ஏகத்துவம் – ஏப்ரல் 2016

தலையங்கம்

தேர்தல் களம்: தன்மானம் காத்த தவ்ஹீத் ஜமாஅத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடாத அமைப் பாகும். சாதாரண பஞ்சாயத்து போர்டு தேர்தலிலிருந்து பாரளுமன்றத் தேர்தல் வரை எதிலும் போட்டியிடக் கூடாது என்று ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை அது எடுத்த முடிவில் உறுதியாக இருந்து வருகின்றது.

ஆனால் அதே சமயம் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன் வைத்து மாறி மாறி அதிமுக, திமுக என்று ஆதரவு தெரிவித்து வந்தது. தவ்ஹீத் கொள்கைக்குப் பாதகமும், பழுதும் வந்து விடக் கூடாதென்று தங்களைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வட்டங் களையும், வளையங்களையும் போட்டுக் கொண்டு களப் பணியும் ஆற்றியது.

  1. ஆளுங்கட்சி அல்லது எதிர்க் கட்சிகளின் மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏறக் கூடாது.
  2. அரசியல் கட்சியினர் யாரும் நமக்குப் பொன்னாடைகள் போர்த்தக் கூடாது; மலர் மாலைகள் அணிவிக்கக் கூடாது; நாமும் அரசியல் தலைவர் களுக்கு இவற்றை அணிவிக்கக் கூடாது.
  3. அரசியல் கட்சித் தலைவர்கள் மேடைக்கு வரும் போது மரியாதைக் காக எழுந்து நிற்கக் கூடாது.
  4. தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சிகள் தங்கள் செலவில் நமக்கு மேடைகள் அமைத்துத் தர வேண்டும். அந்த மேடையில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்கலாம்.
  5. தேர்தல் பிரச்சாரத்திற்கான போக்குவரத்து, விளம்பரங்கள் போன்ற அனைத்துச் செலவுகளையும் அரசியல் கட்சிகளே செய்ய வேண்டும். அரசியல் கட்சி வேட்பாளர்கள், நம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து செலவுக்குப் பணம் தருகின்ற பட்சத்தில் செலவு போக மீதப் பணத்தை அந்தக் கட்சி வேட்பாளர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட வேண்டும்.
  6. தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சியினருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
  7. உள்ளூர் பகுதியில் வேட்பாளர் களிடம் வாங்கிய பணத்திற்கு முறையான கணக்கு வழக்குகளை தலைமைக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது ஒழுங்கு எடுக்கப்படும்.

இதுபோன்ற எண்ணற்ற பாதுகாப்பு வட்டங்களும் வளையங்களும் ஏன்? எதற்கு?

அரசியல்வாதிகளிடம் வார்த்தைக்கு வார்த்தை வணக்கம் என்பது சர்வ சாதாரணமாக மூச்சுக்கு முன்னூறு தடவை வரும். அவர்களை அறியாமலேயே கைகள் யாரைக் கண்டாலும் கும்பிடு போட்டுத் தொழும். தனி மனித புகழ், துதி பாடல் கொடி கட்டிப் பறக்கும். மொத்தத்தில் அரசியல்வாதிகளை ஷிர்க் எனும் இணை வைப்பு ஆக்கிரமித்து நிற்கும்.

இதுபோன்ற கட்டத்தில் தவ்ஹீது வாதி இந்த இணைவைப்பில் விழுந்து விட்டால் கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாகி விடும். அதாவது ஏகத்துவம் என்ற உயிரினும் மேலான கொள்கையை, கண்ட கிரயத்திற்கு விற்று விட்டு இட ஒதுக்கீட்டை வாங்குகின்ற கதையாகி விடும். அதனால் தான் இத்தனை தடுப்புச் சுவர்கள்! தடை அரண்கள்!

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். ஒரு சிலரைத் தவிர மீதி ஜமாஅத் பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி, செலவு செய்த மிச்ச மீதப் பணத்தை வேட்பாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதைப் பார்த்த வேட்பாளர்கள், “இந்தக் காலத்தில் இப்படி நாணயத்திற்கும் நம்பிக்கைக் கும் உரியவர்கள் இருக்கின்றார்களா?” என்று வினாக்குறிகளுடன் விழிப் புருவங்களை உயர்த்தி வியப்பில் உறைந்து போயினர்.

இவ்வளவுக்குப் பிறகும் “தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?’ என்று நம்முடைய நாணயத்தை எதிரிகள் கொச்சைப் படுத்தினர்.

ஹஜ் சர்வீஸ், வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகின்ற ஏஜண்ட் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் ஆகியவை ஹலாலான தொழில்கள் தான் என்றாலும் அவற்றில் ஏமாற்று வேலைகள், வாக்குறுதிக்கு மாற்றமான செயல்பாடுகள், பொருளாதார மோசடிகள் உள்ளே நுழைந்து சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை யும் நாணயத்தையும் தாக்கி தகர்த்து நிர்மூலமாக்கி விடுகின்றன. எனவே ஜமாஅத்தின் அனைத்து மட்ட நிர்வாகிகள் இவற்றைச் செய்யக் கூடாது என்று விதியை ஏற்படுத்தியது.  ஐயத்திற்கும், அச்சத்திற்கும் இடமளிக் கின்ற அத்தனை வாசல்களையும் தவ்ஹீது ஜமாஅத் அடைத்து விட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் அந்த நம்பிக்கையிலும், நாணயத்திலும் அந்த வகையில் அறவே குறை காண முடியாத அளவுக்கு அப்படியே வாயடைத்துப் போன எதிரிகள், திறந்து கிடக்கின்ற, ஐயத்திற்கு இடமளிக்கின்ற தேர்தல் ஆதரவு என்ற வாசல் வழியாக வந்து தங்களது தாக்குதல் களைத் தொடுத்தனர்.

இதற்கும் தவ்ஹீத் ஜமாஅத் தனக்கே உரிய தனி பாணியில் எதிரிகள் தலை தூக்க முடியாத அளவிற்கு, தலை தெறிக்க ஓடும் அளவிற்குச் சரியான பதிலடியைக் கொடுத்தது.

எனினும் ஏகத்துவக்கொள்கையைச் சொல்கின்ற நம்மீது எள்ளளவு கூட குறைச் சொல்ல முடியாத அளவுக்கு ஐயத்திற்கும் அச்சத்திற்கும் உரிய அத்தனை வாசல்களையும் அடைத்த நாம் இந்த வாசலை மட்டும் ஏன் தாழிடாமல் திறந்து வைக்க வேண்டும்? என்று யோசித்து ஆய்வு செய்து கடந்த பொதுக் குழுவில் அந்த வாசலையும் ஓட்டை உடைசல் இல்லாமல் தவ்ஹீது ஜமாஅத் அடைத்து விட்டது.

அரைக்க அரைக்க சந்தனம் மணப்பது போல் இந்த வகையில் தவ்ஹீது ஜமாஅத், வளர வளர அதன் தூய்மை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. அல்லாஹ் இந்த இயக்கத்தினரை நேர்வழியின் பால் நடத்திக் கொண்டு செல்கின்றான். இதோ திருக்குர்ஆன் கூறுகின்றது.

நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்கு கிறான். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் சிறந்த கூலிக்கும், சிறந்த தங்குமிடத்திற்கும் உரியது.

அல்குர்ஆன் 19:76

நேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான்.

அல்குர்ஆன் 47:17

பொருளாதார ரீதியில் மட்டு மல்லாமல், ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் போது வேறு சில பாதிப்புகளும் ஏற்பட்டன. சில முடிவுகளை நாம் தவ்ஹீத் ஜமாஅத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எடுப்போமே அம்மாதிரி எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் போது திமுக அபிமானிகளாலும், திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் போது அதிமுக அபிமானிகளாலும் இவர் வெற்றி பெற்ற பிறகு பிஜேபியுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி அதிகமாகக் கிளப்பி விடப்பட்டது. இதற்கு நம்மால் உத்தரவாதம் கொடுக்க முடியாமல் ஆனது.

இப்போதைய நிலையைத் தான் பார்க்க முடியும். நாளை நடப்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நாம் சொன்னாலும் இது நமது ஜமாஅத்திற்குரிய நேர்த்திமிக்க நெத்தியடிப் பதிலாக இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையை நாம் சந்திக்க நேர்ந்தது. இப்போது அது மாதிரியான நெருக்கடி நீங்கி, அதன் கண்ணியம் காக்கப்பட்டு விட்டது.

இப்போது தேர்தல் காலம். இன்றைக்கு நமது ஜமாஅத்தின் அழைப்புப் பணி தேர்தல் களத்தை விட சூடாக நடந்து கொண்டிருக் கின்றது. அழைப்புப் பணிக்கு கோடை காலம், மழை காலம் என்ற பாகுபாடு கிடையாது. அது போல் அதற்குத் தேர்தல் காலம் தேர்தல் அல்லாத காலம் என்ற பாகுபாடும் கிடையாது. காரணம் இது மக்களின் உயிர் காக்கும் பணியாகும். மக்களை நரகத்திலிருந்து மீட்கின்ற காக்கின்ற அவசியமான அவசரமான உன்னதப் பணியாகும்.

உயர்ந்த அந்த அழைப்புப் பணியை தேர்தல் காலத்திலும் நாம் செய்யாமல் இருந்தில்லை. எனினும் தேர்தல் அல்லாத காலத்தை விட அது சதவிகிதத்தில் மிகவும் பலமடங்கு குறைவானது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

இதற்குக் காரணம், தேர்தல் காலத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகள் களப்பணியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே நமது ஜமாஅத்தின் உறுப்பினர்கள் கட்சிக்காரர்களை மிஞ்சி களப்பணி ஆற்ற ஆரம்பித்து விடுவார்கள். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல் பணி களைகட்டவும் அனல் பறக்கவும் துவங்கி விடும். நம்முடைய முழு சக்தியும் தேர்தல் களத்தை நோக்கியே திருப்பி விடப்பட்டு விடும் நிலை இருந்தது.

இப்போது அதையெல்லாம் எண்ணிப் பார்த்து வேதனை அடைகின்றோம். நம்முடைய முழு ஆற்றலையும் இந்த அழைப்பு பணிக்கு செலவிடத் தவறி விட்டோமே என்று நாம் வருத்தப் படுகின்றோம். இந்த அரசியல் கட்சிக்காரர்களுக்கு கொடுத்த ஆதரவு காரணமாக நாம் சந்தித்த அடிதடி சண்டைகளுக்கான வழக்குகள் இன்று வரை நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. வாரம் தவறாமல் நீதிமன்ற வாய்தாவுக்கு சென்று கால் கடுக்க நின்று காலத்தையும், காசு பணத்தையும் செலவழித்து விட்டுத் திரும்பி வருகின்ற நம் கொள்கைச் சகோதரர்கள், இந்த வழக்கை ஏகத்துவக் கொள்கைக்காக வேண்டி சந்தித்திருந்தால் மனம் ஆறுதலாக இருந்திருக்கும் என்று ஆதங்கப் படக்கூடிய நிலையை நாம் பார்க்கின்றோம். அந்த அளவுக்கு தேர்தல் ஆதரவு நம்முடைய உழைப்பை உறிஞ்சி இழுத்து விட்டது.

இந்தத் தேர்தலில் அல்லாஹ் வுடைய அருளால் நமது மொத்த உழைப்பையும் அழைப்பு பணியிலேயே திருப்பி விட்டோம். தேர்தல் காலத்தில் இதற்கு முந்தைய தேர்தல் காலம் போல் அல்லாமல் அழைப்புப் பணியின் பக்கம் திரும்பியது நமக்குப் பெரிய ஆறுதலாகவும், மன நிம்மதியாகவும், நிறைவாகவும் இருக்கின்றது.

குறிப்பாக, ஏகத்துவக் கொள்கை எங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்ற சொல்லி முதுகில் குத்திய துரோக அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளில் அடைந்த இழிவுகளைப் பார்த்த பிறகு, அல்லாஹ் நமது ஜமாஅத்திற்கு வழங்கியுள்ள கண்ணியத்திற்காக நாம் அவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.

தேர்தலில் ஒரு சில சீட்டுகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகி விடலாம். ஆனால் அதற்காக அவர்கள் படுகின்ற கேவலத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஐந்து வருடம் அதிமுகவுடன் ஒட்டிக் கொண்டு, சமுதாயத்திற்கு எந்த நன்மையும் செய்யாமல் ஜெயலலிதாவைப் புகழ்வது மட்டுமே குறிக்கோள் என்று செயல்பட்ட அவர்கள் தற்போது அதிமுகவின் கதவுகள் திறக்கப்படாத நிலையில் திமுகவின் பக்கம் தாவியுள்ளனர்.

ஊடகங்ளிலும் சமூக வலைத் தளங்களிலும் மமகவின் பச்சோந்தித் தனத்தை வறுத்தெடுக்கின்றனர்.

“இவ்வளவு நாளும் அதிமுகவை ஆதரித்து விட்டு, இந்த நான்கைந்து நாட்களுக்குள் திமுகவுக்கு மாறி விட்டீர்களே! இந்த இடைவெளியில் எந்த வகையில் அதிமுக உங்கள் கொள்கைகளுக்கு மாற்றமாக நடந்து விட்டது? திமுக உங்கள் கொள்கை எதனை ஏற்றுக் கொண்டுவிட்டது? அதிமுக கூட்டணி தான் எங்களை சிறப்பாக நடத்தியது என்று ஜவாஹிருல்லா சொல்லியிருக்கிறார். நீங்கள் தற்போது எடுத்திருக்கும் முடிவுக்குப் பின்னால் இருப்பது கட்சி நலனா? நாட்டு நலனா?

இஸ்லாமியர்களின் நலன் தான் முக்கியம் என்று நீங்கள் கருதினால், “திமுக, அதிமுக ரெண்டு கட்சிகளாலும் சமுதாயத்திற்குப் பெரிதாக எதுவும் நடக்கவில்லை, அதனால் இரண்டு கட்சிக்கும் ஆதரவில்லை” என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக் கிறதே! அந்த முடிவையாவது நீங்கள் எடுத்திருக்க வேண்டும். கடைசிப் பத்து நாளில் இந்த மாற்றமெல்லாம் நடக்கிறது என்றால் வெறும் பதவி, தொகுதி, அதிகாரம் இது தான் உங்கள் குறிக்கோளா? அதிகாரம் உள்ள கட்சியோடு தான் நாங்கள் ஒட்டிக் கொண்டிருப்போம் என்று இதை எளிதாகச் சொல்லலாமே!” என்று மமக நிர்வாகியைப் பார்த்து நியூஸ்-7 தொலைக்காட்சியின் நெறியாளர் கேட்கிறார். அதற்கு அந்த மமக நிர்வாகி, அது வந்து, அது வந்து, அதாவது என்று திணறுவதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.

அதே நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் அவர்கள், “கடலூருக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகளை எல்லாம் கேட்ட பிறகு, எங்கள் ஊருக்கும் புயல் வந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று மக்கள் நினைக்கிறார்கள்’ என்று ஜவாஹிருல்லா சொன்னார். இது அதீதமில்லையா? நிவாரண உதவிக்காக மக்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்று கூறலாமா? வெறும் தேர்தல் கூட்டணிக் காக ஒரு கட்சியின் தலைவர் இப்படிச் சொல்கிறார் எனும் போது உண்மையிலேயே மனது வேதனைப் படுகிறது” என்று கேட்டார். இதற்கும் மேற்படி மமக நிர்வாகியால் எந்தப் பதிலையும் சொல்ல முடியவில்லை.

ஆக, பதவி ஒன்று தான் தங்களது குறிக்கோள் என்பதை பட்டவர்த் தனமாக அறிவித்து, அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமுதாயத் துரோகிகளின் நிலையைப் பார்க்கும் போது, மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள 19:76 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று, இந்த இழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றி நேர்வழியை அதிகப்படுத்தியுள்ள அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

—————————————————————————————————————————————————————-

போரில் நபிகளார் பொய் சொல்வார்களா?

குழப்பவாதிகளுக்குப் பதில்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு உரையின் போது குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கான ஆதாரமாக புகாரியில் இடம்பெறும் ஹதீஸையும் சேர்த்தே அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு போன்று  தவ்ஹீத் ஜமாஅத் பற்றிப் பேச எதுவும் கிடைக்காதா? என்று காத்திருந்த தர்காவாதிகள், ஸலபுக் கும்பல்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மக்களிடையே விகாரமான பிரச்சாரத்தில் முடிந்த அளவு ஈடுபட்டார்கள்.

பார்த்தீர்களா?  தவ்ஹீத் ஜமாஅத் நபியைக் கொச்சைப் படுத்துகின்றனர், நபியின் கண்ணியத்தைக் குறைப்படுத்துகின்றனர் என்று கொக்கரிக்க ஆரம்பித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரில் பொய் சொன்னார்கள் என்பது எங்களின் சொந்தக் கருத்தல்ல, ஸலபுக் கும்பல் ஹதீஸில் இல்லாத கருத்துக்களைப் புகுத்தி இடைச் செருகல் செய்வார்களே அது போன்று எங்களால் செய்யப்பட்ட இடைச் செருகலும் அல்ல.

புகாரியில் இடம் பெறும் ஹதீஸிலிருந்து தான் இக்கருத்தை நாங்கள் குறிப்பிட்டோம் என்று இது குறித்து விளக்கமளித்தோம்.

புகாரியில் இடம்பெறும் அந்த ஹதீஸ்:

கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். “தபூக் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்என்று கஅப் (ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்து விட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த – அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) அறிவித்தார்.

நூல்: புகாரி 2947

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள கவனிக்கத்தக்க வாசகம் நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள்.

நபியவர்கள் எந்தப் போருக்குச் செல்வதாக இருந்தாலும் பாசாங்கு செய்வார்கள் என்று இதில் இடம்பெறத்தானே செய்கிறது? பாசாங்கு என்றால் பொய் தானே! என்று நாம் வாதம் வைத்திருந்தோம்.

இதற்கு பதிலளிக்க ஓடோடி வந்த ஒரு ஸலபி, “இவர்கள் குறிப்பிடும் புகாரி ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் போரில் பொய் சொன்னார்கள் என்று இல்லை. மாறாக தவ்ரியத் செய்வார்கள் அதாவது மறைப்பார்கள் என்று தான் இடம்பெறுகிறது” என்கிறார்.

மறைத்தல் என்பது பொய்யில் அடங்காது, உதாரணமாக ஒருவர் திருநெல்வேலி செல்வதை இலக்காக நிர்ணயிக்கிறார். ஆனால் பிறரை திசைதிருப்ப வேண்டி அவர் சென்னையைப் பற்றி விசாரிக்கிறார். இறுதியில் திருநெல்வேலிக்கே செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதில் பொய் எங்கிருந்து வருகிறது? உண்மையை மறைத்தல் தானே இதில் உள்ளது. இதுபோன்று தான் நபி (ஸல்) அவர்கள் போரின் போது நடந்து கொள்வார்கள்.

இலக்கு ஒன்றாக இருக்க வேறு எங்கோ செல்வதைப் போன்று காட்டிக் கொள்வார்கள். இறுதியில் இலக்கு எதுவோ அதை நோக்கிப் பயணிப்பார்கள். எனவே இந்த ஹதீஸில் நபி பொய் சொன்னார்கள் என்ற இவர்களது கருத்திற்கு ஆதாரமில்லை என்கிறார்.

நபி பொய் சொன்னார்கள் என்றால் அது அவர்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் என்பது தான் இந்த வாதத்தின் அடிப்படையாக உள்ளது.

பொய் என்ற வார்த்தைக்குப் பதிலாக பாசாங்கு செய்தார்கள் என்று சொன்னால் கன்னியத்தைப் பாதிக்காதாம். என்னே அறிவு!

தவ்ரியத்தில் பொய் அடங்காதா?

நபி (ஸல்) அவர்கள் எந்தப் போருக்குச் சென்றாலும் வேறெங்கோ செல்வதைப் போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள் என்று ஹதீஸில் வருகிறது.

பாசாங்கு செய்து மறைப்பார்கள் என்று மட்டுமே வருகிறது. எப்படி என்ற மேலதிக விபரம் எதுவும் அந்த ஹதீஸில் இல்லை.

நபியவர்கள் இலக்காக இல்லாத வேறொரு ஊரைப்பற்றி விசாரித்து விட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊருக்குச் செல்வார்கள் அவ்வளவு தான் என்று இந்தக் குறைமதியாளர்  கூறுகிறார். வேறொரு ஊரைப் பற்றி விசாரிப்பார்கள் என்று சாதாரணமாக இஷ்டத்துக்கு விளக்கம் தருகிறார்.

வேறொரு ஊரைப் பற்றி சும்மா விசாரித்து விட்டு, திட்டமிட்ட ஊருக்குப் போவதில் இரண்டுமே தனித்தனி செயல்களாகி விட்டன. இதில் மறைத்தல் பாசாங்கு செய்தல் எதுவும் இல்லை. பாசாங்கு என்று எப்போது சொல்வோம்? வேறு ஒரு ஊரைக் கொண்டு மறைப்பார்கள் என்று எப்போது சொல்வோம்?

நாம் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகப் பயணிக்க உள்ளோம் என்று மக்களுக்குச் சொல்லி விட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக புறப்பட்டால் அதில் தான் பாசாங்கு உள்ளது. வேறு ஒன்றாக மறைத்தல் உள்ளது.

திருச்சியில் மாம்பழம் கிடைக்குமா என்று மக்களிடம் விசாரித்து விட்டு தஞ்சாவூருக்குப் போனால் அதில் மறைத்தல் ஒன்றும் இல்லை. பாசாங்கு ஒன்றும் இல்லை.

இதில் இருந்து தெரிவது என்ன? ஹதீஸில் சொல்லப்பட்டதற்கு எதிராக தனது மனோ இச்சைப்படி உளறியுள்ளார் என்பதுதான் தெரிகிறது.

இந்த ஹதீஸில் மறைப்பார்கள் என்று மட்டும் இருந்தால், போகும் ஊரைச் சொல்ல மாட்டார்கள் என்ற கருத்து வரும். அது பொய்யில் சேராது. ஆனால் மறைத்தார்கள் என்ற சொல்லுடன் வேறு ஒன்றைக் கொண்டு போகும் ஊரை அல்லது இலக்கை மறைப்பார்கள் என்று தான் மூலத்தில் உள்ளது. பிகைரிஹா என்றால் வேறு ஒன்றைக் கொண்டு என்று பொருள். இவர் வேறு ஒன்றைக் கொண்டு என்ற சொல்லை அர்த்தமற்றதாக்கி இருப்பதை இதிலிருந்து அறியலாம்.

அதாவது, சென்னை நோக்கி போருக்குச் செல்வதாக இருந்தால் திருநெல்வேலிக்குச் செல்லவிருக் கிறேன் என்று சொல்வார்கள். இந்த தகவலே எதிரிகளிடம் பரவும். இறுதியில் நாம் சென்னைக்கு செல்வோம் என்பார்கள். இதுதான் வேறு ஒன்றாக மறைத்தல் ஆகும்.

இங்கே நாம் கேட்பது சென்னைக்குச் செல்லவிருக்கும் ஒருவர் திருநெல்வேலிக்குச் செல்ல விருப்பதாகச் சொல்வது பொய் இல்லையா?

இதனடிப்படையில் போரில் நபி பொய் சொல்லியுள்ளார்கள் எனும் கருத்தை இந்த ஹதீஸ் தாங்கியே நிற்கிறது.

நபி (ஸல்) அவர்கள் போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்பது ஹதீஸில் இல்லாத கருத்து என்பதை போன்று இவர்கள் மூளை வறண்டு வறட்டு வாதம் செய்கின்றனர்.

தவ்ரியத் என்பதும் பொய் தானே?

உள்ளத்தில் ஒரு கருத்தை நினைத்துக் கொண்டு எதிராளி வேறொன்றைப் புரிந்து கொள்ளும் படி எதைச் செய்தாலும் பேசினாலும் அதுவும் பொய் என்ற பட்டியலில் தான் இடம் பெறும்.

ஒருவர் ஆயிரம் ரூபாய் இருந்தால் கடனாகத் தாருங்கள் என்கிறார்.

இன்னொருவர் தவ்ரியத் – மறைத்தல் அடிப்படையில் என்னிடம் நூறு ரூபாய் கூட இல்லை என்கிறார். உண்மையில் அப்போது அவரிடம் எந்த நூறு ரூபாய் நோட்டும் இல்லை, ஆனால் பல ஆயிரம் ரூபாய்கள் அவரிடம் உள்ளன. இந்நிலையில் இவர் பேசியது தவ்ரியத் தான். இதில் குற்றமில்லை என்பார்களா?

தவ்ரியத் – மறைத்துப் பேசுதல்- பொதுவாகவே அனுமதி என்றால் எல்லா இடங்களிலும் இவ்வாறு பேசலாமா?

நீதிபதி கொலையாளி ஒருவனிடம் இன்னாரை நீ கொலை செய்தாயா? என்கிறார். குற்றவாளியோ கூலிப் படையை ஏவி கொலை செய்துள்ள நிலையில் அதை மறைத்து நான் சம்பவ இடத்திற்குச் செல்லவே இல்லையே என்கிறான்.

இது தவ்ரியத் – மறைத்துப் பேசுதல் தான். இவ்வாறு செய்யலாம் இது பொய் அல்ல என்று இந்த ஸலபுக் கும்பல் வாதிடுமா?

கண்ணை மூடிய நிலையில் ஒரு பொருளைத் திருடி, அபகரித்து, அதை விற்றும் விட்ட ஒருவனிடம் “இந்தப் பொருளை நீ தான் திருடினாயா?’ என்று கேட்கும் போது “அதை நான் பார்க்கவே இல்லையே’ என்று சொன்னால் அது பொய் அல்ல என்று சொல்வார்களா? இது பொய்     அல்ல, அவர் தூய உண்மையைப் பேசி விட்டார், பொய் எனும் குற்றத்திலிருந்து தப்பித்து விட்டார் என்பார்களா?

எனவே தவ்ரியத் எனும் மறைத்து பேசுதல் பொய்யில் தான் சேரும். மார்க்கம் அனுமதித்த இடங்களில் இதுபோன்று பேசினால் அது குற்றமல்ல; அதுவல்லாத இடங்களில் இவ்வாறு பேசுவது குற்றம் என்பதே சரியான கருத்தாகும்.

எங்கேயும் எப்போதும்

உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு எதிராளி இன்னொன்றைப் புரிந்து கொள்ளும் படி எங்கேயும், எப்போதும் பேசலாம், அது பொய்யல்ல என்று கூறும் இந்த ஸலபுக் கும்பல் மார்க்க விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் தவ்ரியத் செய்ய மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?

இவர்கள் சூனியம் இல்லை என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு, கேட்பவனுக்கு இருக்கிறது எனும் தோற்றத்தை ஏற்படுத்தும் படி பேசலாம் தானே?

ஸஹாபாக்களைப் பின்பற்றக் கூடாது என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு, பின்பற்றலாம் என மக்கள் விளங்கும் படி மார்க்கம் பேசுவார்கள் தானே!

தர்கா வழிபாடு, மத்ஹபுகள் கூடாது என்று உள்ளத்தில் நினைத்துக் கொண்டு இவைகளில் எந்தத் தவறும் இல்லை என சிலேடையாக, எதிராளி புரிந்து கொள்ளும் படி இவர்கள் பேசுவர்கள் தானே!

எங்கேயும் எப்போதும் மறைத்துப் பேசலாம் அது பொய்யல்ல, அல்லாஹ் அதற்காகத் தண்டிக்க மாட்டான் என்று கூறும் இத்தகையவர்களை மார்க்க விஷயங்களில் எப்படி நம்ப இயலும்?

மக்கள் இவர்கள் விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துக் கொள்கிறோம்.

பொய் சொல்வது நபியின் கண்ணியத்தைப் பாதிக்காதா?

அடுத்து இன்னொரு விஷயம் உள்ளது.

நபி பொய் சொன்னால் அது அவர்களின் கண்ணியத்தைப் பாதிக்காதா என்று கேட்பதில் இவர்கள் உண்மையாளர்களாக இல்லை.

ஏனெனில் மூன்று சந்தர்ப்பங்களில் பொய் சொல்ல நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அதை இந்த கள்ள சலபுக் கும்பல் ஏற்றுக் கொள்கிறது. அப்படியானால் நபியவர்கள் தனது சமுதாயத்துக்கு பொய் சொல்லக் கற்றுக் கொடுத்து விட்டார் என்று ஆகுமே? பொய் சொல்வது எப்படி கண்ணியத்தைப் பாதிக்குமோ அது போல் பொய் சொல்ல வழிகாட்டுவதும் கண்ணியத்தைப் பாதிக்குமே?

போரில் பொய் சொல்வது பொய்யாக ஆகாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தி விட்டார்கள்.

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக் கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப் படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

  1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
  2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
  3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல்: முஸ்லிம் 5079

மார்க்கம் எதைப் பொய்யல்ல என்று சொல்லிவிட்டதோ அதைச் செய்வதால் எப்படி நபியின் கண்ணியம் பாதிக்கப்படும்?

மார்க்கத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொய் சொல்பவர் அல்லாஹ்வின் பார்வையில், மார்க்கத்தின் பார்வையில் பொய்யராக, பொய் சொன்னவராக ஆக மாட்டார்.

இதனடிப்படையில் போரில் நபி பொய் சொல்வதால் நபியின் கண்ணியத்திற்கு எந்த இழுக்கும் வருவதில்லை. நபி பொய் சொன்னவராக ஆக மாட்டார்கள். இந்தச் சாதாரண அறிவு கூட மூளை மழுங்கிப் போன இவர்களுக்கு இல்லை.

மார்க்கம் ஒன்றை அனுமதித்த பிறகு அதைச் செய்வதால் நபியின் கண்ணியம் பாதிக்கப்படும் என்ற வாதத்தை மனோ இச்சைவாதிகளே வைப்பார்கள். இறைவனின் வார்த்தைகளிலும், தூதரின் வார்த்தைகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை இல்லாதவர்களே இப்படிப் பேசுவார்கள். இதிலிருந்து ஹதீஸ் களின் பாதுகாவலர் என்ற இவர்களது முகமூடி கிழிந்து தொங்குவதைக் காணலாம்.

இன்னும் சொல்லப்போனால் போரில் உண்மையை அப்படியே பேசினால் தான் கண்ணியம் பாதிக்கப்படும். நபியவர்கள் ஒரு போருக்குச் செல்லும் போது என்னிடம் 200 படை வீரர்களூம், ஐம்பது வாட்களும், 50 குதிரைகளும் தான் உள்ளன. வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார்கள் என்று வைத்துக் கொள்வோம். தனது மக்களைக் காக்க கடமைப்பட்ட இவர், எதிரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி நாட்டைக் காக்க கடமைப்பட்ட இவர் இப்படி உள்ளதைச் சொல்லி, எதிரிகளுக்குச் சாதகமாக நடக்கிறாரே என்று அறிவுடைய மக்கள் நினைத்தால் அது தான் அவர்களின் கண்ணியத்தைப் பாதிக்கும்.

சில இடங்களில் உண்மையைப் பேசுவதும் கண்ணியத்தைப் பாதிக்கும் என்பது கூட இவருக்குப் புரியவில்லை.

சவூதி அரசாங்கம் ஏமனில் தனது படைகளை இறக்கி போருக்கு வருகிறது. அது குறித்து சவூதி அரசாங்கம் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக் கூடாது என்று மேற்படியார் பத்வா கொடுப்பாரா? சவூதி என்பதை இணைத்து இக்கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். அப்போது பத்வா மாறிவிடும்.

இமாம்களின் தலைப்பு இஸ்லாமாகுமா?

ஒரு ஹதீஸிற்கு, அல்லது வார்த்தைக்கு அர்த்தம் செய்யும் போது இமாம்களின் தலைப்பையும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை தன் பேச்சினிடையே விதைக்கின்றார்.

இமாம்கள் எப்படி தலைப்பிட்டு உள்ளார்களோ அதற்கேற்பவே நாம் சிந்திக்க வேண்டும், அதற்கேற்பவே பொருள் செய்ய வேண்டும், அதற்கேற்பவே நாம் நமது கொள்கையை வகுக்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்லாமல் சொல்கிறார் என்றல்ல. அப்படியே அச்சரம் பிசகாமல் சொல்கிறார்.

வஹீயை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டு கொள்கையை வகுக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்தவர் இன்றைக்கு மத்ஹபினரை விடவும் மோசமாக இமாம்களின் தலைப்பை வைத்தே இஸ்லாத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்ற பாரதூரமான கருத்தைப் பதிய வைக்கின்றார் எனில் இவரது கொள்கை ரீதியிலான பின்னோக்கிய நகர்வை என்னவென்பது?

இமாம்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் மார்க்க விவகாரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான சான்றுகளை வெளியிடுவாரா?

மறைத்து பேசுதல் – தவ்ரியத் – பாணியில் அல்லாமல் தெளிவாக, நேரடியாகச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

உலக அதிசயம்

பொய் சொல்வதை விட, பிறரை பொய் சொல்வதற்குத் தூண்டுவது தான் ஒரு மனிதரின் கண்ணியத்தைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாகும்.

அந்த அடிப்படையில் நபிகள் நாயகம் போரில் பொய் சொல்ல அனுமதி வழங்குவதன் மூலம் பிறரை பொய் சொல்லத் தூண்டியுள்ளார்கள். இது நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை பாதிப்பதாக இந்த மாலைக்கண் நோயுடைய கும்பலுக்கு தெரியவில்லை.

போர் என்பது தந்திரம் என்று கூறி பிறரை தந்திரக்காரர்களாக மாற்றியது இவர்களின் காமாலைக் கண்ணுக்குக் குற்றமாக, கண்ணியக் குறைவாகத் தெரியவில்லை.

ஆனால் நபியவர்கள் போரில் பொய் சொல்லியுள்ளார்கள், தந்திரம் செய்துள்ளார்கள் என்று நாம் ஹதீஸ்களின் அடிப்படையில் சொல்லும் போது, நபியின் கண்ணியத்தைச் சீர்குலைத்து விட்டதாகத் துள்ளிக் குதிக்கிறார்கள்.

பொய் சொல்வதை விட பொய் சொல்லத் தூண்டுவது ஒரு மனிதரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் பாரதூரமான விஷயமாகும்.

அந்த அடிப்படையில் நபியின் கண்ணியத்தைக் காக்க (?) புறப்பட்ட இந்தக் கள்ள ஸலபுக்கும்பல் நபியவர்கள் போரில் பொய் சொல்ல அனுமதி வழங்கியதையும் மறுப்பார்களா?

சஹாபாக்கள் எத்தகைய நல்ல வர்கள், அவர்களை தந்திரக்காரர் களாகத் தூண்டும் படி நபி பேசுவது நபியின் கண்ணியத்தைக் குறைப் படுத்தாதா? என்று கூறி அந்த ஹதீஸுக்கு இது போல் அற்புத வியாக்கியானம் கொடுப்பார்களா?

நபி போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்று சொல்வது நபியின் கண்ணியத்தைப் பாதிக்கும் என கூப்பாடு போடுபவர்கள், போரில் பொய் சொல்ல நபி அனுமதி வழங்கியது, தந்திரம் செய்யும் படி கூறியுள்ளது போன்றவைகளை அப்படியே ஏற்பதும், இதனால் நபியின் கண்ணியம் பாதிப்படைய வில்லையா? என்ற கேள்விக்கு எந்தச் சலனமும் இன்றி இவர்கள் மௌனம் காப்பதும் உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

பின்பாஸை விமர்சிக்கத் தயாரா?

சவூதி அறிஞரான இமாம் பின்பாஸ் அவர்கள் நபிகள் நாயகம் போரில் சொன்னது பொய்யின் வகையில் உள்ளது தான் என தெளிவாகக் கூறுகிறார்.

எங்கெல்லாம் பொய் சொல்ல அனுமதிக்கப்பட்டது என்று தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் புகாரியில் இடம்பெற்றுள்ள, “நபிகள் நாயகம் போருக்குச் செல்லும் போது வேறெங்கோ செல்வதைப் போன்று பாசாங்கு செய்து மறைப்பார்கள்’ எனும் செய்தியைக் குறிப்பிட்டு விட்டு,

“இந்தப் பொய்யில் எந்த மோசடியும் ஏமாற்று வேலையும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் நலனே நாடப்படுகிறது. எனவே போரில் இத்தகைய பொய்யினால் எந்த பிரச்சனையும் இல்லை’

என்று விளக்கம் அளிக்கிறார்.

இதிலிருந்து நபிகள் நாயகம் போரில் சொன்னது பொய் தான் என்று உறுதிப்படுத்துகிறார்.

இதோ அவர் அளித்துள்ள ஃபத்வா மற்றும் லிங்க்:

http://www.binbaz.org.sa/noor/835

இப்போது கள்ள ஸலபுக்கும்பல் என்ன சொல்லப் போகிறார்கள்?

இமாம் பின்பாஸ், நபிகள் நாயகம் போரில் பொய் சொன்னார்கள் என்று கூறி நபியின் கண்ணியத்தை அவமதித்து விட்டார் என்று சலபுக்கும்பல் கொதித்தெழுவார்களா? ஆர்ப்பரிப்பார்களா?

நாம் இந்தக் கருத்தைச் சொன்னதற்காக ஆளாளுக்கு இதர வேலையை விட்டு விட்டு இதையே முழு வேலையாக எண்ணி, அக்கினிக் குழம்பாக வெடித்துச் சிதறி, பல மணி நேரம் பேசி வீடியோ வெளியிட்ட இந்த ஸலபுக் கும்பல் பின்பாஸுக்கு எதிராகப் பொங்கி எழுவார்களா? வெடித்துச் சிதறு வார்களா? வீடியோ வெளியிடுவார் களா? அல்லது புஸ்வாணமாகிப் போவார்களா?

ஏனிந்த இரட்டை நிலை? ஏனிந்த இரட்டை நாக்கு?

நபிகள் நாயகம் போரில் பொய் சொல்லியுள்ளார்கள் என்று நாம் சொன்னால் போதும். இவர்கள் நபி மீது வைத்திருந்த (போலி) பாசம் கட்டுப்பாடற்று பொங்கி எழுந்து ஏதேதோ பேசுகிறார்கள்.

அதையே பின்பாஸ் சொல்லியுள்ளார் என்றால் அது தவறு தான் என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுகிறார்கள்.

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்திலும் இதையே தான் செய்தார்கள்.

ஆயிஷா (ரலி) குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற காரணத்தைச் சொல்லி சில ஹதீஸ்களை மறுத்தால் அது தவறு. அதையே தவ்ஹீத் ஜமாஅத் செய்தால் அது வழிகேடு, ஹதீஸ் மறுப்பு, குஃப்ரிய்யத் என்ற ஃபத்வா.

இது தான் உங்களது நடுநிலையா? உங்களது விமர்சனத்தில் நியாயம் உள்ளதா?

நபியின் கண்ணியம் பற்றிப் பேச கடுகளவும் தகுதி இல்லாத கும்பல்களில் கள்ள சலபுகளுக்கு முதலிடம் உள்ளது.

அன்னியப் பெண் வீட்டுக்கு நபியவர்கள் போவார்கள். அப்பெண் நபியவர்களுக்குப் பேன் பார்ப்பார். அங்கேயே படுத்து உறங்குவார்கள் என்று சொல்லப்படும் கட்டுக்கதையை ஹதீஸ் எனக் கூறி நியாயப்படுத்தி நபியின் கண்ணியத்தை அதிகம் குலைத்தவர்கள் இவர்கள்.

ஒரு பெண்ணிடம் “அன்னிய இளைஞனுக்கு நீ பாலூட்டு’ என்று நபி கூறினார்கள் என்ற கட்டுக் கதையை நியாயப்படுத்தும் இவர்கள் நபியின் கண்ணியம் பற்றிப் பேசலாமா?

தனக்குச் சாதகமாக பொய் சாட்சி சொன்னவரை நபியவர்கள் பாராட்டினார்கள் என்ற கட்டுக்கதையை ஹதீஸ் என இவர்கள் கூறுவதில் இருந்து நபியை எப்படி கண்ணியப்படுத்துகிறார்கள் என்பது தெரிகிறதா?

எள்ளளவுக்கும் மன நோய்க்கு ஆளாகாத அல்லாஹ்வின் தூதர் சூனியம் செய்யப்பட்டதால் மன  நோயாளியாகிப் போனார்கள் என்று கூறும் இவர்கள் நபியின் கண்ணியம் பற்றிப் பேசக் கடுகளவும் அருகதை அற்றவர்கள் என்பதையும் கூடுதல் தகவலாக சொல்லி வைக்கிறோம்.

இதிலிருந்து இவர்கள் இப்படிப் பேசியதற்குக் காரணம் மார்க்கப்பற்றோ, சரியானதை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற மார்க்க உணர்வோ அல்ல. மாறாக  காழ்ப்புணர்வே காரணம் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

—————————————————————————————————————————————————————-

இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

இஸ்லாம் என்பது அல்லாஹ் விற்குச் சொந்தமான மார்க்கமாகும். அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்,

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (3:9)

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிட மிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (3:85)

இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதன் உண்மையான பொருள் இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. (12:40)

இறைவனுக்கு மட்டுமே சொந்த மான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுயவிருப்பப்படி எதையும் சட்டமாக்கி விட முடியாது.

(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் இல்லை. அவனன்றி எந்தப் புகலிடத்தையும் நீர் காண மாட்டீர்! (18:27)

இது அகிலத்தாரின் இறைவனிட மிருந்து அருளப்பட்டது. சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.. உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை. (70:43-48)

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் “இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்என (முஹம்மதே!) கூறுவீராக! (10:15)

நபியவர்கள் தமது சுயவிருப்பப்படி தேன் குடிக்க மாட்டேன் என்று கூறியபோது இறைவன் அதனை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளான்.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (66:1)

என்ற திருமறை வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

மேலும் பத்ருப் போர் கைதிகள் விஷயமாக நபியவர்கள் சுய முடிவு எடுத்த நேரத்திலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண் தெரியாத ஸஹாபி வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்குப் போதித்த அனைத்தும் இறைச் செய்திதான். அதாவது, ஹதீஸ்கள் என்று நாம் கூறுபவை நபியவர்கள் தமது சுய இஷ்டப்படி கூறியவையல்ல. மாறாக அவையும் இறைச் செய்தி தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.

இறைத்தூதரும் கூட இறை வனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதையே இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர் களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறை வாகவே படிப்பினை பெறுகிறீர்கள் (அல்குர்ஆன் 7:3)

(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (6 :106)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள். (43:43,44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். (5:49)

இறைவன் அருளியவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஸஹாபாக்களாக இருந்தாலும், மத்ஹப் இமாம்களாக இருந்தாலும், வேறு யாருடைய கருத்தாக இருந்தாலும் அவற்றை மார்க்கமாகக் கருதி பின்பற்றக் கூடாது என்பதற்கு இது போதுமான ஆதாரமாகும்.

இந்த உலக சமுதாயம் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வற்றை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். இறைவனல்லாத மற்றவர் களின் கருத்தைப் பின்பற்றினால் அல்லது அதை மார்க்கம் என்று ஏற்றுக் கொண்டால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டான்.

மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங் களை அற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்! அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏகஇறைவனை) மறுப்பவர்கள். (5:44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் (5:45)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள். (5:47)

இறைவன் விதிக்காத சட்டத்தை இறைவன் அல்லாதவர்கள் விதித்தால் அதாவது பித்அத்துகளை உண்டாக் கினால் அவன் தன்னை இறைவனுக்கு நிகராகக் கருதிய காஃபிராவான். அந்த பித்அத்துகளைப் பின்பற்றுபவர்கள் அதனை உருவாக்கியவர்களை கடவுளாகக் கருதுகின்றார்கள். இதனைப் பின்வரும் வசனங்களி லிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (42:21)

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். (9:31)

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ் வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந் தவன் என்று கூறுவீராக! (49:16)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நபியவர்களால் காட்டித்தரப்படாத பித்அத்துகளை எதிர்த்து மிகக் கடுமையான பிரச்சாரம் செய்கின்றது. பெரும்பான்மையான இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் பிரச்சாரத்தை சமுதாய ஒற்றுமையைச் சீரழிக்கும் பிரச்சாரம் என்றே கருதுகின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அமைப்பினர் என்ன கூறுகின்றார்கள்? தர்ஹா வழிபாடு, தாயத்து தகடுகள், மீலாது, மௌலூது, போன்ற இணைகற்பிக்கின்ற பித்அத்தான காரியங்களாக இருந்தாலும், கூட்டுத் துஆ, ஜும்ஆவிற்கு இரண்டு பாங்கு, ஹத்தம் பாத்திஹாக்கள், தொழுகையின் போது தொப்புளின் மீது கைகளைக் கட்டுதல், தராவீஹ் 20 ரக்அத் தொழுதல் போன்ற மஸாயில் ரீதியான பித்அத்களுகாக இருந்தாலும் இவற்றைக் காரணமாக வைத்து சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைத்து விடக்கூடாது எனக் கூறுகின்றனர். இந்த வழிகெட்ட பிரச்சாரத்திற்குப் பலர் பலிகடாவாகி விட்டனர்.

உண்மையில் இவர்கள் ஒன்றை விளங்கவில்லை. அல்லாஹ் கூறாத ஒன்றை மார்க்கம் என்று உருவாக்குவது, பித்அத் என்று தெரிந்த பின்பும் அதைப் பின்பற்றுவது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் இணைகற்பிக்கக்கூடிய காரியம். அது நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் என்பதை அவர்கள் உணரவில்லை. இறைவனால் இஸ்லாம் என்று கட்டளையிடப்படாத ஒன்றை நாம் உருவாக்கிப் பின்பற்றினால் அதை இறைவன் சிறியது, பெரியது என்று எடுத்துக் கொள்ள மாட்டான். மாறாக தன்னுடைய அதிகாரத்தில் தலையிட்ட தாகவே எடுத்துக் கொள்வான்.

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிமார்களிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறிய சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். மேற்கண்ட அமைப்பினரின் மார்க்க அறிவற்ற பார்வையில் பார்த்தால் இது சாதாரணமான ஒன்றுதான்.

ஆனால் இறைவன் தன்னுடைய திருமறையில் நபியவர்கள் இவ்வாறு கூறியதை மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான். நபிகள் நாயகம் தேனைத் தானே சாப்பிட மாட்டேன் என்றார்கள்? அல்லாஹ்வையா இல்லையென்று சொல்லிவிட்டார்கள் என்றெல்லாம் அல்லாஹ் பார்க்கவில்லை. இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் அல்லாஹ் நாம் செய்கின்ற காரியம் சிரியதா? பெரியதா? என்பதை மட்டும் பார்க்க மாட்டான். தன்னுடைய இறைத்தன்மை சிதைக்கப்படுகிறதா என்பதையும் பார்ப்பான். பின்வரும் ஹதீஸின் மூலம் இதனை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைபியாஎனும் இடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். – அன்றிரவு மழை பெய்திருந்தது. – தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்என்று கூறினர்.

அப்போது “என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்ததுஎனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால் தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்என இறைவன் கூறினான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி (846)

நட்சத்திரத்தின் காரணமாக மழைபொழிந்தது எனக்கூறுபவன் காஃபிராவான் என்பதுதான் நபியவர் களின் தீர்ப்பு. இது சாதரணமாக அனைவரும் பேசுவதுதானே! இதற்காகவா காஃபிர் என்று நபியவர் கள் கூற வேண்டும் என்றெல்லாம் மார்க்க அறிவுடையவர்கள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் இங்கே மழையை பொழிப்பவன் இறைவன் தான் என்ற இறைவனுடைய அதிகாரம் சிதைக்கப்பட்டு நட்சத்திரம் கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தப் படுகிறது. இது தெளிவான இணை வைப்புக் காரியமாகும்.

இதிலிருந்து சிலை வணக்கம் என்ற செயலைச் செய்தால்தான் காஃபிர் என்பதல்ல. மாறாக இறை அதிகாரத்தில் கடுகளவை இறைவன் அல்லாதவர்களுக்கு வழங்கினாலும் அவன் காஃபிர்தான். இதுதான் இறைப்பார்வை.

அதுபோல் தொப்பி அணிவதும், விரலசைப்பதும் சாதரண விசயங்கள் என்று மார்க்க அறிவுடையவர்கள் எண்ண மாட்டார்கள். இங்கு தொப்பி அணிவதோ, விரலசைப்பதோ பிரச்சினையில்லை. மாறாக நபியவர்கள் தொப்பி அணிய வேண்டும் எனக் கட்டளையிடவில்லை. ஆடை என்ற அடிப்படையில் ஒருவன் விரும்பினால் அணியலாம். அணியாமலும் இருக் கலாம். ஆனால் ஒருவன் தொப்பி அணிந்தால்தான் பள்ளிக்குள் விடுவேன் என்கிறான்.

இப்போது இங்கு தொப்பிதானே என்று இறையச்சமுடைய ஒருவன் பார்க்க முடியாது. இஸ்லாம் கூறாத ஒன்றை மார்க்கமாக்க இவர் யார்? இவர் இறைவனா? என்றுதான் ஒரு முஃமின் சிந்திக்க வேண்டும்.

விரலசைத்தல் என்பது நபியவர்கள் காட்டிய சுன்னத். ஒருவன் விரலசைத்தால் ஒடிப்பேன் அடிப்பேன் என்கிறான். நபிவழி என்று தெரிந்தும், ஒருவன் மக்கள் விரும்பவில்லை; எனவே ஒற்றுமைக்காக நாம் விரலசைக்காமல் தான் இருக்க வேண்டும் என்று கூறினால்  இறைவனல்லாதவர்களுக்காவும், பிற நோக்கத்திற்காகவும் இவனும் இறைவனைப் போன்று சட்டத்தை மாற்றுகிறான். இறை அதிகாரத்தைத் தன் கையில் எடுக்கின்றான். இங்கே விரலசைத்தல் தானே, தொப்பிதானே என்றெல்லாம் இறைவன் பார்க்க மாட்டான். மாறாக இறைச்சட்டத்தை உருவாக்கவோ, மாற்றவோ அதிகாரம் பெற்றவன் யார்? என்பதைத்தான் பார்ப்பான்.

இதை இவர்கள் விளங்காத காரணத்தினால்தான் இன்றைக்கு சின்னச் சின்ன விஷயங்களுக்காக சமுதாய ஒற்றுமையை குலைத்துவிடக் கூடாது. மஸாயில் பிரச்சினைகளை பேசக்கூடாது என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். அதாவது அழியக்கூடிய இவ்வுலகத்திற்காக அழியாத மறுமையில் நாம் நிரந்தர நரகத்திற்குச் செல்வதற்கு வழிகாட்டுகிறார்கள். நிச்சயமாக நாமும் சென்றுவிடக் கூடாது. அவர்களும் சென்று விடக்கூடாது.

அறியாதவர்கள் நம்மைக் குழப்ப வாதிகள் என்றாலும், பிரிவினை வாதிகள் என்றாலும் எதற்கும் அஞ்சாமல் இறைச்சட்டத்தை நிலை நாட்டக் கூடியவர்களாக நாம் திகழ வேண்டும். மார்க்க விரோதிகளின் மயக்கப் பிரச்சாரத்திற்கு நாம் அடிபணிந்துவிடக்கூடாது.

மக்களை இறைச்சட்டத்தைப் பின்பற்றக்கூடியவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலட்சியம். உலகமே எதிர்த்து நின்றாலும் சிறிய விஷயத்திற்கும் பெரிய விஷயத்திற்கும் இறைவனே சட்டம் வகுப்பவன் என்பதை உலகறியச் செய்வதே தவ்ஹீத் ஜமாஅத்தின் கடமை என்பதை தவ்ஹீத்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 15)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு (உலகத்திலுள்ள) அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ் வுக்காகவே நேசிப்பது. 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப் பது. இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 16)

இன்றைக்கு இஸ்லாமிய அமைப்பு கள் முஸ்லிம்கள் கொல்லப்படு வதையும், எதிரிகளால் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுவதையும் பார்த்து இதனைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் ஒன்றுபட வேண்டும். அதற்காக மக்கள் செய்யும் அனாச்சாரமான பித்அத்தான காரியங்களைக் குறை சொல்லி ஒற்றுமையை குலைக்கக் கூடாது என்கின்றனர். இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் தான் எனக் கூறுகின்றனர்.

முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காகப் போராட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்காக முன்னிலையில் நிற்பதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துதான். ஆனால் அழியக்கூடிய இவ்வுலகில் அவர்களைப் பாதுகாப்பதற்கு பாடுபடுவது போல் அழியாத மறுமையில் அவர்களைக் காப்பாற்ற அதைவிட ஆயிரம் மடங்கு பாடுபட வேண்டும். மக்கள் செய்யும் பித்அத்தான காரியங்களைத் தடுக்காவிட்டால் மறுமையில் அவர்கள் நரகத்திற்குச் செல்வார்களே! இதனைத் தடுக்காமல் உண்மையில் மறுமையை நம்பியவர்கள் வாழமுடியுமா?

இன்றைக்குத் தீய காரியங்கள் எவை என கேட்டால் கொலை, கொள்ளை, விபச்சாரம், வட்டி எனக் கூறுவோம். ஆனால் இவையெல்லாம் மாபாவங்கள், பெரும்பாவங்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதையெல்லாம் விட கொடிய பாவம் பித்அத்தான காரியங் கள் தான். அதாவது, இறைவன் கட்டளையிடாத காரியங்களை இஸ்லாம் என்று கருதிச் செய்வதாகும். இதை நாம் கூறவில்லை. இதோ அல்லாஹ்வின் தூதர் கூறுவதைப் பாருங்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களிலெல்லாம் மிகத் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ (1560)

நபியவர்கள் காட்டித் தராத வழிமுறைகளை உருவாக்குவதை அல்லாஹ் சாதாரண குற்றமாகப் பார்க்க வில்லை. மாறாக அவர்களை மதம் மாறியவர்களாகவே அல்லாஹ் பார்க்கின்றான். அதாவது பித்அத்துகளைப் பின்பற்றுபவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை. மாறாக அவர்கள் உருவாக்கிய புதிய மதத்தையே அவர்கள் பின்பற்று கின்றனர். இதையும் நாமாகக் கூறவில்லை. இதோ நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே “அல்கவ்ஸர்தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.

“(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்என்று சொல்லப் படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்து வானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்து வானாக!என்று (இரண்டு முறை) கூறுவேன். (புகாரி 6584)

அதற்கு இறைவன் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று சொல்வான். (புகாரி 6585)

“உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டார்கள்” என்றார். (புகாரி 6587)

புகாரி 6584வது ஹதீஸில் மார்க்கத்தை மாற்றியவர்கள் என்றும், 6585வது ஹதீஸில் பழைய மதத்திற்குத் திரும்பியவர்கள் என்றும், 6587வது ஹதீஸில் மதம் மாறியவர்கள் என்றும் பித்அத்துகளைச் செய்ப வர்களை அல்லாஹ் கூறியுள்ளான்.

அன்பிற்குரிய சகோதரர்களே சிந்தித்துப் பாருங்கள். நபியவர்கள் காட்டித் தராத காரியங்களைச் செய்வதை மதம் மாறுதல் என்றும், புதுமார்க்கம் என்றும் நபியவர்கள் எச்சரித்த பின்னரும் இது போன்ற காரியங்களைச் செய்யும் நம்முடைய சமுதாயத்திற்கு நாம் எச்சரிக்கை செய்யாமலிருக்கலாமா?

இப்போது பதில் கூறுங்கள்! நாம் பாடுபட வேண்டிய முதல் விஷயம் பித்அத்துகளை ஒழிப்பதா? அல்லது சமுதாய ஒற்றுமை என்ற பெயரில் அவற்றைக் கண்டு கொள்ளாமல் இருப்பதா?

மறுமை நம்பிக்கையையும், இறை வசனங்களையும், நபி மொழிகளையும் மனக்கண் முன் நிறுத்தி, சிந்தித்துப் பாருங்கள். அற்ப உலக லாபத்திற்காக மறுமையை நாசமாக்கும் இத்தகைய சமுதாய அமைப்புகளைத் தான் மிகப்பெரும் வைரஸ் கிருமிகளாக நாம் கருத வேண்டும். இறைச் சட்டங்களுக்கு மாற்றமாக எதைச் செய்தாலும் நிச்சயமாக அது நன்மையாக மாறாது. நாம் நன்மை என்று எண்ணிக் கொண்டாலும் சரியே. இதோ நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ (2697)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (3243)

பரிசுத்த இஸ்லாமிய மார்க்கம் நபியவர்களின் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது. அவர்களுக்குப் பிறகு வேறு யாரிடமும் தேவையாகாத அளவிற்குத் தெளிவான மார்க்கத்தில் நம்மை விட்டுச் சென்றுள்ளார்கள்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட் டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் நான் உங்களை விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி)

நூல்: அஹ்மத் (16519)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டு விட்டது. இனி இம்மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டு வதற்கோ, குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

முதல் மனிதருக்கு இறைவனின் கட்டளை

முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் எல்லா விதமான ஞானங்களையும் கற்றுக் கொடுத்தான். ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான். இப்படி எல்லா விதமான அறிவு ஞானத்தை அல்லாஹ் ஆதம் அவர்களுக்கு வழங்கியிருந்தாலும் அவர்களை பூமிக்கு அனுப்பும் போது தன்னுடைய இறைச்செய்தியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கின்றான்.

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:38)

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர் களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வருமானால் எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கிய சாலியாகவும் மாட்டார் (2:123)

மார்க்க விசயங்களில் நபிமார்களாக இருந்தாலும் அவர்களாக எதையும் தங்களுடைய அறிவின் மூலம் சிந்தித்து பின்பற்றுவதற்கு அதிகார மில்லை என்பதை இதிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதனை வேறு வகையில் கூறுவதாக இருந்தால் இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைகள் மட்டும் தான். இதில் இறைக்கட்டளைகளுடன் வேறு யாருடைய கருத்தும் கலந்து விடக்கூடாது என்பதைத்தான் அல்லாஹ் விரும்புகிறான்.

நபிகள் நாயகமும் இறைச் செய்தியையே பின்பற்ற வேண்டும்.

உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொரு வருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். (அல்குர்ஆன் 5:48)

(முஹம்மதே!) உமது இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக (அல்குர்ஆன் 6:106)

இறைத்தூதருக்குக் கட்டுப்படுதல்

திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் இறைத் தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறான். இறைத் தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று இறைவன் கட்டளையிடு வதற்குக் காரணம் இறைவனுடைய செய்தியை இறைத்தூதர்தான் நமக்கு எடுத்துக் கூறுவார். இறைத்தூதர் மார்க்கமாகப் போதிப்பது அவருடைய சொந்தக் கூற்று கிடையாது. சில நேரங்களில் நபியவர்கள் இறைவனின் அனுமதியில்லாமல் சில வார்த்தை களைக் கூறிய காரணத்தினால் அவர்கள் இறைவனால் கடுமையாகப் கண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

இறைத் தூதராக இருந்தாலும் இறை மார்க்கத்தில் அவர் தன்னுடைய சுய கருத்தினை கூற முடியாது என்பதை நாம் தனியாக விளக்கியுள்ளோம்.

இங்கே நாம் மிக முக்கியமாக விளங்க வேண்டியது இறைத் தூதருக்குக் கட்டுப்பவதன் நோக்கம், அவர் இறைச்செய்தியை கூறுவதுதான். மார்க்கத்தில் இறைவன் வகுத்தது தான் சட்டமே தவிர அங்கு வேறு யாருடைய கருத்தும் கலந்துவிட இறைவன் அனுமதிக்க மாட்டான்.

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற் காகவே தவிர எந்தத் தூதரையும் அனுப்புவதில்லை. (4:64)

அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் நடக்கவேண்டும் என்பதற் காகத்தான் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டார்கள். இறைத் தூதருக்குக் கட்டுப்படுதல் என்பதே இறைவனுக் காகத்தான். அதாவது இறைச் செய்தியைத்தான் நாம் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியைப் பின்பற்ற வேண்டும் என்றால் அதைக் கூறும் இறைத்தூதரின் வார்த்தைகள் இறைச் செய்தி என நம்பிக்கை கொண்டு அவ்வார்த்தைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். இதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் தெளிவு படுத்துகின்றான்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை (அல்குர்ஆன் 4:80)

இறைச்செய்திகளை இறைவனிட மிருந்து பெற்று இறைத்தூதர் அறிவிக்கின்ற காரணத்தினாலேயே இறைவன் இறைத்தூதருக்குக் கட்டுப் படுவதை தனக்குக் கட்டுப்படுவதாக சொல்லிக் காட்டுகின்றான். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள் (அல்குர்ஆன் 7:158)

அல்லாஹ் இறைத்தூதருக்கு கட்டுப்படுமாறு கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் கூறுகிறான். அதாவது “இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்!” என்ற வாசகமே அது.

நீங்கள் அல்லாஹ்வை விரும் பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக (அல்குர்ஆன் 3:311)

இறைக்கட்டளைகளுக்கு முழுமை யாகக் கட்டுப்படுவதுதான் இறை நேசத்தைப் பெற்றுத்தரும். அப்படிப் பட்ட இறைநேசத்தைப் பெறுவதற்கு நபிக்குக் கட்டுப்பட வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

நபியவர்கள் இறைக்கட்டளைகளை எடுத்துக் கூறுகின்ற காரணத்தினால் அவர்களுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதுதான் இறைக் கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். இதன் காரணமாகத் தான் இறைநேசம் பெறுவதற்கு இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

அல்லாஹ்வுக்கும், இத்தூத ருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்எனக் கூறுவீராக (அல்குர்ஆன் 3:32)

இறைத்தூதருக்குக் கட்டுப்பட மறுத்தால் இறைவனை மறுப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைத்தூதர் தான் இறைவன் என வழிகேடர்கள் பொருள் கொள்வதைப் போன்று நாம் விளங்கி காஃபிர்களாகி விடக்கூடாது. மாறாக இதன் சரியான கருத்து இறைத்தூதர் கூறுவது அவரது சுய கருத்தல்ல. இறைக் கட்டளைகள். அவருடைய கருத்தை நாம் புறக்கணித்தால் இறைத்தூதரின் சுய கருத்தை நாம் புறக்கணிக்க வில்லை. மாறாக இறைவனின் கருத்தையே புறக்கணிக்கின்றோம். இதன் காரணமாகத் தான் அவர்களை காஃபிர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

—————————————————————————————————————————————————————-

டிசம்பர் 2015 இதழின் தொடர்ச்சி…

தூதரின் பக்கம் திரும்புவோம்

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது.

எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறை! இது தொடர்பான செய்திகளைக் கடந்த டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

வணக்கம் தொடர்பான பிரச்சனை

நம்மிடம் இருக்கும் இறை நம்பிக்கையை வெளிபடுத்தச் செய்யும் வகையில் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் தொடர்பாக மட்டும் விதவிதமான செயல்பாடுகள் முஸ்லிம்களிடம் இருப்பது கண்கூடு. இபாதத் – வணக்க வழிபாடுகள் தொடர்பான சர்ச்சைகள் நிகழும் போது இமாம்கள், பெரியார்கள் போன்ற முன்னோர்களின் செயல்முறையின் பக்கம் படையெடுப்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். இவ்வாறு தங்களின் சிந்தனைத் தேடலுக்குத் தோதுவாக இருக்கும் முன்னோர்களை நோக்கிச் செல்லும் காலமெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும்.

அல்லாஹ்வின் தூதரை நோக்கித் திரும்பும் போது மட்டுமே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பயன்படுத்தி சஹாபாக்கள் தங்களுக்கு மத்தியிலான முரண்பாடுகளைக் களைந்து எறிந்தார்கள் என்பதற்கு சான்றுகளைப் பார்ப்போம்.

என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்: “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும்போது வேட்டையாடப் பட்ட மாமிசத்தை உண்ணலாமா?” என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்: பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக் கிறோம்!என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதைச் சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் “இல்லை!என்றனர். “அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)

நூல்: புஹாரி (1824)

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நான் பெருந்துடக்குடையவனாகி விட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. (இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டார். அப்போது (அங்கிருந்த) அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “நாம் ஒரு (போர்ப்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம்; அதில் நானும் நீங்களும் இருந்தோம். அப்போது (பெருந்துடக்கு ஏற்பட்ட நமக்கு குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை ஆகவே) நீங்கள் தொழவில்லை; நானோ (உளூவிற்குப் பதிலாக தயம்மும் செய்வது போன்று குளியலுக்குப் பதிலாக) மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் தரையில் அடித்து அவற்றில் ஊதிவிட்டு அவ்விருகைகளால் தமது முகத்தையும் (மணிக்கட்டுகள் வரை) இரு கைகளையும் தடவிக் காண்பித்து “இவ்வாறு செய்திருந்தால் அது உமக்குப் போதுமேஎனக் கூறியது உங்களுக்கு நினைவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி), நூல்: புஹாரி (338)

குற்றம் தொடர்பான பிரச்சனைகள்

நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களுக்குத் துன்பம் தரக் கூடாது; அவர்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்று பொதுநலம் போதிக்கும் மார்க்கத்தில் இருக்கிறோம்.

இருப்பினும், தமது நலத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு அடுத்த மக்களிடம் வரம்பு மீறும் மக்கள் இருக்கிறார்கள். இப்படி ஏதேனும் வகையில் எவருக்கு இடையேனும் சண்டைகள் வந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி நீதம் செலுத்தும் வழிகாட்டுதல் நபிகளாரிடம் இருக்கிறது. மாமனிதர் அவர்கள் தலைசிறந்த சட்ட வல்லுநர். அநீதத்தை ஒரு போதும் ஆதரிக்காதவர். ஆதலால் தான் அன்றைய கால மக்கள் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள நபிகளாரிடம் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைல்குலத்துப் பெண்கள் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தி யின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில் பட்டுவி ட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண் அடிமையை, அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (5758)

நபி (ஸல்) அவர்களிடம் (யன்ன் நாட்டிலுள்ள) “ஹள்ர மவ்த்எனும் இடத்தைச் சேர்ந்த மனிதர் ஒருவரும் “கிந்தாஎனும் குலத்தைச் சேர்ந்த இன்னொரு மனிதரும் வந்தனர். அப்போது ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தைக்குச் சொந்தமான நிலத்தை இவர் ஆக்கிரமித்து விட்டார்என்று கூறினார். அதற்கு கிந்தா குலத்தைத் சேர்ந்த அந்த மனிதர், “அது என் கைவசமுள்ள என்னுடைய நிலம்; அதில் நான் விவசாயம் செய்து வருகிறேன்; அதில் இவருக்கு எந்த உரிமையும் கிடையாதுஎன்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதரிடம், “(உமது வாதத்தை நிரூபிப்பதற்கு) உம்மிடம் ஆதாரம் ஏதும் உண்டா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லைஎன்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் இவர் சத்தியம் செய்வதுதான் உமக்கு (வழி)என்று கூறினார்கள். உடனே ஹள்ர மவ்த்தைச் சேர்ந்த அந்த மனிதர் “அவர் (துணிந்து பொய் சொல்லும்) பொல்லாத மனிதர். தாம் எதற்குச் சத்தியம் செய்கிறோம் என்பதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார். எந்த விவகாரத்திலும் அவர் நேர்மையைப் பற்றி யோசிப்பவரில்லைஎன்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைத் தவிர உனக்கு வேறு வழி கிடையாதுஎன்று கூறினார்கள். உடனே (பிரதிவாதியான) அந்த (கிந்தா குலத்து) மனிதர் சத்தியம் செய்வதற் காக (குறிப்பிட்ட இடத்திற்கு)ச் சென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவருடைய செல்வத்தை உண்பதற்காக அநியாயமாக அவர் பொய்ச் சத்தியம் செய்தால், அல்லாஹ் அவரைப் புறக்கணிக்கும் நிலையிலேயே (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் (223)

தூதரின் வழியே தூய வழிமுறை

நபித்தோழர்கள் தங்கள் வாழ்வில் வரும் சில வகையான பிரச்சனை களுக்கு மட்டுமே தூதரிடம் சென்றார்கள் என்று கருதிவிடக் கூடாது. எல்லா விதமான சிக்கல்களுக்கும் தூதரிடமே தீர்வை நாடினார்கள். அதை நிலைநாட்டி னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல, இறந்த பிறகு ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் மூலம் தங்களுக்கு இடையே வரும் கருத்து வேறுபாடுகளுக்குத் தக்க பதில்களைத் தெரிந்து கொண்டார்கள்.

தாங்கள் மட்டுமல்ல! தங்களை அடுத்து வரும் தாபியீன்களுக்கும் இப்படித்தான் மார்க்கத்தை அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள். இது கற்பனையான சொந்த கருத்து அல்ல. இந்த உண்மையைக் கீழ்வரும் செய்தியின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச் சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லைஎன்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்என்று கூறியுள்ளார்கள்என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற் றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்என்று உன்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: புஹாரி (6245)

அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்அப்வாஎனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் தமது தலையைக் கழுவலாம்என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாதுஎன்றார்கள். இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதற் காக அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப் பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக் கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக் கொண்டிருந் தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். “நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஹ்ராம்கட்டியிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார்கள்?” என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்என்று சொன்னேன். அபூ அய்யூப் (ரலி) அவர்கள் தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், “தண்ணீர் ஊற்றுஎன்றார்கள். அவர் தண்ணீர் ஊற்ற, அபூ அய்யூப் (ரலி) அவர்கள், பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுச் சென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, “இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த் திருக்கிறேன்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (2278)

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “மூசா (அலை) (அவர்கள் சில ஞானங்களைக் கற்றுக் கொள்வதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர், “களிர்அவர்கள்தானா என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு வழக்காடிக் கொண்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அவர், களிர் (அலை) அவர்கள் தான்என்றார்கள். அப்போது உபை பின் கஅப் அல்அன் சாரீ (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, “அபுத்துஃபைல் அவர்களே! இங்கே வாருங்கள். நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாக வழக்காடிக் கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: பனூ இஸ்ராயீல் மக்களின் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், “இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)என்று சொன்னார்கள். உடனே மூசா (அலை) அவர்களுக்கு, “இருக்கிறார்; அவர்தான் நம் அடியார் களிர் ஆவார்என்று அல்லாஹ் (வஹீ) அறிவித்தான். அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்க வழி கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கி, “நீர் எந்த இடத்தில் மீனைத் தவற விடுகிறீரோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லும். அங்கு களிரைச் சந்திப்பீர்என்று அவரிடம் கூறப் பட்டது. அவ்வாறே மூசா (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய தூரம்வரை (தம் உதவியாளருடன்) நடந்தார்கள். பிறகு தம் ஊழியரிடம் “நமது காலை உணவைக் கொண்டு வாரும்என்று கூறினார்கள். அதற்கு மூசா (அலை) அவர்களின் உதவியாளர், “கவனித்தீர்களா! நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்து விட்டேன். அதைக் கூறவிடாமல் ஷைத்தான் தான் என்னை மறக்கச் செய்து விட்டான்என்று கூறினார். மூசா (அலை) அவர்கள், “அதுதான் நாம் தேடிவந்த இடம்என்று தம் உதவியாளரிடம் சொல்ல, இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள் (18:63-65). பின்னர் அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நூல்: முஸ்லிம் (4746)

அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்து கிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழு பவர் யார்?” என்று கேட்டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இன்னொரு நபித் தோழர் அபூமூசா (ரலி) ஆவார்என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

நூல்: முஸ்லிம் (2004)

நபித்தோழர்கள் மட்டுமல்ல தாபியீன்கள், தபவுத் தாபியீன்கள், இமாம்கள் ஆகியோர் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவதுதான் மார்க்கம் என்பதில் ஒருமித்தக் கருத்தில் இருந்தார்கள். இதற்குச் சான்றாக இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன. இவர்கள் யாருமே தங்களுடன் இருக்கும் சக தோழர்களின் சுய கருத்தை மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வில்லை என்பதை இன்றைய மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தூதரை நோக்கி வாருங்கள்

நபித்தோழகள் முதல் இமாம்கள் வரை அனைவரும் நபிமொழியைக் கவனித்து தங்களுக்குப் புரிந்த வகையில் மார்க்கத்தைக் கடைப் பிடித்தார்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து எந்தவொரு வஹீயும் வராது. அவர்களிலும் நபிமொழியை சரியாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள்; தவறாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள். சில செய்திகளை கூடுதல் குறைவாக விளங்கியவர்களும் இருக்கிறார்கள்.

எனவே, ஏக இறைவனால் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவன் வழங்கிய வேதத்திற்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியா மலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

திருக்குர்ஆன் (5:104)

அல்லாஹ் அருளியதை நோக்கி யும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடி யாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

(திருக்குர்ஆன் 4:61)

சகோதரர்களே, இந்த வசனத்தின் கண்டனத்தைப் படித்த பிறகாவது விரைவாக முடிவெடுங்கள். முன்னோர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் சுய விளக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனது தூதரை நோக்கி வாருங்கள். அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழியும் மட்டுமே மார்க்கம் என்பதில் நாம் உறுதியோடு இருப்போம். இதற்கு எதிராக இருக்கும் காரியங்களை விட்டும் விலகி இருந்து, சிறப்பாக செயல்பட்டு அல்லாஹ்வின் அருளால் ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல் தொடர்: 38

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

மரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது; அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோம்.

முஸ்லிம்களின் நம்பிக்கைப் பிரகாரம் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை. இறைவனால் வானத்தின் பால் உயர்த்தப்பட்டார்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றோம். கடைசிக் காலத்தில் இந்தப் பூமிக்குத் திரும்பவும் வந்து சில காலம் வாழ்ந்து தான் மரணிப்பார்கள்.

அப்படிப்பட்ட, தற்போது வரை உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியவர்கள், தற்போது நாம் செய்யக்கூடியதை அறிகிறார் என்று சொல்ல முடியுமா? அதிலும் குறிப்பாக இறந்து போன, மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்களை விட உயிரோடு இருக்கின்றவர்கள் நாம் செய்யக்கூடிய செயல்களை அறிவதற்குச் சாத்தியம் இருக்கிறது. மேலும் மண்ணறைக்குள் இருந்து உலகத்தைப் பார்ப்பதை விட வானத்தில் இருந்து பார்ப்பது தான் மிகவும் எளிதும் கூட. வானத்திலிருந்து நாம் அனைத்தையும் பார்த்து விடலாம்.

ஆனால் இறைவன் மறுமையில் நபி ஈஸா அவர்களை எழுப்பி விசாரிக்கும் போது கிறித்தவர்கள் தன்னை வணங்கியதைக் கூட அவர்களால் அறிய முடியவில்லை என்பதை திருக்குர்ஆனிலே நாம் பார்க்க முடிகிறது.

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்என்று அவர் பதிலளிப் பார். “நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்.) (அல்குர்ஆன் 5.116,117)

உயிரோடு இருக்கின்ற ஒரு நபியால் இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடியாத போது, இறந்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்ட அப்துல் காதிர் ஜீலானியால் அறிய முடியுமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உயிரோடு இருக்கின்ற ஈஸா நபியால் இந்த உலகத்தில் உள்ளதை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும். வேறு எந்த நபிமார்களாலும் அறிய முடியாது என்று நாம் சொல்லும் போது, நம்மில் சிலர், ஈஸா நபி அறியாத விஷயங்களைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு அந்த ஆற்றல் இருக்கின்றது என்று சொல்வார்கள்.

ஆனால், கீழ்க்கண்ட செய்தியை நாம் படிக்கும் போது நபி (ஸல்) அவர்களும் இந்த உலகத்தில் என்ன நடந்தது என்பதை அறிய முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். உயிரோடு இருக்கும் போது வேண்டுமானால் அவர்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் அறிவார்கள் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லாத வகையில் பின்வரும் செய்தி அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்என்று சொல்வேன். அதற்கு “இவர் கள் உங்களு(டைய மரணத்து)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக் குத் தெரியாதுஎன்று கூறப்படும். அப்போது நான், நல்லடியார் (ஈசா நபி) சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!என்று பதிலளிப்பேன். அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டு தான் இருந்தார்கள்என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4625

மேலும் இந்தச் செய்தி 4740, 6526, 6572, 6582, 6585, 6586, 704, 7049 முஸ்லிம் 365, 4247, 4250, 4259, 5104 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில், நபியவர்கள் பூமியில் உயிருடன் இருக்கும் வரைக்கும் தான் மக்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனிப்பவர்களாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் மரணித்த பிறகு மக்கள் செய்வதைக் கண்கானிக்க முடியாதவர்களாக இருந்தார்கள் என்பதும் நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள். பதில் தர மாட்டார்கள். அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு நாம் இத்தனை ஆதாரங்களை மேற்கோள் காட்டிச் சொல்லும் போது, இந்தக் கப்ரு வணங்கிகள், தர்ஹா வழிபாட்டு ஆதரவாளர்கள் “இறந்தவர்கள் செவியேற்பார்கள். அவர்கள் அற்புதங் கள் செய்வார்கள். அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்பதற்கு எங்களிடத்தில் ஆதாரம் இருக்கிறது என்கின்றனர். நாம் காட்டிய ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்து விட்டு, இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு எங்களிடத்தில் வேறு ஆதாரங்கள் இருக்கின்றது என்று சொல்கிறார்கள்.

அப்படி அவர்கள் வைக்கக்கூடிய ஆதாரங்களையும் அதற்கு நம்முடைய விளக்கத்தையும் இனி பார்ப்போம்.

இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரு மாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்என்பார். பிறகு “(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். நிராகரிப் பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “எனக்குத் தெரியாது; மக்கள் சொல் வதையே நானும் சொல்லிக் கொண் டிருந்தேன்என்பான். அப்போது அவனிடம் “நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.

நூல்: புகாரி 1338

மேலும் இந்த செய்தி புகாரி 1285, முஸ்லிம் 5116, திர்மிதீ 991, அபுதாவூத் 4127 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

“மக்கள் மய்யித்தை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எப்போதும் கேட்கிறது என்று நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது.

அப்படி நாம் விளங்கக் கூடாது என்பதற்காகத் தான் நபியவர்கள் “திரும்பிச் செல்லும் போது செருப்போசையைக் கேட்கிறது” என்று கூறுகிறார்கள். திரும்பிச் செல்லும் போது என்ற வார்த்தை, எப்போதும் கேட்காது, திரும்பிச் செல்லும் போது மட்டும் தான் கேட்கும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

ஒருவரை மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டு, நம்மை விட்டு எல்லோரும் திரும்பிச் செல்லும் போது, அந்த மய்யித்துக்கு நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்பதை உணர்த்துவதற்காகத் தான் இறைவன் இந்த ஒரு ஏற்பாட்டை செய்கிறான்.

எனவே இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்று கூறுபவர்கள் பல்வேறு திருமறை வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் வசதியாக ஒன்றை மறைத்து விடுவார்கள்.

மக்கள் திரும்பிச் சென்றவுடன் மலக்குமார்கள் இறந்தவரிடம் வந்து விசாரணை செய்கிறார்கள். அவர் மலக்குகளின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டால் மலக்குகள் அவரை நோக்கி “அல்லாஹ் அவரை அவருடைய படுக்கையிலிருந்து எழுப்புகின்ற வரை நெருக்கமான வர்களைத் தவிர வேறு யாரும் எழுப்ப முடியாதே அப்படிப்பட்ட புது மாப்பிள்ளை போன்று தூங்கு” என்று கூறி விடுவார்கள். தீயவராக இருந்தால் அவருக்கு கியாமத் நாள் வரை வேதனை செய்யப்படும் என்பதையும் நாம் ஹதீஸ்களில் காண்கிறோம். (பார்க்க: திர்மிதி 991)

இறந்தவர்களை இறைவன் கியாமத் நாளில் தான் எழுப்புவான். எனவே இறந்துவிட்ட நல்லடியார்கள் கியாமத் நாள் வரை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதையும் அறிய மாட்டார்கள். அதேபோன்று கெட்டவர்கள் கடுமை யான முறையில் அவர்களுடைய விலா எலும்புகள் நொருங்கி போகின்ற அளவுக்கு வேதனை செய்யப்பட்டு கொண்டு இருப்பார்கள். அவர்களும் நாம் செய்வதை அறிய மாட்டார்கள் என்பதைத் தான் இந்த ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஆக மேற்கண்ட ஹதீஸை வைத்து இறந்தவர்கள் செவியேற் பார்கள் என்ற கருத்து தவறான வாதமாகும்.

அதே நேரத்தில், இந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவுமில்லை. என்ன அளவுகோல் சொல்லப்பட்டிருக் கின்றதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். அடக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மட்டும் தான் செருப்போசையை கேட்பார்கள். பிறகு அதுவும் முடியாமல் போய்விடும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அவர்கள் வைக்கக் கூடிய இரண்டாவது வாதம், பத்ருப் போர் முடிந்த பிறகு நடந்த சம்பவமாகும்.

அந்தப் போரில் கொல்லப்பட்ட எதிரிகள் அங்கு இருந்த பாழடைந்த கிணற்றில் போடப்பட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை வைத்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்று வாதிடுகின்றனர். அந்தச் சம்பவம் பின்வருமாறு,..

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபி (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்த மானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தர விட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆகவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின் றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி (ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங் களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணை யாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லைஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி)

நூல்: புகாரி (3976)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிணற்றில் போடப்பட்ட காஃபிர்களை நோக்கி பேசும் போது உமர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! உயிரில்லாத உடல்களிடம் என்ன பேசுகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். அதற்கு நபியவர்கள் பதிலளிக்கும் போது, “இப்போது அவர்கள் நான் அவர்களிடம் கூறுவதை கேட்கிறார்கள்என்று கூறுகிறார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: நஸயீ 2076

இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்றிருக்குமானால் நபியவர்கள், “இறந்தவர்கள் கேட்கிறார்கள்’ என்று பொதுவாகக் கூறியிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கூறவில்லை. “இப்போது கேட்கிறார்கள்” என்று தான் கூறுகிறார்கள்.

எனவே, அந்த நேரம் தவிர எப்போதும், வேறு யாரும் அவ்வாறு கேட்க மாட்டார்கள் என்பதைத் தான் நாம் விளங்கிக் கொள்ள முடியும். எனவே இது பத்ருப் போரில் கொல்லப்பட்ட காஃபிர்களுக்கு மட்டும் தான் உரியதே தவிர அனைத்து இறந்தவர்களுக்கும் உரியது கிடையாது.

மேலும் இந்த ஹதீஸில் ஒரு பகுதியை இவர்கள் வசதியாக மறைத்து விடுகிறார்கள். இந்த ஹதீஸின் மூலம் இறந்தவர்கள் எப்போதும் கேட்கிறார்கள் என்ற இல்லாத கருத்தை விளங்கிக் கொள்ளக் கூடிய இவர்கள் நபியவர்கள் இதனைத் தொடர்ந்து “அவர்கள் கேட்டாலும் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்” (முஸ்லிம் 5121) என்று கூறுகின்ற வாசகத்தை மறைத்து விடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்த ஹதீஸிலிருந்து இறந்தவர்கள் எப்போதும் கேட்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் “அவர்கள் பதிலளிக்க சக்தி பெற மாட்டார்கள்” என்றும் வருகிறது. ஆனால் நபியவர்களின் இந்தக் கூற்றுக்கு மாற்றமாக இவர்கள் இறந்தவர்கள் பதிலளிப்பார்கள் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர். இது மாபெரும் இணைவைப்புக் காரியமாகும்.

இவை தவிர “அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது” என்று கூறும் நூற்றுக் கணக்கான வசனங்கள் திருக் குர்ஆனில் உள்ளன.

மேலும் இந்த ஹதீஸை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அருமையான விளக்கத் தையும் பாருங்கள்.

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: “குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப் படுகின்றார்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபி -ஸல்- அவர்கள் அப்படிச் சொல்ல வில்லை.) “இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக் கின்றனர்என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என்று சொன்னார்கள்.

(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிற தென்றால், “(குறைஷித் தலைவர் களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி ஸல்-அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று உமர் -ரலி- அவர்கள் கேட்ட போது) “நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற் கிறார்கள்என்று நபியவர்கள் சொல்லவில்லை.)

பிறகு, (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:

உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (27:80), (நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது. (35:22) “நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும் போது (இந்நிலை ஏற்படும்)என ஆயிஷா (ரலி) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.

நூல்: புகாரி (3978, 3979)

மேலும், இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்கின்ற இஸ்லாத்தின் அடிப்படையை மிகச் சரியாக புரிந்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “உயிரில்லாத உடல் களிடம் என்ன பேசுகின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு நபிகளார் பொதுவாக இறந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்று கூறாமல், “இப்போது அவர்கள் கேட்கிறார்கள்” என்று வரையறுத்து கூறுவதையும், “அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்” என்ற நபிமொழியின் இறுதிப் பகுதியையும் கருத்தூன்றிப் படிப்பவர்கள், இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு எதிராக அமைந்துள்ள இச்செய்தியை ஆதாரமாகக் காட்டமாட்டார்கள்.

—————————————————————————————————————————————————————-

எத்தி வைக்கும் யுக்தி       – 4

செல்லும் வழியெங்கும் ஏகத்துவப் பிரச்சாரம்

எம்.எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

நமது பிரச்சாரங்களுக்குத் தடையாக இருக்கின்ற பயிற்சின்மையைப் பற்றி கடந்த இதழில் கண்டோம். மேலும் பேச்சாளர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் ஏற்படுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் மார்க்கத்தை எத்திவைப்பதற்கு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதைப் பற்றி இவ்விதழில் நாம் காண்போம்.

இன்பத்திலும், துன்பத்திலும் நம்மால் இயன்றளவு எத்திவைப்போம் என்ற உறுதிப்பாட்டை நாம் எடுக்க வேண்டும் என்பதற்கு கீழ்க்     கண்ட ஹதீஸ்கள் சிறந்த முன்னுதாரணங்களாகும்.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அல்லாஹ்வின் தூதருடைய புதல்வர் இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக் காகவும் கிரகணங்கள் ஏற்படுவ தில்லை. அவற்றை நீங்கள் கண்டால் கிரகணம் விலகும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1671

உசாமா பின் ஸைத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்-ரலி) தம் மகன் மரணத் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, “எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!என்றும் கூறி அனுப்பினர்கள். அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ் வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப் பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப் போன பழைய தோற்துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?” என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் விதைத்த இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடைய வர்க்கே இரக்கம் காட்டுகிறான்என்றார்கள்.

நூல்: புகாரி 1284

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேரனின் மரணத் தறுவாயில் கூட, பொறுமை குறித்துப் போதிக்கிறார்கள். நபியவர்களது மகன் இறந்த செய்தியையும் கிரகணத்தையும் முடிச்சுப் போட்டு மக்கள் பேசிக் கொள்ளும் போது, அதைக் கண்டிக்கிறார்கள். மக்களிடம் ஏற்பட்ட அந்த மூட நம்பிக்கையைத் தகர்த்து எறிகின்றார்கள்.

இதுபோன்று செல்லும் வழி எங்கும் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு மேலும் பல செய்திகள் ஆதாரமாக அமைந்துள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் யூசுப் நபியவர்கள் சக கைதிகளிடம் ஏகத்துவப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

என் சிறைத்தோழர்களே! ஏராளமான கடவுள்கள் இருப்பது சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா? (என்று யூசுஃப் நபி அவர்களிடம் கேட்டார்)

அல்குர்ஆன்:12:39

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபதக் நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப்பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. -அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) “அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல்இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது.- அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப்பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் பின் உபை தனது மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, “எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்என்று சொன்னார். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) சொன்னார்கள். பிறகு தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் நபி (ஸல்) அவர்களிடம் “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மை யாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்என்றார். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணைவைப்பாளர் களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக் கொள்ளும் அளவிற்குச் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மௌன மாகும் வரை அவர்களை அமைதிப் படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

நூல்: புகாரி 4566

நபியவர்கள் அப்துல்லா இப்னு உபை இப்னு சலூலுக்கு மார்க்கத்தை எத்தி வைப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறவில்லை. மாறாக உடல் நலமில்லாத சஅதை நலம் விசாரிக்கவே செல்கின்றார்கள். செல்லும் வழியில் உபை இருக்கின்ற ஒரு அவையைக் கடக்கின்றார்கள். அப்போது மார்க்கத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சலசலப்பையே எத்தி வைப்பதற்கு ஒரு பொன்னான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிகின்றோம்.

மேலும் ஒரு தவறை நாம் கண்டால் அதை அந்த நிமிடமே தடுக்க வேண்டுமே தவிர அதை நான் மேடையில் தான் சுட்டிக் காட்டுவேன் என்ற மெத்தனப் போக்கை நாம் தவிர்க்க வேண்டும்.

தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். (அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று, “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்என்று கூறினார். அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டு விட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை)என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றி விட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.  (நூல்: முஸ்லிம் 78)

நுஃமான் பின் பஷீர் (ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவருக்கும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த்தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந் தார்கள். ஆகவே, கீழ்த்தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த்தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவன், “நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகின்றது. (அதனால், கப்பலின் கீழ்த் தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வேன்)என்று கூறினான். (துளையிட விடாமல்) அவனது இரு கைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டால் அவர்கள் அவனையும் காப்பாற்று வார்கள்; தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டு விட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள் வார்கள்.  (நூல்: புகாரி 2686)

நன்மையை ஏவி, சமூகச் சீர்கேடுகளைத் தடுத்த உடனே “நீ தான் சிறந்த மனிதன்’ என்று நம்மை யாரும் வாரி அணைத்துக் கொள்வதில்லை. மாறாக, கோமாளி, பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்பதில் ஆரம்பித்து அடி, உதை, ஊர் நீக்கம் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்தால் இதை அறிய முடியும்.

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 15:94

ஷுஐபே! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரிய வில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம். நீர் எங்களை மிகைப்பவராக இல்லைஎன்று அவர்கள் கூறினார்கள். “என் சமுதாயமே! என் குலத்தவர் அல்லாஹ்வை விட உங்களுக்கு மதிப்புமிக்கவர்களா? அவனை உங்களுடைய முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டீர்களே! என் இறைவன் நீங்கள் செய்பவற்றை முழுமையாக அறிபவன்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:91, 92

உம்மையும், உம்முடன் இருப் போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார். அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்து வோராக இல்லை. “அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் “அவரது குடும்பத்தினர் அழிக்கப் பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம் என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக் கொருவர் சத்தியம் செய்து கூறினர்.

அல்குர்ஆன் 27:47-49

ஸமூது சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர். நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழிகேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம். நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர். (என்றனர்)

அல்குர்ஆன் 54:23-25

இது போன்ற பிரச்சனைகளுக்குப் பயந்து, நமக்கு ஏண்டா வம்பு என்று நினைத்து எல்லோரும் ஒதுங்கினால் இவ்வுலகில் சமூக சீர்கேடுகளே அதிகரிக்கும். சீர்திருத்தத்தை நம்மால் காண இயலாது.

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெற முடியும். இழப்பது அல்லாஹ்விற்காக, அவன் மார்க்கத் திற்காக என்று நினைக்கும் போது நமது துன்பங்கள் கூட இன்பங்களாகத் தான் இருக்கும். எனவே இதற்காக எதையும் தியாகம் செய்வதற்கு முன் வர வேண்டும்.

தைரியமாக ஏகத்துவத்தை எடுத்துச் சொல்கின்ற ஆற்றலை இறைவனிடம் வேண்ட வேண்டும்

என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்என்று (மூஸா) கூறினார்.

(அல்குர்ஆன் 20:25-28)

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 31

பெண்களின் பொறுப்புகள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி

குடும்பத்திற்கு செலவு செய்வது ஆண்களுக்குத் தான் கடமை என்று ஆதாரங்களைப் படித்தவுடன் பெண்கள், கணவன் சம்பாதிக்கிற அனைத்தையும் கேட்டுவிடக் கூடாது. கேட்கவும் முடியாது. அதனை மார்க்கம் அனுமதிக்கவுமில்லை. குடும்பத்திற்குச் செலவு செய்வது என்றால் என்ன? என்பதை அல்லாஹ்வுடைய தூதர் விளக்கித்தான் சென்றுள்ளார்கள்.

முஆவியா அல்குரைஷி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டியது என்ன?” என்று கேட்கும் போது, “நீ உண்ணும் போது அவளுக்கும் உண்ணக் கொடு, நீ ஆடையணியும் போது அவளுக்கும் ஆடையணிக் கொடு, அவளை முகத்தில் அடித்து விடாதே, அவளை ஒரேயடியாக வெறுக்காதே, அவளை வீட்டில் வைத்தே தவிர மற்ற இடங்களில் கண்டிக்காதேஎன்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா அல் குஷைரிய்யி(ரலி), நூல்: அபூதாவூத் 1830

நீங்கள் உண்ணும் போது அவளுக்கும் உண்ணக் கொடுங்கள் என்றால், கணவன் எந்த ரகத்தில் சாப்பிடுகிறானோ அந்த ரகத்தில் மனைவிக்கும் உணவளிப்பது என்று பொருள்.

கணவனுக்கு ரேஷன் அரிசி என்றால் மனைவிக்கு கைக்குத்தல் அரிசி கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் எந்தக் கணவனையும் சிரமப்படுத்திடவில்லை. அதே போன்று நீங்கள் உடையணியும் போது மனைவிக்கும் உடையணியக் கொடுங்கள் என்றால், தராதரத்திற்குத் தகுந்தவாறு மனைவிக்குச் செலவு செய்வது தான் கணவன் மீது கடமை என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.

எனவே மனைவிமார்கள், தங்களது கணவன்மார்களின் வருவாய்க்குத் தகுந்த மாதிரி தான் கணவனிடம் எதையும் கேட்க வேண்டும். வருவாயை விட அதிகமானதைக் கணவனிடத்தில் கேட்டு, கணவன் அதை மனைவிக்குக் கொடுக்க வில்லையெனில் எந்தக் கணவனும் இறைவனால் குற்றம் பிடிக்கப்பட மாட்டான். அதே போன்று கணவனின் வருமானம் மனைவியாக இருக்கிற நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைக்கக் கூடாது.

ஒரு கணவனின் வருமானத்தில் அவனது தாய் தந்தையருக்குப் பங்கு இருக்கிறது. அவனது உறவினர்களில் மிகவும் நெருங்கியவர்கள் ஏழையாக இருந்தால் அவர்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. கணவனுடன் பிறந்தவர்களில் சிரமப்படுகிறவர்கள் இருந்தால் அவர்களுக்கும் கணவனின் வருமானத்தில் பங்கு இருக்கும். இப்படிப் பல காரணங்களுக்காகத்தான் கணவனின் சம்பாத்தியம் என்பதைப் பெண்கள் முதலில் சரியாகப் புரிய வேண்டும்.

தாய் தந்தையர்களைக் கவனிக் காமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு, குடும்பத்தில் மற்ற உறவினர்களையும் கவனிக்காமல் மனைவியை மட்டும் காப்பாற்றிய கணவன் அல்லாஹ்விடத்தில் தப்பித்து விடுவாரா? மறுமை விசாரணையில் தப்பித்துக் கொள்ள முடியுமா? நிச்சயம் தப்பிக்க முடியாது

எனவே, நமது கணவன்மார்களை நரகத்திற்குத் தள்ளிவிடும் அளவுக்கு அவர்களுக்கு பொருளாதாரச் சுமைகளை வைத்துவிடவே கூடாது. எனவே ஒரு கணவர் சொர்க்கம் போகிற அளவுக்கு மனைவி அவனது பொருளாதாரக் கொள்கையை அமைத்துக் கொள்வதற்கு உதவ வேண்டும். இதை இறைவன் திருமறையிலும் சொல்கிறான்.

வசதியுள்ளவர்கள் அதற்குத் தகுந்த மாதிரியும், வசதி குறைவான வர்கள் அவர்களுக்குத் தகுந்த மாதிரியும் ஜீவனாம்சத் தொகையினை பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறான்.

அவர்களைத் தீண்டாத நிலை யிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

அல்குர்ஆன் 2:236

தலாக் விடப்பட்ட பெண்ணைப் பற்றி சொல்லப்படும் சட்டம்தான் என்றாலும் தலாக் விடாமல் சேர்ந்து வாழ்கிற பெண்ணுக்கும் இது பொருந்தும்.

எனவே ஒவ்வொரு மனிதரும் தனது வசதிக்குத் தகுந்தவாறு நடந்துகொள்ள வேண்டும்.

எப்படியாவது, யாரிடமாவது கடன் வாங்கியோ, வட்டிக்கு வாங்கியோ எனது விருப்பத்தை நிறைவேற்று என்றெல்லாம் கேட்கும் சில பெண்கள் இருக்கிறார்கள்.

பெண்கள் பிற வீட்டிலுள்ள சொகுசு வாழ்க்கையைப் பார்த்து பொறாமைப்படவே கூடாது. நமது வீட்டில் நம் கணவருக்கு எவ்வளவு வருமானமோ அதற்குத் தகுந்த மாதிரி தான் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் உள்ள கணவன் 20 ஆயிரத்திற்கு பட்டுப் புடவையை தனது மனைவிக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று எல்லாப் பெண்களும் தனது கணவனிடம் கேட்டுவிட முடியாது. அதற்குண்டான சக்தி தமது கணவரிடம் இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டுதான் கேட்க வேண்டும்.

ஆக, கணவனிடம் நாம் எதிர்பார்க்கும் சக்தியில்லை எனில் நமது எதிர்பார்ப்பை ஒரு புறம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, உங்களுக்கு எது முடியுமோ அதை எனக்குத் தாருங்கள் என்று கேளுங்கள். நீங்கள் எனக்கு நல்லதைத் தான் செய்வீர்கள் என்கிற வகையில், கணவனுக்கு கஷ்டம் கொடுக்காத வகையில் தான் மனைவியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

சக்திக்கு மீறி மனைவி அவனிடம் தேவையற்ற ஆடம்பர எதிர்பார்ப்பு களை ஏற்படுத்துவதால், பல கணவன்மார்கள் வட்டிக்கு வாங்குவதையும், சுயமரியாதை இழந்து கடன் வாங்குவதையும் பார்க்கிறோம். இன்னும் பலர் முக்கியமான தனது சொத்துக்களை விற்று மனைவியின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவான். கணவனுக்குப் பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். அதனால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே பெண்கள் கணவன்மார்களுக்கு அவர்களின் சக்திக்கு மேலாக சிரமத்தைக் கொடுத்துவிடக் கூடாது என்று புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

இதுபோக, சிலருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தை பரக்கத்தாக அபிவிருத்தி செய்து கொடுத்திருப்பான். ஆனால் வீட்டுக்காக குடும்பச் செலவுக்குக் கொடுக்கும் போது மட்டும் நுணுக்கிப் பார்த்து, கணக்குப் பார்த்து கொடுப்பார்கள். அது போதுமானதாக இருக்காது. நபியவர்கள் தனது குடும்பத்திற்கு வருடம் ஒருமுறை கொடுத்து விடுவார்கள். அதிலிருந்து நபியவர் களின் மனைவிமார்கள் குடும்பத் திற்காக செலவழித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் அன்றாடத் தேவைக்காக நபியவர்களிடம் வந்து நிற்க மாட்டார்கள்.

நபியவர்களுக்கு ஃபதக் என்ற தோட்டத்திலிருந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் மகசூலிலிருந்துதான் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார்கள். இப்படி மாதம் ஒரு முறையோ, அல்லது இரண்டு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ பொருளாதாரத்தைக் கொடுத்து விட்டு அதில் பெண்கள் குடும்பத்தின் தேவையை நிறை வேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

இதிலும் சிலர் தினமும் அன்றாடக் கணக்கையே நிர்வகிப்பார்கள். ஒரு கிலோ அரிசியைக் கொடுத்துவிட்டு, மறுநாள் அதில் கால்கிலோ மீதம் இருக்கிறதா? என்று கணக்குப் பார்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். இது குடும்பத்திற்குச் சரியாகாது. இல்லாதவர் என்றால் இந்த முறை சரிதான். அதாவது ஒருவரின் தகுதி அதுதான் என்றால் மார்க்கம் அதைக் குற்றமாகக் கருதாது.

ஒருவரிடம் வசதி, தகுதி நன்றாக இருந்தால், அவர்களிடம் ஒரு மாதத்திற்குண்டானதையோ அல்லது வருடத்திற்கானதையோ கொடுத்து விட வேண்டியது தான். மனைவி அதில் மிச்சம் பிடித்து சேர்த்து வைத்துக் கொண்டால் நல்லது தானே! மாதம் மூவாயிரம் செலவுக்கு எனில் ஐந்தாயிரமாக கொடுக்க வேண்டும். அதில் மீதத்தைப் பெண்கள் சேர்த்து வைத்தால் நாளைக்கு நமக்கும், நமது பிள்ளை குட்டிகளுக்கும் தான் உதவும் என்ற வகையில் குடும்பச் செலவீனங்களை கணவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை கணவன்மார்கள் வீட்டுத் தேவைகளுக்கே கூட சரியாக கவனிக்கத் தவறினால் பெண்களுக்கு இஸ்லாம் கணவனது பொருளாதாரத் தில் எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியிருக்கிறது. கணவருக்கு அல்லாஹ் நன்றாகத் தருவது நம் கண்முன்னே தெரிகிறது. வீட்டுச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் தேவையென்றிருக்கும் போது, ஐநூறைத் தந்து சிரமத்தைக் கொடுத்தால் கணவருக்குத் தெரியாமல் மனைவி இன்னொரு ஐநூறை எடுத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. இப்படி நியாயமாக எடுத்துக் கொள்வது திருட்டுக் குற்றத்தில் சேராது என்று தீர்ப்பு வழங்கும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! இதுபற்றி அல்லாஹ்வும் கேள்வி கேட்க மாட்டான். இஸ்லாமிய ஆட்சி நடந்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தாலும் இஸ்லாமிய அரசும் இதற்கு எந்தத் தண்டனையும் வழங்காது. இதற்குரிய ஆதாரம் இதோ பாருங்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், (என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா? எனக் கேட்டார்கள். அதற்கு, உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்

நூல்: புகாரி 2211

இந்தச் செய்தியில் புகாரியில் 2460, 5359, 5364, 5370, 7161, 7170 ஆகிய பல்வேறு அறிவிப்புக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே வீட்டுக்குத் தேவையான பொருளாதாரத்தை கணவன் தரவில்லையெனில் கணவனுக்குத் தெரியாமல் தேவைக்குரியதை எடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை வழங்கும் போது பெண்கள் எதற்காக வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும்?

அதே நேரத்தில் அமானிதமாக உள்ளதைத் தொட்டுவிடக் கூடாது. தொழில் முறையில் பிறரது ரூபாயை எடுத்துவிட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. பர்சில் இருக்கிற மொத்த ரூபாயையும் எடுத்துவிட்டால் அவன் பர்சில் ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஹோட்டலுக் குள் செல்வான். கடைசியில் ஒன்றுமில்லாமல் கணவனுக்கு கேவலத்தை உருவாக்கிவிடக் கூடாது. பர்சில் எடுப்பதினால் கணவருக்குப் பாதிப்பு வராது என்கிற நிலையில் எடுத்தால் தான் மனைவி மீது குற்றமாகாது. அதைத்தான் நபியவர்கள் நியாயமான முறையில் என்ற சொல் மூலம் விளக்குகிறார்கள்.

அதேபோன்று உணவுப் பொருட்கள் விஷயத்தில், சொந்த பந்தங்களுக்குக் கொடுப்பது, தான தர்மம் செய்வது போன்றவற்றிலும் கணவனிடம் அனுமதி பெறாமலேயே ஒரு மனைவி கொடுக்கலாம். மனைவி தனது அக்கா வீட்டிற்கு, தங்கை வீட்டிற்கு ஏதேனும் பொருட்களைக் கொடுத்துவிடலாம். இவற்றையெல்லாம் கேட்காமல் செய்தால் அந்தப் பெண்ணிற்கு இதுபோன்ற காரியங்கள் தர்மத்திற்கான கூலியைப் பெற்றுத் தருவதாக நபியவர்கள் கூறுகிறார்கள்.

அதற்காக நம் வீட்டிலுள்ள நகை நட்டுக்களையும் பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிடக்கூடாது. அந்தச் சட்டம் உணவுப் பொருளுக்கு குறிப்பாக உள்ள சட்டமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை – வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோலவே கருவூலக் காப்பாளருக் கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1425

இந்தச் செய்தி புகாரியில் 1437, 1440, 1441, 2065 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் உணவுப் பொருட் களுக்குக் கணக்குப் பார்க்க முடியாது. தர்மம் கேட்டு யாராவது வீட்டு வாசலுக்குக் வரும்போது கணவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோறு கொடுக்கவா? வேண்டாமா? என்று கேட்க முடியாது. எப்போதுமே அப்படித் தான். வீட்டில் பெண்கள் சமைப்பார்கள். வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஐந்தாறு நபர்களுக்கு சமைப்பார்கள். ஏழு பேர் இருந்தால் பத்து பேருக்குத் தான் சமைப்பார்கள். யாராவது வந்துவிடலாம் என்று எண்ணித் தான் சமைக்க முடியும்.

எனவே மிகச் சரியாகக் கணக்குப் பார்த்து யாரும் செய்வது கிடையாது. செய்யவும் மாட்டார்கள். இவற்றைத் தர்மமாகவோ அன்பளிப்பாகவோ மனைவி கணவரிடம் அனுமதி கேட்காமலேயே கொடுக்கலாம். இப்படிக் கொடுக்கும் போது கணவனும் எதற்காகக் கொடுத்தாய் என்றெல்லாம் கேட்க முடியாது. அப்போது இந்த ஹதீஸை ஆதார மாகக் காட்டிக் கொண்டு செயல்பட வேண்டியது தான். இப்படியெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் கணவனின் சொத்துக்களில் பொருளாதாரத்தில் பெண்களுக்குப் பல்வேறு உரிமை களை வழங்குகிறது.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?             தொடர்: 25

இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

“(அடுத்தவர் பேச்சை) செவியுறு வதை விட (தான்) பேசுவதையே அதிகம் விரும்புவது ஆலிமின் குழப்பமாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

இந்தச் செய்தியை முஆத் (ரலி)யே சொன்னதாகவும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் கஸ்ஸாலி தெரிவிக்கின்றார்.

இது இஹ்யாவில், கல்வியின் ஆபத்துகள், மறுமை, ஆலிம்கள் மற்றும் கெட்ட ஆலிம்களை விளக்குதல் என்ற ஆறாவது பாடத்தில் இடம் பெறுகின்றது.

அபூ நயீம், இப்னுல் ஜவ்ஸி ஆகியோர் இந்த ஹதீஸை தங்களது மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட செய்திகளின் தொகுப்பு) என்ற நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என ஹாஃபிழ் இராக்கி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

விமர்சனம்:

இதன் அறிவிப்பாளரான ஜப்பாரா என்பவர் இட்டுக்கட்டக் கூடியவராவார்.

என்னுடைய தந்தை அஹ்மத் பின் ஹன்பலிடம் ஜப்பாராவின் ஹதீஸ்கள் காண்பிக்கப்பட்டன. “நின்று தொழுபவரின் தொழுகையில் பாதி (நன்மை தான்) உட்கார்ந்து தொழுபவரின் தொழுகை(க்கு கிடைக்கும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பது அதில் உள்ள ஒரு ஹதீஸாகும். அது பொய்யான அல்லது இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ் என்று சொன்னார்கள். இவ்வாறு அப்துல்லாஹ் (அஹ்மத் பின் ஹன்பல் மகன்) தெரிவிக்கின்றார். இதன் மூலம் ஜப்பாரா என்ற அறிவிப்பாளர் ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் தெரிவிப்பதாக ஹுசைன் பின் ஹுசைன் தெரிவிக்கின்றார். இவருடைய ஹதீஸ் முரண்பாடு கொண்டதாகும் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு அல்ஜர்ஹ் வத் தஃதீல் என்ற நூலில் இடம் பெறுகின்றது.

இதில் இடம் பெறுகின்ற மற்றோர் அறிவிப்பாளரான மிந்தல் பின் அலீயைப் பற்றி தன் தந்தை அஹ்மத் பின் ஹன்பலிடம் கேட்கப்பட்டது. அவர் பலவீனமானவர் என்று பதிலளித்தார் என்று அப்துல்லாஹ் (அஹ்மத் பின் ஹன்பல் மகன்) தெரிவிக்கின்றார். இவ்வாறு தஹ்தீபுல் கமால் என்ற நூலில் இடம் பெறுகின்றது.

ஓர் அறிஞர் கண்டிப்பாக மற்றவர்களின் கருத்தையும் கேட்கின்ற மனப்பக்குவத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை இந்தச் செய்தி தெரிவித்தாலும் இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று சொல்வது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு நேர் மாற்றமான செயல்பாடாகும்

ஐந்து தீமைகளிலிருந்து ஐந்து நன்மைகளை நோக்கி..

“சந்தேகத்திலிருந்து உறுதிப்பாடு, முகஸ்துதியிலிருந்து தூய எண்ணம், உலக ஆசையிலிருந்து துறவு, பெருமையிலிருந்து பணிவு, விரோத எண்ணத்திலிருந்து நலன் நாடல் என்று உங்களை அழைக்கின்ற ஆலிமிடமே தவிர வேறெந்த ஆலிமிடமும் நீ அமராதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தியை ஜாபிர் (ரலி) சொன்னதாகவும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவும் கஸ்ஸாலி தெரிவிக்கின்றார்.

இது இஹ்யாவில், கல்வியின் ஆபத்துகள், மறுமை ஆலிம்கள் மற்றும் கெட்ட ஆலிம்களை விளக்குதல் என்ற ஆறாவது பாடத்தில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸை அபூ நயீம் ஹுல்யாவிலும், இப்னுல் ஜவ்ஸி மவ்லூஆத் (இட்டுக்கட்டப் பட்டவைகளின் தொகுப்பு) என்ற நூலிலும் பதிவு செய்திருக்கின்றார்கள் என ஹாஃபிழ் இராக்கி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

விமர்சனம்:

ஹாஃபிழ் கதீபுல் பக்தாதி அவர்கள் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெறுகின்ற ஷகீக் பின் இப்ராகீம் நம்பகமானவராக இல்லை என்று தனது தாரீக் பக்தாதில் குறிப்பிடுகின்றார்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “(அல்லாஹ்வின் தூதரே) கல்வியின் விநோதங்களை எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என்று கேட்டார். “முக்கியமான கல்வியைத் தெரிந்து நீ என்ன அமல் செய்திருக்கின்றாய்?” என்று நபி  (ஸல்) அவர்கள் திரும்பக் கேட்டார்கள். “முக்கியமான கல்வி என்றால் என்ன?’ அம்மனிதர் வினவி னார். “நீ உன்னுடைய இறைவனை நீ அறிந்து கொண்டாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

“அவர் ஆம் என்றதும் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமையில் என்ன செய்திருக்கிறாய்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு என்று அவர் பதில் சொன்னார். “நீ மரணத்தை அறிந்திருக்கின்றாயா?’ என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு ஆம் என்றதும், “அதற்காக நீ தயார் செய்திருக்கின்றாய்?’ என்று கேட்டதும் அல்லாஹ் நாடிய அளவுக்கு என்று பதில் சொன்னார். “நீ சென்று அதை உறுதி செய்து விட்டு வா! அப்புறம் உனக்கு கல்வியின் விநோதங்களைக் கற்றுத் தருகின்றேன்” என்று சொன்னார்கள். இது, இஹ்யாவில் மேற்கண்ட அதே பாடத்திலேயே இடம் பெறுகின்றது

இப்னு சனிய்யீ, அபுநயீம் ஆகிய இமாம்கள் தங்களது ரியாளிய்யா என்ற நூல்களில் பதிவு செய்துள்ளனர். இப்னு அப்துல் பர்ர் அவர்கள் அப்துல்லாஹ் பின் மிஸ்வர் வழியில் முர்ஸலாக அறிவிக்கின்றார்கள் என ஹாபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

விமர்சனம்:

அப்துல்லாஹ் பின் மிஸ்வரைப் பற்றி என் தன் தந்தை அபூ ஹாதமிடம் கேட்ட போது, “அவர் பலவீனமானவர்; முர்ஸலான ஹதீஸ்களை அறிவிப்பார். நம்பகமான அறிவிப்பாளர்களிடம் இதற்குரிய அடிப்படையான செய்தியைக் காணமுடியாது’ என்று பதிலளித்ததாக இப்னு அபீ ஹாதம் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். அவருடைய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவை. இவர் ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவராகவும் பொய் சொல்பவராகவும் இருந்தார் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு ஹாபிழ் இராக்கி அவர்கள் தன்னுடைய அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற இஹ்யாவுக்கான விமர்சன நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

“கற்றபடி அமல் செய்பவருக்கு அல்லாஹ் அவர் அறியாத கல்விக்கு வாரிசாக்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இந்த ஹதீஸை அபூ நயீம் ஹுல்யாவில் அனஸ் (ரலி) வழியாக அறிவிக்கின்றார். இது பலவீனமான ஹதீஸ் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இது, அதே பாடத்தில் இடம் பெறுகின்றது.

விமர்சனம்:

ஹாபிழ் இராக்கி அவர்கள் இஹ்யாவுக்கான தன்னுடைய அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற நூலில் இதைப் பற்றி விளக்கமாகக் குறிப்பிடுகின்றார்.

அல் கூத் என்ற நூலாசிரியர் இந்த ஹதீஸை எவ்வித அறிவிப்பாளர் தொடருமில்லாமல் கொண்டு வருகின்றார். ஆனால் வார்த்தையில் சிறிய வித்தியாசத்துடன் கொண்டு வந்துள்ளார். இந்தச் செய்தியை ஈஸா பின் மர்யம் வழியாக தாபியீன்கள் ஒருவர் கூறியதாக அஹ்மத் பின் ஹன்பல் தெரிவித்திருந்தார். அறிவிப்பாளர்களில் சிலர், அஹ்மத் பின் ஹன்பல் இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக, தவறாக விளங்கி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவே அறிவித்து விட்டார் என அபூ நயீம் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் இதற்கு எந்த ஓர் அறிவிப்பாளர் தொடரையும் நான் காணவில்லை என்று இமாம் இப்னு சுப்கீ அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இது அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் என்ற நூலில் இடம் பெறுகினற மேலதிகமான விளக்க விமர்சனமாகும்.

ஒருவர் நல்ல உறுதியானவர்; பாவம் அதிகம் செய்தவர். மற்றவர் வணக்கத்தில் திளைத்திருப்பவர். ஆனால் உறுதி குறைவானவர் (இவ்விருவரில் யார் சிறந்தவர்) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதனாக உள்ள எவரும் பாவம் செய்யாமல் இருக்க மாட்டார். ஆனால் எவர் அறிவு வளமிக்க வராகவும், உறுதியே குணமாக கொண்டவராகவும் இருக்கின்றாரோ அவருக்குப் பாவங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், அவர் பாவம் செய்யும் போதெல்லாம் திருந்தி பாவமன்னிப்புத் தேடி வருந்தி விடுகின்றார். அதனால் அவருடைய பாவங்கள் அழிக்கப் பட்டு விடுகின்றன. இதன் மூலம் சுவனத்திற்குச் செல்கின்ற ஒரு சிறப்பு அவருக்கு எஞ்சி நிற்கின்றது என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். இது, இஹ்யாவில் மேலே உள்ள அதே பாடத்தில் பதிவாகி உள்ளது.

அனஸ் (ரலி) வழியாக ஓர் இருட்டுத் தொடர் மூலம் ஹகீம் திர்மிதி என்பவர் இந்த ஹதீஸை நவாதிர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார் என்று ஹாபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

விமர்சனம்:

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் அடிப்படையில் பலவீனமாகி விடுகின்றது. அடுத்து கருத்து அடிப்படையிலும் இது பலவீனடைகின்றது. இந்தச் செய்தியை நபி (ஸல்) ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதற்கு அந்தச் செய்தியில் இடம் பெறும் தவறான கருத்துக்களே போதுமான ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன.

  1. விபரம் உள்ளவன் விபரமில்லாதவனை விட அதிகம் தப்பு செய்வான். ஆனால் அவன் பாவமன்னிப்புக் கேட்டு தப்பித்துக் கொள்வான் என்று சொல்வதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் விபரம் உள்ளவனுக்கு அதிகம் பாவம் செய்வதற்கு தந்திரத்தைச் சொல்லிக் கொடுப்பது போல் உள்ளது.
  2. எல்லாம் வல்ல அல்லாஹ் தனது குர்ஆனில் சொல்கின்றான்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே

அல்குர்ஆன் 35:28

மார்க்கம் ஞானம் உள்ளவர்களுக்கு இறையச்சம் கூடும். அவர்களுக்கும் மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் ஏற்படும் என்றாலும் மார்க்க விளக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறையச்சம் கூடக்கூட தவறுகள் குறையும். இதுதான் அல்லாஹ் கூறுகின்ற அழகான இலக்கணமாகும். ஆனால் மேற்கண்ட அந்த போலியான ஹதீஸோ இதற்கு மாற்றமாக விளக்கம் உள்ளவர்கள் அடிக்கடி தவறு செய்து விட்டு அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிக் கொள்வார்கள் என்று சொல்கின்றது. இந்த அடிப்படையிலும் இது ஒரு பொய்யான ஹதீஸாகும்.

“உறுதிப்பாடும், பொறுமையுடன் கூடிய வைராக்கியமும் உங்களுக்கு மிக மிகக் குறைவாகவே வழங்கப் பட்டிருக்கின்றது. யார் இவ்விரண்டின் பாக்கியம் வழங்கப்படுகின்றாரோ அவர் தனக்கு தப்பிப் போன இரவுத் தொழுகை, பகல் நோன்பு பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஹ்யாவின் மேலுள்ள அதே பாடத்தில் தான் இந்த ஹதீஸ் இடம் பெறுகின்றது. ஹாஃபிழ் இராக்கி அவர்கள் இதற்கு நான் எந்த அடிப்படையையும் நான் காணவில்லை என்று தெரிவிக்கின்றார்கள்.

விமர்சனம்:

சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லாத காரணத்தாலேயே இந்த ஹதீஸ் ஆதாரமற்ற ஹதீஸாக ஆகி விடுகின்றது. கருத்து அடிப்படை யிலும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.

வரலாற்றில் அபூபக்கர் (ரலி) அவர்களைப் போன்று ஈமானில் உறுதி மிக்க ஒருவரைப் பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் அமல்கள் விஷயத்தில் பின்தங்கி விடவில்லை.

உங்களில் இன்றைய தினம் நோன்பு நோற்றவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது நான் என்று அபூபக்ர் (ரலி) பதிலளித்தார்கள். “உங்களில் இன்றைய தினம் ஜனாஸாவை பின் தொடர்ந்தவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது அபூபக்ர் (ரலி) நான் என்று பதிலளித்தார்கள். “உங்களில் இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் யார்என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது நான் என்று அபூபக்ர் (ரலி) பதிலளித்தார்கள். “உங்களில் இன்றைய தினம் ஒரு நோயாளியை நலம் விசாரித்தவர் யார்என்று நபி (ஸல்) அவர்கள் வினவிய போது நான் என்று அபூபக்ர் ( ரலி) பதிலளித் தார்கள். “எந்த ஒரு மனிதரிடம் இவை அனைத்தும் ஒரு சேர அமைகின் றதோ அவர் சுவனம் செல்லாமல் இருக்க மாட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் எண்: 4400

உபரியான நோன்பு நோற்பதில் அபூபக்ர் (ரலி) பின்தங்கி விடவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. கொள்கை உறுதி மிக்க எத்தனையோ நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்த நபித்தோழர்கள் இரவுத் தொழுகை விஷயத்தில் பின்தங்கி விடவில்லை என்று பல்வேறு ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த ஹதீஸோ இது போன்ற அமல்களில அலட்சியமாக இருந்துக் கொள்ளலாம் என்று தெரிவிப்பதன் மூலம் இது ஒரு பொய்யான ஹதீஸ் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.