தனிநபர் தரும் தகவல்கள் – OnlineTNTJ

முகப்பு / நூல்கள் / ஹதீஸ்கள் / ஸஹீஹுல் புகாரி / தனிநபர் தரும் தகவல்கள்

தனிநபர் தரும் தகவல்கள்

 • பாடம் : 1 தொழுகை அறிவிப்பு (பாங்கு), தொழுகை, நோன்பு, பாகப் பிரிவினை மற்றும் இதரச் சட்டங்கள் ஆகியவற்றில் வாய்மையான ஒருவரின் செய்தியை அனுமதிப்பது தொடர்பாக வந்துள்ளவை.2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் ஒவ்வொரு குழுவினரிலிருந்தும் சிலர் புறப்பட்டுச் சென்று, மார்க்கத்தைக் கற்றுத் திரும்பிவந்து, தம் சமூகத்தாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையிலிருந்து) பாதுகாத்துக்கொள்வார்கள். (9:122)3 ஒரு தனிமனிதர்கூட சிலர்’ (தாயிஃபத்) என அழைக்கப்படுவதுண்டு. இறைநம்பிக்கை யாளர்களில் இரு குழுவினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான் (49:9). (இங்கு குழுவினர்’ என்பதைக் குறிக்க தாயிஃபத்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரு தனி நபர்கள் சண்டையிட்டுக்கொள்வதும் இவ்வசனத்தின் பொருளில் அடங்கும். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக் கொள்ளுங்கள் (49:6). (தனிநபர் தகவலுக்கு மரியாதை இல்லாயானால்,) நபி (ஸல்) அவர்கள் தம் தளபதிகளை ஒருவர் பின் ஒருவராக(த் தனியே) எப்படி அனுப்பியிருக்க முடியும்? அவர்களில் ஒருவர் மறந்து (தவறிழைத்து) விட்டாலும் (மற்றொருவர் நினைவூட்டுவதன் மூலம்) நபிவழிக்கு அவர் திருப்பப்பட்டுவிடுவார் (என்பதாலேயே முந்தியவருக்குப் பின்னால் பிந்தியவரை நபியவர்கள் அனுப்பினார்கள்). 
  7246. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். 
  ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னேவிட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும்படியும்) கட்டளையிடுங்கள்’ என்றார்கள். மேலும், ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்றார்கள். 
  இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.4 
  Book : 95

 • 7247. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
  நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.) 
  அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள்.5 
  Book :95

 • 7248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
  பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6 
  Book :95