ஏகத்துவம் – ஜனவரி 2014

தலையங்கம்

ஓரினச் சேர்க்கையும் ஓரிறையின் தண்டனையும்

உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒரு சமுதாயத்தினர் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இந்தத் தீமைக்கு எதிராக அனுப்பப்பட்டவர் தான் நபி ஷுஐப் (அலை) ஆவார். அவர்களது பிரச்சாரத்தின் மையக்கருத்தை கீழ்க்காணும் வசனத்தில் காணலாம்.

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததுஎன்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 7:85

ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதுடன் இந்தத் தீமைக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்துள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.

இன்னொரு சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க தீமையை எதிர்ப்பதை முதன்மையாகவும் மையமாகவும் கொண்டு அனுப்பப்பட்டவர் தான் நபி லூத் (அலை) அவர்கள்.

லூத் நபியவர்கள் இப்ராஹீம் நபியின் சம காலத்து நபியாவார். தன்னந்தனியாக நின்று கொண்டு அம்மக்களிடமிருந்து இந்த மிருகச் செயலை எதிர்த்துப் போர் முழக்கமிட்டார்கள்.

இந்த ஈனச் செயலை, இழிவான காரியத்தைச் செய்யாதீர்கள் என்று திரும்பத் திரும்ப அந்த மக்களிடம் அறிவுரை வழங்கினார்கள். இந்தக் காரியத்தைச் செய்தால் இறைவனிடமிருந்து இழிவு தரும் வேதனை வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் அதை அம்மக்கள் அறவே கண்டுகொள்ளவில்லை. அத்துடன் லூத் நபியைக் கேலியும் கிண்டலும் செய்தனர்.

இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.

அல்குர்ஆன் 7:82

உம்மை ஊரை விட்டு விரட்டுவோம் என்று அவரை மிரட்டினார்கள். உமது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் வேதனையைக் கொண்டு வாருங்கள் என்று இறைத்தூதருக்கு எதிராகச் சவாலும் விட்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

லூத்தையும் (அனுப்பினோம்). “நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை”

சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?” என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறிய போது, “நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராகஎன்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 29:28, 29

இந்தக் கட்டத்தில்தான் லூத் நபியவர்களின் வீட்டிற்கு விருந்தாளிகள் வருகின்றனர். வந்த விருந்தாளிகள் பிரமிக்க வைக்கும் அழகு பிம்பங்களாக இருந்தனர். கட்டழகு கொண்ட காளையராக இருந்தனர். வசீகரமும் வனப்பும் மிக்க வாலிப வட்டங்களான இந்த விருந்தாளிகளை அனுபவிப்பதற்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திரண்டு அவர்களை நோக்கி ஓடி வருகின்றனர். மட்டற்ற மகிழ்ச்சி அலைகள் கரை புரள, கட்டிளங் காளையரைக் கொள்ளை கொள்ள, கூட்டமாய் வந்து குழுமுகின்றனர்.

கண்ணியப்படுத்த வேண்டிய தனது விருந்தாளிகள் களங்கப்படுத்தப்படப் போகின்றனரே என்று கலங்கிய லூத் நபி கையறு நிலையில் நிற்கின்றார்கள்.

வந்தவர்கள் லூத் நபியின் கண்களுக்கு வெறும் வெளியூர் விருந்தாளிகளாகவே தெரிகின்றனர். காமுகக் காட்டுமிராண்டிகளுக்கு கவர்ச்சியூட்டும் வேட்டைப் பிராணிகளாகத் தெரிகின்றனர். இந்தக் காட்சியை திருக்குர்ஆன் நம் கண்களுக்குப் படமாக்குகின்றது.

அவ்வூர்வாசிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர். “இவர்கள் எனது விருந்தினர்கள். எனவே எனக்கு அவமானத்தை ஏற்படுத்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! என்னை இழிவுபடுத்தாதீர்கள்!என்று (லூத்) கூறினார். “உலகத்தாரை விட்டும் (மற்றவருக்காகப் பரிந்து பேசுவதை விட்டும்) உம்மை நாங்கள் தடுக்கவில்லையா?” என்று அவர்கள் கேட்டனர். “நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்என்று அவர் கூறினார். உமது வாழ்நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர்.

அல்குர்ஆன் 15:66-72

இதே சம்பவம் திருக்குர்ஆனில் மற்றோரிடத்திலும் இடம்பெற்றுள்ளது.

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். “இது மிகவும் கடினமான நாள்எனவும் கூறினார். அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். “என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் கூட இல்லையா?” என்று கேட்டார். “உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்என்றனர்.

அல்குர்ஆன் 11:77-79

“உங்களில் ஒருவர் கூட..” என்று லூத் நபி கேட்பது, அந்த ஊர் எப்படிக் கெட்டுப் போயிருந்தது என்பதை மிகத் தெளிவாகவே விவரிக்கின்றது. இந்தக் கட்டத்தில் லூத் நபியின் மனிதப் பலவீனமும் இயலாமையும் அவர்களை அறியாமல் வெளிப்படுகின்றது. அதன் உச்சக்கட்டத்தில் தான் லூத் நபியின் வாயிலிருந்து இந்த வார்த்தைப் பிரயோகம் வருகின்றது.

உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:80

ஆம்! அவர்களுக்கு ஆதரவாக, இந்தக் காட்டுமிராண்டிகளுக்கு எதிராகத் தோள் கொடுத்து, துணை நிற்க எவருமில்லை. சொந்த பந்தமும் எதுவுமில்லை. பாதிப்புக்குள்ளான பாதக வேளையில் இந்த உணர்வு அலைகளைப் பதிகின்றார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இந்த சமயத்தில் அடைக்கலத்திற்கும் ஆதரவிற்கும் அல்லாஹ்வை அழைத்திருக்க வேண்டும். இதைத் தான் நபி (ஸல்) அவர்கள் மென்மையாக உணர்த்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லூத் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர்களாயிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3375

இறைத்தூதர்களும் அவர்களது சமுதாயத்தினரும் நம்பிக்கை இழப்பின் விளிம்பிற்கு வருகின்ற போது இறை உதவி அரும்பி வரும்.

முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.

அல்குர்ஆன் 12:110

வந்தவர்கள் வெறும் விருந்தாளிகள் அல்லர்; தூதரைக் காக்கவும் அவரது எதிரிகளைத் தாக்கவும் வந்த வான தூதர்கள் என்ற உண்மை இப்போது தான் வெளிச்சத்திற்கு வருகின்றது.

லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்று தூதர்கள் கூறினார்கள்.

அல்குர்ஆன் 11:81

இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு மலக்குகள் தங்கள் விளையாட்டை ஆரம்பிக்கின்றனர்.

வந்த வானவர்களிடமும் தங்கள் காம வேட்டைகளையும் சேட்டைகளையும் காட்ட ஆரம்பித்தவர்களின் கண்களை அல்லாஹ் குருடாக்கினான்.

அவருடைய விருந்தினரைத் தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும் எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்! (என்றோம்)

அல்குர்ஆன் 54:37

இது முதல் தண்டனை. இரண்டாவதாக பெரும் சப்தம், பேரிறைச்சல் அவர்களைப் பிடிக்கின்றது.

அதிகாலைப் பொழுதில் அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.

அல்குர்ஆன் 15:83

மூன்றாவதாக, சூடாக்கப்பட்ட கல்மழை அவர்கள் மீது பொழிகின்றது.

நான்காவது, இயற்கைக்கு எதிராகக் கிளம்பி தலைகீழாகப் புரண்ட அந்தச் சமுதாயம் வாழ்ந்த ஊரை அல்லாஹ் தலைகீழாகப் புரட்டி விடுகின்றான்.

அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல்மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையில் தான் உள்ளது.

அல்குர்ஆன் 15:74-76

நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின் மீது கல்மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.

அல்குர்ஆன் 11:82, 83

இறுதியில் லூத் (அலை) அவர்களின் வீட்டைத் தவிர வேறெதையும் விட்டு வைக்காத அளவிற்கு மலக்குகள் தங்கள் ஆட்டத்தை ஆடித் தீர்த்தனர்.

இதுதான் ஓரினச் சேர்க்கைக்கு, ஓரிறைவன் கொடுத்த தண்டனையும் நிந்தனையும் ஆகும். மிஞ்சியது இறைத்தூதரின் வீடு மட்டும் தான். மற்ற அனைத்தும் அழித்து, சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்தச் சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய தண்டனையிலிருந்து ஓரினச் சேர்க்கை எனும் பாவத்தின் கோரத்தையும் கொடூரத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் சாபக்கேட்டையும் சமூகக் கேட்டையும் தான் இன்றைய சமுதாயம் சட்டமாக்கத் துடிக்கின்றது. இந்த மானக்கேட்டிற்குத் தனிமனித சுதந்திரம் என்ற முத்திரையும் பொறித்துள்ளனர். இந்த அசிங்கத்தைச் செய்தவனை மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ளவர்களையும், சமூகத்தையும் பாதிக்கும் எய்ட்ஸ் நோயைப் பரப்புவதை தனிமனித சுதந்திரம் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய் பரிசாகக் கிடைத்தது இந்தப் பாவத்தின் காரணமாகத் தான். இதற்குப் பின்னரவாது இந்தச் சமுதாயம் திருந்துமா?

—————————————————————————————————————————————————————-

ஜமாஅத் தலைவர்களும் ஜமாஅத் தொழுகைகளும்

இணைவைப்புக்கு எதிரான வலுவான யுத்தத்தின் உச்சக்கட்டமாக, அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக ஒவ்வொரு ஊரிலும் தனிப்பள்ளிகளைக் கண்டு வருகிறோம். முந்தைய காலகட்டத்தில் பள்ளிக்கு ஏக்கர் கணக்கில் நிலங்களைத் தானமாக வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடந்தது. இன்று ஒரு சதுர அடி நிலத்தை வாங்குவதற்குக் கூட தலைகீழாகப் புரள வேண்டியிருக்கின்றது. அந்த அளவுக்கு மண்ணின் விலை விண்ணைத் தொட்டு நிற்கின்றது.

நம்முடைய ஜமாஅத்தில் பணக்கார வர்க்கம் என்பது மைக்ரோ அளவில் தான் உள்ளது. பாட்டாளி வர்க்கத்தின் வியர்வைத் துளிகள் தான் பணத்துளிகளாகப் பரிணமிக்கின்றன. ஊர் ஊராக அலைந்து, ஒவ்வொரு பள்ளியாகப் படியேறி, ஒவ்வொரு பைசாவாகச் சேர்த்துத் தான் நாம் ஒரு பள்ளியை நிறுவுகின்றோம்; நிர்மாணிக்கின்றோம்.

இப்படிக் கடின உழைப்பைச் செலுத்தி ஒரு பள்ளிக் கட்டுமானத்தை எழுப்புகின்றோம். எழுப்பிய பின்னால் மின்விளக்குகளை எரிய விடுதல், மின்விசிறிகளை இயக்குதல், தண்ணீர் மோட்டார்களை இயக்குதல் போன்றவை தான் பள்ளிவாசலை நிர்வகிப்பது, பரிபாலணம் செய்வது என்று நாம் விளங்க மாட்டோம்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:18

இந்த வசனம் கூறுகின்ற நிபந்தனைகளின்படி செயல்படுவது தான் ஒரு பள்ளியின் உண்மையான நிர்வாகம் என்று நாம் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் ஒரு பள்ளியின் நிர்வாகிகள் அந்தப் பள்ளியில் நிறைவேற்றப்படும் ஜமாஅத் தொழுகைகளில் சரியாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இன்று ஒரு சில கிளைகளின் பொறுப்பாளர்கள் ஜமாஅத் தொழுகைகளைப் புறக்கணித்துவிட்டு, அல்லது அலட்சியம் செய்து விட்டுத் தங்கள் வீடுகளிலேயே தொழுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு வருகின்றது. இத்தகைய பொறுப்பாளர்கள், நபி (ஸல்) அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு அளித்த முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜமாஅத் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இரவு ஒரு மணி வரை ஏகத்துவப் பொதுக்கூட்டம் நடத்தினோம் என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் காலையில் ஃபஜ்ர் தொழுகையைப் பலியாக்கி, பாழாக்கிவிடுகின்றனர். இந்த நிலை ஒரு நிர்வாகியிடம் இருக்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்)குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, இன்னும், தொழுகைக்கு புறப்பட்டு வராமலிருப்பவரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட முடிவு செய்தேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 657

ஃபஜ்ர் தொழுகையைக் கோட்டை விட்டுவிட்டுக் குறட்டை விடுவோரிடம் நயவஞ்சகத்தின் நாற்றம் வீசுகின்றது என்பதை இந்த ஹதீஸில் நமக்கு நபி (ஸல்) அவர்கள் புரிய வைக்கின்றார்கள்.

அத்துடன் ஜமாஅத்திற்கு வராதவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்த முனைவேன் என்றும் நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கையை நமது உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.

இறை தரிசனமே இலட்சியம்

ஏகத்துவக் களப்பணியாற்றுகின்ற நமக்கு ஒரே ஒரு இலட்சியம் இறைவனுடைய தரிசனம் தான். அதனால் தான் நாம் அல்லாஹ்வுக்கு எள்ளளவு கூட இணை வைப்பதில்லை.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

ஏக இறைவனின் இந்தக் கூற்று தான் நமது ஏகத்துவப் பணியின் லட்சியம். இந்த லட்சியம் வெற்றி பெற வேண்டுமா? அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறும் வழிமுறை இதோ:

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்என்று கூறிவிட்டு “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 554

அதனால் அதிகாலைத் தொழுகையில் இனிமேல் அலட்சியம் காட்டாமல் இருப்போமாக!

பார்வை இழந்தவரும் வரவேண்டும்

பொதுவாகவே அனைத்து ஜமாஅத் தொழுகைகளிலும் ஆர்வமும் அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லைஎன்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, “தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்‘ (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!” (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1044

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கண் தெரியாத தோழரையும் பள்ளிக்கு வருமாறு பணிக்கின்றார்கள். அல்லாஹ் நமக்குப் பார்வையை அளித்தும் பள்ளிக்கு வருவதைப் புறக்கணிக்கலாமா?

பாத அடிகளுக்குப் பல நன்மைகள்

பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்காக நாம் வருகின்ற போது எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டுக்கும் இறைவனிடத்தில் நன்மை பதிவு செய்யப்படுகின்றது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு அருகில் வசிப்பதை விட தூரத்தில் வசிப்பதையே சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகையால் அதிக நற்பலன் அடைபவர் வெகு தொலைவிலிருந்து (பள்ளியை நோக்கி) வருபவராவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவராவார். யார் (கூட்டுத்) தொழுகையை இமாமுடன் தொழக் காத்துக் கொண்டிருக்கிறாரோ அவரே (தனியாகத்) தொழுது விட்டு உறங்கிவிடுபவரை அதிக நற்பலன் அடைபவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 651

பனூ ஸலமா கிளையினர் பள்ளிக்கு அருகில் வந்து வசிக்க ஏற்பாடு செய்தனர். இதைத் தெரிந்து நபி (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுவதைப் அவர்கள் கூறியதாவது:

பனூசலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலருகே குடிபெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, “பனூசலிமா குலத்தினரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடிச் சுவடுகளின் நன்மைகளை (நற்பலனை) எதிர்பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். ஆகவே, பனூசலிமா குலத்தினர் (தாம் முன்பு வசித்துக் கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1887

அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிவீர்: அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லைஎன்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே  கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1066

வருவதற்கும் திரும்புவதற்கும் கூலி

தேர்தல் காலத்தில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களை வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் ஓட்டுப் போட்டுவிட்டுத் திரும்பும் போது வெறுங்காலில் நடக்க விட்டுவிடுவார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அந்த அற்பத்தனம் இல்லை.

ஒரு மனிதர் இருந்தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அவரைவிட வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவர் எந்தவொரு தொழுகையையும் தவறவிட மாட்டார். எனவே அவரிடம், “நீங்கள் ஒரு கழுதை வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே! அதன் மீது பயணம் செய்து காரிருளிலும் கடும் வெப்பத்திலும் (தொழுகைக்கு) வரலாமே?” என்று “கேட்கப்பட்டதுஅல்லது “(அவ்வாறு) நான் கேட்டேன்‘. அதற்கு அவர், “எனது இல்லம் பள்ளிவாசலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. (ஏனெனில்,) நான் பள்ளிவாசலுக்கு நடந்து வருவதும் (பள்ளிவாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1065

அபரிமிதமான, அளப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகின்ற இந்த அரிய ஜமாஅத் தொழுகையை ஒரு தவ்ஹீதுவாதி தொலைக்கலாமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அல்லாஹ்வுக்கு நன்றியுடைய அடியார்களாகத் திகழ வேண்டும்.

ஏகத்துவ அடிப்படையில் பள்ளிவாசல்கள் இல்லாத நிலையில் வீடுகளில் தொழுது கொண்டிருந்தோம்; வேதனைப்பட்டோம்; விசனப்பட்டோம். இன்று நமக்கென்று பள்ளிவாசல்கள் வந்து விட்டன. ஆனால் இப்போதும் நாம் வீட்டில் தொழுகின்றோம் என்றால் இது நன்றி மறக்கும் தன்மையல்லவா?

ஜமாஅத் தொழுகையை விடுவதற்கென்று சில காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் இருந்தால் அல்லாஹ்விடம் பதில் சொல்லலாம். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் வீட்டில் தொழலாம். இதுபோன்ற காரணங்கள் ஏதுமின்றி ஜமாஅத் தொழுகையைப் புறக்கணித்தால் இறைவனுக்கு நன்றி செலுத்த மறுக்கின்றோம் என்பது தான் அதன் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி….

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

பெண்கள் விஷயத்தில் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று மார்க்கம் ஆண்களுக்குக் கட்டளையிடுவதோடு பெண்கள் விவகாரங்களில் தடம்புரளாமல் இருப்பதற்கு அவர்களிடம் நடந்து கொள்ளும் முறையையும் போதித்துள்ளது. அதன்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நாணத்தைக் கடைப்பிடிப்போம்

பொதுவாகவே வீண்பேச்சுக்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்; பேசுவதாக இருந்தால் நல்லதைப் பேச வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக ஆண்களும் பெண்களும் தங்களுக்கு மஹ்ரமாக இல்லாதவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையின்றி பேசுவது, ஈர்க்கும் விதத்தில் குழைந்து நெளிந்து பேசுவது, இரட்டை அர்த்தங்களுடன் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அந்தரங்கமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதும் ஆபாசமாகப் பேசுவதும் அறவே கூடாது.

ஆனால் நட்பு என்று சொல்லிக் கொண்டு பொதுவாக எந்த விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவதற்கு வெட்கம் கொள்வோமோ அத்தகைய செய்திகளை எந்தவொரு கூச்சமும் இறையச்சமும் இல்லாமல் பேசும் நபர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் ஆண்கள் நபிகளாரிடமிருந்து நாணம் எனும் பண்பைக் கற்று நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “மாதவிடாயி-ருந்து தூய்மையாகிக் கொள்ள நான் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து “மூன்று முறை சுத்தம் செய்!என்றோ அல்லது “அதன் மூலம் சுத்தம் செய்!என்றோ சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து நபி (ஸல்) அவர்கள் சொல்ல வருவதை அவருக்கு விளக்கிக் கொடுத்தேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 315

பார்வையைப் பாதுகாப்போம்

எந்தவொரு கவர்ச்சியான தோற்றத்தையும் பார்வையின் மூலமாகவே நாம் தெரிந்து கொள்கிறோம். நமக்குப் பார்வை இல்லாவிட்டால் வானங்கள் மற்றும் பூமியில் கொட்டிக் கிடக்கும் இன்பங்களில் பலதை நாம் தெரிந்து கொள்ளவே முடியாது. எந்தவொன்றாக இருந்தாலும் அதன் மீது நாம் கவரப்படுவதற்குப் பார்வை தான் காரணம். பார்வையைப் படர விடாமல் பேணுதலுடன் நாம் நடந்து கொண்டால் கண்கவரும் விதத்தில் இருக்கும் கணக்கில்லா தீமைகளை விட்டும் விலகிவிடலாம்.

குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் குணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். அந்நியப் பெண்களைப் பார்ப்பதற்காகத் திசையெங்கும் பார்வை அம்புகளை எய்வதை விட்டும், யதார்த்தமாகக் கண்ணில் படும் பெண்கள் மீது காரணமில்லாமல் பார்வையைத் தொடர்ந்து வீசுவதை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பெண்கள் விஷயத்தில் பார்வையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டால் ஒழுக்கநெறி தவறாமல் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராம-ருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையி-ருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 2465

ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது “கஸ்அம்எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்!என்றார்கள். இது “விடைபெறும்ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1513

பெண்களைக் காண்பதால் எனக்கு எந்தவொரு சலனமும் ஏற்படாது; எள்ளளவும் உணர்வு தூண்டப்படாது என்று ஆண்களில் எவரும் சொல்ல இயலாது. சபலத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று எவருக்கும் விதிவிலக்கு வழங்கமுடியாது. எனவே மனைவியைத் தவிர்த்து மற்றப் பெண்கள் மீது பார்வையைப் பதிப்பது, உற்றுநோக்கி ரசிப்பது, அவர்களின் நடவடிக்கைகளை அசைவுகளைக் கவனிப்பது, அடிக்கடி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும், விபச்சாரம் எனும் பாவப்பாதையில் பாதம் வைக்கத் தூண்டும் பார்வையை நாம் கட்டுப்படுத்திக் கொள்ள ஒரு பொன்னான போதனையை பெருமானர் (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். ரமலான் மாதம் மட்டுமின்றி மற்ற மாதங்களிலும் நோன்பை வைக்கும் பழக்கத்தை வழமையாக வைத்துக் கொண்டால் பார்வையைக் கட்டுப்படுத்தி கற்பு நெறியுடன் வாழலாம். இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 1905

பெண்களுடன் தனிமை ஹராம்

நம்மை மற்ற மக்கள் பார்க்கிறார்கள் என்று எச்சரிக்கையாக இருக்கும் மனிதர்களில் பலர், திரைமறைவில் தவறான காரியங்களில் தைரியமாகக் களமிறங்கி விடுகிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது, மற்றவர்களின் கண்காணிப்பில் இருந்து விலகி இருக்கும் போது ஷைத்தான் அவர்களைத் தவறிழைக்கத் தூண்டுகிறான். வெறும் வார்த்தைகளோடு இருந்த பழக்கம் வரம்பு கடந்து மனோ இச்சைக்கு இசைந்து விடுகிறார்கள். இறுதியில், விபச்சாரம் எனும் கொடிய பாவத்தை, கேடுகெட்ட அவலம் நிறைந்த காரியத்தை அரங்கேற்றி விடுகிறார்கள். எனவே அந்நியப் பெண்களுடன் தனிமையில் இருப்பதை நாம் தவிர்த்துக் கொண்டால் மாபாதகமான பாவத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ளலாம். ஆகையால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு போதித்துச் சென்றுள்ளார்கள்.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரமான) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர்  எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப்  பதிவு  செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3006

அந்நியப் பெண்களுடன் செல்போனில் தேவையில்லாமல் உரையாடுவது, இண்டர்நெட் மூலம் அரட்டையடிப்பது என்று காலத்தைக் கழிப்பவர்களில் பலர் இதுபோன்ற தனிமையினால் இறுதியில் விபச்சாரத்தின் வலையில் விழுந்து விடும் சம்பவங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆகவே எந்த விதத்திலும் மஹ்ரமில்லாத பெண்களுடன் தனிமையில் இருப்பதை ஆண்கள் அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பேணுதலை மேற்கொள்வோம்

பெண்கள் விஷத்தில் எப்போதும் பேணுதலாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, அந்நியப் பெண்களிடம் அவசியத்திற்காக ஏதாவதொன்று பேசுவது, கேட்பது, சொல்வது, வாங்குவது உட்பட அனைத்து சந்தர்ப்பங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் சரியானவர்களாக தவறிழைக்காதவர்களாக இருந்தாலும் அதற்கு மாற்றமாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளுக்கு இடமளிக்காமல் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் பெண்களுடன் சம்பந்தப்படுத்தி நமது நற்பெயரைக் களங்கப்படுத்துவதற்கு யாரேனும் முனைந்தால் அல்லது அதற்கு வாய்ப்பு இருந்தால் நமது காரியங்களைத் தெளிவுபடுத்துவதும், நமது குற்றமற்றத் தன்மையைப் புரியவைப்பதும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம், இவ்வாறு பெண்கள் விஷயத்தில் நபியவர்கள் மிகவும் கவனமாகவும் பேணுதலாகவும் இருந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரங்கள் இதோ:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த) பெண்களை (60:10-12) இறை வசனத்தின் கட்டளைப்படி சோதித்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை அப்பெண்களில் எவர் ஏற்றுக் கொள்கிறாரோ அவரிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத்தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய கரம் விசுவாசப்பிரமாணம் வாங்கும் போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்ச்சொல் வழியாகவே தவிர விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2713

(பெண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், “உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன். நீ செல்லலாம்என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3802

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யா ஆவார்!எனக் கூறினார்கள். அவ்விருவரும் “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்என்று தெளிவுபடுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 2038

பெண்கள் விவவகாரத்தில் சிக்கி, பெயர் கெட்டுவிட்டால் அவ்வளவுதான். அதற்கு முன்பு நாம் மக்கள் மத்தியில் சேமித்து வைத்திருந்த நன்மதிப்புகள் அனைத்தும் அழிந்து நாசமாகப் போய்விடும். அதற்குப் பிறகு நமது வார்த்தைகள் வலுவிழந்துவிடும். நாம் சொல்லும் சத்தியக் கருத்துக்கள் செல்லாக் காசுகளாக மதிப்பற்றுப் போய்விடும். மக்கள் நமது கருத்துக்களை புறந்தள்ளுவதற்கு அந்தக் காரணம் ஒன்றே போதுமானதாக ஆகிவிடும். மேலும் தாறுமாறாக நம்மை விமர்சனம் செய்யத் துவங்கிவிடுவார்கள். ஆண்கள் எக்காலத்திலும் கவனத்தில் கொள்ளவேண்டிய போதனை இது.

படைத்தவன் தரும் பரிசு

பெண்கள் விஷயத்தில் வழிதவறிவிடக்கூடாது என்று நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தீய குணமும் நடத்தையும் கொண்ட நங்கைகள் மூலம் கற்புநெறி தவறி, குற்றமிழைக்கும் தருணம் நம்மைத் தேடிவந்தாலும் இறைவனை அஞ்சி அவர்களை விட்டும் விலகிக் கொள்ள வேணடும். இவ்வாறு பெண்கள் விஷயத்தில் மார்க்கத்திற்கு மாறுசெய்யும் நிலையைத் தேடிச் செல்லாமலும், தேடி வரும் வாய்ப்பை வெறுத்தும் வாழ்ந்தால் இம்மையிலும் மறுமையில் இறைவனின் உதவி பெற்றவர்களாகத் திகழலாம். இதைப் பின்வரும் செய்திகள் வாயிலாக விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்துக் கொண்டது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராத விதமாக) பெரும்பாறை ஒன்று மலையி-ருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக்கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், “நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி)  அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக – துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மை விட்டு அகற்றிவிடக்கூடும்என்று பேசிக் கொண்டனர். (முதல் நபர் பிரார்த்தனை செய்ததும் பாறை சிறிது விலகியது. அதன் பிறகு  இரண்டாவதாக) மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி – முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன்.  நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரு கால்களுக்கும் இடையே அமர்ந்த போது அவள், “அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மணபந்த) உரிமையின்றி திறக்காதேஎன்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களை விட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக! உடனே, பாறை இன்னும் சற்று விலகியது. (இதன்பிறகு மூன்றாவது நபர் பிரார்த்தனை செய்தவுடன்) அல்லாஹ் (அப்பாறையை மூலம் ஏற்பட்ட) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 2333

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:

  1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர். 5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்என்று கூறியவர். 6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 660

பெண்களை அஞ்சிக் கொள்ளுங்கள்

நமது நடத்தைகள் சீரும் சிறப்பாக இருப்பதற்கு அவசியமான அனைத்து விதமான அறிவுரைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்கள். அந்த வகையில், ஆண்களாக இருப்பவர்கள் பெண்கள் விஷயத்தில் தமது அறிவுரையை ஏற்று நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நவின்றுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பி-ருந்து படைக்கப் பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3331

இவ்வாறு பெண்களைக் அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் மூலம் சோதனைகள் இருக்கிறது என்றெல்லாம் இஸ்லாம் சொல்வது ஆண்களை விடவும் அவர்களைத் தரம் தாழ்த்துவதற்கோ, இழிவுபடுத்துவதற்கோ அல்ல.

மாறாக, எந்த விதத்திலும் பெண்களின் உரிமையை ஆண்கள் பறித்துவிடக்கூடாது; தங்களுக்குரிய கடமைகளைப் பொறுப்புகளை மறந்து செயல்பட்டுவிடக் கூடாது; எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கம் எனும் உயர்ந்த பண்பை இழந்து விடக்கூடாது என்பதற்குத் தான் இத்தனை போதனைகளும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றை அறிந்து அதன்படி ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெற இறைவன் நமக்கு துணை புரிவானாக.

—————————————————————————————————————————————————————-

அழகாக்கப்பட்ட அமல்கள்

இதற்கு முன்னர் பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அழிக்கப்பட்டதற்கு அல்லாஹ் ஒரு முக்கியமான காரணத்தைக் கூறுகின்றான். அந்தச் செயல் நம்மிடத்தில் இருக்கின்றதா என ஒவ்வொருவரும் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறும் அந்தக் காரணம் என்னவென்று இப்போது பார்ப்போம்.

அல்லாஹ் திடுதிப்பென்று, எடுத்த எடுப்பிலேயே ஒரு சமுதாயத்தை அழித்துவிடுவதிலலை. முதலில் அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை மணிகளாக, அபாயச் சங்குகளாக சில சோதனைகளை அவர்களுக்கு அனுப்புகின்றான்.

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.

அல்குர்ஆன் 6:42

இந்த எச்சரிக்கை மணிகளும் அபாயச் சங்குகளும் மாற்றத்தைத் தராத போது, வசதி, வளம், செல்வத்தின் வாசல்களை அபரிமிதமாகத் திறந்து விடுகின்றான்.

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர். எனவே அநீதி இழைத்த கூட்டத்தினர் வேரறுக்கப்பட்டனர். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

அல்குர்ஆன் 6:44, 45

இதைப் பற்றி அல்லாஹ் கேட்பதைப் பாருங்கள்.

அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.

அல்குர்ஆன் 6:43

அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

ஆது, சமூது சமுதாயங்கள் அழிக்கப்பட்டதற்கும் இதுவே காரணமாகும்.

ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்). அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து இது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். அவர்கள் அறிவுடையோராக இருந்த போதும் (நல்) வழியை விட்டும் அவர்களைத் தடுத்தான்.

அல்குர்ஆன் 29:38

இதுபோன்று அழிக்கப்பட்ட அனைத்து சமுதாயங்களும் அவர்கள் அழிக்கப்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்திருந்தது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

அல்குர்ஆன் 16:63

ஷைத்தானின் அழகாக்கப்பட்ட செயல்பாடுகள், அமல்கள் தான் மிகவும் ஆபத்தான காரியமாகும். இந்த முக்கியமான காரியத்தை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய வாழ்க்கையில் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. அனைத்துத் தீமைகளுக்கும் அஸ்திவாரம் ஷைத்தானின் அலங்காரம் தான்.

தனி மனிதனின் வழிகேடு

ஒரு தனி மனிதன் இணைவைப்பில் மூழ்கிக் கிடக்கின்றான். அதற்குக் காரணம் ஷைத்தான் அவனது செயலை அழகாக்கிக் காட்டியது தான். இதற்கு ஃபிர்அவ்ன் ஓர் எடுத்துக்காட்டு.

ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.

அல்குர்ஆன் 40:36, 37

தனக்கு ஏற்பட்ட சோதனையை விட்டும் தன்னைக் காக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி, மன்றாடுகின்றான். அவனது வேண்டுகோளை ஏற்று அவனது சிக்கலை அல்லாஹ் தீர்த்த மாத்திரத்தில் அந்த அல்லாஹ்வை மறந்து விடுகின்றான்.

இதற்குக் காரணம் ஷைத்தான் அவனது செயல்பாட்டை அலங்கரித்துக் காட்டியது தான். கீழ்க்கண்ட வசனம் இதைத் தெளிவாக நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும் போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் 10:12

இது தனிமனிதனின் வழிகேட்டிற்குரிய உதாரணமாகும்.

சமுதாயத்தின் வழிகேடு

ஒரு சமுதாயம் வழிகேட்டில் வீழ்வதற்கும் இது தான் காரணமாகும்.

நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது” “அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்

அல்குர்ஆன் 27:23-24

துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களை அல்லாஹ் புனித மாதங்கள் என அறிவித்து அம்மாதங்களில் போர் புரிவதைத் தடை செய்துள்ளான். ஆனால் மக்காவின் இணைவைப்பாளர்கள் புனித மாதங்களில் போர் செய்துவிட்டு அதற்குப் பதிலாக, அடுத்து வருகின்ற வேறொரு மாதத்தைப் புனிதமாக்கிக் கொண்டார்கள்.

(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத்துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:37

இந்தச் சமுதாயத்தினர் வழிகெட்டதற்குக் காரணமாக அல்லாஹ் கூறுவது ஷைத்தானால் அலங்கரிக்கப்பட்ட, அழகாக்கப்பட்ட செயல் தான்.

பெண் குழந்தைகளைக் குறி வைத்துக் கொலை செய்வதும், நரபலி என்ற பெயரில் குழந்தைகளைக் கொல்வதும் இணை வைப்பாளர்களின் கொடூரச் செயல்கள். இக்காலத்தில் வாழ்கின்ற இணை வைப்பாளர்களிடமும் இந்தக் கோர, கொடூரச் செயல் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இதற்கும் ஷைத்தானின் அலங்காரமே காரணம் என அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

அல்குர்ஆன் 6:137

ஷைத்தானின் அலங்கரிப்பில் வீழ்ந்து, நாசமாவோருக்காக நபியே நீர் கவலைப்படாதீர் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆறுதலும் தெரிவிக்கின்றான்.

யாருக்குத் தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:8

மொத்தத்தில் இணை வைப்பு முதல் அத்தனை பாவங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைவது ஷைத்தானால் அழகாக்கிக் காட்டப்படும் செயல்கள் தான்.

நியாயமாகும் தவறுகள்

ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுதல் என்றால், ஒருவர் செய்யும் பாவத்தை ஷைத்தான் அவருக்கு நியாயப்படுத்திக் காட்டுவதாகும்.

ஒரு கடையில் பணி புரிகின்ற ஊழியர் கல்லாவிலிருந்து பணத்தைத் திருடுவான். அவ்வாறு திருடுவது பாவமாகும். அந்த ஊழியருக்கும் தெரியும். ஆனால் அவனிடம், “ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறாய். உன்னுடைய உழைப்பைப் பயன்படுத்தித் தான் உன் முதலாளி சம்பாதிக்கின்றான். ஆனால் உனக்கு மாதச் சம்பளம் வெறும் 3000 தான். ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் உன் முதலாளி உனக்குத் தருவது ஒரு நாளுக்கு நூறு ரூபாய் தான். இது அநியாயம் இல்லையா?’ என்று ஷைத்தான் கேட்கிறான்.

ஷைத்தானின் இந்த வார்த்தைகள் அந்தத் தொழிலாளியின் உள்ளத்தில் நியாயமாகப்படுகின்றது. அவ்வளவு தான். கல்லாவிலிருந்து களவாடவும் கையாடல் செய்யவும் ஆரம்பித்து விடுகின்றான். இதில் உள்ள ஓர் உண்மையான நியாயத்தை அந்தத் தொழிலாளி பார்க்கத் தவறிவிடுகின்றான்.

தன்னை வேலைக்குச் சேர்க்கும் போது முதலாளி தன்னிடம் சொன்ன ஊதியம் என்ன? நாம் அவரிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன? மூவாயிரம் ரூபாய் தான். இஷ்டப்பட்டால் இந்த ஊதியத்திற்கு வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் இடத்தைக் காலி செய்ய வேண்டும். இந்த அடிப்படை நியாயத்தைப் பார்த்தால் ஷைத்தானின் தப்பர்த்தத்திற்குத் தக்க இவன் தாளம் போட மாட்டான். இது ஷைத்தானின் அலங்காரத்திற்கு ஒரு சிறிய நடைமுறை எடுத்துக்காட்டு.

போர் புரிவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்கள் விஷயத்தில் ஷைத்தான் இப்படித் தான் ஒரு நியாயத்தைக் கற்பிக்கின்றான். முஹர்ரம் மாதம் போர் செய்யத் தடை இருந்தாலும் அந்த மாதத்தில் போர் செய்ய நேரிட்டால் அதற்குப் பதிலாக ஸபர் மாதத்தைப் புனித மாதமாக ஆக்கிக் கொள்வோம். வருடத்தில் 120 நாட்கள் புனிதமானவை. அது எந்த நாளாக இருந்தால் என்ன? என்ற நியாயத்தை அவர்களிடம் போடுகின்றான். இதற்கு அவர்கள் பலியாகின்றார்கள்.

ஆனால் இங்கு அவர்கள் ஓர் உண்மையான நியாயத்தைப் பார்க்கத் தவறிவிட்டார்கள். அல்லாஹ் தடுத்தது எந்த மாதம்? அல்லாஹ் புனிதமாக்கியது எந்த மாதம்? அந்த மாதத்தின் புனிதத் தன்மையை மாற்றுவதற்கு நாம் யார்? என்று சிந்தித்து விட்டால் இதிலுள்ள உண்மையான நியாயம் புரிந்துவிடும்.

பரேலவிகளின் போலி நியாயம்

இறந்தவர்களிடம் ஏன் கேட்கின்றீர்கள்? அவர்களை ஏன் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்கள்? என்று நாம் கேட்டால் அதற்கு, “நாங்கள் என்ன அவ்லியாக்களிடம் நேரடியாகவா கேட்கிறோம்? அவர்களைப் பரிந்துரைக்கத் தானே சொல்கிறோம்” என்று பரேலவிகள் பதில் சொல்கின்றனர்.

ஷைத்தான் இப்படி ஒரு போலி நியாயத்தை அவர்களிடம் எடுத்துக் காட்டுகின்றான். இந்தப் போலி நியாயம் அவர்களிடம் நல்ல விலைக்குப் போகின்றது. அதனால் அதை நம்புகிறார்கள். இந்தக் கொள்கையைத் தான் மக்கா இணை வைப்பாளர்கள் கொண்டிருந்தனர்.

நேரடியாக என்னிடம் கேள்! நான் உயிர் உள்ளவன். உனது கோரிக்கைக்குப் பதில் அளிப்பவன் என்று அல்லாஹ் கூறுகின்றான். அதனால் உயிருடன் இருப்பவனின் பரிந்துரை கூட அவனுக்குத் தேவை இல்லை. இதில் இறந்து போன ஒருவரை பரிந்துரைக்கு அழைப்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லையே என்று கேட்கும் போது அவர்களது போலி நியாயம் அடிபட்டுப் போகின்றது.

நாம் ஷைத்தான் அழகாக்கிக் காட்டிய செயலில் இல்லை, சத்தியத்தில் தான் இருக்கிறோம் என்பதற்கும், அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றார்கள் என்பதற்கும் மேற்கண்ட இந்த ஓர் எடுத்துக்காட்டு போதும்.

தங்களது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருப்பது தவ்ஹீதுப் பிரச்சாரம் தான் என்று தாங்கள் ஏறி வந்த படிக்கட்டையே தகர்த்தெறிந்து, இன்று அல்லாஹ்வின் சட்டத்திற்கு எதிராகப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் தமுமுகவுக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் செல்வதற்குக் காரணம் ஷைத்தானின் அலங்காரம் தான்.

கொடி வணக்கம், சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்தல் உள்ளிட்ட இஸ்லாத்தின் அடிப்படையைக் குழிதோண்டிப் புதைக்கின்ற எஸ்டிபிஐ போன்ற இயக்கங்களுக்குப் பின்னால் மக்கள் செல்வதற்கும் இது தான் காரணம்.

ஒரு சொகுசுப் பேருந்தில் 12 மணி நேரம் அன்னியப் பெண்ணுடன் பயணம் செய்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தூக்கி எறியப்பட்டவரைக் கூட ஒரு ஜமாஅத்தின் தலைவராக அங்கீகரிக்க சிலரால் முடிகின்றது என்றால் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டும் ஷைத்தானின் வேலை தான் இது.

மக்களுக்கு அவர்கள் செய்கின்ற தீய காரியங்களை ஷைத்தான் எப்படி அழகாக்கி, அலங்கரித்துக் காட்டுகின்றான் என்பதற்கு மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

சொக்கப்பனை ஒரு சோடனை

கார்த்திகை காலங்களில் தீபங்களை ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எல்லாம் இந்துக்களின் தெய்வ வழிபாடுகள். அந்த வழிபாடுகளை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் கூறும் அறிவியல் காரணங்களைப் பாருங்கள். நவம்பர் 21, 2013 தினமணி நாளிதழில் வெளியான செய்தி:

திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:

பனியும், மழையும் அதிகரித்துக் காணப்படும் ராபிப் பருவம் என்ற பின்பருவத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படும். பிசானம், தாளடி, சம்பாப் பயிர்கள் இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகின்றன. வடகிழக்குப் பருவமழை காரணமாக கூட்டுப் புழுக்களில் இருந்து தாய் அந்துப் பூச்சிகள் அதிகளவில் வெளிவரும். இந்த அந்துப் பூச்சிகள் இடும் முட்டையிலிருந்துதான் புழுக்களும், பூச்சிகளும் உருவாகி பயிர்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றன.

இத்தகைய தாக்குதலுக்கு மூல காரணமாக விளங்கும் தாய் பூச்சிகளை விளக்கு வெளிச்சத்தால் கவர்ந்து அழிப்பதன் மூலம் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இந்த விளக்குப் பொறியைத் தான் திருக்கார்த்திகை தீபம் என்ற அடிப்படையில் வீடுகளில் ஏற்றி வைத்து முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

முன்னிரவு நேரத்தில்தான் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். எனவே, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பின் ஒரு பகுதியாக வீடுகள்தோறும் வாயில்களில் விளக்கு வைக்கப்படுகிறது.

திருக்கார்த்திகை நாளிலும், அதன் தொடர்ச்சியாக மூன்று நாள்களிலும் அதிக அளவில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. மேலும், பலர் கார்த்திகை மாதம் முழுவதுமே வீடுகளில் வாசலில் தீபம் ஏற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த விளக்கு வெளிச்சத்தில் முன்னிரவு நேரத்தில் வரும் தீமை செய்யும் பூச்சிகள் கவர்ந்து இழுத்து அழிக்கப்படுகின்றன.

சொக்கப்பனை: பெரிய அளவில் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிக்க சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு பெரிதும் உதவியாக உள்ளது. கார்த்திகையை முன்னிட்டு கோவில்களிலும், வீதிகளிலும் சொக்கப்பனைகள் கொளுத்தப்படுகின்றன. சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் வெவ்வேறு நாள்களில் இந்த சொக்கப்பனை கொளுத்தப்படுவதால் விடுபட்ட பூச்சிகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன என்றார் அவர். – (நன்றி: தினமணி)

தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற தங்களது வழிபாட்டை நியாயப்படுத்துவதற்காக இவற்றில் அறிவியல் இருப்பதாகக் கொண்டு வந்து நிறுவ முயற்சிக்கின்றனர்.

பூச்சிகளைச் சாப்பிட தவளை, தவளையைச் சாப்பிட பாம்பு, பாம்புகளைச் சாப்பிட பருந்து என்று அல்லாஹ் ஒரு சங்கிலியை ஏற்படுத்தி வைத்துள்ளான். இதற்குத் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொக்கப்பனை கொளுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விளக்கு வெளிச்சத்தைக் கண்டு வெறித்தனமாக வந்து விழுகின்ற பூச்சிகள் உடல் மேல் விழுந்து கடித்து உடலில் விஷத்தைப் பரப்புகின்றன. உண்ணும் உணவுகளில் விழுந்து அந்த உணவையும் விஷமாக்கி விடுகின்றன. இந்தப் பூச்சிகளை மக்கள் எப்படி வரவேற்பார்கள்? அதனால் இது ஒரு பொய் நியாயம், போலிக் காரணம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வாதம் இந்தியாவில் மட்டும் தான். உலகில் எத்தனையோ நாடுகளில் விவசாயம் நடைபெறுகின்றது. தீபம் ஏற்றியும், சொக்கப்பனை கொளுத்தியும் அங்குள்ள பூச்சிகள் வயல்வெளியிலிருந்து புறப்பட்டு நிலங்களை நோக்கி வருவதில்லை. அங்கெல்லாம் விவசாயம் சிறப்பான முறையில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனால் இது பக்காவாக ஷைத்தானின் பொய்யான ஜோடனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வெற்றிலை – அது வெற்று இலை அல்ல (?)

தி இந்து தமிழ் நாளேட்டில் நவம்பர் 25, 2013 அன்று வெளியான தேவை இரண்டாவது பகுத்தறிவியக்கம் என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

“குளித்த பின்னர் விபூதி பூசுவதால் சளி பிடிப்பதில்லை என்பதுபோல எழுதப்பட்ட “அர்த்தமுள்ள மத’ விளக்கங்கள் வந்தன. (அதற்கு ஏன் விபூதி? டால்கம் பவுடர் போதாதா என்று கேட்கக் கூடாது.) கோயிலில் பூஜைக்கு வைத்த வெற்றிலையில் மின்னூட்டம் உருவாகியிருக்கிறது, அந்த மின்னூட்டம் கோபுரக் கலசங்கள் வழியாக இறங்கி வந்திருக்கிறது என்பதுபோல போலி நிரூபணச் சோதனைகள் பரப்பப்பட்டன”

விபூதி பூசினால் சளி பிடிக்காது, வெற்றிலை மின்னூட்டம் பெறுகின்றது என்ற பொய்யான கண்ணோட்டம் எல்லாம் மக்களை அசத்திய வழியில் தட்டழிய வைக்கின்ற ஒரு பிதற்றலாகும். தாங்கள் செய்யும் தவறான வழிமுறைகளுக்கு அறிவியல் நியாயம் கற்பிக்கின்றனர். இவ்வாறு தான் ஷைத்தான் அவர்களின் செயல்களுக்குத் தவறான நியாயம் கற்பித்து அந்த மக்களின் உள்ளங்களில் வழிகேட்டைப் புகுத்துகின்றான்.

இதுபோன்ற ஷைத்தானின் அழகாக்கப்பட்ட அசத்திய வழிகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வது?

முஹம்மது

திருமணம் மூலம் அல்லாமல் கள்ளத் தொடர்பு வைக்கும் ஆண்களாயினும், பெண்களாயினும் இஸ்லாமிய ஆட்சியில் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். திருமணம் செய்யாத நிலையில் இது போல் விபச்சரம் செய்பவருக்கு நூறு கசையடிகளும் திருமணத்துக்குப் பின் விபச்சாரம் செய்பவருக்கு மரண தண்டனையும் இஸ்லாமிய ஆட்சியில் வழங்கப்படும்.

இஸ்லாமிய ஆட்சியில் நீங்கள் குறிப்பிடும் பெண் இரு வகையான தண்டனைக்கும் உரியவராகிறார்.

இஸ்லாமிய ஆட்சி இல்லாத நிலையில் அவளது கணவன் தன்னளவில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.  (அல்குர்ஆன் 24:3)

ஒரு முஸ்லிம் ஆண் நடத்தை கெட்ட விபச்சாரியைத் திருமணம் செய்யக்கூடாது என்றும் ஒரு முஸ்லிம் பெண் நடத்தை கெட்டவனைத் திருமணம் செய்யக் கூடாது என்றும் மேற்கண்ட வசனம் தடை விதிக்கின்றது

மேலும் நடத்தை கெட்ட பெண்கள் நன்னடத்தை கொண்ட ஆண்களுக்குத் தகுதியானவர்கள் இல்லை என்றும் குர்ஆன் கூறுகிறது.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.  (அல்குர்ஆன் 24:26)

கற்பு நெறியைப் பேணாதவர்களுடன் முஸ்லிம்கள் வாழக் கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஆணோ பெண்ணோ தவறான நடத்தையுடையவராக இருந்து திருந்தி விட்டால், திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுவிட்டால் அவர்களை வாழ்க்கைத் துணையாக வைத்துக் கொள்வது சம்பந்தப்பட்டவரின் விருப்பத்தைப் பொருத்ததாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கச் சோலைகளுமே அவர்களின் கூலி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (நன்கு) செயல்பட்டோரின் கூலி மிகவும் நல்லது. (அல்குர்ஆன் 3:135, 136)

அவ்வாறு இல்லாமல் கணவன் இருக்கும் போதும் ஒரு பெண் கள்ள உறவு வைத்திருந்தால் அவளுடன் கணவன் வாழக் கூடாது. அவளை விவாகரத்துச் செய்து விட வேண்டும். இந்தக் காரணத்துக்காக விவாகரத்துச் செய்யும் போது அவர்களுக்கு எந்த இழப்பீட்டையும் கணவன் வழங்கத் தேவையில்லை.

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.  (அல்குர்ஆன் 4:19)

வெளிப்படையாக வெட்கக்கேடானதைச் செய்யாத வரை தான் மனைவியுடன் வாழ முடியும் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 24:19)

இது போன்றவர்களுடன் வாழ்க்கை நடத்துவது முஸ்லிம் சமுதாயத்தில் மானக்கேடான செயல் பரவுவதற்கு அடையாளமாகும். இது பாவமாகும். இதன் பின்னரும் அதைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு அல்லாஹ்விடம் தண்டனை உண்டு. மற்ற பெண்களும் இதுபோல் நடக்கும் துணிவையும் இது ஏற்படுத்தி விடும்.

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.  (அல்குர்ஆன் 65:1)

விவாகரத்துக்குப் பின்னர் ஒழுக்கக்கேடாக நடந்தால் இத்தா காலத்தில் கணவன் வீட்டில் தங்கும் உரிமையை அவர்கள் இழக்கிறார்கள். மனைவி எனும் பந்தம் நீங்கிய பின்னர் இந்த நிலை என்றால் மனைவியாக இருக்கும் போது ஒழுக்கங்கெட்ட செயலில் ஈடுபடும் பெண்ணைச் சகித்துக் கொள்ள முடியாது.

இத்தா காலத்தில் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட ஒழுக்கங்கெட்டவர்களுக்கு கொடுக்க அவசியம் இல்லை என்பதால் விவாகரத்து செய்யும் போது கொடுக்கும் இழப்பீட்டைக் கொடுக்கத் தேவை இல்லை என்பதை இதில் இருந்து அறியலாம்.

விபச்சாரிகளுடன் இல்லற வாழ்வைத் தொடர்வது சுயமரியாதைக்குப் பெரிதும் இழுக்காகும். மேலும் இது போன்றவர்களுடைய நடவடிக்கை குழந்தைகளின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.

? “அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா?’ என ஒரு முறை இறைவனின் தூதர் மூசா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், “மூஸாவே, கடைசி காலத்தில் முஹம்மதின் உம்மத்தவர்களை நான் அனுப்புவேன். அவர்கள் காய்ந்த உதடுகளுடனும், குழி விழுந்த கண்களுடனும், தாகத்தால் வறண்ட நாக்குகளுடனும், பலவீனமான உடலுடன் பசியால் துன்பப்படும் வயிறுகளுடனும், காய்ந்த ஈரல்களுடனும் என்னை அழைப்பார்கள். மூஸாவே அவர்கள், உன்னை விட அதிகம் சிறந்தவர்கள். நீர் என்னுடன் பேசும் போது சுமார் 70,000 திரைகள் உனக்கும் எனக்கும் இடையில் உள்ளன. ஆனால் இப்தார் நேரத்தில் ஒரு சிறு திரை கூட எனக்கும், நோன்பு திறக்கும் முஹம்மதின் உம்மத்தினருக்கும் இடையில் இல்லை. மூஸாவே, நானே, எனக்குள் நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளிகள் கேட்கும் பிரார்த்தனையை ஒரு போதும் மறுக்கக் கூடாது எனும் பொறுப்பை எடுத்துக் கொண்டேன்.

இந்தச் செய்தி எந்த கிரந்தத்தில் உள்ளது? இதன் தரம் என்ன?  கருத்துக்களை சிந்தித்தால் நிறைய கேள்விகள் எழுகின்றன. தெளிவாக்குங்கள்.

ஹஸன்

இந்தக் கருத்தில் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் கிடையாது. இது ஒரு கட்டுக்கதை. இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இறைவன் வானத்தில் இருந்து கொண்டே பூமியில் உள்ள மூஸா நபியிடம் தனது பேச்சைக் கேட்கும் விதமாக நேரடியாகப் பேசியிருக்கிறான். இது நபிமார்களிலேயே மூஸா நபிக்கு மட்டும் உரிய சிறப்பாகும். அதனாலே அவர்கள் கலீமுல்லாஹ் என்றழைக்கப்படுகிறார்கள்.

இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.  (அல்குர்ஆன் 2:253)

விசாரணை நாளின் போது மக்கள் மூஸா நபியை நோக்கி அல்லாஹ் நேரடி உரையாடலுக்கு உங்களைத் தேர்வு செய்தான் என்று கூறுவார்கள் என நபியவர்கள் கூறியுள்ளனர்.  (பார்க்க: புகாரி 7510)

அங்கே அவர் வந்த போது “மூஸாவேஎன்று அழைக்கப்பட்டார். “நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் “துவாஎனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!  (அல்குர்ஆன் 20:11-13)

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.  (அல்குர்ஆன் 4:164)

நோன்பு திறக்கும் நிலையில் நாம் என்ன பிரார்த்தனை ஓதினாலும் அது இறைவனுடைய பேச்சை நாம் நேரடியாக கேட்கும் விதமாக இருக்காது. இவ்வாறிருக்கையில் இது இறைவன் மூஸா நபியிடம் பேசியதை விட எப்படி சிறப்பானதாகும்? இதுவே இந்தச் செய்தி தவறு என்பதை உணர்த்துகின்றது

மேலும் மூஸா நபியைச் சிறப்பித்து பல ஹதீஸ்கள் உள்ளன. நபியர்கள் மூஸாவை விட தன்னை சிறப்பித்து உயர்த்தி விடக்கூடாது எனுமளவுக்கு கூறியிருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், “உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அந்த யூதர், “உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு)  அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்- அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், “மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள்.  நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2411

இந்த ஹதீஸ் மூஸா நபியின் சிறப்பை உணர்த்துகின்றது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுக்கதை மூஸா நபியை அவமதிக்கும் வகையில் உள்ளது.

இறைவன் மூஸா நபியிடம் நேரடியாகப் பேசியதை குர்ஆனில் அல்லாஹ் சிறப்பித்துக் குறிப்பிடுகிறான். மறுமையிலும் மூஸா நபிக்கு உள்ள அந்தச் சிறப்பை மக்கள் குறிப்பிடுகிறார்கள் எனும் போது இந்தச் சம்பவம் மூஸா நபிக்கு இறைவன் வழங்கிய அந்தச் சிறப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

எனவே இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதில் சந்தேகமில்லை.

மேலும் நோன்பு நோற்பது பற்றி அல்லாஹ் கூறும் போது உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்குக் கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். ஒட்டிய வயிறு உள்ளிட்ட மேற்சொன்ன கட்டுக்கதையில் உள்ள அனைத்தும் அனைத்து சமுதாயத்துக்கும் உள்ளதாகும். மேலும் நோன்பு துறக்கும் இப்தார் என்பதும் அனைத்து சமுதாயங்களுக்கும் வழங்கப்பட்ட பொதுவான சிறப்பாகும். மற்ற சமுதாய மக்களுக்கு நோன்பு இல்லாதது போலவும் முஹம்மது நபியின் உம்மத்துகளுக்குத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது போலவும் இந்தக் கட்டுக்கதையில் சொல்லப்படுகிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் எந்த உம்மத்தின் எந்த மனிதனும் எந்த ஒரு நபியை விடவும் உயர முடியாது. ஒரு நபியை விட நபியல்லாதவர்கள் சிறந்தவர்கள் என்று எந்த நூலில் இடம் பெற்றாலும் கண்ணை மூடிக் கொண்டு அதைக் கட்டுக்கதை என்று சொல்லிவிடலாம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                  தொடர்: 6

அறியாமைக் கடல் கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

கஸ்ஸாலியின் ஆக்கங்களில் மண்டிக் கிடக்கின்ற வழிகேடுகள், அசத்தியக் கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் வண்டி வண்டியாக எடுத்து, அவற்றை அலசி ஆய்வு செய்திருக்கின்றார்கள். அவற்றின் சாராம்சக் கருத்துக்களை உங்களின் பார்வைக்குத் தருகின்றோம்.

தர்உ தஆருலில் அக்ல் வந்நக்ல் – அறிவுக்கும் இறைச்செய்திக்கும் இடையிலான மோதலைக் களைதல் என்ற தனது நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கஸ்ஸாலியின் மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலை விமர்சனம் செய்கின்றார்கள். மிஷ்காத்துல் அன்வார் என்பது மக்களின் கைகளில் சாதாரணமாக வலம் வருகின்ற, அச்சிடப்பட்ட ஒரு சிறிய நூல். அந்த நூலை விமர்சிக்கும் போது, “பத்து அறிவுகள்’ என்ற கோட்பாட்டை இப்னு தைமிய்யா அவர்கள் அலசுகின்றார்கள்.

இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தை இப்போது பார்ப்போம்.

இந்தக் கோட்பாட்டின் கேடுகளை விமர்சிக்கப் புகுந்தால் இதிலிருந்து எளிதில் வெளியில் வர முடியாது. அந்த அளவுக்கு அது மிக நீளமானது; ஆழமானது. இந்நூல் அதைத் தாங்காது. கல்வியிலும் வணக்கத்திலும் புகுந்த பல ஆட்களின் பாதை மாற்றத்திற்கு இந்தக் கோட்பாடு காரணமாக அமைவதால் அதை வெறுமனே தொட்டு மட்டும் காட்டிவிட்டுச் செல்ல என்னால் முடியவில்லை.

(அல்உகூலுல் அஷ்ரா – பத்து அறிவுகள் என்பது தத்துவ ஞானிகள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கையாகும். ஒன்றிலிருந்து ஒன்றே தவிர வேறெதுவும் உருவாகாது. அல்லாஹ் முதல் அறிவை மட்டும் தான் படைத்தான். அவனால் அந்த முதல் அறிவைத் தவிர வேறெதையும் படைக்க இயலாது. இந்த அறிவு விண்வெளியில் உள்ளதாகும். முதல் அறிவு தான் இரண்டாவது அறிவைப் படைத்தது. இப்படியாகப் பத்து அறிவுகள் வரை தொடர்கின்றது. இந்தப் பத்து அறிவுகள் சேர்ந்து தான் வானத்தைப் படைத்தன. இதுதான் கடவுள் தொடர்பான தத்துவ ஞானிகளின் கோட்பாடாகும்.)

கஸ்ஸாலி தனது மிஷ்காத்துல் அன்வார் நூலின் கருத்தையும் கருவையும் இறை மறுப்பாளர்களின் வறட்டு வாதக் கொள்கையின் அடிப்படையிலேயே அமைத்துள்ளார்.

உள்ளங்களில் உருவாகின்ற நற்சிந்தனைகளை, நல்ல கருத்துக்களையெல்லாம் மூஸா நபியிடம் அல்லாஹ் பேசிய பேச்சைப் போன்றது என்று கஸ்ஸாலி ஆக்கிவிட்டார். இந்த ஒரு காரணத்தால் தான் அவரை என்னால் சும்மா விட முடியவில்லை. கராமிதா போன்ற வழிகெட்ட கூட்டத்தினரின் கொள்கையைத் தான் கஸ்ஸாலி எதிரொலிக்கின்றார்.

நேசர்களின் நேரடித் தொடர்பு

இறைவனிடமிருந்து மலக்குகள் செய்திகளைப் பெற்று இறைத் தூதர்களிடம் பதிவேற்றம் செய்கின்றனர். ஆனால் அதே இறைவனிடமிருந்து நேரடியாகவே செய்திகளைப் பெறுபவர்கள் தான் முத்திரை பதித்த அவ்லியாக்கள் என்று கஸ்ஸாலி பிதற்றுகின்றார்.

அதாவது, இறைத்தூதர்கள் மலக்குகள் என்ற மீடியேட்டர் மூலமாக செய்திகளைப் பெறுகின்றார்கள். ஆனால் அவ்லியாக்களோ நேரடியாக செய்திகளை உள்வாங்குகின்றனர் என்று கூறுகின்றார்.

இந்த வறட்டு வாதப் பேர்வழிகளின், வழிகேடர்களின் பார்வையில் மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்ட படைப்புகள் அல்லர். மாறாக, அவர்கள் நபிமார்களின் உள்ளத்தில் தோன்றுகின்ற, ஒளிவடிவிலான வெறும் கற்பனைத் தோற்றங்கள் தான். நபியின் உள்ளத்தில் உதிக்கின்ற இந்த ஒளிக்காட்சிகள் தான் அல்லாஹ்வின் உரையாடல் ஆகும்.

இறைநேசர் அறிவு ஞானத்தை அப்படியே பெற்றுக் கொள்கிறார். ஆனால் நபியோ அறிவு ஞானத்தை அவரது உள்ளத்தில் தோன்றும் கற்பனைக் காட்சிகள் மூலம் பெறுகின்றார். இதுதான் இவர்களது நிலைப்பாடு.

இந்த வழிகேடர்கள் இந்நிலைபாட்டில் இருப்பதால் தான் அவ்லியாக்களிடம் அல்லாஹ் நடத்தும் உரையாடல், இம்ரானின் மகன் மூஸா நபியிடம் அவன் நடத்திய உரையாடலை விட மிகச் சிறந்ததாகும் என்று கூறுகின்றனர்.

மூஸா நபி, எழுத்துக்கள் அல்லது ஓசை என்ற சாதனத்தின் மூலம் அல்லாஹ்விடம் பேசினார். அதே சமயம் இவர்கள் இந்தச் சாதனங்கள் இல்லாமலேயே அல்லாஹ்விடம் பேசுகின்றனர். அல்லாஹ் தன் கருத்துக்களை அவர்களுடைய உள்ளத்தில் போடுவது தான் அது.

“கல்உன் னஃலைன்’ என்ற நூலாசிரியர் மேற்கண்ட இந்தக் கருத்தைக் கொண்டிருக்கிறார்.

தத்துவஞானிகள் வகுத்த விதியின் அடிப்படையில் மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலில் கொள்கை, கோட்பாடுகளை கஸ்ஸாலி கட்டமைத்துள்ளார். சூபிஸ ஆசாமிகள் இந்தக் கோட்பாடுகளையே கைக்கொண்டுள்ளனர்.

அல்லாஹ், மூஸா நபியிடம் பேசினான் என்றால் இது ஞானங்களிலிருந்து அவரது உள்ளத்தில் தோன்றிய ஒரு வெளிப்பாடு தான் என்றும் இந்த வழிகேடர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதான் மிஷ்காத்துல் அன்வார் தொடர்பான இப்னு தைமிய்யா அவர்களின் ஆய்வுக் கருத்தாகும்.

நடிகர்களான நபிமார்கள்

அடுத்து, இப்னு ருஷ்து என்பவரின் கருத்துக்களை ஆய்வு செய்யும் போது இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தெரிவிப்பதாவது:

இப்னு ஸீனா மற்றும் அகமிய அந்தரங்க ஞானவான்களின், வழிகேடர்களின் வறட்டுத் தத்துவக் கருத்தைத் தான் இந்த ஆள் (கஸ்ஸாலி) கொண்டிருக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது.

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்ப வேண்டும் என்று நபிமார்கள் மக்களிடம் போதிக்கின்றனர். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் இதற்கு நேர்மாறான நிலைபாடே குடிகொண்டிருக்கின்றது. இவ்வாறு உள்ளொன்று வைத்து, புறமொன்று போதிப்பதற்குக் காரணம், மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான். நபிமார்கள் உண்மையைப் போட்டு உடைத்து விட்டால் அல்லாஹ்வுக்குத் தனித்தன்மைகள் இல்லை என்று தான் மக்கள் விளங்குவார்கள். அதனால் மக்கள் பயன்பெறுவதற்கு வசதியாக, யதார்த்தத்திற்கு ஏற்ப, ஒத்த வகையில் விஷயங்களை கற்பனையாகவும் உதாரணமாகவும் வடித்துக் கூறியிருக்கின்றனர்’ என்பது இவர்களது கொள்கையாகும்.

கஸ்ஸாலி தனது நூலில் பல இடங்களில் இந்தச் சிந்தனையைத் தான் பிரதிபலிக்கின்றார். இல்ஜாமுல் அவாம் (பொதுமக்களுக்குக் கடிவாளமிடல்), அத்தஃப்ரிக்கத் பைனல் ஈமானி வஸ்ஸன்த்தகதி (நம்பிக்கை கொள்ளுதல் மற்றும் மதம் மாறுதலுக்கு மத்தியிலுள்ள வேறுபாடு) என்ற நூலில், அல்லாஹ்வுடைய பண்புகளைச் சொல்கின்ற குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்று விளக்கம் கொடுக்கக்கூடாது என்ற பொது நிலைப்பாட்டை கஸ்ஸாலி கூறுகின்றார்.

ஆனால் கஸ்ஸாலியின் கொள்கைப்படி பார்த்தால், தத்துவஞானிகளின் கடவுள் கொள்கைக்கு மாற்று விளக்கம் கூடாது என்று கூறுவதாகவே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மக்களை சீர்திருத்தக்கூடிய ஆதாரங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் மக்களைச் செயல்பட வைப்பது கடமையாகும். அந்த ஆதாரங்களை, அவை கூறுகின்ற வெளிப்படையான கருத்துக்களின் அடிப்படையில் நம்ப வேண்டும் என்று சூபிஸவாதிகள் ஒப்புக் கொள்கின்றனர். அதேவேளையில் நபிமார்கள் சத்தியத்தைச் சரியாக விளக்கவில்லை, ஆலிம்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய எந்தக் கல்வியையும் அவர்களுக்காக நபிமார்கள் விட்டுச் செல்லவில்லை என்பது இவர்களின் நிலைப்பாடு. இவர்களது பார்வையில் உண்மையான கல்வியைப் பெற்றவர்கள் ஜஹ்மிய்யா போன்ற கூட்டத்தினர் தான்.

ஜஹ்மிய்யா கூட்டத்தினர் அல்லாஹ்வுக்குரிய இறைத் தன்மைகளை, இறைப் பண்புகளை ஏற்க மறுக்கும் கூட்டத்தினர் ஆவர்.

மிஷ்காத்துல் அன்வார் என்றால் ஒளியின் மாடம் என்று பொருள். அவர் கூறிய இந்தக் கருத்தை உண்மையான குர்ஆன், ஹதீஸ் என்ற ஒளியின் மாடத்திலிருந்து பெறவில்லை. கஸ்ஸாலி என்ற மாடத்திலிருந்து உருவான சொந்தச் சரக்காகும். இந்த வழிகெட்ட வறட்டு வாதப் பேர்வழிகள் சென்ற பாதையில் சட்ட ஆய்வாளர்கள் ஒருசிலர் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற இவர்கள் அல்லாஹ்வின் பண்புகள், அத்தாட்சிகள் விஷயத்தில் இறைமறுப்பாளர்கள் ஆவர்.

அல்லாஹ்வின் தூதர் உறுதிப்படுத்திய விஷயங்களை மறுக்கும் சிந்தனை கொண்டவர்கள் இறை மறுப்பில் வீழ்ந்தவராவார். இத்தகையோர் பிந்தைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளனர். முந்திய காலகட்டத்தில் மிகக் குறைவு.

குர்ஆன் விரிவுரையாளர்கள், ஹதீஸ் விளக்கவுரையாளர்கள், எதிர்மறைக் கடவுள் கொள்கை தத்துவவியல் நூலாசிரியர்கள் போன்றோரின் கருத்தை ஆய்வு செய்வோர் எவரும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

இவை தான் இப்னு ருஷ்தின் கூற்றுக்களை ஆய்வு செய்யும் போது இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறிய கருத்துக்களாகும்.

குழப்பத்தின் மறுபெயர் கஸ்ஸாலி

இப்னு ருஷ்தை மேற்கோள் காட்டி மற்றோர் இடத்தில் இப்னு தைமிய்யா கூறியதாவது:

இந்த நோயை முதன்முதலில் புகுத்தியவர்கள் காரிஜிய்யாக்கள். இரண்டாவது முஃதஸிலாக்கள். அடுத்து அஷ்அரிய்யா, பிறகு சூஃபிய்யாக்கள். இதற்குப் பின்னால் வந்தவர் கஸ்ஸாலி. சூபிஸ சிந்தனை அணையை மக்களிடம் திறந்து விட்டவர்.

அவரது சுய விளக்கம் அவரை ஆட்டுவித்தது. அதன் அடிப்படையில் தத்துவத்தையும், தத்துவ ஞானிகளின் கருத்துக்களையும் கற்பனைகளையும் பொதுமக்களிடம் அவிழ்த்துவிட்டார்.

இந்தக் கருத்துக்கள் அடங்கிய அந்த நூலுக்கு மகாஸித் – நோக்கங்கள் என்று பெயரிட்டிருந்தார். அந்த நூலை இயற்றியதே தத்துவ ஞானிகளுக்குப் பதில் சொல்வதற்காகத் தான் என்றும் சொல்லிக் கொண்டார்.

பிறகு, தஹாஃபுதுல் ஃபிலாஸஃபா – தத்துவத்தின் வீழ்ச்சி என்ற பெயரில் ஒரு நூலை இயற்றினார். அந்த நூலில் தத்துவ ஞானிகளை மூன்று சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் இறைமறுப்பாளர்களாக்கினார்.

இவராக வைத்துக் கொண்ட அல்லது உருவாக்கிக் கொண்ட இஜ்மாவுக்கு, ஏகோபித்த முடிவுக்கு அவர்கள் மாற்றமாக நடந்துவிட்டார்களாம். அடுத்து, சூபியாக்கள் வகுத்துள்ள சட்டங்களில் பித்அத்களைப் புகுத்தி விட்டார்களாம். இதுபோன்ற காரணங்ளால் அவர்கள் இறை மறுப்பாளர்கள் என்று கூறினார். அவற்றில், சந்தேகத்தில் வீழ்த்தக்கூடிய ஆதாரங்களைக் கொண்டு வந்திருந்தார். தடுமாற்றத்தில் தள்ளி விடும் ஐயப்பாடுகளைக் கொண்டு வந்து கொட்டியிருந்தார்.

அவரது இந்த ஆதாரங்களும் ஐயப்பாடுகளும் அதிகமான மக்களை மார்க்கத்திலிருந்தும், குர்ஆன் ஹதீஸிலிருந்து பெறப்படும் தத்துவக் கருத்துக்களிலிருந்தும் வழிகெட வைத்துவிட்டன.

தஹாஃபுத் என்ற நூலில், தான் பதிய வைத்த கருத்துக்கள் தர்க்கரீதியிலான வாதங்கள் என்றும், அல்மள்னூன் பிஹி அலா கைரி அஹ்லிஹா என்று நூலில் தான் உண்மையான சத்தியக் கருத்தைப் பதிய வைத்ததாகவும் ஜவாஹிருல் குர்ஆன் என்ற தமது நூலில் கஸ்ஸாலி குறிப்பிடுகின்றார். இப்படிப் பல்வேறு குழப்பமான கருத்துக்களைப் பதிய வைக்கின்றார்.

ஏகத்துவத்தில் இடறிய கஸ்ஸாலி

மிஷ்காத்துல் அன்வார் நூலில் ஆரிஃபின்களின் (அல்லாஹ்வை அறிந்தவர்கள்) தரங்களைப் பட்டியலிடுகின்றார்.

அல்லாஹ் முதல் வானத்தை இயக்குபவன் அல்லன். அதே சமயம் அதை இயக்கும் ஆற்றல் அவனிடமிருந்து உருவானது என்று நம்பிக்கை கொண்ட ஞானிகளைத் தவிர மற்ற ஞானிகள் அனைவரும் (இறை தரிசனத்தை விட்டும்) தடுக்கப்பட்டவர்கள் என்று அதில் குறிப்பிடுகின்றார். தத்துவஞானிகளின் கடவுள் கொள்கையையே இவரும் கொண்டிருக்கின்றார் என்பதற்கு இவர் அறிவிக்கின்ற கொள்கைப் பிரகடனம் இது! தத்துவஞானிகளின் கடவுள் தொடர்பான விளக்கங்கள் அனைத்தும் ஊகங்களேயாகும்.

ஒருபுறம் தத்துவஞானிகளின் கடவுள் கொள்கையை ஆதரிக்கும் கஸ்ஸாலி, மற்றோரிடத்தில் தத்துவஞானிகளுக்கு எதிராகவும் கருத்து கூறியுள்ளார். அல்முன்கித் மினள் ளலால் (வழிகேட்டிலிருந்து காப்பாற்றக்கூடியது) என்ற நூலில் தத்துவஞானிகளை கஸ்ஸாலி சாடித் தள்ளியிருக்கின்றார். ஞானத்தைப் பெறுவதற்காக தத்துவஞானிகளைத் தேடிப் போக வேண்டியதில்லை. தனிமையில் இருப்பதாலும் சிந்திப்பதாலும் கிடைக்கக்கூடியது தான் ஞானம். இதுதான் ஞானத்தில் நபிமார்களின் வரிசையில் உள்ளதாகும் என்று தெரிவிக்கின்றார்.

இதே கருத்தைத் தான் கீமியாஉஸ் ஸஆதா – வெற்றியின் வேதிப் பொருள் என்ற நூலிலும் பதிவு செய்கின்றார்.

இந்தக் குழப்பம், கலங்கடிப்பு காரணமாக மக்கள் இரு சாரார்களாகப் பிரிந்து விட்டனர். ஒரு சாரார் தத்துவம், தத்துவக் கொள்கைகளை இகழக் கிளம்பிவிட்டனர். இன்னொரு சாரார் மார்க்கத்தை தத்துவமாகத் திருப்பும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்      தொடர்: 9

மஹ்ரமான உறவுகள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் பார்த்து வருகிறோம்.

இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

அல்குர்ஆன் 23:1-7

கணவன், மனைவி மூலமாகவும் மனைவி, கணவன் மூலமாகவுமே தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வார்கள். இதுவல்லாத வேறு வழிகளைத் தேடமாட்டார்கள். அப்படித் தேடினால் அவர்கள் வரம்புகளை மீறியவர்கள், பாவிகள் என்று கடுமையாக எச்சரிக்கிறான்.

நாம் என்ன நிலைக்குச் சென்றாலும் குடும்ப அமைப்பில் இல்லறம் என்கிற முறையில் மாத்திரமே நம்முடைய உடல் சுகத்தை அனுபவிக்க வேண்டும். அதைத் தவிர வேறெந்த வழிமுறைகளிலும் முயற்சி செய்யவே கூடாது.

இன்னும் இதில் விரிவாகச் சொல்வதாக இருந்தால், ஒழுக்கக் கேட்டைச் செய்யக் கூடாது என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதன் பக்கம் கூட நெருங்கவே கூடாது என்று மார்க்கம் சொல்லித் தருகிறது. நெருங்குதல் என்பது எப்படியெல்லாம் ஏற்படும் என்றும், அந்த நிலைகளில் நம்மை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே மனித சமூகத்திற்கு இஸ்லாம் சொல்லித் தருகிறது.

கணவன் மனைவி என்ற உறவு இல்லாத ஆண்களும் பெண்களும் தனித்திருப்பதை இஸ்லாம் இரு வகைகளில் பிரித்துப் பார்க்கிறது. ஒரு ஆணோ பெண்ணோ யாரைத் திருமணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மஹ்ரம் என்ற உறவினர்கள் எனவும், மற்றவர்கள் மஹ்ரம் அல்லாத உறவினர்கள் எனவும் இஸ்லாம் பிரித்துப் பார்க்கிறது.

யாரைத் திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுடன் தனியாக இருக்கலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:23

உங்கள் அன்னையர் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் தன் தாயைத் திருமணம் முடிக்க முடியாது. அப்படியெனில் தாயும் மகனும் தனியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதேபோன்று ஒருவன் தனது மகளைத் திருமணம் முடிக்க முடியாது.

“உங்களது சகோதரிகள்’ என்றால் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி, தந்தை இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து அந்த மனைவியின் மூலம் பிறந்த பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி. தாய் இன்னொரு கணவனைத் திருமணம் முடித்து அவர் மூலமாகப் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி! இவர்கள் மூன்று பேருமே சகோதரிகளாவார்கள். இதுபோன்ற சகோதரிகளுடன் ஒரு ஆண் தனியாக இருந்து கொள்வது அந்த ஆணுக்குக் குற்றமில்லை.

தகப்பனுடைய சகோதரிகள் என்றால் மாமிகள், அத்தை என்றெல்லாம் சொல்கின்ற உறவு. யாரையாவது மாமி என்று சொல்லிக் கொண்டு அவர்களுடன் தனிமையில் அமரக் கூடாது. இங்கே சொல்லப்படுகிற மாமி என்பவர்கள் தந்தையுடன் பிறந்த அக்கா தங்கைகளைத் தான் குறிக்கும்.

அதேபோன்று அம்மாவுடைய சகோதரிகளுடன் தனியாக இருக்கலாம். அதாவது சிறிய தாயார், பெரிய தாயார் என்று அர்த்தம். அண்ணன் தம்பியின் பெண் பிள்ளைகள், அக்கா தங்கையின் பெண் பிள்ளைகளுடன் தனிமையில் அமரலாம், பேசலாம். நம் பிள்ளைகளைப் போன்று அவர்களைப் பார்த்து வரலாம். இவர்கள் அனைவரும் மஹ்ரமானவர்கள் தான்.

பாலூட்டிய தாயையும் திருமணம் முடிக்க முடியாது. அவர்களுடனும் தனிமையில் இருக்கலாம். பேசலாம். பாலூட்டிய தாய் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தால், பால்குடிச் சட்டத்தைத் தெரிய வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தில் பால்குடிச் சட்டம் என்பது, இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு, அக்குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அல்லாத வேறொரு பெண் பால் கொடுத்தால் அந்தக் குழந்தை பெரியவனாக மாறி திருமண வயதை அடைந்தால் அப்போது பால் கொடுத்த இந்தத் தாயைத் திருமண முடிக்க முடியாது. பால் கொடுத்த இந்தத் தாய் அவளைப் பெற்றெடுத்த தாயின் அந்தஸ்தில் வைத்து பார்க்கப்படுகிறாள். அதே நேரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை அல்ல, குறைந்தது 5 தடவையாவது பால் அருந்திருக்க வேண்டும்.

அதேபோன்று பால்குடிச் சகோதரிகள் என்றால், எந்தத் தாயாரிடம் பால் குடிக்கிறோமோ அந்தத் தாய்க்குப் பிறந்த பெண் பிள்ளைகள் நமக்கு பால்குடிச் சகோதரிகள் ஆவர். அவர்களிடமும் சர்வ சாதாரணமாக இருந்து கொள்ளலாம். அதேபோன்று மனைவியின் தாயாராகிய மாமியார்கள் மஹ்ரமாவார்கள். மாமியார் வீட்டில் மருமகன் சாதாரணமாக இருக்கலாம். மாமியாருடன் தனிமையில் இருந்தாலும் தவறு என சொல்ல முடியாது.

ஆனால் நடைமுறையில் பெண்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட இந்தச் சட்டத்தை விளங்காமல் யார் யாரையெல்லாமோ அனுமதித்து விட்டு, மருமகனை அந்நியராகப் பார்க்கிற பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இது தவறான நடைமுறையாகும். மாமியாருக்கு மருமகன் என்பவர் பெற்றெடுத்த பிள்ளை போன்று பார்க்க வேண்டும்.

உங்கள் மனைவியின் மகளும் உங்களுக்கு மஹ்ரம் தான். உங்கள் மனைவியரின் மகள் என்றால், உங்களது மனைவி ஏற்கனவே ஒருவரைத் திருமணம் முடித்து மனைவியாக வாழ்ந்து அவர் மூலம் பெற்றெடுத்த பெண் பிள்ளை உங்களுக்கும் பிள்ளை அந்தஸ்து தான்.

அதேபோன்று மகனுடைய மனைவியும் மஹ்ரமானவள் தான். அதாவது மருமகள். இவர்களிடமும் தனியாக இருக்கலாம். பேசலாம். பழகலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிறது.

எனவே மேற்சொல்லப்பட்ட உறவு முறைகளைத் தவிர்த்து வேறெந்த பெண் தனியாக இருந்தாலும் அவர்களிடத்தில் செல்ல முடியாது. பேசமுடியாது. பழக முடியாது. இதுதான் மஹ்ரம் என்பதற்கான சட்டமாகும்.

இந்த வசனத்தில் ஆண்களை மையமாக வைத்துத் தான் சட்டம் சொல்லப்படுகிறது. இதில் சொல்லப்பட்ட அதே உறவு முறைகளில் பெண்களுக்கும் இந்தச் சட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் மகனுடன் தனிமையில் பேசலாம், பழகலாம். அதேபோன்று பெண் தனது தகப்பனாருடன் தனிமையில் இருக்கலாம், பேசலாம், பழகலாம்.

ஒரு பெண் தன்னுடைய அண்ணண் தம்பியுடன் தனிமையில் இருக்கலாம். அதேபோன்று பெண்ணுக்கு அவளது சகோதரர்களுடைய மகன்களுடன் தனிமையில் இருக்கலாம். அக்காள் தங்கையின் மகன்களும் மஹ்ரமாவார்கள்.

ஒரு பெண், தன் தந்தையுடன் பிறந்தவர்களான சித்தப்பா பெரியப்பா உடன் சாதாரணமாக இருந்து கொள்ளலாம். அதேபோன்று தன் தாயாருக்கு அண்ணன் தம்பிகளான மாமாவுடன் பேசிக் கொள்ளலாம்; தனிமையில் இருந்து கொள்ளலாம்.

அதேபோன்று பால்குடிச் சகோதரனுடனும் தனிமையில் இருக்கலாம். ஒரே தாயிடம் பால் குடித்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளைப் போன்றவர்களாவர். இவர்களுக்குள் திருமண உறவு கூடாது. இப்படி பால் குடிப்பது வெவ்வேறு காலகட்டமாக இருந்தாலும் சரி தான். பால்குடிச் சகோதரன் என்கிற அடிப்படை மாறாது.

தாயுடைய கணவனிடத்திலும் சாதாரணமாக நடந்து கொள்ளலாம். தாயுடைய கணவன் என்றால் முதல் கணவன் மூலம் பெற்றெடுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்குத் தாயாராக இருப்பவள் இன்னொரு கணவரைத் திருமணம் முடித்தால் அந்தக் கணவர் இந்தப் பெண்ணுக்கு தந்தை என்கிற அந்தஸ்தில் வந்து விடுவதினால் இவரிடத்திலும் சாதாரணமாக நடந்து கொள்ளலாம். தவறில்லை. அந்நிய உறவு என்று கருதக்கூடாது.

அதேபோன்று கணவனின் தகப்பனராகிய மாமனாரிடத்திலும் அந்நிய உறவு என நினைக்கத் தேவையில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்த உறவு முறைகள் தான் ஓர் ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்டவர்கள். இவர்களல்லாத மற்ற எந்த உறவு முறைகளாக இருந்தாலும் அவர்கள் அந்நியர்களாவர். அவர்களுடன் தனிமையில் பேசவோ, அமரவோ, பழகவோ கூடாது என இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கின்றது. ஏனெனில் குடும்ப அமைப்பு சிதைந்து நாசமாவதற்கும் ஒழுக்கங்கெட்டு இந்தச் சமூகம் மாறுவதற்கும் அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது தான் காரணம் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே எச்சரித்துள்ளது.

தனிமையில் இருப்பது சம்பந்தமான எல்லைக் கோடு தான் திருக்குர்ஆனின் இந்த 4:23 வசனமாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

ஸீனத், அல்இர்ஷாத் மகளிர் கல்வியகம், மேலப்பாளையம்

தமிழகத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஏகத்துவம் என்ற ஜோதி சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. எங்கு நோக்கினும் ஆர்ப்பரிக்கும் ஏகத்துவ சொந்தங்கள்.

அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம்  மற்றும் சமுதாய பணிகள் போன்ற பல சிறப்பம்சங்களுடன் தனக்கே உரிய பாணியில் சமுதாயத்தில் இந்த ஏகத்துவம் தனி மதிப்பைப் பெற்றுத் திகழ்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மேலும் ஆர்ப்பாட்டக் களத்தில் ஆர்ப்பரிக்கும் கோஷங்களை எழுப்புவோரும், வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசல்களின் அனைத்து மூலைகளையும் நிரப்பி தெருக்களிலும், ரோடுகளிலும் நின்று தொழுவோரும் பள்ளிவாசல்களே கதி என்று முழுக்க முழுக்க பள்ளிவாசலில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டோரும் என சிறுவர்கள் முதல் 60 வயதுக்கும் மேற்பட்டோர் வரையிலான ஏகத்துவவாதிகளை அன்றாடம் சந்திக்கின்றோம். இவர்களின் செயல்பாடுகள் நம்மை அறியாமலேயே நம்மை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றது என்றால் அது மிகையல்ல!

இக்கட்டத்தில் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் தங்களுடைய அந்தரங்கமான மற்றும் வெளிப்படையான சுயவாழ்க்கையை ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் கொண்டு செல்கின்றார்களா? தங்களுடைய அனைத்துக் காரியங்களிலும் மார்க்கத்திற்கு முன்னுரிமை அளிகக்கின்றார்களா? என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம். நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனுக்குத் திருப்புமுனையாக அமைவது அவனுடைய திருமணம் தான். அவன் சத்தியத்தில் இருக்கின்றான் என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டக் கூடியதும் திருமணம் தான். இந்தத் திருமண விஷயத்தில தான் ஒரு ஏகத்துவவாதிக்கு ஏற்படக்கூடிய சோதனைகள் எத்தனை? அவையனைத்தையும் அவன் தாண்டி, தன்னை ஏகத்துவவாதியாக நிரூபிப்பது இந்தச் சமுதாயத்தில் சிரமமான நிலையாகிவிட்டது.

கொண்ட கொள்கையில் கடுகளவும் தயவு தாட்சண்யமில்லை என்று கூறியவனை, திருமணத்திற்குப் பின் பள்ளியிலோ, மார்க்க நிகழ்ச்சிகளிலோ அல்லது ஆர்ப்பாட்டங்களிலோ காண முடியவில்லை. காரணம் அந்தத் திருமணத்தில் சறுக்கி விழுந்தவன் தான். இன்னும் எழவில்லை.

கொண்ட கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு மஹர் கொடுக்க வேண்டிய மணமகன் வரதட்சணை வாங்கிக் கொண்டு, பெண் வீட்டாரின் சகல விருந்துகளிலும் கலந்து கொண்டு, அனைத்து அன்பளிப்புகளையும் பெற்றுக் கொண்டு தன்னுடைய வெட்கம், மானம் அனைத்தையும் அடகு வைத்து விட்டு இணை வைக்கும் பெண்ணைக் கரம் பிடிக்கின்றான். இவர்களும் தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலர், அந்த அளவிற்கு மோசமாக இறங்க மாட்டோம் என்று சவடால் பேசிக் கொண்டு, மஹர் கொடுத்து, பெண் வீட்டு விருந்துகளைப் புறக்கணித்து, பணக்கார வீட்டில் பெண் எடுத்து, கேட்காமலேயே நகைகளையும் இன்னபிற பொருட்களையும் சீதனமாகப் பெற்று, தான் விரும்பிய இணை வைக்கும் பெண்ணைக் கரம்பிடிக்கிறார். இப்படி தன் கணவன் தன்னைத் திருமணம் முடித்ததினால் அப்பெண் திருமணத்திற்குப் பிறகு தன்னை ஏகத்துவவாதியாகப் பிரகடனப்படுத்துவதில்லை.

“நீ உன் விருப்பப்படி மஹர் கொடுத்து, விருந்துபச்சாரமில்லாமல், வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்துக் கொள். ஆனால் எவளையோ ஒருத்தியை மருமகளாகக் கொண்டு வருவதை விட என் அக்கா தங்கையின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் முடித்துக்கொள். இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால் உன் விருப்பப்படி திருமணத்தை நடத்துவதற்கு, நடத்தி வைப்பதற்கு சம்மதிக்கின்றேன்” என்ற பெற்றோர்களின் கட்டளைக்கு இணங்கி நம் கொள்கைச் சகோதரர்கள் இறைக் கட்டளைக்கு மாறுசெய்து முஷ்ரிக்கான பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். இத்திருமணத்திற்கும் மக்களால் சூட்டப்பட்ட பெயர் தவ்ஹீத் (நஜாத்) திருமணமாம். மணமகன் தவ்ஹீத்வாதியாம்.

மணமகன் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து விருந்துபச்சாரங்களை, அன்பளிப்புகளை புறக்கணிப்பது மட்டும் தான் இஸ்லாமியத் திருமணம் என்று இவர்கள் எண்ணுகின்றனர். அஸ்திவாரமே ஆட்டங்கண்டு இருக்கும் போது அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதில் என்ன பயன்? மணமகளே ஏகத்துவவாதியாக இல்லாமல் அது எப்படி இஸ்லாமியத் திருமணமாகும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

இந்த இறைக் கட்டளையை இவர்கள் அறியவில்லையா? அல்லது அறியாதது போல் நடிக்கின்றார்களா?

குர்ஆன் ஹதீஸ் கூறும் ஒழுக்க மாண்புகளை மறந்து, காதல் எனும் வலையில் விழுந்து, அப்பெண் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்பு பெண் பேசி மதரஸாக்களில் சேர்த்துவிட்டு, ஒரு சில மாதங்களுக்குப் பின் தவ்ஹீதுப் பெண்ணை நான் திருமணம் முடிக்கப் போகின்றேன் என்று தனது திருமணத்திற்கு தவ்ஹீது திருமணம் என்று தானே பெயர் சூட்டிக் கொள்கிறான். அப்பெண்ணின் ஈமானிய உறுதியை அல்லாஹ்வே அறிவான்.

இவர்கள் திருமணத்திற்குப் பிறகு அவளைத் திருத்திவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். இது தவறானதாகும். ஏனெனில் நபிமார்களாலேயே தங்களது மனைவியர்களையும், பிள்ளைகளையும், பெற்றோர்களையும், உற்றார், உறவினர்களையும் ஏகத்துவத்திற்குக் கொண்டு வர இயலாது என்பதே குர்ஆன் ஹதீஸிலிருந்து கிடைக்கும் பாடமாகும், பதிலாகும். இதற்குக் குர்ஆன் ஹதீஸிலிருந்து பல ஆதாரங்களைக் காட்டலாம். உதாரணமாக நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்களை பற்றிக் குர்ஆன் கூறுவதைப் பாருஙகள்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!என்று கூறப்பட்டது.

அல்குர்ஆன் 66:10

அசத்தியவாதியுடன் திருமணத்திற்குப் பின்பும் கூட இணைந்திருக்கக் கூடாது என்பதற்காக ஃபிர்அவ்னின் மனைவி சத்தியத்திற்கு வந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றான்.

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை  நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 66:11

இவையெல்லாம் நமக்கு எதை உணர்த்துகின்றது? அசத்தியவாதியுடன் நமக்கு எந்த ஒட்டும் உறவும் இருக்க்கூடாது என்பதைத் தானே! நம்மில் எத்தனை பேர் இந்த வசனத்திற்கு மதிப்பளித்தனர்?

ஆனால் இந்த வசனத்திற்கு நபித்தோழர்கள் உயிரூட்டினர். இது தொடர்பாகப் புகாரியில் இடம்பெறும் செய்தியைப் பார்ப்போம்.

…(சமாதான ஒப்பந்தம் அம-ல் இருந்த காலகட்டத்தில்) இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். உடனே, “நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள்என்னும் (60:10) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, உமர் (ரலி) அவர்கள், இணைவைக்கும் மார்க்கத்தி-ருந்த காலத்தில் தமக்கிருந்த இரு மனைவிமார்களை அன்று தலாக் (விவாகரத்து) செய்து விட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொரு வரை ஸஃப்வான் பின் உமய்யா அவர்களும் மணமுடித்துக் கொண்டார்கள். பிறகுநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள்.

நூல்: புகாரி 2731

அல்லாஹ்வால் மட்டுமே நேர்வழியில் செலுத்தமுடியும்; இது அல்லாஹ்வின் அதிகாரம் என்ற பார்வையுடன் மட்டும் இந்த ஹதீஸ் மற்றும் வசனங்களைப் பார்க்கும் இவர்கள், தாங்கள் செய்யும் தவறிலிருந்து அவர்கள் தவிர்ந்திருக்க வேண்டும் என்ற கண்டனமும் இதில் இருக்கின்றது என்பதையும் உணர வேண்டும்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்     தொடர்: 18

உள்ளத்தை ஒருமுகப்படுத்தல்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்களைச் செய்வதற்கு எந்த ஒரு நியாயமும், முகாந்திரமும் இல்லை என்பதை நபிமார்களுடைய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாக வைத்தும் பார்த்து வருகிறோம்.

இறைநேசர்களுக்கெல்லாம் பெரிய இறைநேசராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தம்மை ஒரு மனிதராகவே காட்டியிருக்கிறார்கள் என்ற தலைப்பில் பல சம்பவங்களையும் நாம் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்களா? என்பதைப் பார்ப்போம்.

மனைவிமார்களிடம் நேர்மையாக நடக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறது. எல்லாருக்கும் ஒரே மாதிரியாகச் செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மனைவியுடனும் தங்கக்கூடிய நாட்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எந்தவிதமான பாரபட்சமும் இருக்கக்கூடாது என்றெல்லாம் மார்க்கத்தில் நிபந்தனை இருக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்களுடன் வாழ்க்கை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விதிமுறைகளையெல்லாம் பேணித்தான் நடந்தார்கள். ஆனாலும் தமது மனைவிமார்களிலேயே ஆயிஷா (ரலி) அவர்கள் மீது மட்டும் அதிகமான பிரியம் வைத்திருந்தார்கள். கொடுக்கல், வாங்கல் எல்லாம் சமமாக இருந்தாலும் மனதார அவர்கள் ஆயிஷாவை நேசித்தார்கள். கூடுதலான அன்பும் அவர்கள் மீது இருந்தது. இது போன்ற ஒரு செயலை இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான். ஏனென்றால் உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான்.

உதாரணமாக, ஒருவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நம்மை அறியாமலேயே அந்த நான்கு குழந்தைகளில் ஒருவரை, மற்ற பிள்ளைகளை விட அதிகமாக விரும்புவோம். ஒரு பிள்ளையைக் குறைவாக விரும்புவோம். நமக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்காமல் போகலாம். இதற்குக் காரணமும் நம்மால் சொல்ல இயலாது. அதே போன்று தகப்பனாருக்கு ஒரு பிள்ளையைப் பிடிக்கும். தாயாருக்கு ஒரு பிள்ளையைப் பிடிக்கும். ஏன் தகப்பனாருக்குப் பிடித்த பிள்ளை தாயாருக்குப் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? அல்லது தகப்பனாருக்குப் பிடிக்காத இந்த பிள்ளை தாயாருக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? முடியாது. மனதில் அன்பு ஏற்படுவதெல்லாம் நாம் திட்டமிட்டு வருவது கிடையாது.

அதே போன்று ஒரு மாணவனைக் கல்லூரியில் கொண்டு சேர்க்கிறோம். அங்கு எத்தனையோ மாணவர்கள் இருப்பார்கள். ஆனால் சக மாணவர்களில் ஒரு குறிப்பிட்ட மாணவன் மீது மட்டும் பிரியம் வந்து அவனைத் தன்னுடைய நண்பனாக ஏற்றுக் கொள்கிறான். இந்த இருவர் மட்டும் ஏன் நண்பர்களாக ஆனார்கள்? இதற்கான காரணம் சொல்ல முடியாது. அவன் எல்லா மாணவர்களுடன் நண்பனாக ஆக வேண்டியது தானே என்று கேட்க முடியாது. காரணம், இதை அவன் திட்டமிட்டு செய்வது கிடையாது. திடீரென்று ஒருவர் மீது ஈர்ப்பு வந்து விடும். அவரை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.

இதுபோன்ற விஷயங்களெல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நம்முடைய உடன் பிறந்த சகோதரர்கள் அனைவரிடமும் நாம் சமமாக அன்பு செலுத்த முடியுமா என்றால் ஒருபோதும் முடியாது. மனிதனுக்கு அந்த ஆற்றலை அல்லாஹ் கொடுக்கவில்லை. சரி. மற்ற மனிதர்களுக்குத் தான் அல்லாஹ் கொடுக்கவில்லை. நபிகள் நாயகத்திற்காவது இந்த ஆற்றலை அல்லாஹ் கொடுத்தானா என்று பார்த்தால் அவர்களுக்கும் கொடுக்கவில்லை.

நபிகள் நாயகத்திற்கே தம்முடைய இந்த நிலை தெரிகின்றது. மனைவிமார்களிடம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நீதமாக நடக்கின்றோம். ஆனால் ஒரு மனைவியிடம் மட்டும் நாம் அதிகமாக அன்பு செலுத்துகிறோம். இது பாரபட்சம் தான். இந்த பாரபட்சத்திற்கு நாம் பொறுப்பாளியாக ஆகிவிடக் கூடாதே என்பதற்காக அல்லாஹ்விடத்தில் துஆச் செய்கிறார்கள்.

இறைவா! என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் நான் அனைத்திலும் சமமாக நடந்து கொள்கிறேன். இறைவா! என் கைவசத்தில் இல்லாமல் உன் கைவசத்தில் இருக்குமே அந்தக் காரியங்களுக்காக என்னைப் பிடித்து (தண்டித்து) விடாதே

(நூல்: திர்மிதி 1059)

உள்ளங்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை அல்லாஹ் இறைத்தூதருக்கே வழங்கவில்லை. எவ்வாறு நம்முடைய உள்ளத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாதோ அதே போல் நபிகளாருக்கும் தமது உள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

அதனால் நபிகள் நாயகம் சத்தியம் செய்யும் போது கூட “யா முகல்லிபல் குலூப் – உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே” என்று தான் அதிகம் சத்தியம் செய்வார்கள். சில நேரங்களில், “என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக” என்று சத்தியம் செய்வார்கள். சில நேரங்களில் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக” என்று வெறுமனே சொல்வார்கள். ஆனால் அதிகமாக “உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே” என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துவார்கள்.

இதிலிருந்து நமக்கு விளங்குவது என்ன?

உள்ளம் சார்ந்த விஷயங்களில் நாம் நீதமாக நடக்காவிட்டால் சாதாரண மனிதன் என்ற அடிப்படையில் இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நபியவர்களுக்காவது அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்? மற்றவர்களைப் போன்று நீர் கிடையாது. உம்முடைய உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை உமக்குத் தந்துள்ளேன் என்று அல்லாஹ் கூறினானா? இல்லை.

நபி (ஸல்) அவர்களே தம்முடைய உள்ளத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி இருக்கும் போது எப்படி மகான்கள், ஷைகுமார்கள் நம்முடைய உள்ளத்தைப் பக்குவப்படுத்துவார்கள்? நம்முடைய உள்ளத்தில் நுழைந்து காரியங்களை எப்படிச் சரி செய்வார்கள்? நம்முடைய உள்ளத்தில் தவறான எண்ணங்கள் வருவதிலிருந்தும் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்கள்?

இவ்வாறு சொல்லித் தானே இந்த முரீதுகள் தோன்றின? இந்த முரீதுகளின் பரிணாமம் தான் தர்ஹாக்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. ஷைகுகள் இருக்கும் போது முரீதை வைத்து வியாபாரம் செய்வார்கள். அவர்கள் இறந்த பிறகு அவர்களது சீடர்கள் தர்ஹாக்களைக் கட்டி வைத்து விடுவார்கள். மக்களும் அங்கு செல்ல ஆரம்பித்து விடுவார்கள். யாருக்கெல்லாம் தர்ஹாக்கள் கட்டி வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் முரீதுகள் வைத்திருப்பார்கள். முரீதுகள் என்றால் ஏஜென்டுகள். ஏஜென்டுகள் இல்லாதவர்களுக்குத் தர்ஹாக்கள் இருக்காது. தர்ஹாக்கள் கட்ட மாட்டார்கள்.

நல்லடியார்களாக வாழ்பவர்கள் நம்முடைய உள்ளத்தைப் பக்குவப்படுத்துபவர்கள் என்று நினைத்து அவர்களுக்குச் சீடர்களாக ஆகி, அவர்களுடைய காலில் விழுந்து கும்பிடுகின்ற அளவுக்கு ஆகி, அவர்கள் இறந்த போன பிறகும் அவர்களுக்கு மரியாதை செய்கிறோம். அவர்களுக்கு விழாக்கள் கொண்டாடுவதற்காகக் கட்டி வைத்தது தான் இந்த தர்ஹாக்கள். மக்களும் அங்கு சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  பெரும்பாலான தர்ஹாக்கள் ஷைகுமார்களுக்கு இருக்கக்கூடிய முரீதுகளால் கட்டப்பட்டது தான். அவை இந்த வழிபாட்டிற்குக் காரணமாக இருக்கின்றது.

மேற்கண்ட பிரார்த்தனை, நபிகள் நாயகம் அவர்கள் மனிதர் தான், இவ்வுலகில் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை உணர்த்துகிறது. அதைச் சொல்வதற்குத் தான் அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள். இந்த துஆவை நமக்குத் தெரிகின்ற மாதிரி வெளிப்படையாக ஏன் செய்ய வேண்டும் என்பதை நாம் விளங்க வேண்டாமா? இந்த மார்க்கம் அல்லாஹ்வுடையது. அவனுக்குத் தான் எல்லா விதமான அதிகாரமும் இருக்கிறது. மலக்குமார்கள் மற்றும் இறைத்தூதர்கள் உள்ளிட்ட மனிதர்கள் எவருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக ஒருபோதும், எந்த நேரத்திலும் இருந்ததில்லை என்பதற்கு மேலும் ஒரு சான்றை இங்கு காணலாம்.

(ஒரு தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டு, தொழுகை அணிகள் சரி செய்யப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தம் தொழும் தளத்தில் அவர்கள் போய் நின்ற போது தாம் பெருந்துடக்குடன் இருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம், “உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்என்று கூறிவிட்டு (தமது வீட்டிற்குத்) திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையி-ருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்- தொழுகை நடத்தினார்கள்; அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 275

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடனிருந்தார்கள். (நினைவில்லாமல் நின்று விட்டதால்) “அப்படியே இருங்கள்!என்று (மக்களிடம்) கூறிவிட்டு (தம் இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தம் தலையி-ருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 640

சாதாரண மனிதர்களாகிய நமக்கு மறதி வரலாம். ஆனால் அவ்லியாக்களுக்கு மறதி வருமா? அவர்களுக்குத் தெரியாத விஷயம் இருக்குமா? என்றெல்லாம் நினைத்து வைத்திருக்கிறோம். ஆனால் நபிகளாருக்கே தாம் குளிப்புக் கடமையாக இருக்கிறோம் என்பதை மறந்து பள்ளிக்குத் தொழ வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர் தான் என்பதை இது உணர்த்தவில்லையா?

நபியவர்கள் எந்த நொடிப் பொழுதிலாவது தம்மை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டியிருக்கிறார்களா? எனக்கு மறைவான ஞானம் இருக்கிறது. நான் உள்ளங்களில் உள்ளதை அறிபவன். பிறருடைய உள்ளத்தில் ஏற்படும் குழப்பத்தைச் சரி செய்பவன் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா? அதற்கான ஒரு ஆதாரத்தையாவது, சான்றையாவது யாராலும் காட்ட முடியுமா?

நபியவர்களுக்கு மறதி என்பதே கிடையாது என்று இவர்கள் சொல்வதாக இருந்தால் “நீங்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் நிலையில் பள்ளிக்கு நெருங்காதீர்கள்” (அல்குர்ஆன் 4:43) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை நபியவர்கள் மீறியதாக ஆகிவிடுமே! ஆக நபியவர்களைக் குற்றவாளியாக ஆக்க விரும்புகிறார்களா?

மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டால் குளிக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கடமை தானே! உடலுறவு கொண்ட பிறகு குளிப்பதைப் பெரும்பாலும் யாரும் மறக்க மாட்டோம். நம்முடைய வாழ்க்கையில் மறதிக்குள்ளாகும் சில விஷயங்கள் இருக்கும். ஆனால் கடமையான குளிப்பை யாரும் மறக்க மாட்டோம். பெரும்பாலும் மனிதர்களுக்கு இதில் மறதி வராது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதை சரியாகச் செய்து விடுவார்கள். ஆனால் அந்த விஷயத்தில் அல்லாஹ் நபியவர்களுக்கு மறதியை ஏற்படுத்தி, இவர் மனிதர் தான் என்பதைக் காட்டுகிறான். அந்தத் தொழுகையில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் இவர் மனிதர் தான்; இவருக்கும் மறதி போன்ற பலவீனங்கள் உண்டு என்பதை மக்களுக்குப் புரிய வைக்கிறான்.

நபியவர்கள் ஒருநாள் லுஹர் அல்லது அஸர் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது பின்பற்றி தொழுது கொண்டிருந்த ஒருவர், ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற சூராவை சப்தம் போட்டு ஓத ஆரம்பித்து விடுகிறார். ஆரம்ப கால கட்டத்தில் இஸ்லாத்தின் சட்டங்கள் தெரியாததால் அவ்வாறு ஓதி விட்டார். அந்தச் சம்பவம் பின்வருமாறு:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு “லுஹ்ர் தொழுகைஅல்லது  “அஸ்ர் தொழுகைதொழுவித்தார்கள். (தொழுது முடித்ததும்) அவர்கள், “சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (மிக்க மேலான உம்முடைய இறைவனின் பெயரைத் துதிப்பீராக!) என்று தொடங்கும் (குர்ஆனின் 87ஆவது) அத்தியாயத்தை எனக்குப் பின்னால் (நின்று) ஓதியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “நான்தான் (ஓதினேன்). நன்மையை நாடியே அவ்வாறு செய்தேன்என்றார். (பிறகு மக்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் சிலர் (சப்தமாக) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் தகராறு செய்வதாக நான் அறிந்தேன். (எனவே, உங்களில் எவரும் எனக்குப் பின்னால் நின்று தொழும்போது சப்தமாக ஓத வேண்டாம்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: முஸ்லிம் 664

மேலும் இச்சம்பவம் முஸ்லிமில் 665, 666 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? மற்ற மனிதர்கள் எவ்வாறு இடையூறு அளிக்கப்படுவார்களோ அதுபோன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழப்பம் அடையாமல் இருந்தார்களா? அவ்வாறு யார் குழப்பினாலும் கூச்சலிட்டாலும் மனதை ஒருமுகப்படுத்தக்கூடிய ஆற்றலை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தானா? இல்லையே! அவர்களும் தொழுகையில் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் கவனம் திசை திரும்பியிருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த ஆரம்ப நேரத்தில் அங்குள்ள மக்கள் பேரிச்ச மரங்கள் நிறைந்த தோட்டங்களை வைத்து விவசாயம் செய்து வந்தார்கள்.  இதுபற்றி நபியவர்கள் கூறிய கருத்து, அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது. அந்தச் சம்பவத்தைப் பார்ப்போம்.

பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, “இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லைஎன்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4711

மேலும் இச்சம்பவம் முஸ்லிமில் 4712, 4713 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் என்றால் யார்? அவனை எப்படி வணங்க வேண்டும்? அவனை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும்? இறைவனை எப்படி நம்ப வேண்டும்? மறுமையை எப்படி நம்ப வேண்டும்? ஹலால் எது? ஹராம் எது? என்பதை சொல்லித் தருவதற்குத் தான் இறைவன் என்னை அனுப்பியிருக்கிறான். அதில் கூட்டல் குறைத்தல் இல்லாமல் நான் சொல்லி விடுவேன். அதை நீங்கள் மாற்றுக் கருத்தில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதை நானாகச் சொல்வது கிடையாது. வஹீயைத் தான் சொல்கிறேன்.

முஸ்லிமின் 4357வது ஹதீஸில், “நான் ஒரு மனிதன் தான். மார்க்க விஷயத்தில் உங்களுக்குக் கட்டளையிட்டதை ஏற்றுக் கொண்டு செய்யுங்கள். சொந்த அபிப்பிராயமாக நான் எதையாவது சொன்னால் அப்போது என்னை நீங்கள் மனிதனாகத் தான் பார்க்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

நான் என்ன விவசாயத்தைப் படித்துவிட்டு வந்த ஆளா? அதைச் சொல்லித் தருவதற்காகவா அல்லாஹ் என்னை அனுப்பினான்? அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. உலக விஷயத்தில் நான் அறியாத ஒன்றைச் சொல்லி விட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. உலக விஷயத்தில் என்னை விட நீங்கள் தான் அறிவாளிகள் என்று கூறி, தாம் ஒரு மனிதர் தான் என்பதை நிருபித்தார்கள்.

நீங்கள் சொல்வது எனக்குத் தவறாகத் தெரியும். நான் சொல்வது உங்களுக்குத் தவறாகத் தெரியும். இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்கும். அப்படி இருக்கும் போது, உங்களுக்குச் சரியாக இருப்பதைத் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நபியவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.

ஆனால், நபியவர்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று கவிதையில் எழுதி வைத்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். லவ்ஹுல் மஹ்ஃபூலில் உள்ள விஷயங்களெல்லாம் அவர்களுடைய ஞானத்தின் சிறு பகுதி. நபியவர்களுடைய ஞானம் அவ்வளவு பெரியது என்று நபியவர்களை வரம்பு மீறிப் புகழ்கிறார்கள். இது தவறாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மை ஒரு மனிதராகத் தான் மக்களிடம் அறிமுகப்படுத்தினார்கள். அந்தத் தன்மையில் தான் மக்களோடு மக்களாக வாழ்ந்து மரணித்தார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக மக்களிடம் தம்மை அறிமுகப்படுத்தவில்லை. அவ்வாறு வாழவுமில்லை. இன்னும் இது போன்ற ஏராளமான செய்திகள் நபியவர்களுடைய காலத்தில் நடந்திருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

வந்த பின் சாகாதீர்

வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதன் அல்லாத அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள எச்சரிக்கை உணர்வாகும்; இயற்கை உணர்வாகும். அந்த அடிப்படையில் பறவை இனம், தாங்கள் வாழுமிடத்தில் கோடை வரும் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறி, வளமான இடத்தைத் தேடி பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து செல்கின்றன. வளமும் வாய்ப்பும் உள்ள இடத்தைத் தேர்வு செய்து அங்கு போய் தங்குகின்றன.

பரந்து வரிந்து கிடக்கும் ஆகாயப் பெருவெளியில், வான்பாதையில் வரைபடமோ, திசை காட்டும் கருவியோ எதுவுமின்றி புலம் பெயர்கின்ற பறவையின் அந்தப் பயணம், விண்வெளிப் பயணத்தில் கொடிகட்டிப் பறக்கும் மனிதனை வியப்பில் ஆழத்துகின்றது.

சுண்டு கொண்டு, சுள்ளிகளைத் தேடியெடுத்து, குஞ்சுகளைப் பொறிப்பதற்காகக் கூடு கட்டும் சிட்டுக்குருவி, வீட்டின் பொந்துகளைத் தேர்வு செய்யும் போது பூனை வந்து பாய முடியாத இடத்தைத் தேர்வு செய்கின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வருமுன் காப்போம் என்ற இயற்கை உணர்வின் உந்துதல் தான்.

அந்த உந்துதல் மனித இனத்திற்கு இல்லையா? இருக்கின்றது. அதனால் தான் அணு ஆயுதம், கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள், இன்னும் ரத்தம் சிந்தாமல் கொல்கின்ற யுத்தத் தளவாடங்களை சேமித்து, சேகரித்து வைத்திருக்கின்றான்.

உயிரைக் காக்கின்ற, காசு பணம் சேர்க்கின்ற விஷயத்தில் இந்த வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு அளவுக்கு மிஞ்சி உண்டு. ஆனால் ஒழுக்க ரீதியிலான விஷயத்தில் தான் அந்த உணர்வு சூனியமாகி விடுகின்றது. அறிவு செயலிழந்து விடுகின்றது.

ஆணுறை அணிய அரசின் அறிவுரை

எய்ட்ஸ் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோய்! விபச்சாரம், ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவால் விளைந்த ஒரு பயங்கர நோய்! இந்த நோய் அண்டாமல் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விபச்சாரத்தின் வாசலை அடைக்க வேண்டும். ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவின் வழிகள் தாழிடப்பட வேண்டும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அரசாங்கம் விபச்சார விடுதிக்கு அனுமதி வழங்கிவிட்டு எயிட்ஸைத் தடுக்க பாதுகாப்பான ஆணுறை அணியுங்கள் என்று மூடத்தனமான பாடம் நடத்துகின்றது என்றால் இதற்குக் காரணம் என்ன? வருமுன் காப்போம் என்ற உணர்வு மங்கி, மழுங்கி, வந்த பின் சாவோம் என்ற நிலை மிகைத்து நிற்கின்றது.

இந்தத் தீய செயல்களைத் தடுக்க இஸ்லாம் பலமுனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

  1. புர்கா அணிதல்

இந்த நடவடிக்கைகளில் முதன்மையானது பெண்கள் தங்கள் அங்க அவயங்கள், அந்தரங்க அழகு தெரியாôமல் புர்கா எனும் போர்க் கவச ஆடைகளை அணியச் சொல்கின்றது.

  1. பார்வைகளைத் தாழ்த்துதல்

பார்வைகளைத் தாழ்த்துமாறு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உத்தரவிடுகின்றது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24:30, 31

  1. அந்நிய ஆணுடன் தனித்திருத்தல்

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5232

இன்று கொலை அளவில் போய் முடிகின்ற பல விஷயங்களுக்குக் காரணமாக அமைவது அண்ணி, கொழுந்தியா போன்ற உறவுப் பெண்களிடமும், நட்பு என்ற பெயரில் பிற பெண்களிடமும் ஏற்படுகின்ற தடையில்லாத சகஜமான பழக்கவழக்கங்கள் தான்.

  1. அந்நியப் பெண்ணுடன் பயணம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர்  எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப்  பதிவு  செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3006

  1. பிறர் மனைவியை வர்ணித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் – அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5240

  1. கண்டவர்களையும் அண்ட விடுதல்

வீட்டில் கண்டவர்களையும் சர்வ சாதாரணமாக வந்து போக விட்டு விட்டு, பின்னர் நொந்து சாகின்றனர்.

(நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) “அலிஒருவர் அமர்ந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அலி‘, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாதுஎன்று சொன்னார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் “ஹீத்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 4324

அண்மையில் ராஜேஷ் தல்வார், நுபூர் தல்வார் என்ற தம்பதிகளுக்கு, தங்கள் 14 வயது மகள் ஆரூஷியைக் கொன்றதற்காக சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கொலையைப் பார்த்ததற்கான சாட்சிகள் எதுவுமில்லை. இருப்பினும் குற்றச் சூழலை ஆதாரமாகக் கொண்டு நீதிபதி ஆயுள் தண்டனை அளித்திருக்கின்றார்.

இதற்கு அடிப்படைக் காரணம், வீட்டில் பணி புரிந்த ஊழியர் ஹேமராஜ் என்பவருடன் ஆரூஷிக்கு ஏற்பட்ட தவறான தொடர்பு தான்.

இரண்டு விதத்தில் இந்தத் தம்பதியர் வருமுன் காக்கத் தவறி விட்டனர்.

ஒன்று, வரம்பு வரையற்ற முறையில் ஊழியரை வீட்டில் உலவ விட்டது. மற்றொன்று, கட்டுப்பாடற்ற ஆடையுடன் கூடிய சந்திப்பு.

இந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கத் தவறியதால் தான் இன்று பெற்ற பிள்ளையைக் கொலை செய்த குற்றத்திற்காகப் பெற்றோரே சிறையில் வாடுகின்றனர்.

சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட இஸ்லாம் கூறும் இந்த நெறியைப் பேணாததால் இழிவுக்குள்ளாவதைப் பார்க்கிறோம். தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி போன்றவர்கள் இதற்கு சமீபத்திய உதாரணம். பெண் ஊழியர்களுடன் தனிமையில் இருக்க நேரிட்டதால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அவமானப்படுவதை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது.

இங்கு தான் பெண்கள் விஷயத்தில் இஸ்லாம் காட்டுகின்ற வருமுன் காப்போம் நடவடிக்கையை ஒவ்வொருவரும் உணர வேண்டியுள்ளது. இது ஒழுக்க விஷயத்தில் மனிதன் வருமுன் காக்காமல் வந்த பின் சாவதற்கான எடுத்துக்காட்டு.

அடுத்து, பக்தி என்று வருகின்ற போதும் வருமுன் காப்போம் என்ற எச்சரிக்கை உணர்வு மனிதனுக்கு அறுந்து போகின்றது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் பட்டாசு கொளுத்துதலை எடுத்துக் கொள்வோம். இதற்கு அரசாங்கம் கொடுக்கின்ற அறிவிப்பைப் பாருங்கள்.

பட்டாசு வெடிக்க, நீண்ட குச்சிகளைக் கொண்ட ஊதுபத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் போது, பாலியஸ்டர் துணிக்குப் பதில் பருத்தி ஆடைகளை அணிவது நலம். வெடிக்காத பட்டாசுகளைக் கையில் எடுக்கக் கூடாது.

தண்ணீர் நிரம்பிய வாளியை அருகில் வைத்திருக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் அப்பகுதியை நீருக்குள் வைத்து பின்னர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, குடிசைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், குறுகலான வீதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

125 டெசிபல் ஒலி அளவைக்கு மேல் உள்ள பட்டாசுகள் வெடிக்கத் தடை. இரவு பத்து மணிக்குப் பிறகும், காலை 6 மணிக்கு முன்னரும் பட்டாசு வெடிக்கக் கூடாது.

இவை தான் பட்டாசு வெடிப்பதற்கு அரசு தரும் நெறிமுறைகளாகும்.

வெடிக்காதே என்று மிக எளிமையாய் வெடியைத் தடை செய்வதற்குப் பதிலாக, வருமுன் காப்பதற்குப் பதிலாக வந்த பின் சாவதற்குரிய வழிகளை அரசாங்கம் காட்டுகின்றது.

எத்தனை பட்டாசு ஆலைகள் வெடித்து, எத்தனை உயிர்கள் போனாலும் இந்த மக்கள் திருந்தப் போவதில்லை. இதற்குத் தீர்வு இஸ்லாம் ஒன்று மட்டுமே!