ஏகத்துவம் – ஜனவரி 2009

தலையங்கம்

அறியாமையின் ஆட்டமும் அரஃபா நாள் மாற்றமும்

“அறிவியல் வளர்ந்து விட்டது; அன்றைய காலத்தில் இது போன்ற வளர்ச்சி இல்லை; இன்று மக்கள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதை நேரடி ஒளிபரப்பாக அப்படியே தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்; ஹாஜிகள் அரஃபாவில் என்றைக்கு ஒன்று கூடுகின்றார்களோ அன்றைய நாளில் தானே நாம் நோன்பு நோற்க வேண்டும்” என்று ஜாக்கினரும், பிறை விஷயத்தில் மட்டும் அவர்களுடன் ஒத்தக் கருத்தில் இருந்தவர்களும் வினாக்களைத் தொடுத்தனர். இவ்வாறு அவர்கள் கேள்விக் கணைகளைத் தொடுக்கக் காரணம், நாம் இங்கு காணும் பிறையின் அடிப்படையில் துல்ஹஜ் 9ஆம் நாளில் நோன்பு நோற்கிறோம் என்பதால் தான்.

அதாவது நாம் நோன்பு நோற்கும் பிறை 9 ஆனது, அரஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுகின்ற நாளல்ல! ஹாஜிகளுக்கு அன்று பத்தாம் நாள்! மக்காவில் அன்று பெருநாள்! அந்த நாளில் நாம் இங்கு அரஃபா நோன்பு நோற்கிறோம்.

இவ்வாறு நாம் செய்வதற்குக் காரணம் என்ன?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1900

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ

நபி (ஸல்) அவர்களின் கூற்றின் அடிப்படையில் தான் நமக்குத் தென்படும் பிறை அடிப்படையில் நாம் நோன்பு நோற்கிறோம். (இது தொடர்பாக, பிறை ஓர் ஆய்வு என்ற நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிக விளக்கம் தேடுவோர் அந்நூலைப் பார்வையிடவும்.)

மார்க்க அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் ஒரு நாள் தள்ளி நாம் நோற்கின்ற இந்த அரஃபா நோன்பைக் கிண்டலும் கேலியும் செய்தவர்கள், இன்று ஒரு நாளைக்கு முன்பு அரஃபா நோன்பு நோற்கிறார்கள். மக்காவில் அரஃபாவில் கூடுகின்ற நாளில் இவர்கள் பெருநாள் கொண்டாடுகிறார்கள்.

அதாவது இவர்களின் கழிவுகெட்ட கணக்குப்படி ஹாஜிகள் அரஃபாவில் கூடிய நாள் அரஃபா நாளல்ல! எனவே இந்த ஆண்டு ஹஜ் செய்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹாஜிகளின் ஹஜ் பாழாகி விட்டது. ஏனெனில் ஹஜ்ஜின் முக்கிய வணக்கமே அரஃபா தான். அந்த நாளை இந்த ஹாஜிகள் அனைவரும் வீணாக்கி விட்டனர் என்ற கருத்து வருகின்றது. இந்த லட்சணத்தில், சவூதி கண்ட அரஃபா நாள் தவறானது என்ற கருத்து கொண்ட சிந்தனைச் சிற்பி (?) ஒருவரும் இந்த ஆண்டு ஹஜ் செய்யச் சென்றது தான் இதில் வேடிக்கை!

தலைக் கொழுப்பேறிய இந்தத் தற்குறிகளின் ஆட்டம் நமக்கு நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸை நினைவுபடுத்துகின்றது. அந்த ஹதீஸ் இது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ள மாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போது மக்கள் அறிவீனர்களைத் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கெடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூற்கள்: புகாரி 100, முஸ்லிம் 4828

இந்த அறிவிலிகளுக்குப் பின்னாலும் இன்று ஒரு சிலர் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தங்கள் தலைவர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாகத் தான் இந்தக் கூட்டம் ஜாக் தலைமையின் உத்தரவையும் மீறி உலகிலேயே அதிசயமாக சவூதிக்கு முன்பே அரஃபா நாள் கொண்டாடியது.

ஜாக் தலைமை இப்போது தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கின்றது.

இந்த நாட்டுச் சூழலுக்கேற்ப, ஏகத்துவக் கொள்கையை வளைக்காமல், இட ஒதுக்கீடு போன்ற சில சமுதாய நலப் பணிகளில் இறங்கிய காரணத்துக்காக நியாயமின்றி தவ்ஹீது ஜமாஅத்தின் தாயீக்களை ஜாக் பகைத்தது; பழித்தது; அரசியல் என்று கூறிப் பழி வாங்கியது.

ஆனால் அதே சமயம் ஜாக்கிலிருந்த இந்தத் தீய சக்திகள் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு, அரசியலில் நேரடியாகக் குதித்த போது ஜாக் தலைமை பாராமுகமாக இருந்தது. அப்போதே தன் நிலைபாட்டைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்தக் கட்டளை மீறலை ஜாக் சந்தித்திருக்காது.

இப்படி இணக்கத்தை உடைக்கின்ற ஓர் இறுக்கம் பிறை விஷயத்தில் தேவை தானா? மார்க்கம் தாராளப் போக்கைக் கொண்டுள்ள இந்த விஷயத்தில் இப்படியொரு தளராத போக்கு தேவை தானா? என்பதையும் ஜாக்கின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இன்று ஜாக்கின் நிலை என்ன? ஷிர்க், பித்அத் எல்லாவற்றையும் விட, பிறை ஒன்று தான் அடிப்படைக் கொள்கை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

கந்தூரிகள், சமாதி வழிபாடுகள், மீலாது விழாக்கள் என்று குராபிகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஜாக் சார்பில் “மாபெரும் கொள்கை விளக்கக் கூட்டம்’ என்ற தலைப்பில் கூட்டம் போட்டு, பிறையைப் பற்றி மட்டுமே பேசப்படுகின்றது. அதாவது பிறை மட்டும் தான் ஜாக்கின் மாபெரும் கொள்கை என்பது போல் ஆகி விட்டது.

இந்தப் பிறை விஷயத்திற்காக இன்னும் எவ்வளவு சக்தியைத் தான் வீணாக்கப் போகிறார்கள்? எவ்வளவு பொருளாதாரத்தைத் தான் செலவழிக்கப் போகிறார்கள்? எத்தனை பேரைப் பலி கொடுக்கப் போகிறார்கள்?

இத்தனைக்குப் பிறகும் ஜாக் இதில் தான் கவனம் செலுத்துமா? அல்லது தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுமா? என்று ஏகத்துவம் எதிர்பார்க்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு கருத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.

அல்லாஹ்வின் வேதம், அவனது தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு எவரது கருத்துக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்ற அஸ்திவாரத்தில் தான் ஜாக் என்ற கட்டடம் ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது. இடையில் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அஸ்திவாரத்தையும் ஜாக் சேர்த்துக் கொண்டுள்ளது. ஆனால் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அஸ்திவாரத்தில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில் இவ்விரு அமைப்புகளுக்கும் மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்படுமாயின் அதை நோக்கி முதன் முதலில் சமாதானக் கையை நீட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பதை ஏகத்துவம் சார்பில் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

———————————————————————————————————————————————–

ஸலவாத்துன்னாரிய்யா நரகத்து ஸலவாத்து

அப்துந்நாஸிர்

ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய (?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பைமார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர்.

இந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தக்கூடிய சில முல்லாக்களால் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான். இதன் காரணமாகத் தான் 4444 தடவை ஓத வேண்டும் என்று சாதாரணமாக யாரும் எண்ண இயலாத எண்ணிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த 4444 தடவை என்பது அல்லாஹ்வோ அவன் தூதரோ கூறியதில்லை.

இந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதைப் பாருங்கள்.

அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன் வஸல்லிம் ஸலாமன் தாம்மன் அலா ஸய்யிதினா முஹம்மதின் அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப் வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் வ நஃப்சின் பி அததி குல்லி மஃலூமின் லக்க

பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஸஹாபிகள் மீதும்  ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகிறது.  அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.

துன்பங்களை நீக்குபவன் யார்?

மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில், நபி (ஸல்) அவர்கள் மூலம் தான் சிக்கல் அவிழ்கிறது என்றும், துன்பம் நீங்குகிறது என்றும், தேவை நிறைவேறுகிறது என்றும் வருகிறது. உண்மையில் சிக்கல்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்குவதும் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றலாகும். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு, இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாகக் கூறுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய இணை கற்பிக்கின்ற காரியமாகும்.

அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது.

ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.

அல்குர்ஆன் 6:64

நபி (ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதை திருமறை குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்என (முஹம்மதே!) கூறுவீராக! “நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:20, 21, 22

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களை, சிக்கல்களை நீக்க முடியும் என்று நம்பியவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வியைப் பாருங்கள்

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தைப் போக்கி, உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

அல்குர்ஆன் 27:62

நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரகத்து ஸலவாத்தை நாம் ஓதலாமா? இதனை ஓதி வருகின்ற இஸ்லாமியப் பெருமக்கள் நன்றாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?

மேற்கண்ட நரகத்து ஸலவாத்தில் நபியவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கக் கூடிய, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

நபி (ஸல்) அவர்களின் எத்தனையோ நாட்டங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாட்டங்களை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்குமானால் அவர்கள் முதலில் தம்முடைய நாட்டங்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ், அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.

(முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல் குர்ஆன் 9:80

நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.

ஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

அல் குர்ஆன் 28:56

மேலும் நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற அனைத்து காஃபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.

அல்குர்ஆன் 26:3

நபியவர்கள் தம்மை அழித்துக் கொள்ளும் அளவிற்கு ஒன்றை விரும்பியும் அந்த நாட்டம் நிறைவேறவில்லை.

நாட்டங்களை நிறைவேற்றக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். நபியவர்கள் மூலம் நாட்டங்கள் நிறைவேறுகின்றன என்று இந்த ஸலவாத்தில் வரக்கூடிய வரிகள் நிரந்தர நரகத்தைத் தரக் கூடிய வரிகளே என்பது தெளிவாகிறது.

அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?

நபியவர்கள் மூலம் தான் அழகிய இறுதி முடிவு நமக்குக் கிடைக்கிறது என ஸலாத்துந் நாரியாவில் வருகிறது. இதுவும் நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற, இணை கற்பிக்கின்ற வரிகளாகும்.

ஒருவன் மரணிக்கும் போது சுவர்க்கவாசியாக மரணிப்பதும் நரகவாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 5175

மேற்கண்ட ஹதீஸ் ஒருவனின் இறுதி முடிவு இறைவனின் நாட்டப்படியே தீர்மானிக்கப்படுகிறது என்பதை மிக உறுதிப்படுத்துகிறது. எனவே, நபியவர்கள் மூலம் அழகிய இறுதி முடிவு ஏற்படுகிறது என்பது நபியவர்களைக் கடவுளாக வணங்குவதாகும்.

மேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள்? இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மழை பொழிவிப்பவன் யார்?

ஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.

மழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?

அல் குர்ஆன் 56:68, 69, 70

அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

அல் குர்ஆன் 42:28

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 30:48

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய முடியாது. நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப் போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ் தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன். (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)

நூல்: புகாரி 4777

மேற்கண்ட இறை வசனங்களும், ஹதீஸ்களும் மழையைப் பொழியச் செய்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. எனவே நபியவர்களின் திருமுகத்தின் மூலமே மழை பொழிகிறது என்று நரகத்து ஸலவாத்தில் வரக்கூடிய இந்த வாசகங்களை நாம் ஓதினால் நாம் செல்லுமிடம் நரகம் தான்.

கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3445

இந்த ஸலவாத்துன் நாரியாவை ஓதினால் நரகம் தான் பரிசாகக் கிடைக்கும்.

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

அல்குர்ஆன் 33:56

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 4797

“எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது?” என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது.

தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. (பார்க்க: நஸயீ 2728)

யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 577

முஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள்.  பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள்.  ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள்.  நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)

நூல்: முஸ்லிம்

பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலைமோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் ஸலாத்துந்நாரிய்யாவை இனியும் ஓதலாமா?

ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே!என்று நபித்தோழர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்

நூல்: அபூதாவூத் 883

நிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: நஸயீ 1265

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாவை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

குறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

———————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? தனியாகத் தொழும் தொழுகைக்கு ஒரு நன்மை என்றால் பள்ளியில் இமாம் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு இருபத்தேழு நன்மை என்று ஹதீஸ் கூறுகின்றது. பள்ளியில் இமாம் ஜமாஅத்துக்கு முன்போ, அல்லது ஜமாஅத் முடிந்த பின்போ இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தனி ஜமாஅத் நடத்தித் தொழுதால் அந்த இருபத்தேழு நன்மை கிடைக்குமா? ஆதாரத்துடன் விளக்கவும்.
எம். முஹம்மது கடாஃபி, கொடிக்கால் பாளையம்

தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 645, முஸ்லிம் 1147

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.  இந்த ஹதீஸ்களில் முதல் ஜமாஅத், இரண்டாவது ஜமாஅத் என்று பிரித்துக் கூறப்படாமல் பொதுவாக ஜமாஅத் என்றே கூறப்படுகின்றது. எனவே 27 மடங்கு நன்மை என்பது தனித்துத் தொழாமல் ஜமாஅத்தாகத் தொழும் எந்தத் தொழுகையையும் குறிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அதே சமயம், முதல் ஜமாஅத்திற்கும் இரண்டாவது ஜமாஅத்திற்கும் நன்மையில் வித்தியாசம் எதுவும் கிடையாது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ, அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 644, 7224

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் கண்டிக்கின்றார்கள்.  பள்ளியில் இஷாத் தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும்.  ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார்.  அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்என்று கூறினார். “நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புஸ்ர் பின் மிஹ்ஜன்

நூற்கள்: நஸயீ 848, அஹ்மத் 15799

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருக்குத் தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ(ரலி)

நூல்: அஹ்மத் 10980

பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.

பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், (தொழுகையில்) முதல் வரிசையில் நிற்பதன் நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கி எடுக்கப்படும் நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 615, முஸ்லிம் 746

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும்.

இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும். எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில், அதாவது பள்ளியின் அதிகாரப்பூர்வ ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.

அதே சமயத்தில் இணை வைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணித் தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழ விடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்புக் குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

? ஹுதைபிய்யா உடன் படிக்கையின் போது மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்த நபித்தோழரை நபி (ஸல்) அவர்கள் திருப்பியனுப்பி விட்டார்கள். அவர் திரும்ப மக்காவுக்குச் செல்லாமல் இடைப்பட்ட பகுதியிலிருந்து கொண்டு மக்காவிலிருந்து வரும் முஷ்ரிக்குகளைத் தாக்கிக் கொலை செய்து வந்தார். இது நபி (ஸல்) அவர்களது அங்கீகாரத்துடன் தான் நடந்தது. அப்போது இஸ்லாமிய ஆட்சியும் இல்லை. எனவே இதன் அடிப்படையில் இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது நாமும் திருப்பித் தாக்கலாம் என்ற வாதத்தை ஒரு சாரார் எடுத்து வைக்கின்றனர். இச்சம்பவத்தின் உண்மை நிலை என்ன?
எம். ஷபீர், திருவனந்தபுரம்

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நடைபெற்ற சம்பவத்தைத் திரித்துக் கூறி இத்தகைய வாதத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இஸ்லாமிய ஆட்சி இல்லை என்று கூறுவது தவறு! மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கும் நிலையில் தான்      மக்கா குறைஷிகளுடன் இந்த உடன்படிக்கை செய்யப்பட்டது.

மக்காவிலிருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்த நபித்தோழர் மக்காவுக்குத் திரும்பிச் செல்லாமல், இடைப்பட்ட பகுதியில் இருந்து கொண்டு மக்காவாசிகளைத் தாக்கி வந்தது நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்தது என்று கூறுவதும் அப்பட்டமான பொய்யாகும்.

குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்று கொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள்.

அபூபஸீர் (ரலி) அவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள் தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்; மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்என்று சொன்னார்.

அபூபஸீர் அவர்கள், “எனக்குக் காட்டு. அதை நான் பார்க்கிறேன்என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்று விட்டார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்ட போது, “இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்என்று கூறினார்கள்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நின்ற போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்என்று கூறினார்.

உடனே அபூபஸீர் அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி விட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவரது தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.

அறிவிப்பவர்கள்: மிஸ்வர் பின் மக்ரமா மர்வான் பின் ஹகம்

நூல்: புகாரி 2731

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூபஸீர் (ரலி) அவர்களை மக்காவுக்குத் திருப்பியனுப்புகின்றார்கள். ஆனால் அவரோ தம்மைப் பிடித்துச் செல்ல வந்திருந்த குறைஷியைக் கொலை செய்து விடுகின்றார். இதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மாறாகக் கண்டிக்கவே செய்கின்றார்கள். தம்மை மீண்டும் மக்காவுக்கே அனுப்பி விடுவார்கள் என்று பயந்தே அபூபஸீர் அவர்கள் மதீனாவிலிருந்து தப்பிச் சென்று கடலோரப் பகுதியில் தங்குகின்றார். எனவே இது நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரத்துடன் நடந்தது என்று கூறுவது அவதூறாகும்.

குறைஷிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எள்ளளவும் மாற்றமாக நடக்கவில்லை என்பது தான் இந்தச் சம்பவத்திலிருந்து தெளிவாகும் உண்மை!

இந்தியாவில் முஸ்லிம்கள் தாக்கப்படும் போது திருப்பித் தாக்குவதற்கு இந்தச் சம்பவத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக, நம்மை யாரேனும் தாக்குவதற்கு வந்தால் அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு மார்க்கத்திலும் அனுமதி உள்ளது; இந்திய அரசியல் சட்டமும் இதற்கு உரிமை வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு மேற்கண்ட சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுவது அறிவீனமாகும்.

இந்திய அரசியல் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பது என்ற ஒப்பந்தத்தில் இருக்கும் நாம் அதற்கு ஒரு போதும் மாறு செய்யக்கூடாது என்பது தான் இந்தச் சம்பவத்திலிருந்து நமக்குத் தெளிவாகும் படிப்பினை! மார்க்கத்திற்கு விரோதமாக அப்பாவிப் பொதுமக்களைத் தாக்குவதற்கு இதை ஒரு போதும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஒரு வாதத்திற்கு இந்தச் சம்பவத்தை ஆதாரமாகக் கொள்ளலாம் என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டே இதைச் செய்ய முடியாது. இந்தியாவை விட்டு வெளியேறி, ஆட்சியில்லாத ஒரு பகுதியில் இருந்து கொண்டு இந்தக் காரியங்களைச் செய்யலாம் என்று தான் கூற முடியும்.

இந்தக் காலத்தில் அப்படியொரு பகுதி உலகில் எங்கும் இல்லை என்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை இவர்கள் எந்த வகையிலும் நிலைநாட்ட முடியாது.

———————————————————————————————————————————————–

ஹதீஸ் கலை ஆய்வு    தொடர்: 11

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

மார்க்கத்தை மாற்றிக் கொண்டவன் என்றால் யார்?

தனது மார்க்கத்தை மாற்றியவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸிற்கு மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று அர்த்தம் செய்வது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் தவறு என்பதைப் பல்வேறு ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். எதிர்த் தரப்பினர் கூறும் பொருள் சரியானதல்ல என்றாகி விட்ட போது அதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து கொண்டே இஸ்லாம் கூறாததை இஸ்லாம் என்று சொல்பவன் அல்லது இஸ்லாம் கூறியிருப்பதை இஸ்லாம் இல்லை என்று கூறுபவன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்படுவான் என்பதே அந்த ஹதீஸின் விளக்கம். மதம் மாறியவனை விட இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தைச் சீர்குலைப்பவன் தான் மிகவும் தீமைக்குரியவன்.

பின்னால் வரவிருக்கும் கவாரிஜ் கூட்டத்தார்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். நபியவர்கள் கூறிய தன்மையுள்ள அந்தக் கூட்டத்தாரிடம் அலீ (ரலி) அவர்கள் போர் செய்தார்கள். இவர்கள் தங்களை முஸ்லிம் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். குர்ஆனைப் படிக்கும் வழக்கம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களை நடைமுறைப்படுத்துவதால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்கள் ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பினார்கள். இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அதை நபி (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் எழுந்து வந்து, “நீங்கள் அநியாயமாகப் பங்கிட்டுள்ளீர்கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்என்று கூறினார். இவரைப் பற்றியும் இவரது வழித் தோன்றல்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது. வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். முஸ்லிம்களையே அவர்கள் கொலை செய்வார்கள். சிலை வணங்கிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்களை அடைந்தால் ஆது கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழிப்பேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7432

அலீ (ரலி) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்தின் அடிப்படையில், மார்க்கத்தில் இருந்து கொண்டே அதை மாற்ற நினைத்தவர்களிடமும், முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களிடமும் தான் போர் புரிந்தார்கள்.

அலீ (ரலி) அவர்களிடம் (ஸனாதிகா என்று சொல்லப்படும்) இஸ்லாத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து விட்டார்கள். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்க மாட்டேன். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்என்று கூறினார்கள். மாறாக நபி (ஸல்) அவர்கள், “எவர் தமது மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள்என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருப்பேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இக்ரிமா

நூல்: புகாரி 6922

அலீ (ரலி) அவர்களால் கொல்லப்பட்டவர்கள் யாரென்றால் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் என்று சொன்னவர்கள். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்திருந்தார்கள். அதனால் தான் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றார்கள். இந்தக் கூட்டத்தினர் ராஃபிளா என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குத் தலைவனாக அப்துல்லாஹ் பின் ஸபஃ என்பவன் இருந்தான். இவன் தன்னை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு இந்த மோசமான கொள்கையைத் தோற்றுவித்தான்.

இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையைச் இஸ்லாத்தின் கொள்கை என்று சொன்ன இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸையே ஆதாரமாகக் காட்டினார்கள். அந்த ஹதீஸ் யாரைக் கொல்ல வேண்டும் என்று சொல்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இந்த வரலாற்றுச் செய்தி ஹசன் என்ற தரத்தில் அமைந்தது என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுகிறார்கள். இமாம் ஷவ்கானீ அவர்கள் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்று தமது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்து, அபூபக்ர் (ரலி) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததன் மூலம்) காஃபிராகி விட்டார்கள். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்கர் தயாரானார்கள்) உமர் (ரலி), “லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்; தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்.

அபூபக்ர் (ரலி) உமரை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நான் போர் புரிவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் வழங்கி வந்த ஒரு ஒட்டகக் குட்டியை வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்என்றார். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்என்றார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1400

அபூபக்கர் (ரலி) அவர்கள் யாரிடத்தில் போர் செய்தார்களோ அவர்கள் கலிமாச் சொன்னவர்கள். தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள். ஆனால் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகிய ஸகாத்தைக் கொடுக்க மறுத்தார்கள். ஸகாத் இல்லை என்றே இஸ்லாம் சொல்கிறது என வாதிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் இவர்களால் மாற்றப்பட்டு விடும் என்பதால் அபூபக்கர் (ரலி) அவர்கள் அம்மக்களிடம் போர் தொடுத்தார்கள்.

தனது மார்க்கத்தை மாற்றுபவனைக் கொல்லுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன காரணத்தினால் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸகாத்தை மறுத்தவர்களிடத்தில் போர் புரிந்ததாக இமாம் புகாரி அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

மீராள் மைந்தன், கடையநல்லூர்

“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு”

“பெண் புத்தி பின் புத்தி”

“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”

என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்ட காலம் அது. இன்றைய காலத்திலும் பெண்கள் போகப் பொருளாகத் தான் கருதப்படுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களுக்குரிய கடமைகளையும் தெளிவுபடுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

பெண்ணுரிமை பறிக்கப்பட்ட காலத்தில் “பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன” (அல்குர்ஆன் 2:228) என்று பெண்ணுரிமை போற்றிய மார்க்கம் தான் இஸ்லாம்.

நம்முடைய சமுதாயத்திலும் மார்க்கம் தெரியாத காரணத்தினால் பெண்களுக்குப் பல்வேறு விதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது. பள்ளியில் சென்று தொழுவது, மனதிற்குப் பிடித்த ஆண்மகனைத் திருமணம் செய்தல், மஹர் எனும் மணக்கொடை மறுக்கப்பட்டு பெண்களே இலட்சக் கணக்கில் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்யும் அவல நிலை, இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது இன்னும் எவ்வளவோ கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இன்றைக்கு தவ்ஹீத் பேரெழுச்சிக்குப் பின்னால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றே கூற வேண்டும்.

இன்று பெண்கள் மதரஸாக்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஆண்களை விட பெண் ஆலிமாக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இளம் பெண்களில் ஓரளவினர் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்தே வைத்துள்ளனர்.

ஆனால் சில விஷயங்களை மார்க்கத்தின் பெயரால் தவறாகவும் விளங்கி வைத்துள்ளனர்.

இன்றைக்கு அனைத்துச் சமுதாயங்களிலும் மாமியார் கொடுமை என்பது எழுதப்படாத ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. தன்னுடைய மகனுக்கு மனைவியாக வந்து விட்ட காரணத்தினால் தன்னுடைய மருமகளை ஒரு அடிமைப் பெண்ணைப் போன்று, ஒரு வேலைக்காரியைப் போன்று நடத்தக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. தன்னுடைய மருமகள் தெரியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்கி பஞ்சாயத்தைக் கூட்டக்கூடிய நிலையை சில மாமியார்கள் உருவாக்கி விடுகின்றனர்.

மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற வழக்கத்தில் உள்ள இந்தப் பழமொழி மாமியார்களின் ஆதிக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. ஆனால் அனைத்து மாமியார்களும் இப்படித் தான் என்று கூறிவிட முடியாது. தான் பெற்ற மகளை விட மருமகள்களை நேசிக்கின்ற குணவதிகளும் பலர் இருக்கத் தான் செய்கின்றனர்

மாமியார் கொடுமை பரவலாக இருக்கின்ற காரணத்தினால் பல மருமகள்கள் முன்னெச்சரிக்கையாக மாமியார் விஷயத்தில் கடுமை காட்டத் துவங்கி விடுகின்றனர். தன்னுடைய மாமனார், மாமியாருக்குப் பணிவிடைகள் செய்வது தனக்குக் கடமையில்லை; கணவனுக்கு மட்டும் தான் பணிவிடை செய்வது கடமை; இவ்வாறு தான் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்று சில பெண்கள் மாமனார் மாமியார்களைத் தவியாய் தவிக்க விட்டு விடுகின்றனர்.

இதனால் அவர்கள் வயதான பருவத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். பலர் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் முதியோர் இல்லங்களுக்குச் செல்ல நேரிடுகிறது.

“என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது குழப்பவாதிகள் பேசும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார். அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.

இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.

ஆனால் மாமனார் மாமியாருக்குப் பணிவிடை செய்தல் என்பதும் மருமகளுக்குக் கடமை தான் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது.

கணவனுடைய செல்வம், கணவனுடைய வீட்டிலுள்ளவர்கள் அனைத்திற்கும் பொறுப்பு அவனுடைய மனைவி தான். கணவனின் தாயும், தகப்பனும் அவனது பொறுப்பிலுள்ளவர்களே எனும் போது கணவன் சார்பாக அவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவன் மனைவியைச் சார்ந்தது தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள்.

நூல்: புகாரி 2554

பின்வரும் ஹதீஸ் மாமனார் மாமியார் மட்டுமல்ல! கணவனுடைய சகோதர சகோதரிகளுக்கும் உதவி செய்ய வேண்டிய நிலையிருந்தால் ஒரு பெண் செய்து தான் ஆக வேண்டும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  நான்   நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் புது மாப்பிள்ளைஎன்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம், “நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், “வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், “கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே!என்று  கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச்  சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள். அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்என்று பதிலளித்தேன்.

நூல்: புகாரி 2967

கணவனுடைய சகோதரிகளைக் கூட பராமரிப்பது அவனுடைய மனைவிக்குரிய கடமை என்றால் அவனுடைய தாய் தந்தையர்களுக்குப் பணிவிடை செய்வது மருமகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் ஜாபிர் (ரலி) இவ்வாறு கூறும் போது நபியவர்கள் சரியான செயல் என்று அதை ஆமோதித்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரி தான்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 4052

ஒரு பெண் தன் கணவணைத் தவிர மற்றவர்களுக்குப் பணிவிடை செய்தல் கடமையில்லை என்றிருக்குமானால்  நபியவர்கள் நீ எப்படி மற்றொரு வீட்டுப் பெண்ணை உன் மனைவி என்பதற்காக உன் சகோதரிகளுக்குத் தலைவாரி விடுமாறு கூறலாம்? அதற்கொரு வேலைக்காரியை வைத்துக் கொள்ள வேண்டியது தானே? என்றே கேட்டிருப்பார்கள். மாறாக நபியவர்கள்  நீ செய்தது சரி தான் என்றே கூறியுள்ளார்கள்.

எனவே கணவனின் பொறுப்பில் உள்ள அனைவரையும் கவனிக்கின்ற பொறுப்பு அவன் மனைவிக்கு இருக்கின்றது. அதே நேரத்தில் எந்த ஒன்றும் சக்திக்கு மீறியதாக இருக்கக் கூடாது. மருமகள் என்பதற்காக அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டும் என்று மாமியார்கள் கருதக் கூடாது. இரு தரப்பினரும் இறைவனைப் பயந்து மார்க்கத்திற்கு உட்பட்டு நடந்து கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக் கழகமே!

———————————————————————————————————————————————–

தொடர்: 7

முதஷாபிஹாத்

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களால் விளங்கிக் கொள்ளத்தக்கவையே என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். இதுவரை ஐந்து ஆதாரங்களைக் கண்டுள்ளோம்.

ஆறாவது ஆதாரம்

திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டதாக இறைவன் பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

மக்கள் விளங்குவதற்காகவே அரபு மொழியில் அருளப்பட்டதாகவும், அரபு மொழியில் அமைந்த அதன் வசனங்கள் தெளிவாக்கப்பட்டு விட்டதாகவும் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

அல்குர்ஆன் 26:195

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.

அல்குர்ஆன் 12:2

இவ்வாறே அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காகவும், அல்லது அவர்களுக்குப் படிப்பினை உண்டாக்கவும் குர்ஆனை அரபு மொழியில் அருளினோம். அதில் தெளிவாக எச்சரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 20:113

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)

அல்குர்ஆன் 39:28

(இது) விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காக வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்ட வேதம். அரபு மொழியில் அமைந்த குர்ஆன்.

அல்குர்ஆன் 41:3

(மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்று திரட்டப்படும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும் உமக்கு (தெரிந்த) அரபு மொழியில் குர்ஆனை அறிவித்தோம்.

அல்குர்ஆன் 42:7

நீங்கள் விளங்குவதற்காக அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக இதை நாம் ஆக்கினோம்.

அல்குர்ஆன் 43:3

இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (இது) அரபியல்லாததாகவும், (இவர்) அரபியராகவும் இருக்கிறாரே?” என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன் 41:44

ஒரு மொழியில் அருளப்பட்டது என்றால், அந்த மொழி அறிந்தவர்களால் அதனை அறிய முடியும் என்பது தெளிவு. அதை வேறு மொழிகளில் மாற்றம் செய்யும் போது மற்றவர்களும் அதை அறிந்து கொள்ளலாம் என்பதும் தெளிவு.

அல்லாஹ், திருக்குர்ஆனை அரபு மொழியில் அருளியதாக மட்டும் கூறவில்லை; அதற்கும் மேலாக, தெளிவான அரபு மொழியில் அருளி இருப்பதாகக் கூறுகின்றான். முஹ்கம் வசனங்கள் மட்டுமல்லாது முதஷாபிஹ் வசனங்களும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டிருக்கின்றன.

அரபு மொழியில், தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்குமே விளங்காது என்றால், அவற்றை விளங்குவதற்காக முயற்சிப்பவர்களுக்குக் கூட விளங்காது என்றால் எத்தகைய விபரீதமான எண்ணத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்று கூறுவதன் மூலம், திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டது என்பதையே மறுக்கும் நிலை ஏற்படும்.

திருக்குர்ஆனின் எல்லா வசனங்களும் ஒரு மொழியில் அருளப்பட்டிருப்பதே அது விளங்கிக் கொள்ளக் கூடியது என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.

ஏழாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்பதற்குச் சான்றாகத் திருக்குர்ஆனை மக்கள் முன் சமர்ப்பித்த போது மக்கத்துக் காஃபிர்கள், “திருக்குர்ஆன் இறை வேதம் அல்ல’ என்று சாதிக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள். கவிதை என்றார்கள். நபி (ஸல்) அவர்களைக் கவிஞர் என்றும் பைத்தியக்காரர் என்றும் பறைசாற்றினார்கள். நாங்கள் நினைத்தால் இது போல் நாங்களும் கொண்டு வருவோம் என்றார்கள். (பார்க்க: அல்குர்ஆன் 8:31)

இந்தத் திருக்குர்ஆனில் ஏதேனும் ஒரு குறைபாடு தென்படாதா? அதை வைத்து முஹம்மது நபியல்ல என்று நிரூபிக்க முடியாதா? என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தார்கள்.

“குர்ஆனில் விளங்காதவைகளும் உள்ளன’ என்று தெரிய வந்தால் இந்த வாய்ப்பை அவர்கள் நழுவ விடுவார்களா?

குர்ஆனை ஏற்றுக்கொண்டவர்கள் வேண்டுமானால், குர்ஆனில் விளங்காதவை இருந்தாலும் கூட அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டு விடக் கூடும். குர்ஆனை நம்பாதவர்கள் நிச்சயம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எவருக்குமே விளங்காதவை குர்ஆனில் உண்டு என்றால் நிச்சயமாக அது உளறல் தான் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். முஹம்மது உளறுகிறார் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருப்பார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் காஃபிர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் “குர்ஆனில் விளங்காதவை உள்ளன’ என்ற பிரச்சனையைக் கிளப்பியதே இல்லை. எவருக்குமே விளங்காதவை குர்ஆனில் உள்ளதாக வைத்துக் கொண்டால் அவர்கள் பார்வையில் இது பெரிய பலவீனம்.

குர்ஆன் இறை வேதம் அல்ல என்ற தங்களின் வாதத்தை இதன் மூலம் அவர்கள் நிரூபிக்க முயன்றிருப்பார்கள்.

அப்படி எதுவும் நடக்காமல் இருந்ததே குர்ஆன் அனைத்தும் விளங்கும் என்பதற்குத் தகுந்த சான்றுகளாகும்.

எட்டாவது ஆதாரம்

சட்ட திட்டங்களைக் கூறக்கூடிய முஹ்கம் வசனங்கள் மட்டுமே விளங்கும்; சட்ட திட்டங்களைக் கூறாத முதஷாபிஹ் வசனங்கள் விளங்காது என்பதும் இவர்களின் வாதம்.

திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் 6666 ஆகும். இவற்றில் சட்ட திட்டங்களைக் கூறும் வசனங்கள் சுமார் 500 வசனங்கள் மட்டுமே! மீதமுள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் இவர்களின் பார்வையில் முதஷாபிஹ் வசனங்களாகும்.

இந்தக் கணக்கின்படி திருக்குர்ஆனில் சுமார் 8 சதவிகித வசனங்களே மனிதர்கள் விளங்கக்கூடியவை. மீதி 92 சதவிகித வசனங்கள் எவருக்குமே விளங்காதவை என்ற கருத்து ஏற்படுகின்றது.

திருக்குர்ஆனில் முக்கால் பாகத்துக்கும் மேல் விளங்க முடியாதவை என்பதை விட வேறு விபரீதமான முடிவு என்ன இருக்க முடியும்? இதை விடக் குர்ஆனுக்கு வேறு களங்கம் என்ன இருக்க முடியும்?

ஒன்பதாவது ஆதாரம்

மற்றொரு கோணத்தின்படிப் பார்த்தால் இதை விட இன்னொரு விபரீதம் ஏற்படும்.

இவர்களின் வாதப்படி முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது.

இந்த வாதத்தின்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூட இதை விளங்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் கூட முதஷாபிஹ் வசனங்களை விளங்க மாட்டார்கள். ஏனெனில் முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே விளங்க முடியாது என்பது இவர்களின் வாதம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் விளங்காது என்றால் நபியவர்களுக்கும் விளங்காது என்ற விபரீதமான நிலை உருவாகும். நபி (ஸல்) அவர்களுக்கே விளங்காது என்றால் அவர்களிடம் பாடம் பெற்ற எந்தவொரு நபித்தோழருக்கும் அவை விளங்காது என்றாகும்.

ஆம்! திருக்குர்ஆனின் 92 சதவிகித வசனங்கள், அதைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் விளங்காது. அதைப் பெற்றுத் தந்த அல்லாஹ்வின் தூதருக்கும் விளங்காது. அவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்ற அன்றைய சமுதாயம் முழுமைக்கும் விளங்காது என்பதைத் தவிர விபரீதமான முடிவு வேறு என்ன இருக்க முடியும்?

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

எந்தத் திருப்பணிக்காக முஹம்மது (ஸல்) அவர்களைத் தேர்வு செய்து இறைவன் அனுப்பினானோ, எந்தக் குர்ஆனை மக்களுக்கு விளக்குவதற்காக அவர்களை நியமனம் செய்தானோ அந்தத் தூதருக்கு திருக்குர்ஆனின் முக்கால் பாகத்திற்கு மேல் விளங்காது என்ற முடிவை உண்மையான முஸ்லிம்கள் எவரேனும் ஒப்புக் கொள்ள முடியுமா?

திருக்குர்ஆனின் முக்கால் பாகத்தை நபியும் விளங்கவில்லை, நபித்தோழர்களுக்கும் விளக்கி வைக்கவில்லை என்ற நச்சுக் கருத்தை யார் தான் ஒப்புக் கொள்ள முடியும்?

அல்லாஹ்வையும், அவன் அருளிய வேதத்தையும், அது அருளப்பட்ட நோக்கத்தையும், அல்லாஹ்வின் தூதருடைய பொறுப்புக்களையும் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே திருக்குர்ஆனில் ஒரு வசனம் கூட நபியவர்களுக்கு விளங்காது என்று கூறத் துணிய மாட்டார். தம் தோழர்களில் எவருக்குமே நபி (ஸல்) அவர்கள் அதை விளக்கவில்லை, விளக்க முடியவில்லை என்று கூற மாட்டார்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

வாழ்க்கையே வணக்கமாக….

எம். ஷம்சுல்லுஹா

துறவுடன் அறத்தைச் சேர்த்து, துறவறம் என்று கூறி, தமிழ் மொழியில் துறவுக்கு மகிமை சேர்க்கிறார்கள். உலகமெங்கும் உள்ள மதங்களில், மார்க்கங்களில் துறவுக்கு ஒரு மரியாதை இருப்பதால் தான் துறவறம் என்று கூறி தமிழ் மக்கள் அழகு பார்க்கின்றனர்.

ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்த வரை துறவுக்கு அரைக் காசுக்கு மதிப்பில்லை என்பது மட்டுமல்ல! அதற்கு அனுமதியும் கிடையாது.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக் கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?” என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “(இனி மேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன்என்றார். இன்னொருவர், “நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன்என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டு விடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 5063

துறவு மேற்கொள்வதற்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தர்மமாகும் தாம்பத்தியம்

உலக மக்களில் சிலர் துறவைத் தேர்வு செய்வதற்குக் காரணம் திருமணம் என்பது இறை அன்பைப் பெறுவதற்கு ஒரு தடை என்று கருதுவது தான். ஆனால் இஸ்லாம் இந்தச் சித்தாந்தத்தைத் தகர்த்தெறிகின்றது.

நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு ஓரிறை உறுதி மொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டுஎன்று கூறினார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1832

இஸ்லாம் தாம்பத்தியத்தையே தர்மமாக ஆக்கி விட்டது. அதற்கு இறைவனின் பதிவேட்டில் நன்மையும் பதியப்படுகின்றது என்று இஸ்லாம் கூறுகின்றது.

இறை அன்பு இல்லையேல் இந்த இல்லறத்திற்கு அவனது ஏட்டில் நன்மை பதியப்படுமா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

உணவு ஊட்டி விடுவதற்கும் கூலி

உடலுறவை விடுங்கள்! மனைவிக்கு உண்வு ஊட்டுவதற்குக் கூட இறைவனிடத்தில் கூலி வழங்கப்படுகின்றது.

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்படஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி)

நூல்: புகாரி 56

நமது நாட்டில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் தான் மனைவி உணவு உண்ண வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ மனைவியுடன் ஒன்றாக இருந்து உண்ணுதல் என்ற நிலையைத் தாண்டி, மனைவிக்கு ஊட்டி விடச் சொல்கின்றது.

இவ்வாறு உணவு ஊட்டுகின்ற இந்தச் செயலுக்கு இறைவனால் நன்மையும் அளிக்கப்படுகின்றது. ஆம்! மனைவியின் மீது பொழிகின்ற இந்த அன்பு இறைவனின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.

அன்பில்லாருக்கு அருளில்லை

மனைவியின் மீது பொழிகின்ற அன்பு மட்டுமல்ல! பெற்ற பிள்ளைகள் மீது பொழிகின்ற அன்பும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், “எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லைஎன்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5997

பெற்றோர் தங்கள் பிள்ளைச் செல்வங்கள் மீது முத்த மாரி பொழிகின்ற போது அந்த அன்பு மழைக்காக அல்லாஹ்வின் அருள் மழை பொழிகின்றது.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லைஎன்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5998

பிள்ளைகள் மீது அன்பு செலுத்தாதவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் இல்லை என்பதை இந்த நபிமொழிகள் எடுத்துக் காட்டுகின்றன.

குடும்பச் செலவுக்கும்  கூலி உண்டு

பிள்ளைகளைக் கொஞ்சுவதற்கும் அவர்கள் மீது முத்த மாரி பொழிவதற்கும் மட்டும் கூலி வழங்கப்படுவதில்லை. மனைவி, மக்களுக்குச் செலவு செய்வதற்கும் இறைவனிடம் கூலி வழங்கப் படுகின்றது.

அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் செய்வதற்கு) நீ செலவழித்த ஒரு தீனார்! அடிமையை விடுதலை செய்வதற்கு நீ செலவழித்த ஒரு தீனார்! ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு தீனார்! உனது குடும்பத்திற்கு நீ செலவு செய்த ஒரு தீனார்! இவற்றில் மாபெரும் கூலியைக் கொண்டது உனது குடும்பத்தாருக்கு நீ செலவழித்த தீனார் தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1661

உடல் பசியைத் தணிக்கின்ற தாம்பத்தியத்திற்கும் நன்மை! செல்லமாகத் தன் பிள்ளைக்குக் கொடுக்கும் முத்தத்திற்கும் நன்மை! மனைவிக்கு உணவு ஊட்டுவதற்கும் நன்மை! குடும்பத்திற்குச் செலவு செய்வதற்கும் நன்மை என்று சொல்லும் ஒரே மார்க்க நெறி உலகில் இஸ்லாம் மட்டும் தான்.

திருமணம் என்பது இறைவனின் அன்பைப் பெறுவதற்குத் தடைக்கல் அல்ல என்பதையே மேற்கண்ட நபிமொழிகள் நமக்கு ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்து நிற்கின்றன.

சன்னியாசம், துறவு போன்றவற்றில் இறையன்பு இல்லை. சம்சார உறவில் தான் இறையன்பு உள்ளது என்பதை இஸ்லாம் உலகுக்கு உணர்த்தி, வாழ்க்கையையே ஒரு வணக்கமாக அமைத்திருக்கின்றது.

———————————————————————————————————————————————–

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்

அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக மாணவிகள்

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம்.

இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை

  1. மீன் சாப்பிடக் கூடாது

முஸ்லிம்களின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதம் வந்து விட்டால் பிறை 1 முதல் 10 வரை மீன் மற்றும் கருவாடு சாப்பிடாத திடீர் பிராமணர்களாக மாறி விடுவார்கள்.

  1. தாம்பத்தியத்திற்குத் தடை

முஹர்ரம் பத்து வரை தம்பதிகளைத் தாம்பத்தியத்தில் ஈடுபட விடாமல் தடுப்பதை நடைமுறையில் செய்து வருகின்றனர்.

  1. சீரழிவுக்கு வழி வகுத்தல்

ஒரு இளைஞன், ஒரு கன்னிப் பெண்ணைப் பார்த்து கண் ஜாடை செய்யவும், கை ஜாடை செய்யவும், யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் சந்தித்துப் பேசிக் கொள்ளவும் ஏதுவாக ஏழாம் பஞ்சா, பத்தாம் பஞ்சா என்ற பஞ்சாக்களை ஏற்படுத்தி, இள வயதினரின் மனதைப் பஞ்சாகப் பறக்க விடுகின்றனர்.

  1. தீ குளித்தல்

முஹர்ரம் மாதத்தில் எடுக்கப்படும் ஏழாம் பஞ்சா மற்றும் பத்தாம் பஞ்சாவின் போது ஆண்களைக் குதிரையின் மேல் ஏற்றி ஊர்வலம் சுற்றுவதும், பெண்களைத் தீக்குளிக்கச் செய்வதும் வழமையாக வைத்துள்ளனர்.

  1. உப்பு, மிளகு, மோர், கொழுக்கட்டை

பஞ்சா ஊர்வலமாக வரும் போது சாம்பிராணி புகை போட்டு, காணிக்கை என்ற பெயரில் காசு வாங்க சிலர் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் உப்பு ஒரு பார்சலும், மிளகு ஒரு பார்சலும் கொடுப்பார்கள். நமக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை இந்த உப்பு, மிளகு நீக்கி விடும் என்ற நம்பிக்கை. மேலும் ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள் கொழுக்கட்டை செய்து பஞ்சா ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு விநியோகிப்பார்கள். ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு தண்ணீர் கேட்டார்களாம். அப்போது நஞ்சு கொடுத்து கொல்லப் பட்டார்களாம். எனவே அந்நாளில் யாரும் தாகத்துடன் இருக்கக் கூடாதாம். எனவே அந்நாளில் புதிய மண் பானை வாங்கி அதில் மோர் அடைத்து மதிய நேரத்தில் விநியோகிப்பார்கள். அதே நாளில் நோன்பு நோற்கவும் சொல்லிக் கொள்வார்கள்.

  1. மிருக வதை

பஞ்சா ஊர்வலத்தின் போது வாயில்லா ஜீவனாகிய குதிரையின் மீது இரண்டு நபர்களை ஏற்றி வைத்துக் கொண்டு தெருத் தெருவாக இழுத்துச் செல்வார்கள். குதிரைக்காரன் அதற்குரிய கூலியை வாங்கிக் கொள்ள, இவர்கள் குதிரையைக் கொடுமைப் படுத்துவார்கள்.

  1. சித்ரவதை

மாற்று மதத்தினர் செய்வதைப் போன்று, இந்த முஹர்ரம் பத்தின் போது தங்கள் உடல்களைக் காயப்படுத்திச் சிதைக்கின்றனர். தங்களைத் தாங்களே சித்ரவதை செய்து கொள்கின்றனர்.

இது போன்ற பல்வேறு காரியங்கள் முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் உண்மையில் இந்த முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? இஸ்லாம் நமக்கு என்ன கட்டளையிடுகின்றது? என்பதைப் பார்ப்போம்.

முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1916, 1917

இந்த ஹதீஸ்களின் படி முஹர்ரம் மாதத்தில் 9, 10 நோன்பு நோற்க வேண்டுமே தவிர, பஞ்சா போன்ற சப்பரங்களை எடுப்பதும், மீன் சாப்பிடக் கூடாது, தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிப்பதும் மார்க்கத்தில் செய்யப்படும் வரம்பு மீறுதல் ஆகும்.

இந்தக் காரியங்கள் அனைத்தும் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் செயல் என்பதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 2697

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3243

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:  செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை யாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 1560

மேலும் அல்லாஹ் சொல்லாததை சொல்வது அவனுக்கே பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போன்றதாகும்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?

அல்குர்ஆன் 49:16

எனவே அல்லாஹ்வின் வார்த்தைக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும். குர்ஆன், ஹதீஸின் இல்லாததை நாம் மார்க்கமாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் அதை அல்லாஹ் ஏற்க மாட்டான்.

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.

அல்குர்ஆன் 3:85

ஆஷூரா நோன்பு எதற்காக?

யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக, கந்தூரியாகக் கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

யூதர்களில் ஒருவர் உமர் (ரலி)யிடம், “அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (என்ற 5:3 திருவசனம் தான் அது)

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது)என்றார்கள்.

அறிவிப்பவர்:  தாரிக் பின் ஷிஹாப்(ரலி)

நூல்: புகாரி 45

பெருநாளாக கொண்டாடி இருப்போம் என்று யூதர்கள் கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டியிருக்கிறார்கள். அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 2005, 2006

கைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெருநாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: முஸ்லிம் 1913

ஆஷூரா நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவது யூதர்களுடைய கலாச்சாரமாகும். இத்தகைய யூதர்களுடைய கலாச்சாரம் நம்முடைய சமுதாயத்தவர்களையும் பீடித்து இன்றைக்கு இஸ்லாமிய கலாச்சாரமாகவே மாறி விட்டது.

முஸ்லிம்கள் ஆஷூரா நாளில் முஹர்ரம் பண்டிகை என்ற பெயரில் அதனைப் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். அத்தகைய வழி கேடுகளை விட்டும் சமுதாயத்தவர்களை எச்சரிக்கை செய்வது அறிந்தவர்களின் மிக முக்கியக் கடமையாகும்.

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள்.  “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணை வைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

ஆஷூரா நோன்பின்  சிறப்புகள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

நூல்: புகாரி 2006

நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்னிப்புத் தேடுகின்றோம். இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன.

இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1976

———————————————————————————————————————————————–

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க மக்களே தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது தங்களை ஆளப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களின் கைகளில் உள்ளதால் இது மக்களாட்சி எனப்படுகிறது.

பெரும்பான்மை மக்கள் யாருக்கு ஆதரவளிக்கிறார்களோ அவரை ஆட்சியளராகத் தேர்வு செய்யும் ஜனநாயக முறை இஸ்லாத்திற்கு எதிரானதல்ல!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராகவும், ஆட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களது காலத்தில் மக்கள் யாரையும் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு இன்னார் ஆட்சித் தலைவராக வர வேண்டும் என்று எந்த நியமனமும் செய்து விட்டு மரணிக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களை முன்னிறுத்தினார்கள் என்றாலும் அடுத்த ஆட்சித் தலைவர் அபூபக்ர் தான் என்று சுட்டிக் காட்டவில்லை.

எனவே நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களுக்குப் பின் அபூபக்ர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டு மக்கள் அவருக்கு வாக்களித்தனர். அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், மக்களாட்சித் தத்துவம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான். ஆனால் சிலர், இஸ்லாத்தில் ஜனநாயகத்திற்கு அனுமதியில்லை என்றும், தேர்தலில் வாக்களிப்பது இறை மறுப்பு என்றும் கூறி வருகின்றனர்.

மார்க்கத்தில் நுனிப்புல் மேயும் சிலர், சில காலத்திற்கு முன்  “ஜனநாயகம் நவீன ஷிர்க்” என்று வாதிட்டு, விபரமறியாத இளைஞர்களை மதி மயக்கினார்கள். ஆனால் அந்த மயக்கம் இவ்வாறு வாதிட்டவர்களுக்கே நீண்ட காலம் நீடிக்கவில்லை.

ஜனநாயக அடிப்படையிலான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைக்கு அலைபவர்களே இதற்கு உதாரணம்.

“ஜனநாயகம் நவீன கால இணைவைப்பு” என்று கட்டுரை எழுதி மாணவர்களின் மூளையை மழுங்கச் செய்த ஜவாஹிருல்லாஹ் என்பவர், அந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் போட்டியிட்டு அற்பப் பதவியைப் பிடிக்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவதையும், அதற்காக எல்லாவிதமான நியாயங்களையும் குப்பைக் கூடையில் வீசத் தயாராக இருப்பதையும் நாம் காண்கிறோம்.

ஜவாஹிருல்லாஹ்வின் அந்தர் பல்டியை விமர்சனம் செய்து, இரகசிய இயக்கம் கட்டி, “ஜனநாயகம் நவீன ஷிர்க்” என்ற செத்த பிணத்துக்கு உயிர் கொடுக்க முயன்று, மனித நீதிப்பாசறை நடத்தியவர்களும் “இது செத்த பிணம்” என்று அறிவித்து விட்டார்கள்.

ஜனநாயகம் ஷிர்க் என்று வாதிப்பவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஜனநாயகத்தை ஆதரிப்பதுடன் நின்றால் பரவாயில்லை. அதன் அதள பாதாளத்தில் விழுந்து, ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபடுவது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

இந்தச் சித்தாந்தம் செத்த பிணம் என்பதைத் தெரிந்து கொண்டே புதிதாக இன்னும் சிலர் இந்தப் பிணத்தை “உயிருள்ள ஜீவன்” என்று கூறி மக்களை ஏமாற்றக் களம் இறங்கியுள்ளனர்; ஜனநாயகம் என்பது ஷிர்க் என்ற வாதத்தை முன்வைக்கத் துவங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் இந்தப் பிணத்தைத் தூக்கிக் கொண்டு சிலர் ஆள் பிடித்ததையும், அந்த ஆள் பலத்தைத் தங்களின் ஆதாயத்துக்கு பயன்படுத்தியதையும் கண்ட இவர்கள் இதே எண்ணத்துடன் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

கூட்டம் சேர்ந்து, தாங்கள் கூறும் அனைத்தையும் அந்தக் கூட்டம் ஏற்றுக் கொள்வதைக் காணும் போது இவர்களும் இந்த வாதத்தை நிராகரிப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஜனநாயகம் ஷிர்க் எனக் கூறுவோர் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஏறுக்கு மாறாகத் திசை திருப்பி மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஜனநாயகம் நவீன இணை வைத்தல் என்ற வாதத்தை எடுத்து வைக்கும் அறிவிலிகள் எவ்வாறு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. “அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாதுஎன்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.

திருக்குர்ஆன் 12:40

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?

திருக்குர்ஆன் 5:49, 50

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.

திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67

ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று இந்த வசனங்களில் கூறப்படுகிறது. ஆனால் ஆட்சி அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் மக்களுக்கு என்று இந்தியாவில் உள்ள ஜனநாயகம் கூறுகிறது. எனவே ஜனநாயகம் குர்ஆனுக்கு எதிரானது. அல்லாஹ்வின் அதிகாரத்தைப் பறித்து மனிதர்களிடம் கொடுப்பதால் இது நவீன இணைவைப்பு என்பது இந்த அறிவிலிகளின் வாதம்.

இந்த வாதம் இன்று புதிதாக எடுத்து வைக்கப்படுவதல்ல. மாறாக காரிஜிய்யாக்கள் என்ற கூட்டத்தினர் இதே வசனங்களை எடுத்துக் காட்டி, இவர்கள் வாதிட்டது போலவே வாதிட்டார்கள். குர்ஆன் கூறாத கருத்தை குர்ஆனில் திணித்த இவர்கள் அலீ (ரலி) அவர்களாலும் முஆவியா (ரலி) அவர்களாலும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர்.

அந்த வரலாற்றை ஓரளவு அறிந்து கொண்டால் இந்த நவீன கால காரிஜிய்யாக்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.

அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது.

“உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடன்பாடோ இல்லை. ஆயினும் கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்; கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார்” என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது. ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர்.

அலீ (ரலி) அவர்களது ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர். உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலீயின் ஆதரவாளர்களைப் போல் நடித்தவர்களும் இருந்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். “சிஃப்பீன்’ என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது.

இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டனர்.

“இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்பது தான் அந்த சமாதானத் திட்டம். இத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ர-) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது என அவர்கள் அஞ்சினார்கள். அதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள்.

இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குக் கொள்கைச் சாயம் பூச வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர்.

இந்த விஷக் கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.

திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67

இந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சமாதான உடன் படிக்கையை இவர்கள் எதிர்த்தனர். “அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது குர்ஆனுக்கு முரண்” என்பது இவர்களின் வாதம்.

அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர்.

“அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் காஃபிர்கள்” எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.

திருக்குர்ஆன் 5:44

இந்த வசனத்தையும் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் காஃபிர்கள் என்றனர். அனைவரையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் “காஃபிர்களுடன் போர் செய்ய வேண்டும்; காஃபிர்களைக் கொல்ல வேண்டும்; அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத்” என்றெல்லாம் அடுத்த நிலைபாட்டை எடுத்தனர்.

ஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டி இதை நியாயப்படுத்தினர்.

இவர்கள் குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள்.

இப்போது கவனியுங்கள்! காரிஜிய்யாக்கள் எப்படி மனிதர்களின் தீர்ப்பை ஏற்பது இறை மறுப்பு என்று வாதிட்டார்களோ அது போலவே நவீன காரிஜிய்யாக்களான இவர்கள் நவீன இணை வைப்பு எனக் கூறுகின்றனர்.

அவர்கள் எந்த வசனங்களைத் தவறான இடத்தில் பயன்படுத்தினார்களோ அதே வசனங்களை அதே இடத்தில் பயன்படுத்துகின்றனர்.

இவர்களின் வாதமும் இவர்களின் முன்னோடிகளான காரிஜிய்யாக்களின் வாதமும் சரியா என்பதை ஆராய்வோம்.

“அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை.

எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர்.

எனவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர். இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:35

தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்படும் போது இரண்டு நடுவர்களின் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது முரணாகுமா என்றால் நிச்சயம் முரணாகாது.

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:58

அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:42

மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது ஒருபோதும் முரண் கிடையாது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 5:95

உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இதுவும் முரணாகாது.

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். “பயப்படாதீர்!நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 38:21, 22

ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.

திருக்குர்ஆன் 21:78

தாவூது, ஸுலைமான் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதற்கு இது நிச்சயம் முரணானதல்ல.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 49:9

மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைக்க வேண்டும் என இவ்வசனம் தெளிவாக அனுமதிக்கின்றது.

இந்த வசனங்கள் அனைத்தும் மனிதர்கள் தீர்ப்பளிக்க முடியும்; தீர்ப்பளிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்ற வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பளிப்பது தவறு என்று ஒரு போதும் கூற முடியாது.

ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுக்கின்றனர்.

உண்மையில் மற்ற உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதே அவனது பகுத்தறிவால் தான். அவனது அறிவைப் பயன்படுத்தி பல நல்ல விஷயங்களைக் கண்டு கொள்ள முடியும். மேலும் பல வசனங்கள் சிந்திக்குமாறு நமக்குக் கட்டளை இடுகின்றன. சிந்தனையின் மூலம் நல்லது கெட்டதை மனிதன் அறிந்து கொள்ள முடியும் என்பதால் தான் இறைவன் அவ்வாறு கூறுகிறான். ஒரு மனிதன் சிந்தித்து எடுக்கும் நல்ல முடிவுகளை மற்றவர்கள் ஏற்கலாம் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் என்பதன் பொருள் இப்போது நமக்குத் தெளிவாக விளங்குகின்றது.

மறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வணக்க வழிபாடுகள், ஹலால் ஹராம் ஆகிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பற்றியே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். இதைத் தவிர உள்ள அதிகாரங்கள் மனிதர்களுக்கு உண்டு என்பதைத் திருக்குர்ஆன் மேற்கண்ட வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான்.

மறுமையில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் காட்டவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அதனுடன் தொடர்பில்லாத உலக விஷயங்களைக் காட்ட அவர்கள் அனுப்பப்படவில்லை. அந்த ஞானமும் அதிகாரமும் மனிதர்களுக்கு இறைவனால் இயல்பாகவே வழங்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இதைச் செய்யாதிருக்கலாமேஎனக் கூறினார்கள். மதீனாவாசிகள் இவ்வழக்கத்தை உடனே விட்டு விட்டார்கள். ஆனால் இதனால் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?” எனக் கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நபித் தோழர்கள் நினைவு படுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களில் நீங்களே நன்கு அறிந்தவர்கள்எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் முஸ்லிம் 4358

மற்றொரு  அறிவிப்பில் “நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நன் உங்களுக்கு  ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள். என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான்எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் முஸ்லிம் 4357

மற்றொரு அறிவிப்பில் “நான் எனது கருத்தைக் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள். ஆனால் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்எனக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல்: முஸ்லிம் 4356

எது அல்லாஹ்வுக்கு உள்ள அதிகாரம்? எது மனிதனுக்கு உள்ள அதிகாரம்? என்பது இந்த நபி மொழியில் மிகத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

உலகின் ஜன நாயக நாடுகளில் மக்களின் கருத்தைக் கேட்டு மறுமைக்கான வழிகளை முடிவு செய்வதில்லை. எப்படித் தொழுவது என்பதை மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதில்லை. மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பற்றி முடிவு செய்யவே ஜனநாயகம் பயன்படுகிறது.

சில விஷயங்களில் இஸ்லாம் தடுத்துள்ள சில காரியங்களை அனுமதிக்கும் வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றி விடுவார்கள். அதை மட்டும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை, காரிஜிய்யாக்களைப் பின்பற்றி மக்களை வழி கெடுப்பதற்காகத் திசை திருப்புகின்றனர்.

இந்த இடத்தில் இவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக, தவறான கருத்தைக் குர்ஆனில் திணிக்கிறார்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

மறுமையில் வெற்றி பெறுவது தொடர்பான விஷயங்களில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்பதை இவர்கள் வசதியாக மறப்பார்கள். உதாரணமாக இவர்கள் மத்ஹபை ஆதரிப்பார்கள்; பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் என்ன? வணக்க வழிபாடுகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் இமாம்களுக்கு உண்டு என்பது தானே?

இவர்கள் மத்ஹப் கூறும் முறையில் தான் தொழுவார்கள். மற்ற எல்லா வணக்கங்களையும் மத்ஹப் கூறும் முறையில் தான் செய்வார்கள். உலக விஷயங்களிலேயே மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது ஷிர்க் என்ற இவர்களின் கொள்கைப் படி வணக்க வழிபாடுகளில் மனிதர்களுக்கு அதிகாரம் வழங்குவது கொடிய ஷிர்க் ஆக வேண்டுமல்லவா?

மீலாது விழா உள்ளிட்ட எல்லா பித்அத்களையும் இவர்கள் செய்வார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் செய்யாதவற்றைச் செய்வது தானே பித்அத். அதாவது மனிதர்கள் உண்டாக்குபவையும் வணக்கமாகும் என்பது தானே இதன் பொருள். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே என்ற வசனம் இப்போது ஏன் மறந்து போனது?

இதிலிருந்து தெரிய வருவது என்ன? எந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மட்டும் அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அதிகாரம் இல்லை என்று ஆக்கப் பார்க்கிறார்கள். எந்த விஷயத்தில் அல்லாஹ் மனிதனுக்கு அதிகாரம் வழங்கியுள்ளானோ அந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்குத் தான் அதிகாரம் என்கின்றனர். இதிலிருந்து இவர்களின் அறியாமை வெளிச்சத்துக்கு வருகின்றது.

இந்த வாதத்தில் இன்னும் பல தவறுகள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

———————————————————————————————————————————————–

தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே!

ஆஷிக் சுக்ரியா

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மௌலிது குப்பைகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர்.

நான்கு மத்ஹபுகளுக்கு மாற்றமாக தலையில் தொப்பி போடாமல், நெஞ்சில் கைகட்டி, விரலசைத்துத் தொழுபவர்கள் இப்பள்ளியில் தொழக் கூடாது; இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றெல்லாம் ஜமாஅத்துல் உலமாவின் தூண்டுதலின் பேரில் ஊருக்கு ஊர் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் போர்டுகள் மாட்டப்பட்டன.

நபிவழியின் பிரகாரம் விரலசைத்துத் தொழுதவர்களின் விரல்கள் நறுக்கப்பட்டன. கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆனால் அதே சமயம், மது அருந்துபவர்கள், வரதட்சணை வாங்கும் கயவர்கள், வட்டி மூசாக்கள், நாத்திகவாதிகள், அரசியல் புரோக்கர்கள் ஆகிய அனைவருக்கும் பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. எங்களது அடிப்படை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள் ஆகிய இரண்டு மட்டுமே என்றுரைத்ததற்காக மட்டுமே தவ்ஹீத் வாதிகள் பள்ளிகளை விட்டும் விரட்டப்பட்டனர்.

இவர்கள் நம்மைப் பள்ளிகளை விட்டும் விரட்டுவதென்ன? இது போன்ற பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் ஒரு போதும் நிற்கக் கூடாது என்பது தான் ஏக நாயனின் கட்டளை! இதோ இறைவனின் கட்டளையைப் பாருங்கள்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லைஎன்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களேஎன்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.  (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!

அல்குர்ஆன் 9:107, 108

மேற்கண்ட வசனத்தில் நபியவர்களுடைய காலத்தில் ஏகத்துவ வாதிகளுக்கெதிராக முனாஃபிக்கீன்கள் கட்டிய ஒரு பள்ளிவாசலைப் பற்றித் தான் அல்லாஹ் பேசுகிறான். முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியைப் பற்றி அல்லாஹ் நான்கு காரணங்களைக் கூறுகிறான்.

  1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்
  2. ஏக இறைவனை மறுத்தல்
  3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல்
  4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்

இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

இந்த நான்கு காரணங்களும் எந்தெந்தப் பள்ளிகளில் காணப்படுகின்றதோ அவற்றைக் கட்டியவர்கள் அதனைப் பள்ளிவாசல் என்று சொல்லிக் கொண்டாலும் அவை இறைவனின் பார்வையில் இறையாலயமாகாது. இப்படிப்பட்ட பள்ளிகளில் உண்மையான முஸ்லிம்கள் சென்று தொழுவதும் தகாது.

இன்று நம் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்றதா என்று பார்ப்போம்.

  1. முஃமின்களுக்குத் தீங்கிழைத்தல்

நபிகள் நாயகம் காலத்தில் பள்ளிவாசல் என்பது மக்களின் துயர் துடைக்கும் மையமாக விளங்கியது. பசியால் வாடுபவர்களும், படுப்பதற்கு இடமில்லாதவர்களும், பிணியால் அவதிப்படுவோரும், துயரங்களுக்கு உள்ளானவர்களும் நாடி வரும் இடமாகப் பள்ளிவாசல் தான் இருந்தது. ஆனால் இன்றோ வயிற்றுச் சோறுக்கு வழியில்லாதவன் கூட பள்ளிக்கு வரி கட்டவில்லையென்றால் அவனுக்கு அடக்கம் செய்ய இடம் கிடையாது என்று அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் நபிவழியின் பிரகாரம் விரலசைத்து, நெஞ்சில் கைகட்டி தொழுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்குப் பள்ளிவாசல்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. மஃரிப் உடைய முன் சுன்னத் போன்ற தொழுகைகள் தொழுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நபி வழியின் பிரகாரம் சப்தமிட்டு ஆமீன் கூறுபவர்கள் தாக்கப்படுகின்றனர். பள்ளியில் குர்ஆன் மொழிபெயர்ப்புகள் படிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

தன்னைப் பெற்ற தந்தைக்கு மகன் ஜனாஸா தொழுவிப்பதற்குப் பள்ளிவாசல் நிர்வாகிகள் கதவடைக்கின்றனர். சத்தியக் கருத்துகளை உள்ளது உள்ளபடி பள்ளியில் எடுத்துரைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. நபிவழியின் பிரகாரம் வரதட்சணை வாங்காமல் அனாச்சாரங்களை ஒழித்து செய்யப்படும் திருமணங்களுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்படுகிறது. பதிவுப் புத்தகம் தர மாட்டோம் என்று மிரட்டப்படுகின்றனர்.

வரதட்சணை வாங்கினாலும் பள்ளிக்குப் பங்கு தரவேண்டும் என்று ஜமாஅத்துகள் விதி வகுத்துள்ளன. வரதட்சணைத் திருமணங்கள் பள்ளிவாசல் இமாம், முத்தவல்லி மற்றும் நிர்வாகிகள் முன்பாகவே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன.

பள்ளிவாசல்களுக்குக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் மக்களிடம் பணம் கறப்பதில் தான் பள்ளிகள் போட்டியிடுகின்றனவே தவிர யாருக்கும் எந்த உதவியும் இன்றைய பல பள்ளிகளில் காண முடிவதில்லை.

இவ்வாறு பல விஷயங்களில் பள்ளிவாசல்கள் மக்களுக்குத் தீங்கிழைக்கும் இடமாகத் தான் உள்ளனவே தவிர நபிகள் நாயகம் காலத்தில் இருந்த ஒரு நிலையை சில பள்ளிகளில் தவிர மற்றவற்றில் காண முடிவதில்லை.

  1. இறை நிராகரிப்பு

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

மேற்கண்ட வசனத்திற்கு நேர் எதிராகப் பல பள்ளிவாசல்கள் இணைவைப்புக் காரியங்களின் கோட்டைகளாகத் திகழ்கின்றன.

பள்ளிவாசல்களுக்குப் பெயர் வைக்கும் போதே நாகூராண்டவர் பள்ளிவாசல், முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்று இறைவனல்லாத ஆண்டவர்களுக்காகத் தான் பள்ளிவாசல்களே கட்டப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவர் எங்கும் வருவார் என்ற குஃப்ரான நம்பிக்கையில் தான் பல பள்ளிகளுக்கு இவருடைய பெயரைச் சூட்டுகின்றனர்.

இறைவனுடைய அடிமைகளை எல்லாம் இறைவனாகப் பாவித்து ஓதப்படுகின்ற கேடுகெட்ட மௌலிது குப்பைகள் பள்ளிவாசல்களில் தான் அரங்கேற்றப்படுகின்றன. முஹைதீன் ஆண்டவரை ஆயிரம் முறை அழைத்தால் விரைந்து வருவார்; அழைப்பிற்குப் பதில் தருவார் என்ற நரகத்து வரிகளை உள்ளடக்கிய யாகுத்பா, சுப்ஹான மௌலிது, நாகூர் ஆண்டவர் மௌலிது, ஸலாத்துன் னாரிய்யா போன்ற பல குப்பைகள் பள்ளிவாசல்களில் கொட்டப்படுகின்றன.

பள்ளிவாசல்களுக்குள்ளேயே கப்ருகள் கட்டப்பட்டு வணக்க வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் பள்ளிவாசல்களோடு இணைந்ததாக பள்ளிவாசல் காம்பவுண்டிற்குள் அட்டாச்டு தர்ஹாக்களும் இணைந்துள்ளன.

மேலும் தாயத்து தகடுகள், பில்லி, சூனியம், பால்கிதாப் பார்த்தல், போன்ற இன்னும் பல இணை கற்பிக்கும் காரியங்கள் அனைத்தும் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. இவ்வாறு பல பள்ளிகள் இறை நிராகரிப்பின் தளங்களாகத் தான் திகழ்கின்றன. இந்த இரண்டாவது காரணமும் பல பள்ளிகளில் நிதர்சனமாக, தெளிவாகவே காணப்படுகிறது.

  1. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்

பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் மையமாகும். ஆண்டியும், அரசனும், கருப்பனும், வெள்ளையனும் சமம் என்றுரைக்கும் இடம் தான் பள்ளிவாசல். ஆனால் இத்தகைய பள்ளிவாசல்கள் தான் முஃமின்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் இடங்களாக நமக்கு மத்தியில் காட்சியளிக்கின்றன. நான்கு மத்ஹபுகளின் ஒன்றைப் பின்பற்றாதவர்கள் எங்கள் பள்ளிக்குள் வரக் கூடாது என்று போர்டு மாட்டி வைத்திருப்பதே பிரிவினைக்கு முதல் சான்றாகும்.

சமுதாயத்தில் ஏற்படும் எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் கூட தீர்த்து விடலாம். ஆனால் இந்த ஷாஃபி, ஹனஃபி பிரச்சினை கியாமத் நாள் வரை தீராத பிரச்சினையைப் போன்றும், ஜாதிப் பிரிவினைகளைப் போன்று பிறக்கும் போது ஒட்டிக் கொண்டு பிறக்கின்ற ஒரு பிரிவினையாகி விட்டது. இன்றைக்கும் கூட பல ஊர்களில் ஷாஃபியாக்கள்  மற்றும் ஹனஃபியாக்களுக்கு மத்தியிலான திருமண உறவுகள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. பள்ளிவாசல்கள் உருவாக்கப்படும் போது இது ஷாஃபி பள்ளி இது ஹனஃபி பள்ளி என்று பிரிவினையின் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒரே பள்ளியில் குறுக்காகச் சுவர் வைக்கப்பட்டு ஷாஃபிகள் ஒரு புறமும், ஹனஃபிகள் ஒரு புறமும் தொழுது வருகின்றனர். வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற பெரும் மதரஸாக்களிலெல்லாம் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைப் போன்று ஷாஃபி மாணவர்கள் ஒரு புறமும் ஹனஃபி மாணவர்கள் ஒரு புறமும் மிகவும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

கஃபாவில் கூட பல ஆண்டுகளாக நான்கு முஸல்லாக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தவ்ஹீதின் ஆட்சி வந்த பிறகு தான் அவையனைத்தும் ஒன்றாக்கப்பட்டன. அனைத்து ஆலிம்களும் ஷாஃபி ஹனஃபி பிரிவினை தான் சரி என்றே பள்ளிவாசல்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.

இமாம் ஷாஃபியின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் அபூ ஹனீஃபாவின் மிகச் சிறந்த ஒரு மார்க்கத் தீர்ப்பை ஷாஃபியானவன் பின்பற்றினால் அவன் நரகவாதியா? இமாம் அபூ ஹனீஃபாவின் தவறான கருத்துக்களுக்கு மாற்றமாக இமாம் ஷாஃபி அவர்களின் மிகச் சிறந்த மார்க்க ரீதியிலான கருத்துக்களை ஹனஃபியானவன் பின்பற்றினால் அவன் நரக வாதியா?

இதற்கெல்லாம் இந்தப் பிரிவினை ஆலிம்கள் பதில் கூறத் தயாரில்லை. இப்படிப்பட்ட இந்த மத்ஹப் பிரிவினைகளின் உலைக்களங்களாகத் தான் இன்றைய பல பள்ளிகள் திகழ்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிகள் உண்மையான முஸ்லிம்கள் தொழுவதற்குத் தகுதியானதா? என்பதை உண்மை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

  1. அல்லாஹ்விற்கும் தூதருக்கும் எதிராகப் போர் புரிபவர்களுக்குப் புகலிடம்

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:17, 18

மேற்கண்ட வசனங்கள் இணை  கற்பிப்பவர்கள் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது கூடாது என்பதைத் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகிகள் 1. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பியவர்களாகவும் 2. தொழுகையை நிலை நாட்டுபவர்களாகவும் 3. ஸகாத்தை நிறைவேற்றுபவர்களாகவும். 4. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாதவராகவும் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளின் நிலைகளை நாம் பார்க்கும் போது இதற்கு நேர்மாற்றமாகத் தான் உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மௌலிதுகள் போன்ற அனைத்து இணை கற்பிக்கும் காரியங்களுக்கும் குத்தகைதாரர்களாகத் திகழ்கின்றனர். இவையனைத்தையும் பள்ளி வாசல்களில் இவர்கள் தான் அரங்கேற்றுகின்றனர்.

மேலும் இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்யக்கூடிய வட்டி மூசாக்கள், வரதட்சணையை ஆதரிக்கும் இமாம்கள், முத்தவல்லிகள், கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள், லாட்டரி வியாபாரிகள், கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள், பள்ளிவாசலை சீட்டாட்டத்திற்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி விட்டுப் பாங்கு சொன்னவுடன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறக் கூடியவர்கள், அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கக்கூடிய அரசியல் புரோக்கர்கள், பெண்களைப் பலவந்தமாக அடையக் கூடிய காமவெறியர்கள், விபச்சாரம் செய்யக் கூடியவர்கள், மது அருந்தக் கூடியவர்கள் ஆகியோர் தான் இன்றைக்குப் பல பள்ளிவாசல் நிர்வாகிகளாகக் காட்சி தருகின்றனர்.

மேலே சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களிலும் அல்லது சொல்லப்படாத இன்னும் பல தீய காரணங்களிலும் ஒன்றோ இரண்டோ அல்லது இதற்கு அதிகமான விஷயங்களோ இன்றைய பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்படாமல் இல்லை. இவற்றை வெளிப்படையாகவே பலர் செய்து வருகின்றனர். இப்படி இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, இறைவனுக்கெதிராக யுத்தம் செய்கின்றவர்களுக்குப் புகலிடமாகத் தான் பல பள்ளிகள் திகழ்கின்றன.

இது போன்ற பள்ளிகள் உண்மையான முஃமின்கள் நின்று வணங்குவதற்குத் தகுதியானவை கிடையாது என்பது தான் முதலில் நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இறைவனின் பிரகடனமாகும்.

நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் நாடவில்லை

  1. முஃமின்களுக்கு தீங்கிழைத்தல் 2. ஏக இறைவனை மறுத்தல் 3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துதல் 4. அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போரிடுவோருக்குப் புகலிடம். இந்த நான்கு காரணங்களும் அந்த முனாஃபிக்கீன்கள் கட்டிய பள்ளியில் இருந்த காரணத்தினால் தான் அல்லாஹ் அந்தக் கட்டடத்தில் நபியவர்கள் தொழுகைக்காகச் செல்வதைத் தடுத்தான்.

நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லைஎன்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களேஎன்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.  (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்!

அல்குர்ஆன் 9:108

முனாஃபிக்கீன்கள், “நாங்கள் நல்லதற்காகத் தான் இப்பள்ளியைக் கட்டியுள்ளோம்’ என்று சத்தியம் செய்து கூறிய போதும் இந்த நான்கு காரணங்களும் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கூறியது பொய் என அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அது போன்று மேற்கண்ட நான்கு காரணங்களும் நடைபெறுகின்ற பள்ளிவாசல் நிர்வாகிகள் நாங்கள் நல்லதற்காகத் தான் இந்தப் பள்ளியை நிர்மாணித்துள்ளோம் என்று கூறிய போதிலும் இந்நான்கு காரணங்களும் நீக்கப்படுகின்ற வரை அவை முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளிகளாக ஆகாது என்பதே உண்மையாகும்.

முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளி எது?

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்குர்ஆன் 9:108

இப்படிப்பட்ட பட்ட பள்ளி வாசல்கள் வரிசையில் தவ்ஹீத் பள்ளிகள் தான் முன்னிலை வகிக்கின்றன. இன்றைக்குத் தவ்ஹீத் பள்ளிகள் ஏழை மக்கள் நாடிவரும் தலங்களாகவும் துயர் துடைக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன. தவ்ஹீத் பள்ளிகளின் பணிகளை பட்டியலிடத் துவங்கினால் இந்த இதழ் பற்றாது. மக்களுக்கு இடையூறு செய்தல் என்பது தவ்ஹீத் பள்ளிகளில் அறவே கிடையாது.

முஃமின்களைப் பிரிக்கக்கூடிய மத்ஹபுப் பிரிவினைகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. அனைத்து மத்ஹபிலிருந்து நபிவழிக்கு வந்தவர்களும் இன்றைக்கு ஒரே முறையில் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். மேலும் மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்களும் அவர்களது முறைப்படி தொப்பி அணிந்து விரலசைக்காமல் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிலை நாட்டுகின்றனர். அவர்கள் தாக்கப்படுவது கிடையாது.

பித்அத்தான காரியங்களைச் செய்வதற்குத் தான் தவ்ஹீத் பள்ளியில் தடை விதிக்கப்படுமே தவிர வேறு யாரும் தடுக்கப்படுவது கிடையாது. மேலும் நபி வழியின் அடிப்படையில் தொழுபவர்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் என்ற போர்டுகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. மேலும் ஏகத்துவத்தை எடுத்துரைத்து, இணை கற்பிக்கும் காரியங்களை அழிக்கக் கூடிய தளங்களாகத் தான் தவ்ஹீத் பள்ளிகள் திகழ்கின்றன.

இறைவன் கூறிய பண்புகளுக்குச் சொந்தக்காரர்கள் தான் தவ்ஹீத் பள்ளிவாசல் நிர்வாகிகளாகத் திகழ்கின்றனர். எனவே தான் இன்றைக்கு ஊருக்கு ஊர் தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளிகளை உருவாக்கி வருகின்றது. இவை அடித்தளமிடப்படும் போதே இறையச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

இதை இங்கு எழுதுவதற்குக் காரணம், அனைத்து இறையாலயங்களும் இதைப் போன்று மாற வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, மற்ற ஆலயங்களைத் தகர்க்க வேண்டும் என்பதற்கல்ல. இந்நிலை கனியும் தருணம் இறைவன் நாடினால் வெகு தூரத்திலல்ல. மிக அருகில் தான் காட்சியளிக்கிறது.

மேற்கண்ட நான்கு தீய நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் திருந்திக் கொண்டால் அப்போது தான் அவை பள்ளிவாசல்களாகக் கருதப்படும்.

இதனை வேறொரு விதமாகவும் அல்லாஹ் நமக்குத் தெளிவு படுத்துகிறான். இப்ராஹீம் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என்று கூறும் இறைவன், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கூட்டத்தை விட்டு நாம் விலகி விட வேண்டும் என வழி காட்டுகிறான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

அல்குர்ஆன் 60:4

இணை கற்பிப்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி வாசல்களைப் புறக்கணித்து, தக்வா எனும் இறையச்சத்தின் அடிப்படையில் பள்ளிகளை அமைப்பது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். அது குடிசையாக இருந்தாலும் சரியே!