71:5470 அகீகா

5470. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் 
(என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது ‘என் மகன் என்ன ஆனான்?’ என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), ‘அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்’ என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) ‘பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்’ என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), ‘ஆம்’ என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), ‘குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, ‘இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?’ என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் ‘ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன’ என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள். 
இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Book :71