கூறப்படவில்லை. இந்த அடிப்படையில் இது ஒரு பாரபட்சமாகும்

மத அடிப்படையிலான பாரபட்சம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தில்  இதற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்களை குறிப்பிடும் போது, ‘இந்த மூன்று நாடுகளும் தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று  அறிவித்திருக்கின்றன.  அதனால், அதனால் மதரீதியிலான ஆட்சியில் பாதிக்கப்பட்டு இந்தியா வருகின்ற  இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும்’ என்று இந்த சட்டம் சொல்கின்றது.  ஆனால், இந்தக் காரணமும் சரியானதல்ல.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் குறிப்பிட்டது போன்று இந்தியாவின் அண்டை நாடான பூடானின் அதிகாரப்பூர்வ மதமாக வஜ்ராயன பௌத்தம் உள்ளது. அந்நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் வீட்டுக்குள் தனிப்பட்ட அளவிலேயே பிரார்த்தனை செய்ய முடியும். எல்லைப் பகுதிகளில் வசிக்கின்ற பல பூட்டானிய கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் வழிபடுவதற்காக இந்தியாவுக்குப் பயணிக்கும் நிலை உள்ளது. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தில்  அவர்கள் இடம் பெறவில்லை.

அண்டை நாடுகளில் மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதைத் தடுப்பதுதான் நோக்கம் என்றால், பெரும்பான்மை பௌத்தர்களால் தமிழ் இந்துக்கள் மோசமான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களும் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளனர்.

ஆப்ரஹாமின் வழிவந்த மார்க்கங்களான இஸ்லாம், கிறிஸ்துவம், யூதம் ஆகிய  மார்க்கங்களில் கிறிஸ்துவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு  மற்ற இரண்டு மார்க்கங்களை விடுவது ஏன்? என்று ப. சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள். அவர்கள் நூறு சதவிகிதம் இதற்குத் தகுதியானவர்கள். அவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்காமல் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் தான். இந்த அடிப்படையிலும் இது பாரபட்சம் காட்டக்கூடிய சட்டமாகும்.

சட்ட விரோதத்திற்கு சட்ட அங்கீகாரம்

இந்தியாவுக்குள் சட்ட விரோதமாகக் குடியேறிய ஒருவர் டிசம்பர் 31, 2014க்கு முன்பு வந்திருந்தால், அதாவது 5 ஆண்டுகள்  இந்தியாவில் தங்கிருந்தால் அவருக்குக் குடியுரிமை வழங்கப்படும். அவர் முஸ்லிமாக இருக்கக் கூடாது. இது ஒரு பாரபட்சம் மட்டுமின்றி மிகப்பெரிய அநியாயமாகும்.

ஒரு நாட்டின் அரசாங்கத்தால் அல்லது அங்குள்ள பெரும்பான்மையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாகி நாட்டை விட்டு, சொத்து சுகங்களை விட்டு இந்தியாவில் தஞ்சம் கேட்டு வருகின்ற அகதிகளுக்கு இடம் தர மறுக்கும் இந்திய அரசாங்கம், சட்ட விரோதமாகக் குடியேறிவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது அநியாயத்திலும் அநியாயம்!

அதாவது, எவ்வளவு பெரிய கொடுமைக்கு ஆளானாலும் முஸ்லிமாக இருந்தால் அவர்கள் சர்வதேச சட்டத்திற்குட்பட்டு அகதிகளாக வந்தால் கூட அவர்களுக்கு இங்கு இடமில்லை.

ஆனால் முஸ்லிமல்லாதவராக இருந்தால் சட்டவிரோதமாகக் குடியேறினாலும், அவர் போதைப் பொருள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களுக்காக இந்தியாவுக்குள் வந்து அப்படியே  தங்கியவராக இருந்தாலும் அவருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்றால் இதை விட அநியாயம் வேறென்ன இருக்க முடியும்?

ஒரு நாட்டில் இயற்றப்படுகின்ற சட்டம் குடிமக்களுக்கு நன்மைகளை உள்ளடக்கி, பாதகமான அம்சங்களை தடுக்கக்கூடியதாக அமைந்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு போக்குவரத்துச் சட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

பச்சை விளக்கு எரியும் போது வாகனம்  செல்லவேண்டும். சிவப்பு விளக்கு எரியும் போது வாகனம் செல்லக் கூடாது. இது சட்டம். இதனால் கிடைக்கும்  பயன் என்ன? என்று கேட்டால் பச்சை விளக்கு எரியும் போது சென்றால் வாகனத்தில் இருப்பவர்கள் மற்றும் சாலையில் செல்பவர்களின் உயிர்களுக்கு பாதுக்காப்பு கிடைக்கின்றது. சிவப்பு விளக்கு எரியும் போது சென்றால் வாகனத்தில் இருப்பவர்களின் உயிர்களுக்கும், சாலையில் செல்பவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடும். இது சட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கின்ற நன்மைகள் மற்றும் பாதுகாப்பாகும்.

ஒரு சட்டம் சரியான முறையில் வகுக்கப்பட்டிருக்குமானால் அதை எதிர்த்து வருகின்ற கேள்விக்கணைகள், ஐயங்கள் அத்தனையையும் அழகாக எதிர்கொண்டு அவற்றை விளக்கலாம்.

ஆனால் மோடி கொண்டு வருகின்ற ஒவ்வொரு சட்டமும்  முஸ்லிம்கள் வெறுப்புணர்வு என்பதை மையமாக வைத்தே அதன் வலைகள் பின்னப்படுகின்றன.

உதாரணத்திற்கு முத்தலாக் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அதையொட்டி முஸ்லிம்கள் மட்டுமின்றி பிறமத அறிவுஜீவிகள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் எழுப்புகின்ற அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்காமல் மரண மவுனம் காக்கின்றது.

முத்தலாக் சொன்னால் அது செல்லாது என்று சட்டம் சொல்கின்றது. எப்போது தலாக் செல்லாதோ அப்போது திருமண உறவு தொடர்கின்றது என்பது தான் அதன் அர்த்தம். அதற்குப் பின்னால் கணவரை ஏன் சிறையில் அடைக்க வேண்டும்?

முஸ்லிம் பெண்கள் மீது கொண்டிருக்கின்ற அக்கறை, நலன் காரணமாகத் தான் முத்தலாக் சட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் தலாக் சொன்ன கணவனை சிறையில் அடைத்து விட்டால் மனைவி, பிள்ளைகளுக்கு யார் உணவு கொடுப்பது? மனைவிக்குக் கணவன் தான் வருவாய்க்கான ஆதாரம். ஒரு மாதம் அந்தக் கணவன் முடங்கிப் போனாலே அந்தக் குடும்பம் தெருவுக்கு வந்து விடும்! மூன்று வருடங்கள் அவனை சிறையில் அடைத்தால் அந்தப் பெண் வாழ்நாளை கண்ணியமாகப் கழிப்பதற்கு என்ன செய்வாள்? பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு மோடியோ அவரின் பரிவாரமோ எந்தப் பதிலும் அளிக்கவில்லை. பதில் அளிக்கவும் முடியாது. காரணம் இது முட்டாள்தனமான சட்டம்.

இதுபோன்று தான் குடியுரிமை சட்டமும் முட்டாள்தனமான சட்டமாக அமைந்திருக்கின்றது. இந்தச் சட்டத்தை நோக்கி அறிவு ஜீவிகள் எழுப்புகின்ற கேள்விகள் இதோ:

  1. பொருளாதாரம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்குள் நுழைந்து, மத ரீதியிலான துன்புறுத்தல் என்ற காரணம் காட்டி குடியுரிமை கோருபவரைத் தடுப்பதற்கு சட்டத்தில் என்ன வழிமுறை இருக்கின்றது?
  2. மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய இந்த 3 நாடுகளிலிருந்து வருகின்ற முஸ்லிம்களுக்குக் குடியுரிமை அளிக்க நீங்கள் ஏன் ஏற்க மறுக்கின்றீர்கள்? என்று கேட்டால், ‘இவை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகள். இந்த நாடுகளில் முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்குள்ளாக மாட்டார்கள்’ என்று மோடி அரசாங்கம் பதில் தருகின்றது. இதற்கு, ப. சிதம்பரம் அவர்கள், ‘இந்த நாடுகளில் துன்புறுத்தலுக்குள்ளாகும் அஹ்மதியாக்கள், ஹஸாரா, ஷியாக்களுக்குக் குடியுரிமை அளிக்க மறுப்பதேன்?’ என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றார்.

‘என் போன்ற நாத்திகர்களுக்குக் குடியுரிமை மறுப்பது ஏன்?’ என்று ஹிந்து என். ராம் போன்றவர்களும் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார்கள். அரசாங்கம் வழக்கமான மயான அமைதியைத் தான் பதிலாகத் தருகின்றது.

  1. வங்க தேசத்தில் வங்க மொழி பேசுகின்ற சுமார் 1.70 கோடி இந்துச் சிறுபான்மையினர் இருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேர்களும் மதத் துன்புறுத்தலைக் காரணம் காட்டி இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து வந்தால் அவர்களுக்கு பாஜக அரசு குடியுரிமை கொடுக்குமா? இந்தக் கேள்விக்கும்  மோடி அரசாங்கம் வாய் திறக்காமல்  ஊமையாகவே இருக்கின்றது.

இவை அனைத்தும் குடியுரிமை சட்டம் ஒரு நியாயமான பார்வை அடிப்படையில் அமையவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

  1. அஸ்ஸாமில் ராஜீவ் காந்திக்கும் அஸ்ஸாம் இயக்கங்களுக்கும் இடையே நடந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1971க்குப் பின்னால் குடியேறிவர்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றுவது என்று முடிவானது. இந்தத் தேதியை கட் ஆஃப் தேதியாக நிர்ணயித்ததற்கு அடிப்படைக் காரணம் அப்போது வங்கப் போர் நடந்தது என்பதால் தான்.

ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டவிரோதமாகக் குடியேறிவர்களுக்கு டிசம்பர் 31, 2014 என்ற கட் ஆஃப் தேதியை நிர்ணயித்துள்ளது. இந்தத் தேதியை கட் ஆஃப் தேதியாக அறிவித்ததற்கு என்ன காரணம்? என்றால் கேட்டால் அதற்கு எந்தப் பதிலும் இல்லை. சர்வாதிகாரிகளிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்?

  1. துன்புறுத்தல் என்று வருகின்ற போது, மத ரீதியிலான துன்புறுத்தலை மட்டும் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? அரசியல் ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக புரட்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் நாடு துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்? அதுபோன்று பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படவேண்டும்? என்ற இந்த நியாயமான கேள்விக்கும் அமீத்ஷாவிடம் பதில் இல்லை. பதில் கிடைக்கவும் செய்யாது.

நடுநிலைச் சிந்தனைக் கொண்டவர்கள் இதுபோன்ற நியாயமான கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். இந்த நியாயமான கேள்விகளுக்குப் பதில் இல்லை எனும் போது இந்தச் சட்டம் ஓர் அநியாயமான, அக்கிரமமான சட்டம் என்று உறுதியாகின்றது.

சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள்  மீது கொண்டுள்ள வெறுப்பை குறியீடாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டம் என்பது தெள்ளத் தெளிவாகின்றது. நேர்மையான முறையில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிராகவும் விமர்சனங்கள், கேள்விக்கணைகள் வரத்தான் செய்யும். ஆனால் அவற்றுக்கு நியாய உணர்வுடனும் நேரிய சிந்தனையுடனும் தெளிவான பதில் அளிக்க முடியும். மக்களும் தெரிந்து, தெளிவடைந்து, திருப்தியடைந்து சட்டத்திற்குக் கட்டுப்படுவார்கள். ஆனால் இந்தச் சட்டம் அந்த நற்கூறுகளைக் கொண்டதாக இல்லை. அதனால் தான் நாடே ஒன்று திரண்டு தனது வலிமையான எதிர்ப்பைப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றது.

நோக்கம் என்ன?

நாட்டைப் பாதிக்கின்ற எத்தனையோ விஷயங்கள் அணிவகுத்து நிற்கும் போது, அதிலும் குறிப்பாக, முன்னாள் நிதியமைச்சர்  ப.சிதம்பரம் அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், இந்தியப் பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் கிடக்கும் போது குடியுரிமை பிரச்சனையைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்கான பதில் இதோ:

முஸ்லிம்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்த வேண்டும் என்பது தான் கோல்வாக்கர், சாவர்க்கர் போன்ற இந்துத்துவ வெறியர்கள் உருவாக்க நினைத்த இந்து சாம்ராஜ்யமாகும். அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் இலக்கில் தான் மோடி அரசின் பயணம் அமைந்திருக்கின்றது. அதற்காக இந்திய அரசியல் சாசனத்தின் உயிர் நாடியான மதச்சார்பின்மையை தடம் தெரியாமல் அழிப்பதற்கான காய் நகர்த்தலை கச்சிதமாகச் செய்து வருகின்றது.

அதற்குள்ளாக இந்தியப் பொருளாதாரம் அதள பாதாளத்தில் சரிந்து விழுந்து கிடக்கின்றது.  அது வெளிப்படையாகவும் தெரிகின்றது. மக்களின் கவனம் அதன் பக்கம் திரும்பி, தனது அறிவு சூனியத்தை அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக மக்களை திசை திருப்புவதற்காகத் தான் மோடி இந்த அஸ்திரங்களையும் ஆயுதங்களையும் கையில் எடுத்திருக்கின்றார்.

இதற்காகத் தான் கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார். முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். பாபரி மஸ்ஜித் தீர்ப்பை தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டார். இத்துணையும் அவருக்குக் கைகொடுத்தது.  இதில் அவரது இந்துத்துவா அஜெண்டாவும் நிறைவேறியது. அத்துடன் பொருளாதார திசை திருப்பல் நாடகமும் நிறைவேறியது.

அஸ்ஸாம் NRC

வெறுப்பு அரசியல் எனும் நெருப்பை மூட்டித் தான் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.  2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் ஒரு கலவரத்தீயை மூட்டித் தான் 71 இடங்களை வென்றது. இது பாஜகவின் வெறுப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றிப் பரிசு. பல மாநிலங்கள் இதற்கு பயிற்சி பட்டறையாயின.

அஸ்ஸாம் அதன் களப்பரிசோதனைக்குக் கைமேல் பலன் கொடுத்த மாநிலம். அங்கு வங்கதேச முஸ்லிம்களை வந்தேறிகள் என்று வெறுப்பு அரசியலை MCPஆட்சியைக் கைப்பற்றியது.   இந்தக் கட்டத்தில் 6 ஆண்டுகால நீண்ட இடைவெளியில் NRC தேசிய குடியுரிமை பதிவுப் பணி நடந்தது. அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அந்தப் பணி நடந்தது. அதற்கான பொருளாதாரச் செலவு 1600 கோடி ரூபாய். 50,000 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். 3.3 கோடி மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தனர்.

விளைவு என்ன? 19 லட்சம் குடிமக்கள் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டனர். அதிலும் குறிப்பாக, சற்றேறக்குறைய 12 லட்ச இந்துக்கள் குடியுரிமை பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. இது அஸ்ஸாமில் பாஜக அரசு மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.

அதற்குப் பிராயசித்தம் தேடும் விதமாகவும்,  அந்த 12 இலட்ச இந்துக்களின் வாக்கு வங்கியை தங்கள் கணக்கில் வரவைத்துக் கொள்வதற்காகவும், மீதமுள்ள முஸ்லிம்களை அகதிகளாக்குவதற்காகவும் CAB என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாகக் கொண்டு வந்தது.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்ற கணக்கில் ஒட்டு மொத்த இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்களையும் அகதிகளாக்கலாம் என்ற திட்டத்தில் பாஜக அரசு NRCயை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று அறிவித்தது.

CAA மூலம் ஆறு மதங்களைச் சார்ந்தவர்களை  சேர்த்துக் கொள்ளவும் NRC மூலம் நாடெங்கும் உள்ள முஸ்லிம்களை நீக்கவும் அது திட்டமிட்டது.

ஆனால் அல்லாஹ், சூழ்ச்சியாளர்களுக் கெல்லாம் மேலான சூழ்ச்சியாளன்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்ப அவர்களுக்கு எதிராகவே இந்தச் சட்டத்தை அல்லாஹ் திருப்பி விட்டு விட்டான்.  நாடெங்கும் பாஜக பற்ற வைத்த தீ  இன்று அதை நோக்கியே அழிக்க திரும்பியுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் கொழுந்து விட்டு எரிகின்றன. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும், தப்பு செய்தவன் தண்டனையை அனுபவித்து ஆக வேண்டும் என்ற நிலைக்கு பாஜக தள்ளப்பட்டிருக்கின்றது.

ஒரு மதத்தினருக்குக் குடியுரிமை அளித்து, இன்னொரு மதத்தினருக்குக் குடியுரிமையை புறக்கணிப்பது என்பது இந்திய அரசியல் சாசனம் 14வது பிரிவுக்கு விரோதமானது. அப்படியிருந்தும் இதை துணிச்சலாகச் செயல்படுத்துகின்றது என்றால், இந்து ராஜ்யத்தை நிர்மாணிக்கும் திட்டத்திற்கான முதல் கட்ட ஏற்பாட்டை நோக்கிய நகர்வைத் துவக்குவது தான் பாஜகவின் நோக்கமாகும்.

ஆறு மதத்தினரை மட்டும் அரவணைப்பதன் மூலம் ஒரு செய்தியை முஸ்லிம்களுக்கு விடுக்கின்றது. ‘முஸ்லிம்களே! நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியே வந்து விட்டால் உங்களுக்குக் குடியுரிமை தருவோம்’ என்ற கர்வாப்ஸி அதாவது தாய் மதம் திரும்புதல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்து நாம் குரல் கொடுத்தாக வேண்டும். முஸ்லிம்கள் இதை விட்டு ஒருபோதும் பின்வாங்கக் கூடாது.

அதே சமயம், நாம் ஏகத்துவத்தில் உறுதியாக இருக்கும் போது தான் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவோமாக!

—————————————————————————————————————————————————————————————————————

எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும்

M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

உலகத்தில் கோடிக்கணக்கான மக்களால் பலதரப்பட்ட மதங்கள், சித்தாந்தங்கள், கொள்கை – கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் எந்த மதத்தில் தங்களை அங்கம் வகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்களோ, ஆசைப்படுகின்றார்களோ, அந்த மதத்தில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை சுலபான முறையில் தொடர்கிறார்கள்.

இஸ்லாம் அல்லாத வேறுவேறு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், வேறுவேறு சித்தாந்தத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும் ஏற்படுகின்ற சிரமம், பாதிப்பு, சோதனை என்பது மிகமிகக் குறைவு தான் என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

ஆனால் உலகத்தில் இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கத்தில் வாழ்பவர்களுக்கும், நான் ஒரு முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கும் சொல்லெணாத் துன்பங்களும், துயரங்களும் ஏற்படுவதையும், அராஜகங்களும், அக்கிரமங்களும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதையும் நிதர்சனமாகக் காண முடிகின்றது.

இந்த உலகத்தை விட்டு இஸ்லாத்தை அழித்து விடுவதற்கும், இஸ்லாமியர்களின் உடற்கூட்டிலிருந்தும், உள்ளங்களிலிருந்தும், இஸ்லாத்தை அகற்றி விடுவதற்கும் கயவர்கள் அரும்பாடுபட்டு பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றார்கள்.

இஸ்லாத்தை அழிப்பதற்காகவே பெருங்கூட்டங்கள் களத்தில் நின்று பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அழிப்பதற்கு எதிரிகள் பல வகைகளில் சூழ்ச்சி செய்து, சதித்திட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.

  • இஸ்லாமியர்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொண்டு மதத்தை வளர்க்கிறார்கள் என்ற தவறான கருத்தை விதைத்து சூழ்ச்சி செய்தல்!
  • இஸ்லாமிய மதரஸா பாடத்திட்டத்தில் விஷக் கருத்தை விதைப்போம் என்று சூழ்ச்சி செய்தல்!
  • இஸ்லாமியப் பெண்களின் ஃபர்தாவை இழிவுபடுத்தி சூழ்ச்சி செய்தல்!
  • இஸ்லாமியர்கள் எங்கள் மதத்திற்கு மாறினால் பெரும்பகுதியான பணமதிப்பை பரிசாக வழங்குவோம் என்று சூழ்ச்சி செய்தல்!
  • கர்வாப்சி என்ற பெயரால் மதம் மாற்றும் சதித்திட்டம் செய்து சூழ்ச்சி செய்தல்!
  • மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம் களை கொலை செய்து சூழ்ச்சி செய்தல்!
  • இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று கூறி சூழ்ச்சி செய்தல்!
  • இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைத்து சூழ்ச்சி செய்தல்!
  • பள்ளிவாசல்களை இடித்து சூழ்ச்சி செய்தல்!
  • இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறித்து நாட்டை விட்டு விரட்ட நினைத்து சூழ்ச்சி செய்தல்!

இவ்வாறு பலதரப்பட்ட வகைகளில் கயவர்களின் சூழ்ச்சிகளும், கயமைத்தன சிந்தனையாளர்களின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றது.

இத்தனை சூழ்ச்சிகளையும் அராஜகங்களையும் தொடுப்பதற்கான மிக முக்கியமான அடிப்படைக் காரணம், இஸ்லாத்தை அழித்தொழித்து விட வேண்டும் என்ற வெறித்தனம் தான்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் சதி வலைகளையெல்லாம் கீறிக் கிழித்துக் கொண்டு இஸ்லாம் எனும் சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து, பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

சூழ்ச்சிகளை சுக்குநூறாக்கும் இறைவன்

உலகத்தில் இஸ்லாத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்ற எதிரிகள், கலகக்காரர்கள், அராஜகப் பேர்வழிகள் என்று யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய சூழ்ச்சிகளை இஸ்லாத்திற்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டாலும், எதிரிகளால் இஸ்லாத்தை ஒருக்காலும் அழிக்கவே இயலாது; எதிரிகளின் சூழ்ச்சிகளை இறைவன் தவிடுபொடியாக்கி விடுவான் என்று ஆணித்தரமான வார்த்தைகளின் மூலம் திருக்குர்ஆன் பறைசாற்றுகின்றது.

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை நாடு கடத்தவோ இறைமறுப்பாளர்கள் சூழ்ச்சி செய்ததை நினைத்துப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் சிறந்தவன்.

அல்குர்ஆன் 8:30

சூழ்ச்சி செய்பவர்கள் எத்துணை பெரிய கொம்பனாக இருந்தாலும், அதிகார பலத்தைக் கைகளில் வைத்திருந்தாலும், இறைவனுக்கு எதிராகவும், இறைவனின் மார்க்கத்திற்கு எதிராகவும் சூழ்ச்சி செய்தால், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். அல்லாஹ்வே சிறந்த சூழ்ச்சியாளன்.

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாதவாறு நாமும் பெரும் சூழ்ச்சி செய்தோம்.

அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம்.

அல்குர்ஆன் 27:50,51

நீங்கள் எவ்வளவு பயங்கரமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டாலும், எதிரிகளும், கயவர்களும் அறியாதவாறு அல்லாஹ் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றான் என்று கடுமையான முறையில் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

மேலும், எதிரிகள் செய்த சூழ்ச்சி என்னவானது என்பதை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும் என்றும், சூழ்ச்சி செய்வோரை அல்லாஹ் அழித்தொழித்து இல்லாமல் ஆக்குவான் என்றும் இறைவன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறான்.

இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் உள்ள குற்றவாளிகளில் பெரும்புள்ளிகளை அதில் சதி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தங்களுக்கே சதி செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் உணர்வதில்லை.

அல்குர்ஆன் 6:123

ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய குற்றத்தை செய்த குற்றவாளிகள் சூழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.ஆனால் அவர்கள் தங்களுக்கு எதிராகவே சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் இறைவன் எச்சரிக்கிறான்.

மிகப் பெரும் சூழ்ச்சியை அவர்கள் செய்தனர்.

அல்குர்ஆன் 71:22

காலம் காலமாக மிகப்பெரிய சூழ்ச்சியைச் செய்து, முஸ்லிம்களை இல்லாமல் ஆக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்படும் என்று இறைவன் அறிவுரை கூறுகின்றான்.

இறை மறுப்பாளர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் பலவீனப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 8:18

யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும், எத்தனை பெரிய பிரம்மாண்டமான படைகளை தனக்குக் கீழ் வைத்திருந்தாலும், அல்லாஹ்வை மறுப்பவர் சூழ்ச்சியில் ஈடுபடும் போது, அந்த சூழ்ச்சி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இறைவன் சவால் விடுகின்றான்.

இறை மறுப்பாளர்களுக்கு அவர்களது சூழ்ச்சி அழகாக்கப்பட்டு, நேர்வழியை விட்டும் தடுக்கப்பட்டு விட்டனர். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

அல்குர்ஆன் 13:33

சூழ்ச்சி செய்து இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு அவர்களின் சூழ்ச்சி அழகாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் இறுதியில் அந்த சூழ்ச்சி நிச்சயம் தோல்வியைத் தான் தழுவும்.

அவர்கள் தமது சூழ்ச்சிகளைச் செய்தனர். மலைகள் பெயர்ந்து விடும் அளவுக்கு அவர்கள் சூழ்ச்சி செய்தாலும், அவர்களது சூழ்ச்சி(யின் முடிவு) அல்லாஹ்விடமே இருக்கிறது.

அல்குர்ஆன் 14:46

எதிரிகளே! அராஜகம் செய்பவர்களே! நீங்கள் பிரம்மாண்டமான மலைகளையே புரட்டுகின்ற அளவிற்கு சூழ்ச்சிகளில் ஈடுபட்டாலும், அதற்கு வெற்றி அளிப்பது இறைவனின் கைவசமே உள்ளது.

எனவே அயோக்கியர்கள் செய்கின்ற அத்தனை சூழ்ச்சிகளும் வெற்றியில் முடியும் என்று எதிரிகள் பகல் கனவு காணக் கூடாது.

அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 21:70

இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் யார் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் அது நஷ்டத்தில் போய் முடியும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

இதுபோன்ற ஏராளமான திருக்குர்ஆனின் வசனங்கள் சூழ்ச்சி குறித்தும், சூழ்ச்சியாளர்கள் குறித்தும் மரண அடி கொடுக்கின்ற வார்த்தைகளாக, திருக்குர்ஆன் நெடுகிலும் நம்மால் காண முடிகின்றது.

எதிரிகளின் சூழ்ச்சி, இஸ்லாத்திற்கு வளர்ச்சியே!

இந்த உலகத்தில் இஸ்லாமிய மார்க்கம் மேலோங்காமல் இருப்பதற்கும், மக்கள் இஸ்லாத்தில் இணையாமல் இருப்பதற்கும் இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு காரியங்களை சதித்திட்டமாகத் தீட்டி அதை செயல்படுத்தியும் வருகின்றார்கள்.

உலகத்தில் எந்த அளவுக்கு இஸ்லாம் எதிர்க்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு வானளாவிய அளவில் மேலோங்கி நிற்பதை நம் கண்களுக்கு முன்னால் பல்வேறு ஆய்வறிக்கைகள் நிரூபிக்கின்றன.

இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு அளவே இல்லை. அது மட்டுமல்லாமல் உலகத்திலேயே அதிகமான மக்களால் எதிர்க்கப்படும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம்தான்.

இவ்வாறு அனைவரும் இஸ்லாத்தின் மீது அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தொடுத்து வரும் வேளையில், அதிகமான எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் இஸ்லாமிய மார்க்கம் மனித அறிவின் சிந்தனையின் அடிப்படையில் பார்த்தால் வீழ்ச்சியடைந்து அழிவை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி உள்ளதா? இல்லவே இல்லை.

இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றது என்று முஸ்லிம்களாகிய நாம் சொன்னால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர்கள் என்பதால் நமது மார்க்கத்திற்கு ஆதரவாக நாம் பொய் சொல்கின்றோம் என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால், நம்மை எதிர்க்கும் எதிரிகளின் நாவிலிருந்தே இஸ்லாத்தின் வளர்ச்சியையும், உச்சக் கட்ட எழுச்சியையும் உலகமே நம்பும் வகையில் சில ஆதாரங்களோடும், புள்ளி விபரங்களோடும்  சமர்ப்பிக்க வைத்திருக்கின்றான் இறைவன். அல்ஹம்துலில்லாஹ்!

அதிகம் பரவி வரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியாகும் போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனைச் சேர்ந்த, மதம் மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதிகரிக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை

உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வருகிற 2030-ம் ஆண்டு நெருக்கத்தில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல 2030-ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 23.6 கோடியைத் தாண்டும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம் மக்கள் தொகை, முஸ்லிம் அல்லாத மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் அசுர வளர்ச்சியடையும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2010ல் இருந்த 6.9 பில்லியன் மக்கள் தொகையில் 23.4சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 3.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 3.5 சதவிகிதம் அதிகரித்தால் 2010ல் 1.6 பில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை, 2030ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையின் இந்த அதிகரிப்பு, இதே வேகத்தில் தொடர்ந்தால், 2030ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொகையில் கால்பகுதிக்கும் அதிகமானோர், அதாவது 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர்.

அதாவது 2030ல் உலக மொத்த மக்கள் தொகை, 2010ல் காணப்பட்ட 6.9 பில்லியனிலிருந்து 8.3 பில்லியனாக அதிகரித்துவிடும் என்றும், இதில் 26.4 விழுக்காட்டினர் இஸ்லாமியர்களாக இருப்பர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அசுர வளர்ச்சி நீடித்தால் 2030ஆம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 72லிருந்து 79 ஆக அதிகரித்துவிடும் என்றும், அந்த 79 நாடுகளிலும் ஒரு மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் கூறுகிறது.

1990லிருந்து 2010வரை உலக இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2.2 விழுக்காடு அதிகரித்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர்.

‘2027ல் பிரான்ஸில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார் என்றும் இன்னும் 39 வருடங்களுக்குள் பிரான்ஸில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருப்பார்கள்’ என்றும் கூறுகின்றது.

நெதர்லாந்தில் தற்போது பிறக்கும் குழந்தைகளில் 50% முஸ்லிம்கள் என்றும் இன்னும் 15 வருடங்களுக்குள் நெதர்லாந்தில் முஸ்லிம்கள் 50% சதவிகிதமாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறிப்பிட்ட 15 வருடங்களில், சுமார் ஏழு வருடங்கள் கடந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் ஐந்து பேரில் ஒருவர் முஸ்லிமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. பெல்ஜியத்தில் 2025-ல் பிறக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை முஸ்லிமாக இருக்கும் என்றும் 2050-ல் ஜெர்மன் முஸ்லிம் நாடாக மாறும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.

அது மட்டுமன்றி தற்போது ஐரோப்பாவில் 52 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாகவும் இன்னும் 20 வருடங்களுக்குள் இது இரு மடங்காக மாறும். (அதாவது 104 மில்லியனாகும்) எனவும் ஜெர்மன் அரசே அறிவித்துள்ளது.

மேற்கண்ட ஆய்வுகளும், புள்ளி விபரங்களும் இந்த உலகிற்குப் பறைசாற்றுகின்ற செய்தி என்ன? உலக மக்கள் எழுப்புகின்ற அத்துணை கேள்விகளுக்கும், படைத்த இறைவனின் அற்புதமான பதில் இதோ!

அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் எல்லா மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்வதற்காக அவனே தன் தூதரை நேர்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

அல்குர்ஆன் 61:8,9

இஸ்லாம் இறைவனின் மார்க்கம்! இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம்! எதிரிகள் படை சூழ இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எதிர்க்க வேண்டும் என்று எவ்வளவுதான் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தாலும், அல்லாஹ் இஸ்லாமிய ஒளியைப் பூரணப்படுத்தியே தீருவான்.

இன்னும் மென்மேலும், ஒவ்வொரு நாளும் இஸ்லாம் எதிர்க்கப்படுகின்ற அளவுக்கும், ஏறி மிதிக்கப்படுக்கின்ற அளவுக்கும் உச்சக்கட்ட அசுர வளர்ச்சியை மக்களின் மனங்கவரும் வளர்ச்சியை கண்டிப்பாக எட்டும் என்று எதிரிகளுக்கு அல்லாஹ் அபாய சங்கை ஒலித்திருக்கின்றான்.

சூழ்ச்சியும் வளர்ச்சியும்!

இஸ்லாத்தை எதிர்க்க நினைக்கும் எதிர்கள் நாலாப்புறங்களிலிருந்தும் எதிர்ப்புக் கணைகளை கக்கிக் கொண்டும் தொடுத்துக் கொண்டும் தான் இருப்பார்கள் என்பதற்குக் கடந்த கால வரலாறுகள் நமக்கு அற்புதமான சான்றாக அமைந்திருக்கின்றன.

இஸ்லாத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்க வந்த இறைத்தூதர்கள் முதல், இறைவனின் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் வரை எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும், சோதனைகளுக்கும், சிரமங்களுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் எதிரிகளின் எல்லா சூழ்ச்சிகளையும் இறைவன் தவிடுபொடியாக்கி விட்டான் என்பதே வரலாறு நமக்குக் கற்றுத் தருகின்ற பாடம்!

ஸஜ்தாவில் வைத்தே கொன்று விட சூழ்ச்சி!

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை ஸஜ்தாவிலிருந்து எழ முடியாத அளவிற்கு எதிரிகள் சூழ்ச்சி செய்து சித்ரவதை செய்தார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை (கஅபா அருகில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷிகளில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து எடுத்து விட்டு, அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம்: புகாரி 3854

ஒட்டகக் குடலை முதுகிலே போட்டு இஸ்லாத்தையும், நபிகளாரையும் கொன்று விட வேண்டும் என்று எதிரிகள் கங்கணம் கட்டினார்கள். ஆனால் எதிரிகளின் சூழ்ச்சியை இறைவன் தோல்வியில் முடியச் செய்து, இஸ்லாத்தை மேம்படுத்தினான்.

கழுத்தை நெறித்துக் கொன்று விட சூழ்ச்சி!

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் போது வலுவான போர்வையால், கழுத்தை முறித்தும், நெரித்தும் கொன்று விட வேண்டும் என்று எதிரிகள் சூழ்ச்சி செய்தார்கள்.

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள்  கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், “இணை வைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்’’ என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், “என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?’’(40:28) என்று  கேட்டார்கள்.

ஆதாரம்: புகாரி 3856

‘அல்லாஹ் தான் இறைவன்’ என்று சொன்னதற்காக, கழுத்தை நெறித்து, பலமாக முறுக்கி அந்த இடத்திலேயே நபிகளாரைக் கொன்று விட வேண்டும் எதிரிகள் திட்டம் தீட்டி, அதை செயல்முறையும் படுத்திக் காட்டினார்கள். ஆனால் இறைவன் எதிரிகளின் சூழ்ச்சியை பலவீனப்படுத்தினான்.

கூட்டமாகச் சேர்ந்து கொன்று விட சூழ்ச்சி!

நபி (ஸல்) அவர்களை தனித்தனியாகவும், ஒவ்வொருவராகவும் கொலை செய்வதற்கு முயற்சி செய்து அந்த முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போனது. அதன்பிறகு ஒட்டுமொத்தமாக ஒரு பெருங்கூட்டமே சேர்ந்து நபி (ஸல்) அவர்களைக் கொன்று குவிப்பதற்குத் திட்டம் தீட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களை எங்கே கண்டாலும் கொலை செய்து விட வேண்டும் என்று குறைஷிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லாத், உஸ்ஸா, ஆகிய சிலைகளுக்கு முன்னால் போய் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் மகளார் ஃபாத்திமா (ரலி) அங்கே வந்தார்கள். குறைஷிகள் செய்து கொண்ட சத்தியத்தைப் பார்த்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுது விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களை சந்தித்து, தான் கண்டதைச் சொனார்கள். உங்களைப் பார்த்தாலே கொன்று விட வேண்டும் என்று குறைஷிகள் ரத்தவெறி கொண்டு அலைகின்றார்கள் என்று ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தண்ணீர் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரவே அதை வாங்கி நபி (ஸல்) அவர்கள் உளுச் செய்தார்கள். பிறகு பள்ளிவாசல் சென்று தொழுதார்கள்.

இந்த சமயத்தில் கொலை வெறி கொண்டு அலைந்த குறைஷிகள் அங்கே வந்து இந்தக் காட்சியைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து கையில் மண்ணை அள்ளி எதிரிகளின் மேல் எறிந்தார்கள். அந்த மண் அங்கே நின்றிருந்த முஷ்ரிக்குகள் எல்லோருடைய கண்களிலும் விழுந்தது.

ஆதாரம்: அஹ்மத் 2626

ஒரு சேர அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து நபிகளாரைக் கொன்று விடலாம், அவ்வாறு கொலை செய்து விட்டால், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களின் வாயிலும், முகத்திலும் மண்ணை அள்ளி எறிய வைத்தான் இறைவன்.

சூழ்ச்சியாளர்களே உங்களைத்தான்!

எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், கொடுங்கோலனாக இருந்தாலும் அவனது முன் நெற்றி இறைவனின் கைவசமே இருக்கின்றது. சூழ்ச்சியாளன் போடுகின்ற ஆட்டத்தை அல்லாஹ் அடக்குவான்.

நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள். எனக்கு எந்த அவகாசமும் அளிக்காதீர்கள். என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் நெற்றியை அவனே பிடித்து வைத்துள்ளான். என் இறைவன் நீதி வழியில் உள்ளான்” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:55,56

இஸ்லாத்தை எதிர்க்க நினைக்கும் எதிரிகளே! இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று வெறி கொண்டு திரியும் சூழ்ச்சியாளர்களே! முஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து இஸ்லாத்தை அகற்ற நினைக்கும் கயவர்களே! நீங்கள் எவ்வளவு தான் சதித்திட்டம் தீட்டினாலும் உங்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடிப்பான்.

நீங்கள் பொறுமையுடனும் இறையச்சத் துடனும் இருந்தால் அவர்களது சூழ்ச்சி உங்களுக்குச் சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிபவன்.

அல்குர்ஆன் 3:120

குற்றவாளிகளுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்த சூழ்ச்சியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும் கடும் வேதனையும் வந்தடையும்.

அல்குர்ஆன் 6:124

இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்ய நினைத்தால், திட்டம் தீட்டினால் சிறுமைப்பட்டு, சீரழிந்து, கடும் வேதனைக்கு உள்ளாவீர்கள் என்று சூழ்ச்சியாளர்களுக்கு இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.

சூழ்ச்சியாளர்களுக்கு எதிராகக் கையேந்துவோம்!

அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இறைவா! (சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு, படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டத்தாரை தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!’’ என்று அவர்களுக்குக் கேடு நேர நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம்: புகாரி 2933

எதிரிகளின் சூழ்ச்சிகளையும், கொடூரமான சூழ்ச்சியாளர்களையும் நடுநடுங்கச் செய்வதற்கும், திணறடிப்பதற்கும், தோல்வியுறச் செய்வதற்கும் அல்லாஹ் போதுமானவன்!

—————————————————————————————————————————————————————————————————————

உரிமைகளை மீட்டெடுப்போம்

முஹம்மது சலீம் M.I.Sc. மங்கலம்

இஸ்லாமிய மார்க்கம், ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசும் மதம் அல்ல! இது சத்திய மார்க்கம். மனிதனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற முழுமையான வாழ்க்கை நெறி. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, அதாவது அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கிறது.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: புகாரி (2448)

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி (2449)

ஈருலகிலும் பரிபூரணமான வெற்றி பெற வேண்டுமெனில், எங்கும் யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது; பிறருடைய உரிமையை மறுக்கக் கூடாது; பறிக்கக் கூடாதென இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது. இப்படி சமூக நலன் காக்கும் இஸ்லாமிய மார்க்கம், ஒவ்வொரு மனிதனும் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஒருவர் விரும்பினால், சுற்றியுள்ள மக்களிடம் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை தாமாகவோ, அல்லது அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலோ விட்டுக் கொடுக்கலாம். அதே சமயம் அவர் தமக்குரிய உரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், அதன் அவசியத்தையும் தேவையையும் கவனத்தில் கொண்டு அதற்காக முயற்சித்தால் அவரை இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக, அவரின் உரிமைக் குரலை மனதார ஆதரிக்கிறது; ஊக்கப்படுத்துகிறது.

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

நூல்: புகாரி (2480)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!” என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (225)

ஒருவர் தமக்கு உரிமையானதைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடும் போது ஒருவேளை அந்தப் போராட்டத்தில் இறந்து விட்டால் அவரை உயிர்த் தியாகி என்று இஸ்லாம் நற்செய்தி கூறுகிறது.

செல்வமோ, பொருளோ எதுவாக இருக்கட்டும்! ஒருவர் தம்முடைய உடமைக்காக, உரிமைக்காகக் களமிறங்கிப் போராடும் பண்பை இஸ்லாம் எந்தளவுக்குப் பாராட்டுகிறது என்பதற்கு இந்தச் செய்தி முக்கியச் சான்று.

இன்னும் சொல்வதாக இருந்தால், இஸ்லாம் வருவதற்கு முன்பு ஆண்களுக்குத் தரப்படும் அடிப்படையான பல உரிமைகள் பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்பட்டு வந்தன. அவர்கள் வெறும் போகப்பொருளாகப் பார்க்கப்பட்டனர். இந்த நிலையை இஸ்லாம் மாற்றிக் காட்டியது. அவர்களுக்கு இஸ்லாம் தகுந்த உரிமைகளை வழங்கியது. இதோ சில செய்திகளைப் பாருங்கள்.

பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி (757)

கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்து வைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)

நூல்: புகாரி (6945)

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) அவர், தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அப்பாஸே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா, முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா “இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இல்லை! நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்” என்றார்கள்.

அப்போது பரீரா, “(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (5283)

அல்லாஹ்வின் ஆலயம் சென்று வழிபடும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போன்று பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியது. இந்த அடிப்படையில் ஒரு பெண் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதற்கு அனுமதி கேட்டால் அடக்கி ஒடுக்காமல் அவளுக்குரிய உரிமையைத் தந்து விடுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

இது போலவே, வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமை, விவாகரத்து உரிமை போன்ற உரிமைகளையும் வழங்கினார்கள். மேலிருக்கும் செய்திகளைக் கொஞ்சம் கவனியுங்கள். தங்களுக்குரிய உரிமைகளை அன்று பெண்கள் பெற்றுக் கொள்ள விரும்பிய போது அவர்களை நபியவர்கள் திட்டவில்லை; அவமதிக்கவில்லை. இப்படி எந்த விஷயத்திலும் ஒருவர் தமக்குரிய உரிமையைக் கேட்கும் போது அவரை நபியவர்கள் வரவேற்ற நிகழ்வைத் தான் வரலாற்றில் காண முடிகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். (வலது புறத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நபியவர்களின் வழிமுறை!) எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை எவருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்’ என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)

நூல்: புகாரி (5620)

ஏதேனும் சபையில் பொருளை விநியோகம் செய்யும் போது, பரிமாறும் போது வலது பக்கத்தில் இருந்தே துவங்க வேண்டும்; இடது பக்கத்தில் இருப்பவரைக் காட்டிலும் அதைப் பெறுவதற்கு முதல் உரிமை படைத்தவர் வலது பக்கத்தில் இருப்பவர் தான். இதுவே நபிகளார் கற்றுத் தந்த வழிமுறை.

அந்த அடிப்படையில், அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து பானம் பெற்றுப் பருகும் உரிமையைப் பெறுவதில் இளைஞர் ஒருவர் உறுதியாக இருக்கிறார்; விட்டுக் கொடுக்க மறுக்கிறார். அப்போது அவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை; அவருக்குரிய உரிமையைக் கொடுத்தார்கள்.

இன்றைக்குச் சிலர் தமக்குரிய முக்கிய உரிமைகளைக் கேட்பதற்கும் கூட தயங்குவதைப் பார்க்கிறோம். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ! என்ன சொல்வார்களோ என்று எண்ணிக் கொண்டு உரிமையிழந்து தவிக்கவும் தயாராகி விடுகிறார்கள். இப்படி, அழிவு ஏற்பட்டாலும் சரி! உரிமையைக் கேட்காமல் முடங்கிக் கொள்ளுங்கள் என்று இஸ்லாம் கற்றுத் தரவில்லை. இதற்கு இங்குள்ள சம்பவம் முக்கிய சான்று.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘(அவரைத் தண்டிக்க வேண்டாம்;)விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2390)

நபியவர்கள் ஒருபோதும் நீதி தவற மாட்டார்கள்; அடுத்தவர் பொருளை அபகரித்துக் கொள்ள மாட்டார்கள். இதை அறிந்திருந்தும், கடன் கொடுத்த உரிமையில் ஒருவர் நபிகளாரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். நபி மீது பேரன்பு கொண்ட நபித்தோழர்கள் ஆவேசம் அடைகிறார்கள்.

அப்போது நடந்தது என்ன? “ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதன் மூலம் ஒருவர் தமக்குரிய உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முனைவதை நபியவர்கள் எந்தளவுக்கு ஆதரித்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதோ இன்னொரு செய்தியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள், ‘என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!’ என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள்.

அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், ‘இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்’ என்று கூறினார்கள்.

அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், ‘அவளை நானே வளர்ப்பேன்’ என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்டனர்.

அலீ(ரலி), ‘நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்’ என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), ‘இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மண பந்தத்தின்) கீழ் இருக்கிறாள்’ என்று கூறினார்கள். ஸைத்(ரலி), ‘(இவள்) என் சகோதரரின் மகள்’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபரே அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், ‘சிற்றன்னை என்பவள் தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்’ என்று கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்களை நோக்கி, ‘நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்’ என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, ‘நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்’ என்றார்கள். மேலும், ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, ‘நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)

நூல்: புகாரி (2699)

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். அவரது மகள் பாசத்திற்கு ஏங்கியவளாக ஆதரவற்றுத் தவித்து நிற்கும் போது அவளை அரவணைப்போடு வளர்க்க மூன்று பேர் போட்டி போடுகிறார்கள். அவர்களில் அந்தப் பெண் விஷயத்தில் அதிக உரிமை கொண்டவருக்குச் சாதகமாக நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பொதுவாக, ஏதேனும் விஷயத்தில் தமக்குரிய உரிமையைப் பெறுவதில் ஒருவர் உறுதியாக இருக்கும் போது அதை நபியவர்கள் கண்டித்தது இல்லை. எந்தளவுக்குத் தெரியுமா? எதிரியாகவோ, நெருக்கம் அற்றவராகவோ இருந்தாலும் கூட அவருக்குரிய உரிமையை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தந்திருக்கிறார்கள்.

என் தந்தையார் உஹுதுப் போரின் போது, அவரின் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.)

நபி(ஸல்) அவர்கள், கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி(ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, ‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்’ என்று கூறினார்கள்.

பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகிவிட்டன.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (2395)

இஸ்லாமிய மார்க்கத்தின் ஆன்மீகத் தலைவர்! இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மாபெரும் தலைவர்! இத்தகைய உயரிய அந்தஸ்தில் இருக்கும் நபியவர்கள், தமது தோழர் தரவேண்டிய கடனைத் தள்ளுபடி செய்யுமாறு யூதரிடம் பரிந்து பேசுகிறார்கள்.

முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் சிறுபான்மையாக வாழும் யூத இனத்தைச் சார்ந்த அவர் அதற்கு மறுத்து விடுகிறார். அப்போது தமக்குரிய அதிகாரத்தை வைத்து அவரை அல்லாஹ்வின் தூதர் மிரட்டினார்களா? தண்டித்தார்களா? இல்லவே இல்லை.

காரணம், கடன் கொடுத்தவருக்குக் கடனை திரும்பப் பெறும் உரிமை இருக்கிறது. அவர் கடனாளிக்கு அவகாசம் அளிக்கவும் உரிமை இருக்கிறது. கடனைத் தள்ளுபடி செய்யவும் உரிமை இருக்கிறது. அதன்படி கடனைத் திருப்பிக் கேட்கும் போது அவர் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதை நபியவர்கள் தடுக்கவில்லை; தடை விதிக்கவில்லை.

முஹம்மது நபியின் ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் எவராக இருந்தாலும் தங்களது உரிமையை தைரியமாகப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவமதிக்க மாட்டார்கள் என்பதைப் பின்வரும் செய்தி மூலமும் அறியலாம்.

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூஸாவைக் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார்.

உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ‘நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்றா நீ கூறுகிறாய்?’ என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘அபுல் காசிம் அவர்களே! (என் உயிர்) உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘நீ ஏன் இவரின் முகத்தில் அறைந்தாய்?’ என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகிற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள்.

பிறகு, ‘அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே (‘ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர! பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூஸா(அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கெண்டிருப்பார்கள். ‘அவர்கள் ‘தூர் சினாய்’ (மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டு விட்டாரா?’ என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (3414)

பொரும்பான்மை பலத்தோடு வாழ்கிற சமூகத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எவ்விதப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது. அவர்களுக்குத் தக்க பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. இந்தக் கடமை பல நாடுகளில் அலட்சியமாகக் கருதப்படுவதைப் பார்க்கிறோம்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் தர வேண்டிய உரிமைகளை நிறைவாகக் கொடுத்தார்கள்.

இஸ்லாமிய நாட்டில் யாராக இருந்தாலும் தமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை அன்று நிலவியது. காரணம், ஒருவர் தமது உரிமையைக் கேட்பதையும், அதைப் பெற்றுக் கொள்ள முனைவதையும் இஸ்லாம் வரவேற்கிறது.

இதை நாம் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும். இப்படியான மார்க்கத்தில் இருக்கிற நாம் நம்முடைய அத்தியாவசியமான அடிப்படையான உரிமைகளுக்காவது குரலெழுப்பும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை உணர்ந்து செயல்பட வேண்டிய இக்கட்டான தருணத்தில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம்.

இந்திய தேசத்தைக் கட்டமைக்கவும் அந்நிய சக்திகளிடமிருந்து காக்கவும் பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக அகதிகளாக மாற்றிட இன்று பாசிச சக்திகள் முயற்சிக்கிறார்கள். அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, அநீதி இழைக்கிறார்கள். இதற்கு எதிராக நாம் வெகுண்டெழ வேண்டும்.

இதோ நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

ஜிஹாதில் (எனும் அறப்போரில்) சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: அபூதாவூத் (3781)

உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் (எனும் அறப்போர்) செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: நஸயீ (3141)

அராஜகம் செய்யும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு எதிராக அவர்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டு, உண்மையை எடுத்துச் சொல்லி, உரிமைக்காகக் குரல் எழுப்புவதன் சிறப்பை இந்தச் செய்திகளிலிருந்து நாம் அறிய முடிகின்றது.

இதை நினைவில் கொண்டு, இந்திய மண்ணின் மைந்தர்கள் என்ற நமது குடியுரிமையை நிலைநாட்டிட வீறுகொண்டு எழுவோம்! நமது உரிமைகளை மீட்டெடுப்போம்!

—————————————————————————————————————————————————————————————————————

சோதனைகளை சகித்துக் கொள்வோம்

நாஷித் அஹ்மத்

இஸ்லாமிய மார்க்கத்தைத் தன்னளவில் கடைப்பிடிப்பதற்குக் கூட இயலாத கால சூழலை நபிகள் பெருமகனாரும் அவர்களது தோழர்களும் மக்காவில் எதிர்கொண்டனர்.  உயிர் வாழவே இயலாத சூழல் உருவானது.

எதை இழந்தாலும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் இழந்து விடக் கூடாது  எனும் உயரிய  போதனையை தம் தோழர்களுக்கு செய்து வந்த நபி (ஸல்) அவர்கள், எத்தகைய சோதனைகளின் போதும் பொறுமையை இழந்து விடாமலும், அதே நேரம் அந்தத் துன்பங்களை ஈமானிய உறுதியுடன்  எதிர்கொள்வதில் துவண்டு விடாமலும், இறைவனிடம் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்கள்.

கொள்கையை இழந்து விட்டால், பிறந்த மண், உற்றார், உறவினர், சொத்து சுகங்கள், என அனைத்தையும் பெற்றுக் கொண்டு தாய் பூமியிலேயே தங்கிக் கொள்ளலாம் எனும் நிலை!  எனினும், அந்த மாமனிதரும் அன்னாரது கொள்கையுறுதி மிக்கத் தோழர்களும், தேர்வு செய்ததோ ஏற்றிருந்த கொள்கையைத் தான்!

விளைவு, அனைத்தையும் இழந்து நாடு துறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்முகத்துடன் அதனையும் ஏற்றுக் கொண்டார்கள்.

அகதிகளாக நாடு துறக்கின்ற கொடிய நிகழ்வை அனுபவித்த நபி (ஸல்) அவர்கள், இறையருளால் அந்த நிகழ்வையே இஸ்லாமிய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வரலாறாக மாற்றியமைத்தார்கள்.

இஸ்லாம் உலகமெங்கும் பல்கிப் பெருகிட, அந்தத் தியாக நிகழ்வையே அடிப்படை காரணியாக அல்லாஹ் ஆக்கினான்.

சோதனைகளில் பொறுமை!

பொறுமையிலும் நேர்மை!

நேர்மையிலும் ஒழுக்கம் தவறாமை!

என வாழ்ந்து காட்டிய மாமனிதர் வழி நின்று, எத்தகைய சோதனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி வந்தாலும், அழகிய பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்வதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காரணம், இவ்வுலகம் அற்பத்திலும் அற்பமானது; இறை நம்பிக்கை கொண்டோருக்கு மறுமையின் நித்திய வாழ்வே மகத்தானது எனும் இறை வாக்கை அப்படியே உள்ளத்தால் ஏற்று நம்பிய கூட்டம் இது!

ஏகத்துவத் தந்தையின் பொறுமை

ஏகத்துவத் தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது.

எனினும், ஒரு சமுதாயமாகவே மாறி அவர் தனியொருவராக இந்த மார்க்கத்தை ஏந்தியதோடு, மக்களிடம் பொறுமையுடன் தான் கொண்டுள்ள சத்தியக் கொள்கையை போதனை செய்திட அவர்கள் தவறவில்லை. ஒட்டு மொத்த சமுதாயமும் அவரை எதிர்த்ததுடன், அவரைக் கொலை செய்து விடவும் துணிந்தார்கள்.

நீங்கள் செய்வதாக இருந்தால் இவரை நெருப்பில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்று கூறினர்.

அல்குர்ஆன் 21:68

ஆனால் எல்லாம் வல்ல ரஹ்மான் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.

நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 21:69, 70

இவ்வளவு சோதனையைச் சந்தித்து, இனிமேல் அந்த ஊரில் வாழ முடியாது என்றாகி விடுகின்றது.

ஊரார், உறவினர், நாடாளும் அரசன் அத்தனை பேரையும் பகைத்த பின்னர் அவர்களுக்கு நாடு துறந்து செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதனால் அவர்கள் நாடு துறந்து செல்கிறார்கள்.

நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

அல்குர்ஆன் 29:26

இவ்வாறு பல நபிமார்கள், கொண்டிருக்கும் கொள்கையை விட இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் எதுவும் பெரிதல்ல என அவற்றை துச்சமென மதித்து, கடந்து சென்றது தான் இஸ்லாமிய மார்க்கம் கொண்டிருக்கும் உன்னத வரலாறு.

பொறுமை ஒரு வெளிச்சம்

இருள்களிலிருந்து ஒளி எவ்வாறு வழி காட்டுகிறதோ அதே போல் இன்னல்களிலிருந்து காப்பாற்ற ஒரு வெளிச்சமாகப் பொறுமை இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’   (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். ‘சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி’ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

 நூல்: முஸ்லிம் 381

பொறுமை ஓர் அருட்கொடை

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் பலவிதமான சோதனைகளை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவ்வாறு அல்லாஹ் சோதிக்கும் போது அதை பொறுத்துக் கொண்டால், அதுவே விசாலமான அருட்கொடை என்றும், அதை விட விசாலமான ஓர் அருட்கொடையாக அல்லாஹ் வேறெதனையும் தரவில்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்ட போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்து விட்டபோது, “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1902

பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். பணிந்து நடப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பெரும் சிரமமாகும்.

அல்குர்ஆன் 2:45

சோதனைகளை சகித்துக் கொண்டால்..

செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகள் மூலம் இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றை குறைத்தும் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு  நற்செய்தி கூறுவீராக!  அவர்களுக்கு எந்தத் துன்பம் ஏற்பட்டாலும்  “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.  அவனிடமே திரும்பக்கூடியவர்கள்” என்று கூறுவார்கள்.  இத்தகையோர் மீதுதான் அவர்களது இறைவனின் அருள்களும் மன்னிப்பும் உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.

அல்குர்ஆன் 2:155-157

நபிமார்களும் அவர்களது சமுதாயமும் எதிர்கொண்ட துன்பங்களைப் போல் நாம் அனுபவிக்காமல் எளிதில் சொர்க்கம் சென்று விட முடியுமா? என்றும் அல்லாஹ் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகிறான்.

ஏகத்துவக் கொள்கையை ஏந்தி விட்டோம், ஈமான் கொண்டு விட்டோம் என்றாலும் அல்லாஹ் அத்துடன் திருப்தியடைய மாட்டான். நாம் கொண்டிருக்கும் ஈமானின் ஆழத்தை வெளிக்காட்ட விரும்புகிறான்.

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டுவதற்காக உங்களை நாம் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.

அல்குர்ஆன் 47:31

உங்கள் செல்வங்களிலும் உயிர்களிலும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைப்போரிடமிருந்தும் புண்படுத்தும் சொற்கள் பலவற்றைச் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் அது உறுதிமிக்க காரியங்களில் உள்ளது. 

அல்குர்ஆன் 3:186

அவ்வாறு சோதனைகள் நம்மைத் தாக்குகின்ற போது, அல்லாஹ்வின் பேருதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடிப்பது முஃமினின் இன்றியமையாத கடமையாகும்.

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையை மேற்கொள்வீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்.

அல்குர்ஆன் 10:109

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராகப் பிரார்த்தித்தார்.

அல்குர்ஆன் 68:48

வணக்க வழிபாட்டை விட்டும் தடுக்கப்படுதல்

நாம் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது தொடர்பாகவும் திருமறை நமக்கு அழகாக போதனை செய்கிறது.

வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்குவீராக! அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) பொறுத்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?

 அல்குர்ஆன் 19:65

பொறுமைக்கு பரிசாக சொர்க்கத்தை பெற்ற பெண்மணி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், “(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்” என்று சொன்னார்கள். இப்பெண்மணி “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 5032

மகனுக்கு பொறுமையைப் போதித்த லுக்மான்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நல்லடியாரான லுக்மான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, அவர் தன் மகனிடம் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும், பெற்றோருக்கு உதவ வேண்டும் என்ற போதனைகளுடன், சோதனை வரும் போது பொறுமையாக இருக்க வேண்டும் என்று மிக அழகான முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். சகித்துக் கொள்ளுதல் என்ற செயலை மிக சிறப்புக்குரிய காரியமாக அவர், தன் மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

அல்குர்ஆன் 31:17

யூசுப் (அலை) அவர்கள் காட்டிய பொறுமை

எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லைஎன்றனர். அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. நான் அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:17-18

அய்யூப் (அலை) அவர்களின் சகிப்புத்தன்மை

அய்யூப் (அலை) அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இவர் அமைந்துள்ளார்.

(அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்றெல்லாம் கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)

எனக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்என அய்யூப் தமது இறைவனிடம் பிரார்த்தித்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரையாகும்.

 அல்குர்ஆன் 21:83-84

நபி (ஸல்) அவர்கள் காட்டிய பொறுமை

தமது அன்பு மகன் மரணித்த தருவாயில், தாங்க இயலாத வேதனையை நபி (ஸல்) அவர்கள் அடைகின்றார்கள். எனினும், இறைவனிடம் கிடைக்கப்பெறும் மகத்தான நற்பேறினை குறிக்கோளாகக் கொண்டு அவ்விடம் பொறுமை மேற்கொள்வதை கீழ்க்காணும் நிகழ்வு விளக்குகின்றது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்ஃபின் புதல்வரே!என்று கூறிவிட்டுத் தொடர்ந்து அழுதார்கள். பிறகு கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகம் கவலைப்படுகிறோம்என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1303

ஆக, துன்பங்களின் போது இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி சகிப்புத்தன்மை கொள்வதில் இஸ்லாமிய வரலாறு இந்த சமூகத்திற்கு மிகப் பெரிய படிப்பினையைத் தந்திருக்கிறது.

த‌மக்கு நேர்ந்த‌ துன்பங்களையும் அடக்குமுறைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்ட அந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் கருணைப் பார்வையால் மகத்துவம் பெற்றதை நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆட்சியோ, அதிகாரமோ தங்கள் வசம் இல்லாத நிலையில் பொறுமை காத்த சமுதாயத்திற்கு, ஆட்சியை வழங்கினான் அல்லாஹ். அதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கும், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையைத் தேடியவர்களாகவும் அந்த மக்கள் மாறினர்.

போர் கடமையான காலகட்டங்களில், தங்களை அழிக்க முனைந்த எதிரிகளை போர்க்களங்களில் எதிர்கொண்டனர். மகத்தான வெற்றியை பெற்றனர்.

இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கா வாழ்வில் அந்தச் சமூகம் வெளிப்படுத்திய வியத்தகு சகிப்புத்தன்மை!

சத்தியத்திற்காகக் குரல் கொடுப்போம்

சிறுபான்மை சமூகமாக இருக்கும் காலமெல்லாம் நமக்கு நேர்கின்ற சிரமங்களை இறைவனுக்காகப் பொறுத்துக் கொள்கின்ற அதே வேளையில், அசத்தியத்திற்கு எதிராக நம் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்வதும் ஈமானின் மறுபரிணாமமே!

மண்ணையும் பெண்ணையும் பொன், பொருளையும் நேசிக்கும் மனித சமூகத்தில், மரணத்தை நேசிக்கும் சமுதாயம் நாம்!

எனவே, இவ்வுலகின் எத்தகைய துன்பங்களும் நம்மை துவளச் செய்யாது. நமது உரிமைகளையோ வாழ்வாதாரத்தையோ இழக்க நேரிடும் போது, நெறி தவறாது, சத்தியத்தை மீட்டெடுக்க இயன்ற அளவில் போராடுவது ஓர் உண்மை முஸ்லிமின் பண்பாகும்.

நெருப்பில் தூக்கி வீசப்படுகின்ற அந்தக் கடைசி நிமிடத்திலும் நெஞ்சத்தில் கொண்டிருந்த ஈமானிய உறுதி கிஞ்சிற்றும் குறையா வண்ணம் உறுதி காத்தார்களே! அந்த மாபெரும் நபியிடம் நாம் படிப்பினை பெற வேண்டும்.

பொறுமை காப்பேன், அதில் மிகைத்து விடுவேன், எனது உயிரையோ உரிமையையோ தான் உன்னால் பிடுங்கிக் கொள்ள இயலுமே அல்லாமல், நான் கொண்டிருக்கும் சத்தியக் கொள்கையை உன்னால் தொட்டுப் பார்க்க முடியாது என்பது தான் அந்தப் படிப்பினையின் சாராம்சம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜிஹாதில் மிகச் சிறந்தது சத்தியக் கொள்கையை அநியாயக்கார அரசனிடம் எடுத்துக் கூறுவதாகும்.

நூல்: நஸாயீ (4138)

நாம் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் போது, இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவர்களாக, துணிவுடன் சத்தியத்தை எடுத்துச் சொல்கின்ற, வீதியிலிறங்கி போராடித் தான் இழந்த உரிமைகளை மீட்க முடியுமெனில் அதற்கும் தயாரான நிலையிலான ஒரு சமுதாயமாக நாம் மாறுவோம். இழந்த உரிமைகளை மீட்போம்.

இறைவன் பேரருள் புரியப் போதுமானவன்.

—————————————————————————————————————————————————————————————————————

மத வெறுப்பு அரசியல் அதள பாதாளத்தில் இந்தியா

ஹர்ஷ் மந்தர்முன்னாள் உபி மாநில சிவில் சேவை அதிகாரி, மனித உரிமை ஆணையம் எழுத்தாளர்

தமிழில் : முஹம்மது வாஜித் AITJ கர்நாடகா

உத்தரப்பிரதேசத்தில் அரசாங்கமே முன்னெடுக்கும் மத வெறுப்பு அரசியலால், தேசம் மிகவும் ஆபத்தான, அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!

போலீஸ் என்ற போர்வையில் மதவெறியர்களுக்கு ஆதரவாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் நடக்கும் வன்முறைகளின் அளவு புதிய ஆழங்களைத் தொட்டிருக்கின்றன.

மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களின் கூடாரமாக உத்தரப்பிரதேசம் மாறி வருகிறது. முதலமைச்சர் தனது மாநிலத்தின் சிறுபான்மை சமூகங்கள் மீது போரை அறிவித்துள்ளார். சட்டவிரோதமான மற்றும் மிருகத்தனமான பயங்கரவாத ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட, தனது போலீஸ் படைகளைத் தூண்டி ஊக்குவித்தார் என்று கூறுவது மிகையாகாது.

பொதுவாக, வகுப்புவாத அடக்குமுறைகளின் போது, காவல்துறை சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கும்  வன்முறை போன்றதாகக் கூட இவை இருக்கவில்லை. அதையும் தாண்டி மிக அசாதாரணமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நான் அடிக்கடி சுட்டிக்காட்டுவது போல், அரசு மற்றும் காவல்துறையினரின் முழுமையான ஆதரவில்லாமல், இனவாத வன்முறைகள் ஒரு சில மணிநேரங்களுக்கு மேல் நீடிக்க முடியாது.

ஒருபுறம், வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மையினரைத் தாக்கும்போது, போலீஸ் செயலற்று, கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இது போதாது என மறுபுறம் கும்பல்களைக் கலைக்கிறோம் என்கிற போர்வையில், காவல் துறையினர் சிறுபான்மையினரை மட்டும் குறி வைகின்றனர். ஈவிரக்கமற்ற வகையில்  துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறுபான்மையினருக்கு மிக அதிகளவில் கடுமையான காயத்தையும், காவல் துறையினர் திட்டமிட்டே  ஏற்படுத்துகின்றனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதலமைச்சாராகவுள்ள உத்தரபிரதேசத்தில் நாம் காண்பது  என்னவெனில், காவல்துறையே கலகக்கார, கொலைகாரக் கும்பலாகவும் மாறியிருக்கிறது.

நான் மாவட்ட அதிகாரியாக, 1984-ல் சீக்கிய எதிர்ப்புப் படுகொலை சம்பவங்கள், மற்றும் பாபர் மசூதி இடிப்பின் விளைவாக ஏற்பட்ட வன்முறைகள் போன்றவற்றை நான் கையாண்டுள்ளேன். நான் சிவில் சேவையை விட்டு வெளியேறிய பின்னும், குஜராத் மற்றும் முசாபர்நகர் (உ.பி.) படுகொலைகளில் கடும் பாதிப்புக்குள்ளானவர்களுடன் பணியாற்றியுள்ளேன். இதுபோக இதற்கு முந்தைய நெல்லி (அசாம்) மற்றும் பாகல்பூர் (பீகார்) இனவாதப் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றினேன்.

ஆனால் உ.பி.யில் தற்போது நடத்தப்படும் அநியாயங்களைப் போன்று இதுவரை நான் எங்கும் கண்டதில்லை. காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இணையான, அரசாங்கமே தெளிவாகத் திட்டமிட்டு சிறுபான்மையினரை நசுக்கும் வன்முறைக் களமாகவே உ.பி. காட்சியளிக்கிறது.  உ.பி. அரசின் இச்செயல்கள், வரலாற்றில் மிகப்பெரிய இழிவை நம் தேசத்தின் மீது சுமத்தவிருக்கிறது.

கண்ணிமைக்கும்  நேரத்தில் பேரழிவு

கண்களில் வழியும் நீர்க் கசிவு

உ.பி.யில் உள்ள பல முஸ்லிம் வீடுகளை நான் நடந்து சென்றேன். நான் கண்ட காட்சிகளால், என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தன. என் இதயம் வெட்கத்தில் மூழ்கியது. காக்கிச் சீருடையில் வந்த காவல்துறை, வெறுப்புணர்ச்சிகளைக் கக்கியதற்கும், பின்னர் அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்தியதற்கும் ஏராளமான சாட்சியங்களை நான் காண நேர்ந்தது.

கார்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் கவிழ்க்கப்பட்டு எரிக்கப் பட்டிருக்கின்றன. தொலைக்காட்சித் திரைகள் மற்றும் சலவை இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. பீப்பாய்கள் மற்றும் பொம்மைகள் கூட சிதைக்கப்பட்டுள்ளன. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்நாள் உடமைகள் அனைத்தும் சில நிமிடங்களில் பேரழிவிற்கு உள்ளாக்கப்பட்டு, குடும்பங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளன.

1984, 2002, 2013களில் பல்வேறு வன்முறைக் காட்சிகளை நான் கண்டுள்ளேன். ஆனால் உ.பி.யில் தற்போது நடப்பது முற்றிலும் வேறு வகையான வன்முறை. பணியிலிருக்கும் மாநில காவல்துறை, அதுவும் காவல்துறை உடையிலேயே சென்று முஸ்லிம் குடியிருப்புகளில் ஈவிரக்கமின்றி வீட்டை உடைத்துக் கொள்ளையடிக்கும் சம்பவங்களை நான் நேரில் எதிர்கொண்டது இதுவே முதல்முறை.

பணக்காரக் குடும்பங்களில் பகல் கொள்ளைகள்!

காவல்துறையினரின் பகல் கொள்ளைகளுக்கும் படுகொலைகளுக்கும் பெரும்பாலும் பணக்கார குடும்பங்களின் வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இலக்காக்கப்பட்டுள்ளன. போலீஸ் இன்ஃபார்மர்கள் எனப்படும் தகவல் சொல்பவர்கள் மூலம் தகவல் சேகரிக்கப்பட்டிருக்கலாம். காவல்துறையினர் 40 அல்லது 60 பேர் கொண்ட குழுக்களாக முஸ்லிம்களின் வீடுகளில் சூறையாடியிருக்கிறார்கள். சில இடங்களில் பொதுமக்களுடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளார்கள். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் காவல்துறை மட்டுமே இந்த இழி செயல்களைச் செய்துள்ளார்கள்.

காவல்துறையினர் முஸ்லிம்கள் வீட்டுக் கதவுகளை இடித்து, உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கேவலமான வார்த்தைகளைக் கொண்டு ஏசியும், அவதூறு வார்த்தைகளைப் பிரயோகித்தும், தடியால் கொடூரமாக அடித்தும் உள்ளனர். அவர்களது கொள்ளையைத் தடுக்க முயல்பவர்களை மீது கொலைவெறித் தாக்குதலையும் போலீசார் நடத்தியுள்ளனர்.

போலீசார் கேலி செய்யப் பிரயோகித்த வார்த்தைகள்: “இதோ இங்கே! நீங்கள் கேட்கும் சுதந்திரத்தை (ஆசாதியை) எடுத்துக் கொள்ளுங்கள்!” என்பதேயாகும்.

இதே இனவாத சொற்களைத்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய  ஆயுதமேந்திய போலீசாரும் பிரயோகித்துள்ளனர். அவர்கள் மஸ்ஜிதுகளை சூறையாடிய போதும், முசாபர்நகரில் உள்ள ஒரு மதரஸா மீது சோதனை என்ற பெயரில் துவம்சம் செய்த போதும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தீ வைத்த போதும், போலீசார் இதே வார்த்தைகளைத்தான்  பயன்படுத்தியுள்ளனர்.

CAA சட்டத்தின் பிரதிபலிப்பு

பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், பல வீடுகளில் காவல்துறையினர் சூறையாடிவிட்டு “உங்கள் வீடுகள் இப்போது எங்களுக்குத் தான் சொந்தம்! ஏனென்றால் நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை CAA சட்டம் உறுதி செய்யும்’’ என்று கூறியதாகக் கூறினர். ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம், இந்தியப் பிரிவினையின்போது “முடிக்கப்படாத பணிகள்” என்று கருதுவதை, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 நிறைவு செய்யும் என்று காவல்துறையினர் பொதுவாக நம்பினர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒற்றை வரியில் சொல்வதானால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு வெளியேறும்படி போலீசாரே கட்டாயப்படுத்த ஆரம்பித்துள்ளனர். மீரட்டில் உள்ள ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, முஸ்லிம்களை பாகிஸ்தான் செல்லச் சொல்லியும், இந்தியாவுடனான அவர்களின் விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்கியும் பேசியுள்ள காட்சி கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் தடியடி காயங்களை எங்களுக்குக் காட்டினர். மிகவும் வயதானவர்கள் கூடத் தாக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சட்டவிரோதமாகப் பல நாட்கள் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் பதின்ம வயது சிறுவர்களும் அடங்குவர். காயங்களின் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்பவர்கள், காவல்துறையினரால் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகள் மறுக்கின்றன.

நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் CAAவை  எதிர்த்து மக்கள் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால், உ.பி. மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே  வன்முறையாக மாற்றப்பட்டுள்ளன. இக்கட்டுரையை நான் இப்போது எழுதும் நேரத்தில், உ.பி.யில் நடந்த இந்தப் போராட்டங்களில் கிட்டத்தட்ட 20 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். சில இடங்களில், எதிர்ப்பாளர்கள் வன்முறையைக் கையிலெடுத்ததாக கூறப்பட்டுள்ளன, இருப்பினும் போலீஸ் அணுகுமுறை மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் கலவரம் தூண்டப்பட்டதாகப் பொது மக்கள் கூறுகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராகக் காவல் துறையினர் செய்து வரும் வன்முறை முற்றிலும் நீதியற்றது. பரிந்துரைக்கப்பட்ட எச்சரிக்கை நெறிமுறைகள் எதனையும் காவல்துறை பின்பற்றாமல், படிப்படியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல், எடுத்தவுடனேயே போலீஸ் இடுப்புக்கு மேலே சுடுவதை வீடியோக்கள் படம்பிடித்துள்ளன. பெரும்பாலும், எவ்வித எதிர்ப்புகளும் இல்லாத, வன்முறைக்கு வழியேயில்லாத குறுகிய பாதைகள் வழியாக போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

தாக்குதல்களுக்கு உள்ளான ஆண்களில் பெரும்பாலோர் மிகவும் ஏழைத் தொழிலாளர்கள், அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

ஆழமான வடுக்கள், ஆறாத காயங்கள்

அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான  “பெயரிடப்படாத” போலீஸ்  புகார்களை காவல்துறை தாமே பதிவு செய்திருக்கிறது. முஸ்லிம் மக்களை விருப்பப்படி தடுத்து வைக்கவும், காவல்துறைக்கு எதிராகப் புகார் அல்லது சாட்சியமளிக்கக்கூடிய எவரையும் பயமுறுத்துவதற்கான   ஆயுதமாகவும், காவல்துறை இதைப் பயன்படுத்துகிறார்கள்.

கேமரா வைத்திருக்கும் யாருடனும் பேச மக்கள் பயப்படுகிறார்கள். மக்கள் கேமரா முன் பேச நேர்ந்தால் தங்கள் முகத்தை மறைத்தே பேசுகிறார்கள். உ.பி.யின் நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்கள், போலீஸின் இழி செயல்களால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஆண்கள் பொய்க்குற்றங்கள் சாட்டப்பட்டு எப்பொழுது  வேண்டுமானாலும் கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் வீடுகளும், வீட்டிலுள்ள குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் எவரும் எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற  அச்சத்திலேயே ஒவ்வொரு நோடிப்பொழுதையும் கழிக்கின்றனர். பெரும்பான்மையான  முஸ்லிம் மக்கள் தங்களது குடியிருப்புகளைக் காலி செய்து இடம் பெயர ஆரம்பித்துவிட்டனர்.

மாநிலத்தின் மிக உயர்ந்த அரசியல் மட்டங்களிலிருந்து சிறுபான்மையினரைப் பழிவாங்குவதற்கான அழைப்பு தீவிரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நிகழும் அனைத்து கொடுமைகளுக்கும் காரணியாக, உ.பி. முதல்வரின் “பழிவாங்கல்” என்ற இவ்வழைப்பே அமைந்திருக்கிறது. வன்முறைகளைத் தொடர்ந்து இன்னும் கொடூரமான முறையில் போலீஸ் சோதனைகள் மற்றும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. பொது சொத்துக்களை அழித்ததாகக் கூறி முஸ்லிம் மக்கள் அதிக இழப்பீட்டுத் தொகைகளை அபராதமாகக் கட்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். (இதில் மக்களை அடிக்கும் போது உடைக்கப்பட்ட போலீஸ் தடியடிகளுக்கும் பணம் வாங்குகின்றனர்). எந்தவொரு குற்றமும் நீதித்துறை மூலம் விசாரிக்கப்பட்டு சட்டப்படி நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் உ.பி.யில் நீதித்துறை மூலம் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இந்த வகை அபராதங்கள் சிறுபான்மையினர் மீது விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

வருந்தத்தக்க நெறிமுறை மீறல்கள்

உ.பி.யில் போலீஸ் வெறியாட்டத்தின் சீற்றத்தை செய்தி நிறுவனங்கள் வெளிப்படுத்தத் தொடங்குகையில், அதைப் பற்றி சிறிதும் வருத்தப்படாத முதல்வர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ‘வெற்றியின் சுய வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிடுகிறார்:

“ஒவ்வொரு கலகக்காரனும் அதிர்ச்சி அடைந்திருக்கிறான். ஆர்ப்பாட்டக்காரர்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள். யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளைப் பார்த்து அனைவரும் பிரமித்துப் போயிருக்கிறார்கள்” என்று தமக்குத் தாமே வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறார்.

உ.பி.யில் தற்போது நடைபெறும் சம்பவங்கள், நாட்டின் உயர் அலுவலகங்களின் மதிப்பை இறக்கித் தரைமட்டமாக்கியுள்ளது. முதலமைச்சரால் தொடங்கப்பட்ட இந்த மத வெறுப்பு அரசியலுக்குச் சேவை செய்யும் வண்ணம், உ.பி. காவல்துறை மற்றும் நீதித்துறையின் மூத்த அரசு ஊழியர்கள் எவ்வித வெட்கமோ குற்றவுணர்வோ இன்றி, தங்களின் அரசியலமைப்புக் கடமைகளைக் கைவிட்டுள்ளனர்.

உ.பி.யில் சிறுபான்மையினருக்கு எதிரான இந்த மத வெறுப்புப் போர்ப்பிரகடனம், மூன்று தசாப்தங்களாகக் காஷ்மீர் மக்கள் படும் கொடுமைகைளைப் போன்றே உள்ளது. அங்கே பாதுகாப்புப் படையினர் மக்களைச் சுற்றி வளைத்தும், அவர்களின் வீடுகளைச் சூறையாடியும், அப்பாவிகளை அடித்தும் கொடுமைக்குள்ளாக்குவர். அதுபோன்ற சூழலே தற்போது உ.பி.யில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தை வழிநடத்த, ஆளுங்கட்சியால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், வெறுப்பின் சின்னமாக முத்திரை பதிக்கிறார். யோகி ஆதித்யநாத், தமது மாநிலத்தின் ஒரு பகுதி மக்களை நேர்த்தியாகப் பிரித்து, அவர்களுக்கு எதிராக, தமது அரசாங்கத்தாலேயே தெளிவாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட தாக்குதலை, மாநிலம் முழுவதும் பரவலாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் சட்டங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து அனைத்துத் தரப்பு மக்களும் ஜனநாயக வழியில் போராடி வருகின்றனர். அனால் அதே காரணங்களுக்காக, ஜனநாயக வழியில் போராடிய உ.பி. முஸ்லிம்கள், இன்று குணமடைய முடியாத அளவுக்குக் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

உ.பி. முதல்வர், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை மிகவும் பெருமிதத்தோடு செய்து வருகிறார் என்று கூறினால் அது மிகையில்லை.

நன்றி: ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ்

—————————————————————————————————————————————————————————————————————

யார் தேச விரோதிகள்? வரலாறு சொல்லும் பாடம்

இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பல்வேறு திட்டங்களின் மூலம் உருவாக்கினார்கள். பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்த நாட்டை ஒரே நாடாக உருவாக்கியதில் முஸ்லிம்களின் பங்கு அளப்பரியது.

அதன்பின் இந்தியா வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது உயிராலும், பொருளாலும் தியாகங்கள் செய்து இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள்.

தன் சதவீதத்திற்கு அதிகமாக சுதந்திரப்  போராட்டத்தில் பங்கெடுத்த முஸ்லிம்களை இன்று தேச விரோதிகளாக சங்பரிவாரக் கும்பல் சித்தரித்து வருகின்றது. இவர்கள் அறுதிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடித்ததும் முஸ்லிம்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கொடிய எண்ணத்தில் சட்டங்களை இயற்றி வருகின்றனர். இந்தச் சட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகள், தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றனர்.

சரி! இதைச் சொல்கின்ற சங்கிகள் தேசப் பற்று மிக்கவர்களா? தேசத்திற்காக இவர்கள் செய்த தியாகம் என்ன? என்று பார்த்தால் சங் பரிவார இயக்கத்ததைக் கட்டமைத்தவர்களின் வரலாறுகள் மிகக் கேவலமாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இந்துத்துவத்தைக்  கட்டமைத்தவரான சாவர்க்கர் பற்றிய ஒரு கட்டுரை விகடனில் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தால் விடுதலைப் போரில் சங் பரிவாரின் பங்கு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களின் தேசப் பற்றையும், அவர்களின் குடியுரிமையையும் கேள்விக்குறியாக்கும் சங்கிகளின் இந்தக் கேவலமான வரலாற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம் என்பதால் “`Holy Land’ சாவர்க்கர்” என்ற தலைப்பில் சக்திவேல் என்பவர் எழுதி, விகடனில் வெளியான கட்டுரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

யார் இந்த சாவர்க்கர்?

“மேக் இன் இந்தியா என்பது இப்போது ‘ரேப் இன் இந்தியா’வாக மாறி விட்டது” என்று பேசியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பி.ஜே.பி.யினர் கொந்தளித்தனர். அதற்குப் பதிலளித்த ராகுல்காந்தி, `நான் ராகுல், சாவர்க்கர் அல்ல’ என்றார்.

அதைக் கண்டித்து மகாராஷ்ட்ரா பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர்கள், `நான் சாவர்க்கர்’ என்று அச்சிடப்பட்ட தொப்பி அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமித்ஷாவின் சாவர்க்கர் பாசம் அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் படம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.

ஆக, ஒரு விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும்.

இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும் கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார்? அவரது அரசியல் எப்படிப்பட்டது? அவர் பாடுபட்டது யாருக்காக? என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது.

இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித்ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!

சாவர்க்கர் ஒரு சிந்தனைவாதி என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவர் சிந்தனைவாதி தான்! ஆனால், அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. இந்து ராஷ்டிரம்தான்! அந்த இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும் அவரே அதை விவரிக்கிறார்…

`எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல!’

ஒரு தேசியத்துக்குக் கொடுக்கப்படும் Motherland, Fatherland என்ற கருத்துருவாக்கங்களைத் தாண்டி,`Holy land’ என்ற கருத்துருவாக்கத்தைக் கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர்.

அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம். இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துப் பெண்களைச் சூறையாடியதைப் போலவே, இந்துக்கள் இஸ்லாமியப் பெண்களைச் சூறையாட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குக் கூட அவர் இறங்கியிருக்கிறார். மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்குக் கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.

ஜனநாயக அரசியலில் ஒரு பாலபாடம் உண்டு. அதாவது, ‘அனைவரையும் உள்ளடக்கும் அரசியலுக்கு(Inclusive Politics) எவரெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஜனநாயகத்துக்கும் எதிராகவே நிற்கிறார்கள்’ என்பதே அது!

சாவர்க்கர், அனைவரையும் உள்ளடக்கும் அரசியலுக்கு எதிராக நின்றவர். இங்கேயே பிறந்து, இங்கேயே வாழ்ந்து வரும் மாற்று மதத்தவர்களை`Others’என்று கூசாமல் சொன்னவர் அவர். `அவர்களுக்கு எந்த விதத்திலும் இந்த நாடு சொந்தமில்லை’ என்ற கருத்தாக்கத்தை, சாவர்க்கரின் எழுத்துகளில் திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. ஆகவே, அவர் இந்தியாவின் ஜனநாயகப் பண்புக்கு முற்றிலும் எதிரானவர்! இப்படிப்பட்டவருக்கு, அகிலத்தின் மாபெரும் ஜனநாயக நாட்டினரான நாம், பாரத ரத்னா கொடுத்து அழகு பார்க்கப் போகிறோமா? அப்படிச் செய்தால், நமக்கு அடுத்து வரும் தலைமுறையினர் நம்மைப் பற்றி என்ன மதிப்பு வைத்திருப்பார்கள்?

காந்தி ‘Power to people’  என்று சொன்னார் என்றால், சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு ‘Power over people’  என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர்.

போதாக்குறைக்கு, இந்தியாவை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உருவகித்தார் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது. பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. ‘இந்தியாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்’ என்று சில ஆய்வாளர்கள் சொல்வது அதனால்தான்!

இந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர் தான்! விவேகானந்தரும் அரவிந்தரும் திலகரும் `இந்துயிஸம்(Hinduism) என்று பேசியதை, `இந்துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர்.

இந்துயிஸத்தை, இந்து மதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றிப் பேசுவது, அதன் தத்துவங்களைப் பரப்புவது என்று வரையறுக்கலாம்.

ஆனால், இந்துத்துவம் அப்படியல்ல. அது, இந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் இந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, இந்துயிஸம் இந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், இந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத்தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது. இதை நோக்கியே, அந்த ‘Holy land’ என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.

இந்தியாவை முழுவதுமாக `இந்து மயமாக்குவதே’ சாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்குவது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர்களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதிகாரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர்.

`Hinduise all politics, Militarize Hinduism’ என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலைச் செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், இந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others’  என்று அழைத்து, `Self’ எனப்படும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக் கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, ‘Hindutva : Who is a Hindu’ புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் ‘Mein kampf’ என்ற புத்தகத்துக்கு இணையானது!

சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பதாகும்.

இத்தனைக்கும், சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும் கூட அவருக்குக் குறைவுதான். Agnostic  வகையைச் சேர்ந்தவர். அவரின் மனைவியும் மகனும் இறந்தபோது கூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்டக் குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர் சாவர்க்கர். `இது போன்ற நடவடிக்கைகளே இந்து மக்களை ஒருங்கிணைக்கும்’ என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்கிறார்.

கடவுளையே வணங்காதவர், கோயில் கட்டுமானங்களை ஏன் ஆதரித்தார் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம் அதுவேதான். அது, அவருக்கு ஓர் அரசியல் ஆயுதம்! இந்துத்துவத்தின் தந்திரமே அதுதான். அதற்கு, மதம் என்பது மக்களை அடக்கியாளும் ஓர் அரசியல் கருவி மட்டுமே. அதைக் கடந்து யோசிப்பதற்கு இந்துத்துவத்தில் எந்த இடத்தையும் ஏற்படுத்தி வைக்கவில்லை சாவர்க்கர்.

சாவர்க்கரின் இந்து சமுதாயமும் எப்படிப்பட்டது தெரியுமா? உயர்சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அது இருக்கும். ஏனென்றால், இந்து சமுதாயத்தின் அடித்தளமாக `வர்ணப் பாகுபாடு’ இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்கிறார் சாவர்க்கர். அந்த இந்து சமுதாயத்தின் முக்கிய மொழிகளும் கூட இந்தியும் சம்ஸ்கிருதமும்தான். கடவுளர்களும்கூட கிருஷ்ணனும் ராமனுமே! `பழங்குடி மக்கள் தங்களின் குலதெய்வத்தைத் துறந்துவிட்டு, ராம வழிபாட்டுக்கு மாற வேண்டும்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் சாவர்க்கர். `வறண்டு கிடந்த இந்து மதத்தை, சாதிதான் செழிப்பாக்கியது’ என்று சொல்லுபவராகவும் இருந்தார் அவர். அவரது தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் எல்லாமே, வெறும் பாவ்லா மட்டுமே! ஆங்கிலத்தில்`Escapism’  என்று அதைச் சொல்வார்கள். வெற்று, தப்பித்தல் வாதம்!

இது போதாதென்று, கறுப்பு நிறத்தவர்களை இந்துக்களாக ஏற்றுக் கொள்வதிலும் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்து பெண்களைப் பற்றியும் எங்கும் பெரிதாகப் பேசுவதில்லை சாவர்க்கர். `அவர்களின் கடமை அடுப்பங்கறை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுதல் மட்டுமே!’ என்பது சாவர்க்கர் கொண்டிருந்த எண்ணம். இத்தகையவரைத்தான், தனது அணிகலனாக இந்தியத் தாய் சூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இவற்றையெல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தாலும், அவரை அங்கீகரிப்பதற்கு மூன்று இடையூறுகள் இருக்கின்றன.

முதலாவது, அடிமைப்படுத்திய ஆங்கிலேயனிடமே `நான் உங்கள் சேவகன்’ என்று அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். இரண்டாவது, `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன’ என்று ஜின்னாவுக்கு பாயின்ட் எடுத்துக் கொடுத்ததும் கூட அவரேதான். மூன்றாவதுதான் மிக முக்கியமானது. அதாவது, தேசப்பிதா காந்தி கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முதல் மன்னிப்புக் கடிதம்!

1911-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்தமான் செல்லுலார் சிறையை வந்தடைகிறார் சாவர்க்கர். நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சன் கொலைக்கு, அவர் தூண்டுதலாக இருந்தார் என்பது வழக்கு. அப்போது, `ஆபத்தான கைதி’ என்று அவருக்கு அடையாளம் இடப்பட்டது உண்மைதான். ‘D’ என்பது அந்த கோட்வேர்ட். ஆனால், சாவர்க்கர் ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவராக ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை என்பதுதான் முரண்பாடு.

சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பது நாம் அறிந்தது தான். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார். அது இப்போது கிடைப்பதில்லை.

ஆனால், 1913-ல் அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில், `அடிபணிதல்’ வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன. `To : The home member of the government of India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், `சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்…’ என்று சொல்கிறார் சாவர்க்கர்.

பகத்சிங்

சாவர்க்கரைப் போலவே, பகத்சிங்கும் ஒரு கடிதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எழுதினார். லாகூர் சிறையிலிருந்து 1931ஆம் ஆண்டு அவர் அனுப்பிய கடிதம் அது. அதில், `உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களை போர்க்கைதிகளாக வகைப்படுத்துகிறது. ஆம், நாங்கள் போர்க்கைதிகள்தான். ஆகவே, எங்களை நீங்கள் தூக்கிலிடக்கூடாது. மாறாக, துப்பாக்கித் தோட்டாக்களால் சுட வேண்டும்’ என்று, அறிவித்தான் அந்த 23 வயது இளைஞன்.

அடுத்து, `இந்தப் போர் தொடரும்’ என்று அறிவித்துவிட்டு, `எங்களைக் கொல்லப்போகும் ராணுவ அதிகாரிகளை எப்போது அனுப்புகிறீர்கள்’ என்ற கேள்வியோடு அந்தக் கடிதத்தை முடிக்கிறார் அவர். கடிதத்தில் ஓர் இடத்தில், குறித்துக்கொள்ளுங்கள். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒருநாள் இங்கு, சோசியலிஸ சமுதாயம் மலரும்’ என்று கர்ஜிக்கிறான், அந்த மாவீரன்.

கடிதம் முழுவதுமே அப்படித்தான். அதிகமும் தேசத்தைப் பற்றித்தான் பேசுகிறார் பகத் சிங். இதற்கு லாகூர் சிறையும் ஒன்றும் சொகுசு சிறையல்ல. ஆனாலும், பகத்சிங் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. உதிரம் முழுவதும் விடுதலை வேட்கை ஓடும் ஒருவனின் வார்த்தைகள் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கின்றன பகத் சிங்கின் வார்த்தைகள். உறைவிட்டெழும் வாளென, நாண் தொட்டு புறப்படும் அம்பென பாய்கின்றன, அவன் சொற்கள்!

அப்படியே சாவர்க்கரின் வார்த்தைகளையும் பார்க்கவும். `நான் இப்படியெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்… கருணை காட்டுங்கள்… நல்ல படியாக நடந்துகொள்வேன்’ என்றெல்லாம் அந்நியனிடம் பணிகிறார் சாவர்க்கர். இவர் எப்படி பாரதத்தின் ரத்தினம் ஆவார்? `நீங்கள் என்னை விடுவித்தால், இந்தியாவில் உங்கள் புகழ் பெருகும்’ என்றெல்லாம்கூட ஆங்கிலேயர்களிடம் உருகியிருக்கிறார் சாவர்க்கர்.

1924-ல் அவரது விடுதலைக்குக் காரணமான மன்னிப்புக் கடிதம், இன்னும் உக்கிரமானது. `என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு நல்ல சேவகனாக இருப்பேன்’ என்று அதில் பட்டயமே எழுதித் தருகிறார் சாவர்க்கர். `நான் எவ்வளவு நன்றாக நடந்துகொள்ள முடியுமோ, அவ்வளவு நன்றாக நடந்துகொள்கிறேன்…’ என்றும்கூட வாக்குறுதி அளிக்கிறார். வெளிவந்த பின், அவர் அதைத்தான் செய்தார்.

சிறையிலிருந்து வெளியேவந்த பிறகுதான்`Hindutva: Who is a Hindu’ புத்தகத்தையே எழுதினார். அது, இந்தியாவை பிரித்தாளத் துடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு ஒரு கையேடாகவே உதவியது. ஜின்னாவுக்கும் அது ரெஃப்ரன்ஸாக மாறியது.

1926-ல் சாவர்க்கரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அது. பெயர், `Life of Barrister Savarkar’. அதை எழுதியவரின் பெயர் சித்திரகுப்தன். விநோதம் என்னவென்றால், அந்த சித்திரகுப்தனே சாவர்க்கர்தான். ஏனென்றால், அந்தச் சித்திரகுப்தன் அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எந்தப் புத்தகமுமே எழுதவில்லை. எழுதிய ஒரே புத்தகம் சாவர்க்கருடைய வரலாறு மட்டும்தான். சுயவரலாறு எல்லோரும் எழுதுவதுதான். ஆனால், அதை அவர்களின் பெயரில் எழுதுவது அல்லவா உலக வழக்கம்! தனது படத்தை தானே வணங்கிய நித்யானந்தாவைப்போல, தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதியவர் சாவர்க்கர். இதுதான் அவரது நேர்மை!

`அவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் தெரியுமா? தேசப் பணிக்காகவே அதைச் செய்தார்’ என்கிறார்கள் சிலர். அப்படி மன்னிப்புக் கேட்டு வெளியே வந்து சாவர்க்கர் செய்த மாற்றங்கள் என்று எதுவுமில்லை. ஆங்கிலேயனை எதிர்க்கும் எந்தச் செயல்களையுமே அவர் முழுவீச்சில் செய்யவும் இல்லை. மழைக்குப் பயந்து எலி வளைக்குள் ஒடுங்கிக் கொள்வதைப்போல, ஒடுங்கிக் கொண்டார். ஆங்கிலேயன் இந்தியாவைவிட்டு விலகும் வரை, அவருக்கு மழைக்காலம் போகவே இல்லை. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதிலிருந்து விவரமாக விலகி நின்றவர் சாவர்க்கர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

`காந்தி 4 வருடங்கள்தான் சிறையில் இருந்தார். ஆனால், சாவர்க்கர் 14 வருடங்கள் சிறையில் இருந்தார். அப்படியென்றால், யார் பெரிய தேசபக்தர்’ என்றும் கேட்கிறார்கள். இதில் இருக்கும் தகவல் சரி, ஆனால், பார்வை தவறு. காந்தி ஒரே முறையாக 4 வருடங்கள் சிறையில் இருக்கவில்லை. மொத்தம் பதினொரு முறை அவர் சிறைக்குச் சென்று திரும்பினார். தென்னாப்பிரிக்கச் சிறைகளும் அதில் அடக்கம்.

ஒன்றை கவனிக்கவும். ஒவ்வொரு முறையும் ஒரு போராட்டம், அதில் விசாரணை, அதற்குப் பிறகு தண்டனை என்று சிறை சென்றவர் அவர். அவர் சிறை சென்றபோதெல்லாம், மக்கள் கொதித்தெழுந்தார்கள். காந்தியை விடுவிக்கக்கோரி போராடினார்கள். அவரும் தன் பங்குக்கு சிறை சீர்திருத்தம் என்று களமிறங்கினார். ஆக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கண்முன்னால் இருந்த ஒரே வழி, காந்தியை விடுவிப்பது மட்டும்தான். ஒரு தடவை காந்தி, நான்கு நாட்களுக்குள் மூன்று முறை கைது செய்யப்பட்டு திரும்பத் திரும்ப விடுவிக்கப்பட்டிருக்கிறார். அந்தளவுக்கு ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்குபவராக இருந்திருக்கிறார் காந்தி!

தென்னாப்பிரிக்காவில் காந்தி சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தபோது, காந்தியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வாசலில் திரண்டு நின்றார்கள் என்பது வரலாறு. அவர் பின்னால் எப்போதுமே மக்கள் இருந்தார்கள். ஏனென்றால், அவர், அவர்களின் மனங்களில் இருந்தார். 75 வயதிலும்கூட சிறைக்குச் செல்லும் துணிவை, அவருக்கு அளித்தது அந்த மக்களின் அன்புதான்!

எல்லாவற்றுக்கும் மேலே, `நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் தொடர்ந்து செய்வேன்’ என்று, ஆங்கிலேயனின் நீதிமன்றத்தில் நெஞ்சம் நிமிர்த்தி அறிவித்தவர் காந்தி!

ஆனால், சாவர்க்கர் விவகாரம் அப்படியல்ல! அவருக்காக யாரும் இங்கே கொதித்தெழவில்லை. சாவர்க்கரை விடுவிக்கக் கோரி ஒரு போராட்டம்கூட இங்கே நடக்கவில்லை. ஏன், அவரது தரப்பினரேகூட அவரை மறந்துவிட்டிருந்தார்கள். சாவர்க்கருக்கும் மக்கள் செல்வாக்குக்கும் காத தூரம். சாவர்க்கர் என்றொருவர் இருக்கிறார் என்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. அறியும் அளவுக்கு சாவர்க்கரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் பேசியதெல்லாம் வன்முறை, வெறுப்பு, பிரிவினை மட்டும்தான்.

சிறைக்குள்ளேயும் அவர் அதைத்தான் செய்தார். கைதிகளை இஸ்லாமியர், இந்துக்கள் என்று பிரித்துப் பார்த்து வேலையைக் காட்டினார். இது, அவர் எழுதிய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்திலேயே பதிவாகியிருக்கிறது. `இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில், சங்கநாதம் எழுப்புங்கள் என்று இந்துக்களை அவர் தூண்டினார்’ என்று, அவரது ஆதரவாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் யார்?

ஜின்னாவுக்கு முன்பே, இரண்டு தேசங்கள் கோட்பாட்டை முன்மொழிந்தவர் சாவர்க்கர்தான். நன்றாகக் கவனிக்கவும். ஜின்னாவை வழிமொழியவில்லை சாவர்க்கர். அவர்தான் முன்மொழியவே செய்கிறார். அந்த `Holy land’  கருத்தாக்கத்திலேயே, இரண்டு தேசங்களுக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதையே, பின்னாளில் அரசியல்வெளியில் விரித்தெடுத்தார் ஜின்னா. அதாவது, கல்லை உரசி நெருப்பைப் பற்றவைத்தார் சாவர்க்கர். ஜின்னா அதை ஊதிப் பெரிதாக்கினார். அவ்வளவுதான்.

உண்மையில் 1939-ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான், `இரண்டு தேசங்கள்(Two Nations)’ எனும் தீர்மானத்தையே போடுகிறது, முஸ்லிம் லீக். ஆனால், 1937-ம் ஆண்டே, `இரண்டு தேசங்கள்’ தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது, இந்து மகா சபா. சாவர்க்கர் அப்போது அதன் தலைவர். 1937-ம் ஆண்டின் முற்பகுதியில், அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர், `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களுடையது, இன்னொன்று முஸ்லிம்களுடையது’ என்று பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனமே பின்னர் தீர்மானமானது.

அடுத்து காட்சிக்கு வருகிறார், மாதவ சதாசிவ கோல்வால்கர். சாவர்க்கரின் சிஷ்யப்பிள்ளை இவர். கோல்வால்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?

`இந்துப் பெரும்பான்மை அடையாள அரசியலே உண்மையான தேசியவாதம். அது அல்லாத எந்த அரசியலும் இந்தியாவுக்கு விரோதமானது’ என்று இன்னொரு குண்டைத் தூக்கி வீசுகிறார். இவர்களின் இதுபோன்ற கூற்றுகளுக்குப் பிறகுதான், ஜின்னா அதிக நம்பிக்கை கொள்கிறார். `அவர்களே சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன?’ என்று பிரிவினைக்கத்தியை இன்னும் ஆழமாக இந்தியாவின் நெஞ்சில் ஜின்னா இறக்க ஆரம்பித்தது 1940-களுக்குப் பிறகே!

இன்னுமொரு தகவல். 1945-ம் ஆண்டு இன்னும் எல்லையைக் கடக்கிறார் சாவர்க்கர். `ஜின்னாவின் இரண்டு தேசங்கள் எனும் கருத்தாக்கத்தில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. நாம் இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் இன்னொரு தேசம்’ என்கிறார்.

இங்கே நாம் இன்னொன்றைப் பார்க்க வேண்டும். இன்றுவரை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏன் பாரத ரத்னா மறுக்கப்படுகிறது? எம்.ஜி.ஆரால் அடைய முடிந்த அந்த விருதை அவரின் ஆசான்களான அவர்களால் ஏன் அடைய முடியவில்லை? இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒரே ஒரு விஷயம்தான். அதாவது, `அவர்கள் பிரிவினை பேசினார்கள்’ என்பது. பெரியாரும் அண்ணாவும் பேசியது பிரிவினை என்றால், சாவர்க்கர் பேசியதற்கு பெயர் என்ன? பெரியார், அண்ணாவுக்கு ஒரு நியாயம், சாவர்க்கருக்கு ஒரு நியாயமா? அதெப்படி ஒரே விஷயத்தில் இரண்டு நியாயங்கள் இருக்க முடியும் என்பதே நாம் எழுப்பும் கேள்வி!

காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர்

கடைசியாக, காந்தி கொலை!

காந்தி கொலையில் சிக்கியவர்கள், மொத்தம் 9 பேர். நாதுராம் கோட்சே, அவரின் சகோதரர் கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா, ஷங்கர் கிஸ்தயா, தத்தாத்ரேயா பர்சுரே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இன்னொருவர் இருக்கிறார். அவர் திகம்பர் பாட்ஜே. இந்த பாட்ஜே மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், இவரது வாக்குமூலம்தான் கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த தொடர்பை, தெள்ளத்தெளிவாகக் காட்டியது.

பாட்ஜேவின் வாக்குமூலம் இதோ!

`1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14-ம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பேயில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும் முடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கோட்சே என்னிடம் சொன்னார்’. `Gandhi and Nehru should be finished’என்ற வார்த்தையையே வாக்குமூலத்தில் சொல்கிறார் பாட்ஜே. அந்த ஜனவரி 14-ம் தேதிதான், கோட்சேவின் கைக்கு துப்பாக்கியும் வந்து சேர்கிறது.

அடுத்த சந்திப்பு, ஜனவரி 17-ம் தேதி நடக்கிறது. இப்போதும் அதே மூவர்தான் செல்கிறார்கள். இந்த முறை பாட்ஜே, சதனுக்குள் நுழைந்து, முகப்புப் பகுதியில் நிற்கிறார். 10 நிமிடம் கழித்து கோட்சேவும் ஆப்தேவும் மாடி அறையில் இருந்து வெளியே வருவதை, பாட்ஜே கவனிக்கிறார். அவர்களுக்கு முன்னால் நின்றபடி ஒரு மனிதர் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது முகம் பாட்ஜேவுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், குரல் நன்றாகக் கேட்கிறது. அந்த நபர், மராத்தியில் பேசுகிறார். `வெற்றியுடன் திரும்புங்கள்’ என்று, அவர் இருவர்களிடம் சொல்லும் வார்த்தை பாட்ஜேவின் காதில் விழுகிறது.

அடுத்து, ஜனவரி 20-ம் தேதி, காந்தியைக் கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதைச் செய்தது, மதன்லால் பஹ்வா. `விஷ்ணு கர்கரேவால் சாவர்க்கரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன் அவன்’ என்பது, சாவர்க்கரின் உதவியாளர்களான ராமச்சந்திர காசரும் விஷ்ணு தம்லேவும் அளித்த வாக்குமூலம். ஆனால், அந்த முயற்சி தப்புகிறது. பஹ்வா கைது செய்யப்படுகிறான். ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்படுகிறார். கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட மூன்று குண்டுகள் அதைச் செய்கின்றன.

பாட்ஜேவை `நம்பகமான சாட்சி(Trustful Witness)’’ என்றே வரையறுக்கிறார், விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி ஆத்ம சரண். ஆனால், அவரது சாட்சியத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள், கிடைக்காமல் போகின்றன. இதன் அடிப்படையிலேயே, சாவர்க்கர் விடுவிக்கப்படுகிறார்.

உண்மையில், கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த உறவு குரு – சிஷ்யன் வகையிலானது. இந்து மகாசபா கூட்டங்களுக்கு, கோட்சேவையும் ஆப்தேவையும் அழைத்துச் செல்வதில், அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார் சாவர்க்கர். ஆனால், காந்தி கொலைக்குப் பிறகு, இருவருக்கும் இடையே விரிசல் உண்டாகிறது. காரணம், சாவர்க்கரின் சந்தர்ப்பவாத வாக்குமூலம்!

கோபால் கோட்சேவின் வழக்கறிஞர் இனாம்தார், நாதுராமின் அப்போதைய மனவோட்டம் என்னவாக இருந்தது என்பதைப் பதிவு செய்கிறார். `நாதுராம் சிறையில் தனிமைப்பட்டுக் கிடந்தார். அவருக்கு அப்போது தேவைப்பட்டது அவரது கையை அன்பாகத் தொட்டு உரையாடக்கூடிய அவரது குருவின் சொல். ஆனால், அது நடக்கவில்லை. அந்த வருத்தத்தை சிறையில் என்னைச் சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார் நாதுராம்’ என்கிறார் அவர்.

தண்டனைக்குப் பயந்து தற்கொலை

1964, அக்டோபரில் கோபால் கோட்சே விடுதலையானார். அடுத்த மாதமே, அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடக்கிறது. அதில், `காந்தியைக் கொல்வதன் அனுகூலங்களை எனக்கு விளக்கினான் நாதுராம்’ என்று சொல்கிறார் கோபால் கோட்சே. விவகாரம் மீண்டும் வெடிக்கிறது. நீதிபதி ஜேஎல் காபூர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, காந்தி கொலை மறு விசாரணை செய்யப்படுகிறது. இது நடந்தது 1965 மார்ச் மாதம்.

அடுத்த வருடம், பிப்ரவரி மாதம் சாவர்க்கர் இறக்கிறார். உணவையும் தண்ணீரையும் மறுத்து வலுக்கட்டாயமாக அவர் அந்த மரணத்தைத் தேடிக்கொள்கிறார். அவர் அந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம், காபூர் கமிட்டியால் அவர் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டிருந்தார் என்பது. இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால், காபூர் கண்டிப்பாக சாவர்க்கர் கையில் விலங்கு மாட்டியிருப்பார். காபூர் அறிக்கையின் ஆறாம் அத்தியாத்தில், `Background of the accused’  என்றொரு பகுதி இருக்கிறது. அதில், காந்தி கொலையில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு, விரிவாகவே பேசப்படுகிறது.

இவ்வளவு ஏன்? 1966-ல் கோபால் கோட்சேவின் `Gandhi’s murder and I’என்ற புத்தகம் வெளியானது. அதில், `1929 ரத்னகிரியில் இருந்தபோதிலிருந்தே சாவர்க்கருக்கும் நாதுராமுக்கும் நல்ல பழக்கம். தனிப்பட்ட முறையில் தினமும் நிறைய பேசிக்கொள்வார்கள்’ என்று சொல்கிறார் கோபால் கோட்சே. ஆகவே, காந்தி கொலைக்கு சாவர்க்கர் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தார் என்பது உறுதியாகிறது.

காந்தி மீதான சாவர்க்கரின் பகைக்கு மிக முக்கியக் காரணம், அவரது அகிம்சை! வாழ்வு முழுதுமே, `Hindu Masculinity (இந்து வீரம்)’ என்பது குறித்து தீவிரமாகப் பேசுகிறார் சாவர்க்கர். ஒன்று தெரியுமா? சாவர்க்கர் பசு வழிபாட்டைக் கடுமையாக எதிர்த்தவர். அதற்குப் பின்னால் இருந்தது, பன்முகத்தன்மையைப் பேணும் அக்கறை என்று தவறாக நினைக்க வேண்டாம். `பசுவை வணங்கினால் பசுவைப் போலவே நாமும் சாந்தமாகிவிடுவோம்’ என்று அவர் எண்ணியதே, அதற்குக் காரணம். அந்த அளவுக்கு அகிம்சை அவருக்கு ஆகாத ஒன்றாக இருந்தது.

அவர் ஆரம்ப காலத்தில் அங்கம் வகித்த, அபினவ் பாரத் அமைப்பு, அடிப்படையிலேயே வன்முறையைப் போற்றும் அமைப்பு. அதிலிருந்து கிளைத்து எழுந்து வந்தவர் அவர்! இந்துக்களை வீரம்மிக்க ஒரு சமுதாயமாகவே அவர் உருவகித்தார். `பள்ளிகளில் படிப்பைவிட உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று அவர் குரல் கொடுத்தது, அதற்காகவே. கனவு வெளியில், வேதகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர் அவர். ஆகவே, அகிம்சை அவருக்கு பிடிக்கவில்லை.

இப்படிப்பட்டவர், வீரம்செறிந்த நேதாஜியுடன் இணைந்திருக்கலாமே என்ற கேள்வி, சிலருக்கு எழலாம். அந்தக் கேள்வி நியாயமான ஒன்று. ஆனால், அங்கேதான் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, காந்தியைப்போலவே, நேதாஜியும் உடையாத, மதச்சார்பு இல்லாத ஒரு இந்தியாவை கனவு கண்டவர். நேதாஜியின் அகிம்சையைக் காந்தி சந்தேகித்தாரே ஒழிய, அவரது மதச்சார்பற்ற தன்மையை அவர் எப்போதுமே சந்தேகித்ததில்லை. நேதாஜியின் படையில் இஸ்லாமியர்களும் அதிகளவில் பங்கெடுத்ததற்கு, அவரது மதச்சார்பற்ற தன்மையே காரணம். அது, சாவர்க்கரின் பிரித்தாளும் கொள்கைக்கு உவப்பானதாக இல்லை. அதுவும் இல்லாமல், சாவர்க்கர் களவீரரும் அல்ல. அவர் எப்போதுமே பின்னால் இருந்து இயங்குபவர். தூண்டிவிடுவதில் சமர்த்தர். `Man in the chair’ என்போம் அல்லவா, அதே போன்றவர்.

இன்னொன்று தெரியுமா? அவர், இந்தியாவில் வைத்து கைது செய்யப்படவில்லை. லண்டனில் வைத்துதான் கைதானார். வில்லியம் கர்சனின் கொலையாக இருக்கட்டும், ஜாக்சனின் கொலையாக இருக்கட்டும், அவர் நேரடியாகச் செயலாற்றவே இல்லை. அதற்குரிய அத்தனை உதவிகளையும் செய்தார், திட்டங்களை வகுத்தார். `20 துப்பாக்கிகளை அவர் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பினார்’ என்கின்றன, தரவுகள். ஆனால், எங்குமே காட்சிக்கு வராமல் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டார் சாவர்க்கர். அந்தமான் சிறையிலும்கூட தூண்டிவிடும் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். சக கைதிகளை உண்ணாவிரதத்துக்குத் தூண்டிவிட்டுவிட்டு, அவர் உணவருந்த சென்ற நிகழ்வும்கூட நடந்திருக்கிறது.

ஆகவே, இதுதான் சாவர்க்கர்! இவைதான் அவரது அரசியல்! மக்களைப் பிரித்தாளும் சித்தாந்தம், களத்துக்கு வராமல் பின்னே இருந்து இயங்குவது, மாட்டிக்கொண்டால் சீடனாகவே இருந்தாலும் கழட்டிவிடுவது என்று இருந்தவர் சாவர்க்கர். அவரது சித்தாந்தத்தாலோ, அவரது செயற்பாடுகளாலோ இந்தியாவுக்கும் எந்தப் பயனுமில்லை.

இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், `சாவர்க்கருக்கு பாரதரத்னா கொடுத்தால் என்ன தப்பு’ என்று கேட்பவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குறைந்தபட்சம் ஒன்றை மட்டுமேனும் உணர்வோம். சாவர்க்கர் முன்னே எழுந்துவரும் ஒவ்வொருமுறையும் அசோகர் புதைக்கப்படுகிறார், அவரது தத்துவம் புதைக்கப்படுகிறது. ஒன்றை யோசிப்போம். அகிலத்தின் எத்தனையோ நாடுகளில் ஜனநாயகம் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் சூழலில், இந்தியா மட்டும் எப்படி அதை இன்னும் தக்கவைத்திருக்கிறது? காற்றடித்தாலும் மழையடித்தாலும், இந்தியாவின் ஜனநாயக தீபம் மட்டும் தொடர்ந்து ஒளிர்வது எப்படி? காரணம் எளிது. ஏனென்றால், இந்தியாவின் மரபிலேயே ஜனநாயகப் பண்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. கட்டியவர், அந்த மகா சக்கரவர்த்தி அசோகர்! அவரும் ஓர் அரசர்தான். ஆனால், மற்ற அரசர்களிடம் இருந்து அசோகர் எங்கே வேறுபடுகிறார் தெரியுமா. மக்களின் மீதான அபிமானத்தில் வேறுபாடுகிறார். மரபை சீரமைத்து முன்னெடுத்துச் சென்றதில், வேறுபடுகிறார். கலிங்கத்தின் தயா நதிக்கரையில் இறந்து மிதந்த மனித உடல்களைக் கண்டு, ‘என்ன செய்துவிட்டேன் நான்…’ என்று வருந்திய குரலில், வேறுபடுகிறார்.

ஆம். இத்தேசம் அசோக தத்துவத்தால் கட்டமைப்பட்டது! `வரலாற்றை நிறைத்து நிற்கும் எத்தனையோ பேரரசர்களின் பெயர்களின் மத்தியில், அசோகர் மட்டுமே ஒரு வீழாநட்சத்திரமென தனித்து ஒளிர்கிறார்’ என்று ஆய்வாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் விழிவிரித்து கூறினாரே, அந்த அசோகரின் தத்துவத்தால் கட்டமைக்கப்பட்டது! இதை உணர்ந்தே, சிவாஜியை இடதுபக்கமும் அக்பரை வலது பக்கமும் ஒதுக்கிவிட்டு, அசோகரை இந்தியாவுக்கு அடையாளமாக்கினார் நேரு. தர்ம சக்கரம் சுழலும் அந்தச் சிங்கச்சிலையை இந்திய சின்னமாக்கி, `எழுக அவர் வேதம். எக்குடியும் என்குடியே என்றுரைக்கும் அசோகவேதம்’ என்று நேரு அறிவித்தபோது, இந்திய அன்னை துள்ளிக்குதித்து கூத்தாடினாள். சாவர்க்கர் வழிபாடு, அவளின் அந்த சந்தோஷத்தைக் கண்டிப்பாக நிர்மூலமாக்கும். 2000 ஆண்டுகளாக இந்த மண்ணில் ஊறி நின்றிருக்கும் மகத்துவத்தை, அது 20 வருடங்களுக்குள் அழித்தொழிக்கும்.

அறிக… அசோகரே புதைகிறாரென்றால் காந்தியும் இருக்கப்போவதில்லை. நேருவும் அகன்றிருப்பார். அம்பேத்கரும் கூட கைவிட்டிருப்பார். இது உருவாக்கப்போகும் விளைவை, நம்மால் இப்போது உணர முடியாது. ஹிட்லரின் ஜெர்மனியாக, நத்தேன்யாஹூவின் இஸ்ரேலாக இத்தேசம் மாற்றப்பட்ட பிறகுதான், நமக்கு அந்த உணர்வு எழும். ஆனால், அப்போது எல்லாமே கையைமீறிப் போயிருக்கும். நமக்கான கங்கைகளைத் தேடி நாம் அலையத் தொடங்கியிருப்போம். நாசிக்குள் புகுந்து நம்மை நிலைகுலையச் செய்யும் ரத்தத்தின் வீச்சத்தை நம்மால் கடக்கவே முடியாமல் இருக்கும். அது வீடோ, அலுவலகமோ, பேருந்தோ, ரயிலோ, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெறுமனே அமர்ந்திருப்போம். உண்ணச் சென்றால், தட்டில் இஸ்லாமிய குழந்தையின் உடைக்கப்பட்ட வெள்ளெலும்பு உணவென நெளியும். உறங்கச் சென்றால், கிறிஸ்துவ குழந்தையின் உரிக்கப்பட்ட தோல், படுக்கை விரிப்பென விரியும். அரண்டு ஓடிவந்து வெட்டவெளியில் நின்று, வான்நோக்கி இறைஞ்சுவோம், `அய்யோ… அப்போதே உணரத் தவறிவிட்டோமே…’ என்று. அதைக் கேட்கவும் அப்போது நாதியிருக்காது. கடவுளால் தனித்துவிடப்பட்டிருப்போம். அறத்தால் தள்ளிவைக்கப்பட்டிருப்போம். மனிதர்களை மதத்தாலும், இனத்தாலும் பிரித்து அரசியல் செய்த அரக்கர்களின் பின்னால் நின்ற அத்தனை பேருக்கும் கடைசியில் எஞ்சுவது, தீரா பழிச்சொல்லும், விலகா பெரும் பாவமுமே!

அது நமக்கு உவப்பென்றால், சாவர்க்கருக்கு பாரதரத்னா அளிப்போம். அடுத்து, கோல்வால்கருக்கும். கடைசியாக, கோட்சேவுக்கும்!

—————————————————————————————————————————————————————————————————————

ஆய்வுக் கட்டுரை

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாதா?

சபீர் அலி

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் ஃபத்வா ஒன்று பரவிவருகிறது.

“நாற்காலியில் அமர்ந்து தொழுவது அறவே கூடாது” என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் அதற்கான ஆதாரங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

அவர்கள் அதில் குறிப்பிடும் ஆதாரங்கள் ஏற்புடையதா? நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாதா? என்பன போன்ற தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

மார்க்கத்தில், நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்பதற்கு ஆதாரங்கள் இருப்பின் அதை அமல்படுத்துவதில் தவ்ஹீத் ஜமாஅத் முன்னோடியாக இருக்கும். அல்லது நாற்காலியில் அமர்ந்து தொழுவது மார்க்க அடிப்படையில் தவறு என்று சுட்டிக்காட்டும் போது அதை எவ்வித சுய விருப்பு வெறுப்புமின்றி ஏற்றுக் கொள்வதிலும் தவ்ஹீத் ஜமாஅத் முதன்மை வகிக்கும்.

ஆனால், இந்த விஷயத்தில் தாங்கள் வழங்கும் தீர்ப்பிற்குச் சான்றாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும்  அந்தத் தீர்ப்பை அறவே வழங்கவில்லை.

ஒரு ஆதாரத்தை எடுத்து வைக்கும்போது நாம் எடுத்து வைக்கும் ஆதாரத்தில் என்னென்ன கருத்துக்கள் கிடைக்கிறதோ அதை வைத்துத்தான் மார்க்கத் தீர்ப்புகள் வழங்க வேண்டும். ஒரு ஆதாரத்தைக் குறிப்பிட்டுவிட்டு, இதை இவர் அவ்வாறு விளங்கினார். அவர் இவ்வாறு விளங்கினார். அதனால் நாமும் இதை அவர் விளங்கியதைப் போன்றே விளங்கி ஆதாரமாக்க வேண்டும் என்று ஆதாரம் காண்பிக்கக் கூடாது.

ஒரு செய்தியிலிருந்து யாரோ ஒருவர் விளங்கிய தகவல் அந்தச் செய்தியில் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர அதில் இல்லையென்றாலும் அந்த இமாம் விளங்கியுள்ளார் அல்லவா என்று அந்த விளக்கத்தை ஆதாரமாக ஆக்ககூடாது.

மனிதர்களின் விளக்கங்களை ஆதாரமாக எடுப்பது மிகப் பெரிய வழிகேடாகும் என்பதைப் புரிந்து கொண்டு கட்டுரைக்குள் செல்வோம்.

இயலாத போது அமர்ந்து தொழலாம்

இஸ்லாம் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக, தொழுகை எனும் வணக்கத்தைக் கடமையாக்கி அதன் முறைகளையும் நமக்குக் கற்றுத் தருகிறது.

தொழுகை என்பது நின்று, குனிந்து, தரையில் முகம் பதித்து, அமர்ந்து என்று பல முறைகளை உள்ளடக்கிய ஒரு வணக்கமாகும்.

இதில் முக்கியப் பங்காக நிற்றல் என்பது இருக்கிறது. அதனாலே நிற்றல் என்பதைக் குறிக்கும் கியாம் என்ற வார்த்தை தொழுகையைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

நிற்றல் என்பது தொழுகையில் பெரும் பங்காற்றினாலும் நிற்க இயலாத சமயத்தில் அமர்ந்தோ, படுத்தோ தொழுவதற்கும் மார்க்கம் அனுமதியளிக்கிறது.

இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எனக்கு மூல வியாதி இருந்தது. அகவே நான் தொழுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுவீராக! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழுவீராக! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழுவீராக!என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 1117

ஒருவருக்கு அமர்ந்து தொழ இயலாத போது அமர்ந்தோ, படுத்தோ தொழலாம் என்று மார்க்கம் சலுகை வழங்குகிறது.

இயலவில்லையென்றாலும் தொழுகையை விட்டுவிடக்கூடாது என்பதற்காக, தொழுகையை இலகுவாக்கி மார்க்கம் சலுகையளிக்கிறது.

நின்று தொழ இயலாதவர் அமர்ந்து தொழட்டும் என்பதுதான் மார்க்கக் கட்டளையே தவிர தரையில் தான் அமர வேண்டும், நாற்காலியில் அமரக்கூடாது என்பது இல்லை.

அமர்ந்து தொழ வேண்டும் என்ற பொது கட்டளையிலிருந்து, நாற்காலியில் அமரக்கூடாது என்று ஒரு தடையைச் சொல்கிறார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை அவர்கள் குர்ஆன் ஹதீஸிலிருந்து நிறுவ வேண்டும்.

அவ்வாறு, நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்பதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அவர்கள் சொல்லும் கருத்தைத் தருகின்றனவா என்று இக்கட்டுரையில் காண்போம்.

இவ்விஷயத்தில் முதன்மை ஆதாரமாக அவர்கள் வைப்பது, தொழுகையில் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரமாகும்.

ஆதாரம் 1

இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவுடன் இருப்பார்கள்.

அல்குர்ஆன் 23:1, 2

இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டிவிட்டு பின்வரும் விளக்கத்தை அளிக்கிறார்கள்.

தொழுகை என்பது தன்னை முற்றிலும் மறந்து, இறைவனுக்கு முன்னால் தன் பணிவை வெளிப்படுத்தி அவனை வணங்குவதாகும். தொழுகையில் உள்ள ஒவ்வொரு செயல்களும் இதையே உணர்த்துகின்றன. இதுவே (குஷுவு) என்னும் உள்ளச்சமாகும்.

மேலும் உள்ளச்சம் என்பது தொழுகையாளி தன் பணிவை வெளிப்படுத்தி பார்வையை கீழ் தாழ்த்தியும் உடல் அங்கங்களை அமைதியாக வைத்து குரலை தாழ்த்துவதாகும். (ஷாமி2/407)

நாற்காலியில் அமர்ந்து தொழுவதினால் மேற்கூறப்பட்ட (குஷுவு) உள்ளச்சத்தின் வெளிப்பாடுகள் இல்லாமல் ஆகிவிடுவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

ஆதாரம்: 2

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்குப்  பணிந்தவர்களாக நில்லுங்கள்.

அல்குர்ஆன் 2:238

இந்த வசனத்தை எடுத்துக் கூறி மேற்படி முதலாவது ஆதாரத்தின் மூலம் சொல்லும் வாதத்தையே வேறு வார்த்தையில் கூறுகிறார்கள்.

சில உலமாக்கள் மேற்கண்ட ஆயத்திற்கு அல்லாஹ்வுக்கு முன் ஒழுங்காக நில்லுங்கள் என்று அர்த்தம் செய்துள்ளார்கள். (மஆரிஃபுல் குர்ஆன் 1/236)

قومو ا لله قانتين

என்பதன் விளக்கவுரை: அல்லாஹ்விற்கு முன்னால் பணிவுடனும் ஒழுக்கமாகவும் நின்றுகொள்ளுங்கள்.

பூமியில் அமர்ந்து தொழும்போது பணிவும், ஒழுக்கமும் ஏற்பாடுகின்றன.

நாற்காலியில் இந்த நிலை ஏற்படாததால் அவற்றில் அமர்ந்து தொழுவது கூடாது.

தொழுகை என்பது வணக்கமாகும் (அப்த்) என்ற வார்த்தையின் பொருள் அடிமையாகும். அடிமையிடம் அடிமைத்தனம் வெளிப்படவேண்டும். நாற்காலியில் அமர்ந்து தொழும்போது அடிமைத்தனம் வெளிப்படுவதில்லை. எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது.

இதுவே அவர்களது முதல் மற்றும் இரண்டாம் வாதமாகும்.

தொழுகைக்குப் பணிவு என்பது அவசியம்தான் மாற்றுக் கருத்தில்லை. இதைத் திருக்குர்ஆனின் வசனங்கள் வலியுறுத்துகின்றன.

பணிவு என்றால் என்ன என்பதை அறியாமல் தான் நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவுக்கு எதிரானது என்று கருத்துருவாக்குகிறார்கள்.

அல்லாஹ் தன்னை வணங்குவதற்கு என்னென்ன முறைகளை கற்றுத் தந்துள்ளானோ அவற்றைக் கடைபிடித்து தனது உள்ளத்தால் தனது இறைவனுக்கு அஞ்சி வணங்குதுதான் பணிவாகும்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது என்பது இறைவன் கற்றுத் தந்த முறையல்ல என்று நிறுவினால்தான், அது தொழுகையில் கடைப்பிடிக்கப்படும் பணிவுக்கு எதிரானது என்று கூற முகாந்திரம் இருக்கும்.

அதை நிறுவாமலே நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவுக்கு எதிரானது என்றால், அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி விடையில்லாமல் நின்றுக் கொண்டே இருக்கும்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவிற்கு எதிரானது என்று இவர்கள் சொல்வதைப் போன்று இருக்குமென்றால் நபிகள் நாயகம் நிச்சயம் இத்தகைய முறையில் தொழுதிருக்க மாட்டார்கள்.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பயணத்தில் வாகனத்தின் மீதே அமர்ந்து தொழுதுள்ளார்கள் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து அது தாம் செல்ல வேண்டிய திசையில் தமது தலையால் சைகை செய்து உபரியானத் தொழுகைகளைத் தொழுவார்கள்என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 1105

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்’’ எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1131

ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்து அது செல்லும் திசைநோக்கி (உபரியான தொழுகைகளை) தொழுவதை நான் பார்த்திருக் கிறேன் என்று ஆமிர் பின் ரபீஆ(ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 1093

நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு தம் வாகனம் செல்லும் திசையில் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். ஆனால் கடமையான தொழுகைகளைத் தவிர! தமது வாகனத்தின் மீதமர்ந்தே வித்ருத் தொழுவார்கள் என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1000

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது (அமர்ந்து சைகை செய்தவாறு) அது செல்கின்ற திசையை நோக்கி (உபரித் தொழுகைகளை) தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையானத் தொழுகையினை அவர்கள் தொழநாடும் போது (வாகனத்திலிருந்து) இறங்கி, கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள் என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 400

மேற்படி செய்திகள் அனைத்திலும் நபி (ஸல்) அவர்கள் தனது வாகனத்தின் மீது அமர்ந்து தொழுதுள்ளார்கள் என்று தெரிகிறது.

அன்றைய காலத்தில் வாகனங்கள் என்பது குதிரை, ஒட்டகம், கோவேறுக் கழுதை ஆகியவைதான். அந்தக் கால்நடைகள் சென்று கொண்டிருக்கும் போது அதன் மேல் அமர்ந்திருப்பவர்கள் அப்படியே இருந்தவாறு தொழுது கொள்ளலாம்.

நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவற்ற முறையென்றால் வாகனத்தில் செல்லும் போதே தொழுவதும் அதை விடப் பணிவற்றது என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு தொழுவது பணிவற்ற முறை என்றால் நிச்சயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

எனவே, நாற்காலியில் அமர்ந்து தொழுவதோ, பயணிகள் வாகனத்தில்  பயணித்துக் கொண்டிருக்கும் போது தொழுவதோ தடை செய்யப்பட்டது அல்ல என்பதை நபி(ஸல்) அவர்களின் இந்தச் செயல் அழகாக எடுத்துச் சொல்கிறது.

நபி (ஸல்) அவர்கள் இதை உபரியான தொழுகையில்தானே கடைப்பிடித்தார்கள். கடமையான தொழுகையின் நேரம் வந்ததும் கீழே இறங்கித்தானே தொழுதார்கள் என்ற கேள்வியை மேற்படி செய்திகளிலிருந்து எழுப்பலாம்.

அந்தக் கேள்வியை எழுப்பினாலும் நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்ற இவர்களது வாதம் வலுப்பெற்றுவிடாது.

ஏனெனில், நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையில் பேணப்படும் பணிவிற்கு எதிரானது என்றால் நபி (ஸல்) அவர்கள் அதை உபரியான தொழுகையிலும் கடைப்பிடித்திருக்க மாட்டார்கள்.

உபரியான தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் பணிவின்றி வாகனத்தில் தொழுதார்கள் என்று இவர்கள் சொல்வார்களா?

நபி (ஸல்) அவர்கள் கடமை மற்றும் கடமையல்லாத அனைத்துத் தொழுகையிலும் பணிவுடனும் இறையச்சத்துடனும்தான் நிறைவேற்றினார்கள்.

மேற்படி வாதத்தை எடுத்து வைத்தால் நபி (ஸல்) அவர்கள் கடமையல்லாத தொழுகையில் பணிவுடன் நடக்கவில்லை என்று இவர்கள் சொல்வதற்குச் சமமாகும்.

கடமையல்லாத தொழுகையை பொறுத்த வரையில் அமர்ந்தும் தொழுது கொள்ளலாம். நின்றும் தொழுதும் கொள்ளலாம். அதே சமயம் கடமையான தொழுகையை, சக்தியிருப்பவர்கள் நின்றுதான் தொழ வேண்டும்.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி நின்று தொழ சக்தியிருந்ததால் நின்று கடமையை நிறைவேற்றினார்கள். கடமையல்லாத தொழுகைகளை வாகனத்தில் அமர்ந்து நிறைவேற்றினார்கள். இவைதான் இந்தச் செய்திகளிலிருந்து நாம் தெரிந்து கொள்கின்ற சட்டங்களாகும்.

கடமையான தொழுகையை நின்று தொழ சக்தியில்லாவிட்டால் அமர்ந்தும், படுத்தும் தொழ வேண்டும் என்பதைதான் ஆரம்பத்தில் நாம் எடுத்துகாட்டிய இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள் செய்தி எடுத்துரைக்கிறது.

அமர்ந்து தொழுதல் பணிவிற்கும் அடிமைத்தனத்திற்கும் எதிரானது என்றால் இதை நபி(ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியும், செய்தும் இருக்க மாட்டார்கள்.

மேலும், நாற்காலியில் அமர்ந்து தொழுவது பணிவிற்கு எதிரானது என்பது இவர்களது வாதம் என்றால் நபி(ஸல்) அவர்கள் படுத்தே தொழ அனுமதி வழங்கியுள்ளார்களே? அதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

நாற்காலியில் அமர்ந்து தொழுவதே பணிவிற்கு எதிரானது என்றால் நபி (ஸல்) அவர்கள் படுத்து தொழ எப்படி அனுமதித்திருப்பார்கள்.

மேலும், இறைவனை நின்றும், அமர்ந்தும், படுத்தும் வழிபடலாம் என்று இறைவனே நமக்கு தெரிவிக்கின்றான்.

அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுக்கையிலும் அல்லாஹ்வை நினைக்கின்றனர். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றி ஆய்வு செய்கின்றனர்.  எங்கள் இறைவா! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுகின்றனர்.)

அல்குர்ஆன் 3:191

நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்துவிட்டால்  தொழுகையை நிலைநாட்டுங்கள்! தொழுகை, இறை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.

அல்குர்ஆன் 4:103

இவ்வாறு இறைவனே தெரிவித்திருக்க, அமர்வதும் படுப்பதும் எப்படி பணிவிற்கு எதிரானதாக இருக்கும்? படுத்து நிறைவேற்றுவதே கூடும் எனும் போது நாற்காலியில் அமர்வதற்கென்ன?

நின்று நிறைவேற்ற வேண்டிய தொழுகை எனும் வணக்கத்தை இயலாதவர் தனது இயலாமையால் விட்டுவிடாமல் எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்தச் செய்தியின் கருத்தாகவுள்ளது.

நின்று தொழ இயலாதவர் அமர்ந்து தொழுவார். தரையில் அமரக்கூட இயலாதவர் தான் நாற்காலியில் அமர்ந்து தொழுவார். படுக்கையில் இருப்பவர் படுத்தே தொழுவார். மொத்தத்தில் அவர் எப்படியாவது தொழுகையை நிறைவேற்றிவிட வேண்டும்.

இதைத்தான் அந்த ஹதீசும் வலியுறுத்துகிறது.

இயலாமையில் அமர்ந்து தொழலாம் என்ற பொதுக்கட்டளையை தரையில் அமர்ந்தும் வாகனத்தில் அமர்ந்தும் நபியவர்கள் நமக்குச் செய்து காட்டியுள்ளார்கள்.  இதில் பிரத்யேகமாக நாற்காலியில் மட்டும் அமர்ந்து தொழக்கூடாது என்றால் அதற்கான தெளிவான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

அவ்வாறு இவர்கள் எந்த ஆதாரத்தையும் தங்களது ஆக்கத்தில் நிறுவவில்லை.

நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்ற தங்களது வாதத்திற்காக அவர்கள் காட்டிய முதன்மை ஆதாரத்திலேயே அந்தக் கருத்துக்கள் இல்லை என்பதைச் சிந்திக்கவும்.

இது தொடர்பாக அவர்கள் எடுத்து வைக்கும் அடுத்தடுத்த ஆதாரங்களையும் அது பற்றிய தகவல்களையும் பார்ப்போம்.

ஆதாரம் 3, 4, 5

  1. ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற நிலையில் ஃபர்ளான தொழுகையை பூமியில் அமர்ந்தே நிறைவேற்றினார்கள். மேலும் நஃபில் தொழுகையை அமர்ந்தும் சைக்கினை செய்தும் நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு துல்ஹிஜ்ஜா மாதம் நபியவர்களின் காலில் காயம் ஏற்பட்டபோது பல நேரத் தொழுகையை தங்கள் வீட்டில் அமர்ந்தே தொழுதார்கள். அச்சமயம் நாற்காலி அவர்களிடம் இருந்தது. (முஸ்லிம் 876)

நபியவர்களின் வீடு மஸ்ஜிதின் அருகில் இருந்தும் கூட நோயின் காரணமாக தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றினார்கள்.

இவ்வாறே எவரேனும் பூமியில் அமர்ந்து தொழ முற்றிலும் சக்தியற்றவராக இருந்தால் அவர் வீட்டிலேயே அமர்ந்து தொழுது கொள்ளட்டும். (மஜ்ம உஜ்ஜவாயித் வமன்பவுல் ஃபவாயித்(2/149, அல் முஃஜமுல் அவ்ஸத் 3/28, முஸ்னத் அபியஃலா அல்மவ்ஸலி7/42)

  1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்க சென்றார்கள். அவர் தலையணையின் மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதை கண்ட நபியவர்கள் அதை தூக்கி எறிந்து விட்டார்கள். அவர் ஸஜ்தா செய்ய ஒரு குச்சியை எடுத்தார். அதையும் எறிந்து விட்டார்கள். பிறகு கூறினார்கள். உங்களால் முடிந்தால் பூமியில் ஸஜ்தா செய்து தொழுங்கள் இல்லையானால் சைகை செய்தால் போதுமானது. (ஸுனனுஸ் ஸகீர் லில் பைஹகீ 118/1, ஹுல்யதுல் அவ்லியா வதபகாது அஸ்ஃபியா92/7)
  2. ஹஜ்ரத் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு.

நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நோயாளியை சந்திக்கச் சென்றோம் அவர் தலையணை மீது ஸஜ்தா செய்து தொழுது கொண்டிருப்பதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைப் பார்த்துக் கூறினார்கள்:  உங்களால் முடிந்தால் பூமியின் மீது ஸஜ்தா செய்யுங்கள்! இல்லை எனில் சைகை செய்தால் போதுமானது.

உங்கள் ருகூவைக் காட்டிலும் ஸஜ்தாவிற்கு அதிகமாகக் குனிந்து தொழுங்கள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களிலும் நபியவர்கள் பூமியின் மீது அமர்ந்து தொழுகையை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்னத் அபியஃலா 3/345, அல் முதாலிபுல் ஆலியா 4/300,ம ஆரிஃபதுஸ்ஸுன் வல்ஆஸார்3/224)

எனவே நாற்காலியில் அமர்ந்து தொழுவது தொழுகையின் அடிப்படை நோக்கத்திற்கு மாற்றமானதாகும்.

மேற்படி செய்திகளில் எண். 3ல் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிமின் செய்தியைத் தவிர மற்ற செய்தியும், எண். 4 மற்றும் 5ல் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளும் பலவீனமானவையாகும்.

அந்த முஸ்லிமின் செய்தியின் முழுப்பகுதியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது அல்ல. அந்தச் செய்தியிலிருந்து தாங்கள் விளங்கிய கருத்தையே இங்கு எழுதியுள்ளார்கள். இந்த வார்த்தையைக் கொண்ட செய்தி முஸ்லிமில் இல்லை.

முஸ்லிமில் இடம்பெறும் செய்தி:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றர்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தனர். அப்போது (தொழுகை நேரம் வந்துவிடவே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடி தொழுவித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றவாறு தொழுதனர். உடனே உட்கார்ந்து தொழுமாறு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இமாம் பின்பற்றப் படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் குனிந்(து ருகூஉசெய்)தால் நீங்களும்  குனியுங்கள். அவர் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் உட்கார்ந்தவாறு தொழுதால் நீங்களும் உட்கார்ந்தவாறே தொழுங்கள்’’ என்று கூறினார்கள்.

முஸ்லிம் 699

இதுதான் முஸ்லிமில் இடம்பெறும் செய்தியே தவிர அவர்கள் எடுத்துக்காட்டுவது அல்ல. அது அவர்கள் விளங்கிய கருத்துதான்.

இந்தச் செய்தியில் நபியவர்கள் தமக்கு இயலாத போது அமர்ந்து தொழுதார்கள் என்று தான் உள்ளதே தவிர, நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்குத் தடையேதும் வரவில்லை.

எனவே, இந்தச் செய்தியும் நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்பதற்கு ஆதாரமாகாது.

மற்ற செய்திகள் பலவீனங்கள். ஒரு பேச்சுக்கு ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் அதிலும் தடையேதும் வரவில்லை. தரையில் அமர்ந்து தொழுதுள்ளார்கள் என்றுதான் வருகிறது.

அந்த பலவீனமான செய்திகளில் ஒன்றில், தலையணை மீது ஸஜ்தா செய்வதைத் தடுத்தார்கள் என்றுள்ளது. அந்தச் செய்தியிலும் அவர் தரையில் அமர்ந்து ஸஜ்தா செய்ய இயலாத போது அவர் செய்கையின் மூலம் ஸஜ்தா செய்யாமல் தலையணையைத் தூக்கி, தனது நெற்றியில் படுமாறு வைத்து அதை ஸஜ்தாவாக ஆக்கியுள்ளார் என்ற கருத்துதான் உள்ளது.

குச்சியை எடுத்து ஸஜ்தா செய்ய முனைந்த போதும் நபியவர்கள் தடுத்தார்கள் என்ற அடுத்த தகவலிலிருந்து இந்தக் கருத்தை அறியலாம்.

இவ்வாறு ஒரு பொருளை எடுத்து, தூக்கி நெற்றியில் ஒற்றிக் கொண்டு அதை ஸஜ்தாவாக ஆக்குவதைத்தான் நபியர்கள் தடுத்து, முடிந்தால் தரையில் செய்யுங்கள்! இல்லையேல் சைகை செய்யுங்கள் என்கிறார்கள்.

இதைத்தான் இந்தச் செய்தி எடுத்துரைக்கிறது. இதை வைத்து நாற்காலியில் தொழுவதை நபியவர்கள் தடுத்தார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

எதுவாயினும் இந்தச் செய்தி பலவீனம். அதை வைத்து மார்க்கச் சட்டம் எடுக்க இயலாது.

மேற்படி ஐந்து ஆதாரங்கள் தான் குர்ஆன் ஹதீஸிலிருந்து எடுத்துவைக்கிறார்கள்.

அதில் எதுவும் நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்ற கருத்தை வலியுறத்தவில்லை என்று மேலே பார்த்தோம்.

ஜமாஅத்துல் உலமா சபையால் இந்த தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட ஆக்கத்தின் ஆரம்பத்தில் நாற்காலியில் தொழுவது கூடாது, அது கீழ்க்காணும் விஷயங்களால் தவறானது என்று கூறியிருந்தார்கள். அந்தப் பட்டியலைத் தங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

  1. குர்ஆனுக்கு மாற்றமானது.
  2. ஹதீஸுக்கு மாற்றமானது.
  3. உலமாக்களின் ஃபத்வாக்களுக்கு மாற்றமானது.
  4. தொழுகையின் அசலான தன்மைக்கு மாற்றமானது.
  5. யூதர்கள், கிறிஸ்தவர்களின் சூழ்ச்சியாகும்.
  6. 25 வருடங்களுக்குப் பிறகு பள்ளிகளை கிறிஸ்தவ ஆலயங்களைப் போன்று மாற்றுவதற்கான சூழ்ச்சியாகும்.

இதில் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் மாற்றமானது என்ற காரணங்களுக்கு அவர்கள் எடுத்துக்காட்டிய எந்த ஆதாரமும் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்குத் தடை என்ற கருத்தைத் தரவில்லை என்று பார்த்தோம்.

இந்த இரு காரணங்களைத் தவிர வேறெதுவும் மார்க்க ஆதாரங்களாக ஆகாது.

மேற்படி ஆறு காரணங்களில் 3வது காரணமான உலமாக்களின் ஃபத்வாவுக்கு மாற்றமானது என்று கூறுகிறார்கள்.

அந்த உலமாக்களின் ஃபத்வாக்கள் என்று அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களும் மார்க்க ஆதாரம் எதுவுமின்றி இருப்பதுடன், இவர்கள் சொல்லும் வாதத்திற்கே மாற்றமாகவும் உள்ளது. அவற்றை இப்போது பார்ப்போம்.

  1. நிபந்தனைகளோடு கூடும் என்று அனுமதி அளித்தோம் என்றால் நாளடைவில் பொது மக்கள் நிபந்தனைகளை மறந்து விட்டு வெறும் கூடும் என்கிற விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இது அனுபவப்பூர்வமான விஷயமாகும் என்று இமாததுல் முஃப்தியீன் என்ற புத்தகத்திலிருந்து ஒரு கருத்தை எடுத்து வைத்துள்ளார்கள்.

மார்க்கமே பல விஷயத்திற்கு நிபந்தனைகளிட்டு சலுகைகள் வழங்குகிறது. அதைத் தடுக்கும் விதமாக இந்தக் கருத்துள்ளது.

உதாரணமாக, உளூவுக்குப் பகரமாக சில நிபந்தனைகளுடன் தயம்மும் என்ற சலுகையை மார்க்கம் அனுமதிக்கிறது.

மேற்படி கருத்துப்படி தயம்முமை இவர்கள் மறுப்பார்களா?

மார்க்கம் இலகுவானதாகவுள்ளது. அந்த மார்க்கத்தை தேவையற்ற கருத்துக்களையும் பேணுதல் என்ற அடிப்படையில் கூறி கடினமாக்குகிறார்கள். இறைவனை மீறி இவ்வாறு செய்வது பேணுதலல்ல. அதிகபிரசங்கித்தனம் ஆகும்.

  1. நாற்காலியில் கால்களைத் தொங்க விட்டு தொழுவதற்காக அமருவதும் ஸஜ்தா செய்வதற்காக டேபிளின் மீது தலைகுனிவதும் கூடாது. ஆனால் பூமியில் அமர்வதற்கோ, ஸஜ்தா செய்வதற்கோ முற்றிலும் முடியாது என்கிற போது அனுமதி உண்டு. பூமியில் ஸஜ்தா செய்வதற்கு அறவே முடியாத நிலையில் பூமியில் அமர்ந்து ஒரு ஜானை விட உயரமில்லாத ஒரு பொருளின் மீது ஸஜ்தா செய்வது கூடும். (ஹஜ்ரத் மொவ்லானா முப்தி கிஃபாயதுல்லாஹ் சாஹிப்-ரஹ்.நூல். கிஃபாயதுல் முஃப்தி3/400) கேள்வி எண் 1393) என்ற இந்த ஃபத்வாவையும் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு ஜானளவு உயரம் மட்டும் கூடும் என்று எங்கிருந்து எடுத்தார்கள்? இதற்கு முந்தைய ஃபத்வா அடிப்படையில் இந்த நிபந்தனையை மக்கள் விட்டுவிட மாட்டார்களா?

  1. ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியின் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடிவிடும். எனினும் நிபந்தனை என்னவெனில் இரு முழங்கால்களையும் நாற்காலியின் மீது வைக்கவேண்டும். அவ்வாறு வைக்கவில்லை எனில் தொழுகை கூடாது. திரும்பத் தொழுவது அவசியமாகும். (அஹ்ஸனுல் ஃபத்வா 4/51)

நாற்காலியில் தொழுவது உயரமாகவுள்ளது. அது பணிவிற்கு எதிரானதாம்! நாற்காலியில் அமர்ந்து மற்றொரு நாற்காலியில் காலை வைப்பது பணிவிற்கு எதிரானது இல்லையாம்! என்ன ஒரு விந்தையான ஃபத்வா?

இறை ஆதாரமின்றி மனிதர்களை ஆதாரமாக்கினால் இப்படித்தான் ‘கூடும், ஆனால் கூடாது’ என்று குழப்பத்துடன் மார்க்கத் தீர்ப்புகள் வழங்க நேரிடும்.

இப்படி எவ்வித ஆதாரமுமின்றி தங்கள் மார்க்கத் தீர்ப்பை ஜமாஅத்துல் சபையின் 350 உலமாக்களும் சேர்ந்து வழங்கியுள்ளார்கள்!

இது தவறானது என்பதற்குக் கடைசியில் அவர்கள் மேலதிகமாகக் குறிப்பிடும் காரணங்களில் ஸஹாபாக்கள், இமாம்கள் என்று துவங்கி 1990 வரை தரையில்தான் அமர்ந்து தொழுதார்கள். அவர்களிடம் நாற்காலி இருந்தும் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதனால் நாம் நாற்காலியில் அமர்ந்து தொழக்கூடாது என்று கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாகனத்தின் அமர்ந்ததே நாம் நாற்காலி, வாகனம் போன்ற விஷயங்களில் அமர்ந்து தொழுவது கூடும் என்பதற்குப் போதுமான ஆதாரமாக இருக்கும் போது உலமாக்கள் இதுபற்றி எதுவும் கூறவில்லை என்பதால் இது தடுக்கப்பட்டது என்றால் நபியை விட ஏனைய மனிதர்களை இவர்கள் உயர்த்திப் பிடித்துள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இவர்கள் சொல்வது போல ஸஹாபாக்கள், இமாம்கள் என்று துவங்கி 1990 வரையுள்ள அனைவரும் இதுகுறித்து பேசவில்லை என்பதால் இவர்கள் அதைத் தடுக்கிறார்கள் என்று சிந்திப்பதை விட அவர்கள் அனைவரும் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை அதனால்தான் பேசவில்லை என்று சிந்திப்பதுதானே அறிவிற்கு நெருக்கமாகவுள்ளது.

மாற்று மதக் கலாச்சாரத்திற்கு ஒப்பானதா?

யூத கிறித்தவர்களின் வழிபாட்டுக்கு ஒப்பாவதால் நாற்காலியில் அமர்ந்து தொழுவது கூடாது என்கிறார்கள்.

மார்க்கத்தில் நமக்கு சொல்லித் தரப்பட்ட முறையை விட்டுவிட்டு அவர்களின் முறையைப் பின்பற்றினால்தான் அவர்களுக்கு ஒப்பாக நடந்ததாக ஆகும். இது மார்க்கத்தின் பொதுவான அடிப்படை.

அவ்வாறில்லாமல் நமக்குச் சொல்லித் தரப்பட்ட முறையைப் போல் அவர்களும் செய்கிறார்கள் எனில் அது அவர்களுக்கு ஒப்பாக நடந்ததாக ஆகாது.

ஒவ்வொரு விஷயத்தையும் இப்படி ஒத்துப்பார்த்து அவர்களுக்கு ஒப்பாகிறது, இவர்களுக்கு ஒப்பாகிறது என்றால் தவாஃப், ஸஜ்தா, குர்பானி என்று எந்த வழிபாட்டையும் நாம செய்ய இயலாது.

ஏனெனில், நாம் கஅபா ஆலயத்தைச் சுற்றி வருகிறோம். அவர்கள் தங்கள் கோயிலை சுற்றி வருகிறார்கள். அதனால் அது மாற்றுமதக் கலாச்சாரத்திற்கு ஒப்பானது என்று தங்கள் ஆதாரமற்ற சிந்தனையை மார்க்கத்தில் புகுத்தி பல வழிபாடுகளை அவர்கள் மறுக்க நேரிடும்.

இந்த நிலை மிகப்பெரிய வழிகேட்டிற்கே அழைத்துச் செல்லும்.

இயலாமல் அமர்ந்து தொழுபவர்கள் கவனிக்க வேண்டியவை:

நாற்காலியில் அமர்ந்து தொழக் கூடாது என்ற இந்த ஃபத்வாவில், அது கூடாது என்பதற்குச் சொல்லும் காரணங்களில் இரு காரணங்கள் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

ஆனால், அந்தக் காரணங்களை மட்டும் செய்ய வேண்டாம் என்று சொல்லலாமே தவிர ஆதாரமின்றி நாற்காலியில் அமர்ந்து தொழுவதே கூடாது என்று சொல்லக் கூடாது.

அந்த காரணங்கள்,

  1. ஸஃப்புகளில் இடையூறு ஏற்படுகிறது.
  2. பின்னால் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இந்த இரு காரணங்களும் அமர்ந்து தொழுபவர்கள் கவனிக்க வேண்டியவையாக உள்ளது.

சிலர் நாற்காலியைப் போட்டுவிட்டு நிலைக்கு நின்றுவிடுகிறார்கள். ருகூவு ஸஜ்தாவிற்கு மட்டும் அமர்கிறார்கள்.

அந்த சமயத்தில் ஸஃப்பில் நேராக நாற்காலியை போட்டுவிட்டால் அமரும் போது ஸஃப்போடு இணைந்துவிடுகிறார்கள். நிற்கும் போது மற்றவர்களை விட முந்தி நிற்கிறார்கள்.

அல்லது தாங்கள் நிற்பதற்கு தகுந்தவாறு பின்னால் தள்ளி நாற்காலியை போடுகிறார்கள் எனில் அது பின்னால் தொழுபவருக்கு இடையூறாக அமையும்.

அதனால் இதுபோன்ற சூழலில் நிலையில் நின்றும், ருகூவு ஸஜ்தாவிற்கு மட்டும் நாற்காலியில் அமர்ந்தும்  தொழுபவர்கள், தாங்கள் நிலையில் இருக்கும் போது நாற்காலியைப் பின்னால் தள்ளிப் போட்டு ஸஃப்போடு இணைந்தும்  ருகூவு மற்றும் ஸஜ்தாவிற்கு அமரும் போது பின்னால் உள்ளவருக்கு இடையூறு அளிக்காதவாறு முன்னால் இழுத்துக் கொண்டும் அமரலாம்.

இவ்வாறு தனது தொழுகையின் வரிசையை சக்திக்குட்பட்டளவு சரியாக அமைத்துக் கொண்டால் தொழுகை வரிசையில் எந்த பிரச்சனையும் வராது. அல்லது முழுவதும் அமர்ந்து தொழுதுவிடலாம்.

இதைக் கவனித்து அமர்ந்து தொழுபவர்கள் தங்கள் தொழுகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மார்க்கத்தைக் கடினமாக்க வேண்டாம்

ஒரு விஷயத்தை மார்க்கம் வலியுறுத்துகிறது என்றால் அதைப் பின்பற்ற வேண்டும்.

மனிதர்களின் கருத்துக்களை ஆதாரமாக் கினால் அது தேவையற்ற சங்கடங்களாகவும், மார்க்கத்தைக் கடினமாக்குவதாகவும் மிகப் பெரும் வழிகேடாகவுமே அமையும் என்பதைப் பின்வரும் வசனங்கள் எச்சரிக்கின்றன.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

அல்குர்ஆன் 7:3

இம்மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

அல்லாஹ் அல்லாதவர்களை இணை(கடவுள்)களாக ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல் அவர்களை நேசிப்பவர்களும் மக்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை  மிக அதிகமாக நேசிப்பவர்கள். அநியாயக் காரர்கள் வேதனையைக்  காணும் போது (உள்ள நிலையை)   அறிவார்களானால் அனைத்து ஆற்றலும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும் அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் (உணர்ந்து கொள்வார்கள்.)

வேதனையைக் காணும் போது,  பின்பற்றப்பட்டவர்கள்  பின்பற்றியவர்களை விட்டும் அந்நேரத்தில் விலகிக் கொள்வார்கள். அவர்களுக்கிடையே இருந்த தொடர்புகளும் முறிந்துவிடும்.

“(உலகிற்கு) திரும்பும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்குமானால் அவர்கள் எங்களை விட்டு விலகியதைப் போன்று நாங்களும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இவ்வாறுதான் அவர்களது செயல்களை அவர்களுக்கு துக்கமளிப்பவையாக அல்லாஹ் காட்டுவான்.  அவர்கள் நரகத்திலிருந்து வெளியேறுவோர் அல்ல!

அல்குர்ஆன் 2: 165 -167

இதைக் கவனத்தில் கொண்டு ஆதாரத்துடன் மார்க்கத் தீர்ப்புகள் வழங்க வேண்டும்.