82:6596 (தலை)விதி

பாடம் : 2 இறைவனின் தீர்மானத்தை எழுதிய பேனா(வின் மை) உலர்ந்துவிட்டது.4 அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) எவன் தன்னுடைய (சரீர மற்றும் மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான். (45:23) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறு கின்றார்கள்: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் நீர் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கின்ற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று. அவற்றை) எழுதிய எழுதுகோலும்கூடக் காய்ந்துவிட்டது என்றார்கள்.5 (23:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லஹா சாபிகூன்’ (அந்த நன்மைகளின் பக்கம் முந்தக்கூடியவர்கள்) என்பதற்கு (விதியின்படி) அவர்களுக்கு நற்கதி முந்திவிட்டது என்று பொருள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். 
6596. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 
ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம் (தெரியும்)’ என்றார்கள். 
அவர் ‘அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஒவ்வொருவரும் ‘எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ’ அல்லது ‘எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ’ அதற்காகச் செயல்படுகிறார்கள்’ என்று பதிலளித்தார்கள்.6 
Book : 82