இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”

இஸ்லாத்தின் அடிப்படைகளை தகர்த்தெறியும் “பப்ஜி”

M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc.

இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கின்ற ஏராளமான கண்டுபிடிப்புகள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய மேலை நாட்டவர்களால் தயார் செய்யப்பட்டு, ஊடுருவ செய்கின்ற கார்ட்டூன் சேனல்கள், வீடியோ கேம்கள், செல்ஃபோன்களில் செயலிகள் மூலமாக உருவாக்கப்படுகின்ற விளையாட்டு கேம்கள் இதுபோன்ற பலதரப்பட்ட முறைகளின் வாயிலாக பலதரப்பட்ட பாதிப்புகள் உலக அரங்கில் பரவுகின்றது.

இதுபோன்ற கேம்கள், கார்ட்டூன் சேனல்கள் வெறுமனே பிள்ளைகளின் பொழுதுபோக்கிற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு அதுபோன்ற காரியங்களை அனுமதித்து வருகின்றோம்!

ஆனால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையையும், சிந்தனைத் திறனையும் அழித்தொழித்து, இன்னும் ஒருபடி மேலாக சொல்வதாக இருந்தால் இஸ்லாத்தின் அடிப்படையையே சுக்கு நூறாக நொறுக்குகின்ற அளவுக்கு பாதிப்பின் உச்சகட்டத்தில் இருக்கின்றது என்பதே அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

சமீப காலமாக மேலை நாட்டவர்களால் செல்ஃபோன் செயலிகள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விளையாடக் கூடிய நூற்றுக்கணக்கான விளையாட்டுக்களை உலகம் முழுவதும் பரப்பி வெளியிடுகின்றார்கள்.

ஆனால் தயார் செய்யப்பட்டு வெளியிடுகின்ற விளையாட்டுக்களின் பாதிப்புகளையும், கேடுகளையும் அறியாமலும், உணராமலும் இருந்து வருகின்ற காரணத்தினால், இவற்றில் குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள் உலக அரங்கிலே மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டாகவும், மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற விளையாட்டாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

உதாரணமாக, “ப்ளு வேல்” என்ற விளையாட்டு ஆரம்பத்தில் மக்களிடத்தில் மிகவும் வேகமாக பரவினாலும், குறிப்பிட்ட சில நாட்களில் மனிதர்களின் உயிருக்கே மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கின்ற விளையாட்டாக மாறி, உலக அரங்கில் பலர் செத்து மடிந்து, பெருமளவில் பிரச்சனைகளை கிளப்பி, “ப்ளு வேல்” என்ற விளையாட்டு நாளவில் தடை செய்யப்பட்ட விளையாட்டாக ஆனது.

ஆனால் இந்த “ப்ளு வேல்” விளையாட்டையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு உலக அரங்கில் இளைஞர்களிடத்தில் ஆக்கிரமித்திருக்கின்ற ஒரு உயிர்க்கொல்லி விளையாட்டு தான் “பப்ஜி – ’பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்” (PUBG – Player Unknown’s Battlegrounds).

அடிமையாக்கும் பப்ஜி:

பப்ஜி கேம் எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னால், பப்ஜி குறித்த தகவல்களை சுருக்கமாக அறிந்து கொள்வோம். அதாவது, “பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்” என்பதின் சுருக்கமே “பப்ஜி” என்பதாகும்.

பப்ஜி இணையதளத்தில் விளையாடப்படும் விளையாட்டாகும். பப்ஜி விளையாட்டு கடந்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் அனைத்து விளையாட்டுக்களையும் பின்னுக்கு தள்ளி விட்டு கடும் வீரியத்தோடு மக்களிடத்தில் உருவெடுத்து விட்டது.

பப்ஜி கேமை ஆண்ட்ராய்ட் ஃபோன்களிலும், ஆப்பிள் ஐ ஃபோன்களிலும் விளையாட முடியும். மாணவர்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் என்று வயது வரம்பு பாராமல் அத்துனை நபர்களும் செல்ஃபோன் திரையை வெறிபிடித்துக் கொண்டு பார்த்தவாறு பப்ஜி கேமை விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது.
வெறிபிடித்து விளையாடுகின்ற அளவுக்கு
இந்த விளையாட்டில் அப்படி என்ன தான் இருக்கின்றது? என்று கேட்டால், பல நபர்கள் கூட்டமாக சேர்ந்து ஒருவர் மற்றவரை சுட்டுத் தள்ளுகின்ற விளையாட்டு தான். ஆனால் மற்ற கேம்களை போலல்லாமல் பப்ஜி சுவாரஸ்யமான விளையாட்டு என்று தெரிவிக்கின்றனர்.

ஒரே நேரத்தில் பல நூறு பேர் உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்துகொண்டே இயர்போன் வழியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வழியாக விளையாடும் விளையாட்டு பப்ஜியாகும்.
இது முழுக்க முழுக்க துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன், தங்களை வீரர்களாக உருவகப்படுத்திக் கொண்டு தங்கள் எதிரியை அழிக்க தனியாகவோ நண்பர்களுடனோ போராடும் வன்முறைகள் நிறைந்த விளையாட்டாகும்.

இதில் விளையாடுபவர்களெல்லாம் நிஜவுலகில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி, வெடிகுண்டுகளின் நுண்ணிய தகவல்களைக் கூடத் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

பலநபர்கள் கூட்டாக சேர்ந்து, ஆயுதங்களை வாங்கி கண்ணில் படுகின்ற நபர்களையெல்லாம் சுட்டுத் தள்ளிக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். இறுதியாக யார் எஞ்சி உள்ளாரோ அவரே வெற்றி பெற்றவராவார் என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையில் ஆயுதங்களை சேகரிப்பது, ஒளிந்து கொள்ளுவது, ஓடுவது, சுட்டுத் தள்ளுவது என்று விளையாட்டு முழுக்க பரபரப்பாகவே செல்லும் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். விளையாடுவோரை செல்ஃபோனிலேயே இருக்க கட்டிப் போட்டு விடுகின்றது இந்த பப்ஜி.

சிலர் ஆர்வக் கோளாறின் உச்சகட்டத்திற்கு சென்று, படிப்பதை மறந்து விட்டு மணிக்கணக்கில் பப்ஜி விளையாட்டில் மூழ்கி திளைக்கின்றனர். சில ஆர்வக் கோளாறுகள் ஃபோனில் சார்ஜ் தீர்ந்து போனாலும், கைகளிலே பவர் பேங்க் உடனோ அல்லது சார்ஜ் ஏற்றியவாறே விளையாடி பப்ஜி போதையில் மூழ்கி விடுகின்றனர்.

மேலும் நாளுக்கு நாள் பப்ஜி விளையாட்டின் மோகம் அதிகரித்து பெருமளவிலான மக்கள் பப்ஜி கேமை விளையாடுவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுமார் 30 கோடி பேர் பப்ஜி விளையாட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், ஒரே நேரத்தில் உலகளவில் சுமார் 5 கோடி பேர் விளையாடி வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கல்லூரி மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வு அதன் தீவிரத் தன்மையை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது. அதாவது 20 முதல் 24 வயதுக்கு உட்பட்ட மாணவர்களில் சுமார் 58% பேர் பப்ஜி விளையாட்டைத் தங்களது ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், 52% பேர் கடந்த 6 மாத காலங்களுக்கு மேலாக அதைப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், சுமார் 12% பேர் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்துக்கு மேலாக அதை விளையாடி வருவதாகவும், 18% பேர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்தை அதில் செலவழிப்பதாகவும் கூறியுள்ளனர்.

31% பேர் தாங்கள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி விட்டதாக உணர்வதாகவும், 20% பேர் இந்த விளையாட்டு இல்லாமல் ஒருவார காலம் கூடத் தங்களால் வாழ்க்கையை கழிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இவ்வளவு பாரதூரமான உயிர்க்கொல்லி நோய் பப்ஜி விளையாட்டு என்பதை உலக அரங்கில் பலதரப்பட்ட புள்ளி விவரங்களின் வாயிலாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிடுகின்றனர்.
பப்ஜி ஒரு மனநோய்:

பப்ஜி விளையாட்டு நாளடைவில் மனிதர்களை கொன்று குவிக்கின்ற உயிர்க்கொல்லி நோயாகவும், சிந்தனைகளை சிதைத்து தடுமாற வைக்கின்ற மனநோயாகவும் மாறி வலம் வருகின்றது என்பதை நிகழ்கால சம்பவங்கள் உண்மைப்படுத்துகின்றது.

பப்ஜி விளையாட்டு ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான பாதிப்புகள், கேடுகள், சீரழிவுகள் கணக்கிட முடியாத அளவுக்கு நீண்டு கொண்டே செல்கின்றது. பப்ஜி ஒரு மனநோய் என்பதை வெளிப்படுத்தும் ஒரு சில நிகழ்வுகள்;

பப்ஜி நோயினால் மனநலம் பாதிக்கப்பட்டு தூக்கமின்மையினால் அதிகமாக மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும், தூங்க செல்கின்ற நேரத்தில், தூக்கத்தை கெடுக்கும் விதமாக காதுகளில் வந்து யாரோ கத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் பப்ஜி விளையாடுபவர்களில் இரவில் தூக்கமின்மை (61%), பகலில் தூக்கக் கிறக்கம் (34%), தலைவலி, எரிச்சல் (36%), கண் கோளாறுகள் (39%), வகுப்பைப் புறக்கணித்தல் (27%), போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும், 7% பேர் தற்கொலை எண்ணங்களுடனும், 14% பேர் பிறரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட விபரீதங்களாக;

  •  பெற்றோர்கள் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் காட்டுப் பகுதிகளுக்கு 2 இளைஞர்கள் சென்று பப்ஜி விளையாடினர்!
     தேர்வுக்கு படிக்காமல் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை பெற்றோர்கள் கண்டித்ததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்!
  •  பப்ஜி விளையாட்டை தடுத்து நிறுத்தியதால் மகன், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்தான்!
  •  நீண்ட நேரம் பப்ஜி விளையாடிய மாணவர் கடுமையான மன அழுத்தத்தால் மாரடைப்பால் உயிரிழப்பு!
  •  விடிய விடிய பப்ஜி விளையாடுவதற்காக இரண்டு மாணவர்கள் வீட்டை விட்டு மாயம்!
  •  தொடர்ந்து ஆறு மணிநேரம் பப்ஜி கேம் விளையாடியதால் சிறுவன் உயிரிழப்பு!
  •  பத்தாம் வகுப்பு மாணவர் பப்ஜி விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்டார்!
  •  கணவர் நீண்ட நேரம் பப்ஜி விளையாடியதால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டதால், மனைவி விவாகரத்து கொடுத்து பிரிந்து விட்டார்!
  •  14 வயது பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சக சிறுவனை கத்தியால் குத்தினான்!
  •  நீண்ட நேரம் பப்ஜி விளையாடிய இளைஞர் தண்ணீர் என்று நினைத்து அமிலத்தை எடுத்து குடித்து விட்டார்!

பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட இதுபோன்ற ஆயிரக்கணக்கான பாதிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

உடலுக்கும், கண்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விடாமல் பப்ஜி என்ற போதை தடுத்து நிறுத்துகின்றது. நீண்ட நேரம் தூக்கத்தை இழந்து பப்ஜி விளையாடுபவர்கள் உடலில் ஏராளமான நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றார்கள்.

மேலும், நீண்ட நேரம் மொபைல் ஃபோனின் திரையை வெறித்தனமாக பார்ப்பதினால் கண் பார்வை செயலிழந்து விடுகின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்!

இதுபோன்ற விஷயங்களிலும் இஸ்லாமிய மார்க்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

உங்களின் உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உங்களின் கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன.

(ஆதாரம் – புகாரி 1975)

இஸ்லாத்தின் அடிப்படையை தகர்த்தெறியும் பப்ஜி:

பப்ஜி விளையாட்டு என்பது மது போதையை விட கொடூரமானதாகவும், பிஞ்சுகளின் உள்ளங்களின் நஞ்சை விதைக்க கூடியதாகவும், கொலை வெறியை தூண்டுதவதாகவும் இருந்து வருகின்றது.

ஆனால் தற்போது உச்சகட்ட வழிகேடான சிலை வழிபாட்டையும், நிரந்தர நரகத்தை பெற்றுத் தருகின்ற இணைவைப்பு காரியத்தையும் பப்ஜி விளையாட்டிற்குள் புகுத்தி, பப்ஜி போதையில் மூழ்கித் திளைப்பவர்களை வலுக்கட்டாயமாக செய்ய வைப்பதை புதிய வெர்ஷனாக ஷைத்தானிய வெர்ஷனாக உருவெடுத்திருக்கின்றது.

எந்தளவிற்கென்றால் வணக்கத்திற்குரியவன் இறைவன் அல்லாஹ் ஒருவனை தவிர வேறு எவரும் இல்லை. கல், மண், சூரியன், சந்திரன், சிலைகள், சிற்பங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரம், பசுமாடு இதுபோன்ற இறைவனால் படைக்கப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும் சரிதான்! ஒரு போதும் கடவுளாக ஆகாது!

இதுவே இஸ்லாமியர்களின் தாரக மந்திரம்! என்று ஆணித்தனமான வாதத்தை முன்வைக்கின்றது இஸ்லாம்! இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுக்கு துணிச்சலுடன் சவால் விடுகின்றது இறைவேதம்!

ஆனால் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு என்று சொல்லப்படுகின்ற பப்ஜி எனும் உயிர்க்கொல்லி விளையாட்டில் சிலையை உருவாக்கி அதை பயன்படுத்த வைத்து விளையாட்டில் கொரோனா வைரஸை விட கொடூரமான விஷத்தை வைத்து கொல்வது எந்த விதத்தில் நியாயம்?

குலக்குறி சின்னம் (totem). அதாவது ஒவ்வொரு சமூகத்தினரும் ஒரு குலக்குறி சின்னத்தை தங்களுக்கு என்று வடிவமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த சின்னம் ஆவியாக இருக்கலாம்! அல்லது மனிதனால் செதுக்கப்படுகின்ற சிலைகளாக இருக்கலாம்! அல்லது ஊரில் நல்லவர் ஒருவர் இறந்து விடுவாரானால், அவராக இருக்கலாம்! அல்லது ஏதாவது ஒரு பொருளாக இருக்கலாம்! அல்லது ஒரு கல்லாக இருக்கலாம்! இது அவர்களின் மூடநம்பிக்கையாகும்.

இதுபோன்ற வகையில் பலதரப்பட்ட குலக்குறி சின்னங்களை சிலைகள் வடிவில் பப்ஜி விளையாட்டில் உருவாக்கி, அதில் விளையாடுபவர்கள் அந்த சிலைகளிடத்தில் கையேந்தி பிரார்த்தனை செய்ய வேண்டும். இன்னும் கூடுதலாக தங்களின் ஆயுதங்களையும் சிலைகளுக்கு முன்னால் வைத்து பிரார்த்திக்க வேண்டும்.
அவ்வாறு பிரார்த்தனை செய்து வணங்கினால், வணங்கியவருக்கு பாயிண்ட்ஸ் அதிகரிக்கும் என்றும், சிலைகளை வணங்கியவர் அடுத்த கட்ட நகர்வை வேகமாக கடந்து விடுவார்! என்றும், வெற்றிப் பாதையை நோக்கி வேகமாக பயணிப்பார்! என்றும் பப்ஜி விளையாட்டில் கயவர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இது எவ்வளவு பெரிய அப்பட்டமான அயோக்கியத்தனம்! பிஞ்சுகளின் உள்ளங்களில் இதுபோன்ற சிலை வழிபாட்டை திணித்து, சிலைகளுக்கு முன்னால் மண்டியிட வைத்து, அவ்வாறு செய்தால் தான் உனக்கு விளையாட்டில் பாயிண்ட்ஸ் அதிகரிக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை கூறி, உச்சகட்ட மதத்துவேச வெறித்தன போக்கை கடைபிடித்திருக்கின்றார்கள்.

சிலை வணக்கத்தை புறக்கணிப்பவர்கள் அல்லது சிலைகளை வணங்காத வேறு மதத்தில் அங்கம் வகிக்கின்ற ஒருவர், இந்த பப்ஜி போதையில் மூழ்கி திளைப்பவராக இருப்பாரானால், இதுபோன்ற சிலைகளை வணங்குவதையும், சிலைகளிடத்தில் கையேந்துவதையும் சிலைகளுக்கு முன்னால் மண்டியிட்டு நிற்பதையும் கவனிப்பாரா? ஏறெடுத்துப் பார்ப்பாரா? ஒருவேளை அப்படி பார்த்தாலும் கூட பப்ஜி போதை மிதமிஞ்சிய அவரால் என்ன செய்து விட முடியும்?

பப்ஜி போதையில் மூழ்கியவனுக்கு சிலைகள் இருந்தால் என்ன? அதை வணங்கினால் தான் என்ன? அவனுக்கு தேவை அதிகமான பாயிண்ட்ஸ். விளையாட்டில் நிறைய பாயிண்ட்ஸ் கிடைத்தால் நிறைய ஆயுதங்கள் கிடைக்கும்! அதிகமான ஆயுதங்கள் கிடைத்தால் அதிகமானோரை சுட்டுத் தள்ளலாம். அதிகமானோரை சுட்டுத் தள்ளினால், இறுதியில் நாம் மட்டுமே எஞ்சி இருப்போம்! வெற்றி பெறுவோம்! நமக்கு வெற்றி தான் முக்கியம்! என்று சொல்லி பைத்தியம் பிடித்தவாறு சிந்தனை திசை மாறி விடும்.

இவ்வாறு கீழ்த்தனமான சிந்தனையோடு புதிய ஷைத்தானிய வெர்ஷனை பப்ஜியில் உருவாக்கியவர்களை சமூகம் வன்மையான முறையில் கண்டித்துக் கொண்டிருக்கின்றது. பப்ஜி ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களின் எண்ணத்தை குழிதோண்டி புதைத்து, பப்ஜி சிலை வணக்கத்தை புகுத்துகின்ற மத துவேச விளையாட்டு என்பதை உண்மைப்படுத்தியுள்ளது.

மேலும், இது விளையாட்டில் தானே! வருகின்றது? நான் என்ன நிஜ வாழ்க்கையிலா சிலைகளை வணங்கி கொண்டிருக்கின்றேன்? என்றெல்லாம் அறிவார்ந்த கேள்வி எழுப்புகின்றோம் என்ற பெயரில் சிலர் அறிவற்ற கேள்விகளை முன்வைப்பார்கள்.

தன்னை ஒரு வீரனாக மனதிலே ஆழப்பதிய வைத்து கொண்டு, பப்ஜி விளையாட்டில் குத்திக்கின்றான் ஒருவன். அந்த கேமில் பொருத்தப்பட்டிருக்கின்ற அனைத்து அம்சங்களுக்கும் இவனே பதில் கொடுக்கின்றான். அந்த அடிப்படையில் சிலைகளுக்கும் பதில் கொடுத்தால் இவனது நிலை என்னவாகும்?

பப்ஜி குறித்த இஸ்லாத்தின் நிலைபாடு:

கொலை செய்யத் தூண்டுகின்ற, வெறுப்புணர்வை விதைக்கின்ற, சிலை வணக்கத்தை திணிக்கின்ற, சிலைகளிடம் மண்டியிட வைக்கின்ற இந்த பப்ஜி விளையாட்டை நியாயமான நடுநிலையான முறையில் சிந்திப்பவர்கள் கடுமையான முறையில் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்வார்கள். மேலும், இதுபோன்ற மதத்துவேசத்தை உண்டு பண்ணுகின்ற பப்ஜி விளையாட்டை முற்றிலுமாக புறக்கணிக்கத்தான் செய்வார்கள்.

கூடுதலாக, ஏக இறைவனை மட்டுமே வணங்கி, வழிபடுகின்ற உண்மையான இஸ்லாமியனாக இருந்தால் நஞ்சை விதைத்து, விஷத்தை செலுத்தி, இறைவனுக்கு இணைகற்ப்பிக்கின்ற செயலை செய்ய வைத்து நிரந்தர நரகத்திலே தள்ளி விடுகின்ற இந்த பப்ஜி விளையாட்டை ஒருபோதும் விளையாடவும் மாட்டார்! இதற்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டார்! மாறாக முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விடுவார்.

பப்ஜி போன்ற சிந்தனையை மழுங்கடிக்கின்ற விளையாட்டுக்கள் குறித்தும், இறைவனுக்கு இணைகற்பித்தல் என்பது ஒரு மாபாதகச் செயல் என்பது குறித்தும் திருக்குர்ஆன் ஏராளமான இடங்களில் எச்சரிக்கை விடுக்கின்றது.

இதோ! இறைவனின் எச்சரிக்கை!

பப்ஜி போதை தலைக்கேறி இறைவனுக்கு இணை கற்ப்பிக்க வைக்கின்ற பப்ஜி விளையாட்டை முழுமையாக குழிதோண்டி புதைக்க தவறினால், இறைவனுக்கு மகத்தான அநீதி இழைத்தவர்களாக மாறி விடுவோம்!
நாங்கள் விளையாடத்தானே செய்கின்றோம்! என்று வேடிக்கையாக பதில் அளிப்போருக்கு இறைவனின் கடும் எச்சரிக்கை!

அவர்களிடம் (இதுபற்றிக்) கேட்டால் “வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் பேசினோம்” என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பீராக!
சமாளிக்காதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் (நம்மை) மறுத்து விட்டீர்கள்.

அல்குர்ஆன் 9:65,66

மேலும், இறைவன் எச்சரிக்கின்றான்;

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்”

அல்குர்ஆன் 31:13

மேலும், இறைவன் கூறுகின்றான்;

அறியாதவர்களே! அல்லாஹ் அல்லாததை நான் வணங்க வேண்டுமென்றா எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” எனக் கேட்பீராக!

“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

அல்குர்ஆன் 39:64,65,66

அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கினால் நல்லறங்கள் அழிந்து விடும்! நட்டமடைந்தவராவோம்! என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கின்றான்!

மேலும், இறைவன் எச்சரிக்கின்றான்;

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

அல்குர்ஆன் 4:116

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

துண்டு துண்டாக வெட்டப்பட்டாலும், நெருப்பிலே தூக்கி எறியப்பட்டாலும் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காமல் இருக்க வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூதஹ்தாஹ் (ரலி)

ஆதாரம்: இப்னுமாஜா 4034

இதுபோன்ற ஏராளமான இஸ்லாத்தின் அறிவுரைகளை உள்ளத்தில் ஏந்தியவர்களாக, இறைவனுக்கு இணைவைக்கத் தூண்டுகின்ற பப்ஜி போன்ற கீழ்த்தனமான விளையாட்டுக்களை முற்றிலும் புறக்கணிப்போமாக!

வெறுப்பையும், பகைமையையும் ஏற்படுத்துகின்ற இதுபோன்ற விளையாட்டுக்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90,91

மதுவில் ஆல்கஹால் கலந்த இரசாயன போதை எவ்வாறு சிந்தனையை மழுங்கடித்து, அல்லாஹ்வை நினைப்பதை விட்டும், தொழுகையை விட்டும் எவ்வாறு தடுக்கின்றதோ, அதேபோன்று பப்ஜி விளையாடுபவர்கள் அல்லாஹ்வை நினைப்பதையும், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதையும் மறந்து பப்ஜி போதையில் மணிக்கணக்கில் மூழ்கி திளைக்கின்றார்கள்.

மதுவினால் போதை தலைக்கேறியும், சூதாட்டத்தினால் பணத்தின் போதை தலைக்கேறியும் வெறுப்பையும், பகைமையையும் எவ்வாறு ஏற்படுத்துமோ, அதே போன்று இந்த பப்ஜி போதை தலைக்கேறி கொலைவெறியை ஏற்படுத்தி வன்மத்தை விதைப்பதைப் பார்க்கின்றோம்!

மேலும், நபி (ஸல்) அவர்கள் தனக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற விளையாட்டுக்களை விளையாடக் கூடாது என்று எச்சரித்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சிறிய கற்களைச் சுண்டி (விளையாடி)க்கொண்டிருந்த என் தோழர் ஒருவரைக் கண்டேன். அவரிடம், “கற்களைச் சுண்டி விளையாடாதே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறிய கற்களைச் சுண்டியெறிவதை வெறுத்து வந்தார்கள்” அல்லது “சிறிய கற்களைச் சுண்டியெறிய வேண்டாமெனத் தடுத்து வந்தார்கள்”. அவ்வாறு சிறிய கற்களைச் சுண்டியெறிவதால் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படுவதோ எதிரிகள் வீழ்த்தப் படுவதோ கிடையாது. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)” என்று சொன்னேன்.
அதன் பிறகு ஒரு முறை அதே தோழர் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து “விளையாடுவதை வெறுத்து வந்தார்கள்” அல்லது “அதைத் தடை செய்துவந்தார்கள்” என்று நான் உன்னிடம் சொல்கிறேன். பிறகு (மறுபடியும்) நீ சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடுவதைக் காண்கிறேனே! நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று கூறினேன்.

ஆதாரம்: முஸ்லிம் : 3952.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறிய கற்களைச் சுண்டியெறிவதை வெறுத்து வந்தார்கள்” அல்லது “சிறிய கற்களைச் சுண்டியெறிய வேண்டாமெனத் தடுத்து வந்தார்கள்”. அவ்வாறு சிறிய கற்களைச் சுண்டியெறிவதால் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படுவதோ எதிரிகள் வீழ்த்தப் படுவதோ கிடையாது. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம்.

ஆதாரம்: முஸ்லிம்

சிறிய கற்களை சுண்டி எறிவதினால் கண்களையோ, பற்களையோ பதம் பார்த்து விடும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள்! என்று சிறிய கற்கள் குறித்து கூட மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்கள்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள பப்ஜி என்ற விளையாட்டு பிறரை கொலை செய்யத் தூண்டி கொலைகாரனாக மாற்றி விடுகின்றது. அல்லது தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ள வைத்து உயிரை மாய்த்து விடுவதற்கு வழிவகுக்கின்றது.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

முஃமின்கள் வீணானதைப் புறக்கணிப்பார்கள்.

அல்குர்ஆன் 23:3

குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள்.

“நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள்.
(வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.

அல்குர்ஆன் 74:42-45

இதுபோன்ற ஏராளமான எச்சரிக்கைகளுக்கு பயந்து, நரக நெருப்பிலே தள்ளி விடுகின்ற வீணான காரியங்களையும், வீணான காரியத்தில் மூழ்கி இருப்போரையும் முற்றும் முழுவதுமாக வெறுத்து ஒதுக்குவோமாக!

இஸ்லாம் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகின்ற, ஆரோக்கியமான, சிந்தனைகளை சீர்படுத்துகின்ற ஏராளமான விளையாட்டுக்களை ஆர்வப்படுத்துகின்றது. அனுமதிக்கின்றது.

  •  அம்பெறிந்து விளையாடும் வீர விளையாட்டுக்களை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டி, அனுமதியளித்துள்ளார்கள். (ஆதாரம் – புகாரி 2899)
  •  உடலை வலுப்படுத்தி, சிந்தனையை சீராக்குகின்ற அளவிற்கு உள்ள, அம்பெறிகின்ற விளையாட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். (ஆதாரம் – முஸ்லிம் 3882)
  •  நபி (ஸல்) அவர்கள் ஓட்டப் பந்தய விளையாட்டு விளையாடி உள்ளார்கள். (ஆதாரம் – அஹ்மத் 26320)
  •  நபி (ஸல்) அவர்கள் குதிரை பந்தயம் வைத்து விளையாடி உள்ளார்கள். (ஆதாரம் – புகாரி 420)
  •  நபி (ஸல்) அவர்கள் ஒட்டகப் பந்தயம் வைத்து விளையாடி உள்ளார்கள். (ஆதாரம் – புகாரி 6501)
  •  பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். (ஆதாரம் –
    முஸ்லிம் 4827)
  •  விளையாட்டில் வெற்றி பெற்றதற்கான பரிசு வழங்குவதற்கு குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம், அம்பெறிதல் இவைகளே தகுதியானது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் – அஹ்மத் 9754)

கொலை செய்யத் தூண்டுகின்ற, தற்கொலை செய்ய வைக்கின்ற, இணைவைத்தல் என்ற நிரந்தர நரகத்திற்குரிய பாவத்தை செய்யத் தூண்டுகின்ற பப்ஜி என்ற உயிர்க்கொல்லி விளையாட்டுக்கு மரண அடி கொடுத்து குழி தோண்டி புதைக்க அனைவரும் வெறித்தனமாக ஆயத்தமாகுவோம்!

பப்ஜி விளையாட்டு மோகம் காரணமாக மாணவர்களும் இளைஞர்களும், படிப்பிலும் வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த விளையாட்டின் உள்ளடக்கமும், அதில் கலந்திருக்கும் இரத்தமும் வன்முறையும் மனதளவில் பெரும் பாதிப்பை உண்டாக்கி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் இந்த விளையாட்டு பழி வாங்கலையும், எதிர்மறை சிந்தனைகளையும் ஊக்குவிக்கின்றது.

எனவே ஒட்டு மொத்த மக்களும் மேலை நாட்டவர்களுக்கு மரண அடி கொடுக்கும் விதமாக இலட்சோப இலட்ச மக்கள் கொரோனா வைரஸை விட கொடூரமான வைரஸாக வலம் வருகின்ற பப்ஜி விளையாட்டை குப்பையில் வீசி எறிந்து, நம்முடைய எதிர்ப்பையும், கண்டனத்தையும் வலுவாக பதிய வைப்போமாக!
உண்மையான இஸ்லாமியன் இதுபோன்ற கீழ்த்தனமான விளையாட்டை விளையாடவும் மாட்டார்! அதை ஆதரிக்கவும் மாட்டார்! அல்லாஹ் நம் அனைவருக்கும் போதுமானவன்!!

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:2