ஏகத்துவம் – ஜனவரி 2008

தலையங்கம்

தவ்ஹீத் எழுச்சி மாநாடு

மனிதன் ஒரு சமூகப் பிராணி!  அவனால் ஒரு போதும் தனித்து வாழ இயலாது.  தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மனைவி மக்கள் என்ற குடும்ப இணைப்பு!  இதே குடும்ப இணைப்பைக் கொண்டு அவனது அக்கம் பக்கத்தில் அடுத்தடுத்து வாழும் அண்டை வீடுகள்!  இவை அத்தனையுமாகச் சேர்ந்து அமையப் பெற்ற வீதிகள்!  பல்வேறு வீதிகளைக் கொண்டு அமைந்திருக்கும் ஊர்கள்! ஆகிய இந்த மூன்றடுக்கு சமூகக் கட்டமைப்பில் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்றாக ஒன்றிப் போனவன் மனிதன்!

இத்தகைய சமூகக் கூட்டமைப்பை விட்டு, அடுக்கடுக்கான கட்டமைப்புகளை விட்டு ஒரு மனிதன் வெளியேறுவது என்பது ஒரு நீர்வாழ் பிராணி நீரை விட்டு வெளியேறுவது போலத் தான். அதனால் தான் சமூகத்தில் ம-ந்து கிடக்கும் தீமைகளை எதிர்த்து நிற்க, அதன் சக உறுப்பினனாகிய ஒருவன் தயங்குகின்றான். அந்தத் தீமைகளில் இவனும் சேர்ந்து சங்கமமாகி விடுகின்றான்.

தன்னை எதிர்த்து, தனது மூடப் பழக்கங்களை எதிர்த்து ஒரு புரட்சியாளன் புறப்பட்டு விட்டால் அவனைப் புதை குழிக்கு அனுப்புவதற்குக் கூட இந்தச் சமூகம் தயங்குவது கிடையாது. இது அந்தச் சமூகம் எடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையாகும். அதன் முதற்கட்ட நடவடிக்கை ஊர் நீக்கமும் ஒதுக்கித் தள்ளுவதும் தான்.

“அல்லாஹ் ஒருவன்! அவன் ஏகன்” என்ற கொள்கையை இறைத் தூதர்கள் முன் வைத்த மாத்திரத்தில் ஆத்திரம் கொண்ட இந்தச் சமூகம் அப்படித் தான் அவர்களைத் தனிமைப்படுத்தியது. அத்துடன் நின்று விடாமல், “புதுக் கருத்தைச் சொல்லும் இவர் ஒரு பைத்தியக்காரர்; மதிகளை மயக்கும் மந்திரக்காரர்; பிரிவினையை ஏற்படுத்தும் மாயக்காரர்” என்ற பட்டங்களைச் சூட்டி, அந்த இறைத் தூதர்களைப் பழித்து பரிகசித்து நின்றது. அதை அந்த இறைத் தூதர்கள் எதிர்த்து நின்றார்கள். இது குர்ஆன் தரும் பாடம்!

சமூகச் சீர்திருத்தங்களில் ஈடுபடுகின்ற எந்த ஒரு சீர்திருத்தவாதியும் இது போன்ற சோதனையான கட்டங்களைச் சந்திக்காமல் இருக்க முடியாது.  அவரை அந்தச் சமூகம் தலைகீழாகப் புரட்டாமல் இருப்பதில்லை. இங்கு தான் இறைத் தூதர்களின் வாழ்க்கை நமக்கு ஓர் ஆறுதலாக வந்து நிற்கின்றது. அவர்களின் வரலாறு சமூக சீர்திருத்தக் கொள்கையின் போராட்டப் பாதையில் ஒளி விடும் சுடராகவும், தளர்ந்து போகும் உள்ளங்களுக்கு சத்தாகவும் சாறாகவும் அமைகின்றது.

இதற்கு எடுத்துக்காட்டைக் காண்பதற்கு வரலாற்றுப் பாதைகளில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை. நாம் அண்மையில் கடந்து வந்த 1980ஆம் ஆண்டின் பிற்பகுதிகளை சற்றுத் திரும்பிப் பார்த்தாலே போதும்.  தமிழகம் ஏகத்துவக் கொள்கை என்னும் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டு, இருட்டிலே தட்டழிந்து கொண்டிருந்தது. நாமும் அந்த இருட்டையே வெளிச்சம் என்று நம்பிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் தான் ஏகத்துவ வெளிச்சம் நம் மீது பாய்ந்தது. நமது சிந்தனைக் கதவுகள் திறந்தன. அசத்திய இருளிலிருந்து வெளியேறினோம். அடுத்தவருக்கும் அதை எடுத்துச் சொன்னோம்.

ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னதும் அடி, உதை, அரிவாள் வெட்டு, ஊர் நீக்கம் போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டோம்; இன்னும் உள்ளாக்கப் படுகின்றோம்; இந்த ஊர் நீக்கப் படலம் இன்றும் தொடர்கின்றது. இதற்கு பொட்டல்புதூரை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். ஒரு சகோதரர் அங்கு ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ததற்காக ஊர் நீக்கம் செய்யப்பட்டார். இவரிடத்தில் யாராவது பேசினால் அவரும் ஊர் நீக்கம் செய்யப்படுவார். இவருக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது, எந்தத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று சட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் ஒரு குஞ்சு கூட பேசுவது கிடையாது.

இப்படி தனித்து ஒதுக்கப்பட்டு அதனால் சஞ்சலப்பட்டு அல்லலுறும் அன்புச் சகோதரர்களுக்கு ஆறுதல் வழங்குவது நம் மீது கடமையாகும்.  தவித்த வாய்க்குத் தண்ணீர் தரப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு அதைத் தாங்கி நிற்கும் இனிய இஸ்லாமிய நெஞ்சங்களே! ஏகத்துவவாதிகளே! இப்ராஹீம் (அலை) அவர்களின் வாரிசுகளே! என்று கரிசனத்துடன், கனிவான உள்ளத்துடன் அழைத்து அவர்களையும் ஏனைய ஏகத்துவவாதிகளையும் ஓரிடத்தில் சங்கமிக்கச் செய்ய வேண்டும். அப்படியொரு சந்திப்பு முகாம் இத்தகைய நேரத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.

உங்களை உங்கள் சமூகம் எட்டி எறிகின்றதா? இதோ உங்களைக் கட்டி அணைத்து, தோளோடு தோள் கொடுத்து உதவ ஏகத்துவ சமூகமாகிய நாங்கள் உள்ளோம் என்று காட்டும் ஓர் ஒன்று கூடல் நிகழ்ச்சி அவசியம் நடந்தேறியாக வேண்டும். அது தான் இன்ஷா அல்லாஹ் மே 10, 11 தேதிகளில் திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநில மாநாடு!

இந்த மாநாடு இது வரை தத்தமது ஊர்களில் தனிமைப் படுத்தப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கும் சத்திய சகோதரர்களுக்கு ஓர் ஒற்றடம்!  பாதிக்கப்பட்ட ஏகத்துவ மக்களின் பாசமிகு சங்கமம்!  கொதிப்படைந்த சத்திய மக்களுக்கு குளிர் தரும் மேகம்!

வன்முகம் கொண்டு சமூகப் பகிஷ்காரம் செய்யப்பட்ட அம்மக்கள் இங்கே இன்முகங்களோடு சமூகப் பாச அரவணைப்புடன் வரவேற்கப்படும் போது “இதுவரை நம்மைத் தனிமரம் என்றல்லவா எண்ணி தப்புக் கணக்குப் போட்டு விட்டோம். நிச்சயமாக இந்த ஏகத்துவத் தோப்பில் சஞ்சரிக்கும் இலட்சக் கணக்கான கனி மரங்களில் நாமும் ஒன்று” என்று எண்ணி சந்தோஷமடைவார்கள். இந்த உறவு மேலும் மேலும் இந்தக் கொள்கையைப் பரப்புவதற்குத் தூண்டுகோலாக அமையும்.

இப்போதெல்லாம் ஏகத்துவக் கொள்கையல்லாத பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என எவற்றிற்கும் ஆட்கள் கூடுவதில்லை. அதே சமயம் ஏகத்துவப் பொதுக் கூட்டங்கள், மாநாடு எனும் போது மக்கள் தேனீக்களாய் மொய்க்கின்றனர். ஏகத்துவத்தை ஏற்காத ஒருவர் இந்த மாநாட்டுப் பந்த-ல் களம் புகுவாரானால் நிச்சயமாக அவர் ஏகத்துவத்திற்கு ஒரு புது வரவாகி விடுவார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ர-) அவர்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத்(ர-)

நூல்: புகாரி 3009

இந்த ஹதீசுக்கொப்ப நாம் ஒரு கோடி ரூபாய் செலவளித்தாலும் அவை நமக்கு மறுமையில் நன்மையைப் பெற்றுத் தரும் கருவூலக் களஞ்சியங்களாக வந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை!

எனவே இம்மாநாட்டுக்குக் குடும்பத்துடன் வருவதற்கு இன்றே ஆயத்தமாவீர்!  மாநாட்டு ஏற்பாடுகளுக்கான நிதிகளை இப்போதே அனுப்பத் தொடங்குவீர்!  தமிழக ஏகத்துவ வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுத இப்போதே தயாராவீர்!

அதற்கு முன்பாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இம்மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற இரு கரமேந்தி இறைஞ்சிடுவீர்!

————————————————————————————————————————————————

ஹதீஸ் கலை ஆய்வு              தொடர்: 6

பருவ வயதை அடைந்தவருக்கு பால் புகட்டுதல்

பருவ வயதை அடைந்த ஒரு ஆணுக்கு, ஒரு பெண் பாலூட்டி விட்டால் அவ்விருவருக்கும் தாய், மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்ற கருத்தில் அமைந்த ஸாலிம் (ரலி) தொடர்பான ஹதீஸ் பல்வேறு குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதைக் கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம்.

குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம்.

இந்த ஹதீஸைச் சரி காண்பவர்களின் விளக்கம்

“பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டுதல் என்ற சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது. இரண்டு வருடத்திற்குள் தான் பால்குடிச் சட்டம் ஏற்படும் என்று கூறும் குர்ஆனுடைய சட்டத்திலிருந்து இது விதி விலக்கானது. எனவே குர்ஆன் வசனத்திற்கும், விதிவிலக்கான இந்த ஹதீஸிற்கும் மத்தியில் எந்த முரண்பாடும் இல்லை” என்று வாதிடுகின்றனர்.

நமது விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்பதால் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களையும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் எடுத்துச் செயல்பட வேண்டும். இந்த அடிப்படையில் தான் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பின்வரும் வசனம் இதையே உணர்த்துகிறது.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 59:7

பொதுவான சட்டத்திலிருந்து சில நேரங்களில் சிலருக்கு விதிவிலக்கைத் தரும் அதிகாரம் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உண்டு. யாருக்கு எது விதிவிலக்கு என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்த்தினால் அதை விதிவிலக்கு என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் பின்வரும் ஹதீஸ் உதாரணமாக உள்ளது.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்குக் குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபியவர்களிடம்) “என்னிடத்தில் முஸின்னாவை விடச் சிறந்த ஆறு மாதக் குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?)” என்றார். “முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூற்கள்: புகாரி 5560, முஸ்லிம் 3965

ஆறு மாதக் குட்டியைக் குர்பானி கொடுப்பது யாருக்கும் அனுமதியில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு மட்டும் இவ்விஷயத்தில் அனுமதி வழங்கியுள்ளார்கள். இச்சலுகை அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு மட்டும் உரியது என்பதை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

தனிப்பட்ட சலுகை என்றோ, விதிவிலக்கென்றோ சொல்வதாக இருந்தால் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்த்த வேண்டும். அவ்வாறு தெளிவாக உணர்த்தா விட்டாலும் விதிவிலக்கு என்பதைச் சுட்டிக் காட்டும் வாசகம் ஹதீஸில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு உதாரணமாகப் பின் வரும் ஹதீஸ்களை எடுத்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் பத்ரு கிணற்றுக்கருகில் நின்று கொண்டு (கிணற்றில் வீசப்பட்ட இறந்து விட்ட எதிரிகளைப் பார்த்து) “உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கூறினார்கள். பின்பு, “நான் கூறுவதை இவர்கள் இப்போது செவியுறுகிறார்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3981

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. ஆனால் இந்தப் பொதுவான விதிக்கு இந்த ஹதீஸ் விலக்காக அமைந்துள்ளது. ஆனால் இந்த ஹதீஸில், பத்ருப் போரில் இறந்துவிட்ட எதிரிகள் இந்த இடத்தில் மட்டும் கேட்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறவில்லை. மாறாக “இப்போது கேட்கிறார்கள்’ என்று கூறுவதன் மூலம் எப்போதும் கேட்க மாட்டார்கள்; விதிவிலக்காக இப்போது மட்டும் தான் கேட்பார்கள் என்று நபியவர்கள் உணர்த்துகிறார்கள்.

இது போன்று பால்குடிச் சட்டம் தொடர்பாக ஸாலிமுக்குச் சொன்ன சட்டம், ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவோ, மறைமுகமாகவோ கூறினார்களா? என்பதே நமது கேள்வி. அவ்வாறு கூறாத போது எல்லோருக்கும் பொருந்துமாறு அமைந்த ஹதீஸை ஸாலிமுக்கு மட்டும் குறிப்பானது என்று கூறி இதை ஓரங்கட்டுவது ஏன்?

இந்தச் செய்தி விகாரமான முடிவைத் தருவதால் இதைச் செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறி அந்தக் காலத்துடன் இந்த அசிங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட எண்ணுவது தான் ஹதீஸைப் பாதுகாக்கும் முறையா?

ஸாலிமுக்கு மட்டும் இச்சட்டம் உரியது என்று கூறுவதால் இவர்களும் ஒரு விதத்தில் நம்மைப் போன்று இந்த ஹதீஸை மறுக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் இதை நபி (ஸல்) அவர்கள் இந்தச் செயலைச் செய்யச் சொன்னார்கள் என்பதை மட்டும் ஒத்துக் கொண்டு இவர்கள் செயல்படுத்த மறுக்கிறார்கள்.

இந்தச் செய்தி விகாரமான பொருளைத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், “இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது’ என்று எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சிலர் கூறியுள்ளார்கள். நாம் கூறியதைப் போன்று தெளிவாக யாரும் மறுக்கவில்லை என்றாலும் இந்த ஹதீஸை ஓரங்கட்டுவதற்குரிய முயற்சிகளை நமக்கு முன்பே செய்துள்ளார்கள்.

இவர்கள் கையில் எடுத்துள்ள “பிரத்யேகமான சலுகை’ என்ற இந்த அளவுகோலை நாம் கையில் எடுத்து பல ஹதீஸ்களுக்கு தீர்ப்புச் சொன்னால் இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நெஞ்சில் கையை கட்டினார்கள் என்று வரும் செய்தி அவர்களுக்கு மட்டும் உரியது என்று வாதிட்டால் அந்த வாதம் சரியா? இப்படியே பல ஹதீஸ்களுக்கு நம் மனம் போன போக்கில் பிரத்யேகமானது என்று கூறினால் மார்க்கத்தை இழக்க நேரிடும். எனவே பிரத்யேகமான சட்டம் என்று கூறுவதானால் மேல் சொன்ன அளவுகோலைப் பயன்படுத்தியே சொல்ல வேண்டும்.

யூகம் வேண்டுமா? உறுதி வேண்டுமா?

இது போன்ற விளக்கத்தை இந்த அறிஞர்கள் கூறுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து, நபி (ஸல்) அவர்களின் அனைத்து மனைவிமார்களும் “இச்சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது’ என்று கூறியுள்ளதால் இந்த விளக்கம் தான் சரி என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூறியதாக வரும் வாசகங்களை முறையாகக் கவனித்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.

(ஸாலிமுக்குப் பால் புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதால்) இதை வைத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னை யார் பார்க்க வேண்டும் என்றும் தன்னிடத்தில் யார் வர வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்களுக்குப் பால் புகட்டும் படி தனது சகோதர, சகோதரிகளின் மகள்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர் பெரியவராக இருந்தால் ஐந்து முறை (பால் குடித்துவிட்டு) தன்னிடத்தில் வரும் படி (கூறினார்கள்). மக்களில் யாருக்கும் தொட்டிலில் பால் புகட்டாமல் இவ்வாறு பால் புகட்டி தங்களிடத்தில் வர வைப்பதை உம்மு சலமாவும் நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களும் நாடவில்லை. அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக (இதன் விளக்கம்) எங்களுக்குத் தெரியாது. மக்களுக்கன்றி ஸாலிமுக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அளித்த சலுகையாக இச்சட்டம் இருக்கக் கூடும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் சுபைர்

நூல்: அபூதாவூத் 1764

நபி (ஸல்) அவர்கள் ஸாலிமுக்கு மட்டும் இச்சலுகையை வழங்கினார்கள் என நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உறுதிப்படக் கூறியதாக எந்த வாசகமும் மேலுள்ள ஹதீஸில் இடம் பெறவில்லை. மாறாக, “எங்களுக்குத் தெரியவில்லை; இது ஸாலிமுக்கு மட்டும் உரிய சட்டமாக இருக்கக் கூடும்’ என்று யூகமாகக் கூறியதாகத் தான் வந்துள்ளது.

ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களோ, இச்சட்டம் பொதுவானது என்பதை யூகமாகக் கூறாமல் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தியும் காட்டியுள்ளதாக இச்செய்தி கூறுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் சரி காணும் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் நபியவர்களின் ஏனைய மனைவிமார்கள் கூறியுள்ள யூகத்தை விட்டு விட்டு, பொதுவான சட்டம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்திக் காட்டிய ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறையை ஏற்பதே சரியானதாகும்.

ஏனென்றால் உறுதியான கூற்றை ஏற்க வேண்டுமா? அல்லது யூகத்தை ஏற்க வேண்டுமா? என்று வரும் போது உறுதியாகக் கூறும் நபரின் தகவலை ஏற்பது தான் அறிவுடமை.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டிருப்பதால் இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இந்தச் சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்ற வாதிப்பவர்கள், இதைச் சான்றாகக் காட்டுவதால் இந்த ஹதீஸில் அவர்களது வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை, மாறாக அவர்களுக்கு எதிரான கருத்தே உள்ளது என்று சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஹதீஸைக் கூறியுள்ளோம்.

இதுவும் இட்டுக்கட்டப்பட்டது என்பதே நமது கருத்து.

இச்சட்டம் சம்பந்தமாக உம்மு ஸலமா மற்றும் ஆயிஷா (ரலி) ஆகிய இருவருக்கிடையில் விவாதம் நடந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. அதைக் கவனித்தால் பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டி பால்குடி உறவை ஏற்படுத்தலாம் என்ற சட்டம் அனைவருக்கும் உரியது என்ற முடிவையே இவர்கள் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், “விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்கள் வீட்டிற்குள் வருகிறானே! ஆனால் அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்ப மாட்டேன்” என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அபூ ஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் என் வீட்டிற்குள் வருகிறார். அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் அபூ ஹுதைஃபாவின் மனதில் அதிருப்தி நிலவுகிறதுஎன்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்து விடு. (இதனால் பால்குடி உறவு ஏற்பட்டு) அவர் உன் வீட்டிற்கு வரலாம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் உம்மி ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 2881

பெரியவருக்குப் பால் புகட்டுவதை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மறுக்கிறார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைக் காட்டி, “அல்லாஹ்வின் தூதரிடத்தில் முன்மாதிரி இல்லையா?’ என்று கேட்டு இச்சட்டத்தை எல்லோரும் கடைப்பிடிக்கலாம் என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தொடுத்த கேள்விக்கு உம்மு ஸலமா (ரலி) அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இவ்வாறு இந்தச் செய்தி கூறுகிறது.

ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுவது தான் நபிவழி என்றால் உம்மு ஸலமா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வாதத்திற்கு எந்தவிதமான மறுப்பும் தராமல் ஏன் அமைதியாக இருந்தார்கள்?

ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மு ஸலமாவை நோக்கி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா?” என்று கேட்ட கேள்விக்கு, ஸாலிமுக்கு மட்டும் உரியது என இன்றைக்கு வாதிக்கும் இவர்களும் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.

இமாம் அல்பானீ அவர்களும், இப்னு ஹஸ்ம் அவர்களும் ஸாலிமுடைய இந்த ஹதீஸை மையமாக வைத்து, பெரியவருக்குப் பால் புகட்டும் இச்சட்டத்தைப் பொதுவானது என்றும் நேரடியாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பால் குடித்து பால்குடி உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்கள்.

அதிக எண்ணிக்கை ஆதாரமாகாது

ஆயிஷாவைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறுவதால் அதிகமானவர்கள் சொல்கின்ற கருத்தையே ஏற்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

ஒரு சம்பவத்தை, ஒரு செயலைப் பார்த்த அல்லது ஒரு தகவலைக் கேட்ட நான்கு பேர் ஒரு விதமாக அறிவிக்கும் போது, ஒருவர் மட்டும் அதற்கு முரணாக அறிவித்தால் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்த்து, பெரும்பான்மையினர் அறிவிப்பது தான் சரியானது என்று முடிவு செய்யலாம்.

உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் கைகளை உயர்த்த மாட்டார்கள் என்று பலர் அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் கைகளை உயர்த்தினார்கள் என்று அறிவிக்கிறார். இதில் பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டு, ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதை விட்டு விடலாம். ஏனென்றால் அதிகமானவர்கள் பார்த்ததில் தவறு ஏற்படுவதை விட, ஒருவர் மட்டும் மாற்றமாக அறிவிப்பதால் அவர் பார்த்ததில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் இவ்வாறு முடிவெடுக்கலாம்.

ஆனால் ஒரு ஹதீஸைச் சிந்தித்து அதிலிருந்து ஒரு சட்டத்தைப் பெறும் விஷயத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்க முடியாது. ஒரு ஹதீஸிலிருந்து பத்து பேர் ஒரு சட்டம் எடுக்கிறார்கள். ஒருவர் மட்டும் அதற்கு மாற்றமாக வேறொரு சட்டத்தை எடுக்கிறார் என்றால் இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்க முடியாது. ஏனென்றால் சிந்தித்து விளங்கும் விஷயத்தில் அந்தப் பத்து பேரின் விளக்கத்தை விட, இந்த ஒருவரின் விளக்கம் சரியானதாக இருக்க வாய்ப்புள்ளது.

எனவே பெரும்பான்மையினர் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தகவலுக்கு உரிய விதி. சிந்தித்து விளங்கும் விஷயங்களுக்கானது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டத்தைத் தமது யூகமாகச் சொல்லாமல் இது தான் நபிவழி என்று உறுதி செய்கிறார்கள். எனவே இங்கு அதிகமானவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆயிஷா (ரலி) அவர்களும் மற்ற மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸைப் பற்றிய ஞானத்தில் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்றால் இந்த வாதத்தை முன் வைக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார் களை விட ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க விஷயத்தில் மிகச் சிறந்த தனித்துவத்தைப் பெற்றிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் அதிக ஹதீஸை அறிவித்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் தான். ஸஹாபாக்கள் யாருக்கும் தெரியாத சட்டங்களைக் கூட ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸைக் கூறி விளக்கியுள்ளார்கள். அபூஹுரைரா, உமர், இப்னு உமர் போன்ற பெரும் நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களில் குறையைக் கண்டு பிடித்து சரி செய்தவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஹதீஸைச் சொல்லும் போது அதில் குறுக்கு விசாரணை செய்து துல்லியமாக விளங்கிக் கொண்டவர்கள். இவ்வளவு பெரிய மேதையாகத் திகழ்ந்த ஆயிஷா (ரலி) அவர்கள், ஸாலிமுடைய சம்பவம் பொதுவானது என்று கூறியதாக வரும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதிகமான ஆட்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்தை எழுப்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்!

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

மாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்

அபூமுஹம்மத்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. “மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்” என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள் மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம்.

மத்ஹபுகள் மீது எந்த அளவுக்கு வெறியூட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதற்கு மத்ஹபு நூல்கள் தரும் வாக்குமூலத்தைப் பாருங்கள்!

யார் தமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே அபூஹனீபாவை ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவர் அஞ்சத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன் என்று முஸாபிர் என்பார் கூறியுள்ளார்.

நூல்: துர்ருல் முக்தார்

பாகம்: 1, பக்கம்: 48

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்று சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள் எல்லாம் தங்களின் நிலை என்னவாகுமோ? தங்களிடம் முனாஃபிக் தனம் இருக்குமோ என்று அஞ்சியுள்ளனர். தங்களுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் நபி (ஸல்) அவர்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று இறுமாப்புடன் அவர்கள் நடந்து கொண்டதில்லை.

ஆனால் அபூஹனீபாவைக் கேடயமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எதற்கும் அஞ்சத் தேவையில்லையாம். மத்ஹபு வெறி இவர்களை எங்கே கொண்டு செல்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

அபூஹனீபா நல்லவராக இருக்கலாம்; அவருக்கு அல்லாஹ் மறுமையில் நல்ல அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கிறோம். ஆனால் “அபூஹனீஃபா, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்; அவர் இறைவனின் அன்பைப் பெற்று விட்டார்” என்று உறுதி கூற முடியுமா? மறுமையில் அவரைப் பற்றி அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன் அந்தத் தீர்ப்பை நாம் வழங்க முடியுமா?

அபூஹனீஃபா அவர்களின் நிலையே என்னவென்று தெரியாத போது, அல்லாஹ்வுக்கும் தமக்குமிடையே அவரைக் கேடயமாகப் பயன்படுத்துவோம் என்று கூறுவோர் கொஞ்சமாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?

இவர்களின் மத்ஹபு வெறிக்கு உதாரணமாக, அதே நூலில் காணப்படும் இன்னொரு தத்துவத்தைப் பாருங்கள்.

மறுமையில் இறைவனின் திருப்தியைப் பெற நான் தயாரித்து வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும், அபூஹனீபாவின் மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும்.

நபி (ஸல்) அவர்களின் மார்க்கம் இவர்களுக்குப் போதாதாம். அத்துடன் அபூஹனீபாவின் மத்ஹபையும் நம்பியாக வேண்டுமாம். நபித்தோழர்களில் யாரும் இந்த மத்ஹபுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தை மட்டுமே மறுமைக்காகத் தயாரித்து வைத்திருந்தனர். அவர்களெல்லாம் இறைவனுடைய திருப்தியைப் பெறுவது சாத்தியமில்லை என்கிறது இந்த நூல்.

முஹம்மது (ஸல்) அவர்களது மார்க்கத்துடன் இன்னொரு மார்க்கத்தையும் கற்பனை செய்வதன் மூலம் அபூஹனீபாவை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாக ஆக்கி விட்டனர்.

இத்துடன் நிற்கவில்லை! அல்லாஹ்வுடைய தூதரை விடவும் அபூஹனீபாவை உயர்வானவராகச் சித்தரித்துக் காட்டும் திமிரான வாசகங்களையும் மத்ஹபு நூற்களில் நாம் காணலாம்.

“ஆதம் (அலை) என் மூலம் பெருமையடைந்தார். நான் எனது சமுதாயத்தில் தோன்றும் ஒரு மனிதர் மூலம் பெருமையடைவேன். அவரது இயற்பெயர் நுஃமான். அவரது சிறப்புப் பெயர் அபூஹனீபா. அவர் எனது சமுதாயத்தின் விளக்காவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவ்வாறு துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.

இதில் அடங்கியுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.

என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 108, 1291

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, நபியவர்கள் மீது இட்டுக்கட்டும் துணிவை இந்த மத்ஹபு வெறி ஏற்படுத்தி விட்டது.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினால் அதை அறிவித்தவர் யார்? அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா? இது இடம் பெற்றுள்ள ஹதீஸ் நூல் எது? இப்படி எந்த விபரமும் இல்லை.

இப்னுல் ஜவ்ஸீ போன்றவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி” என்று தக்க காரணத்துடன் இனம் காட்டியுள்ளனர்.

“இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுவது மத்ஹபு வெறியாகும்” என்று துர்ருல் முக்தாரில் தொடர்ந்து கூறப் பட்டுள்ளது. மத்ஹபு வெறியில் ஊறிப் போனவர்கள், அதைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டுவது கொடுமையிலும் கொடுமை!

அறிவிப்பாளர் தொடரை விட்டு விடுவோம். இதன் கருத்தைச் சிந்தித்தால் கூட இது நபியவர்களை மட்டம் தட்டுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை அறிய முடியும்.

ஆதம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடைவதற்குரிய எல்லாத் தகுதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு என்று கூறலாம். ஆனால் அபூஹனீபா மூலமாக நபி (ஸல்) அவர்கள் பெருமையடைவார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறப்புக்குரியவரா?

இந்த மத்ஹபை ஏற்றால், இந்த நூலில் எழுதப்பட்ட சட்டங்களை நம்பினால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று ஈமான் கொண்டதாக ஆகாதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபை உருவாக்கியவர்களின் நோக்கம் இது தான். இஸ்லாத்தின் எதிரிகள் செய்த சூழ்ச்சியே மத்ஹபுகள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று போதிக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டதால் தான் இதைப் பயின்ற மவ்லவிமார்கள், மத்ஹபு வெறியிலிருந்து விடுபட மறுக்கிறார்கள். தெளிவான நபிவழியை எடுத்துக் காட்டிய பின்னரும் அதற்கு முரணான மத்ஹபுச் சட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

ஈமானுக்கு வேட்டு வைக்கும் மத்ஹபு மாயையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

————————————————————————————————————————————————

அபூபக்ர் (ரலி) வரலாறு – தொடர் – 35

முழுமையடைந்த முன்னறிவிப்பு

எம். ஷம்சுல்லுஹா

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றதுஎன்று பதிலளித்தேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் ஹீராவிலிருந்து பயணித்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூவலங்கள் வெற்றி கொள்ளப் படுவதைப் பார்ப்பாய்என்று சொன்னார்கள்.

நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம்(ரலி)

நூல்: புகாரி 3595

ஹீரா வெற்றி கொள்ளப்பட்டதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு இங்கே நிறைவேறி விடுகின்றது. அரபு நாடுகளுக்கு அப்பால் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்த முதல் தலைநகரம் ஹீரா தான்.

இந்தத் தலைநகர் இஸ்லாமிய ஆட்சிக்குக் கீழ் வந்த பிறகு காலித் ஓராண்டு காலம் ஒரே இடத்தில் உறைய நேரிட்டது. இது அவருக்குப் பெரும் சடைவையும் சலிப்பையும் ஏற்படுத்தியது.

வாள் சுழற்றிய வலிமை மிக்க வீரருக்கு ஓராண்டு காலம் வாளாவிருந்தது பெரும் வருத்தத்தை அளித்தது. இதற்குக் காரணம் என்ன?

ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) ஆரம்பத்தில் இரு படைகளை இராக்கிற்கு அனுப்பி வைத்தார்கள். ஒரு படையின் தளபதி காலித் பின் வலீத்! மற்றொரு படையின் தளபதி இயாள் பின் கனம்!

இராக்கின் கிழக்குப் புறமாக காலித் வர வேண்டும்; இராக்கின் மேற்குப் புறமாக இயாள் பின் கனம் வர வேண்டும். இவ்விருவரில் யார் இராக்கிற்கு முதலில் வருகிறாரோ அவர் தான் மற்றவருக்குத் தலைவர் ஆவார். அது மட்டுமின்றி, இயாள் வந்த பின் இருவருமாக இணைந்து பாரசீகத்தின் ஆயுத பலத்தைத் தகர்த்தெறிய வேண்டும்.

பாரசீகப் படை பலத்தை விட்டும் ஹீரா முழுமையாகப் பாதுகாப்புப் பெற்று விட்டது என்ற நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் தான் பாரசீகத்தின் பிடியிலுள்ள அடுத்த நகரத்தைத் தாக்கத் துவங்க வேண்டும். இது ஆட்சித் தலைவரின் கட்டளை!

கலீஃபாவின் கட்டளைக்கேற்ப காலித் கீழ்ப் புறமாக இராக்கிற்கு வந்து பாரசீகத்தின் பிடியில் இருந்த பல நகரங்களை வென்று விட்டார். அதன் முக்கியக் கட்டமாக ஹீராவையும் கைப்பற்றி விடுகின்றார்.

இது கூஃபாவிற்குத் தெற்கே மத்திய இராக்கின் தென்பகுதியில் அமைந்திருக்கும் நகரமாகும்.

இராக்கிற்கு வராத இயாள்

பாரசீகத்தின் பிடியில் இருக்கும் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மதாயினைப் பிடிப்பது காலிதின் இலக்கு! ஆனால் இயாள் வராததால் காலித், ஹீராவிலேயே அடைந்து கிடக்க வேண்டியதாயிற்று!

இயாள் ஓராண்டு காலமாக இராக் வராமல் போனதற்குக் காரணம், இராக் நோக்கிச் செல்லும் வழியில் தூமத்துல் ஜன்தல் என்ற பகுதியை இஸ்லாத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்படி இயாளுக்கு, கலீஃபா கட்டளையிட்டிருந்தார்கள்.

(ஏற்கனவே நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹிஜ்ரி 5ஆம் ஆண்டில், தூமத்துல் ஜன்தல் இஸ்லாமியக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நபியவர்கள் மரணித்த பின் அது தடம் மாறியது.)

இயாள், இராக்கிற்கு வரும் வழியில் தூமத்துல் ஜன்தலை முற்றுகையிட்டார்கள். அவ்வளவு தான்! முற்றுகையிட்டது முற்றுகையிட்டது தான்! அந்த முற்றுகையிலிருந்து ஓராண்டு காலம் வெளியேற முடியவில்லை.

இதனால் இயாள், இராக்கிற்கு வர முடியவில்லை. இராக்கில் அவருக்காக ஒதுக்கப்பட்ட பணியைக் கவனிக்க முடியாமல் போனது. அந்தப் பணிகளைக் காலிதே மேற்கொண்டு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பாரசீகத்தின் பிடியிலுள்ள மதாயின் உள்ளிட்ட பிற நகரங்களைக் காலித் கைப்பற்றுவதற்கு, ஆட்சித் தலைவரின் இந்தக் கட்டளை குறுக்கே வந்து நின்றது.

சிறையில் சிக்குண்ட சிங்கம்

தேனீயாய்ச் சுழன்று, தினவெடுத்த தோள்களில் வாட்கள் ஏந்தி தினந்தோறும் களங்கண்ட அல்லாஹ்வின் போர் வாள், அடலேறு காலித் பின் வலீதுக்கு ஹீரா ஒரு சிறையாக மாறி, அலுப்பை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தில் அந்தச் சிங்கம் உதிர்த்த வேதனை வார்த்தைகள் இதோ:

ஆட்சித் தலைவர் அபூபக்ர் அவர்கள் எனக்கு இப்படி ஒரு கட்டளை இட்டிருக்கக் கூடாது. இதன் காரணத்தால் ஓராண்டு காலமாக முற்றுகையில் முடங்கிக் கிடக்கும் இயாள் பின் கனமை என்னால் காப்பாற்ற முடியவில்லை.

ஹீரா வெற்றிக்குப் பிறகு, பாரசீகத்தின் பிடியிலுள்ள மற்ற நகரங்களை என்னால் கைப்பற்றவும் முடியவில்லை. (காரணம், இயாள் வராமல் அடுத்தக்கட்டத் தாக்குதல் கூடாது என்ற கலீபாவின் கட்டளை தான்) மொத்தத்தில் ஹீராவில் நான் தங்கிய இந்த ஆண்டு, ஒரு போர் வீரனுக்குரிய ஆண்டல்ல! ஒரு பெண்ணுக்குரிய ஆண்டு!

இது வீரர் காலித் பின் வலீதின் வேதனைக்குரிய வரிகள்!

தொடரும் இன்ஷா அல்லாஹ்

ஹீரா உடன்படிக்கையின் போது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு என்று ஒரு சம்பவம் தப்ரீயின் “தாரீக் அல் உமம் வல் மலீக்’, இப்னு கஸீரின் “அல்பிதாயா வந்நிஹாயா’ ஆகிய வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது.

ஹுவைல் அவர்கள் காலித் பின் வலீதிடம் வந்து கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹீராவைப் பற்றிக் கூற நான் செவியுற்றேன். அப்போது நான், “(பேரழகியான) கராமாவை எனக்கு அளியுங்கள்” என்று கோரினேன். “நீ பலவந்தமாக வெற்றி கொள்கின்ற போது அவள் உனக்குத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(எனவே அந்தப் பெண் தமக்கு வேண்டும் என்று ஹுவைல் காலிதிடம் கேட்டார்.)

நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியைச் செவிமடுத்த நபித் தோழர்களையும் காலிதிடம் சாட்சியம் அளிக்கச் செய்தார்.

இதனால் ஹீரா ஆட்சியாளர்களிடம் காலித் ஓர் உடன்படிக்கை செய்தார். அதன் அடிப்படையில் அந்தப் பெண்ணை ஹுவைலிடம் ஒப்படைக்கின்றார். அவளுக்கு ஏற்பட்ட இந்தத் துயரம் அவளுடைய ஊராரையும், குடும்பத்தினரையும் பெரிதும் பாதித்தது. இதை அவர்கள் பேரபாயமாகக் கருதினார்கள். ஆனால் அவளோ, “இதை ஒன்றும் நீங்கள் அபாயமாகக் கருத வேண்டாம். பொறுமையாக இருங்கள். 80 வயது நிரம்பிய என் விஷயத்தில் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவர் (ஹுவைல்) கடைந்தெடுத்த முட்டாள். என்னை வாலிபத்தில் பார்த்து விட்டு அந்த வாலிபம் இன்னும் நீடிக்கிறது என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறினாள். அவளை காலிதிடம் கொடுத்தார்கள். காலித் அவளை ஹுவைலிடம் கொடுத்தார்.

“உனக்கே நன்கு தெளிவாகத் தெரிகின்ற ஒரு கிழவியிடம் உனக்கு என்ன நாட்டம் இருக்கப் போகின்றது? என்னிடம் ஈட்டுத் தொகை வாங்கி விட்டு என்னை விடுவித்து விடு” என்று அவள் ஹுவைலிடம் கூறினாள். “நான் ஒரு முடிவெடுத்த பின்னர் தான் விடுவிப்பேன்” என்று ஹுவைல் கூறினார். “சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு” என்று அவள் கூறினாள்.

“ஆயிரம் திர்ஹத்தை விட குறைவாகப் பெற்றுக் கொண்டு உன்னை விடுவித்தால் நான் என் தாய்க்குப் பிறக்கவில்லை” என்று அவர் கூறினார். அதற்கு அவள், “ஆயிரமா?” என்று அவரை ஏமாற்றுவதற்காக அதிர்ச்சியாவது போல் நடித்து விட்டு, ஆயிரம் திர்ஹம் கொடுத்துத் தன்னை விடுவித்து விட்டு, தன் குடும்பத்திடம் திரும்பி விட்டாள்.

இதைக் கேள்விப்பட்ட நபித் தோழர்கள் (அதிகத் தொகை பெறுவற்கு வாய்ப்பிருந்தும் அவர் வேண்டுமென்றே அதை நழுவ விட்டு விட்டார் என்று எண்ணி) அவரைக் கடிந்து கொண்டனர்.

“ஆயிரத்தை விடவும் அதிகமான தொகை இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை” என்று ஹுவைல் பதிலளித்தார். மக்கள் அவரிடம் மறுப்பு தெரிவிக்கவே அவர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணி ஹுவைல் வாக்குவாதம் செய்தார். “இது தான் அதிகப்பட்சத் தொகை என்றே என்னுடைய எண்ணம் இருந்தது” என்று கூறினார். “தொகை ஆயிரத்தை விடவும் அதிகரிக்கும்” என்று அவர்கள் கூறினர்.

அப்போது காலித் தலையிட்டு, “நீ ஒன்றை நினைத்தால் அல்லாஹ் வேறொன்றை நாடி விட்டான். நாம் வெளிப்படையை எடுப்போம். நீ உண்மை கூறினாலும் சரி! பொய் சொன்னாலும் சரி! உன்னுடைய எண்ணத்துடனே உன்னை விட்டு விடுகிறோம்” என்று கூறினார்.

இந்தச் செய்தி வரலாற்று நூற்களில் மட்டுமின்றி பைஹகீ, தப்ரானீ, இப்னு ஹிப்பான் போன்ற ஹதீஸ் நூற்களிலும் வெவ்வேறு வார்த்தைகளில் பதிவாகியுள்ளது.

இந்தச் சீமாட்டியின் பெயர் கராமா என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அவளது பெயர் ஷீமா என்றும் குறிப்பிடப்படுகின்றது. அப்துல் மஸீஹின் சகோதரி என்றும் அப்துல் மஸீஹின் மகள் என்றும் இவளைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். அப்துல் மஸீஹ் என்பவர் ஹீராவின் தலைவர்களில் ஒருவராவார். அஸ்திய்யா என்ற புகைலா கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் இவர் பின்த் புகைலா (புகைலா மகள்) என்றும் அழைக்கப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பெண்ணைக் கோரியவர் ஹுவைல் அல்ல; குரைம் பின் அவ்ஸ் அத்தாயி என்பவர் தான் என்று ஃபுதூஹுல் புல்தான் என்ற வரலாற்று நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.

இப்படிப் பல்வேறு முரண்பாடுகளை உள்ளடக்கிய இந்தச் சம்பவம் காலிதின் ஹீரா உடன்படிக்கையுடன் வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது. மேலும் பைஹகீ, தப்ரானீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களிலும் இது இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தி இது தான்.

“நாயின் கடைவாய்ப் பற்கள் போன்று ஹீரா (கோட்டைகள்) எனக்குக் காட்சியளித்தது. அதை நீங்கள் வெற்றி கொள்வீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! பின்த் புகைலாவை எனக்கு வழங்குங்கள்” என்று கேட்டார். “அவள் உனக்குத் தான் சொந்தம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்படி (காலிதின் படையினர்) அவளை அவருக்கு வழங்கினர். அவளது சகோதரர் (அப்துல் மஸீஹ்) அவரிடம் வந்து, “அவளை விற்று விடுகிறீர்களா?” என்று கேட்டார். அவர் சரி என்றார். “நீங்கள் நினைத்ததை முடிவு செய்யுங்கள்” என்று அவளது சகோதரர் கூறினார். அதற்கு அவர், “ஆயிரம் திர்ஹம்” என்று கூறினார். “ஆயிரம் திர்ஹம் தந்து அவளை நான் பெற்றுக் கொண்டேன்” என்று அவளது சகோதரர் தெரிவித்தார். “நீ முப்பதாயிரம் என்று சொல்லியிருக்கக் கூடாதா?” என்று படையினர் அவரிடம் கேட்டதற்கு, “ஆயிரத்தை விடவும் அதிகத் தொகை உண்டா?” என்று அவர் திருப்பிக் கேட்டார்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்தம்(ரலி)

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும் பல்வேறு முரண்பாடுகளுடன் அறிவிக்கப் படுவதால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் இந்த ஹதீஸின் கருத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

ஹுவைல் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவே கேட்கிறார். ஆனால் அவர் அப்பெண்ணை அடையும் போது 80 வயதுக் கிழவியாக இருந்தாள் என்றும், அதனால் அவர் அவளை விற்று விட்டார் என்றும் கூறப்படுகின்றது. எனவே இதை ஒரு முழுமையடைந்த முன்னறிவிப்பு என்று கூற முடியாது.

இது போன்ற காரணங்களால் இந்தச் சம்பவத்தை, இந்தத் தொடரில் நாம் கொண்டு வரவில்லை.

————————————————————————————————————————————————

 மஹ்ஷர் மன்றத்தில்  உயர் தூதரின் உலமாக்களுக்கு எதிரான புகார்

அபூஜாஸிர்

அகில உலகத்தையும் திருத்துவதற்காக, நேர்வழியின் பக்கம் செலுத்துவதற்காக அருள்மிகு திருக்குர்ஆனை மனித குலத்திற்கு அல்லாஹ் வழங்கினான். இலக்கிய நயமிக்க, அதே சமயம் எளிமையான திருக்குர்ஆனை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கி ஓர் அற்புதத்தைப் படைத்து விட்டான்.

இந்த அற்புத வேதம், இன்று வரை உலக மக்களில் ஒரு பெருந்தொகையினரைத் தன் வசப்படுத்தி வைத்திருக்கின்றது.

திருக்குர்ஆன் இறங்கத் துவங்கிய காலத்திலேயே தனது ஈர்ப்பு சக்தியைக் காட்டத் துவங்கி விட்டது. இதைக் கண்ட அரபுலகம் நடுநடுங்க ஆரம்பித்து விட்டது. தங்களது புரோகித பீடத்தின் தலைமையைத் தலைகீழாகப் புரட்டி விடும் என்பதை மிகத் தெளிவாகக் கணித்த அரபுத் தலைவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களை பைத்தியம் என்றழைத்தனர்.

அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 15:6

பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?” என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 37:36

நபியவர்களை கவிஞர் என்றும் அவர்கள் கூறினர்.

“(இவர் ஒரு) கவிஞர். இவரது அழிவை எதிர்பார்க்கிறோம்என்று கூறுகிறார்களா?

அல்குர்ஆன் 52:3

சூனியம் பிடித்தவர் என்றும் மக்காவிலிருந்த இறை மறுப்பாளர்கள் கூறினர்.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 17:47

இவை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிராக அம்மக்கள் செய்த கடும் விமர்சனமும், வேதனைச் சொற்களுமாகும்.

மந்திரிக்க வந்தவரை மயக்கிய வேதம்

இப்படி நபி (ஸல்) அவர்களைப் பைத்தியம் என்று அம்மக்கள் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் போதே, பலர் இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதற்குக் காரணம் திருக்குர்ஆனின் ஈர்ப்பு சக்தி தான்.

லிமாத் என்பவர் மக்காவிற்கு வந்தார். அவர் “அஸ்த் ஷனூஆஎன்ற கோத்திரத்தைச் சார்ந்தவர். அவர் பைத்தியத்திற்கு மந்திரிப்பவராக இருந்தார். மக்காவாசிகளைச் சேர்ந்த அறிவிலிகள், முஹம்மது பைத்தியக்காரர் என்று கூறக் கேட்டிருந்தார். “நான் அந்த ஆளை (முஹம்மதை) பார்க்க நேர்ந்தால் அல்லாஹ் என் முன்னிலையில் அவருக்கு நிவாரணத்தை வழங்கி விடலாம்என்று சொன்னார்.

அவ்வாறே நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, “முஹம்மதே!  நான் பைத்தியத்திற்கு மந்திரிக்கிறேன். அல்லாஹ், தான் நாடியவருக்கு என் முன்னிலையில் நிவாரணம் அளிப்பான். உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

(இன்னல் ஹம்துலில்லாஹ்! நஃமதுஹு வநஸ்தயீனுஹு மன்(ய்) யஹ்திஹில்லாஹு ஃபலா முழில்ல லஹு. வமன்(ய்) யுழ்லில்ஹு ஃபலா ஹாதிய லஹு. வஅஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அம்மா பஅத்)

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். அல்லாஹ் வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்முஹம்மது அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன். நிற்க!என்று சொன்னார்கள்.

உங்களுடைய இந்த வார்த்தைகளை என்னிடம் மீண்டும் ஒரு முறை கூறுங்கள்என்று லிமாத் கூறினார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வார்த்தைகளை மீண்டும் திரும்பக் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை திரும்பக் கூறச் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறினார்கள்.

அப்போது லிமாத், “நான் சோதிடக்காரர்களின் சொல்லையும், சூனியக்காரர்களின் சொல்லையும், கவிஞர்களின் சொல்லையும் செவியுற்றிருக்கிறேன். ஆனால் உங்களுடைய இந்த வார்த்தைகளை நான் செவியுற்றதே இல்லை. இவை ஆழ்கடலைத் தொட்டு விட்டனஎன்று சொன்னார். அதன் பின்னர், “உங்கள் கையைத் தாருங்கள். உங்களிடம் நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உடன்படிக்கை செய்யப் போகிறேன்என்றார். நபி (ஸல்) அவர்கள், அவரிடம் உடன்படிக்கை செய்து கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “(இந்த உடன்படிக்கை) உன்னுடைய மக்களுக்கும் சேர்த்துத் தானே!என்று கேட்டார்கள். “என்னுடைய மக்களுக்கும் சேர்த்துத் தான்என்றார் லிமாத்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படையை (லிமாதும், அவரது மக்களும் வசிக்கும் வழியாக) அனுப்பினார்கள். அந்தப் படையினர் அவரது மக்களைத் தாண்டிச் சென்ற போது படையின் தளபதி படையினரிடம், “இம்மக்களிடமிருந்து எதையேனும் கைப்பற்றினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அப்படை வீரர்களில் ஒருவர், “சுத்தம் செய்யும் ஒரு பாத்திரத்தை இவர்களிடமிருந்து எடுத்தேன்என்று கூறினார். “அதைத் திரும்பக் கொடுங்கள். இவர்கள் லிமாதின் மக்கள்என்று தளபதி கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1436

இந்தச் சம்பவத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் இடம் பெற்றுள்ள நேரடியான வசனம் எதையும் கூறவில்லை. ஆனால் பல்வேறு குர்ஆன் வசனங்களின் தொகுப்பை ஓர் உரையாகக் கூறுகிறார்கள். அதற்கு இப்படியோர் ஈர்ப்பு சக்தி! குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபியவர்களின் வார்த்தைகளும் இறை அறிவிப்பு. அதனால் இப்படியோர் இழுப்பு சக்தி!

மந்திரிக்க வந்தவர் எழுந்திருக்க வில்லை. பைத்தியத்திற்கு வைத்தியம் செய்ய வந்தவர், வஹீயில் வயப்பட்டு விட்டார். இப்படி மக்களைத் தன் பக்கம் இழுத்துப் போடும் இந்த அபார ஆற்றல் மிக்க வரிகள் மக்கத்து மக்களின் மனங்களில் அலை மோத விடுவார்களா அந்நகரத்து காஃபிர்கள்? அதை அடக்குவதற்கு ஆர்த்தெழுந்து விட்டார்கள். இருப்பினும் அல்குர்ஆனின் அற்புதம் அவர்களை விட்டு வைக்கவில்லை. இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:

என் பெற்றோர் அபூபக்ரும், உம்மு ரூமானும் எனக்கு விவரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைப் பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. மக்காவில் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அபிசீனிய நாட்டை நோக்கி நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் எமன் செல்லும் வழியில் “பர்குல் கிமாத்என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அல்காரா எனும் குலத்தின் தலைவராவார். அவர், “அபூபக்ரே! எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார். “என் சமுதாயத்தினர் என்னை நாட்டை விட்டு வெளியே செல்லும் நிலைக்குத் தள்ளி விட்டனர். ஆகவே நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து நிம்மதியாக என் இறைவனை வணங்கப் போகிறேன்என்று அபூபக்ர் (ரலி) பதிலளித்தார்கள். அப்போது இப்னு தஃகினா, “அபூபக்ரே! தங்களைப் போன்றவர்கள் நாட்டை விட்டு தாமாகவும் வெளியேறக் கூடாது, மற்றவர்களால் வெறியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கின்றீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்.  சிரமப் படுவோரின் பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி புரிகிறீர்கள்என்று புகழ்ந்து கூறினார். பின்னர் “தங்களுக்கு நான் அடைக்கலம் தருகிறேன்.  நீங்கள் மக்காவிற்குத் திரும்பிச் சென்று உங்களது சொந்த ஊரிலேயே இறைவனை வணங்குங்கள்என்று கூறினார்.

இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) தமது அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்து விட்டு மக்காவிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃகினாவும் மக்காவிற்குத் திரும்பினார். அன்று மாலை இப்னு தஃகினா குறைஷிக் குல பிரமுகர்களைச் சந்தித்து அவர்களிடம், “அபூபக்ரைப் போன்றவர்கள் மக்காவிலிருந்து தாமாக வெளியேறுவதோ, அல்லது பிறரால் வெளியேற்றப் படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கக் கூடிய, உறவுகளைப் பேணி, சிரமப்படுவோரின் பாரங்களைச் சுமந்து, விருந்தினர்களை உபசரித்து சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி வரும் ஓர் ஒப்பற்ற மனிதரையா நாடு துறந்து வெளியேறிச் செல்லும் நிலைக்கு நீங்கள் உள்ளாக்குகிறீர்கள்?” என்று கேட்டார். 

அபூபக்ர் (ரலி)க்கு இப்னு தஃகினா அடைக்கலம் தருவதாகக் கூறியதை குரைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும்.  ஆனால் இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் இவரது வணக்க வழிபாடுகளைப் பார்த்து, குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்பதை அவரிடம் கூறிவிடுங்கள்என்று கூறினார்கள். 

அதன்படி அபூபக்ர் (ரலி) தமது இல்லத்திற்குள்ளேயே அல்லாஹ்வை வணங்கியும் தமது தொழுகையைப் பகிரங்கப்படுத்தாமலும் குர்ஆன் வசனங்களை வீட்டிற்கு வெளியே ஓதாமலும் இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மாற்று யோசனை தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.

அப்போது இணை வைப்பவர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி)யைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) குர்ஆன் ஓதும் போது தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழுபவர்களாக இருந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கை தங்களது இளகிய மனம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணை வைப்பவர்களான குரைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது. 

அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆள் அனுப்பினார்கள். அவர் குரைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்கு உள்ளேயே அவருடைய இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்ற நிபந்தனையோடு நீங்கள் அடைக்கலம் தந்தீர்கள். அதனால் தான் அவருக்கு நாங்கள் அடைக்கலம் அளித்தோம். அதை அவர் மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாகத் தொழுது கொண்டும், ஓதிக் கொண்டும் இருக்கிறார். எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகி விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் தனது வீட்டில் தனது இறைவனை வணங்குவதோடு நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்துவேன் என்றால் அவரிடம் உங்களது அடைக்கலப் பொறுப்பை திரும்பத் தருமாறு கேளுங்கள்.  ஏனென்றால் உங்களது உடன்பாட்டை முறித்து உங்களுக்கு மோசடி செய்வதை நாங்கள் வெறுக்கிறோம். அதே சமயம் அபூபக்ர் இவ்வாறு பகிரங்கமாகச் செய்வதையும் எங்களால் அனுமதிக்க முடியாதுஎன்று கூறினார்கள். 

இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி)யிடம் வந்து, “நான் எந்த நிபந்தனையின் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்! அல்லது எனது அடைக்கலப் பொறுப்பை திரும்பத் தந்து விடுங்கள். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதர் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பவில்லைஎன்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2297

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

————————————————————————————————————————————————

சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு

அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.சி.

நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹ‚ம் மஹ்தினி என்று ஆரம்பிக்கக் கூடிய துஆவை குனூத்தாக ஓதுவதாகும்.

இதை‘ஷாஃபி மத்ஹபினர் சுன்னத்தாகக் கருதி செய்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும். மேலும் சில ஸஹீஹான ஹதீஸ்களை முழுமையாக ஆராயாமல் அவற்றிலிருந்து தவறான முறையில் சட்டம் எடுத்துள்ளனர். இதற்கு அவர்கள் எடுத்துக் வைக்கக் கூடிய ஆதாரங்களையும் அதன் நிலைகளையும் காண்போம்.

ஆதாரம்: 1

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?” என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். “ருகூவுக்கு முன்பா? அல்லது பின்பா?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூவிற்குப் பின்புஎன விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத்

நூல்: நஸயீ  1061

மறுப்பு

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு குனூத் ஓதியதாக வந்துள்ளது. இது இன்றைக்கு‘ஷாஃபி மத்ஹபினர் ஓதிவரக் கூடிய குனூத் அல்ல. மாறாக இது சோதனையான காலகட்டங்களில் எதிரிகளுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் போது சிறிது காலம் மட்டுமே ஓதியுள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கக் கூடிய இந்த ஹதீஸின் அனைத்துப் பகுதிகளையும் நாம் விரிவாக ஆராய்ந்தால் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பின்பு ஓதப்பட்ட இந்த குனூத் சோதனைக் காலகட்டங்களில் ஓதியது தான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்என்றும் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 1201

ஆஸிம் அவர்கள் அறிவிக்கிறார்கள்: குனூத் பற்றி அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “குனூத் (நபி (ஸல்) காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று நான் கேட்டேன். அதற்கு, “ருகூவுக்கு முன்பு தான்என்று கூறினார்கள். “ருகூவிற்குப் பிறகு என்று நீங்கள் கூறியதாக ஒருவர் எனக்குக் கூறினாரேஎன்று அனஸ் (ரலி) இடம் கேட்டேன். “அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

நூல்: புகாரி 1002

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா?” என்று அனஸ் (ரலி) இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். “ருகூவுக்கு முன்பு ஓதி இருக்கிறார்களா?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூவிற்குப் பின்பு சிறிது காலம் (நபி (ஸல்) அவர்கள்) குனூத் ஓதினார்கள்என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத்

நூல்: புகாரி 1001

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதியுள்ளார்கள். அதுவும் ஒரு மாத காலம் தான் ஓதியுள்ளார்கள். ஷாஃபி மத்ஹபினர் சுபுஹ் தொழுகையில் ஓதக் கூடிய குனூத் சபித்தலுக்குரியதல்ல. மேலும் அதனை நிரந்தரமாகச் செய்து வருகின்றனர். எனவே மேற்கண்ட ஹதீஸில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு வாதத்திற்கு சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸை வைத்து ஷாஃபி மத்ஹபினர் ஆதாரம் எடுத்தாலும் அவர்கள் சுபுஹ் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து தொழுகையிலும் ஓத வேண்டும்.

ஏனெனில் சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்த குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்துத் தொழுகையிலும் ஓதியுள்ளார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.

நூல்: புகாரி 798, 1004

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்குச் சார்பாகவும் (கொடுஞ் செயல் புரிந்த) இறை மறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.

நூல்: முஸ்லிம் 1198

இரண்டாவது ஆதாரம்

சுபுஹ் தொழுகையில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு இரண்டாவது ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்து வைக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்

அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)

நூல்: தாரமி 1549, அஹ்மத் 17913

மறுப்பு

மேற்கண்ட ஹதீஸ‚ம் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில்  ஓதி வருகின்ற குனூத்திற்கு ஆதாரமானதல்ல. பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிக்கின்ற மேற்கண்ட ஹதீஸில் சுப்ஹ் தொழுகை என்று மட்டும் வந்திருந்தாலும் அவர்கள் வழியாக வருகின்ற அதிகமான அறிவிப்புகளில் நபியவர்கள் ஃபஜ்ருடன் சேர்த்து  மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓதியதாகவே வந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1207, 1208

இன்னும் பல நூல்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

“நபியவர்கள் ஃபஜ்ரிலும், மஃரிபிலும் குனூத் ஓதினார்கள்” என்று பராஉ பின் ஆசிப் (ரலி) அறிவிப்பதிலிருந்தே இது சோதனைக் காலத்தில் ஓதுகின்ற பிரார்த்தனை தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு வாதத்திற்கு மேற்கண்ட செய்தியிலிருந்து சுப்ஹில் குனூத் ஓதலாம் என்று வைத்துக் கொண்டாலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் ஓத வேண்டும். ஆனால் நடைமுறையில் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மேற்கண்ட செய்தியிலும் ஷாஃபி மத்ஹபினர் நடைமுறையில் சுப்ஹில் ஓதி வரும் குனூத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மூன்றாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். அதில் (பிஃரு மஊனாவில் தன்னுடைய தோழர்களைக் கொன்ற) முஷ்ரிகீன்களைச் சபித்து பிரார்த்தித்தார்கள். பின்னர் அதனை விட்டு விட்டார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

மேற்கண்ட செய்தி அஹ்மத், தாரகுத்னீ, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக், அஸ்ஸ‚னனுல் குப்ரா, அஸ்ஸ‚னனுஸ் ஸ‚ஃரா, மஃரிஃபதுல் ஆஸார் வஸ்ஸ‚னன் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸின் முதல் பகுதி புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம் பெற்றுள்ளது. ஆனால் சுப்ஹ‚த் தொழுகையில் அவர்கள் மரணிக்கின்ற வரை குனூத் ஓதிக் கொண்டே தான் இருந்தார்கள் என்ற இரண்டாவது பகுதி நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை

இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் அபூ ஜஃபர் அர்ராஸி என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஏற்கத் தகுந்தவை அல்ல. இவரைப் பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இமாம் அஹ்மத் மற்றும் நஸயீ ஆகியோர் “இவர் உறுதியானவர் இல்லை’ என்று கூறியுள்ளனர். மேலும் அபூ ஜஃபர் அர்ராஸி ஹதீஸ்களில் மூளை குழம்பியவர் என அஹ்மத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறிழைப்பவர் என அபூசுர்ஆ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மூளை குழம்பி விட்டார் என அலீ இப்னுல் மதீனி கூறியுள்ளார். இவருடைய செய்தியில் பலவீனம் உள்ளது. நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் ஹதீஸ்களில் உறுதியானவர் இல்லை என ஸாஜி கூறியுள்ளார்.

“இவர் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கத் தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர். இவர் உறுதியானவர்களின் அறிவிப்புக்கு ஒத்ததாக அறிவிப்பவற்றைத் தவிர மற்றவற்றை ஆதாரமாக எடுப்பது கூடாது; மேலும் நம்பகமானவர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிப்பதை துணைச் சான்றாகக் கூட எடுப்பது கூடாது” என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இவர் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என ஃபலாஸ் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் மோசமான மனனத் தன்மை கொண்டவர் என இப்னு ஹிராஷ் கூறியுள்ளார்.

இதே செய்தி அம்ரு பின் உபைத் என்பார் வழியாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுபவர்களாகவே இருந்தார்கள். நான் அபூபக்கர் சித்தீக் பின்னால் தொழுதிருக்கிறேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாவே இருந்து வந்தார்கள். நான் உமர் பின் கத்தாப் பின்னால் தொழுதிருக்கின்றேன். அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றுகின்ற வரை சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் குனூத் ஓதுபவர்களாகவே இருந்து வந்தார்கள்.

அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக்(ரலி)

மேற்கண்ட செய்தி ஒரு சில வார்த்தைகள் கூடுதல் குறைவுடன் பைஹகீ, தாரகுத்னீ, ஷரஹ் மஆனில் ஆஸார் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான அறிவிப்பாகும்.

இச்செய்தியை அறிவிக்கக் கூடிய அம்ரு பின் உபைத் என்பார் பொய்யர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

அம்ரு பின் உபைத் ஹதீஸ்களில் பொய்யுரைப்பவராக இருந்தார் என யூனுஸ் கூறியுள்ளார்.

நான் அம்ர் பின் உபைத் இடமிருந்து எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். இவர் அனஸ் அவர்களின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவராக இருந்தார் என ஹுமைத் கூறியுள்ளார்.

பக்ர் பின் ஹும்ரான் என்பவர் கூறுகிறார்: நாங்கள் இப்னு அவ்ன் என்பாரிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் ஒரு சட்டத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கவர் எனக்குத் தெரியாது என்று கூறினார். அதற்கவர், “ஹஸன் அவர்களிடமிருந்து அம்ருப்னு உபைத் இவ்வாறு கூறியுள்ளாரே’ என்று கேட்ட போது, “எங்களுக்கும் அம்ரு பின் உபைத்திற்கும் என்ன சம்பந்தம்? அவரோ ஹஸன் மீது பொய்யுரைப்பவராக இருந்தார்’ என இப்னு அவ்ன் கூறினார்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக எந்த ஒன்றிலும் நான் அம்ரு பின் உபைத்தை உண்மையாளராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என மதர் என்பவர் கூறியுள்ளார்.

யஹ்யா மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் அம்ர் பின் உபைத்திடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார்.

அம்ரு பின் உபைதிடமிருந்து எதையும் அறிவிப்பதற்குத் தகுதியானவராக இல்லை என அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.

அம்ரு பின் உபைத் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என்று யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார்.

அம்ர் பின் உபைத் ஹதீஸ் துறையில் விடப்படக்கூடியவர். பித்அத்தான அனாச்சாரங்களுக்குச் சொந்தக்காரர் என அம்ருப்னு அலீ கூறியுள்ளார். (அல்ஜரஹ் வ தஃதீல்)

நான் அம்ரு பின் உபைதைச் சந்தித்தேன் அவர் ஒரு ஹதீஸின் மீது என்னிடம் சத்தியம் செய்தார். அவர் பொய்யர் என்பதை நான் அறிந்து கொண்டேன் என வர்ராக் கூறியுள்ளார். (தாரீகுல் கபீர்)

இன்னும் சில அறிவிப்புகளில் இவருடைய மாணவரான இஸ்மாயில் பின் முஸ்லிம் அல்மக்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.

யஹ்யா பின் கத்தான் அவர்களிடம் இஸ்மாயீல் மக்கீயைப் பற்றி கேட்கப்பட்ட போது அவர் மூளை குழம்பியவராகவே இருந்து வந்தார். ஒரே ஹதீஸை மூன்று விதங்களில் எங்களுக்கு அறிவிப்பார் என கூறினார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும் என அஹ்மத் கூறியுள்ளார். இஸ்மாயில் அல்மக்கீ ஒரு பொருட்டாகக் கொள்ளத் தகுந்தவரில்லை என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். நான் இவருடைய ஹதீஸ்களை எழுத மாட்டேன்; இவரைப் பற்றி என்னுடைய தந்தையிடம் கேட்டேன். இவர் ஹதீஸ்களில் பலவீனமானர், குழப்பக் கூடியவர் என்று என் தந்தை கூறினார் என இப்னுல் மதனீ கூறியுள்ளார். (அல் ஜரஹ் வதஃதீல்)

இன்னும் பல அறிஞர்கள் இவரைப் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களைக் கூறியுள்ளனர்.

மேலும் இதே செய்தியை அனஸ் அவர்களிடமிருந்து அபூ ஹ‚சைன் என்பவர் அறிவிப்பதாக அத்தஹ்கீக் ஃபீ அஹாதீஸில் ஹிலாஃப் என்ற நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியிலும் கைஸ் பின் ரபீஉ என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவர் எதற்கும் தகுதியானவர் இல்லை என யஹ்யா கூறியுள்ளார். இவர் ஹதீஸ்களில் அதிகம் தவறிழைக்கக் கூடியவர்; மேலும் நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என அஹ்மத் கூறியுள்ளார். மேலும் இவருடைய மாணவராக அம்ரு பின் அய்யூப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்வதற்கு தகுதியானவரில்லை என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

மேலும் தீனார் பின் அப்தில்லாஹ் என்பவரும் இதே செய்தியை அனஸ்  (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்து உள்ளதாக மேற்கண்ட நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தீனார் பின் அப்துல்லாஹ் என்பார் இட்டுக்கட்டக் கூடியவராவார். இவர் இட்டுக் கட்டப்பட்ட பல விஷயங்களை அனஸிடமிருந்து அறிவித்துள்ளார். குறை கூறுவதற்காக மட்டும் தான் இவருடைய கூற்றுக்களை நூல்களில் குறிப்பிட வேண்டும் என இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்.

எனவே, நபியவர்கள் மரணிக்கும் வரை சுபுஹில் குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிப்பதாக வரக் கூடிய செய்திகள் மிகப் பலவீனமாக இருக்கின்றன. அத்துடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஸஹீஹான ஹதீஸ் இதற்கு நேர் முரணான கருத்தைத் தருகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தைச் சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: இப்னு ஹுசைமா

ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத், சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும். இதைத் தவிர வேறு எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் ஸஹீஹானதாகும்.

எனவே நபியவர்கள் மரணிக்கும் வரை குனூத் ஓதினார்கள் என்று வரக் கூடிய செய்தி பலவீனமாக இருப்பதுடன் அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரக் கூடிய சரியான ஹதீஸிற்கு மாற்றமாகவும் இருப்பதால் அது அறவே ஆதாரத்திற்குத் தகுந்ததில்லை என்பது மேலும் தெளிவாகிறது.

நான்காவது ஆதாரம்

சுபுஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தியையும் எடுத்து வைக்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சுப்ஹு தொழுகையின் குனூத்தில் பிரார்த்திப்பதற்காக அல்லாஹும் மஹ்தினி ஃபீமன் ஹதய்த்த, வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வதவல்லனா ஃபீமன் தவல்லய்த்த வபாரிக்லனா ஃபீமா அஃதய்த்த வகினா ஷர்ர மா கலய்த்த, இன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க இன்னஹு லாயதில்லு மன் வாலய்த்த தபாரக்த ரப்பனா வதஆலய்த்த என்ற துஆவை எங்களுக்குக் கற்றுத் தருபவர்களாக இருந்தார்கள்.

இச்செய்தி ஸுனன் பைஹகி அல்குப்ரா, அபூ முகம்மது ஃபாகி,  முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.

இதனுடைய அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு ஜுரைஜ் என்ற அறிவிப்பாளரின் ஆசிரியராக அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்றே அறியப்படாதவர். அஃரஜ் என்ற புனைப் பெயரில் அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்று ஒரு அறிவிப்பாளர் இருக்கின்றார். அவர் நம்பமானவராவார். ஆனால் இச்செய்தியில் இடம்பெறக் கூடிய அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவரின் நிலை பற்றி தெரிய வேண்டிய அவசியமுள்ளது என இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யாரென்றே அறியப்படாதவர் வழியாக இச்செய்தி வருவதால் இது பலவீனம் என்பது உறுதியாகிறது.

மேலும் பைஹகியில் இடம் பெற்றுள்ள இச்செய்தியில் அப்துல் மஜீத் இப்னு அப்துல் அஸீஸ் என்ற மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இடம் பெறுகிறார். இவர் மனனத் தன்மையில் மோசமானவர் என ஹதீஸ் கலை வல்லுநர்களால் விமர்சிக்கப் பட்டுள்ளார்.

மேலும் இச்செய்தியை இப்னு ஜுரைஜிடமிருந்து அபூ ஸஃப்வான் அல் உமவி என்பவர் அறிவித்துள்ளார். அவர் இப்னு ஜுரைஜின் ஆசிரியராக அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் என்பவருக்கு பதிலாக அப்துல்லா பின் ஹுர்முஸ் என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இவருடைய நிலை அறியப்பட்டுள்ளது என்றாலும் இச்செய்தி ஸஹாபி விடுபட்டுள்ள முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும் என பைஹகி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த வரிசையும் பலவீனம் என்பது தெளிவாகிறது.

மேலும் இதே செய்தி பலமான அறிவிப்பாளர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவையனத்திலுமே அல்லாஹும் மஹ்தினி என்ற இத்துஆவை நபியவர்கள் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காக ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகவே வந்துள்ளது. எனவே பலமான இந்த அறிவிப்புக்கு மாற்றமாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளதால் அது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போது அல்லாஹும் மஹ்தினீ….. என்ற இத்துஆவை ஓதுவார்கள்

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

இச்செய்தி ஹாகிம் அவர்களின் முஸ்தத்ரக் என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இச்செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத மிகப் பலவீமான நிலையில் உள்ளதாகும். இதில் அப்துல்லாஹ் பின் ஸயீத் அல் முக்பிரீ என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை; மேலும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட வேண்டியவர் என அஹ்மத் பின் ஹன்பல், அம்ருப்னு அலீ ஆகியோர் கூறியுள்ளனர்.

இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என அஹ்மத் கூறியுள்ளார். ஒரு அவையில் இவருடைய பொய்மை எனக்கு வெளிப்பட்டது என யஹ்யா இப்னுல் கத்தான் கூறியுள்ளார். இவர் ஒரு பொருட்டானவரில்லை; இவருடைய ஹதீஸ்கள் எழுதப்பட மாட்டாது என யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார். இவர் கைவிடப்பட வேண்டியவர்; ஹதீஸ்களில் களவாடக் கூடியவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் வேண்டுமென்றே இதைச் செய்துள்ளார் என நமது உள்ளம் எண்ணுமளவிற்கு இவர் ஹதீஸ்களைப் புரட்டக் கூடியவர்; செய்திகளில் தவறிழைக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்)

எனவே மேற்கண்ட செய்தியும் மிகப் பலவீனமானதாகும்.

சுபுஹ் குனூத் தொடர்பாக வரக் கூடிய செய்திகள் அனைத்தும் பலவீனமாக உள்ளன. அத்துடன் பலமான, ஸஹீஹான ஹதீஸ்களுடன் நேரடியாக மோதும் வகையிலும் அமைந்துள்ளன.

என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி)யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்என விடையளித்தார்.

அறிவிப்பவர்: அபூ மாலிக் அஷ்ஜயீ

நூல்: திர்மிதி 368, இப்னு மாஜா 1231

எனவே தற்காலத்தவர் ஓதி வருகின்ற சுப்ஹ் குனூத் என்பது நபியவர்கள் காலத்திற்குப் பின் உருவாக்கப்பட்ட அனாச்சாரம் என்பது மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாகின்றது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவோ, அல்லது ஒரு கூட்டத்தை சபித்தோ பிரார்த்திக்கும் போது தவிர (வேறு எப்போதும்) குனூத் ஓத மாட்டார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: இப்னு ஹுசைமா

ஒரு கூட்டத்திற்கு ஆதரவாகவும் ஒரு கூட்டத்தைச் சபித்தும் ஓதுகின்ற குனூத் சோதனைக் கால கட்டத்தில் ஓதுகின்ற குனூத்தே ஆகும்.

இதைத் தவிர வேறு எப்போதும் நபியவர்கள் குனூத் ஓதியதில்லை என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதாகும்.

எனவே சுபுஹ் குனூத் என்பது விடப்பட வேண்டிய ஒரு பித்அத்தான காரியமாகும்.

பலவீனமாக இருந்தாலும், பொய்யர்கள் அறிவித்தாலும் அதை நான் பின்பற்றுவேன் என ஒருவர் கூறினால் அவருக்கு நபியவர்கள் கூறுகிறார்கள்:

பொய்யெனக் கருதப்படக் கூடிய ஒரு செய்தியை என்னிடமிருந்து ஒருவன் அறிவித்தால் அவன் பொய்யர்களில் ஒருவனாவான்.

நூல்: முஸ்லிம்

என் மீது யார் வேண்டுமென்றே இட்டுக் கட்டுகின்றாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.

நூல்: புகாரி

————————————————————————————————————————————————

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஒரு ஹெர்குலியன் பார்வை

எம். ஷம்சுல்லுஹா

மனித ஆற்றலுக்கு மேலான ஆற்றல் படைத்த ஒருவரை ரோமனில் “ஹெர்குலிஸ்” என்று குறிப்பிடுவர். இந்தப் பெயர் ரோமா புரியின் ஆட்சியளார்களுக்கும் பின்னர் வழங்கப் பெறலாயிற்று!

மிக ஆற்றல் மிக்க, வலிமை பொருந்திய, சாதனைப் படைப்புக்கும் ஹெர்குலியன் டாஸ்க் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல் வழக்காற்றின் அடிப்படையில் கீழே இடம் பெறும் ஹதீசுக்கு ஹெர்குலியன் பார்வை என்று குறிப்பிடப்படுகின்றது. ஹெர்குலிஸ் என்ற பெயர் அரபியில் ஹிர்கல் எனப்படுகின்றது.

இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு, புகாரியில் இடம் பெறும் நீண்ட ஹதீஸைப் பார்ப்போம். ஏகத்துவத்தின் பரிணாம வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள இந்த ஹதீஸை முழுமையாகக் காண்பது அவசியம்.

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும், குறைஷி இறை மறுப்பாளர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராக அபூ சுஃப்யானும் சென்றிருந்தார்.

பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், அபூ சுஃப்யானைத் தம்மிடம் அழைத்து வரும்படி  தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும்  தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக் கூறினார்.

அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறியதாவது:

(எங்களிடம்) மன்னர் “தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?” எனக் கேட்டார். “நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன்எனக் கூறினேன். உடனே மன்னர் (தம் அதிகாரியிடம்) “அவரை என் அருகே அழைத்து வாருங்கள்! அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்என்று ஆணையிட்டார்.

பின்னர் தம் மொழி பெயர்ப்பாளாரிடம் “நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானாகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்என ஆணையிட்டார்.

நான் பொய் கூறி விட்டேன் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பொய் உரைத்திருப்பேன்.

பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி: “உங்களில் அவரது குலம் எத்தகையது?” அதற்கு, “அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர்என்றேன். “இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?” என்று கேட்டார். இல்லை என்றேன். “இவரது முன்னோர்களில் எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன்.

அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?” என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். “அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?” என்று வினவினார். “அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்என்றேன். “அவரது மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?” என்று கேட்டார். நான் இல்லை என்றேன்.

அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?” என்றார். நான் இல்லை என்றேன். “அவர் வாக்கு மீறியது உண்டா?” என்றார். (இது வரை) இல்லை என்று சொல்லி விட்டு, “நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாதுஎன்றேன். அப்போதைக்கு (நபி (ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையை விட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை!

அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார். ஆம் என்றேன். “அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவுகள் எவ்வாறிருந்தன?” என்றார். “எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம்என்றேன். “அவர் உங்களுக்கு என்ன தான் போதிக்கிறார்?” என்று கேட்டார். “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம் விட்டு விடுங்கள்என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்என்றேன்.

மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது:

அவரது குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத் தூதர்களும் அப்படித் தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில் தான் அனுப்பப் பட்டுள்ளார்கள்.

உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இந்த வாதத்தைச் செய்திருந்தால் முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கின்றார் என்று நான் கூறியிருப்பேன்.

இவரது முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கின்றார்களா? என்று உம்மிடம் நான் கேட்ட போது இல்லை என்று சொன்னீர். இவரது முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருந்தால் தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று சொல்லியிருப்பேன்.

இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று கூறினீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணிய மாட்டார் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்.

மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றார்களா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தான் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தான் இறைத் தூதர்களைப் பின்பற்றுவோராய் இருந்துள்ளனர்.

அவரைப் பின்பற்றுகின்றவர்கள் அதிகரிக்கின்றார்களா? அல்லது குறைகின்றார்களா? என்று கேட்டேன். அவர்கள் அதிகரிக்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும் வரை அப்படித் தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும்.

அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கிறார்களா? என்று கேட்டேன். இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித் தான். இதயத்தில் நுழைந்து விட்ட இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது).

அவர் (எப்போதாவது) வாக்கு மீறியதுண்டா? என்று என நான் உம்மிடம் கேட்ட போது, இல்லை என்றீர். திருத்தூதர்கள் அப்படித் தான் வாக்கு மீற மாட்டார்கள்.

அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும், அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது என்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும், சிலை வணக்கத்தில் இருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும், தொழுகை, உண்மை, கற்பு நெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.

நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆட்சி செய்வார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத் தூதர் தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப் பட்டாவது அவரைச் சந்தித்து இருப்பேன். நான் அவருக்கு அருகே இருந்தால் அவரது பாதங்களை நான் கழுவி விடுவேன்

இவ்வாறு மன்னர் ஹெர்குலிஸ் கூறினார்.

புஸ்ராவின் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி (ஸல்) அவர்கள் கடிதம் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தைத் தம்மிடம் தருமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்..

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்கு-ஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக!  நிற்க!  இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)” என்று கூறப்பட்டிருந்தது.

மன்னர் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்து முடித்ததும் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமும் மிகுந்து, குரல்கள் உயர்ந்து கொண்டே போயின. நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். அப்போது என்னுடன் வந்தவர்களிடம், “ரோமர்களின் மன்னன் முஹம்மதைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அவரது காரியம் இப்போது மேலோங்கி விட்டதுஎன்று கூறினேன். (முஹம்மது நபி) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான்.

(எங்கள் மன்னர் அழைத்த காரணம் பற்றி) சிரியாவிலுள்ள கிறித்தவர்களின் தலைமைக் குருவும், ரோமாபுரியின் மன்னர் ஹெர்குலிஸின் அருமை நண்பரும் அல்அக்ஸா ஆலயத்தின் நிர்வாகியுமான இப்னு நாத்தூர் என்பார் கூறினார்.

மன்னர் அல் அக்ஸா ஆலயத்திற்கு வருகை தந்த போது ஒரு நாள் கவலை தோய்ந்த முகத்தினராகக் காணப்பட்டார். அப்போது அவரது அரசவைப் பிரமுகர்களில் சிலர் மன்னரிடம், “தங்களின் கவலை தோய்ந்த இந்தத் தோற்றம் எங்களுக்குக் கவலையைத் தருகிறதுஎன்று கூறினார்கள்.

ஹெர்குலிஸ் மன்னர் விண் கோள்களை ஆராய்ந்து சோதிடம் சொல்வதில் வல்லவராயிருந்தார். மன்னரின் கவலைக்குக் காரணம் என்னவென்று வினவியவர்களிடம் அவர், “இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றி விட்டதாக அறிந்தேன்என்று கூறி விட்டு, “இக்கால மக்களில் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கம் உடையவர் யார்?” என வினவினார்.

யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்குக் கடிதம் எழுதி, அங்குள்ள யூதர்களைக் கொன்று விடுமாறு கட்டளையிடுங்கள்என்றார்கள். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே நபி (ஸல்) அவர்களைப் பற்றிய தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் ஒரு மனிதரை “கஸ்ஸான்என்ற கோத்திரத்தின் குறுநில மன்னர் ஹெர்குலிஸிடம் அனுப்பியிருந்தார். அம்மனிதர் அவர் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தகவல்களைப் பெற்ற ஹெர்குலிஸ் “இவரை அழைத்துச் சென்று இவர் விருத்த சேதனம் செய்திருக்கிறாரா? இல்லையா? சோதியுங்கள்என்று ஆணையிட்டார். அவரை அழைத்துச் சென்று பரிசோதித்தவர்கள் அவர் விருத்த சேதனம் செய்திருப்பதாகக் கூறினார்கள். அவரிடம் அரபிகளின் வழக்கம் பற்றி மன்னர் விசாரித்த போது, “அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கம் உடையவர்கள் தாம்என்றார். உடனே ஹெர்குலிஸ் அவர் தாம் (முஹம்மத்) இக்காலத்தின் மன்னராவார்; அவர் தோன்றி விட்டார்என்று கூறினார்.

பின்னர் ரோமாபுரியிலிருந்த, தமக்கு நிகரான கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்த தம் நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு “ஹிம்ஸ்என்ற நகரத்திற்குப் பயணமானார். அவர் ஹிம்ஸுக்குப் போய் சேர்வதற்குள் பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் ஹெர்குலிஸின் கருத்துப்படியே இறைத்தூதரின் வருகை பற்றியும் அத்தூதர் இவர் தாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

(இதன் பிறகே மன்னர் எங்களைத் தமது அவைக்கு அழைத்தார். எங்களைச் சந்தித்த பின் நடந்ததாவது:)

ஹிம்ஸ் நகரிலிருந்த தம் கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமாபுரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் மன்னர் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் வாயில்களை எல்லாம் பூட்டி விடும்படி உத்தரவிட்டார். கோட்டையின் வாயில்கள் அடைக்கப்பட்டன. பின்னர் மன்னர் அப்பிரமுகர்கள் முன் தோன்றி, “ரோமாபுரியினரே! நீங்கள் வெற்றியும், நேர்வழியும் பெற வேண்டும் என்றும், உங்கள் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இந்த இறைத்தூதரை ஏற்றுக் கொள்ளுங்கள்என்று கூறினார்.

(இதைக் கேட்டவுடனே) காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டை வாசல்களை நோக்கி அவர்கள் வெருண்டோடினார்கள். வாசல் அருகில் சென்றதும் அவை தாளிடப்பட்டிருப்பதை அறிந்தார்கள். அவர்கள் வெருண்டோடியதையும் நபி (ஸல்) அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதையும் மன்னர் பார்த்ததும், “அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள்என்று (காவலர்களுக்குக்) கட்டளையிட்டார். (அவர்கள் திரும்பி வந்ததும்) “நீங்கள் உங்கள் மதத்தில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே நான் சற்று முன்னர் கூறிய வார்த்தைகளைக் கூறினேன். (இப்போது உங்கள் உறுதியை) சந்தேகமற அறிந்து கொண்டேன்என்று அவர் கூறியதும் அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தனர். அவரைப் பற்றித் திருப்தியுற்றார்கள். ஹெர்குலிஸ் மன்னரைப் பற்றிக் கிடைத்த கடைசித் தகவல் இதுவாகவே இருக்கிறதுஎன இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 7

இந்த ஹதீஸில் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் பல செய்திகள் உள்ளன. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி அவர் தனது கண்ணோட்டத்தில் ஓர் ஆய்வை மேற்கொள்கிறார். இஸ்லாம் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என்பதை அவர் மேற்கொண்ட ஆய்வு உணர்த்துகிறது. இந்த ஹெர்குலியன் பார்வையை நாம் நம்முடைய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பொருத்திப் பார்க்கிறோம்.

ஹெர்குலிஸ் மன்னரின் இந்த வார்த்தைகள் வேத வரிகள் கிடையாது. எனினும் சத்தியக் கருத்தை ஏற்றுக் கொள்வதற்குரிய அடிப்படை விதிகளை, அளவு கோலை அவர் தெரிவிக்கிறார். இது குர்ஆன், ஹதீசுக்கு ஒத்திருப்பதால் இந்த ஆய்வை நாம் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

நபி (ஸல்) அவர்களின் குலம், பண்புகள் போன்றவற்றை அவர் முதலில் ஆய்வு செய்கிறார். அதன் பின்னர் சத்தியத்தை அறிந்து கொள்ளும் பொதுவான ஆய்வுக்குள் வருகிறார்.

இக்கருத்தைப் பின்பற்றுபவர்கள் சாமானியர்களா? அல்லது சிறப்பு வாய்ந்தவர்களா? என்று ஹெர்குலிஸ் கேட்கிறார்.

சாமானியர்கள் தான் சத்தியக் கருத்தைப் பின்பற்றுவார்கள் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன் 11:27)

1980க்குப் பின்னால் தமிழகத்தில் தவ்ஹீதின் கால்கோள் நாட்டப் பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த ஏகத்துவத்தில் இணைபவர்கள் சாமானியர்கள் தான். செல்வாக்கு மிக்கவர்கள் அல்லர். பாட்டாளி வர்க்கத்தினர் தான். பணக்கார வர்க்கத்தினர் அல்லர். இன்று வரை இந்த நிலை தான் நீடிக்கின்றது. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஹெர்குலிஸின் அடுத்த ஆய்வு, இந்தக் கருத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கிறார்களா? அல்லது குறைகிறார்களா? என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை இந்தக் கருத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதை வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.

(அல்குர்ஆன் 9:32)

ஏகத்துவப் பிரச்சாரம் காலூன்றத் துவங்கியதிலிருந்து இன்று வரை எழுச்சியுடன் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்தச் சத்தியக் கருத்தில் மக்கள், கூட்டம் கூட்டமாக இணைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இந்தச் சத்தியக் கொள்கை நாளுக்கு நாள் இமாலய வளர்ச்சி அடைகின்றது என்பதை மாற்றுக் கூடாரத்தில் உள்ளவர்கள் கூட மறுக்க மாட்டார்கள்.

அடுத்த ஆய்வு, இந்தக் கருத்தை ஏற்றவர்கள் மதம் மாறுகின்றார்களா? என்பதாகும்.

ஈமான் ஒருவரின் இதயத்தில் இடம் பிடித்து விட்டால் இரும்புச் சீப்பு கொண்டு அவருடைய எலும்புக்கும், சதைக்கும் இடையில் செருகப்பட்டாலும் அவர் தனது மார்க்கத்தை விட்டு வெளியேறுவ தில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: புகாரி 3612)

நபி (ஸல்) அவர்களின் இந்தச் செய்தியைத் தான் ஹெர்குலிஸ் தமது கருத்தில் பிரதிபலிக்கின்றார்.

ஏகத்துவ வேடம் போட்ட நயவஞ்சகர்களைத் தவிர்த்து, வேறு யாரும் இந்தக் கொள்கையை விட்டு வெளியேறவில்லை; சுன்னத் வல் ஜமாஅத்தில் இணையவில்லை. ஆனால் அதே சமயம் சுன்னத் வல் ஜமாஅத் என்ற கூடாரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி ஏகத்துவத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள். அவ்வாறு அடியெடுத்து வைத்தவர்கள் அசைவதில்லை. அழுத்தமாகவே இருக்கின்றார்கள். நிரந்தரமாக நீடித்து நிற்கின்றார்கள்.

ஹெர்குலிஸ் மன்னரும், அபூ சுஃப்யானும் இந்த ஹதீஸில் முத்தாய்ப்பாகத் தெரிவிப்பது இது தான்.

  1. “எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆட்சி செய்வார்” என்று மன்னர் ஹெர்குலிஸ் கூறுகிறார்.

அவர் கூறிய படியே அவர் ஆட்சி செய்த பகுதிகள் அனைத்தும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தன.

  1. “(முஹம்மது நபி) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே இருந்து வந்தேன்” என்று அபூ சுஃப்யான் கூறுகிறார்.

மன்னருடைய கருத்து அபூ சுஃப்யானுடைய உள்ளத்திலும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இஸ்லாம் மாபெரும் சக்தியாகப் பரிணமிக்கும் என்று அவரும் கணிக்கிறார். அவ்விருவருடைய கணிப்பும் அப்படியே நடந்தேறுகிறது.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஒட்டு மொத்த தமிழகத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் தனது கொள்கை அடிப்படையில் தன் வசப்படுத்தி விடும் என்று தமிழக முஸ்லிம்கள் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ? ஆனால் தமிழக முஸ்லிம்களின் உள்ளங்களை தவ்ஹீத் ஜமாஅத் ஆட்சி செய்யப் போகின்றது என்று மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அரபுலக மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு, மக்கா வெற்றி கொள்ளப்படுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கு என்னமக்களுக்கு என்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம்.

அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தம்மை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக… அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தாருடன் விட்டு விடுங்கள்.  ஏனெனில் அவர்களை அவர் வென்று விட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றியான சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்…

அறிவிப்பவர்: அம்ர் பின் சலிமா (ரலி)

நூல்: புகாரி 4302

மக்கா வெற்றியைப் போன்ற ஒரு நிகழ்வைத் தான் தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கா வெற்றிக்கு நிகரான ஒரு நிகழ்வு இனி நிகழப் போவதில்லை. அதைப் பெறுவதற்கான போர்க்களங்கள் இங்கு இல்லை. இருப்பினும் தமிழக மக்கள் எதிர்பார்ப்பது ஒரு மக்கள் சக்தியைத் தான். ஜன சமுத்திரத்தைத் தான்.

மக்கள் இப்படியொரு மனிதக் கடலைச் சந்திக்கின்ற போது, அவர்களும் தங்களை இந்தத் தவ்ஹீதில் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் நிலை வெகு சீக்கிரமாக நிகழும். அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக!

————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு             தொடர் – 9

அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா

அபூஉஸாமா

ஷரீஅத்தில் முழுப் பிடிப்பும், பேணுதலும் கொண்ட ஒரே தரீக்கா என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த ஷாதுலிய்யாக்கள், மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுவன் மூலம் தாங்களும் ஷியாக்களின் வாரிசு என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விபரங்களைக் கடந்த இதழில் கண்டோம். தரீக்காக்களிலேயே மிகவும் கேடு கெட்ட தரீக்கா ஷாதுலிய்யா தரீக்கா என்பதைக் கீழ்க்காணும் விபரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தெளிவான மது ரசம் என்னும் ரகசிய ஞான பானத்தை நான் பருகி விட்டேன். சத்தியமாக நான் அதன் போதையில் உள்ளேன். என்னிடம் அதை எதிர்த்து வாதிப்பவர் எவருமில்லை.

அதை எனக்குப் புகட்டியவர் வேறு யாருமல்லன். நண்பன் (அல்லாஹ்) தான். போதை ஏறிய பின் நான் இப்பூவுலகில் பார்க்கும் போது, எங்கும் அவன் மட்டுமே பொதுவாக இலங்குவதைப் பார்க்கிறேன். வேறெதையும் நான் பார்க்கவில்லை.

எனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற் றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

இவை ஷாதுலிய்யா தரீக்காவின் அவ்ராது, பைத் மற்றும் மவ்லிதுத் தொகுப்புகள் என்று நூலில் 176ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள உளறல்களாகும்.

இலக்கிய போதையல்ல! யதார்த்த போதையே!

இந்த உளறல்களைக் கொட்டியிருப்பவரின் பெயர் முஹம்மது ஃபாஸி! இவர் தான் ஷாதுலிய்யா தரீக்காவின் முக்கியத் தூண்.

ஏதோ அல்லாஹ் அவருக்கு வழங்கிய ரகசிய ஞானத்தை, மது பானத்துடன் ஒப்பிட்டு இலக்கிய நடையில் பேசுகிறார் என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. இவர் யதார்த்தமாகவே தண்ணியடித்த போதையில் பேசுவது போன்று தான் பேசுகிறார். அல்லது புத்தி பேதலித்துப் போய் புலம்புகிறார்.

தண்ணியடித்தவனுக்குத் தான் தலை, கால் புரியாது. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாது. அதே நிலையை இவர் அடைந்து விட்டார் போல் தோன்றுகிறது.

ரகசிய ஞானம் எனும் மதுபானத்தை அருந்தி விட்டேன் என்று கூறி மறைவான ஞானம் தனக்கு வழங்கப்பட்டதாகப் பிதற்றுகின்றார்.

காணும் பொருள் எல்லாம் இவருக்குக் கடவுளாகத் தெரிகிறதாம். அல்லாஹ் ஒளியானவன் என்பதால் காணும் பொருளெல்லாம் ஒளியாகவே தெரிகின்றது.

இந்தக் கவிதை வரிகள் வரை, அல்லாஹ்வையும் தன்னையும் தனித்தனியாகத் தான் வைத்துப் பேசுகிறார்.

எனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.

இங்கு இவர் மெதுவாகத் தன்னை அல்லாஹ்வுடன் சங்கமிக்கச் செய்கிறார். தானும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்ற அத்வைதக் கருத்தை மெதுவாகத் திணிக்கிறார்.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

என்று கூறுவதன் மூலம், தானும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று தெளிவாகக் கூறி விடுகின்றார். இந்தக் கவிதை வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நல்ல, ஒரு புத்தி சுவாதீனமுள்ள, மறுமையில் நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லிம் இப்படிச் சொல்ல முடியுமா? ஒருவன் தன்னையே கடவுள் என்று கூறினால் அவனுக்கு என்ன தண்டனை? நரகம் தான் என்று கீழ்க்கண்ட வசனம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றது.

அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

அதனால் புத்தி சுவாதீனமுள்ள, சுய சிந்தனையுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவ்வாறு பேச மாட்டான்.

ஒன்று, இந்தப் பாஸி என்பவன் பைத்தியமாக இருக்க வேண்டும். அல்லது தண்ணியடித்திருக்க வேண்டும். அல்லது உண்மையிலேயே தன்னைக் கடவுளாகக் கருதியிருக்க வேண்டும்.

இவரது பக்தர்கள் வரைந்து தள்ளியிருக்கும் வரலாற்றுத் துணுக்குகளிலிருந்து பார்த்தால் இவர் பைத்தியக்காரராகத் தெரியவில்லை. தண்ணியடித்தவராகவும் தெரியவில்லை. எனவே, இந்தப் பாசி திட்டமிட்டு, தெரிந்து கொண்டே தன்னைக் கடவுளாக்கியிருக்கிறார். அதாவது, ஷியாக்களின் இமாம்களைப் போன்று இவரும் தன்னைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். மறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கூறுவதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங் கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர் களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்கள் ஆவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இப்போது மீண்டும் ஒரு முறை ஷாதுலிய்யாவின் வார்த்தைகளைப் படியுங்கள்.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

என்ன ஆணவமும், அகந்தையும் இருந்தால் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மலக்குகளுக்குத் தெரியாத ரகசியம்

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!என்று கேட்டான்.

நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்என்று அவர்கள் கூறினர்.

ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, “வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 2:31-33

வானங்களில், பூமியில் உள்ள ரகசியங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே தெரியும்; மலக்குகளுக்குக் கூட தெரியாது என்று அல்லாஹ் சொல்கிறான். இந்தப் பாசியோ தனக்கு அனைத்தும் தெரியும் என்று பெருமையடிக்கிறார்.

ஜின்களுக்கும் தெரியாது

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமேஎன்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:14

இறைத் தூதர்களுக்கும் தெரியாது

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

யாருக்கும் தெரியாத ரகசியம்

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 27:65

வானங்கள், பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.

வானத்திற்கு மேல் உள்ள ரகசியங்கள் எனப்படுபவை சாதாரணமான விஷயங்கள் அல்ல! அவற்றை எந்தவொரு சாதாரண மனிதனும் பார்க்க முடியாது. அதனால் தான் அல்லாஹ் இதைச் சிலாகித்துச் சொல்கிறான்.

தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.

அல்குர்ஆன் 53:10-18

இப்படிப்பட்ட மிகச் சிறப்பு  மிக்க அதிசயங்களையும், அற்புதங் களையும் முகவரி இல்லாத இந்தப் பேர்வழிகள் தங்களுக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், இந்தப் பொய்களையும் நம்புவதற்கு, சுய சிந்தனையை இழந்த ஒரு கூட்டம் இருப்பதால் தான்.

இந்த இழி நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இந்த ஷைத்தானின் சதிவலையில் இனியும் யாரேனும் வீழ்ந்து விடாமல் காப்பதே இந்தத் தொடரின் லட்சியம்! அதற்காகத் தான் இந்த அறியாமைக் கருத்துக்களையும், ஆணவக் கருத்துக்களையும் இங்கே தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறோம்.

ரகசிய ஞானம் எனும் மது ரச பாôனம் என்பதெல்லாம் ஏமாற்று, பசப்பு வார்த்தைகள். உண்மையில் இது ஷியாயிஸம் தரும் விஷ பானமாகும். இதைப் பருகி நம்மை நாமே அழித்து விடக் கூடாது.

பொதுவாக நாம் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தரீக்கா என்று சொல்லி விட்டாலே அது ஷியா தான். காரணம் எல்லாத் தரீக்காக்களுமே சங்கிலித் தொடராகச் சென்று முடிவது அலீ (ரலி)யிடம் தான்.

இரண்டில் இல்லாத ரகசிய ஞானம்?

ரகசிய ஞானம்! யாருக்கும் இல்லாத ரகசிய ஞானம் என்று பாட்டுப் படிப்பது ஷியாக்கள் தான். அந்தப் பாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறும் இந்தத் தரீக்காக்களும் படிக்கின்றன. இவ்வாறு படிப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் உண்டு.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மூல ஆதாரங்களில் இல்லாத ரகசிய ஞானம் அலீ (ரலி) அவர்களுக்கு இருப்பதாக அன்னார் வாழும் போதே கிளம்பி விட்டது. அலீ (ரலி) அவர்களின் வாழ்நாளிலேயே அவர்களிடம் நேரடியாக இது பற்றிக் கேட்கப் பட்டு விட்டது.

அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்: நான் அலீ (ரலி) அவர்களிடம், “(நபியவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “வித்துக்களைப் பிளந்தவனும் உயினங்களை உருவாக்கிய வனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை. இறை வேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிரஎன்று கூறினார்கள். நான் “இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளனஎன்றார்கள்.

(அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) சில வேளைகளில் “மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?” என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்.)

நூல்: புகாரி 6903

அலீ (ரலி) அவர்கள் அன்றே இந்த வாசலை அடைத்து விட்டார்கள்; ஆப்பு வைத்து விட்டார்கள். இருப்பினும் யூத மதம் தனது கைப்பிள்ளையான ஷியாயிஸத்தைப் புகுத்தி இந்த வழிகேட்டின் வாசலைத் திறந்து விட்டது. அது இன்னும் தொடர்ந்து நரகத்தின் வாசலுக்கு இழுத்துச் செல்கின்றது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

ஃபாஸிக்காக ஆடும் அல்லாஹ்வின் அர்ஷ்

அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

இந்தப் பாஸியின், பாவியின் தடித்த நாவில் வெடித்துச் சிதறும் அணுகுண்டைப் பாருங்கள். அல்லாஹ்வுடைய அச்சம் கடுகளவு இருப்பவன் கூட இவ்வளவு பெரிய கொடிய, அக்கினி வார்த்தைகளைச் சொல்ல மாட்டான். இந்த ஃபாஸி தன்னைக் கடவுளாகக் பாவித்ததன் காரணமாகத் தான் அபாயகரமான அணுகுண்டு வார்த்தைகளை வெடிக்கிறார்.

யூதமும், அதன் கள்ளப் பிள்ளையும் தான் அல்லாஹ்வின் விஷயத்தில் அதிபயங்கரமான வார்த்தைகளைச் சொல்லத் தயங்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளதுஎன்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

அல்குர்ஆன் 5:64

யூதர்கள் கூறியது போன்ற ஒரு பயங்கரமான சுடு சொல்லை, இந்தப் பாஸி சொல்கிறார்.

அர்ஷும் குர்ஸும் இவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டதாம். அதாவது, இவருடைய கட்டளைக்கு, காட்டுகின்ற கை விரலுக்குத் தக்க ஆட்டம் போடுமாம். இது தான் இந்தப் பாசி பிடித்த பாஸியின் கருத்து.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? அக்டோபர் மாத இதழில், முகத்திரையைக் கிழித்த முதல் பிறை என்ற தலைப்பில், “உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத அமாவாசை தினத்தில் முதல் பிறை என்று அறிவித்து உள்ளனர்’ என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அதே நாளில் சவூதியிலும், மலேஷியாவிலும் நோன்பைத் துவக்கியுள்ளனர். உலகத்தில் எங்குமே பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்? இரண்டும் வேறு கிரகங்களில் உள்ளதா? மேலும் அதே கட்டுரையில், கமாலுத்தீனின் அடிவருடிகள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மார்க்கப் பத்திரிகையில் இது போன்ற மஞ்சள் பத்திரிகை வார்த்தைகள் இடம் பெறுவது ஏன்?

பி. ஹபீப் முஹம்மது, மேற்கு மாம்பலம், சென்னை

ஜாக் இயக்கத்தினர் 12.09.07 அன்று முதல் பிறை என்று அறிவித்தனர். 11.09.07 அன்று பிறை பார்த்தால் தான் 12ஆம் தேதி முதல் பிறையாக இருக்க முடியும். ஆனால் 11ஆம் தேதி உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாது என்று நாம் மட்டும் கூறவில்லை. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் கூறுகின்றது. மேலும் அன்றைய தினம் பிறை பார்த்ததாக உலகத்தில் யாருமே கூறவில்லை. முதல் பிறை என்று கூறியவர்கள் கூட பிறை பார்த்ததன் அடிப்படையில் முதல் பிறை என்று சொல்லவில்லை. கணிப்பின் அடிப்படையில் தான் கூறினார்கள்.

சவூதியிலும், மலேசியாவிலும் அன்றைய தினம் (12.09.07) நோன்பைத் துவக்கியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது பச்சைப் பொய். இந்த இரண்டு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். மார்க்க விஷயத்தில் தெளிவடைய வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இருந்திருந்தால் இது போன்ற பொய்யான தகவலைக் கூறியிருக்க மாட்டீர்கள்.

ஒரு வேளை அன்றைய தினம் வேறு எங்காவது நோன்பைத் துவக்கியிருந்தாலும் அதற்காக அன்று பிறை தென்பட்டது என்று கூற முடியாது. கணிப்பின் அடிப்படையில் தான் நோன்பைத் துவக்கியிருப்பார்கள். பிறை பார்த்து நோன்பைத் துவக்க வேண்டும் என்றால் 13 அல்லது 14ஆம் தேதி தான் முதல் நோன்பாகும்.

அடிவருடிகள் என்ற வார்த்தையையும் விமர்சித்துள்ளீர்கள். இது ஒன்றும் கெட்ட வார்த்தை கிடையாது. தமிழில் வழக்கத்தில் உள்ள வார்த்தை தான். தமிழ் அகராதிகளில் எதில் வேண்டுமானாலும் இதற்கான பொருளைப் பார்த்துக் கொள்ளலாம். அடிவருடிகள் என்றால் சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று பொருள். இதில் என்ன தவறு இருக்கின்றது? ஜாக் தலைமையிலிருந்து கிடைக்கும் பணத்திற்காகக் கொள்கையை அடகு வைப்பவர்களை வேறு எந்த வார்த்தையில் அழைப்பது?

சவூதி உட்பட அனைத்து அரபு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். ஆனால் இவர்கள் 12.09.07 அன்றே, அதாவது சவூதிக்கு ஒரு நாள் முன்னதாகவே நோன்பைத் துவக்கினார்கள். இதன் மூலம் சவூதியே பிறை விஷயத்தில் தவறில் இருக்கிறது, நாங்கள் தான் சரியான கருத்தில் இருக்கிறோம் என்று வாதிட்டார்கள். இவர்கள் இதில் உறுதியாக இருந்தால் ஹஜ் பெருநாளிலும் அதே நிலையை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த 18.12.07 அன்று கமாலுத்தீன் மதனி பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அரபாவில் மக்கள் கூடுவதால் இன்று தான் அரபா நாள்; அதற்கு அடுத்த நாள் பெருநாள் என்று கூறியுள்ளார். அதைப் பின்பற்றி அவருடைய அடிவருடிகளும் இதே கருத்தை மறு நாள் பத்திரிகையில் அறிக்கையாக வெளியிட்டதுடன் 19.12.07 அன்று பெருநாளும் கொண்டாடினார்கள்.

பிறையின் அடிப்படையில் இன்று பெருநாள் என்று கூறாமல் சவூதியில் அரபாவில் மக்கள் கூடுகிறார்கள் என்பதால் அதற்கு அடுத்த நாள் தான் பெருநாள் என்று கூறுகிறார்கள்.

 “பிறை பார்த்த அடிப்படையில் 12.09.07 அன்று நோன்பு துவக்கம்” என்று சுவரொட்டி ஒட்டினார்கள். “பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீசுக்கு எதிரானதா?” என்று பிரசுரம் வெளியிட்டார்கள். “சவூதியில் பெருநாள் என்பதால் நமக்கும் பெருநாள்” என்று பத்திரிகையில் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

இவர்கள் பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்களா? கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா? அல்லது சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்களா?

மார்க்க விஷயத்தில் இவர்கள் செய்து வரும் இந்தக் குழப்பத்தை நாம் பலமுறை சுட்டிக் காட்டிய பின்னரும் அதைக் கண்டு கொள்ளாமல் ஜாக்கின் தலைமையிலிருந்து தங்களுக்கு வரும் உதவிகளுக்காக மார்க்கத்தில் விளையாடுகிறார்கள் என்றால் இவர்களை அடிவருடிகள் – சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.

? மணமக்களை அழைத்து விருந்து கொடுக்கலாமா? அதில் நாம் கலந்து கொள்ளலாமா?

சுபைதா பீவி, தோப்புத்துறை

பொதுவாக மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் யாருக்கும் விருந்தளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. மார்க்கத்திற்கு முரணில்லாத விருந்துகளில் கலந்து கொள்வதிலும் தவறில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்த போது உம்மு சுலைம் என்ற பெண்மணி விருந்தளித்ததாகவும் அதில் பல நபித்தோழர்கள் கலந்து கொண்டதாகவும் ஹதீஸ் உள்ளது.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடித்தார்கள். தமது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். என்னுடைய தாய் உம்மு சுலைம் அவர்கள் ஹைஸ் எனும் உணவைத் தயாரித்து அதை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனது தாய் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். “எங்களிடமிருந்து உங்களுக்குரிய சிறிய அன்பளிப்புஎன்று கூறுமாறு சொன்னாôர்கள்என்று கூறினேன். “அதை அங்கு வைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறி, சில பெயர்களைக் குறிப்பிட்டு, “இன்னின்ன ஆட்களையும் நீ யாரையெல்லாம் அறிந்திருக்கிறாயோ அவர்களையும் அழைத்து வாஎன்று கூறினார்கள். நான் சந்தித்த ஆட்களையும், நபி (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிட்டுக் கூறிய நபர்களையும் நான் அழைத்தேன்.

(இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்களிடம்) “அவர்கள் எத்தனை பேர்?” என்று அபூ உஸ்மான் கேட்டார். “முன்னூறு பேர்என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல்: நஸயீ 3334

? நாம் தொழும் போது நம்முடைய பிரார்த்தனைகளைக் கேட்கலாமா? தொழுகையில் எந்தெந்த இடங்களில் பிரார்த்திக்க வேண்டும்?

என். ராதிகா, செங்கல்பட்டு

தொழுகையில் ஸஜ்தாவிலும், இரண்டாவது மற்றும் நான்காவது ரக்அத்தில் இருப்பில் அமரும் போதும் விரும்பிய பிரார்த்தனையைச் செய்யலாம். இந்த இடங்களில் பிரார்த்திப்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

அடியான், அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 744

நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி… கூறுங்கள். (பின்னர்) தமக்கு விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: நஸயீ 1151

? ஜமாஅத் தொழுகையில் சிலர் இமாம் ருகூவு செய்யும் போது ருகூவு செய்கின்றனர். சிலர் இமாம் ருகூவு செய்த பிறகு ருகூவு செய்கின்றனர். இதில் எது சரி?

அபூபக்கர் சித்தீக் மேலப்பாளையம்

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 688, முஸ்லிம் 699

இமாமைப் பின்பற்ற வேண்டும்; இமாமை முந்தக் கூடாது என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இமாமைப் பின்பற்ற வேண்டும் என்றால், இமாம் செய்வதைத் தொடர்ந்து செய்வது தான் பின்பற்றுதல் ஆகும். இமாமுடன் சேர்ந்து செய்வது பின்பற்றுதல் ஆகாது.

எனவே இமாம் ருகூவுக்குச் சென்ற பிறகு, அதாவது அவரைப் பின்தொடர்ந்து நாம் ருகூவுக்குச் செல்ல வேண்டும். இமாமுடன் சேர்ந்து செய்யக் கூடாது.

? முஸ்லிம் பெண்களில் அதிகமானவர்கள் சேலை அணிகிறார்கள். இவ்வாறு சேலை அணிவதால் தன்னையும் அறியாமல் இடுப்புப் பகுதி வெளியில் தெரிகிறது. இதனால் மறுமையில் தண்டனை உண்டா?

எஸ். அனீஸ் ஃபாத்திமா, தொண்டி

முகம் மற்றும் முன் கைகள் ஆகிய பகுதிகளைத் தவிர பெண்கள் தங்கள் உடல் பகுதி அனைத்னையும் அன்னிய ஆண்கள் முன்னால் கண்டிப்பாக மறைத்தே ஆக வேண்டும். சேலை உள்ளிட்ட எந்த ஆடையாக இருந்தாலும் அதை அணிந்தால் உடல் பகுதிகள் வெளியே தெரியும் என்றால் அந்த ஆடையை அணிந்து அன்னிய ஆண்கள் முன்னால் காட்சி தரக் கூடாது.

தன்னையும் அறியாமல் இடுப்பு வெளியில் தெரிந்தால் தண்டனை உண்டா? என்று கேட்டுள்ளீர்கள். இந்த ஆடை அணிந்தால் அதில் இன்னின்ன பகுதிகள் வெளியில் தெரியும் என்பது அறியாத விஷயமல்ல. எனவே அறியாமல் செய்யும் தவறு என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உடல் பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ள சேலையை அணிந்து அன்னிய ஆடவர் முன்னால் வரக் கூடாது.

இது போன்று ஆடை அணிந்தும், அணியாத நிலையைக் கொண்ட பெண்களை நரகவாசிகள் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3971

? வட்டி என்ற வியாபாரத்தில் தான் உண்மை உள்ளது. மற்ற வியாபாரம் அனைத்திலும் பொய் உள்ளது. எனவே உண்மையான தொழிலான வட்டி எப்படி ஹராமாகும் என்று மாற்று மத நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்குப் பதில் என்ன?

முஜிபுர்ரஹ்மான், பள்ளப்பட்டி

வட்டி என்பதை வியாபாரம் என்று கூறுவதே தவறு. ஏனென்றால் வியாபாரம் என்பது லாபம், நஷ்டம் இரண்டும் கொண்டது. ஆனால் வட்டியில் நஷ்டம் என்பதே கிடையாது.

நமது தேவைக்குப் போக நம்மிடம் பணம் உள்ளது. தேவையுடைய ஒருவர் இதைக் கடனாகக் கேட்கிறார். இவருக்குக் கொடுத்து உதவுவது மனிதாபிமான அடிப்படையில் உள்ளதாகும். ஆனால் இந்த மனிதாபிமான உதவிக்கு எதிரானது தான் வட்டி.

ஆயிரம் ரூபாயை வட்டிக்குக் கடனாக வாங்கியவர்கள், ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி செலுத்திய பின்னரும் அசல் தொகையான ஆயிரம் ரூபாய் கடனாகவே இருந்து கொண்டிருக்கும். இது எந்த வகையில் வியாபாரமாகும்?

இறைவன் நமக்கு வழங்கிய பொருளாதாரத்திலிருந்து, ஏழைகளுக்குத் தர்மம் வழங்குதல், கடனுதவி போன்ற நன்மையான காரியங்களைச் செய்வதை விட்டும் வட்டி என்ற பெரும் பாவம் நம்மைத் தடுத்து விடுகின்றது. இதனால் தான் வட்டி விஷயத்தில் இஸ்லாம் கடுமையான நிலையை மேற்கொள்கிறது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 2:275, 276

வட்டியில் பொய்யே கிடையாது என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலைகள் அனைத்தும் வட்டித் தொழிலில் தான் அதிகம் உள்ளது. வட்டிக்கு வாங்கியவர்களை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்குவது, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி என்று போட்டு அடகு வைத்த பொருட்களைச் சுருட்டிக் கொள்வது போன்ற அநியாயங்கள் வட்டித் தொழிலில் வாடிக்கையாக நடைபெறுகின்றன.

நவீன வட்டித் தொழிலான கிரடிட் கார்டு வாங்கும் படித்த மக்கள் கூட எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பது தெரியாமலேயே கடனில் மூழ்கி, வங்கிகளின் அடியாட்களுடைய மிரட்டலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எனவே வட்டித் தொழில் உண்மையான தொழில் என்பது போலியான வாதமாகும்.