87:6861 இழப்பீடுகள்

6861. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
ஒருவர் (நபியவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்’ என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது (மிகப் பெரும் பாவம்)?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும்’ என்றார்கள். அந்த மனிதர், ‘பிறகு எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்று கூறினார்கள். அப்போது இதை மெய்ப்பிக்கும் வகையில் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரமும் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைப் புரிந்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையை அடைந்தே தீருவான்’ எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அருளினான்.3 
Book :87