68:5255 மணவிலக்கு (தலாக்)

5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார் 
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். 
அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள். 
Book :68